06 ஜூலை 2019

மாப்பசான்

உலகம் பார்த்த மாபெரும் சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் (Guy de Maupassant). 19-ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடிகளின் தலைமகனாகக் கருதப் படுபவர். இன்று அவரின் நினைவு நாள்.



ஓர் அரிய மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதில் சில நிமிட நேரம் ஒதுக்குங்கள்.

சிறுகதை உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து மறைந்து விட்ட ஆளுமை இவரிடம் இன்றும் உள்ளது. இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். சின்ன வயதிலேயே மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.

உலகச் சிறுகதை இலக்கியத்துடன் அதிகமாகத் தொடர்புப் படுத்தப்பட்ட பெயர் மாப்பசான். இவரின் முழுப்பெயர் Henri Rene Albert Guy de Maupassant.

1850 ஆகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி பிரான்ஸ் நார்மெண்டியில் பிறந்தவர். அப்பாவை 11 வயதிலேயே இழந்து அம்மாவின் அன்பில் மட்டுமே வளர்ந்தவர். இழக்கவில்லை. அப்பா விவாகரத்து செய்துவிட்டு போய் விட்டார்.




1876-ஆம் ஆண்டில் குஸ்தாவ் பிலாபெர் (Gustave Flauber) எனும் பிரெஞ்சு எழுத்தாளரின் நட்பு கிடைத்தது. அதுவே மாப்பசானின் எழுத்துலகப் பயணத்திற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.

1870-1871-ஆம் ஆண்டுளில் பிரான்ஸ் - புருசியா போர் (Franco-Prussian War). அதனால் மாப்பசான் படிப்பு தடைப்பட்டது. இவரும் அந்தப் போரில் ஒரு தன்னார்வலராக ஈடுபட்டார்.

பிரான்ஸ் நாட்டை நிலைகுலையச் செய்த அந்தப் போரைத் தன் கண்களால் கண்டவர். அதுவே அவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. எழுதுவதற்கு ஊக்குவிப்பு செய்தது.

போருக்குப் பின்னர் பிரெஞ்சு கடற்படையில் ஓர் எழுத்தராகப் பணியில் அமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் தொடங்கினார். அதுதான் அவரின் எழுத்துலகத் தொடக்கம்.

இந்தக் கட்டத்தில் எமிலி ஷோலா (Emile Zola); ஈவான் துர்கனிவ் (Ivan Turgenev) போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தது.

போரில் கிடைத்த அனுபவம்; பின்னர் தன்னார்வப் பணியாளராகச் சேவை செய்த போது கிடைத்த அனுபவம்; இவற்றின் அடிப்படையில் கவிதைகள் எழுதினார்.

அந்தக் கவிதைகளில் சிருங்கார ரசத்தை ஏராளமாக அள்ளிக் கொட்டினார். அவரின் சிருங்காரமும் சிங்காரமும் பிரெஞ்சு இளம் சமுதாயத்தினரை வெகுவாகக் கவர்ந்தன.

அதன் பின்னர் சிறுகதை, நாவல், நாடகம் என பிரெஞ்சு இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரின் படைப்புகள் பெரும்பாலும் ஆண் - பெண் பாலுறவு நெளிவு சுழிவுகள் சம்பந்தப் பட்டவையாக இருந்தன. அதனால் அவரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப் பட்டது.

இருந்தாலும் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

1880-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட குண்டுப் பெண் என்கிற கதையின் மூலம் பிரெஞ்சு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். கதையின் சுருக்கம் வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் குண்டான விலை மாது ஒருத்தி இரயில் வண்டியில் பயணம் போகிறாள். அப்பொழுது எதிரி நாட்டு (புருசியா) இராணுவத் தளபதி அவளைத் தன்னுடைய ஆசைக்கு இணங்கச் சொல்கிறான். கதை இரயிலில் நடக்கிறது.

அதற்கு அவள் தன் தேசபக்தியோடு ஒப்பிட்டு மறுக்கிறாள். நீ எதிரி நாட்டுத் தளபதி. முடியாது என மறுக்கிறாள். இராணுவத் தளபதி இரயில் வண்டியைப் போக விடாமல் தடுக்கிறான்.

சக பிரயாணிகள் சத்தம் போடுகிறார்கள். இரயில் நகர வேண்டும். அதனால் அவளைச் சம்மதிக்கச் சொல்கிறார்கள். பயணிகளின் நன்மைக்கு குண்டுப் பெண் ஒப்புக் கொள்கிறாள்.

அவனின் ஆசை தீர்ந்து இவள் வெளியே வருகிறாள். பயணிகள் பலரும் அவளைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். வெறுப்புடன் விலகிச் செல்கிறார்கள். மற்றவர்களுக்காக ஓர் அர்ப்பணிப்பு செய்தும் அதைக் கேவலப் படுத்தி விட்டார்களே என்று அழுகிறாள்.

அந்தக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. படியுங்கள். உங்களுக்கும் அழுகை வரும். அப்பேர்ப்பட்ட எதார்த்தமான நடை.

ஏறக்குறைய ஒரு பத்தாண்டுகளில் 300 சிறுகதைகள்; நவீனங்களை எழுதினார். இன்னும் ஒரு விசயம்.

1960-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் பல தமிழ் எழுத்தாளர்க்ளுக்கு இவருடைய தாக்கம் இங்கேயும் இருந்தது. மாப்பசான் பற்றி அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறும். இவருடைய கதைகளை நானும் படித்து இருக்கிறேன். அந்தத் தாக்கம் இன்றும் எனக்குள் உள்ளது.

இவருடைய The Necklace (La Parure) எனும் சிறுகதை பிரசித்தி பெற்றது.

”அவள் ஓர் அழகிய, வசீகரமான ஆனால் விதியின் பிழையாலோ என்னவோ நடுத்தரக் குடும்பத்திலே பிறந்த பெண். கையில் காசு இல்லை. வசதி நிறைந்த உறவினர்க்கு அவள் வாரிசும் அல்ல; எனவே நல்ல பணக்கார இளைஞன் ஒருவனுக்கு அறிமுகம் ஆகி அவனால் காதலிக்கப்பட்டு அவனை மணந்து கொள்ள வழியே இல்லை; ஆகையால் கல்வித் துறை அலுவலகத்தின் சாதாரண எழுத்தர் ஒருவரைக் கைப்பிடித்துத் தொலைத்தாள்.”

இந்தக் கதையைக் கீழே உள்ள இணையத் தளத்தில் படிக்கலாம். சொ.ஞானசம்பந்தன் என்பவர் பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23830.html

மிக தீவிரமான கதையைக் கூட மிக மிகச் சுவாரசியமாக; மிக எளிமையாகக் சொல்லக்கூடிய ஆற்றல். மாப்பசான் கதைகள் தமிழிலும் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன.

