02 செப்டம்பர் 2019

ஹெலன் கெல்லர்

அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைப் பெண்மணி. பிறந்த பத்தொன்பது மாதங்களி‌ல் பேசுகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற சக்தியைப் பறிகொடுத்த ஒரு பச்சைத் தளிர். அந்தப் பச்சைக் குழந்தை எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் போராட்டங்களின் சப்த நாடிகள்.



பொழுது விடிவதற்குள் செத்துப் போய்விட வேண்டும் எனும் கொடிய வேதனையில் வதைபட்ட அந்தக் குழந்தை வானத்தையே வசப் படுத்தியது. உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

விதி எந்த அளவுக்குப் பின்னுக்கு இழுத்தாலும் அதையே பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போய் போராடிக் காட்டியவர் ஹெலன் கெல்லர். கண் பார்வை இல்லாமலும் காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா நம்முடைய பிரச்சினை பெரிசு. சொல்லுங்கள்.

அவரால் இத்தனைச் சாதிக்க முடிந்தது என்றால் நமக்கு தடையாக இருப்பது எதுவுமே இல்லை. தெரிந்து கொள்ளுங்கள். நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறிய வேண்டும் என்றால் ஹெலன் கெல்லரை நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் நம் காதுகளில் சொல்லும் இரண்டே இரண்டு வார்த்தை மந்திரம் என்ன தெரியுங்களா. தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

தன்னம்பிக்கை; விடாமுயற்சி; இந்த இரண்டையும் பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்படும். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.



Varusai Omar Florence Nightingale மற்றுமோர் அதிசயப் பெண்மணி என்பதை எத்துணை பேர் அறிந்திருப்பார்கள் முத்து?


Melur Manoharan "இனிய" காலை வணக்கம்...!

 No photo description available.

 
Murugan Rajoo அருமையான பதிவு ஐயா, ஏலன் கேல்லர் ஒரு அற்புதம், எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. நல்வணக்கம் ஐயா


Thennarasu Sinniah இவரைப் பற்றி மேலும் அறிந்திட ஆவல்...


Sambasivam Chinniah Thank you, Vaazhga Valamudan.Good morning saar. God bless you. Take care of your health.


Devarajan Dev Great woman


Mageswary Muthiah

 Image may contain: 1 person, smiling, text
  • No photo description available.

  • Image may contain: one or more people, people standing and outdoor


    Vanaja Ponnan காலை வணக்கம்! 🌹🌹

    Kumar Murugiah Kumar's அனைத்து உயிருக்கு அவர் சொல் ஓர் புத்துணர்ச்சி
     

     Sundaram Natarajan Inniya Kaalai Vanakam Anna


  • Sathya Raman மன சஞ்சலம் ஏற்பட்டு சே! என்னடா வாழ்க்கை இது என்று எண்ணும் போதெல்லாம் பிரம்மன் படைப்பில் உடல் குறை உள்ளவர்களாக பிறந்தவர்களை சாரசரி எல்லாவித ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள் காட்டிலும் இருநூறு விழுக்காடு திறமையாவர்கள் சாதனையாளர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்பதைப் பலவாறாக கண்டும் கேட்டும் வருகிறோம். 

    முடியாது இயலாது என்பது சோம்பேறிகளின் சொந்த மொழி. வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பவர்களுக்குச் சாதனைகளைத் தவிர சங்கடங்கள் ஒரு சாக்கே அல்ல "ஏலன் கேல்லர்" போன்றவர்கள் இந்த பூமியின் பொக்கிஷங்கள், எந்நாளும் போற்றுதலுக்கு உரியவர்கள். மற்றுமொரு அருமையான பதிவு சார் 🙏

  • Manickam Nadeson நல்ல பதிவு, முழுமையும் பதிவிடுங்க ஐயா சார். நன்றியடன் காத்திருக்கிறேன்.

  • Varusai Omar நன்றி சாம்பு. அந்த வாழ்த்துப் பதிவு எனக்கென நினைக்கிறேன்... வாழ்க தமிழ் மொழி வளமுடன்"
    •  

  • Sri Kaali Karuppar Ubaasagar இனத்தால் அல்ல.. கருணையால் வாழ்ந்த இந்த அன்னையின் நாமம் வாழிய வாழியவே 🙏🏼🙏🏼
    •  

  • Muniandy Segar ஹெலன் கெல்லர் ஓர் அற்புதத் சின்னம். முடியாது என்ற சொல்லுக்கு ஓர் சவால்!
    •  

  • Varusai Omar இது போன்ற அதிசய போராட்டங்கள் மரண வலிகள்!
    இன்று நேற்றா எனக்குத் தெரிந்த ஒரே தாரக மந்திரம்?

    ஒன்றே ஒன்றுதான்:
    WINNERS NEVER QUIT
    QUITTERS NEVER WIN.
    (அ-து: தோல்வி மனப்பான்மையுடையார்
    வெற்றி இலக்குடையார் நெகிழ மாட்டார்)

    இதுதான் அன்றும் இன்றும் இனி என்றும், என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, எனது மாணவர்க்கும் உச்சரிக்கக் கற்றுக் கொடுப்பது!
  •  
  • Krishnan ATawar Great Ayya
    •  
  • Rajoo Veeramuthu பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
    •  
  • Karunaharan Karuna மிக சிறந்த பதிவு ஐயா
    •  
  • Hamba Mu Umar Umar Mikka nanri ayyah 
    •  
  • Veerasingam Suppiah உலகம் உள்ளலரை உலக மனதில் என்றும் இதயநாடியாக எலன் கெல்லர்
    •  
    •  
       
  • Veerasingam Suppiah நண்பர் வருசை ஓமாருக்கு ; முடிந்த அளவிற்கு பார்பணன் எழுத்துக்களை எழுதுவதை குறைத்து வருகிறேன் ஆகவே ஹெலன் என்பதை எலன் என்று எழுதி நமது தூய தமிழுக்கு ஆதரவை தமிழுணர்வுடன்முயன்று வருகிறேன். நன்றி
    •  

  • Varusai Omar இல்லை வீரா... அது தவறு எனச் சுட்டுவதே எனது நோக்கம்!
    யாரையும் குறை கூறும் எண்ணமில்லை.


    சில பெயர்ச் சொற்களை வேற்று மொழியிலிருந்து, தமிழாக்கம் செய்வது இயலாது கூடாது. காரணம்?


    சில வேளைகளில் அதன் அர்த்தம் அனர்த்தமாகி விடும் என்பதே நிதர்சன உண்மை!

    உம்மைவிட எண்டமிழை உயிர் மூச்சாக நினைப்பவன் இவன்.
    இங்கே ஒன்றை கவனித்தீரா அன்பரே?


    தன்னிலையை மூன்றாம் எண்ணால் குறிப்பிட்டுள்ளேன்.


    ஏனென்று நீங்களே பகுத்தாய்ந்து கொள்ளுங்கள்.


