26 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள்

இன்றைய நெருக்கடியான காலக் கட்டத்தில், மலேசியாவில் மிகவும் பிரபலமாகி வருபவர் பொதுநலச் சேவை முன்னணிச் சேவையாளர்களில் ஒருவரான டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Datuk Dr Noor Hisham Abdullah). மலேசியச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர்.



கொரோனா வைரஸுக்கு எதிரான மலேசியாவின் போரில் டாக்டர் நூர் பிரபலமான மனிதராகி வருகிறார். இவருக்கு நிறையவே வாழ்த்துச் செய்திகள் குவிகின்றன. இவருக்கும் இவரின் சுகாதார முன்னணி குழுவினருக்கும் மலேசிய மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவிப்புகள் செய்யும் போது உறுதியளிக்கும் முகத்துடன் எளிய முறையில் வர்ணனை செய்கின்றார். நம்பிக்கை அளிக்கும் உறுதிப்பாட்டை அவரின் தொனியில் எதிர்பார்க்க முடிகின்றது. அதுவே அவரிடம் காணப்படும் மிகச் சிறப்புத் தன்மை.



Trauma faced by some housemen in hospitals

எப்பேர்ப்பட்ட செய்தியாக இருந்தாலும் அதை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் தான் அறிவுக் கூர்மையின் மிக உயர்ந்த நிலை பிரதிபலிக்கின்றது. அதைத் தான் டாக்டர் நிஷாம் செய்து வருகின்றார்.

சமூக ஊடகவியலாளர்களில் ஒருவர் ‘நன்றிங்க. மலேசியாவுக்கு உங்கள் சேவை முக்கியம். நீங்கள் எங்களின் சேவை முன்னணியாளர் (frontliner)’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

டாக்டர் நிஷாம், சிலாங்கூர் சிப்பாங்கில் பிறந்தவர். 2013-ஆம் ஆண்டில் இருந்து மலேசியச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் பதவி. வயது 57. புத்ராஜெயா மருத்துவமனையில் 2007-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருந்தவர். மார்பகப் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். 




கோவிட் -19 அவசர நிலையைக் கையாளுவதில் அயராது உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சமூக ஊடகங்களில் நன்றி தெரிவிக்கும் செய்திகள் வெள்ளம் போல நிறைந்து வருகின்றன. அவர்களில் இவருக்கும் நிறையவே வாழ்த்துச் செய்திகள்.

நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அடுத்தச் செய்திகள்; பதிவுகளுக்காக ஆவலுடன் காத்து இருக்கிறோம். ஆனால் முன்னணிச் சேவையாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றார்கள்.

அவர்கள் பாதுகாப்பாகச் சேவைகள் செய்ய வேண்டும். பாதிக்கப் படாமல் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். பிரார்த்திப்போம். Hats off to the frontliners.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.03.2020

25 மார்ச் 2020

கொரோனா வைரஸ் மனித மரபணுவை எப்படி அழிக்கிறது

கொரோனா வைரஸ் எப்படி நம் மரபணுவைக் கட்டாயப் படுத்தி புதிய கிருமிகளை உருவாக்கிக் கொள்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் இரண்டு விதத்தில் நம் உடலுக்குள் செல்கிறது. முதலாவது சுவாசத்தின் மூலமாகச் செல்கிறது. 


நம் பக்கத்தில் இருப்பவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நமக்கே தெரியாமல் இருக்கலாம்.

ஏன் என்றால் கொரோனா தொற்று ஏற்பட்டு 3 - 14 நாட்கள் வரை தொற்று ஏற்பட்டவருக்கே தெரியாது.

அதன் நோய் காப்புக் காலம் (incubation period) 3 - 14 நாட்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. பொதுவாக 5 நாட்களில் தெரிந்து விடும்.

