தமிழ் மலர் - 01.07.2020
போதி சத்வ தேவி பிரஜ்ன பரமிதா (Bodhi Sattva Devi Prajna Paramita). இனிதான அழகிய பெயர். ஆனந்தங்கள் பூக்கும் அழகிய பைரவி. அர்த்தங்கள் தொனிக்கும் அம்ச வர்த்தனி. வடச் சொல்லாக இருந்தாலும் கடந்து போக முடியவில்லை.
பெயருக்கு ஏற்றவாறு சிலையின் நயனமும் நளினங்களும் எதார்த்தமான நெழிவு சுழிவுகளை அள்ளித் தெளிக்கின்றன. அத்தனையும் அற்புதமான நளினங்கள். பொலிவும் தெளிவும் அழகும் சிலை செதுக்கல் மிருதுவிலும் வளை ஓசைகள் போலும். ஒரு சொர்க்க லோகச் சுந்தரி போலும். நகையும் உவகையும் தொகையாய் தனி ஓர் ஆவர்த்தனம்.
பொதிகை மலை உச்சியில் நீராடும் கன்னியாய் மேலே இருந்து கீழே இறங்கி வந்து இருக்கலாம். இடம் தேடி இந்தோனேசியாவில் தடம் பதித்து இருக்கலாம். சொல்ல முடியாது. புன்னகை பூக்கும் அந்தப் பூவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது. மிக அற்புதமான கலை வடிவம்.
அதற்கு முன்னர் பௌத்த சமயத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன். ஏன் என்றால் இந்தச் சிலைக்கும் பௌத்த மதத்திற்கும் தொடர்புகள் உள்ளன.
பௌத்த சமயத்தில் பல பிரிவுகள் உள்ளன. தேரவாதா பௌத்தம்; ஜென் பௌத்தம்; மகாயான பௌத்தம்; யோகாசாரா பௌத்தம்; வஜ்ஜிராயன பௌத்தம். ஏறக்குறைய ஒரு பத்துப் பிரிவுகள் உள்ளன.
இருப்பினும் இரு முக்கியமான பிரிவுகள் உள்ளன. தேரவாத பௌத்தம்; மகாயான பௌத்தம். ஒரு செருகல். பௌத்தம் அல்லது புத்தம். இரண்டும் ஒன்றுதான். குழம்பிக் கொள்ள வேண்டாம்.
இதில் தேரவாத பௌத்தம் என்பது இலங்கை, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா நாடுகளில் பின்பற்றப் படுகின்றது. மகாயான பௌத்தம் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தைவான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
வச்சிரயான பௌத்தம் என்று மூன்றாவது வகையும் உள்ளது. திபெத்து, மங்கோலியாவில் பின்பற்றப்படுகிறது.
மகாயான பௌத்தம் (Mahayana Tantric Buddhism) என்பது அவற்றில் ஒரு பிரிவு தான். அந்தப் பௌத்தப் பிரிவில் ஓர் உயர்ந்த நிலைப்பாட்டின் தெய்வமாகப் போற்றப் படுகிறவர் தான் இந்த சத்வ தேவி பிரஜ்ன பரமிதா.
இவரை வஜ்ர தாரா (Vajradhara) என்றும் அழைப்பது உண்டு. பௌத்த மதத்தில் மிக உயர்ந்த அறிவின் சக்தி என்று கருதப் படுகிறவர். அதாவது பௌத்த மதத்தின் பெண் தெய்வமாகக் கருதப் படுகிறவர். சரி.
13-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவை சிங்காசரி (Singhasari) எனும் பேரரசு ஆட்சி செய்த காலத்தில், போதி சத்வ தேவி பிரஜ்ன பராமிதாவின் (Bodhisattvadevi) ஓவியங்களும்; கற்சிலை வேலைபாடுகளும் நிறையவே உருவாக்கப் பட்டன. அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள். பிரமாதமான துல்லிதமான கைத் திறன்கள்.
அந்த வகையில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய பிரஜ்ன பரமிதா சிலையைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம். இதைப் போல நிறைய சிலைகள் செதுக்கப்பட்டு இருக்கலாம். சில சிலைகள் கிடைத்து உள்ளன. ஆனால் சேதம் அடைந்து விட்டன.
13-ஆம் நூற்றாண்டில், மகாயான பௌத்தம் சிங்காசரி பேரரசின் ஆதரவைப் பெற்று சிறந்து விளங்கியது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு ஜாவாவில் சிங்காசரி பிரஜ்ன பரமிதா; சுமத்திரா ஜம்பியில் பிரஜ்ன பரமிதா போன்ற சில பிரஜ்னபரமிதா சிலைகள் உருவாக்கப் பட்டன.
கிழக்கு ஜாவாவின் சிங்காசரி பிரஜ்ன பரமிதா (Prajnaparamita Singhasari) சிலையும்; சுமத்திரா ஜம்பி பிரஜ்ன பரமிதா (Prajnaparamita Jambi) சிலையும் ஒரே காலக் கட்டத்தில் தயாரிக்கப் பட்டவையாக இருக்கலாம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சுமத்திரா ஜம்பி பிரஜ்ன பரமிதா சிலையின் தலைப் பாகம் இல்லாமல் மோசமான நிலையில் கிடைத்தது.
அவற்றில் இந்தக் கிழக்கு ஜாவா சிங்காசரி பிரஜ்ன பராமிதா சிலை, சிறந்த ஓர் அழகியல் வரலாற்றைக் கொண்டது.
கிழக்கு ஜாவா (East Java), மலாங் (Malang), குங்குப் புத்ரி (Cungkup Putri) எனும் இடத்தில் சிங்காசரி காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப் பட்டது. அந்தக் கோயிலுக்கு (Singhasari temple) அருகில், 1818-ஆம் ஆண்டு, இந்தச் சிலை கண்டு எடுக்கப் பட்டது.
அந்தச் சிலைதான் சிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை. கிட்டத்தட்ட சரியான நிலையில்; சிதைபடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்ச காலம் மண்ணுக்குள் புதைபட்டு இருந்து இருக்கலாம்.