    இல்லையெனில் விவரம் அறிந்தோரிடம் கேட்டுத் தெளிவு பெருக.
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்து எம்மொழியை சிறுமைப் படுத்தி விடாதீர்கள்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

    சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாமே!!!


  • Veerasingam Suppiah தொல்காப்பிபத்தில் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் முப்பது தான். தமிழ் மொழிக்கு மொத்த எழுத்துக்கள் என்பதை தொல்காப்பியர் குறிப்பிடுவது நிதர்சன உண்மை என்பதை உணர்ந்தால் விடயம் உண்டு




அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1

கோடிக் கோடி ஆண்டுகளாகக் கோடிக் கோடி உயிர் இனங்களுக்கு உயிர் கொடுத்த உயிர்நாடி. கோடிக் கோடி ஆண்டுகளாக உயிர்க் காற்றைக் கொட்டிக் கொடுத்த உலக நாடி. 



அங்கே கோடிக் கோடி ஆண்டுகளாகக் கொட்டும் மழையில் நனையும் மழைக் காடுகள். கோடிக் கோடி ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சத்தைப் பார்க்காத பச்சைக் பசுமரத்துக் காடுகள்.

ஒரே வார்த்தையில் சொன்னால்... கோடிக் கோடியான மரங்கள்; கோடிக் கோடியான செடி கொடிகள்; கோடிக் கோடியான மருந்து மூலிகைகள்; கோடிக் கோடியான உயிரினங்கள். உலகத்தையே வாழ வைக்கும் ஓர் உலக அதிசயம் தான் அமேசான் மழைக் காடுகள்.

இறுக்கத்தில் நெருக்கமாய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த மலைக்காட்டு மரங்கள். அமேசான் காடுகளில் மட்டும் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இந்த உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த மழைக் காடுகளில் தான் வாழ்கின்றன.




இப்போது... அந்தப் பச்சைக் காடுகள் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றன. ஓர் இடத்தில் அல்ல. இரண்டு இடத்தில் அல்ல. ஓராயிரம் இடங்களில் ஒரே சமயத்தில் எரிந்து கொண்டு இருக்கின்றன. இந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 72,843 காட்டுத் தீ நிகழ்ச்சிகள்.

அமேசான் காடுகளைப் பூமியின் நுரையீரல் என்று சொல்வார்கள். அந்த நுரையீரலில் தான் ஆயிரத்து எட்டு இடங்களில் காட்டுத் தீ கன்னா பின்னா என்று கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது.

ஒட்டு மொத்த பூமிக்குத் தேவையான உயிர்க் காற்று (ஆக்சிஜன்) 20 விழுக்காடு இந்தக் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. இது ரொம்ப பேருக்குத் தெரியாத விசயம். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் மலேசியாவில் இருக்கிறேன். அப்புறம் எப்படி அங்கே உள்ள காற்று இங்கே வந்து சேரும் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.




ஒவ்வொரு நாளும் அமேசான் காட்டு மரங்கள் விடும் உயிர்க் காற்று ஏறக்குறைய ஆயிரம் மில்லியன் டன்கள். நான் சொல்வது உயிர்க் காற்று மட்டும் தான். இந்த உயிர்க் காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு மூன்று நான்கு வாரங்கள் பிடிக்கும்.

ஆக அங்கே அமேசான் காடுகளில் இருந்து தொடர்ந்து உயிர்க் காற்று வெளியாகிக் கொண்டு இருப்பதால் தான் நாமும் இங்கே பேர் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இது ஒன்றும் சத்தியவான் சாவித்திரி கதை அல்ல. சத்தியமான உண்மைக் கதை. அமேசான் காட்டு மரங்களுக்கு நன்றி சொல்வோம்.

அது மட்டும் இல்லை. பூமியின் 25 விழுக்காடு கரியமிலக் காற்றைக் கிரகித்துக் கொள்வதிலும் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது. தாவரங்கள் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை வெளியிடுகின்றன. படித்து இருப்பீர்கள். அந்த வகையில் உலகத்தின் கால்வாசி கரியமிலக் காற்றை அமேசான் காடுகள் ஈர்த்துக் கொள்கின்றன.




அமேசான் காட்டில் தீ என்றால் என்ன. ஆயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு போய் அணைத்து விடலாமே. ஏன் எரியவிட வேண்டும் என்று கேட்கலாம். இந்தக் காட்டுத் தீ பற்றி எரிவதற்குப் பின்னால் பெரிய பெரிய மனித ஆசைகள் உள்ளன. பெரிய பெரிய அரசியல் பின்னணிகளும் உள்ளன. அங்கே தான் இடிக்கிறது. இருந்தாலும் உலக நாடுகள் சும்மா இல்லை. ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வசை பாடுகின்றன. பிரேசில் நாட்டுக் காதுகளில் படுகிறது. ஆனால் சரியாகக் கேட்கவில்லையாம்.

அமேசான் காடுகள் எரிவதை ஒரு நிகழ்ச்சியாக நினைத்து, உலக மக்கள்  அப்படியே விட்டு விட முடியாது. அதை ஒரு விபத்தாக நினைத்துக் கடந்து போய்விடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியின் பின்புலத்தில் பெரும் அரசியல் நகர்வுகள் உள்ளன. அந்த அரசியல் நகர்வுகள் தான் இத்தனைப் பெரிய களேபரத்திற்குக் காரணம். ஒரு முடிவு காண வேண்டும்.

அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் சின்னத் திரை நாடகங்கள் தான். பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் நிறையவே காட்டுத் தீ சம்பவங்கள். இயற்கையாக மின்னல் தாக்கி காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது வழக்கம். 




ஆனால் இந்த முறை அப்படி இல்லை. மரம் வெட்டுபவர்கள், சிறுசிறு தோட்டங்கள் வைத்து இருப்பவர்கள், விவசாயிகள் அவர்கள் இஷ்டத்திற்குத் தீ வைத்துக் காட்டைக் கொளுத்திப் பொசுக்கித் தள்ளுகிறார்கள். அதுதான் உண்மை. அதுவே அனைத்துலகக் குற்றச்சாட்டு.

இந்தப் பக்கம் நுசாந்தாரா காடுகள் மட்டும் என்னவாம். எங்க அப்பன் சொத்தா உங்க அப்பன் சொத்தா என்று மானவாரியாகக் காடுகளைக் கொளுத்தித் தள்ளுகிறார்கள். தென்கிழக்காசிய மக்களையே இரும வைத்து இழுத்துக்க பறிச்சிக்க வைத்து விடுகிறார்கள். மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போகிற மாதிரி அடிக்கடி நடக்கிற விசயம் தானே.

கேட்டால் ஈச்ச மரம், புளிச்ச மரம் நடுகிறோம் என்று சொல்வார்கள். அவர்களின் காடுகளில் நெருப்பு வைத்தே பாதிக் காடுகளை அபேஸ் செய்து விட்டார்கள். விடுங்கள். சப்போர்ட் பண்ண ஸக்கீர் நாயக் வந்துவிடப் போகிறார். நம்ப கதைக்கு வருவோம்.

