22 செப்டம்பர் 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 2

புகைமூட்டம் நாட்டையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுகிறார்கள். ஆளாளுக்கு முகங்களை மூடிக் கொண்டு போகிறார்கள் வருகிறார்கள். முன்னுக்குப் போகிற வாகனம் முழுசாகத் தெரியாமல் முன்னுக்கும் பின்னுக்கும் இடித்துக் கொள்கிறார்கள். இப்படி இருக்கும் போது அதைப் பற்றி எழுதாமல் வேறு எதையோ எழுதுவதாகத் தவறாகக் கணிக்க வேண்டாம்.


இரு நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நீயா நானா போட்டியில் களம் இறங்கி இருக்கின்றன. அதுதான் உண்மை. ஒரு பக்கம் பூனை சின்னதாய் குட்டி போடுகிறது. இன்னொரு பக்கம் யானை பெரிதாய்ச் சாணம் போடுகிறது.

இதில் ஒரு நாட்டைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் ஜிங்கு ஜிக்கான் நாடகங்களுக்கு சபாஷ் போடலாம். திருடனை வீட்டிலேயே வைத்துக் கொண்டு அடுத்த வீட்டில் நுழைந்த திருடனைப் பற்றி விமர்சனம் செய்வது சரியாக இல்லை. அதுவே என் கருத்து.


அதனால் தான் புகை மூட்டக் கோளாறு புகையோடு இருக்கட்டும் என்று கோலார் தங்க வயலுக்குப் போய் இருக்கிறேன். ஏன் என்றால் கோலார் தங்க வயலில் கோளாறுகள் இல்லை. சரிங்களா.

தங்க வயல், தங்கச் சுரங்கம், தங்கச் சுரங்கப் பாதை, தங்கச் சுரங்க வெடிப்பு, தங்கச் சுரங்க இடிபாடு. இவை எல்லாம் தங்கம் தொடர்பான தங்கமான சொற்கள். இதில் தங்கம் எனும் சொல் மட்டும் சாமானிய வாழ்க்கையிலும் மிக மிகச் சாதாரணமாகி விட்ட சொல். 



நகைக் கடைக்குப் போகிறார்கள். நகைகளைப் பார்க்கிறார்கள். விருப்பப்படும் நகைகளை வாங்கிக் கொள்கிறார்கள். தங்கத்திற்கு தங்கமே என்கிறார்கள். இருக்கிற நகைகளை எல்லாம் அள்ளிப் போட்டு கல்யாணம் காட்சிக்குப் போகிறார்கள். என்னையும் பார் என் நகைகளையும் பார் என்று அழகு காட்டுகிறார்கள். சந்தோஷம்.

ஆனால் அந்த நகைகளின் பின் அணியில் எப்பேர்ப்பட்ட கனமான துயரங்கள் தேங்கி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட இறுக்கமான வேதனைகள் தொக்கி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட  ஆபத்தான விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. எத்தனைப் பேருக்குத் தெரியும். பலருக்கும் தெரியாத உண்மைகள்.

ஒரு கிராம் தங்கம் எடுப்பதற்குப் பற்பல சோதனைகள். பற்பல போராட்டங்கள். இதில் அமில திரவங்களின் பாதிப்புகள் (acidic mine water); கரிய மோனாக்சைடு (Carbon Monoxide) காற்றின் அழுத்தங்கள்; கொடும் விஷம் கொண்ட சுரங்கப் பாம்புகள் (Pseudelaphe flavirufa); வெளியே வந்தால் கேங்ஸ்டர் பிரச்னைகள். இவை எல்லாம் அங்கே அன்றாடம் நடந்த அந்தாதிகள். 




இரண்டு மைல் ஆழத்தில் இருக்கும் ஒரு சுரங்கப் பாதைக்குள் தொழிலாளர்கள் எப்படி இறங்குகிறார்கள். எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள். என்னவெல்லாம் நடக்கும். அதைப் பற்றித் தான் இனி தெரிந்து கொள்ளப் போகிறோம். அதற்கு முன்னர் கோலார் தங்க வயலைப் பற்றி மேலும் சில முக்கியமான தகவல்கள்.

கோலார் தங்க வயல்களை கே.ஜி.எப். (கோலார் கோல்ட் பீல்ட்) என்று அழைக்கிறார்கள். இந்த வயல்கள் கர்நாடகா மாநிலத்தில், பெங்களுரு மாநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்தியாவின் மிகப் பழமையான; மிக ஆழமான தங்கச் சுரங்கம்.

கி.மு. 100-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 1000-ஆம் ஆண்டுகள் வரை சோழர்கள் அந்த வயல்களில் தங்கம் எடுத்தார்கள். 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் தங்கம் எடுத்தார்கள். 1850-ஆம் ஆண்டுகளில் மைசூர் அரசர்களும் திப்பு சுல்தானும் தங்கம் எடுத்தார்கள். ரொம்ப ஆழத்திற்குப் போகவில்லை. மேலாகத் தோண்டி எடுத்தார்கள்.




ஆனால் 1980 - 1990-ஆம் ஆண்டுகளில் மிக ஆழத்டிற்குப் போய் விட்டார்கள்.  பூமியின் மேற்பரப்புக்கு கீழே 3 கி.மீ. ஆழத்தில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது. இந்தக் கோலார் தங்கவயல் தவிர, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கங்கள் மட்டுமே உலகில் மிகவும் ஆழமானவை. அந்த வகையில் கோலார் தங்க வயல் உலகிலேயே இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் ஆகும்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜான் டெய்லர் எனும் பிரிட்டிஷ் சுரங்க நிறுவனம் சுரங்கத் தொழிலை ஏற்று நடத்தியது. பின்னர் 1920-ஆம் ஆண்டுகளில் சுரங்கத்திற்குள் மின்சக்தி கொண்டு வரப்பட்டது.

அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதிகள் இல்லாமல் இருந்தன. நினைவில் கொள்வோம். 




மிக ஆழத்தில் சுரங்கங்களைத் தோண்டுவதற்குத் தனித்துவமான உபகரணங்கள் தேவைப் பட்டன. 1940-ஆம் ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய நொறுக்கும் பொறி பயன்படுத்தப் பட்டது.

இந்தச் சுரங்கத் தொழில் 1880-ஆம் ஆண்டு தொடங்கியது. 120 ஆண்டுகள் நீடித்தது. 2001-ஆம் ஆண்டு சுரங்கச் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டன. இருந்தாலும் கோலார் தங்க வயலின் ஆயுசு அப்படி ஒன்றும் எளிதாக முடிவு அடைந்து விடவில்லை. இன்னும் தொடர்கிறது.

