14 செப்டம்பர் 2019

பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில்

1985-ஆம் ஆண்டு செங் ஹோவின் 580-ஆம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு சீனா அரசாங்கம் செங் ஹோவிற்காகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு செய்தது. அந்த அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் படம் காட்சிப் படுத்தப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி தரும் செய்தி.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா. 1402-ஆம் ஆண்டில் இருந்து 1414-ஆம் ஆண்டு வரை மலாக்காவை ஆட்சி செய்தவர். இவருக்கும் சீனாவுக்கும் நெருங்கிய அரச தந்திர உறவுகள் இருந்தன.

பரமேஸ்வரா காலத்தில் சீனாவின் கடல்படை தளபதி செங் ஹோ (Zheng He) மலாக்காவிற்கு மூன்று முறைகள் வந்து இருக்கிறார்.

(Images of four stamps printed by photo gravure, and issued by China (PRC) on July 11, 1985 to commemorate the 580th anniversary of Zheng He's sea expeditions, Scott Nos. 1992-95.)

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் துணையாக இருந்து இருக்கிறார்கள்.

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்கு முதல்முறையாகச் சென்று இருக்கிறார்.

யோங் லே (Yongle Emperor) மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் பரமேஸ்வரா (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/…/art…/SIP_1540_2009-07-06.html)

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டி மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரச் சின்னமாகச் சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப் பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது.

அதன் பின்னர் மலாக்கா ஒரு சிற்றரசு எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411. [1]

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள்.

ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள். [2]

ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.

சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன.

சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது.

சீன நாட்டு அரச தந்திர உறவுகளில் பரமேஸ்வரா காட்டிய அணுக்கத்தின் காரணமாக செங் ஹோ அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

பரமேஸ்வரா வரலாற்று ஆய்வு நூலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

மேல் விவரங்களுக்கு:

https://ksmuthukrishnan.blogspot.com/20…/…/blog-post_38.html

சான்றுகள்:

1. http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786

2. Ming Shilu known as the Veritable Records of the Ming dynasty - http://www.epress.nus.edu.sg/msl/introduction

No photo description available.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Kalai Selvam நன்றி ஐயா. பல முக்கிய செய்திகளை எங்களுக்கு தருகிறீர்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். நம் சமூகத்தின் பெருமையை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்குமே. உதவீர்களாக ஐயா. 



Kumar Murugiah Kumar's Arumai aiyya, thodaruttum unggal pani !



Khavi Khavi அற்புதமான சரித்திர தகவல் ஐயா, நன்றி



Kumaravel Muthu Goundan தமிழனின் பெருமையைப் பறை சாட்டும் அரிய தகவல். நன்றி அய்யா🙏


பாரதி கண்ணம்மா இது வரை அறியாத அற்புதமான தகவல்கள். நன்றி சார்.


Arjunan Arjunankannaya அருமை ஐயா.மறைக்கபட்ட உண்மைகள்.


Raghavan Raman அருமையான தகவல. நன்றி ஐயா.





மூடப் பட்ட கதவு

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. அது இயற்கையின் நியதி. ஆனால் நாம் மூடப்பட்ட கதவை மட்டுமே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம். இது் மனிதப் பலகீனம்.


மூடப் பட்ட கதவு மூடப் பட்டதாக இருக்கட்டும். திறக்கும் கதவுக்குள் சென்று பார்ப்போம். நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். நல்லதை மட்டும் ஏற்றுக் கொள்வோம். நலமாய்ப் பயணிக்கக் கற்றுக் கொள்வோம்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Doraisamy Lakshamanan ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்கள், தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தன் பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் தொகை உயர வேண்டுமானால், இன்று தமிழ்ப் பள்ளிகளில் இருந்து இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவியர்களை பல்கலைக்கழகம் கல்லூரி வரை படிக்க வைப்பதை மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய திராவிடர் இயக்கங்களின் தோற்றுநர்களின் தொலை நோக்குச் சிந்தனையை நிறைவேற்ற எப்போதும் முன்வந்து ஏற்றுக் கொண்ட செயல் திட்டங்களை நிறைவேற்றுவோம்!

