10 ஏப்ரல் 2020

கொரோனா தூக்க வாதங்கள் வேண்டாம்

தமிழ் மலர் - 10.04.2020

துயில் வாதத்திற்கு இன்னொரு பெயர் தூக்க வாதம். அது என்ன தூக்க வாதம். தூக்கத்தில் கூட வாதம் வருமா என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. பெரும்பாலும் துக்கம் வரும் போது தானே வாதம் பேதம் சேதம் எல்லாம் வரும்.

துக்க வாதம் என்பது வேறு. தூக்க வாதம் என்பது வேறு. துக்கம் – தூக்கம். இந்தச் சொற்களில் குறில் நெடில் ஆளுமைகளினால் அர்த்தங்கள் மாறுபடுகின்றன. 


துக்க வாதம் என்பது மாதம் முடிந்ததும் சிலருக்கு வரும் வழக்கமான வாதம். கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல... என்று மாதக் கடைசியில் குடும்பத் தலைவனுக்கு வருகின்ற ஒரு துக்கமான வாதம்.

எப்ப போன மச்சான் இப்பவும் வீடு திரும்பல... என்று அதே மாதக் கடைசியில் குடும்பத் தலைவிக்குத் வருகின்ற
துக்க வாதம். அது ஒரு பழக்கமான வாதம். ஆக இந்த இரண்டு வாதங்களும் துக்கக் கலக்கத்தில் வருகின்ற குடும்ப வாதங்கள். பெரிதுபடுத்த வேண்டாமே. பெரும்பாலான வீடுகளில் நடக்கின்ற சம்சாரச் சமாசாரங்கள் தானே.

ஆனால் இந்த துக்க வாதத்தைத் தாண்டிய ஒரு வாதம் இருக்கிறது. அது தான் தூக்க வாதம் என்கிற துயில் வாதம் (Sleep Paralysis).



நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது தற்காலிகமாக உடல் இயங்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். அந்த மாதிரியான ஒரு நிலையைத் தான் துயில் வாதம் என்பார்கள். இப்போதைய கொரோனா காலத்தில் அதைப் பற்றிய துயர் வாதங்கள் வந்து போகலாம். வாய்ப்புகள் அதிகம்.

நாம் நன்றாகத் தூங்கும் போது ஒரு சில விநாடிகள் முதல் ஒரு சில நிமிடங்கள் வரைக்கும் அந்தத் துயில் வாதம் வந்து போகும். அமுக்குறான் பிசாசு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்தக் காலத்தில் தோட்டப் புறங்களில் பேசிக் கொள்வார்கள். நல்லா தூக்கத்தில் பேய் வடிவத்தில் என்னவோ வந்து அமுக்கிட்டுப் போவுது என்று சாதாரணமாகப் பேசிக் கொள்வார்கள். சின்னப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு புலி அடித்து கிலி கடிக்கிற மாதிரி இருக்கும். சரி.

நாம் தூங்கும் போது அந்தத் தூக்கத்திற்கு இருநிலைகள் உள்ளன. முதலாவது விரைவாகக் கண் இயக்கத் தூக்கம் (Rapid eye movement sleep - REM). இரண்டாவது விரைவு இல்லா கண் இயக்கத் தூக்கம் (Non-rapid eye movement sleep - Non-REM). 




இதில் முதலாவது நிலையில் (REM), தூக்கம் ஆட்கொள்ளும் போது தான் வழக்கமான கனவுகள் தோன்றுகின்றன. மிகக் குறுகிய நேரத்திற்குள் நீண்ட காட்சிகள். கனவாக வரும். வந்து கொஞ்ச நேரத்தில் கரைந்து போகும். கொஞ்ச நேரம் தான். வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஆனால் எல்லோருக்கும் வந்து போகும் கனவுக் காட்சிகள் தான்.

நாம் படுக்கையில் படுக்கிறோம். தூக்கம் இழுக்கிறது. கண் செருகுகிறது. அப்போது நம்முடைய மூளை ஒரு பெரிய வேலையைச் செய்யும். நம் மனதையும் (Mind Conscious) நம் உடலையும் (Body Conscious) ஒரே நேரத்தில் தளர்ந்து போகச் செய்யும்.

அப்படியே உடலை அமைதிப் படுத்தும். அதனால் உடல் தசைகள் தளர்ந்து போகும். இது எல்லோருக்கும் அன்றாடம் நடக்கும் மூளையின் சடங்குச் சம்பிரதாயங்கள் தான். கவலை வேண்டாம். அதற்காகப் பெரிய பெரிய கற்பனைகளில் மூழ்கி பெரிய பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்ய வேண்டாம்.




ஆக அப்படி உடல் தசைகள் எல்லாம் தளர்ந்து ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தில், ஏதேனும் ஒரு பயங்கரமான கனவு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கொரோனா மாதிரி ஓர் அண்டங் காக்கா வந்து கன்னங்களைத் தடவிப் பார்ப்பது போல ஒரு கனவு. சும்மா ஓர் எடுத்துக்காட்டு. பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.

ஆஹா... கொரோனாவினால் பெரிய ஆபத்து நிகழப் போகின்றது என்று மன உணர்வு முதலில் விழித்துக் கொள்கிறது (Mind Conscious). முதலில் மன உணர்வு தான் துடித்து எழுந்து கொள்ளும். அதன் பிறகு சில விநாடிகள் கழித்து தான் உடல் உணர்வு (Body Conscious) மெல்ல எழுகிறது. அவசரம் அவசரமாக எழுந்தாலும் எப்படியும் நாலைந்து விநாடிகள் நேரம் பிடிக்கும்.

இங்கே தான் ஒரு பிரச்சினை. மனம் விழித்துக் கொள்ளும் அந்த வேகத்திற்கு ஈடாக உடல் தசைகளால் விழித்துக் கொள்ள முடியாது.

அந்தச் சமயம், மூளை உடனடியாக ’பட் பட்’ என்று உடலுக்கு அவசரக் கட்டளை போடுகிறது. ஒன் மினிட் பிளீஸ். அரசக் கட்டளை அல்ல. அவசரக் கட்டளை.

மூளை உடலுக்கு அவசரக் கட்டளை போடும் போது, அந்தக் கட்டளைகள் உடனடித் திடீர்க் கட்டளைகளாக மாறும். 




உடலை அசைத்துக் கொடு; முதுகைத் திருப்பிப் போடு; கைகளை நீட்டி இழுத்து விடு; கால்களை மடக்கி எட்டி உதைத்துக் காட்டு என்று மன உணர்வு, பற்பல கட்டளைகளைப் போட்ட வண்ணம் இருக்கும்.

இவை எல்லாம் மூளை நம் உடலைத் தற்காத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் ஆபத்து அவசர முயற்சிகள். இவை எல்லாம் நடக்கும் போது நமக்கு எதுவுமே தெரியாது. மேலும் ஒரு தகவல்.

நம் மூளையின் ஒரு பகுதி எப்போதுமே தூங்காது. அது தெரியுமா உங்களுக்கு? 95 விழுக்காட்டு மூளை தூங்கும் போது 5 விழுக்காட்டு மூளை தூங்காது. தூங்காமல் நம் உடலின் இயக்கத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கும்.

மூச்சு விடுதல்; சுவாசப் பை இயங்குதல்; இருதயம் துடித்தல்; சிறுநீர் சுத்தம் செய்தல்; இரத்தம் உடல் பூராவும் சுற்றி வருதல் போன்ற அத்தியாவசியமான வேலைகளை அந்த 5 விழுக்காட்டு மூளை பார்த்துக் கொள்ளும்.

மூளை உடலுக்குக் கட்டளை போடுகிறது என்று சொன்னேன். அப்படி கட்டளைகள் போட்டும் உடல் விழிப்பு நிலை அடையவில்லை என்றால்; தளர்வு அடைந்து இருக்கும் தசைகள் இயங்கவில்லை என்றால்; அந்தத் தசைகளை இயக்க வேண்டிய மோட்டார் உணர்வுகளும் இயங்கவில்லை என்றால் அவ்வளவு தான்.

மூளை அடுத்து ஒரு பெரிய பயங்கரமான போராட்டத்தில் இறங்கும். நம் உடலில் ஆபத்து மீட்டர் என்று ஓர் உணர்வு மீட்டர் இருக்கிறது. அந்த மீட்டரை மூளை தட்டி எழுப்பி விடும். அதன் அளவை உச்சத்திற்குக் கொண்டு போகும். வாகனங்களுக்கு ஸ்பீட் மீட்டர் இருக்கிறதே அந்த மாதிரியான மீட்டர் தான்.




