03 ஏப்ரல் 2020

வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 1

அனைவருக்கும் இனிய வணக்கம்... நாம் வாழும் இந்த உலகில் 1,200 வகையான வௌவால்களும் வாழ்கின்றன. ஆனால் 1,100 வகையைத் தான் அடையாளம் காண முடிந்தது. பெயர் கொடுக்க முடிந்தது. மேலும் ஆயிரம் வௌவால்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அவை கண்ணாமூச்சி காட்டும் வௌவால்கள்.



வௌவால் (Bat) முதுகெலும்பு உள்ள பாலூட்டி. முதுகெலும்பி என்றும் சொல்வார்கள். பாலூட்டிகளில் பறக்கக் கூடிய ஒரே ஒரு விலங்கு வௌவால்தான். மனிதர்களும் பாலூட்டிகள் தான்.

ஆனால் என்ன வௌவால்களைப் போல பறக்க முடியாது. பறக்க முடிந்தால் அம்புட்டுத்தான். என்ன செய்வார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

வௌவாலை ’வவ்வால்’ என்றும் ’வாவல்’ என்றும் அழைப்பார்கள்.




வௌவால்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பெரிய வௌவால்கள் (Mega bats); சிறிய வௌவால்கள் (Micro bats).


அவற்றை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்றும், பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

குறும் கைச்சிறகி வௌவால்களில் சில வகை மற்ற விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பவை. அதே சமயத்தில் மனித இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. அவை ‘வெம்பயர்’ வௌவால்கள்.

பெரும் கைச்சிறகி வௌவால்கள் பெரும்பாலும் பழம் தின்னிகள். அவற்றில் பறக்கும் நரி (Flying fox) என்று ஒருவகை உள்ளது. நரியைப் போல முகம் கொண்டது.




பழந்தின்னி வௌவால்கள் இரவு நேரங்களில் 48 கி.மீ. தூரம் வரை பயணிக்கக் கூடியவை. இந்த வௌவால்கள் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.

வாழைப் பழங்களை முழுதாகவே தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. மலர்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சிக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. சுத்த சைவமான வௌவால்கள்.

அவற்றில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர் பச்சைகளைத் தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. இவை சாப்பாட்டு ராமன் வௌவால்கள். அதனால் விவசாயிகளின் நம்பர் 2 எதிரியாகக் கருதப் படுகின்றன.

உலகில் பல நாடுகளில் வௌவால் ஓர் உணவாகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்; பாப்புவா நியூகினி, சாலமான் தீவு; போன்ற இடங்களில் வௌவால் முக்கியமான உணவுப் பொருள்.




இதை எல்லாம் தாண்டிய நிலையில் இன்னும் ஒரு நாடு இருக்கிறது. மனுசனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் மக்கள் வாழும் நாடு. பெயரைச் சொன்னால் பொல்லாப்பு. வேண்டாமே.

இன்னும் ஒரு விசயம். ஆச்சரியமான விசயம். வௌவால் தன் வாய் வழியாக உணவு உட்கொள்கிறது. தெரிந்த விசயம். அந்த உணவு அதன் வயிற்றில் செறிக்கிறது. அதுவும் தெரிந்த விசயம்.

ஆனால் அந்த உணவு செறித்த பின் அந்தக் கழிவை தன் வாயின் அடிப்பாகத்தின் வழியாக அகற்றுகிறது. அதாவது வெளியேற்றுகிறது என்பதுதான் தெரியாத விசயம்.

(https://www.quora.com/Bats-pass-stool-through-their-mouth-H…)

வௌவால்களைப் பற்றி மேலும் சில ஆச்சரியமான தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


தமிழ்த்திரு சந்துரு சுப்ரமணியம்: அருமையான செய்தி ஐயா.. பதிவுக்கு நன்றி!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... வாழ்த்துகள்

Kesavan Suppiah: சவால்களை பற்றிய மிகத் தெளிவாக விளக்கம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றி மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் சாப்பிட நாடு எந்த நாடு ஆகிய விளக்கம் சொல்லுங்களேன்

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் சாப்பிடுகிறவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள்... பாபுவா நியூகினி தீவிலும் இருக்கிறார்கள்... ஆசியாவிலும் இருக்கிறார்கள்...

Parimala Muniyandy: அருமையான தகவல்கள் அண்ணா வௌவால்களைப் பற்றி...
மனிதனை தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் நாடு...எதுவாக இருக்கும்...?

Muthukrishnan Ipoh: எந்த நாடு என்று குறிப்பிட்டுச் சொல்வது தப்புங்க... கருத்துகளுக்கு நன்றி...

Periasamy Ramasamy Kluang:
பட்டணத்திற்கும் அந்த காரணப் பெயர் வந்ததற்கு, அந்த வட்டாராத்தில் அதிக அளவில் காணப்பட்ட பெரிய வகை வௌவால்களே காரணம். இளவயதில், டுரியான் சீசன் வந்து விட்டாலே, மாலை ஆறு மணிக்கு மேல், இந்த வகை வௌவால்கள் வானத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதைக் காணவும், அதை சுட்டு வீழ்த்த இரட்டைக் குழல் வேட்டைத் துப்பாக்கியுடன் வரும் (சீன) கடை முதலாளியின் வேட்டு சத்தம் கேட்டு ஆர்ப்பரித்த நாட்கள் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

Muthukrishnan Ipoh: நல்ல தகவல். சின்ன வயதில் அடியேன் வாழ்ந்த காடிங் தோட்டத்திலும் பழம் தின்னி வௌவால்களைச் சுடுவார்கள். பாசா காட்டுக்குள் போய் விழும். தேடல் கும்பலில் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம்... பங்கு கிடைக்கும்... ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்தது... பழைய நினைவுகள்...

KeanuVimalah Nair Gopalan: >>> Vavaalin echam is dangerous??

Melur Manoharan: "நல்ல" பயனுள்ள பதிவு ஐயா...!

