10 ஜூன் 2019

பிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தன்னுடைய புதிய அமைச்சரவையில் பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்.


பிரதாப் சந்திர சாரங்கி ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர் என்பது ஒரு பரவலான அதிருப்தி. அதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

1999-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஒடிசா மனோஹர்பூர் - கியோஞ்சார் (Manoharpur-Keonjhar) எனும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி.

*கிரஹாம் ஸ்டெயின்ஸ்* (Graham Staines - வயது 58) எனும் ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் அவர்களின் சரக்கு வாகனத்தில் படுத்துத் தூங்கும் போது தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். பாதிரியாரின் மூத்த மகன் பிலிப் 10 வயது; இளைய மகன் திமோதி 6 வயது.

அதற்கு பாஜ்ராங் டால் (Bajrang Dal) இந்து அமைப்பே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டது. சம்பவம் நடக்கும் போது அந்த அமைப்பிற்கு பிரதாப் சந்திர சாரங்கி தான் தலைவர். 



பாஜ்ராங் டால் அமைப்பின் செயற்பாட்டாளர் *டாரா சிங்* என்பவரும் மேலும் 11 பேரும் பாதிரியாரையும் அவரின் பிள்ளைகளையும் கொன்றதாக 2003-ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப் பட்டது.

டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை. எஞ்சிய 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். அவர்களில் ஒருவர் பிரதாப் சந்திர சாரங்கி. 

ஆஸ்திரேலியப் பாதிரியார் உருவாக்கிய மாயூர் பஞ்ச் (Mayurbhanj) எனும் கிறிஸ்துவ அமைப்பு, ஏழ்மையில் வாழ்ந்த ஒடிசா ஆதிக்குடி மக்களை மதம் மாற்றியது எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

அதனால் அந்தக் கொலை வெறியாட்டம் நடந்து இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள்.

இந்திய அரசாங்கம் வாட்வா ஆணையத்தை (Wadhwa Commission) உருவாக்கி விசாரணையும் நடத்தியது. 



அதில் ஒடிசா இந்து ஆதிவாசிகள் பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றப் பட்டனர்; ஆனால் மதமாற்றத்திற்கு ஆதிவாசிகள் வற்புறுத்தப்படவில்லை; என்று அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

https://www.hvk.org/specialreports/wadhwa/main.html

மேலும் அந்த வாட்வா ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் தகவல்கள்:



1999 ஜனவரி 22-ஆம் தேதி மனோஹர்பூர் காட்டுக் கிராமத்தில் கிறிஸ்துவர்களுக்கான ஒரு சமூக முகாம். அதில் ஆண்டுப் பிரார்த்தனைக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கலந்து கொண்டார்.

ஒடிசா மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் மாயூர் பஞ்ச் எனும் கிராமத்திற்கும்; கியோஞ்சார் எனும் கிராமத்திற்கும் இடையில் அந்தப்  பிரார்த்தனை முகாம் அமைந்து இருந்தது. 



கூட்டம் முடிந்து கெந்துஜார் (Kendujhar) எனும் கிராமத்திற்கு தன்னுடைய இரு மகன்களுடன் பாதிரியார் சென்று கொண்டு இருந்தார்.

அவரின் இரு மகன்களும் ஊட்டியில் படித்துக் கொண்டு இருந்தவர்கள். அப்போது அவர்களுக்குப் பள்ளி விடுமுறை. அதனால் தந்தையாருடன் பிரார்த்தனை முகாமிற்குப் போய் இருக்கிறார்கள்.

கெந்துஜார் கிராமத்திற்குப் போகும் போது மிகவும் குளிர். அதனால் போகும் வழியில் மனோஹர்பூர் (Manoharpur) கிராமத்தில் தங்கலாம் என முடிவு செய்தார்கள். அவர்களின் வாகனம் ஒரு சரக்கு வாகனம் (station wagon). அந்த வாகனத்திற்குள் படுத்துத் தூங்க வசதிகள் இருந்தன. 