தமிழ்மொழி வளரவும் திருக்குறள் நமது வாழ்வியலாகத் தொடரவும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்குவதற்கு ஒவ்வொரு கிளையும் பங்கேற்க வேண்டுகிறேன்!


Doraisamy Lakshamanan மலேசியாவில் பதிவு பெற்றுள்ள இயக்கங்கள் அனைத்தும் தமிழ்ப்பள்ளி மாணவர் மாணவியர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களுக்கு ஏற்ற துறைகளில் பட்டதாரிகளாக உருவாக்குவதே தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றுவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாகும்!


Guna Shan தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் ஒருவர். தட்டிக் கொண்டே இருப்போம். நல்ல வாசல் என்றால் உள்ளே புகுந்து விடுவோம்.. அருமை நண்பரே


Muthukrishnan Ipoh ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு நமக்குத் தெரியாமல் திறக்கப்படும்... அந்தக் கதவு எது என்பதை நாம் தான் உறுதிபடுத்த வேண்டும்...

Manickam Nadeson எங்க வீட்ல கதவே இல்லீங்க ஐயா சார், வெறும் சன்னல் தான்.

Muthukrishnan Ipoh கதவு இல்லாத வீட்டில்... சன்னல் இருக்காதே... சன்னல் இருக்கும் வீட்டில் கதவுகள் கண்டிப்பாக இருக்கும் சார்...


Manickam Nadeson கணினியின் windows பத்தி சொன்னேன்


Muthukrishnan Ipoh Manickam Nadeson உங்ககிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது


Manickam Nadeson உங்க கிட்ட மட்டும் தான் இந்த தமாசு. அம்புட்டு நல்லவர் நீங்க...








13 செப்டம்பர் 2019

ம.இ.கா. – ம.சீ.ச. கொடிகள் எங்கே?

(தமிழ் மலர் - 13.09.2019)

அம்னோவும் பாஸ் கட்சியும் நாளை சனிக்கிழமை ஒரே கூட்டணியாக இணைகின்ற நிகழ்ச்சி. அம்னோ தலைமையகத்தில் நேற்று முதன் முறையாக பாஸ் கட்சியின் அந்தப் பச்சைக் கொடி அம்னோ கொடிக்கு மேலே பறந்தது.

பாரம்பரிய கிரிஸ் கத்தியைக் கொண்ட அம்னோ கொடியும் பாஸ் கொடிகளும் முதன் முறையாக ஒன்றாகப் பறக்கின்றன. 


நீண்ட நாட்களாக அம்னோவுடன் தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளாக இருந்த பல தேர்தல்களில்  ஒன்றாகப் பயணித்த ம.சீ.ச. – ம.இ.கா.வின் கொடிகள் கூட அம்னோ தலைமையக கட்டடத்தில் இதுவரை பறந்ததாகச் சரித்திரம் இல்லை.

அம்னோ தலைமையகத்தில் ம.இ.கா.வின் தேசிய மாநாடுகள் நடைபெறும் பொழுது கூட ம.இ.கா.வின் கொடி கட்டத்தைச் சுற்றிதான் பறக்க விடப்படும். புதிய இணைப்பான பாஸ் கட்சியின் கொடி அம்னோ கட்டடத்தின் உச்சியிலே பறக்கின்றது.

இந்த இரு கட்சி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அம்னோவின் சார்பில் அமாட் ஸாஹிட் ஹமிடியும் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் கையெழுத்திட இருக்கிறார்கள்.

புத்ரா வாணிப மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தப் பேரணி ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான நிகழ்ச்சி அல்ல. அனைவரும் பங்கு பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ம.இ.கா. – ம.சீ.ச. கட்சிகளும் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் ம.இ.கா. – ம.சீ.ச. ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

அம்னோ கட்டடத்தின் உச்சியில் நாளை உதிக்கப் போகும் கூட்டணி கட்சியான பாஸ் கட்சியின் கொடி கம்பீரமாக பறக்கின்ற வேளையில்...

பாரிசான் நேசனல் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பங்காளிக் கட்சிகளான ம.இ.கா. – ம.சீ.ச. கட்சிகளின் கொடி அதற்கு ஈடாக பறக்க விடப்படவில்லை என்பது...