Inbachudar Muthuchandran: சீனர்கள் தான் எல்லாவிதமான மிருகங்களையும் உண்பார்கள் மலேசியாவில் நகர் புறங்களில் சுற்றித் திரியும் நாய்களை நகராண்மை கழகத்தினர் சுட்டுக் கொல்லும் போது அதனை சாப்பிட எடுத்துச் செல்வார்கள்.

https://www.tamilmalaysiatv.com/2020/03/blog-post_34.html...

சீனாவில் மீண்டும் களைகட்டிய நாய், பூனை, வௌவால் விற்பனை ! அதிர்ச்சியில் உலக நாடுகள்

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு மிக்க நன்றி... பத்திரிகையில் நன்றாகவே செய்தி போட்டு இருக்கிறார்கள்...

Sathya Raman: தலை கீழாக தொங்கும் வௌவால்களில் இத்தனை ரகமா? வாசகர்களுக்காக தேடிப் பிடித்து நிறைய பதிவுகளை பிரசுரிக்க றீர்கள். *நாங்களும் நோவாமல் நொங்கு எடுப்பதுப் போல் "தேடுதலில் கஷ்டப் படாமலேயே உங்கள் பதிவுகளை படிக்கிறோம். மீண்டும்,மீண்டும் உங்களது ஆய்வு கட்டுரைகள் வழி பரவசப்படுத்தி வருவதற்கு .🙏🙏🙏 சார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க. பத்திரிக்கைக்கு கட்டுரைகள் தயாரிக்கும் போது அவற்றில் ஒரு பகுதியைப் பேஸ்புக் ஊடகத்தில் பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

கூகிள் தேடலில் புதுப்புது தகவல்கள் சரம் சரமாய் வந்து கொட்டும். ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் சற்று சிரமம் தான். இருந்தாலும் பழகி விட்டது.

ஒரு கட்டுரையைத் தயாரிக்க ஐந்து ஆறு மணி நேரம் பிடிக்கும். அப்படியே அதில் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்வது கஷ்டமாகத் தெரியவில்லை... அதனால் பலருக்கும் பொது அறிவு வளர்கிறது எனும் ஒரு மனநிறைவு. அது போதுங்க. இயன்றவரை பயணிப்போம். வாழ்த்துகள்.

Poovamal Nantheni Devi: பயனுல்ல தகவல். நன்றி பகிர்ந்தமைக்கு

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி...

Nahdan Narayansamy: மிக்க நன்றி அய்யா...அருமையான தகவல்....

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Shantakumar Dilip: நல்ல பதிவு ஐயா...மிக்க நன்றி.

Muthukrishnan Ipoh: நல்லதுங்க... மகிழ்ச்சி...

Jaya Brakash: மிக அருமையான கட்டுரை பதிவு.. வாழ்த்துக்கள் ஐயா👌








02 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: மறுபடியும் கரடியின் பித்தநீர்

கொரோனா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரடியின் பித்தநீரை மருந்தாகப் பயன்படுத்தலாம். சீனா அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயத்தில் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விட்டது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.



கரடியின் பித்தநீர் (BEAR BILE), ஆட்டின் கொம்பு (GOAT HORN) மற்றும் மூலிகைகள் அடங்கிய ஊசி மருந்திற்குப் பெயர் டாங் ரே குவிங் (Tan re Qing).

இந்த மூலிகை ஊசியைப் பயன்படுத்தலாம் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (National Health Commission) ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஆனால் இந்தக் கலவைக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது இதுவரையிலும் நிரூபிக்கப் படவில்லை. சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் கரடியின் பித்தநீர் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரடியின் பித்தநீர் கல்லீரலில் சுரக்கிறது. அந்த நீர் பின்னர் கரடியின் பித்தப் பையில் இருந்து சேகரிக்கப் படுகிறது.


கரடியின் பித்த நீரில் உர்சோ டிஆக்சி கோலிக் அலிலம் (ursodeoxycholic acid) உள்ளது. மனிதர்களின் பித்தப்பைக் கற்களைக் கரைக்கும் தன்மை இந்த அமிலத்திற்கு உள்ளதாகச் சீனர்கள் நம்புகின்றனர்.

மனிதர்களின் கல்லீரல் நோய்களையும் கரடியின் பித்த நீர் குணப் படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் கொரோனா நோய்களைத் தீர்க்குமா. தெரியவில்லை.

சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சீனா முழுவதும் சுமார் 20,000 கரடிகள் கொடூரமான முறையில், சிறிய சிறியக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் கரடிகளைக் கூண்டுக்கள் அடைத்து வைத்து அவற்றின் பித்தநீர் எடுப்பது அங்கே நீண்ட நாள் வணிகத் தொழில்.




அந்தத் தொழிலுக்கு பித்தநீர் பண்ணை (Bile farming) என்று சொல்கிறார்கள். சீனாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பண்ணை வணிகம்.

பெரும்பாலும் ஆசியக் கரடிகள் (Asiatic Black Bear) பலிக்கடா ஆகின்றன. மேலும் சட்டவிரோதமாக செயல்படும அனைத்துலகச் சந்தையில் கரடியின் பித்தநீர் அதிக விலையில் விற்கப்படுகிறது.

இன்னும் ஓர் அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் உணவுக்காக வனவிலங்குகளை விற்பது சீனாவில் தடை செய்யப்பட்டது. சொல்லி ஒரே வாரம் ஆகவில்லை. அதற்குள் மனசு மாறி விட்டது.




What is Bear Bile Farming? Commercial 'bear bile farming' began in China in the 1980's. It is a cruel farming system designed to extract bile from the gallbladders of living bears. Previous to this, bears were hunted in the wild for their gallbladder bile, which is used in traditional Chinese medicine.

(கரடியின் வயிற்றில் ஓட்டைப் போட்டு பித்த நீர் எடுக்கப் படுகிறது... கீழே உள்ள படத்தில்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Athiletchumy Ramudu: இது மனித ஜென்மமா இல்ல வேற எதாவதா?? இதயம் அல்லது மனசாட்சி இது எதுவும் இல்லையா??

