28 செப்டம்பர் 2019

அக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது

பூமத்திய ரேகைக்கு வடக்கே கடக ரேகை. தெற்கே மகர ரேகை. இரண்டு ரேகைக்கும் இடையில் ஒரு மழைக் காட்டு ரேகை. அதுதான் மலேசியா எனும் அழகிய பச்சைத் தாரகையின் ரேகை. 



அங்கே பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் பசும் காடுகள். சரிகை போன்று சறுக்கி விழுந்து சலசலத்து ஓடும் நதிகள். சப்தக் கன்னிகள் சஞ்சரிக்கும் நீர்நிலைக் காடுகள். நீல நயனங்களில் நிதர்சனமான சத்தியங்கள். அத்தனையும் அங்கே நித்தியக் கல்யாணிகள் இசைக்கும் நயன ராகங்கள்.

அழகிய அந்தப் பசுமைக் காட்டில் அழகு அழகான தாவரங்கள்; அரிதிலும் அரிதான பூச்சிப் புழுக்கள். அற்புதமான விலங்கு இனங்கள்; அதிசயமான பறவை இனங்கள்; அபூர்வமான  பச்சைப் பயிர்கள். இயற்கை அன்னையே ஆசைப்படும் ரம்மியமான பாரிஜாதக் கோலங்கள். சரி.

அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் முன்பு காலத்தில் இரண்டே இரண்டு பருவ காலங்கள் தான் இருந்தன. ஒன்று மழைக் காலம். இன்னொன்று கோடைக் காலம். 




இப்போது அப்படி இல்லையே. எல்லாம் மாறிப் போய் விட்டன. நான்கு பருவ காலங்களாகி விட்டன.

1. மழைக்காலம் 2. டெங்கி காலம் 3. புகைக் காலம் 4. டுரியான் காலம். குழப்பம் வேண்டாமே. ஏன் என்றால் இப்போது அப்படித் தான் போய் கொண்டு இருக்கிறது. வேறு எப்படி சொல்வதாம்.

சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. புகை மூட்டப் புகைச்சலைத் தான் சொல்ல வருகிறேன்.

இதில் சரவாக் மாநிலத்தின் துணை முதலமைச்சர் அண்மையில் ஓர் அறைகூவல் விடுத்தார். போர்னியோ காடுகளில் ஏற்பட்டு வரும் காட்டுத் தீ கொடூரங்களுக்கு இந்தோனேசியா தான் பொறுப்பு ஏற்க வேண்டும்; அனைத்துலகச் சமூகம் அந்த நாட்டைக் கண்டிக்க வேண்டும் எனும் அறைகூவல்.




அதே சமயத்தில் இன்னொரு வேண்டுகோளையும் முன்வைத்தார். இந்தோனேசியா அரசாங்கம் மலேசியாவுக்கு 10 இலட்சம் மாசு தடுப்பு முகமூடிகளைக் கொடுக்க வேண்டும். அதை ஓர் அபராதமாக அந்த அரசாங்கம் கருத வேண்டும் என்றும் சொன்னார்.

இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். அதுவே மலேசியர்கள் அனைவரின் ஆதங்கங்களைப் பிரதிபலிக்கும் அறைகூவலாகவும் இருக்கிறது.

தென்கிழக்காசிய நாடுகள் மீது புகைமூட்டப் போர்வைகள் என்பது அழையா விருந்தாளிகள். இன்று நேற்று நடக்கும் சமாசாரம் அல்ல.

1997-ஆம் ஆண்டில் தொடங்கிய ஆராதனைகள். இன்றும் தொடர்கின்றன. ஆனால் மக்களை நோகடிக்கும் அலைகழிப்புகள் எனும் பட்டப் பெயரில் பட்டயம் கட்டுகின்றன. 




காடுகளும் மேடுகளும் மறைந்து போகின்றன. ரோடுகளும் வீடுகளும் தெரியாமல் போகின்றன. நீலவானத்து மேகம் சாம்பல் கூடமாகிறது. பச்சைக் காடுகள் சாம்பல் காடாகின்றன. முகத்தை மூடிக் கொண்டு போகிற நிலைமை.

