13 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 3

1940 - 1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இருந்த பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் போலவே இயங்கி வந்தன. அப்போதைக்கு பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் கைப்பாவைகள் போலவே சேவை செய்து வந்தார்கள். மன்னிக்கவும்.



உண்மையைத் தான் எழுதுகிறோம். பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது. அதனால் மாணவர்களுக்கும் முறையாக ஆங்கிலம் சொல்லித்தர இயலாமல் போய் விட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமலே போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும். 




1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதை நினைவில் கொள்வோம்.

1900-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் முதல் முயற்சியாகப் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்ஹாம் பொறுப்பு வகித்தார்.

1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார். 




1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை.




1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது.

1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது. 




1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி;

1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி;

1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி;

1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன. 




மலாயா/மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

1920-ஆம் ஆண்டில் 122

1925-ஆம் ஆண்டில் 235

1930-ஆம் ஆண்டில் 333

1938-ஆம் ஆண்டில் 547

1942-ஆம் ஆண்டில் 644

1943-ஆம் ஆண்டில் 292

1947-ஆம் ஆண்டில் 741

1957-ஆம் ஆண்டில் 888

1967-ஆம் ஆண்டில் 686

1977-ஆம் ஆண்டில் 606

1987-ஆம் ஆண்டில் 553

1997-ஆம் ஆண்டில் 530

2007-ஆம் ஆண்டில் 523

2008-ஆம் ஆண்டில் 523

2009-ஆம் ஆண்டில் 523

2010-ஆம் ஆண்டில் 523

2011-ஆம் ஆண்டில் 523

2018-ஆம் ஆண்டில் 525

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு.

ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது. 




2018-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,000 தமிழாசிரியர்கள். 108,000 மாணவர்கள். 4500 வகுப்பு அறைகள்.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது.

ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது அரசாங்கத்தின் எண்ணமாகும்.

கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)

1961-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டவிதி. ஒரு வகையில் இந்தச் சட்டவிதி தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது. 




அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டன. அவர் விரும்பினால் ஒரு சீன அல்லது தமிழ்த் தாய்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது.

இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் சிமினி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஓர் அரசியல்வாதி அந்தச் சட்டவிதியைப் பற்றி பேசி இருக்கிறார். 




இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-யின் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா?

டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டம் 1961- எனும் சட்டம் திருத்தம் செய்யப் பட்டது. அதன்படி கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-யிலும் திருத்தம் செய்யப் பட்டது. அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)
அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என அந்த அரசியல்வாதி பேசியது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது தவறு. அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தியது தவறு என்பதே பொதுவான கருத்து.

சான்று: https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.  




ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள்.

தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

1. தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

2. அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

3. தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

4. எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்

5. தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்

6. இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

7. தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

8. உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

9. மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

10. ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே.

மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை.




பெரும்பாலும் வசதி குறைந்த தமிழ்த் தொழிலாளர்களின் பிள்ளைகளே தமிழ்ப் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள் ஆவார்கள். மலேசியாவைப் பொறுத்த வரையில் ஒரு மலேசியத் தமிழ்க் குழந்தை தமிழ்க் கல்வி பெறச் சட்டபூர்வமான தடை எதுவும்  இல்லை என்பதே நியாயமான கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

குறை காண்பது தவறு

அடுத்தவரைக் குறை சொல்வதில் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. அதிலும் நாம் சரியாகச் செய்து அடுத்தவர் தவறாகச் செய்து விட்டால் அவ்வளவுதான். அவர் தொலைந்தார். 


சிலருக்கு எதைச் செய்தாலும் சரியாக வராது. இது சரி இல்லை. அது சரி இல்லை என்று சொல்லிச் சொல்லியே உயிரை வாங்கி விடுவார்கள்.

தனக்கும் சரியாகச் செய்யத் தெரியாது. செய்கிறவர்களையும் நிம்மதியாகச் செய்ய விடமாட்டார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டுவதே அவர்களின் தூரநோக்கு.


பவளத்திலும் பழுது உள்ளது. வைரத்திலும் காயம் உள்ளது. பிறருடைய குற்றங்களைப் பார்ப்பதைவிட நம்முடைய குற்றங்களைப் பார்ப்போம். குறை காண்பது மனிதம். நிறை காண்பது தெய்வீகம்.

