18 நவம்பர் 2019

கேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம்

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். 


அந்த வகையில் இயற்கை அழகின் சிகரமாய் விளங்குவது ... தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் இந்த மலைப் பிரதேசம் அமைந்து உள்ளது. வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும்.

1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத்தளமாக விளங்கியது. வருடத்தைக் கவனியுங்கள். இருந்தாலும் 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகே புகழ் பெற்றது. அடர்ந்த காடுகளாக இருந்த பகுதிகளில் முதலில் ஒரு குறுகலான மண்பாதை போடப் பட்டது.

அதன் பிறகு சாலைகளை அமைத்தார்கள். தமிழர்கள் நிறையவே சாலை அமைப்புகளில் ஈடுபட்டார்கள். கேமரன் மலை வரலாற்றில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. உறவினர்கள் பலர் அங்கு உள்ளனர்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Sathya Raman: கேமரன் மலையைப் பற்றிய நிறைய பதிவுகளை நீங்கள் எழுதினாலும் எனக்கு மட்டும் என்றுமே சலிக்காமல், திகட்டாத கட்டுரைகள் சார். என் நினைவுகள் வாழ்ந்த, இன்னமும் வாழும் இடங்கள் என்பதால் நன்றிங்க சார்.🙏


Muthukrishnan Ipoh: கேமரன் மலையில் நிறைய இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன... பலருக்கும் தெரியாத இரகசியங்கள்... வாய்ப்பு கிடைக்கும் போது வெளிக் கொணர முயற்சிகள் செய்வோம்... கருத்துகளுக்கு நன்றிங்க....


Melur Manoharan: "இனிய" காலை வணக்கம் ஐயா...!


Kumarasamy G P Govindasamy: கேமரன் மலையில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகவும், அதன் ஆரம்பத்தில் தொழிலாளர்களை எங்கு இருந்து வருவித்து தொழில் தொடங்கப்பட்ட வரலாறு யாராவது எழுதி உள்ளார்களா ?


Kumaravel Muthu Goundan: வரலாறு என்று யாரும் எழுதவில்லை...1940/50- களில் கேமரன் மலையில் வாழ்ந்த கவிதைவேள் கா.பெருமாள் அவர்கள் போ தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வியலை வானொலி மூலமும் கதை கட்டுரைகளின் வழி சங்கமணி வார இதழ்களிலும் வெளியிட்டுள்ளார்.

1920 முதல் 1950-கள் வரை தமிழ் நாடு நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் இருந்து வெள்ளைக்கார முதலாளிகளின் தரகர்கள் ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்களைக் கேமரன் மலையில் உள்ள போ தோட்டம் உள்பட 7 தேயிலைத் தோட்டங்களை உருவாக்க கொண்டு வரப்பட்டனர்.

அன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட தோட்டங்களில் நூற்றுக் கணக்கான தமிழ் குடும்பங்கள் வேலை செய்த இடத்தில் இன்று சில பத்து தமிழ் குடும்பங்களே வேலை செய்கின்றனர்.

இன்று கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் உள்பட பூந்தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்திலும், வங்களாதேசிகள், இந்தோனேசியர்கள், நேப்பாளிகள், மியன்மாரிகள் மற்றும் இந்தியர்கள் என ஆயிரக் கணக்கான அந்நிய நாட்டவர்கள் நல்ல வருமானத்தில் வேலை செய்வதுடன் நிலத்தை வாடகைக்கு எடுத்து சொந்த விவசாயம் செய்வதுடன் பலர் மினி மார்க்கெட், முடி திருத்தகம், உணவகம், தங்கும் விடுதி போன்ற பல் வகை வர்த்தகங்களிலும் ஈடுபட்டு கணிசமான வருமானத்தை ஈட்டி வசதியுடன் வாழ்கின்றனர்.

மலேசியாவில் எந்தப் பகுதியிலும் இல்லாத வேலை மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் கேமரன் மலையில் கொட்டிக் கிடக்கின்றன!

கேமரன் மலையில், அந்நிய நாட்டவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரிந்த அளவு, மலேசியாவில் பிற பகுதியில் வாழும் வேலை வாய்ப்புக்கள் இல்லாத இந்தியர்கள் கேமரன் மலையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏன் அக்கறை காட்டவில்லை என்பது தான் புரியவில்லை!


Muthukrishnan Ipoh >>> Kumaravel Muthu Goundan:
நல்ல தகவல்... நல்ல வரலாற்றுப் பின்னூட்டம்... முடிந்த வரையில் பயன்படுத்திக் கொள்வோம்... நன்றிங்க ஐயா...


