11 ஜூலை 2019

அகிலன் பிறந்த நாள் - ஜுன் 27

(தோற்றம்: 27.06.1922 - மறைவு: 31.01.1988)

நாவல் ஆசிரியர்; நாடக ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பன்முகத் திறன் வாய்ந்தவர்; தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவர்.
 Image may contain: 1 person, eyeglasses and closeup
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.

இவர் முதலில் இரயில்வே அஞ்சல் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய எளிய நடை இவரின் படைப்புகளின் சிறப்பு அம்சங்கள்.

 Image may contain: 1 person, sitting

முதல் நாவல் ‘மங்கிய நிலவு’. 1944-இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்து உள்ளார்.

உலகின் பல மொழிகளிலும் இவரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரின் படைப்புகள் வலம் வருகின்றன.

இவரின் ‘பாவை விளக்கு’ நாவல்; ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப் படங்களாக வெளிவந்தன.
‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள் மறக்க முடியாதவை.

‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963-இல் சாகித்ய அகாடமி விருதையும்; ‘சித்திரப்பாவை’ 1975-இல் ஞானபீட விருதையும் பெற்றன.

எங்கே போகிறோம் என்ற சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது.

இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்த நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப் படுகிறது.

1938-இல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக ‘அவன் ஏழை’ என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்துச் சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், ‘எங்கு திருடினாய்?’ என்றார்.

இவர் கோபத்துடன் ‘என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்’ என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர் அவரை தட்டிக் கொடுத்தாராம்.

அகிலன் 66 வயதில் (1988) மறைந்தார்.

இன்றைய சிந்தனை 28.06.2019 - உழைப்பதே வாழ்க்கை

தெரு கற்களாய் நிற்பது வாழ்க்கை அல்ல...
விழல் நீராய் வழிந்தோடுவது வாழ்க்கை அல்ல...
மெழுகு பொம்மைகளாய்ப் பெருமை கொள்வதும் வாழ்க்கை அல்ல...
எறும்பு போல உழைப்பதே வாழ்க்கை...
வாழும் வரை உழைத்துக் காட்டுவதே வாழ்க்கை.

 Image may contain: 1 person, smiling

உலக மக்கள் தொகை நாள் 2019

இன்று ஜூலை 11-ஆம் நாள். உலக மக்கள் தொகை நாள் (World Population Day). உலக மக்கள் தொகை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபை தோற்றுவித்த நாள். 2009-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7,024,000,000. அதாவது ஏழு பில்லியன். 


இன்று 11.07.2019 மாலை 4.00 மணிக்கு உலக மக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை கூடிச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010-ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது.


மக்கள் தொகை விழிப்புணர்வு முன்னெடுப்புகளினால் 30 பில்லியன் பிறப்புகள் குறைந்து உள்ளன. சற்றே மன நிறைவு அளிக்கிறது.

இறப்புகள் என்று எடுத்துக் கொண்டால் இப்போது ஆண்டிற்கு 57 மில்லியன் இறப்புகள். ஆனால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இறப்பு விகிதம் ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 



இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை மிஞ்சி விட்டது. அதனால் உலக மக்கள் தொகையானது 2050-ஆம் ஆண்டு வாக்கில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஒவ்வொரு விநாடி நேரத்திலும் 2 புள்ளி 582 எனும் விகிதத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த வகையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 223,098 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு வருடத்திற்கு 81,430,910 என்று பிறப்புத் தொகை அதிகரித்துச் செல்கின்றது.

இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்விற்குக் காரணம் மருத்துவ முன்னேற்றம்; பசுமைப் புரட்சி; விவசாய உற்பத்திப் பெருக்கம். அதனால் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்தது. 



இன்றைக்கு (11.07.2019) மாலை 4.32 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை  111,577. பிறந்தவர்களின் எண்ணிக்கை மாலை 4.34 வரை 266, 528.

அப்படி என்றால் இன்றைக்கு ஒருநாள் மாலை 4.30-க்குள் மட்டும் உலக மக்கள் தொகை 150,000 அதிகரித்து இருக்கிறது. 



