07 ஏப்ரல் 2020

அமெரிக்காவில் ஏன் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு?

இந்த 21-ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத பாதிப்புகள். அமெரி்க்க நாட்டுக்கு உச்சக்கட்டப் பாதிப்புகள். வரலாறு மறக்க முடியாத உயிர் இழப்புகள்.

சீனாவையும் மிஞ்சிப் போகிற அளவிற்கு உயிர் இழப்புகள். ஒவ்வொரு நாளும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிப் போகிறது. அதே போல் உயிர் இழப்புகளும் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன.


அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு என்று ஆப்பிரிக்கா நாட்டு காங்கோ மக்கள் கேட்கும் அளவிற்கு நிலைமை மிக மிக மோசமாகி விட்டது.

அமெரிக்காவில் மட்டும் இது வரை 367,650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகள் 10,943. இத்தாலியில் 16,523; ஸ்பெயின் 13,798; பிரான்ஸ் 8,911; இங்கிலாந்து 5,373. எல்லாமே ஆயிரக் கணக்கில் போகின்றன. 

அமெரிக்காவில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் உயிர் இழப்புகள் மேலும் உயரலாம். பாதிப்புகள் உச்ச நிலையை அடையலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் வரை உயிர் இழக்கலாம் என பகீர் தகவலைச் சொல்லி பேதி மாத்திரையைக் கொடுக்கிறது வெள்ளை மாளிகை.


ஏன் அமெரிக்காவில் இந்த அளவுக்குப் பாதிப்புகள். காரணம் என்ன. அதைப் பற்றி அமெரிக்காவின் ’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அண்மையில் ஓர் ஆய்வு செய்தது. பல திடுக்கிடும் தகவல்கள் கசிகின்றன.

ஒரே ஒரு முக்கியக் காரணம். மக்களுக்குச் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை. அதுதான் முக்கியக் காரணம். பிரதான காரணம்.

கொரோனா தொடங்கிய தொடக்கக் காலத்தில் கொரோனாவைப் பற்றிய முழுமையான தகவல்கள் மக்களுக்குப் போய் சேர்ந்து இருந்தால், அமெரிக்காவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிப் போய் இருக்காது.

சீனாவின் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்த காலக் கட்டம். 2020 ஜனவரி 15-ஆம் தேதி தான் ஐ.நா.விற்குச் சீனா அதைப்பற்றி எச்சரிக்கை செய்தது.



எச்சரிக்கைக்குப் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு படை படையாகக் கிளம்பி விட்டார்கள்.

437,000 பேர் அமெரிக்காவிற்கு விமானம் மூலம் போய்ச் சேர்ந்தார்கள். எண்ணிக்கையைப் பாருங்கள். 4 இலட்சத்து 37 ஆயிரம் பேர். ஆயிரக் கணக்கான விமானங்களில் பறந்து போய் இருக்கிறார்கள். போனவர்கள் சும்மா ஒன்றும் போகவில்லை.

பெரும்பாலோர் கொரோனா கிருமிகளையும் தங்களுடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

கொரோனாவின் கோட்டையாக விளங்கிய வுஹான் நகரில் இருந்து பல ஆயிரம் அமெரிக்கர்கள் நேரடி விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 15-ஆம்தேதி வரையில் கொரோனா தீவிரம் குறித்து, உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை செய்யவில்லை. அதனால் மக்களும் பெரிது படுத்தவில்லை.

என்ன செய்வது. கொரோனா இப்படி இறக்கைக் கட்டி கோரத் தாண்டவம் ஆடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்.


இந்தக் கட்டத்தில் சீனாவில் இருந்து பல ஆயிரம் பேர் அமெரிக்காவின் பற்பல நகரங்களுக்குத் தங்கு தடை இல்லாமல் போய் இருக்கிறார்கள். அப்படிப் போனவர்கள் அமெரிக்கர்கள் மட்டும் அல்ல. பல நாட்டுக்காரர்களும் அவசரம் அவசரமாகப் போய் இருக்கிறார்கள். கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற அவசரக் கோலம்.

2020 பிப்ரவரி மாதத்தில் சீனாவில் இருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 நகரங்களுக்குப் போய் இருக்கின்றன. Los Angeles, San Francisco, New York, Chicago, Seattle, Newark and Detroit போன்ற நகரங்கள்.

இந்த விமானங்கள் மூலம் தான் மக்கள் அமெரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்த விமானக்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ்களும் அமெரிக்காவிற்குப் பறந்து போய் இருக்கின்றன.

கொரோனாவின் வீரியக் கொடுமைத் தன்மையைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்வதற்கு முன்பாகவே சீனாவில் இருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்குப் போய் விட்டார்கள்.

அப்போது அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனா குறித்த பரிசோதனைகளில் தீவிரம் இல்லை. மருத்துவ சோதனைகளில் தீவிரம் இல்லை. பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லை. வழக்கமான பயண விதி முறைகள் தான்.

அமெரிக்காவிற்குள் சென்ற பயணிகளில் எத்தனைப் பேர் கொரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் போனார்கள் என்கிற கணக்கும் தெரியவில்லை. அந்தக் கணக்கு விவரங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. உலகத்துப் போலீஸ்காரருக்கு இப்படி ஒரு நிலைமையா?

அதன் பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. ஆனாலும் அமெரிக்கர்கள் பலர் பொருட்படுத்தவில்லை. ஓர் அசட்டை தான். ஆகக் கடைசி நிமிடம் வரையிலும் சீனாவில் இருந்து விமானங்கள் அமெரிக்காவுக்குப் பறந்த வண்ணம் இருந்தன.

மார்ச் மாதம் மத்திய வாக்கில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களுக்கு பல நூறு விமானங்கள் போய் இருக்கின்றன. ஆனாலும் 250 விமானங்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். கூடுதலாகவே இருக்க வேண்டும் என்று சில நம்பக் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுச் சோதனைகளைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே குழப்படிகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா வைரஸ்களும் பேரன் பேத்திகளுடன் படை எடுத்துப் போய் விட்டன.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைதற்கு முன்னதாக சீனாவில் இருந்து அமெரி்க்காவுக்கு 3 இலட்சத்து 81 ஆயிரம் பயணிகள் விமானங்கள் மூலமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீன நாட்டு விமானங்கள். குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள்.

சீனாவில் இருந்து விமானங்களில் வந்தவர்களில் பலர் எவ்விதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள்.

அப்படி வந்த பயணிகளில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டுப் பயணிகள் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது.

இன்னும் ஒரு விசயம். அமெரிக்காவில் முதன்முதலில் 2020 ஜனவரி 20-ஆம் தேதி தான், வாஷி்ங்டன் தலைநகரில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

இருந்தாலும் அதன்பின் பல வாரங்கள் எவருக்கும் அடையாளம் தெரியாமல்; எவரும் அறிய முடியாத வகையில்; கொரோனா வைரஸ் வாரக் கணக்கில் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அமெரிக்கா முழுவதும் படர்ந்து பரவி சங்கீர்த்தனங்கள் பாடி இருக்கின்றன.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை. அமெரிக்காவுக்கு இந்தக் கொரோனா வைரஸை முதன்முதலாக யார் இறக்குமதி செய்தார் என்கிற விசயம் இதுவரையிலும் ஒரு தங்கமலை இரக்சியமாகவே இருக்கிறது.