மூச்சு இழுத்து விட்டால் முகத்தில் அறையும் அமில நெடிகள். ஆக நம்ப நாட்டில் புகைமூட்டம் வந்தாலே போதும். இந்தோனேசியாவில் காடுகள் எரிகின்றன என்று பாலர் பள்ளி மாணவர்களே முகம் சுழிக்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் மாமியார் வீட்டுக்கு மருமகன் வந்து போவது வழக்க தோசம். அது போல மலேசியாவுக்கு புகைமூட்டம் வந்து போவது பழக்க தோசம். கேட்க ரொம்ப நல்லா இருக்கிறது இல்லீங்களா.

இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு மூன்று நாட்களாக மழை. ஒரு மாதத்திற்குப் பிறகு நீலவானம் அதிசயமாய்ச் சிரிக்கிறது.

இந்த காட்டுத் தீ சம்பவங்களுக்கு என்ன தான் காரணம். ஒவ்வோர் ஆண்டும் காடுகள் ஏன் தான் எரிக்கப் படுகின்றன?

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரையில் 328,724 ஹெக்டர் அளவு காடுகள் எரிக்கப்பட்டு உள்ளன. 




மிகவும் அதிகமாகப் பாதிக்கப் பட்டவை மேற்கு மத்திய களிமந்தான் காடுகள். அடுத்து ரியாவ் தீவுகள். அதற்கும் அடுத்து ஜாம்பி; தென் சுமத்திரா காடுகள்.

இந்தோனேசியாவை மட்டும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்ல முடியாது. மலேசியாவிற்கும் ஓரளவிற்கு பங்கு உண்டு. நியாயமாகப் பார்ப்போம்.

ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையில் இந்தோனேசியாவில் வறட்சிக் காலம். இந்தக் காலக் கட்டத்தில் தான், காட்டுத் தீ சம்பவங்களின் உச்சக் கட்டம். இந்தோனேசிய விவசாயிகள் களம் இறங்கி கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.

செம்பனை நடுவது; ஆடு மாடுகள் வளர்ப்பது; மீன்குளங்கள் வெட்டுவது. இவை போன்ற சின்னச் சின்ன வேளாண்மைகள். அந்தச் சாக்கில் சின்னதாய்க் காடுகளுக்கு நெருப்பு வைக்கிறார்கள். அதுவே கட்டுக்கு அடங்காமல் காட்டுத் தீயாக விஸ்வரூபம் எடுக்கிறது.




மிகவும் அதிகமாகப் பாதிக்கப் படுவது இந்தோனேசியா தான். நமக்கே இங்கே இப்படி என்றால் அங்கே எப்படி இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

போர்னியோ களிமந்தான் பகுதியின் தலைநகரம் பாலங்காராயா. ஒரு வாரத்திற்கு முன்னர் அங்கே காற்று மாசுபாடு குறியீடு (ஏ.பி.ஐ) அளவு எவ்வளவு தெரியுங்களா. சொன்னால் மயக்கம் வந்து விடும்

இரண்டாயிரம் (2000). காற்று மாசுபாடு குறியீடு 200-க்கும் அதிகமானால் இங்கே நாம் பள்ளிக்கூடங்களை மூடி விடுகிறோம். காற்று மாசுபாடு குறியீடு 301 - 500 என்றாலே ஆபத்து. ஆனால் அங்கே பத்து மடங்கு அதிகமாக இருந்தது. மக்கள் எப்படி அவதிப்பட்டு இருப்பார்கள்.

2015-ஆம் ஆண்டில் இந்தோனேசியா படுமோசமான புகைமூட்டத்தை எதிர்க் கொண்டது. 500,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். 70 பில்லியன் ரிங்கிட் வருமானம் இழப்பு. வேறு வழி இல்லாமல் இந்தோனேசியா அவசர காலத்தைப் பிரகடனம் செய்தது.

https://www.bbc.com/news/world-asia-34265922

மலேசியாவில் நான்கு முறை (1997, 2006, 2013, 2015-ஆம் ஆண்டுகளில்) படுமோசமான புகைமூட்டங்கள். 1997-ஆம் ஆண்டு கூச்சிங் நகரில் காற்று மாசுபாடு குறியீடு 860-ஐ தாண்டியது. 




அந்த ஆண்டில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, புருணை ஆகிய நாடுகளைப் புகை மூட்டங்கள் ஒட்டு மொத்தமாக மூடி விட்டன. 2013-ஆம் ஆண்டில் மலேசியா, மூவார் நகரத்தில் இரண்டு நாட்கள் அவசரகால நிலை.

