27 மார்ச் 2020

கொரோனா நெருக்கடியில் தும்மல் இரகசியங்கள்

முகத்திற்கு அழகு கொடுப்பது கண்கள். அந்தக் கண்களுக்கு அழகு கொடுப்பது கன்னங்கள். அந்தக் கன்னங்களுக்கு அழகு கொடுப்பது மூக்கு. பார்ப்பவர்களை ஈர்க்கும் அழகிய உறுப்பு.

அந்த அழகிய மூக்கிற்கு முத்திரை பதிப்பது போல பெண்கள் மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள். அழகில் மேலும் கூடுதல் அழகு. சரி.




மூக்கின் வெளிப் பாகத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். ரசிக்கிறோம். கிளி மூக்கு, கூர் மூக்கு, வளை மூக்கு, குடை மூக்கு, மாங்காய் மூக்கு, கோணல் மூக்கு என்று நிறையவே பெயர்கள் வைத்துக் கொள்கிறோம்.

ஆனால் அந்த மூக்கு எப்பேர்ப்பட்ட வேலைகளைச் செய்கிறது என்பதைப் பற்றி பலர் உணரத் தவறி விடுகிறார்கள். மூக்கு நம் உடலுக்கு மிகப் பெரிய ஒரு பாதுகாப்பு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது. பலருக்கும் தெரிவது இல்லை. 




காற்றைத் தவிர வேறு எந்த ஒரு சிறு பொருளும் மூக்கிற்குள் நுழைந்தால், மூக்கு அதை ஏற்றுக் கொள்ளாது. அது தூசுவாக இருக்கலாம். துகள்களாக இருக்கலாம். பாக்டீரியாவாக இருக்கலாம். அல்லது புதிய ஒரு மசாலா வாசனையாகக் கூட இருக்கலாம்.

எந்த ஒரு வெளிப் பொருளும் நம் மூக்கில் நுழைந்தாலும் நம்முடைய உடல் உடனடியாக ஓர் எதிர்வினையை உண்டாக்கும். அந்த எதிர்வினையைத் தான் தும்மல் என்கிறோம்.

தும்மல் என்பது நமக்குத் தெரியாமல் நாம் எதிர்பார்க்காமல் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. 




நம்முடைய மூக்குத் துவாரத்தில் சிறிய சிறிய முடி இழைகள் இருக்கும். நாம் உள்ளே இழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள்கள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவது தான் அந்த முடி இழைகளின் வேலை.

அடுத்து, நம்முடைய மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. அந்தச் சவ்வுப் படலம் எப்போதும் ஒருவிதமான திரவத்தைச் சுரந்து கொண்டே இருக்கும்.

அளவுக்கு அதிகமாகத் தூசி அல்லது துகள்கள் மூக்கில் நுழைந்து விட்டால் அந்தச் சவ்வுப் படலம் சட்டென தூண்டப் படுகிறது.

யாரோ எவரோ ஓர் எதிரி நுழைந்து விட்டார் என்று அந்தச் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்தச் சமயத்தில் நுரையீரல், தொண்டை, வாய், வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. 




அவை எல்லாம் கூட்டாக ஒன்று சேர்ந்து, மூச்சுப் பாதையில் இருக்கும் காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியே தள்ள வைக்கின்றன. ஆக அந்தக் காற்று அப்படி வெளியே தள்ளப்படும் போது தான் நமக்குத் தும்மல் வருகிறது. புரியுதுங்களா.

தும்மல் என்பது ஓர் அனிச்சையான செயல் (conditional reflex action). அதாவது நமக்குத் தெரியாமல், நாம் அறியாமல் நடக்கும் நிகழ்ச்சி. வேண்டாத பொருள் உள்ளே செல்லும் போது, அந்தப் பொருளை வெளியே தள்ள நடக்கும் நிகழ்ச்சி.

இருமல் தும்மல் இரண்டுமே இயற்கையான மனித இயல்புகள். நாம் அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகள். சரி. 