Athiletchumy Ramudu >>> Muthukrishnan Ipoh: இந்த உயிரினங்களை இப்படி கொடுமை படுத்தி அவங்க வாழனும்னு அவசியமே இல்லையே!!!கடவுளே!!!

Muthukrishnan Ipoh >>> Athiletchumy Ramudu: அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே... தாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்தால் போதும்... அவர்களின் உயிர் அவர்களுக்குப் பெரிது... மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன நிலைமையில் ஓர் இனம்... என் செய்வது?

Muthukrishnan Ipoh: தெரியலீங்க... அதுதான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது... இதை எல்லாம் செய்வதற்கு கல்லால் ஆன மனசு வேண்டும்... நம்மிடம் அந்த மாதிரி மனசு இல்லையே... அதனால் தான் ஆதங்கப் படுகிறோம்...

Sathya Raman: இந்த மருத்தவ உலகம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது? ஒரு நோய்க்கு நிவாரணம் ஒரு மிருகத்திடமிருந்து தான் பெற வேண்டுமா? என்ன கொடுமை சார் இது? எவ்வளவு பட்டாலும், எத்தனை இடர்கள் சந்தித்தாலும் இந்த சீனா அதிலிருந்து பாடம் கற்று திருந்துகிற மாதிரி தெரியவில்லையே?. "கரடியின் பித்த நீரா "படிக்கும் போதே குமட்டுகிறது. இத்தகைய ஆய்வுகளுக்கு கூட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்க கூடவே கூடாது.

Muthukrishnan Ipoh: உலக சுகாதார நிறுவனம் எப்போதோ தடை விதித்து விட்டது. உணவுக்காக கட்டுப்படுத்தப் பட்ட வனவிலங்குகளை, அதாவது அருகிவரும் உயிரினங்களை இறக்குமதி ஏற்றுமதி செய்வது உலகளாவிய நிலையில் தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் மருத்துவக் காரணங்களுக்காக அந்த விலங்குகளை வளர்க்கலாம். அவற்றின் உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அங்கே தான் சட்ட அமலாக்க விரிசல்...

கரடியின் பித்த நீர் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கிறேன்... கரடிகளை எப்படி கொடுமைப் படுத்துகிறார்கள்... பாவம் அந்தக் கரடிகள்... அதில் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Periasamy Ramasamy: இரத்தத் திலகம் திரையிலேயே நமது நடிகர் திலகம் சொன்னாரே "எதையும் தின்னும் இனம்" என்று ...

Muthukrishnan Ipoh: ஆமாம் ஐயா... நினைவில் வருகிறது...

Nahdan Narayansamy: என்ன கொடுமை சார் இது....

Muthukrishnan Ipoh: பாவம் அந்தக் கரடிகள்...

Nahdan Narayansamy: கரடியின் பித்த நீரையும் விட்டு வைக்க வில்லை அந்த நரி தந்திர வாதிகள்....

Muthukrishnan Ipoh: எதைத் தான் விட்டு வைத்தார்கள்... அவர்களிடம் தான் பணமும் ஒட்டிக் கொள்கிறது...

Jainthee Karuppayah: கரடியா....ஐயோ.... வலிக்கிறது... நல்ல வேளை சீனாவில் நான் பிறக்கவில்லை... தப்பித்தேன்... 🐷 யிலிருந்தும் 🐄 இன்சுலின் எடுக்கிறார்கள்... அருவருப்பான நாடு.. ரொம்ப வெறுப்பு ...சார்

Poovamal Nantheni Devi: சீனா இன்னும் என்ன அநியாயம் எல்லாம் நடக்குமொ???

Muthukrishnan Ipoh: பொதுவாகவே அண்மைய காலங்களில் உலகை உலுக்கிய வைரஸ் நோய்களுக்குக் காரணம் வௌவால்கள் தான்... அந்த வௌவால்களையே பல ஆண்டுகள் சீனாவின் குகைகளில் ஆய்வு செய்து இருக்கிறார்கள்...














01 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் தடுப்பு மருந்து

தமிழ் மலர் - 30.03.2020

கொரோனா வைரஸுக்கு தற்காலிகமாகத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. மகிழ்ச்சியான செய்தி. 


பரிசோதனைக் கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின்
மறுபடியும் சொல்கிறோம். இன்னும் பரிசோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. அதற்கு எம்.ஆர்.என்.ஏ. 1273 (mRNA -1273) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுமையாக மருந்தகப் பெயர் வைக்கப் படவில்லை. அதற்கு இதற்கு வணிகப் பெயரும் வைக்கப் படவில்லை.
அமெரிக்காவின் மொடெர்னா (Moderna) என்கிற நிறுவனம், அந்தத் தடுப்பூசியின் முதல் கட்டப் பரிசோதனையில் இறங்கி உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கா, மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் உலகம் முழுமைக்கும் 41 ஆய்வு நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன. அவை அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனத்தில் (World Health Organisation) பதிவு பெற்ற மருத்துவ அமைப்புகள்.


மாதிரிச் சான்று மாத்திரைகள்

எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசிக்கான முதல் மனிதச் சோதனையை மொடெர்னா கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிறுவனம் தான் புதிய தடுப்பூசி மருந்திற்கு முதல் அடி எடுத்து வைத்த முதல் நிறுவனம்.

முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரையிலான 45 நபர்கள் முதற்கட்டப் பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டார்கள்.

அவர்களில் முதல் நபருக்கு 2020 மார்ச் 17-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப் பட்டது. 6 வாரங்களுக்குப் பரிசோதனைகள் நடைபெறும். பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டவரின் கைகளில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்து செலுத்தப் படுகிறது.


தமிழ் மலர் - 30.03.2020

இன்றைய வரையிலும் கட்டம் கட்டமாகச் சிலருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஊசி போட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு எதுவும் ஏற்படுகிறதா என்று கண்காணித்து வருகிறார்கள். 2020 ஏப்ரல் மாதக் கடைசியில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்தின் வீரியம் தெரிந்துவிடும். அதாவது ஆறு வாரங்களில் அந்த மருந்தின் வீரியம் தெரிந்துவிடும்.