2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அந்த வகையில் கோலார் சுரங்கங்கள் மீண்டும் தொடக்கலாம் எனும் தீர்ப்பு.




2016-ஆம் ஆண்டில் மேலும் ஓர் அறிவிப்பு. கோலார் வயல் ஏலம் விடப்படும் என்று நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்தது. அதனால் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். ஒரு காலத்தில் பேய் நகரம் என்று அழைக்கப்பட்ட கோலார் தங்க வயலில் மீண்டும் மின்விளக்குகள் எரியலாம். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. சரி.

சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி சுரங்கத்திற்குள் இறங்கிப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக ஊடகங்களின் நிருபர்கள் கோலார் தங்க வயலுக்குப் பயணம் போய் இருக்கிறார்கள். அங்கே நடக்கும் அவலங்களைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். அவற்றில் இருந்து சில தகவல்கள்ளை பகிர்ந்து கொள்கிறேன்.




பத்து அடி உயரத்திற்கு இரும்புக் கம்பிகளால் ஆன ஒரு மின்தூக்கி (Lift), பூமியின் அடிப் பாகத்தை நோக்கி மெதுவாகக் கீழே இறங்கிச் செல்கிறது. அதில் பத்து பதினைந்து பேர். அவர்களின் முகங்களில் கவலை தோய்ந்த இறுக்கம். உயிரற்ற முக பாவங்கள்.

அவர்களில் எத்தனை பேர் மீண்டும் உயிரோடு திரும்பி வருவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இறங்கினால் பிணம். ஏறினால் பணம். இதுதான் அங்கே அப்போதைக்கு ஒரு சமன்பாடு.

துளைபோடுபவர் (Driller); வெடி வைத்து தகர்ப்பவர் (Blaster); பொது வேலையாள் (General Labor); மேற்பார்வையாளர், வழிகாட்டிகள் என்று பல பிரிவினர் இருக்கிறார்கள்.

மின்தூக்கி பூமிக்கு கீழே செல்லச் செல்ல ஒவ்வொரு 70 அடி ஆழத்திற்கும் ஒரு டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் கூடுகிறது. இந்த வெப்பம் கூடிக் கொண்டே போகும். 




சுரங்கத்தின் உள்ளே 100 அடி ஆழத்தில் நேர்மட்டமாக ஒரு நீண்ட குழி. அதன் அகலம் 15 அடி. இதை ஷாப்ட் (shaft) என்பார்கள்.

அடுத்து ஒவ்வொரு 100 அடிக்கும் கிடைமட்டமாக எதிர் - எதிர் திசைகளில் வேர்கள் போல சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை குடைந்து கொண்டு செல்கிறார்கள். இதை டனல் (tunnel) என்கிறார்கள். அதாவது சுரங்கப் பாதைகள்.

சுரங்கப் பாதைகளின் உள்ளே உலோகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட குட்டி குட்டி வண்டிகள். இவற்றை இழுத்துச் செல்ல இருப்புப் பாதைகள்.

வெட்டி எடுக்கப்பட வேண்டிய உலோகம் எந்தப் பகுதியில் இருக்கிறது. அங்கே எப்படிப் போக வேண்டும். போகும் பாதையில் எந்த எந்த இடங்களில் உலோகம் இருக்கும். அந்த உலோகப் பாறைகளைத் தகர்க்க எத்தனை இடங்களில் வெடி வைக்க வேண்டும். எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டும்.




இதை எல்லாம் ஏற்கனவே வரைபடங்களாக வரைந்து கொடுத்து இருப்பார்கள். கீழே சுரங்கத்திற்குள் இறங்குவதற்கு முன்னால் நில ஆய்வுகள் செய்து இருப்பார்கள். தொழிலாளர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

சுரங்கப் பாதை எங்கே முடிவு அடைந்து இருக்கிறதோ அங்கே இருந்துதான் புதிய வேலைகள் தொடங்கும். சில ஆயிரம் அடி ஆழத்தில் பூமியைக் கிடை மட்டமாக குடைந்து சில தொழிலாளர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏற்கனவே குடையப்பட்ட சுரங்கப் பாதைகளின் மேற்கூரைகளை மரச் சட்டங்கள் தாங்கி நிற்கும்.

சுரங்கப் பாதைகளின் கிளைகளுக்குள் நரம்புப் பின்னல் போல் காற்றுக் குழாய்கள் இருக்கும். காற்றுக் குழாய்களின் வழியாக குளிர் ஊட்டப்பட்ட காற்று அனுப்பப்படும். சுரங்கப் பாதைகளின் முன்பகுதிகளில் மின் விளக்குகளும், தண்ணீர்த் தொட்டியும் இருக்கும்.




நிலத்தின் மேற்பரப்பில் குளிரூட்டி இயந்திரங்களால் குளிர் காற்று உற்பத்தி செய்யப்படும். அந்தக் குளிர்க் காற்று தான் இரும்புக் குழாய்களின் வழியே  சில கிலோமீட்டர்கள் தூரம் வரை கீழே பயணம் செய்கிறது.

இங்கே வெப்ப அளவு சமயங்களில் 160 டிகிரி பாரன்ஹீட். மிக மிகக் கொடுமையான வெப்பம். காற்றுக் குழாய்களின் நெடும் பயணத்தில் காற்றின் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்துப் போகும். அப்படியே ஆவியாக மாறிப் போய் இருக்கும். ஓர் எடுத்துக்காட்டு.

சிங்கப்பூரில் இருந்து பினாங்கிற்கு ஒரு பேருந்து நிற்காமல் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் வெப்பக் காற்று வெளியேற்றியில் (radiator) இருந்து வெளியேறும் நீராவி எப்படி இருக்கும். அங்கே உங்கள் முகத்தைப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு காட்டிப் பாருங்கள். எப்படி இருக்கும்.

அந்த மாதிரியான வெப்பத்தில் தான் சுரங்கக் குழாய்களின் காற்றின் வெப்பமும் இருக்கும். அந்த மாதிரியான வெப்பக் காற்றைத் தான் கீழே சுரங்கங்களில் சுவாசிக்க வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.




சுரங்கத்தின் உள்ளே இருக்கும் மின் விளக்குகள் எப்போதுமே மங்கிய வெளிச்சத்தில் சோக ராகங்களைப் பாடிக் கொண்டு இருக்கும். எப்போதுமே முகாரி ராகங்களின் ஜன்னிய அரோகணங்கள். வேறு எப்படி சொல்வதாம்.