2015-ஆம் ஆண்டில் இந்தோனேசியா நாட்டையே புகைமூட்டம் மூடிக் கொண்டது. 196 பில்லியன் ரிங்கிட் நட்டம்.

காடுகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து விவசாயம் செய்வது என்றால் செலவு அதிகமாகும். வெட்டிய மரங்கள் சிதைந்து போக அதிக காலம் பிடிக்கும். ஓர் ஏக்கர் காட்டை அழிப்பதற்கு 500 ரிங்கிட் பிடிக்கும்.

அதற்குப் பதிலாக ஒரேயடியாக நெருப்பு வைத்து விட்டால் ஓர் ஏக்கருக்கு 6 ரிங்கிட் மட்டுமே செலவு. ஆக 494 ரிங்கிட் மிச்சம். அதனால் தான் நெருப்பு வைப்பது சுலபமாகப் போகிறது. அது அடிப்படைச் செலவு தான். இன்னும் இருக்கிறது.




சதுப்பு நிலங்களில் காடுகள் அழிக்கப் பட்டதும் அங்கே இருக்கும் கரிய நீர் வெளியேற்றப் படுகிறது. இருந்தாலும் விவசாயம் செய்வதற்குச் சரியாக அமையாது. உரச் சத்து குறைவாக இருக்கும். அமிலத் தன்மையும் (pH) அதிகமாக இருக்கும்.

சில இடங்களில் உரம், இரசாயனம், சுண்ணாம்புக் கலவை போன்றவை மண்ணில் கலக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய செலவாகும்.

ஓர் ஏக்கருக்கு எப்படியும் 1000 ரிங்கிட்  செலவாகும். இந்தச் செலவுகளைத் தவிர்க்க ஒட்டு மொத்தமாக நெருப்பு வைத்து விடுகிறார்கள்.

இப்படி பெரிய அளவில் நெருப்பு வைப்பதைப் பெரிய பெரிய நிறுவனங்கள் தான் செய்கின்றன. ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தித் தள்ளுகிறார்கள்.

சின்னச் சின்ன விவசாயிகள் அஞ்சு பத்து ஏக்கர் என்று சின்னதாக முடித்துக் கொள்வார்கள். பாதிப்புகள் மிகவும் குறைவு. 




பெரிய பெரிய முதலைகள் தான் ஆயிரக் கணக்கான ஏக்கர் காடுகளில் நெருப்பு வைக்கும் சடங்குகளுக்குச் சூடம் சாம்பிராணி போடுகிறார்கள்.

இந்தப் புகை மூட்டங்களுக்கு அவர்கள் தான் தலையாய காரணம். ஏழை விவசாயிகள் அல்ல.

இப்படி காடுகளுக்கு நெருப்பு வைத்து மிச்சப் படுத்தும் காசு பணத்தில் நல்ல ஒரு கணிசமான தொகை அரசியல்வாதிகளின் சுகவாசத்திற்குச் சகவாசமாய்ப் போய்ச் சேர்கிறது.

அவர்களும் சந்தோஷமாய்ச் செலவு செய்கிறார்கள். இது ஒன்றும் கற்பனை அல்ல. உண்மை. உண்மை.

இந்தக் கட்டத்தில் டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே எனும் பாடல் நினைவுக்கு வருகிறது. பட்டுக்கோட்டையாரின் வரிகள். 




கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சி போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்

எனும் வரிகளும் சரியாகப் பொருந்தி வருகின்றன.

எரியும் காட்டில் இருந்து மில்லியன் கணக்கில் காசு கள்ளத் தனமாய் வருகிறது. அந்தக் காசில் சில மேல் ஆதிக்கங்கள் தொலை தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைச் சொர்க்கத்தில் கும்மாளம் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அதே நேரத்தில் இங்கே ஏழைப் பாமர மக்கள் மூச்சுத் திணறி மூர்ச்சையாகிச் செத்தும் போகிறார்கள்.

இந்தப் பிரச்சினை மலேசியா இந்தோனேசியா (Indonesia vs Malaysia) இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை இல்லை. பணக்கார முதலைகளுக்கும் பாமரச் சாமானியர்களுக்கும் இடையிலான பிரச்சினை.