ஆனால் அன்றைக்கு பாதிரியாரின் மனைவி (Gladys Staines); அவர்களின் மூத்த மகள் (Esther); பாதிரியாருடன் பயணம் செய்யவில்லை. பாரிபாடா எனும் சிறு நகரில் மனைவியும் மகளும் தங்கிவிட்டார்கள். தந்தையும் மகன்களும் மட்டுமே பயணம் செய்து இருக்கிறார்கள்.

பாதிரியாரும் அவருடைய மகன்களும் வாகனத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது 50 பேர் அடங்கிய ஒரு கும்பல் அங்கே வந்து இருக்கிறது. அவர்களிடம் கோடாரிகள் அரிவாள்கள் இருந்து இருக்கின்றன.

பாதிரியாரின் வாகனத்தைத் தாக்கி இருக்கிறார்கள். அப்படியே அந்த வாகனத்திற்கு நெருப்பு வைத்து இருக்கிறார்கள். உள்ளே படுத்து இருந்து மூவரும் வெளியே வர முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அந்த முரட்டுக் கும்பல் அவர்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதனால் மூவரும் தீயில் கருகி மாண்டனர்.

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாயிக்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள். அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்திய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியது. கிறிஸ்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய அரசாங்கம் தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தியது.



கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரான மகேந்திர எம்ராம் (Mahendra Hembram) என்பவர் இந்துஸ்தான் பத்திரிகைக்கு 2003-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் ”ஆதிக்குடி மக்களுக்கு மாட்டிறைச்சியைச் சாப்பிடக் கொடுத்துப் பழக்கி இருக்கிறார்கள். அதுவே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார்.

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரம். 2003-ஆம் ஆண்டில் அங்குள்ள நீதிமன்றம் டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 2005-ஆம் ஆண்டில் அந்தத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.

பின்னர் ஒரிசா உயர்நீதிமன்றம் அதே ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது. இதர 11 பேரும் விடுதலை ஆயினர். அந்த 11 பேரில் ஒருவர் தான் பிரதாப் சந்திர சாரங்கி. அவரும் விடுதலை ஆனார். 


டாரா சிங்

பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி கிலேடிஸ் தொடர்ந்து ஒரிசாவில் சமூகச் சேவைகள் செய்து வந்தார். ஆதிக்குடி மக்களின் தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார். ஒடிசா மக்களுக்கு நிறையவே சேவைகள் செய்து இருக்கிறார். பாராட்டுக்குரிய பெண்மணி.

அன்னை திரேசாவிற்குப் பின்னர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவப் பெண்மணி (the best-known Christian in India after Mother Teresa) என கிலேடிஸ் புகழப் படுகிறார்.

அவர் இந்திய மக்களுக்குச் செய்த சேவைகளைப் பாராட்டி 2005-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அன்னை திரேசா அனைத்துலக விருதும் வழங்கப்பட்டது. இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். 



இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 2012-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் பட்டது. இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தின் பெயர்: The Least of These: The Graham Staines Story.

இந்தத் துர்நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்குத் தான் சென்ற வாரம் புதிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் குற்றம் சாட்டப்பட்டு 2005-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப் பட்டவர். 1999 ஜனவரி 22-ஆம் தேதி இரவு நேரத்தில் ஒடிசா மனோஹர்பூர் கிராமத்தில் என்ன நடந்தது என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

பிரதாப் சந்திர சாரங்கி குற்றம் செய்தாரா இல்லையா அல்லது அவருடைய தீவிரவாத இந்து இயக்கம் குற்றம் செய்ததா என்பதைப் பற்றி நீதி தேவனுக்குத் தான் முழுமையாகத் தெரியும். பிரதாப் சந்திர சாரங்கியை மனித நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. 



ஆகவே நீதிமன்றத்தின் முடிவிற்கு மதிப்பு அளிப்போம். அவருக்கு இந்திய அரசாங்கமும் அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறது. அதற்கும் மதிப்பு அளிப்போம்.

