21 ஜூலை 2020

போர்னியோ கூத்தாய் முல்லைவர்மன் வாரிசுகள்

தமிழ் மலர் - 21.07.2020 - செவ்வாய்

கூத்தாய் பேரரசு (Kutai Kingdom) போர்னியோ தீவின் களிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட பேரரசு. 1670 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அரசு.



இந்தப் பேரரசை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் முல்லைவர்மனின் வாரிசுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் ஒரு முடிசூட்டு விழா நடைபெற்றது. மிக அண்மையில் என்று சொல்லலாம். 2020 ஜூன் மாதம் 6-ஆம் தேதி அந்த முடிசூட்டு விழா. கூத்தாய் முல்லைவர்மன் அரசாங்கம் (Kerajaan Mulawarman) என்று ஒரு புதிய அரசாங்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

முடிசூட்டிக் கொண்டவரின் பெயர் இயான்ஷா ரெக்‌ஷா (Iansyahrechza). தன்னை ராஜா லாபோக்; ராஜா கூத்தாய் முல்லைவர்மன் என்றும் பிரகடனம் செய்து கொண்டார். கூத்தாய் பேரசின்ர பாரம்பரிய கலாச்சார பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று இயான்ஷா ரெக்‌ஷா சொல்கிறார்.

(Iansyahrechza atau disapa Raja Labok, Raja Kutai Mulawarman, di Muara Kaman, Kabupaten Kutai Kertanegara, Kalimantan Timur)



இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமான; சற்று முரண்பாடான நிகழ்ச்சியாகச் சில தரப்பினர் கருதுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியும்; இந்தக் குழுவினர் இருக்கும் இடத்தைப் பற்றியும் விசாரித்து வருவதாகக் காவல்துறை கூறி உள்ளது.

அது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும். போர்னியோ கூத்தாய் பேரரசைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கூத்தாய் பேரரசு என்பது இந்தோனேசிய வரலாற்றில் பண்டைய பேரரசுகளில் ஒன்றாகும். சரியாகச் சொன்னால் இந்தோனேசியாவில் உருவான இரண்டாவது இந்திய மயப் பேரரசு.



இந்தோனேசியாவில் உருவான முதலாவது பேரரசு சாலகநகரப் பேரரசு (Salakanagara Kingdom). மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் தோன்றிய பேரரசு.

அடுத்ததாகத் தோன்றியது கூத்தாய் பேரரசு. இதைக் கூத்தாய் மார்த்திபுரா (Kutai Martadipura) பேரரசு என்றும் அழைக்கிறார்கள்.

(Kutai Martadipura is a 4th-century or perhaps much earlier Hindu kingdom located in the Kutai area, East Kalimantan.)



1918-ஆம் ஆண்டு இந்தோனேசியா, கூத்தாய் மாநிலத்தில், மகாகம் நதி (Mahakam River) முகத்துவாரத்தில் ஒரு கல்தூணைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு ஏழு கல் தூண்கள் அல்லது யாபா (Yupa) என்று பெயர். அவை பல்லவ எழுத்துகளில், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு இருந்தன. கூத்தாய் பேரரசை ஆட்சி செய்த முல்லைவர்மன் (Mulavarman) செய்த தியாகங்களை அந்தக் கல் தூண் நினைவு கூர்கின்றது.

தொல் எழுத்து முறை அடிப்படையில், அவை 4-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை. இந்து மதம் 2-ஆம் மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர்கள் சுமத்திரா, ஜாவா மற்றும் சுலவேசி தீவுகளுக்கு இந்து மதத்தைக் கொண்டு வந்து இருக்கலாம்.

கூத்தாய் அரசின் முதல் ஆளுநர் குடுங்கன் (Kudungga). இவரின் இன்னொரு பெயர் நரேந்திரன். இவருடைய மகன் அஷ்வ வர்மன் (Aswawarman). இவர் கூத்தாய் அரசின் இரண்டாவது அரசர்.



மூன்றாவதாக வந்தவர் முல்லை வர்மன் (Mulavarman) எனும் இராஜேந்திரன். இவர் அஷ்வ வர்மனின் மகன் ஆகும்.

முல்லைவர்மன் உள்ளூர் டாயாக் வம்சாவளியினருக்குத் தலைவராக இருந்து உள்ளார். இவருடைய மகன் அஷ்வ வர்மன் தான் இந்து மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டார் என்று கருதப் படுகிறது.

இந்த கல்வெட்டுகளை உருவாக்கியவர் முல்லைவர்மன் தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரின் இரண்டு முன்னோடிகளான நரேந்திரன்; அஷ்வ வர்மன் படையெடுப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை.

என்றாலும், "ராஜா" முல்லைவர்மன் தன் அண்டை நாடுகளைப் போரில் வென்றதாகக் கல்வெட்டில் கூறப் படுகிறது.



முன்பு காலத்தில் "அஸ்வரிஜ்வா" (Asvaredjwa) என்கிற ஓர் உள்ளூர் சடங்கு இருந்தது. அந்தச் சடங்கின் மூலமாக கூத்தாய் பேரரசின் நிலப்பரப்பை அதிகரித்ததாகவும் கூறப் படுகிறது.