சிங்காசரி கோயிலுக்கு அருகில் ஒரு கோயில் வளாகம். அதன் தெற்கே ஒரு சிறிய விகாரம். அங்குதான் அந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலையைக் கோயில் பொம்மை (Candi Wayang); அல்லது குங்க்குப் புத்ரி (Cungkup Putri) என்றும் உள்ளூர் மக்கள் அழைத்தார்கள். இன்றும் அழைக்கிறார்கள்.
சிலையைக் கண்டுபிடித்தது உள்ளூர் மக்கள் தான். அவர்களிடம் இருந்து கிழக்கு டச்சு கம்பெனியைச் சேர்ந்த மோனேரியோ (D. Monnereau) என்பவர் அந்தச் சிலையை பெற்றுக் கொண்டார்.
இருந்தாலும் அவர் கண்டு எடுத்ததாக வரலாறு சொல்கிறது. மலேசிய மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’லெம்பு பூஞ்ஞா சூசு; சாப்பி பூஞ்ஞா நாமா’. பசுவின் பால். வெண்ணெய்க்கு பேரும் புகழும். அது இதுதான் போலும்.
1820-ஆம் ஆண்டில் இந்தச் சிலையை ரெய்ன்வார்ட் (C.G.C. Reinwardt) என்பவர் இந்தோனேசியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு கொண்டு போனார். அங்கு உள்ள ரிஜக்ஸ் (Rijksmuseum, Leiden, Netherlands) அரும் காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 158 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிலை அங்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தது.
1978-ஆம் ஆண்டு நெதர்லாந்து ராணியார் ஜூலியானா (Queen Juliana) இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்தார். அப்போது இந்தச் சிலையை இந்தோனேசியாவிற்கே மீண்டும் கொடுத்தார். இந்தச் சிலை இப்போது ஜகார்த்தாவில் இருக்கும் இந்தோனேசியா தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Indonesia) உள்ளது.
அந்த அருங்காட்சியகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கெடுங் அர்கா (Gedung Arca) அரங்கத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
அழகியல் பாவனையில் ஆன்மீகத்தை இணைக்கும் (combines aesthetic perfection and spirituality) அரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் புகழப் படுகிறது. பண்டைய காலத்து இந்தோனேசிய கலையின் சிறப்புமிக்கச் சின்னமாகவும் மாறி உள்ளது.
சிலையின் அமைதியான வெளிப்பாடு; தியானத்தின் அழகிய நிலை; சைகைச் சயனங்கள்; செல்வச் செழிப்பின் அலங்காரங்கள்; அவற்றின் மத்தியில் அமைதியையும் ஞானத்தையும் பரிந்துரைக்கும் பாவனைகள். வஜ்ராசனா தெய்வத் தோரணைகள் (vajrasana posture). தாமரை கோலத்தின் ஒரு தியான நிலை. மனதைக் கொள்ளை அடிக்கும் பெண்மையின் லாவண்யம்.
பத்மாசனம் போட்ட நிலையில், இரட்டை தாமரை பீடத்தின் (lotus pedestal) மீது அமர்ந்து இருக்கும் அப்சாரா அழகின் காட்சி. மேகங்கள் கலைந்த நிர்மலமான ஜீவியப் பெண்மை. ஆகா... எப்படி வர்ணிப்பது. இதற்கு மேல் என்னாலும் போற்றிப் பூஜிக்க இயலவில்லை.
ஆக அந்த வகையில் இந்தோனேசியாவில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளில் இந்தப் பிரஜ்ன பரமிதா சிலைதான் மிக மிகப் புகழ்பெற்றது. மதிப்பு மிக்கது. நீல நயனங்களைத் தாண்டிய நீல மேகங்களின் நளினம்.
(The statue is of great aesthetical and historical value, and is considered as the masterpiece of classical Hindu-Buddhist art of ancient Java. Today, the statue is one of the prized collection of the National Museum of Indonesia, Jakarta.)
பண்டைய ஜாவாவில் புதைந்து போய் இருக்கும் பழைமை வாய்ந்த கலையில் தலைசிறந்த படைப்பாக இந்தப் பிரஜ்ன பரமிதா சிலை கருதப் படுகிறது.
இந்தச் சிலைக்கு கிழக்கு ஜாவாவின் பிரஜ்ன பரமிதா (Prajnaparamita of East Java) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.
இந்த சிலையின் உயரம் 126 செ.மீ. அகலம் 55 செ.மீ. தடிமன் 55 செ.மீ. வெளிர் சாம்பல் நிறம். எரிமலைப் படிகப் பாறைக் கல்லால் செதுக்கப் பட்டது.
இந்தச் சிலை சிங்கசாரியின் முதல் ராணியாக இருந்த கென் தெடிஸ் (Ken Dedes) என்பவரின் சிலையாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதே கருத்தைச் சொல்கிறார்கள்.
சிங்கசாரி பேரரசைத் தோற்றுவித்தவர் கென் அரோக் எனும் ராஜசா (Ken Arok, Rajasa). பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர். இவரின் மூலமாகத் தான் மஜபாகித் அரசின் எல்லா வாரிசுகளும் தோன்றினார்கள்.
மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வராவும்; சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமனும் ராஜசா மன்னரின் வழித் தோன்றல்கள் தான்.
இந்த சிலையைப் பற்றி மற்றொரு கருத்து உள்ளது. மஜபாகித் (Majapahit) பேரரசின் முதல் மன்னர் கீர்த்த ராஜாசா (Rajasa). இவரின் மனைவி காயத்ரி ராஜ பத்தினி (Gayatri Rajapatni). அவரைச் சித்தரிக்கும் சிலையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடுங் காலமாகப் பயணித்து வந்து உள்ளது. புத்த மதம் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் 1800 ஆண்டுகளாக இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல பேரரசுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். பல எண்ணற்ற இந்து புத்த ஆலயங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். பல்லாயிரம் பளிங்குச் சிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் சிங்காசரி பிரஜ்ன பரமிதா சிலை.
