12 ஏப்ரல் 2020

செயற்கை சுவாசப்பை வரலாற்றில் மலேசியா சாதனை

தமிழ் மலர் 12.04.2020

நோய்க் கிருமிகள் சாதி சனம் பார்ப்பது இல்லை. சமயச் சடங்குகள் பார்ப்பது இல்லை. மதம் மார்க்கம் பார்ப்பது இல்லை. ஆசா பாசங்கள்; ஆத்தா அப்பத்தா; கண்ணாளம் கருமாதி என்று எதையுமே பார்ப்பது இல்லை.

அவற்றுக்குத் தெரிந்த ஒரே விசயம். ஒரே சந்தோஷம். ஒன்னே ஒன்னுதான். வந்தேன் பார்த்தேன் கவிழ்த்தேன். ஐ டோண்ட் கேர் என்று போய்க் கொண்டே இருக்கும். அம்புட்டுத்தான்.




எப்போதும் எங்கேயும் எவரையும் எப்படியும் நோய்க் கிருமிகள் தாக்கலாம். அந்தத் தாக்கத்தினால் அவரின் உடல்நலம் பாதிக்கப் படலாம். அந்தப் பாதிப்பினால் அவரின் இயல்பான உடல் இயக்கங்கள் சுணங்கிப் போகலாம்.

மனித உடலில் பல முக்கியமான இயக்கங்கள் உள்ளன. எல்லா இயக்கங்களும் முக்கியமானவை தான். ஓர் இயக்கம் இல்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கியமானது. எதையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. அவற்றுள் முக்கியமானது நுரையீரல் இயக்கமாகும்.

நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவர் நன்றாக மூச்சுவிட முடியாது. மூச்சு அடைக்கும். ஒரு கட்டத்தில் இழுத்துப் பறிக்கும் நிலையில் உச்சக்கட்ட மூச்சுத் திணறல் ஏற்படலாம்.


அந்த மாதிரி முழுமையான மூச்சுத் தடை ஏற்படும் போது அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப் படுகிறது. செயற்கை சுவாசக் கருவிக்கு வெண்டிலேட்டர் என்று பெயர்.

அந்த வகையில் செயற்கையான முறையில் மூச்சுக் காற்று வழங்கும் கருவியே வென்டிலேட்டர் ஆகும். அதாவது செயற்கையாகச் செயல்படும் ஒரு மூச்சுக்கருவி.

இயற்கையாக ஒருவர் மூச்சு விட முடியாமல் தவிக்கும் போது இந்த வென்டிலேட்டர், உயிர்க் காப்பான் தோழனாக உயிர் கொடுக்கிறது. அதாவது செயற்கை முறையில் சுவாசிக்க வைப்பதே வெண்டிலேட்டர் எனும் மூச்சுக் கருவியின் முதன்மைப் பணியாகும்.

ஒருவரின் ஒட்டுமொத்த சுவாசச் செயல்பாட்டை இயக்கச் செய்யும் கருவி என்றுகூட சொல்லலாம். இதை ஒரு கருவி என்று சொல்வதைவிட நாலும் தெரிந்த நல்லையன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். 




ஏன் தெரியுங்களா. ஒரு கருவி என்பது ஒரு வேலையை மட்டுமே செய்யும். ஆனால் இந்த வெண்டிலேட்டர் அப்படி அல்ல. ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்கிறது. வெளியே இருந்து காற்றை இழுக்கிறது. அந்தக் காற்றில் உள்ள உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கிறது.

அந்த உயிர்க்காற்றைக் குழாய் வழியாக நுரையீரலுக்குள் செலுத்துகிறது. அப்புறம் நுரையீரலுக்குள் இருக்கும் கரியமிலக் காற்றை இழுத்து குழாய் வழியாக வெளியே தள்ளுகிறது. நுரையீரல் எவ்வளவு வேகத்தில் வேலை செய்கிறது என்பதை கண்காணிக்கிறது.

வெண்டிலேட்டர் இயந்திரத்தில் ஈரப்பதமூட்டி (Humidifier) என்கிற மற்றும் ஒரு துணைக் கருவியும் இருக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும் ஈரப் பதத்தையும் நோயாளியின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கின்றது.




நுரையீரல் கொஞ்சம் தாமதமாக வேலை செய்தால் எச்சரிகை மணியை எழுப்புகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளியின் அறைக்கு வெளியே இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தியை அனுப்புகிறது. சமயங்களில் மருத்துவரின் கைப்பேசிக்கும் செய்தி அனுப்புகிறது.

ஒரு நோயாளியின் சுவாசப் பைகளில் உயிர்க் காற்றின் அளவு குறைந்தால் உடனடியாகக் கூடுதலான உயிர்க் காற்றை வலுக்கட்டாயமாக உட்செலுத்துகிறது.

நோயாளியின் இரத்த அழுத்ததைக் கவனித்து, அவரின் உடலுக்குள் எவ்வளவு உயிர்க்காற்று செலுத்த வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கிறது.

ஒரு நுரையீரல் ஈர்க்க வேண்டிய காற்றைச் சரியாக எடை போட்டு, செயற்கை மூளைப் பயன்படுத்தி அந்த இயந்திரம் இயங்குகிறது. மனித மூளை எப்படி யோசிக்குமோ அதே போலத் தான் இந்த வெண்டிலேட்டர் இயந்திரமும் யோசிக்கிறது. இப்போது உள்ள வெண்டிலேட்டர்களுக்குப் பக்கா செயற்கை மூளை.




இந்த வெண்டிலேட்டர் முதலில் சுவாசப் பைக்குள் காற்றைப் புகுத்துகிறது. அப்புறம் அங்கே ஏற்கனவே இருக்கும் கெட்ட காற்றை உறிஞ்சி வெளியே தள்ளுகிறது. பார்த்தீர்களா. ஒரே ஒரு கருவி. எத்தனை வேலைகளை ஒரே சமயத்தில் செய்கின்றது. அதிசயம். ஆனால் உண்மை.

ஒன்றை இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். ஒருவருக்கு செயற்கைச் சுவாசப்பை பொருத்தப்பட்டு இருக்கிறது என்றால் அவரின் சுவாசப்பை சரியாக இயங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கருவி எப்படி இந்த மாதிரி அசுரமான வேலைகளைச் செய்கிறது என்று வியந்து போகலாம். அவை மனிதனின் அபாரமான அறிவியல் தொழில்நுட்பத் திறமைகள் தான். மனிதன் கண்டுபிடித்த அபூர்வமான தொழில்நுட்ப இயந்திரங்களில் வெண்டிலேட்டர் இயந்திரமும் ஒன்றாகும்.

(Modern ventilators are computerized microprocessor-controlled machines)

சுருக்கமாகச் சொன்னால் இயற்கை முறையில் சுவாசிக்க முடியாமல் போகும் போது, வெண்டிலேட்டர் கருவி ஒரு நோயாளிக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்குகிறது. 




எடுத்துக்காட்டிற்கு ஒரு கொரோனா கோவிட் நோயாளியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எதிர்த்துப் போராட முடியவில்லை; தவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது அவருக்கு வெண்டிலேட்டர் இயந்திரத்தின் உதவியை வழங்குகிறார்கள். இந்த வெண்டிலேட்டர் இயந்திரம் அவரைப் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு சற்றே கால அவகாசம் வழங்குகிறது.