அஸ்வரிஜ்வா என்றால் என்ன? ஒரு குதிரையை ஓட விடுவார்கள். சுதந்திரமாக சுற்றித் திரியும் குதிரையின் அடிச்சுவடுகள் எங்கு எல்லாம் தெரிகிறதோ அங்கு உள்ள நிலம் எல்லாம் கூத்தாய் அரசுக்கு சொந்தமாகிறது என்று பொருள். இந்தச் சடங்கின் மூலமாகத் தான் அவர்களின் நிலப்பரப்பை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அதன் பின்னர் இந்தக் கூத்தாய் பேரரசு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதைப் பற்றிய கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பேரரசின் வழித்தோன்றலில் மற்றொரு அரசு உருவாகி இருக்கிறது. அதன் பெயர் கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு (Kutai Kartanegara).



கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு 13-ஆம் நூற்றாண்டில் உருவாகி உள்ளது. களிமந்தான் காடுகளில் தெபியான் பத்து (Tepian Batu) எனும் பகுதியில் நிறுவப் பட்டது. கி.பி. 1300 முதல் கி.பி. 1325 வரை ஆட்சி நடைபெற்று உள்ளது. அதன் முதல் ஆட்சியாளர் அஜி பதாரா அகோங் தேவ சக்தி (Aji Batara Agung Dewa Sakti). கி.பி. 1650 வரையில் கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு ஆட்சி செய்து உள்ளது.

1667-ஆம் ஆண்டில் சுலவாசி தீவை ஆட்சி செய்த பூகிஸ் கோவா அரசை (Bugis Kingdom of Gowa) டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். பூகிஸ் கோவா அரசு வீழ்ச்சி அடைந்தது.

அங்கு இருந்த பூகிஸ் மக்களில் சிலர் அண்டை நாடான போர்னியோ களிமந்தான் கூத்தாய் நாட்டில் குடியேறினார்கள். அந்த இடம் அப்போது கம்போங் செலிலி (Kampung Selili) என்று அழைக்கப் பட்டது. இப்போது சமரிந்தா (Samarinda) எனும் நவீன நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.



17-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியம் இந்தப் பகுதியில் பரவியது. பின்னர் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு வந்தது.

1942-ஆம் ஆண்டில் ஜப்பானியர்களின் படையெடுப்பு. கூத்தாய் அரசிற்கு ’கூட்டி அரசு’ என்று பெயர் வைத்தார்கள். 1945-ஆம் ஆண்டில் கூத்தாய் அரசு கிழக்கு களிமந்தான் கூட்டமைப்பில் சேர்ந்தது. 1949-ஆம் ஆண்டில் இந்தோனேசியா குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.

காரிங்கான் இந்து சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். போர்னியோ களிமந்தான் காடுகளில் வாழும் டயாக் மக்களைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.



அந்த டயாக் மக்களில் ஒரு பிரிவினர் இன்றைய காலத்தில் பின்பற்றி வரும் இந்து சமயத்திற்குப் பெயர்தான் காரிங்கான் (Kaharingan) இந்து சமயம்.

டயாக் மக்களை இந்து சமயத்திற்கு மாற்றியதே அந்தக் கூத்தாய் (Kutai) பேரரசு தான். டயாக் மக்களில் ஒரு தரப்பினர் கி.பி. 350-ஆம் ஆண்டில் இருந்து இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

இந்தோனேசியாவை மொத்தம் 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. கி.பி. 130 ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1500 ஆம் ஆண்டு வரை 1370 ஆண்டுகளுக்கு இந்தியப் பேரரசுகளின் ஆட்சிகள் நடைபெற்று உள்லன. இந்தோனேசியாவில் உருவான இந்திய மய அரசுகள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்? எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்? எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களைத் தருகிறேன்.



1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

மேலே காணும் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களையும் வழங்குகிறேன்.



•    கி.பி. 358 - பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 - ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 - கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 914 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - பாலி பேரரசு.
•    கி.பி. 915 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 - சஞ்சாயா - மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 - ராடன் விஜயா - மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 - ராஜாசா - சிங்காசாரி பேரரசு.

இந்தோனேசியர்கள் தங்களின் பண்டைய வரலாற்றைப் பெருமையாகப் புகழ்ந்து பேசுகிறார்கள். ஒரு தடவை ஓர் ஐரோப்பியர் கருடா விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார். விமானப் பணிப் பெண்ணாக ஓர் இந்தோனேசியப் பெண்மணி. ஏற்கனவே இதைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.



அந்தப் பெண்மணியைப் பார்த்து அந்த ஐரோப்பியர் ’ஏன் உங்கள் பெயருக்குப் பின்னால் இந்தியப் பெயர்களை இணைத்துக் கொள்கிறீர்கள்’ என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பெண்மணி ‘நாங்கள் மதம் மாறி இருக்கலாம். ஆனால் எங்கள் மூதாதையரின் பாரம்பரியத்தை மாற்ற மாட்டோம்’ என்று பதில் சொன்னாராம். நினைவுக்கு வருகிறது.

அங்கே இந்தியர்களின் கலையையும் கலாசாரத்தையும் தங்களின் கலாசாரமாக நினைத்துப் போற்றுகின்றார்கள். புகழ்கின்றார்கள். மற்ற சில இடங்களில் அப்படியா நடக்கிறது. கரை தாண்டிய கரையில் நிறையவே கறைகள்.

லுமேரியா கண்டம் தங்களின் மூதாதையர் கண்டம் என்று வாய்க் கூசாமல் சொல்கிறார்கள். உப்புச் சப்பு இல்லாத பொய்ச் சரக்குகள். எழுதவே வெட்கமாக இருக்கிறது.



தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் ஆளுமை வரலாறுகளைத் தோண்டி எடுத்துச் சான்றுகளுடன் முன் வைப்போம். அதை நம் கடமையாகக் கருதுவோம். எதிர்காலத்தில் நாம் மறைந்த பின்னர் அந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும். நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து நடக்கப் பேருதவியாக இருக்கலாம். சரி.