ஆக இந்த மாதிரி உடல் செயல்பட முடியாமல் அவஸ்தைப் படும் நேரம் இருக்கிறதே, அந்த நேரத்தைத் தான் துயில் வாதம் என்கிறோம். மனமும் உடலும் சம்பந்தப்பட்ட வாதம். மூளை சம்பந்தப் படாத வாதம்.

அந்தச் சமயத்தில் மூளை கொஞ்சமாய் விழித்துக் கொள்ளும். வெளியே நடக்கும் புறச்சூழல் நிகழ்வுகளைக் காது, மூக்கு வழியாக தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும்.

அதே சமயத்தில் நம்முடன் இருக்கும் பழைய நினைவுகளும்; புதிய கொரோனா நினைவுகளும்; புறச்சூழல் நிகழ்வுகளும் நம் கனவின் ஒரு பகுதியாகச் சேர்ந்து கொள்கின்றன.

சமயங்களில் தேவை இல்லாத கற்பனைகளையும் இணைத்துக் கொள்ளும். புருசன்காரனைச் சண்டைக்காரனாக தேவை இல்லாமல் இழுத்துக் கொண்டு வந்து, கனவை ரொம்பவும் கலகலப்பாக்கி விடும். சமயங்களில் இடி அமினைக்கூட இழுத்து வந்து உங்களை ஐஸ்பெட்டிக்குள் திணிக்கிற மாதிரி பயங்கரப்படுத்தியும் விடலாம். பயம் வேண்டாம்.

இவ்வளவு களேபரங்கள் நடக்கும் போது, சில சமயங்களில் நாம் நம் கண்களை நன்றாகத் திறந்து நன்றாகவே பார்த்துக் கொண்டு இருப்போம். ஆனால் என்ன நடக்கிரது என்று நமக்குத் தெரியாது. நாம் பார்க்கும் ஒரு சில காட்சிகளையும் உள்வாங்கிக் கொள்வோம். 




ஆனாலும் நாம் உறக்கத்தில் தான் இருக்கிறோம் என்பது நமக்கே தெரியாது. ஆக அப்போதைய அந்தக் காட்சிகள் நாம் காணும் கனவின் ஒரு பகுதியாக உள்வாங்கப் படுகின்றன.

துயில் வாதத்தின் போது சமயங்களில் மூச்சு கூட விட முடியாதது போல இருக்கும். மூச்சு அடைக்கலாம். மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

இதோடு நம்ப கதை முடிஞ்சது... அம்புட்டுத்தான்... தொலைஞ்சோம்... இனி பிழைக்க மாட்டோம் என்கிற கன்னா பின்னா நினைப்புகள்கூட வரலாம். சென்னைத் தமிழில் சொன்னால் அவை எல்லாம் கொஞ்ச நேரத்து மெர்சல் ஆயிட்டேன் நினைப்புகள். 

அந்தச் சமயத்தில் யாராவது லேசாகத் தொட்டால்கூடப் போதும். நம் தசைகளை இயக்கும் மோட்டார்கள் விழித்துக் கொள்ளும். இயற்கையான செயல்பாட்டிற்கு மறுபடியும் திரும்பி வந்துவிடும். உடல் இறுக்க நிலையும் மறைந்து போகும்.

அப்படியே யாரும் தொடா விட்டாலும் பரவாயில்லை. மூளையின் தொடர் இம்சைகளைத் தாங்க முடியாமல்... ஆளை விடுங்கோ சாமி என்று நம் தசைகள் பழைய நிலைக்கே திரும்பி வந்துவிடும்.




மூளைக்கும் உடலுக்கும் இடையே இம்சைப் போராட்டங்கள் நடக்கும் போது  நாம் சத்தம் போடுவோம். அழுவோம். கத்துவோம். கதறுவோம். பக்கத்து வீட்டு நாய் ஊளையிடுவது போல பயங்கரமாக ஓலம்கூட போடுவோம்.

ஆனால் நாம் போடுகிற ஓலங்களும் ஒப்பாரிகளும் வெளியே யாருக்கும் தெளிவாகக் கேட்காது. அப்படியே கேட்டாலும் அது என்னவோ கீச்சுக் குரலில் கிண்டர்கார்டன் பிள்ளை முனகுவதைப் போல இருக்கும்.

நமக்கு என்னவோ பெரிய குரல் கொடுத்துக் கத்துவது போல் இருக்கும். ஆனால் அது அப்படி அல்ல. இருந்தாலும் இதையும் மீறி ஆண்கள் சிலருக்குக் காட்டுக் குரலில் காட்டுமிராண்டி ராகங்களும் வரலாம். அதுதாங்க தூக்க வாதம்.

இந்தத் தூக்க வாதம் எல்லோருக்கும் வருவது இல்லை. ஒரு சிலருக்குத் தான் வரும். குறிப்பாக வயதானவர்களுக்கு அதிகமாக வரும்.

கண்டதைப் போனதை நினைத்துக் கொண்டு தூங்கப் போக வேண்டாம். நல்ல இனிமையான நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டால் மன அழுத்தங்களைத் தவிர்க்கலாம். போதுமான தூக்க நேரம் இருந்தால், அதுவே போதுமான உடல் நலத்தைத் தரும்.

தூக்க வாதம் பெரும்பாலும் கடுமையான வேலைகளுக்குப் பின்னர் ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் இல்லாத நிலையிலும் ஏற்படலாம்.




முன்பு காலத்தில் தோட்டப் புறங்களில் அந்த மாதிரியான தூக்க வாதங்களை அமுக்குவான் சேட்டை என்று சொல்வார்கள். தாத்தா பாட்டிமார்கள் நிறைய பேய்க் கதைகளைச் சொல்வார்கள். அந்தக் கதைகளைக் கேட்க தோட்டமே கூடி நிற்கும்.

இராத்திரி நேரத்தில் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என்று அந்த மாதிரி கதைகளைச் சொல்ல மாட்டார்கள். பட்டி விக்கிரமாதித்தன் கதைகள், இராமாயணம், மகா பாரதம், நளவெண்பா, பெரிய புராணக் கதைகள் என இப்படிப்பட்ட கதைகளைத் தான் சொல்வார்கள். பகல் நேரத்தில் தான் மோகினி, பேய்ப் பிசாசுக் கதைகளைச் சொல்வார்கள்.

அந்த மாதிரி பேய்க் கதைகளைக் கேட்டதும் நம் மூளை அந்த மாதிரிக் கதைகளுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறது. ஏதோ ஒரு மோகினி; ஏதோ ஒரு பிசாசு நம் நெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டு நம்மை அமுக்குவதாக நினைத்துக் கொள்வோம்.

அவையே தூக்கவாதம் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகின்றது. ஆக படுக்கப் போகும் முன்னர் வீணானக் கற்பனைகள் வேண்டாமே.

முறையான தூக்கம்; காற்றோட்டம் உள்ளட அறை; வசதியான படுக்கை போன்றவை இருந்தால் இந்தத் துயில்வாதம் தூக்க வாதம் வராமல் தடுக்கலாம்.

இன்றைய காலக் கட்டத்தில் கொரோனா கற்பனைகள் நம்மை அதிகமாகப் பாதிக்கின்றன. கொரோனா கொடுமைகளை மறப்போம். அடுத்து பழைய நிலைக்கு எப்படித் திரும்பி வருவது என்பதைப் பற்றி யோசிப்போம்.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் போதுமான கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் நலன்களில் அதிகமாக அக்கறை செலுத்தி வருகிறது.

கொரோனா பற்றிய எந்தத் தகவலையும் மறைக்காமல் எந்தச் செய்தியையும் தணிக்கை செய்யமால் நேர்மையாக நடந்து கொள்கிறது. மக்கள் நலமே மகேசன் நலம் என்று சொல்வார்கள். சரியான நேரத்தில் முறையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றிகள். நன்றிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.04.2020


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்


Punesh Devnes : Explained well, sir 🙏🏻

Muthukrishnan Ipoh : நன்றிங்க.... மகிழ்ச்சி...

Mageswary Muthiah : நல்ல நகைச்சுவை பாணியில் எழுதி இருக்கிறீர்கள்... அருமையாக உள்ளது 😂

Muthukrishnan Ipoh : நன்றி... மகிழ்ச்சி...

Krishna Ram : Thank you sir ...

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...