அதன் மூலம் அவர் பழைய நிலைக்குத் திரும்பினால் அவர் பிழைத்துக் கொண்டதாகப் பொருள். இல்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் 80 விழுக்காட்டினர் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணம் அடைகின்றனர். அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை கூடுதலாக இருப்பதால் தப்பித்துக் கொள்கின்றனர்.

ஆனால் அவ்வாறு பாதிப்பு அடைந்த ஆறு பேரில் ஒருவரின் உடல்நிலை அளவு கடந்து மோசம் அடைகிறது. நுரையீரலில் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இவை உலக சுகாதார நிறுவனம் சொல்லும் செய்திகள். 




மிக மிகப் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் செயல்பாடு கட்டம் கட்டமாகப் பலவீனம் அடைகிறது. இந்தச் சமயத்தில் நோயாளியின் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புத் தன்மை விழித்துக் கொள்கிறது.

எதிரிகள் நுழைந்து விட்டதாக நினைத்துக் கொண்டு தீவிரமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் இரத்த குழாய்கள் விரிவு அடைகின்றன. அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் செல்கள் உற்பத்தி ஆகின்றன. அப்படியே இரத்தத்தில் கலக்கின்றன. ’விட்டேனா பார்’ என்று பாதிக்கப்பட்ட நுரையீரலுக்குப் படை எடுகின்றன.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஏற்கனவே நுரையீரலில் கிருமிகள் நுழைந்து மைக்கல் ஜேக்சன் மாதிரி பிரேக் டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கின்றன. அந்த ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நுரையீரல் தடுமாறிக் கொண்டு நிற்கிறது.

எதிரிகளால் நுரையீரல் மேடை சரிந்து விழும் நிலை. அதே சமயத்தில் உடலின் தற்காப்புப் படையின் பெரிய ஒரு படையெடுப்பு. நோய் எதிர்ப்புத் தன்மை மேலும் தற்காப்பு வீரர்களை மேலும் மேலும் அனுப்பி வைக்கிறது. ஆக நுரையீரலில் மூன்றாவது அணு ஆயுதப் போர் நடக்கிறது என்று ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள்.




இந்தச் சமயத்தில், இரு தரப்பு மோதல்களினால் நுரையீரலுக்குள் அதிகப் படியான திரவங்கள் கோர்த்துக் கொள்கின்றன. தண்ணீர் கோர்த்துக் கொள்கிரது. இதனால் தான் நோயாளி சுவாசிக்கச் சிரமப் படுகிறார்.

அடுத்தக் கட்டமாக உடலுக்குத் தேவையான உயிர்க்காற்றின் (ஆக்சிஜன்) அளவும் குறையத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படும் போது தான் வென்டிலேட்டர் உச்சக் கட்டத்திற்குப் போகிறது. அதிக அளவு ஆக்சிஜன் கொண்ட காற்றை நுரையீரலுக்குள் வலுக்கட்டாயமாகச் செலுத்துகிறது.

இன்னும் ஒரு விசயம். வென்டிலேட்டரில் ஈரப்பதமூட்டி எனும் மேலும் ஒரு துணைக்கருவி உள்ளது. காற்றில் உள்ள வெப்பம்; ஈரப் பதம்; இரண்டையும் நோயாளியின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சரிசமமாக மாற்றி அமைக்கின்ற கருவி. அற்புதமான துணைக் கருவி. கண்டுபிடித்தவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும். வெண்டிலேட்டர் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

1928-ஆம் ஆண்டில் போலியோ நோயினல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதன்முதலில் வெண்டிலேட்டர்களைப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்துப் பழைய மோடல்கள். டிரிங்கர் ரெஸ்பிரேட்டர் என்று பெயர் (Drinker respirator). 




இந்தக் கட்டுரையில் வெண்டிலேட்டர் எனும் சொல்லையே பயன்படுத்துகிறேன். செயற்கைச் சுவாசக் கருவி என்று நினைவில் கொள்வோம்.

பின்னர் 1931-ஆம் ஆண்டு ஜான் எமர்சன் (John Haven Emerson) என்பவர் பழைய வெண்டிலேட்டருக்கு மாற்றங்களைச் செய்தார். 1937-ஆம் ஆண்டு எட்வர்ட் பூத் (Edward Both) என்பவர் மெல்லியப் பலகைகளைக் கொண்ட ஒரு வெண்டிலேட்டரைத் தயாரித்தார். அதற்கு ‘போத் பார்ட்டபிள் கேபினட் ரெஸ்பிரேட்டர் (Both Portable Cabinet Respirator) என்று பெயர். அதன் பின்னர்

டிரகர் (Drager EV-A);

பைபாசிக் குயிராஸ் (Biphasic Cuirass Ventilation);

ஸ்டர்மி ஆர்ச்சர் (Sturmey-Archer);

புரித்தான் பென்னட் (Puritan Bennett 7200);

பேர் 1000 (Bear 1000);

செர்வொ 300 (SERVO 300);

ஹமில்டன் வெலார் (Hamilton Veolar);


என பற்பல வெண்டிலேட்டர்கள் புழக்கத்திற்கு வந்தன.

இப்போது அதி நவீனமான எம்.ஐ.டி. இ-வெண்ட் (MIT E-Vent Unit 002) எனும் வெண்டிலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். உலகளாவிய நிலையில் கொரோனா வந்த பிறகு தான் அதுவும் 2020 மார்ச் 21-ஆம் தேதியில் தான், இந்த வெண்டிலேட்டர் உருவாக்கப் பட்டது. விலை மலிவு. செயல்பாட்டுத் திறன் அதிகம். சரி.




(MIT Emergency Ventilator (E-Vent) Project - https://e-vent.mit.edu/)

பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப் படுவது இல்லை. எப்போதும் கிடைக்கும் உயிர்க்காறே (ஆக்சிஜன்) போதும்.

இருப்பினும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குக் கண்டிப்பாக வெண்டிலேட்டர்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது.

எந்த நேரத்திலும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் நோயாளியின் மூச்சு நின்று போகலாம். முன் ஏற்பாடாகத் தான் வெண்டிலேட்டர்களை இணைத்து விடுகிறார்கள்.

எல்லா மருத்துவ மனைகளிலும் எல்லா தனியார் மருத்துவ மனைகளிலும் வென்டிலேட்டர் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும்.




மலேசியாவின் 26 அரசு பொது மருத்துவமனைகளில் (Intensive Care Units (ICU) 925 வெண்டிலேட்டர்கள் உள்ளன. தீவிரச் சிகிச்சை வார்டுகள் 300 உள்ளன. தீவிரச் சிகிச்சை வார்டுகளில் 3,400 படுக்கைகள் உள்ளன. உலகத் தரம் வாய்ந்த தீவிரச் சிகிச்சைக் கவனிப்புகள்.

சராசாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் 40 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையிலும் உள்ளன.