பல பத்தாண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் தொடர்கின்றன. துவைத்துக் காயப் போட்டு மீண்டும் துவைத்துக் காயப் போடும் பிரச்சினையாகவே பயணித்துக் கொண்டு இருக்கிறது. 
 

அதிசயத்திலும் அதிசயமாகச் சின்னச் சின்ன மாற்றங்கள். அவற்றை எதையும் வரலாற்றுச் சுவடுகளில் பதிவு செய்து விட முடியாது.

அங்கே இந்தோனேசியக் களிமந்தான் காடுகளில் நெருப்பு பிடித்து எரிகிறது. ஆனால் இங்கே அப்பாவி மலேசிய மக்கள் அவற்றின் வேதனைகளை தேவை இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்களே... அக்கரை எரிகிறது. இக்கரை அழுகிறது. சுத்தமான அவமானம். 

அரசியல் நடிகர்களின் அடிப்படைப் போக்கு மாற வேண்டும். அதுவரை நாம் இந்த அலங்கோலத்தை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

மக்களிடம் வருமானத்தைப் பெருக்கிக் காட்டுவது ஒரு அரசியல் பாவனையாக இருக்கலாம். புகை மூட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம் நாட்டின் மற்ற மற்ற புகைப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டி உள்ளது.

உலகின் பல நாடுகள் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் (renewable energy) துறைகளில் இறங்கி தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இங்கே மூன்றாவது கார் தயாரிப்புத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

தவறாக நினைக்க வேண்டாம். அதிக வாகனங்கள் அதிகப் புகைச்சல். அதிகப் புகைமூட்டம். 1980-ஆம் ஆண்டு தொழில்துறை நினைவுகளைத் தவிர்க்கலாமே.





அடுத்து இந்த கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு. நீண்ட காலத்திற்கு லாபம் தரும் திட்டமாக அமையுமா. அந்தத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் சொல்லி இருக்கிறார். நினைவு கூர்கிறேன்.

2002-ஆம் ஆண்டில், எல்லை கடந்த காற்றுத் தூய்மைக் கேடு ஒப்பந்தத்தை (Asean Agreement on Transboundary Haze Pollution) மலேசியா கொண்டு வந்தது.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டில் இந்தோனேசியா வேண்டா வெறுப்பாகக் கையொப்பம் போட்டது. அதோடு சரி. கும்பகர்ணனுக்குச் சகலைபாடியாக அந்த ஒப்பந்தம் தூங்கி வழிகிறது.

இப்போது நடக்கும் புகைமூட்டக் கூத்துகளுக்கு இந்தோனேசியாதான் காரணம் என்று மலேசியா விரல் நீட்டுகிறது. அது எல்லாம் ஒன்றும் இல்லை.

உங்கள் நாட்டைச் சேர்ந்த நான்கு பெரிய கம்பெனிகள் தான் எங்கள் நாட்டில் எரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று இந்தோனேசியா பதிலடி கொடுக்கிறது.

ஒப்பந்தங்களை எல்லாம் கடுதாசிகளில் எழுதி வைத்ததோடு சரி. அப்புறம் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாக இல்லை. தூசு தட்டி எடுக்க இன்னொரு அரசாங்கம் வர வேண்டி இருக்கிறது.

அப்படியே வந்தாலும் புதுசாக ஒன்றும் வாசிக்காது. பழைய குருடி கதவைத் திறடி கதை தான். அரசியல் பிளேட்டைத் திருப்பிப் போட சொல்லியா தரணும்?






நீல உத்தமன் ஒரு நீலநயனம்

எகிப்திய நைல் நதிக் கரையில் கிளியோபாட்ரா ஒரு நீலநயனம் என்றால் இந்தியத் தக்காணப் பீடபூமியில் ஓர் அசோகர். நீலநயனங்களிலேயே கோபுரம் பார்த்த கோமகன். 



அதே போல மலையகத்தின் சுவர்ணபூமியில் மாறன் மகாவம்சன் ஒரு நீலநயனம் என்றால் சுமத்திரா சுவர்ணதீபத்தில் மகாராஜா நீல உத்தமன் ஒரு நீலநயனம்.

சுவர்ணபூமியில் கடாரம் கங்கா நகரங்கள் உருவாகின. அதே பாவனையில் சுவர்ணதீபத்தில் சிங்கை மலாக்கா நகரங்கள் உருவாகின. அபிராமி அந்தாதிகளாய்ப் பரிணமித்தன. அன்று புகழ் பாடின. இன்றும்  தொடர்ந்து பாராயணம் பாடுகின்றன.