Khavi Khavi : உடல் பலகீனமானவர்கள், போதை வஸ்துக்களை உபயோகிப்பவர்கள் போன்றோருக்கு இத்தகைய அழுத்தங்கள் வழக்கமாக நிகழ வாய்ப்பு இருக்கிறது ஆசிரியரே..

Muthukrishnan Ipoh : அப்படிப் பட்டவர்களின் தூக்கத்தில் மட்டும் அல்ல... இயல்பாக இருக்கும் போதும் வெட்டி இழுக்கும்... பார்த்து இருக்கிறேன்....

Manickam Nadeson : நம்ம கிட்ட இதெல்லாம் வராது ஐயா சார், நம்மல பாத்தாலே ஒரே ஓட்டம் தான், அந்த அளவுக்கு நம்ம கிட்டு ஒரு பெரிய சக்தி இருக்கு.

Muthukrishnan Ipoh : கேள்விப்பட்டு இருக்கேன் சார்... தாப்பாவில் பேசிக் கொள்கிறார்கள்...

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh : அதானே, இது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா????

Muthukrishnan Ipoh : நக்கல் நையாண்டிகளுக்குப் பேர் போனவர்களிடம் அமுக்குறான் பிசாசுகள் எல்லாம் எந்த மூலைக்கு... 😃😃

Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh : அது அமுக்குறான் பிசாசு இல்லீங்கோ... அது அள்ளி விட்டான் பிசாசு... நம்ம கிட்ட வாலை ஆட்டாது... நறுக்கிடுவோம்ல...

Muthukrishnan Ipoh >>> Manickam Nadeson : பிசாசுகளுக்கு வால் இருக்குமோ...

Samugam Veerappan : சிறப்பான செய்தி சகோதரரே.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...

Melur Manoharan : "இனிய" காலை வணக்கம் ஐயா...! பயனுள்ள "மருத்துவ செய்தி" பதிவு ஐயா...! நன்றி...!

Muthukrishnan Ipoh :
வணக்கம்... வாழ்த்துகள்...

Rangasamy Krishnan : Super sir

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றி

Kumar Murugiah Kumar's : வணக்கம் ஐயா ! பகிருவுக்கு நன்றி

Muthukrishnan Ipoh : வணக்கம்.... மகிழ்ச்சி...

Balamurugan Balu : வணக்கம்! நல்ல பதிவு!

Muthukrishnan Ipoh :
இனிய வாழ்த்துகள்...

Anbu Arasu : Tq aiya.

Mani Roy : அருமையான பதிவு சார்.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...

Vanaja Ponnan :
அருமையான பதிவு ஐயா

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்....

Melissa Elroy : God bless you sir

Muthukrishnan Ipoh :
தங்களுக்கும் வாழ்த்துகள்...

Parimala Muniyandy : இப்போது தான் உங்களின் பதிவைப் பொறுமையாக படித்து முடித்தேன். தூக்க வாதம் என்றால் என்னவென்றும் புரிந்து கொண்டேன். எல்லோருக்கும் புரியும் விதத்தில் அழகாக... நகைச் சுவையாக எழுதி இருக்கிறீர்கள். அருமை அண்ணா... 👌👍👏👏👏

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி சகோதரி... நன்றி...

Pragash Moorthy : அற்புதமான விளக்கம். சிறு வயதில் அனுபவப் பட்டிருக்கின்றேன். குப்புறப் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது யாருடையதோ கை முதுகில் எழுந்திருக்க விடாது அழுத்துவது போலவும் அதன் உள்ளங்கை வெது வெதுப்பை உணர்வது போலவும் இருக்கும்.

கண்களைத் திறக்க முயற்சித்தால் முடியவில்லை. பயத்தில் பக்கத்து அறையில் உறங்கி இருக்கும் அம்மாவை அழைக்கிறேன். வாய் அசைகின்றது ஆனால் குரல் வரவில்லை. உடம்பு எல்லாம் குப்பென்று வியர்த்து வடிகின்றது. இப்படி ஒருமுறை அனுபவப் பட்டுள்ளேன்.

Muthukrishnan Ipoh :
வணக்கம் பிரகாஷ். உங்களுக்கு ஏற்பட்டது போல பலருக்கும் கண்டிப்பாக ஏற்பட்டு இருக்கலாம். காற்றுச் சேட்டை வந்து அமுக்குகிறது என்று சொல்வார்கள். நாமும் நம்பினோம். ஆனால் ஓரளவுக்கு உண்மை தெரிய வந்ததும்... பெரும் வியப்பு. கருத்துகளுக்கு நன்றி.

Balan Muniandy

Kamala Udayan :
வணக்கம் ஐயா. ஆழ்மனதில் சோகம் உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படுவது உண்டு. Depression நிலையில் உள்ளவர்களுக்கு இது நடக்க வாய்ப்பு உண்டு. பகல் வேளையில் இரவு தூக்கமின்மை காரணமாக சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆன்மீகம் (தியானம்) உதவா விடில், மருத்துவரை நாடி நிலைமையைச் சரி செய்யலாம்.

(என் மாணவி ஒருவருக்கு இந்த நிலை அவர் தந்தை மறைவுக்கு பின் இருந்தது. மருத்துவத்தால் மீண்டு வந்தார்.)

Muthukrishnan Ipoh :
மகிழ்ச்சி... நல்ல முயற்சி... /// ஆழ்மனதில் சோகம் உள்ளவர்களுக்கு இந்நிலை ஏற்படுவது உண்டு. /// உண்மைங்க...

Ak Muniandy : இந்த வயதிலும் பேய் பயமா, ஐயா?

Muthukrishnan Ipoh : சின்ன வயதில் இருந்தே எனக்கு பேய் பயம் வந்தது இல்லைங்க... பேய் மீது நம்பிக்கை இல்லை...

Poovamal Nantheni Devi

Muthukrishnan Ipoh :
🙏

Baakialetchumy Subramaniam : அருமையான படைப்பு, தெளிவான கருத்து நன்றி சகோதரரே.

Muthukrishnan Ipoh : நன்றி... மகிழ்ச்சி... வாழ்த்துகள்

Baakialetchumy Subramaniam >>> Muthukrishnan Ipoh : தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரரே.

Sheila Mohan : சிறப்பான கட்டுரை.. நன்றிங்க சார்..

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்....

Melur Manoharan : "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்

Samugam Veerappan : ஊரும் உலகமும் தெரிந்துக் கொள்ள சிறந்த படைப்பு

Muthukrishnan Ipoh : மிக்க நன்றிங்க...

Rajmagan Rajendhran : Arumai

Muthukrishnan Ipoh : நன்றி...

Neela Vanam : சார் இந்த கொரொனொ கிருமி எப்படி பல்கிப் பெருகுகிறது...

Muthukrishnan Ipoh : இதைப் பற்றி நிறையவே கட்டுரைகள்... என் வலைத் தலத்திலும் உள்ளன... போய்ப் பாருங்கள் ஐயா....

https://ksmuthukrishnan.blogspot.com/2020/03/19-4.html

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4

Kumaravelu Shanmugasundaram : எனது உலகளாவிய குழுக்களில் உங்கள் பதிவை பகிர்வேன்

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... புதிய தகவல்கள் பொது அறிவிற்கு மிகவும் அவசியம்... நன்றிங்க...

Santhian Narayanasamy : நல்ல தகவல்

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Kumaravelu Shanmugasundaram :
துயில்வாதம் நல்ல சொல்லாக்கம்...


Muthukrishnan Ipoh : துயில் வாதம் அல்லது தூக்க வாதம் எனும் சொல் 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்க் கலைச் சொல். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை...

Vani Yap :
சிறப்பு மிகுந்த பதிவு.... தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.


Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்....






09 ஏப்ரல் 2020

கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியா மோதலா?

தமிழ் மலர் - 09.04.2020

அமெரிக்கா. உலகப் பெருமைகளில் தனித்து நிற்கும் நாடு. உயரிய அறிவியல் நுட்பங்களில் உன்னதம் பேசும் நாடு. உலகப் போலீஸாரர் எனும் விருதைப் பெற்ற நாடு. உங்களையும் என்னையும் அண்ணாந்துப் பார்க்க வைக்கும் நாடு. ஆனாலும் இயற்கையிடம் மட்டும் சமாதானம் பேச முடியாது என்று இப்போது மண்டியிட்டுப் பேரம் பேசும் நாடு.




அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உயிர் இழப்புகளும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கொரோனா திருவிழாவிற்குச் சூடம் சாம்பிராணி போட்டு விளக்கு ஏற்றி வைத்த சீனாவையே மிஞ்சிப் போகிற அளவிற்கு வரலாறு அமெரிக்கா படைத்து வருகிறது.

அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு என்று ஆப்பிரிக்கா நாட்டு காங்கோ மக்கள் கேட்கிறார்கள். ஆர்க்டிக் பனிமலை இனியூட் மக்கள் கேட்கிறார்கள். அகில உலகமே அலறி அடித்துக் கேட்கும் அளவிற்கு நிலைமை மிக மிக மோசமாகி விட்டது.




அமெரிக்காவில் மட்டும் இது வரை 435,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகள் 14,800. இத்தாலியில் 17,600; ஸ்பெயின் 15,200; பிரான்ஸ் 10,800; இங்கிலாந்து 7,100. எல்லாமே ஆயிரக் கணக்கில் போகின்றன. 

அமெரிக்காவில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் உயிர் இழப்புகள் மேலும் உயரலாம். பாதிப்புகள் உச்ச நிலையை அடையலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் வரை உயிர் இழக்கலாம் என பகீர் தகவலைச் சொல்லி பேதி மாத்திரைகளைக் கொடுக்கிறது வெள்ளை மாளிகை.




நியூயார்க் நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவானது இதுவே முதல்முறை. நியூயார்க் நகரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,500. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1800 பேர் இறந்து உள்ளனர்.

கொரோனா பிரச்சினையில் அமெரிக்கா இந்தியாவிற்கும் மோதலா எனும் தலைப்பைக் கொடுத்து விட்டு வேறு எங்கோ போவதாக நினைக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமை. அதற்கு முன்னர்...

ஏன் அமெரிக்காவில் இந்த அளவுக்குப் பாதிப்புகள். காரணம் என்ன. அதைப் பற்றி முதலில் பார்ப்போம்.




ஒரே ஒரு முக்கியக் காரணம். மக்களுக்குச் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை. அதுதான் முக்கியக் காரணம். பிரதான காரணம்.

கொரோனா தொடங்கிய தொடக்கக் காலத்தில் கொரோனாவைப் பற்றிய முழுமையான தகவல்கள் மக்களுக்குப் போய் சேர்ந்து இருந்தால், அமெரிக்காவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிப் போய் இருக்காது.

சீனாவின் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்த காலக் கட்டம். 2020 ஜனவரி 15-ஆம் தேதி தான் ஐ.நா.விற்குச் சீனா அதைப் பற்றி எச்சரிக்கை செய்தது.

எச்சரிக்கைக்குப் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு படை படையாக அமெரிக்காவிற்குக் கிளம்பி விட்டார்கள். 




437,000 பேர் விமானம் மூலம் போய்ச் சேர்ந்தார்கள். எண்ணிக்கையைப் பாருங்கள். 4 இலட்சத்து 37 ஆயிரம் பேர். ஆயிரக் கணக்கான விமானங்களில் பறந்து போய் இருக்கிறார்கள். போனவர்கள் சும்மா ஒன்றும் போகவில்லை. பெரும்பாலோர் கொரோனா கிருமிகளையும் தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

கொரோனாவின் கோட்டையாக விளங்கிய வுஹான் நகரில் இருந்து பல ஆயிரம் அமெரிக்கர்கள் நேரடி விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 15-ஆம்தேதி வரையில் கொரோனா தீவிரம் குறித்து, உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை செய்யவில்லை. அதனால் மக்களும் பெரிது படுத்தவில்லை.

என்ன செய்வது. கொரோனா இப்படி இறக்கைக் கட்டி கோரத் தாண்டவம் ஆடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள். 




சீனாவில் இருந்து பல ஆயிரம் பேர் அமெரிக்காவின் பற்பல நகரங்களுக்குத் தங்கு தடை இல்லாமல் போய் இருக்கிறார்கள். அப்படிப் போனவர்கள் அமெரிக்கர்கள் மட்டும் அல்ல. பல நாட்டுக்காரர்களும் அவசரம் அவசரமாகப் போய் இருக்கிறார்கள். கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற அவசரக் கோலம்.

2020 பிப்ரவரி மாதத்தில் சீனாவில் இருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 நகரங்களுக்குப் போய் இருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சியாட்டில், நெவார்க்; டெட்ராய்ட் போன்ற நகரங்கள்.

இந்த விமானங்கள் மூலம் தான் மக்கள் அமெரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்த விமானங்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ்களும் அமெரிக்காவிற்குப் போய் இருக்கின்றன. மனிதர்களுக்கும் கொரோனாவிற்கும் விமானப் பயணங்கள். ஆனாலும் கொரோனா மட்டும் டிக்கெட் வாங்காமல் போய் இருக்கிறது.




கொரோனாவின் வீரியக் கொடுமைத் தன்மையைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்வதற்கு முன்பாகவே சீனாவில் இருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்குப் போய் விட்டார்கள்.

அப்போது அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனா குறித்த பரிசோதனைகளில் தீவிரம் இல்லை. மருத்துவ சோதனைகளில் தீவிரம் இல்லை. பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லை. வழக்கமான பயண விதி முறைகள் தான்.

அமெரிக்காவிற்குள் சென்ற பயணிகளில் எத்தனைப் பேர் கொரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் போனார்கள் என்கிற கணக்கும் தெரியவில்லை. அந்தக் கணக்கு விவரங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. உலகத்துப் போலீஸ்காரருக்கு இப்படி ஒரு நிலைமையா?




அதன் பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. ஆனாலும் அமெரிக்கர்கள் பலர் பொருட்படுத்தவில்லை. ஓர் அசட்டை தான். ஆகக் கடைசி நிமிடம் வரையிலும் சீனாவில் இருந்து விமானங்கள் அமெரிக்காவுக்குப் பறந்த வண்ணம் இருந்தன.

மார்ச் மாதம் மத்திய வாக்கில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களுக்குப் பல நூறு விமானங்கள் போய் இருக்கின்றன. ஆனாலும் 250 விமானங்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். கூடுதலாகவே இருக்க வேண்டும் என்று சில நம்பக் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுச் சோதனைகளைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே குழப்படிகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா வைரஸ்களும் பேரன் பேத்திகளுடன் படை எடுத்துப் போய் விட்டன.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைதற்கு முன்னதாகச் சீனாவில் இருந்து அமெரி்க்காவுக்கு 3 இலட்சத்து 81 ஆயிரம் பயணிகள் விமானங்கள் மூலமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீன நாட்டு விமானங்கள். குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள்.




சீனாவில் இருந்து விமானங்களில் வந்தவர்களில் பலர் எவ்விதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள்.

அப்படி வந்த பயணிகளில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டுப் பயணிகள் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது.

இன்னும் ஒரு விசயம். அமெரிக்காவில் முதன்முதலில் 2020 ஜனவரி 20-ஆம் தேதி தான், வாஷி்ங்டன் தலைநகரில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

இருந்தாலும் அதன்பின் பல வாரங்கள் எவருக்கும் அடையாளம் தெரியாமல்; எவரும் அறிய முடியாத வகையில்; கொரோனா வைரஸ் வாரக் கணக்கில் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அமெரிக்கா முழுவதும் படர்ந்து பரவி சங்கீர்த்தனங்கள் பாடி இருக்கின்றன.




இதில் இன்னும் ஒரு வேடிக்கை. அமெரிக்காவுக்கு இந்தக் கொரோனா வைரஸை முதன்முதலாக யார் இறக்குமதி செய்தார் என்கிற விசயம் இதுவரையிலும் ஒரு தங்கமலை இரகசியமாகவே இருக்கிறது.

உலகத் தலைவர்கள் சிலர் சில சமயங்களில் பொருத்தமே இல்லாத கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். மன்னிக்கவும். வார்த்தை ஜோடனைகளில் பெரும் பேச்சு பேசுகின்றனர்.

எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவரின் ஏறுக்கு மாறான அணுகுமுறையைச் சொல்லலாம்.

''நாங்கள் வைரஸைக் கட்டுக்குள் வைத்து இருக்கிறோம். நாங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சீனாதான் கவலைப்பட வேண்டும். நாங்கள் அல்ல. எங்கள் நாடு எங்கள் பாதுகாப்புக் கரங்களில் பத்திரமாக இருக்கிறது''.

இப்படிச் சொன்னவர் டொனால்டு டிரம்ப். கடந்த மார்ச் மாதம் பெருமையாகப் பேசியதை நினைவில் கொள்வோம். 




