06 செப்டம்பர் 2019

ஜாகிர் நாயக்: மலேசியாவுக்கு என்ன நன்மை

சமயப் போதகர் ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி (Permanent Resident) எந்த அடிப்படையில் வழங்கப் பட்டது என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த அரசியல்வாதி ரயிஸ் யாத்திம்.


”ஜாகிர் நாயக்கினால் மலேசியாவுக்கு கிடைத்த நன்மை என்ன? இங்கு உள்ள முப்திகளால் கொடுக்க முடியாத எதை அவர் இங்கு கொடுத்தார். இது தொடர்பாக இதுவரையிலும் சரியான விளக்கம் மக்களுக்கு வழங்கப் படவில்லை.”

”ஜாகிர் நாயக் இங்கு வந்து சிலரை இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார். அதற்காக நிரந்தர வசிப்பிடத் தகுதி அவருக்கு வழங்கப் பட்டதா அல்லது மலேசியரிடம் இல்லாத சமய அறிவு அவரிடம் இருக்கிறதா? ஒரு திட்ட வட்டமான காரணம் இதுவரையிலும் தெரிவிக்கப் படவில்லை.”


(We put the law behind us in terms of someone with PR coming in, without it being explained to the people what is the benefit gained (from doing so) that our muftis can't give. Is it just because he converted to Islam certain people, or is there knowledge that Malaysians don't have?)

‘வயல் காட்டில் ஓர் எருமை கத்துவது’ போல உள்ளது. (It's like a 'buffalo mooing in a field)

(சான்று: https://www.malaysiakini.com/news/490612)

நெகிரி செம்பிலான் மாநில முதல்வராக (1978 - 1982) இருந்தவர் ரயிஸ் யாத்திம். ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் (1974 -2013). மலேசிய அமைச்சரவையில் நீண்ட கால அமைச்சர். மலேசியாவின் மூத்த அரசியல்வாதி. தற்சமயம் பெர்சத்து கட்சியின் தலைவர். 


ஜாகிர் நாயக்கிற்கு எப்படி நிரந்தர வசிப்பிடத் தகுதி கிடைத்தது என்பதற்குச் சரியான விளக்கம் தரப்பட வேண்டும். அவர் மலேசியாவிற்கு வரும் போது இந்த நாட்டில் முதலீடுகள் செய்வதற்காக எதைக் கொண்டு வந்தார் என்றும் ரயிஸ் யாத்திம் கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் கிளந்தானில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜாகிர் நாயக்  சீனர்களையும் இந்தியர்களையும் சிறுமைப் படுத்திப் பேசினார். அதனால் நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் அவர் சொன்னார். ”இந்தச் சர்ச்சைகள் அடங்க வேண்டும் என்றால் ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும்.” இதற்கு முன்பும் அவர் கூறி இருந்தார். அதையே மீண்டும் வலியுறுத்தினார்.


”ஜாகிர் நாயக்கிற்கு இந்தோனேசியாவில் வரவேற்பு இல்லை. இந்தியா சென்றால் அவர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்க வேண்டி வரும். சவூதி அராபியாவும் அவரை நிராகரித்து உள்ளது. ஆனால் நாம் அவரை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஜாகிர் நாயக் இங்கு இருந்து செல்வதே நாட்டுக்கு நல்லது” என்கிறார் ரயிஸ் யாத்திம்.

ஜாகிர் நாயக்கிற்குப் புகலிடம் வழங்குவதைச் சவூதி அரேபிய அரசாங்கம் நிராகரித்து இருப்பதாக உறுதிபடுத்தப் படாத அறிக்கை ஒன்றை ரயிஸ் யாத்திம் மேற்கோள் காட்டி உள்ளார்.

(Rais was citing an unverified report that the Saudi Arabian government had rejected asylum for Zakir.)

