24 செப்டம்பர் 2019

புந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019

ஈப்போ புந்தோங் பகுதியில் ஒரு வீட்டிற்கும் வாகனங்களுக்கும் ஒரு மர்மக் கும்பல் தீ வைத்தது. அந்த அராஜகச் செயலால் இந்திய மாது ஒருவர் மரணம் அடைந்தார். 

இந்தச் சம்பவம் ஈப்போவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த அந்தக் குடும்ப மாது எம்.அபிராமி என்று அடையாளம் கூறப் பட்டது. 

தமிழ் மலர் 24.09.2019
ஈப்போ, புந்தோங் ஜாலான் 4, நியூ டில்லியில் ஒரு மர்மக் கும்பல் அவர் வீட்டிற்கு வந்து உள்ளது. வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரைச் சரமாரியாக அடித்துத் தாக்கி இருக்கின்றது.

அப்போது வீட்டில் இருந்து வெளியில் வந்த அபிராமி (வயது 44) ’என் மகனின் காரை உடைக்காதீர்கள்’ என்று பலமுறை உரக்கக் கூச்சல் போட்டு இருக்கிறார். அவரையும் அந்தக் கும்பல் தாக்கி இருக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிய நேரத்தில் திருமதி அபிராமி மயங்கிக் கீழே விழுந்தார். 

அபிராமி

தன்னுடைய தாயார் மயங்கி விழுந்ததைத் தன் சகோதரியின் மூலம் அவரின் மூத்த மகன் என்.நினேஸ்வரன் அறிந்து இருக்கிறார். பின்னர் அவர் வீடு திரும்பி தன் தாயாரை ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் மருத்துவ மனைக்குச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றித் தாயார் அபிராமி மரணம் அடைந்தார்.

அபிராமி மருத்துவ மனையில் உயிரை விட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் அவர்களின் வீடு தீப்பற்றி எரிவதாகத் தகவல் வந்தது. 


நினேஸ்வரன் சொல்கிறார்: பதறியடித்து வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மர்மக் கும்பல் வீட்டில் நுழைந்து, அங்கிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்து அராஜகம் புரிந்து உள்ளனர்.

அந்த நேரத்தில் எனது இரு தம்பிகளும் அப்பாவும் வீட்டில் இல்லை. கடந்த 30 வருடங்களாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்று புரியவில்லை. காவல்துறை இது பற்றி தீர விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 




23 செப்டம்பர் 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 3

கோலார் தங்கச் சுரங்கத்தின் அடிப் பாகத்தில் மிகக் கடுமையான, மிகக் கொடுமையான வெப்பமாக இருக்கும். 12,000 அடி ஆழத்தில் 72 பாகை செல்சியஸ் வெப்பம். பூமியின் மேலே பொதுவாக வெப்பநிலை 30 பாகை. மலேசியாவில் பொதுவான வெப்பநிலை 32 பாகை செல்சியஸ்.


இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 0 பாகை செல்சியஸ் வெப்பத்தில் நீர் உறைந்து கட்டியாகிறது. அதே நீர் 100 பாகை செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் வெப்பநிலை 72 பாகை செல்சியஸ். அப்படி என்றால் சுரங்கத்திற்குள் உள்ளே எப்பேர்ப்பட்ட சூடாக இருக்க வேண்டும். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நம்முடைய உடலை ஒரு சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் உறுப்பு எது தெரியுங்களா. நம்முடைய காதுகள் தான். நாம் கீழே விழாமல் நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கும்; நடப்பதற்கும்; ஓடுவதற்கும் தேவையான சம்நிலையை இந்தக் காதுகள் வழங்குகின்றன. 



பூமிக்கு அடியில் வெகு ஆழத்தில் இருக்கும் போது இந்தக் காதுகள் ‘மக்கார்’ செய்ய ஆரம்பித்து விடும். புவி அழுத்தமும் வெப்பமும் ஒன்று சேர்ந்து உடலின் சமநிலையைத் தடுமாற வைத்துவிடும். எப்போதும் ஒருவிதமான குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்.