2020 ஜனவரி 22-ஆம் தேதி அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. அதை உறுதி செய்து இரண்டு நாட்களாகி விட்டன. அதன் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ’நாங்கள் கொரோனா வைரஸை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறோம்’ என்று கூறி இருக்கிறார்.

இப்போது அமெரிக்காவின் நிலைமை என்ன. பார்த்தீர்களா. சீனாதான் கவலைப்பட வேண்டும். நாங்கள் அல்ல என்று சொல்லி இரண்டு மாதங்களில் அங்கே அமெரிக்காவில் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சு. ஆனால் இப்படி தலை போகிற நேரத்தில் அப்படி பேசுவது முதிர்ச்சிக்கு அழகு அல்ல.

இப்போது உலகிலேயே கொரோனா எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2020 ஏப்ரல் 7-ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 368,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

 

இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் மருத்துவக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு. மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு. 

இப்போது அண்மையில் இந்தியாவுடன் மல்லுக்கட்டு. கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்சி குளோரோ குவின் (Hydroxychloroquine). அந்த மருந்தை அனுப்பி வைக்கும் படி அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டது. ஆயிரம் இரண்டாயிரம் மாத்திரைகள் அல்ல. நூறு மில்லியன் மாத்திரைகள். அதற்கு இந்தியப் பிரதமர் மறுப்பு தெரிவித்தார்.

எங்கள் நாட்டு மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டும்.  எங்களை நம்பி எத்தனையோ ஏழை நாடுகள் உள்ளன. அப்புறம் தான் மற்றவர்களுக்கு என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்ட அமெரிக்க அதிபருக்கு மோடியின் மீது கோபம். தலைக்கு மேல் ஏறிவிட்டது. அமெரிக்கா கேட்டபடி ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை இந்தியா கொடுக்க முன்வர வேண்டும். இல்லை என்றால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்து உள்ளார்.

அதாவது ’ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பவில்லை என்றால் பிரச்சினை இல்லை. அப்படியே இருக்கட்டும். ஆனால் அதற்கான எதிர் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை செய்து உள்ளார்.




இந்தியா சும்மா இருக்குமா. இப்படி பதில் கொடுத்தது. கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும்; இந்தியாவை நம்பி இருக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை இந்தியா வழங்க இருக்கிறது. ஆகவே ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று இந்தியா பதிலடி கொடுத்தது.

ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை இந்தியா பெரும் அளவில் தயாரித்து வருகிறது. இந்த மருந்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குளோரோ குவின் மருந்தைப் போன்றது. ஆனால் லேசான வேதியல் மாற்றங்களைச் செய்து இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், கொரோனாவைக் குணப்படுத்தும் என்பதற்கு சரியான ஆய்வு ஆதாரங்கள் இல்லை. 




இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (05.04.2020) இந்தியப் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாடினார். அப்போது, ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு உள்ள தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருகிறது.

பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் நல்ல நண்பர்கள். கடந்த 2020 பிப்ரவரி மாதம் அதிபர் டிரம்ப் இந்தியா வந்த போது அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் பட்டது.

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளன. இந்த நிலையில் ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து உள்ளது.

வெளிநாடுகளின் தேவைகளை இந்தியா நிறைவு செய்ய முடியும். அதிக அளவில் ஹைட்ராக்சி குளோரோ குவின் மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது.




இருந்தாலும் அந்த மருந்தைத் தயாரிப்பதில் கொஞ்சம் பிரச்சினை. அந்த மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் 70 விழுக்காடு சீனாவில் இருந்து வந்தது.

அண்மையில் அந்த மூலப் பொருளின் ஏற்றுமதியைச் சீனா நிறுத்தி விட்டது. இருந்தாலும் இந்தியா முழு நம்பிக்கையுடன் மருந்து தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவிற்கு ஒரு சல்யூட். சரி. இந்திய அமெரிக்கப் பிரச்சினையை விடுங்கள்.

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் இப்போது அமெரிக்க அதிபர் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ஏன் தெரியுங்களா. 2020 மார்ச் முதல் வாரம் வரை கொரோனா பிரச்சினையை அமெரிக்க அதிபர் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

விளையாட்டுத் தனமாக, சிறுபிள்ளைத் தனமாக ஓர் அதிபர் நடந்து கொண்டு இருக்கிறார் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் இப்போது விலாசித் தள்ளுகின்றன.

கொரோனா பிரச்சினையைப் பெரிது படுத்தினால் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி விடும். அப்புறம் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம். அப்படி ஒரு தூர நோக்கச் சிந்தனையில், கொரோனா விசயத்தைக் கிடப்பில் போட்டார்களாம்.

அந்த அமுக்கல் கிடப்பு வேலைதான் இப்போது பெரிய பிரச்சனையாகி விட்டது. பத்திரிகைகாரர்கள் சும்மா விடுவார்களா. அமெரிக்க அதிபர் இப்போது முள்வேலியின் முள்கம்பிகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்.

ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மாமன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதை நினைவிற்கு வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.04.2020

சான்றுகள்:

https://www.nytimes.com/2020/04/05/us/coronavirus-deaths-undercount.html

https://www.aljazeera.com/news/2020/04/recession-coronavirus-crisis-live-updates-200403233012626.html







08 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் தயாரிக்கும் தமிழ்ப் பெண்கள்

உலகத்தையே கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அந்தக் கொரோனாவையே அசைத்துக் காட்டும் அளவிற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் சாதனை செய்து வருகிறார்கள். உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.


அந்தப் பெண்கள் வீட்டில் இருந்தவாறே கடந்த சில நாட்களில் 2,500,000 மில்லியன் முகக் கவசங்களைத் தயாரித்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாடளாவிய நிலையில் 65,936 சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups) உள்ளன. இவற்றுள் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 1927 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் தான் இப்போது முகக்கவசங்கள் தயாரித்துச் சாதனை படைக்கிறார்கள்.

இருப்பினும் இந்தச் சுய உதவிக்குழுப் பெண்கள், தமிழகத்தில் மட்டும் சுமார்  5,000,000 முகக் கவசங்களைத் தயாரிப்பதாகப் பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. 



மருத்துவமனைச் சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர்; இதர அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் முகக் கவசங்களை இந்தச் சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கின்றனர்.

தவிர பொது மக்களின் பயன்பாட்டிற்கும் விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு முகக்கவசமும் 10 - 12 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. (மலேசியா ரிங்கிட்: 68 சென்)

இந்தியக் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய ஊரக வாழ்வாதார பிரிவு உள்ளது. அந்த அமைப்பின் கீழ் தமிழகத்தின் சுய உதவிக்குழுப் பெண்கள் (Tamil Nadu State Rural and Urban Livelihood Mission) முகக்கவசத் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.



அரசாங்கம் நடத்தி வரும் துணிக் கடைகள் திறக்கும் நேரத்தில், முகக் கவசம் தயாரிப்பதற்கான துணிகளை வாங்கிக் கொள்கிறார்கள். பகல் இரவு நேரங்களில் தையல் வேலைகள். சமயங்களில் இரவு முழுவதும் தையல் வேலைகள் தொடர்வதும் உண்டு.

பெண்களில் சிலர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் வந்து தைக்கிறார்கள். ஒரு சிலர் அவர்கள் வீடுகளில் ஓய்வு நேரங்களில் தைக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் ஏறக்குறைய 100 முகக் கவசங்களைத் தைத்து விடுகிறார்.

தமிழ்நாட்டுப் பெண்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார்கள். தமிழ்ப் பெண்களின் தார்மீகப் பண்புகள் தழைத்துப் பெருகட்டும். வாழ்த்துவோம். 



சான்று:https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1610981

படங்கள்: பி.பி.சி;
பத்திரிகை தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.04.2020








மலாயா தமிழர்கள் 6000 பேர் பலி - 1918 ஸ்பானிய காய்ச்சல்

தமிழ் மலர் - 08.04.2020

உலக வரலாற்றில் பல மோசமான தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்பானிய காய்ச்சல். 1918 -1919-ஆம் ஆண்டுகளில் 3 கோடி முதல் 5 கோடி பேர் வரை காவு கொண்டது. உலக மக்கள் தொகையில் 6 விழுக்காடு.

அதே 1918-ஆம் ஆண்டில் தான் டைடானிக் கப்பலும் மூழ்கிப் போனது. அந்தக் கப்பலில் இருந்த 1500 பேர் கடலில் மூழ்கிப் போனார்கள். அந்தக் கப்பலில் இறந்து போனவர்களைப் போல 25 கப்பல்கள் மக்கள் இங்கே மலாயாவில் இறந்து போனார்கள்.