கொரோனாவின் காப்புக் காலத்தில் பாதிக்கப் பட்டவரின் உடலில் கோடிக் கணக்கான கொரோனா கிருமிகள் உற்பத்தி ஆகி இருக்கும். அறிகுறிகள் தோன்றி இருக்காத காலக் கட்டம். பொது இடங்களில் பரவிக் கொண்டும் இருக்கும்.
 

அந்தக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர் மூச்சு விடும் போதும் சரி; தும்மும் போதும் சரி; இருமல் வரும் போதும் சரி; ஏப்பம் விடும் போதும் சரி; ஒரு பொருளைத் தொடும் போதும் சரி; கொரோனா கிருமிகள் அலை அலையாய் பரவிப் போகின்றன.

பாதிக்கப் பட்டவரைக் குறை சொல்ல முடியாது. ஏன் என்றால் கொரோனா தன் உடலில் குட்டிப் போட்டு பேரன் பேத்திகள் எடுத்து இருக்கின்றன என்பது பாவம் அவருக்கே தெரியாது.

பாதிக்கப் பட்டவர் இருமினால் அல்லது தும்மினால் அவர் உடலில் இருந்து கொரோனா கிருமிகள் வெளியாகின்றன. அப்படியே ஒரு மீட்டர் வரை பரவுகின்றன.

அவர் இருமிய இடத்தில் அல்லது அவர் தொட்ட இடத்தில் உள்ள ஒரு பொருளை நாம் தொடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்னர் அப்படியே எதேச்சையாக நம் முகத்தையும் தொடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
 


அங்கே தான் பிரச்சினை தொடக்கம். கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலிலும் நுழையத் தொடங்குகிறது.

ஆக வெளியே எங்கேயாவது போனால்; ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால்; எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் கை விரல்கள் உங்கள் முகத்தின் மீது படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைக் கைகளால் தொடவே கூடாது.

வெளியே போய் வந்ததும் உங்கள் கைகளைச் சவர்க்காரம் போட்டு 25 விநாடிகளுக்கு நன்றாகக் கழுவுங்கள். அப்படியே உங்கள் கைகளில் கொரோனா கிருமிகள் இருந்தால் அவை அழிவதற்கு 22 விநாடிகள் பிடிக்கும். எந்த இடத்தில் எந்தக் கிருமி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. சரி தானே.

கொரோனா கிருமிகளின் மீது படர்ந்து இருக்கும் புரத அமினோ அமிலங்களைச் சவர்க்காரம், குளோராக்ஸ் அமிலம், சுத்திகரிப்பு திரவங்கள் (Sanitizers) போன்றவை கரைத்து அழித்து விடும். அதனால் கொரோனா கிருமியும் செயல் இழந்து போகும்.
 

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று முக்கிய அமைப்புத் தொகுதிகளைக் கொண்டு உள்ளன. 1. ஆர்.என்.ஏ. (RNA); 2. புரதங்கள் (Proteins); 3. கொழுப்புப் பொருட்கள் (Lipids).

ஆர்.என்.ஏ. என்பது வைரஸ் கிருமியின் மரபணுப் பொருள். இது டி.என்.ஏ. (DNA) போன்றது. கிருமியின் புரதங்களுக்குப் பல பொறுப்புகள் உள்ளன.

கொரோனா வைரஸ் கிருமியின் தலையாய வேலை என்ன தெரியுங்களா. மனிதர் அல்லது விலங்குகளின் உயிரணுக்களை உடைப்பது. அப்புறம் தன்னைப் போல மேலும் பிரதிகளை உற்பத்தி செய்ய வைப்பது. உயிரியல் அடிப்படையில் பார்த்தால் ஒரு முக்கிய கட்டிடத் தொகுதியைப் புரதங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன.

ஒரு வீட்டைக் கட்டும் போது செங்கற்களை அடுக்கி அடுக்கி சுவர் எழுப்புகிறோம் அல்லவா. அதே போலத் தான் வைரஸ் கிருமிகளின் கட்டமைப்பில் புரதங்கள் உதவி செய்கின்றன.
 