காதுகளின் உள்ளே மூன்று  வகையான குருத்து எலும்புகள் உள்ளன. மேலஸ் (malleus), இன்கஸ் (incus), டேபஸ் (stapes) என்கிற  எலும்புகள். எல்லாம் சுண்டைக்காய் அளவுதான் இருக்கும். இந்த எலும்புகளில் இருந்து தான் மூளைக்குத் தகவல்கள் அனுப்பப் படுகின்றன. அந்தத் தகவல்களில் இருந்து தான் உடல் சமநிலை படுத்தப் படுகிறது. ஆங்கிலத்தில் ‘பேலன்சிங்’ என்று சொல்வார்கள் (Equilibrioception).

சுரங்கத்தின் உள்ளே நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு இந்தக் குருத்து எலும்புகள் அந்தச் சூழலைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த எலும்புகள் தவறான தகவல்களை மூளைக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கும். மூளையும் குழம்பிப் போகும். அதனால் மூளைக்குள் பாதிப்புகள் ஏற்படலாம். உடலின் சமநிலைப் பாட்டிலும் தொல்லைகள். உடல் சமநிலை இல்லாமல் தடுமாறும்.

முன்பு சுரங்கத்தில் வேலை செய்தவர்களுக்கு அந்தத் தாக்கங்கள் இருக்கின்றன. அவர்களில் பலர் இன்றும் சித்தம் கலங்கிய நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆயிரத்தில் 120 பேர் அப்படிப் பாதிக்கப் படுகிறார்கள். ஏன் என்றால் சுரங்கத்திற்குள் நீண்ட நேரம்; நீண்ட நாட்கள் இருந்ததால் அவர்களின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது. 



யாரோ ஒருவருக்காக பூமிக்கு அடியில் தங்கத்தை எடுக்கப் போய் அவர்கள் பெற்றுக் கொண்ட அழகிய பரிசு. மனசிற்குக் கஷ்டமாக இருக்கிறது.

நாடி நரம்புகள் ஓய்ந்து இரத்தம் சுண்டிப் போன பிறகு அவர்கள் அந்த வேதனையை அனுபவிப்பது இல்லை. அவர்களின் இறுதி நாட்களில் மட்டும் அல்ல. இளமைக் காலத்திலேயே நரகத்தின் வாசல் கதவுகளைத் தட்டிப் பார்க்கிறார்கள்.

வெடிமருந்துகளின் சிதறல்கள் உண்டாக்கும் புகை மண்டலம்; வெடித்துத் தகர்க்கப்பட்ட பாறைகளில் உறைந்து இருக்கும் மணல் போன்ற சிலிக்கான் துகள் தூசு மண்டலம்; சுரங்கப் பாதைகளின் நுனிப் பகுதிகளில் மண்டிக் கிடக்கும் புகை.

இந்தத் தூசு மண்டலங்களை எல்லாம் கடந்து சென்று தான் தொழிலாளர்கள் தங்கப் படிமங்கள் உறைந்த பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். அது ஒரு வகையில் அமிலக் குட்டைக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேலை.



சுரங்கத்தில் உள்ள பாறைகளைத் தகர்ப்பதற்கு ஜெலட்டின் (Ballistic gelatin) குச்சிகளைப் பயன்படுத்துவார்கள். இந்தக் குச்சிகள் பயங்கரமான புகை மண்டலத்தை ஏற்படுத்தும். அந்தச் சமயத்தில் அங்கே காற்றில் பரவி இருக்கும் வெப்பம். பற்றாக்குறைக்குப் பல்வேறான உலோகங்களின் தூசு துகடுகள். ஏற்கனவே வெப்பத்தில் வறுத்து எடுக்கப்பட்ட அவர்களின் உடல்களில் எரிச்சல். இதை எல்லாம் எப்படி எழுதிப் புரிய வைப்பது என்று எனக்கும் தெரியவில்லை.

சொர்க்க லோகம்; நரகலோகம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நரக லோகத்தில் எப்போதும் எண்ணெய்க் கொப்பரைப் பாகு கொதித்துக் கொண்டே இருக்குமாம். பாட்டிமார்கள் சொல்வார்கள். ஏன் என்று சொல்ல வேண்டுமா.