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லி விடுகிறேன். எப்பேர்ப்பட்ட ஒரு காட்டுத் தீயாக இருந்தாலும் அதை அடக்கி ஆளும் சக்தி காடுகளுக்கே ஒரு வரப்பிரசாதம். சின்ன நெருப்பு பெரிய நெருப்பு என்று பிரச்சினை இல்லை. காடுகள் சமாளித்துக் கொள்ளும். அந்த வலிமை காடுகளுக்கு உண்டு.





ஆனால் அமேசான் காடுகளில் இப்போது நடப்பது அப்படி இல்லீங்க. திட்டம் போட்டே காடுகளுக்கு நெருப்பு வைக்கிறார்கள். ஒரு வகையில் திட்டம் போட்டு செய்யப்படும் ஓர் அரசியல் சதி என்றுதான் சொல்ல வேண்டும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்தப் பச்சைக் காடுகளினால் முடியவில்லை. சரி. என்ன ஏது என்று பார்ப்போம்.

அமேசான் காட்டு தீயின் பின்னணியில் இருப்பவர் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயர் பொல்சோனாரோ (Jair Bolsonaro) என்று சொல்லப் படுகிறது. உண்மையாகவும் இருக்கலாம். உண்மை அல்லாமலும் இருக்கலாம். தொடர்ந்து படியுங்கள். உண்மை ஓரளவிற்குத் தெரிய வரும்.

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்து இருக்கும் ஒரு பெரிய மழைக்காடு. உலகத்திலேயே பெரிய காடு. இதை அமேசானியா (Amazonia) என்றும் அழைக்கிறார்கள். அமேசான் காடுகளின் பெரும் பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளன.

அமேசான் காடுகளின் பரப்பளவு 7,000,000 (ஏழு மில்லியன்) சதுர கிலோமீட்டர்கள். அதாவது 2,700,000 சதுர மைல்கள். நம்ப மலேசியாவைப் போல 22 மலேசியாவிற்குச் சமமான காடுகள். ஒன்பது நாடுகளில் படர்ந்து பரவி உள்ளது.

பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்குவெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளில் படர்ந்து உள்ளது. சரி.

இப்போதைய பிரேசில் நாட்டின் அதிபராக இருக்கும் பொல்சோனாரோ பின்பற்றி வரும் அரசியல் கொள்கைகள்; அதாவது காட்டை அழிக்கும் கொள்கைகள் எதிர்காலத்தில் அமேசான் காடுகளை ஒருவழி பண்ணிவிடும். இது அரசியல் விமர்சகர்களின் பொதுவான கருத்து.

2018-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தல். அப்போது பொல்சோனாரோ பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதாவது அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்குவது; பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து எடுப்பது. இவை இரண்டுமே அவருடைய பிரசாரத்தின் முக்கிய மந்திர வாசகங்களாக இருந்தன. 




இன்றைய நிலையில் பிரேசில் தன் பொருளாதாரச் சரிவில் இருந்து சற்றே மீண்டு வரும் காலக் கட்டம்.

அமேசானை வணிக மயமாக மாற்றுவோம் எனும் அதிபர் பொல்சோனாரோவின் முழக்கம் ஒட்டு மொத்த பிரேசில் மக்களையே கவர்ந்தது. கவர்ந்து இழுத்து விட்டது.

காடுகளை அழிப்பது. விவசாயம் செய்வது. மேய்ச்சல் நிலமாக மாற்றுவது என்பது அவரின் முழக்கம். அந்த முழக்கம் பிரேசில நாட்டு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள்; வணிகர்கள்; அற்றைக் கூலிகள், வெளிநாட்டு எண்ணெய்க் கம்பெனி முதலைகள் எனப் பலரையும் கவர்ந்து இழுத்தது.

இவர்கள் அனைவரும் பிரேசில் நாட்டில் ஒரு பொருளாதார மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் 2019 ஜனவரியில் பொல்சோனாரோ நாட்டின் அதிபரானார்.

பிரேசிலின் காடுகளைக் கொஞ்சம் அழித்தால் போதும். பிரேசில் மக்கள் ரொம்ப பணம் பார்க்கலாம் என்று சின்னதாகத் தூண்டில் போட்டார். மக்களும் மயங்கி விட்டார்கள்.

பிரேசில் நாடு பெரும் அளவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி. பெரிய அளவில் மாடுகளை வளர்ப்பதற்கு மேய்த்தல் நிலங்கள் தேவை. அந்த வகையில் அமேசான் கண்ணை உறுத்தியது.

விவசாயிகள் ஆளாளுக்கு ஒரு பகுதியில் நெருப்பு வைக்கத் தொடங்கி விட்டார்கள். அதிபரே கண் அடித்து விட்டார். அப்புறம் என்ன. கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் கண்டபடி சின்ன சின்னதாக நெருப்பு வைத்து இருக்கிறார்கள். ஒரு விவசாயிக்கு எவ்வளவு நிலம் தேவையோ அந்த அளவிற்கு முதலில் நெருப்பு வைத்து இருக்கிறார்கள்.

இப்படி சின்னதாக நெருப்பு வைக்கத் தொடங்கியது கடைசியில் ஒரு பெரிய அமேசானையே நெருப்பு வைத்துக் கொளுத்தும் அளவிற்குப் போய் விட்டது.

அதிபர் பொல்சோனாரோ வலதுசாரி கொள்கை கொண்டவர். அவர் தான் காடுகளுக்கு நெருப்பு வையுங்கள் என்று விவசாயிகளைத் தூண்டி விட்டதாக உலகச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதாவது அதிபர் பொல்சோனாரோவின் அரசுக் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கின்றன என்று சொல்கிறார்கள். காடுகளை அழித்து விவசாயம் செய்வது; மரங்கள் வெட்டுவது; மலைக் காடுகளை மேய்ச்சல் நிலமாக மாற்றுவது போன்ற கொள்கைகளை அதிபர் ஊக்குவிக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்போது ஏற்பட்டு உள்ள காட்டுத் தீயை அணைக்க அதிபர் பொல்சோனாரோ சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என்று உலகச் சுற்றுச் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

அதற்குப் பதில் கூறும் அதிபர் சொல்கிறார்: ‘எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை. காட்டுத் தீயை அணைக்க எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடிந்தது" என்று சொல்கிறார்.

இந்த காட்டுத் தீ சம்பவங்களுக்கு அரசு சாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என்று வேறு மாதிரியாகக் காரணம் காட்டுகிறார்.

அரசுசாரா அமைப்புகளுக்கான நிதியை அதிபர் பொல்சோனாரோ குறைத்து விட்டார். அதனால் அதற்குப் பழிவாங்க அவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று காரணம் சொல்கிறார். சரி.

அமேசான் மழைக் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் தான் இந்தக் காட்டுத் தீ சம்பவங்களினால் முதலில் பாதிக்கப் படுகிறார்கள். ஏறக்குறைய ஒன்பது இலட்சம் பழங்குடி மக்கள் அந்த மழைக் காடுகளில் வாழ்கிறார்கள்.