மேலும் 500 வெண்டிலேட்டர்களைச் சீனாவிடம் ஆர்டர் செய்தார்கள். அவற்றில் கடந்த 2020 ஏப்ரல் 5-ஆம் தேதி 94 வெண்டிலேட்டர்கள் வந்து சேர்ந்து விட்டன. அது தவிர மேலும் சில நாடுகளிடம் ஆர்டர் செய்து இருகிறார்கள்.

சில நாடுகளின் பெரிய பெரிய மருத்துவமனைகளில் 3, 4 வெண்டிலேட்டர்களை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த விசயத்தில் மலேசியாவை உண்மையிலேயே பாராட்டியே ஆக வேண்டும். முன்னெச்சரிகையுடன் விவேகத்துடன் மலேசியச் சுகாதார அமைச்சு நன்றாகச் செயல் படுகிறது. பாராட்டுகள். வாழ்த்துகள். 




கடைசியாக ஓர் உண்மை. ஆச்சரியம். ஆனால் பெருமைப்பட வேண்டிய உண்மை.

உலகளாவிய கொரோனா தாக்கத்தில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளில் மலேசியாவும் ஒரு நாடாகத் திகழ்கிறது. அந்த அளவுக்கு நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள்.

இந்தப் பெருமையில் ஒரு சிலரின் திமிர்த் தனங்கள் வேதனை அளிக்கின்றன. சட்டத்தை மதிக்காமல் புத்தி கெட்டு ஊர் சுற்றித் திரிகின்றார்கள். கேட்டால் இது எங்கள் கோட்டை என்கிறார்கள்.

கொரோனா தொடையைத் தட்டிக் கொண்டு இருக்கிறது. எடுபட்டவைகளா என்று சாட்டையை எடுத்து தோலை உரிக்கப் போகிறது. அப்படியாவது திருந்தாத ஜென்மங்கள் திருந்தட்டும்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Muniandy Segar உங்கள் கட்டுரை துல்லியமாக எழுதப்பட்டது மற்றும் விஞ்ஞானி மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கும் நல்ல மருத்துவ நிர்வாகிகளுக்கும் நன்றி

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி... என்னதான் புதிது புதிதாக மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் கண்டுபிடித்தாலும்... சமயத்தின் பேரில் ஒன்றுகூடி நோய்ப் பரவலைப் பெரிதாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.. கொஞ்ச காலத்திற்கு சமூக விலகைக் கடைப்பிடிப்பதே சிறப்பு...



ஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம்

தமிழ் மலர் - 11.04.2020
கொரோனா வைரஸ் நோய்க்குத் தற்காலிகமான நிவாரண மருந்து ஹைட்ராக்சி குளோரோ குயின். கொரோனா தாக்கத்தை 50 விழுக்காடு கட்டுப் படுத்தும் தன்மை கொண்டது. முழுமையாகக் குணப் படுத்தும் ஆற்றல் இல்லை என்றாலும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் சிறப்பு கொண்டது. ஆய்வுகள் சொல்கின்றன.  




இந்த மருந்திற்குத் தான் இப்போது உலகம் முழுமைக்கும் வாய்ச் சண்டை பேய்ச் சண்டைகள். ஒரு பக்கம் அமெரிக்கா, 'விட்டேனா பார்’ என்று இந்தியா மீது எகிறிப் பாய்ந்தது. ’நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க’ என்று அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

இன்னொரு பக்கம் பார்த்தால் சீனாவின் கெடுபிடிகள். மருந்து தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்குத் தர மாட்டோம் என்று சீனாவின் சிகப்புக் கொடிகள். இதில் கியூபா நாடு பல கோடி மாத்திரைகளை இரகசியமாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பார்சல் பண்ணிய கில்லாடித் தனங்கள்.

இந்தக் களேபரத்தில் பிரேசில் நாட்டிற்கு இந்தியா பல கோடி மதிப்புள்ள மாத்திரைகளை அனுப்பி வைத்தது. மனம் குளிர்ந்த பிரேசில் நாட்டு அதிபர் நன்றி சொல்லப் போய்... விசயம் வெளியே வர... பல நாடுகளின் முணுமுணுப்புகள். எங்களுக்குக் கொடுக்காமல் பிரேசிலுக்குக் கொண்டு போய்க் கொடுத்து இருக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளின் சலசப்புகள்.




இன்னொரு விசயம். உலகில் பின்தங்கிய நாடுகளில் முதலிடம் வகிப்பவை ஆப்பிரிக்காவின் மூன்றாம் உலக நாடுகள். பெயர்கள் வேண்டாமே. நீண்ட பட்டியல்.

அந்த ஏழை நாடுகளுக்கு இந்தியா இலவசமாகப் பல கோடி மாத்திரைகளை வல்லரசுகளுக்குத் தெரியாமல் அனுப்பி இருக்கிறது. இந்த விசயம் ஊடகங்களில் கசிந்த பின்னர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது மல்லுக்கு நின்றார்.

உலகத்திலேயே அதிக அளவில் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை இந்தியா தயாரிக்கிறது. உலகத் தேவைக்கான 70 விழுக்காட்டு மருந்ததைத் தயாரிக்கிறது.

அது மட்டும் அல்ல. ஓர் ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து தயாரிப்பதற்கான தாவரக் கச்சா பொருட்களையும் இந்தியா சொந்தமாக உற்பத்தி செய்கிறது. இதுவும் பற்றாமல் தான் சீனாவிடம் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 120 டன் தாவரக் கச்சா பொருட்களை இறக்குமதி செய்து வந்தது. அதற்கும் இப்போது சீனாவின் தடை.




மருந்து தயாரிக்கும் துறையில் இந்தியாவை ஒரு சாதாரண நாடாகத் தான் பல நாடுகள் நினைத்தன. ஆனால் இப்போதுதான் இந்தியாவின் மருத்துவ ஆற்றல், மருத்துவத் திறன், மருத்துவப் பெருமை வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. இந்தக் கொரோனா கெடுபிடி நேரத்தில் இந்தியாவின் மனிதாபிமான உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம். வாழ்க பாரதம்.

மிக அண்மையில் அமெரிக்கா 29 மில்லியன் மாத்திரைகளை இந்தியாவிடம் கேட்டது. இந்தியாவும் முகம் கோணாமல் பகுதிப் பகுதியாய் அனுப்பிக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல.

இன்றையக் கட்டத்தில் உலகில் 30 நாடுகளுக்கு இந்தியாவின் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் ஆசியாவின் இந்தோனேசியா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது. 




இந்தியாவில் சைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இரு பெரும் மருந்து நிறுவனங்கள் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை முழுமூச்சாகத் தயாரித்துக் கொண்டு இருக்கின்றன. 24 மணி நேரத்திற்கும் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

முன்பு ஒரு மாதத்திற்கு 3 - 5 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரித்த சைடஸ் கடிலா நிறுவனம், இப்போது 30 டன் மாத்திரைகளைத் தயாரிக்கிறது. உலகளாவிய நிலையில் அதிகமாக மாத்திரைகள் தேவைப் பட்டால் 50 டன்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது.

இதில் இப்கா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லிய்ன் மாத்திரைகளைத் தயாரிக்க முடியும்.