இந்தோனேசியாவில் இந்தியர்கள் உருவாக்கிய பேரரசுகள் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். உலகம் இருக்கும் வரையிலும் வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் பேராண்மைகள்.
ஒரு பக்கம் உண்மையான வரலாற்றை வாழ்த்தித் துதிக்கின்றார்கள். இன்னொரு பக்கம் அதே வரலாற்றை வரலாற்றை தாழ்த்தி மிதிக்கின்றார்கள். வாழ்த்துவதும் துதிப்பதும் பேராண்மைத் தன்மையின் வரலாறுகள். மிதிப்பதும் சிதைப்பதும் பேராண்மைத் தன்மையின் கோளாறுகள். இன்னும் ஒரு விசயம்.
இந்தோனேசியாவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று முடியும். பார்த்து இருக்கலாம். கேட்டும் இருக்கலாம். இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
ஒருமுறை ஜப்பானிய செய்தியாளர் ஒருவர் கருடா விமானத்தில் தோக்கியோவில் இருந்து பயணிக்கும் போது, இந்திராவதி எனும் விமானப் பணிப்பெண்ணைப் பார்த்து, “நீங்கள் ஏன் இப்படி இந்தியப் பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அதற்கு அவர், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதில் சொன்னாராம். நெஞ்சத்தில் சுமை. சன்னமாய்க் கனக்கின்றது.
சான்றுகள்:
1. Ann R. Kinney; Marijke J. Klokke; Lydia Kieven (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press.
2. Drake, Earl (2012). Gayatri Rajapatni, Perempuan di Balik Kejayaan Majapahit. Yogyakarta: Ombak.
3. Collectionː Prajnaparamita. National Museum of Indonesia.
4. https://en.wikipedia.org/wiki/Prajnaparamita_of_Java
இந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் (Universitas Hindu Indonesia) அல்லது (Hindu University of Indonesia) என்பது பாலி, டென்பசார் நகரில் அமைந்து உள்ள ஓர் உயர்க் கல்வி நிறுவனம் ஆகும். இந்து சமயம்; இந்து கலைக் கலாசாரம்; இதர தொழில்நுட்பக் கல்வித் துறைகளில் உயர்க்கல்வி வழங்கி வருகிறது.
தவிர இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பல்துறை உயர்கல்விப் பட்டங்களுக்கு வழிவகுக்கும் படிப்புகளையும் இந்தக் கல்விக்கூடம் வழங்கி வருகிறது.
இந்தோனேசியாவில் மட்டும் அல்ல; தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்து சமயத்தைப் பற்றிப் போதிக்கும் ஒரே பல்கலைக்கழகமாக இந்த இந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது.
இந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் என்பது 1963-ஆம் ஆண்டில் இந்து தர்ம அரசு உயர்க்கல்விக் கழகம் (Hindu Dharma State Institute (IHDN) எனும் பெயரில் நிறுவப்பட்டது.
கடந்த 57 ஆண்டு காலமாக இந்து சமயக் கல்விக்கு முதன்மை வழங்கி வந்தது. அத்துடன் இந்து சமய ஆய்வுகளையும் நடத்தி வந்தது.
பாலித் தீவில் உள்ள இந்து ஆலயங்களில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்துத் தேர்ச்சி பெறுகின்றனர்.
தவிர பாலித் தீவின் பள்ளிக்கூடங்களில் இந்து சமயக் கல்வி போதிக்கப் படுகிறது. இந்து சமயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றார்கள்.
இந்து தர்ம அரசு உயர்க்கல்விக் கழகம் (Hindu Dharma State Institute (IHDN) என்பதில் இருந்து இந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் எனும் தகுதிக்கு இந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி தகுதி உயர்த்தப்பட்டது.
இந்தோனேசியா இந்து பல்கலைக்கழகம் ஒரு சிறிய பல்கலைக்கழகம். 1200 மாணவர்கள் பயில்கிறார்கள். இரு பாலர் பயிலும் உயர்க் கல்வி நிறுவனம்.
இந்தோனேசியாவின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Research and Technology/ National Research and Innovation Agency of Republic Indonesia) இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி உயர்வை வழங்கியது.
பாலி டென்பசாரில் உள்ள இந்து தர்ம அரசு நிறுவனத்தை (Hindu Dharma State Institute (IHDN) நாட்டின் முதல் இந்து அரசு பல்கலைக்கழகமாகவும்; தென்கிழக்கு ஆசிய நாட்டின் முதல் இந்து பல்கலைக்கழகமாகவும் மாற்றுவதற்கான அதிபர் கட்டளையை (Perpres) அதிபர் ஜோகோ “ஜோகோவி” விடோடோ வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த கட்டளை பிறப்பிக்கப் பட்டது.
ஐ குஸ்டி பாகஸ் சுக்ரிவா மாநில இந்து பல்கலைக்கழகம் (I Gusti Bagus Sugriwa State Hindu University (UHN) என பெயரிடப்பட்ட புதிய பல்கலைக்கழகம், இந்து உயர் கல்வித் திட்டங்களை நிர்வாகம் செய்யும். தவிர பிற வகையான இந்து உயர் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும். இது வரையறுக்கப்பட்ட புதிய விதிமுறை ஆகும்.
தற்போதைய அனைத்து இந்து தர்ம அரசு உயர்க்கல்விக் கழக மாணவர்களும் இந்தோனேசியா இந்து பல்கலைக்கழக மாணவர்களாக மாற்றப் பட்டார்கள். மேலும் அந்த நிறுவனத்தின் அனைத்துச் சொத்துகளும் ஊழியர்களும் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்குள் மாற்றம் செய்யப் பட்டார்கள்.
Hindu Dharma State Institute had been established in Indonesia in 1993 as a state academy for Hindu religious teachers. It was later converted into the Hindu religion State College in 1999 and later to IHDN in 2014.