இந்த மாதிரி பெற்றுத் தள்ளிக் கொண்டு போனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் பூமாதேவி தாங்க மாட்டார். அவரும் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்கிறீர்கள்?

மேற்சொன்ன புள்ளி விவரங்களை Current World Population எனும் இணையத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதன் முகவரி:

https://www.worldometers.info/world-population/

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

09 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை. 



அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.




2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2018-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.

ஆனால் இந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 6485 மொழிகளாகக் குறைந்து விட்டது.

அதாவது ஒரே வருடத்தில் பதினைந்து மொழிகள் காணாமல் போய் விட்டன. 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 6000 மொழிகள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



கிரேக்க மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகப் பழைமையான மொழி. ஆனால் அந்த மொழியைப் பேச ஓர் இனம் இல்லாது போனதால் தான் அந்த மொழி இப்போது இருந்தும் இல்லாமல் மறைந்து போய் கிடக்கிறது.

அதே போலத் தான்  சமஸ்கிருத மொழியும் ஓர் இறந்த மொழியாக மாறிப் போய் இருக்கிறது. ஆக ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அதற்கு ஓர் இனம் தேவை.

உலகில் 6485 மொழிகள் இருந்தும் பெரும்பான்மை மொழிகள் சிறுபான்மை இனத்தவரின் மொழிகள்.

வட தென் அமெரிக்கா கண்டங்களில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப்பட்டன. ஐரோப்பியர்கள் வந்தார்கள். சிறுபான்மை இனத்தவரின் நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போயின.

2010-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள். 




கி.பி.454-ஆம் ஆண்டு சுமத்திராவை ஈஸ்வர நரேந்திரன் என்பவர் ஆட்சி செய்தார். அவர் காலத்தில் இருந்து தமிழர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது அங்கு வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்றார். அதை நினைவு படுத்துகிறேன். மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.

15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா ஒரு பெரிய வாணிக மையமாக விளங்கியது. தமிழ்நாட்டில் இருந்து துணிமணிகள், யானைத் தந்தங்கள் மலாக்காவிற்கு கொண்டு வந்த தமிழர்கள் மிளகு, வாசனைத் திரவியங்கள், பீங்கான் மங்குகளை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.




இந்தக் கட்டத்தில் முன்ஷி அப்துல்லா எனும் இலக்கியவாதியை மறந்துவிட முடியாது. இவர் 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர்.

1843-ஆம் ஆண்டு அவர் தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா. தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் தமிழ்மொழியை மணலில் எழுதிப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். 




முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் தேயிலை, கரும்புத் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதுவே இந்த நாட்டில் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும்.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.




அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சிங்கப்பூர் பிரீ ஸ்கூல். அதற்கும் ஆதரவு கிடைக்காததால் 1839-ஆம் ஆண்டு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கு; மலாக்கா; சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1859-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலபார் பள்ளி தொடங்கப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது.

1900-ஆம் ஆண்டில் பேராக் பகான் செராய் நகரில் ஆங்கிலேய அரசாங்கம் முதல் தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது. 




1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்கலாம் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என்கிற ஒரு சட்டம்.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள். 




பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள்.

படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள். 



கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்து இருக்கும். ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது. 




வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

தமிழர்கள் படித்து இருந்தால் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் அதுவே பெரிய விசயம். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.

ஆக தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.

வெளியே போனால் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும். அப்புறம் பின்நாட்களில் தங்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.




ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். அவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை அறிவு போதும். அதற்கு மேல் படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் எசமானர்களுக்கு ஆபத்து.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசை நாற்பது காசாகப் பார்க்க வேண்டும். கல்லா கட்ட வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும்.

அதுதான் வெள்ளைக்காரர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

(தொடரும்)

08 ஜூலை 2019

சுந்தர் பிச்சை

உலக மக்கள் கூகளில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உலக மக்களில் ஒருவரை அந்தக் கூகள் நிறுவனம் தேடி இருக்கிறது. தேடித் தேடிக் கடைசியில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவரைக் கண்டுபிடித்து இருக்கிறது. 



அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அதுவும் தன் நிறுவனத்திலேயே வேலை செய்கிறார் என்பது தெரிந்ததும் அதற்கும் வேலை கொஞ்சம் சுலபமாக முடிந்து விட்டது.

அவரையே இப்போது தலைவராக்கி அழகு பார்க்கின்றது. அந்த நிறுவனத்தின் பெயர் கூகள். தலைவரின் பெயர் சுந்தர் பிச்சை. வயது 46.

நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் என்ன செய்கிறோம். போய் கூகளில் தேடிப் பார்க்கிறோம். இல்லையா. ஒரு சின்னச் சந்தேகமாக இருந்தாலும் கூகளில் தேடுவது இப்போது எல்லாம் ரொம்பவும் வாடிக்கை. அந்த வகையில் கூகளைத் தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். சந்தேகம் வேண்டாம்.




கூகள் இல்லாமல் இணைய வாழ்க்கையே இல்லை என்கிற மாதிரி ஒரு நிலைமை உருவாகி விட்டது. கிண்டர்கார்டன் போகும் மழலையில் இருந்து குண்டர் கும்பல் விசுவாசிகள் வரை எல்லாருமே கூகளில் ஐக்கியமாகிப் போகிற காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கூகள் தேடல் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 700 - 1000 கோடி தேடல்கள் நடைபெறுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு. ஒவ்வொரு விநாடியும் 63,000 தேடல்கள். நம் பூமியில் இருப்பவர்கள் 7 புள்ளி 771 பில்லியன் மக்கள். இவர்களில் பாதி பேர் ஒவ்வொரு நாளும் கூகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். 




இன்னும் ஒரு கொசுறுச் செய்தி. ஒவ்வொரு நாளைக்கும் இந்த உலகில்

360,000 குழந்தைகள் பிறக்கின்றார்கள்

151,600 பேர் இறக்கின்றார்கள்


இப்போதைய உலக மக்கள் தொகை 7,771,576,923 (2018 புள்ளி விவரங்கள்). இதுவும் கூகளில் இருந்து சுடப் பட்டது.

(சான்று: http://worldpopulationreview.com/continents/world-population/)




சுந்தர் பிச்சையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூகள் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த உலகில் பல கணினித் தொழிநுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் இருக்கின்றன. 

அவற்றில் தலையாய நிறுவனத்தின் பெயர் கூகள் (Google). தமிழில் கூகள், கூகல், கூகில், கூகிள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். 




கூகள் என்பதே சரியான சொல். விக்கிப்பீடியாவும் அதையே பயன்படுத்தி வருகிறது. ஆகவே மலேசியாவில் உள்ள ஊடகங்கள், கூகள் எனும் சொல்லையே பயன்படுத்த வேண்டும். நம்முடைய கருத்து. சரி. உலகின் தலையாய 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வருகிறது. அவற்றின் வருமானம் அமெரிக்க டாலர்களில் (கோடி) உள்ளன. இவை ஆகக் கடைசியாகக் கிடைத்த 2018 டிசம்பர் மாதப் புள்ளி விவரங்கள்.


சரி. கட்டுரைக்கு வருவோம். இந்தப் பட்டியலில் கூகள் நிறுவனம் மட்டும் தான் எந்தப் பொருளையும் விற்காமல் சம்பாதிக்கும் நிறுவனமாகும்.

மற்றவை தங்களின் பொருட்களை விற்பனை செய்து காசு பார்க்கின்றன. அதனால் மூலதனம் போடாமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு சம்பாதிக்கிற ஒரே நிறுவனம் என்றால் அது இந்தக் கூகள் நிறுவனம் தான்.

உலகம் முழுமைக்கும் இந்த நிறுவனத்தில் இப்போதைக்கு 98,771 பேர் வேலை செய்கின்றனர்.