அமேசான் காடுகளில் ஏற்படும் எந்த ஒரு சிறு பாதிப்பும் முதலில் பழங்குடி மக்களைத் தான் பாதிக்கும். அந்த வகையில் அதிபர் பொல்சோனாரோவிற்கு எதிராக அவர்களும் தங்களின் போராட்டத்தைத் தொடங்கி விட்டார்கள்.

உலக மக்களின் பார்வை இந்தப் பழங்குடி மக்களின் பக்கமாகத் திசை திரும்பி உள்ளது. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

ஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால்

நன்றி: Free Malaysia Today

அனைத்துலக இண்டர்பால் போலீஸார் (Interpol), மத போதகர் ஸக்கீர் நாயக் மீது சிவப்பு அறிவிப்பை வெளியிட்டால் அவரைக் கைது செய்வதைவிட மலேசியப் போலீசாருக்கு வேறு தேர்வு இல்லை என்று அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சேவை செய்த வழக்கறிஞர் என். சிவநாதன் கருத்து கூறி உள்ளார். (Malaysian police would have no choice but to arrest him).  


அனைத்துலக இண்டர்பால் அமைப்பில் உறுப்பியம் பெற்ற நாடுகளில் ஒன்றான மலேசியா அதைச் செய்வது அதன் கடமையாக அமையும். ஸக்கீர் நாயக்கைக் கைது செய்து இண்டர்பால் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அவர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் படுவார்.

உறுப்பியம் பெற்ற நாடுகளிடம் தேடப்படும் ஒருவரைக் கைது செய்யக் கோரும் ஓர் எச்சரிக்கையே சிவப்பு அறிவிப்பு ஆகும். (An Interpol red notice is an alert to member police forces to apprehend a wanted person.)

அனைத்துலக இண்டர்பால் அமைப்பின் உதவியை இந்தியா நாடியது ஒரு துரதிருஷ்டவசமாகும். 2010-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒப்படைப்பு ஒப்பந்தம் (extradition treaty) செய்து உள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஏ.கே.பல்லா (AK Bhalla), இந்தியாவிற்கு வருகை புரிந்த இண்டர்பால் தலைமைச் செயலாளர் ஜர்கன் ஸ்டோக் )Jurgen Stock) என்பவரைச் சந்தித்துப் பேசினார்.

ஸக்கீர் நாயக்  11 கோடி 45 இலட்சம் ரிங்கிட் மதிப்பு (Rs1.9 billion - RM114.5 million) உள்ள குற்றவியல் சொத்துக்களைக் கொண்டு இருப்பதாக, பணச் சலவை சட்டத்தின் கீழ்  அவர் மீது இந்தியா குற்றப் பதிவு செய்து உள்ளது.

https://www.freemalaysiatoday.com/category/nation/2019/09/01/malaysia-obliged-to-arrest-naik-if-interpol-issues-red-notice/

01 செப்டம்பர் 2019

மலேசிய இந்தியர்கள் தியாகிகளா?

மலேசிய இந்தியர்கள் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு கூலி வாங்கினார்கள். ஆகவே அவர்களைத் தியாகிகள் என்று சொல்வது தவறு. இது ஒரு சாராரின் கருத்து. உங்கள் கருத்து என்ன? என் கருத்தைப் பதிவு செய்கிறேன். 


கூலிக்கு வேலை செய்தவர்களும்; கூலிக்கு மாரடித்தவர்களும்; கூலிக்குக் குப்பை கொட்டியவர்களும்; எல்லாம் ஒன்று தான். கூலி வேலைக்கு வந்தவர்கள் கூனிக் குருகி கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்தார்கள். அது ஒரு சிலரின் கருத்து. சரி.

அந்தக் கூலி வேலையின் பின்னணியில் மறைந்து நிற்கும் சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தச்  சேவை மனப்பான்மையில் அடிச் சுரமாக ஆழ்ந்து நிற்கும் தியாக உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும்.

எப்ப கொட்டும்னு தெரியாது. பொறுக்கி எடுக்கிறது வேலை தான். ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட இசைப் பாடல்கள்.

250 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துரோகத்தின் மறுவடிவங்கள். இருந்தாலும் கிடைத்த கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய பணம் காசை மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே நம் மூதாதையர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

நம் மூதாதையர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போய் விட்டார்கள். மாட்டிக் கொண்டு தவிப்பது நம் மூதாதையர்கள்...

கூலி வேலைக்கு வந்தவர்கள் காடுகளை அழித்தார்கள். அந்தக் காடுகளில் இருந்த வன விலங்குகளுக்குப் பலியானவர்கள். 250 ஆண்டு கால மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் 3,50,000 இந்தியர்கள் மலாயா காடுகளில் பலியாகி இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் உள்ளன.

காட்டுப் பாதைகளில் கம்பிச் சடக்குகள் போடும் போது பல்லாயிரம் பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். கிம்மாஸ் - கோத்தாபாரு கம்பிச் சடக்குகள்; கோலாலம்பூர் - தைப்பிங் கம்பிச் சடக்குகள்; பட்டர்வர்த் - அலோர் ஸ்டார் கம்பிச் சடக்குகள் போடும் போது முக்கால்வாசி பேர் மலேசிய இந்தியர்கள்.

சயாம் - பர்மா இரயில் பாதை போடுவதற்கு கொண்டு போகப் பட்டவர்களில் 1,86,000 பேர் தமிழர்கள். இவர்களில் திரும்பி வந்தவர்கள் 44,000 பேர். எஞ்சியவர்கள் பசி பட்டினி நோய் நொடியினால் பர்மா காடுகளில் உயிர் விட்டு இருக்கிறார்கள். இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

தார் சடக்குகள் போடும் போது வெயிலின் கொடுமை; தார் ரோட்டின் வெப்பக் கொடுமை; தார் நெடி; இதில் செத்துப் போனவர்கள் பல ஆயிரம்.

விமானப் பாதைகளை உருவாக்கும் போது பாம்புக் கடித்து; காட்டுப் பன்றி அடித்து; கரடி அடித்து; புலி அடித்து; மலைப்பாம்பு விழுங்கி பல ஆயிரம் பேர் மரித்துப் போய் இருக்கிறார்கள். இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அவர்கள் செய்த வேலைகளுக்குப் பின்னணியில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வு இருப்பதை உணர முடிந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

இப்படி உழைத்தவர்களை வந்தேறிகள் என்று சொன்னால் நியாயமா? திரும்பிப் போங்கள் என்று நேற்று வந்த ஒருவர் சொல்வது நியாயமா?

மலேசிய இந்தியர்கள் கூலி வேலை செய்வதற்காக அழைத்து வரப் பட்டவர்கள் என்று வீர வசனம் பேசுபவர்களைத் திரும்பிப் போங்கள் என்று சொன்னால் அவர்கள் தான் எங்கே போவார்கள். சொல்லுங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

செய்த வேலைகளின் பின்னணியில் நம் மூதாதையரின் தியாக வடிவ அர்ப்பணிப்புகள் மேலோங்கி நிற்கின்றன. அதை முதலில் உணர்ந்து பார்ப்போம்.