தும்மும் போது மூக்கு, வாய் வழியாக மிகச் சிறிய உமிழ் நீர்த் துளிகள் வெளியே வருகின்றன. ஏறக்குறைய 10,000 நீர்த் துளிகள். சமயங்களில் 100,000 வரை போகலாம். ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 100 கி.மீ. அவ்வளவு வேகம் தெரியுங்களா.




இந்தத் துளிகளின் அளவு ஏறக்குறைய 3 மைக்ரோ மீட்டர். ஏற்கனவே நானோ மீட்டர் என்றால் என்ன என்று விளக்கி இருக்கிறேன். இப்போது மைக்ரோ மீட்டர் என்றால் என்று பார்ப்போம்.

ஒரு மீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பங்கு தான் ஒரு மைக்ரோ மீட்டர் (Micro Meter). இதில் நானோமீட்டர் (Nano Meter) என்பது ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கு. இங்கே மில்லியன்; பில்லியன் என இரு வகை எண்ணிக்கை வருகின்றன. கவனத்தில் கொள்வோம்.

நம்முடைய தலைமுடியில் ஒரே முடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை முப்பது பங்குகளாகப் பிரித்துப் போடுங்கள்.

அதில் வரும் ஒரு பங்குதான் 3 மைக்ரோ மீட்டர். ரொம்பவும் சின்னது. அந்த அளவுதான் நாம் தும்மும் போது வெளியாகும் நீர்த் துளியின் அளவு. ஓர் உவமானத்திற்குச் சொல்கிறேன்.

அதற்கு என்று தலைமுடியைப் பிடுங்கி ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். நேரம் சரி இல்லை. பார்ப்பவர்கள் பைத்தியம் என்று சொல்லிவிடப் போகிறார்கள்.

மூக்கு என்பது அழகான உறுப்பு மட்டும் அல்ல. மனித உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் முதல் காவலன். ஆகவே மூக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். சுத்தம் சுகம் தரும் என்பதை நினைவில் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.03.2020

கொரோனா வைரஸ் எங்கே வாழும் எவ்வளவு காலம் வாழும்


கொரோனா குடும்பத்தில் ஆறேழு வைரஸ்கள் உள்ளன. அவற்றில் ஆகப் பெரிய கில்லாடி கொரோனா கோவிட் வைரஸ் (Sars-CoV-2). விருந்தாளியின் வீட்டுக்குப் போய் அந்த விருந்தாளியையே வெட்டிக் கூறு போட்டு விற்கும் வில்லங்கமான வைரஸ். கொரோனா குடும்பத்தில் நம்பர் போட்டு வாழும் நான்கு வைரஸ்கள் உள்ளன.

1. OC43;

2. HKU1;

3. NL63;

4. 229E.


இவை கொஞ்சம் ஜெண்டல்மேன் வைரஸ்கள். ஏன் என்றால் சாதாரண காய்ச்சலோடு போதும் என்று நிறுத்திக் கொள்கின்றன.



அடுத்து இரண்டு வைரஸ்கள். முதலாவது சார்ஸ் வைரஸ். இரண்டாவது மெர்ஸ் வைரஸ். இரண்டுமே இடி அமீன் தூரத்துச் சொந்தங்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆமாம் என்று அவையும் தலையை ஆட்டிக் கொள்கின்றன. மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியவை.

மெர்ஸ் வைரஸ் கிருமி, மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றித் திரிந்த ஒட்டகங்கள் மீது ஓடி ஓடி ஒட்டிக் கொண்ட கொரோனா வைரஸ் (Middle East Respiratory Syndrome - MERS-CoV). 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் கண்டுபிடிக்கப் பட்டது.

சார்ஸ் கொரோனா (Severe Acute Respiratory Syndrome - SARS-CoV) எனும் மற்றொரு வகை. 2002 - 2003-ஆம் ஆண்டுகளில் ஹாங்காங்கில் முதன்முதலில் உருவானது.



மேலே சொன்ன அந்த இரண்டு கொரோனா வைரஸ்களையும் அடாவடிப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா கோவிட் 19 வைரஸ் (Coronavirus COVID-19) எதிலும் சேர்க்க முடியாத எமகாதக வைரஸ்.