இயற்கையின் அந்தகார வலிமைகளுக்கு முன்னால் அறிவியலின் அதிகாரச் செருக்கு ஒன்றும் செல்லாது. சமயங்களில் தோற்றுப் போகும். மனிதனின் அறிவியல் பெருமைகள் இயற்கையின் பேராண்மையுடன் போட்டிப் போடவே முடியாது.

கண்டிப்பாக அறிவியல் தோற்றுப் போகும். சுரங்கத்திற்குள் மின் தடைகள் ஏற்படலாம். அந்த மாதிரி சமயங்களில் இயற்கையை மிஞ்சி மனிதம் ஒன்றுமே செய்ய முடியாது.

சுரங்கத்திற்குள் சுதந்திரமான காற்று இருக்காது. சுத்தமான வெளிச்சம் இருக்காது. ஓர் அழுத்தமான இருட்டு எப்போதும் படர்ந்து இருக்கும். தலைக்கு மேலே பல இலட்சம் கோடி டன் பாறைகள். எந்த நேரத்திலும் அப்படியே இடிந்து விழலாம். 




வாய் பேச முடியாத பூமிக்கு ஓர் உக்கிரம். தன்னைச் சீண்டியவர்கள் மேல் ஆத்திரம். அதனால் வேறுவழி இல்லாமல் வெப்பமாகக் கொப்பளிக்கிறது.

சுரங்கத்தின் கடைசிக் கோடியில் பூமிக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாக ஒரு பயங்கரப் போர் நடந்து கொண்டே இருக்கும். இடுப்பில் ஒட்டி இருக்கும் ஒரு ஜட்டியைத் தவிர வேறு எதையும் உடலில் போட்டுக் கொள்ள முடியாது. ஏன் அப்படி? நீங்கள் கேட்கலாம். சின்ன ஒரு கற்பனை.

உங்களுடைய உடலின் மேல் தோலையைப் பிய்த்து எடுத்து விட்டு, அதன் மேல் ஓர் எஸ்கிமோ கம்பளியைப் போட்டுப் போர்த்தினால் எப்படி இருக்கும். அந்த நிலைமை தான் அங்கே. அதனால் சட்டை சிலுவார், உள்ளாடை மேலாடை என்று எதையும் போட மாட்டார்கள். அவ்வளவு வெப்பம்.




முகத்திற்குக் முகமூடிக் கவசம்; கால்களுக்குக் காலணிக் கவசம்; கைகளுக்குக் கையுறைகள்; தலைக்கு முக்காட்டு முக்கோணம் என்று எதையும் போட்டுக் கொண்டு வேலை பார்க்க முடியாது. அப்படித்தான் அங்கே கீழே நிலவும் ஓர் எதார்த்தமான உண்மை.

தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் இருக்கிறது. இருந்தும் என்ன செய்வது... பிரயோசனம் இல்லை. அந்தச் சட்டம் பூமிக்கு அடியில் இறங்கிப் போய் வேலை செய்யாது. அந்தச் சட்டம் அந்தச் சுரங்கத்திற்குள் ஒரு வாயில்லாத பூச்சி. அங்கே அதற்கு இரண்டு கண்களும் இல்லை. இரண்டு காதுகளும் இல்லை.

(தொடரும்)




21 செப்டம்பர் 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 1

உலகிலேயே அதிக ஆழமான தங்கச் சுரங்கம். உலகிலேயே அதிகமான சுரங்கப் பாதைகள் சூழ்ந்த தங்கச் சுரங்கம். உலகிலேயே அதிகமான தமிழர்களைப் பலி வாங்கிய தங்கச் சுரங்கம். 


அது மட்டும் அல்ல. உலகிலேயே அதிகமான தமிழர்களை அனாதைகளாக்கி விட்ட சுரங்கம் என்று சொல்கிறார்கள். கோலார் தமிழர்கள் சோகத்தை மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டு வாழக் கற்றுக் கொடுத்த தங்கச் சுரங்கம் என்றும் சொல்கிறார்கள்.

இதையும் தாண்டிய நிலையில் மேலும் ஒரு கருத்து. கர்நாடகாவில் அதிகமான குண்டர் கும்பல்களை உருவாக்கி விட்ட சுரங்கம் என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கோலார் தங்க வயலையும்; குண்டர் கும்பல்களையும் பின்னணியாகக் கொண்டு 2018-ஆம் ஆண்டு கே.ஜி.எப் (KGF – Kolar Gold Fields) எனும் கர்நாடகப் படம் வெளியிடப் பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. படு சூப்பரான பாக்ஸ் ஆபீஸ் வசூல். சரி.



மலாயாவுக்குத் தமிழர்களை இறக்குமதி செய்த அதே அந்த ஆங்கிலேயர்கள் தான் கோலார் தங்க வயலுக்கும் தமிழர்களை இறக்குமதி செய்தார்கள். கடைசியில் கட்டிப் பிடித்து, ஏலோலங்கிடி தில்லாலங்கடி என்று ‘பை பை’ காட்டி விட்டுப் பறந்து விட்டார்கள். மன்னிக்கவும். எப்படியாவது வாழ்ந்து தொலையுங்கள் என்று கம்பி நீட்டி விட்டார்கள். கொஞ்சம் நல்ல வார்த்தையைப் பயன்படுத்துவோமே.

அதற்காக நாம் என்ன இங்கே உளுத்தம் கஞ்சியையும் உப்புமாவையுமா அரைத்துக் கொண்டு இருக்கிறோம். சொல்லுங்கள். வாங்கி வந்த வரம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறோமா. இல்லை கப்பல் கவிழ்ந்து விட்டது என்று கன்னத்தில் கை வைத்து ஒப்பாரி வைக்கிறோமா… இல்லீங்களா. போராடிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறோம். அம்புட்டுத் தான்.

சுரங்கத்தின் மீது பழி போடுவதில் நமக்கு சற்றும் உடன்பாடு இல்லை. எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்? கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வியலில் சுதி சேர்த்த ஒரு தங்கச் சுரங்கம். அதைத் தவறாகப் பேசுவது தப்பு என்பதே நம் கருத்து. தங்கவயல் தமிழர்களைத் தடம் தொலைத்த தமிழர்கள் என்றுதான் என்னால் சொல்ல முடிகிறது. காலத்தின் கட்டாயம். அவர்களின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டு விட்டது.



கோலார் தங்கவயல் அல்லது தங்கச் சுரங்கத்தைப் பற்றி பலர் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். தெரிந்து கொள்ளுங்கள்.

