30 ஆகஸ்ட் 2019

சார்ல்ஸ் சந்தியாகோ - பக்காத்தான் நம்பிக்கை சரிகிறது

தமிழ் மலர் - 30.08.2019

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாக ஜ.செ.க. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். 

 

இதன் காரணமாக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சேவையாற்றுவதை விட்டு விட்டு, ஸக்கீர் நாயக் மற்றும் ஜாவி எழுத்து போன்ற சர்ச்சைகளில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப் படுத்துவதில் நடப்பு அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்றார் அவர்.

நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறுமானால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தோல்வி அடையும் என பெர்சத்து கட்சியின் வியூகப் பிரிவு இயக்குனர் ராய்ஸ் ஹுசேன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை குறித்து சார்ல்ஸ் கருத்துரைத்தார்.



அன்றாட வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புத் திண்டாட்டம், ஏற்றத் தாழ்வு போன்றவைதான் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்றார் அவர்.

இது போன்ற விவகாரங்களுக்குத் தான் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

’தாங்கள் மாற்றப் படுவதற்குள், தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் நினைவுறுத்தினார்.

29 ஆகஸ்ட் 2019

இளவேனில் வளரிவான்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் (Elavenil Valarivan). 


இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்சமயம் குஜராத் அகமதாபாட் நகரில் வசித்து வருகிறார்.

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் (Rio de janeiro) ஐ.எஸ்.எஸ்.எப். (International Shooting Sport Federation) உலகக் கோப்பை சுடுதல் போட்டி 2019 ஆகஸ்டு மாதத்தில் நடந்து வருகிறது.

அந்தப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (10 meter Air Rifle) பிரிவில் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 


இவருக்கு அடுத்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த சியோனைட் மெக்கின்டோஷ் (Seonid Mcintosh). இவர் 250.6 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மூன்றாம் நிலையில் தைவானைச் சேர்ந்த லின் யிங் ஷின் (Ying-Shin Lin) 229.9 புள்ளிகள் எடுத்து வெண்கலம் வென்றார்.

இவருக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகிய இரு வீராங்கனைகள் உலகக் கோப்பை 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருக்கிறார்கள்.

இளவேனில் 1999 ஆகஸ்டு 2-ஆம் தேதி பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். வயது 20. இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்சமயம் குஜராத் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார். இரண்டு வயதிலேயே அவர் குஜராத்தில் குடியேறி விட்டார்.


இந்தப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று உள்ளார். 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டி 2020-ஆம் ஆண்டு தோக்கியோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தொடர் ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம். 




இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் (10-metre Air Rifle) இருவரின் பெயர்களை இந்தியா ஏற்கனவே சமர்ப்பித்து விட்டது. அஞ்சும் முட்கில் (Anjum Moudgil); அபூர்வி சண்டேலா (Apurvi Chandela) எனும் இருவரின் பெயர்கள். இப்போது புதுத் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே இப்போது தங்கம் வென்ற இளவேனில் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கம் (National Rifle Association of India) விரைவில் இதற்கு இரு தீர்வு காணும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
(சான்று:https://www.thenewsminute.com/article/india-s-elavenil-valarivan-grabs-gold-medal-shooting-world-cup-108038)


கடந்த ஆண்டு 2018 மார்ச் மாதம் 19-ஆம் தேதியில் இருந்து 29-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, சிட்னியில் உலகக் கோப்பை ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. அதிலும் இளவேனில் தங்கம் வென்று இருக்கிறார். அந்தப் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்றார்.

அதே உலகக் கோப்பை ஜூனியர் குழுவினரின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றார். அவருடன் மேலும் இருவர் ஜீனா கீதா (Zeena Khitta); சிரேயா அகர்வால் (Shreya Agarawal) ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். அது ஒரு குழுப் போட்டி.

(சான்று: https://en.wikipedia.org/wiki/2018_ISSF_Junior_World_Cup)




ஏற்கனவே ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்று கொடுத்த இளம்பெண் இளவேனில், சீனியர் பிரிவிலும் இந்தியாவிற்குத் தங்கம் வென்று கொடுத்து உள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் நாட்டிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்து கொடுத்த இளவேனில் வளரிவானுக்கு நம்முடைய வாழ்த்துகள்.


மகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை

தமிழ் மலர் - 29.08.2019

பிரதமர் துன் மகாதீர் பயன்படுத்திய ஒரு வார்த்தை இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது அல்ல. அவர் வேறு வகையில் சொன்னதை இந்தியர்களை இழிவு படுத்தும் ஜாதிச் சொல்லாகக் கருத வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று கூறினார். 