இப்போது அமெரிக்க கொரோனா பிரச்சினையில் அமெரிக்க அதிபர் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ஏன் தெரியுங்களா. 2020 மார்ச் முதல் வாரம் வரை கொரோனா பிரச்சினையை அமெரிக்க அதிபர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கொரோனா பிரச்சினையைப் பெரிது படுத்தினால் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி விடும். அப்புறம் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம். அப்படி ஒரு தூர நோக்கச் சிந்தனையில், கொரோனா விசயத்தைக் கிடப்பில் போட்டார்களாம்.

அந்த அமுக்கல் கிடப்பு வேலைதான் இப்போது பெரிய பிரச்சனையாகி விட்டது. பத்திரிகைகாரர்கள் சும்மா விடுவார்களா. அமெரிக்க அதிபர் இப்போது முள்வேலியின் முள்கம்பிகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மாமன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதை நினைவிற்கு வருகிறது.

“I do think we were very early, but I also think that we were very smart because we stopped China. We’re the ones that kept China out of here.” - Mr. Trump

சான்றுகள்:

https://www.nytimes.com/2020/04/05/us/coronavirus-deaths-undercount.html

https://www.aljazeera.com/news/2020/04/recession-coronavirus-crisis-live-updates-200403233012626.html

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.04.2020




1919 ஸ்பானிஷ் வைரஸ் - 2020 கொரோனா வைரஸ்

தமிழ் மலர் - 07.04.2020

மனிதர்கள் தங்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் வரையில், கொரோனா வைரஸ்களின் கொடுங்கோல் ஆட்சிகள் தொடர்ந்து போகலாம். அதில் மௌன ராகங்கள் காம்போதி ராகங்களாய் மாறிப் போகலாம். பந்துவராளி வார்க்கும் ராகமாலிகையில் சண்முகப்ரியா சிதைந்து போகலாம். ஆனந்த பைரவிகள் பார்க்கும் அம்சவர்த்தனிகள் அடையாளம் தெரியாமலேயே ஆழ்ந்தும் போகலாம்.




1919 - 2020. இந்த இரண்டு ஆண்டுகளின் எண்களைப் பாருங்கள். 1919-ஆம் ஆண்டில் 19 - 19 எனும் எண்கள் வருகின்றன. 2020-ஆம் ஆண்டில் 20 - 20 எனும் எண்கள் வருகின்றன.

அந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும்; அந்த இரண்டு எண்களிலும் ஏதோ ஒரு மர்மமான ஒற்றுமை இருப்பதை உங்களால் ஊனர முடிகிறதா. கொஞ்சம் ஆழமாக உற்றுப் பாருங்கள். சற்று அச்சமாகவும் இருக்கலாம்.

1919 - 2020 ஆண்டுகளின் முதல் 2 எண்களும்; அதே ஆண்டுகளின் இரண்டாவது 2 எண்களும் பொருந்தி வருவது சாதாரண விசயம் அல்ல. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அப்படி ஓர் அசாதாரண ஒற்றுமை நிகழும். அது ஓர் அதிசயமான நிகழ்ச்சியும்கூட.

அந்த வகையில் இந்த 2020-ஆம் ஆண்டில் நாம் உயிருடன் இருப்பதும் ஒரு சிறப்பு தான். இந்த மாதிரியான நிகழ்வு மறுபடியும் 2121-ஆம் ஆண்டில் தான் வரும். இன்னும் 101 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.




இப்போது இருப்பவர்களில் அப்போது வர்ப்போகும் அந்த 2121-ஆம் ஆண்டில் வெகு சிலரே உயிர் வாழும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால் 2121-ஆம் ஆண்டு வரை வாழ வேண்டும் என்றால், அதற்கு குறைந்த பட்சம் 100 வயதைத் தாண்டி இருக்க வேண்டும்.

இந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும், உலகம் புதுமையான வைரஸ்களால் தாக்கப்பட்டு உள்ளன. அது மட்டும் அல்ல. மிகவும் கொடூரமாகவும் பாதிக்கப்பட்டு விட்டன. முந்தைய 1919-ஆம் ஆண்டின் கொடுமையில் இருந்து மீண்டு வருவதற்குள் உலகம் ரொம்பவுமே சிரமப்பட்டு போனது. 




1919-ஆம் ஆண்டில் (19-19) ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu). உலகத்தையே ஆட்டிப் படைத்தது. 50 மில்லியன் மக்களைக் கொன்று போட்டது. 500 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துப் போட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மலாயாவில் 34,644 பேரைக் கூறு போட்டது.

தமிழ்நாட்டில் இருந்து வந்து மலாயா இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த 6000 தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் காலமானார்கள். நிபோங் திபால், ஈப்போ வட்டாரங்களில் அதிகமான இழப்புகள்.

பத்து காஜாவில் கெல்லிஸ் காசல். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஒரு மர்ம மாளிகை. அதைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 100 பேர் ஸ்பானிஷ் நோய்க்குப் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.




இப்போது 2020 ஆம் ஆண்டில் (20-20) கொரோனா வைரஸ் என்கிற மற்றொரு புதிய வைரஸ். உலகத்தைச் சீர்குலைத்து வருகிறது.

மனித வரலாற்றில் மாபெரும் போர்கள். மதிப்புகள் சொல்ல முடியாத மனித இழப்புகள். அவை அனைத்தும் கோடுகள் போட்டுச் சொல்ல முடியாத கொடுமையான இழப்புகள்.

போர்களினால் ஏற்பட்ட இழப்புகளைவிட கொடிய நோய்களினால் ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம்.

மகா மோசமான பல தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து வதைத்து விட்டன. அவற்றில் ஒன்று தான் அந்த ஸ்பானிய காய்ச்சல்.




(ஸ்பானிஷ் காய்ச்சலால் மறைந்து போன மலாயாத் தமிழர்களின் வரலாற்றை நாளைய கட்டுரையில் பதிவு செய்கிறேன்.)

1919-ஆம் ஆண்டில் H1N1 எனும் வைரஸ் உலகத்தை ஆட்டிப் படைத்தது. ஸ்பானிஷ் காய்ச்சல் வைரஸின் பெயர் தான் H1N1 வைரஸ்.

இந்த வைரஸ் எங்கே இருந்து தன் பயணத்தைத் தொடக்கியது என்று யாருக்கும் இதுவரையிலும் தெரியவில்லை. இருந்தாலும் சீனாவில் இருந்து தோனிகளில் சிங்கப்பூருக்கு வந்த சீனர்கள், H1N1 வைரஸ் கிருமிகளைக் கொண்டு வந்து இருக்கலாம் என்பது ஒரு சந்தேகம். உறுதிப்படுத்த முடியவில்லை.