கோலார் தங்கவயல் பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால்... ஒரு காலத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களுக்கு ஓர் அட்சய பாத்திரம். ஆனால் அதுவே இந்தக் காலத்தில் ஓர் அனாதை ரட்சகம். மன்னிக்கவும்.

கோலார் தங்கச் சுரங்கத்தின் வரலாறு நீண்டு நெடிந்து போகிறது. உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒடிந்தும் போகிறது.

மினுமினுக்கும் இந்தச் சுரங்கம் இந்தியாவின் வரலாற்றில் தனிப் பெரும் தத்துவம் பெற்ற தங்கச் சுலோகம் தான். உண்மை அதுதான்.



மலேசியத் தமிழர்கள் இந்தப் பக்கம் எப்படி அவதிப் படுகிறார்களோ; அதே மாதிரி தான்... அங்கேயும் கோலார் தமிழர்களும் கோலாருக்குப் போய் அவதிப் படுகிறார்கள். மலேசிய இந்தியர்களை விட மேலும் மோசமாக அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடக அரசின் கெடுபிடிகளில் சிக்கித் தவித்துக் கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

கோலார் தங்க வயல்களைத் திறந்த போது கர்நாடகா மக்கள் வேலை செய்ய தயங்கினார்கள். கஷ்டமான வேலை; உயிருக்கு ஆபத்தான வேலை என்று மறுத்தார்கள். மழுப்பினார்கள்.

சுரங்கத்திற்குள் காற்றுச் சேட்டைகள் அதிகமாம். கன்னா பின்னா என்று உரசிக் கொண்டு போகுமாம். காட்டுச் சேட்டைகள் எகிறிப் பாய்ந்து கழுத்தைக் கிழித்து இரத்தம் குடிக்குமாம்; சுவடு இல்லாமல் சுரங்கச் சுவரில் அடித்தே சாகடித்து விடுமாம். இப்படிச் சொல்லிச் சொல்லியே பலரையும் போக விடாமல் செய்து விட்டார்கள்.

இதற்கு மாற்று வழியாகத் தான் தமிழகத்தில் இருந்து தமிழர்களைக் கொண்டு வந்தார்கள். அப்போதைய ஆங்கிலேயர்களின் சாணக்கியத்தின் பரிபாலனச் சேவையின் முதல் கட்டம். 



ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழகத்தின் தர்மபுரி; கிருஷ்ணகிரி; சேலம்; வட ஆற்காடு; தென் ஆற்காடு, சித்தூர், மதனப்பள்ளி, அனந்தப்பூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் குறைந்த அளவு தெலுங்கு வம்சாவளியினரும் இருந்தார்கள்.

இவர்கள் மூன்று தலைமுறைகளாக வேலை செய்தனர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சுரங்கம் மூடப் பட்டது. அதனால் அங்குள்ள தமிழர்கள் வேலை இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஏழ்மை நிலைமையின் வறுமையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். சரி.

கோலார் தங்கச் சுரங்கத்தைப் பற்றி சுருக்கமாகக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

கோலார் தங்கச் சுரங்கம் (Kolar Gold Fields), கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில், பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ளது. டோடு பெட்டா மலையின் கிழக்குச் சரிவில் 3,196 அடி உயரத்தில் உள்ளது.

தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலத்தில் இருந்தே இந்தத் தங்க வயல் புகழ் பெற்று விளங்கி உள்ளது. 1920-ஆம் ஆண்டுகளில் சிந்து வெளி ஹரப்பா - மொகஞ்சதாரோ பகுதிகளில் பழங்காலத்து வரலாற்றுப் புதையல்கள் கிடைத்தன.

அந்த ஹரப்பா - மொகஞ்சதாரோ புதையலில் கிடைத்த தங்கக் கட்டிகளும்; இங்கே இந்தக் கோலார் தங்கச் சுரங்கங்களில் கிடைத்த தங்கக் கட்டிகளும் ஒரே மாதிரியான குணம் கொண்டு உள்ளன என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

அந்த வகையில் தமிழர் நாகரிகம் என்பது மிக மிகப் பழமையானது; அந்த நாகரிகம் தமிழகத்தில் இருந்து இந்தியக் கண்டத்தின் சிந்து வெளி ஹரப்பா மொகஞ்சதாரோ வரை பரவி இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து இருக்கிறார்கள். ஆகவே உலகத் தமிழர்கள் கோலார் தங்க வயல்களுக்கு நன்றி கூற வேண்டும்.



இந்தச் சுரங்கத்திற்கும், திப்பு சுல்தான்; மராட்டிய வீரர் சிவாஜி போன்றவர்களுக்கும் ஓரளவிற்குப் பங்கு உண்டு. ஆனால் ஆங்கிலேயர்களுக்குத் தான் அதிகமான பங்கு. அவர்கள் காலத்தில்தான் இந்தச் சுரங்கம் பெரிய அளவில் வளர்ந்தது.

1880-ஆம் ஆண்டில் டெய்லர் அண்ட் சன்ஸ் (John Taylor and Sons Company) எனும் நிறுவனம் தான் முதன்முதலில் பெரிய அளவில் தோண்டத் தொடங்கியது.

இதற்காகப் பெரும் அளவில் மக்கள், தமிழ்நாட்டில் இருந்தும்; சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களுக்குச் சுரங்கத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வகையில் கோலார் தங்க வயல் நகர்ப்புறம் உருவானது.

1956-ஆம் ஆண்டில் மைசூர் அரசு இந்தத் தங்கச் சுரங்கத்தை இந்திய அரசுக்குச் சொந்தமாக மாற்றியது. சுரங்கத்தின் பெயர் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (Bharat Gold Mines Limited ) என்று மாறியது. 



கடந்த 150 ஆண்டுகளில் ஏறக்குறைய 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. சுரங்கத்தில் தங்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டப்பட்டு உள்ளது.

இப்போது இங்கே தங்கம் எடுக்கப் படுவது இல்லை. இங்கே வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். இன்றும் கோலார் பகுதியில் தமிழர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

2000-ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயலின் மக்கள் தொகை 300,000 -க்கும் அதிகம் ஆகும். தங்கச் சுரங்கம் மூடப் பட்டதும் பல்லாயிரம் தமிழர்கள் பெங்களூருக்குப் புலம்பெயர்ந்னர். 2011-ஆம் ஆண்டுக் கணக்குப்படி மக்கள் தொகை 144,000 -ஆகக் குறைந்தது.

இப்போதும்கூட கோலார் தங்க வயல் நகராண்மைப் பகுதியில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தமிழர்கள் மட்டும் 90 விழுக்காடு. தெலுங்கர்கள் 6 விழுக்காடு. கன்னடர்கள் 4 விழுக்காடு.