ஆக ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மலையூர் மலாயாவில் வாழும் தமிழர்களை எவரும் வந்தேறிகள் என்று சொல்லவே முடியாது. வரலாற்றைப் பார்க்கப் போனால் அப்படிச் சொல்பவர்கள் தான் வந்தேறிகள்.

ஏன் என்றால் இந்த நாட்டில் வாழும் இந்தியர்களின் மூதாதையர்கள் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே மலையூரில் கால் பதித்து விட்டார்கள். தென்கிழக்கு ஆசியாவையே கட்டி ஆண்டு இருக்கிறார்கள்.

கூத்தாய் பேரரசைப் பற்றி இந்தோனேசியர்கள் பல காணொலிகளைத் தயாரித்து இருக்கிறார்கள். யூடியூப்பில் உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.07.2020

சான்றுகள்:

1. Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.)

2. Drs. R. Soekmono, (1988) [First published in 1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, Yogyakarta: Penerbit Kanisius. p. 37.)

3. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.

4. http://press-files.anu.edu.au/downloads/press/p69411/mobile/ch15s02.html

20 ஜூலை 2020

ஜாவா மர்மத் தீவில் சிவாலயம்

தமிழ் மலர் - 20.07.2020 - திங்கள்

ஆயிரம் ஆலயங்களின் இதய வாசல் சாவகம் என்று சொல்வார்கள். அந்தச் சாவகத் தீவில் ஒரே ஓர் ஆலயம் மட்டும் 1200 ஆண்டுகளாய்; ஓர் அனாதை போல காட்சி அளிக்கின்றது. அதுவும் நட்ட நடுத் தீவில் ஆயிரம் காலத்துப் பயிராய் நெஞ்சைக் கரைக்கச் செய்கின்றது..



அந்த ஆலயத்தை யார் கட்டியது; ஏன் கட்டினார்கள்; எப்படி கட்டினார்கள்; என்கிற விசயம் இதுவரையிலும் யாருக்கும் எவருக்கும் எதுவும் தெரியாத புதிர்கள். இன்றைய வரைக்கும் மர்மமாகவே உள்ளது. ஆனால் எரிமலைப் பாறைகளைக் கொண்டு கட்டி இருக்கிறார்கள். அது மட்டும் உண்மை.

கார்பன் டேட்டிங் (carbon dating) என்று சொல்லப்படும் கரிமக் காலக்கணிப்பு கொண்டு கணக்கிட்டு இருக்கிறார்கள். 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.


அந்த அனாதை ஆலயம் தான் மேற்கு சாவகத்தில் இருக்கும் சங்குவாங் ஆலயம் எனும் சங்குவாங் சிவாலயம் (Candi Shiva Cangkuang). இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவைத் தான் சாவகம் என்று அழைக்கிறார்கள்.

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, காரூட் மாவட்டத்தில் (Garut Regency), பூலோ கிராமத்தில் (Kampung Pulo) அந்த ஆலயம் அமைந்து உள்ளது. மேற்கு ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சில இந்து - புத்த கோயில்களில் சங்குவாங் கோயிலும் ஒன்றாகும்.

இந்த ஆலயத்திற்கு தெற்காக மூன்று மீட்டர் தொலைவில் அரீப் முகம்மது (Embah Dalem Arief Muhammad) என்பவரின் ஒரு பழங்கால இஸ்லாமிய கல்லறையும் உள்ளது.



17-ஆம் நூற்றாண்டில் சுந்தா நிலப்பகுதியில் இஸ்லாமியம் பரவியது. அப்போது சங்குவாங் கிராமத்தில் வாழ்ந்த ஒரு சமூக மூதாதையரின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

பாண்டுங் (Bandung) நகரில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் சங்குவாங் சிவாலயம் உள்ளது. 16 ஹெக்டர் பரப்பளவு. ஆலயம் இருக்கும் இடம் ஒரு தீவு.

அதற்குப் பெயர் கம்போங் பூலோ (Kampung Pulo). வெகு காலமாக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்த தீவு. ஓர் ஏரியில் உள்ளது. ஏரியின் பெயர் சிட்டு சங்குவாங் (Situ Cangkuang).



சங்குவாங் சிவாலயம் கண்டுபிடிக்கப் பட்டதும் மக்கள் படையெடுத்துப் போகிறார்கள். குறிப்பாக இந்தோனேசியர்கள் தான் அதிகம். வார இறுதி நாட்களில் 2000 பேர் வரை சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். அதிகமான சுற்றுப் பய்ணிகள் போக ஆரம்பித்து விட்டதால் தீவிற்குப் போவதற்கு முன்னாலேயே பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

ஒரே சமயத்தில் அதிகமானோரை அனுமதித்தால் ஆலயத்தின் சுற்று வட்டாரம் பாதிக்கப் படலாம் எனும் முன்னெச்சரிக்கை.

கம்போங் பூலோ ஒரு பாரம்பரியமான கிராமம். 6 குடும்பங்கள்; 6 வீடுகள் மட்டுமே உள்ளன.


மூன்று வீடுகள் வலதுபுறம்; மீதமுள்ள மூன்று வீடுகள் தனித்தனியாக உள்ளன. ஆறு குடும்பங்கள்; ஆறு குடும்பத் தலைவர்கள் என்று பாரம்பரியமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் எதுவும் இல்லை. கட்டுவதற்கும் அனுமதி இல்லை.

