18 ஏப்ரல் 2020

பத்து காஜா மர்ம மாளிகை - 1

கொரோனா அச்சுறுத்தல்கள்... லாக் டவுன் பரபரப்புகள்... ஊடகத் திணறல்கள்... சொந்த பந்தங்களின் விஷமங்கள்... குடும்பத்தின் அலப்பறைகள்... கொஞ்ச நஞ்சமாய் இருந்தால் பரவாயில்லை... வாழ்க்கையின் எல்லைக்கே ஓட வேண்டிய காலக் கட்டம்... ஆக இத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் திரிலிங் வேண்டுமே...
 
கெல்லிஸ் மாளிகையின் கம்பீரத் தோற்றம்

மற்றும் ஒரு மர்ம மாளிகையின் பயமுறுத்தல் வருகிறது. பத்து காஜா மர்ம மாளிகையின் மாய ஜாலங்கள். படியுங்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த மர்ம மாளிகை. பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மறுபடியும் பார்த்த நினைவுகள்.

 

சுற்றிலும் சின்ன பெரிய செம்பனைத் தோட்டங்கள். பக்கத்தில் இன்றைக்கோ நாளைக்கோ என்று ஒரு பழைய பாலம். அங்கே ஒரு நூறு ஆண்டுகாலம் மாயஜாலம் காட்டி வரும் மர்ம மாளிகை. விசாலமான ஆனால் விசித்திரமான மாளிகை. வர்ண ஜாலங்கள் காட்டும் ஓர் இரகசிய மாளிகை.

சுற்றிலும் தடுமாறி நிற்கும் சில உயரமான காட்டு மரங்கள். அந்த மரங்களில் தாவிச் செல்லும் குறும்புக்காரக் குரங்குகள்... மழைக்கு ஏங்கி நிற்கும் இரட்டைவால் கரிச்சான் குருவிகள்...

தூங்கி வழியாத தூக்கணாங் குருவிகள்... மின்னிப் போகும் மீன் கொத்திகள்... வெள்ளைக் கருப்பு பச்சைப் புறாக்கள்... உசிலம்பட்டி ஊர்க்குருவிகள்... மிரண்டு பார்க்கும் உருண்டைக் கண் ஆந்தைகள். 

கிந்தா கிளாஸ் பகுதியில் தமிழர்களின் சில இல்லங்களில்
வில்லியம் கெல்லிஸுக்கு மாலை மரியாதை செய்கிறார்கள்

அப்படியே இரண்டு மூன்று பழம்தின்னி வௌவால்கள்; சுவர்த் தூண்களில் ஓடி ஒளியும் ஒல்லிப்பிச்சான் பல்லிகள்; பாம்பு மாதிரியும் இல்லாமல் பல்லி மாதிரியும் இல்லாமல் இரண்டும் கலந்த பாம்பு அரணைகள்... சிவப்புக் கலரில் மஞ்சள் ஓணான்கள்.

கூடவே நாலு கால் பாய்ச்சலில் எட்டுகால் பூச்சிகள். ஊர்ந்து போகும் கருங்கால் அட்டைகள். யாரையும் எதுவும் செய்யாத அப்பாவிச் சிலந்திப் பூச்சிகள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த பறப்பன ஊர்வன. இப்போது அவற்றின் பேரன் பேத்திகளைத் தேடிப் பார்க்கிறேன்.

அந்தக் காலத்து விஜயாலயச் சோழ மன்னரின் தஞ்சை அரண்மனைகள் நினைவில் வந்து போகின்றன. மாளிகைக்குப் பக்கத்திலேயே அழகிய அம்சமான மாரியம்மன் கோயில். அந்த மர்ம மாளிகைக்கும் அந்தக் கோயிலுக்கும் அடியிலே ஒரு பாதாளச் சுரங்கப் பாதை.


இருந்தாலும் மாளிகையைப் பார்க்க வருபவர்கள் மாளிகையைக் கண்டு கொஞ்சம் லேசாகவே பயப் படுகிறார்கள். அந்த மாளிகைதான் பத்து காஜா கெல்லிஸ் காசல் மர்ம மாளிகை. பக்கத்தில் ஓர் ஆறு சலசலத்து ஓடுகிறது. மிக அமைதியானச் சூழல்.

இப்போதைய நாளில் மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் பெரிய பரபரப்பு எதுவும் அதிகமாக இல்லை. பறப்பன ஊர்வன தான் கொஞ்சம் லேசாய் கதகளி, பிரேக் டான்ஸ்கள் ஆடுகின்றன.

மற்றபடி மக்கள் கூட்டம் அதிகமாகவும் இல்லை. காக்காய்க் குஞ்சுகளுக்கே பஞ்சம் வந்துவிட்டது போல ஒரு மாயைச் சூழல்.

பல்லவ மன்னர்கள் கட்டிய அரண்மனையைப் போன்ற கட்டமைப்பு. அந்த அமைப்பில் தானே சோழக் கட்டிட அமைப்புகளும் வருகின்றன.


இதை ஒரு மர்ம மாளிகை என்று சொன்னால் தப்பு இல்லை. ஒரு பெரிய மர்ம வரலாற்றையே பின்னணியாய்த் தாங்கி நிற்கின்றது. அதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன்.

அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வரும். பிறகு அந்தக் கோட்டையைக் கட்டியவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்னர் அன்னாரின் ஆத்மா அமைதி பெற மரியாதை செய்வோம். இது நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டுரைத் தொடர்.

இந்த நேரத்தில் நிபோங் திபால் மர்ம மாளிகை ஞாபகம் வருகிறது. அந்த மாளிகையிலும் ஆவிகள் உலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆசைகள் நிறைவேறாத ஆன்மாக்கள் நிம்மதி அடைவது இல்லையாம்.

அப்படி ஒரு நம்பிக்கை. பாழடைந்த மாளிகைகளில் பாழடைந்த ஜீவன்கள் சிறு சிறுச் சேட்டைகளைச் செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டு இருக்கலாம். அப்படி ஒரு காலா காலத்து ஐதீகம். மனித நம்பிக்கைகளில் அப்படிப்பட்ட ஐதீகங்கள் இன்றும் சலனங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனக்கும் அப்படித்தான்.

 
வில்லியம் கெல்லிஸ் கட்டிக் கொடுத்த மாரியம்மன் கோயில்

கெல்லிஸ் காசல் மர்ம மாளிகையைப் போல பல மாளிகைகள் மலேசியாவில் இருக்கின்றன.

கோலாபிலா மர்ம மாளிகை,

திரங்கானு இஸ்தானா மாசியா,

பங்கோர் தீவு மர்மக் கோட்டை,

சரவாக் சார்ல்ஸ் புரூக் அஸ்தானா மாளிகை,

ஜொகூர் பாசிர் பெலாங்கி மர்ம மாளிகை,

ஜொகூர் நபாலியா பேய் மாளிகை,

மலாக்கா டச்சுக் கோட்டை.


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பத்துகாஜா மர்ம மாளிகையை பார்த்தவர்கள் அப்பாடா… இப்படியும் ஒரு மாளிகையா என்று ஆச்சரியப் படுவார்கள். நிச்சயமாக... போய்ப் பாருங்கள்.

உயிருக்கு உயிராய் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னங்கள் எழுப்பப் படுவது வரலாறு பார்த்த நிஜங்கள். வழக்கத்தில் வந்து போகும் கடந்த காலத்தின் சொப்பனங்கள். 

 
வில்லியம் கெல்லிஸ்... அவருடைய மனைவி

நினைவுச் சின்னங்கள் யாருக்காகவும் கட்டப் படலாம். பாசமான அம்மாவுக்காக இருக்கலாம். அன்பான அப்பாவுக்காக இருக்கலாம்.  காணாமல் போன காதலனுக்காக இருக்கலாம்.
அல்லது  கடன் கேட்கும்  காதலிக்காகவும் இருக்கலாம். வேண்டாமே... அந்தப் பட்டியல். நீண்டு கொண்டே போகும்.

உலகில் ஓர் அற்புதமான நினைவுச் சின்னம் என்றால் அது தாஜ்மகால் தான். முதல் இடத்தில் அசைக்க முடியாத ஓர் அழகு ஓவியம். அதற்கு இணையாக வேறு ஒரு மாளிகை இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த வரிசையில் ஆசை மனைவிக்காகக் கட்டப் பட்டதுதான் பத்துகாஜா கெல்லிஸ் மாளிகை. இன்றைக்கும் இந்த மாளிகை சுற்றுலா பயணிகளைத் திகைக்க வைக்கும் ஒரு மாளிகையாகத் திகழ்கின்றது.