அந்த வகையில் சுவர்ணதீபத்தின் அழகிய நயனம் சிங்கப்பூர். அதை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் அதே நீல உத்தமன் தான். 




அதற்கு நன்றிக் கடனாக, இந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சிங்கப்பூர் அரசாங்கம் நீல உத்தமனுக்கு ஒரு பளிங்குச் சிலையை உருவாக்கிப் பெருமை செய்து இருக்கிறார்கள்.

அந்தப் பளிங்குச் சிலை சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. உலகமே வியந்து பார்க்கிறது.

சிங்கப்பூர் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு மூன்று பெரியவர்கள் அடையாளப் படுத்தப் படுகிறார்கள். மூத்தவர் நீல உத்தமன். அடுத்தவர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ். மூன்றாவதாக லீ குவான் இயூ. மறக்க முடியாத மனிதர்கள்.

Four new sculptures have joined the statue of Sir Stamford Raffles along the Singapore River for the Singapore Bicentennial.

The statues of Sang Nila Utama, Tan Tock Seng, Munshi Abdullah and Naraina Pillai were unveiled on Friday (Jan 4) in recognition of the diverse communities and people who have shaped Singapore over the years.

https://www.channelnewsasia.com/news/singapore/singapore-bicentennial-river-statues-raffles-history-pioneers-11086338



பேஸ்புக் அன்பர்களின் பின்னூடங்கள்




Kalai Selvam: நன்றி ஐயா. நன்றியுடைவர்களும், நன்றி மறவாதர்களும் சிங்கையர்களே. நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh: நன்றிங்க.... மனிதநேயம் கொண்டவர்கள்... நன்றி மறவாதவர்கள்...

Sathya Raman: சிறப்பு... மிகச் சிறப்பு சார். சிங்கப்பூர் ஒரு சின்ன நாடு. ஆனால் எல்லா வகையிலும் சிங்காரமாய்த் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் பொது வாகனத்திற்காகக் காத்திருந்த போது அங்குள்ள சாலைகளைச் சில தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவிக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரிப்பட்டுப் போனேன்.

அங்கு டாக்ஸி ஒட்டுவதற்குச் சிங்கப்பூரில் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்க படுவதாக அறியப் பட்டேன் .தூய்மையும், எல்லா இனத்தவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பின்பலமும், நீண்டு வளர்ந்த நெடுமரங்கள் அங்குள்ள சாலைகளுக்குப் பேரழகு.

பள்ளியில் வரலாற்று பாடத்தில் சங் நீல உத்தமனைப் பற்றி படித்து இருக்கிறேன். ஆனால் அவருக்குப் பளிங்குச் சிலை வடித்து பார் புகழ முதன்மையானதாய் முன்னெடுத்த சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஒரு தலை வணக்கம்... வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் படைப்பாளராய்ப் படிப்பவர்களுக்குத் தகுந்த தகவலை நல்லதொரு பதிவாய்த் தந்ததற்கு நன்றிங்க சார்.





27 செப்டம்பர் 2019

கோபியோ மாநாடு

கோலாலம்பூரில் அனைத்துலக கோபியோ மாநாடு (Global organization of People of Indian Origin) செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமைப்பு என்பதை ’கோபியோ’ (GOPIO) என்கிறார்கள். கடல் கடந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Global organization of People of Indian Origin.

1989-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1-ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலாவது இந்திய வம்சாவளி மக்களின் மாநாட்டில் இந்த கோபியோ அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது.

தோற்றுவித்தவர் டாக்டர் தாமஸ் அபிரகாம் (Dr. Thomas Abraham). 2004-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். இப்போதைய தலைவர் நிராஜி பாக்சி (Niraj Baxi). அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்தது.

இந்த அமைப்பு இந்திய வம்சாவளி மக்கள் சார்ந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றது. (The initial thrust of GOPIO was fighting human rights violation against people of Indian origin.)

இந்த ஆண்டு 13-ஆவது அனைத்துலக மாநாடு. இன்று செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

ஐந்து துணை மாநாடுகள்

1. சமூக, கலாசார, மொழி, கல்வி மாநாடு

2. வர்த்தக மாநாடு

3. பாரம்பரிய மருத்துவ உடல்னல ஆரோக்கிய மாநாடு

4. டிஜிட்டல் நிறுவனவியல் மாநாடு

5. இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்திய வம்சாவளிகளின் சுற்றுலா - சுற்றுப்பயண மாநாடு.

