21 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 2

தமிழ் மலர் - 21.12.2019

பேராக் மாநிலத்தின் கிந்தா சமவெளியில் நூற்றுக் கணக்கான சுண்ணாம்பு மலைக் குன்றுகள். சுற்றிலும் சூழ்ந்து நிற்கும் மழைக்காடுகள். நிறைந்து வழியும் தாமரைக் குளங்கள். நிறைந்து நிற்கும் பழைய ஈயக் குட்டைகள். 



சுண்ணாம்பு மலைக் குன்றுகளைச் சுற்றிலும் மாசு மருவற்றக் குகை வாசல்கள். இருள் கோலத்தில் அங்கே மாட்சிகள் மறையா அழகுச் சுவர் ஓவியங்கள். அந்தக் குகை ஓவியங்களின் பின்னணியில் மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.

ஆதிகாலத்தில் அந்தக் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் தோற்றங்களைக் குகைச் சுவர்களில் ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார்கள். பன்னெடும் காலமாக ஓவியக் காவியங்களைப் படைத்து இருக்கிறார்கள். இவையே வரலாற்று ஆசிரியர்களின் இறுதியான தீர்க்கமான முடிவு.

ஈப்போ கல்லுமலைக் கோயிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில், தம்பூன் குகைகள் (Gua Tambun) உள்ளன. இந்தக் குகைகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியங்கள் சிதந்த நிலையில் இருக்கின்றன. இவை 1959-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. 



1959-ஆம் ஆண்டில் லெப்டினெண்ட் ராவ்லிங்ஸ் (Lt. RL Rawlings) எனும் ஆங்கிலேய இராணுவ அதிகாரி ஈப்போவில் பணியாற்றினார். இவரின் கீழ் ஒரு கூர்கா படையினர் (6th QEO Gurkha Rifles). வழக்கமாக தம்பூன் பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அந்தக் குகை ஓவியங்களைத் தற்செயலாகக் கண்டுபிடித்தார்கள்.

நியோலிதிக் காலம் (Neolithic) என்று சொல்லப்படும் புதிய கற்காலத்தில் அந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. நியோலிதிக் காலம் என்பது இன்றைய காலத்தில் இருந்து 4500 - 6000 ஆண்டுகள் பழமையானவை.

இதே போல கல்லுமலைக் கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் குகைகளிலும் சிதைந்து போன சுவர் ஓவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார்கள். 



மலேசியாவில் உள்ள குகை ஓவியங்களில் தம்பூன் குகை ஓவியங்கள் தான் மிக மிகப் பழமையானவை. அந்த வகையில் தம்பூன் குகைகள் 2010-ஆம் ஆண்டு மலேசியத் தேசியப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டது. ஈப்போ நகராண்மைக் கழகத்தின் நேரடிப் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மலேசியத் தேசியப் பாரம்பரியச் சின்னம் என்று சொல்லும் போது அந்தச் சின்னம் ஐக்கிய நாட்டுப் பாரம்பரியக் கலைச் சின்னங்களில் ஒன்றாகவும் பதிவு பெறுகிறது. அதையும் நாம் நினைவில் கொள்வோம்.

(This cave paintings was gazetted by Ipoh City Council in 1986 and was declared a national heritage by the Department of National Heritage on January 10, 2010.)



இந்தக் குகைகளைப் பற்றி நிறைய பேர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜே.எம். மேத்தியூஸ் (Matthews, J.M.). 1959-ஆம் ஆண்டில் இருந்து 1961-ஆம் ஆண்டு வரை ஆய்வுகள் செய்தார். இவர் மலேசிய அரும்காட்சியகத்தின் மேற்பார்வையாளராக இருந்தவர். அவருக்கு அடுத்து பாவ்ல்டிச் (Faulstich, P.) என்பவர் 1984-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை ஈராண்டுகள் ஆய்வுகள் செய்தார்.

அங்கே 80 குகைச் சுவர் ஓவியங்கள்; 48 கற்கள் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்த ஓவியங்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வியட்நாமில் செதுக்கப்பட்ட ஓவியங்களைப் போல இருக்கின்றன. இந்த ஓவியங்களை ஹோபின்னியான் (Hoabihnian) ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். 



2010-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு ஆய்வாளர்கள் இருவர் ஆய்வுகள் செய்தார்கள். ஒருவர் ஹிடால்கோ டான் (Noel Hidalgo Tan); மற்றொருவர் ஸ்டீபன் சியா (Stephen Chia). இவர்கள் இருவரும் கிந்தா குகைகளில் மேலும் 600-க்கும் மேற்பட்ட ஓவியங்களைக் கண்டுபிடித்தார்கள்.

ஆக இங்கே நாம் ஒரு முடிவிற்கு வரலாம். ஏறக்குறைய 5000 - 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஈப்போ வட்டாரத்தில் உள்ள குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் இருக்கும் குகைகளிலும்; அதைச் சுற்றி இருக்கும் குகைகளிலும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். திட்டவட்டமாகச் சொல்லலாம்.



ஆதிகால மனிதர்கள் எப்படி இங்கே வந்தார்கள். எப்படி வந்து இருப்பார்கள். மனிதவியல் ஆய்வாளர்கள் அதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஆதிக்குடிகளில் ஒரு பிரிவினர் இந்தியாவின் அசாம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.