இந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதத்தில் 25 கோடி மாத்திரைகளைத் தயாரித்து உள்ளன. ஒவ்வொரு மாத்திரையும் 200 மில்லி கிராம் அளவு கொண்டது. 




இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப் படுகிறது. அதனால் தான் அதற்கு இவ்வளவு கிராக்கி.

மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக்கு முதலிடம் வழங்கப் படுகிறது.

ஒருவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் என்றால் அவர் முறைப்படி 14 மாத்திரைகளைச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சு பல கோடி மாத்திரைகளுக்கு ஆர்டர் செய்து உள்ளது.

அந்த மருந்துகளைக் கொண்டு ஏறக்குறைய 90 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கலாம்.




உலக நாடுகளைக் கதிகலங்கச் செய்யும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரையிலும் சரியான மருந்துகள் எதுவும்  கண்டுபிடிக்கப் படவில்லை. இருப்பினும் அதை கட்டுப்படுத்த முடியும். முன்பு மலேரியா நோய்க்கு அந்த ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு அமெரிக்கா திட்டம் போட்டது. அதற்கு இந்தியா முதலில் மறுப்பு தெரிவித்து தடை விதித்தது.

அப்புறம் அதிபர் டிரம்பின் ஒரு சின்ன மிரட்டல். அப்புறம் என்ன. உன்னோடு மல்லுக்கு நின்று ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று இந்தியா ஏற்றுமதித் தடையை நீக்கியது.

அதிபர் டிரம்பிற்கு ரொம்ப சந்தோஷம். தலைகால் தெரியாமல் இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவரோடு பிரேசில நாடும் சேர்ந்து கொண்டது. இந்தியாவிற்கு நன்றி மாலைகள் குவிந்த வண்ணம் உள்ளன.



President of Brazil - Jair Bolsonaro

அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி டுவிட்டர் செய்து இருக்கிறார். அதில், “அசாதாரணமான சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு நன்றி. இந்திய மக்களுக்கு நன்றி.

இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டும் அல்ல... உலக மனித நேயத்திற்கும் உதவி இருக்கிறீர்கள். உங்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும் நன்றி” என்று பதிவு செய்து உள்ளார்.

அதற்குப் பிரதமர் மோடி பதில் அனுப்பினார். ‘இந்தியா - அமெரிக்கா உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்திற்குத் தேவையான எல்லாவித உதவிகளையும் இந்தியா செய்யும்’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.




அடுத்து பிரேசில் நாட்டு அதிபர் சாயர் பொல்சோனாரு (Jair Bolsonaro) நன்றி தெரிவித்து இருக்கிறார். ’கோவிட்-19 தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மூலப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து பெற்றோம். இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.

பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்த போது இராமாயணத்தை உவமைக் காட்டினார்.

இராமனின் சகோதரர் இலட்சுமணன். இவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமான் இமயமலையில் இருந்து புனித மருந்தைக் கொண்டு வந்தார். அதே போலத் தான் பிரேசில் நாட்டு மக்களுக்கும் இந்திய மக்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.

கொரோனா நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைப் பயன்படுத்த உலகின் பல மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் பரிந்துரை செய்து உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தின் வணிகப் பெயர் பிளேக்கனில் (Plaquenil).

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து. அந்த மருந்தில் கொயினா மூலிகை (Quinine) சேர்க்கப் படுகிறது. கொயினா மூலிகை சிஞ்சோனா (Cinchona) எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 




இந்த மூலிகை மரம் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் பூர்வீகம். இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகப் பயிர் செய்யப் படுகிறது. அங்குள்ள மரங்களில் இருந்து பட்டைகளை வெட்டி ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்கிறார்கள்.

கடந்த செவ்வாய்க் கிழமை (07.04.2020) ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்க இஸ்ரேல் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா  5 டன் மூலப் பொருட்களை அனுப்பி வத்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த மருந்துமே முழுமையாகக் குணப்படுத்தும் என்று சொல்ல இயலாது.

அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra) எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.




இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது கொரோனாவிற்குப் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் சற்று தீவிரமான மருந்து. அதைத்தான் உலக நாடுகள் இப்போது இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன.

கொரோனா மனுக் குலத்திற்குப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனாவை நம்முடைய பூமியில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கலாம்.

அதுவரையில் என்ன செய்யலாம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மருந்துகள், வீரியம் குறைந்த மருந்தாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி, நம் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம். 




ஓர் உலகளாவிய நெருக்கடியில் உலக வல்லரசுகள் எல்லாம் ஆட்டம் கண்டு அதிர்ந்து போய்க் கிடக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் ஆறுதல் சொல்லும் முதன்மை நாடாக இந்தியா பெயர் எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதைக் கண்டு உலக மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். காலத்தின் அறிந்த உதவி ஞாலத்தின் பெரிது. வாழ்க பாரதம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Athiletchumy Ramudu வாழ்க பாரதம்... உடல் சிலிர்க்கின்றது.

Muthukrishnan Ipoh 🙏🙏

Kevin Karu இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்குச் சொந்தமானவை! ஏற்றுமதி தடை மட்டுமே இந்தியா கொண்டு வந்தது! அதனால் தான் டிரம்ப் மிரட்டி ஏற்றுமதி தடையை நீக்கினார்! இது தான் உண்மை நிலை!

Muthukrishnan Ipoh //இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்கு சொந்தமானவை/// அப்படி என்றால் இந்தியாவில் இந்தியாவுக்குச் சொந்தமாக எந்தக் கம்பெனியும் இல்லையா...

சைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இந்த இரு மருந்து நிறுவனங்கள்... இந்த இந்தியக் கம்பெனிகள்... உலகத்தின் 70 விழுக்காட்டு ஹைட்ரோக்சி குளோரோ குயின் மருந்துகளைத் தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன...

Lohesvaran Lohes >>> Kevin Karu: hello brother please don't simply write as you know the whole story.. There is a lot of things you may don't know. Please read more books before commenting. Thank you.
Lohesvaran Lohes  >>> Muthukrishnan Ipoh: well said sir. And i really admire your world knowledge.

Lohesvaran Lohes >>> Muthukrishnan Ipoh: And one more my mother and my self are your sincere fans.

Kevin Karu >>> Lohesvaran Lohes: Major Share Holding is from USA. Indian Share Holding is less than 20%

Kevin Karu >>> Lohesvaran Lohes: https://economictimes.indiatimes.com/.../52834293.cms...
FDI up to 74% in brownfield pharma under automatic route

Kevin Karu >>> Lohesvaran Lohes:
https://www.thepharmaletter.com/.../foreign-direct...
Foreign direct investment in Indian pharma sector causing concern

Kevin Karu >>> Lohesvaran Lohes: https://www.investindia.gov.in/sector/pharmaceuticals
Pharmaceuticals

Kevin Karu >>> Lohesvaran Lohes https://www.thedollarbusiness.com/.../cadila-healthcare-ltd
Cadila Healthcare Ltd - The Dollar Business...

ஆதாரங்களைத் தெளிவாக வைத்துக் கொண்டு பதிவிட வேண்டும்.... 💐❤️👏👏👏👍

Muthukrishnan Ipoh >>> Lohesvaran Lohes: நன்றிங்க ஐயா..