கொரோனா கோவிட் 19 ஒரு வகையான புதிய வைரஸ். இதற்கு முன்னர் மனிதர்களிடம் தொற்றியது இல்லை. 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் சீனா வூஹானில் கண்டுபிடிக்கப் பட்டது.

வௌவாலில் இருந்து அலுங்கு எனும் எறும்புத் தின்னியிடம் பாய்ந்து கடைசியில் மனிதனையே பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

உலோகங்கள்; பிளாஸ்டிக் பொருள்கள்; கண்ணாடிகள் போன்ற பொருள்களின் மீது இந்தக் கொரோனா கோவிட் வைரஸ்கள் மூன்று நாள்கள் வரை உயிருடன் இருக்கலாம். ஆய்வுகள் சொல்கின்றன.



நன்றாகக் கவனியுங்கள். குறைந்த பட்சம் மூன்று நாள்கள். கூடிய பட்சம் ஒன்பது நாள்கள். தாமிரம் அல்லது செம்பு உலோகத்தால் (copper) ஆன பொருட்களின் மீது நான்கு மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கின்றன.

ஆனால் துரு பிடிக்கா எஃகு உலோகங்கள் மீது இரண்டு மூன்று நாள்கள் வரை நீண்டு உயிர் வாழ முடியும். இங்கேதான் ஒரு பெரிய சிக்கல். ஏன் என்றால் துரு பிடிக்கா எஃகுப் பொருட்கள், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

(https://www.usatoday.com/…/coronavirus-survives…/2866340001/)

ஓய்வு அறைகள், நீர்க் குழாய்கள் (faucet), கைப்பிடிகள் போன்ற பிற பொது இடங்களிலும் எஃகு உலோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பிளாஸ்டிக் பொருள்கள் மீது கொரோனா வைரஸ்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு உயிர் வாழலாம். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விசயம். நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை.



உணவு டப்பாக்கள், கைப்பேசிகளின் மேல் உறைகள், மின்தூக்கி பொத்தான்கள் போன்றவை பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை.

காகித அட்டைகளில் 24 மணி நேரம் வரையில் உயிர் வாழலாம். கண்ணாடிப் பொருட்களில் 72 மணி நேரம் வரையில் உயிர் வாழலாம்.

(https://www.journalofhospitalinfection.com/artic…/S0195-6701)

துணிமணிகள், ஆடைகள் ஆகியவற்றின் மீது கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்பது இதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. ஆராய்ச்சி செய்கிறார்கள்.

கொரோனா வைரஸ்கள் உயிர் வாழத் தண்ணீர் ரொம்பவும் அவசியம். ஒரு சிறிய அளவு குறைந்தால் பிரச்சினை இல்லை. வைரஸ்கள் தாக்குப் பிடித்து உயிர் வாழும். நல்ல குளிர்ச்சியான சூழல்நிலையில் 28 நாள்கள் வரைகூட உயிர் வாழ வாய்ப்புகள் உள்ளன. ஆய்வுகள் சொல்கின்றன.

ஆனால் தண்ணீரே இல்லாமல் காய்ந்த இடங்களில் கொரோனா வைரஸ்களால் வாழ முடியுமா. முடியும். ஆனால் எவ்வளவு காலத்திற்கு என்பது தான் கேள்விக்குறி. இன்னும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.03.2020





கொரோனா கலவரத்தில் கலைகட்டிய திருமணம்

கொரோனா கொரோனா என்று உலகமே ஆடிப் போய் கிடக்கிறது. ஓடி ஆடித் திரிந்த மக்கள் இப்போது ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒன்பது அடி ஒதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

தனித்து இரு... தள்ளி இரு... அவசர கால கோலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு துணிச்சல் மிக்க திருமணம் நேற்று நடந்து இருக்கிறது.


தமிழ்நாடு ராணிப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை.