கெல்லிஸ் காசல் என்று மறுபடியும் சொல்லிப் பாருங்கள். அப்படியே அசை போட்டுக் கொள்ளுங்கள்.
கோயிலில் வில்லியம் கெல்லிஸ் சிலை வடிவம்

கெல்லிஸ் மாளிகையின் மர்மங்கள் தான் என்றைக்கும் நினைவுக்கு வருகின்றன. யாருக்காக அந்த மாளிகை கட்டப் பட்டதோ அவர்களின் ஆவிகள் இன்னும் உலவி வருவதாக பலர் நம்புகின்றனர்.

மாளிகையின் இரண்டாவது மாடியில் அருவங்களையும் உருவங்களையும் பார்த்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடிக்கு வெள்ளை உருவங்கள் வந்து போவதையும் பலர் பார்த்து இருக்கிறார்கள்.

அதே இரண்டாவது மாடியில் இருந்து வெள்ளை நிறக் கொசுவலைகள் பறந்து போவதையும் பலர் பலமுறை பார்த்து இருக்கிறார்கள். அது பேயா பிசாசா அல்லது வெள்ளைச் சாத்தானா தெரியவில்லை. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இங்கிலாந்தை விக்டோரியா மகாராணியார் ஆட்சி செய்த போது (1837-1901), மலாயாவில் இந்தக் கோட்டை கட்டப் பட்டது. கெல்லிஸ் காசல் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

(சான்று: Tak Ming, Ho (2005). Generations - The story of Batu Gajah. MPH)

கெல்லிஸ் மாளிகை கட்டி முடிக்கப்பட்டு இருந்தால்...

பத்துகாஜா நகரில் இருந்து கோப்பேங் நகருக்குப் போகும் பாதையில் அந்த மாளிகை மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஈப்போவில் இருந்து 20 நிமிட நேர ஓட்டத்தில் பிடித்து விடலாம்.

இந்தக் கெல்லிஸ் கோட்டை முற்றாக முற்றுப் பெறாத கோட்டையாகும். அதாவது முற்றாக முழுமைப் பெறவில்லை. பாதிலேயே கைவிடப் பட்டது. வெகு காலமாகப் பாழடைந்து போய் கிடந்தது.

அண்மையில் தான் புதுப்பிக்கப் பட்டது. ஒரு சுற்றுலா மையமாகவும் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் என்ன... மையத்தில் இப்போது சில பல கடைகள். வணிகத் தளமாக மாறி வருகிறது. சாலை ஓரங்களிலும் நிறையவே கடைகள். வில்லியம் கெல்லிஸுக்குச் செய்தி போய் இருந்தால் வேதனை படுவார். 

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith)
கெல்லிஸ் காசலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போதே வில்லியம் கெல்லிஸ் இறந்து விட்டார். அந்தக் கோட்டையைப் பிழிய பிழிய ரசித்துக் கட்டிய அந்த மனிதர் இறந்ததும் கோட்டை கட்டும் பணிகளும் அப்படி அப்படியே நின்று விட்டன.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலேசியாவில் முதன்முதலாக தன் சொந்தப் பணத்தைப் போட்டு ஓர் இந்து ஆலயத்தை மலேசியாவில் உருவாக்கிய ஓர் ஆங்கிலேயர் இருகிறார் என்றால் அவர்தான் இந்த வில்லியம் கெல்லிஸ் ஸ்மித். இந்த விசயம் மலேசிய இந்தியர்கள் பலருக்கும் தெரியாது.


வில்லியம் கெல்லிஸ் ஸ்மித், ஒரு தமிழ்ப் பள்ளியையும் உருவாக்கி இருக்கிறார். பத்து காஜா கிந்தா கெலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் வரலாற்றிலும் தடம் பதிக்கின்றார். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.

பத்து காஜா மர்ம மாளிகையை உருவாக்கிய வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் 1870 மார்ச் மாதம் முதல் தேதி ஸ்காட்லாந்து மோரே பிர்த் டாலாஸில் (Kellas, Scotland) பிறந்தவர். ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

அவருக்கு இருபது வயதாக இருக்கும் போது ஒரு சிவில் பொறியியலாளராக மலாயாவுக்கு வந்தார். அப்போது மலாயா ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியில் இருந்தது. ரப்பர் தோட்டங்கள் உருவாகிக் கொண்டு இருந்த காலக் கட்டம். 


வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் மலாயாவுக்கு வந்த போது கிந்தா பள்ளத்தாக்கில் பெரும் அளவில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்டு வந்தது. உலகத்திலேயே அதிகமான அளவுக்கு ஈயத்தையும் உற்பத்தி செய்தது. வரலாறும் சொல்கிறது.

அந்தச் சமயத்தில் பத்து காஜா நகரம் செல்வச் செழிப்புடன் சிறப்புப் பெற்று விளங்கியது என்று தாராளமாகச் சொல்லலாம்.

அப்போது இங்கிலாந்தில் இருந்து வெள்ளைக்காரர்கள் அதிகமானோர் கிந்தா பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு வந்தார்கள். அவர்களிடம் காலனி அரசாங்கம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டது.

ஈப்போவில் சார்ல்ஸ் அல்மா பேக்கர் (Charles Alma Baker) எனும் ஒரு செல்வந்தர் இருந்தார். இவர் 1857-ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஒத்தாகோ எனும் இடத்தில் பிறந்தவர். 


நியூஸிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த சர் பிரடெரிக் வொயிட்வாக்கர் (Sir Frederick Whittaker) என்பவரின் கடைசி மகள் புலோரன்ஸ் இசபல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர். 1890-இல் வேலை தேடி இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.

ஆஸ்திரேலியாவில் கப்பல் ஏறினார். சிங்கப்பூரில் தரை இறங்கும் போது, இந்தியாவிற்குப் போகும் கப்பல் அவரை விட்டுச் சென்று விட்டது.

வேறு வழி இல்லாமல் சிங்கப்பூரில் அடைக்கலம் ஆனார். பின்னர் பத்து காஜாவிற்கு வந்தார்.

(சான்று: https://thriftytraveller.wordpress.com/2012/04/19/charles-alma-bakers-mansion/ - They missed their next ship from Singapore)


1890-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Sir Frank Athelstane Swettenham) இருந்தார். அவருடைய நட்பைப் பெற்று சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

சார்ல்ஸ் அல்மா பேக்கர்தான் பத்து காஜா – ஈப்போ சாலையைச் செப்பனிட்டுக் கொடுத்த முதல் மனிதர் ஆகும்.

ஒரு கட்டத்தில் அல்மா பேக்கருக்குப் பேராக் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய குத்தகை கிடைத்தது. பத்து காஜாவுக்கு அருகில் 9000 ஹெக்டர் காடுகளை அழிக்கும் குத்தகை.

இந்தக் குத்தகையின் மூலமாக அல்மா பேக்கர் விரைவில் ஒரு பெரிய பணக்காரர் ஆனார்.

இவருக்குத் துணையாக வந்தவர்தான் வில்லியம் கெல்லிஸ் ஸ்மித். அவருடன் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வில்லியம் கெல்லிஸ் ஸ்மித்தும் ஒரு குட்டிப் பணக்காரர் ஆனார். 


இருவருக்கும் ஒரு சின்ன மனத் தாங்கல். அதனால் பின்னர் காலத்தில் வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தனியாகவே பயணிக்கத் தொடங்கினார்.

ஒரு சில ஆண்டுகளில்
கெல்லிஸ் ஸ்மித்திற்கு ஏ.ஜி. மெக்கி என்பவரின் நட்பு கிடைத்தது. 1894-ஆம் ஆண்டு பத்து காஜா - கோப்பேங் சாலையை வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் உருவாக்கிக் கொடுத்தார்.

ஆக ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். கெல்லிஸ் மாளிகையைக் கட்டிய அதே வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான் பத்து காஜா - கோப்பேங் சாலையையும் நிர்மாணித்துக் கொடுத்து இருக்கிறார்.

அப்போது எல்லாம் தார் சாலைகள் எதுவும் கிடையாது. சாதாரண மாட்டு வண்டிகள் போகும் மண்சடக்குப் பாதைகள் தான்.