 

1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மலாயாவின் மக்கள் தொகை 3,584,761. இவர்களில் ஸ்பானிய காய்ச்சலால் 34,644 பேர் இறந்து விட்டார்கள்.

மலாயாவின் உட்புறங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. அதனால் 40 ஆயிரம் என்று ஒரு முழுமையான கணக்குச் சொல்லப் படுகிறது.

ஏயிட்ஸ் நோய் அண்மைய காலத்து நோய். அந்த ஏயிட்ஸ் நோய் கடந்த 24 ஆண்டுகளில் கொன்ற மக்களைவிட ஸ்பானிய காய்ச்சல் 24 வாரங்களில் கொன்று குவித்தது தான் வரலாறு.

அப்போதைய புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும் போது அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் மலாயாத் தமிழர்கள் தாம். மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்ற சீனர்கள் சமூகம், மலாய்க்காரர்கள் சமூகங்களைக் காட்டிலும் இந்தியர்ச் சமூகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.


பேராக் மாநிலத்தில் மட்டும் 1000 இந்தியர்களில் 372 பேர் இறந்து இருக்கிறார்கள். மலாய்க்காரர்களில் 1000 பேருக்கு 129 பேர். சீனர்களில் 1000 பேருக்கு 158 பேர். அப்போது நம் மலாயா இந்தியர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 10 இலட்சம் இருக்கலாம்.

அந்தக் காலத்தில் மலேசியா என்பது மலாயா என்று அழைக்கப் பட்டது. ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா போன்ற மாநிலங்களில் நிறைய இரப்பர் தோட்டங்கள். நிறையவே தமிழ்நாட்டில் இருந்த வந்த தமிழர்கள்.

தமிழர்கள் பொதுவாகவே நல்ல உழைப்பாளிகள். காடுகளாய் இருந்த மலைக் காடுகளை வெட்டித் திருத்தி காபி தோட்டங்கள் இரப்பர் தோட்டங்களை அமைத்தார்கள். இப்படி காடுகளை அழிக்கும் போது மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் படுவதும் உண்டு. பல ஆயிரம் பேர் இறந்து இருக்கிறார்கள். நம்மிடம் புள்ளி விவரங்கள் உள்ளன. 


ஆனால் ஸ்பானிய காய்ச்சலால் தான் நிறைய தமிழர்கள் இறந்து போனார்கள். ஒட்டு மொத்த மலாயா மக்கள் தொகையில் 2 விழுக்காடு பேர் இறந்தார்கள் என்றால், அவர்களில் 6000 பேர் தமிழர்கள்.

அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் பலியானார்கள். நிபோங் திபால் பகுதியில் அதிகமான இழப்புகள்.

இரப்பர்த் தோட்டங்களில் வாழ்ந்த
மலாயாத் தமிழர்கள், வெளியுலகம் தெரியாமல் கொத்துக் கொத்தாக இறந்து போய் இருக்கிறார்கள் என்று அப்போதைய ’ஸ்ட்ரெயிட்ஸ் எக்கோ’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

ஒரே சமயத்தில் அவ்வளவு பேர் இறந்து போனதால் இரப்பர்த் தோட்டங்களில் சவப் பெட்டிகளுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுப் போனதாம்.


தோட்டத் தொழிலாளர்கள் கிடைத்த பலகைகள் கட்டைகளைக் கொண்டு அரக்கப் பரக்க் சவப்பெட்டிகளைச் செய்து இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவரின் உடலைப் புதைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அதே வீட்டில் இன்னொருவர் இறந்து போய் இருப்பாராம். இப்படி ஒரே குடும்பத்தில் பலர் அடுத்தடுத்து இறந்து போன நிகழ்ச்சிகள் உள்ளன.

ஏன் தமிழர்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டார்கள். அதற்குக் காரணம் இவர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்து இருக்கிறார்கள். இரப்பர் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் மிக நெருக்கமான வீடுகள். அதனால் தான் பிரச்சினை.

இந்த வீட்டில் உள்ள சாப்பாடு அடுத்த வீட்டுக்குப் போகும். அடுத்த வீட்டுச் சாப்பாடு இந்த வீட்டுக்கு வரும். ஆக இந்த மாதிரியான உணவுப் பரிமாற்றத்தினால் தான் ஸ்பானிய காய்ச்சல் கிருமிகள் உக்கிரத் தாண்டவம் ஆடி இருக்கின்றன.


அது மட்டும் அல்ல. அப்போதைய இரப்பர் தோட்டத்து லயன்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரசிக் கொண்டு இருந்தன. அதனால் ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்று என்றால் அந்தத் தொற்று அந்தக் குடும்பத்தவரைப் பாதித்தது. பக்கத்தில் இருந்த குடும்பத்தைப் பாதித்தது. அப்படியே மற்ற மற்ற குடும்பங்களுக்கும் பரவிச் சென்று வெகு வேகமாக மற்றவர்களையும் பாதித்து இருக்கிறது. 

பேராக் மாநிலத்தில் பத்து காஜா நகருக்கு அருகில் கெல்லிஸ் காசல் எனும் மர்ம மாளிகை. அதைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 70 பேர் ஸ்பானிய காய்ச்சலால் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.

1918-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. ஏதாவது ஓர் இந்துக் கோயிலைக் கட்டினால் மர்ம நோய் பிரச்சினை தீரும் என்று தோட்டத் தொழிலாளர்களும் மற்ற மற்ற வேலைக்காரர்களும் கெல்லி காசல் முதலாளியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொழிலாளர்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.


காளியம்மன் கோயிலைக் கட்டலாம் என்று ஒரு சிலர் முதலில் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வில்லியம் கெல்லி ஸ்மித் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

அந்தச் சமயத்தில் பத்து காஜா பகுதியின் சுற்று வட்டாரத் தோட்டங்களில் பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களாகவே இருந்து இருக்கின்றன.

அத்துடன் கெல்லிஸ் மாளிகையைக் கட்டுவதற்குத் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்களில் பலர் மாரியம்மன் கோயிலைத் தான் கட்ட வேண்டும் என்று பிடிவாதம் செய்து உள்ளனர். அதுவும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்.

கோயில் வேலைகள் தொடங்கின. கோட்டையில் இருந்து 1500 மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். 


கெல்லிஸ் காசல் என்பது மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கலை மாளிகை. மலையகத்துச் சுவட்டில் மறைக்க முடியாத ஒரு மர்ம மாளிகை. தென்னகத்துச் சிற்பத்தில் மறுக்க முடியாத ஒரு மதில் மாளிகை. இது என்னுடைய வர்ணனை.

பத்துகாஜா நகரில் இருந்து கோப்பேங் நகருக்குப் போகும் பாதையில் இந்த மாளிகை இன்றும் மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith) எனும் ஆங்கிலேயர்  1915-ஆம் ஆண்டில் அந்த மாளிகையைக் கட்டத் தொடங்கினார்.

அந்த மாளிகையை அழகிய கோட்டை என்றும் சொல்லலாம். கெல்லிஸ் காசல் (Kellie's Castle) எனும் பெயர்ச் சொல்லில் காசல் எனும் சொல் வருகிறது. கவனீத்தீர்களா. காசல் என்றால் கோட்டை.


இந்த மாளிகை முற்றாக முற்றுப் பெறவில்லை. பாதியிலேயே கைவிடப் பட்டது. பாழடைந்து போய் கிடந்தது. அண்மையில் புதுப்பிக்கப்பட்டு ஒரு சுற்றுலா மையமாகக் காட்சி அளிககின்றது.

ஒரு செருகல். பலருக்கும் தெரியாத ஒரு தகவல். கெல்லிஸ் மாளிகையைக் கட்டிய வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான் மலேசியாவில் முதன்முதலாக ஓர் இந்து ஆலயத்தை உருவாக்கிய ஆங்கிலேயர். அதுவும் தன் சொந்தப் பணத்தில் கட்டி இருக்கிறார்.