(முத்துக்கிருஷ்ணன்)

தேவதாஸ் காந்தி

தேவதாஸ் காந்தி (Devdas Mohandas Gandhi) என்பவர் மகாத்மா காந்தியின் நான்காவது கடைசி மகன். தென்னாப்பிரிக்காவில் 1900 மே மாதம் 22-ஆம் தேதி பிறந்தவர். தென்னாப்பிரிக்காவில் இருந்து குடும்பத்துடன் மிக இளைய வயதில் இந்தியாவிற்கு திரும்பி வந்தவர். 


இந்தியா திரும்பியதும் காந்தியின் இயக்கத்தில் கலந்து கொண்டார். வாழ்நாளில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) இதழின் ஆசிரியராக இருந்தவர்.

காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இராஜாஜி (C. Rajagopalachari). இவர் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் (Governor-General of India); சென்னை மாநிலத்தின் பிரதம மந்திரி (Chief Minister of Madras state). இவரின் மகள் லட்சுமி. இவரைத் தான் காந்தியின் மகன் தேவதாஸ் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது லட்சுமியின் வயது 15. இவருக்கு 28. கொஞ்சல் சிக்கல்.

காந்தி - ராஜாஜி எனும் இரு பெரும் தலைவர்களின் பிள்ளைகளுக்கு இடையே காதல் கனிந்தது எப்படி... கல்யாணம் கைக்கூடியது எப்படி... அதுவும் ஒரு வரலாறு தான். 1920-களில் நடந்த நிகழ்ச்சி. ராஜாஜியின் கதையில் தொடங்குவோம்.


Lakshmi Gandhi, daughter-in-law of ldr. Mohandas Gandhi, feeding her young son Gopu

காந்தியின் அகிம்சை ஆயுதமே பிரிட்டிஷாரை விரட்டும் ஆயுதமாக மாறும் என ராஜாஜி பெரிதும் நம்பினார். காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.

ராஜாஜியின் விவேகமான நடவடிக்கைகள் காந்தியைப் பெரிதும் கவர்ந்தன. காந்தியின் பணிகளை ஏற்று நடத்தும் தளபதிகளில் ஒருவராக ராஜாஜி தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1919-ஆம் ஆண்டில் ரவுலட் சட்டம் அரங்கேறியது. அந்தச் சட்டதிற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் பொது வேலை நிறுத்தம். அதுவே இந்தியாவில் காந்தியின் தலைமையின் கீழ் நடந்த முதல் முழுமையான போராட்டம்.

சென்னையில் ராஜாஜியின் இல்லத்தில் காந்தி வந்து தங்கி இருந்த சமயத்தில் தான் இந்த போராட்டத்தின் வியூகங்கள் வகுக்கப் பட்டன. அப்போது காந்தியுடன் அவரின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியும் ராஜாஜி வீட்டுக்கு வந்து இருந்தார். 


Devadas Gandhi and Letchumy

காந்தி டில்லி திரும்பிய போது தேவதாஸ் காந்தி அவருடன் செல்லவில்லை. சில பணிகளுக்காகச் சென்னையில் தேவதாஸ் காந்தி தொடர்ந்து தங்கினார்.

இந்தக் கட்டத்தில் தேவதாஸ் காந்தியிடம் ராஜாஜி இந்தி மொழியைக் கற்றார். இந்தி வகுப்புகளை நடத்தி தன்னுடைய நண்பர்களுக்கும் ராஜாஜி இந்திமொழிப் பயிற்சி அளித்தார்.

அதற்கு உறுதுணையாக இருந்தவர் தேவதாஸ் காந்தி. இந்தக் காலக் கட்டத்தில் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டானது.

தேவதாஸ் காந்தி படித்தவர். நல்ல விமர்சனப் பார்வை கொண்டவர். பல விசயங்களில் சாணக்கியம் பெற்றவர். அவர் மீது லட்சுமி காதல் வயப் பட்டார். இருவரும் துணிந்து தங்கள் காதலைச் சொல்லித் திருமணத்திற்குச் சம்மதம் கேட்டார்கள்.