Kumaravel Muthu Goundan >>> Muthukrishnan Ipoh: இன்றும் உழைப்பதிலும் சேமிப்பதிலும் கேமரன் மலை இந்தியர்களுக்கு சிறப்பான இடம் உண்டு. விவசாயம், கடை வர்த்தகம், தங்கும் விடுதி, சொத்து முதலீடு, மற்றும் பிள்ளைகளின் உயர் கல்வி போன்ற எல்லாவற்றிலும் சீனர்களுக்கு ஈடாக கேமரன் மலை இந்தியர்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பது நிதர்சனம்.


Arjunan Arjunankannaya: என்ன வளம் இல்லை திருநாட்டில். உழைக்காத சோம்பேறிகள் கையில் சிக்கிய நாடு எப்படி சீரும் சிறப்பாய் இருக்கும். எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. இன்று வட்டி கட்டும் நாடாகிவிட்டது. சரியா அண்ணா?


Sathya Raman >>> Arjunan Arjunankannaya: வட்டி கட்டுகிறோம் என்று வடிகட்டிய முட்டாளாக்கப்பட்டு வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை சார். நான் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகளின் பேச்சும் அல்லூறு தண்ணீரும்... 🤔


Muthukrishnan Ipoh: உண்மைதான் தம்பி... ஊட்டி ஊட்டி வளர்த்து சோம்பேறிகளாக ஆக்கி விட்டார்கள்...


Muthukrishnan Ipoh: சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.... அரசியல் என்பது இப்போதைக்கு தனி ஒருவரின் நலனுக்காகப் பயன்படும் வாகனமாகத் தெரிகின்றது...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: சோம்பேறிகளுக்குத் தான் இந்த நாடு சொந்தம், சொர்க்கம் என்கிறார்களே சார்.


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உண்மையிலும் உண்மை சார். அதற்குத் தான் ஆரம்பக் கட்ட ஆப்புக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.


M R Tanasegaran Rengasamy: தமிழன் கைப்படாத இடம் ஏதுன்னேன். தமிழன் போகாத இடங்கள் காய்ந்து கிடக்கும். இல்லை கானகமாய்க் கிடக்கும். நம்ம வியர்வைத் துளி பட்டால் மண்ணும் பொன்னாகும்.


Muthukrishnan Ipoh: உழைக்கப் பிறந்து உழைப்பால் வாழ்ந்து காட்டிய இனம் தமிழர் இனம்... உண்மைங்க...

Ramarao Ramanaidu >>> Muthukrishnan Ipoh: உழைப்பின்றி உயர்வேது வாழ்வில்?


Sunthararajoo Msrajoo: தற்பொழுது பச்சையாகிவிட்டது.


Muthukrishnan Ipoh: நன்றாகவே தெரியத் தொடங்கி விட்டது


Sheila Mohan: இனிய வணக்கம் சார்..


Sudar KS: காலை வணக்கம் ஐயா..


பாக்ய ராஜ் மதுரை:
இனிய காலை வணக்கங்கள்


Mageswary Muthiah: இனிய காலை வணக்கம்


Malathi Nair: Good morning anna.


Sundaram Natarajan: Inniya Kaalai Vanakam Anna


Inbachudar Muthuchandran >>> Muthukrishnan Ipoh: அங்கு தமிழர்களுக்கு சொந்தமான புளு வெளி தோட்டம் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. அது தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக இருந்தது.


Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க.... புளு வேலி தோட்டம் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தனி இடம் பெற்றது... 1995-ஆம் ஆண்டில் அருகில் இருந்த ரிங்லெட்டில் நண்பருடன், கொஞ்ச காலம் இடியப்பம் வியாபாரம் செய்து இருக்கிறேன்... 😃


Govind Bala >>> Inbachudar Muthuchandran: புளு வேலி தேயிலை தோட்டத்தை என்றோ விற்று விட்டார்கள் கூட்டுறவு சங்கத்தினர்.


Muthukrishnan Ipoh: தெரியும் ஐயா... 1990களில் என்று நினைக்கிறேன்...


Manickam Nadeson: அங்க இப்போது இயற்கையும் இல்லை அழகும் இல்லை. அது ஒரு கனாக் காலமாகி விட்டது.


Muthukrishnan Ipoh: உண்மைதான் ஐயா...


Ramarao Ramanaidu: ஆமாம்... கேமரனுக்கு என்ன ஆயிற்று? எங்கே அவர்? தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் பதிலை ...


Jainthee Karuppayah: இனிய வணக்கம் சகோதரரே... அருமை தமிழ் ... அண்மையில் தங்களின் புத்தகம் ஒன்றை நண்பர் அரவிந்தன் வாயிலாகப் படித்து மகிழ்ந்து இருக்கிறேன். சிலருக்கு மட்டுமே தமிழ் வார்த்தைகள் அத்துணை அழகாக வருகின்றன. தாங்கள் ஒருவர். வாழ்த்துக்கள்


Muthukrishnan Ipoh: மிக நன்றிங்க.... மகிழ்ச்சியாக உள்ளது...