இங்கே 60 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் குடியுரிமை வழங்கி இருக்கிறார்கள். இது என்ன மாதிரியான நடைமுறை?

நேற்று வந்த மங்களா தேசிக்கு குடியுரிமை. முந்தா நாள் வந்த புகிஸ்தான் வாசிக்கு குடியுரிமை. காலம் காலமாக வாழும் மலேசிய இந்தியர்கள் பலருக்கு மறுப்பு. இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழாசிரியர்கள்; தமிழ்க் கல்விமான்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை முதன்மை படுத்தாமல் தாங்கள் செய்யும் பணியைத் தமிழ் மொழிக்குச் செய்யும் ஓர் அர்ப்பணிப்பாகக் கருதுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் தியாகம் தானே. இதுவும் ஒரு வகையில் புண்ணியம் தானே. அதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாமா?

ஒருவர் வாங்கும் கூலியை நியாயப் படுத்த வேண்டாமே. அந்தக் கூலியின் பின்னால் மறைந்து இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுகளை உயர்த்திப் பார்ப்போமே... அந்த அர்ப்பணிப்பு உணர்வுகளில் அரியாசனம் காணும் தியாக உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்போமே!

நம் மூதாதையரின் கூலிக்கு மாரடித்த வேலையில் இருந்து தான் நாம் இப்போதைக்கு ஒரளவுக்குச் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளில் இருந்து தான் இப்போதைக்கு ஒரளவுக்குச் சுகம் காண்கிறோம்.

ஆகவே அவர்களின் அந்தத் தியாக மனப்பான்மையில் மாற்றுக் கருத்துகள் வேண்டாமே. வந்தார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள் என்று சொல்லி நம் மூதாதையர்களின் தியாக உணர்வுகளைச் சிறுமைப் படுத்த வேண்டாமே. அந்த வாயில்லாப் பூச்சிகளைக் களங்கப் படுத்த வேண்டாமே. இதுவே என் கருத்து. மன்னிக்கவும். என் மனவேதனை.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Muthukallianna Gounder We the willing lead by the unknown are doing impossible for tho ungreatfuls. We have been doing so much for so little beatitude. Now we are qualified to do any thing for nothing, my friends. Oh, God, please lead our path.


Nagappan Arumugam ஆமாம். கூலிக்குத்தான் மாரடித்தோம். இதைத் தியாகம் என்று சொல்வது உணர்ச்சிவயப்பட்ட பேச்சு. ஒரு தொழிலாளிக்கு உரிய உரிமைகளைக் கேட்டு வாங்கும் அறிவு நமக்கு இல்லை. கேட்டு வாங்கிக் கொடுக்கும் தலைவனும் நமக்கு இல்லை. இந்தக் கூலிகளை வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தொழிற் சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கூடத் சுரண்டிக் கொழுத்தார்கள்.

நாம் இன்னமும் தியாகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் உழைத்தவன். என் உரிமை எங்கே என்று கேட்க வேண்டும் என்பதே என் கூற்றின் உள்ளுறை.

போதும் இந்தத் தியாகப் புலம்பல்!




Muthukrishnan Ipoh /// என் உரிமை எங்கே என்று கேட்க வேண்டும் என்பதே என் கூற்றின் உள்ளுறை. /// சரிங்க ஐயா...


Kandasamy Periyasamy மிக மிக அருமையான அற்புதப் படைப்பு. இன்றைய இளைஞர்களும் இளம் தம்பதிகளும் உணர வேண்டும். உணர வேண்டிய ஒன்று. உலகம் அறிய ஊமத்தர்களுக்கு எடுத்துச் சொல்லி, நம் முன்னோர்களின் உன்னத உழைப்பை உலகுக்கு எடுத்துச் சொல்வோம்/ செல்வோம்.



Muthukrishnan Ipoh நம் முன்னோர்களின் உன்னத உழைப்பை உலகுக்கு எடுத்துச் சொல்வோம்... அது நம் கடமையாகும்.


மோஹன் Mohan அடுத்த தலைமுறை வாழ்க்கை தரம் மாற வேண்டும் என்று..... சொந்தங்களை விட்டு பிழைப்பு தேடி வந்த நம் முன்னோர்கள் தியாகிகள்....... இன்னும் இந்த தியாகிகளின் வாரிசுகள் பல அவமானங்களை தாங்கி போராடும்



Muthukrishnan Ipoh சொந்தங்களை விட்டு பிழைப்பு தேடி வந்த நம் முன்னோர்கள் தியாகிகள்>>> உண்மையிலேயே...


Meera Arangkannal கூலிக்கு மாரடித்து நேர்மையாக உழைப்பைக்கொட்டியது இழிவு என்றால் உயிரை பிழிந்து உழைப்பைச் சொரண்டிய முதலாலிகளை என்ன வென்று சொல்வது...😥


Muthukrishnan Ipoh மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய பணம் காசை மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே நம் மூதாதையர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

நம் மூதாதையர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போய் விட்டார்கள். மாட்டிக் கொண்டு தவிப்பது நம் மூதாதையர்கள்...





Meera Arangkannal Muthukrishnan Ipoh வரலாற்றை புரிந்தால் தான் வரலாறு படைக்க முடியும் ஐயா🙏தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் அடுத்த தலைமுறை சமுதாய சிந்தனையை செதுக்க உறுதுணையாய் இருக்கும்..தொடரட்டும் தங்கள் நற்பணி🙏💐💐💐


Sathya Raman Muthukrishnan Ipoh இன்னும் எத்தனை எத்தனை பக்கம் தெளிவான விளக்கத்தை தேடி தேடி எம் இனத்திற்கான ஆய்வுகளை அயராது ஆராய்ந்து பதிவு பண்ணினாலும் அனைவரையும் அவை திருப்தி படுவதில்லை சார்.

கண்ணெதிரே கர்ண கொடுமைகள் நடந்தாலும் அதைக் கண்டும் காணாதவர்கள் கைப் புண்ணுக்கும் கண்ணாடி தேடுபவர்கள் இவர்கள். இப்படி பட்டவர்களின் கண்களுக்கு நம் முன்னோர்களின் தியாகமோ, உழைப்போ, உதிரச் சிந்தலோ உணர்ந்து கொள்ளும் அறிவோ கிடையாது.

"நம் சமூக தியாகிகளுக்காக "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரும் கொட்டுதடி" என்கிற பாரதியின் பாட்டு வரிகளாக நாம் இருப்போம் சார்.

மற்றவர்களின் அக்கப்போர் பற்றி நமக்கென்ன கவலை? சிவசங்கரி வரிகள் போல் "சின்ன நூல் கண்டுகளா நம்மை சிறைப் படுத்துவது" என்று நாம் நாமாக இருப்போம், செயல்படுவோம். நன்றிங்க சார் 🙏


Sathya Raman இந்த தெளிவில்லாத சிந்தனைக் குறித்து நேற்றே எழுத நினைத்தேன். இந்த நாட்டு இந்தியர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள். மற்றப்படி அவர்களைத் தியாகிகள் என்று முத்திரை குத்தக்கூடாது... என்பன போன்ற முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் கொடுக்கும் ஐயா அவர்களே.