இந்தோனேசியா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வரும் கலாசார நாடு என்று உலகக் கல்வியாளர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.06.2020
Sources:
1.https://swarajyamag.com/insta/indonesian-president-joko-widodo-creates-southeast-asian-nations-first-hindu-state-university
2.https://www.organiser.org/Encyc/2020/2/4/Indonesia-first-Hindu-state-university-instituted-.html
3. https://www.instagram.com/ihdndenpasar_/
4.https://www.thejakartapost.com/news/2020/02/03/jokowi-creates-countrys-first-hindu-state-university.html
தமிழ் மலர் - 29.06.2020
அன்றைய காலக் கட்டத்தில் கடல் தாண்டி மலையகத்திற்கு வந்தவர்கள், கடலை வணிகத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இன்று அவர்களே கடல் தாண்டிப் போய் கடலை வணிகம் பார்க்கிறார்கள். எப்பேர்ப்பட்ட வளர்ச்சி. எப்பேர்ப்பட்ட வணிக மறுமலர்ச்சி.
ஒரு காலத்தில் தலையில் கூடைகளை ஏந்திக் கடலை வியாபாரம் செய்த அதே அந்தத் தமிழர்கள் தான். வேறு யாரும் அல்ல. அதே அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான் இப்போது விமானம் ஏறிப் போய் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வணிகம் பார்த்துவிட்டு வருகிறார்கள். பெருமையாக இருக்கிறது.
வணிக விரும்பிகளுக்கு இதுவே ஓர் அழகிய அனுபவப் பாடம். இந்தக் கம்போங் கச்சான் பூத்தே வணிகர்களைப் பார்த்து மலேசியாவில் உள்ள மற்ற மற்ற இந்தியர்களும் வணிகத் துறையில் ஈடுபட வேண்டும். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும்.
இப்படிச் சொல்பவர் சமூக ஆர்வலர் ஈப்போ புந்தோங் பி.கே.குமார். அவர் வழங்கிய பல தகவல்களினால் தான் இந்தக் கட்டுரையையே எழுத முடிந்தது. நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
உலகின் பல நாடுகளில் கம்போங் கச்சான் பூத்தே அறியப் படுகிறது. கம்போங் கச்சான் பூத்தே எனும் கடலை வணிக மையம் புந்தோங்கில் இருக்கிறது. இது பலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். ஆக புந்தோங் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புந்தோங் முதலிடம் வகிக்கின்றது என்றுகூட சொல்லலாம். 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் 42 விழுக்காட்டினர் இந்தியர்கள்.
புந்தோங்கில் நுழைந்ததும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் நுழைந்தது போல ஒரு பிரமை ஏற்படும். அனைத்தும் இந்திய மயமாகக் காட்சி அளிக்கும். புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈயச் சுரங்கத் தொழிலுக்கு புந்தோங் புகழ் பெற்று விளங்கியது. சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் ஈப்போவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியேறினார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் ஈப்போவில் சிறு வணிகத் துறை, துணிமணிகள், ஆடை ஆபரணங்கள் விற்பனைத் துறைகளில் ஈடுபட்டனர்.
தமிழர்கள் பெரும்பாலும் சுங்கை பாரி (Sungai Pari), சிலிபின் (Silibin), குந்தோங் (Guntong) பகுதிகளில் குடியேறினார்கள். முதன்முதலாகச் சுங்கை பாரியில் தான் தமிழர்கள் குடி பெயர்ந்தார்கள். பெரும்பாலும் இரயில்வே சாலைக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள்.
1906-ஆம் ஆண்டு தமிழர்களுக்காக மேடான் கிட் (Medan Kidd) எனும் இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. அந்தப் பகுதி இப்போதைய பேராக் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இருக்கிறது. 150 குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப் பட்டன.
பத்து ஆண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஒரு மாற்று இடம் தேவைப் பட்டது. ஆகவே தமிழர்களுக்கு என புந்தோங் குடியேற்றப் பகுதி புதிதாகத் தோற்றுவிக்கப் பட்டது.
இந்துக்களின் நலனை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா கவனித்துக் கொண்டது. அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூரில் ஆண்டுதோறும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அதைப் போல ஈப்போவிலும் கொண்டாட விருப்பப் பட்டார்கள்.
புந்தோங் சுங்கை பாரி சாலையில் ஏற்கனவே மாரியம்மன் ஆலயம் இருந்தது. ஆகவே அங்கு இருந்து குனோங் சிரோ (Gunung Cheroh) பகுதியில் இருக்கும் கல்லுமலைக் கோயிலுக்குத் தைப்பூச ரத ஊர்வலம் சென்று அடைவது என முடிவு செய்யப் பட்டது. 1912-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த ரத ஊர்வலம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது.
புந்தோங் வாழ் இந்தியர்களுக்காக ஓர் உல்லாச மையம் தேவைப் பட்டது. தங்களுடைய பொழுதை நல்ல முறையில் பயன்படுத்த அந்த மையம் உதவும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த வகையில் 1915-ஆம் ஆண்டு ‘இந்திய பொழுது போக்கு மன்றம்’ உருவானது. அதனை இந்தியன் ரிகிரியேசன் கிளப் (Indian Recreation Club) என்று இப்போது அழைக்கின்றார்கள்.
நகரத்தார்கள் எனப்படும் செட்டியார்கள் ஈப்போ வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். அவர்கள் இரும்பு சாமான் வியாபாரத்திலும் ஈடுபட்டார்கள். பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே நகரத்தார்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் மளிகைக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், புத்தகக் கடைகள் நடத்தினார்கள். சுருட்டு, பீடி, புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டார்கள். அவர்களில் ஏ.எம்.ஏ நைனா முகமது (A.M.A. Naina Mohammed); கே.என். முகமது (K.N. Mohammad) நிறுவனங்கள் பிரபலமானவை.