ஸ்பெயின் நாட்டு அரசக் குடும்பத்தை அதிகம் பாதித்ததால் அதற்கு ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதே போல இப்போது 2020 கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி, நடுங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். இதில் இத்தாலியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ரொம்பவும் பாதிப்புகள்.

உலகத்திலேயே தரம் வாய்ந்த மருத்துவர்கள் இத்தாலியில் தான் இருக்கிறார்கள். வைரஸ் பற்றி ஆய்வுகள் செய்து நோபல் பரிசு பெற்ற மருத்துவர்களும் அங்கே தான் கோலோச்சினார்கள்.

இருந்தாலும் இத்தாலி மக்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று வரையிலும் போராடுகிறார்கள். முடியவில்லை. தவிக்கிறார்கள். 




அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் ரொம்பவுமே பாதிக்கப்பட்டு விட்டன. இதில் சீனாவைச் சேர்க்கவில்லை.

ஏன் என்றால் கொரோனாவிற்கு வெண்சாமரம் பூசியதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அதனால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் அங்கே மௌன ராகங்கள்.

இன்றைய அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய 1,274,000. இருந்தாலும் உலக நாடுகள் 20 விழுக்காட்டிற்கும் குறைவான அளவில் தான் உண்மையைச் சொல்கின்றன என்பது பரவலான ஓர் அதங்கம். அதுவும் ஒரு பெரிய அதிர்ச்சியான தகவல் தான்.

ஆளாளுக்கு ஒரு கணக்குப் போடுகிறார்கள். நாட்டுக்கு நாடு ஒரு கணக்குச் சொல்கிறார்கள். இதில் வட கொரியாவின் கணக்கை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று தெரியாமல், உலகச் சுகாதார நிறுவனமே வழி தெரியாமல்  விழி பிதுங்கி நிற்கிறது. ஏன் தெரியுங்களா. 




வட கொரியாவில் யாருக்குமே கொரோனா வரவில்லையாம். அந்த நாட்டின் அதிபர் யூடியூப்பில் ரீல் விட்டுக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே ஏவுகனைகளை விட்டு பக்கத்து நாடான தென் கொரியாவின் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார்.

இப்போது யூடியூப்பில் இன்பமே இலவசம் எனும் தொலையாத வார்த்தைகளால் தோரணம் கட்டுகிறார். நல்லா இருக்கட்டும்.

2020 ஏப்ரல் 4-ஆம் தேதி பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தி.

வட கொரியா நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. அங்கே கடுமையான கட்டுப்பாடுகள்; நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன என்று அந்த நாடு சொல்கிறது. ஆனால் அது சாத்தியமே இல்லாத சத்தியங்கள் என்று தென் கொரியா சொல்கிறது.




வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் ஒருவருக்குக்கூட பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. வட கொரியாவில் உள்ள எலிகள் எல்லாம் சட்டை சிலுவார் போடாமல் தான் ஓடும் என்று சொல்வதைப் போல இருக்கிறது.

வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. ஏன் என்றால் அந்த நாட்டின் எல்லைகள் சீனா; தென் கொரியா நாடுகளுடன் ஒட்டிப் போகின்றன. அது மட்டும் அல்ல. வட கொரியாவிற்குச் சீனாவுடன் நெருக்கமான வர்த்தகம்; நெருக்கமான பொருளாதார உறவுகள் உள்ளன. இந்த நிலையில் வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சொல்வதில் நியாயமே இல்லை.

இருந்தாலும் எதிர்மறையாகப் பார்க்காமல் நேர்மறையாகப் பார்க்கலாமே.  முக்கியமாகச் சில விசயங்களைக் கவனிக்க வேண்டும்.

வட கொரியா முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அதை நாம் மறுக்க முடியாது. 2020 ஜனவரி மாத இறுதியில் வட கொரியா தன் எல்லைகளை மூடி விட்டது. இது உலகத்திற்குத் தெரிந்த விசயம்.




பின்னர் ஆயிரக் கணக்கான வெளிநாட்டினர்; குறிப்பாக சீன நாட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அந்தச் சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது.

இது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். வட கொரியாவில் நல்ல சுகாதார கட்டமைப்பு உள்ளது. நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கும் திறன் அந்த நாட்டிற்கு உள்ளது.

வட கொரிய மருத்துவர்களால் அடிப்படை மருத்துவத்தை வழங்க முடியும். உண்மை. ஆனால் தீவிரமான நிலையைக் கையாள்வது என்பது அங்கே இயலாத காரியம். அவசர ஆபத்து வேளைகளில் போதுமான மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும். அதுவும் அதிக அளவில் தேவைப்படும். கிடைக்குமா?

வட கொரியாவில் தலைநகரம் பியோங் யாங். அங்கே சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. அந்த மாதிரி சில பெரிய நகரங்களிலும் வசதிகள் உள்ளன. ஆனால் கிராமப் புறங்களில் கிடைக்குமா? இது ஒன் மில்லியன் டாலர் கேள்வி. 




இன்னும் சில ஒதுக்குப் புறமான, கிராமப் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் தண்ணீர்; மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லையாம்.

கொரோனா பாதிப்பு இருப்பதை வட கொரியா ஒப்புக் கொண்டால், அது அந்த நாட்டிற்குப் பெரிய ஒரு கௌரவக் குறைச்சல். அதுவே பின்னர் அந்த நாட்டின் பலகீனமாகி விடும். தன்மானத்தை அடகு வைத்தது போல ஆகிவிடும்.

உண்மையை ஒப்புக் கொண்டால் வட கொரிய மக்களிடம் பதற்றத்தை உண்டாக்கலாம். அதனால் நிலையற்ற தன்மை ஏற்படலாம். அதனால் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆக வட கொரியாவின் ஆளுமைக்கு அங்கே இந்த மாதிரியான இக்கட்டான நிலைமை. கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று அந்த நாடு நினைக்கிறது. அதனால் உண்மையான தகவல்கள் மறைக்கப் படலாம்.

இரும்புத் திரைக்குப் பின்னால் இருக்கும் வட கொரிய மக்களுக்கு பெரிய ஆபத்துகள் எதுவும் வரக் கூடாது என தென் கொரிய மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள். நாமும் வேண்டிக் கொள்வோம்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படி மீளப் போகிறோம்; எப்படி உயிர் வாழப் போகிறோம் என்று உலக மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.

மனிதர்களைத் தவிர மற்றதை எல்லாம் சாப்பிடும் ஒரு சாப்பாட்டு முறையினால் பல்லாயிரம் உயிர்கள் பறி போய் விட்டன. அந்த முறை ஒரு பழக்கமாக இருக்கலாம். அல்லது பாரம்பரிய வழக்கமாக இருக்கலாம். அதனால் ஒட்டு மொத்த உலகத்திற்கே பாதிப்பு என்றால் அதில் இருந்து விடுபட வேண்டியது மிகவும் அவசியம். கொரோனா வைரஸ் கிருமிகள் எதிர்கால மனுக்குலத்திற்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இருக்கின்றன.