செய்தி கேட்டு ராஜாஜி, காந்தி இருவருக்குமே அதிர்ச்சி. தேசச் சேவையில் ஒன்றாக இணைந்து போகும் தங்களின் நட்புக்கு வந்த சோதனையாகவே நினைத்தார்கள்.

Mahatma Gandhi with Devdas Gandhi at railway station

மகனின் மனதை மாற்ற முடியுமா என காந்தி முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. தேவதாஸ் உறுதியாக இருந்தார். அதே போல ராஜாஜி வீட்டிலும் லட்சுமியும் பிடிவாதமாக இருந்தார்.

காந்தி - ராஜாஜி இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். தங்கள் பிள்ளைகளை அழைத்தார்கள்.

உங்கள் காதல் உண்மையானது என்றால் இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் சந்திக்கவோ கடிதப் போக்குவரத்தோ வைத்துக் கொள்ளக் கூடாது. நேர்மையுடன் இதைக் கடைபிடித்தால் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம் என்றார்கள்.

நிபந்தனை ஏற்றுக் கொள்ளப் பட்டது. உண்மையில் அப்படி ஒரு பிரிவு இருவரின் மனதையும் மாற்றிவிடும் என ராஜாஜியும் காந்தியும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பிள்ளைகளின் உறுதி மனப்பான்மை பெற்றோரின் மனதைக் கரைத்து விட்டது. திருமணத்துக்குச் சம்மதித்தார்கள். 


Devdas Mohandas Gandhi

1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்து வெளியாகி பர்ணகுடி எனும் இடத்தில் காந்தி தங்கி இருந்தார். பல மாத சிறைவாசம். அவரின் உடல் மெலிந்து இருந்தது.

சுதந்திரப் போராட்டக் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என ராஜாஜி நினைத்தார்.

காந்தி சம்மதம் தெரிவித்தால்  தன் மகளை அழைத்து வர முடியும். பர்ணகுடியிலேயே திருமணம் செய்து வைக்கலாம் என்று கஸ்துாரி பாய்க்கு ராஜாஜி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.  சில நாட்களில் நல்ல பதில் வந்தது.

பர்ணகுடியில் 1933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி லட்சுமி - தேவதாஸ் காந்தி திருமணம் நடைபெற்றது. திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார்.

மருமகளுக்காகக் கஸ்துாரிபாய் இரு தங்க வளையல்களையும் நான்கு கதர்ப் புடவைகளையும் வாங்கி வைத்து இருந்தார். அதற்குகூட காந்தி முதலில் மறுப்பு தெரிவித்தார்.


Chakravarthi Rajagopalachari sitting affectionately with his grandchildren,
Ramchandra (L),9, & Tara, 13, the children of his son-in-law Devadas Gandhi

திருமணத்தில் கூட்டம் அதிகம் இருக்கக் கூடாது என்று காந்தி விரும்பினார். தன் உறவினர்களுக்குக் கூட தகவல் சொல்லவில்லை. ஆனாலும் சீனிவாச சாஸ்திரி, தொழிலதிபர் ஜி.டி.பிர்லா, சரோஜினிதேவி ஆகியோர் வந்து இருந்தனர்.

கலப்புத் திருமணம் என்றாலும் சாஸ்திரிய முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் மாலைகளுக்குப் பதிலாக நுால் மாலைகளை மாற்றிக் கொண்டார்கள். பரிசு எதையும் வாங்கக் கூடாது என காந்தி கண்டிப்பாகக் கூறி இருந்தார்.

பிர்லா அளித்த நான்கு பட்டுப் புடவைகளில் சாதாரணமான ஒன்றை காந்தி ஏற்றுக் கொண்டார்.

நேருவும் பட்டேலும் திருமணத்துக்கு வர இயலவில்லை. அவர்கள் சிறையில் இருந்ததார்கள். சிறையில் இருந்த படியே வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார்கள்.

தம்பதிகளுக்குக் காந்தி தன் கையால் நெய்த நுால் மாலையையும் பகவத் கீதை புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார்.

காந்தியின் கால்களில் விழுந்து வணங்கிய பிள்ளைகளிடம் காந்தி சில அறிவுரைகளைக் கூறினார்.