‘அந்த’ பதத்துக்கு ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் உண்டு. ஆங்கிலத்தில் ஒருவர் இந்த வார்த்தையை உதிர்த்தால் அது இந்தியர்களை இழிவு படுத்துவதற்காகச் சொல்லப் பட்டது ஆகாது.

குறிப்பாக மலாய்க்காரர்கள் தங்களுக்கு உள்ளேயே பேசும் போது கூட இந்த வார்த்தையப் பயன்படுத்துவது உண்டு. எனவே இந்த வார்த்தை இந்தியர்களைப் புண்படுத்தும் இழிவு வார்த்தை என்று நீங்கள் கருதினால் அது தவறானது என்று பெர்சத்து தலைவருமான அவர் சொன்னார்.

அண்மையில் ‘லைனாஸ்’ அரியமண் தொழிற்சாலை விவகாரம் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர் மகாதீர், மேற்கண்ட சொல்லைப் பயன்படுத்தியது இந்தியர்களிடையே பெரும் சினத்தை ஏற்படுத்தி உள்ளது.


கெஅடிலான் காப்பார் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் துன் மகாதீருக்கு எதிராக புகார் செய்து இருக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய மொகிதீன், இது போன்ற விசயங்களை நியாயப் பூர்வமாக அணுகுமாறும் முன்கூட்டியே இது பற்றிய விளக்கங்களைப் பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

உண்மையில் பிரதமர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பிரதமரிடம் கேட்கலாம் என்றார் மொகிதீன்.

-மலேசியா கினி

28 ஆகஸ்ட் 2019

மகாதீர் அவர்களுக்கு மனம் திறந்த மடல்

இதற்காகவா ஆசைப்பட்டோம் பிரதமரே?
தமிழ் மலர் - 28.08.2019


ஒரு கணம் இந்தியர்கள் அதிர்ந்து குலுங்கினர் என்றே சொல்ல வேண்டும். எந்த வார்த்தையை கேட்கக் கூடாதோ… எந்த வார்த்தை காலம் காலமாக மலேசிய இந்தியர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைக்கிறதோ… அந்த வார்த்தையை ஒரு பிரதமரே பயன்படுத்துவார் என்று மலேசிய இந்தியர்கள் கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

இந்த நாட்டை முதல் தவணையாக 22 ஆண்டுகள் வழி நடத்திய ஒரு பெரும் தலைவர் அவர். 2-ஆவது முறையாக 93 வயதில் ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் தலைமை ஏற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர் அவர்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் இந்த நாட்டின் 3-ஆவது பெரிய இனமாக இருக்கின்ற இந்தியர்களின் முக்கால்வாசி ஆதரவு கிடைத்தது என்று உறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறின.




எந்த வார்த்தை அந்த இந்திய சமூகத்தை காயப் படுத்துகிறதோ அதை மறந்தும் பயன்படுத்தக் கூடாது என்று மற்ற சமூகங்கள் இந்த நீண்ட நெடிய பயணத்தில் அறிந்து உள்ளனர்.

அந்த வார்த்தை நிந்திக்கும் ஒரு ஜாதி நிந்தனைச் சொல். இத்தனைக்கும் அவர் சொன்ன அந்த வார்த்தைக்கும் அவர் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பகாங் மாநிலத்தில் அமைந்து உள்ள அரிய மண் தொழிற்சாலை மக்களுக்கு பெரும் சுகாதார கேட்டை விளைவிக்கிறது. அது அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.

இத்தனைக்கும் பக்காத்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க் கட்சியாக இருந்த போது இந்த லைனாஸ் தொழிற்சாலைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி வந்தது. இந்த ஆட்சியில் அதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள்.




ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தத் தொழிற்சாலைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இது பற்றி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப் பட்டபோது தான் பிரதமர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்.

அதாவது, இந்தத் தொழிற்சாலையை குறிப்பாக முதலீட்டாளர்களை ஒரு பறையா போல் நடத்தினால், பிறகு இந்த நாட்டில் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று பிரதமர் சொன்ன அந்த வார்த்தை வலைத் தளங்களில் வலம் வந்த போது மலேசிய இந்தியர்களே ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

இந்த ஜாதி அவச் சொல் பிரதமர் வாயில் இருந்து வரலாமா? அவர் அப்படி சொல்லலாமா?