இப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் அமைச்சர் பதவியைச் செம்மையாகச் செய்யட்டும். இந்து தீவிரவாதத்தைத் திணிக்காமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

அவர் நல்லவரா கெட்டவரா என்பது ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். காலன் வரும் போது, ஆண்டவரின் சன்னிதானத்தில் அவர் பதில் சொல்லட்டும். நன்றி.

https://www.hollywoodreporter.com/review/graham-staines-story-1181467

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

09 ஜூன் 2019

நெகாராகூ வரலாறு

சுல்தான் அப்துல்லா முகமட் ஷா பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் (தோற்றம்: 1842; மறைவு: 1922). இவர் தான் நம்முடைய தேசிய கீதமான நெகாராகூ பாடல் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர். இதுவும் ஒரு நீண்ட கதை. தொடர்ந்து படியுங்கள்.

1875-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆலோசகராக ஜேம்ஸ் பர்ச் (British Resident JWW Birch) என்பவர் இருந்தார். அவர் பாசிர் சாலாக் எனும் இடத்தில் 1875 நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலே என்பவரால் கொலை செய்யப் பட்டார். படித்து இருப்பீர்கள்.

அந்தக் கொலைச் சம்பவத்தில் சுல்தான் அப்துல்லா முகமட் ஷாவிற்கும் தொடர்பு இருந்ததாகச் குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசாங்கம் அவரைச் செய்சீல்ஸ் தீவிற்கு நாடு கடத்தியது. செய்சீல்ஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவிற்குக் கிழக்கே 1500 கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்தத் தீவில் 19-ஆம் நூற்றாண்டில் லா ரொச்சலே (La Rosalie) எனும் ஓர் இனிமையான பாடல் புகழ்பெற்று விளங்கியது. பிரெஞ்சு நாட்டுக் கவிஞர் பியரி ஜீன் பெராஞ்சர் (Pierre Jean de Beranger) என்பவர் எழுதிய பாடல். அந்தப் பாடலில் பிரெஞ்சு வரிகள்;

la rosalie assise par sa fenêtre
j’entend la pluie qui verse sur son dos
son petit coeur qui répose a son aise
et le mien qui n’a point de repos


செய்சீல்ஸ் தீவு மக்கள் மிகவும் விரும்பிய பாடல். அந்தப் பாடலின் புகழ், இந்தியப் பெருங்கடலையும் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை புகழ் பாடியது. அதே சாயலில் அந்தப் பாடல் பல நாடுகளிலும் புகழ் பாடியது.

முதலில் டச்சுக்காரர்கள் அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்கள். இந்தோனேசியாவில் தெராங் புலான் (Terang Boelan - Indonesia) என்று மாற்றி அமைத்தார்கள்.

ஹவாய் தீவில் மாமுலா மூன் (Mamula Moon  - Hawaii) என்று மாற்றம் கண்டது. பின்னர் சீன மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறேன்.

இந்தக் கட்டத்தில் தான் அதே அந்த செய்சீல்ஸ் தீவிற்கு 1877-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் ஷா நாடு கடத்தப் பட்டார். அங்கு இருந்த போது சுல்தான் அவர்கள் அந்தப் பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் நீங்க இடம் பிடித்துக் கொண்டது.

அந்த இசைச் சுமையுடன் 1883-ஆம் ஆண்டு அவர் தாயகம் திரும்பினார். மலாயாவிற்கு வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் ’சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக’ (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார்.

அதையே பேராக் மாநிலக் கீதமாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இன்று வரையில் அந்தப் பாடல் தான் பேராக் மாநிலக் கீதமாக விளங்கி வருகிறது. சரி.

1957-ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த 11 மாநிலங்களுக்கும் சொந்தமாக மாநிலக் கீதங்கள் இருந்தன. ஆனால் கூட்டரசு மலாயாவிற்கு மட்டும் தேசிய அளவில் ஒரு கீதம் இல்லை. அதாவது தேசிய கீதம்.

அப்போது கூட்டரசு மலாயாவின் முதலமைச்சராகத் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இருந்தார். மலாயாவுக்கு ஒரு தேசிய கீதம் எழுதும் போட்டி உலகளாவிய நிலையில் நடத்தப் பட்டது. போட்டிக்கு 514 பாடல் பதிவுகள் உலகம் முழுமையில் இருந்தும் வந்தன. ஆனால் எதுவுமே சிறப்பாக, பொருத்தமாக அமையவில்லை.