பர்மா வழியாக வந்து சயாமிய நிலப் பகுதியில் கால் பதித்து; அதன் பின்னர் தீபகற்ப மலேசியாவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள். அப்படி இறங்கி வந்த பாதையில் தென்பட்ட குகைகளில் புகலிடம் அடைந்து இருக்கிறார்கள்.

மலாயாவின் சில பல குகைகளில் வாழ்ந்த அந்த ஆதிகால இனத்தவரில் ஒரு பகுதியினர் அப்படியே அங்கேயே அழிந்து போய் இருக்கலாம். அந்த ஆதிகால இனத்தில் எஞ்சியவர்கள் தான் செமாங். செனோய், செக்காய், செக்கூன், செமலாய், பங்கான், பத்தேக், தெமியார், தெமுவான் எனும் இப்போதைய மலேசியப் பழங்குடியினர்.

அந்த ஆதிகால மனிதர்கள் சிலர் படகுகள் மூலமாகக் கடல் கடந்து பசிபிக் தீவுகளுக்குப் போய் இருக்கலாம். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. 



சரி. அங்கே கோலாகங்சார் லெங்கோங்கில் (Lenggong Valley) இருக்கும் பழங்காலத்து மனித எலும்புக் கூடுகளுக்கும்; இங்கே ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கும் என்னங்க சம்பந்தம் என்று கேட்கத் தோன்றலாம். இருக்கிறது. பொறுமையாகப் படியுங்கள். விசயத்திற்கு வருகிறேன்.

இந்தப் பேராக் மனிதனின் சந்ததியினர்தான் குனோங் சேரோ குன்றுக் குகைகளிலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இப்போதைய நவீன காலத்து மனிதர்கள் எனும் பெயரில் ஈப்போ நிலப் பகுதிக்குள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இருக்கிறார்கள்.

இவர்கள் வருவதற்குப் பற்பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆதிகால மனிதர்கள் அங்கே ஆரத்தி எடுத்து பூமாலை போட்டு சால்வை போர்த்தி கொலு வைத்து  விட்டார்கள். இன்னும் என்ன இருக்கு. ஆக அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்தக் கட்டுரை தொடர்பாக முரண்பாடான கருத்துகள் எதுவும் வரக் கூடாது என்பதற்காகச் சான்றுகளை நேற்றைய கட்டுரையிலேயே முன்வைத்து விட்டேன்.



இன்னும் ஒரு விசயம். கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் கிந்தா ஆறு ஓடுகிறது. தெரியும் தானே. இப்போது பார்ப்பதற்குச் சின்னதாக இருக்கலாம். ஆனால் 1850-ஆம் ஆண்டுகளில் அது ஒரு பெரிய ஆறு. பெரிய பெரிய படகுகள் எல்லாம் வந்து போய் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகப் போக்குவரத்து நெரிசல் இருந்து இருக்காது.

போக்குவரத்து நெரிசல் என்று சொன்னதும் ஒரு சின்ன இடைச் செருகல். மனதிற்குள் அசை போடுகிறது. நானும் என் நண்பர் நரேந்திரன் என்பவரும் கல்லுமலை கோயிலுக்குப் போய் இந்தக் கட்டுரைக்காகச் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஈப்போ புந்தோங் வீட்டிற்குத் திரும்பினோம்.

அமைதியின் சின்னமான ஈப்போ நகரில் செம நெரிசல். நகர முடியவில்லை. ஆட்சிகள் மாறினாலும் அரசியல்வாதிகள் மாறினாலும் வாகன நெரிசல் மட்டும் மாறவே இல்லை. 



இதை ஏன் சொல்கிறேன் என்றால் 1800-ஆம் ஆண்டுகளில் யானைகளும் புலிகளும் கரடிகளும் குரங்குகளும் ஓடிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாடிய இடத்தில் இன்றைக்கு இப்படி ஒரு திக்குமுக்கு நெரிசல். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

1830 – 1840-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் ஈய உற்பத்தி அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வந்தது. அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் தெலுக் இந்தானில் இருந்து படகுகள் மூலமாகக் கொண்டு வரப்பட்டன.

அந்தக் காலக் கட்டங்களில் ஈப்போவுக்குச் செல்வது என்றால் மாட்டுவண்டிகள்; குதிரை வண்டிகள் போகிற மண் சடக்குப் பாதைகள் தான். சமயங்களில் அந்தப் பாதைகளை யானைகளும் புலிகளும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.

தெலுக் இந்தானில் இருந்து ஈப்போவுக்குப் போக விரும்பினால் பேராக் ஆற்று வழியாக கிந்தா ஆற்றுக்கு வர வேண்டும். அப்புறம் ஈப்போவுக்குப் போய்ச் சேர வேண்டும்.

முன்பு காலத்தில் ஊர்ப் பயணம் போகிறவர்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போவார்களாம். அந்த மாதிரி இவர்கள் என்ன சோற்றைக் கட்டிக் கொண்டு போனார்களோ. தெரியவில்லை.

உந்துப் படகுகளில்தான் தெலுக் இந்தான் - ஈப்போ பயணம். தெலுக் இந்தானில் இருந்து ஈப்போவுக்குப் போய்ச் சேர ஒரு வாரக் காலம் பிடிக்கும்.