Maupassant is considered a father of the modern short story. He delighted in clever plotting, and served as a model for Somerset Maugham and O. Henry in this respect. One of his famous short stories, "The Necklace", was imitated with a twist by both Maugham ("Mr Know-All", "A String of Beads") and Henry James ("Paste").

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது மாப்பசான் காலத்தில், ஆபாசக் கதைகள் பிரபலம். அந்த மாதிரி கதைகளை எழுதியவர்கள் விற்பனை நோக்கத்தில் மாப்பசான் பெயரைப் போட்டு விட்டார்கள்.

அதனால் பல மோசமான கதைகளில் மாப்பசான் பெயரும் நிலைத்துப் போனது. அந்த அவப் பெயரைக் கடைசி வரை அவரால் அழிக்கவே முடியவில்லை. சரி.

பாரிசில் ஈபில் கோபுரம் கட்டப்பட்ட நேரம். அப்போது பல பாரீஸ் மக்கள் அதை விரும்பவில்லை. வீணானச் செலவு என்று சபித்தார்கள். மாப்பசானும் அவர்களில் ஒருவர். ஆனாலும் அவர் அடிக்கடி அந்தக் கோபுரத்தில் இருந்த உணவகத்திற்குப் போவது வழக்கம். சாப்பிடுவதும் வழக்கம்.

”ஈபில் கோபுரம் தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் ஏன் அங்கே போய் சாப்பிடுகிறீர்கள்” என்று கேட்பார்கள். அதற்கு அவர் ”அங்கே உட்கார்ந்தால் தான் அந்தக் கோபுரம் கண்ணில் படாமல் இருக்கிறது” என்பாராம். இது எப்படி இருக்கு. மாப்பசான் நல்ல ஒரு கில்லாடி.

தன் 25-வது வயதிலேயே சிபிலிஸ் என்கிற பாலியல் நோயால் பாதிக்கப் பட்டார். இவருடைய தம்பிக்கும் அந்த நோய் இருந்ததால் அது ஒரு மரபு நோயாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

அந்த நோயின் தாக்கம் அவரின் எழுத்துகளிலும் வெளிப்பட்டன. நோய் சிகிச்சைக்கு மறுத்து விட்டார். அவருடைய தம்பியும் அதே நோயினால் தான் சின்ன வயதிலேயே இறந்து போனார்.

1880-இல் ஜோசப்பின் லிட்சல்மான் (Josephine Litzelmann) எனும் பெண்ணுடனும் பழகினார். கடைசியில் அவரையே மணந்தார். மாப்பாசானுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன். இரு மகள் கள்.

1886-இல் கிசெல் எஸ்தோக் (Gisele Estoc) எனும் பெண்ணுடன் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார்.

இவருடைய கதைகளைப் பத்திரிகைகள் போட்டிப் போட்டு பிரசுரித்தன. நல்ல வருமானம். ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்றார். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக்.

மாப்பசான் தன்னுடைய முப்பது வயதுகளில் தனித்து வாழ்ந்தார். வாழ்க்கையில் வெறுப்பு. கடைசியாக அவர் விரும்பிய பெண்ணும் போய் விட்டாள். அந்த ஆதங்கம் வேறு. அடிக்கடி மனம் உடைந்து போனார். கண் பார்வை குன்றிப் போனது. அடிக்கடி தலைவலி.

02.01.1892-ஆம் தேதி தன் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இருந்தாலும் காப்பாற்றப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அடைக்கப் பட்டார்.

தன் 42-ஆம் வயதில் உடல்; மனநலம் கெட்டு இறந்து போனார். உலகப் புகழ்பெற்ற ஒரு சகாப்தம் சின்ன வயதிலேயே சரிந்து போனது. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற எழுத்துப் பொக்கிஷங்கள் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:
1. https://www.britannica.com/biography/Guy-de-Maupassant
2. https://en.wikipedia.org/wiki/Guy_de_Maupassant#Biography
3. https://www.gutenberg.org/ebooks/author/306



........................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Mageswary Muthiah எனக்கும் சிறு வயதில் இருந்தே வாசிப்பில் மிகுந்த ஆர்வம், அப்புறம் இடையில் ஒரு 15 வருடங்கள் தடை பட்ட பிறகு இப்பொழுது மீண்டும் துவங்கியுள்ளது, நீங்கள் எழுதுவதை மிக ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.
 
 
Muthukrishnan Ipoh படிக்கும் பழக்கம் நம் அறிவை வளர்க்கிறது... நிறைய படியுங்கள்...வாழ்த்துகள்...
 
 
 
Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh அப்போ நீங்க நிறைய எழுதுங்க ஐயா சார்.
 


கம்சாயினி குணரத்தினம்

அந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நல்ல நல்ல மருமகள்களாகப் பேர் போட்டு வாழ்ந்தார்கள். இந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நாட்டு மக்களுக்கே நல்ல நல்ல தலைவர்களாகப் பேர் போட்டு வாழ்கின்றார்கள். பெரிய இடைவெளி.



அது மட்டும் அல்ல. ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவாலே சமாளி என்று சாதனை படைத்தும் வருகின்றார்கள். நாடும் ஏடும் போற்றும் நயன்மிகுச் சேவைகளைச் செய்தும் வருகின்றார்கள்.

அடுப்பாங்கரையில் இருப்புச் சட்டிகளை உருட்டிய காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்றைய காலத்தில் குளிர்ச்சாதன அறைக்குள் கோட் சூட் போட்டு மிடுக்காய் அதிகாரம் செய்கின்றார்கள். என்னே ஓர் உருமாற்றம்.

இமயத்தில் சிகரம் பார்க்கும் அந்தப் பெண்களை இதயத்தில் ஏற்றி வைத்துப் பெருமை கொள்வோம்.


நார்வே  நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ. அந்த நகரின் உதவி மேயராக ஒரு பெண். அதுவும் ஒரு தமிழ்ப் பெண். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த பெண்மணி. பெயர் கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam). வயது 31. ஏழு இலட்சம் நார்வே நாட்டு நகரவாசிகளுக்கு தலைவராக இருக்கிறார். என்னே ஒரு சாதனை.

இன்னும் ஒரு விசயம். அந்த நகரின் மேயராக இருப்பவரும் ஒரு பெண்மணி தான். ஒரு நார்வே நாட்டுக்காரர். அவரின் பெயர் மாரியான் போர்கேன் (Marianne Borgen). இரண்டு பெண்களும் சேர்ந்து ஓர் அல்லி தர்பார் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சும்மா ஒரு ஜோக் தான். தப்பாக நினைக்க வேண்டாம்.