யார் யார் இங்கே பாவங்களைச் செய்கிறார்களோ அவர்கள் நரகத்திற்குப் போனதும் முதலில் இந்தக் கொதிக்கும் கொப்பரைத் தோம்புகளில் தான் தூக்கிப் போடப் படுவார்களாம். நன்றாக வழற்றி துவைத்துப் பிழிந்து எடுத்த பின்னர் ஆணிகள் அடித்த மெத்தைகளில் காயப் போடப் படுப்பார்களாம். ஆக அந்தக் கொப்பரைத் தோம்புகளைக் கற்பனை செய்து கொள்வோம். அப்புறம் பாவங்கள் செய்வது கனவிலும் வராது.

சுரங்கப் பாதைகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன நீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் உள்ள நீரைக் குடிக்கலாம். உடலின் மேல் தெளித்துக் கொள்ளலாம்.



ஒன்றை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். 12,000 அடி ஆழத்தில் 72 டிகிரி செல்சியஸ் வெப்பம். அந்த வெப்பத்தின் அனலில் தொட்டியில் இருக்கும் நீரும் கொப்பளித்துக் கொண்டு இருக்கும். இருந்தாலும் வேறு வழி இல்லை.

உடலின் மேல் நீரைத் தெளித்துக் கொள்வதும்; தொண்டைக் குழியை ஈரப் படுத்திக் கொள்வதும் அங்கே தவிர்க்க இயலாத சடங்குகள். அது மட்டும் அல்ல. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் கொப்பளித்துக் கொண்டு இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டியது சூழ்நிலையின் கட்டாயம். வேறு வழி இல்லை.

சுரங்கத்தின் உள்ளே பாதைகள் எங்கே முடிவு அடைகிறதோ அங்கே தான் தொழிலாளர்களும் இருப்பார்கள். அங்கே இருந்து பூமியைக் குடைந்து போய்க் கொண்டே இருப்பார்கள். சமயங்களில் பெரும் பாறைகள் பாதையை மறைத்துக் கொண்டு இருக்கும். இந்தப் பாறைகளை நிலத்தடி மலைகள் என்று அழைக்கிறார்கள். சாதாரண கருவிகளால் துளைகள் போட முடியாது.

கோலார் தங்க வயல் உலகின் ஆழமான சுரங்கங்களில் ஒன்று. சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் தக்காண பீட பூமியில் அமைந்து இருக்கிறது. அதன் நிலத்தடி மேல்தட்டு (continental crust) எனும் கடும் பாறைகளைக் கொண்டது.

இந்தப் பாறைகளைத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். உண்மைதான். ஏன் என்றால் சுரங்கப் பாதைகளில் எதிர்படும் பாறைகள், மலைகளைப் போன்ற பரிமாணம் கொண்டவை.



அந்தப் பாறை மலைகளை வெடி வைத்துத் தகர்க்கும் போது பூமி அதிரும். அந்த அதிர்ச்சியில் சமயங்களில் சுரங்கத்தின் கூரைகள் சரிந்து விழும். அதில் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். அத்தனைப் பேரும் அங்கேயே இறக்க வேண்டி வரும்.

ஆக கோலாரில் சுரங்கம் தோண்டிச் செல்வதை ஏதோ கிணறு தோண்டும் வேலையாக நினைக்க வேண்டாம். மண்ணைக் கிண்டி விண்ணுக்குச் செல்லும் சில்லறைச் சமாசாரம் இல்லை.

பாறைகள் குறைந்த இடங்களில் துளையிட வேண்டும்; பாறைகள் மிகுந்த பகுதிகளில் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். தகர்த்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் சுரங்கத்தின் எல்லையில் இருக்கும் போது இடைப் பகுதிகளில்; நடுப் பகுதிகளில் கூரைகள் சரிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன. அந்த இடிபாடுகளை மீண்டும் வெடி வைத்துத் தகர்க்க வேண்டி வரலாம். இருந்தாலும் அது சுரங்கப் பாதையின் தாங்கும் திறனைப் பொருத்த விஷயமாகும்.