1887-ஆம் ஆண்டு தைப்பிங்கைச் சேர்ந்த சையது புர்ஹான் (Syed Burhan) என்பவர் பேராக் - பினாங்கு குளிர்பான நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அதே காலக் கட்டத்தில் தைப்பிங் - கம்பார் - ஈப்போ குளிர்பான நிறுவனத்தை ஷேக் அடாம் என்பவர் உருவாக்கினார். ஷேக் அடாம் (Shaykh Adam) 1895-ஆம் ஆண்டு மெட்ராஸில் இருந்து மலாயா வந்தவர்.
ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச் சுழற்சியே செட்டியார்களின் கைகளில் தான் இருந்தது. இவர்கள் கட்டிய தமிழ்ப்பள்ளியின் பெயர் செட்டியார் தமிழ்ப்பள்ளி (Chettiar Tamil School). அந்தப் பள்ளி லகாட் சாலையில் இருக்கிறது. அதே சாலையில் தண்டாயுதபாணி கோயிலையும் கட்டினார்கள். அந்தக் கோயிலைச் செட்டியார் கோயில் என்று அழைக்கின்றார்கள்.
1940-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம். எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதன் கிளை புந்தோங் சேற்றுக் கம்பத்தில் இருந்தது. அதை எம்.எஸ்.மெய்யப்பச் செட்டியார்கள் (MS Maiyappa Chettiars) என்று அண்ணன் தம்பிகள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.
1950-ஆம் ஆண்டுகளில் சீனர்களின் ஆதிக்கம் ஈப்போவில் வலுப் பெறத் தொடங்கியது. பொருளாதாரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் அதுவரை அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலர் தாயகம் திரும்பினார்கள். வேறு சிலர் அருகில் இருந்த மற்ற மற்ற ஊர்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள்.
1950-ஆம் ஆண்டில் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் (Briggs Plan) கீழ் புந்தோங் புதுக் கிராமம் உருவானது. ஈப்போவில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அந்தப் புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் மலாயா முழுமையும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன.
மலாயாக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஜெனரலாக இருந்த சர் ஹரோல்டு பிரிக்ஸ் (Sir Harold Briggs) என்பவரால் உருவாக்கப் பட்டதே ’பிரிக்ஸ்’ திட்டம்.
புந்தோங் புறப் பகுதியில் தமிழர்கள் குடியேற்றப் படுவதற்கு முன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டு வந்தது. நூற்றுக் கணக்கான ஈய வயல்கள் அங்கே இருந்தன. தூர்ந்து போன ஈய வயல்களை ஈய லம்பங்கள் என்று அழைக்கின்றனர்.
புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக மதிப்புமிகு சிவ சுப்பிரமணியம் ஆதி நாராயணன் (Siva Subramaniam) அவர்கள் இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.
புந்தோங் வரலாறு சற்று நீண்டு போய்விட்டது. சரி. இந்தப் புந்தோங்கில் தான் கம்போங் கச்சான் பூத்தே இருக்கிறது. இந்த ஆண்டு பேராக் மாநில அரசின் தீபாவளி விழா இந்தக் கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தில் கொண்டாடப் படுகிறது.
நேற்றைய கட்டுரையில் பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அமாட் பைசால் அஸ்மு; ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குலசேகரன்; புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்பிரமணியம்; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதில் ஒரு சின்ன திருத்தம். சிவநேசன் அவர்கள் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்.
புதிய பேராக் மாநில ஆட்சிக் குழுவில் டத்தோ நோலி அஷ்லின் (Datuk Nolee Ashilin Mohammed Radzi) வீட்டுவசதி, உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளார்.
கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தில் ஆண்டு தோறும் தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்தத் தீபாவளி நிகழ்ச்சிக்கு டத்தோ நோலி அவர்களும் வருகை தரலாம். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இருப்பினும் இப்போதைய கொரோனா நெருக்கடியில் அந்த நிகழ்ச்சி ஒரு கேள்விக் குறியாகவே அமைகின்றது. நல்லதை எதிர்ப்பார்ப்போம்.
கம்போங் கச்சான் பூத்தே வளாகத்தை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்றும் டத்தோ நோலி அஷ்லின் ஒரு வியூகம் வைத்து உள்ளார்.
இந்த வியூகம் இந்தப் பகுதியில் வாழும் இந்தியர்களிடையே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம். ஒரு மாற்றத்தையும் கொண்டு வரலாம். புந்தோங் புறநகர்ப் பகுதி மலேசிய இந்தியர்களின் வணிக நகரமாக உருமாற்றம் காண்பதற்கு அரசியல் பிரபலங்களின் வருகை ஓர் அடித்தளமாக அமையும் என்றும் நம்பலாம்.
ஆனால் என்ன. அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை மட்டுமே இப்போதைய அவசியமான அவசரமான தேவையாக அமைகின்றது.
அப்படிப்பட்ட ஓர் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் மனித வளமும் மன வளமும் இங்குள்ள இந்தியர்களிடம் மிகையாகவே உள்ளன. அதற்கான நவீன கட்டமைப்பும் வசதிகளும் அவர்களிடம் உள்ளன.
கடலை வணிகத்தையும் தாண்டிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நொறுக்குத் தீனி வகையறாக்கள் உள்ளன. பட்டியல் வேண்டாமே. நீண்டு போகும்.
அவற்றை எல்லாம் குடிசைத் தொழிலாக மாற்றம் செய்ய முடியும். சந்தைப் படுத்த முடியும். புந்தோங் நகரத்தை ஓர் இந்தியப் பாரம்பரிய உணவுக் கேந்திரமாக உயர்த்திக் காட்டவும் முடியும்.
வணிகர்களாக மாறிக் காட்ட விரும்பும் இளைஞர்களுக்குச் சரியான ஊக்குவிப்பு வேண்டும். அதே சமயத்தில் சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் அவசியம். எல்லாம் சரியாக அமைந்தால் நிச்சயமாக வெற்ற பெற முடியும். இதையே தான் பி.கே.குமார் அவர்களும் வலியுறுத்துகிறார்.