மனிதர்கள் தங்களின் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாற்றங்கள் வரும் வரையில் கொரோனா போன்ற கொடும் வைரஸ்கள் கொடுங்கோல் ஆட்சிகள் செய்யும். அவற்றின் மௌன ராகங்கள் என்றைக்குமே காம்போதி ராகங்கள்.

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் புலிக்கு ஆபத்து

உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்கிற்குக் கொரோனா தொற்று பரவி உள்ளது. நியூயார்க் நகரின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் (Bronx Zoo) நான்கு வயதான பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 



அந்தப் பெண் புலியின் பெயர் நாடியா (Nadia). இது மலாயா புலி (Malayan tiger) எனும் புலி இனத்தைச் சேர்ந்தது. அதன் சகோதரிப் புலி அசூல் (Azul); மற்றும் இரண்டு Amur புலிகள்; மூன்று ஆப்பிரிக்கச் சிங்கங்கள்; ஆகியவற்றுக்கும் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வனவிலங்கு பூங்காவில் வேலை செய்த ஊழியர் ஒருவரிடம் இருந்து அந்த விலங்குகளுக்குக் கொரோனா தொற்றி இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. (Public health officials believe that the large cats caught Covid-19, the disease caused by the coronavirus, from a zoo employee.) இதற்கு முன்னர் ஹாங்காங்கில் சில வளர்ப்பு நாய்களிடம் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

கடந்த 2020 மார்ச் மாதப் பிற்பகுதியில் அந்த விலங்குகள் இருமலால் (dry cough) பாதிக்கப் பட்டன. அவை உடல் மெலிந்து காணப் பட்டன; சரியான உணவு சாப்பிடுவது இல்லை என்று வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.




இந்த விலங்குகள் இப்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்த விலங்குகள், கொரோனாவில் இருந்து மீட்சி பெற்று குணம் அடையும் வாய்ப்புகள் அதிகமாய் உள்ளன. வேண்டிக் கொள்வோம்.

பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்கா, அமெரிக்காவிலேயே மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். 6000 விலங்குகள் உள்ளன. இங்கு உள்ள விலங்குகளைத் தனிமைப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகிலேயே இதுதான் முதன் முறை; விலங்குகளுக்கு மனிதனிடம் இருந்து கொரோனா தொற்றிக் கொள்வது. என்னே அமெரிக்காவிற்கு வரும் சோதனைகள்!

(The tiger, a 4-year old Malayan tiger named Nadia, appeared visibly sick by March 27.)

சான்று: https://www.nytimes.com/2020/04/06/nyregion/bronx-zoo-tiger-coronavirus.html

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2020



06 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: உலகப் புகழ் ஷி செங்லி

தமிழ் மலர் - 06.04.2020

கொரோனா கோவிட் எனும் ஒரு புதிய வைரஸ் இருப்பதாக முதன் முதலில் உலகத்திற்குச் சொன்னவர் ஒரு பெண்மணி.

வைரஸ் துறையில் ஆழமான அறிவு கொண்டவர். உலகத்திலேயே கொரோனா வைரஸ் பற்றி அதிகப்படியான ஆய்வுகளையும் செய்தவர். வைரஸ் துறையில் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர்.


ஷி செங்லி (Shi Zhengli)

அவரின் அளப்பரிய சேவைகளுக்காக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பல விருதுகளை வழங்கி உள்ளன. அவரின் ஆய்வுப் பணிகளுக்குப் பல மில்லியன் டாலர் உதவித் தொகைகளையும் வழங்கி உள்ளன.

அவரின் கணிப்பு: ஒரு சில ஆண்டுகளில் ஒரு பயங்கரமான வைரஸ் நோய் உலகத்தையே ஆட்டிப் படைக்கலாம். பல மில்லியன் மக்கள் இறந்து போகலாம். அதனால் அந்த நோய்க்கான மூலகர்த்தாக்களை உடனடியாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.

அவை அடைக்கலம் கொடுக்கும் வைரஸ்களை அடையாளம் காண வேண்டும். அந்த வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகள் உருவாக்க வேண்டும். இப்படித்தான் அவருடைய கணிப்பு இருந்தது. அதனால் தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வைரஸ் ஆய்வுகளுக்காகத் தொலைத்து விட்டவர்.




அவருடைய பெயர் ஷி செங்லி (Shi Zhengli). இவரைச் சீனாவின் வௌவால் பெண்மணி என்று புகழாரம் செய்கிறார்கள். சீனாவின் மருத்துவ மகாராணி என்றும் பெருமை செய்கிறார்கள். இவருக்குச் சீனாவில் பெரிய மதிப்பு; பெரிய மரியாதை.

ஆனால் என்ன. அவரின் வைரஸ் ஆய்வுகளைச் சீனா அதிகாரிகள் எப்படியோ பெற்றுக் கொண்டனர். அந்த ஆய்வுகளில் பல்லாயிரம் வௌவால் இரகசியங்கள் இருந்தன. சீனாவின் பல நூறு குகை இரகசியங்கள் இருந்தன. எந்த எந்தக் குகையில் எந்த எந்த வௌவால்கள் வாழ்கின்றன எனும் இரகசியங்கள் இருந்தன.


அந்த வௌவால்களின் உடல் திரவ மாதிரிகள் இருந்தன.  அவரிடம் காட்டப்பட்டது ஒரு வற்புறுத்தலா அல்லது ஓர் ஏகாதிபத்திய நகர்வா. நமக்குத் தெரியாது. அதைப் பற்றி நாம் கருத்துச் சொல்லவும் முடியாது.

அந்த இரகசியத் தகவல்கள் எல்லாம் இப்போது வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திற்கு (Wuhan Institute of Virology) சொந்தமாக உள்ளன.

பாவம் ஷி செங்லி. அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. இருந்தாலும் அதெ அந்த வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திலேயே தன் சேவைகளைத் தொடர்ந்தார். இன்றும் சேவை செய்து வருகிறார். பல பல்கலைக்கழகங்களில் அழைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அவருடைய வைரஸ் கண்டுபிடிப்புகள் கைமாறிப் போனதும், உலக நாடுகள் அவருக்கு வழங்கி வந்த உதவித் தொகைகளை நிறுத்திக் கொண்டன. 



ஏன் என்று கேட்டால் நாசுக்கான பதில்கள் வருகின்றன. உலகத்திலேயே மிக மிகக் கொடிய வைரஸ்களுடன் ஷி செங்லி உறவாடிக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட கொடிய கிருமிகளுடன் ஆய்வு செய்பவருக்கு நிதியுதவி செய்வது மனுக்குலத் தார்மீகத்திற்குச் சரிபட்டு வராது எனும் நறுக் நறுக் பதில்கள். இது எப்படி இருக்கு என்று சொல்ல முடியவில்லை.

மேலும் கொஞ்ச தகவல்கள். ஷி செங்லி, சீனா நாட்டுக் குகைகளில் பல கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர். அங்கே மேலும் பல பயங்கரமான வைரஸ்கள் உள்ளன என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார். இன்றும் எச்சரிக்கை செய்து வருகிறார்.