அங்கு வாழும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்ததும், அவர்களில் சிலர் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டி இருக்கிறது. அதிகமான மக்கள் தொகை ஆலயத்தின் வளாக கட்டமைப்பைப் பாதிக்கலாம் என்று கருதுகிறார்கள். அது மட்டும் அல்ல. கிராம வழக்கமே அப்படித்தானாம்.

ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டால், திருமணத்திற்குப் பின்னர் இரண்டு வாரங்களில் அவர்கள் தங்கள் அசல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்.



கோயில் வளாகத்திற்கு வெளியே தூரத்தில் தங்கள் சொந்த வீட்டைக் கட்ட வேண்டும். வளாகத்தில் இருந்து வெளியே போனவர்களின் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் மட்டுமே போனவர்கள் திரும்பி வரலாம். தங்கலாம். இருப்பினும் ஒரு நிபந்தனை. அப்படித் திரும்பி வருபவர் ஒரு பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். அங்கே பெண்களுக்குத் தான் முதல் சலுகை. ஆண்களுக்கு அல்ல. நுருசனை விட்டு வந்தால் தான் அங்கே தங்க முடியும்.

இதனால் கணவனை விட்டு பிரிந்து வர முடியாத பெண்கள் தொலைதூர கிராமங்களிலேயே நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள். ஆனாலும் வந்து தாய் தகப்பனைப் பார்த்து விட்டுப் போவார்கள். கம்போங் பூலோ கிராமத்தில் ஒரு வித்தியாசமான நடைமுறை. வித்தியாசமான பழக்க வழக்கம்.



சங்குவாங் கிராமம் ஒரு குட்டித் தீவு தான். ஆனால் நான்கு பெரிய பெரிய மலைகளால் சூழப்பட்டு உள்ளது. அதாவது ஹருமுன் மலை (Harumun); கலெடோங் மலை (Kaledong); மண்டலவங்கி மலை (Mandalawangi); மற்றும் குண்டூர் மலை (Guntur) என உயரமான மலைகள்.

கம்போங் பூலோ கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் படகில் தான் செல்ல வேண்டும். அங்கே நிறைய மூங்கில் மிதவைகளையும் வைத்து இருக்கிறார்கள். அவற்றில் தான் சுற்றுப் பயணிகள் பயணம் செய்கிறார்கள். ஒரே சமயத்தில் பதினைந்து பேரை ஏற்றிச் செல்லும் மூங்கில் கட்டுமரங்களும் உள்ளன.

கம்போங் பூலோ தீவு மற்றும் ஏரியைச் சுற்றி உள்ள பகுதிகள், ஒரு கலாசாரத் தொல்பொருள் சரணாலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.



முன்பு காலத்தில் தீவு முழுவதும் ஏரியால் சூழப்பட்டு இருந்தது. இருப்பினும் இப்போது தீவின் வடக்கு பகுதி மட்டுமே கிராமமாக உள்ளது. தீவின் தெற்கு பகுதிகள் மீட்கப்பட்டு அங்கே நெல் வயல்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

சங்குவாங் சிவாலயம் ஆண்டிசைட் (andesite stones) எனும் எரிமலை கற்களால் கட்டப் பட்டது. கோயிலின் அடித்தளத்தின் அகலம் 4.5 மீட்டர். நீளம் 4.5 மீட்டர். உயரம் 8.5 மீட்டர். ஆலயத்தின் மையத்தில் கர்ப்பகக் கிரகம் உள்ளது. பிரதான அறைக்குள் 62 செ.மீ உயரம் உள்ள சிவபெருமானின் சிலை உள்ளது.

சங்குவாங் சிவாலயத்தின் சிவன் சிலை சற்று சேதம் அடைந்து உள்ளது. கைகள் உடைபட்டு உள்ளன. முகத்தின் பாகம் சற்றுத் தேய்ந்து இருக்கிறது. சிலையின் பீடத்தில் நந்தியின் தலை செதுக்கப்பட்டு உள்ளது.



மிகவும் எளிமையான தோற்றம் கொண்ட ஆலயம். குறைந்த பட்ச ஆபரணங்களால் அலங்கரிப்புகள். சங்குவாங் சிவாலயத்தின் கூரையில் லிங்கத்தின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

சிவன் சிலை உட்பாகத்தில் உள்ள அறையின் மையத்தில் உள்ளது. சிலைக்கு அடியில் 7 மீட்டர் ஆழத்தில் ஒரு சுரங்கம் இருப்பதாகச் சொல்லப் படுகிறது, ஆனால் கர்ப்பக அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை. அதனால் அதை நிரூபிக்க முடியவில்லை.

கட்டடக் கலையின் பொதுவான அமைப்பு ஜாவானிய இந்து கோயில்களைப் போன்று உள்ளது. ஆலயத்தின் கல் சிதைவுகள்; மற்றும் கோயிலின் எளிய பாணியிலான அமைப்பு முறை; இவற்றை ஆராயும் போது இந்தக் கோயில் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்கின்றனர். தவிர பிரம்பனான் (Prambanan) கோயில்களை விட சற்றுப் பழமையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.



'சங்குவாங்' எனும் பெயர் ஒரு பாண்டான் வகை தாவரத்தின் பெயரில் இருந்து வருகிறது (Pandanus furcatus). பாண்டான் செடிகள் கோயிலைச் சுற்றி பரவலாகக் காணப் படுகின்றன.