இந்தச் சோதனை வெற்றி பெற்றால் மருந்து தயாரிப்புகள் உடனடியாகத் தொடங்கப்படும். இருந்தாலும் முழு அளவிலான தயாரிப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கலாம்.




கொரோனா கோவிட் mRNA -1273 தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கும் சில கல்விக் கழகங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள்.

1. Moderna, அமெரிக்கா
2. DIOSynVax, இங்கிலாந்து
3. Imperial College London, இங்கிலாந்து
4. Oxford University, இங்கிலாந்து
5. Serum Institute of India, இந்தியா
6. BioNTech, ஜெர்மனி
7. Zydus Cadila, இந்தியா
8. Migal Galilee Research Institute, இஸ்ரேல்
9. Inovio Pharmaceuticals, அமெரிக்கா
10. Johnson & Johnson, அமெரிக்கா
11. Novavax, அமெரிக்கா
12. University of Queensland, ஆஸ்திரேலியா
13. VIDO-InterVac, கனடா
14. CureVac, ஜெர்மனி
15. Bharat Biotech, இந்தியா
16. CanSino Biologics, சீனா

இந்தியாவில் மூன்று தனியார் நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.



தடுப்பூசி என்பதைத் தடுப்பு மருந்து ஏற்றம் என்று சொல்வார்கள். நம்முடைய உடலில் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் எப்போதுமே இருக்கும். அது இயற்கை வழங்கிய மாபெரும் வரப்பிரசாதம். அந்த எதிர்க்கும் ஆற்றலைத் தூண்டி விடுவதே தடுப்பூசியின் தலையாய நோக்கமாகும்.

பின்னர் காலத்தில் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைத் தடுப்பூசி தடுத்து நிறுத்துகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லலாம். சில பல தொற்று நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும்; தொற்று நோய்கள் வராமல், முன்னதாகவே தடுத்து நிறுத்தவும் தடுப்பூசிகளைப் பய்ன்படுத்துகிறோம்.

தடுப்பூசிகள் அனைத்துமே ஒரே மாதிரியான அடிப்படைக் கொள்கையில் தான்  செயல் படுகின்றன. தடுப்பூசிகளில் நிறைய வகைகள் உள்ளன. சில தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் பாதி இறந்த கிருமிகள் அல்லது நுண்ணுயிரிகள் இருக்கும். 



சில தடுப்பூசிகளில் பலவீனம் ஆக்கப்பட்ட நுண்ணுயிரிகள் (inactivated vaccine) இருக்கும். சில தடுப்பூசிகளில் மயக்க நிலையில் உள்ள கிருமிகள் இருக்கும். அல்லது நுண்ணுயிரிகள் இருக்கும்.

அதையும் தாண்டிய நிலையில் சில தடுப்பூசிகளில் உயிருடனேயே கிருமிகள் இருக்கும். அல்லது ஒரு கிருமியின் நச்சுப் பொருளாகவும் இருக்கும்.

நமக்கு ஆறறிவு இருக்கிறது. மூளைக் கொண்டு சிந்திக்கிறோம். செய்லற்றுகிறோம். ஆனால் நம்முடைய உடலுக்கும் அறிவு இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு? நம்மை எதுவும் கேட்காமலேயே அதுவே சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் அதற்கு உள்ளது.



நம் உடலுக்குள் எந்த ஒரு கிருமி நுழைந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது கெட்ட கிருமியா என்று நமக்குத் தெரியாமலேயே நம் உடல் ஆராய்ச்சி செய்யும். ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைங்க. நம்மைக் கேட்டு ஆராய்ச்சி செய்வது இல்லை. அதுவாக ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறது.

இந்தக் கிருமிகளில் நல்ல கிருமிகள் இருக்கின்றன. ஜெண்டல்மேன் கிருமிகள் இருக்கின்றன. சில அடாவடிக் கிருமிகள் இருக்கின்றன. சில அக்கப் போரான கிருமிகள் இருக்கின்றன.

அவற்றுக்கு எல்லாம் பை பை சொல்லும் அகோரமான கிருமிகளும் இருக்கின்றன. அதில் கொரோனா கோவிட் கிருமிகள் இருக்கின்றனவே, சும்மா சொல்லக் கூடாது எமதர்ம ராசனையே மெர்சல் ஆக்கிவிடும் கிருமிகள்.



நல்ல கிருமிகள் பல ஆயிரங்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு கெட்டது ஒன்றும் செய்யாது. பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகள்.

நம் உடலுக்குள் ஒரு கெட்ட கிருமி நுழைந்து விட்டால், நம் உடல் உடனே ஒரு பெரிய கூட்டுப்படை உருவாகி விடுகிறது.

கழுத்துக் கணையச் சுரப்பி அதாவது தைமஸ் சுரப்பி (Thymus);

கல்லீரல் (Liver);

மண்ணீரல் (Spleen);

எலும்பு மஜ்ஜைகள் (Bone Marrow);

சிறுநீரகம் (Kidney)

போன்றவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அந்தக் கெட்ட கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரியான மருந்து தயாரிக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கின்றன. 



அந்தப் புதிய மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களையும் உடனடியாகச் சேகரிக்கின்றன. தயாரித்ததும் அந்தக் கிருமிகள் மீது செலுத்துகின்றன. அப்படியே அந்தக் கெட்டக் கிருமிகளை அழிக்கின்றன.

இயற்கையாகவே உலகில் உள்ள எல்லா மனித உடல்களுக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து அந்த ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உண்டாகி விடுகிறது. 

நம் உடலுக்குள் ஒரு நோய்க் கிருமியை அறிமுகப்படுத்தி, அந்தக் கிருமியை அழிக்கும் ஆற்றலைத் தூண்டுவதற்குத் தான் தடுப்பூசி போடப் படுகிறது.