சில நேரங்களில் மீண்டும் ஒரு இரண்டாவது வெடிப்பிற்குச் சுரங்கம் தாங்காது என்கிற ஒரு நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதோடு நிறுத்திக் கொண்டு வேறு பக்கமாகக் குடைந்து செல்வார்கள். சமயங்களில் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படலாம்.



சுரங்கத்தின் கூரைகள் இடிந்து விழுந்தால் காற்றுக் குழாய்கள் சேதம் அடைந்து இருக்கும். அதனால் ஆக்சிஜன் உயிர்க்காற்று வெட்டுப்பட்டுப் போகும். உயிர்க்காற்று இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணம் நிச்சயம் என்பதும் அவர்களுக்குத் தெரிந்து விடும். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் மனசு எப்படி இருக்கும். என்ன நினைப்பார்கள். என்ன செய்வார்கள். நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

உயிருடன் மீண்டு வந்த தொழிலாளர்கள் சிலரிடம் பேசி இருக்கிறார்கள். அப்படி உயிர் பிழைத்து வந்த ஒருவரின் பெயர் சதாசிவம். அவர் என்ன சொல்கிறார். கேளுங்கள்.

’சுரங்கப் பாதை மொத்தமா அடைச்சிக்கிட்டு இருக்கும்... அந்தப் பக்கம் மாட்டிக்கிட்டு இருக்கிறவங்க சத்தம் போடுவாங்க... அந்தச் சத்தம் லேசு லேசா கேட்கும்... இந்தப் பக்கம் இருக்கிறவங்க பேரை எல்லாம் சொல்லி கூப்பிடுவாங்க...

உதவி செய்யுங்கனு அவங்க போடுகிற சத்தம் மெதுவா மெதுவா கேட்கும்... ஒரு நாளைக்கு முழுசா சத்தம் போடுவாங்க... அப்புறம் அவங்க குரல் கொஞ்சம் கொஞ்சமா அடங்கிப் போய்... அப்புறம் கடைசியில் நின்னு போயிடும்...’ சொல்லிவிட்டு சன்னமாய்த் தேம்புகிறார்.

தங்களின் தோழர்கள் உயிருடன் புதைந்து போனதை நினைத்து நினைத்து... தங்களுக்கும் அந்தச் சாவு நெருங்கி வருவதை உணர்ந்து கொள்வார்கள். மனசை கல்லாக்கிக் கொள்வார்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.



சமயங்களில் இந்தப் பக்கம் உயிர் பிழைத்தவர்களுக்கும் உடனடியாக உதவிகள் வந்து சேராது. அப்போது அவர்களுக்கும் அங்கேயே மரண சாசனம் எழுதி வைக்கப் படுகிறது.

காற்றுக் குழாய்களில் காற்று வராமல் தடைப்பட்டுப் போகும். மீட்புப் பணியாட்கள் உடனடியாக வந்து சேர்ந்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்தப் பக்கம் உள்ளவர்களும் இரண்டு மூன்று நாட்களில் இறந்து விடுவார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு நாட்கள் வரை தான் தாக்குப் பிடிக்க முடியும்.

ஆனால் தங்கத்தைத் தேடும் அவர்களின் பயண அலைகள் மட்டும் ஓய்வது இல்லை. இறப்பை மிஞ்சியவர்கள் அந்த இறப்பிற்கே பேரம் பேசி தங்களின் பயணங்களைத் தொடர்வார்கள்.

தங்கள் மனைவி மக்களுக்குச் சோறு போட வேண்டும். வயது முதிர்ந்த அப்பா அம்மாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். மாதா மாதம் கிடைக்கப் போகும் அந்தச் சொற்பச் சம்பளக் காசுக்காகப் பயணத்தைத் தொடர்வார்கள்.

சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது இல்லை. இருந்தாலும் விபத்து நடந்து விட்டால் தப்பித்து வருவது பெரிய விஷயம். சுரங்க விபத்துகளில் மீட்கப்பட்ட உடல்களை விட மீட்கப் படாமல் போன உடல்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

கோலார் தங்கச் சுரங்கத்திற்குள் நூற்றுக் கணக்கான மனித உடல்கள் மீட்கப் படாமல் அனாதையாய்க் கிடக்கின்றன.