காஞ்சிபுரம் பாலன் என்பவரின் மகள் கமலா (28). கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டியது.

கொரோனாவின் பயமுறுத்தல். திருமணம் நடத்துவதில் சிக்கல். ஆனாலும், அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் மனு செய்தனர்.


காவல்துறை உயர் அதிகாரிகளின் சில நிபந்தனைகள். அதன் பின்னர் பெருமாள் கோயிலில் நேற்று காலை 7.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது. மணமகன் முகக் கவசம் அணிந்து தாலி கட்டினார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்கள். 10 பேர் மட்டுமே வந்து இருந்தார்கள். மணமகன் வீட்டில் எளிய முறையில் விருந்து.

தடங்கல் இல்லாமல் திருமணம் நடந்ததால் அனைவருக்கும் மகிழ்ச்சி. கொரோனா களேபரத்தில் துணிச்சலான முகக்கவசத் திருமணம். வாழ்க மணமக்கள். வாழ்த்துவோம்.

26 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: இரண்டு வயது பாலகன் பாதிப்பு

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள். அது போல கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இரண்டு வயது பச்சிளம் பாலகனுக்கும் தொடர் பாதிப்புகள். ஏற்கனவே அந்தச் சிறுவனுக்கு இரத்தப் புற்று நோய்.

குபாங் கிரியான் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கீமோதெரபி (chemotherapy) சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 



சில தினங்களுக்கு முன்னர் அவருடைய இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் போது கொரோனா கோவிட் 19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை மலேசியப் புற்றுநோய்க் குழந்தைகள் ஆதரவு சங்கம் (Pesona) அறிவித்து உள்ளது. சோதனை மேல் சோதனைகள் வரும். உண்மைதான்.

அந்தச் சிறுவன் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்வார்கள் என்றும்; அந்தச் சிறுவன் தன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் ஜைனாப் மருத்துவமனையில் அந்தச் சிறுவன் புற்று நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவரிடம் இருந்து வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ அதிகாரிகள் சந்தேகப் படுகிறார்கள்.

அந்தச் சிறுவன் நலம் பெற வேண்டும். கொரோனா தாக்கத்தில் இருந்து மீட்சி பெற வேண்டும். வேண்டுகிறோம். பிரார்த்தனைகள் செய்வோம்.



கொரோனா: இத்தாலி மருத்துவமனைகளில் இடம் இல்லையா?

இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து விட்டார்கள். இனி அடுத்து 21 நாள்களுக்கு வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். சமூக வலைத் தளங்களில் வைரலான படம்.

இந்தப் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்தார்கள். இந்தியா டி.வி. இந்தியாவில் ஒரு முன்னணி தொலைக்காட்சி. அதுவும் செய்தி வெளியிட்டது. அந்த அளவுக்கு இத்தாலியில் நிலைமை மோசமாகி விட்டதா? 





கடைசியில் பார்த்தால் அது போலியான செய்தி. குரேஷியா (Croatia) நாட்டின் தலைநகரம் ஜாக்ரெப் (Zagreb). அங்கே கடந்த 22.03.2020-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 5.4 அளவில் நில நடுக்கம். அதன் விளைவுகள்.

அந்தப் படத்திற்கும் இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 




குரேஷியாவில் இப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாடு உள்ளது. அதனால் அங்கு உள்ளவர்கள் முகத்திரை அணிந்து இருக்கிறார்கள்.

குரேஷியா நாட்டின் பிரதமர் Andrej Plenkovic உரை ஆற்றும் போது, `கடந்த 140 வருடங்களில் இந்த நிலநடுக்கம் தான் மிகவும் கோரமானது' என்றார். மருத்துவமனை என்பதால் அந்த இடமே ஒரு போர்க்களமாகக் காட்சி அளித்தது.

அன்று பிரசவம் முடிந்த பெண்களும் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் இவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டார்கள்.




குரேசியா சுகாதார அமைச்சர் சொல்கிறார். நிலநடுக்கம் ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது கொரோனா வைரஸ். தற்சமயம் குரேசியாவில் 235 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.