லிப்பிடுகள் (Lipids) எனும் கொழுப்புப் பொருட்கள், வைரஸ் கிருமியின் மேல் தோல் பகுதிக்கு கொழுப்பை உருவாக்கித் தருகின்றன. அந்தக் கொழுப்பு தான் கிருமியின் பாதுகாப்புக்குப் பெரிதும் உதவுகிறது.

அதே சமயத்தில் கிருமி பரவிப் போவதற்கும் அந்தக் கொழுப்பு உதவி செய்கிறது. அடுத்து முக்கியமான ஒரு விசயம். எதிரி அணுக்கள் மீது படை எடுப்பதற்கும் கிருமியின் புரதம் தான் உதவுகிறது. சரி.

இறுதிக் கட்டத்தில் கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) வருகிறது. ஆக இந்த ஆர்.என்.ஏ.; இந்தப் புரதங்கள்; இந்த லிப்பிட் கொழுப்புகள் மூன்றும் கூட்டு சேர்ந்து ஒரு வைரஸை உருவாக்குகின்றன. அதற்கு உயிரும் கொடுக்கின்றன.

இருந்தாலும் பாருங்கள். எந்தச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டினாலும் மூன்று பங்காளிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று சொல்வார்கள். ரொம்ப கஷ்டம் என்பது அந்தக் காலத்து வழக்கு.
 

அந்த மாதிரிதான் வைரஸ் கூட்டு அமைப்பிலும் சற்றே இடக்கு முடக்குகள். மேலே சொன்ன அந்த மூன்று தொகுதிகளையும் ஒன்றாக இணைத்து; அவற்றை ஒரு வலுவான, ஓர் உறுதியான கட்டமைப்புக்குள் பிணைக்கும் திறன் வைரஸ் கிருமியிடம் இல்லை. கொரோனா வைரஸின் வீக் பாயிண்ட்.

அங்கே தான் அதன் கட்டமைப்பில் பலகீனம் உருவாகிறது. மூன்று தொகுதிப் பொருட்களும் கூட்டாக இணைந்து வலுவாக இருப்பது இல்லை. அதுதான் வைரஸ் கிருமியிடம் உள்ள சின்ன ஒரு குறைபாடு.

இருந்தாலும் கிருமியின் மரபணுக் கட்டமைப்பை அப்படி ஒன்றும் சுலபத்தில் உடைத்துவிட முடியாது.

ஆனால்... ஆனால்... ஒரே ஒரு பொருள். சவர்க்காரம் எனும் சாதாரணமான பொருள். அந்தப் பொருள் மட்டும் தான் வைரஸ் கிருமியின் கட்டமைப்பைச் சில விநாடிகளில் உடைத்துவிட முடியும். உடைக்கும் ஆற்றலைப் பெற்று உள்ளது.
 

அதே சமயத்தில் சலவைத்தூள்; சாராயம் (Isopropyl Alcohol); ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen Peroxide) போன்ற பொருட்களும் வைரஸ் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டவை. நினைவு படுத்துகிறேன்.

ஒரு கொரோனா வைரஸ் ஒரு மனித உயிரணுவை ஆக்கிரமிக்கும் போது, கிருமியின் ஆர்.என்.ஏ. போல புதிய ஆர்.என்.ஏ. நகல்களை உருவாக்க மனித உயிரணுவையே கட்டாயப் படுத்துகிறது. பாருங்கள் எப்பேர்ப்பட்ட கில்லாடித் தனமான வைரஸ்.

கிருமியின் ஆர்.என்.ஏ. போல மேலும் மேலும் பல பிரதி ஆர்.என்.ஏ. -க்களை உருவாக்க மனித உயிரணுவைக் கட்டாயப் படுத்துகிறது. அதையும் தாண்டிய நிலையில் கிருமியிடம் இருக்கும் பற்பல புரதங்களைப் போல மேலும் மேலும் பல புரதங்களை உருவாக்கவும் மனித உயிரணுவைக் கட்டாயப் படுத்துகிறது.
 