அப்புறம் என்ன. கம்சாயினி எனும் அந்தத் தமிழ்ப் பெண்ணைப் பார்த்து போகிற வருகிற வெள்ளைக்கார ஆண்கள் எல்லாம் சலாம் போட்டுக் கொண்டு போகிறார்கள். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று சும்மாவா சொன்னார்கள். என்ன ஏது என்று பார்ப்போம்.

கம்சா எனும் பெயர் இந்து இதிகாசத்தில் வரும் அழகிய பெயர். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தப் பெயரில் தான் கம்சாயினி எனும் பெயரும் வந்து போகிறது.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1988 மார்ச் 27-ஆம் தேதி பிறந்தவர் கம்சாயினி. மூன்று வயதில் நார்வேக்குப் புலம் பெயர்ந்தவர். 




நார்வே நாட்டு தேசிய மொழி நார்வியம். அந்த மொழியில் தொடக்க நிலைக் கல்வி. அதன் பின்னர் இடைநிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என எல்லாமே நார்வீய மொழியில் தான் பயின்றார்.

ஆனால் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ் வகுப்பிற்குக் கண்டிப்பாகப் போக வேண்டும். இது தந்தையாரின் கட்டளை. இல்லை தாயாரின் வற்புறுத்தல். அதனால் கம்சாயினி தன் பாரிய வாழ்க்கையில், தமிழ் மொழியையும் இணைத்துக் கொண்டார்.

நாடு விட்டு நாடு போனாலும்; சொந்த பந்தங்களை விட்டு நகர்ந்து போனாலும்; சுற்றுச் சூழலை விட்டு விலகிப் போனாலும் தாய்மொழியான தமிழை மட்டும் இவர் துறந்து போகவே இல்லை. 




தமிழ் எங்கள் தாய்மொழி என பெருமைப் படும் இவர் எங்கே? ஒரு வார்த்தைக்கு ஒன்பது ஆங்கிலச் சொற்களைக் கலக்கும் இன்றைய சில நயனா வாசிகள் எங்கே?

அவர் பேசும் தமிழைக் கேளுங்கள். யூடியூப்பில் இருக்கிறது. அசந்து போவீர்கள். தமிழ் என்றும் எங்கள் தாய்மொழி என்று பெருமைப் படும் இவரை வாழ்த்துவோம்.

நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தை ஸ்டோர்ட்டிங் (Storting) என்று அழைப்பார்கள். அந்த ஸ்டோர்ட்டிங் நாடாளுமன்றத்தில் கம்சாயினி 2013 லிருந்து 2017 வரை ஓர் உறுப்பினராகப் பதவி வகித்து உள்ளார். 




2016-ஆம் ஆண்டு துணை மேயர் பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டார். தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர்.

பதினெட்டு வருடங்களுக்குப் பின் நார்வே நாட்டின் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் கம்சாயினி துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போது சரித்திரம் படைக்கிறார்.

அரசியலைத் தனது முழுநேரப் பணியாகக் கொண்ட கம்சாயினி இளம் வயதிலேயே உதவி மேயராகத் தேர்வாகி உள்ளார். அதுதான் பெரிய ஆச்சரியமான தகவல்.




இவர் ஏற்கனவே தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர் தான். தவிர நார்வே நாட்டின் தலைசிறந்த தாளிகை பிரகாசிஸ் (Praksis). அதன் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கம்சாயினியின் தந்தையார் பெயர் குணரத்தினம். இவர் இலங்கையில் பிறந்து நார்வே நாட்டிற்குச் சென்றவர். புலம் பெயர்ந்து போகும் போது கம்சாயினிக்கு வயது 3. இலங்கையில் அவர்களுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்து மக்கள் சிலரும் புலம் பெயர்ந்தார்கள்.

நார்வே நாட்டின் வடக்கே நிறைய மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கே தான் கம்சாயினியின் குடும்பம் முதலில் தங்கி இருந்தது. நார்வே மீன்பிடிக்காரர்களுடன் சேர்ந்து இவர்களும் வேலை செய்தார்கள். வாழ்க்கை ஓடியது.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஓஸ்லோ தலைநகரத்தில் குடியேறினார்கள். ஓஸ்லோவில் தான் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. கம்சாயினியும் அவருடைய அண்ணனும் தமிழ் படிக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் விரும்பினார்கள். ஆக தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஓஸ்லோவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.




ஓஸ்லோவில் ஓர் தமிழர் இயக்கம். அதன் பெயர் ஓஸ்லோ தமிழ் இளைஞர் இயக்கம். அந்த இயக்கத்தில் கம்சாயினி சேர்ந்தார். இயக்கத்தின் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்தார்.

பின்னர் ஓஸ்லோவின் மேயர் ரேய்மண்ட் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் கம்சாயினியை அரசியலில் சேரச் சொல்லி ஆர்வம் கொடுத்தார்.

கம்சாயினியும் இளைஞர் அணியில் சேர்ந்து சேவை செய்து வந்தார். அதே காலக் கட்டத்தில் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமூகப் புவியியல் படித்தார். அப்படியே படிப்படியாக அரசியலில் தீவிரமாக களம் இறங்கி இன்றைக்கு ஓஸ்லோ தலைநகரத்தின் துணை மேயராக வலம் வருகிறார். 




நார்வேக்குப் புலம் பெயர்ந்த இலங்கை மக்களுடன் கம்சாயினி நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்டு உள்ளார். அரசியல் ரீதியாக என்ன என்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து வருகிறார்.

இலங்கையில் அவதிப்படும் தமிழர் குழந்தைகளுக்கு உதவி செய்யும் திட்டத்தில் இறங்கினார். இலங்கையின் மீது இவருக்கு ஏற்பட்ட தீவிர அரசியல் தாக்கத்தைப் பார்த்த இலங்கை அரசாங்கம் சற்றே கலக்கம் அடைந்தது. ஆக மிக அண்மையில் அவரை இலங்கைக்கு வரவிடாமல் தடை செய்து விட்டது.

கம்சாயினி அண்மையில் தி கார்டியன் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் சொல்கிறார்.




என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சம உரிமை வழங்க வேண்டும். இரு பாலரிடமும் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கக் கூடாது.

நார்வேயில் எங்கு போனாலும் பல்லின அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்புகளில் பெண்களுக்குச் சம பங்கு வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை.

சென்ற ஆண்டு அவர் இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்தார். அங்கு உள்ள பெண்கள் அமைப்புக்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது:  




நான் இலங்கைக்கு பல தடவை வந்து போய் இருக்கிறேன். என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன். நான் நார்வே நாட்டில் ஒரு பெரிய பதவியில் இருக்கலாம். இருந்தாலும்  என் உடலில் தமிழர் இரத்தம் ஓடுகிறது.