இருந்தாலும் தடுப்பு மருந்துகள் உடலுக்குள் பல வகைகளில் செலுத்தப் படுகின்றன.

1. வாய் வழி (Oral)

2. ஊசி வழி (Injection) - இதைத் தான் தடுப்பூசி என்கிறோம். இந்த ஊசியை தசைக்குள் செலுத்துவது (Intramascular); தோலுக்குள் செலுத்துவது (Intradermal); தோலுக்கு கீழ்ப் பகுதியில் செலுத்துவது (Subcutaneous).
   
3. தோலில் ஒட்டுப் போட்டு மருந்து செலுத்துவது (Transdermal).
   
4. உடலில் துளையிட்டு மருந்து செலுத்துவது (Puncture)

5. மூக்கு வழியாக மருந்து செலுத்துவது (Intranasal)

சரி. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் (Hydroxy Chloro Quine) எனும் மருந்தைக் கொண்டு கொரோனா கோவிட் நோயைக் குணப் படுத்தலாம் எனும் சர்ச்சை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம். 



கொரோனா கோவிட் நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த உலகின் சில பல மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் பரிந்துரைகள் செய்து உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் வணிகப் பெயர் பிளேக்கனில் (Plaquenil).

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் எனும் பெயருக்குள் குளோரோ குயின் (Chloro Quine) எனும் ஓர் இடைப் பெயர் வருவதைக் கவனியுங்கள். அந்தக் குளோரோ குயின் பெயருக்குள் குயின் எனும் ஓர் ஒற்றுப் பெயர் வருவதையும் கவனியுங்கள்.

குயின் எனும் குயினா அல்லது கொயினா மூலிகை (Quinine) மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து. மலேரியா நோய் அனோபிலிஸ் எனும் கொசுவால் பரவுகிறது. சிஞ்சோனா (Cinchona) எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 



சிஞ்சோனா (Cinchona)
இந்த மூலிகை மரம் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் பூர்வீகம். அங்கே ஆண்டிஸ் (Tropical Andes) மலைக் காடுகளில் வளர்ந்தவை. பின்னர் ஜமாய்க்கா, இந்தோனேசியா, மலாயா, இந்தியா, ஜாவா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பயிர் செய்யப் பட்டன.

1630-ஆம் ஆண்டுகளில் பெரு நாட்டை சிஞ்சோன் எனும் ஸ்பெயின் நாட்டு ஆளுநர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய மனைவிக்கு மலேரியா காய்ச்சல். சிஞ்சோனா மரத்தின் பட்டை திரவத்தால் அவர் நிவாரணம் பெற்றார். அதன் பின்னர் சிஞ்சோனா மரத்திற்கு சிஞ்சோனா எனும் பெயர் வைக்கப் பட்டது.

இன்னும் ஒரு விசயம். இந்தக் குயினின் மருந்து இயற்கை மருந்தாகவும் உள்ளது. செயற்கை மருந்தாகவும் உள்ளது. 1820-ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு நிபுணர்கள் சிஞ்சோனா மரத்தின் பட்டையில் இருந்து இயற்கையான மூலிகை மருந்தைத் தயாரித்தார்கள். 



1934-ஆம் ஆண்டில் அதே குயினின் மருந்தை செயற்கையான வேதியல் முறையில் ஜெர்மனியர்கள் தயாரித்தார்கள். சரி.

சில இரசாயனக் கலவைகளைக் கலந்து குளோரோ குயின் (Chloro Quine) எனும் மருந்து தயாரிக்கப்பட்டு, பின்னர் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்து மலேரியா நோயாளிகளுக்குக் கடந்த எழுபது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தைத் தயாரிப்பதில் விலையும் குறைவு.

உலகம் முழுவதும் இப்போது அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இந்தக் குளோரோ குயின் மருந்தின் மூலக் கூற்றை சற்றே மாற்றி அமைத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தைத் தயாரிக்கிறார்கள். இதன் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கியூபா.

(Messenger RNA (mRNA) or Messenger Ribonucleic Acid, is a copy of a single protein-coding gene in your genome and acts as a template for protein synthesis.)



சீனாவில் கொரோனா கோவிட் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியதும், இந்த ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை கியூபா நாட்டில் இருந்து பெற்று ஆராய்ச்சி செய்தார்கள். இந்த மருந்தின் அழற்சி நீக்கம் அதாவது புண்கள் வராமல் இருக்கும் தன்மை; மற்றும் வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொரோனா பாதிப்பைக் கட்டுப் படுத்த உதவலாம் என அறிந்து கொண்டார்கள்.

கொரோனா கோவிட் நோய்க்கு ஆளான இருபது நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்தார்கள். ஓரளவிற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள்.

(Vaccine developers have worked with unprecedented speed since the first genome sequence of the COVID-19 virus was released in January, and the first human volunteer was dosed with Moderna Inc’s candidate mRNA-127 last week. It took only 63 days from selecting the viral sequence to reach the phase I trial, in which 45 volunteers will be injected with three different doses over six weeks, with the aim of generating initial safety data and showing that the vaccine produces an immune response against the viral DNA.)



அந்த மருந்தை சீனா நாட்டு மருத்துவர்கள் கொரோனா கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தினார்கள். பல ஆயிரம் பேர் குணம் அடைந்ததாக சீனா அறிவித்தது.

(The primary function of mRNA is to act as an intermediary between the genetic information in DNA and the amino acid sequence of proteins. mRNA contains codons that are complementary to the sequence of nucleotides on the template DNA and direct the formation of amino acids through the action of ribosomes and tRNA.)

இருந்தாலும் அந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உலகம் எதிர்நோக்கும் இப்போதைய அவசர கால நிலைமையில் உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம் தான்.


அதற்காக சிறு சிறு ஆராய்ச்சிகளின் முடிவைக் கொண்டு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து; நல்ல மருந்து என்று தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மருந்தின் பக்க விளைவுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனும் எதிர்ப்புகள்.

இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தார்கள். அணை கடந்த வெள்ளம் தலைக்குமேல் வெள்ளமாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த மாதிரியான நிலைமையில் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல. கையில் இருப்பதை வைத்துக் கொண்டு கரை சேரும் வழியைப் பார்ப்போம் எனும் ஆதரவுகள்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் கிருமிகளை நேரடியாக அழிக்காது. எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதீதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என முதலில் ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. 



இதில் பிரான்ஸ் நாட்டின் நிலைமையைச் சொல்ல வேண்டியது இல்லை. 2000 பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். 29 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். முதலுக்கே மோசம் என்கிற நிலைமையில் சிரம் தாழ்த்தி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்திற்குப் பச்சைக் ஒடி  காட்டி விட்டது பிரான்ஸ்.

(The three main types of RNA directly involved in protein synthesis are messenger RNA (mRNA), ribosomal RNA (rRNA), and transfer RNA (tRNA). In 1961, French scientists François Jacob and Jacques Monod hypothesized the existence of an intermediary between DNA and its protein products, which they called messenger RNA.)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்று ஆர்டர் போட்டு இருக்கிறது.

இந்தக் கடட்த்தில் மகாகவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. எங்கெங்கு காணினும் சக்தியடா எனும் பாடல் வரிகள். இந்தக் கொரோனா வைரஸ் பண்ணும் அகோரத் தாண்டவத்தைப் அவர் மட்டும் இப்போது பார்த்து இருந்தால் அவரின் மனம் மாறிப் போய் இருக்கும். கவிதை வரிகளும் மாறிப் போய் இருக்கும். எங்கெங்கு காணினும் கிருமியடா என்று பாடி இருப்பார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020

31 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: மலேசியாவில் ரெம்டெசிவிர் பரிசோதனைகள்

தமிழ் மலர் - 31.03.2020

கொரோனா கோவிட் -19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) எனும் மருந்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அந்த மருந்தின் செயல் திறன் குறித்துச் சோதனைகளை நடத்தும் நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் தேர்வு செய்யபட்டு உள்ளது. 



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்வதற்கான உலகளாவிய மையங்களில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப் படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. பெருமைக்குரிய செய்தி.

பொதுவாகவே உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கைக்கு உரிய நாடுகளைத் தான் தேர்வு செய்யும். மலேசியாவின் சுகாதாரக் கட்டமைப்பில், மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Institute for Medical Research) உலகத் தரம் வாய்ந்தது. 120 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (IMR) 1900-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அதாவது பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் புதிய ஆராய்ச்சிக் கழகங்களை உருவாக்குவதற்கு காலனித்துவ நாடுகளைத் தேர்வு செய்தன. 



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
100-ஆம் ஆண்டு நிறைவு விழா

அப்போது உருவானது தான் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். பழைய பெயர் மலாயா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.

அதற்கும் காரணங்கள் உள்ளன. பெரும்பாலான பிரிட்டிஷ், டச்சு, பிரெஞ்சுக் காலனிகள் ஆசியா, ஆப்பிரிக்கா தொலைதூரக் கண்டங்களில் இருந்தன. டச்சுக்காரர்களுக்கு இந்தோனேசியா. பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தோசீனா. பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியா. ஒரு செருகல்.

இந்தோனேசியா, இந்தோசீனா எனும் சொற்கள் இந்தியா எனும் சொல்லின் அடிப்படைச் சொற்கள். இந்தியா எனும் சொல் இண்டஸ் எனும் சொல்லில் இருந்து உருவானது. சிந்து நதியின் பெயரில் இந்தியா எனும் பெயர் உருவானது.  உண்மைதான். ஆனால் மகா அலெக்ஸாண்டர் காலத்திற்கு முன்பே லத்தீன் மொழியில் (Classical Latin) இந்தியா எனும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சரி.



இளம் ஆய்வாளர்கள்
பிரிட்டிஷ் மலாயாவில் முதன்முதலில் உருவானது மலாயா நோயியல் கழகம் (Pathological Institute). அதன் பின்னர் தான் மலாயா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உருவானது.

அன்றைய மலாயா தீபகற்பத்தில் கோலாலம்பூர் நகரம் ஒரு மையமான இடத்தில் இருந்தது. அதனால் மலாயாவில் ஒரு நோயியல் கழகம் அமைப்பதற்குப் பொருத்தமாக இருந்தது.

அப்போதைய காலக் கட்டத்தில் பெரி-பெரி (beri-beri) எனும் விட்டமின் பி-1 குறைவு நோய்; மலேரியா போன்ற நோய்கள் பரவலாக இருந்தன. அத்தகைய   வெப்ப மண்டல நோய்களால் பிரிட்டிஷ் மலாயாவுக்குப் பெரும் பாதிப்புகள். அது மட்டும் அல்ல. 



தமிழ் மலர் - 30.03.2020

வயிற்றுப் போக்கு (dysentery), பெரியம்மை, காலரா, பிளேக் (plague), வெறிநாய்க்கடி நோய் (rabies) போன்றவையும் பரவலான தொற்று நோய்கள்.

அந்த நேரத்தில் மலாயா நோயியல் கழகத்தின் முதல் இயக்குநராக, இலண்டன் நோயியல் நிபுணர் டாக்டர் ஹாமில்டன் ரைட் (Dr. Hamilton Wright) என்பவர் இருந்தார். அவர் பதவி ஏற்ற முதல் ஆண்டில் நோயியல் கழகத்தின் திட்டமிடல்; புதிய கட்டிடங்கள் கட்டுவதிலுமே அவருடைய காலம் கழிந்தது.

1901-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலாயா நோயியல் கழகத்தின் திறப்பு விழா நடைபெற்றது, அதே ஆண்டு 1901-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மலாயா நோயியல் நிறுவனம் (Malaya Pathological Institute) என்பது மலாயா மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Institute for Medical Research) என பெயர் மாற்றம் கண்டது.

மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
75-ஆம் ஆண்டு நிறைவு விழா

மலாயா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இப்போது மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. உலகளாவிய நிலையில் உயர்தரமான ஆய்வுகளைச் செய்து உள்ளது. அந்தக் கழகத்தின் பின்னணியில் 120 ஆண்டு மருத்துவ வரலாறு உள்ளது.

1901 – 1905-ஆம் ஆண்டுகளில் ரவாங்கில் ஏற்பட்ட காலரா தொற்று; கோலாகுபு பாருவில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோய்; நெகிரி செம்பிலானில் வெறிநாய்க்கடி தொற்று போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அந்தக் கழகம் பெரும் பங்காற்றி உள்ளது.

1918 ஆம் ஆண்டில் பெரி-பெரி நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப் பட்டது. அதிகப் படியாக அரைக்கப் பட்ட அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதால் விட்டமின் பி-1 ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

அதனால் பெரி பெரி நோய் ஏற்படுகிறது. அந்த உண்மையை மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்து உலகத்திற்குச் சொன்னது. உலக மக்களும் சுதாரித்துக் கொண்டார்கள்.




ஜப்பானியர் காலத்தில் மலாயா வாழ் மக்கள் காலரா, டைபாயிட் நோய்களினால் ரொம்பவுமே அவதிப் பட்டார்கள். அந்த இக்கட்டான காலத்தில் மலாயா மருத்துவக் கழகத்தில் பணிபுரிந்த உள்ளூர் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றுகூடி அந்த நோய்களுக்குச் சொந்தமாகவே தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்தார்கள்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் நேதாஜியின் இந்திய விடுதலைப் படை வீரர்கள். அதில் ஜான்சி ராணி பெண்கள் படையினரின் விடுதலை உணர்வுகளை எவராலும் மறகக இயலாது.

அந்த ஜான்சி ராணி பிரிவிற்கு கேப்டன் லட்சுமி என்பவர் தலைவியாக இருந்தார். இவர் ஒரு மருத்துவர். இவர் மலாயா மருத்துவக் கழகத்தில் காலரா, டைபாயிட் தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதில் தன் பங்கைச் செலுத்தி இருக்கிறார். 




இந்திய விடுதலைப் படை வீரர்கள் பர்மாவின் இம்பால் எல்லைப் பகுதிக்குச் சென்ற போது, மலாயா மருத்துவக் கழகத்தில் தயாரிக்கப்பட்ட காலரா, டைபாயிட் தடுப்பூசி மருந்துகள் கொண்டு செல்லப் பட்டதாகவும் சான்றுகள் உள்ளன.

உலகச் சுகாதார நிறுவனத்தில் World Health Organization (WHO) மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வகிக்கும் பதவிகள்.

1. மலேரியா, யானைக்கால் நோய், டெங்கி நோய்களின் சூழலியல், கட்டுப்பாடு மையம் (Collaborating Centre for Ecology, Taxonomy and Control of Vectors of Malaria, Filariasis and Dengue)

2. வெப்ப மண்டல நோய்கள், ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் Regional Centre for Research and Training in Tropical Diseases and Nutrition)

3. தேசிய காய்ச்சல் ஆய்வு மையம் (National Influenzae Centre)

4. இளம்பிள்ளை வாத ஆய்வு மையம் (Poliomyelitis Reference Laboratory)

5. மேற்கு பசிபிக் பிராந்திய குறியீட்டு மருந்து மையம் (Western Pacific Region Index Medicus)

 

மலேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தைச் சாதாரணமாக எடை போட்டுவிட வேண்டாம். உலகத் தரம் வாய்ந்தது. சரி. மலேசியாவின் கொரோனா கோவிட் தொற்று நோய்க்கு மீண்டும் வருகிறோம்.

COVID-19 நோய்த் தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மலேசியச் சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.

அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra)
எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.




இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது கொரோனா கோவிட் 19-க்கும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

கொரோனா கோவிட்-19 வைரஸுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்ய உலகில் பல நாடுகள் தேர்வு செய்யப் படுகின்றன.

மலேசியாவின் தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு முதன்மைப் படுத்தப் பட்டது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்து உள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு இருந்தே ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்து வருகின்றன.

ரெம்டெசிவிர் மருந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகத் தயாரிக்கப் பட்டது. எபோலா (Ebola) மற்றும் மார்பர்க் (Marburg) தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்தும் மருந்தாக அறிமுகம் செய்யப் பட்டது. 




அமெரிக்காவைச் சேர்ந்த கிலியாட் (Gilead Sciences) எனும் நிறுவனம் 2013-ஆம் ஆண்டில் இந்த மருந்தை உருவாக்கியது. கீழ்க்காணும் நோய்களுக்காகவும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப் படுகிறது.

1. சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus);

2. ஜூனின் வைரஸ் (Junin virus);

3. லாசா காய்ச்சல் வைரஸ் (Lassa fever virus);

4. நிபா வைரஸ் (Nipah virus);

5. ஹெந்திரா வைரஸ் (Hendra virus);

6. மெர்ஸ் (MERS);

7. சார்ஸ் (SARS)


இந்த ரெம்டெசிவிர் மருந்து மேலே காணும் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றலைக் காண்பித்து உள்ளது. அதனால் இப்போது கொரோனா கோவிட் 19-க்கும் பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.



மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
75-ஆம் ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கா வாஷிங்டனில் கொரோனா கோவிட் நோயாளிக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்தைச் செலுத்திப் பார்த்தார்கள். நம்பிக்கை அளிக்கும் முடிவு.

இப்போது சீனாவும் பெரிய அளவில் அந்த மருந்தைப் பரிசோதிக்கத் தொடங்கி விட்டது. ரெம்டெசிவிர் மருந்திற்கு GS-5734 எனும் அனைத்துலக ஆய்வுக் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

பல வகையான வைரஸ்களுக்கு எதிராக ரெம்டெசிவிர் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வகச் சோதனைகள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை அளிக்கும் சோதனைகள்.

2013 – 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கிய போது தான் இந்த ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.