அந்த வகையில் பழைய வைரஸ் கிருமியைப் போன்றே புதிய புதிய வைரஸ் பிரதிநிதிகள் உருவாக்கப் படுகின்றன.

நம்முடைய உயிரணுவில் ஏற்கனவே புரதச் சத்துகள் இருக்கும். அந்தப் புரதச் சத்துகளைக் கொண்டே புதிய வைரஸ் கிருமிக்கான புரதங்களும் உருவாக்கப் படுகின்றன.

அப்புறம் என்ன. அந்தப் புரதங்களைக் கொண்டு புதிய புதிய வைரஸ் கிருமிகள் உருவாக்கப் படுகின்றன. எப்பேர்ப்பட்ட கில்லாடித் தனமான வைரஸாக இருக்க வேண்டும். நீங்களே மார்க் போட்டு கொடுத்து விடுங்களேன்.

பின்னர் தான் இடி அமின் கொலை வெறித் தாண்டவங்கள். புதிதாக உருவான வைரஸ் கிருமிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அவற்றின் விருந்தாளியான மனித மரபணுவை எதிர்க்கின்றன. வெற்றி அந்தப் பக்கம் தான்.

பாவம் மனித மரபணு. புதிய வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல் மெது மெதுவாய்ச் செத்துப் போகும். அல்லது வெடித்துச் சிதறிப் போகும்.
 

அதன் பின்னர் புதிதாக முளைத்த வைரஸ் கிருமிகள் அடுத்தடுத்த மனித மரபணுக்கள் மீது படை எடுக்கின்றன. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன.

இறுதியில் மனித நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்கள்; சளிச் சவ்வுகளில் (mucous membranes) நுழைந்து தங்களின் கொடூரப் பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இந்தக் கட்டத்தில் நோயாளி புனர் ஜென்மம் எடுத்து உயிர் பெற்று இருக்கலாம். அல்லது இறந்து போய் இருக்கலாம்.

நீங்கள் இருமும் போதும்; அல்லது தும்மும் போதும் நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்கள் வழியாகச் சிறு சிறு திரவத் துளிகள் வெளியே கொட்டுகின்றன.

தும்மும் போது, சளி நீர்த் துளிகளில் உள்ள சில பல வைரஸ் கிருமிகள் 30 அடி தூரம் வரை பறந்து பரவிச் செல்ல முடியும். அதை மறந்துவிட வேண்டாம்.

கொரோனா வைரஸ் கிருமிகள் சற்றே பெரியவை. தும்மும் போது அந்தக்  கிருமிகள் 7 அடி வரை பாய்ந்து செல்ல முடியும். ஆகவே தும்மும் போதும் சரி; இருமும் போதும் சரி; முகத்தை மூடிக் கொள்ளுங்கள்.

வரும் முன் காப்போம். வந்த பின் தடுப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.03.2020


24 மார்ச் 2020

கொரோனா கோவிட் வைரஸ் உள்கட்டமைப்பு

கொரோனா கோவிட் 19 வைரஸ் கிருமிக்கு மரபணு (Gene) உள்ளது. அந்த மரபணுவைக் கொண்டு, மருத்துவ வல்லுநர்கள் கொரோனா மரபணு வார்ப்புருவை (Genetic Template) அமைத்து விட்டார்கள். பின்னர் அந்த வார்ப்புருவைத் துல்லியமாக ஆய்வு செய்து பார்த்தார்கள். 



கொரோனா வைரஸைச் சுற்றி இருக்கும் மேல் ஓட்டுப் பகுதியில் கூர்மையான புரதங்கள் இருந்தன. கொரோனாவின் இந்தக் கூர்மையான புரதங்கள் தான் மனிதர்களின் உயிரணுக்களைக் குத்திக் கிழிக்கின்றன. அதன் பின்னர் கொரோனா வைரஸ்கள் மனித உயிரணுக்களின் உள்ளே சென்று தம் நாச வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றன.