இவர் சீனாவின் வௌவால் குகைகளில் 16 ஆண்டு காலம் வைரஸ் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.




2019 டிசம்பர் 30-ஆம் தேதி வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்திற்கு இரு மர்ம நோயாளிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு வருகின்றன. புதிய வகையான கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதுவரையிலும் அறியப் படாத வைரஸ் கிருமிகள்.

இரண்டு நோயாளிகளுக்கும் வித்தியாசமான நிமோனியா (ஜன்னி சளிக்காய்ச்சல்). இந்தச் சளிக்காய்ச்சலின் வைரஸ்கள் புதியவை. இதுவரை கண்டு அறியப்படாத வைரஸ்கள். ஆனாலும் அவை கொரொனா சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள்.

இந்த வைரஸ்களினால் வுஹான் மாநகருக்குப் பெரும் ஆபத்து. நோயாளிகளின் உடலில் இருந்து இரத்த மாதிரிகளை எடுக்கும் போது தப்பு எதுவும் செய்து விட்டார்களா என்று ஷி செங்லி கலக்கம் அடைந்து போனார்.


ஒரு கட்டத்தில் ஷி செங்லியும் அவருடைய குழுவினரும் புதிய தொற்று நோயின் அடையாளத்தையும் தோற்றத்தையும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் தான் அந்தப் புதிய மர்ம நோய் காட்டுத்தீ போல் பயங்கரமாய்ப் பரவத் தொடங்கியது.

அண்மைய காலங்களில் கொரோனா கோவிட் என்பது உலகை பாதிக்கும் மிக மோசமான தொற்றுநோய் ஆகும். தெரிந்த விசயம்.

ஆனாலும் ஒரு புதிய மோசமான தொற்று நோய் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன; வளரும் நாடுகளில் மனிதர்களும் விலங்குகளும் மிக நெருக்கமாய் உறவாடுகிறார்கள் என்று உலக விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே எச்சரிக்கை செய்து வந்து இருக்கிறார்கள்.

மக்களும் கேட்கவில்லை. மாக்களும் கேட்கவில்லை. மன்னிக்கவும். நாய்களையும், பூனைகளையும், முயல்களையும், முதலைகளையும், மலைப்  பாம்புகளையும் முத்தம் கொடுத்து கொஞ்சிக் குலவும் சில மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். பத்திரம்.

 

உலகில் புதுப்புது நோய்கள் தோன்றிக் கொண்டு இருக்கின்றன. அவை வளர்ப்புப் பிராணிகளின் மூலமாகவும் மனிதர்களிடம் தொற்றிக் கொள்கின்றன. எந்த நேரத்திலும் ஒரு புதிய வைரஸ் வந்து கதவைத் தட்டலாம் என்பது எவருக்கும் தெரியாது. ஆக வளர்ப்புப் பிராணிகளைக் கொஞ்சுவதைத் தவிர்ப்பதே சிறப்பு.

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் ஆறு அடி தள்ளி நிற்க வேண்டும் என்று ஆலோசனைகள் சொல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆகவே வளர்ப்புப் பிராணிகளைக் கொஞ்சிக் குலாவுவதைத் தவிர்ப்பதே நல்லது. சரி.

ஆய்வாளர் ஷி செங்லியின் வைரஸ் பயணங்கள் 2004 ஆம் ஆண்டில், குவாங்சியின் (Guangxi) தலைநகரான நானிங்கிற்கு (Nanning) அருகில் உள்ள வௌவால் குகைகளில் தொடங்குகின்றன. 



ஷி செங்லி குழுவினர் வௌவால்களைத் தேடி காடு மேடுகளில் அலைந்தனர். சமயங்களில் கிராமவாசிகள் உதவிகள் செய்தனர். மனித வாடையை அதுவரை அறிந்திராத குகைகளுக்குள் படுத்து, ஊர்ந்து, தவழ்ந்து போய் இருக்கின்றனர்.

முதலில் 2003-ஆம் ஆண்டில் முப்பதுக்கும் மேற்பட்ட குகைகளை ஆராய்ந்தனர். இருந்தாலும் இருபது வெளவால் வகையை மட்டுமே பார்க்க முடிந்தது. பின்னர்தான் நுற்றுக் கணக்கான குகைகளில் ஆய்வு நடத்தினார்கள்.

21-ஆம் நூற்றாண்டின் முதல் பெரிய தொற்று நோய் சார்ஸ் (SARS) பரவல். அதன் மூத்த முதல் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக அந்தக் குகைப் பயணம் அமைந்தது.



இதற்கு முன்னர் ஹாங்காங் மருத்துவ ஆய்வுக் குழுவினர் சார்ஸ் நோய் பற்றி சொல்லி இருக்கின்றனர். ஆசியா, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட புனுகுப் பூனைகள், கீரிப்பிள்ளைகள் போன்ற பாலூட்டிகளிடம் இருந்து சார்ஸ் கொரோனா கிருமிகள் வந்து இருக்கலாம் எனும் எச்சரிக்கை.

கொரோனா கிருமிகள் பற்றி அப்போது எவருக்கும் எதுவும் தெரியாது. கிருமியின் மேல் பகுதியில் கூர்மையான புரதங்கள் உள்ளன என்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த கிருமிதான் கொரோனா கிருமி என்று உறுதியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் கொரோனா கிருமிகள் எனும் ஒரு வகை கிருமிகள் உள்ளன. அவை சாதாரண சளிக்காய்ச்சலை மட்டும் தோற்றுவித்து விட்டுப் போய் விடுகின்றன. இந்த உண்மை முன்பே தெரியும். ஆனால் கொரோனா கோவிட் பற்றி மட்டும் எதுவும் ஆழமாய்த் தெரியாமல் இருந்தது. அப்போது ஆழமாக ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பதே வெள்ளிடைமலை.



2011-ஆம் ஆண்டு ஒரு ஹாலிவூட் திரைப்படம். அதன் பெயர் கண்டேஜியன் (Contagion). அந்தப் படத்தில் வௌவால் பெண்மணி ஷி செங்லியின் வௌவால் வைரஸ்கள் பற்றி ஒரு காட்சி வந்து போகிறது. ஐயையோ… இப்படி ஒரு கொடிய வைரஸ் இருக்கிறதா என்று மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அதற்கு எல்லாம் காரணம் ஷி செங்லி என்கிற ஒரு சாமான்யப் பெண்மணி. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வைரஸ் ஆராய்ச்சிகளுக்காக அர்ப்பணிப்பு செய்தவர். கொரோனா கோவிட் பிரபலம் அடைவதற்கு முன்னாலேயே அப்படி ஒரு வைரஸ் இருப்பதாக உலகத்திற்கு முதன்முதலில் சொன்னவர். அவரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.

அந்த பிறகு கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் துரிதம் அடைந்தன. இந்தப் பயங்கரமான தொற்று, உலக அளவில் மக்களைப் பாதிக்கலாம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. 