உலகப் புகழ் கவிஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் ஜுபிர் சையிட் (Zubir Said). இவர் தான் பின்னாட்களில் சிங்கப்பூரின் தேசிய கீதமான மாஜுலா சிங்கப்பூரா பாடலை எழுதியவர். இவருடைய பாடலும் சரியாக அமையவில்லை.

கடைசியில் பேராக் மாநிலக் கீதத்தின் இனிமையான மென்மை பிடித்துப் போகவே அதையே நம் மலேசிய நாட்டின் தேசிய கீதமாக மாற்றி அமைத்தார்கள்.

1990-களில் நெகாராகூ கீதத்தின் இசை இந்தோனேசியா நாட்டுப் பாடலான தெராங் புலான் பாடலில் இருந்து மருவியது என இந்தோனேசியா பிரச்சினை பண்ணியது. பெரிய பிரச்சினையாகவும் உருவானது.

கடைசியில் வரலாற்றுச் சான்றுகள் முன் வைக்கப் பட்டன. அதோடு இந்தோனேசியா கப்சிப். அடங்கிப் போனது. இதுதான் நம்முடைய தேசிய கீதத்தின் வரலாறு. இது ஒரு வரலாற்றுத் தகவல்.

லா ரொச்சலே பாடலின் இந்தோனேசிய இசை மருவல் (தெராங் புலான்)

https://www.youtube.com/watch?v=9nwu3MB2Uwg

லா ரொச்சலே பாடலின் சீன காண்டனீஸ் மொழியாக்கம்

https://www.youtube.com/watch?v=7I0WBQ-gE_s








 

பிரதாப் சந்திர சாரங்கி



 
கடந்த மே 30-ஆம் தேதி நடுவண் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அப்போது மிகவும் எளிமையான தோற்றத்தில் ஒருவர் மேடை ஏறினார். அந்த மெலிந்த சந்திர சாரங்கியைப் பார்த்ததும் அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்.

அந்தக் கைதட்டலுக்குப் பின்னால் என்ன மாதிரியான உணர்வுகள் இருந்தன. இருந்து இருக்கும். எளிமையானவர் என்பதற்காகவா அல்லது இந்துத்வா எனும் பெயரில் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டவர் என்பதற்காகவா? யாருக்கும் தெரியப் போவது இல்லை.




சந்திர சாரங்கியின் அமைச்சர் பதவியைப் பலரும் வரவேற்கின்றார்கள். இல்லை என்று சொல்லவில்லை. எதிர்க் கட்சியினரும் பாராட்டுகின்றார்கள். ஒடிசாவின் மோடி என அழைக்கப் படுகிறார். உண்மையில் அவரை அப்படிக் கொண்டாட அவர் தகுதியானவரா ?

இவருடைய வாழ்க்கையின் மறுபக்கத்தில் கதை வேறு மாதிரியாகப் பயணிக்கின்றது.

சந்திர சாரங்கிக்கு 64 வயதாகிறது. ஒடிசா மாநிலப் பா.ஜ.க.வில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர். ஒடிசா மாநிலத்திற்கு வெளியே இவரை யாருக்கும் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.


ஆனால் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரின் எளிமையான இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் பரவலாகப் பகிரப் பட்டன.

அதே சமயத்தில் 1999-ஆம் ஆண்டு ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவருடைய பிள்ளைகளையும் கொன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்திகளும் பரவலாகி வருகின்றன.




அண்மைய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்டோவில் சென்று தான் வாக்குகள் சேகரித்தார். இவருக்குத் தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. வரி செலுத்தும் அளவிற்குத் தனக்கு வருமானம் இல்லை என்று தன் தேர்தல் வேட்பு மனுவிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது புவனேஷ்வரில் இருக்கும் சட்டமன்றத்திற்குப் பெரும்பாலும் நடந்தே செல்வார். சமயங்களில் சைக்கிளிலும் செல்வார். 