சங்குவாங் கோயிலைப் பற்றி முதன்முதலில் வெளியுலகத்திற்கு அறிவித்தவர் ஒரு டச்சுக்காரர். அவருடைய பெயர் வோர்டர்மன் (Vorderman). இந்தக் கோயிலைப் பற்றி 1893-ஆம் ஆண்டில் படேவியா ஜெனோட்சாப் (Bataviaasch Genotschap) எனும் நூலை எழுதினார். சங்குவாங் கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகக் கூறினார்.

1966-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கின. ஆலயத்தின் மறுசீரமைப்பு 1974-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.



பேராசிரியர் ஹர்சோயோ (Prof. Harsoyo), மற்றும் பண்டுங் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மீட்பு பணிகளில் இறங்கினார்கள்.

கல்லூரி மாணவர் குழுவினரால் சிவன் சிலை கண்டுபிடிக்கப் பட்டது. பழைய ஒரு கல்லறையையும் அங்கே கண்டுபிடித்தார்கள். உள்ளூர் மக்களின் முன்னோர் என கருதப்படும் பெரியவர் முகமட் அரீப் என்பவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை.

அகழ்வாராய்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு கோயிலின் இடிபாடுகள் மற்றும் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிவன் சிலை புதைந்து கிடப்பதைக் கண்டார்கள்.



முழு அசல் பாறைகளில் 40% மட்டுமே கிடைக்கப் பெற்றன. மற்றவை எல்லாம் சேதம் அடைந்த நிலையில் இருந்தன. இருந்தாலும் மீதம் உள்ள ஆலயத்தின் பாகங்களைக் கற்கள், சிமெண்டு, மணல் மற்றும் மண் இரும்புகள் கொண்ட கலவையில் கட்டினார்கள். செய்தவர்கள் இந்தோனேசியா கல்லூரி மாணவர்கள்.

ஆலயத்திற்கு முன்னால் ஒரு சிறிய அலுவலகம் உள்ளது. ஆலயத்தின் மறுசீரமைப்பின் போது முக்கியமான கலைப் பொருட்களை சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட இடமாகும். மறுசீரமைப்பு முடிந்து விட்டது. ஆக இப்போது அது ஓர் அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.

ஆலயத்தைக் கண்டுபிடித்ததில் இருந்து, அது முழுமையாக மீட்டு எடுக்கப்படும் வரையிலான ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.



முன்பு காலத்தில் சங்குவாங் கிராமத்தில் இந்து மத மக்கள் வசித்து வந்து இருக்கிறார்கள். அங்கு சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதற்குச் சான்றாக அமைகிறது.

முகமட் அரீப் அவர்களின் கல்லறையும் சங்குவாங் ஆலயமும் பக்கத்துப் பக்கத்தில் அமைந்து உள்ளன. ஆக இந்தோனேசிய மக்களிடையே வேறுபட்ட மதங்கள் இருந்து இருந்தாலும்; ஓர் இணக்கமான வாழ்க்கை முறை இருந்து இருப்பதை இது குறிக்கின்றது. ஒரு சுமுகமான மத நல்லிணக்கம் இருந்து உள்ளது. மத அனுசரணைகள் இருந்து உள்ளன.

இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பழைய மரபுகள்; பழைய பழக்க வழக்கங்கள் இன்னும் அங்கே கடைபிடிக்கப் படுகின்றன. ஓர் எடுத்துக்காட்டு. கிராம மக்களுக்கு புனித நாள் புதன்கிழமை தான். வெள்ளிக்கிழமை அல்ல.



மத நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் இந்தோனேசியாவில் மக்களும் மத இணக்கத்திற்கு முதன்மை செய்கின்றார்கள். மற்ற மதங்களுக்கு மதிப்பு மரியாதை செய்கின்றார்கள். மற்ற மதங்களுடன் இணைந்து போகின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டிய நன்மாந்தர்கள். சிரம் தாழ்த்துகிறோம். வாழ்க அவர்களின் மத நல்லிணக்கங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.07.2020

சான்றுகள்:

1. https://www.exploresunda.com/cangkuang.html

2. https://en.wikipedia.org/wiki/Cangkuang

3. https://travel.detik.com/domestic-destination/d-3028085/kisah-candi-cangkuang-yang-misterius-di-garut

4. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java-cangkuang_temple_27



18 ஜூலை 2020

இந்தோனேசியா மனுசீலா மலையில்

தமிழ் மலர் - 18.07.2020

மாலுக்கு என்பது இந்தோனேசியாவின் ஒரு மாநிலம். கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம். இந்தத் தீவு கூட்டத்திற்கு அருகாமையில் சுலவாசி தீவு. சற்று தள்ளி பாப்புவா நியூகினி தீவு.



இந்த மாலுக்கு (Maluku) தீவுக் கூட்டத்தில் மனுசீலா மலைகள் (Manusela mountains) உள்ளன. இந்த மலையின் மலைக் காட்டுப் பகுதிகளில் மனுசீலம் (Manusela) எனும் ஓர் இனத்தவர் வாழ்கிறார்கள். இவர்களை வஹாய் (Wahai) இனத்தவர் என அழைப்பது உண்டு.

மக்கள் தொகை 10,000-க்கும் அதிகமானவர்கள். இவர்கள் அனைவருமே இந்து சமயம் சார்ந்தவர்கள். இவர்கள் பின்பற்றும் இந்து சமயத்தின் பெயர் மனுசீலா நாரஸ் (Manusela Naurus). கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். சற்றுப் புதுமையாக இருக்கலாம். தெரிந்து கொள்வோம்.