இலங்கை பத்திரிகைக்காரர்கள் விடவில்லை. விடாமல் துரத்திச் சென்று கேள்விகள் கேட்டார்கள்.

கேள்வி: தமீழழ விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான இடத்தை வழங்கவில்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தீர்கள். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

பதில்: என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். 

நார்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட இருபாலாருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றேன். ஏற்றத் தாழ்வுகள் தேவை இல்லை.




இதுவரைக்கும் எங்கும் பெண்களுக்கு 50 க்கு 50 விழுக்காடு சம உரிமை கிடைக்கவில்லை. அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன்.

அதே போல் தான் நார்வே நாடாளுமன்றத்திலும் ஆண்கள் பெண்கள் விகிதாசாரம் 50 க்கு 50 இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். எங்கு போனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவது இல்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்தச் சங்கங்களில் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டும் என்றுதான் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சரியான ஓர் இடத்தை; ஓர் அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதை நீங்கள் சரி என்று நினைக்கின்றீர்களா?




பதில்: நான் அவ்வாறு சொல்லவில்லையே. எல்லா மட்டங்களிலும் பெண்கள் உள்ளனர். ஆனால் வளர்ச்சி அடைந்து செல்லும் போது பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன். குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை. நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டி இருந்தேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான ஓர் இடத்தை வழங்கி இருந்தார்களா இல்லையா?

பதில்: இடம் கொடுத்து உள்ளனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மேலும் கூடுதலாக தலைமைப் பதவிகளைக் கொடுத்து இருக்கலாம். 




ஒரு விசயத்தை ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியாது. அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் கம்ஷாயினி முற்போக்கான எண்ணங்களைக் கொண்டு உள்ளார்.

பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் இவரைப் போன்று மேலும் பல பெண்கள் வர வேண்டும். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. அதே போல ஆண்கள் இல்லாமல் பெண்களும் இல்லை. அதுவே மனித வாழ்வியல் நியதி.

கம்சாயினி போன்று மேலும் நிறைய பெண்கள் வர வேண்டும். சாதனைகள் பல செய்ய வேண்டும். அனைத்துலக அரசியல் அரங்கில் ஆண்களுக்குச் சரிநிகர் சமமாய் அவதானிக்க வேண்டும். 



  ......................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Maana Mackeen அருமை அருமையான பதிவு உங்களுக்கே
உரிய நடையில்...
 

Muthukrishnan Ipoh நன்றிங்க ஐயா... தங்களுடைய படைப்புகளை இலங்கை, தமிழக மற்றும் வெளிநாட்டு மின்இதழ்களில் படித்து இருக்கிறேன்... தங்களுடைய எழுத்து நடையும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்.
 
 
Maana Mackeen உங்களது 'மோதிரக்கை'! ஓரு தகவல் வேண்டுமே! நீங்கள் இப்போது கோலோச்சுகிற. 'தமிழ் மல'ரில் முன்னர் ஆசிரியராக இருந்த திரு சங்கு சண்முகம் பற்றிய இன்றைய நிலை?
 
 
Muthukrishnan Ipoh திரு. சங்கு சண்முகம்.... முடியாமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். மேல் விவரங்கள் கிடைக்கவில்லை....
 
 
Arjunan Arjunankannaya அருமை ஐயா. தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
 
 
Kumar Murugiah Kumar's Iron lady... !!!


Muthukrishnan Ipoh உண்மையாகவே பாராட்ட வேண்டும் சார்... 31 வயதில் 7 இலட்சம் ஐரோப்பிய வெள்ளையர்களைக் கட்டுப் படுத்துகிறாரே...
 
 
M R Tanasegaran Rengasamy குலேபகாவலி பழைய எம்.ஜி.ஆர். படத்தில் "அநியாயம் இந்த நாட்டிலே அநியாயம்" எனும் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் பெண்கள் ஆண்களை அடிமைப் படுத்துவதாக இருக்கும். ஆனால் பெண்ணடிமைக் கொடுமைக்கு ஒட்டு மொத்தமாய் சாவு மணி அடித்துள்ள நார்வே நாட்டுப் உயர் பெண்மணிகள் இருவருக்கும் வாழ்த்துகள்.
 
 
Rajoo Veeramuthu நார்வே நாட்டில் மிளிரும் தங்க தமிழ் தாரகைக்கு இனிய வாழ்த்துகள். கட்டுரைப் படைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி மலர்கள்.
 
 
Manickam Nadeson நல்ல படைப்பு, நன்றி ஐயா சார்
 
 
Murugan Rajoo வரிகள் மிகச் சிறப்பு ஐயா... எழுச்சியின் உச்சம்... நல்வாழ்த்துகள்
 
 
Letchumanan Nadason அருமையான பதிவு. நன்றி ஐயா.
 
 
Barnabas அருமை.பெருமை
 
 

03 ஜூலை 2019

பிஜி தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 03.08.2018 

தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை.

அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்குக் காட்ட வேண்டும்? 



தமிழ் நாடு என்பது தமிழரின் பெயரைச் சொல்லத் தான் பெயரளவில் இருக்கிறது. அது ஒரு மாநிலம். மற்றபடி தமிழர்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு தேசம் அல்ல. மன்னிக்கவும்.

அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் வம்சம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை சூட்டினார்கள். கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள்.

பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்தார்கள். அது எல்லாம் அப்போதைய கதைகள். ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது. 



ஆக தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இந்த உலகில் எங்கேயும் இல்லை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாடு என்பது தமிழர்களின் நாடு அல்ல. இது வார்த்தை ஜாலம் அல்ல. இது என் மனதில் இறுகிப் போன ஒரு மௌனப் புயல்.

அதே அந்தத் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழ் மறக்கப்படும் நாடுகளில் ஒன்றுதான் பிஜி தீவு. பசிபிக் மாக்கடலில் பல்லவி பாடும் ஒரு பச்சைத் தீவு. அந்தத் தீவில் வாழ்ந்த தமிழர்களின் கதை இருக்கிறதே அது காலத்தால் அழிக்க முடியாத ஒரு கண்ணீர்க் கதை.

காலனித்துவ ஆட்சியில் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட தமிழர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். அதையும் தாண்டிய நிலையில் பிஜி நாட்டுத் தமிழர்கள் துவைத்துக் காயப் போடப் பட்டார்கள்.

மலாயா தமிழர்களின் நிலை பரவாயில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஐலசா பாடிக் கொண்டே ரசுலா கப்பலில் ஏறி இந்தியாவிற்கே போக முடிந்தது. 