கூகள் நிறுவனம், அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் சக்கை போடு போடுகிறது. கூகள் தேடுபொறி இயக்கமே இதன் முதன்மையான சேவை.

1998-ஆம் ஆண்டில் லாரி பேஜ்; சேர்ஜி பிரின் எனும் இரு நண்பர்களால் விளையாட்டுத் தனமாக தொடங்கப் பட்ட நிறுவனம் தான் இந்தக் கூகள். 1996-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது டாக்டர் பட்டத்திற்காக உருவாக்கிய ஆய்வேடு தான் இந்தக் கூகள். இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. 

1998-ஆம் ஆண்டு சூசன் வோசிசிக்கி எனும் சக மாணவியின் வீட்டில், கார் நிறுத்தும் ஒரு கொட்டகைக்குள் கூகள் தொடங்கப் பட்டது. இந்தச் சூசன் வோசிசிக்கி தான் இப்போது யூ டியூப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். இவருக்கு வயது 47.


உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மலேசிய பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டி முடிக்கலாம்.

இவ்வளவு பணம் இருந்தாலும் தன் பெரிய மகளுக்கு வெறும் 200 டாலர் மடிக்கணினியை வாங்கிக் கொடுத்தாராம். ஒரு கோடீஸ்வரின் மகள் என்கிற நினைப்பு தன் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று சொல்கிறார்.   

சரி. கூகிள் விசயத்திற்கு வருவோம். உலகின் தகவல்களை ஒருங்கு இணைப்பதே அதன் தலைமைச் செயல்பாடாகும். முதன்முதலில் அதை உருவாக்கிய போது அதற்கு பேஜ் ரேங்க் என்று பெயர் வைத்தார்கள். பேக்ரப் எனும் மற்றொரு பெயரும் உண்டு. பின்னர் கூகூல் (Googool) என்று பெயர் மாறியது. இப்போது கூகள் என்று ஊர் உலக மக்களுக்குத் தெரிந்த பெயராகி விட்டது.
 

கூகள் இணையத் தேடல், கூகள் மெயில் (GMail), கூகள் டாக்குமெண்டுகள் (Google Documents), கூகள் பிளஸ் (Google Plus), கூகள் டாக் (Google Talk), கூகள் மேப்ஸ் (Google Maps), கூகள் நியூஸ் (Google News), பிளாக்கர் (Blogger), யூ டியூப் (YouTube) போன்ற பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற யூ டியூப் சேவையும் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இன்னும் ஒரு விசயம். பிளாக் (Blog), பிளாக்கர் (Blogger), பிளாக்ஸ்பாட் (Blogspot) என்று சொல்கிறார்களே அந்த இலவச வலைப்பதிவுச் சேவைகளையும் இந்தக் கூகள்தான் இலவசமாக வழங்கி வருகிறது. பிளாக்கர் என்பதை வலைப்பதிவு என்று அழைக்கிறோம்.

சரி. சுந்தர் பிச்சையைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இந்தியர்களின் பங்கு மலைப்பையும் வியப்பையும் தருகிறது.
 

அமெரிக்காவின் பெரிய பெரிய நிறுவனங்கள், இந்தியர்களைத் தான் அவற்றின் தலைமை பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றன.

காரணம் என்ன என்று கேட்டால் கணினித் துறையில் இந்தியர்கள் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறார்கள்; ரொம்பவும் விசுவாசமானவர்கள்; ரொம்பவும் நம்பிக்கையானவர்கள் என்றும் புகழாரம் பாடுகின்றன.

இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை வேலைக்கு வைக்கலாம். (பெயர் வேண்டாம்). பதவிக்கு வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வேலை செய்யும் கம்பெனியைப் போல இன்னொரு சொந்தக் கம்பெனியைத் திறந்து விடுவார்கள்.

கம்பெனியின் ரகசியங்களைக் கடத்திக் கொண்டு போவார்கள். அதனால் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். விடுங்கள். அது நம்ப பிரச்சினை இல்லை.
 