அதையும் தாண்டிய நிலையில் கொரோனா வைரஸ் கிருமியின் கூர்மையான புரதங்களுக்குக் கூர்மையான கொக்கிகளும் இருக்கிறன. இந்தக் கொக்கிகள் தான் மனித மரபணுக்களைக் கிழிப்பதற்கு உதவியாய் இருக்கின்றன. அந்த வகையில் மனித மரபணுகளுக்குள் கொரோனா வைரஸ்கள் உள்ளே செல்ல வழி அமைத்தும் கொடுக்கின்றன. 




சென்ற 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், சீனா வூஹான் நகரில் கொரோனா கோவிட் 19 வைரஸ் பரவல் தீவிரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து SARS-CoV-2 எனும் கொரோனா கிருமியின் மரபுரேகை வரிசை முறையை (Genome sequencing) சீனா அறிவியலாளர்கள் வெளியிட்டார்கள்.

மரபுரேகைகள் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் வரிசை முறையை மரபு அகராதி என்கிறோம். அதாவது கொரோனா வைரஸின் மரபணுக் குறியீடு. புரியும் என்று நினைக்கிறேன்.

சீனா வெளியிட்ட கொரோனா கோவிட் 19 வைரஸின் மரபுரேகை வரிசை முறை, உலக நாடுகளில் உள்ள அனைத்து மருத்துவ ஆய்வுக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அதை வைத்துக் கொண்டு கொரோனா கோவிட் 19 வைரஸ் பற்றி மேலும் ஆழமாக தீவிரமாக ஆய்வுகள் செய்தார்கள். 




இந்திய மருத்துவ அறிவியலாளர்களும் ஆய்வு செய்தார்கள். கொரோனா வைரஸின் மரபு வரிசையைக் கண்டுபிடித்த உலக நாடுகளில், இந்தியாவும் தனி ஓர் இடத்தை வகிக்கிறது. ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சீனா நாடுகளின் மருத்துவ வல்லுநர்கள் அந்த மரபு வரிசையை கண்டுபிடித்து விட்டார்கள்.

கொரோனா வைரஸின் மரபு அணுவைப் பிரிப்பதன் மூலம் அதன் இயல்புகளைக் கண்டுபிடித்து விடலாம். அதைக் கொண்டு அந்தக் கொரோனா வைரஸிற்குத் தடுப்பு மருந்தை உருவாக்கி விடலாம். அதைத்தான் இந்திய மருத்துவ வல்லுநர்களும், உலக வல்லுநர்களும் செய்து கொண்டு வருகிறார்கள். வாழ்த்துவோம்.



Credit: Dinakaran Tamil daily

தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு அல்லும் பகலும் உழைக்கின்றன. என்னதான் அவசரப் பட்டாலும்... என்னதான் போட்டி போட்டாலும்... ஒரு முழுமையான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க எப்படியும் இன்னும் 12 -18 மாதங்கள் பிடிக்கலாம்.

அதுவரை பொறுமை... பொறுமை... அது வரையிலும் மனிதர்கள் வீட்டிற்கு உள்ளேயே அடக்கி வாசிக்க வேண்டும் என்பது கொரோனா மனிதர்களுக்கு எழுதிச் சென்ற ஒரு கிறுக்கல் கடிதம்.

அந்தக் கடிதத்தின் இரகசியக் குறியீடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். கொஞ்ச காலம் பிடிக்கும். என்ன... அதுவரையில் மனுக்குலம் மேலும் சில உயிர்களைத் தாரை வார்க்க வேண்டி வரலாம். வேதனையாக உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2020


வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பது மிக நுண்ணியப் புரதங்களைக் கொண்ட ஓர் உயிர்ப் பொருள். ஒரு நச்சுயிரி. தாவரம் அல்லது விலங்குகள் அல்லது மனிதர்களின் செல்களில் மட்டுமே வாழக் கூடியவை. செல் (Cell) என்றால் நம் உடலில் இருக்கும் உயிர் அணுக்கள்.