நாரஸ் நம்பிக்கை என்பது இந்து மதம் கலந்த ஆன்ம வாதம் (animism). அதாவது இந்து மதமும் ஆன்ம வாதமும் கலந்த ஒரு கலவை. ஆனால் அண்மைய ஆண்டுகளில் மனுசீலம் இனத்தவர்களில் சிலர் கத்தோலிக்க புராட்டஸ்டன்ட் கொள்கைகளையும் (Protestant) ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவாசி மாநிலத்தில் ஒரு வகையான பூர்வீக சமூகத்தவர் வாழ்கிறார்கள். அவர்களின் பெயர் தோராஜன் (Torajan). இவர்களிடமும் ஒரு வகையான வழிபாடு இருந்தது.

அதற்கு நாரஸ் வழிபாடு (Naurus syncretic faith) என்று பெயர். இந்து சமயமும் ஆன்மவாதமும் கலந்த வழிபாடு. அதற்கு அலுக் டோலோ (Aluk To Dolo) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அதன் பொருள் மூதாதையர்களின் வழி.



இருந்தாலும் இந்த தோராஜன் சமூகத்தவர் இப்போது இந்து சமயத்தையும் பின்பற்றவில்லை. அலுக் டோலோ மூதாதையர்களின் வழிபாட்டையும் பின்பற்றவில்லை. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

1900-ஆம் ஆண்டுகளில், தோராஜன் சமூகத்தவர் வெளி உலக மக்களால் அறியப் படாத சமூகத்தவர்களாக இருந்தார்கள். டச்சுக்காரர்கள் வந்தார்கள். இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் செய்து விட்டார்கள்.

தோராஜன் மக்கள் முன்பு பின்பற்றி வந்த அந்த நாரஸ் வழிபாட்டைத்தான் மனுசீலா மலைக் காடுகளில் வாழும் மனுசீலம் சமூகத்தவர்கள் இப்போது பின்பற்றி வருகிறார்கள்.



இந்து சமயத் தெய்வங்களையும்; ஆன்ம வாதத் தெய்வங்களையும் ஒரு சேர வழிபடுவதைத் தான் நாரஸ் வழிபாடு என்கிறார்கள். இவற்றைத் தவிர மனுசீலம் சமூகத்தவர் பின்பற்றும் இந்து மதத்தைப் பற்றி அதிகம் ஆழமாகத் தெரியவில்லை.

மனுசீலம் சமூகத்தவர் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்வதால் இவர்களின் இருப்பிடங்களைத் தேடிச் செல்வதற்குப் பல நாட்கள் பிடிக்கும். தேடிப் பிடிப்பதும் சிரமமான காரியம்.

முன்பு காலத்தில் யாராவது புது ஆட்கள் போனால் அவர்களை அபேஸ் செய்து விடுவார்களாம். தலையை வெட்டி காவு கொடுத்து விடுவார்களாம். பெரிய கதையே இருந்தது. இப்போது எல்லாம் அப்படி இல்லை. ரொம்பவும் மாறி விட்டார்கள்.


முன்பு காலத்தில் மனுசீலம் சமூகத்தவரைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தவர்கள், மனுசீலம் மொழியை நன்றாகப் படித்து தெரிந்து கொண்டு தான் காட்டுக்குள் போய் இருக்கிறார்கள். மொழி தெரியாமல் போனால் உடம்பு திரும்பி வராது என்பது அவர்களுக்கும் தெரியும். 

மனுசீலம் சமூகத்தவர் பின்பற்றும் இந்து சமயம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் இருந்து வந்தது.

மிண்டானாவோ தீவும் மாலுக்கு தீவும் ஒன்றுக்கொன்று மிக அருகில் உள்ள தீவுகள். பாய்மரக் கப்பலில் அல்லது கட்டு மரங்களில் இரண்டு நாட்களில் போய்ச் சேர்ந்துவிட முடியும்.



முன்பு காலத்தில் மிண்டானாவோ தீவில் (Mindanao) வாழ்ந்த இந்து மக்கள் தான் இந்த மாலுக்கு தீவிற்கும் இந்து மதத்தைக் கொண்டு வந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிண்டானாவோ தீவில், முருகன், விநாயகர், சரஸ்வதி தெய்வச் சிலைகளைக் கண்டுபிடித்தார்கள்.

ஆகவே அங்கே இருந்து தான் மனுசீலம் இனத்தவர்கள் இடையே இந்து மதம் பரவி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவு செய்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதம்; பௌத்த மதம்; இந்து பௌத்த மதங்களின் கலப்பு மதம் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து இருக்கலாம்.



இந்தோனேசியாவில் ஸ்ரீவிஜய, மஜபாகித் அரசுகள் இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் பின்பற்றி வந்தன. அவர்கள் ஆட்சி செய்த போது இந்தியா, தமிழ் நாட்டு வணிகர்கள் அங்கு போய் வணிகம் செய்து இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவிற்குப் போன தமிழ் நாட்டு வணிகர்கள் அப்படியே பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் போய் இருக்கிறார்கள். அங்கே ஆன்மீக கருத்துக்களையும் பரப்பி இருக்கிறார்கள். இதற்குத் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.

1917-ஆம் ஆண்டில் மிண்டானாவோ தீவில் பயங்கரமான ஒரு புயல் காற்று; பயங்கரமான வெள்ளம். அப்போது மண்ணுக்குள் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த ஒரு தங்கச் சிலை வெளியே தெரிய வந்தது.