தர்மத்துக்கு விரோதமான எந்தக் காரியமும் இந்தத் திருமணத்தில் நடக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தவத்தைப் போன்ற உங்களின் உறுதியினால் எங்களின் சம்மதத்தைப் பெற்று இருக்கிறீர்கள். கடவுளுக்கு அஞ்சி பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். எனக்கும் என் நண்பர் ராஜாஜிக்கும் இடையிலான நட்பு இதன் மூலம் இன்னும் சிறப்பாக அமைவதாக உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும் என்றார்.  இப்படித்தான் தேவதாஸ் - இலட்சுமி திருமணம் நடைபெற்றது.

தேவதாஸ் காந்திக்கு இராஜ மோகன் காந்தி, கோபால கிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி என நான்கு குழந்தைகள்.

அவர்களில் கோபாலகிருஷ்ண காந்தி தமிழில் நன்கு பேசும் ஆற்றல் கொண்டவர். இவர் தான் 2017-ஆம் ஆண்டு இந்தியத் துணை அதிபர் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர்.

மகாத்மா காந்தியின் பேரனை இந்திய மக்கள் மறந்து விட்டார்கள் என்று பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்... என்னையும் சேர்த்துத் தான்...

மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி 1957 ஆகஸ்டு 3-ஆம் தேதி 57-ஆவது வயதில் காலமானார்.

12 ஜூலை 2019

மலேசியக் கொடியின் வரலாறு

மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் மலாயாவிற்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முன்னர் ஒரு தேசியக் கொடியை வடிவமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்திற்கு ஏற்ப 1947-ஆம் ஆண்டு மலாயா கொடி வடிவமைக்கும் போட்டி நடைபெற்றது. 

The first proposed flag of Malaya

ஒரு கிரிஸ் கொண்ட நீலக் கொடி; இரு கிரிஸ்களைக் கொண்ட பச்சைக் கொடி; 11 வெள்ளை நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்பு வெள்ளிக் கொடி என பல கொடிகள் போட்டிக்கு வந்தன. அந்தப் போட்டியில் 373 பேர் கலந்து கொண்டார்கள்.
The second proposed flag of Malaya

ஜொகூர் பாருவைச் சேர்ந்த முகமட் ஹம்சா (20) என்பவர் மூன்று கொடிகளை வடிவமைத்தார். அதில் ஒரு கொடி ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரக் கொடி (five-pointed star). அந்தக் கொடி தேர்வு செய்யப் பட்டது.

அந்தக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) எனும் பெயரில் ஓர் ஆங்கிலேயக் கம்பெனி ஆசிய நாடுகளில் வணிகம் செய்து வந்தது. அந்தக் கம்பெனிக்கு ஒரு கொடி இருந்தது. அந்தக் கொடியின் சாயலைக் கொண்ட ஒரு புதிய கொடியை முகமட் ஹம்சா வடிவமைப்புச் செய்தார். 


The third proposed flag of Malaya, after changes to canton and stripe colours.

இருந்தாலும் ஐந்து முனைகளைக் கொண்ட அந்தக் கொடிக்கு மறுப்பு தெரிவிக்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவில் அவசரகால நிலைமை. மலாயா அரசு கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராட்டம் செய்து கொண்டு இருந்த காலம்.

மலாயா கம்யூனிஸ்டுகளின் கொடியும் ஐந்து முனைகளைக் கொண்ட நட்சத்திரக் கொடி. அதனால் ஆறு முனை நட்சத்திரக் கொடியாக மாற்றம் செய்யப் பட்டது.


Fourteen horizontal stripes alternating red and white; in the canton,
a yellow crescent and 14-point star on a blue field

1950 மே மாதம் 19-ஆம் தேதி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் மன்னர் (King George VI) புதிய மலாயா கொடிக்கு ஒப்புதல் வழங்கினார். 1950 மே மாதம் 26-ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் அரண்மனையில் புதிய மலாயா கொடி முதன்முறையாகக் கொடியேற்றம் செய்யப்பட்டது.

1957 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி மெர்டேகா சதுக்கத்தில் அதிகாரப் பூர்வமாகப் புதிய மலாயா கொடி ஏற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷாரின் யூனியன் ஜேக் (British Union Flag) கொடி இறக்கப் பட்டது.