கூகள் நிறுவனம் தன்னுடைய சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையைத் தலைமைச் செயல் அதிகாரியாக அறிவித்தது. உலகமே வியந்து போனது.

ஏற்கனவே அந்தப் பதவியில் கூகளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் தான் இருந்தார்கள்.

சுந்தர் பிச்சை தான் கூகள் நிறுவனத்தில் அண்ட்ராய்ட், கூகள் குரோம் ஆகிய பிரிவுகளுக்குத் தலைவர்.

2004-ஆம் ஆண்டு கூகள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கெட்டிக்காரர். இண்டர்நெட் எக்ஸ்புரோர், பயர் பாக்ஸ், ஒப்பேரா போன்ற உலவிகள் இருக்கும் போது கூகள் குரோமை அறிமுகப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தவர்.
 

இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான உலவி எனும் பெயரில் கூகள் குரோம் முதல் இடத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

உலகில் கோடிக் கோடியான திறன்பேசிகள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு திறன்பேசிகளில் அண்ட்ராய்ட் செயலாக்கம் இடம் பிடித்து இருக்கிறது. அவற்றுக்குள் கூகள் குரோமை இழுத்துச் சென்றவர் சுந்தர் பிச்சை என்கிற அழகிய தமிழர்தான்.

டுவிட்டர், மைக்ரோசாப்ட், டெலிகிராம், மைசாட் போன்ற நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக பல முறை முயற்சிகள் செய்தன. திறமைசாலிகளை இழுத்துப் போடுவதில் கெட்டிக்கார நிறுவனங்கள். அவை ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும்  மிகை ஊதியமாகச் சில பல கோடி டாலர்களைக் கொடுத்து சுந்தரைக் கூகள் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டது.

சுந்தர் பிச்சை 1972-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். உத்தர பிரதேசம் கரக்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர். ஸ்டான்ட்பர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு. பின்னர் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

2004-ஆம் ஆண்டு கூகளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். கூகள் குரோம், கூகள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையே சாரும்.

அடுத்ததாக அண்ட்ராய்ட் செயல்பாட்டு நிரலிகளின் மேம்பாட்டுத் துறைக்குத் தலைமை தாங்கினார். அப்படியே ஜி-மெயில் மின்னஞ்சல் திட்டத்தையும் உருவாக்கித் தந்தார். அந்த வகையில் இவருடைய சேவைகள் உச்சத்திற்குச் சென்றன.

அதன் பின்னர் அண்ட்ராய்ட் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை கூகள் இவரிடம் வழங்கியது. நன்றாகவே செய்து முடித்தார்.

இன்னும் ஒரு விசயம். இந்த உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட்; கூகள். இந்த இரண்டிலுமே தலைமைப் பதவிகளை வகிப்பது இந்தியர்கள் தான்.

உலகின் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களுடைய பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகள் வியந்து பாராட்டுகின்றன.

பொதுவாகவே இந்திய நிர்வாகிகள் அனைவரும் எதிர்காலத்தைச் சார்ந்து கற்பனைக் கடலில் பயணிகின்றார்கள். உண்மையிலேயே அவர்களிடம் தீவிரமான தொழில் வளர்ச்சி சிந்தனைகள் மலிந்து பயணிக்கின்றன. இவர்கள் தான் அசாத்தியமான இலக்கை நோக்கிப் பீடு நடை போடுகின்றார்கள்.

எல்லைகள் விரிந்த அதி நவீனமான கணினி நிறுவனங்களையும் உருவாக்கித் தருகின்றார்கள் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் புகழாரம் பாடுகின்றது. அதைக் கேட்கும் போது இந்தியர்களாகிய நமக்கும் பெருமையாக இருக்கிறது.

உலகமே கூகளில் தேட, கூகள் தேடிய பொற்கலசமாகத் திகழ்கிறார் சுந்தர் பிச்சை. தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த சகோதரர் சுந்தர் பிச்சைக்கு நன்றிகள். வாழ்த்துகள்.