அந்தத் திரைப் படமே விலங்கு வைரஸ்களைப் பற்றி பெரிய அளவில் ஆய்வு செய்வதற்கு முன்னோடியாகவும் விளங்கியது.

அந்தப் படத்தின் நம்பகத் தன்மைக்கு உலகின் 85 விழுக்காட்டு மருத்துவ அறிவியலாளர்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

கொண்டேஜியன் அருமையான ஆனால் பிரமிகத்தக்க பேரழிவுகள் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காடும் திரைப்படம் (Contagion is an exceptionally smart – and scary – disaster movie) என்று புகழாரம் செய்தார்கள். சரி. ஷி செங்லியின் வைரஸ் ஆய்வுகளுக்கு வருவோம்.

புனுகுப் பூனைகளுக்கு வைரஸ் எப்படி வந்தது என்பது பெரும் புதிராகவே இருந்தது. இதற்கு முன்பு நிகழ்ந்த இரு சம்பவங்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1994-ஆம் ஆண்டில் ஹெந்திரா வைரஸ்கள் (Hendra virus) ஆஸ்திரேலியாவை ஒரு வழிபண்ணி விட்டன. குதிரைகளில் இருந்து மனிதர்களிடம் தாவிக் குதித்த வைரஸ்கள்.

அடுத்து மலேசியாவின் 1998-ஆம் ஆண்டு நிப்பா வைரஸ் (Nipah virus). இந்த வைரஸ் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பாய்ந்தது. இந்த இரண்டு வைரஸ் நோய்களும் பழந்தின்னி வெளவால்களின் நோய்க் கிருமிகளால் ஏற்பட்டவை என்று கண்டு அறியப் பட்டது.

அந்த இரு நோய்களுக்கும், குதிரைகள் - பன்றிகள் இடைநிலைப் புரவலர்களாக இருந்து இருக்கின்றன.

ஷி செங்லி 1964-ஆம் ஆண்டு சீனா ஹீனான் மாநிலத்தில் பிறந்தவர். வயது 56. வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்தவர். வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் (Wuhan Institute of Virology) இருந்து மாஸ்டர்ஸ் பட்டம். பின்னர் பிரான்ஸ் மொண்ட்பெலியர் பல்கலைக்கழகத்தில் (Montpellier University) இருந்து முனைவர் பட்டம்.

2005-ஆம் ஆண்டில், ஷி ஜெங்லி தலைமையிலான குழுவினர் சார்ஸ் வைரஸ் கிருமிகள் வெளவால்களில் இருந்து தோன்றியதைக் கண்டு அறிந்தனர். அவர்களின் ஆய்வு முடிவுகள் 200-ஆம் ஆண்டு ‘சைன்ஸ்’ (Science) ஆய்வு இதழிலும்; ஜர்னல் ஆப் ஜெனரல் வைராலஜியிலும் (Journal of General Virology) வெளியிடப்பட்டன.

2014-ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சிக்காக அவருக்கு அமெரிக்க அரசாங்கம் பல அரசாங்க மானியங்களை (US Government grants) வழங்கியது. மேலும்...

சீனாவின் தேசிய அடிப்படை ஆராய்ச்சி திட்டம் (National Basic Research program of China)

சீன அறிவியல் அகாடமி (Chinese Academy of Science)

சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் அறக்கட்டளை (National Natural Science Foundation of China)

சீன அறிவியல் அகாடமி முன்னுரிமை ஆராய்ச்சி (Strategic Priority Research Program of Chinese Academy of Sciences)

கணிசமான அளவிற்கு மானியங்கள் வழங்கப் பட்டன. வுஹான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் போது வட கரோலினா அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வைரஸ் ஆய்வுகள் செய்தார். அப்போது இவர் மீது குற்றச்சாட்டுகள். அதிக ஆபத்தான வைரஸ்களுடன் ஆய்வு செய்கிறார் எனும் குற்றச்சாட்டு. அத்துடன் அமெரிக்கா மான்யம் வழங்குவதை நிறுத்திக் கொண்டது.

இவருக்கு கிடைத்த வெளிநாட்டு விருதுகள்.

2016-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் செவலியர் விருது

2018-ஆம் ஆண்டு அமெரிக்கா இயற்கை அறிவியல் விருது

2019-ஆம் ஆண்டு அமெரிக்கா அகாடமி நுண்ணுயிரியல் விருது


மனுக்குல நலன்களுக்காக அர்ப்பணிப்பு செய்தவர்களின் பட்டியலில் ஷி ஜெங்லி என்பவர் தனித்து நிற்கிறார். காடு மலைகளில் அலைந்து திரிந்து, வைரஸ் கிருமிகளை ஆய்வுகள் செய்து இருக்கிறார். மனிதர்களுக்கு இன்றும் உதவி செய்து வருகிறார். அந்தப் பெண்மணி நீண்ட நாட்கள் வாழ வேண்டும். பிரார்த்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.04.2020




கொரோனா வைரஸ்: வௌவால் வேட்டை… உலகளாவிய சர்ச்சை

தமிழ் மலர் - 06.04.2020

சீனா ஹூபே மாநிலத்தில் நிறையவே காடுகள். நிறையவே மலைக்காட்டு வௌவால்கள். நிறையவே குகை மேட்டு வௌவால்கள்; கற்பாறை வௌவால்கள்; நெடுமரத்து வௌவால்கள். இப்படி விதம் விதமான வௌவால்கள். வித்தியாசமான வௌவால்கள். ஊழியூழிக் காலமாக ஊர்க்கோலம் போன வௌவால்கள். 




அந்த வௌவால்களைப் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார் ஓர் இளம் சீன ஆய்வாளர். சீனாவில் வைரஸ் கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். பத்து ஆண்டுகளாக வௌவால் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.

பொதுவாக வௌவால்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவை கூச்சமான விலங்குகள். ஆனால் பயங்கரமான வைரஸ்களைத் தம் உடல்களில் தேக்கி வைத்து இருக்கும் மகா ஜீவன்கள். பெரிய திரவத் தேக்கம் என்று சொல்ல முடியாது.

வைரஸ் தேக்கம் என்று தாராளமாகப் புதிய ஒரு  வாழ்த்துச் சொல்லையும் கொடுக்கலாம். அந்த வைரஸ்களைப் பற்றித் தான் அந்தச் சீன ஆய்வாளர் ஆய்வு செய்து இருக்கிறார்.

அந்த வைரஸ்களில் பெரும்பாலானவை மனிதர்களைக் கொன்று குவிக்கும் வைரஸ்கள். ஆனால் அந்த வைரஸ்கள் வௌவால்களை மட்டும் பாதிப்பது இல்லை. பெரிய அதிசயம். ஏன் எதனால் எப்படி என்று உலகம் முழுமைக்கும் பெரிய அளவில் வௌவால் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. 




ஏற்கனவே 2003-ஆம் ஆண்டுகளில் வௌவால்களினால் சார்ஸ் தொற்று நோய் ஏற்பட்டது. பல ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்தனர். பல ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். அதனால் உலகளாவிய நிலையில் வௌவால்கள் பற்றிய ஆய்வுகள் தீவிரம் அடைந்தன.

உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் வௌவால்களைத் தேடிப் பிடித்து அவற்றிடம் தொற்றி இருக்கும் வைரஸ்களின் விவரங்களைத் தொகுத்துப் பகுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சீனாவில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்த காட்டு வெளவால்களைப் பிடிப்பதைக் காட்டும் ஓர் ஆவணப் படம் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  




அந்த வௌவால்களைப் பிடித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வாளர் பல குகைகளுக்குள் போய் இருக்கிறார். பல நூற்றுக் கணக்கான வௌவால்களைப் பிடித்து இருக்கிறார்.

அவற்றின் உடலமைப்பு; உடல் உறுப்புகள் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார். அந்த ஆய்வாளரின் பெயர் தியான் ஜுன் ஹுவா (Tian Junhua).

அந்தக் காணொலி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய அந்தக் காணொலி, 'யூத் இன் தி வைல்ட்: இன்விசிபிள் டிபென்டர்' (Youth in the Wild: Invisible Defender) எனும் தலைப்பு கொண்ட ஒரு தொடரின் ஒரு பகுதியாகும்.

அந்தத் தொடர் சீன இளம் விஞ்ஞானிகளின் படைப்புகளை அறிமுகப் படுத்துகிறது.




வுஹான் கொரோனா வெடிப்பு தோன்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அதாவது 2020 டிசம்பரில் அந்தக் காணொலி வெளியிடப்பட்டது.

ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவாவின் வாழ்க்கையையும் அந்தக் காணொலி சித்தரிக்கிறது. அவர் வெளவால் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஈரமான இருண்ட குகைகளில் நீண்ட நாட்கள் செலவழித்து இருக்கிறார்.

40 வயதான இவருக்கு இரு குழந்தைகள். வுஹான் முனிசிபல் நோய் மையத்தில் ஓர் அதிகாரியாகப் பணி புரிகிறார்.

அவர் அந்தக் காணொலியில் சொல்கிறார்: ’நான் வைரஸ் மாதிரிகளைச் சேகரிக்கும் துறையில் பணிபுரிகிறேன். கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள். அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து. முடிந்த வரையில் மனுக்குலத்தின் பாதுகாவலனாக இருக்க விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக வௌவால்களைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறேன்’ என்றார்.




அந்த வௌவால்களிடம் 300-க்கும் மேற்பட்ட பல்வகையான வைரஸ் கிருமிகள் இருந்ததாக அந்த ஆய்வாளர் கூறி இருக்கிறார். ஏழு நிமிடக் காணொலியில் அந்த ஆராய்ச்சியாளரின் வௌவால் வேட்டை காண்பிக்கப் படுகிறது. அதனால் பலத்த சர்ச்சைகள்.

கொரோனா வைரஸ் எங்கே தோன்றி இருக்கலாம் என்பதற்கான சர்ச்சை மேலும் உச்சம் அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் அந்தக் காணொலி ஒரு சந்தேகத்திற்கு உரிய பார்வையையும் தூண்டி உள்ளது.

அதே சமயத்தில் கொரோனா கோவிட் கிருமிகள் மனிதனால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனும் சர்ச்சையையும் கிளறி விடுகிறது.

வுஹான் நகராட்சி நோய் கட்டுப்பாடுத் தடுப்பு மையம் (Wuhan Municipal Center for Disease Control and Prevention), இப்போது அந்தச் சர்ச்சையின் மையத்தில் சிக்கி உள்ளது. கொரோனா வைரஸ் SARS-CoV-2 அங்கு இருந்து வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் அது ஒரு வதந்தியாக இருக்கலாம்.




இங்கிலாந்தில் புகழ்பெற்ற நாளிதழ் டெய்லி மெயில் அந்தக் காணொலிச் செய்தியை வெளியிட்டு உள்ளது. அப்படியே ஒரு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

சான்று: https://www.dailymail.co.uk/news/article-8172891/Documentary-Wuhan-virologist-catching-wild-bats-fuels-conspiracy-theory.html

இந்தக் காணொலி யூடியூப்பில் உள்ளது. அதன் முகவரி. போய்ப் பாருங்கள்.: https://youtu.be/ovnUyTRMERI?t=440

அந்தச் சீன ஆய்வாளர் ஆய்வுகள் செய்யும் போது வௌவால்களின் சிறுநீர் அவர் மீது தற்செயலாகப் பட்டு இருக்கிறது. அவரே சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் 14 நாட்களுக்கு அவர் சுயமாகத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். அதைப் பற்றி 2017 -ஆம் ஆண்டில் சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இது மேலும் சந்தேகத்தைத் தூண்டியது.




அதுவே வுஹான் உயிரியல் ஆய்வு நிலையத்தின் (Wuhan Institute of Virology) மீதும் உலகளாவிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ் என்பது சீனா அல்லது அமெரிக்காவால் வடிவம் அமைக்கப்பட்ட உயிரியல் ஆயுதமாக இருக்கலாம் என்றும் பல தரப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இருந்தாலும் உலக வல்லுநர்கள் அத்தகைய கருத்துகளை நிராகரித்து வருகின்றனர். அவற்றில் நம்பகத் தன்மை இல்லை; அதனால் பதட்டத்தைத் தான் உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

SARS-CoV-2 என அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய இடம் எதுவென்று இதுவரையிலும் சரியாகத் தெரியவில்லை.




வெளவால்கள், பாம்புகள், எறும்புத்தின்னிகள் அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்குகளில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் சந்தேகப் படுகின்றனர்.

வுஹானில் உள்ள ஒரு சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து கொரோனா கிருமிகள் மனிதர்களிடம் தொற்றி இருக்கலாம் என்று சீனச் சுகாதார அதிகாரிகள் முன்பு இருந்தே கூறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சிலர் வுஹான் உயிரியல் ஆய்வு நிலையத்தின் மீது குறை காண்கின்றனர். சிலர் அமெரிக்க இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவா தன் சக ஆய்வாளர்களுடன் குகைகளில் இரவு நேரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர்கள் முழு உடல் பாதுகாப்பு அணிகலன்களை அணிந்து கொண்டு ஆய்வு செய்து இருக்கிறார்கள்.




உலகில் வாழும் உயிரினங்களில், வெளவால்கள் தான் பல்வேறு வைரஸ்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த வைரஸ் கிருமிகளில் மனித நோய்களுக்குக் காரணமாக இருக்கும் வைரஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

நீண்ட நாட்கள் நீடிக்கும் குகைப் பயணங்களின் போது, ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவா அடிக்கடி பயந்ததாகவும் அவரே ஒப்புக் கொண்டார்.

’என்னால் பயத்தை உணர முடிந்தது. ஒரு பக்கம் தொற்று நோய்களின் பயம். இன்னொரு பக்கம் காட்டுக்குள் தொலைந்து போகக் கூடிய பயம். அந்தப் பயங்களின் காரணமாகவே நான் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனமாக, மிகவும் எச்சரிக்கையாக மிகவும் நிதானமாக எடுத்து வைத்தேன்.