Shantakumar Dilip: கலை வணக்கம் ஐயா


Vijikrish Krishnasamy:
Kaalai vanakkam aiya.


இனாயத் கான் இந்திய வீராங்கனை

தமிழ் மலர் - 18.11.2019

எத்தனையோ மலேசிய வீராங்கனைகள்; எத்தனையோ இந்திய வீராங்கனைகள்; எத்தனையோ உலகப் புகழ் வீராங்கனைகள். அவர்களின் வரலாறுகளை எல்லாம் பார்த்து இருக்கிறோம். படித்து இருக்கிறோம். 



அந்த வரலாறுகளில் எல்லாம் தனித்து நிற்கும் ஓர் இந்திய வீராங்கனையின் வரலாறு வருகிறது. தன் நாட்டிற்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த ஓர் அழகிய மகளின் வரலாறு. உளவாளிகளின் இளவரசி எனும் பெயருடன் உலக வரலாற்றில் வலம் வரும் ஒரு வீரப் பெண்மணியின் வரலாறு.

அவர் தான் நூர் இனாயத் கான். மலாயாவில் ஒரு சிபில் கார்த்திகேசு என்றால் இங்கிலாந்தில் ஓர் இனாயத் கான்.

மைசூரை ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். மாபெரும் வீரர். இறுதி வரை தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். அவரின் கொள்ளுப் பேரன் இனாயத் கான். அந்த இனாயத் கானின் மகள் தான் இந்த நூர் இனாயத் கான். 



அந்த வகையில் நூர் இனாயத் கான் ஓர் இந்திய இளவரசி. மைசூர் திப்பு சுல்தானின் நேரடி வாரிசுகளில் ஒருவர். வீரமிக்க பரம்பரையைச் சேர்ந்த வீராங்கனை. அவரின் வரலாற்றைப் பார்ப்போம். அதற்கு முன்னர்...

வீராங்கனை நூர் இனாயத் போல இன்னும் எத்தனையோ வீரங்கனைகள் நமக்குத் தெரியாமல் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனைகளை வெளியுலகத்தில் கட்சிப் படுத்த வேண்டும். அவர்களின் வரலாறு இலைமறைக் காய்களாக மறைந்து போய் விடக்கூடாது.

இனம், மொழி, சமயம் தாண்டிய மாமனிதர்களைப் பற்றி நம்முடைய வாரிசுகள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். நாம் மறைந்த பின்னரும் அந்த மாமனிதர்களுடன் அவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதுவே நம்முடைய இலக்காக அமைய வேண்டும். சரி.



நூர் இனாயத் கான் (Noor Inayat Khan) 1914 ஜனவரி 1-ஆம் தேதி மாஸ்கோவில் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் நால்வர். இவர் தான் மூத்தப் பெண். இரண்டாவதாக விலாயாத் (Vilayat 1916–2004); மூன்றாவதாக ஹிடாயாத் (Hidayat 1917–2016); நான்காவதாக (Khair-un-Nissa 1919–2011).

தந்தையார் ஐரோப்பாவில் ஓர் இசையாளர். சுபிசம் சமய நெறி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

நூர் இனாயத் கானின் குடும்பம் அவரின் சிறுவயதிலேயே ரஷ்யாவில் இருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்தது.

பிரான்சில் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டார். குழந்தைகளுக்கான கதைகள் எழுதும் வேலை செய்தார். பிரான்சு ஜெர்மனியிடம் வீழ்ந்த பின்னர் இவரின் குடும்பம் இங்கிலாந்திற்குச் சென்றது. அங்கே கொஞ்ச காலம் ஆசிரியராகச் சேவை செய்தார்.

ஒரு சுருக்கம். நூர் இனாயத் கான் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின் சார்பில் இரகசிய உளவுப் பணியில் ஈடுபட்டவர். இவரைப் பிரான்ஸிற்கு அனுப்பி வைத்தவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். 



வீராங்கனை நூர் இனாயத்தின் மற்றொரு பெயர் நோரா பேக்கர். மறுபடியும் சொல்கிறேன். இவரின் பரம்பரையே ஒரு வீரப் பரம்பரை. உலகப் புகழ் திப்பு சுல்தானின் வாரிசுகளில் தலையாயத் தலைமகள். மாபெரும் நெஞ்சுரம் கொண்டவர். பெருமையாக இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டை நாஜி படைகள் ஆக்கிரமித்த போது, அங்கு உளவுப் பணிக்காக அவர் இங்கிலாந்தில் இருந்து அனுப்பப் பட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

அதுதான் போர் முனைக்குப் போகிறவர்கள் எல்லாம் செத்துக் கொண்டு இருக்கிறார்களே. பற்றாக்குறை ஏற்படாமல் என்ன நடக்கும். அதனால் பெண்களையும் இராணுவத்தில் ஆள் சேர்க்கும் பணி.