(முற்றும்)
சான்றுகள்:
1. https://www.malaymail.com/news/malaysia/2018/05/14/new-perak-mb-keeps-it-in-the-family/1630456
2. https://en.wikipedia.org/wiki/Perak_State_Legislative_Assembly
3. https://www.malaymail.com/news/malaysia/2020/04/28/perak-to-rebuild-states-tourism-sector-with-industry-players-after-mco-says/1860983
4. http://ctskacangputeh.com/ - Our history in Kacang Putih business turns back to the day when our Indian ancestors were brought in to Malaysia by British colony.
இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம்.
அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.
அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.
இந்த நினைவுச் சின்னம் 21 மாடி உயரம் கொண்டது. இதன் எடை 4000 டன். இந்தச் சிலையின் மேற்பரப்பில் உள்ள கலை ஓவியப் படைப்புகள் செம்பு பித்தளைகளால் ஆனவை. அவற்றுக்கு 21,000 எஃகு கம்பிகள்; அவற்றை இணைப்பதற்கு 170,000 இரும்பு நட்டுகள் உள்ளன.
இந்தச் சிலை 3000 டன் தாமிரம், வெண்கல உலோகங்களால் ஆனது. இந்த நினைவுச் சின்னத்தின் மொத்த உயரம் 122 மீ (400 அடி). அடிப்படை பீடத்தின் உயரம் 46 மீட்டர். இதுவே இந்தோனேசியாவின் மிகப் பெரிய சிலையாகும்.
விஷ்ணுவின் கிரீடம் தங்கப் பாளங்களாலும் பளிங்குக் கற்களாலும் மூடப்பட்டு உள்ளது. தவிர சிலைக்கு பிரத்தியேகமாக வண்ண ஒளி அமைப்பை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். 20 கி.மீ. தொலைவில் இருந்து ஒளி மாயஜாலங்களைக் காண முடியும்.
இந்தோனேசியச் சிற்பியான நியோமன் நுவார்டா (Nyoman Nuarta) என்பவரால் 1990-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2018 செப்டம்பர் மாதம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப் பட்டது.
இந்தச் சிலை இந்தோனேசியாவிலேயே மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் வடிவம் அமைக்கப்பட்டது. 2018 ஜுலை 31-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவால் (President Joko Widodo) 2018 செப்டம்பர் 22-ஆம் தேதி திறக்கப்பட்டது
பயங்கரமான புயல்கள்; பூகம்பங்களைத் தாங்கும் வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தச் சிலை கட்டி முடிக்கப்படுவதற்கு மூன்று இந்தோனேசிய அமைச்சர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜூப் அவே (Tourism Minister Joop Ave); எரிசக்தி அமைச்சர் ஐடா பாகஸ் சுட்ஜனா (Energy Minister Ida Bagus Sudjana); பாலி தீவின் கவர்னர் ஐடா பாகஸ் ஓகா (Governor of Bali Ida Bagus Oka).
சிலையின் கட்டுமான வேலைகள் 1997-ஆம் ஆண்டில் தொடங்கின. இருந்தாலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்தத் திட்டம் திடீரென நிறுத்தப் பட்டது.
பதினாறு வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் போது சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. பாலித் தீவின் ஆன்மீக சமநிலையைச் சீர்குலைக்கலாம் என்று பாலித் தீவின் மத அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் பாலித் தீவின் இந்துப் பொதுமக்களின் ஆதரவு இருந்ததால் திட்டம் தொடர்ந்தது.
இந்தச் சிற்பம் ஒரு கட்டிட தளத்தின் மேல் அமர்ந்து உள்ளது. அதற்கு கீழே ஓர் உணவகம்; ஓர் அருங்காட்சியகம்; ஓர் ஓவியக் கூடம் உள்ளன.
சிலையின் மாபெரும் உருவத்தை விமான பயணிகள் கூட எளிதாகக் காண முடிகிறது.
இந்தச் சிலையைக் கட்டி முடிக்க 42 கோடி ரிங்கிட் செலவானது. கடைசி கட்டக் கட்டுமானத்தில் 1000 பேர் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறார்கள்.
ஒரு சிலர் 28 ஆண்டுகளாகவும் வேலை செய்து இருக்கிறார்கள். கட்டுமானத்தின் போது எந்தவிதமான விபத்து; ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் ஓர் ஆச்சரியமான செய்தியே.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.06.2020
சான்றுகள்:
1. President Joko Widodo unveils Indonesia's tallest statue". The Straits Times. Retrieved 28 November 2018.
2. Meet the Designer of Garuda Wisnu Kencana : Nyoman Nuarta - NOW! Bali". NOW! Bali. 1 September 2018.
3. Garuda Wisnu Kencana: Precious gift for Independence Day". The Jakarta Post. 28 November 2018.
4. Bali statue of Hindu god Wisnu to be world's largest". ABC. 28 November 2018.
தமிழ் மலர் - 28.06.2020
மலேசிய இந்தியர்களின் காலச் சுவடுகளில் கம்போங் கச்சான் பூத்தே ஒரு வரலாற்றுப் பதிவு. மலேசிய மக்களையும் உலக மக்களையும் ஈர்ந்து இழுக்கும் ஒரு மலேசிய உறவு. மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த அழகிய காலச் சுவடு.
1920-ஆம் ஆண்டுகளிலேயே ஈப்போவில் கடலை வணிகம் தொடங்கி விட்டது. தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மலாயாவுக்கு வந்த தமிழர்கள் தொடக்கி வைத்த வணிகம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரின் முன்னெடுப்பு என்றுகூட சொல்லலாம்.
கம்போங் கச்சான் பூத்தே என்பது மலாய்ச் சொல். தமிழில் சொன்னால் வேர்க் கடலைக் கிராமம். ஆனால் கம்போங் கச்சான் பூத்தே என்று நிரந்தரமாய் நிலைத்து விட்டது.
ஆக அந்த வேர்க் கடலைக்கு என்றே புந்தோங்கில் ஒரு கிராமம் இருக்கிறது. மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற கிராமம்.
இந்தக் கிராமம் தோன்றுவதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கின்றது. அந்த வரலாற்றில் பெரிய ஒரு சோகமும் அடங்கி இருக்கிறது.