வெடித்துச் சிதறிய பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரின் வேலை நேரத்திற்குள் அவர் அடைய வேண்டிய இலக்கு முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அந்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருப்பார்கள்.

வெடிமருந்துகள் வைத்து வெடித்த பின்னர் பாறைகளின் சிதறல்களில் வெடிக்காத வெடிமருந்துகளும் சிக்கி இருக்கும். சமயங்களில் தாமதமாக வெடிக்கும். அந்த மாதிரியான வெடி விபத்துகளில் இறந்தவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தங்கம் என்கிற உலோகத்தை நீங்கள் தொடும் போதும் சரி; அதைக் கழுத்திலும் காதிலும் மாட்டிக் கொண்டு போகும் போதும் சரி; அந்தத் தங்கத்தைத் தோண்டி எடுத்த அந்த மனிதர்களில் பலர்; உலகின் எங்கோ ஒரு சுரங்கத்தினுள் காணாமல் போன பிணமாக இன்னும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்களை நினைத்துப் பார்த்தாலே பெரிய விஷயம். அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் முதல் மரியாதை.

(தொடரும்)

இன்றைய சிந்தனை 21.07.2019 - முயற்சி கைவிடாதீர்




எல்லாமே இயற்கையின் செயல்... முயற்சியும் அதில் ஒரு செருகல்...

இந்த உலகமே உங்களை எதிர்த்து நின்றாலும் உங்கள் முயற்சிகளை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்...

முயற்சி செய்தால் மறுபக்கத்தில் இன்னும் ஓர் அழகான உலகம் உங்களுக்காக காத்து நிற்கலாம்... அதை மறந்து விடாதீர்கள்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Sambasivam Chinniah Dear friend Mr. Muthukrishnan ayyah Thank you. Good morning and take care of your health. Vaazhga Valamudan. 
 
Doraisamy Lakshamanan இறைவன் நம்போன்ற எல்லா வுயிகளுக்கும் வாழ்வளிக்கும் விதமாக எங்காவது ஓரிடத்தில் வாழ்வதற்கு இடமளிப்பாரென்பதை தாங்களும் உறுதிப்படுத்தியமைக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
 
Image may contain: one or more people and text  
 
Manickam Nadeson அப்படி என்ன ஐயா சார் மறுபக்கத்துல இருக்கு?? அங்கையும் இப்படித் தான் இருக்கும்.
 
Image may contain: one or more people and text 

Kumaravel Muthu Goundan நம்பிக்கை தரும் பயன் மிகு வார்த்தைகள் 
   
 

Image may contain: text
Muthukrishnan Ipoh அவரவர் எண்ணங்கள் அவரவர் வாழ்வின் சிற்பி... உண்மை...உண்மை... வாழ்த்துகள்

 



மலாயா பெயர் எப்படி வந்தது



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Doraisamy Lakshamanan மிக அருமையான ஆதாரம். தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு ஆதாரத்துடன் மலையூர் என்ற பெயரில் நம் மலேசியா!
 
மலேசிய மக்களுக்கு எல்லாம் பெருமையான செய்தி. நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மலையூர் என்ற தமிழ்ப் பெயரில் இனறைய மலேசியா! 
 
வரலாறுகளைத் தோண்டி எடுத்து உலக மக்களுக்கு எல்லாம் வழங்கும் ஐயா முத்துக்கிருஷ்ணன் ஈப்போ அவர்கள் வாழ்க... வையகம் போற்றவென வாழ்த்துவோம் உறவுகளே!
Murugan Rajoo இருக்கும் சான்றுகளையே இன்று இல்லாமல் செய்து விட்டவர்கள்... இதை எல்லாம் ஏற்க மாட்டார்கள் ஐயா. பிறரின் தொன்மைகளைக் கடத்தல் செய்யும் கூட்டம்.
  




சிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது

இரண்டாம் உலகப் போரின் போது பல ஆயிரம் சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். இங்கிலாந்து நாட்டின்  உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். மலேசிய சீனர் சமூகம் இவரை  தியாகி என்று போற்றுகின்றது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

In memory of Sybil Karthigesu

இவர் மேடானில் 1899ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தோட்ட நிர்வாகியான ஆங்கிலேயர். தாயார் ஒரு தமிழர்.

சிபில் தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியர் (நர்ஸ்). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் கார்த்திகேசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஈப்போவில் ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வந்தனர்.

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்து  ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும்  ஈப்போவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு சென்றனர். சீனர்கள் அதிகம் வாழும் இந்த நகரம் அலுமினியச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர். மலாயா மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். இலட்சக் கணக்கான மக்களைச் சித்திரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சீனர்கள்.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின.

The George Medal of United Kingdom.
Sybil Medan Kathigasu GM was a Malayan Eurasian nurse 
who supported the resistance during the 
Japanese occupation of Malaya. 
She was the only Malayan woman to be ever 
awarded with the George Medal for bravery.

பின் டாக்டர் கார்த்திகேசு மட்டும் மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார்.  சிபில்  பாப்பானிலேயே தங்கி ஏழை எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.

அதன் பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது. அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு ஒரு மறைவிடமாக அமைந்தது. அந்தப் போராளிகளுக்குச் சிபில் இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பினார். அதனால் சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அந்தச் சமயத்தில் தன்னுடைய பாப்பான் மருத்துவமனையைில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் வைத்திருந்தார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு அந்த செய்திகளைப் பாப்பான் மக்களுக்கு தெரிவித்தும் வந்தார். சிபில்  செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரான செயல்கள்.

பாப்பான் நகர மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை ஜப்பானிய இராணுவம் அறிந்தது. அதனால் அந்த மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர்.

சிபிலும் 1943 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.  பல நாட்கள் விசாரணை செய்யப்பட்டார். ஆனால், சிபில்  ஜப்பானியர்களுடன் ஒத்துழைக்க வில்லை; போராளிகளின் பெயர்களைச் சொல்லவில்லை.



Elaine Daly, the great granddaughter of Sybil Kathigasu. 
She is a popular Malaysian actress and TV host. 
The 42-year-old beauty, who is also national director of the 
Miss Universe Malaysia organisation and channel director of www.hurr.tv

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்குச் சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் விகிதம் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து என்பதை சிபில் உணர்ந்தார். எனவே போராளிகளின் பெயர்களை அவர் ஜப்பானியர்களுக்குச் சொல்லவில்லை.

பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு மாற்றப் பட்டு   பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டன.  சிபிலலைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் ஜப்பானியர்கள் கட்டி வைத்து அடித்தனர். தமக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார்.

ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிபில் கார்த்திகேசுவின் குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருந்தது.

ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவிலிருந்து வெளியேறினர். மலாயா மீண்டும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

சிபில் கார்த்திகேசு பத்து காஜா சிறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் பாப்பான் கொண்டு வரப்பட்டார். மக்கள் அனைவரும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்து கொண்டு சென்று மருத்துவம் வழங்கப் பட்டது.


Jalan Sybil Karthigesu at Ipoh, near General Hospital Ipoh.

அப்போது சிபிலை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். சிபில் பக்கிங்காம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்டார். அங்கே சிபிலுக்கு  இங்கிலாந்தின் இரண்டாம் உயரிய விருதான ஜார்ஜ் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இப்பதக்கத்தைப் பெற்றதில்லை.

அவருக்கு ஆங்கிலேய அரசின் மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் காயங்களை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948-ஆம் ஆண்டு தன்னுடைய 49வது வயதில் மறைந்தார். அவருடைய உடல் 'ஸ்காட்லாந்திலிருந்து ஈப்போவிற்க்கு கொண்டு வரப்பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப்படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று  லட்சக் கணக்கான சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர்.

1948-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி தன்னுடைய 49-வது வயதில் சிபில் கார்த்திகேசு இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் முதன்முதலில் புதைக்கப் பட்டது.

பின்னர் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949-இல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் மக்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர்.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949-ஆம் ஆண்டில்.