05 செப்டம்பர் 2019

ஆசிரியர் தினம் இந்தியாவிலும் மலேசியாவிலும்

இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி
மலேசியாவில் மே 16-ஆம் தேதி


செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் என்று பலரும் வாழ்த்துகள் சொல்கிறார்கள். ஒரு சின்ன விளக்கம். இந்தியாவில் தான் இன்று ஆசிரியர் தினம். மலேசியாவில் அல்ல.


இந்தியாவில் ஆசிரியர் தினம் எப்படி வந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர். மாபெரும் தத்துவ மேதை. இந்து மத இலக்கியங்கள், மேற்கிந்திய சிந்தனைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.

திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தவர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 5-ஆம் தேதி. நினைவில் கொள்வோம்.


அவரைச் சிறப்பிக்கும் வகையில் 1962-ஆம் ஆண்டு முதல் அந்த நாள் ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடாப் படுகிறது.

மலேசியாவில் ஆசிரியர் தினம் மே மாதம் 16-ஆம் தேதி. மலேசியாவில் ஆசிரியர் தினம் எப்படி வந்தது.

1956-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி மலாயா கூட்டரசு அரசாங்கம் ரசாக் அறிக்கையை அங்கீகரித்தது. மலேசியாவில் கல்வி அமைப்பு முறையைப் பற்றியது அந்த ரசாக் அறிக்கை.

அந்தக் காலக் கட்டத்தில் துன் அப்துல் ரசாக் மலாயாவின் கல்வி அமைச்சராக இருந்தார். ரசாக் கல்வி அறிக்கை தயாரிக்கப் படுவதில் அவர் தலைமை வகித்தார். ஆகவே அவர் நினைவாக அந்த அறிக்கைக்கு ரசாக் அறிக்கை என்று பெயர் வைக்கப் பட்டது.

அந்த வகையில் மே மாதம் 16-ஆம் தேதி மலேசியாவில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடாப் படுகிறது.


மலேசியாவில் ஆசிரியர் தினம் மே மாதம் 16-ஆம் தேதி. இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி.

ஆசிரியப் பணியைப் புனிதப் பணியாகக் கருதுகிறார்கள். ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் தினம் உலகம் எங்கும் கொண்டாடப் படுகிறது.



உலக நாடுகளில் எந்த எந்த திகதிகள் ஆசிரியர் நாள் கொண்டாடப் படுகிரது என்பதைக் கீழ்காணும் இணையத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

https://en.wikipedia.org/wiki/List_of_Teachers%27_Days

04 செப்டம்பர் 2019

பாஸ் கட்சியின் பிரசாரம்

பல்லின மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் நாடு மலேசியா. இன சமயப் புரிந்துணர்வுகளில் சமரசம் காணும் நாடு மலேசியா. பன்னெடும் காலமாக பல்லின ஒற்றுமைக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நாடு மலேசியா.

அந்த ஐக்கியத்திற்கும் அந்த ஒற்றுமைக்கும் அந்த நல்லிணக்கத்திற்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலேசியர்கள் அனைவரின் கடமையாகும்.


அண்மைய காலமாக ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். உண்மையிலேயே அது ஆரோக்கியமற்ற, வருந்தத்தக்க செயல் ஆகும்.

இனத்தையும் சமயத்தையும் முன் வைத்து பொருட்களைப் புறக்கணிப்புச் செய்வது என்பது நல்ல செயல் அன்று. சரியான நிலைப்பாடும் அல்ல.

முஸ்லிம் தயாரிப்புப் பொருட்களை முதலில் வாங்குவது என்கிற பிரசாரம் தவறானது...  ஆரோக்கியமற்றது.

பல இன சமூக அமைப்பில் மிகவும் ஆரோக்கியம் அற்றது. பிரதமர் துன் மகாதீர் உட்பட பலரும் கண்டித்து இருக்கிறார்கள். எனினும் பாஸ் கட்சி இதனை ஆதரித்து செயல்பட்டு வருகிறது. வருத்தம் அளிக்கும் செயல்பாடு.



Spirit of Malaysia: Good friends (from left) Aimi Nurjannah Ahmad Fadilah, 10; N. Bhagawathy, 11; and Ong Chui Juang, 10; chatting by a Jalur Gemilang hung up at their school, Sekolah Kebangsaan Sultan Abdullah.