பின்னர் 1963-ஆம் ஆண்டில் மலாயா என்பது மலேசியா என புது வடிவம் கண்டது. அதே போல 14 நட்சத்திர முனைகளைக் கொண்ட கொடியாகத் தேசியக் கொடியும் மாற்றம் கண்டது. மலேசியாவில் சபா, சரவாக், சிங்கப்பூர் மாநிலங்கள் இணைந்ததால் அந்த மாற்றம் நிகழ்ந்தது.


Flag of the East India Company

மலேசியக் கொடியின் சிவப்பு வெள்ளை பட்டைக் கோடுகளும் (stripes - பட்டைத் தாரைகள்) 14-ஆக மாற்றம் கண்டன.

1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலகிச் சென்றது. இருந்தாலும் மலேசியக் கொடியின் வடிவமைப்பில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அப்படியே தான் இருந்தது.

மலேசியாவில் சிங்கப்பூர் இல்லாததால் தேசியக் கொடியில் 13 நட்சத்திர முனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என அறைகூவல்கள் வந்தன. இருந்தாலும் அரசாங்கம் அமைதி காத்தது.


Flag of the Straits Settlements from 1874 to 1942

பின்னர் 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரம் கூட்டரசு பிரதேசமாகப் பிரகடனம் செய்யப் பட்டது. ஏற்கனவே இருந்த 14 நட்சத்திர முனைகள் அதற்குப் பொருத்தமாக அமைந்து போயின.

அதன் பின்னர் 1984-ஆம் ஆண்டு லாபுவான் தீவும் 2001-ஆம் ஆண்டு புத்ராஜெயாவும் கூட்டரசு பிரதேசங்களாகப் பிரகடனம் செய்யப் பட்டன.


Flag of Penang (1946-1949).
Flag of Crown Colony of Penang from 1946 to 1949.

அந்த வகையில் 14-வது நட்சத்திர முனையும் சிவப்பு வெள்ளை பட்டைக் கோடுகளும், கூட்டரசு பிரதேசங்களைப் பொதுவாகச் சுட்டிக் காட்டுவதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. மலேசிய மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

1997-ஆம் ஆண்டில் தேசியக் கொடிக்கு ஒரு பெயர் வைக்க முடிவு செய்தார்கள். பலர் பல பெயர்களை முன்மொழிந்தார்கள். ஜாலுர் கெமிலாங் (Jalur Gemilang) எனும் பெயர் பொருத்தமானதாக இருந்தது.


Flag of Malacca (1946-1957).
Flag of Crown Colony of Malacca from 1946 to 1957.

அதுவே தேசியக் கொடியின் பெயராகத் தேர்வு செய்யப் பட்டது. பெயரைச் சூட்டியவர் அப்போதைய பிரதமரும் இப்போதைய பிரதமருமான துன் மகாதீர் அவர்கள் தான்.

மலேசியக் கொடிக்கு வடிவம் அமைத்த முகமட் ஹம்சா 1993-ஆம் ஆண்டு தன்னுடைய 75-வது வயதில் ஜொகூரில் காலமானார். இதுதான் மலேசியக் கொடியின் வரலாறு. பயனுள்ள தகவலாக இருக்கும் என நம்புகிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)


சான்றுகள்:  

malaysiadesignarchive.org/documents/The%20History%20of%20Malaysian%20Flag%20Design.pdf

2. http://flagpedia.net/malaysia

3. https://en.wikipedia.org/wiki/Mohamed_Hamzah

11 ஜூலை 2019

மலேசிய தமிழ் வாழ்த்து

காப்பியனை ஈன்றவளே



காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!

கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள் செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில் செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும் ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம் கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா.....
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா!


ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்
காணொளிப்பதிவு : சேரன் குமரன் (மலேசியா)
தயாரிப்பு: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்

மலாய், சீன மொழி துணையுரைகளைக் கொண்ட மலேசிய தமிழ் வாழ்த்துப் பாடல்.


Image may contain: 7 people, people smiling, people sitting and text

https://www.youtube.com/watch?v=WplLLbtLoyk&feature=youtu.be