இத்தனை அனுபவம் கொண்ட ஒரு பெரும் தலைவர் எந்தச் சொல் ஒரு சமூகத்தை ஊனப் படுத்தும்… காயப் படுத்தும் என்று தெரிந்தும் மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டாரே என்று இந்திய சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் ஆதங்கப் படுகிறார்கள். அதிருப்தி அடைகிறார்கள். பலர் கோபப் படுகிறார்கள். சிலரோ கொந்தளிக்கிறார்கள். 




இத்தனைக்கும் ஒரு முறை இந்தியர்களை நிந்திக்கும் மற்றொரு சொல்லை சொல்லி அதற்காக மன்னிப்பு கேட்டவர் பிரதமர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

மலேசிய இந்தியர்கள் விசுவாசமற்றவர்கள் என்று எங்கிருந்தோ வந்த ஒரு மத போதகர் சொன்ன அந்த சுடு சொல்லில் இருந்து இந்திய சமுதாயம் இன்னும் விடுபடவில்லை.

ஜாவியை தமிழ்ப் பள்ளியில் போதிப்பதை இப்போது ஒத்தி வையுங்கள். இது பற்றி விரிவாக பேசுவோம், விவாதிப்போம் என்று சொன்னதற்காக அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களை உள்ளடக்கிய செக்காட் என்ற அமைப்பினரை தற்பெருமை பிடித்த முட்டாள்கள் என்று நிந்திக்கிறார் இளைய அமைச்சர் சைட் சாடிக்.

அந்த அம்பு பாய்ந்த ரணத்திற்கு மேல் இன்னொரு அம்பாக பிரதமரே இந்த வார்த்தையை உதிர்த்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதற்காகவா ஆசைப் பட்டோம் பிரதமரே என்று சொல்லி மாளாமல் அழுகிறது இந்திய சமுதாயம். இந்த அழுகுரல் அரசின் காதில் விழுமா?

-தமிழ் மலர் ஆசிரியர், டத்தோ எம். ராஜன்
....................................................................................




இந்தச் செய்தி தொடர்பாக பேஸ்புக் ஊடகத்தில் பொது மக்களின் கருத்துகள்

Sathya Raman நானும் இச்செய்தியை இன்றைய பத்திரிகையில் படித்தேன். இவ்வேளையில் ஒரு சினிமா வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. "வெச்சு செஞ்சுட்டான்டா". தற்சமயம் இந்நாட்டில் நடக்கிற கூத்தை எல்லாம் பார்க்கையில் வேண்டுமென்றே இந்நாட்டு இந்தியர்களை இழிவு படுத்தும் செயல் அரங்கேறி வருகிறது.

பிரதமரே பேசுகிறார். நமக்கென்ன என்கிற தோரணையில் நண்டு, சுண்டு எல்லாம் நாக்கு மேல பல்லைப் போட்டு எம் இனத்தை வலையில்லாமல் பந்தாடி வருகிறார்கள். யாருங்க இவர்கள்?

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வார்த்தை ஜாலங்களால் வாந்தி எடுத்து ஓட்டுக்காக தெரு, தெருவாக இந்தியர்களை தேவ லோகத்து சீமான்களாய் நினைத்து தங்களின் சுயநலத்திற்காக, பதவி, பகட்டு, பேராசைக்காக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் இவர்கள்.

அப்போது மட்டும் இந்தியர்களை இமயமலை அளவிற்கு புகழ்ந்து தள்ளுவார்கள் . இப்படிப்பட்ட புல்லுருவிகளை இந்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராடியே காரியம் ஆற்றும் நாமும் இந்த நன்றி கெட்ட ஜென்மங்களின் வாய் சவடால்களை அடுத்த தேர்தல் வரை கண்டித்து வைப்போம்.வேறு வழி?🤔
Muthukrishnan Ipoh அருமையான எதார்த்தமான சொல்லாடல்கள்...

///பிரதமரே பேசுகிறார்.நமக்கென்ன என்கிற தோரணையில் நண்டு,சுண்டு எல்லாம் நாக்கு மேல பல்லைப்போட்டு எம் இனத்தை வலையில்லாமல் பந்தாடி வருகிறார்கள்.யாருங்க இவர்கள்?///

///ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வார்த்தை ஜாலங்களால் வாந்தி எடுத்து ஓட்டுக்காக தெரு,தெருவாக இந்தியர்களை தேவலோகத்து சீமான்களால் நினைத்து தங்களின் சுயநலத்திற்காக, பதவி ,பகட்டு,பேராசைக்காக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் இவர்கள்.///

காலத்தால் மறக்க முடியாத உயிர்ச் சொற்கள். நன்றி.