அது தாரா தெய்வத்தின் சிலை. தாரா அல்லது ஆர்ய தாரா (Arya Tara) என்றும் சொல்லலாம். அதன் எடை 1.79 கிலோ கிராம். 21 காரட் தங்கத்தில் செய்யப் பட்டது. பௌத்த மதத்தின் சரஸ்வதி தேவி தாராவின் சிலை. 13 ஆம் நூற்றாண்டுக் காலச் சிலை.

இந்து சமயத்தில் இருந்துதான் சரஸ்வதி தேவியின் வழிபாடு பௌத்த மதத்திற்குள் சென்றது என்பதை நினைவில் கொள்வோம். வஜ்ரயான பௌத்தத்தின் ஒரு தந்திர தேவதையாக தாரா சரஸ்வதி தேவி வணங்கப் படுகிறார்.

இந்தச் சிலையைத் தங்கத் தாரா (Golden Tara) என்று அழைக்கிறார்கள். இப்போது இந்த சிலை அமெரிக்கா, சிகாகோ வரலாற்று அருங்காட்சியகத்தில் (Museum of Natural History in Chicago) உள்ளது. 



12-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஸ்ரீவிஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்த ஆட்சியில் மாலுக்கு தீவுகளும் (Maluku Islands) அடங்கும். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மஜபாகித் பேரரசு ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவின் முழு கடல் பகுதியையும் அந்தப் பேரரசு ஆட்சி செய்தது.

மஜபாகித் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் மனுசீல இனத்தவர் மனுசீலா  மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், ஜாவாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மாலுக்கு தீவில் வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தை ஏகபோகமாக நடத்தி வந்தார்கள்.

மனுசீலம் இனத்தவர் பேசும் மொழியின் பெயர் சோ உப்பா (Sou Upaa). ஏறக்குறைய 11 ஆயிரம் பேர். இவர்களில் 3 விழுக்காடினர் கிறிஸ்தவர்கள்.



மனுசீலம் இனத்தவர் பெரும்பாலோர் மனுசீலா தேசிய பூங்காவில் (Manusela National Park) வாழ்கிறார்கள். பூங்காவில் நான்கு கிராமங்கள் உள்ளன: மனுசீலா (Manusela); இலியானா மரினா (Ilena Maraina); செலுமேனா (Selumena) மற்றும் கனேகி (Kanike). இந்த நான்கு கிராமங்களிலும் மனுசீலம் மக்களைக் காண முடியும்.

இந்தப் பூங்காவில் 3,027 மீட்டர் உயரத்தில் பினையா மலை (Mount Binaiya) உள்ளது. இந்த மலையை அவர்களின் தெய்வச் சின்னமாகப் போற்றுகிறார்கள்.

கி.பி.100-ஆம் ஆண்டில் வர்த்தகர்கள், மாலுமிகள், அறிஞர்கள், அர்ச்சகர்கள் மூலம் இந்து மதம் இந்தோனேசியாவுக்குள் வந்தது. இந்தோனேசியாவின் ஆறு அதிகாரப்பூ ர்வமான மதங்களில் இந்து மதமும் ஒன்றாகும்.



2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் சுமார் 1.7% விழுக்காட்டினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். பாலி தீவில் 83% விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர்.

6-ஆம் நூற்றாண்டில் இருந்து இந்துமதச் சிந்தனைகளை ஒருங்கிணைத்து, இந்து மதத்தின் இந்தோனேசியப் பதிப்பாக இந்தோனேசிய இந்து மதம் உருவானது.

ஏற்கனவே இந்தோனேசியாவில் ஜாவானிய கலாசாரம் இருந்தது. அந்தக் கலாசாரத்துடன் இந்து மதச் சிந்தனைகளும்; இந்து மதக் கருத்துக்களும் இணைந்தன. அந்தப் பாவனையில் இந்தோனேசியாவில் ஒரு புதிய இந்து மதப் பதிப்பு உருவெடுத்தது. அதனால் தான் பாலித் தீவில் உள்ள இந்து மதமும் வேறு இடங்களில் உள்ள இந்து மதமும் மாறுபட்டு உள்ளன.



ஸ்ரீ விஜய, மஜபாகித் பேரரசுகளின் காலத்தில் அங்கே ஜாவானிய இந்து மதக் கலவைகள் தொடர்ந்தன. கி.பி. 1400-ஆம் ஆண்டுகளில் இந்தப் பேரரசுகளில் இஸ்லாத்தின் தாக்கங்கள். அதன் பின்னர் இந்தோனேசியாவின் பெரும்பாலான இடங்களில் இருந்து இந்து மதம் மறைந்து விட்டது.

2010-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் மத விவகார அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்தோனேசியத் தீவுகளில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) இந்துக்கள் வாழ்வதாக ஒரு மதிப்பீடு.

அதை இந்தோனேசியாவின் பாரிசாத இந்து தர்மம் (Parisada Hindu Dharma Indonesia) மறுத்தது. 2005-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் 18 மில்லியன் இந்துக்கள் வாழ்ந்ததாக மதிப்பீடு வழங்கியது.



உலகின் பல இடங்களில் இந்து மதம் சார்ந்த மக்கள் அன்றும் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கின்றார்கள். அவர்களில் ஒரு சாரார் இந்தோனேசிய மாலுக்கு தீவில் மனுசீலம் எனும் பெயரில் வாழ்கிறார்கள். அதிகம் பேர் இல்லை. 11 ஆயிரம் பேர் தான்.

அவர்களுக்கு என்று தனி மொழி. தனி வாழ்க்கை. தனி கலாசாரம். தனி பாரம்பரியப் பண்புகள். அவையே அவர்களுக்குத் தனி உலகம். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்.