அந்த வகையில் பெண்களுக்கான இராணுவப் பிரிவில் நூர் இனாயத், தன்னை இணைத்துக் கொண்டார். கம்பியில்லாத் தந்தி மூலமாகத் தகவல்களை அனுப்புவதில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப் பட்டன.

1943-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி மேடலின் (Madeleine) என்கிற வேறொரு பெயரில் பிரான்ஸ் நாட்டின் வட பகுதியில் தன் பணியைத் தொடங்கினார்.
ஜெர்மனியின் தாக்குதல் பற்றியும்; நாஜிகளின் திட்டங்கள் குறித்தும் இங்கிலாந்திற்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் உளவு வேலை (Special Operations Executive).



கம்பியில்லாத் தந்தி கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கியவர் நூர் இனாயத். முக்கிய தகவல்களை இலண்டனில் இருந்த பிரிட்டிஷ் இராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.

பிரான்ஸ் நாட்டில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்த போது நாட்டிற்கு திரும்பி வருமாறு நூர் வற்புறுத்தப் பட்டார். அந்தச் சமயத்தில் நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்து வந்தனர்.

இருந்தாலும் நூர் இனாயத்திற்குத் திரும்பிப் போக மனம் வரவில்லை. பிடிவாதமாக மறுத்து விட்டார். தன் தோற்றத்தையும் தன் பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு தன் நாட்டிற்காகச் சேவை செய்தார். ஆபத்தான காலக் கட்டத்திலும் இலண்டனுக்கு தகவல்களை அனுப்பி வந்தார்.



மரணம் எதிரே நின்று சிரித்த போதும் தமக்கு வாழ்வு அளித்த பிரிட்டனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றார். கடைசி வரை  உறுதியாகவே இருந்தார்.

தானும் திரும்பிப் போய் விட்டால் பிரிட்டனுக்குத் தகவல் அனுப்ப ஆள் இல்லை என்று பிரான்ஸ் நாட்டிலேயே தங்கி விட்டார். தனி ஆளாக இருந்து பிரிட்டனுக்கு உளவு வேலைகளைச் செய்து வந்தார்.

நூர் இனாயத்தின் நடவடிக்கைகளில் நாஜிக்களுக்கு ஒரு மாதிரியான சந்தேகம். கடைசியில் அதுவே உண்மையாகிப் போனது. அவருடன் வேலை செய்து வந்த ஒரு பிரெஞ்சு பெண்மணி நாஜி ரகசிய போலீஸ் கெஸ்தபோவிடம் நூர் இனாயத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்.

நாஜி படையினர் அவரைக் கைது செய்தார்கள். டச்சாவ் எனும் இடம். பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப் பட்ட உயிர்ப்பலி தடுப்பு முகாம் இருந்த இடம். அந்த இடத்திற்கு இனாயத் கொண்டு போகப் பட்டார்.

அன்றைய மலாயாவில் 1940-களில் சிபில் கார்த்திகேசுவிற்கு ஜப்பானியர்களால் ஏற்பட்ட அதே நிலைமை தான் இனாயத்திற்கும் ஏற்பட்டது. பத்து மாதங்கள் கடும் சித்ரவதைகள். அவ்வளவு கொடுமைக்குப் பின்னரும் அவரிடம் இருந்து உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை.



பலவிதமான சித்திரவதைகள் தொடர்ந்தன. உண்மையைக் கூறும்படி தொடர் துன்புறுத்தல்கள். நூர் எந்த ஒரு தகவலையும் சொல்ல மறுத்து விட்டார்.

ஒரு கட்டத்தில் ஜெர்மனி இராணுவ வீரர்களையே ஏமாற்றித் தப்பித்தார். மறுபடியும் சிறை. ஆனால் இந்த முறை கடுமையான சித்ரவதைகள்.

இங்கிலாந்திற்குத் தவறான செய்திகளை அனுப்பும்படி தொடர்ந்து வற்புறுத்தப் பட்டார். எது நடந்தாலும் அது மட்டும் நடக்கவில்லை.

உடல் முழுவதும் காயங்கள். இங்கிலாந்து தன்னை வாழ வைத்த நாடு அதனை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டு இருந்தது. ஜெர்மனி வீரர்கள் போரில் கலந்து கொண்டு இருந்த நேரத்தில் சிறையில் இருந்து மறுபடியும் தப்பிக்க முயற்சி செய்தார். இராணுவத்தினரால் மீண்டும் பிடிபட்டார். 