அத்துடன் பத்து காஜா கிந்தா கெலாஸ் தோட்டத்தில் ஒரு தமிழ்ப் பள்ளியையும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றிலும் இந்த ஆங்கிலேயர் தடம் பதிக்கின்றார். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

(சான்று: http://www.mynicegarden.com/2013/07/kellies-castle-part-2-story-of-william.html)

1918-ஆம் ஆண்டில் மலாயாவை ஸ்பானிய காய்ச்சல் தாக்கத் தொடங்கியதும் தோட்டங்களில் இருந்த தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன. மலாயாவில் அப்போது 200 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 

 

1852-ஆம் ஆண்டில் இருந்து 1937-ஆம் ஆண்டு வரை மலாயாவுக்கு 20 இலட்சம் இந்தியர்கள் மலாயாவுக்கு வந்து இருக்கிறார்கள். நினைவு படுத்துகிறேன் பெரும்பாலோர் தமிழர்கள். அதனால் மலாயாவில் இருந்த எல்லா இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்து இருக்கிறார்கள்.

இவர்கள் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்தார்கள். சாலைகள் அமைத்தார்கள். இரயில் பாதைகள் அமைத்தார்கள். விமானத் திடல்கள் அமைத்தார்கள்.

(சான்று: Journeys: Tamils In Singapore, 1800-Present, by Murugaian Nirmala)

1918-ஆம் ஆண்டு ஸ்பானிய காய்ச்சல் தாக்கிய போது பேராக் மாநிலத்தின் மக்கள் தொகை 605,964. இவர்களில் 29,882 பேர் இறந்து விட்டார்கள். ஒரே நாளில் 50 பேர் இறந்து சம்பவங்களும் உள்ளன.

ஈப்போ, பத்து காஜா, கம்பார், தைப்பிங், கோலாகங்சார் இரயில் சேவைகள் திடீரென்று நிறுத்தப் பட்டன. ஏன் என்றால் இரயில் பணியாளர்கள் பலர் ஸ்பானிய காய்ச்சலால் இறந்து விட்டார்கள்.

இன்னும் ஒரு தகவல். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் மட்டும் 7,000,000 பேர் இறந்து இருக்கிறார்கள்.




இப்போது நமக்கு எவ்வளவோ நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. வெண்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசக் கருவிகளின் உதவிகள் இருக்கின்றன. இருந்தும் இறந்தவர்களின் என்ணிக்கை இலட்சங்களைத் தாண்டிப் போகின்றன. கொரோனா செய்யும் உயிர்ப் பலிகளைத் தான் சொல்கிறேன்.

அன்றைக்கு எந்த வசதிகளும் இல்லாமல் அப்பாவி மக்கள் அனாதைகளாய் இறந்து போனதை நினைக்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. அந்த வாயில்லா பூச்சிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்த பாழாய்ப் போன இந்த மனம் துடிக்கிறது..


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Sun Dram மலாயாவில் 1918 ஆம் ஆண்டு... இந்த நாட்டுக்காக உழைக்க வந்தவர்களில்... மிக அதிகத் தமிழர்கள் நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்துள்ள சம்பவத்தைக் கேட்கும் போது... இந்த நாட்டில் பிழைக்க வந்து இப்படி பல துன்பங்களை அனுபவித்து உள்ளார்கள் என்பது... மனம் மிக வேதனை படுகிறது... இப்படிப்பட்ட தகவல்கள்... பிற்காலத்து மலேசிய சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக நம் சரித்திர புத்தகங்களில் இடம்பெற வேண்டும்... கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி. ஆவணப்படுத்த வேண்டியது நம் கடமை.

Sathya Raman >>> Sun Dram அட நீங்க வேற சார். ஏற்கனவே இந்நாட்டில் நமது வரலாற்று பதிவுகள் பலவற்றை அழித்து அட்ராஸே இல்லாமல் ஆக்கி வருகிறார்கள்.இனி வரும் காலத்தில் புதிதாக வரலாற்று பதிவுகளோ,சரித்திர பதிவுகளையோ இடம்பெறும் வாய்ப்பு மிக குறைவே 😥

Muthukrishnan Ipoh உண்மைதான்... பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாற்றுச் சிதைவுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றம் காண்கின்றன...

இருப்பினும் அசல் மலாயா வரலாற்று ஆவணங்கள்; மலாயா தமிழர்கள் வரலாறு; ம்லாயா பிரிட்டிஷார் வரலாறு; போன்றவை... டிஜிட்டல் இலக்க முறையில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன... உள்நாட்டில் உள்ள வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் நம்பகப் பாத்திரங்களாக அமையவில்லை...

Sathya Raman >>> Muthukrishnan உண்மைதான் சார். வருங்காலங்களில் நம் முன்னோர்கள் இந்நாட்டிற்கு ஏன், எதற்காக, எப்படி கொண்டு வரப் பட்டார்கள், அவர்கள் இந்நாட்டை வளப்படுத்த செய்த வேலைகள், தியாகங்கள் சிந்திய ரத்தம், வியர்வைகள், பெற்ற கொடுமைகளை, வேதனைகளை எந்த வரலாற்றிலும் பதிவு பண்ணாமலேயே இந்த பூமி அவற்றை நன்றாகவே படம் பிடித்து வைத்திருக்கும்.

நமது தாத்தா பாட்டி அப்பா, அம்மா அல்லது நமக்கே இந்நாட்டில் நமது வரலாறு எத்தகையது என்பதை நம் குழந்தைகளிடம், பேரப் பிள்ளைகளிடம் சொல்லி வளர்த்து வரணும்.

பசுமரத்தாணிப்போல் நமது வரலாற்றுக்களை சிறுவர்கள் மனதில் சிறுகச் சிறுக செதுக்கணும். அதற்கப்புறம் நம்முடைய சரித்திரத்தை எந்த சதிநாசக்காரர்களாலும் அசைக்க முடியாது. முயற்சிப்போம் நம் வீட்டு விடலைகளிடம் நம்மைப் பற்றிய விபரங்களை நலமே பக்குவமாய் பகிர்வோம்.🙏

Muthukrishnan Ipoh >>> Sathya Raman ஓர் எடுத்துக்காட்டு... பரமேஸ்வரா மதம் மாறினார் என்று பாடப் புத்தகங்கள் சொல்கின்றன... இல்லை என்று நான் வரலாற்று ஆவணங்களை முன் நிறுத்தி வாதிட்டேன். மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் கூ கே கிம்...

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் இணைய நூலகத்தில் மிங் வம்சாவளியினரின் 1400-ஆம் ஆண்டு ஆவணங்களை மீட்டு எடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அதன் பிறகு தான் பர்மேஸ்வரா இறக்கும் போது ஓர் இந்துவாக இறந்தார் என்பதை உறுதி படுத்தினோம். இப்படி நிறைய எதிர் வினைகளைச் சந்தித்துச் சமாளித்து இருக்கிறேன்... பரமேஸ்வரா ஆய்வு நூலைக் கொண்டு வந்துவிட வேண்டும்... எனக்கும் வயது ஆகிறது...

M R Tanasegaran Rengasamy இந்த மண்ணுக்காக தமிழர்கள் கொத்துக் கொத்தாக அன்றே மாய்ந்தார்கள். இன்று நுனிப் புல் மேய வந்ததுகள் நம்மின் விசுவாசம் பற்றி பேசுதுங்க. ஓர் இருண்டகால வரலாற்றுப் பதிவு.

Muthukrishnan Ipoh நிழலின் அருமை விரைவில் தெரியும் சார்... இருப்பினும் நம்முடைய தமிழர் வரலாற்று ஆவணங்கள் அதிக அளவில் சிதைக்கப்பட்டு விட்டன...

Kanna CK Kanna >>> M R Tanasegaran Rengasamy.
கவலைப் படாதீர் தம்பி ' ,, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும் ...

மோஹன் Mohan தோட்டத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலி.... அது ஒரு அழகிய பயணம்

Kumar Murugiah Kumar's >>> மோஹன் Mohan அந்த தோட்ட ஏக்கம் இன்னும் இருக்கிறது, மனம் உள்ளே அழுகிறது !

Muthukrishnan Ipoh உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்...

Sathya Raman >>> மோஹன் Mohan அன்றைய தோட்ட மக்களிடம் சூடு வாது இருந்ததில்லை.பெரும்பாலும் நேர்மை மிக்கவர்களாக,மகிழ்ச்சி மிக்கவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.சொற்ப சம்பளம் என்றாலும் ஒருவருக்கொருவர் அந்யோனியமாக பழகிய விதம் இன்று சொந்த உறவுகளிடம் கூட கிடைப்பதில்லை.

வே சங்கர் நான் நோர்டனல் தோட்டம் பஞ்ஞர் மூவார் என்ற தோட்டப்புறத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். ஆதலால் தோட்டப்புற வாழ்க்கையை பற்றி நன்கு அறிவேன்.அது ஓர் அழகான வாழ்க்கை என்றும் மனதைவிட்டு நீங்காத நினைவுகள்.