நீங்கள் ஆன்மீகவாதியாக ஆகி விட்டதால் இந்நாட்டில் இந்தியர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருக்கலாம்.

அதுவும் இல்லை என்றால் அரசியல் சார்பில் ஒரு பக்க வாதமாக இருக்கலாம். வேலைக்கு தகுந்த சம்பளம் கொடுக்கப் படுகிறது. இதென்ன தியாகி பட்டம் வேறு என்று வினா வைக்கிறீர்கள்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் கூற்று பொருந்தும்.

ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாக, கொடுமைப் படுத்தி அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கி 20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்களே அது தியாகம் இல்லையா?

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யார் காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம் படித்த படிப்புக்கு தகுந்த வேலையே வேண்டும் என்கிற பிடிவாதம். பட்டதாரிகள் தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமை போன்ற பல காரணங்களை கூறி மலேசியர்களை நோக்கி விரல் நீட்டலாம்.

உடலை வருத்தி உழைக்காமல் சொகுசாய் உள்ளவர்களே தியாகிகளாய் ஆக்கப்படும் போது அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்களை, தனக்காக யோசிக்க தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த இந்தியர்களை தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

"விதை சத்தமில்லாமல் முளைக்கிறது,"மரம் சத்தத்தோடு முறிகிறது".

இந்த நாட்டில் எம் இனமும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இந்த அரசியல் சாக்கடைகளை சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இப்போது இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையே கோரிக்கையாக வைக்கிறார்கள். இதில் இடையில் புகுந்து இன்ப நாடகம் தேவையில்லாத ஒன்று. தோள் கொடுக்க விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்.

அதை விட்டு "படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவிலாக’ இருக்கக் கூடாது.



Muthukrishnan Ipoh நல்ல ஒரு பதிவு சகோதரி... நன்றி... நன்றி... நன்றி.


மலேசிய இந்தியர்கள் தியாகிகளா? கூலிக்கு மாரடித்தவர்களா? இரு சார்புக் கேள்வி. இதில் அவரவர் கருத்துகள் சொல்ல அவரவருக்கு உரிமை உள்ளது.

கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் தப்பு இல்லை என்பதே என் கருத்து. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு.

ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் அல்லது ஒரு தங்கப் பதக்கம் பெற்றவருக்கு டத்தோ விருது... 2 இலட்சம், 5 இலட்சம் ரொக்கம். மாதாந்திரப் பென்சனாக 2000 லிருந்து 3000. இதில் வீரர் தீரர் எனும் புகழ் மாலைகள். இரண்டு மூன்று வருட விளையாட்டு அனுபவத்தில் இத்தனைச் சலுகைகள்.

ஆனால் 100 - 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு வீரர் பட்டம் வேண்டாங்க... வீர விருதும் வேண்டாங்க... ரொக்கமாக இலட்சம் ஆயிரங்கள் வேண்டாங்க... அவர்களின் உழைப்பிற்கு ‘தியாகிகள்’ எனும் ஓர் அடைமொழியைக் கொடுத்து விட்டுப் போகலாமே.

அதிலும் கூடவா ஒதுக்கல்கள்... ஓர வஞ்சனைகள். மூதாதைய மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் அடைமொழி வழங்கி அவர்களை நினைத்துப் பார்ப்பதில் என்னங்க தப்பு.

நம் மூதாதையர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் பேர் போட்டு இருக்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. அதை மறக்க வேண்டாம்.

நம்முடைய மூதாதையர்களை மறக்காமல் அவர்களை என்றைக்கும் நினைத்துப் பார்ப்போம். அவர்களுக்கு காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம். நம்முடைய மூதாதையர்களைக் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று வாய் கூசாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.


Varusai Omar அவர்கள் வெள்ளைக்காரர்களா... கொள்ளைக்காரர்களா?
சற்றே விளக்குங்களேன்"


Vejaya Kumaran apadi podungge aruwaawe.. (அப்படி போடுங்க அரிவாளை,,,)


Manickam Nadeson ஏமாளிகள் !!!


Rama Arumugam Rama வணக்கம். எம் தமிழினம் பற்றி என்ன தெரியும் போக்கற்றவர்களுக்கு.... விவாதம் செய்ய விருப்பமில்லை....  சரித்திரம் படியும்.... நாகரீக மேலான்மைக் கொண்டவனடா தமிழன்...


Hamba Mu Umar Umar Uruthiayaga kurykeren thiagikal tamillarkal (உறுதியாகக் கூறுகிறேன்... தியாகிகள் தமிழர்கள்)
Image may contain: people sitting and shoes 


மாரியப்பன் முத்துசாமி தமிழர்கள் போல் அடிமையாக வாழ்ந்த இனம் ஒன்று உண்டா சொல்லுங்கள்

ரனு மண்டல்

அதிர்ஷ்ட தேவதையின் ஆராதனை

அதிர்ஷ்டக் காற்று எங்கே இருந்து வரும்… எப்படி வீசும் என்பது எவருக்கும் தெரியாது. வர வேண்டிய நேரத்தில் வரும். வந்து வாசல் கதவைத் தட்டும். சமயத்தில் இரயில் வண்டியில் ஏறி வரலாம். அல்லது இரயில் நிலைய பிளாட்பாரத்தில் தவழந்தும் வரலாம்.



ஓர் ஏழைப் பெண்மணியின் வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்து இருக்கிறது. நடந்து ஒரு சில தினங்கள் ஆகின்றன. நல்ல ஓர் ஆச்சரியமான ஆனால் அதிசயமான கதை. பேஸ்புக் ஊடகம் வழியாக ஒருவரின் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போய் இருக்கிறது. நம்பவும் முடியவில்லை. நம்பால் இருக்கவும் முடியவில்லை.

ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் வரையில் இரயில் பெட்டிகளிலும் இரயில் நிலைய பிளாட்பாரத்திலும் பாட்டுப் பாடி யாசகம் செய்த பெண்மணி... மன்னிக்கவும்... பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒரு பெண்மணி. இப்போது பாலிவூட்டில் பின்னணிப் பாடகியாக உருமாற்றம் அடைந்து உள்ளார். 


தமிழ் மலர் - 01.09.2019
உலகமே அவரைத் திரும்பிப் பார்க்கிறது. அதிர்ஷ்ட தேவதை எப்படி எல்லாம் வந்து அரவணைத்துக் கொஞ்சுகின்றார். பாருங்கள்.

அந்தப் பெண்மணி தான் இந்தியாவின் அடுத்த லதா மங்கேஷ்கர் என்று சொல்லும் அளவிற்குப் புகழின் உச்சயில் புன்னகை செய்கின்றார். லதா மங்கேஷ்கரின் குரல் ஆராதனைகளுக்குச் சவால் விடும் அளவிற்கு ஒரு மாற்றுக் குரலாகவும் ஆலாபனை செய்கின்றார்.