Muthukrishnan Ipoh >>> Lohesvaran Lohes: மகிழ்ச்சி... வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்...

Kumaravelu Shanmugasundaram நேருவின் சாதனை அல்லவா

Muthukrishnan Ipoh புரியவில்லை ஐயா...

Kevin Karu Kumaravelu ஒரு முறை #நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள். அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார். அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிக்கரணம் அடித்தார்கள்.

#நேரு அமைதியாகச் சொன்னார். "வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பி விடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.

#காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டு இருக்கும். இன்றே தூக்கி விடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.

நேரு அவர்கள் உள்ளே நுழைய அந்தக் கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுக் கொண்டிருந்தனர். சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர். சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டு இருந்தனர்.

சீழ் பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக் காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி..

நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்".

#காவிகள் சொன்னது "நம் நாட்டுக்காரர்கள்"

"அந்த பெண் யார்?"

"அயல் நாட்டுக்காரி"

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், "இந்த நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டுப் பெண்கள் இந்தச் சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பி விடுகின்றேன்"..

அதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை... Shanmugasundaram -

Muthukrishnan Ipoh >>> Kevin Karu நல்ல தகவல்... நன்றி...

Kevin Karu >>> Muthukrishnan Ipoh - Sir.. I’m following all your articles ... keep going tq💐👏👍🙏

Persatuan Kabaddi Johor






















மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 1

பரமேஸ்வரா என்பவர் யார்? அவர் எங்கு இருந்து வந்தார்? ஏன் மலாயாவுக்கு வந்தார்? மலாக்காவைத் தோற்றுவித்தவர் அவர் தானா? அவர் மதம் மாறினாரா? அவரின் வரலாற்றுப் படிவங்கள் காணாமல் போவது உண்மைதானா? அவர் கடைசியாக எங்கே வாழ்ந்தார்? அவர் எங்கே இறந்தார்? எங்கே புதைக்கப் பட்டார்? இவற்றுக்கான உண்மைச் சான்றுகளை அலசி ஆராய்ந்து பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இது ஒரு நீண்ட வரலாற்று ஆவணத் தொடர். பின்னாட்களில் பரமேஸ்வராவைப் பற்றிய உண்மையான உண்மைகளுக்கு உண்மைச் சான்றுகளாக அமையும்.

இந்தக் கட்டுரைத் தொடரை அடித்தளமாகக் கொண்டு ‘மலேசிய இந்தியர்கள் வரலாறு - பரமேஸ்வரா’ எனும் வரலாற்று நூல் எழுதப்பட்டு உள்ளது.

 

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன...
பதினாறும் பாட சுகமானது...


என்று கண்ணதாசன் எழுதிச் சென்றார்.

அவருக்கு முன்னாலேயே பரமேஸ்வர ராகம் எனும் ஒரு ராகம் இருந்து இருக்கிறது. அந்த ராகம் தான் மலாக்கா வரலாற்றில் பதினேழாவது ராகமாக சுவரங்கள் பாடி இருக்கிறது.

ஏழு சுவரங்களில் அழகிய ராகம் சம்பூர்ண ராகம்.

ஆறு சுவரங்களில் அதிசய ராகம் சாடவ ராகம்.

ஐந்து சுவரங்களில் அற்புத ராகம் ஔடவ ராகம்.

நான்கு சுவரங்களில் அபூர்வ ராகம் வக்ர ராகம்.

மூன்று சுவரங்களில் ஆனந்த ராகம் நவநீத ராகம்.

அத்தனை ராகங்களிலும் அப்போதும் எப்போதும் ஓர் அம்சவர்த்தினி ராகம் உள்ளது. அந்த ராகம் தான் பரமேஸ்வரா ராகம்.




பரமேஸ்வரா ராகம்

இந்தப் பரமேஸ்வர ராகம் மலேசிய வரலாற்றில் என்றைக்கும் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம்.

இருந்தாலும் இப்போதைக்கு அந்த ராகம் வேதனையின் விளிம்பில் கண்ணீர் வடிக்கும் ஒரு விசும்பல் ராகமாக மாறி வருகிறது.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்து வரலாற்று நூல்களில் இருந்தும் கல்விசார் நூல்களில் இருந்தும் கனவுகளாய்க் கரைந்து போகின்ற ஒரு காம்போதி ராகமாய் மாறி வருகிறது.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்து வரலாற்று நூல்களில் இருந்தும் கல்விசார் நூல்களில் இருந்தும் கனவுகளாய்க் கரைந்து போகின்ற ஒரு காம்போதி ராகமாய் மாறி வருகிறது.




இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவும். மனம் வேதனைப் பட்டு கசியும் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள். சன்னமாய் ஆர்ப்பரிக்கின்றன.

இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவும். மனம் வேதனைப் பட்டு கசியும் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள். சன்னமாய் ஆர்ப்பரிக்கின்றன.

காட்டில் ஒரு மனிதன் காணாமல் போகலாம். அப்படி காணாமல் போன அவனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். உடல் அடையாளம் தெரியாமல் போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்க்கலாமே. உற்றுப் பார்த்து உண்மையான வடிவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு மனிதனின் பெயரே காணாமல் போனால் என்னங்க செய்வது. அப்படித்தான் நடக்கிறது. நடந்து கொண்டும் வருகிறது. சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

கடல் தாண்டிய கரைகளில் பரமேஸ்வராவின் வரலாறு என்பது அத்திம் மேடு என்றால் அங்கே அது பௌர்ணமி வெளிச்சத்தின் கோளாறு. அதுவே கடல் தாண்டா இந்தக் கரைகளில் பரமேஸ்வராவின் வரலாறு என்பது ஓர் அமாவாசைக் கோளாறு.



தஞ்சோங் துவான் - இந்த இடத்தில் பரமேஸ்வராவின் பூதவுடல்
சமாதி அடைந்து இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஐயப்பாடு

ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருட்டில் திரியும் எருமை மாடு தெரியப் போவது இல்லை. அதற்கு விளக்கம் தேவை இல்லை என கருதுகிறேன்.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொன்னால் அது ஓர் உவமானத் தொடர்.

ஆனாலும் எத்தனை நாளைக்குத் தான் கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று இராமாயணம் பாடிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுச் சித்தர்கள் அப்படித் தான் வரலாற்று உண்மைகளை மறைத்துத் திரித்து வாய்க்கு வந்தபடி கதை பேசுகிறார்கள். இல்லாதா ஒன்றை இருப்பதாக எழுதுகிறார்கள். பரவாயில்லை என்று சொல்ல மனசும் வரவில்லை.




உண்மை என்பது என்றைக்கும் உண்மை தான். அந்த உண்மை மறையக் கூடாது. மறைக்கப் படவும் கூடாது. அவை தான் நம் நெஞ்சங்களை நெருடிச் செல்லும் நியாயமான வேண்டுதல்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெற்ற தகப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயரைப் போடச் சொன்னால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா?