கொரோனா கோவிட் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றது. மனுக் குலத்திற்குப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இந்தக் கொரோனா வைரஸை நம்முடைய பூமியில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.

அதுவரையில் என்ன செய்யலாம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மருந்துகள், அதாவது வீரியம் குறைவாக இருக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, நம் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம்.

அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தாலே இந்த நோயை ஓரளவிற்குக் கட்டுப் படுத்தலாம்.

கொரோனா கோவிட் வைரஸ், பணம் புகழ், செல்வாக்கு, இனம், மதம், மொழி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்மி. சொந்தமாக எதையும் செய்ய முடியாத ஒரு கிருமி. மனித மரபணுக்களுள் புகுந்து; அந்த அணுக்களை அடிமையாக்கி; சுவாசப் பைகளில் உள்ள மரபணுக்களைச் சிதைத்து; மூச்சுவிட முடியாமல் செய்து; ஒருவழி பண்ணிவிட்டுப் போகிறது.

ரெம்டெசிவிர் மருந்தினால் நல்ல ஒரு நம்பிக்கையான முடிவு கிடைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

கொரோனா வைரஸ்: இத்தாலியில் 61 மருத்துவர்கள் பலி

கொரோனா எனும் பெயரைக் கேட்டதும் சப்த நாடிகள் அடங்கிப் போகின்றன. சப்த சாகரங்கள் முடங்கிப் போகின்றன. அதைப் பார்த்து சப்த நதிகளும் கலங்கிப் போகின்றன. 



எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்கிற அச்சம் உலகத்தையே வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா தீநுண்மி உலக மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்கின்றது. அதன் கோரப் பிடியில் இருந்து எப்படித் தான் மீளப் போகிறோம். எப்படித் தான் உயிர் வாழப் போகிறோம். ஒரு வழி தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆளாளுக்கு ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஓர் ஆலோசனை சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு மருந்து சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு மருத்துவம் பேசுகிறார்கள். எதைக் கேட்பது; எதை நம்புவது; எதை வேண்டாம் என்று சொல்வது; ஒன்னுமே புரியல உலகத்திலே... 




கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துப் போகின்றது. உலகின் 200 நாடுகள்; இரண்டு கப்பல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 2 பில்லியன் மக்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய்க் கிடக்கின்றார்கள். 



உலகம் முழுவதும் 776,105 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37,126 பேர் இறப்பு. மீண்டு வந்தவர்கள் 164,628 பேர்.

அவர்களில் முன்னணிச் சேவையாளர்களாகப் பணிபுரிந்தவர்களில் மருத்துவர்கள்; செவிலியர்கள்; மருத்துவ உதவியாளர்கள்; அவசரச் சிகிச்சையாளர்கள் முதன்மை வகிக்கின்றார்கள்.

இவர்களில் நூற்றுக் கணக்கானோர் இறந்து விட்டார்கள். தங்களின் உயிர்களைப் பணயம் வைத்து சேவை செய்தவர்கள். அந்த அர்ப்பணிப்பு ஹீரோக்களை நினைத்தால் மனம் விம்முகிறது.




இன்று 2020 மார்ச் 30-ஆம் தேதி, மாலை இரவு 10.25 கணக்குப்படி உலகளவில் இறந்து போன மருத்துவர்களில் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. 61 மருத்துவர்கள் இறந்து விட்டார்கள். இவர்களில் 40 மருத்துவர்கள் லொம்பார்டியில் (Lombardy) பணி புரிந்தவர்கள்.

சீனாவில் 17 பேர்; பிலிப்பைன்ஸில் 9 பேர்; இங்கிலாந்தில் 3 பேர்; இந்தியாவில் ஒருவர்; இறந்து போன மருத்துவர்களின் பட்டியல் நீள்கிறது. இதில் ஸ்பெயின் நாட்டில் 30 மருத்துவர்கள் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

(https://edition.cnn.com/world/live-news/coronavirus-outbreak-03-30-20-intl-hnk/h_d385acb67991afbdcf4c87aed856f0e6)

கொரோனா நோயினால் இத்தாலியில் மட்டும் 101,739 பேர் பாதிப்பு. 11,591 பேர் இறப்பு. குணமடைந்தவர்கள் 14,620.    

இத்தாலி ஏன் இப்படி ஒரு பேரழிவிற்குப் போனது? கொரோனாவினால் இத்தாலி ஏன் இவ்வளவு மோசமாக பாதிக்கப் பட்டது. இதற்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. 




ஒரு சிலர் அது குளிர்கால வெப்ப நிலை என்று சொல்கிறார்கள். அந்த நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சிலர் சொல்கிறார்கள்.

காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இத்தாலியில் தான் நடந்து உள்ளன. 11,591 பேர் இறந்து விட்டார்கள்.

கொசுக்கள் மூலமாகத் தான் மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்று
சொன்னவர் இங்கிலாந்து மருத்துவ மேதை ரொனால்டு ரோஸ். நோபல் பரிசு பெற்ற மருத்துவ முன்னோடி. அவர் ஒரு முறை சொன்னார்.

பூமியில் கடைசி கொசு இருக்கிற வரையில் மலேரியா காய்ச்சலை ஒழித்துக் கட்ட முடியாது என்றார். அதற்காக நாம் கொசுக்களை காடு மேடு எல்லாம் தேடி அலைய முடியாது. நடக்கிற காரியம் இல்லை.

கொசுக்களின் அடர்த்தியைக் குறைத்தாலே போதும். மலேரியா என்ன. சிக்கன் குனியா, மட்டன் குனியா நோய்களையே கட்டுப்படுத்தி விடலாம்.

கொரோனா பிரச்சினையிலும் இதே மாதிரி ஒரு யோசனை. உடல் அளவில் தனித்து இருக்க வேண்டும்; சமூக அளவில் விலகி இருக்க வேண்டும். இந்த இரண்டும் போதும். இவை இரண்டுமே இப்போதைக்கு மனுக்குலத்தின் உயிர்நாடிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020