சிப்பிக்குள் இருக்கும் முத்து எந்த வடிவத்திலும் வரலாம் என்பதற்கு இந்தப் பெண்மணி ஒரு நல்ல சான்று.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு இரயில் நிலையம். பெயர் ரனகத் (Ranaghat). அங்கே யாசகம் செய்து பிழைப்பை நடத்தி வந்தவர் ரனு மண்டல் (Ranu Mandal). இன்று புகழின் உச்சியில் சுவாசம் செய்கின்றார். வாழ்த்துவோம்.


ரனு மண்டல் - ஹிமேஷ் ரேஷ்மியா
ரனு மண்டல், மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில் கார்த்திக் நாரா எனும் கிராமத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில், 1960 நவம்பர் 5-ஆம் தேதி பிறந்தவர். இவரின் அசல் பெயர் ரனு மரியா மண்டல் (Ranu Mariah Mandal). கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.  வயது 59.

தகப்பனாரின் பெயர் ஆதித்தியா குமார். தள்ளு வண்டியில் உணவுப் பொருட்களை விற்று வந்தவர். ரனு மண்டல் சின்னப் பிள்ளையாக இருக்கும் போதே பெற்றோரை இழந்து விட்டார். 


ரனு மண்டல் - ஆதிந்திரா சக்கரவர்த்தி
1973-ஆம் ஆண்டு அவருக்கு 13 வயது. அந்தச் சின்ன வயதிலேயே பாபுல் மண்டல் (Babul Mandal) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த இரண்டே ஆண்டுகளில் கணவரும் இறந்து விட்டார். இவருக்கு இரு முறை திருமணம் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது. நான்கு குழந்தைகள் என்றும் சொல்லப் படுகிறது. உறுதி படுத்த முடியவில்லை.

இவருக்கு ஒரே ஒரு மகள். பெயர் சதி ராய். திருமணம் ஆனதும் கணவருடன் வேறு ஓர் இடத்திற்குப் போய் விட்டார். தாயார் ரனு மண்டல் தனித்து விடப் பட்டார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தாய்க்கும் மகளுக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும் மகள் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் தான் இன்றும் இருக்கிறார்.

ஒரு செருகல். சில தினங்களுக்கு முன்னர் இவருடைய மகள் சதி ராய் தன் தாயார் ரனு மண்டலைப் போய் பார்த்து இருக்கிறார்.

2009-ஆம் ஆண்டில் இருந்து ரனு மண்டல் தன்னந் தனியாக வாழ்ந்து வந்தார்.  ரனு மண்டலுக்குச் சொந்தமாக வீடு இல்லை. காலியாகக் கிடக்கும் வீடுகளில் போய் தங்கிக் கொள்வார்.



அவருக்கும் வயதாகி விட்டது. கவனித்துக் கொள்ள கணவரும் இல்லை. எட்டிப் பார்க்க பிள்ளையும் இல்லை. என்ன செய்வது. வேறு வழி இல்லை. பிச்சை எடுக்கும் அவலம்.

இரயில் நிலையத்தில் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்களைப் பாடி யாசகம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதலாம் தேதி ஆதிந்திரா சக்கரவர்த்தி (Atindra Chakraborty) என்பவர் ரனகத் இரயில் நிலையத்தில் ஒரு கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்து இருக்கிறார். இவர் ஒரு பொறியியலாளர். வயது 26.

அப்போது ரனு மண்டல் பழைய இந்திப் பாடல்களைப் பாடுவதைக் கேட்டு அந்த இளைஞர் மெய்மறந்து போய் இருக்கிறார். இனிமையான குரல். தெய்வீகமான குரல். நல்ல ஒரு காந்தர்வமான குரல் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார்.

அந்தப் பாடல்கள் ஆதிந்திரா சக்கரவர்த்தியும் அவருடைய நண்பர்களையும் பெரிதும் கவர்ந்து விட்டன. உடனே ரனு மண்டலை அழைத்து அவருக்குத் தேநீர், பிஸ்கட்கள் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.


ரனு மண்டல் - ஹிமேஷ் ரேஷ்மியா
வேறு ஏதாவது ஒரு பாட்டு பாட முடியுமா என்று கேட்டு இருக்கிறார். உடனே ’ஏக் பியார் கா நக்மா ஹாய்’ (Ek Pyaar Ka Nagma Hai) எனும் பாடலை ரனு மண்டல் பாடி இருக்கிறார். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஷோர்’ இந்திப் படத்தில் முக்கேஷ்; லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்.

வாழ்க்கை என்பது ஒரு காதல் கதை...

அலைகள் பாயும் வாழ்க்கைக் கதை...

அதில் என் கதை உன் கதையைத் தவிர வேறு கதை இல்லை...

என்பதே அந்தப் பாடலில் பொருள்.

(யூடியூப்பில் அந்தப் பாடல்: https://www.youtube.com/watch?v=ST_WC13rNJo)

அந்தப் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார் ஆதிந்திரா சக்கரவர்த்தி. அதை அப்படியே வீடியோ படம் எடுத்து தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதோடு ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். யாராவது ரனகத் இரயில் நிலையத்திற்குச் சென்றால் அந்தப் பெண்மணிக்கு உதவி செய்யுங்கள் எனும் வேண்டுகோள்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டாமே... ரனு மண்டல் ஒரு வரலாறாக மாறிப் போய் விட்டார். சரி.

ரனு மண்டலின் பாடல் காணொலியை ஓர் அரசு சாரா இயக்கத்தினர் பேஸ்புக்கில் பார்த்து இருக்கிறார்கள். ரனு மண்டலின் குரலில் ஒரு வசீகரத் தன்மை. அவர்களையும் ரனு மண்டலின் குரல் வசப் படுத்தி விட்டது. ஆங்கிலத்தில் ’மெஸ்மரைஸ்ட்’ என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான்.


ரனு மண்டல் மகள் சதி ராய்
உடனே ரனகத் இரயில் நிலையத்திற்குப் போய் அவரைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். அதோடு அப்படியே அவரைப் புதுடில்லிக்கு விமானத்தின் மூலமாக அழைத்து வந்து விட்டார்கள். இரயில் பயணங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவருக்கு அதிர்ஷ்ட தேவதை விமானம் வழியாக வந்து இருக்கிறார்.

ரனு மண்டல் பாட்டுப் பாடிய ரனகத் நகரில் இருந்து புதுடில்லிக்கு 1479 கிலோ மீட்டர்கள் தொலைவு. அதையும் நினைவில் கொள்வோம்.

அந்தச் சமயத்தில் 'சூப்பர் ஸ்டார் பாடகர்’ (Superstar Singer) தொலைக்காட்சி நிகழ்ச்சி உச்சத்தில் இருந்த நேரம்.

