06 அக்டோபர் 2019

இன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும்

ஒரு சின்னக் குட்டிக் கதை... கடவுளும் மூன்று மனிதர்களும் எனும் கதை.

ஓர் ஆற்றின் மறு கரைக்குச் செல்ல இரு ஆண்கள்; ஒரு பெண் காத்து நிற்கின்றார்கள். அப்போது கடவுள் அந்தப் பக்கமாகப் பொடிநடையில் வருகிறார். அவரைப் பார்த்ததும் கரையில் இருந்த மூவருக்கும் மகிழ்ச்சி. மண்டியிட்டு வணங்குகிறார்கள்.



கடவுளார் கேட்கிறார்... இப்போது இந்தச் சமயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்... அதை மட்டும் கேளுங்கள் என்கிறார்.

அவர்களில் ஓர் ஆண் 'ஆற்றில் நீந்திப் போக உடல் பலத்தைக் கொடுங்க கடவுளே’ என்று கேட்கிறார்.

கடவுள் உடல் பலத்தைக் கொடுக்கிறார். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியாது. வெறும் உடல் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வதாம். தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார். கடவுளார் அவரைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்து வந்து விட்டார். சரி.

இரண்டாவது ஆண். ‘எனக்கு ஒரு படகைக் கொடுங்க கடவுளே’ என்று கேட்டார். படகு வந்தது. ஆனால் அந்தப் படகில் ஒரு சின்ன ஓட்டை. படகு தண்ணீரில் மூழ்கியது. இவரையும் கடவுளார் காப்பாற்றினார்.

மூன்றாவதாகப் பெண். 'ஆற்றில் தண்ணீர் இல்லாமல் செய்து விடுங்க அன்பான கடவுளே’ என்று கடவுளிடம் தாழ்ந்து மண்டியிட்டார். தண்ணீர் வற்றியது. அந்தப் பெண் கரையைத் தாண்டி அழகாய் நடந்து போனார்.

இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித் தனமாக இப்படி நடந்து கொண்டாய்?’ என்று கேட்டார்.

'எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம். அந்த அனுபவம் தான் சரியான முடிவை எடுக்கச் செய்தது’ என்று அந்தப் பெண் சொன்னார்.

பெண்கள் எப்போதும் புத்திசாலிகள் என்று சொல்ல வரவில்லை. முடிவு எடுப்பதில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்றும் சொல்ல வரவில்லை.

ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருக்க வேண்டும். தீர்க்கமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அனுபவங்களின் மூலமாக எடுக்கும் முடிவு சிறந்த முடிவாகவும் அமையலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Chitra Ramasamy ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருக்க வேண்டும். தீர்க்கமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அனுபவங்களின் மூலமாக எடுக்கும் முடிவு சிறந்த முடிவாகவும் அமையலாம். வணக்கம். மிகவும் நிதர்சனமான உண்மை.
 
Muthukrishnan Ipoh என்னைக் கேட்டால் முடிவு எடுப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்கள்... ஆண்கள் மன்னிக்கவும்...
 
Ramaiah Paidiah என்ன?? பெண்கள் ...சரியான முடிவு எடுப்பது இல்லையா மாமா?  பிளிஸ் யோசித்து சொல்லவும்...  
 
Muthukrishnan Ipoh 😆 என்னைக் கேட்டால் முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்கள் பெண்கள் தான்
 
Ravi Devaras அருமையான நன்னெறி கதை ஐயா... அனுபவக் கல்வி வாழ்க்கையின் அடுத்த நகர்வுக்கு சிறந்த வழிக்காட்டியாக அமைகிறது. நன்றி ஐயா... 
 
Muthukrishnan Ipoh உண்மைதான் தம்பி... அனுபவமே நம்மைச் செம்மைப் படுத்துகிறது...
 
Manickam Nadeson அன்று சரியான முடிவு எடுக்காததால் இன்று அவதி அடிக்கடி வந்து தாக்குகிறது. இதை அன்றே தாங்கள் சொல்லி இருக்கலாம், நெள இட்ஸ் டூ லேட்.
 
Muthukrishnan Ipoh சொல்லும் போது நீங்க கேட்கல... பெரிய வாத்தியார் என்கிற நினைப்பில் பெரிய நினைப்புகள்... சும்மா ஜோக் சார்... 
 
Manickam Nadeson ஆமாங்க ஐயா சார், அதான் டூடூடூடூ லேட்டா தான் புத்தி வருது.
 
Muthukrishnan Ipoh Manickam Nadeson இருந்தாலும் நீங்க ரொம்ப இளமை சார்...
 
Manickam Nadeson இளமை எல்லாம் கடந்து இப்போ எதிலோ வந்து நிக்குதுங்க ஐயா சார். எப்போ எது நடக்குமோ??
 
Muthukrishnan Ipoh வயதைப் பற்றி நான் கவலைப் படுவதே இல்லை சார்... இன்னும் 20 வருசம் பயணிக்க முடியும் எனும் நம்பிக்கை என்னிடம் உள்ளது சார்... அந்த நம்பிக்கை தான் இன்றும் உடலைத் தளர விடாமல் வைத்து இருக்கிறது...
 
Melur Manoharan "அனுபவங்கள்" தான்
"வாழ்க்கை" என்பதை
அருமையாக

எடுத்துக்கூறினீர்கள்...!
"வாழ்த்துகள்"...!
 
 
Muthukrishnan Ipoh இரு கண்களில் ஒரு கண் பழுது அடைந்தால் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும்... அதுவும் ஓர் அனுபவமே தம்பி...
 
Arjunan Arjunankannaya கருத்தான கதை.காலை வணக்கம் ஐயா.
 
Sheila Mohan இனிய வணக்கம் சார்..அனுபவமிக்க
குட்டிக் கதை..
அருமைங்க சார்..
 