1993-ஆம் ஆண்டு வரை அந்தப் பழைய பத்து காஜா - கோப்பேங் செம்மண் சாலை பயன்பாட்டில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


கோப்பேங்கில் இருந்து சில கி.மீ. தொலைவில் கோத்தாபாரு சிற்றூர் இருக்கிறது. அந்தச் சிற்றூருக்குப் போகும் பாதையை அமைத்துக் கொடுத்தவரும் இந்த வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான். அந்த மாட்டு வண்டிப் பாதை இப்போது தார் சடக்காக இருக்கிறது.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித்,
அடுத்து 1896-ஆம் ஆண்டு மெங்லெம்புவில் (Menglembu) ஒரு சுண்ணாம்புக் கல்பாறைச் சுரங்கத்தைத் தோற்றுவித்தார். மலாயா இரயில்வே சேவைக்கு வெடிப்பு கல் தேவைப் பட்டது. அந்தக் கற்களை இவருடைய சுரங்கத்தில் இருந்து தான் அனுப்பி வைத்தார்கள்.

கெல்லிஸ் ஸ்மித் சிறு சிறு ஈயச் சுரங்கத் தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு காலனி அரசாங்கத்திடம் இருந்து 1500 ஏக்கர் காடுகளை வாங்கினார்.

அந்தக் காடுகள் ஈப்போ கிந்தா மாவட்டத்தின் பத்துகாஜா பகுதியில் இருந்தன. அவற்றை அழித்து ஒரு ரப்பர்த் தோட்டத்தை உருவாக்கினார். அந்தத் தோட்டத்தில் காபி பயிர் செய்தார். மலாயாவில் காபி, கொக்கோ தான் முதன்முதலில் பயிர் செய்யப் பட்டன. 


1900-ஆண்டுகளில் தான் ரப்பர்த் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அவருடைய தோட்டம் கிந்தா மாவட்டத்தில் இருந்ததால் அதற்கு கிந்தா கெலாஸ் ரப்பர்த் தோட்டம் (Kinta Kellas Estate) என்று பெயர் வைத்தார்.

ஸ்காட்லாந்தில் ஈஸ்டர் கெலாஸ் எனும் பெயரில் அவருடைய குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது. அந்தப் பண்ணையின் பெயரையே இங்கேயும் கிந்தா கெலாஸ் ரப்பர்த் தோட்டத்திற்கு வைத்து விட்டார்.

அதன் பின்னர் கிந்தா கெலாஸ் ஈயச் சுரங்க நிறுவனத்தைத் தோற்றுவித்தார் (Kinta Kellas Tin Dredging Company). ஓரளவுக்குப் பணம் சம்பாதித்துக் கொண்டார்.

அரசாங்கத்திடம் இருந்து அவருக்கு கிடைத்த நிலங்களின் விவரங்கள்.

1896-இல் 538 ஏக்கர்கள்.
1897-இல் 454 ஏக்கர்கள்.
1897-இல் 527 ஏக்கர்கள்.
1898-இல் 1,500 ஏக்கர்கள்.

இதை ஏன் சொல்ல வருகிறேன். காரணங்கள் இருக்கின்றன.

எல்லாமே காடுகள். ஈயம் விளையாடிய குளம் குட்டைகள். இதில் கிந்தா கெலாஸ் தோட்டம் உருவாக்குவதற்கான 1500 ஏக்கர் நிலம் வாடகைக்கு கிடைத்தது. 


முன்பணம் எதுவும் இல்லை. மறுபடியும் சொல்கிறேன். முன்பணம் இல்லை. ஆங்கிலேயர்களுக்கு ஆங்கிலேயர்கள் செய்த உதவி. புரியும் என்று நினைக்கிறேன்.

ஓர் ஆண்டுக்கு ஓர் ஏக்கருக்கு பத்து காசு வாடகை. பத்து ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த நிலத்தின் வாடகை ஆண்டுக்கு ஐம்பது காசு என்று நிர்ணயிக்கப் பட்ட்து.

முதன்முதலில் 1898-ஆம் ஆண்டு 1500 ஏக்கரில் கிந்தா கெலாஸ் தோட்டம் உருவானது. பின்னர் 3000 ஏக்கராகப் பெரிதாக்கப் பட்டது. கிந்தா கெலாஸ் தோட்டம் இன்னும் பத்து காஜாவில் இருக்கிறது.

அடுத்த கட்டுரையில் அந்த மர்ம மாளிகையைக் கட்டிய தமிழகத் தொழிலாளர்களுக்கு எப்படி ஒரு விநோதமான மர்ம நோய் (
Spanish Flu) வந்தது. எப்படி சிலர் இறந்து போனார்கள். ஏன் ஒரு மாரியம்மன் கோயில் கட்டப் பட்டது போன்ற விவரங்கள் வருகின்றன. 

(கட்டுரையைப் படித்துவிட்டு கருத்துகளையும் சொல்ல மறக்க வேண்டாமே... இரண்டாம் பகுதியில் சந்திப்போம்.)

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
17.04.2020

Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/


பேஸ்புக் பதிவுகள்

(பேஸ்புக் அன்பர்கள் பதிவு செய்யும் அனைத்துக் கருத்துகளும், பின்னூட்டப் பதிவுகளும் ‘புளோகர்’ வலைத் தலத்தில் பதிவு செய்யப் படுகின்றன. அந்தப் பதிவுகள் இணையத்தில் நிரந்தரமான பதிவுகளாக இடம் பெற்று இருக்கும். நன்றி.)

Prem Rani: Excellent story. Waiting eagerly for d ending sir. Keep it up

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... பயணங்களைத் தொடர்வோம்... வாழ்த்துகள்...

Balamurugan Balu: வணக்கம் ஐயா! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி !

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி ஐயா... தொடர்ந்து பயணிப்போம்...

Anbarasan Shanmugam: பள்ளி படிக்கும் காலத்தில் பல முறை இங்கு வந்து விளையாடி இருக்கிறோம். எந்த வித பயமும் மர்மமும் தெரியாது. ஆனால் சற்று தொலைவில் உள்ளவர்கள் தான் ஏதோ நடமாடுவதாகப் பேசிக் கொள்வார்கள்...

நான் மலாக்கா வந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை போய் பார்த்த போது அதை ஒரு சுற்றுலா தளமாக அரசு செய்துள்ளது..

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்... இப்போது வணிகத் தளமாக மாறி விட்டது ஐயா...

Anbarasan Shanmugam >>> Muthukrishnan Ipoh:
உண்மைதான்..

Inbachudar Muthuchandran: நல்ல ஓர் உண்மைக் கட்டுரை... படிக்க ஆர்வமாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... நன்றிங்க...
Sheila Mohan








Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்...

Periasamy Ramasamy: மாளிகையின் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை இனி கூடினாலும் வியப்பில்லை. மாநில சுற்றுலா துறை நிர்வாகம் வேலியிட்டு கட்டணம் வசூலிக்காமல் இருந்தால் சரி

Maha Lingam >>> Muthukrishnan Ipoh: ஆமாம் ஐயா..

Periasamy Ramasamy >>> Muthukrishnan Ipoh: மளிகைச் சாமான் வாங்கக் கூட பிள்ளைகளைக் கூட்டிப் போறதுன்னா யோசிக்க வேண்டி உள்ளது. அதுவும் மர்ம மாளிகையை சுற்றிப் பார்க்கவா ... வேண்டவே வேண்டாம் சாமீ ....

Muthukrishnan Ipoh:
வணக்கம்... கருத்துகளுக்கு நன்றி ஐயா... பத்து காஜா கெல்லிஸ் காசலில் கட்டணம் வசூலிக்கிறார்கள். பெரியவர்களுக்கு 5 ரிங்கிட். பிள்ளைகளுக்கு 3 ரிங்கிட்.

Parimala Muniyandy: அருமை அண்ணா. மிகவும் அமைதியான நேரத்தில் அற்புதமான பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Muthukrishnan Ipoh: வணக்கம்... மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

RKumutha Rajagopal: Arumayana katturai aiya... adutha pathivukkaga... waiting.

KR Batumalai Robert அருமை. வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா.

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Krishna Ram Superb and nice sir...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா....

Ponni Veerappan தொடரட்டும் தங்களின் மர்மமான பயணத்தின் கட்டுரைகள்.