வெளிநாடுகளில் இருந்து 100 பேராளர்கள். மலேசியாவில் இருந்து 400 பேராளர்கள்.


இந்த அமைப்பின் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் அண்மைய காலங்களில் மனநிறைவு அளிப்பதாக அமையவில்லை எனும் குறைபாடு சற்றே பரவலாக நிலவி வருகிறது. கல்வியாளர்கள் பலரின்  ஈடுபாடுகள் நலிந்து வருவதாகவும் சொல்லப் படுகிறது.

(Although this has been improved in the last decade, human rights violations continue to be a major issue for PIOs living outside India. GOPIO has now set its priorities in pooling its resources, both financial and professional, for the benefit of PIOs, the countries they come from and India)

இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.

(பி.கு. இந்த மாநாடின் சமூக, கலாசார, மொழி, கல்வி துணை மாநாட்டில் ‘மலேசியாவில் இந்திய வம்சாவளி வரலாற்று மீட்சிகள்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு... இயலவில்லை.)


கோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள்

*தமிழ் மலர் செய்தி - 07.10.2018*

மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய காலத்துக் தாமரைப் கற்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 



ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியில் அந்தத் தாமரைப் படிவங்கள் காணப் பட்டதாக ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் கூறினார்.

இந்தத் தாமரைப் கற்படிவங்கள் தொடர்பான ஆவணங்கள் ஜொகூர் அருங்காட்சியகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அருங்காட்சியக அதிகாரிகளும் அதைப் பற்றி விரைவில் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர்.
மீட்புக் குழுவின் தலைவர் கணேசன்
கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன. அவை ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.

இங்கே சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் சில தாமரைப் படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் படிவங்கள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் துணை அரசு இயங்கி வந்துள்ளது. புத்த மதம் வேரூன்றி இருந்துள்ளது. அந்தச் சமயத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு இராஜேந்திர சோழனின் கடல் படைகளினால் தாக்கப்பட்டு அந்தப் பேரரசு நிர்மூலமானது.

ஸ்ரீ விஜய பேரரசைத் தாக்கிய இராஜேந்திர சோழன் அடுத்ததாக கோத்தா கெலாங்கியில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கோட்டைகளையும் பொதுமக்கள் குடியிருப்புகளையும் தாக்கித் தவிடு பொடியாக்கி விட்டான். பின்னர் மலாயா தீபகற்பத்தின் வடக்கே இருந்த கடாரத்தையும் தாக்கினான்.

26 செப்டம்பர் 2019

தஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம்

உலகை ஆண்ட பெரும்பாலான மன்னர்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்களாகவே வாழ்ந்து மறைந்து போய் இருக்கிறார்கள். அந்த மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. 


அசோகனின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. புஷ்யமித்திர சுங்கனின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. ஜெங்கிஸ்கானின் வரலாற்றுப் பாத்திரம் என்பது வேறு. ஔரங்கசிப்பின் வரலாற்றுப் பாத்திரம் என்பதும் வேறு. சரி.

இராஜாராஜன் ஏன் அப்பேர்ப்பட்ட பிரும்மாண்டமான ஒரு பெரிய கோயிலைக் கட்டினார். அந்தக் கோயிலின் கம்பீரத்தின் மூலமாக எதைச் சொல்ல நினைத்தார். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இராஜாராஜ சோழன் காலத்தில் தொடர்ச்சியாகப் பற்பல போர்கள். கேரளப் போர், குடமலை நாட்டுப் போர், ஈழப் போர், மைசூர் போர், வேங்கிப் போர், மாலைத் தீவுகள் போர், தென்கிழக்காசிய கடல் போர் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. அவருக்குப் பின அவருடைய மகனும் தொடர்ந்தார்.

(சான்று: Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press.)

கடாரம் (கெடா) வீழ்த்தப் பட்டது;

கங்கா நகரம் (புருவாஸ், பேராக்) அழிக்கப் பட்டது;

கோத்தா கெலாங்கி (ஜொகூர்) கோட்டைகள் தரைமட்டம் ஆக்கப் பட்டது;

ஸ்ரீ விஜயா பேரரசு (சுமத்திரா) சின்னா பின்னம் ஆனது.