சொந்தமாக வாழ்வது இல்லை. சொந்தமாக இனப் பெருக்கம் செய்வதும் இல்லை. மற்ற உயிர்களின் மூலமாக உயிர் வாழும் ஒட்டு உயிர்கள்.

இந்த வைரஸ் நச்சு உயிரிகள் இன்னோர் உயிரினத்தின் உயிர் அணுக்களை முதலில் தாக்கிச் சிதைக்கின்றன. பின்னர் அந்த உயிர் அணுக்களைப் பயன்படுத்திக் கொண்டு தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.

உலகில் மில்லியன் கணக்கான வைரஸ் இனங்கள் உள்ளன. இதுவரையில் 5000 வைரஸ் கிருமிகளை அடையாளம் கண்டு இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இந்த வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை தான்.

வைரஸ் என்பதைத் தமிழில் தீநுண்மி அல்லது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் என்று அழைக்கலாம். மிக மிக நுண்ணியமானது. 20-300 நானோமீட்டர் (Nanometer) அளவு கொண்டது. 



நானோமீட்டர் என்றால் ஒரு மீட்டர் நீளத்தின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும். அதாவது 0.000000001 மீட்டர். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சில வகையான வைரஸ்கள் நேரடியாகவே ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும். எயிட்ஸ் HIV போன்ற வைரஸ், பெரும்பாலும் பாலியல் உறவு மூலமாகப் பரவுகிறது.

1892-ஆம் ஆண்டு திமித்ரி இவனோவ்சுகி (Dmitri Ivanovsky) என்பவர் ரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற தாவரவியலாளர். பாக்டீரியா அல்லாத ஒரு கிருமி புகையிலைப் பயிர்களைத் தாக்குகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னார். 



பின்னர் மார்டினஸ் (Martinus Beijerinck) எனும் டச்சு அறிவியலாளர் அந்தக் கிருமி தான் மொசாயிக் (Tobacco mosaic virus) எனும் வைரஸ் என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

வைரஸ் கிருமிகள் பரவுதலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண்டமிக் (Endemic); எபிடமிக் (Epidemic); பாண்டமிக் (Pandemic).

எண்டமிக் (Endemic) என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரத்திலும் பரவக் கூடியது. எடுத்துக்காட்டாக சின்னம்மை நோயைச் சொல்லலாம். பெரியம்மை அல்ல.

சின்னம்மைக்கு ஆங்கிலத்தில் ‘சிக்கன்பாக்ஸ்’ (Chickenpox) என்று பெயர். பெரியம்மைக்கு ‘ஸ்மால்பாக்ஸ்’ (Smallpox) என்று பெயர்.



பெரியம்மை நோயை 1977-ஆம் ஆண்டிலேயே உலகத்தில் இருந்து அழித்து விட்டார்கள்.

இருந்தாலும் கடந்த 100 ஆண்டுகளில் 50 கோடி பேரைப் பழி வாங்கி விட்டுத்தான் போனது. இதற்கு மருந்து கண்டு பிடித்த மனிதத் தெய்வம் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner).

அதே போல மலேரியா காய்ச்சலையும் எண்டமிக் என்பதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

எபிடமிக் (Epidemic) என்றால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் மட்டும் அதிகமாகப் பரவக் கூடிய நோயாக இருக்கும். மழைக் காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். பார்த்து இருப்பீர்கள். அதன் பிறகு அந்த வைரஸ் காய்ச்சல் சன்னம் சன்னமாய்க் குறைந்துவிடும். இந்த மாதிரியான தொற்றலுக்கு எபிடமிக் என்று பெயர். 



பாண்டமிக் (Pandemic) என்றால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக் கூடியது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு பயணிக்கும் மனிதர்கள் மூலமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா ஒரு வகையான பாண்டமிக் நோய். சரி.