Muthukrishnan Ipoh நன்றிம்மா... நம்முடைய அனுபவங்கள் தான் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன...
 
  
  
 
 
 
  
 
  
 
  





மலேசியாவின் முதல் மேயர் டி. எஸ். ராமநாதன்

கூட்டரசு மலாயா வரலாற்றில் முதல் மாநகரத் தகுதியைப் பெற்ற ஜார்ஜ் டவுன் மாநகரத்திற்கு முதல் மேயராகத் தேர்வு செய்யப் பட்டவர் டி. எஸ். ராமநாதன் (D.S Ramanathan). 1958-ஆம் ஆண்டு மேயராகத் தேர்வு செய்யப் பட்டார். (1st Mayor of George Town)



மலேசியாவில் தற்சமயம் 14 மாநகரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் மாநகரம் பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன். 1956-ஆம் ஆண்டு மாநகரத் தகுதியைப் பெற்றது. மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் 1972-ஆம் ஆண்டில் தான் மாநகரத் தகுதியைப் பெற்றது.

டி. எஸ். ராமநாதன் என்பவர் மலேசியாவில் மூத்த அரசியல்வாதி; ஒரு மாநகரத்தின் முதல்வர்; ஓர் ஆசிரியர்; ஒரு தொழிற்சங்கவாதி; ஒரு கல்வியாளர். 1908 டிசம்பர் 23-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.




1952-ஆம் ஆண்டில் மலேசியத் தொழிலாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவர். (Labour Party of Malaya). அதன் தலைவராகவும் இருந்தவர்.

1959-ஆம் ஆண்டிலேயே பினாங்கில் ஒரு பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் படுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் டி. எஸ். ராமநாதன்.

பினாங்கு சட்ட சபையில் முன்னெடுப்பு செய்தார். பினாங்கு பல்கலைக்கழக திட்டச் செயலவை (Penang University Project committee) உருவானது. அதற்குத் தலைமை தாங்கினார்.

அவருடைய தீவிர முயற்சிகளினால் 1969-ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் பட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

டி. எஸ். ராமநாதன் 1920-ஆம் ஆண்டு மலாயாவிற்குப் புலம் பெயர்ந்தவர். பேராக் மாநிலத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்னர் காலத்தில் ஒரு கல்வியாளராகப் பரிணமித்தார்.




1959-ஆம் ஆண்டில் இருந்து 1962-ஆம் ஆண்டு வரையில் மலேசியாவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் (National Union of Teachers) தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1961-ஆம் ஆண்டு மலாயா தேசிய ஆசிரியர் காங்கிரஸின் (Malayan Teachers National Congress) துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

பினாங்கு மேயர் பதவிக்குப் பின்னர் பினாங்கு பைகாட் மெதடிஸ்ட் பள்ளியின் (Penang Pykett Methodist School) தலைமையாசிரியராகவும் பதவி வகித்தார். மனைவியின் பெயர் ரூத் வன்னியசிங்கம் (Ruth Vanniasingham). 1973-ஆம் ஆண்டு தன்னுடைய 65-ஆவது வயதில் கோலாலம்பூரில் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டது.




இவருடைய பெயரில் பினாங்கில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப்பட்டு பெருமை செய்யப்பட்டு உள்ளது (D. S. Ramanathan Road). மலாயாவின் வரலாற்றில் சாதனை படைத்தவர்களில் டி. எஸ். ராமநாதன் அவர்களும் ஒருவர். அன்னாரை வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/




பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Kalai Selvam ஐயா தங்களிடம் எனது அன்பான பணிவான வேண்டுகோள். இந்த அரிய செய்திகளை ஒரு புத்தகமாக நீங்களே வெளியிட்டால் சமுதாயத்திற்கு மிகவும் நன்மையாகவும் இருக்குமே. நன்றி
 
Arjunan Arjunankannaya பல தமிழர்களின் சரித்திரங்கள் உங்கள் மூலமாகத் தான் முக நூலில் பதிவிடப் படுகிறது. இது வரை யாருக்கும் தெரியாத தகவல்கள் இவை. நன்றி ஐயா தகவல்களுக்கு... பலருக்கும் தெரியாத தகவல்கள் இவை.
 
Gunasegar Manickam மிக்க மகிழ்ச்சி! தமிழனின் தலைமைத்துவம்... பாராட்டப்பட வேண்டிய சேவை.
 
Don Samsa அருமை தலைவரே. நன்றி
  
Krishnan ATawar Great Sir
 
Yogavin Yogavins Great sir
 
Arojunan Veloo மகிழ்ச்சி! அந்த நாள் இனி வருமா?
 
Murugan Rajoo சான்றுகளையும், சுவடுகளையும், தொடர்ந்து பரப்புரைகள் செய்து, சரித்திரம் படி, சரித்திரம் படை, சரித்திரமாக மாறு என்ற மேதகு தலைவர் பிரபாகரனின் வரிகளுக்கு உயிர் ஊட்டி வரும் தலைசிறந்த எழுத்தாளர் ஐயா அவர்களுக்கு... வாழ்த்துகளும்,பாராட்டுகளும்...
 
Murthy Devi Vallthukal aya ungkalaipondru enthamannil kedaithathu engkalin baakiam(n) aya kalaiselvattin karutthuku nandrikal.

(வாழ்த்துகள் ஐயா. உங்களைப் போன்று இந்த மண்ணில் கிடைத்தது எங்களின் பாக்கியம்... ஐயா கலைச் செல்வத்தின் கருத்துக்கு நன்றிகள்.)
 
Manimaran Govindaraj கண்டெடுத்த முத்து.
 
Ramesh Yamuna அருமையான பதிவு ஐயா
 
MA Chandran நன்றி இச்செய்திக்கு