ஆனால் பிஜி தீவுக்குப் போன தமிழர்களுக்கு அப்படி ஒன்றும் அமையவில்லை. சாகும் வரை திரும்பிப் போகவும் முடியவில்லை. பிஜி தீவிலேயே பலர் மக்கி மண்ணாகிப் போனார்கள்.

அந்த வாயில்லப் பூச்சிகளின் வாரிசுகள் தான் இப்போது அங்கே தங்களின் தாய்மொழிக்கு உயிர்ப் பிச்சை கேட்டுப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைப் பற்றிய வரலாறு வருகிறது. படியுங்கள். அவர்களின் சோக வரலாற்றை அசைப் போட்டுப் பாருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, நியூ கலிடோனியா, குயானா, சூரினாம் போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் தமிழர்கள் அங்கே கொண்டு செல்லப் பட்டார்கள்.

அதைப் போலவே பிஜி தீவிற்கும் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக்  கொண்டு செல்லப் பட்டார்கள். அவை எல்லாம் தொலைதூர நாடுகள். கண் காணா தேசங்கள்.

அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வர முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது. ஏன் என்றால் சில நாடுகளில் கப்பல் பயணங்கள் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஏறிச் செல்லும் கப்பல்களாக இருந்தன. வெள்ளைக் கறுப்புத் தோல்களின் இனவெறி இதிகாசங்கள் கப்பலோடு பயணித்துக் கொண்டு இருந்த காலக் கட்டம்.




மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்துகள் இருந்தன. அங்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் ஒப்பந்த காலம் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பி வர முடிந்தது. அதற்கான செலவுகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சும்மா ஒன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதாயம் இல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள். அது உலகம் அறிந்த மகா பெரிய ஆங்கிலேயத் தத்துவம்.

கொண்டு போகிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். அங்கே தமிழர்களின் இரத்தம் பார்த்த வியர்வைத் திவளைகளை நன்றாகவே உறிஞ்சினார்கள். மன்னிக்கவும் சப்பி எடுத்தார்கள் எடுத்தார்கள் என்று சொன்னால் தான் எனக்கு நிம்மதி. ஆக எடுத்து முடிஞ்சதும் வெறும் எலும்புக்கூட்டு உயிர்ச் சக்கைகளை மட்டும் கப்பலில் ஏற்றி ’பை பை’ காட்டி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வரவே முடியாத நிலை. தொலை தூரத்தில் இருந்ததால் தமிழ் மக்களோடு அறவே தொடர்புகள் இல்லாமல் போயின. பிஜி நாட்டு மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் தமிழில் அதிகம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தவிர தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க தமிழ் நாட்டில் இருந்து ஆசிரியர்களைப் பிஜி நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாத நிலை. அதனால் தான் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழை முறையாகப் படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது. 




பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம்முடைய உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குத் திசையில் தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு இருக்கிறது. பிஜி தீவு என்று சொல்வதைவிட பிஜி தீவுகள் என்று சொல்வதே சரியாகும். இருந்தாலும் பிஜி தீவு என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. பிஜி தீவைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் பிஜி தீவுகள் என்று அழைக்கிறார்கள். எல்லா தீவுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 7055 சதுர மைல்கள். பிஜி தீவின் தலைநகரம் சுவா. 1970-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. சரி. பழைய வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள். தொடக்கக் காலத்தில் தமிழர்களின் இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆகும்.

பிஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கத்தை அமைத்தவர் ஸ்ரீ சாது குப்புசாமி. இவர் சென்னையில் இருந்து பிஜி சென்றவர். அவர் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து சில அரிய தகவல்கள் கிடைத்தன. அவர் எழுதியதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

“ஐந்து வருட ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்த போது ஆண்களும் பெண்களுமாய் பல நூறு பேர் வந்து இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனியில் கொலம்பர்கள் இருந்தார்கள். கொலம்பர்கள் என்றால் அதிகாரிகள். பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொலம்பர்கள் சொல்வதே அப்போதைக்கு சட்டம். மீறிப் பேசக் கூடாது. மீறிப் பேசவும் முடியாது. அவர் சொன்னால் மறுபேச்சு பேசாமல் செய்ய வேண்டும். மறுபேச்சு இல்லை”





கொலம்பர்களுக்குக் கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் சர்தார் என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் கையால் செய்து காட்ட வேண்டும். வேலையாட்கள் ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று பற்பல திட்டங்களை வகுத்து வைத்து இருந்தார்கள். கொலம்பர்கள் சர்தார்களுக்கு கட்டளை போடுவார்கள். சர்தார்கள் வேலையாட்களிடம் எருமை மாட்டு வேலைகளை வாங்குவார்கள்.

சொன்ன மாதிரி வேலை செய்து முடிக்காதவர்களுக்கு அவ்வளவுதான். அந்த ஆளைப் பிடித்து கீழே தள்ளுவார்கள். தள்ளிய கையோடு அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; அந்த ஆளின் மார்பு மேல் ஏறி கைகளால் குத்துவார்கள். உதைப்பார்கள். சம்பளக் கூலியைக் குறைப்பார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் ஆண்களையும் பெண்களையும் திட்டித் தீர்ப்பார்கள்.

அது மட்டும் அல்ல. சில சமயங்களில் ஒழுங்காக வேலை செய்து முடிக்காதவர்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். உடனே அந்த வேலையாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எழுத்துப் பூர்வமான ஒரு சம்மன் வரும். பின்னர் அபராதம் விதிக்கப்படும். பிஜி தமிழர்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.

பிஜி தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் செய்து வந்த வேலைகளின் பட்டியல்:

1. ஏர் உழுதல்
2. கரும்பு நடுதல்
3. புல்வெட்டுதல்
4. குழி வெட்டுதல்
5. கரும்பு வெட்டுதல்
6. கரும்புக்கு உப்பு எரு போடுதல்.

கரும்பு வயல்களில் வேலை செய்யும் போது தமிழர்கள் பெரும் பெரும் கொடுமைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள். சர்தார்மார்களும் ஆங்கிலேயக் கொலம்பர்களும் தமிழர்களை மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதிலுக்குத் திருப்பி அடித்த தமிழர்களும் இருந்தார்கள்.

அப்படிப் பட்டவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போய் தண்டனை வாங்கிக் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். குறைந்த படசம் மூன்று மாதச் சிறைத் தண்டனை. சிறையில் இருந்து வந்த பின்னர் கடுமையான வேலைகளைக் கொடுப்பார்கள். அப்படி சிறைக்குப் போனவர்களில் சிலர் மர்மமான முறையில் இறந்தும் போய் இருக்கிறார்கள்.