ஒரு தடுப்பு முகாமிற்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு மேலும் வேறு மூன்று பெண் கைதிகள் இருந்தனர். அவர்களுடன் இவரும் சேர்த்து அங்கே சுட்டுக் கொல்லப் பட்டார்.

போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் இனாயத் நூர் இன்றும் நினைவுக் கூறப் படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (Liberté - விடுதலை).

நூர் இனாயத் கான் வரலாற்றுப் புத்தகம் வெளிவந்து உள்ளது. அதன் பெயர்  ‘ஸ்பை பிரின்சஸ்’ (Spy Princess). அதை எழுதியவர் சரபானி பாசு (Shrabani Basu). பிரின்சஸ் ஸ்பை (Spy Princess: The Life of Noor Inayat Khan) என்கிற ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இனாயத் கானின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆய்வு செய்தவர் ஆய்வாளர் சரபானி பாசு. 



இங்கிலாந்து நாட்டுக்காக வாழ்ந்து மறைந்த இனாயத் கானுக்கு ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் போராடி வந்தார்.

அதற்கு இங்கிலாந்தின்  34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். சிலை வைப்பதற்காக இங்கிலாந்து வாழ் ஆசிரியர்களும் ஆதரவாக இருந்தனர். ஏன் என்றால் இனாயத் கான் ஒரு காலக் கட்டத்தில் ஆசிரியராக இருந்தவர்.

நூர் இனாயத் கான் எனும் அந்த அழகிய மகள் தான் ஓர் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் எப்போதுமே பெருமை கொண்டு வாழ்ந்து வந்தார்.

அவரின் இந்தத் தியாகத்தை உலக மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவி இருக்கிறார்கள். இலண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் (Taviton Street, Bloomsbury) மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

நூர் இனாயத் கானின் பெருமை இங்கிலாந்து முழுமையும் இன்று அறியப்பட்டு உள்ளது. பெரும்பாலோருக்கு அவரின் தியாக உணர்வுகள் நன்றாகவே தெரிகிறது. 



இங்கிலாந்து மக்கள் அவரைப் பெருமையாக நினைக்கிறார்கள். அவரின் பெயரைத் தங்களின் பிள்ளைகளுக்குச் சூட்டிப் பெருமை செய்கிறார்கள்.

உலகம் நிலைக்கும் வரையில் நூர் இனாயத் கானின் தியாக வரலாறும் நிலைக்கும். உலக வரலாற்றில் உன்னதம் பேசும். வாழ்க நூர் இனாயத் கான்.

சான்றுகள்:

1. Visram Rozina (1986). Ayahs, Lascars and Princes: The Story of Indians in Britain 1700–1947. London, UK.

2. Helm, Sarah (2005). A Life in Secrets: Vera Atkins and the Missing Agents of WWII. New York.

3. Escott, Beryl E. (1991). Mission Improbable: A salute to RAF women of SOE in wartime France.




17 நவம்பர் 2019

கடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன்

தமிழ் மலர் - 17.11.2019
மலாயா வரலாற்றில் ஒரு வல்லுநர். வரலாற்று ஆய்வாளர். வரலாற்று ஆசிரியர். நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர். இருபது ஆண்டு காலமாக ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். 


அவர்தான் டத்தோ நடராஜன். கடாரத்து மண் கண்டு எடுத்த கலிங்கத்துப் பரணி. மலேசிய வரலாற்று ஆசிரியர்களால் பூஜாங் நடா என்று அன்புடன் அழைக்கப் படுகிறவர்.

டாக்டர் ஜெயபாரதிக்கு அடுத்த நிலையில் கடாரத்து வரலாற்றுக் காற்றைச் சுவாசிக்கும் அழகிய மகன்.

அதற்கு முன் டாக்டர் ஜெயபாரதி பற்றி ஒரு சில வார்த்தைகள். டாக்டர் ஜெயபாரதி மலேசியத் தமிழர்கள் கொண்டாடும் மதிப்பிலா மாணிக்கம். ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். பலதுறை விற்பனர், கவனகர், சாஸ்திர நிபுணர், ஆராய்ச்சியாளர்.


டாக்டர் ஜெயபாரதி பற்பல துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து இருக்கிறார். அவர் ஆய்வுகள் செய்த துறைகள்: கல்வெட்டியல், அகழ்வு ஆராய்ச்சி, வரலாறு, பண்டைத் தமிழ் இலக்கியம், இந்து சமயம், சித்தரியல், மனோதத்துவம், மந்திர சாஸ்திரம், தற்காப்புப் போர்மு றைகள், ஜோதிடம், வானநூல், நாடி ஜோதிடம், சமுதாயச் சீர்திருத்தம்.