கர்நாடகாவில் குண்டல் கும்பல்கள் பெருகியதற்கு கோலார் தங்க வயலில் வேலை செய்த தமிழர்கள் தான் காரணம் என்று சொல்லப் படுக்கிறது. கர்நாடகாவில் முதன்முதலாகக் குண்டல் கும்பல் உருவானது இந்த கோலார் பகுதியில் தான்.

கோலார் தங்க வயலையும்; குண்டர் கும்பல்களையும் பின்னணியாகக் கொண்டு சென்ற 2018-ஆம் ஆண்டு கே.ஜி.எப் (KGF – Kolar Gold Fields) எனும் கர்நாடகப் படம் வெளியானது. சொல்லி இருக்கிறேன்.

கோலார் தங்க வயல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும்; முதலில் அதை எப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை அந்தப் படம் நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல ஒரு கற்பனைப் புனைவு.



சாதாரண ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் வரலாற்றுப் படத்தைப் போன்ற ஒரு பிருமாண்டம். பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இது இரு கன்னடப் படம். இருப்பினும் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை. ஏதோ வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்த்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு. அருமையான ஒளிப்பதிவு. அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஒரு வரலாற்று நாயகனின் கதையாக இந்தக் கதையைக் கையாண்டு இருக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. சரி. கோலார் தங்க வயல் வரலாற்றுக்கு வருவோம்.

கோலார் என்கிற சொல் ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போதைய காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்க பட்டது. அதே போல் இன்றைய மைசூர் முன்னைய காலத்தில் எருமையூர் என்று அழைக்கப் பட்டது. பெங்களூரின் பழைய பெயர் வெங்கலூர். நான் சொல்லவில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்கின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்), குவாலப்புரம் (கோலார்), வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி ஆகியவை காலா காலமாகத் தமிழகத்தின் எல்லைக்குள் இருந்து வந்தன.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்படிப் பிரிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். இதை யாராலும் மறுக்க முடியாது. மறுத்துப் பேசவும் முடியாது.

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் பறிபோனது. திருப்பதியும் பறிபோனது. சித்தூர், குப்பம் கிராமங்களும் பறிபோயின.

அதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாளித்தனம்; அடுத்து வடுகத் திராவிடத் தலைவர்களின் மாற்று அரசியல் போக்கு; காமராஜரின் தேசியக் கொள்கை. இந்த மூன்றும் சேர்ந்து தான் தமிழர்களுக்குச் சேர வேண்டிய நிலங்களை எல்லாம் கபளீகரம் செய்து விட்டன.

மங்கலங்கிழார், மா.பொ.சி. போன்ற தமிழர்கள் மட்டும் இல்லை என்றால் சென்னை, திருத்தணி, ஒசூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களும் அடிபட்டுப் போய் இருக்கும்.



தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள் இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்யவில்லை. இதில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் பட்டியலைச் சொல்ல வருகிறேன். அதுதான் உண்மையிலும் உண்மை.

வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே... தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் தமிழகத் தலைவர்கள் சிலர் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

மற்ற மற்ற மொழி இனத்தவர் விழிப்புடன் இருந்த போது தமிழகத் தலைவர்களில் சிலர் விழிப்புணர்வு இல்லாமல்; அறியாமையில் மூழ்கிப் போய்க் கிடந்தனர். நமக்கு என்ன வந்தது என்று எறும்பின் மீது மழைப் பொழிந்தது போல் வாளா இருந்தனர். வந்தாரை வாழவிட்டு தங்கள் தொடையிலேயே கயிறுத் திரித்துக் கொள்ள இடம் கொடுத்தனர்.

அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை எத்தனை சோதனைகள். எத்தனை எத்தனை வேதனைகள். அவற்றைக் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். அந்தக் காலத்து ஒரு சில தமிழகத் தலைவர்களின் அசட்டுத் தனங்களை நினைத்துப் பார்க்கும் போது வேதனைகள் அதி வேதனைகளாய்க் கொப்பளிக்கின்றன.

(தொடரும்)





பத்து ஆராங் துப்பாக்கிச்சூடு - 21.09.2019

பத்து ஆராங் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜனார்த்தனன் விஜயரத்தினம் பிரிட்டனில் இருந்து மலேசியா வந்ததற்கான ஆதாரங்களை அவரின் குடும்பத்தினர் நேற்று ஊடகங்களுக்கு வழங்கினார்கள்.

கடந்த ஆண்டு 27-ஆம் தேதி அவர் மலேசியா நாட்டில் வந்து தரை இறங்கியதற்கான விமான டிக்கெட்டுகள்; அவரின் பயணப் பெட்டியில் இருந்த அடையாளச் சிட்டைகள்; அவர்கள் பெயரைத் தாங்கிய விவரங்களை வெளியிட்டார்கள்.
தமிழ் மலர் - 21.09.2019

ஜனார்த்தனன் விஜயரத்தினம் நாட்டுக்குள் வந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று ஏற்கனவே சிலாங்கூர் காவல் படைத் தலைவர் அறிவித்து இருப்பதை அவரின் குடும்பத்தினர் நிராகரித்தனர்.

தவசீலன் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திரசேகரன் ஆகியோரோடு சுட்டுக் கொல்லப்பட்ட ஜனார்த்தனன் விஜயரத்தினம், கடந்த 2018-ஆம் ஆண்டு செந்தூலில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொள்ளையில் தொடர்பு உடையவர் என்று காவல் துறை தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் அந்த நேரத்தில் அவர் பிரிட்டனில் இருந்தார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதி ஜனார்த்தனன், அவரின் மனைவி மோகனம்பாள், அவர்களின் பிள்ளைகள் மலேசியா வந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் பிரிட்டனில் இருந்தார்கள். 2013-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவர்கள் வருவது இதுவே முதன் முறை.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்த்தனனின் மகன் லோகிதரன் (வயது 17) இந்த ஆதாரங்களை எல்லாம் செய்தியாளர்களிடம் எடுத்து விளக்கினார்.

என் தந்தை நாட்டுக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை என்று எப்படி மலேசிய போலீஸ் கூறுகிறது. கடந்த 2013-இல் கடைசியாக மலேசியா வந்தோம். அடுத்து இப்போது 2019 ஆகஸ்டில் வந்தோம்.

2013-ஆம் ஆண்டு நடந்த கொள்ளையில் எப்படி என் தந்தை சம்பந்தப்பட்டு இருக்க முடியும். கடந்த 6 ஆண்டுகளாக, பிரிட்டனின் போட்ஸ் மௌத் என்ற இடத்தில் என் தந்தை இருந்தார் என்று கூறிய லோகிதரன், போட்ஸ் மௌத் நகராட்சியின் வரி கட்டணங்களைச் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் காட்டினார்.