சமூக ஆர்வலரும்; தொழில் அதிபருமான ஈப்போ புந்தோங் பி.கே.குமார் அதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். இடையில் ஒரு வார்த்தை. அண்மையில் இவர் ஒரு நூல் எழுதினார். அதன் பெயர் வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம். அந்த நூலில்கூட வேர்க் கடலை வியாபாரம் செய்வதைப் பற்றி எழுதி இருக்கிறார்.
தீபாவளி மற்றும் விழாக் காலங்களில் நாம் நிறைய உணவுப் பலகாரங்களைச் செய்கிறோம். மூவினத்தவரும் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அவை தனித்தன்மை வாய்ந்தவை. சுவை நிறைந்தவை. தரம், உயிர்ச்சத்து, ஆரோக்கியம் தரும் சிறந்த பண்டைய உணவு வகைகள். தைப்பூசக் காலங்களில்கூட பற்பல பலகார வகைகள், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனி வகைகள் விற்பனையை நாம் பார்க்க முடியும்.
இத்தகைய பண்பாட்டு நொறுக்குத்தீனி, பலகார உணவு வகைகளை பிறகு ஓர் ஆண்டு காலத்திற்கு மறந்து விடுகிறோம். இது எவ்வளவு பெரிய குறை. கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை என்பது இதற்குச் சாலப் பொருந்தும்.
நம்முடைய பலகார வகைகளை அன்றாடத் தேவைக்குரிய விற்பனைப் பொருளாகவும் மூவினமும் சாப்பிடும்படியாக உருவாக்குவதிலும் என்ன தடை? யார் தடுக்கிறார்கள்? நாம் முயன்று பார்ப்பது இல்லை.
வணிகம் செய்ய விருப்பம் எழுந்து விட்டால், அச்சம் சந்தேகங்களை விட்டு ஒழித்து விட வேண்டும். மனத் தடைகளை முதலில் அகற்றிவிட வேண்டும். வணிகம் செய்ய அடிப்படைத் தேவை துணிச்சல். நம்மால் முடியும் என்கிற துணிச்சல். மனத் தடைகளை நீக்குங்கள். தெளிவுடன் இருங்கள். எந்த வியாபாரம் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் விருப்பப் பட்டே செய்யுங்கள்.
விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முன்னேற்றம் தானாகவே வந்து சேரும்.
பி.கே.குமார் மேலும் சொல்கிறார்.
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்தின் அடிவாரம் தான் கம்போங் கச்சான் பூத்தேயின் பூர்வீகம். ஈப்போவில் நிறையவே சுண்ணாம்புக் குன்றுகள்; சுண்ணாம்புப் பாறை மலைகள். அதில் ஒரு மலையின் பெயர் குனோங் சிரோ. அங்கே ஒரு மலைக் குகை. அதன் அடிவாரத்தில் தான் சுப்பிரமணியர் ஆலயம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த குகைக் கோயிலுக்கு அருகில் தான் கடலை வணிகர்கள் நிறைய பேர் குடியேறினார்கள். சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார்கள். மலையின் அடிவாரத்தில் சின்னச் சின்ன வீடுகளைக் கட்டிக் கொண்டு கச்சான் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.
விடியல் காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து கச்சான் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு விடுவார்கள். இப்படி கச்சான் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் காளியப்பன். தன்னுடைய 13-ஆவது வயதில் மலாயாவுக்கு வந்தார். இப்போது ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
கொண்டைக் கடலையை அவித்ததும் அது வெள்ளை நிறத்திற்கு மாறும். பார்த்து இருப்பீர்கள். அந்த வெள்ளை நிறத்தைக் கொண்டு தான் கச்சான் பூத்தே எனும் பெயரே வந்தது. குனோங் சிரோ பகுதியை முன்பே கம்போங் கச்சான் பூத்தே என்று அழைத்து வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் அழைக்கிறார்கள்.
வீட்டில் இருக்கும் பெண்கள் கொண்டைக் கடலையை அவித்துக் கொடுப்பார்கள். வேர்க் கடலைகளைப் பொரித்துக் கொடுப்பார்கள். அவற்றை ஆண்கள் எடுத்துக் கொண்டு போய் ஈப்போ நகரில் விற்று வந்தார்கள்.
கச்சான்களைப் பொரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப் பட்டன. அதனால் கச்சானுக்குச் சுவை மிகுதி. குனோங் சிரோ பகுதியில் இரண்டு தலைமுறைகளாகக் கச்சான் வியாபாரம் நடைபெற்று வந்தது.
தொடக்கக் காலங்களில் தலையில் கச்சான் தட்டுகளைச் சுமந்தவாறு ‘கச்சான் பூத்தே, கச்சான் பூத்தே, ஒரு காசுக்கு ஒன்று’ என விற்று இருக்கிறார்கள். சினிமா அரங்குகள்; மருத்துவமனைகள்; பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களுக்குக் கால்நடையாக எடுத்துச் சென்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. 1960-ஆம் ஆண்டுகளில் பொது மக்கள் குனோங் சிரோவைத் தேடிச் சென்று கச்சான்களை வாங்கினார்கள். குனோங் சிரோ கச்சான்கள் மிக மிகச் சுவையானவை என்று புகழ்ந்தும் பேசினார்கள்.
அதனால் பேராக் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலேயே குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. திருவிழாக் காலங்களில் குனோங் சிரோ கச்சான்களுக்கு நல்ல கிராக்கியும் இருந்தது.
1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் திகதி தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன் குனோங் சிரோவில் திடீரென ஒரு மலைச் சரிவு. சுண்ணாம்புப் பாறைகள் சரிந்து விழுந்தன. அதில் பல வீடுகள் சிதைந்து போயின. 42 பேர் புதையுண்டு போயினர்.