இதே கூத்து தான் இங்கே நம்ப இடத்திலும் நடக்கிறது. லாக்காபில் அடைக்கப் பட்டவர்களில் பலர் லாக்காபிலேயே இறந்து போன கதைகள் தான். கேட்டுப் புளித்துப் போன கதைகள். இந்த லாக்காப் ராமாயணத்தை அப்போதே அந்தக் காலத்திலேயெ ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடலிலேயே அரங்கேற்றம் செய்து  விட்டார்கள்.

1917-ஆம் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பிஜி தீவில் குடியேறுவதற்கு வாய்ப்பு வசதிகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் பிஜி தீவு தமிழர்களின் தொழிலாளர்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது.

பிஜித்தீவில் இருந்த அத்தனைக் கரும்புத் தோட்டங்களையும் சி.எஸ்.ஆர் என்கிற ஓர் ஆஸ்திரேலியா கம்பெனி வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தமிழர் விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப் பட்டது. அதில் அவர் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட இடத்தில் ஒன்பது ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய வேண்டும். ஓர் ஏக்கர் நிலத்தில் சொந்தமாகப் பயிர் செய்து கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும். அந்தக் கரும்புகளைக் கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். கம்பெனியார் என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையில் தான் விவசாயிக்கு ஊதியம் கிடைக்கும்.

வெளி நாடுகளுக்குக் கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்குச் சேரும். 70 விழுக்காடு சர்க்கரை கம்பெனிக்குச் சேரும்.

அப்போது தமிழர்களிடம் ஒரு பேச்சு வழக்கு இருந்தது. சி.எஸ்.ஆர். கம்பெனி ஆறு மாசம் கரும்பை அரைச்சுப் பிழியுது. ஆண்டு முழுசா தமிழங்கள அரைச்சுப் பிழியுறானுங்க என்பதே அந்தச் சொல் வழக்கு. சரி. நாளைய கட்டுரையில் பிஜி தமிழர்கள் நடத்திய லங்காதகனம் எனும் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

சான்றுகள்:

1. Raghuram, Parvati; Sahoo, Ajaya Kumar; Maharaj, Brij; Sangha, Dave (16 September 2008). "Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations". SAGE Publications India.

2. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.

3. Navaneetham Pillay The most famous South African Tamil of our times". DailyMirror. 2013-08-31.

23 ஜூன் 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 1

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் கூறி இருக்கிறார்.

அவரின் பெயர் சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். 22.06.2019-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் அவ்வாறு பேசினார்.

இந்த நாட்டின் இரண்டாவது மொழியாக மாண்டரின் மொழி உருவாகி வருவதைக் காண பிடித்தம் இல்லை. மலேசியக் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மலர் 01.07.2019

இப்போதைய தாய்மொழிக் கல்வி முறை பலருக்கும் பிடிக்கவில்லை. அந்தக் கல்வி முறைக்கு கல்வியமைச்சர் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சலாமியா கூறி இருக்கிறார்.

மலேசியாவில் தேசிய மாதிரிப் பள்ளிகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் தொடக்க நிலைப் பயிற்று மொழியாக உள்ளன, 



சலாமியாவின் பேச்சு தேச நிந்தனைக்கு உரிய பேச்சு. தன்மூப்பான பேச்சு. அடாவடித் தனமான பேச்சு. இனங்களுக்கு இடையே கசப்பு உணர்வுகளைத் தூண்டிவிடும் பேச்சு. இதனால் அவர் மீது பரவலான ஊடகத் தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன.

அப்படி பேசியதற்காக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப் படலாம். ஆனாலும் வழக்குத் தொடரப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 




மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) சீனத் தமிழ் மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அது சட்டப் படியான அங்கீகாரம்.

ஆகவே சீனத் தமிழ் மொழிகளைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. சட்டப்படி உரிமை இல்லை.

 
மாண்புமிகு மார்க் கோடிங்
அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு என்று தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன்.

சீனத் தமிழ் மொழிகளின் உரிமையைப் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது. 



பத்திரிகை ஆசிரியர் மெலான் அப்துல்லா
மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆல விருச்சகமாய் விழுதுகள் படர்ந்து வீர வசனங்கள் பேசியது.

கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குச் செயல்பாடுகள். அவற்றில் எல்லாம் இருந்து தப்பித்துக் கரையேறி மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறது.

அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது. அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடியும் வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். அந்த வகையில் அவர்களுக்கு நாட்டின் வரலாறு நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளது.

தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னாலே அது ஓர் அரச நிந்தனையாகும்.




சீனத் தமிழ்ப் பள்ளிகளை அழிக்க வேண்டும் என்று சொன்ன உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா மீது 1971-ஆம் ஆண்டு வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டது. இது பலருக்கும் தெரியாத செய்தி.

(In the case *Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)*, Utusan Malaysia was found guilty of sedition for an editorial titled *Hapuskan Sekolah Beraliran Tamil atau China di-Negeri ini* (Abolish Tamil and Chinese medium schools in the country.)




1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னதற்காக மாட்டிக் கொண்டார். (11 October 1978). அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

(On October 11, 1978, the MP urged the government to close down Chinese and Tamil primary schools in the Parliament.)


நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) உள்ளது. இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு இழுக்கப் பட்டார். (Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948); கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.

(Under Article 63 (4), the immunity of parliamentarians are not applicable to matters related to the status and special privileges of Bahasa Malaysia and bumiputra as well as challenging the constitutional position of the Yang di-Pertuan Agong.)

1982-இல் மார்க் கோடிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. மார்க் கோடிங் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.




(Malaysian education system is based on the Razak Report which was incorporated into Section 3 of the Education Ordinance of 1957, allows the retention of Chinese and Tamil medium schools)

*Act 550, Education Act 1996* allows the existence of 'national-type' schools. The Chinese and Tamil medium schools are allowed to use their respective mother tongues as a mode of communication, provided that English and Bahasa Malaysia are compulsory subjects.

*The Sedition Act (1971)* does not allow anyone to propose the closure of Chinese or Tamil primary schools, just as one cannot question the special provision for Malays and natives in Sabah and Sarawak in Article 153.




ஆக இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன.

பாஸ் கட்சி பிரமுகர் சொன்னது போல இது ஒன்றும் டோடோல் கிண்டும் சமாசாரம் இல்லை. மலேசிய அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மலேசிய அரசியலமைப்பை அவமதிப்பது தேச நிந்தனையாகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

22 ஜூன் 2019

போர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள்

Dayak Hindus in Borneo

அழகிய பச்சைப் பசுமைகளின் மறுபிறவிகள் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக் காடுகள். அழகிய பச்சைப் புல்வெளிகளின் அரும்பிறவிகள் ஆசியாவின் களிமந்தான் காடுகள். இரண்டுமே பழமை வாய்ந்த பச்சை மழைக் காடுகள். இரண்டுமே ஈரம் பாய்ந்த இயற்கைச் செல்வங்கள். 


கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய் கூடிக் குலவி வாழ்ந்த பச்சைக் காடுகளின் பசுங்காட்டு வெளிகள். பரிசுத்தமான இயற்கையின் எழில்மிகு ஜாலங்கள் பச்சையில் சங்கமிக்கும் பாரிஜாத உச்சங்கள். அனைத்துமே சொற்களில் வடிக்க முடியாத கானகத்துச் கவிக் கோலங்கள்.

களிமந்தான் காடுகள் போர்னியோ தீவில் உள்ளன. இந்தோனேசியாவிற்குச் சொந்தமான நீர்நிலைக் காடுகள். இங்கேதான் ஓர் அதிசயம் நடந்து வருகிறது. உலக இந்துக்கள் பலருக்கும் தெரியாத ஓர் அதிசயம். என்ன தெரியுங்களா? 

இந்தக் காடுகளில் வாழும் டயாக் பூர்வீகக் குடிமக்கள் ஒரு வகையான இந்து மதத்தைப் பின்பற்றிப் போற்றி வருகின்றார்கள். அவர்கள் பின்பற்றும் அந்த இந்து மதத்தின் பெயர் காரிங்கான் இந்து மதம். உலகளாவிய இந்து மதத்தின் பின்னணியில் உருவான ஓர் இயற்கை மதம் தான் காரிங்கான் இந்து மதம். 


பாலித் தீவில் பல இலட்சம் இந்தோனேசிய இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களும் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட இந்து சமயத்தை உருவாக்கிக் கொண்டு பின்பற்றி வருகின்றார்கள். இன்று வரையிலும் அவர்களின் இந்து மதத்தைப் போற்றியும் புகழ்ந்தும் வருகின்றார்கள்.

அதைப் போலவே களிமந்தான் காடுகளில் வாழும் காஜு எனும் டயாக்

(Dayak Ngaju)

பிரிவினரும் ஒரு தனித்துவமான இந்து சமயத்தை உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இந்த விசயம் பலருக்கும் தெரியாது.

இறைவனே உச்சத்தில் உயர்வானவர்; ஒப்புயர்வானவர் எனும் கொள்கையில் காரிங்கான் இந்து மதம் செயல்பட்டு வருகிறது.


போர்னியோவில் பலவகை டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஏறக்குறைய 200 வகையான டயாக் மக்கள். மத்திய களிமந்தான் காடுகளில் காஜு எனும் டயாக் பிரிவினர் உள்ளனர். இவர்கள் பின்பற்றும் இந்து மதமே காரிங்கான் இந்து மதம் ஆகும்.

டயாக் என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். தெரிந்த விசயம். இந்தப் பழங்குடி மக்களில் 250 துணை இனக் குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆஸ்திரோனேசிய மொழியைப் பேசுகின்றார்கள். பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். ஏறக்குறைய 40 இலட்சம் டயாக்குகள், களிமந்தான் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

(Belford, Audrey (September 25, 2011). "Borneo Tribe Practices Its Own Kind of Hinduism". New York TImes.)

காஜு டயாக் மக்கள் பின்பற்றும் மதம் இந்து மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் அதனை இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.


இஸ்லாம்; புரொடெஸ்டனிசம்; கத்தோலிக்கம்; இந்து; புத்தம்; கான்பூசியசம் ஆகிய ஆறு மதங்களை மட்டுமே அதிகாரத்துவ மதங்களாக இந்தோனேசிய அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. காரிங்கான் மதம் இன்று வரையில் அங்கீகரிக்கப் படாமல் உள்ளது. இந்தக் காரிங்கான் மதத்தில் இந்து - ஜாவானிய தாக்கங்கள் உள்ளன.

தீவா பண்டிகை என்பது காஜு டயாக் மக்களின் திருவிழாவாகக் கருதப் படுகிறது. இந்த விழா முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தக் கட்டத்தில் எருமைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை உயிர்ப்பலி கொடுக்கப் படுகின்றன. இந்த உயிர்ப்பலிக்கு யாட்னா என்று பெயர்.


(Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.)

காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான்.

Balai Basarah - Balai Kaharingan

காரிங்கான் என்பது பழைய டயாக் சொல் ஆகும். காரிங் எனும் சொல்லில் இருந்து உருவானது. காரிங் என்றால் டயாக் மொழியில் உயிர் அல்லது வாழ்வதாரம் என்று பொருள்.

களிமந்தான் டயாக் மக்களிடம் தனிப்பட்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. மழைக்காட்டு விசுவாசம் என்று சொல்வார்கள். அது அவர்களின் உயிர்த் தன்மை. அதாவது காட்டின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் சிறப்புத் தனமை. மழைக் காடுகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்குள் கண்டிப்பான வரைமுறைகள் உள்ளன. 


காட்டில் இருந்து எதை எடுத்து வரலாம்; எதை எடுத்து வரக்கூடாது எனும் எழுதப் படாத சாசனங்கள். அந்த வரைமுறைகளை அவர்கள் தாண்டிச் செல்வது இல்லை. டயாக் சமூகங்கள் காட்டை நம்பியே வாழ்கின்றன. அதனால் அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து இருக்கிறார்கள்.

காஜு டயாக் மக்கள் பெரும்பாலோர் விவசாய வணிகம்; நெல் பயிரிடுதல்; கிராம்பு பயிர் செய்தல்; மிளகு, காபிச் செடி வளர்த்தல்; கொக்கோ பயிர் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய களிமந்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான டயாக்குகள் இந்து காரிங்கான் மதத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும் அண்மைய காலங்களில் இந்தக் களிமந்தான் டயாக் மக்கள் இஸ்லாம், கிறிஸ்த்துவ மதங்களுக்கும் மாறி வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரே டயாக் மக்கள் தேசிய அளவில் அரசியல் கட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் இந்தோனேசியாவை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இந்தோனேசிய மக்கள் டச்சுக்காரர்களின் ஆட்சியை எதிர்த்தாலும் இந்தோனேசிய மக்களுக்கு முன்பாகவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் டயாக் மக்களாகும்.


ஆக 1950-ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் பெறுவதற்காக டயாக் மக்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் காஜு டயாக் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு மேஜர் ஜிலிக் ரீவுட் என்பவர் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார். அவரின் தலைமைத்துவத் தாக்கம்; சுதந்திரப் போராட்டத்  தாக்கத்தினால் காஜு மக்களும் காரிங்கான் மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர்கள்.