Don Samsa: வணக்கம் தலைவரே.. மாளிகையின் உச்சியில் 2002-ஆம் ஆண்டில் என் காதலியின் பெயரை எழுதினேன். இன்னும் இருக்கா அல்லது அழிந்து விட்டதா எனத் தெரியவில்லை. கோவிட்-19 ஒழிந்த பிறகு நிச்சயம் சென்று பார்ப்பேன். கெல்லி காசல் இரவு நேரத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

Muthukrishnan Ipoh: உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... பௌர்ணமி நிலவில் கெல்லிஸ் மாளிகை மிக அழகாக இருக்கும்... ஒரு நாள் இரவு அந்த வழியாகப் பத்து காஜா செல்லும் போது பார்த்து மெய் மறந்து போனேன்...

Don Samsa: அப்படியா தலைவரே..நன்றி

Arjunan Arjunankannaya காலை வணக்கம் அண்ணா.

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்...

Nagamah Muruta: அருமையான பதிவு அண்ணா. அடுத்த தொடருக்காகக் காத்து இருக்கிறேன் 👌😊

Manickam Nadeson: இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்த மர்ம மாளிகைக்கு சென்று வந்தேன். சிறு வயதில் கின்டா கிளாஸ் தோட்டத்தில் வசித்த ஞாபகம் வருகிறது. பதிவுக்கு மிக்க நன்றி ஐயா சார்.

Muthukrishnan Ipoh தெரிந்து இருந்தால் நானும் வந்து இருப்பேன் சார்... அப்படியே பத்து காஜா போய் இருக்கலாம்... சைவ பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும்...

Viji Nijtha அருமையான பதிவு ஐயா. அடுத்த தொடருக்காகக் காத்து இருக்கிறேன்....

Tanigajalam Kuppusamy கடந்த ஆண்டு நண்பர்களுடன் கெல்லிஸ் கோட்டையைப் போய்ப் பார்த்து வந்தேன். அந்த சுரங்கப் பாதை பற்றி கோவிலில் இருந்த ஒருவரும் கூறினார். ஆனால் நுழைவாயில் பற்றி விசாரித்த போது மழுப்பி விட்டார். உங்களுக்கு அதுபற்றி ஏதும் தகவல் கிடைத்ததா?

Muthukrishnan Ipoh கெல்லிஸ் மாளிகையில் மூன்று சுரங்கப் பாதைகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒரு பாதை கெல்லிஸ் மாளிகையில் இருந்து மாரியம்மன் கோயிலுக்குப் போடப்பட்டு இருக்கிறது.

அந்தப் பாதையை வில்லியம் கெல்லிஸின் மனைவி பயன்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அந்தச் சுரங்கப் பாதையை ஜப்பானியர்கள் காலத்திலேயே மூடி விட்டதாகவும் சொல்கிறார்கள்.



2003-ஆம் ஆண்டில் கெல்லிஸ் மாளிகைக்கு முன்புறம் சாலையைச் செப்பனிடும் போது அந்தச் சுரங்கப் பாதையைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மரத்தூண்களால் சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டு இருந்தது. அதைப் பற்றிய மேல் தகவல்கள் கிடைக்கவில்லை.
Maha Lingam: அற்புதம்... ஐயா. 1980-ஆண்டு நான் என் அண்ணன் (பலராமன் படவெட்டான்) அவர்கள் ஈப்போ, லகாட், பிஞ்சி தோட்டத்தில் இரப்பர் ஆலையில் துணை மானேஜராக இருந்த காலக் கட்டத்தில் கிந்தா கிலாஸ் தோட்டத்தில் எங்கள் நண்பர் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற போது... மாலை மணி 6 இருக்கும்.

அந்த நண்பரின் அப்பா ’இங்கு ஒரு பழைய 100 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மாளிகை இருக்கு... அவரது மகனோடு போய் பார்த்து விட்டு வாங்க... ஆனால் விரைவாக திரும்பி விட வேண்டும்.. இடம் சரியில்லாத இடம்... கவனம்..’ என்றார்.

நானும் எனது தம்பி இராமக்கிருஷ்ணனுடன் மூவருமாக இரு சக்கரத்தில் தோட்டத்துச் செம்மண் சாலையில் புறப்பட்டோம்.

ஒரு 10 நிமிடப் பயணத்துக்குப் பிறகு மாளிகையின் பின் புறமாக அடர்ந்த செடிக் கொடிகளை அகற்றி ஒரு வழியாக மாளிகையின் வளாகத்தை அடைந்தோம். அந்த மாளிகை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

சரித்திர இடம் என்றால் எனக்கு விருப்பம்... ஆர்வம். அந்தக் காலக் கட்டத்தில் அந்த மாளிகை வெளி உலகுக்குத் தெரியாமல் அந்தத் தோட்டக் கட்டுப்பாட்டில் இருந்ததால்... எனக்கு தெரிந்து அங்கு செல்ல அந்த தோட்டப் பாதைத் தான்... பத்து காஜாவுக்கும் சிம்பாங் புலாய் ஒட்டிய படித்தான் அந்த மாளிகை...

ஆனால், இந்த தார்சாலை பக்கமாக ஏதும் வழி அப்போது (1980 களில்) இருந்ததாக நான் அறியவில்லை... அந்த முதல் பயணத்திலேயே கொண்ட காதலால்...

எனக்கு குடும்பம் அமைந்த பிறகும்... பிள்ளைகள் இருந்த போதும்... பல முறை சென்று பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.

ஆக, உச்சி மேல் மாடி வரை சென்று வந்து உள்ளோம். இப்படியான சரித்திர தலங்களுக்குச் சென்று நம் முன்னோர்களின் பங்கு என்ன என்பதை நமது சந்ததியினருக்குச் சொல்லி விளக்க வேண்டும்.

அவர்களும் நாம் யார் என்பதை உணர்ந்து தெளிந்து மற்ற இனத்தவர்களோடு பீடு நடை போடுவார்கள். நன்றி ஐயா. எனது அனுபவத்தைப் பகிர வாய்ப் பளித்தமைக்கு...

அன்புடன்

மகாலிங்கம் படவெட்டான்
.

நாம் தமிழர் பினாங்கு.

Thanirmalai Muthusamy தமிழ் மலரில் இத்தொடர் முன்பு வந்த போது பலர், படித்து பாராட்டு வழங்கினர். நானும் கொஞ்சம் மேலே போய் கவிதையும் படித்தேன். ஆக இத்தொடர் மீண்டும் இடம் பெறுவது மகிழ்ச்சி நண்பரே.

Jaya Brakash ஆம் உண்மை தான்... sir. பெளர்னமி இரவு நிலவின் ஒளியில்.. தனி அழகு

Poovamal Nantheni Devi தொடருக்காக காத்திருக்கிறேன்



17 ஏப்ரல் 2020

மதியிறுக்கம்

மதியிறுக்கம் அல்லது தற்புனைவு ஆழ்வு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். இயல்பிற்கு மாறுபாடான மூளை வளர்ச்சி தான் மதியிறுக்கம் (மதி + இறுக்கம்). ஆங்கிலத்தில் ஆட்டிசம் (Autism) என்று அழைக்கிறார்கள்.


நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. சிறுவயது பிள்ளைகளிடம் காணப் படுகின்றது. தோற்றத்தில் சாதாரணப் பிள்ளைகள் போல் தான் இருப்பார்கள். ஆனால் போகப் போகத் தான் இவர்களின் செயல்பாடு அல்லது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.

இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஆங்கிலத்தில் Development disability. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு. 


மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது; நடக்க முடியாது; நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால் அவர்களால் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

ஆட்டிசம் உள்ள குழந்தைகளைச் சாதாரண குழந்தைகள் என்று நினைத்து வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை

மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.


பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் காணப்படும் இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றியும் நினைக்காமல் தங்களுக்கு என்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஒதுங்கி வாழ்வதுதான் முக்கியமான அறிகுறி.

மற்றவரின் கண்ணோடு கண்பார்த்துப் பேச மாட்டார்கள்.


பெயர் சொல்லி அழைக்கும் போது அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போக்கு குறைவாகக் காணப்படும்.

சிலர் தேவை இல்லாமல் எதை எதையோ பேசுவார்கள்.

சிலர் பேசவே மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஊமை அல்ல.

சில வேளைகளில் தேவை இல்லாமல் அழுவார்கள். தேவை இல்லாமல் சிரிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள்.


அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்கும். அதை மட்டும் திரும்பத் திரும்ப விளையாடுவார்கள்.

தொடக்கத்தில் பேசத் தொடங்கி பின்னர் திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு அறவே இல்லாமல் போகும்.