ஆகவே பரமேஸ்வராவின் வரலாறு நிலைக்க வேண்டும். காலம் பூராவும் கதைகள் சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல. பரமேஸ்வரா எனும் மனிதர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் உண்மை நிலைக்க வேண்டும். எதிர்காலத்து தலைமுறையினர் இந்த உண்மைகளைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

அந்த வரலாற்று உண்மை வரலாறு இருக்கும் வரையில் நிலைத்துப் பயணிக்க வேண்டும். அதை நிலைபெறச் செய்ய எதிர்காலத்துச் சந்ததியினர் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுவே நம்முடைய விருப்பம்.




பரமேஸ்வரா வாழ்க்கைச் சுருக்கம்

மலாக்காவைத் தோற்றுவித்தவர் யார் எனும் கேள்வியை முன் வைக்கிறேன். முக்கியமான ஒரு கேள்வி. மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது சுல்கார்னாயின் ஷா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது மகா அலெக்ஸாண்டர் என்பவர் தோற்றுவித்தாரா?

இது ஒரு பெரிய சர்ச்சைக்கு உரிய கேள்வி. பலரும் பலவிதமான பதில்களையும்; அந்தப் பதில்களுக்குப் பலவிதமான புராணக் கதைகளையும் முன் வைக்கின்றார்கள். அந்தக் கதைகள் கேட்பதற்கு மிகவும் சுவராஸ்யமாகத் தான் உள்ளன. இல்லை என்று சொல்லவில்லை.

ஆனாலும் மலாக்காவைத் தோற்றுவித்தவரைப் பற்றிய கதைகளில் மகா அலெக்ஸாந்தர் கதை தான் சற்றே சர்ச்சை. அதை அப்படியே சற்று ஒதுக்கி வைத்து விடுவோம்.

மலாக்காவைத் தோற்றுவித்தவரைப் பற்றிய சர்ச்சை உள்நாட்டு வரலாற்றில் ஒரு சின்னத் திரைக் காவியம் போல அரங்கேற்றம் கண்டு வருகிறது. அன்றும் சரி; இன்றும் சரி; அந்தச் சர்ச்சை ஒரு தொடர் நெடும் காவியமாய் நெளிந்து நீண்டு கொண்டுதான் போகிறது.




பரமேஸ்வரா எனும் சொல் ஒரு தமிழ்ச் சொல் தொடர். பரமா (Parama) எனும் சொல்லும் ஈஸ்வரா (Ishvara) எனும் சொல்லும் இணைந்து உருவானதே பரமேஸ்வரா (Parameswara) எனும் சொல் தொடர் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈஸ்வரன்.

(1.Tsang, Susan; Perera, Audrey)

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்.

*    1375-ஆம் ஆண்டில் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தார். இவர் சிங்கப்பூரை 1389-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஸ்ரீ மகாராஜாவிற்கு மகனாகப் பிறந்தவர் தான் பரமேஸ்வரா.

*    1389-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிற்றரசில் அரசியல் குழப்பங்கள். அதனால் ஸ்ரீ மகாராஜாவின் பொறுப்புகளை அவருடைய மகனான ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா ஏற்றுக் கொண்டு அரியணை ஏறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா 1389-ஆம் ஆண்டில் இருந்து 1399-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார்.
(2.Windstedt, Richard Olaf)




*    1399-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

*    1401-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார்.

*    1405-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். மிங் அரசரின் நட்புறவைப் பாராட்டி அவரின் ஆதரவைப் பெற்றார்.

*    1409-ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுமத்திராவில் இருந்த பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்டார்.

*    1411-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்கு மறுபடியும் சென்றார். மிங் அரசரின் பாதுகாப்பை நாடினார்.

*    1414-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70-ஆவது வயதில் காலமானார்.
(3.Miksic, John N.)

பரமேஸ்வரா சிங்கப்பூருக்கு எப்படி வந்தார். இவருடைய பாட்டனார் முப்பாட்டனார்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள். ஏன் வந்தார்கள். எப்படி வந்தார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.




ஒரு காலக் கட்டத்தில் சுமத்திரா தீவின் கிழக்குப் பகுதியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்தப் பேரரசின் கீழ் பலேம்பாங் சிற்றரசு இயங்கி வந்தது.
அந்தச் சிற்றரசின் அரசராக பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன் இருந்தார். இவர் ஏன் சிங்கப்பூருக்கு வந்தார். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்திய அரச பரம்பரையினர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தோனேசியாவின் பாலி தீவை ஆட்சி செய்த வர்மதேவா பேரரசைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் பரமேஸ்வராவின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெளிவாகத் தெரிய வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

References:

(1)  Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet, p. 120, ISBN 978-9-814-26037-4

(2) Windstedt, Richard Olaf (1938), "The Malay Annals or Sejarah Melayu", Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. The Branch, XVI.

(3)  Miksic, John N. (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. ISBN 978-9971695743.

(தொடரும்)

All rights reserved. No part of this publication may be reproduced without written permission from the author.



பேஸ்புக் பதிவுகள்
16 April 2020


Parimala Muniyandy: இப்போதைய சூழ்நிலையில் தாங்கள்தான் எங்களின் வரலாற்று ஆசிரியர்.நன்றியும் வாழ்த்துகளும்🙏🙏🙏

Muthukrishnan Ipoh: வரலாற்று ஆசிரியர் பதவி... மிக்க மகிழ்ச்சி... பொறுப்புடன் சேவை செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் ✌️😃

Malathi Nair: Anna i also want a book for my children to know Parameswara history.thank.plis let me know the price.

Muthukrishnan Ipoh: விரைவில் வெளியீடு காணப்படும்... கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்... நன்றிங்க...

Thanabaal Varmen: வரலாற்றை திரும்பத் திரும்ப பதிவுச் செய்வதால், இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது; வாழ்த்துகள்.

Muthukrishnan Ipoh: அங்கேதான் நிற்கிறோம்... நம் குழந்தைகளுக்கு நம்முடைய உண்மையான வரலாற்றை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்... எது உண்மை என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்...

Vally Jeeva: Sir i want the novel Parameswara

Muthukrishnan Ipoh: இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக வெளிவந்து விடும்... உங்களுக்கு ஒரு நூல் அனுப்பி வைக்கிறேன்... நன்றி....

Sri Kaali Karuppar Ubaasagar: அருமையான பதிவு அண்ணா..நன்றி🙏🏼

Muthukrishnan Ipoh: மிக்க நன்றி...

Sri Kaali Karuppar Ubaasagar >>> Muthukrishnan Ipoh: ✌️

Sush Meetha: Tenor 🙏

Sri Kaali Karuppar Ubaasaga: ✌️

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி...

Prem Rani: Waiting eagerly for the book sir.

Vejaya Kumaran: puttagham ware en waalthugal annaa (புத்தகம் வர என் வாழ்த்துகள் ஐயா)

M R Tanasegaran Rengasamy: நமக்கு தெரிந்தது எல்லாம் பரமேஸ்வரா பின்னாளில் மதம் மாறினார் என்பதுதான். அவரின் முழுமையான பின்னணி கொண்ட நூல் இருப்பின் நல்லது. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்கும்.