இவற்றை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்தக் காலக் கட்டத்தில், பகாங் மாநிலத்தில் ஓர் இந்திய சாம்ராஜ்யம் இருந்தது. அதுவும் அழித்து ஒழிக்கப் பட்டது. அதையும் நாம் மறக்கக் கூடாது. இத்தனை அழிப்புகளையும் செய்தது இராஜாராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன்.

(சான்று: Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 46–49)

இராஜாராஜ சோழனுக்கு பெரிய பெரிய படைகள் இருந்தன. அந்தப் படைகளைக் கொண்டு தமிழ் நாட்டின் பல சிற்றரசுகள் வீழ்த்தப் பட்டன. தோற்றுப் போன நாடுகளின் போர் வீரர்கள் கைதிகள் ஆனார்கள். அவர்கள் ஆயிரக் கணக்கில் தஞ்சைக்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

அவர்கள் சிந்திய இரத்தம். அந்த இரத்தத்தில் இருந்து வழிந்த வியர்வை. அதில் இருந்து கிடைத்த உழைப்பு. ஆக அந்த உழைப்பில் இருந்து வந்தது தான் தஞ்சைப் பெரிய கோயில். போர்க் கைதிகள் இல்லை என்றால் இராஜா இராஜனால் தஞ்சைப் கோயிலைக் கட்டி இருக்கவே முடியாது. சத்தியமாகச் சொல்கிறேன்.

கைதிகளை மட்டும் அவன் கொண்டு வரவில்லை. அந்தக் கோயிலுக்குத் தேவையான எல்லாத் தளவாடப் பொருட்களையும் வெளி ஊர்களில் இருந்து தான் கொண்டு வந்தார்.

இராஜாராஜ சோழனை நாம் குறை சொல்ல முடியாது. வெற்றி பெற்ற அரசன் யாராகவும் இருந்தாலும் சரி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் அப்போதைக்குச் சட்டம். என்ன நினைக்கிறானோ அதுதான் அப்போதைக்கு அரச கட்டளை. அவனுடைய பேச்சிற்கு மறு பேச்சு இல்லை.

இராஜாராஜ சோழன் செய்ததை ஒரு சூறையாடல் என்று சொல்ல முடியாது. அப்படி நினைக்கவும் கூடாது. அது அவருக்குக் கிடைத்த பரிசு. அது அவர் கொண்டு வந்த பரிசு. அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜினி முகமதுவை விடவா இராஜாராஜ சோழன் கொடுமைகள் செய்து விட்டார். சொல்லுங்கள். ஜெங்கிஸ்கான் செய்யாத அட்டூழியங்களா. ஐரோப்பாவில் வைக்கிங் காட்டுமிராண்டிகள் செய்யாத அழிச் சேட்டைகளா.

இராஜாராஜ சோழனுடைய படை வீரர்களால் பல ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரிகள் சொல்கிறார். (சான்று: சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்:212.)

நீலகண்ட சாஸ்திரிகள் எப்படி எழுதி இருக்கிறாரோ அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

‘கர்நாடகா தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்தது. அதற்குச் சத்தியாசிரயன் கல்வெட்டு என்று பெயர்.

’இராஜாராஜ சோழன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் படையுடன் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தோனூர் நகரத்திற்குச் சென்றான். பெரும் போர் நடந்தது. அந்த நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான்.

இளைஞர்கள், இளங்குமரிகள் என்றும் பார்க்காமல் கொன்று குவித்தான். மலை மலையாகச் செல்வங்களைக் கவர்ந்து கொண்டு போனான். ஆயிரக் கணக்கான கன்னியர்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டான்’ என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அப்படித்தான் அந்த அறிஞர் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார்.

 (சான்று: Rajaraja began his conquests by attacking the confederation between the rulers of the Pandya and Krala kingdoms and of Ceylon" – KAN Sastri, History of South India p 164)

அப்போது நடந்ததை எல்லாம் அப்படியே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து விட்டார்கள். அதை நம்மால் மறுக்க முடியுமா. சொல்லுங்கள்.