இந்தப் பிள்ளைகள் நேரம், இடம், யார், எவர் எனும் வேறுபாட்டை உணர மாட்டார்கள். இதர அறிகுறிகள்...

அடுத்தவர் கண்களைப் பார்த்து பேசாமல் இருப்பது;

ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டாமல் இருப்பது;

சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது;


பயம் அல்லது ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது;

விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பது;

ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வது;

காரணம் இல்லாமல் அழுவது;

காரணம் இல்லாமல் சோகத்தை வெளிப்படுத்துவது;

வலியை உணராமல் இருப்பது;

மாற்றங்கள் பிடிக்காமல் போவது;

பொருள் இல்லாத சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது;

இவை ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும்.


மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப் படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப் படுகிறது.

மதி இறுக்கத்திற்கான (ஆட்டிசம்) சில காரணங்கள் உள்ளன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

# மன இறுக்கம் கொண்ட மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் யாராவது இருந்தால்... ஆட்ட்சிசம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    
# மரபணு மாற்றங்கள்

# மரபணு கோளாறுகள்
    
# வயதான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை

# குறைந்த எடையில் பிறப்பு

# வளர்சிதை மாற்ற ஏற்றத் தாழ்வுகள் (metabolic imbalances)

# உலோகங்கள் மூலமாக அல்லது சுற்றுச் சூழலின் நச்சுகள் வெளிப்பாடு

வைரஸ் தொற்றுநோய்களின் பின்புலம்

# குழந்தை கருவில் இருக்கும் போது வால்ப்ரோயிக் அமிலம் (valproic acid  - Depakene) தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால்

# அல்லது தாலிடோமைட் (thalidomide - Thalomid) மருந்துகள் தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால் ஆட்டிசம் வரும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

aஅட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. ஆகவே அவர்களைக் கடவுளின் குழந்தைகளாக நினைத்து அரவணைத்துச் செல்வதே நமக்குப் புண்ணியம்.

சான்று: https://www.healthline.com/health/autism#causes

இந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அரவணைப்பு மிக முக்கியம். பெற்றோர்களால் தான் இந்தக் குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர இயலும். இதை ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவமானம் எனக் கருதவே கூடாது.

அப்படிப்பட்ட குழந்தையை ஏற்று, அந்தக் குழந்தைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான் மற்றவர்களும் மரியாதை கொடுக்க முன் வருவார்கள்.

அந்த ஜீவன்கள் நம்முடைய இன்ப துன்பத்தை உணர முடியாதவர்கள்.  துன்பமான துயரமான சூழநிலையில்கூட சிரித்துக் கொண்டு இருப்பார்கள். அதனால் அவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது.

அவர்களுக்கு மூளை குறைபாடு. அதனால்தான் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகளை இறைவனின் குழந்தைகளாக நினைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.


பேஸ்புக் பதிவுகள்
17 April 2020


Doraisamy Lakshamanan: வாழ்த்துகள் உறவுகளே! மனிதகுல மேம்பாட்டை வாழ்நாள்  வாழ்த்துகள் அனைவருக்கும்!

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... தங்களின் கருத்துகளுக்கு நன்றி...

Gunasegar Manickam: வணக்கம் ஐயா!!! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு ஐயா.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... கருத்துகளுக்கு நன்றி...

KR Batumalai Robert: நல்ல தகவல் அண்ணா. வணக்கம் வாழ்த்துக்கள்.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Sheila Mohan: காலை வணக்கம் சார்.. அருமையான விளக்கம்.

Muthukrishnan Ipoh: இனிய வணக்கம்... இனிதான வாழ்த்துகள்...

Melur Manoharan: "பயனுள்ள" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி...


Sathya Raman:
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளிலும் பலவிதமானர்கள், ரகமானவர்கள் இருக்கிறார்கள் சார். சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். சில குழந்தைகள் அதிகப் பிடிவாதத்தோடு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கத்திக் கொண்டே இருப்பார்கள்.


இன்னும் சிலர் பொது இடங்கள் அதிக மக்கள் கூட்டத்தைப் பார்த்து விட்டால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கத்திக் கூச்சல் போடுவார்கள். தரையில் படுத்து உருளுவார்கள். இத்தகையவர்களைக் கையாள்வதற்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும்.

இவர்களின் பெற்றோர்கள் குழந்தை பருவத்திலேயே இவர்களின் குறைகளை அறிந்து தெளிவு பெற்றால் இவர்களை திறமையிலும், ஆற்றலிலும் மற்ற சராசரி மனிதர்களைவிட மேன்மையாய் உருவாக்கிவிட, உயர்த்திட இயலும்.

அத்தகைய ஆட்டிசம் குறைபாடு உள்ள நிறைய பேர் முயற்சியால், பயிற்சியால் முன்னேற்றம் அடைந்து முன்னுக்கு வரும் நிஜங்களை நாம் கண்டு வருகிறோமே. வைரஸ் பதிவுகளையே பார்த்துப் பார்த்து ஒரு மாற்றத்திற்கு இன்றைய பதிவு மனதை சற்று இலகுவாக்கியது நன்றிங்க சார்.

Muthukrishnan Ipoh: வணக்கம். ஆட்டிசம் என்பது மூளை அமைப்பு அல்லது அதன் செயல்பாட்டில் உள்ள அசாதாரணங்களால் ஏற்படுகிறது என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஜீன் தொடர்பாக இருக்கலாம் என்றால் அதுவும் ஒரு பெரிய காரணம் அல்ல என்றும் சொல்கிறார்கள். குழப்பமாக உள்ளது.

தங்களின் நீண்ட பதிவின் வழியாக மேலும் பல புதிய தகவல்கள்... நன்றிங்க...

தவிர,

மதி இறுக்கத்திற்கான (ஆட்டிசம்) சில காரணங்கள் உள்ளன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

# மன இறுக்கம் கொண்ட மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் யாராவது இருந்தால்... ஆட்ட்சிசம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

# மரபணு மாற்றங்கள்

# மரபணு கோளாறுகள்

# வயதான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை

# குறைந்த எடையில் பிறப்பு

# வளர்சிதை மாற்ற ஏற்றத் தாழ்வுகள் (metabolic imbalances)

# உலோகங்கள் மூலமாக அல்லது சுற்றுச் சூழலின் நச்சுகள் வெளிப்பாடு

வைரஸ் தொற்றுநோய்களின் பின்புலம்

# குழந்தை கருவில் இருக்கும் போது வால்ப்ரோயிக் அமிலம் (valproic acid - Depakene) தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால்

# அல்லது தாலிடோமைட் (thalidomide - Thalomid) மருந்துகள் தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால் ஆட்டிசம் வரும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. ஆகவே அவர்களைக் கடவுளின் குழந்தைகளாக நினைத்து அரவணைத்துச் செல்வதே நமக்குப் புண்ணியம்.

சான்று: https://www.healthline.com/health/autism#causes
What Is Autism? Symptoms, Causes, Tests, Treatment, and More
healthline.com

Sun Dram: இந்த மாதிரி பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு.. இந்தப் பதிவு ஓர் வழிகாட்டுதலாக இருக்கும். நீங்கள் கூறியது போல... இவர்களைக் கடவுளின் பிள்ளைகளாகவே எண்ணும் மனப் பக்குவத்தை... அவர்களைப் பெற்றவர்கள் மட்டும் அல்ல... இந்தச் சமுதாயமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உண்மை... ஐயா அவர்களுக்கு நன்றி.

Thavamalar Nadarajan: Wonderful sharing

Periasamy Ramasamy: அவர்களுக்கு விருப்பமான ஒரு துறையைத் தேர்ந்து எடுப்பது சற்று சிரமமே. இருப்பினும் சமீப காலமாக, சில வகை ஊட்ட மருந்துகளோடு, இசைப் பயிற்சி, உடல் வாகுக்கு ஏற்றால் போல, உடலும் உள்ளமும் இசையுமாறு சில விளையாட்டுகள் அறிமுகப் படுத்தி வருகிறார்கள்.

முந்தைய காலங்களை விட நல்ல பலனைத் தருவதாக ஆய்வொன்று கூறுகிறது. படித்த நினைவு. பெற்றோருக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவைப் படும் ஒரு சவால் என்பதைக் கண்கூடாகப் பார்த்தும் இருக்கிறேன்.

Balamurugan Balu: வணக்கம் ஐயா! அருமையான தகவல்! நன்றி ஐயா

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி.... நன்றி... வாழ்த்துகள்...