என் தந்தையைக் குற்றச் செயல்களோடு இவ்வளவு அவசரமாகச் சம்பந்தப் படுத்திய காவல் துறை, என் தாயார் மோகனம்பாள் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கத் தவறி உள்ளது.

என் தந்தை, தாயார், எங்கள் மாமா மற்றும் அவரின் நண்பரோடு சென்றார்கள். அவர்களை நோக்கித் தான் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறது. அப்படி என்றால் என் தாயார் எங்கே என்று அவர் வினவினார்.

இதனிடையே ஜனார்த்தனனின் மாமனார் பேசுகையில், ஜனார்த்தனன் கடந்த மாதம் தான் மலேசியா வந்தார். அதிக நாட்கள் விசாவை மீறி அவர் இருந்தார் என்பது மிகத் தவறானது என்றும் கூறி இருக்கிறார். ஜனார்த்தனனின் மாமனாரின் இந்தத் தகவல் வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

பிராமி எழுத்து முறை

தென்கிழக்காசிய மொழிகளான காவி மொழி, பாய்பாயின் மொழி, பர்மிய மொழி, கெமர் மொழி, தாய்லாந்து மொழி, வியட்நாமிய மொழி ஆகியவை பல்லவ எழுத்து முறையில் இருந்து உருவாவான மொழிகளாகும். பல்லவ மொழி என்பது தமிழ் பிராமி எழுத்து முறையைச் சார்ந்ததாகும்.

(Aksara Kawi - The writing system used from the 8th century to around 1500 AD. It is a direct derivation of the Pallava script brought by traders from the ancient Tamil Kingdom of the south Indian Pallava dynasty in India.)



பிராமி எழுத்துகளில் திருக்குறள்


மொழி என்பது வேறு. எழுத்துமுறை என்பது வேறு. பிராமி (Brahmi) என்பது பழங்கால எழுத்து முறையாகும். பழங்காலத்தில் தென் ஆசியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது பிராமி எழுத்து முறை ஆகும்.

அசோகரின் 3-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களில் எழுதப் பட்டவை. அசோகக் கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களின் மிகப் பழைய கல்வெட்டுக்கள் ஆகும்.

(The best-known Brahmi inscriptions are the rock-cut edicts of Ashoka in north-central India, dating to 250–232 BCE)

 


ஆனால் அண்மையில் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கி.மு. என்பதைக் கவனியுங்கள். கி.பி. அல்ல. கிறிஸ்துக்குப் பின் என்பது கி.பி; கிறிஸ்துக்கு முன் என்பது கி.மு.

எனவே பிராமி எழுத்துமுறை இன்னும் பழமையானதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்து முறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்து முறையான அரமேயத்தில் இருந்து (Arameic) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் சொல்கின்றனர்.


ஏசு கிறிஸ்து அவர்களும் அரமேய மொழியைப் பயன்படுத்தினார் என்பதையும் நினைவில் கொள்வோம். பிராமி எழுத்துமுறை முற்றிலும் இந்தியாவில் இருந்தே தோன்றியது என ஆங்கிலேய அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.  
 

தவிர பிராமி எழுத்துமுறை சிந்து சமவெளி எழுத்துக்களில் இருந்து தோன்றி இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் சிலரும் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவும் ஒரு மர்மம். உறுதியான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

அடுத்து இன்னும் ஒரு கருத்து. பிராமி என்பது தமிழர்களின் எழுத்து முறை என்றும் அதையே அசோகர் மாற்றம் செய்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

பிராகிருதம் எழுதக் கூடிய எழுத்து முறையாக அசோகர் உருவாக்கினார் என்றும் தமிழ் அறிஞர்கள் சிலர் சொல்கின்றனர். பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் என்றும் அந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

பிராமியில் இருந்து தோன்றிய எழுத்து முறைகள் இப்போது இந்தியா, வங்காள தேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.

இந்தப் பிராமிய எழுத்து முறையை ஆய்வு செய்ய வேண்டும் என்று விருப்பப் பட்டால் நம்முடைய ஆயுள் காலம் போதாது. சரிங்களா.



தமிழ் எழுத்துகள் பிராமி (Brahmi script) எழுத்து முறையில் இருந்து உருவானவை. தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை.

தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச் சுவடியில் எழுதுவதற்கு ஏற்ப அவை வட்ட எழுத்துக்களாகப் பின்னர் உருமாறின.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மண்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி கண்டுபிடிக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவி இருந்தது. தமிழ்ச் சொற்களை வட்ட எழுத்திலும் வடமொழிச் சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும் வடமொழியையும் பயன்படுத்தினர்.



பல்லவர்கள் காலத்தில்தான் கிரந்தம் எழுச்சி பெற்றது. தமிழர்கள் தென் கிழக்காசிய நாடுகளில் ஆட்சி செய்ததன் விளைவாக அங்கும் கிரந்தம் பரவியது.

பர்மிய மொழி, தாய் மொழி, கெமர் மொழி போன்ற மொழிகளின் எழுத்து முறை கிரந்தத்தில் இருந்தே தோன்றியவை ஆகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்து முறையில் இருந்து தோன்றியதே.

சிங்காசாரி பேரரசின் சில குறிப்புகள் சமஸ்கிருத மொழியிலும் தமிழ் பிராமி எழுத்து முறையிலும் எழுதப் பட்டவை. அதைச் சுட்டிக் காட்டவே தமிழ் எழுத்து முறைமையைச் சொல்ல வேண்டி வந்தது.

15 செப்டம்பர் 2019

ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி

ராசம்மா பூபாலன். மலேசியப் பெண்ணுரிமைப் போராட்டவாதி. மலேசியப் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் முன்னோடி. நேதாஜியின் ஜான்சி ராணி படையின் போராளி. மலேசியப் பெண்களின் சம உரிமைக்காகப் போராட்டங்கள் நடத்திய பெண்ணியவாதி. நாடு போற்றும் தலை சிறந்த கல்வியாளர்களில் ஒருவர். நல்ல ஒரு மலேசியச் சமூகச் சேவகி. வாழ்த்துகிறோம் அழகிய மலேசிய மகளே.