ஒரு பிரசாரத்தைத் தொடங்கு முன்னர் அந்தப் பிரசாரத்தின் பின்விளைவுகளை நன்கு பரிசீலக்க வேண்டும். உலக வாணிகம் எப்படி செயல் படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியப் பொருளாதாரம் அந்நிய நேரடி முதலீட்டைச் சார்ந்து உள்ளது. அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் முக்கியமானவை. தவிர கணினி மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகளை நம் நாட்டுத் தொழில்நுட்பத் துறை சார்ந்து உள்ளது.

உலகில் பல நாடுகள் ஹலால் பொருட்களைத் தயாரிக்கின்றன. அந்த வகையில் முஸ்லீம் நாடுகள் தயாரித்த பொருட்களை மட்டும் வாங்குங்கள் எனும் பிரசாரம் தொடருமானால் உள்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் வியாபாரம் பாதிக்கப் படலாம். 


அதனால் அவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால் தொழிலாளர்கள் பலர்  பணிநீக்கம் செய்யப் படலாம். இவற்றை எல்லாம் பாஸ் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமட் கவுஸ் நசுருதீன் அவர்களும் அந்நிய நேரடி முதலீட்டைத் தான் முதன்மைப் படுத்துகின்றார். பாஸ் கட்சி முன்னெடுக்கும் பிரசாரம் மிகவும் குறுகிய பார்வை கொண்டதாகும் என்கிறார்.

பாஸ் கட்சியின் இந்தப் பிரசாரம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது என்று கணிக்க முடிகின்றது. பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இப்படிப்பட்ட பிரசாரம் ஆரோக்கியமற்றது. பன்முகச் சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தலாம்.

மதங்கள் ஒருவரை ஒருவர் புறக்கணிக்கவும் கற்பிக்கவில்லை அல்லது வெறுக்கவும் கற்பிக்கவில்லை.

ஒரே வார்த்தையில் சொன்னால்... முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற அழைப்பு எந்த ஒரு தரப்பினருக்கும் பயன் அளிக்காது.

அதே சமயத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கம் எந்தச் சூழ்நிலையையும் மேம்படுத்த உதவாது. ஆனால் மற்றவர்களிடையே கோபத்தைத் தான் உருவாக்கும்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கமாறு அழைப்பு விடுத்து உள்ளன.

அந்த வகையில் பார்த்தால் வெளிநாட்டு தயாரிப்புகளில் குறிப்பாக கைத் தொலைபேசிகளையும் புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் தீயவர்கள் மூலமாகத் தோற்கடிக்கப் படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இந்த நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து அந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

இறுதியாக... அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது ஆரோக்கியமான செயல் அல்ல.

நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம். முயற்சி செய்து வருகிறோம். அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது ஆரோக்கியமான செயல் அல்ல.

நாட்டின் நல்லிணத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆரோக்கியமற்ற அந்தப் பிரசாரத்தைப் பாஸ் கட்சி கைவிட வேண்டும். அதுவே நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.09.2019


03 செப்டம்பர் 2019

முஸ்லீம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம்

அம்னோ - பாஸ் கட்சிகள் கண்டிக்குமா
(தமிழ் மலர் - 03.09.2019)

முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு நடந்து வரும் பிரசாரத்தை அம்னோ - பாஸ் கட்சிகள் கண்டிக்குமா என்று ஜ.செ.க. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார். 


இப்படி ஓர் இயக்கத்தைத் தொடங்கி இருப்பவர்கள் ; அதைக் கைவிட வேண்டும் என பிரதமர் துன் மகாதீர் இதற்கு முன்னர் கூறி இருப்பதோடு இது வெற்றி பெறாது. மாறாக மற்றவர்களுக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தும் என்றும் கூறி இருந்தார்.