Komathi Arumugam: அருமை..நூலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

Muthukrishnan Ipoh: செலவுகளை ஏற்றுக் கொண்டு நூலை வெளியிட தயாராக இருக்கிறார்கள்... நூலை முடிக்க முடியாமல் போராடுகிறேன். இந்த வருடம் கண்டிப்பாக வந்து விடும்...

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh: விபரக் குறிப்பு சொன்னால் போதும் நான் எழுதி தாரேன்... சும்மா...

Muthukrishnan Ipoh >>> Jainthee Karuppayah: ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி...

Supramaniam Ramasamy: பரமேசுவரா தொடர்பான மெய்யான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு இருக்கும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஐயா.

Thinagar Raman:
ஐயா.. நீங்கள் ஒவ்வொரு தடவையும் பல உண்மையான தடயங்களைத் தெளிவு படுத்துகிறீர்கள்... தொடரட்டும் உங்கள் சேவை... மிக்க மகிழ்ச்சி.

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி ஐயா...



பரமேஸ்வரா மதம் மாறினாரா 2


பரமேஸ்வரா எனும் பெயர் அண்மைய காலங்களில் வரலாற்றில் இருந்து காணாமல் போய் வருகிறது. அந்த வரலாற்று நாயகர் பாட நூல்களில் இருந்தும் காணாமல் போய் வருகிறார். ஒரு மனிதர் காணாமல் போகலாம். தேடிக் கண்டிப்பிடித்து விடலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க…

அங்கே அத்திம் மேடு என்பது ஒரு பகல் கொள்ளை என்றால் இங்கே அதுவே ஒரு பௌர்ணமிக் கொள்ளை. பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு  இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியும். விடுங்கள். கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத்தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும்.


சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது மறைக்கப்படவும் கூடாது.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள். உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? ஆக சத்தியம் ஜெயிக்க வேண்டும். அதுவே நம்முடைய ஆதங்கம். சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

உள்நாட்டு வரலாறுகளில் சர்ச்சை

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு தீர்வு காண இந்த வரலாற்று ஆவணம் சரியாக அமையும் என்றும் நம்புகிறேன்.



பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

மலாக்கா வரலாற்றைப் பற்றி இதுவரையிலும் மூன்று பதிவுகள் மட்டுமே சான்றுகளாகக் கிடைத்து உள்ளன. 

முதலாவது பதிவு கோர்டின்கோ டி எரேடியா (Gordinho D'Eredia) எனும் போர்த்துகீசிய மாலுமியின் பதிவு. 1600 ஆம் ஆண்டு வாக்கில் பதியப் பட்டது. அதில் பரமேஸ்வரா எனும் பெயர் பெர்மிச்சுரி (Permisuri) என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அடுத்தப் பதிவு செஜாரா மெலாயு (Sejarah Melayu - Malay Annals). மலாக்கா பேரரசு உச்சத்தில் இருந்த போது மலாக்காவில் என்ன நடந்தது என்பதை அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளில் காண முடிகிறது. இருப்பினும் அந்த மலாய் வரலாற்றுப் பதிவேடுகளை 1612 ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகம் மறுதொகுப்புச் செய்தது.

செஜாரா மெலாயு மறுதொகுப்பு

மலாக்கா எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது; மலாக்காவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு; மலாக்கா எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

ஆனால் பரமேஸ்வரா எனும் பெயர் செஜாரா மெலாயுவின் எந்த ஓர் இடத்திலும் இடம் பெறவில்லை. ஆகவே, செஜாரா மெலாயு மறுதொகுப்புச் செய்யப்பட்டதால் வலுவான சான்றுகள் தேக்க நிலையை அடைகின்றன. 

ஒருக்கால் ஒரு தரப்பிற்குச் சாதகமான திருத்தங்களாகவும் அமையலாம். அதனால் செஜாரா மெலாயுவின் பதிவுகளுக்கு முழு உத்தரவாதம் வழங்க முடியாது. சீன, போர்த்துகீசிய, டச்சுக்காரர்களின் ஆவணங்களை நடுநிலையான பதிவுகளாக ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்தப் பதிவு சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் பதிவு. 1513 ஆம் ஆண்டு பதியப் பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires). இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது.


பரமேஸ்வரா என்பவர் ஸ்ரீ விஜயா பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவை செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa) என்றும் மொடவார்க்சா (Modafarxa) என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 – சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 – பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.


அது பரமேஸ்வரனின் வாழ்க்கைச் சுருக்கம். சரி. வரலாற்றிற்கு வருவோம். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜயா பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது.

சிங்கசாரி அரசு மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல்

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாங்கமாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.

ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது. ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு.

புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது. அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக ஸ்ரீ விஜயா அரசு, பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்

அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.

சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.


1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வ ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் சீனத் தூதர் வழங்கினார்.

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் பதவிக்கு வந்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல்கள்

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. மறுபடியும் ஒரு நினைவுறுத்தல். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தி இருக்கிறது. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாகத் தான் சிங்கப்பூர் அரசின் மீது மஜாபாகித்தின் திடீர் தாக்குதல்களும் அமைந்தன.

எல்லாமே சண்டைகள் சச்சரவுகள். அவன் அடித்தால் இவன் திருப்பி அடிப்பது. இவன் அடித்தான் அவன் அடிப்பது. அப்புறம் கத்திக் குத்து, சமுராய் சண்டை. அந்த அழகுச் சண்டைகள் இன்னும் தொடர்கின்றன. இப்போது நடக்கும் குண்டர் கும்பல் சண்டைகளைத் தான் சொல்கிறேன்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். சொல்லி இருக்கிறேன். இவர் மஜாபாகித்தின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். உள்ளூர் வரலாற்று நூல்களில் சயாம் நாடுதான் சிங்கப்பூரைத் தாக்கியதாகச் சொல்லப் படுகிறது. உண்மை அதுவல்ல.

உண்மையில் மஜாபாகித் அரசின் பெயரை மறைத்து விட்டார்கள். தெரியாமல் செய்தார்களா... தெரிந்தே செய்தார்களா. தெரியவில்லை. அது ஆண்டவனுக்குத் தான் தெரியும். அது மட்டும் இல்லை.

அது மட்டும் இல்லை. முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியைப் பரமேஸ்வரா கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சிலர் சொல்வார்கள். சில வரலாற்று நூல்களும் அப்படித் தான் சொல்கின்றன. அது ரொம்பவும் தப்பு. தெமாகியைக் கொன்றது நீல உத்தமன். பரமேஸ்வரா அல்ல. இந்த உண்மையை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒரு பக்கம்.பழி ஒரு பக்கம். மேலும் பல உண்மைகள் அடுத்த கட்டுரையில் அவிழ்க்கப்படும். (தொடரும்)

11 ஏப்ரல் 2020

கொரோனா துரித பரிசோதனைக் கருவி

(Rapid Testing Kit)
(Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR)


கொரோனா வைரஸ் நம் உடலில் இருக்கிறதா இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டுப்பிடிக்க உதவும் கருவியின் பெயர் ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit). தமிழில் துரித பரிசோதனைக் கருவி. 