அந்தப் புதை இடர்பாட்டில் இருந்து 12 உடல்கள் மட்டுமே மீட்கப் பட்டன. மீட்பு வேலைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. மற்றவர்களின் உடல்களை மீட்டு எடுக்க முடியவில்லை. 30 குடும்பங்கள் மட்டும் அந்த இடர்பாட்டில் இருந்து தப்பித்தன.
குனோங் சிரோ கச்சான் பூத்தே என்கிற கிராமம் ஒரே நாளில் காணாமல் போய் விட்டது. அடுத்து ஒரு தடை உத்தரவு. குனோங் சிரோவைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது என்று பேராக் மாநில அரசாங்கம் தடை விதித்தது.
அப்போது பேராக் மாநில முதல்வராக டத்தோ கமாருடின் ஈசா என்பவர் இருந்தார். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்கப் படும் என்று மாநில அரசாங்கம் உறுதி அளித்தது.
அந்த மாற்று இடம் தான் இப்போது புந்தோங்கில் இருக்கும் கம்போங் கச்சான் பூத்தே. 1974-ஆம் ஆண்டில் குனோங் சிரோவில் எஞ்சி இருந்த 30 குடும்பங்களும் கம்போங் கச்சான் பூத்தே கிராமத்திற்குப் புதுக் குடியேற்றம் செய்யப் பட்டன. இந்தப் புது கம்போங் கச்சான் பூத்தே கிராமத்தின் அசல் பெயர் தெலுக் குரின்.
அந்தக் கட்டத்தில் ஈப்போ மாநகர் மன்றத்தின் தலைவராக அமரர் டத்தோ எஸ்.பி.சீனிவாசகம் இருந்தார். குனோங் சிரோவில் மரணம் அடைந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று வாக்கு அளித்தார்.
சொல்லி 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நிறைவேற்றப் படவில்லை. மறந்து விட்டார்கள். இது பேராக மாநிலச் சுற்றுலாத் துறை கவனிக்க வேண்டிய ஒரு விசயம்.
புதிய குடியேற்றம் செய்யப் பட்டவர்கள் புதிய இடத்தில் இருந்து மறுபடியும் கச்சான் வியாபாரத்தைத் தொடர்ந்தனர். முன்பு போல் கச்சான் தட்டுகளைத் தலையில் சுமக்கவில்லை. அதற்குப் பதிலாக சைக்கிள், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தினார்கள்.
இவர்களில் சிலர் இப்போதும் ஈப்போ வட்டாரத்தில் உள்ள பேரங்காடிகளில் கச்சான் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் வியாபாரம் செய்கின்றனர். சிலர் மொத்த வியாபாரத்திலும் இறங்கி விட்டனர்.
இவர்கள் கச்சான் கடலைகளை மட்டும் விற்கவில்லை. முறுக்கு, அதிரசம், மரவெள்ளிக் கிழங்குச் சீவல்கள், ஓமப் பொடி, உருளைக் கிழங்குச் சீவல்கள், பகோடா, பூரி என 50-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களையும் விற்கின்றனர்.
கச்சான் வியாபாரிகளில் சிலர் தங்கள் தயாரிப்புகளை அரபு நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு 5000 கிலோ வியாபாரம் செய்யும் வணிகர்களும் இந்தக் கச்சான் பூத்தே கிராமத்தில் இருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவர்களுடைய பிள்ளைகளில் பலர் மேல்படிப்பு படித்து இப்போது விமானிகளாக, மருத்துவர்களாக, மேல்நிலை அதிகாரிகளாகப் பவனி வருகின்றனர். வாழ்த்துவோம்.
மீண்டும் சொல்கிறேன். தொடக்கக் காலத்தில் தலையில் சுமந்து கடலை வியாபாரம் செய்தார்கள். சைக்கிளில் மிதித்து வியாபாரம் செய்தார்கள். அப்போது இந்தக் கடலை வியாபாரம் 5 காசுக்கும் 10 காசுக்கும் நடைபெற்றது.
ஆனால் இன்று வாகனங்களில் வியாபாரம் செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வியாபாரம் வளர்ந்து விட்டது. பெரிய வளர்ச்சி. பெரிய முன்னேற்றம்.
இது ஒரு பாரம்பரியத் தொழில் முறை. மூன்றாவது தலைமுறையினர் ஈடுபட்டு புதுமைகள் செய்து வருகின்றனர். கம்போங் கச்சான் பூத்தே புதிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இப்படிப்பட்ட மாற்றங்கள் மற்ற மற்ற இந்தியர்களுக்கும் போய்ச் சேர வேண்டும். புந்தோங் வட்டாரத்தில் புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. புந்தோங் என்பது மலேசிய இந்தியர்களின் வணிக நகரமாக மாற வேண்டும். ஒரு பொருளாதார மண்டலமாக உருமாற்றம் காண வேண்டும் என்று பி.கே.குமார் கூறுகிறார்.
பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அமாட் பைசால் அஸ்மு; ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குலசேகரன்; புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்பிரமணியம்; முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்; ஆகியோரின் ஒருமித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்று புந்தோங் மாறி வருகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தொகுதியாகவும் மாறி வருகிறது.
புந்தோங் வாழ் மக்கள் மறுமலர்ச்சி பெறவும் புதிய திட்டங்கள் அமலாக்கம் பெறுவதற்கும் இதுவே சரியான தருணமாகக் கருதுகிறேன்; இதைவிட வேறு ஒரு சந்தர்ப்பம் நிச்சயம் அமையப் போவது இல்லை என பி.கே.குமார் கூறுகிறார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.
(தொடரும்)
சான்றுகள்
1. https://www.thestar.com.my/metro/community/2016/02/26/theyre-nuts-about-the-family-business-few-realise-the-famous-kampung-kacang-putih-is-built-around-me/
2. https://www.bharian.com.my/node/240010 - Muruku popular menjelang Tahun Baharu Cina
3. http://ctskacangputeh.com/ - Our history in Kacang Putih business turns back to the day when our Indian ancestors were brought in to Malaysia by British colony.
4. https://www.instagram.com/explore/locations/520170481/pkh-enterprise-kacang-putih-maruku?hl=en
;