அம்னோ - பாஸ் கட்சிகள் இந்த நாட்டில் மலாய்க்காரரகள் அல்லாதவர்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை என்றால் இந்த இயக்கத்தை நிறுத்துமாறு சொல்வீர்களா; கண்டிப்பீர்களா என்று லிம் குவான் எங் வினவினார்.

முஸ்லீம் அல்லாதவர்கள் தயாரிக்கும் பொருட்களை முஸ்லீம்கள் வாங்கக் கூடாது என்ற பிரசாரம் நாட்டில் நடந்து வருகிறது. இது ஓர் அபாயமான நிலையை உருவாக்குகின்ற நிலையை எட்டி இருப்பதால் பிரதமரே இது பற்றி கருத்து கூறி இருக்கிறார்.

அப்படி என்றால் வெளிநாட்டுப் பொருட்களான கைத் தொலைப்பேசி போன்ற பொருட்களை இவர்கள் புறக்கணிப்பார்களா என்று லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.

அமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 2

1964-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை பிரேசில் நாட்டில் இராணுவ ஆட்சி. அந்த இடைக் காலத்தில் 1965-ஆம் ஆண்டு காஸ்டெல்லோ பிரங்கோ (Castelo Branco) என்பவர் பிரேசிலின் அதிபராகப் பதவிக்கு வந்தார். இவர் ஓர் இராணுவச் சர்வதிகாரி. 



இருபது ஆண்டு காலத்திற்கு பிரேசில் நாடு இராணுவ இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டது. இராணுவம் ஒரு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டால் அந்த நாடு வழக்க நிலைக்குத் திரும்பி வருவது மிகச் சிரமம். நீண்ட நாட்கள் பிடிக்கும்.

மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகள் நல்ல எடுத்துக்காட்டுகள்.

நல்ல வேளை. இங்கே இந்தப் பக்கம் அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் இராணுவத்திற்கே சவால் விடும் அரசியல்வாதிகள் சிலர் இருந்தார்கள். மன்னிக்கவும். இன்னும் இருக்கிறார்கள். வம்சாவளி இரத்தத்தையே வற்றல் போடும் மனிதர்கள். மனித நேயத்திற்கு மரியாதை தெரியாத மனிதர்கள். மலேசிய இந்தியர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத மகா மனிதர்கள். நல்லா இருக்கட்டும். நம் கதைக்கு வருவோம்.




1965-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் காட்டு அழிப்புக்கு எதிராக ஒரு புது மாதிரியான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதாவது அமேசான் காடுகளில் விவசாயிகள் நிலங்களை வாங்கலாம் விற்கலாம். பிரச்சினை இல்லை.

ஆனால் வாங்கிய நிலத்தில் 20 விழுக்காட்டு நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். மிச்சம் 80 விழுக்காடு காடாகவே இருக்க வேண்டும்.

இந்தச் சட்டம் பழங்குடி மக்களைப் பாதிக்கவே செய்தது. அமேசான் காடுகள் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம். அவர்களின் சொர்க்க லோகம். சொர்க்க பூமி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமேசான் காடுகளை ஆட்சி செய்தவர்கள். 




அமேசான் காட்டில் எங்கேயோ ஒரு பகுதியில் 1000 ஏக்கரைச் சுற்றி வளைத்து நெருப்பு வைத்து கொளுத்தினால் என்னவாகும். சொல்லுங்கள்.

ஓர் ஆள் இரண்டு ஆள் என்றால் பரவாயில்லைங்க. ஆயிரம் இரண்டாயிரம் பேர் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தால் எப்படிங்க.

நிச்சயமாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கவே செய்யும். அவர்களின் பிழைப்பு அங்கே தானே இருக்கிறது. பாவம் அவர்கள். என்னதான் செய்வார்கள்.

20 விழுக்காட்டு நிலத்தில் பயிர் செய்யலாம் என்பது சட்டம். ஆனால் காடுகளை அழிப்பது 50 விழுக்காடாக மாறியது. எல்லாம் திருட்டுத் தனமான வேளாண்மைகள்; கள்ளத் தனமான கால்நடை வளர்ப்புகள். காடு அழிக்கும் பின்னணியில் இராணுவம் கண் சிமிட்டி காசு வாங்கிக் கொண்டு இருந்தது.