இவற்றுக்கும் அப்பால் அன்னாரின் பயணங்கள் நீடிக்கின்றன. சரி. பூஜாங் நடராஜாவின் வரலாற்று ஆய்வுகளுக்கு வருவோம்.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு என்பது பூஜாங் நடராஜாவின் வாழ்நாள் வேட்கை. அவரின் அந்த ஆய்வு வேட்கையின் முடிவே சோழன் வென்ற கடாரம் எனும் வரலாற்று ஆய்வு நூல். மீண்டும் சொல்கிறேன். 20 ஆண்டுகள் சிரமப்பட்டு ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார்.

பல மாதங்கள் கடாரத்துக் காடுகளில் அலைந்து திரிந்தவர். கடாரத்துக் காடுகள் என்றால் சின்னக் காடு அல்ல. சும்மா ஒரு பத்து ஏக்கர் பரப்பு கொண்ட காடு என்று நினைத்துவிட வேண்டாம். சிங்கப்பூரின் பாதி அளவிற்கு அகன்ற ஒரு பெரிய நிலப்பரப்பு. ஒரு பெரிய மழைக்காடு. அந்த வகையில் ஒரு பெரிய மலைக்காடு.



கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி. அதன் பரப்பளவு 224 சதுர கிலோ மீட்டர்.  அவ்வளவு பெரிய இடம்.

கடாரத்துக் காட்டு விரிப்புகளில் கறை படிந்த ஒரு வரலாறு நன்றாகவே இன்று வரை ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார். நானும் பலமுறை இந்தக் காடுகளுக்குள் ஆய்வுப் பணிகளுக்காகப் போய் இருக்கிறேன்.

பல முறை ஆய்வுப் பணிகளுக்கு கெடா, செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறோம். அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி. காய்ந்து போய் கற்பாறையாய்க் கிடக்கிறது. நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் நான்கைந்து கரும் பாறைகள்.

உட்கார்ந்து இயற்கை அழகை ரசிக்கலாம். கவனமாக உட்கார வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் ஒரு கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தில் விழ வேண்டி இருக்கும். அந்த மாதிரி சில இறப்புகள் நடந்து இருக்கின்றன.

கரும்பாறைகளுக்குப் பக்கத்தில் பாழடைந்து போன ஒரு பலகை வீடு. அதைப் பேய்வீடு என்று சொல்ல மனசு வரவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிப் புதர்கள். அசைந்தாடும் லாலான் புற்கள். காற்று வாடை இல்லாமலேயே ஆடிப் பாடும் செடி கொடிகள்.


கற்பாறைகளில் கண் அயர்ந்து கற்பனை செய்து பார்த்தால் கண்கள் கலங்கும். கண்களைத் திறந்து பார்த்தால் காட்டு மரங்களின் பட்டைகளில் நீர்க் கசிவுகள் தெரியும். காட்டுச் செடிகளின் கவின்தகு மலர்களில் இரத்தச் சுவடுகள் மறைந்து இருப்பதும் தெரியும்.

கடாரம் கண்ட மனிதர்களினால் எத்தனை எத்தனையோ ஆயிரம் உயிர்கள் இங்கே பலியாகி இருக்கலாம். பழங்காலத்துக் கடார மண் சொல்லும் சோகக் கதைகளைக் கேட்க நமக்கும் தெம்பு இல்லை.

அந்த உயிர்களின் ஆவிகள் நிச்சயம் இன்னும் அங்கு நடமாடிக் கொண்டு தான் இருக்கும். சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. சத்தியமாகச் சொல்கிறேன். அந்த மாதிரி இனம் தெரியாத அச்சம் எனக்கும் பல முறை ஏற்பட்டு இருக்கிறது. சரி.

கடாரப் பேரரசு 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் சமவெளியில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்றும் அழைக்கலாம். பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். தப்பு இல்லை. ஏன் தெரியுங்களா. 


கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. 2000 – 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாறு. கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

சுங்கை பத்து ஆய்வு மையம், சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.

The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.

ஆக கெடாவின் வரலாறு மிகப் பழைமையானது என்று சொல்ல இது ஒரு தகவல் போதுமே.

கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.

(https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115)

மலாக்காவின் வரலாற்றையும், சிங்கப்பூர் வரலாற்றையும், சுமத்திரா ஜாவா வரலாற்றையும், கடாரத்து வரலாறு எங்கேயோ கொண்டு போய் எங்கேயோ ஒரு புறமாய் ஒதுக்கித் தள்ளி விடுகிறது.