அந்தக் காலத்தில் அதாவது 1830-களில் கோலாலம்பூரில் இருந்து ஈப்போவுக்கு இப்போது மாதிரி விரைவுச் சாலை எதுவும் இல்லை. எல்லாமே நடடா ராஜா தான். பாதை இருந்து இருக்கிறது. எல்லாம் காட்டுப் பாதைகள். யானைகள் மூலமாகவும் சவாரி செய்து இருக்கிறார்கள்.

படகு மூலமாக ஈப்போவுக்கு வந்ததும் கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் நங்கூரம் கட்டுவார்கள். அதற்கு மேல் படகு போகாது. அந்த இடத்தில் பெரிய பெரிய ஆற்றுப் பாறைகள். அந்தப் பாறைகள் இன்றும் கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.

அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை யானைகள் அல்லது எருமைகள் மீது ஏற்றி உட்புற ஈயச் சுரங்கங்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் ஈப்போ பகுதிகளில் ஐந்து இடங்களில் ஒரே சமயத்தில் ஈயம் விளையாடி இருக்கிறார்கள். முதலாவது புந்தோங். இரண்டாவது தாசேக். மூன்றாவது குனோங் ராப்பாட். நான்காவது கோப்பேங். ஐந்தாவது லகாட் பாப்பான்.

ஆக ஒரு 150 வருடங்களுக்கு முன்பு கல்லுமலைக் கோயிலின் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு வியாபார மையமே களை கட்டி இருந்து இருக்கிறது. அந்த வகையில் கல்லுமலைக் கோயிலுக்கும் பெரிய ஒரு வரலாற்றுப் பெருமை சேர்கிறது.

சரி. இந்தக் கல்லுமலை கோயில் எப்படி உருவானது. கல்லுமலைக் கோயிலின் வரலாறு 1880-களில் தொடங்குகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனால் மலேசியாவில் உள்ள தமிழர் கோயில்களில் மிகப் பழமையானவற்றில் கல்லுமலை கோயிலும் ஒன்று எனும் பெருமை இதற்குச் சேர்கிறது. மலேசியாவில் மிகப் பழமையான கோயில் எது தெரியுங்களா. பின்னர் சொல்கிறேன்.

1880-ஆம் ஆண்டுகளில் பாரிட் முனுசாமி என்பவர் ஒரு குத்தகையாளர். கல்லுமலைக்கு அருகில் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். சீனர்களுக்கு இணையாக ஒரு குத்தகைத் தொழில்.

அவரிடம் இருபத்தைந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் ஒருவர் மாரிமுத்து. நடுத்தர வயது.

ஒருநாள் பொழுது சாயும் நேரத்தில் கல்லுமலையின் குகை பக்கமாகத் தன் மாடுகளை மேய்க்கப் போய் இருக்கிறார். அப்போது ஓர் அசரீரியான குரலொளி. மலைப் பகுதியின் குகைக்குள் இருந்து கேட்டு இருக்கிறது. இங்கே வா என்று யாரோ அழைக்கின்ற குரல்.

அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து பயந்து போய், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டமாய் ஓடி வந்துவிட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் இருக்கிறார்.

அங்கே நிறைய குகைகள். ஒரு குகையில் பயங்கரமான இருள். அங்கே இருந்து சாம்பிராணி, ஊதுபத்தி வாசனைகள் வந்து இருக்கின்றன. தீப்பந்தங்களுடன் உள்ளே போய் இருக்கிறார்கள். என்ன ஆச்சு என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Faulstich, P. (1984). Preliminary report on the rock art of Ipoh, Malaysia. Rock Art Research 1, 141-142.

2. Matthews, J.M. (1959). Rock paintings near Ipoh. Malaya in History 52: 22-25. Matthews, J.M. (1960). A note on rock paintings recently discovered near Ipoh, Perak, Federation of Malaya, Man, Vol.60. pp.1-3.


20 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 1

தமிழ் மலர் - 20.12.2019
சஞ்சலத்தில் வந்தாரைத் தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று


ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் அடிக்கடி ஒலித்துக் கொண்டு இருக்கும் பாடல். அந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் நெஞ்சத்தின் சன்னதிக்குள் கொஞ்சம் நிம்மதி. கரைந்து போகும் இளமைக்குள் கொஞ்சம் அமைதி. 



இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. மலேசியாவில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தெரியாத வரலாறு. பலருக்கும் தெரியாத ரகசியங்கள்.

சொல்லப் போனால் சின்னதாகத் தெரியும் பெரிய வரலாற்று ஆவணங்கள். மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் மறைந்து போன ஒரு காலச்சுவடு என்றுகூட சொல்லலாம்.