வௌவால்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்யும் போது வைரஸ் கிருமிகள் நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம். உண்மையிலேயே வௌவால்களுக்கு நான் பயப்படவில்லை. வௌவால்களிடம் இருக்கும் வைரஸ்களுக்குத் தான் நாங்கள் பயந்தோம். பயப்படுகிறோம்.




சேகரிக்கப்பட்டு இருக்கும் வைரஸ் மாதிரிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களுக்கு அந்த வைரஸ் மாதிரிகளை ஒரு போதும் பயன்படுத்தப் படாது என்று தியான் ஜுன் ஹுவா சொல்லி இருக்கிறார். சரி.

வௌவால்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

நாம் வாழும் இந்த உலகில் 1,200 வகையான வௌவால்களும் வாழ்கின்றன. ஆனால் 1,100 வகையைத் தான் நம்மால் அடையாளம் காண முடிந்தது. அவற்றுக்குப் பெயர் கொடுக்க முடிந்தது. மேலும் ஆயிரம் வௌவால்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அவை காடுகளில் கண்ணாமூச்சி காட்டும் வௌவால்கள்.

அமேசான் காட்டு வௌவால்கள் ரொம்பவும் கில்லாடித் தனமான வௌவால்கள் என்று சொல்கிறார்கள். சில வௌவால்கள் பகலிலும் வேட்டைக்குப் போய் விடுகின்றனவாம். அமேசான் காட்டில் வாழும் பூர்வீக குடிமக்கள் பழம் தின்னி வௌவால்களை அதிகமாக வேட்டையாடுகிறார்கள்.

வௌவால் (Bat) முதுகெலும்பு உள்ள பாலூட்டி. முதுகெலும்பி என்றும் சொல்வார்கள். பாலூட்டிகளில் பறக்கக் கூடிய ஒரே ஒரு விலங்கு வௌவால்தான். மனிதர்களும் பாலூட்டிகள் தான்.

ஆனால் என்ன வௌவால்களைப் போல பறக்க முடியாது. பறக்க முடிந்தால் அம்புட்டுத்தான். என்ன செய்வார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

வௌவாலை ’வவ்வால்’ என்றும் ’வாவல்’ என்றும் அழைப்பார்கள்.

வௌவால்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பெரிய வௌவால்கள் (Mega bats); சிறிய வௌவால்கள் (Micro bats).

அவற்றை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்றும், பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

குறும் கைச்சிறகி வௌவால்களில் சில வகை மற்ற விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பவை. அதே சமயத்தில் மனித இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. அவை ‘வெம்பயர்’ வௌவால்கள்.

பெரும் கைச்சிறகி வௌவால்கள் பெரும்பாலும் பழம் தின்னிகள். அவற்றில் பறக்கும் நரி (Flying fox) என்று ஒருவகை உள்ளது. நரியைப் போல முகம் கொண்டது.

பழந்தின்னி வௌவால்கள் இரவு நேரங்களில் 48 கி.மீ. தூரம் வரை பயணிக்கக் கூடியவை. இந்த வௌவால்கள் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.

வாழைப் பழங்களை முழுதாகவே தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. மலர்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சிக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. சுத்த சைவமான வௌவால்கள்.

அவற்றில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர் பச்சைகளைத் தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. இவை சாப்பாட்டு ராமன் வௌவால்கள். அதனால் விவசாயிகளின் நம்பர் 2 எதிரியாகக் கருதப் படுகின்றன.

உலகில் பல நாடுகளில் வௌவால் ஓர் உணவாகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்; பாப்புவா நியூகினி, சாலமான் தீவு; பிஜி; போரா போரா; மிண்டானோ; லூசோன்; போன்ற இடங்களில் வௌவால் முக்கியமான உணவுப் பொருள்.

இதை எல்லாம் தாண்டிய நிலையில் இன்னும் ஒரு நாடு இருக்கிறது. மனுசனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் மக்கள் வாழும் நாடு. பெயரைச் சொன்னால் பொல்லாப்பு. வேண்டாமே.

இன்னும் ஒரு விசயம். ஆச்சரியமான விசயம். வௌவால் தன் வாய் வழியாக உணவு உட்கொள்கிறது. தெரிந்த விசயம். அந்த உணவு அதன் வயிற்றில் செரிக்கிறது. அதுவும் தெரிந்த விசயம்.

ஆனால் அந்த உணவு செரித்த பின் அந்தக் கழிவை, வௌவால் தன் வாயின் அடிப்பாகத்தின் வழியாக அகற்றுகிறது என்பது தான் பலருக்கும் தெரியாத விசயம்.

(https://www.quora.com/Bats-pass-stool-through-their-mouth-How-did-this-strange-and-rare-diversification-happen-during-evolution)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


M R Tanasegaran Rengasamy அந்தக் காலத்தில் தோட்ட வீடுகளின் கூரைகளில் வௌவால்கள் வந்து அடைந்தால் உடனே மூட்டம் போட்டு விரட்டுவார்கள். வௌவால் தங்கினால் வீடுகளில் மூட்டைப் பூச்சிகள் பரவும் என்றும் கூறுவார்கள். வௌவால்களின் பின்னணி பயங்கரமானதாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் vampire எனும் ஆங்கில படம் வந்தது நினைவிருக்கலாம். திகிலூட்டுகிறது வௌவால்களும் உங்கள் கட்டுரைகளும். வாழ்த்துகள் சார்.

Muthukrishnan Ipoh உலகின் பல்வேறு உலகளாவிய நோய்களுக்கு வௌவால்கள் தான் காரணம் என்பது அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்து. எனினும் சின்னப் பிள்ளையாக இருந்த போது தோட்ட வீடுகளில் வௌவால்கள் நிறையவே வந்து போகும்.

அவற்றைப் பிடித்து விளையாடுவது உண்டு. அப்போது எல்லாம் இந்த மாதிரி நோய்கள் எதுவும் இல்லையே. இப்போது அந்த வௌவால்களை நினைத்தால் பயமாக இருக்கிறது தனா... கருத்துகளுக்கு மிக்க நன்றி...

Jeya Balan சிறப்பான பதிவு கக்குவான் என்கிற நோய்க்கு வௌவால் சுட்டு தின்றதாக ஞாபகம்.

Muthukrishnan Ipoh தோட்டத்தில் வாழ்ந்த போது வௌவால் ஒரு அருந்துப் பொருளாக விளங்கியது... உண்மைதான் ஐயா..

Maana Mackeen மிகப் பிரமாதமான ஆய்வுத் தொகுப்பு. இத்தகவல்களின் உண்மைத் தன்மை எதிர்காலத்தில் ஊர்ஜிதமாகலாம். உங்களால் எனக்கு விருப்பமான "தமிழ் மலர்" கமகம...

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh நன்றியும் வாழ்த்துகளும்...

Jaya Brakash முற்றிலும் உண்மை sir