No Dram of Mercy... 
Unfinished first-person account of the experiences 
of a Malayan woman whose attempts to assist her 
compatriots during World War II resulted in her imprisonment and death.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள்.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டு உள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர் மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.

அண்மையில் சிபில் கார்த்திகேசு வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நண்பர்களுடன் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.

அவர்களின் அத்தனை பேரின் கண்களில் கண்ணீர் மல்கியது. அதைப் பார்த்து என் மனதில் ஓர் இறுக்கம். சிபில் கார்த்திகேசு பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார்.

இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சிபில் கார்த்திகேசுவைப் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கிறேன். முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதன் முகவரி:

https://ta.wikipedia.org/s/xro

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Baskaran Palanisamy Had read " No dram of Mercy" a few years ago
  
Muthukrishnan Ipoh Unfinished first-person account of the experiences of an heroic Malayan woman whose attempts to assist her compatriots during World War II...
 
Yogavin Yogavins U really awesome sir.
  
Malathi Nair Wish to visit Cybil mom's house.
  
Muthukrishnan Ipoh மூன்று நான்கு முறை அவர் வாழ்ந்த இல்லத்திற்குப் போய் இருக்கிறேன்... கடைசியாக சென்ற வருடம்...
 
Muthukrishnan Ipoh சிபில் கார்த்திகேசு வாழ்ந்த வீட்டிற்கு முன்னால் எடுத்துக் கொண்ட படம்... அந்த இல்லம் மிக அமைதியாகக் காட்சி அளிக்கிறது... ஒரு பெரிய வரலாறு அடங்கி இருப்பது கொஞ்சமும் தெரியவில்லை...
 
Image may contain: 1 person, standing, plant and outdoor 

Manickam Nadeson Muthukrishnan Ipoh கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும், கலை அம்சம் பொருந்திய கதாநாயகன் யரோ??
 
M R Tanasegaran Rengasamy வீர மங்கையின்மறையா வரலாறு... சிபில் கார்த்திகேசுவின் தியாகம் ஒரு ஜோதியாய் என்றும் சுடர்விடும். வாழ்க அவர் நாமம்.

(இலைமறை காயாக இருக்கும் பலரின் சுயசரிதையை தேடித் தரும் தங்களின் சேவையைப் போற்றுகின்றேன். நன்றி சார்.)
 
Neela Vanam இவரின் கதையை படிக்கும்போது கண்களிலிருந்து தானாக நீர் சொட்டியது ரொம்ப சோகமய்யா அவர்களுக்கு வாரிசு யாரும் இல்லையா உங்கள் பதிவுக்கு நன்றிகள்
 
Muthukrishnan Ipoh இவர் பயன்படுத்திய பொருட்கள் பாப்பான் நகரில் ஓர் அரும் காட்சியகத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தால் மனசு கலங்கும்.
 
Periasamy Ramasamy படிக்கும் போதே அந்த அன்னையை நினைத்து கசிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. அன்னை என்றாலே அன்புதான்.
 
Muthukrishnan Ipoh ஜப்பான்காரர்கள் பெரிய சித்ரவதை செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தில் சிறப்பு மருத்துவம் செய்தும்... உடலின் உட்பாகத்தில் ஏற்பட்ட இரத்தக் கசிவு நிற்கவில்லை. தன் 48-ஆவது வயதில் காலமானார்.
 
Periasamy Ramasamy அத்தனை சித்ரவதைகளையும் சகித்துக் கொண்ட அந்த அன்னையின் நிலைமை நம் குடும்ப உறவுகளில் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை போல உணர வைத்தது. அந்த ஜப்பானியர்கள் மீது என் மனக்கண் காட்டிய வெறுப்பு சொல்லி மாளாது.
 
Muthukrishnan Ipoh Periasamy Ramasamy அவர் கண் முன்னாலேயே அவருடைய பிள்ளைகளும் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள்... இருந்தாலும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை...
 
Periasamy Ramasamy அதனால்தான் இன்றும் எல்லாருக்கும் அன்னையாகத் திகழ்கிறார்.