ஈப்போவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து பற்பல ஆண்டுகள் பேர் போட்டுவிட்ட பழம் பெரும் பெரியவர்களுக்குகூட கல்லுமலைக் கோயிலின் ஆழமான வரலாற்றுச் சிறப்புகள் தெரியாமல் இருக்கலாம். அதற்காக எல்லாருக்கும் தெரியாது என்று சொல்லவில்லை. சிலருக்குத் தெரிந்து இருக்கலாம். பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 



அந்த வகையில் ஈப்போ கல்லுமலைக் கோயிலின் வரலாற்று உண்மைகளை வெளியே கொண்டு வருவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஈப்போவைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகள் (Limestone Hills). அந்தக் குன்றுகளுக்குள் மறைந்து நின்று மாயஜாலம் காட்டும் எண்ணற்ற குகைக் கோயில்கள் (Limestone Caves). அவை எல்லாம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து பாசறைகளாகிப் போன வரலாற்றுப் பொற்குவியல்கள்.

ஈப்போ தமிழர்களின் வரலாற்றில் இருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாத மண்வாசனைகளாக மாறிவிட்டன. ஏன் என்றால் அந்தச் சுண்ணாம்புக் குன்றுகளினால் நல்லதும் நடந்து இருக்கின்றன. கெட்டதும் நடந்து இருக்கின்றன.



கம்பார் நகரத்தைத் தாண்டி, ஈப்போ நகரத்திற்கு வருகிறவர்களின் கண்களில் முதலில் தென்படுவது என்ன தெரியுங்களா. ஓங்கி உயர்ந்து ஒய்யாரமாய் முறுவலிக்கும் பச்சை வெள்ளைச் சுண்ணாம்புக் குன்றுகள் தான். சில இடங்களில் அந்தக் குன்றுகள் ஆயிரம் அடிகளையும் தாண்டிப் போய் பெரிய பெரிய வான் அசுரங்களாய்க் காட்சி தருகின்றன.

ஈப்போவுக்கு வரும் பாதையில் பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல் பச்சைக் காடுகள். அவற்றைச் சுமந்து நின்று பச்சைப் பசுமைப் பாயிரம் பாடி நிற்கும் சுண்ணாம்புக் குன்றுகள்.

ஈப்போ மாநகர் எல்லையை அடைந்ததும் வேறு மாதிரியான குன்றுகளைப் பார்க்கலாம். நீண்டு நெளிந்து உயர்ந்து நிற்கும் சுண்ணாம்புக் குன்றுகளைப் பார்க்கலாம். அவற்றைப் பார்க்காமல் கண்டிப்பாக ஈப்போவுக்குள் வர முடியாது. 



ஒன்றுவிட்ட சகோதரர்கள் மாதிரி ஏறக்குறைய 250 குன்றுகள். ஈப்போ நகரப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 45 குன்றுகள் இருக்கின்றன என்று மலேசியப் புவியியல் ஆய்வுக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வடக்கே சிம்மோர் கந்தான் பகுதியில் இருந்து தெற்கே கோலா டிப்பாங் (Kuala Dipang) வரையில் அந்தக் குன்றுகள் பரவிக் கிடக்கின்றன. சரி.

குனோங் செரோ (Gunung Cheroh) குன்றுத் தொடரின் தாழ்வாரத்தில்தான் கல்லுமலைக் கோயிலும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது. அந்தக் குனோங் செரோ குன்றுத் தொடரின் சுற்றுப் புறங்களில் சிறிய பெரிய குன்றுகள் உள்ளன. அவை எல்லாமே சுண்ணாம்புக் குன்றுகள்தான். 



ஈப்போ கல்லுமலைக் கோயிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்தச் சுண்ணாம்புக் குன்றுகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஈப்போ கல்லுமலைக் கோயில் வட்டாரத்தில் உள்ள  சுண்ணாம்புக் குன்றுகள் 250 லிருந்து 350 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

சிம்பாங் பூலாய் பகுதியில் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குன்றுகளும் இருக்கின்றன. சரி. எப்படி இந்தச் சுண்ணாம்புக் குன்றுகளின் வயதைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நல்ல கேள்வி. விளக்கம் கொடுக்கிறேன்.

பொதுவாகவே கற்பாறைகளுக்குள் ஓரகத் தனிமங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் ஐஸதோப்ஸ் (Isotopes) என்பார்கள். அந்தத் தனிமங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அழுகிச் சிதைந்து போய் இருக்கின்றன என்பதை வைத்து கற்பாறைகளின் வயதைக் கண்டுபிடித்து விடலாம் (radioactive element decay). 



இப்போது நிறைய நவீனமான சாதனங்கள் வந்துவிட்டன. ரேடியா அலைப் பகுப்பாய்வு அல்லது ரேடியோ மெட்ரிக் ஏஜ் டேட்டிங் (Radiometric Age Dating) மூலமாகக் கற்பாறைகளின் வயதைக் கண்டுபிடித்து விட முடியும்.

ஆக ஈப்போ கல்லுமலைக் கோயிலுக்கு அருகில் நீங்கள் பார்க்கும் அந்தச் சுண்ணாம்புக் குன்றுகள் எல்லாமே 35 கோடி ஆண்டுகள் பழமையானவை. இதை மட்டும் இப்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தக் குன்றுகள் அதே இடத்தில் கடந்த 35 கோடி ஆண்டுகளாக நின்று நிதானமாகக் கதைகள் பேசிக் கொண்டு இருக்கின்றன. அங்கே பற்பல கானகத்துச்  சித்தர்கள்; கல்லுமலைச் சித்தர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

கல்லுமலைக் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் இருண்ட குகைகளில் ஓராங் அஸ்லீ மக்களும் நீண்ட காலமாக வாழ்ந்து இருக்கிறார்கள். 