தேசிய முன்னணியில் இந்த இரு கட்சிகளின் இன்றைய நிலையை வெளிப் படுத்துகிறது.

ஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை

(தமிழ் மலர் - 12.09.2019)

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸக்கீர் நாயக் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் நேற்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி; இருவரிடமும் புக்கிட் அமான் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நேற்று காலை 9.20 மணி அளவில் துணை முதல்வரின் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் பிற்பகல் 1.15 மணி வரை விசாரணை செய்தனர்.


அதே போல சதீஷ் முனியாண்டியிடம் காலை 9.40 மணியில் இருந்து பிற்பகல் 12.30 மணி வரை விசாரணை செய்தனர்.  

அதன் பின்னர் பேசிய பேராசிரியர் இராமசாமி ‘என்னைப் பொறுத்த வரையில் ஸக்கீர் நாயக்கிடம் தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் கிடையாது. அவர் மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் அவமதித்துப் பேசினார். அவர் ஒரு நாட்டால் தேடப்படும் நபர். இங்கு ஒரு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தில் இருக்கிறார்.

மலேசிய இந்தியர்களை இந்த நாட்டிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் என்கிறார். சீனர்கள் நாட்டை விட்டுப் போக வேண்டும் என்கிறார். இது மக்களின் மனங்களைப் புண்படச் செய்து உள்ளது.

இன்னும் புக்கிட் அமான் அழைத்தால்கூட அங்கு சென்று வாக்குமூலம் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் எங்கும் ஓடிவிட மாட்டேன். ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். புக்கிட் அமானில் இருந்து வந்த இரண்டு இந்திய அதிகாரிகள் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.

இதற்கிடையில் சதீஷ் முனியாண்டி பேசுகையில் ‘நான் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் காவல் துறையினருக்கு முழுமையான ஆதரவு வழங்கினேன். மலேசிய இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்ப ஸக்கீர் நாயக்கிற்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

10 செப்டம்பர் 2019

பாஸ் கட்சி பிரசாரத்தின் விளைவுகள்

மதங்கள் ஒருவரை ஒருவர்
புறக்கணிக்கக் கற்பிக்கவில்லை

வெறுக்கவும் கற்பிக்கவில்லை

பல்லின மக்களின் நல்லிணக்கத்தில் மெல்லினம் பேசிய நாடு. இன சமயப் புரிந்துணர்வுகளில் வல்லினம் பேசிய நாடு.

பல்லின ஒற்றுமையில் இடையினம் பேசிய நாடு. உலக ஐக்கியத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நாடு. பன்னெடும் காலமாகப் பார் புகழும் அழகிய நாடு. நம் மலேசிய நாடு. ஒரு புண்ணியமான நாடு. கை கூப்புகிறோம்.




அந்த ஐக்கியத்திற்கும் அந்த ஒற்றுமைக்கும் அந்த நல்லிணக்கத்திற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலேசியர்கள் அனைவரின் ஒருமித்தக் கடமை. ஒருமித்தப் பொறுப்பு.

அண்மைய காலமாக ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். உண்மையிலேயே அது ஓர் ஆரோக்கியமற்ற பிரசாரம்.

இனத்தையும் சமயத்தையும் முன் வைத்து பொருட்களைப் புறக்கணிப்புச் செய்வது என்பது நல்ல செயல் அல்ல. அது ஒரு சரியான நிலைப்பாடும் அல்ல. 




முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பது என்பது தவறான பிரசாரம். தவிர்க்க வேண்டிய பிரசாரம்.

அந்த மாதிரியான பிரசாரம் பல இன சமூக அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தலாம். பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

அந்தப் பிரசாரத்தைப் பிரதமர் துன் மகாதீர் கண்டித்து இருக்கிறார்; நிதியமைச்சர் லிம் குவான் எங் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். துணைப் பிரதமர் வான் அசீஸா அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பற்பல அமைப்புகளும் பல்வகையான வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றன.



தமிழ் மலர் - 10.09.2019

எனினும் பாஸ் கட்சி பின்வாங்கவில்லை. அதனை ஆதரித்துச் செயல்பட்டு வருகிறது. வருத்தம் அளிக்கும் செயல்பாடு.