அமேசான் காடு ஏன் எரிகிறது என்பதை வரலாற்றுப் பார்வையில் பார்க்கிறோம். அதனால் தான் இந்தப் பீடிகை.

இராணுவத்தின் சர்வாதிகார ஆட்சி 1988-ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம். அமேசான் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நில உரிமைகள் மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப் பட்டன.

நிலைமை இப்படி இருக்கையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொல்சோனாரோ அதிபர்  பதவிக்கு வந்தார் . 




’இவ்வளவு இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு இருக்கிறோம். யாரோ ஒரு சில பூர்வகுடி மக்கள் எதிர்க்கிறார்கள். அதற்காக அவற்றை வீணாக்கி விடலாமா’. அப்படி சொன்னவர் பிரேசில் அதிபர் பொல்சோனாரோ.

(The Washington Post reported that Bolsonaro had recommended exploiting the country’s natural resources by tapping into the Amazon basin. Brazil should not sit on its natural reserves because a handful of Indians want to conserve it)

சுரண்டல் மீண்டும் தலைதூக்கியது. அமேசான் காடுகளை அழிப்பதே பொல்சோனேரோவின் தலையாயத் திட்டம். உலகத்திற்கே தெரிந்து விட்டது.

பொல்சோனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு காடுகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.




காட்டுத் தீயை அணைப்பதற்கு எங்களிடம் போதுமான சக்தி இல்லை என்று அதிபர் பொல்சோனேரோ ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அமேசான் மீது எங்களுக்கு நிச்சயமாக அக்கறை இருக்கிறது. நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அமேசானைக் காப்பாற்றுவோம் என்று வெளி உலகத்திற்கு வீணை வாசிக்கிறார்.

அதே சமயத்தில் தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட அரசு சாரா இயக்கங்களின்  சதி வேலை தான் இது என்றும் சுதியும் சேர்க்கிறார். 

அப்படிச் சொல்கிறவர் இந்தப் பக்கம் விவசாயிகளிடம் '‘புடிச்சி கொளுத்துங்கடா’ என்று உசுப்பியும் விடுகிறார்.

இதுதாங்க அங்கே பிரேசில் நாட்டில் நடக்கும் கூத்து. தொட்டிலை ஆட்டிக் கொண்டே பிள்ளையைக் கிள்ளி விடும் கலையில் அதிபர் பொல்சோனேரோ நன்றாகவே பேர் போட்டுக் கொண்டு வருகிறார். 




உண்மையில் விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இந்தக் காட்டுத் தீ நிகழ்ச்சிகளுக்கு காரணம். சிறிய பகுதிகளைக் கைவசப் படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கு அடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் பிரேசில் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடவேண்டாம் என்று அதிபர் பொல்சோனேரோ உலகத் தலைவர்களுக்குச் சவால் விட்டார்.

அனைத்துலக அளவில் பொல்சோனேரோவிற்குப் பெரும் அழுத்தங்கள் வந்தன. வேறுவழி இல்லாமல் இப்போது இராணுவப் படைகளை அனுப்பி இருக்கிறார். ஏற்கனவே அவர் சொன்னதை நினைவு கூர்வோம். ‘எங்களிடம் 40 தீயணைப்பு வீரர்கள் தான் இருக்கிறார்கள். அதனால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று சொன்னார். 




பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு இறங்கி வந்து விட்டது. நல்லதுக்குத் தான். இப்போது மனிதர் அடங்கிப் போய் இருக்கிறார்.

அதிபர் பொல்சோனேரோ இறங்கி வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மேக்ரான். சிரம் தாழ்த்துவோம்.