முன்பு காலத்தில் கல்லுமலைக் கோயில் ஒரு சுண்ணாம்புக் குகைக்குள் இருந்தது. அப்போது அங்கே வாழ்ந்த தெமியான் (Temian) ஓராங் அஸ்லீ மக்களும் வழிபாடு செய்து இருக்கிறார்கள்.

கல்லுமலைக் கோயில் தோன்றுவதற்கு பல மாமாங்களுக்கு முன்னாலேயே சுண்ணாம்புக் குகைகள் இருந்தன. அந்த வகையில் அந்தக் குகைகள் வரலாற்றுக்கு முந்திய கதாமாந்தர்களையும் பார்த்து விட்டன. ஊர்பேர் தெரியாத மக்களின் கதைகளையும் கேட்டு விட்டன.

ஆக அந்தக் குகைகளை மறுபடியும் பார்க்கும் போது மனசுக்குள் பெருமை ஏற்படுகிறது. கையெடுத்துக் கும்பிடுவோம்.

சுண்ணாம்புக் குன்றுகளில் நிறைய குகைகள் இருக்கின்றன. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் குகைகளில், குகை மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்து உள்ளன.



லியோனார்ட் விரேய் (Leonard Wray) என்பவர் 1897-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு வந்த ஓர் ஆய்வாளர். அவர் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் தி கேவ் டிவெல்லர்ஸ் ஆப் பேராக் (The Cave Dwellers of Perak). அந்த நூலில் குனோங் செரோ குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததாக எழுதி இருக்கிறார்.

(சான்று: Leonard Wray, "The Caves dwellers of Perak", Journal of the Royal Anthropological Institute of Great Britain & Ireland, Vol. 1, No. 1, 1897, him. 13-15.) 

1886-ஆம் ஆண்டு கல்லுமலைக் கோயிலுக்கு அருகாமையில் உள்ள குகைகளில் லியோனார்ட் விரேய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லுமலைக் கோயில் அங்கே இருந்து இருக்கிறது. எந்த ஆண்டு என்பதையும் பாருங்கள். ஆய்வின் போது ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய இரும்புத் துண்டுகளையும் கிளிஞ்சல்களையும் குண்டுமணிகளையும் தோண்டி எடுத்தார். 



தவிர மனித எலும்புகள் உட்புற குகைகளுக்குள் புதைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அறிந்தார். பின்னர் இவர் பாடாங் ரெங்காஸ் பகுதியில் இருக்கும் குனோங் போண்டோக் குகைகளிலும் ஆய்வுகள் செய்தார். இவர் மேற்கொண்ட அரிய ஆய்வு முயற்சிகளுக்காகப் பின்னர் பேராக் அருங்காட்சியகத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.

சரி. விசயத்திற்கு வருவோம். இந்தக் குகை மனிதர்கள் எங்கே இருந்து வந்தார்கள்; எப்படி வந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இருந்தாலும் பேராக்கில் இருக்கும் கிரிக், லெங்கோங் பகுதியில் இருந்து குடியேறி இருக்கலாம் என்று மட்டும் அனுமானிக்கப் படுகிறது. இன்றுவரை உறுதியாகத் தெரியவில்லை.

இந்த லெங்கோங்கில் தான் 1938-ஆம் ஆண்டில் மலாயாவின் முதல் மனித எலும்புக் கூடு கிடைக்கப் பெற்றது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த எலும்புக் கூட்டுக்கு பேராக் மனிதனின் எலும்புக்கூடு என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.



மறுபடியும் நினைவு படுத்துகிறேன். பேராக் மனிதன் (Perak Man) என்பது மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் வைத்த பெயர். அது அந்த மனித எலும்புக் கூட்டுக்கு உரிய மனிதனின் பெயராகும். அந்த எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்த போது அது உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்றும் கணக்கிட்டுச் சொல்லப் படுகிறது. அதன் எலும்பு உறுப்புகள் சற்றும் சிதைவுகள் அடையவில்லை. நல்ல நிலையில்தான் இருந்தன.

பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணின் எலும்புக் கூட்டை 2004-ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தார்கள். முதல் எலும்புக்கூடு 1938-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தீபகற்ப மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை. சரவாக் மூலு குகையில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடு இருக்கிறதே அது இன்னும் மிகப் பழமையானது. அதைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.

லெங்கோங்கில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள், ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் இனமான ஆஸ்திரேலோ மெலனசோயிட் (Australomelanesoid) எனும் இனத்துக்கு உரியது என்று ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.

இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் இப்போது பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர். மலேசியாவில் இருக்கும் மலேசியப் பழங்குடியின மக்களும் அந்த இனத்தைச் சார்ந்தவர்கள்தான்.

(தொடரும்)

சான்றுகள்:

1. I.H.N. Evans, "A Rock Shelter on Gunong Cheroh, Perak", FMS, Vol. 9 Part 4, 1922, him. 267-270.)

2.  P.D.R. William Hunt, 'Note on archaeology from the air in Malaya,' JMBRAS, Vol. 21, Part 1, 1949, him. 150-158.)






18 டிசம்பர் 2019

இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியது தவறா - 26.10.2019

விடிந்தால் தீபாவளி. உலகமே தீபாவளி மகிழ்ச்சியில்... ஆனால் சோஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைதான 12 பேரின் வீடுகள் இருண்டு போய்க் கிடக்கின்றன. இவர்களின் விடுதலை எப்போது? இவர்களின் வேதனை தீர்வது எப்போது? பெரிய ஒரு கேள்விக்குறி.