இவ்வளவு பிரபலமான சாரங்கி அவர் நடந்து வந்த பாதை மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. எளிமையானவர் என்று இவர் மீது கட்டு அமைக்கப்படும் பிம்பம் முற்றிலும் போலியானது என்பதை உணரும் போது வேதனையாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

எளிமையின் மறுபக்கத்தில் ஒரு கொடூரம் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் நம்முடைய எழுதுகோலிலும் நேர்மை தேவைப் படுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சசீந்திரன் முத்துவேல்


தமிழ்நாட்டில் பிறந்து வேலை தேடி பப்புவா நியூ கினி நாட்டிற்குச் சென்ற ஒரு தமிழர் இன்று (07.06.2019) அதே அந்த நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். உலகத் தமிழர்களுக்குப் பெருமை தரும் செய்தி.

சசீந்திரன் முத்துவேல் (Sasindran Muthuvel) இன்று பப்புவா நியூ கினி நாட்டின் பொது நிறுவனங்களின் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



பப்புவா நியூ கினி நாட்டின் புதிய பிரதமர் ஜேம்ஸ் மாராப்பே (James Marape) இன்று சசீந்திரன் முத்துவேல் அவர்களை ஓர் அமைச்சராக நியமனம் செய்தார்.

பப்புவா நியூ கினி எனும் நாடு பசிபிக் பெருங்கடலில் நியூகினித் தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. மனிதர்களைச் சாப்பிடும் காட்டுவாசிகள் வாழும் நாடு என்று முன்பு காலத்தில் பெயர் பெற்றது. இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளன.



தமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் முத்துவேல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.

மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், 1999-ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்றார். அங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.

2000-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் மூடப் படவே, கடை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தினார். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து நல்ல நிலைக்கு வந்தார்.



அவர் சார்ந்த ஆதிக்குடிகள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். 2012-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில், மேற்கு நியூ பிரிட்டன் மாநில வேட்பாளராகப் போட்டியிட்டார். 

24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றம் சென்றார். நியூ பிரிட்டன் மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப் பட்டார். இன்று அவர் ஓர் அமைச்சர்.



சசீந்திரன் முத்துவேல் அவர்கள் நியூ கினி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட...

*முதலாவது தமிழர்*

*முதலாவது தமிழர் அமைச்சர்*


எனும் பெருமைகளைப் பெறுகிறார். உலகத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அவரை வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

08 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7

1972 செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் ஒரு வெடிகுண்டு வெடிக்கிறது. போலீசாரின் மீது பிரபாகரன் வீசிய குண்டு என பின்னர் தெரிய வருகிறது. 


அடுத்த சில நாட்களில் பிரபாகரனின் வீட்டுக் கதவைப் போலீஸார் தட்டுகிறார்கள். வீட்டின் பின்பக்கமாகத் தப்பித்துப் போன பிரபாகரனுக்குப் பற்பல நெருக்கடிக்கள். அடர்ந்த காடுகளுக்குள் படரும் தலைமறைவு வாழ்க்கை வேதனையின் விளிம்புகளில் தொடர்கின்றது.

போலீஸாரால் பிரபாகரன் மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். பிரபாகரனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்து நின்றது. அதைத் தவிர்க்க ஒரே வழி தமிழகத்திற்குச் செல்வது.

அங்கே கொஞ்ச காலம் தலைமறைவாக வாழ்வது. நிலைமை அமைதியானதும் ஈழத்திற்குத் திரும்பி வருவது என பிரபாகரன் முடிவு செய்தார். தமிழக மண் தங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினார்.



குட்டிமணி, தங்கதுரை, பிரபாகரன், மேலும் சிலரும் ஒரு படகின் மூலமாகத் தமிழகத்தின் வேதாரண்யம் வந்து சேர்ந்தார்கள். அங்கு இருந்து சிலர் சேலம் பகுதிக்குச் சென்றார்கள் பிரபாகரனும் அவருடைய நண்பர்கள் இருவரும் வேதாரண்யத்திலேயே தங்கி விடுகிறார்கள். வேதாரண்யம் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினப் பகுதியில் இருக்கிறது.

வேதாரண்யம் என்பது வடமொழிப் பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக் காடு. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தால் அது தான் தமிழகத்தின் முதல் கடற்கரைத் துறைமுகம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது சென்னைக்குப் போய்ச் சேர்வதே எல்லோருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் எவரிடமும் காசு இல்லை. யாழ்ப்பாணக் காடுகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு வயிற்றுப் பசியைப் போக்கியவர்கள். அப்புறம் காசு இல்லாமல் சென்னைக்கு எப்படி போவதாம்.