வைரஸ் கிருமி வகைகளைப் பல உள்ளன. அதில் இபோலா வைரஸ் (Ebola Virus) ஒரு வகை. இதை இபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease, EVD) அல்லது இபோலா இரத்த இழப்புச் சோகைக் காய்ச்சல் (Ebola hemorrhagic fever, EHF) என்றும் சொல்வார்கள்.

கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் இருந்து மூன்று வாரங்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (Myalgia–muscle pains), வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். சிகிச்சை அளிக்கா விட்டால் உயிருக்கு ஆபத்து.

இபோலா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள், மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பின்னர் அதே அந்த மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவுகிறது. 



1976-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தென் சூடான்; காங்கோ ஆகிய இரு நாடுகளில் இந்த இபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கோ நாட்டில் இபோலா என்கிற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் முதன்முதலில் தாக்கியது. அதனால் அதற்கு இபோலா வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். இது வரையில் 11,300 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்து வருவது சார்ஸ் (SARS). Severe Acute Respiratory Syndrome என்பதின் சுருக்கம். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். 21-ஆம் நூற்றாண்டில் மிக மோசமான நோய் என பெயர் பெற்றது. இருந்தாலும் இப்போது கொரோனா முன்னுக்கு நிற்கிறது.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் சார்ஸ் வைரஸ் கிருமியும், கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த தொற்றுக் கிருமி தான். ஒன்றுவிட்டச் சகோதரர்கள்.

2000-ஆம் ஆண்டு தென் சீனா, குவாங்டாங்க் மாநிலத்தில் முதன்முதலில் இந்தச் சார்ஸ் தொற்றுக் கிருமி கண்டு அறியப் பட்டது. சார்ஸ் வைரஸால் 916 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. கொரோனா மாதிரி தான்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சார்ஸ் வைரஸால் எந்த மனிதருக்கும் சார்ஸ் நோய் ஏற்படவில்லை. இருந்தாலும் பெரியம்மை போல இந்த நோய் முற்றிலும் அழிக்கப் பட்டதாகக் கூற இயலாது. விலங்கு இனங்களில் சார்ஸ் வைரஸ் இன்னும் இருக்கிறது.

எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சார்ஸ் வைரஸ் மனிதருக்குத் தொற்றலாம். வாய்ப்பு உண்டு. எந்த நேரத்திலும் மறுபடியும் படை எடுக்கலாம். இந்தக் கிருமிகளிடம் இருந்து எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். சுத்தம் சுகாதாரமாக இருந்தால் வைரஸ் கிருமிகளிடம் இருந்து தப்பிக்கலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2020





23 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: 10

நன்றிகள் ஆயிரம்
🙏🙏🙏

மலேசிய மக்கள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில்... பொதுநலச் சேவையாளர்கள் சிலர் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். நன்றிகள் ஆயிரம்.

குடும்பத்தை மறந்து, குதூகலத்தைத் துறந்து, தனிப்பட்ட தேவைகளைக் கடந்து அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் செயல் பட்டு வருகின்றார்கள். நன்றிகள் ஆயிரம்.

மருத்துவர்கள், தாதிமார்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், அவசர முன்னணியாளர்கள், போலீசார், இராணுவ வீரர்கள், ரேலா உறுப்பினர்கள், நகராண்மைக் கழகச் சேவையாளர்கள், மற்றும் இதர அத்தியாவசியச் சேவையாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்.

நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள். நன்றிகள் ஆயிரம்.

அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும். அவர்கள் நலத்துடன் சேவைகள் செய்ய வேண்டும். நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோம். வாழ்க அவர்களின் சேவை மனப்பான்மை. வாழ்க அவர்களின் பொதுநலப் பார்வை. நன்றிகள் ஆயிரம்.

இந்தக் கொரோனா வைரஸ் கிருமியால் பல கோடி மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள். பல கோடி மக்கள் பதறிப் போய் நிற்கிறார்கள்.

கொரோனா நெருங்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

-முத்துக்கிருஷ்ணன்
23.03.2020