இருந்தாலும் மலேசியாவில் பல்லாயிரம் இந்தியர்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க முயற்சி செய்து வருகின்றார்கள். திறப்பு இல்ல விருந்து நிகழ்வுகளையும் பெரிது படுத்தவில்லை.

நாலு சுவர்களுக்குள் தீபாவளி... அப்படியே... அமைதியாக இருப்பதே சிறப்பு என்றும் சிலர் சொல்கின்றார்கள். கொண்டாடுவதும் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்... அவரவர் உரிமை. அதில் நாம் தலையிடவில்லை.

இதற்கு இடையில்... அந்தப் பெண்கள் மூவரும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கொட்டும் மழையிலும் தொடர்ந்து அந்தப் பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

மலாக்கா மாநிலச் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்; மலாக்கா மாநகர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பி.சுரேஷ்குமார்; வர்த்தகர் எஸ்.சந்துரு ஆகியோரின் மனைவிமார்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகப் பன்னிருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி உமாதேவி சொல்கிறார்...

‘எங்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி இல்லை. எங்கள் கணவன்மார்கள் தடுப்புக் காவலில் வாழும் போது எங்களுக்கு எங்கே தீபாவளி கொண்டாட்டம். எங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து எங்களால் பொய் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

’அப்படி என்ன அவர்கள் குற்றம் புரிந்தார்கள். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அனுதாபத்தைக் காட்டியது தவறா?’

’மலாக்காவில் அரசாங்க மாற்றம் அமையவும் ஒட்டு மொத்த ஆட்சி மாற்றம் நடக்கவும் நானும் பாடுபட்டு இருக்கிறேன். வாக்கு அளித்து இருக்கிறேன்.’

’ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு துன்பம் வந்த நேரத்தில் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.’

அந்த மூன்று பெண்களின் சார்பில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் மனைவி உமாதேவி அவ்வாறு கூறினார்.

நேற்று முன்தினம் தொடங்கி... விடிய விடிய பெய்த மழையிலும் அவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.

இதற்கு இடையில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு உட்பட பலர் அந்தக் குடும்ப மாதர்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்க அங்கு சென்று அவர்களுடன் இருந்தார்கள்.

மீண்டும் நினைவு கூர்வோம்... விடிந்தால் தீபாவளி. ஆனால் கைதான 12 பேரின் வீடுகள் இருண்டு கிடக்கின்றன. அவர்களின் விடுதலை எப்போது? இவர்களின் வேதனை தீர்வது எப்போது?

இந்தப் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விடுவிக்கும்படி கடந்த 21.10.2019-ஆம் தேதியில் இருந்து அமைதி மறியல் செய்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்தப் பெண் பிள்ளைகளுக்கு அனுதாபம் தெரிவிப்போம். மனிதாபிமான ஆதரவு வழங்குவோம்.

(மலாக்கா முத்துகிருஷ்ணன்)
26.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


M R Tanasegaran Rengasamy: அழிவு நெருங்குகிறது என்றால் சுடலையப்பன் உத்திராட்டம் போடுவார். நேரம் நெருங்கி விட்டது. நீசர்கள் அழிவார்கள். பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். நாமும் இவ்வருட தீபாவளியை மிதமாக கொண்டாடுவோம். சூழ்ந்துள்ள கருமேகம் கலைந்தே தீரும். இந்நிலத்தில் நீடிக்கும் அநியாயங்கள் சிதையும். எல்லோரும் ஒன்று படுவோம்.

Sukumaran Suppiah: யார் என்ற சொன்னது ஒன்று கூட கூடாதென்று! நன்றாகப் பேசுங்கள்! மலாய், இஸ்லாம் பற்றி எதை வேண்டுமானாலும் பேசுங்கள்!

ஆனால்.... அங்கே எங்களைப் பற்றிய இழிவான பேச்சு எதற்கு? சுதந்திரம் கேடகும் போது நீங்கள் தனியாகச் சென்று இருக்க வேண்டும்!

அப்பொழுது நாங்கள் தேவைப் பட்டோம்! இல்லையேல் கிடைத்து இருக்காது இல்லையா... சுதந்திரம்! நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சரியான தடம் அமைத்துக் கொடுத்து விட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சு விடக்கூட சந்தர்ப்பம் கொடுக்காமல்....

இப்படியா ஒரு பிரதமர் நடந்து கொள்வது! மலேசியாவின் எதிர்காலம் இருண்டு கொண்டு வருகிறது! ஒவ்வொரு நொடியும் அச்சத்தில் நகர்கிறது! எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று மனம் ஏங்குகிறது! இறைவா... எங்களைக் காப்பாற்று.....

Manikam Manikam Manikam: வீணா போன தலைவன்... எம் மக்கள் எவ்வளவு வெறுப்பா இருக்குகிறார்கள் தெரியுமா???