Jainthee Karuppayah: நன்றிங்க தகவல் தரும்... அறிவின் இருப்பிடமே... இப்படி பட்ட குழந்தைகளுக்கு தற்போது ஆலோசனை மற்றும் சில வைத்தியம் பார்த்து வருகிறோம்...

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... நல்ல சேவை... புண்ணியம் சேர்க்கும் சேவைகள்... வாழ்த்துகிறோம்...






16 ஏப்ரல் 2020

வடை சுடும் அதிபர்களும் வாய்ச் சவடால் தலைவர்களும்

தமிழ் மலர் - 14.04.2020

ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், இடி அமின், ஹிடாக்கி தோஜோ, பால்பாட் போன்ற பிம்பங்கள் சட்டென்று நம் நினைவிற்கு வருகின்றன. அதற்கு ஒரே ஒரு காரணம். அவர்களின் இரத்தவெறி பிடித்த குரூரக் கோரத் தாண்டவங்கள் தான்.




அவர்களின் மறக்க முடியாத கொடூரங்கள்; மறைக்க முடியாத படுகொலைகள்; உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறந்தும் போகாது. மக்களின் பெயரில், மதத்தின் பெயரில், இனத்தின் பெயரில் பல்லாயிரம் படுகொலைகளைச் செய்தவர்கள். பாவிகள் என்று சொல்லவில்லை. வரலாறு முடிவு செய்யட்டும்.

சூரியன் அஸ்தமிக்காத வெள்ளைக்கார நாடு பிரிட்டன்;

லத்தீன் அமெரிக்காவைச்
சாட்டையில் சரிகட்டிய நாடு ஸ்பெயின்;

இந்தோசீனாவின் இடுப்பை உடைத்து அங்கோர் வாட்டில் தொங்கப் போட்ட நாடு பிரான்ஸ்; 




சயாம் பர்மா இரயில் பாதையை நரபலி மேடையாக மாற்றி அமைத்த ஏகாதிபத்திய நாடு ஜப்பான்;

முறுக்கு மீசை முசோலினியின் பாசிச அலைகளில் ஆப்பிரிக்க அடிமைத்தனம்;

நாஜி என்கிற அவலமான அசைவத்தின் பிதா மகனாய் ஹிட்லர்;

ஐஸ்பெட்டியில் மனிதத் தலைகளை அழகு பார்த்த நரபலி நாயகன் இடி அமீன்;

கம்போடிய மக்களில் காலவாசிப் பேரைக் காணாமல் செய்த பால்பாட்;

இப்படிப்பட்ட இவர்களை எல்லாம் எதிர்த்துச் சரிகட்டி... வயல் கட்டி... கலப்பை கட்டி... மாடு கட்டி... ஏர் உழுத அமெரிக்காவிற்கு இப்போதைக்கு ஒரே ஒரு குடைச்சல்... ஒரே ஒரு தலைவலி... வட கொரியாதான். 




அதில் தலையாய தலைச்சன் பிள்ளை கிம் ஜாங் உன் தான். வட கொரியாவில் கொரோனா நிலைமை எந்த அளவிற்குப் போய்க் கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றியது தான் இன்றைய கட்டுரை.
உலக நாட்டாமை அமெரிக்காவிற்கே தண்ணீர் காட்டும் ஒரு நாடு இருக்கிறது என்றால் அது வட கொரியாவாகத் தான் இருக்க முடியும். ஒரு புரட்சிகரமான நாடு. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட நாடு. இராணுவத்தை வைத்துக் கொண்டு இரும்புத் திரை போடும் நாடு.

அதன் தலைவர் அதிபர் கிம் ஜாங் உன். இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிரடிச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடத்தி வரும் அணு ஆயுதச் சோதனைகளைக் கண்டு ஒட்டு மொத்த உலக நாடுகளுமே கண்களைக் கசக்குகின்றன.

அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும் எனப் பல வல்லரசு நாடுகள் தலையால் அடித்துக் கொள்கின்றன. இருந்தாலும் கிம் ஜாங் உன் கண்டு கொள்வதாக இல்லை. 




’நீ என்ன சொல்ல நான் என்ன’ கேட்க என்று அணு ஆயுத விசப் பரீட்சையில் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, அவர் ஸ்டைலில் அவர் பாட்டுக்கு கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஏலேலே தில்லாலங்கடித் தலைவர்களில் நம்பர் ஓன் தலைவர் என்று சொல்லலாம். ஆனாலும் என்னை மிதித்தால் உன்னை மிதிப்பேன் என்கிற ஒரு தனிப்பட்டபோக்கு. சரி.

அவருடைய நாடு, அவருடைய மக்கள் என்று அவர் போக்கில் அவர் பாட்டிற்கு வட கொரியாவை ஆட்சி செய்து கொண்டு வருகிறார். மக்களாட்சி நாடோ, சோசலிச நாடோ, சர்வாதிகார நாடோ பிரச்சினை இல்லை.

பல கோடி மக்களைக் கவனித்துக் கொள்கிறாரே. பெரிய விசயம். ஆனான வல்லரசு நாடுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு வட கொரியாவைத் தன் பிடியில் இறுக்கிப் பிடித்து ஆட்சி செய்கிறாரே. பாராட்டுவோம்.

ஒழுக்கம் பழகுவது மனிதம்; ஒழுக்கம் நிறைவது புனிதம் என்று சொல்வார்கள். ஆனால் கொரோனா கிருமி தாண்டவம் ஆடத் தொடங்கியதும் போதும், மனிதம் கரைந்து போகின்றது. புனிதம் மறைந்து போகின்றது. உலகத்தின் ஒழுங்கு ஒழுக்க நியதிகள் எல்லாம் உடைந்து உலர்ந்து போகின்றன. 




மாறிப் போகும் அந்த நீதி நியதிகளில் இரை தேடும் உலகத் தலைவர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்களில் வெட்டிப் பேச்சு தலைவர்கள் இருக்கிறார்கள். வாய்ச் சவடால் விளம்பரத் தலைவர்கள் இருக்கிறார்கள். வாய்க்கரிசி போடும் வஞ்சகத் தலைவர்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு ரகத்தினர் வாயால் வடை சுடும் தலைவர்கள். இவர்களின் மத்தியில் ஓர் அகாசிய சூரர் வருகிறார். அவர் தான் கிம் ஜோங் உன். வட கொரியாவின் அதிபர்.

இப்போது உலகத்தையே வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா பிரச்சினையில் இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி விட்டது. ஆனாலும் சில நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்தில் இருந்து தப்பி உள்ளன. ஆச்சரியம் தான்.




ஏமன் (Yemen);
கிரிபட்டி (Kiribati);
கொமொரோஸ் (Comoros);
லெசோதோ (Lesotho);
மார்ஷல் தீவுகள் (Marshall Islands):
மைக்ரோனேஷியா (Micronesia);
வட கொரியா (North Korea);
பலாவ் (Palau),
சாலமன் தீவுகள் (Solomon Islands),
சமோவா (Samoa),
தஜிகிஸ்தான் (Tajikstan),
டோங்கா (Donga);
துர்க்மெனிஸ்தான் (Turkmenistan);
துவாலு (Tualu); நவ்ரு (Nauru);
வனுது (Vanuatu)

ஆகிய நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பியவை. இந்த விவரங்கள் நேற்று வரை (13.04.2020) நமக்குக் கிடைத்தவை. மாற்றங்கள் ஏற்படலாம்.




மேலே சொல்லப்பட்ட நாடுகளின் கொரோனா பாதிப்பு பற்றி இதுவரையிலும் அதிகாரப் பூர்வமாக உலகச் சுகாதார அமைப்பிடம் அறிவிக்கப் படவில்லை. ஆனாலும், அந்தப் பதினாறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாது.

அதற்கும் காரணங்கள் உள்ளன.

1. அந்த நாடுகளில் முறையான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத சூழல்நிலைகள் இருக்கலாம்.

2. சமூகச் சூழல் காரணங்களால் கொரோனா தகவல்களை வெளியிட முடியாமல் இருக்கலாம்.

3. பரவலைத் தடுக்கும் முயற்சியில் கடுமையான தனிமைப் படுத்தலை அமல் படுத்தி இருக்கலாம். சரி. வட கொரியா விசயத்திற்கு வருவோம்.

ஒருவரின் வலிமையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரின் எதிரியின் பலத்தை முதலில் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். 




அந்த வகையில் பக்கா பலசாலி உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டும் வட கொரியாவின் பலத்தை ஓரளவிற்கு நாம் யூகித்துப் பார்க்கலாம்.