ஆக மலாயாவின் பன்னெடுங்கால வரலாற்றில் கெடா வரலாறு என்பது தான் முதன்மையானது; தலைமையானது. இதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம்.

டத்தோ நடராஜாவின் பல்லாண்டுகள் ஆய்வுகளின் முடிவே சோழன் வென்ற கடாரம் எனும் வரலாற்று ஆய்வு நூல்.


அந்த நூல் மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சுவடி. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் மற்றும் பழம்பொருள்கள் பற்றிய ஓர் ஆழமான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது.

டத்தோ நடராஜா மலேசியாவிலும் உலக அளவிலும் பல வரலாற்று மாநாடுகளில் கலந்து கொண்டவர். கரைந்து போகும் கடார வரலாற்றைக் காட்சிப் படுத்தியவர். பற்பல அனைத்துலகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். பூஜாங் சமவெளி அகழாய்வுப் பொருட்களை அடையாளப் படுத்தியவர். 


கடாரத்து வரலாற்றை உலக அளவில் கொண்டு சென்ற ஓர் இந்தியர் மலேசியாவில் இருக்கிறார் என்றால் அவர் தான் டத்தோ நடராஜா. பூஜாங் நடராஜா என்று அனபாக அழைக்கப் படுகிறவர்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று தேர்ச்சி பெற்றவர்.

டத்தோ நடராஜா ஆங்கிலத்தில் நல்ல புலமை. தாய்லாந்தின் பான் பான் அரசு, தாம்பிரலிங்கா அரசு, இந்தோனேசியாவின் சைலேந்திரப் பேரரசைப் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார். இது ஒரு பெரிய ஆய்வு.

கெடா, சுங்கைப் பட்டாணி நகரில் பிறந்து வளர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஒரு சாமானிய மனிதராகவே காலத்தைக் கழிக்கின்றார். வஞ்சகம் இல்லாத மனசு.

1980-களில் ம.இ.கா.வில் முக்கிய பதவி வகித்தவர். இவருக்கும் ம.இ.கா. தலைமைத்துவத்துற்கும் சிற்சில பிணக்குகள். அதனால் நீங்களாச்சு உங்கள் அரசியலாச்சு என்று சொல்லி அரசியலைத் தூக்கிப் போட்டுவிட்டு சட்டம் படிக்க இங்கிலாந்திற்குப் போனார். பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்றார். மலேசியாவுக்கு வந்து ஒரு சட்ட நிறுவனத்தையும் தொடங்கினார். 


இவரிடம் பழகிப் பாருங்கள். இவரை எதிர்த்து எதுவுமே பேச முடியாத அளவிற்கு இவரின் சொல்லாடல்கள் அமையும். நளினங்கள் செய்யும்.

எந்த நேரத்தில் எங்கே இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம் சுங்கை பட்டாணி அமான் ஜெயாவில் பார்த்தேன். அடுத்த நாள் பினாங்கில் பார்க்கிறேன்.

என்னங்க டத்தோ என்று கேட்டால்... அது அப்படித் தான் என்பார். சமயங்களில் அவரின் நகைச்சுவையில் ஊசி மிளகாய் உரைப்புகள் இருக்கும்.

ஒரு தடவை மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் சில்வன் அவர்களைப் பார்க்கத் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்குச் சென்று இருந்தேன்.

அங்கே இருக்கும் சாட் மசாலா உணவகத்தில் சந்திப்பு. உள்ளே போகிறேன். அங்கே பூஜாங் நடராஜா. தனி ஒரு மேசையில் அவர் மட்டும். தனிமையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டு இருந்தார்.

மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி என்னைப் பார்க்கிறார். முகத்தில் மகிழ்ச்சி அலைகள். மலேசிய இந்திய வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுக்கும் பணிகளில் இருவருமே ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சுவாசக் காற்றுகளின் அலைகள்.

அவர் பேசினார். இன்று பூஜாங் வரலாறு பற்றி பேசப் போகிறேன். வர்றீங்களா. பெரிய இடத்துப் பெரிசுகளைப் பற்றியும் அழுத்தமாகப் பேசப் போகிறேன்.

அதனால் என் மீது ஒரு கறுப்புப் புள்ளி வைக்கப்படும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை மலாக்கா. வருவது வரட்டும் என்றார். அதே போல பேசியும் இருக்கிறார். என்னை மலாக்கா என்றே அழைப்பார்.


இவர் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும்.

அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு மலேசியத் தமிழர்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

மலேசியா இந்தியர்கள் கண்டு எடுத்த மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. நடமாடும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். வாழ்த்துகிறோம் ஐயா.