Pushpalata Ramasamy: காலம் பதில் கூறட்டும்.... நாம் பிராத்திப்போம்

Soma Kulim: He is PM for Malaysians..

Madiwanan Chinnapian >>> Soma Kulim: Yes aiya... PM that had forgotten his root.

Inbachudar Muthuchandran: 
https://www.facebook.com/photo.php?fbid=2904981436182685&set=a.152237471457109&type=3&theater

Sathya Raman: நாட்டில் நடக்கிற கூத்துகளின் நிலைப்பாட்டை பார்க்கையில் வெச்சி விலாச தோன்றுகிறது. ஒரு நாதாரிக்காக இந்த நாட்டு இந்தியர்களை இம்சை படுத்துவது எந்த வகையில் நியாயம்? பல அன்பர்கள் வெவ்வேறு பதிவுகளில் இந்த நாட்டு தலைவரைத் தாறுமாறாக வசை பாடுகிறார்கள். அந்த அளவிற்கு கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

மலேசியாவின் உள்விவகாரத்தில் மற்ற நாடுகள் மூக்கை நுழைக்கக் கூடாதாம் தப்பாம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் இங்கு உள்ளவர் மட்டும் வம்பு பேசலாமாம்? இது எந்த ஊர் நியாம்ங்க ?அதன் தொடர்பான விவாகாரம் தான் விஸ்வரூபம் எடுத்து அந்த 12 பேரை தடுத்து வைத்துள்ளது. பத்து வருடத்திற்கு முன்பு பலிகாடா ஆகி பல இலட்சம் உயிர்களைப் பறித்த உலக மகா பாவக்காரன் ராஜபக்சேகூட இப்படி யோசித்து இருக்க மாட்டான்.

இஸ்லாம் நாடுகளில் ரத்த ஆறு ஓடினால் இங்குள்ளவர்கள் யார், எவர் எந்த மதம் என்றெல்லாம் பார்க்காமல் பரிதாபப்பட்டு அனுதாபம் கொள்வோம். ஆனால் அதே நிலை மற்ற இனத்திற்கு ஏற்படும் போது அந்த அனுதாபத்திற்கு சொஸ்மா பாயுமாம். என்னங்கடா இது இந்த மரமண்டைகளின் தற்குறியான போக்கு?

கைது செய்தவர்களை 27-ஆம் தேதிக்கு மேல் தான் விசாரணையாம். இந்நாட்டு சட்டம் அமைப்பு அரசியல்வாதிகளுக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டு பொது மக்களை பகடைக் காயாக ஆட்டி படைக்கிறது.

பார்ப்போம் இவர்களது பாட்ஷா எத்தனை நாள் என்று ????? கைதானவர்கள் குடும்பத்தினர் தைரியம் காத்து போராட வேண்டுகிறேன். கடவுள் மறந்தாலும் காலம் எல்லாவற்றையும் காத்து தகுந்த பலனை கொடுத்திடும் என்ற நம்பிக்கையில்..

Augustine Chinnappan Muthriar: Arumaiyaana pagaru

Jsr Chandra: Ithai todaranthu enggalnal parga mudiyavillai iya

Shanmugam Surya: Kadavule engal ammakkalukku yen intha sothanai neenga tan kappatra vendum om sairam

Arjunan Arjunankannaya: நம்மை கறை படுத்த வேறு வழி இல்லாமல் இதை கையில் எடுத்து இருக்கிறார்கள் உலக ஏ. பி. சி. டி. கண்டுபிடித்த அறிவாளிகள்.இவர்கள் மேல் உள்ள கறையை அகற்ற...

Thanabaal Varmen: அரசியல் சித்து விளையாட்டு நடைபெறுவதாகவே கருதுகிறேன்! பத்து ஆராங்கில் நடந்தப்பட்ட கொலையை, திசைத் திருப்பவே அரசியல் சாணக்கியரின் இந்த சித்து விளையாட்டு.

Ravi Purushothaman: எல்லா இனங்களும் தன்மான மாநாடு நடத்தினால் நிலைமை என்னாகும்?????




சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் விரதம் - 25.10.2019

நீதி நிலைக்க வேண்டும். நியாயம் தழைக்க வேண்டும். நல்லாட்சி மலர வேண்டும். நல்வாழ்வு புலர வேண்டும். நிலை மாறுமா. துயர் மாறுமா. கனவு பலிக்குமா. சத்தியம் பேசுமா.


வாயில்லா ஜீவன்களின் வெதும்பல்கள் அல்ல. அவை வாயில்லா பூச்சிகளின் வாய்மை நிறைந்த உண்மைகள். அவையே வாய்மைக் கடல்களில் ஆர்ப்பரிக்கும் வேதனை மிக்க உண்மைகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களில் மூவரின் மனைவிமார்கள் தங்களின் கணவன்மார்களை விடுவிக்கும்படி கடந்த 21.10.2019-ஆம் தேதியில் இருந்து அமைதி மறியல் செய்து வருகின்றனர்.


இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் பெண்கள் மூவரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அந்த விரதம் இன்றும் தொடர்கிறது.

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் துணைவியார் திருமதி வீ.உமாதேவி சொல்கிறார்...

’விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தார் என என் கணவர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்.’

’ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.’