கண்டிப்பாகப் பலம் வாய்ந்த இராணுவப் படை இருக்க வேண்டும். அதை வைத்துக் கொண்டு தான் அதிபர் கிம் ஜாங் உன் இல்லாத கில்லாடி வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்.

இராணுவத்தை வைத்துக் கொண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது. இரும்புத் திரைக்குப் பின்னால் நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம்.




கொரோனவைப் பற்றி தகவலை வெளியிடச் சொன்ன அமெரிக்காவையே அதிபர் கிம் ஜாங் எதிர்த்து நிற்கிறார் என்றால் சும்மாவா?

வடகொரியாவில் எவருக்கும் கொரோனா நோய் வரவில்லை என்று அந்த நாட்டு அரசாங்கம் சொல்கிறது. மிகப் பெரிய ஆச்சரியம் மிகப்பெரிய அதிசயம். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வரலாம் வராமலும் இருக்கலாம்.

உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. பாதிக்கப் பட்டவர்கள், மீண்டு வந்தவர்கள், மோசமான நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்கள்; இறந்தவர்கள் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டியல் போட்டுக் கலங்கி நிற்கின்றன.

இதில் ’நாங்கள் தான் கொரோனா இல்லாத சுதந்திரமான நாடு. எங்களிடம் கொரோனா வைரஸ் வாலாட்ட முடியாது’ என அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறது வடகொரியா. 




இத்தனைக்கும் வடகொரியாவின் வட எல்லையில் இருப்பது சீனா. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ஹுபே மாநிலத்திற்கு மிக நெருக்கமாக அமைந்து உள்ளது.

வட கொரியா - சீன எல்லை 1,450 கி.மீ நீளம் கொண்டது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான வட கொரிய மக்கள் எல்லையைக் கடந்து சீனாவிற்குள் வேலைக்குச் செல்கின்றனர். எல்லையின் இருபுறமும் கணிசமான அளவுக்கு கடத்தல் வேலைகளும் நடைபெறுகின்றன.

வட கொரியாவிற்கு எதிராக நிறையவே போர்க் கொடிகள். ’வட கொரியா சொல்வது எல்லாம் பொய். அந்த நாட்டின் அதிபர் கிம் என்றைக்குத் தான் உண்மை பேசி இருக்கிறார். அண்டப் புளுகர். ஆகாசப் புளுகர்’ என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் வரிந்து கட்டி மல்லுக்கு நிற்கின்றன  எது உண்மை? தெரியவில்லை.




வட கொரியாவின் அரசாங்க நாளிதழ் ரோடோங் சின்முன் (Rodong Sinmun). அதில் வெளியான செய்தி. ’சீனாவின் நிலவரத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் ஜனவரி மாதமே உஷாராகி விட்டோம். எங்கள் நாட்டு எல்லையை மூடியதுதான் நாங்கள் செய்த முதல் வேலை.’

’வியாபாரம், சுற்றுலா, போக்குவரத்து என எல்லாவற்றையும் தடை செய்து விட்டோம். எங்கள் நாட்டு மக்களுக்கு கண்டிப்பான கட்டளைகள் போட்டு விட்டோம். இப்படித்தான் நாங்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து வருகிறோம்’ என்கிறது அந்தப் பத்திரிகை. உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் அதை அமெரிக்கா நக்கலாய்ச் சிரித்து நையாண்டியாய்ப் பார்க்கிறது. வெற்று ஜம்பம் காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வடகொரிய இராணுவம் எந்தவிதமான இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை.

கடந்த ஒரு மாதமாக சாலைகளில் வடகொரிய கவச வாகனங்களைக் காணவில்லை. 




வானம் வெளுத்துப் போய்க் கிடக்கிறது. இராணுவ விமானங்கள் பறக்கவில்லை. கடலும் நீர்த்துப் போய்க் கிடக்கிறது. இராணுவக் கப்பல்களைப் பார்க்க முடியவில்லை என்று அமெரிக்காவின் புலனாய்வுகள் சொல்கின்றனவாம்.

தென்கொரியாவின் தலையாய நாளிதழ்கள் சோசுன் இல்போ (Chosun Ilbo); டோங் ஆ இல்போ (Dong-a Ilbo). சியோல் நகரத்தில் இருந்து வெளியாகின்றன.   
இவை அண்மையில் வெளியிட்ட செய்திகள் அதிர்ச்சியைத் தருகின்றன. கொரோனா நோயினால் 200 வடகொரிய இராணுவ வீரர்கள் இறந்து விட்டனர். 4000 இராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வடகொரியா தடுமாறுகிறது என்கிற செய்திகள்.




இன்றையக் காலக் கட்டத்தில் வடகொரியா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து இருக்கின்றன. அவற்றில் மருத்துவத் தடைகளும் அடங்கும். அதனால் வடகொரியாவின் சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. உண்மை.

வடகொரியாவின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் நல்ல சுகாதார வசதிகளுடன் வாழவில்லை என்றும் மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. உலகச் சுகாதார நிறுவனமும் உறுதிப் படுத்துகிறது.

இந்த நிலையில் கொரோனா நோய் வடகொரியாவைத் தாக்கினால் அந்த நாடு நிச்சயமாகப் பெரிய விலை பேச வேண்டி இருக்கும். பெரும் இழப்பையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலையில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சி பல நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளது வடகொரியா.




அந்த நாட்டின் இரும்புத் திரைக்குப் பின்னால் இறுக்கமான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தெரிந்த விசயம். அதனால் உண்மையிலேயே அங்கே கொரோனா பாதிப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை எவராலும் இன்றுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பரம இரகசியமாக இருக்கிறது.

இருந்தாலும் சில தரப்பினர் வடகொரியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். 2014-ஆம் ஆண்டில் எபோலா நோய் வந்த போது வடகொரியா தன் எல்லைகளை இழுத்து மூடியது. கடல் பயணங்களை ரத்து செய்தது. சிலருக்கு நினைவு இருக்கலாம்.

அதைப் போலவே இப்போதும் எல்லைகளை மூடி இருக்கலாம். கொரோனாவில் இருந்து தப்பி இருக்கலாம். சொல்ல முடியாது.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். வட கொரியாவில் ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக ஏகாதிபத்திய ஆட்சி. பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியே போக முடியாது. அங்கே இணையச் சேவை இல்லை. சினிமா இல்லை. தொலைகாட்சி வசதிகள் இல்லை. அதனால்தான் அந்த நாட்டின் இரகசியங்கள் வெளியே தெரிவதும் இல்லை. 




ஊடகங்கள் வட கொரியாவை ஒரு சாத்தானாகவே சித்தரித்து வருகின்றன. வட கொரிய தரப்பில் இதை மறுக்கவோ அல்லது அது சம்பந்தமாக விளக்கம் அளிக்கவோ எவரும் இல்லை. அதிபர் கிம் ஜாங் உன் மட்டுமே உலக நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 

அமெரிக்காவும் சரி; அதன் அடிவருடி ஊடகங்களும் சரி; வடகொரியாவிற்கு எதிராக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரசாரம் செய்து வருகின்றன. அது அவற்றின் பிரேக்கிங் நியூஸ் கலாசாரம். நக்கலான பொழுது போக்கு.

என்றைக்கு அந்தப் பிரசாரங்கள் நிறுத்தப் படுகின்றனவோ அன்றைக்குத் தான் வடகொரிய அதிபரின் ஏவுகணைச் சில்மிசத்திற்கும் வனவாசம். அன்றைக்குத் தான் வட கொரியாவிற்குப் பூவாசம்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.04.2020

பேஸ்புக் பதிவுகள்
16 April 2020


Sathya Raman: இந்த வட கொரிய அதிபர் தனது சக நாடான தென்கொரியாவையே கண்ணில் சுண்ணாம்பு வைத்து சுடுபவர் ஆயிற்றே? சில ஆண்டுகளுக்கு முன்பு இவரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்தித்த போது வட கொரிய அதிபரின் நடவடிக்கைகள்... அவர் உண்ணும் உணவில் இருந்து... காலைக் கடன்கள் வரை மிகவும் இரகசியமாகவே வைக்கப் பட்டதாம்...