இந்தக் கட்டத்தில் வேதாரண்யம் மறைக்காட்டுநாதர் கோயிலில் கிடைத்த பொங்கல்; தயிர்சாதம்தான் பிரபாகரனுக்கு மூன்று நேரச் சாப்பாடுகள். கையில் காசு இல்லை. எவரிடமும் கேட்க முடியாத நிலை.



வேதாராண்யத்தில் பிரபாகரனை இறக்கிவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டு இருந்த படகிற்கும் ஆபத்து. அந்தப் படகில் ஆயுதம் இருந்ததாகச் சொல்லி இலங்கை இராணுவம் அந்தப் படகைத் தடுத்து வைத்தது. இதைக் கேட்டு இந்திய அரசு எச்சரிகையானது.

அதன் விளைவாக 1973 நவம்பர் 18-ஆம் தேதி, சேலத்திற்குச் சென்று கொண்டு இருந்த குட்டிமணியைத் தமிழகப் போலீஸார் கைது செய்தார்கள். அவரை அப்படியே இலங்கைக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைத்தார்கள். அப்போதைய கலைஞர் கருணாநிதியின் தமிழக அரசு எடுத்த முடிவு.

குட்டிமணியைப் பற்றி சற்றே விளக்கம். இவரின் இயல் பெயர் செல்வராஜா யோகச்சந்திரன். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். குட்டிமணியைக் கொழும்பிற்குக் கொண்டு சென்ற இலங்கை அரசு அவரை உயிர் போகும் அளவிற்கு அடித்துச் சித்திரவதை செய்தது.

குட்டிமணிக்காக ஈழ மக்கள் செய்த போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். பின்னர் மீண்டும் பிடிபட்டார். 1983-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தில் குண்டுமணி பிடிபட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். 



அந்தச் சிறைச்சாலையில் அவரும் மேலும் 51 தமிழ்ப் போராட்டவாதிகளும் படுகொலை செய்யப் பட்டார்கள். இதைப் பற்றி பின்னர் விளக்கமாகச் சொல்கிறேன்.

வேதாரண்யத்தில் பிரபாகரனுடன் இருந்த மற்ற இரு நண்பர்கள் சின்னஜோதி; ஜனார்த்தன். மூவரும் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்குச் சென்றார்கள். அங்கு ரா. ஜனார்த்தனன் என்கிற ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தார்கள்.

அவரின் உதவியோடு சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். மாத வாடகை 175 ரூபாய். அங்கு கொஞ்ச காலம் தங்கி இருந்தார்கள்,

இரவும் பகலும் சொந்தச் சமையல். பணப் பற்றாக்குறை வேறு. சின்னச் சின்ன வேலைகள். வேலை செய்த இடங்களில் கடன் வாங்கிக் காலத்தைக் கழித்து வந்தார்கள். தாங்கள் யார்; தங்களின் கொள்கை என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓர் அடக்கமான வாழ்க்கை.



ஆனால் பிரபாகரனுக்கு அந்த மாதிரியான வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. இலங்கைக்குச் சீக்கிரமாகத் திரும்பிப் போக வேண்டும். அங்கே தன்னுடைய கடமைகள் நிறையவே காத்து நிற்கின்றன என அழுத்தமான உறுத்தல்கள். அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சிகளை வளப்படுத்தும் உலக மாநாடு. முதல் மாநாடு கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 முதல் 23-ஆம் தேதிகளில் நடந்தது.

நான்காவது மாநாடு இலங்கையில் 1974 ஜனவரி 3 முதல் 7-ஆம் தேதி வரை நடக்க இருந்தது. கொழும்பில் மிகவும் சிறப்பாக நடத்துவதற்குத் தமிழறிஞர்கள் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள அரசு பற்பல தடைகளைப் போட்டது. தமிழகத்துத் தமிழ் அறிஞர்களுக்கும் விசா வழங்க மறுத்தது.