1943-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தை நேதாஜி தொடங்கினார். அதில் ஒரு பிரிவு ஜான்சி ராணி படை. அதில் ராசம்மா தன்னை இணைத்துக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இந்திய - மியான்மார் எல்லையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளைத் தூக்கினார். ஆஸ்திரேலிய அமெரிக்க விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து வந்தார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் ராசம்மா பூபாலன் (Rasammah Bhupalan) என்பவர் மலேசிய நாடு போற்றும் பெண்ணுரிமை போராளி. அப்படித் தான் சொல்லவும் முடிகிறது. வேறு வார்த்தை இல்லை.



இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். ஓர் அடக்கமான மிதவாதக் குடும்பப் பழக்க வழக்கங்களில் வளர்ந்தவர். பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக இளவயதுக் கல்வியைத் தொடர்ந்தவர்.

1927 மே மாதம் முதல் தேதி பிறந்தவர். இவருக்கு இப்போது வயது 92. வயது பெரிது அல்ல என்பதற்கு முன்மாதிரியாய்த் திகழ்கிறார். இன்றும் அதே அழகிய பல்லவியில் அமைதியாய்ப் பயணிக்கின்றார். இயன்ற அளவு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். வெளிப்புற நடவடிக்கைகளில் அர்ப்பணித்துக் கொள்வதால் இன்றும் இளமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மீண்டும் வாழ்த்துகிறோம்.

இவருடைய முழுமையான பெயர் ராசம்மா நாவோமி பூபாலன் (Rasammah Naomi Bhupalan).



அன்றைய மலாயாவில் 1941-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டுவரையில் ஜப்பானியர்களின் அடக்கு முறை ஆட்சி.

மற்ற மற்ற மலேசியர்களைப் போலவே அந்த அடக்கு முறைகளினால் ஈப்போவில் இருந்த ராசம்மா பூபாலனின் குடும்பமும் பாதிக்கப் பட்டது.

1942-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்று சொல்லி இந்திய தேசிய இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது. அந்தக் கட்டத்தில் உலக இந்தியர்களின் மனங்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மகா மனிதர். இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளை உலக மக்களின் மனங்களில் மணக்கச் செய்தார்.

அந்த உணர்வுகள் இரு இளம் சகோதரிகளையும் பாதிக்கவே செய்தன. ராசம்மாவும் அவருடைய சகோதரி பொன்னம்மாவும் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தார்கள். 



சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்ட ஜான்சி ராணி படையில் இருவரும் சேர்ந்து பயிற்சிகளைப் பெற்றார்கள். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். முதல் கட்டமாகச் சயாம் மரண இரயில் பாதையின் வழியாகப் பர்மாவிற்குப் பயணம்.

இந்தியா பர்மா எல்லையில் இம்பால், கோகிமா அடர்ந்த காடுகள். அந்தக் காடுகளின் மத்தியில் ஜான்சி ராணி படையினர் கூடாரங்களை அமைத்தார்கள். இந்திய எல்லைக்குள் செல்லத் தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டார்கள்.

அந்தச் சமயத்தில் இந்திய தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ - Indian National Army) இந்திய எல்லைப் போர் முனையில் பிரிட்டிஷாரின் விமானப் படை; காலாட் படைகளுடன் எதிர்த்துப் போரிட்டு வந்தார்கள்.



பெண்கள் பிரிவிற்கு இலட்சுமி சுவாமிநாதன் (கேப்டன் இலட்சுமி), ஜானகி ஆதிநாகப்பன் இருவரும் தலைமை தாங்கினார்கள். அடர்ந்த காடுகளில் வெள்ளையர்களுக்கு எதிராக ஜான்சி ராணி படையினர் துப்பாக்கிகளைத் தூக்கி சண்டை போட்டார்கள்.

இம்பால், கோகிமா காடுகளில் பாம்புக்கடி, பூரான்கடி, தேள் கடி, மலேரியாக் கொசுக் கடிகள். ஒரு பக்கம் மலைப் பாம்புகள்; இன்னொரு பக்கம் கரடிகள்; காட்டுப் பன்றிகள்; மற்றொரு பக்கம் பாய்ந்து வரும் பர்மா புலிகள்.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க காத்து நிற்கும் எருமை மாட்டு அட்டைகள். கலர் கலரான அந்த வேதனைகளிலிருந்து தப்பித்து வந்தார்கள். தவிர சயாம் பர்மா இரயில் பாதை அமெரிக்க ஆஸ்திரேலிய விமானங்களால் குண்டு போட்டுத் தகர்ப்பட்டு வந்தன. 



அதனால் ஜான்சி ராணி படையினருக்கும்; ஐ.என்.ஏ. இராணுவத்தினருக்கும் போய்ச் சேர வேண்டிய உணவுப் பொருட்கள்; மருந்துப் பொருட்கள்  முறையாகப் போய்ச் சேரவில்லை.

இதில் தொடர்ந்து பெய்யும் மலைக்காட்டு மழையின் கூத்துக் கும்மாளங்கள். அப்படியே கரை புரண்டு ஓடும் காட்டு ஆறுகளின் வெள்ளக் காட்டு வளாகங்கள். இயற்கையின் நீயா நானா போட்டியில் ஜான்சி ராணி பெண்கள் பலர் ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள். மறைக்கப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று. மன்னிக்கவும்.

தொடர்ந்தால் போலப் பல நாட்களுக்குப் பசி பட்டினி. காட்டுத் தாவரங்களைச் சாப்பிட்டுக் காலனுக்குப் பலியானவர்கள் பலர். உருக்குலைந்து உடல் கூனிக் குறுகி வேதனையின் உச்சிக்கே போய் வந்தார்கள்.



ராசம்மாவுடன் அப்போது கூடவே இருந்தவர்கள் கோவிந்தம்மாள் முனுசாமி. இவரைப் பற்றி ஒரு சின்னத் தகவல். இவர் தமிழகம் வட ஆற்காடைச் சேர்ந்தவர்.  மலேசியத் தமிழர். நேதாஜி படையின் உயரிய சேவை விருதான லாண்ட்ஸ் நாயக் விருதைப் பெற்றவர்.

1945-ஆம் ஆண்டு ஜான்சி ராணி படை கலைக்கப் பட்டதும் 1949-ஆம் ஆண்டு கணவர் குழந்தைகளுடன் தமிழகம் சென்றார். இந்திய மத்திய அரசு இவருக்கு ஓய்வு ஊதியம் தர மறுத்து விட்டது.

இருந்தாலும் 1970-ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசு சொற்ப ஓய்வூதியம் அளித்தது. 14.8.1960-ஆம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் கணவரை இழந்தார். பின்னர் தன் 4 மகள்கள் மற்றும் 2 மகன்களையும் கூலி வேலைகள் செய்து படிக்க வைத்தார். அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.



ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடிய கோவிந்தம்மாள் முதுமை காரணமாக 01.12.2016-ஆம் தேதி காலமானார்.

மலாயாவில் இருந்த தன் சொத்துக்களை எல்லாம் இந்திய விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்தவர். ஆனால் தமிழ் நாட்டில் கடைசி வரையில் ஒரு சொந்த வீடு இல்லாமலே வாழ்ந்து மறைந்தார். பாவம் கோவிந்தம்மாள் முனுசாமி. இவரும் ஒரு தியாகியே. இவரைப் பற்றி வேறொரு கட்டுரையில் முழுமையாகத் தகவல்களைத் தருகிறேன். சரி. 

ராசம்மா பூபாலனுடன் அப்போது இந்திய - மியான்மார் எல்லையில் கூடவே இருந்த மற்றும் ஒரு பெண்மணி இராமு தேவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் ஒற்றராகச் சேவை செய்தவர். 



இந்திய - மியான்மார் எல்லையில் ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், பிரிட்டிஷாரின் தொடர் தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை. ஜான்சி ராணிப் படை பல சேதங்களை அடைந்தது. முன்னேற முடியவில்லை.

ஒரு சில வாரங்களுக்கு மறைந்து மறைந்து வாழ்ந்தார்கள். பர்மா காடுகளில் தொடர்ந்தால் போலப் பற்பல வேதனைகள். சொல்லில் மாளா இன்னல்களுக்குப் பின்னர் மலாயாவுக்கே திரும்பி வந்தார்கள்.

ஜான்சி ராணி படையில் கிடைத்த அனுபவங்கள் ராசம்மாவின் பிற்கால வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாய் அமைந்தன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் தோல்வி அடைந்தார்கள். மலாயாவிலிருந்து வெளியேறினார்கள். பிரிட்டிஷாரின் ஆட்சி வழக்க நிலைக்குத் திரும்பியது. ராசம்மா விட்டுப் போன தன் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். ராசம்மா படிப்பில் கெட்டிக்காரப் பெண்.



1955-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிஙகப்பூரில் இயங்கி வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதீர் அவர்களும்; சித்தி ஹஸ்மா அவர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தான் மருத்துவப் பட்டம் பெற்றார்கள். நினைவில் கொள்வோம்.

பின்னர் பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் ராசம்மா  நியமிக்கப் பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இறுதியில் கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்றார். சரி.

அதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்தபோது பெண் ஆசிரியைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அதை மறந்துவிட வேண்டாமே.



1960-ஆம் ஆண்டுகளில் மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை. ஆண்களுக்குக் கூடுதலான சம்பளம். ஏன் இந்தப் பாகுபாடு என்று ராசம்மா கேள்விமேல் கேள்விகள் எழுப்பி வந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வேலை. ஆனால் சம்பளத்தில் மட்டும் குறைச்சல். (Keadilan Untuk Perempuan Kerja Sama - Gaji Sama). என்ன இது… ஏன் இந்த ஓரவஞ்சனை என்று முழக்கங்கள் செய்து வந்தார். யாரும் கண்டு கொண்டதாக இல்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்த ராசம்மா ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தையே உருவாக்கினார். அதன் பெயர் பெண்கள் ஆசிரியர் சங்கம் (Kesatuan Guru - Guru Perempuan Persekutuan Tanah Melayu - Women Teacher's Union).



நாடு முழுவதும் பயணம் செய்து ஆசிரியைகள் சங்கத்திற்கு ஆதரவு திரட்டினார். சில ஆண்டுகள் தீவிரமான முயற்சிகள். பிறகு சம்பளப் பாகுபாட்டிற்கு ஒரு முடிவு கட்டப் பட்டது. அரசாங்கமே இறங்கி வந்தது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் சரிசமமான சம்பளம் வழங்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டது.

ராசம்மாவின் பொது வாழ்க்கையில் அதுவே சிகரம் என்றாலும் தம்முடைய பிற்கால வாழ்க்கையில் அவர் வேறுபல துறைகளிலும் தம் கவனத்தைச் செலுத்தி சேவைகள் புரிந்து இருக்கிறார். கோலாலும்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியை மலேசியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டியதும் அவருடைய ஆக்ககரமான செயல் திறன்களில் ஒன்றாகும்.

உலகக் கல்விப் பணியாளர்களின் சம்மேளனத்தில் (World Confederation of Organisations of the Teaching Profession) இவர் செயற்குழு உறுப்பினராகவும் சேவை செய்து இருக்கிறார். 1963-ஆம் ஆண்டு ராசம்மாவின் முயற்சியில் மகளிர் சங்கங்களின் தேசிய மன்றம் (National Council of Women's Organisation (NCWO) அமைந்தது. அதன் அமைப்புக் குழுவிற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

1986-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அவருக்கு ‘ஆசிரிய ஞானி’ (Tokoh Guru) விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.

ராசம்மா பூபாலனைப் பற்றி Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 2006 நவம்பர் 21ஆம் தேதி மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம் வெளியிட்டார்.

இந்த நூலுக்கான செலவுத் தொகையைத் தேசிய ஆவணக் காப்பகம், மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சு, தேசிய இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் ஆகிய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

2009 ஆகஸ்டு 18-ஆம் தேதி, மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது. அந்தக் கௌரவிப்பில் ராசம்மா பூபாலனும் சிறப்பிக்கப் பட்டார்.

மக்களின் நலன்களுக்காகப் போராடிய ராசம்மா போன்றவர்களை அடையாளப் படுத்த வேண்டியது நம் கடமையாகும். அவர்களின் உலகளாவிய சேவைகளையும் சாதனைகளையும் உலகம் அறியச் செய்ய வேண்டியதும் நம் கடைமையாகும்.

அடுத்து வரும் நம் சந்ததியினர் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராசம்மா போன்றவர்களின் சாதனைகள் உலகத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்க வேண்டும். அதுவே நம் விருப்பம்.

மலேசிய தேசிய விடுதலைக்காக ராசம்மா ஆற்றிய அரிய சேவைகள் முழுமையாகக் கவனிக்கப் படவில்லை என்பது ஒரு சிலரின் கருத்து. அவருக்கு முறையான அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பதும் பலரின் கருத்து. அதுவே என்னுடைய தாழ்மையான கருத்து.

மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களில் ராசம்மா ஓர் ஆனந்த பைரவி. அந்த ராகங்களில் அவர் நீண்ட நாட்களுக்குப் பூபாலம் இசைக்க வேண்டும். வாழ்க அந்த அழகியப் பெண்மணி. வாழிய வாழியவே.