தலைவர் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே என்று சொல்வார்கள். அந்த மாதிரி தலைவரின் போராட்ட உணர்வுகளினால் கவரப்பட்ட டயாக் மக்கள் தலைவர் பின்பற்றிய காரிங்கான் மதத்தையே தங்களின் வழிபாட்டு மதமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1945-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. பஞ்சார்மைசின் மாநிலம் தனிமாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிராக காஜு டயாக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காரிங்கான் இந்துக்கள் வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் செய்தார்கள். 


மேஜர் ஜிலிக் ரீவுட்டின் தலைமையில் ஒரு கொரில்லா படை உருவானது. ஆங்காங்கே எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆக வேறு வழி இல்லாமல் காஜு டயாக் மக்களுக்காக மத்திய களிமந்தான் எனும் தனி மாநிலம் உருவாக்கப் பட்டது. போராட்டத் தலைவராக மேஜர் ஜிலிக் ரீவுட் விளங்கினார்.

அதனால் டயாக் மக்கள் பலரும் மேஜர் ஜிலிக் ரீவுட்டினால் ஈர்க்கப் பட்டார்கள். மேஜர் ஜிலிக் ஓர் இந்து. அதனால் தங்களின் தலைவர் சார்ந்த காரிங்கான் இந்து மதத்தையும் டயாக் மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்படித்தான் இந்த மதம் டயாக் மக்களிடம் பரவலாகிப் போனது.

காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தது. ஆனாலும் நெருக்குதல் காரணமாக 1980-ஆம் ஆண்டு காரிங்கான் இந்து மதத்தை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் அந்த மதம் இந்து மதத்திற்கு கீழ் இயங்கும் மதமாகவே இயங்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது. அந்த வகையில் காரிங்கான் மதம் இன்று அளவிலும் களிமந்தானில் உயிர் பெற்று வருகிறது.


களிமந்தான் காடுகளில் தற்சமயம் 223,349 காரிங்கான் இந்து சமயத்தவர் வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 300 இந்துமதப் பூசாரிகள் உள்ளனர். காரிங்கான் இந்து சமயத்தவர்களுக்கு என்று ஓர் இந்து மாமன்றம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மன்றத்தின் கீழ் டயாக் இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். டயாக் இந்து மாமன்றம் என்ன என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை மத்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை கிராமப்புறக் கோயில்களில் இந்துக்களின் ஒன்று கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.




இவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவரை இரு முறை புதைக்கும் பழக்கம். சற்று வித்தியாசமான பழக்கம்.

முதலாவதாக இறந்த ஒருவரின் உடலை முறைப்படி புதைத்து விடுவார்கள். உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது சகல மரியாதைகளுடன் ஊர்வலம் நடைபெறும். இந்து சாமியார்கள் முன் செல்ல உடன்பிறப்புகள் பின் தொடர்வார்கள். மஞ்சள் அரிசி மஞ்சள் பூக்கள் இடுகாட்டிற்குச் செல்லும் வழி நெடுகிலும் தூவப்படும்.

இரண்டாவதாகக் கொஞ்ச காலம் கழித்து புதைக்கப்பட்ட அதே உடல் தோண்டி எடுக்கப்படும். இங்கே கொஞ்ச காலம் என்பது சில மாதங்களாக இருக்கலாம். சில வருடங்களாகவும் இருக்கலாம்.

மீட்டு எடுக்கப்பட்ட அந்த உடலைச் சுத்தம் செய்து தங்களின் இந்து முறைப்படி மறுபடியும் புதைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் இறந்தவரின் ஆத்மா அமைதி பெறும் என்பது காஜு டயாக் மக்களின் இந்து மத நம்பிக்கை.




தவிர சபா, சரவாக் மாநிலங்களிலும் காரிங்கான் இந்து மதத்தைப் பின்பற்றும் 8,000 டயாக் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களின் மதத்தை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. காரிங்கான் இந்து மதம் என்பது ஒரு முழுமையான மதம் அல்ல என்று மலேசிய அரசாங்கம் சொல்லி வருகிறது.

காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம்
Great Council of Hindu Religion Kaharingan

மத்திய களிமந்தானில் இருக்கும் பாலங்கராயா எனும் இடத்தில் உள்ளது. இங்கே தான் அவர்களின் மதத் தொடர்பான விவகாரங்கள் பரிசீலிக்கப் படுகின்றன.

வரலாற்றின் மூன்று காலக் கட்டங்களில் களிமந்தான் காடுகளில் குடியேற்றம் நடந்து உள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய புரோட்டோ மலாய் காலத்தில் நடந்தது. ஜாவா, களிமந்தான் கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களின் குடியேற்றம் இடம்பெற்றது.

பின்னர் இந்துக்களின் ஆட்சிக் காலத்தில் ஜாவாவில் இருந்து பலர் களிமந்தான் வந்து குடியேறினார்கள். அவர்கள் மூலமாக டயாக் மக்களிடம் இந்து மதம் பரவி இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.




கி.பி.350-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.400-ஆம் ஆண்டு வரையில் கூத்தாய் மார்த்தாடி பூரா எனும் ஓர் இந்திய அரசு போர்னியோ களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இது ஓர் இந்து சிற்றரசு ஆகும்.

அதைப் போல கி.பி.1300-ஆம் ஆண்டுகளில் கூத்தாய் கார்த்தா நகரா எனும் ஓர் இந்திய அரசு களிமந்தானை ஆட்சி செய்து இருக்கிறது. இந்த இரு அரசுகளின் இந்து மதத் தாக்கம் களிமந்தானில் தேங்கி நின்று இருக்கலாம்.

அந்த வகையில் இந்து மதம் டயாக் மக்களிடையே பரவியும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் களிமந்தான் மழைக் காடுகளில் இந்து மதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இது பலருக்கும் தெரியாத செய்தி. அந்தச் செய்தியைத் தெரியப் படுத்திய வகையில் எனக்கும் மகிழ்ச்சி. மீண்டும் ஒரு புதிய வரலாற்றுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Vogel, J.Ph. 1918 The yupa inscriptions of King Mulavarman from Koetei (East Borneo). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 74:216–218.

2. Iban Cultural Heritage — The Early Iban Way of Life — by Gregory Nyanggau 26th descendant of Sengalang Burong, the Iban God of War

3. Greer, Charles Douglas (2008). Religions of Man: Facts, Fibs, Fears and Fables. Bloomington, IN: AuthorHouse. p. 135. ISBN 1-4389-0831-8.

4. https://web.archive.org/web/20130730184401/