இந்த ஆண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் போது பலரிடம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனச் சோர்வுகள் இருக்கவே செய்தன. அதற்குக் காரணம் அரசியல் பின்னணி கொண்ட குழுக்களால் தூண்டப்பட்ட பதற்றங்கள் தான்.

இனத்திற்கும் சமயத்திற்கும் சவால் விடுக்கப் படுகின்றன எனும் கருத்தை ஊக்குவிக்க அந்தக் குழுக்களால் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதனால் ஏற்பட்ட பின்னடைவுகள்.




இருப்பினும் அரசியல் அதிகாரத்தின் இனச் சமன்பாடு மாறவில்லை. அந்த அதிகாரத்தின் நங்கூரத்திலும் மாற்றம் இல்லை. அனைவரும் அறிந்த விசயம். அதில் மாற்றுக் கருத்துகள் எவருக்கும் இல்லை.

இப்போதைய புதிய அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. இருப்பினும் ஒரு வகையான அச்சத்துடன் தான் இன்னமும் பயணிக்கின்றனர். அனைத்து  மலேசியர்களுக்கும் பாதுகாவலராக இருக்கிறோம் என்பதை உறுதி படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர்.

எதிர்க் கட்சியில் இருப்பது எளிதான விசயம். ஆனால் மலேசியாவைப் போன்ற ஒரு பன்முக அரசாங்கத்தில் ஆளும் கட்சியாய்ப் பேர் போடுவது என்பது எளிதான விசயம் அல்ல. ரொம்பவும் கஷ்டம். இதை இன்றைய அமைச்சர்கள் இப்போது காலம் தாழ்ந்து உணரத் தொடங்கி உள்ளார்கள். மகிழ்ச்சி.




இருந்தாலும் அப்படி ஒன்றும் தலை போகிற நிலைமை ஏற்பட்டு விடவில்லை. மலேசியா ஒரு நடுத்தர வர்க்க நாடு.

பெரும்பாலான மக்கள் நடுநிலையானவர்கள். அதே சமயத்தில் அறிவார்ந்தவர்கள். விவேகமானவர்கள். என்னையும் உங்களையும் எல்லோரையும் சேர்த்துத் தான். சரி.

மக்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கான வசதிகள் குறையும் போது; அதாவது பண வசதிகள் குறையும் போது மக்களின் பொறுமையும் குறையத் தொடங்குகிறது. அங்கே ஒருவித பதற்றம்; ஒருவித நெருடல். சன்னமாய்த் துளிர் விடுகிறது.

அந்த மாதிரியான சமயங்களில் தான் அவர்களின் உணர்வுகளில் பலவிதமான சுரண்டல்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்த எளிதாகி விடுகிறது. இங்கே இருந்து தான் பாமர மக்களிடம் சில அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளும் தொடங்குகின்றன. 



தமிழ் மலர் - 10.09.2019

உளவியல் அணுகுமுறைகளைச் சாமானிய மக்களிடம் இலகுவாகக் கொண்டு போய்ச் சேர்க்கவும் முடிகிறது. ஆங்கிலத்தில் ‘சைக்கலோஜிக்கல் அப்ரோஜ்’ என்று சொல்வார்கள்.

அந்த அணுகுமுறைகள் சமூக ஊடகங்களில் வழியாகவும் பெரிதாகி விடுகின்றன. அதனால் தான் நமக்கே தெரியாதவர்களிடம் இருந்து வரும் தவறான செய்திகளை நம்பி விடுகிறோம். தவறான கருத்துகளினால் ஈர்க்கப் படுக்கிறோம்.

அந்த அணுகுமுறைகளில் ஒன்றுதான் பாஸ் கட்சியின் அண்மைய பிரசாரம். முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம். 




ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் முன்னர் அந்தப் பிரசாரம் ஏற்படுத்தப் போகும் பின்விளைவுகளை நன்கு பரிசீலக்க வேண்டும். நன்மைகள் அதிகமா அல்லது தீமைகள் அதிகமா என்பதையும் கண்டு அறிய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு பிரசாரத்தைத் தொடங்கிவிடக் கூடாது.