சான்றுகள்:


1. (சான்று: http://www.thestar.com.my/…/candi-lembah-bujang-destroying…/ - Datuk V. Nadarajan, chairman of the Bujang Valley Study Circle non-governmental organisation.)

2. Zakharov, Anton O. (August 2012). The Sailendras Reconsidered (PDF). Institute of Southeast Asian Studies. Singapore.

3. Majumdar, R. C. (1937). Ancient Indian colonies in the Far East. 2: Suvarnadvipa. Dacca: Ashok Kumar Majumdar. pp. 167–190.









பிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு

மலேசியாகினி
16.11.2019


பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீசித் தாக்குதல் நடத்தப் பட்டதாக போலீஸில் நேற்றிரவு புகார் செய்து உள்ளார்.


ஜாலான் ஈப்போவில் பப்பாரிச் உணவகத்துக்குப் பின்புறத்தில் அவருடைய டொயோட்டா கார் நிறுத்தபட்டு இருந்தது.

“நான் உணவகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததால் கார் ஓட்டுநரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டேன். சந்திப்பு இரவு மணி 12.30-க்கு முடிந்தது. காரை நோக்கிச் சென்றேன். காருக்கு அருகில் முட்டை ஓடுகள் கிடந்தன.

“காரின் பின்புறம் முழுவதும் மூட்டைகள் வீசி எறியப்பட்டு இருந்தன. கூரைப் பகுதியிலும் முன்புறக் கண்ணாடி முழுக்கவும் முட்டைகள் வீசி எறியப்பட்டு இருந்தன.

“என் பாதுகாப்புக் குறித்து அஞ்சியே இந்தப் புகாரைச் செய்கிறேன்” என்று பிரபாகரன் போலீஸ் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

சில அரசு சாரா இயக்கங்கள், பிரபாகரன் பத்து தொகுதி எம்.பி. பதவியைத் துறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடைபெற்று இருப்பது தான் யோசிக்க வைக்கிறது.

பிரபாகரன் பதவி விலகி பி.கே.ஆர். உதவித் தலைவர் தியான் சுவா போட்டியிட இடம் அளிக்க வேண்டும் என்பது அந்த அரசு சாரா இயக்கங்களின் கோரிக்கை.

அவர்களின் கோரிக்கைக்கும் தியான் சுவாவுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எந்தத் தொடர்பும் இல்லை என்று தியான் சுவா மறுக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் பிரபாகரன் ஒரு சுயேச்சையாகப் பத்து தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு பி.கே.ஆர். ஆதரவு அளித்தது.





அப்போது எனக்கு இப்போது உனக்கு

அது ஒரு பொது நூலகம். நிறைய பேர். அங்கே ஓர் இளம்பெண். பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஓர் இளைஞன் வருகிறான். அவளுக்குப் பக்கத்தில் ஓர் இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் அமைதியாகக் கேட்கிறான். "ஏங்க... நான் இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமா?"

அவள் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

பின் சத்தமாகப் பேசினாள். "என்னாது... உன்கூட தங்குறதா... என்ன நினைக்கிறாய்?" அவ்வளவுதான். அவள் போட்ட சத்தத்தைக் கேட்டு எல்லோரும் அவனையே ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவனுக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது.

தொலைவில் ஒரு காலி இருக்கை. அதில் போய் அமர்ந்தான். கொஞ்ச நேரம் கழிந்தது. சத்தம் போட்ட அந்தப் பெண் அவனிடம் வந்தாள்.

"நான் மனோதத்துவம் படிக்கிற மாணவி... உங்க மன நிலையைச் சோதித்துப் பார்க்கத் தான் அப்படி செய்தேன்" என்றாள்.

இளைஞன் அவளை சற்று நேரம் முறைத்துப் பார்த்தான். அப்புறம் ’என்னாது... இருநூறு வெள்ளியா... என்ன நினைச்சுகிட்டு இருக்கிறாய்...’ என்று உரக்கக் கத்தினான்.

இப்போது அனைவரும் அவளையே பார்த்தார்கள். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் ’அப்போது எனக்கு... இப்போது உனக்கு...’

இதில் இருந்து ஓர் உண்மை. இன்றைக்கு ஒருவரை நாம் அவமானப் படுத்தினால் நாளைக்கு யாராவது ஒருவர் நம்மை அவமானப் படுத்தலாம். அதனால் வேதனைகள் வரலாம். அந்த வேதனைகள் தொடரலாம்.

அதனால் யாரையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவமானப் படுத்தாமல் அன்பாய் அழகாய்ப் பயணிப்போம். அதையே நம் இலட்சியங்களில் ஒன்றாய்ப் பின்பற்றுவோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
16.11.2019