’சிறையில் என் கணவர் மோசமான நிலையில் இருக்கிறார். அவரின் உடல்நலம் குறித்து நான் கவலை கொள்கிறேன்’ என்று உமாதேவி கூறினார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக மலாக்கா மாநிலத்தில் கொண்டாடுவதற்கு மாண்புமிகு சாமிநாதன் திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். இந்தச் சமயத்தில் தான் கைது செய்யப்பட்டார்.

சாமிநாதன் அவர்கள் மலாக்கா மாநிலத்தின் இந்தியர்களுக்கு ஒரு தலைவராக திகழ்ந்தவர். அவர் இல்லாமல் மலாக்கா மாநில இந்தியர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு முன் அந்தப் பெண்களின் அமைதிப் போராட்டமும் உண்ணாவிரதமும் தொடர்கின்றன.

சோஸ்மா தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டும்.

குற்றம் நிரூபீக்கப்படும் வரையில் அந்த 12 பேரும் நிரபராதிகள் என்பது உறுதிபடுத்தப்பட்ட வேண்டும். இதுவே மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்தப் பெண் பிள்ளைகளுக்கு நம்முடைய அன்பும் ஆதரவுகளும்...

(மலாக்கா முத்துகிருஷ்ணன்)
25.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Prezident V Jai: மலேசிய நரகாசுரனை அழித்தால் என்றும் தீபாவளி இந்தியர்களின் வாழ்வில்

Kumar Murugiah Kumar's >>> Prezident V Jai: அதுதான் என் அவா கூட








சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் உண்ணாவிரதம் - 25.10.2019


தமிழ் மலர் - 25.10.2019

விடுதலைப்புலி இயக்கத்தோடு தொடர்பு உடையவர்கள் என்று அண்மையில் மலேசியப் போலீஸாரால் கைது செய்யப்பட்ட காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமிநாதன்; வர்த்தகர் எஸ்.சந்துரு; மலாக்கா ஊராட்சி மன்றக் கவுன்சிலர் பி.சுரேஷ்குமார்; ஆகிய மூவரின் மனைவிமார்களும் நேற்று புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.


உமாதேவி; சுமதி; விமலா ஜக்குமாரன்; ஆகிய மூவரும் நேற்று புக்கிட் அமான் வளாகத்தில் இறுதி வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்ற தங்கள் முடிவை அறிவித்தனர்.

கடந்த திங்கட் கிழமை தொடங்கி அந்த மூன்று பெண்களும், அந்தத் தேசியக் காவல் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே தரையில் அமர்ந்தவாறு ‘தங்களின் கணவன்மார்களைத் தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்’ என்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

*என்னுடைய கணவர் சிறைக்குள் இருக்கும் போது எப்படி நான் தீபாவளியைக் கொண்டாடுவது.* வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறேன். எது நடந்தாலும் இந்தப் போலீஸ் தலைமையகத்திலேயே நடக்கட்டும்.

*செய்யாத குற்றத்திற்காக கைதியாக இருக்கும் கணவர்கள்*

இது வரையில் என்னுடைய மகனுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அப்பா எங்கே என்று கேட்கும் போது எல்லாம் என் மகனிடம் நான் என்ன பதில் சொல்வேன்?

இதுவரை ஏன் தீபாவளிக்குப் புதுச் சட்டை வாங்கவில்லை என்று கேட்கிறான். நான் என்ன சொல்லி புரிய வைப்பது என்று கூறும் போதே ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி கண்ணீர் விட்டு அழுதார்.

*அவர்கள் இல்லாமல் எங்களுக்கு எங்கே தீபாவளி*

பக்காத்தான் கட்சி ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை அகற்றுவதாக் கூறி இருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது.

அமைச்சர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள். அவர்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தையும் வருத்தமும் எங்கள் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வையும் கொண்டு வரப் போவது இல்லை என்று தன் ஆதங்கத்தை உமாதேவி வெளியிட்டார்.


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Inbachudar Muthuchandran: தேசிய முன்ணணி ஆட்சியில் அமலாக்கம் செய்யப்பட்ட இந்த சோசுமா சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்

Muthukrishnan Ipoh: வேதனை... வேதனை...

Moon Noom: தமிழ் நாடாக இருந்திருந்தால் தமிழர்களின் வற்றாத ஆதரவுகள் கிடைத்திருக்கும் இந்தியர்களாக இருப்பதே காரணம் முடிந்த கதைக்கு இப்படி ஒரு நாடகமா இன துரோகிகள்

Augustine Chinnappan Muthriar: Roomba veethanai

Ramarao Ramanaidu: உண்ணாவிரதம் இந்த நாட்டில் எந்த பலனையும் தராது ... சாகட்டும்னு விட்டுடுவாங்க ...

Ramarao Ramanaidu: தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் உள்ளே தான் இருப்பார்கள் ...

Ramarao Ramanaidu:
போய் பிள்ளைகளை கவனியுங்கள் ...

Ramarao Ramanaidu: இதை இந்த மூன்று பெண்களுக்கும் புரிய வைக்க வேண்டும் ... இவர்கள் தவறான வழியில் நடத்தப் படுகிறார்கள் ...

Kumaravelu Shanmugasundaram: தமிழ் என்றும் வெல்லும்