அன்றாடம் காய்ச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட *இராஜராஜ சோழனின் பெருமிதக் காய்ச்சலால் குளிரடித்து நடுங்குகின்றனர்). ’கடாரம் கொண்டான்’ எனும் பெருமிதத்திற்குள் வீழ்ந்து விடுகின்றனர். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

அடிமைகளின் இலவச உழைப்பு ஒரு பக்கம் இருக்கிறது. போர்களில் தோற்றுப் போன நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட செல்வம் ஒரு பக்கம் இருக்கிறது. ஆக இந்த இரு வடிவங்களில் உருவானதுதான் தஞ்சைப் பெரிய கோயில்!

வரலாற்று உண்மைகளைச் சொல்லுகிறேன். மனம் புண்படலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சோழப் பேரரசின் பெயரைக் கேட்டாலே அனைவரும் அச்சத்தால் அலற வேண்டும். தன்னை எதிர்ப்பதற்குப் பத்து முறை யோசிக்க வேண்டும். அதற்காக ஒரு மாபெரும் சின்னத்தை உருவாக்க வேண்டும்.

அந்தச் சின்னத்தையே அதிகார மையமாக மாற்ற வேண்டும். அதுவே இராஜாராஜனின் தலையாய நோக்கமாக இருந்து இருக்கிறது. அவ்வாறு உருவானது தான் தஞ்சைப் பெரிய கோயில்.

இராஜாராஜன் தமிழ்நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னர் அங்கே சின்னச் சின்ன அரசுகள் இருந்தன. மலை சார்ந்த குறிஞ்சி அரசுகள். காடு சார்ந்த முல்லை அரசுகள்.

பெரும்பாலும் வேளிர் எனும் இனத்தைச் சேர்ந்த குடி மக்களே தலைவர்களாக இருந்தனர். சிற்றரசர்களாகவும் இருந்தனர். இராஜாராஜன் தலை தூக்கினான். அப்புறம் அந்தச் சின்ன அரசர்களின் தலைகளும் சீவி எடுக்கப்பட்டன.

[சான்று: http://amizhtha.wordpress.com/2011/02/06/அன்று-மனுதர்மவாதிகள்-இன/]

மருத நிலப் பகுதிகளில் இராஜாராஜனின் பேரரசு சன்னம் சன்னமாய்ப் பெரிதாக்கம் பெற்றது. தொடர்ந்தால் போல பலப் பல போர்கள். அப்புறம் என்ன பல சிற்றரசுகள் நிர்மூலமாக்கப் பட்டன. அந்த அரசுகளின் கஜானாக்கள் காலியாக்கப் பட்டன.

அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளின் அரண்மனைச் செல்வங்கள் எல்லாம் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டன. அதற்கு இராஜாராஜனின் யானைப் படைகளும் குதிரைப் படைகளும் பெரும் உதவிகளாக இருந்து இருக்கின்றன.

ஓர் எடுத்துக்காட்டு. தமிழகத்திற்கு வடக்கே நடந்த ஒரு நிகழ்ச்சி. கி.பி.1000-ஆம் ஆண்டுகளில் தார்வார் என்பது ஒரு மராட்டிய நிலப்பகுதி. அது ஒரு குட்டி அரசு. ஏற்கனவே சொன்ன தார்வார் அரசு என்பது வேறு. இது வேறு ஒரு தர்வார்.

அதன் மீது இராஜாராஜன் படை எடுத்தான். சோழப் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் ஆயிரக் கணக்கான மராட்டியப் பெண்களை மணந்தனர். அப்படியே அந்தப் பெண்களைத் தமிழ்நாட்டுக்கும் கொண்டு வந்து சேர்த்தனர் என்று ’ஹொட்டூர்’ கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

(சான்று: Gopal, Madan (1990). K.S. Gautam, ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 185.)

அப்படிப் பார்த்தால் பல ஆயிரம் தமிழர்களின் இரத்தத்திலும் மராட்டிய இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது என்றுதானே அர்த்தம். சும்மா சொல்லக் கூடாதுங்க.

சோழ மன்னர்களும் அவர்களுடைய படைகளும் தமிழ் இனத்தை ஓர் அனைத்துலக இனமாக மாற்றுவதற்குப் பெரும் முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்படித் தான் எனக்குப் படுகிறது. உங்களுக்கு எப்படி…

ஆனால் என்ன... பிடித்த இடங்களை எல்லாம் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து போனதுதான் இராஜாராஜன் செய்த மாபெரும் தப்பு.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.09.2019