Manickam Nadeson ஆணவம் அளவுக்கு மிஞ்சி போய்விட்டது. நாய் வாலை அதுவும் தெருநாய் வாலை நிமிர்த்த முடியுமா?? கர்மா அதன் வேலையைச் சீக்கிரம் காட்டும, அனுபவித்துத் தான் சாக வேண்டும். பார்க்கத் தானே போகிறோம்.

Dorairaj Karupiah இத்திரு நாட்டில் ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நம்மவர் பாடு... அந்தோ பரிகாசம்... பாவம்... இதில் மகா திமிர் கில்லாடி
Mageswary Muthiah Dorairaj Karupiah சரியாக கூறினீர்கள்.
Ravi Purushothaman இந்தியக் கட்சிகளும் இந்தியர்களும் ஒன்றுபட வேண்டிய தருணம்....ஒற்றுமையே பலம்... அப்போது தான் பிறர் நம்மை மதிப்பார்கள்.... பிரிந்து  நின்றால் நாய் கூட மதிக்காது!!!
Peter Johnson Durairaj The leopard cannot change its spots! Likewise , Mahathir cannot change his mindset.

Sugunesan Nesan இன்று நாம் ஒன்றும் செய்ய இயலாது.அதிகாரம் அவர் கையில் உள்ளது.அவமானத்தை துடைத்து எச்சரிக்கை விடுத்து அமைதி காப்போம்.நிச்சயம் வழிபிறக்கும்.
Kaliswari Krishna என்னே அரசியல் நாடகம்....
Sugunesan Nesan பொருமை கொள்வோம் பொது தேர்தலில் கொல்வோம்.அதுவே சிறந்த ஆயுதம்.
Ranjanaru Ranjanaru Ivar tiruntha maattaar ...magan Pirathamar aagum varai ...tan inattukkaaraigalai magilhchip padutha entha ...levalukkum pohvaar ... (இவர் திருந்த மாட்டார்... மகன் பிரதமர் ஆகும் வரை... தன் இனத்துக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்த எந்த லெவலுக்கும் போவார்...)


Sathya Raman பாவம் !இந்த அரசியல் சித்து விளையாட்டில் சாமர்த்தியமாக சாம்ராஜ்யத்தை அமைக்க வியூகம் அமைக்கப்படுவதை நாட்டு மக்களாகிய பலருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போது இந்த இலவுக்காத்த கிளிகள் என்ன நினைக்கிறார்களோ? அவர்களின் நிலைபாடு என்னவோ?😀

மலேசியாவில் இலவசக் காலை உணவுத் திட்டம்

2019-ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் காலை உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அறிவித்து இருக்கிறார்.


200 பள்ளி நாட்கள். 27 இலட்சம் மாணவர்கள். ஒவ்வொருவருக்கும் காலை உணவு சராசரி 3 ரிங்கிட். ஆண்டுக்கு 160 கோடி ரிங்கிட்.

இந்தக் காலை உணவு திட்டத்தில் மழலையர் பள்ளி மாணவர்களும்; உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.

இவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்க நாட்டின் நிதிநிலை தாக்குப் பிடிக்குமா... ம.சீ.ச.வின் தலைவர் டத்தோ வீ கா சியோங் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சத்துணவுத் திட்டம் (ஆர்.எம்.டி.) அமலில் உள்ளது.  2018-ஆம் ஆண்டில் 489,117 மாணவர்களுக்கு ஆர்.எம்.டி. சத்துணவு வழங்க 28.9 கோடி ரிங்கிட் செலவானது.

இதில் உணவுப் பொருட்களுக்கு 25 கோடி ரிங்கிட். பால் வகைப் பொருட்களுக்கு 3.9 கோடி ரிங்கிட்.


வருமானம் குறைந்த; நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இந்த ஆர்.எம்.டி. சத்துணவுத் திட்டம். இது நியாயமான திட்டம்.

ஆனால் இப்போது வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் புதிய இலவசக் காலை உணவுத் திட்டமா? சரிபட்டு வருமா? சரியாக அமையுமா?

இது அரசாங்கத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே நாடு கடன் வாங்கி மூச்சுத் திணறிப் போய் இருக்கிறது. நாட்டின் கடன் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக டத்தோ வீ கா சியோங் சுட்டிக் காட்டுகிறார். ஒரு டிரில்லியன் என்றால் ஆயிரம் பில்லியன்கள்.

பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்களின் கருத்துகள்

M R Tanasegaran Rengasamy தற்பொழுது அமலில் உள்ள ஆர்.எம்.டி. திட்டமே போதுமானது. இதனைச் சரியாகச் செய்தாலே போதும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் காலை உணவளிப்பது என்பது அசாத்தியமான ஒன்று. அவ்வளவு பிள்ளைகளுக்கும் உணவளிக்க மிகை நேரம் பிடிக்கும். இது கற்றல் கற்பித்தலுக்கு இடையூறாக இருக்கும்.

Muthukrishnan Ipoh சற்று சிரமமான காரியம். ஆனால் நல்ல முயற்சி. இந்தத் திட்டத்தில் மழலையர் பள்ளி மாணவர்களும்; உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும் என்பது என் கருத்து.
Thennarasu Sinniah பாகுபாடில்லா இந்த திட்டம் சரி தான்..ஆனால் உணவு வீணாக கூடாது..மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் கருத்தில் கொண்டு கொள்ளையும் நடக்க வாய்ப்புள்ளது..

Viji Nijtha பள்ளி நிர்வாகம் சரியான முறையில் செயல் பட வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி உணவை தயாரித்தல் அவசியம்.

Manickam Nadeson எதையும் நன்றாக ஆலோசிக்காமல், முறையாக சிந்திக்காமல் அனுபவமற்றவர்கள் எடுக்கும் எந்த முடிவும் சிறப்பாக முறையாக அமையாது என்பது என் கருத்து.
Mbs Maniyam மாற்றான் தோட்டத்து மல்லிகையும் நறுமணக்கும்! நல்ல திட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டிய தொன்று. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வகை செய்தல் வேண்டும்.
Sambasivam Chinniah Good move, but must have enough funding, the contractors must supply hygienic food!!! PH can do ah ?



Sathya Raman நாட்டில் நிதி பற்றாக்குறை என்கிறார்கள். 2018-இல் நடைப்பெற்ற பொது தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றி இருக்கிறார்களா? முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய கோடிக் கணக்கில் கடன் சுமைக்கிறது என்று மக்கள் முன் வைத்து நிதி வசூலித்தார்கள்.

நிதி அமைச்சராக பதவியேற்ற லிம் குவாங் எங்கிடம் வரவு செலவு திட்டத்தை நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் தலையில் சுடுவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மகாதீர். அதிலுள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் "ஜோக்" என்று எல்லோரும் இறுமாந்து இருந்துவிட்டார்கள்.

பிறகு கல்வி அமைச்சர் பதவி ஏற்ற மஸ்லின் மஸ்லி பதவி ஏற்ற உடனே பள்ளிக்கூட பிள்ளைகளின் காலணிகளின் மேல் கவனம் செலுத்தி வெள்ளையை கறுப்பாக்கினார். இதனால் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வெள்ளைக் காலணிகளின் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கப்பட்டது.

இப்படி தகுதியே இல்லாத அமைச்சர்கள். ஆங்கில மொழியில் ஆளுமை இல்லாதவர்கள். முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும் இன்றைய அரசாங்த்தின் ஆட்சியில் மூன்று மடங்கு உயர்ந்து உள்ள விலைவாசிகள். நிலையில்லாத ஏறி, இறங்கும் எண்ணெய் விலை. தனியார் துறையின் ஊழியர்களின் இருபது விழுக்காடு சம்பளம் குறைப்பு. இப்படி நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கலாம்.

இதற்கெல்லாம் தீர்வு காணாமல் இந்த ஜாகீர் நாயக்கை உலக வல்ல கதாநாயகனாக ஆக்குவதிலும்,சம்பந்தமே இல்லாமல் ஜாவி எழுத்தை திணிப்பதிலும் இதையெல்லாம் எதிர்க்கும் இந்தியர்களை ஆள், ஆளுக்கு இஷ்டத்திற்கு நிந்திப்பதும் தான் இன்று இந்த அதிகார வர்க்கத்தினரின் அரசியல் நாடகம் 
 
சத்துணவு கொடுக்கிற அளவிற்கு மலேசியர்கள் ஒன்றும் கஞ்சிக்கே வழி இல்லாதவர்கள் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவு மிக, மிக முக்கியம் என்று மந்திரி வாய் கிழிய வாக்குமூலம் தந்தாலும் நாட்டின் நிதி நிலையை கருத்தில் கொண்டு செயல் படட்டும் இந்த அரசாங்கம்.