வணிகம் தொடர்பான பிரசாரத்தைத் தொடங்குபவர்கள் உலக வாணிகம் எப்படி செயல் படுகிறது என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியப் பொருளாதாரம் அந்நிய நேரடி முதலீட்டைச் சார்ந்து உள்ளது. தவிர கணினி மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத் துறையையும் சார்ந்து உள்ளது. 



Deputy Prime Minister Datuk Seri Dr Wan Azizah Wan Ismail
has called upon Malaysians to support the campaign to buy Malaysian products


நம் நாடு  உலகின் பல நாடுகளின் தொழில்நுட்பத் துறையை சார்ந்து உள்ளது. அதில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளின் தயாரிப்புகளும் உள்ளடங்கும்.

உலகில் பல நாடுகள் ஹலால் பொருட்களைத் தயாரிக்கின்றன. அந்த வகையில் முஸ்லீம் நாடுகள் தயாரித்த பொருட்களை மட்டும் வாங்குங்கள் எனும் பிரசாரம் தொடருமானால் உள்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் வியாபாரம் பாதிக்கப் படலாம்.

அவர்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைமையும் ஏற்படலாம். அதனால் தொழிலாளர்கள் பலர்  பணிநீக்கம் செய்யப் படலாம். இவற்றை எல்லாம் பாஸ் கட்சி கவனத்தில் கொண்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக அமைகின்றது.



PAS secretary-general Datuk Takiyuddin Hassan
defending the “buy Muslim products first”


மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமட் கவுஸ் நசுருதீன். அவரும் அந்நிய நேரடி முதலீட்டைத் தான் முதன்மைப் படுத்துகின்றார். பாஸ் கட்சி முன்னெடுக்கும் பிரசாரம் மிகவும் குறுகிய பார்வையில் அமைந்து உள்ளது என்கிறார்.

பாஸ் கட்சியின் இந்தப் பிரசாரம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது என்பதை நன்றாகவே உணர முடிகின்றது. பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இப்படிப்பட்ட பிரசாரம் தேவை இல்லை என்பதே நம் கருத்து.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு பன்முகச் சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

மதங்கள் ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக் கற்பிக்கவில்லை. அல்லது வெறுக்கவும் கற்பிக்கவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துப் பழகுவதையே ஆதரிக்கின்றன.




ஒரே வார்த்தையில் சொன்னால்... முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற அழைப்பு எந்த ஒரு தரப்பினருக்கும் பயன் அளிக்காது. தோல்வியில் தான் போய் முடியும்.

பாஸ் கட்சி முன்னெடுத்து இருக்கும் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கம் என்பது எந்தச் சூழ்நிலையையும் செம்மைப் படுத்த உதவாது. மாறாக மற்றவர்களின் கோபத்திற்குத் தான் உள்ளாகும்.

தீய எண்ணங்கள் கொண்டவர்களின் மூலமாக இந்த நாடும் இந்த நாட்டு மக்களும்  தோற்கடிக்கப் படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படக் கூடாது.

இன்னும் ஒரு விசயம். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முஸ்லீம் அல்லாதவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கமாறு அழைப்பு விடுத்து உள்ளன.

அந்த வகையில் பார்த்தால் வெளிநாட்டு தயாரிப்புகளில் குறிப்பாக கைத் தொலைபேசிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். மடிக் கணினிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். தொலைக்காட்சிப் பெட்டிகளைப் புறக்கணிக்க வேண்டி வரும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது பல விமானச் சேவைகளையும் புறக்கணிக்க வேண்டி வரும். 




இவற்றை எல்லாம் பாஸ் கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும். நினைவில் கொள்வார்களா?

நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம். முயற்சிகள் பல செய்து வருகிறோம். அரசியல் லாபத்திற்காக பல்லினச் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படுத்துவது நல்ல ஆரோக்கியமான செயலாக அமையாது. தீமையான விளைவுகளையே கொண்டு வரும்.

நாட்டின் நல்லிணத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஆரோக்கியமற்ற அந்தப் பிரசாரத்தைப் பாஸ் கட்சி கைவிட வேண்டும். அதுவே நம்முடைய எதிர்பார்ப்பு. அதுவே மலேசிய இந்தியர்களின் சார்பில் நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்.