மேலும் பல சிக்கல்களையும் கொடுத்தது. இருந்தாலும் அந்தத் தடைகளையும் மீறி விழாவை நடத்த ஈழத் தமிழர்கள் முடிவு செய்தார்கள். இறுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விழா சிறப்புற நடந்தது. 



வீரசிங்கம் மண்டபம் என்பது விசுவலிங்கம் வீரசிங்கம் என்பவரின் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம். வீரசிங்கம் ஓர் இலங்கைத் தமிழ் ஆசிரியர்; ஓர் அரசியல்வாதி; ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்; கூட்டுறவாளர்;  யாழ் மாவட்டக் கூட்டுறவு சங்கத்தின் முதலாவது தலைவர்.  

வீரசிங்கம் மண்டபம் சிறிய மண்டபம். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப் பட்டார்கள். ஆகையால் அந்த வீரசிங்கம் மண்டபம் போதுமானதாக அமையவில்லை

ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார்கள். அதற்காக அனுமதி பெற சென்ற போது போலீஸார் மறுத்து விட்டார்கள்.

மேயர் துரையப்பா என்னும் தமிழர் தான் தடைக் கல்லாக இருந்தார். சும்மா சொல்லக் கூடாது. சிங்கள அரசிற்கு நல்ல விசுவாசமான ஒரு தமிழர்.

இருந்தாலும் விழாவை எப்படியும் நடத்தியாக வேண்டும். துரையப்பாவிடம் கேட்டு அனுமதி பெறலாம் என இளைஞர்கள் அவரைத் தேடிச் சென்ற போது மனிதர் தலைமறைவாகி விட்டார். 



தமிழனுக்குத் தமிழனே எதிரியா என இளைஞர்கள் வேதனைப் பட்டார்கள். வேறு வழி இல்லாமல் வீரசிங்கம் மண்டபத்திலேயே நடத்த ஏற்பாடுகள். மண்டபத்திற்கு வெளியே வாழைமரங்கள் கட்டி பந்தல் தோரணங்கள் போட்டு நடத்தினார்கள். அதுதான் மாநாட்டின் இறுதி நாள்.

அமைதியாக நடந்து கொண்டு இருந்த விழாவில் போலீஸ் அதிகாரி சந்திரசேகரா திடீரென்று நுழைந்தார். அடுத்த நிமிடம் கண்ணீர் குண்டுகள் ஆங்காங்கே வீசப் படுகின்றன. போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

கண்ணீர்க் குண்டுகள் பட்டு மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுகின்றன. அந்த இடத்திலேயே ஒன்பது தமிழர்கள் உயிர் விடுகின்றார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.

மதம் பிடித்த ஆட்டத்திற்கு அரசியல் பின்னணியில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் அல்பிரட் துரையப்பா; இன்னொருவர் அமைச்சர் குமரசூரியன்.



முடிவில் போலீஸ்தான் தமிழர்களை முதலில் தாக்கியது என விசாரணையில் தெரிய வருகிறது. ஆனாலும் போலீசுக்கு எதிராக ஒரு துளி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாகக் களேபரம் செய்த போலீஸ் அதிகாரிக்குத் தான் பதவி உயர்வு கிடைத்தது.

யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்கள் கோபத்தின் உச்சத்திற்கே போகிறார்கள். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என துடிக்கிறார்கள். 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்குக் காரணமானவர்கள் மூவர் என பட்டியல் போடுகிறார்கள்.

1. போலீஸ் அதிகாரி சந்திரசேகரா
2. யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா
3. தமிழ் அமைச்சர் குமரசூரியன்


இந்த மூன்று பேரையும் பழி வாங்க வேண்டும் என சிவக்குமரன் முடிவு எடுக்கிறார். இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரின் முதல் இலக்கு போலீஸ் அதிகாரி சந்திரசேகரா.

யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோயிலைத் தாண்டித் தான் சந்திரசேகரா, தன்னுடைய போலீஸ் நிலையத்திற்குப் போக வேண்டும். இதை அறிந்த சிவக்குமரனும் அவரின் நண்பர்களும் கோயிலுக்கு அருகில் ஒருநாள் காத்து இருந்தார்கள். எதிர்பார்த்தது போல சந்திரசேகரா வருகிறார். அவருடைய போலீஸ் வண்டியை வழி மறிக்கிறார்கள். 