Muthukrishnan Ipoh தோட்ட வாழ்க்கை இனிமையான வாழ்க்கை...

Rajendran Pakirisamy valthukal sir

Thanabaal Varmen நெஞ்சம் கனக்கிறது!!!

Krishna Ram Thanks sir...

Jainthee Karuppayah அரிய கருத்துக்கள் அடங்கிய தொகுப்பு... பள்ளிப் பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டுமென நினைக்கிறேன்.

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...



நொதியம் என்றால் என்ன?

ஆங்கிலத்தில் என்சைம் (enzyme) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த என்சைமிற்குத் தமிழில் பெயர் நொதியம். இந்தத் தமிழ்ச் சொல்லை அதிகமாய்க் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். நாம் அடிக்கடி அதிகமாகப் பயன்படுத்துவதும் இல்லை. அது தான் காரணம்.

நொதியம் என்பது ஒரு புரதப் பொருள். ஆங்கிலத்தில் புரட்டீன். அந்தப் புரதத்துடன் சில வகையான வினையூக்கிகள் உள்ளன. வினையூக்கி (Catalysts) என்றால் ஒரு செயலை வேகமாகச் செயல்பட வைக்கும் ஓர் ஊக்கப் பொருள். 




இவை எல்லாம் நம் உடலில் நமக்குத் தெரியாமலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. கவலை வேண்டாம்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நொதியங்கள், மனித உடலில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் கவலைப் படுவதே இல்லை. அப்படி ஒரு பொருள் இருப்பது தெரிந்தால் தானே கவலைப் படுவதற்கு...

உடலுக்கு வாசனை அடிப்பதோடு சிலருக்கு வேலை முடிந்தது. உடலுக்குள் என்னென்ன உறுப்புகள் இருக்கின்றன. அவை எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை. அது தவறு. பொது அறிவு விசயங்களைப் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களின் உடல்களிலும் இந்தப் புரதப் பொருள் உள்ளது.

இந்த நொதியப் பொருள் இல்லை என்றால் நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாம் குடிக்கும் தண்ணீர் சிறுநீராக மாறாது. இரத்தம் வேலை நிறுத்தம் செய்து விடும். ஒரு நிமிடத்திற்கு உடம்பு பேர் போடாது. நாம் உயிர் வாழவே இயலாது.


ஆக நம் உடலில் நிகழும் வேதியியல் செயல்களை விரைவாகச் செய்யத் தூண்டும் ஒரு வினையூக்கி தான் அந்த நொதியம். நம் உடலில் ஏறக்குறைய 5000 நொதியங்கள் இருப்பதாகக் கணக்குப் போட்டு இருக்கிறார்கள். நம்ப முடிகிறதா?

இவை தனித்துவம் (specificity) வாய்ந்தவை. ஒரு நொதியம் ஒரு வேலையைத் தான் செய்யும். நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்திற்கும் இந்த நொதியங்கள் கண்டிப்பாகத் தேவை. நொதியம் இல்லை மனித உடல் இயங்கவே இயங்காது.

நொதியம் எனும் ஒரு புதிய சொல்லை இன்றைக்குத் தெரிந்து கொண்டீர்கள். நாளைக்கு ஒரு புதிய சொல். அனைவருக்கும் வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Parimala Muniyandy காலை வணக்கம் அண்ணா. தினம் ஒரு சொல் கேட்க தெரிந்து கொள்ள ஆசைதான். இன்று நொதியம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி. 🙏

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்... கருத்துகளுக்கு நன்றி...

Mageswary Muthiah இனிய காலை வணக்கம் மறந்தவற்றை நினைவூட்டியதற்கு நன்றி.

Muthukrishnan Ipoh  மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Ranjanaru Ranjanaru: Arumai vilakkam Anna (அருமை விளக்கம் அண்ணா)

Muthukrishnan Ipoh வணக்கம் ரஞ்சன்... இனிய வாழ்த்துகள்

Samugam Veerappan காலை வணக்கம் சகோதரரே.

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்.... இனிய வாழ்த்துகள்...

Ranjanaru Ranjanaru

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி

Doraisamy Lakshamanan வாழ்த்துகள் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே!
நாளும் ஒரு தமிழ்ச் சொல் விளக்கம் நாள்தோறும் தொடரட்டும் இணையம் வழி உலகளவில்!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Balamurugan Balu வணக்கம் ஐயா நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Barnabas நன்றி. இனிய காலை வணக்கம்.

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Amz Harun நன்றி...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி....

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh நன்றி.. இனிய வாழ்த்துகள்

Meena Govindan Tq sir for explain d meaning

M R Tanasegaran Rengasamy 👏👏 நல்ல முயற்சி. நாளுக்கொரு சொல். ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.

Sheila Mohan அருமையான விளக்கம் சார்... மிக்க நன்றி ...

Tanigajalam Kuppusamy நொதியம் பற்றிய விளக்கம் சிறப்பு. அதோடு நக்கலாக அடித்த ஜோக்குகளும் பிரமாதம். 😂😂😂😂

ViJaya LetchuMy
வணக்கம் ஐயா. உங்கள் கட்டுரை மூலமாக வினையூக்கி மற்றும் நொதியம் என்ற அருஞ்சொற்களைக் கற்றுக் கொண்டேன் .நன்றி

Vanaja Ponnan 










Kumaran Mari
நொதியம் மற்றும் வினையூக்கி என்ற இரு புதிய சொற்களை இன்று கற்றுக் கொள்ள வாய்ப்பளித்து உள்ளீர்கள்... நன்றி ஐயா

Magendran Rajundram புதிய சொல் அறிமுகத்துக்கு நன்றி ஐயா. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். முன்பு தினக்குரல் பத்திரிகையில் இணையம் சம்பந்தமான கேள்வி பதில் பகுதியில்... எல்லா ஆங்கிலச் சொல்லையும் குறிப்பாக Facebook போன்ற நிறுவனங்கள் பெயர்களைத் தமிழ் படுத்துவது அவசியம் இல்லை என்று கூறி உள்ளீர்கள். தற்சமயம் Corona Virus நோயக்கு தமிழில் பெயர் வைத்து இருப்பது பற்றி உங்கள் கருத்து...

Manickam Nadeson செரிமானப் பொருள் வகை.

Muthukrishnan Ipoh கொரோனா என்பது ஆங்கிலப் பெயர்ச் சொல். அதைத் தமிழ்ப்படுத்த இயலாது. ஆனால் வைரஸ் என்பதற்கு ஏற்கனவே தீநுண்மி என்று தமிழில் ஒரு கலைச் சொல் உள்ளது.

இருப்பினும் கொரோன வைரஸ் எனும் சொல் தொடர் பரவலாகி விட்டதால் அதையே வழக்கச் சொல்லாகப் பயன்படுத்தி வருகிறோம். கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Magendran Rajundram >>> Muthukrishnan Ipoh நன்றி ஐயா. மகுடக்கடு நச்சில் மற்றும் கோறனி நச்சில் என்று நண்பர் பயன்படுத்தி வருகிறார். ஆதலால் கேட்டேன்.

Muthukrishnan Ipoh >>> Magendran Rajundram நன்றிங்க... ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது அனைவருக்கும் புரியும் படியாக இருக்க வேண்டும். மகுடக்கடு நச்சில் - கோறனி நச்சில் என்று சொல்லும் போது சற்றுக் குழப்பமாகவே உள்ளது.

Jaya Brakash ஆசிரியர் கட்டுரை பதிவு மிக மிக பயன் அளிக்கும் வகையில் உள்ளது🙏 மிக்க நன்றி ஐயா அவர்களுக்கு.

Muthukrishnan Ipoh வணக்கம் ஜெயபிரகாஷ்... வாழ்த்துகள்...

Balamurugan Bala "நொதியம்" வார்த்தைக்கும் அதன் செயல்பாட்டை விளக்கியதற்கும் நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Poovamal Nantheni Devi பள்ளிக் காலத்தில் படித்தது நினைவி்ல் வந்து போகிறது.

Vijayaletchmy Sinna Thamby அருமையான விளக்கம் ஐயா. நன்றி

பெ.சா. சூரிய மூர்த்தி
நன்றி ஐயா.

Vani Yap மறந்து போன விசயங்கள், ஞாபகத்தில் கொண்டு வந்து உள்ளீர்கள் சகோதரே.. சிறப்பு