அவர் சம்பந்தபட்ட கழிவுகளைக்கூட சிங்கப்பூரில் கலக்க விடாத அளவிற்கு மிக ரகசியமாய், பாதுகாப்பாய் எடுத்து சென்றதாகச் சொல்லப் பட்டது. இந்த வைரஸ் தொற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார்... உங்களின் அடுத்தப் பதிவை ஆவலோடு எதிர்பார்கிறேன் சார்.

Muthukrishnan Ipoh:
மேலும் ஒரு வேதனையான தகவல். ஹனோய் நகரில் நடந்த அமெரிக்க - வட கொரியா உச்ச மாநாடு தோல்வி அடைந்தது.

அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த வட கொரியாவின் சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் (Kim Hyok Chol) மற்றும் வெளியுறவு அமைச்சின் 4 அதிகாரிகளுக்கும் 2019 மார்ச் மாதத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மாநாடு தோல்வி அடைந்ததால் கிம் ஜோங் உன் (Kim Jong Un) கோபம் அடைந்தார். இது தென் கொரியாவின் குற்றச்சாட்டு. இந்தத் தகவல் இன்னும் உறுதிபடுத்தப் படவில்லை.

சான்று: https://www.cnbc.com/.../kim-jong-un-reportedly-executes...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: மனித மாமிசம் தின்றதாகச் சொல்லப்படும் உகண்டாவின் முன்னாள் அதிபர் இடி ஆமினைவிட கொடுங்கோலன் போல் இருக்கே இந்த வட கொரிய அதிபர்?

Don Samsa: வணக்கம் தலைவரே, வெள்ளை குண்டுப் பன்னி கிம் நிச்சயம் இந்த வேலையை செய்திருப்பான். கிம் ஒரு சரியான கிறுக்கன். அமெரிக்கா அதிபர் டிராம்ப் இருமுறை கிம் அவனிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார் கிம்மிடம்.

டிராம்பின் பப்பு வேகவில்லை அத்தோடு அமெரிக்கா தன் வாயை பொத்திக் கொண்டு இருக்கிறது... இப்போது அணு ஆயுத விடயத்தில். கிம் மட்டும் ஒரு டம்மி பீசாக இருந்திருந்தால் எப்பவோ அமெரிக்கா வட கொரியாவை விழுங்கி இருக்கும்... ஈராக்கை விழுங்கியது போல்...

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: அதிகாரத்தில் நிலைத்துப் பேர் போட வேண்டும் என்றால் சில அதிரடியான சில அநியாயமான காரியங்களை அரசியல்வாதிகள் செய்வார்கள்... இந்தச் செய்தி இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை...

Muthukrishnan Ipoh >>> Don Samsa: உண்மை தான் ஐயா.... அதிபர் டிரம்ப் சற்று இடக்கு முடக்கான மனிதர் தான்...

Don Samsa தலைவரே, அமெரிக்காவுக்கு சரியான அதிபர் புஷ் மட்டுமே.

சிமா. இளங்கோ: பொறுக்கி எடுத்த புறம்போக்குத் அதிபர்கள்! நிழலுக்கே கர்ப்பம் தரும் நன்கொடையாளர்கள்!!! இவர்கள் மனிதம் அல்ல! வேறு பேரு!!!--

Muthukrishnan Ipoh: மனித வரலாற்றில் தலைவர்கள் சிலர் மிகக் கொடூரமான மனிதர்களாய் வாழ்ந்து இருக்கிறார்கள் ஐயா... மனுக்குலம் அவர்களை மன்னிக்காது...

Don Samsa: வட கொரியா ஒரு மர்மமான தேசம். இதுநாள் வரையிலும் ஒரு செய்தி கூட வெளியே வரவில்லை கொரோனா தொற்று நோய் பற்றி அந்த நாட்டில் இருந்து... அணு ஆயுதமே அந்த நாட்டின் மிகப் பெரிய பலம். அது மட்டும் இல்லாமல் செய்து விட்டால் போதும்...

அமெரிக்கா எந்த நேரத்திலும் வட கொரியாவை ஈராக் போல் ஆக்கிவிடும். யூதர்களின் இலுமனாட்டி கழுகு பார்வை வட கொரியாவில் மட்டும் வேக மறுக்கிறது.

இது மட்டும் அல்ல. அங்கே வாட்சாப், முகநூல், கைபேசிகள் கூட பொது மக்கள் உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் மலேசியராக இருந்தால், ஜோர்டான் நாட்டு எல்லை வழியாக கூட இஸ்ரேலிய நாட்டிற்கு சென்று வந்து விடலாம். ஆனால் வட கொரியாவிற்குத் திருட்டுத் தனமாக நுழைவது என்பது நரகத்திற்கு செல்வதற்குச் சமமாகும்.

Sathya Raman >>> Don Samsa: உங்களின் பதிவு முற்றிலும் உண்மைதான் சார். சில தென் கொரிய திரைப் படங்களிலோ அல்லது சீரியல்களிலோ வட கொரியாவில் இருந்து தப்பித்து வருவதற்கு அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் கந்தலாகி, கஞ்சி காய்ச்சி எடுக்கப் படுவார்கள்.

அத்துனை கொடூரமாக துன்பத்தை அனுபவிப்பதைப் போல் காட்சிகள் தத்துரூபமாக இருக்கும். தென் கொரிய படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. அவர்களது தொலைநோக்கு பார்வையும், கதை களமும் படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டும்.

தென் கொரிய படக் கம்பெனிகள் வட கொரியவைப் பற்றி கதை பண்ணுவதற்கே கதி கலங்கியே ஆகணும். ஒரு தனிமனித அதிபரின் கொடுங்கோல் ஆட்சியில் அங்குள்ள மக்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்க வில்லைதான்.😥

Don Samsa: நவீன காலத்தில் இப்படியொரு அரக்கன்.. என்ன செய்ய சார்.. ஆனால் வட கொரியா மற்ற வல்லரசு நாடுகள் போலவே காட்சி அளிக்கும் எப்போதும். அங்கரிக்கப் படாத வல்லரசு வட கொரியா..

Jainthee Karuppayah: Omg...

Sai Ra: Sir tayavu seitu todarchiyai poodunggal. Aarvak koolaru toongga mudiyavillai. Ennattai Solla valakkam poolavee tanggalin eluttu miga Swarassiam. Paaraaddukkal. (தயவு செய்து தொடர்ச்சியைப் போடுங்கள். ஆர்வக் கோளாறு தூங்க முடியவில்லை. வழக்கம் போலவே தங்களின் எழுத்து மிக சுவராசியம். பாராட்டுக்கள்.)

Sri Kaali Karuppar Ubaasagar: ஆஹா... அருமை பிரமாதம் அண்ணா🙏🏼🌹

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Tanigajalam Kuppusamy: அகாசிய சூரர், அசகாய சூரர் - இவற்றில் எது சரிங்க தலைவரே!

Muthukrishnan Ipoh: அகாசியம் என்று தமிழில் சொல் இருப்பதாகத் தெரியவில்லை... ஆனால் அகசியம் எனும் சொல் இருக்கிறது. ஹாஸ்யம் அல்லது வேடிக்கை என்று பொருள். அகசியக்கூத்து; அகசியகாரன் எனும் பெயர்ச்சொற்களும் உள்ளன.

அசகாயம் என்றால் சாகசம். அசகாயச் சூரர் எனும் சொல் இருக்கிறது சார்.

அசாத்தியமான மனிதர். மெட்ராஸ் பாஷையில் ஒசத்தியான மனிதர். அல்லது சூப்பர் பிகர். 😃😃

கட்டுரையில் தவறாக உள்ளது... மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறீர்கள்... சமயங்களில் பூனையும் புல்லைத் தின்னும் சார்.... சும்மா ஒரு ஜோக் சார்... 😃😃

Tanigajalam Kuppusamy: கட்டுரையில் அகாசிய சூரர் என்றிருந்தது. அதுதான் ஐயம் தலைவரே!

Muthukrishnan Ipoh: திருத்தி விட்டேன் ஐயா...

Tanigajalam Kuppusamy: மன்னித்துக் கொள்ளுங்கள். முத்துக்கிருஷ்ணனின் படைப்பில் பிழை வந்துவிடக் கூடாதென்ற பேராசைதான்.

Muthukrishnan Ipoh: அகம் மகிழ்ந்து போகிறேன்... நன்றி... நன்றி... நன்றிங்க தணிகா...

Tanigajalam Kuppusamy: 🙏🌺

Sai Ra >>> Muthukrishnan Ipoh: Nakkiiraro.... 😂 (நக்கீரரோ...)

Jainthee Karuppayah: பயங்கர ஆட்சி...