சிவக்குமரன் தன் துப்பாக்கியால் சந்திரசேகராவைச் சுடுகிறார். ஆனால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அந்தத் துப்பாக்கி வெடிக்க வில்லை. பலமுறை சுட்டும் வெடிக்கவே இல்லை. துப்பாக்கியால் சுட்டுப் பயன் இல்லை என கத்தியை எடுத்து சந்திரசேகராவைக் குத்த முயற்சி செய்கிறார் சிவக்குமரன்.

அதற்குள் மக்கள் கூடி விட்டார்கள். சிவக்குமரன் அங்கு இருந்து தப்பிக்கிறார். போகும் வழியில் அல்பிரட் துரையப்பாவின் கார் வருகிறது. அவரையும் சிவக்குமரன் சுடுகிறார்.  துப்பாக்கி வெடிக்கவில்லை.

சிவக்குமரனின் தலைக்கு 1 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப் படுகிறது. அதன் பின்னர் சிவக்குமரன் தலைமறைவாக வாழ்கிறார். முடியவில்லை. தமிழகத்திற்குத் தப்பிச் சென்று கொஞ்ச காலம் தலைமறைவாக இருக்கும்படி நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் கையில் நயா பைசா இல்லை. கடைசியில் ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறார். சிங்கள அரசிற்குச் சொந்தமான வங்கி. திட்டமிட்டபடி வங்கிக்குள் சென்று கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது போலீஸ்காரர்கள் வங்கியைச் சுற்றி வளைத்துக் கொள்கிறார்கள். சிவக்குமரன் ஒரு வழியாகத் தப்பி ஓடுகிறார். 



போலீஸ்காரர்களும் விடாமல் துரத்துகிறார்கள். சிவக்குமரன் புகையிலைத் தோட்டத்திற்குள் ஓடுகிறார். கால்களில் முட்கள் குத்திக் கிழிக்கின்றன. மேலும் ஓட முடியவில்லை. ஓடவும் ஆற்றல் இல்லை.

என்ன இருந்தாலும் சிங்களப் போலீஸ்காரர்களிடம் பிடிபட்டுச் சாவதை விட வீரத் தமிழனாய் இறப்பதே மேல் என நினைக்கிறார். கழுத்தில் இருந்த சயனைட் நச்சுக் குப்பியைக் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதுதான் தமிழீழ வரலாற்றில் நடந்த முதல் தற்கொலை.

யாழ்ப்பாணமே அழுதது. தமிழர்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடிக்கிறார் சிவக்குமரன். போராடும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் புது வேகத்தையும் புது இலட்சியத்தையும் உருவாக்கி விட்டுச் சென்றவர் சிவக்குமரன். அப்போது அந்த இளைஞருக்கு வயது 17.

1974 ஜுன் 6-ஆம் தேதி நடந்த சிவக்குமரனின் இறுதி ஊர்வலம் யாழ்ப்பாணத்தையே அதிர வைத்தது.

சென்னையில் இருந்த பிரபாகரனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனியும் கோழைகள் போல பதுங்கி இருந்து பிரயோசனம் இல்லை. தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று பிரபாகரன் முடிவு எடுக்கிறார்.



சரியான நேரம் அமையவில்லை என நண்பர்கள் சின்னஜோதி; ஜனார்த்தன் தடுத்தார்கள். தடுத்தும் கேட்காமல் பிரபாகரன் இலங்கைக்கு வந்தார். கூடவே செட்டி எனும் நண்பரையும் அழைத்து வந்தார். இலங்கை வந்த பிரபாகரன் மறைந்து மறைந்து வாழ வேண்டிய இக்கட்டான நிலை.

அந்தச் சமயத்தில் பிரபாகரன் உருவாக்கிய புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தார்கள். இருந்தாலும் போராட்டம் செய்வதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் பிரபாகரனே செய்கிறார்.

இந்தக் கட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றைத் திறந்து வைக்க வருகிறார். பிரபாகரனுக்குச் செய்தி கிடைக்கிறது. அவர் வேறு மாதிரியாக யோசிக்கிறார்.

(தொடரும்)