 

ஒருவர் வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் கிருமியின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ. (DNA); அல்லது ஆர்.என்.ஏ. (RNA); மூலக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்த ரேபிட் டெஸ்ட் கிட் (Rapid Testing Kit) கருவியின் மூலமாகக் கண்டு அறிய முடியும்.

இப்போது இந்தக் கருவிக்கு உலகம் எங்கும் ரொம்பவுமே கிராக்கி. இதன் பயன்பாடு மருத்துவமனைகளுக்கு மட்டும் எனும் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நிறையவே போலிகளும் சந்தையில் கலந்து விட்டன.

விரைவில் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கலாம். மலேசிய சுகாதார அமைச்சு போலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சரி.

ஒரு வைரஸ் கிருமியின் மரபுத் தொகுதிக்கு ‘ஜெனோம்’ (genome) என்று பெயர். கொரோனா தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமிக்கு SARS-CoV-2 என்று பெயர். 



ஆக இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட SARS-CoV-2 வைரஸ் கிருமியின் ஜெனோம் மரபுத் தொகுதியையும்; ஏற்கனவே இருந்த சார்ஸ் (SARS); மெர்ஸ் வைரஸ் கிருமிகளின் மரபுத் தொகுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டிற்கும் 70 விழுக்காடு ஒற்றுமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால் தான் இப்போது உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிக்கும் சார்ஸ் (SARS) எனும் பெயர் ஒட்டிக் கொண்டது. இப்போதைய இந்த கொரோனா வைரஸ் கிருமி முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

இந்தப் புதிய கொரோனா வைரஸ் கிருமியின் மரபு அணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்துப் பகுத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர் அந்த மரபு அணுக்களைத் துரித மூலக்கூறு மரபியல் பரிசோதனை (rapid molecular genetic tests) மூலமாக வடிவம் அமைத்தார்கள்.

மரபியல் பரிசோதனை என்பது குரோமோசோம்கள் (chromosomes), மரபணுக்கள் (genes) அல்லது புரதங்களில் (proteins) ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காணும் ஒரு வகை மருத்துவச் சோதனையாகும். 


(Genetic testing is a type of medical test that identifies changes in chromosomes, genes, or proteins)


இந்தப் பரிசோதனை தான் இப்போதைக்கு உலகம் எங்கும் பரவலாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில் அதற்கான மரபியல் பரிசோதனையை, அதன் மரபணுவில் உள்ள ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏன் தெரியுங்களா.

எல்லா உயிர்களின் மரபணுக்களும் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகளால் ஆனவை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

மனிதனாக இருக்கலாம். மிருகமாக இருக்கலாம். காற்றில் பற்றக்கும் பட்டாம் பூச்சியாக இருக்கலாம். பரவி நிற்கும் பயிர் பச்சையாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஓர் உயிர் என்றால் அதற்கு கண்டிப்பாக மரபணுக்கள் இருக்கும். இருக்க வேண்டும்.



மறுபடியும் சொல்கிறேன். அந்த மரபணுக்களில் டி.என்.ஏ. (DNA); ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக் கூறுகள் இருக்கும். ஆக, டி.என்.ஏ.; ஆர்.என்.ஏ. மூலக் கூறுகள் இல்லாமல் மரபணுக்கள் இல்லை. மரபணுக்கள் இல்லாமல் செல்கள் இல்லை. செல்கள் இல்லாமல் உயிர்கள் இல்லை. அந்த உயிர்கள் இல்லாமல் நாம் மனிதர்களும் இல்லை. சரிங்களா.

ஆனாலும் கொரோனா வைரஸில் ஒரு பிடி இருக்கிறது. அதாவது ஒரு ’கேட்ச்’ இருக்கிறது. பெரும்பாலான வைரஸ் கிருமிகளின் மரபணுக்கள் ஆர்.என்.ஏ. (RNA) எனும் மூலக்கூற்றுகளால் மட்டுமே ஆனவை. கொஞ்சமாய் டி.என்.ஏ. இருக்கலாம்.

அந்த ஆர்.என்.ஏ. மரபணுத் தொகுதியில் தான் கொரோனாவின் இரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. கொரோனா வைரஸின் செயல்பாடுகள்; வடிவ அமைப்புகள்; தன்மைகள்; பண்புகள்; இயக்கங்கள் என எல்லாமே மூலக்கூறுகள் வடிவில் அதன் ஆர்.என்.ஏ.-வில் எழுதப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்லலாம். இப்போது நம்மை ஆட்டிப் படைக்கிறதே இந்த SARS-CoV-2 ; இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்றதும் என்ன வகையான புரதங்களைத் தயாரிக்க வேண்டும்; எப்படி தயாரிக்க வேண்டும்; மனித உடலின் மரபணுக்களை எப்படி உடைக்க வேண்டும் என்கிற வழிமுறைகள் எல்லாம் இந்த மரபணுக்களிடம் இருக்கும். 



அதாவது எழுதி வைத்தது போல இருக்கும். இந்த புரதங்கள் தான் கோரோனா கோவிட் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு காரணமாகவும் இருக்கின்றன.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன். புரதங்கள். எந்த மரபணுவாக இருந்தாலும் இந்தப் புரதங்கள் தான் சக்தி கொடுக்கும் பொருட்கள். ஆக கொரோனா வைரஸ்கள் அவற்றின் இந்தப் புரதங்களை வைத்துக் கொண்டே மனித மரபணுக்களைச் சாகடித்து விடுகின்றன. அது தான் அந்தக் கொரோனாவின் கேட்ச்.

ஒருவருக்குத் தொண்டை வலி அல்லது இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் வரலாம். உடல் சோர்ந்து போகலாம். அந்த மாதிரி அறிகுறிகள் வந்தால் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அவரின் மூக்கு; தொண்டைப் பகுதிகளில் இருக்கும் திரவத்தைப் பஞ்சு மூலம் எடுத்து ஸ்வாப் (Swab) பரிசோதனை செய்வார்கள். 



அவ்வாறு எடுக்கப்படும் திரவ மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன் (Polymerase chain reaction) எனப்படும் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

இந்த பி.சி.ஆர். (PCR) பரிசோதனையின் மூலமாக கொரோனா வைரஸின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் உள்ளனவா என்று பார்க்கப்படும்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள் எத்தனை மில்லியன்களாகப் பெருகிப் போகின்றன என்றும் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள் அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.

அப்படி எடுக்கப்படும் மூலக் கூறுகளின் எண்ணிக்கையில் ஆர்.என்.ஏ. இருந்தால் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்புறம் என்ன. உடனே அட்மிட் செய்து விடுவார்கள்.

இதை வைத்துத் தான் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள். இந்த விசயத்தில் கொரோனா கிருமியின் ஆர்.என்.ஏ. (RNA) மூலக் கூறுகள்தான் அந்தக் கிருமியையே காட்டிக் கொடுக்கின்றன.

இப்படித்தான் கொரோனா துரித பரிசோதனைக் கருவி (Rapid Testing Kit) செயல் படுகிறது. இது ஒரு நீண்ட விழிப்புணர்வுக் கட்டுரை. இதன் தொடர்ச்சி இன்னும் சில தினங்களில் முழுமையாகப் பத்திரிகையில் இடம் பெறும். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.20220