`2019 ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த G20 மாநாட்டில் பொல்சோனேரோ என்னிடம் பொய் சொல்லி இருக்கிறார்’ என பொல்சோனேரோவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கடுமையாகத் திட்டி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ``நம்முடைய வீடு எரிகிறது, நாம் விரைந்து செயல்பட வேண்டும்" என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஒரு ட்வீட் செய்தியைப் பகிர்ந்து இருந்தார். அதற்கு ``இது காலனித்துவ மனப்பான்மையின் எடுத்துக்காட்டு" என பொல்சோனேரோ பதில் கொடுத்து இருந்தார்.

அப்புறம் என்ன. பிரான்ஸ் அதிபருக்கு மணி அடித்து விட்டது. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஐரோப்பிய யூனியனுடன் பிரேசிலுக்கு இருக்கும் வர்த்தகத் தொடர்புகளைத் தூண்டித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்தார். 




பிரேசில் நாட்டில் இருந்து வரும் மாட்டிறைச்சி இறக்குமதியைத் தடுக்கத் திட்டம் போடப் பட்டது. இதற்கு அயர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆடிப் போன பொல்சோனேரோ இராணுவத்தை அனுப்பி காட்டுத் தீயை அணைப்பதில் இப்போது தீவிரம் காட்டி வருகிறார். சற்றே மகிழ்ச்சி. என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அமேசான் காடுகளைப் பற்றி மேலும் சில தகவல்கள். அமேசான் காடுகள் ரொம்பவும் ஆபத்தானவை. காடுகளுக்குள் மாட்டிக் கொண்டால் எளிதாகத் திரும்பி வர முடியாது. அங்கு உயிர் வாழும் விலங்குகள்; காட்டின் இயற்கை அமைப்புகள்; இருட்டான சூழ்நிலைகள் தான் காரணம்.

மழை பெய்தால் அந்த மழை நீர் தரையை வந்து தொடுவதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும் என்றால் அமேசான் காட்டு மரங்களின் அடர்த்தியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அமேசான் ஆற்றின் நீளம் 6,992 கிலோ மீட்டர்கள். 5 கோடி 50 இலட்சம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. 1,100 துணை ஆறுகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு கடலில் வந்து கலக்கிறது.

மலேசியர்கள் மூன்று வருடங்கள் பயன்படுத்தும் தண்ணீரை அமேசான் நதி ஒரே நாளில் கொண்டு போய் அட்லாண்டிக் பெருங்கடலில் கொட்டுகிறது. அதைப் படித்து அடியேன் ஆடிப் போய் விட்டேன். உங்களுக்கு எப்படி?




இந்தக் காடுகளில் 3,000 வகை மீன்கள்; 1,500 வகை பறவைகள்; 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள்; 200 விதமான கொசுக்கள் உள்ளன. உலகில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் காடுகளில் தான் வாழ்கின்றன.

20 ஆயிரம் ஆண்டுகளாகப் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 170 வகையான மொழிகள் பேசுகின்றார்கள்.

எப்பேர்ப்பட்ட  கொடிய நோய்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தப் பழங்குடி மக்களிடம் உள்ளது. ஆனால் ஜலதோஷம் எனும் தடிமன் நீர்க்கோப்பை எதிர்க்கும் திறன் மட்டும் இவர்களிடம் இல்லை என்பது தான் பெரும் அதிர்ச்சியான தகவல்.

ஜலதோஷம் வந்தால் இவர்கள் இறந்து விடுவார்கள் என்பது தான் மிகவும் வேதனையான செய்தி.

விலங்குகளை வேட்டையாடிப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். சமைப்பது என்றால் என்ன என்று கேட்கிறார்கள்.

’ருசிக்க ரசிக்க’; ‘சமைக்கலாம் வாங்க’; ‘பாட்டி சமையல்’; ’தாத்தா சமையல்’; போன்ற நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் அங்கே போய் சமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் என்ன...

இவர்களையும் பிடித்துக் கடித்து பச்சையாகச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள். அப்புறம் ’பசிக்க புசிக்க’ என்று புதிதாய் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டி வரலாம். எதற்கும் வீட்டில் சொல்லிவிட்டு போனால் நல்லது.

(முற்றும்)

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/