ரனு மண்டலுக்குச் சிகை அலங்காரம்; ஒப்பனைகள் செய்து அந்த நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு விருந்தினராகப் பாடவும் செய்து விட்டார்கள். அந்தச் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா (Himesh Reshammiya). இவர் ஒரு நடிகர், இசை அமைப்பாளர்.
 
ரனு மண்டல் குரலில் மயங்கிப் போன ஹிமேஷ் ரேஷ்மியா அவர் தயாரிக்கும் ’ஹெப்பி ஹார்டி ஹீர்’ (Happy Hardy and Heer) எனும் படத்திலும் ரனு மண்டலைப் பாட வைத்து விட்டார். அது ஒரு முன்னோட்டப் பாடல் (Theme Song). பாடலின் பெயர் ‘தெரி மெரி கஹானி’ (Teri Meri Kahani).

இந்தப் பாடல் இப்போது உலகப் புகழ் பெற்று விட்டது. இந்தப் பாடலுக்கு ஹிமேஷ் ரேஷ்மியா சில இலட்சங்களை ரனு மண்டலுக்கு வழங்கி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

அதே படத்தில் இன்னொரு பாடலுக்கும் சில தினங்களுக்கு முன்னர் ஒலிப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

அடுத்து அக்சாய் குமார் என்பவர் தயாரிக்கும் துர்கா பூஜா எனும் படத்திற்கு பின்புலப் பாடல் பாடுவதற்கும் ரனு மண்டலுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர் ரனு மண்டல். இவரின் பாடும் திறனை உலகத்திற்கு கொண்டு சென்றவர் ஆதிந்திரா சக்கரவர்த்தி. அதையே உலகறியச் செய்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


தமிழ் மலர் - 01.09.2019
இதற்கு இடையில் ஒரு வதந்தி. ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்தார் எனும் செய்தி. அது உண்மை இல்லை என்று சல்மான் கான் மறுத்து விட்டார்.

இருந்தாலும் தற்சமயம் சல்மான் கான் நடித்து வரும் தபங் 3 (Dabangg 3) எனும் படத்தில் ரனு மண்டலுக்குப் பாட வாய்ப்பு அளித்து உள்ளதாகவும் தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சில தினங்களுக்கு முன்னர் ரனு மண்டலைப் பேட்டி எடுத்தது. அதில் ரனு மண்டல் என்ன சொல்கிறார் என்பதையும் பாருங்கள்.

’கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு வார்த்தை தெரியவில்லை. ஒரு கனவு வாழ்க்கையில் வாழ வைத்து இருக்கிறார். நான் உடைந்து போன ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள். எனக்கு என்று யாருமே இல்லை. சொந்த பந்தங்கள் எல்லோரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எல்லோரும் என்னை அனாதையாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். நான் பெற்ற மகளே என்னைத் தேடி வரவில்லை. ஆனால் கடவுள் மட்டும் என்னை கைவிடவில்லை.

மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. பொது மக்கள் இவ்வளவு அன்பைப் பொழிகிறார்கள். இதற்கு மேலும் எனக்கு மகிழ்ச்சி தேவை இல்லை. இந்தச் சந்தோஷம் இறக்கும் வரையில் எனக்குப் போதும்.

இருண்டு போன கற்பனையில்கூட இப்படி ஒரு பெரிய மேடையில் ஏறிப் பாடுவேன்; பாலிவூட் திரைப் படத்தில் பாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் பாடுவதற்குப் பயிற்சி அளிக்கப் பட்டது இதுதான் முதல் தடவை. தொழிநுட்பங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஹிமேஷ் ரேஷ்மியா ஐயா என்னைத் தன் குடும்பத்தில் ஒருவராகப் பார்த்துக் கொள்கிறார்.

பாடுவதற்கு நான் எங்கேயும் இதுவரையில் பயிற்சி எடுத்தது இல்லை. லதா மங்கேஷ்கர்; அனுராதா பவுத்வால் போன்ற புகழ்பெற்ற பாடகர்களின் பாடல்களில் ஈர்க்கப் பட்டேன். என் குரலுக்குப் பொருத்தமான பாடல்களைத் தேர்வு செய்து பாடி வந்தேன். காம ரசப் பாடல்கள் எனக்குப் பிடிக்காது.

லதா மங்கேஷ்கர் எனக்கு கடவுள் போன்றவர். அவருடைய எல்லாப் பாடல்களுமே இனிமையானவை என்கிறார் ரனு மண்டல்.

மும்பாய் நகரில் உள்ள ஓர் அரசு சாரா இயக்கம் ரனு மண்டல் தங்குவதற்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுத்து இருக்கிறது.

ரனு மண்டலை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர் ஆதிந்திரா சக்கரவர்த்தி எனும் இளைஞர். அவர் அடிக்கடி வந்து ரனு மண்டலைப் பார்த்து விட்டுப் போகிறார். ரனு மண்டலிடம் கைப்பேசி இல்லை. ஆதிந்திராவின் கைப்பேசியைச் சமயங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்.

எட்டாத உயரத்தின் புகழ் மாடியில் ரனு மண்டல் இப்போது உச்சம் பார்க்கிறார். தங்குவதற்கு ஓர் ஒட்டுக் குடிசைகூட இல்லாமல் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தவர். இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப் படுகிறார். ஒழுங்கான சாப்பாடு கிடைக்காமல் யாசகம் கேட்டு இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கியவர்.

இப்போது மும்பாய் ஓட்டல் வேலையாட்கள் அவருடைய கட்டளைக்காகக் காத்து நிற்கிறார்கள். என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டு சிரம் தாழ்த்துகிறார்கள்.

ரனு மண்டலின் வாழ்க்கை ஒரு கற்பனைக் கதை போல எனக்குத் தோன்றுகிறது. அவர் மனசில் என்ன ஓடிக் கொண்டு இருக்குமோ. நமக்குத் தெரியாது. இருந்தாலும் பழைய இரயில் நிலையப் பிளாட்பாரத்தில் தெரிந்த அவரின் அதே புன்னகை இன்றும் தொடர்கிறது. 

அதிர்ஷ்டம் வந்தால் ஒரே நாளில் ஒரு சாமானியன் கூட ஓர் இலட்சாதிபதி ஆகலாம். ஓர் ஏழை கோடீஸ்வரராக ஆகலாம். 

அதிர்ஷ்டம் கூரையைப் பெயர்த்துக் கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அது இப்படியும் இருக்கலாம். லதா மங்கேஷ்கர் குரல் வனத்திற்கு ஈடு கொடுக்கிறது ரனு மண்டல் குரல் வண்ணம். அந்தக் குரல் வதனத்தில் லயித்து அதிசயித்துப் போய் நிற்கிறேன். அதிர்ஷ்ட தேவதையின் ஆராதனைகளுக்குத் தலை வணங்குகிறேன்.

யூடியூப்பில் ரனு மண்டல் பாடல்:

https://www.youtube.com/watch?v=12K-gmK2b2I

மேலும் ஒரு பாடல்:

https://www.youtube.com/watch?v=DddMBIZzWi0