சான்றுகள்:

1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Manusela". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

2. Mark Juergensmeyer and Wade Clark Roof, 2012, Encyclopedia of Global Religion, Volume 1, pages 557 – 558.

3.  Indonesia International Religious Freedom Report 2005 – US State Department, Quote: "Parishada Hindu Dharma Indonesia (PHDI) estimates that 18 million Hindus live in the country".

4. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali.




16 ஜூலை 2020

ஜாவா தெங்கர் இந்துமத சமூகம்

தமிழ் மலர் - 16.07.2020 - வியாழக்கிழமை

கடந்த கால வரலாற்றில் கடல் கடந்து வாழ்ந்த பல இனங்கள் தங்கள் முகவரிகளைத் தொலைத்து விட்டன. தேடியும் கிடைக்காமல் சில இனங்கள் மனித சஞ்சாரம் இல்லாத மலைக்காடுகளில் வாழத் தொடங்கின.

இடம் பெயர்ந்து வாழத் தொடங்கிய அந்தச் சில இனங்கள் இன்னும் அப்படியேதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. எரிமலையாவது ஏரிமலையாவது. எங்களுக்குப் பிடிக்காத ஒன்று எங்களுக்குத் தேவை இல்லை என்று எரிமலைக் காடுகளில் ஏறி, வீடுகளைக் கட்டிக் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டு வருகின்றன.


அவற்றில் ஓர் இனம்தான் தெங்கர் (Tengger) மலைவாழ் இனம். மஜபாகித் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழந்த ஓர் அரச இனம். மற்ற மற்ற மதங்களின் நெருக்குதல்களால்; அழுத்தங்களால் இடம் விட்டு இடம் பெயர்ந்த ஓர் இந்து இனம். தெங்கர் என்பது பலரும் கேள்விப் படாத பெயராகக் கூட இருக்கலாம்.

இந்தத் தெங்கர் இனம் இன்னமும் தனிமையில் தான் வாழ்கின்றது. ஆன்மீகத் தன்மையை விட்டுக் கொடுக்காத ஆத்ம இனமாக ஆதர்சனமாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  அந்த இனத்தைப் பற்றித் தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கிழக்கு ஜாவாவில் ஒரு வனப் பூங்கா. அதன் பெயர் புரோமோ தெங்கர் செமெறு தேசியப் பூங்கா (Bromo Tengger Semeru National Park). தனிமைப் படுத்தப்பட்ட வனப் பூங்கா. இந்தோனேசிய மக்களும் சரி; மற்றவர்களும் சரி; அந்தப் பகுதிக்கு அதிகமாகப் போவது இல்லை. அங்கேதான் இந்தத் தெங்கர் இனம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.


அண்மைய காலங்களில் இந்த இனத்தைப் பற்றி வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. சுற்றுலா பயணிகள் நிறையவே போக ஆரம்பித்தார்கள். அந்தமான் ஆதிவாசிகளைப் போல வாழ்ந்த தெங்கர் மக்கள் இப்போது இவர்களும் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காசு பார்க்கும் கலாசாரம் அங்கேயும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டது. சரி.

இந்தோனேசியா, ஜாவாவில் தெங்கர் எரிமலை புகழ்பெற்றது. தெங்கர் மலைக்கு மற்றொரு பெயர் புரோமோ மலை (Mount Bromo). அந்த மலையின் அடிவாரக் காடுகளில் 30 தெங்கர் கிராமங்கள். அதாவது எரிமலைப் பள்ளங்களின் உயரமான சரிவுகளில் அந்தக் கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களில் இப்போது ஏறக்குறைய 100,000 தெங்கர் மக்கள் வாழ்கிறார்கள். முன்பு மூன்று இலட்சம் பேர் வாழ்ந்தார்கள். இந்த இனத்தவரின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 



இவர்களைத் தெங்கிரிய மக்கள் (Tenggerese) என்று அழைக்கிறார்கள். ஜாவா தீவில் எஞ்சி உள்ள சில குறிப்பிடத்தக்க இந்துச் சமூகங்களில் தெங்கர் சமூகமும் ஒன்றாகும்.

கி.பி. 1500-ஆம் ஆண்டுகளில் ஜாவாவை மஜபாகித் சாம்ராஜ்யம் ஆட்சி செய்தது. அந்தச் சாம்ராஜ்த்தில், எஞ்சி இருக்கும் அரசக் குடும்ப உறுப்பினர்களின் சந்ததிகள் என்று நம்பப் படுகிறது. மஜபாகித் பேரரசு முதலில் இந்து பேரரசு. பின்னர் பௌத்த அரசாக மாறியது.

மஜபாகித் சாம்ராஜ்யத்தின் கடைசிக் காலத்தில் ஜாவாவில் இஸ்லாமிய மதம் பரவத் தொடங்கியது. நெருக்குதல்களின் காரணமாக மஜபாகித் சாம்ராஜ்யத்தின் அரச குடும்பத்தினர் மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றி அங்கேயே கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து விட்டார்கள்.



இந்தோனேசிய அரசாங்கமும் அவர்களின் சமய நம்பிக்கையில் தலையிடவில்லை.

எரிமலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த தெங்கர்கள் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார்கள். காலப் போக்கில் அவர்களின் இந்து மதத்தில் சிற்சில மாற்றங்கள். பாலித் தீவைப் போல தங்களுக்கு என்று தனி ஓர் இந்து சமயத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

இவர்களைப் போல கிழக்கு ஜாவாவின் பசுருவான் (Pasuruan); புரோபோலிங்கோ (Probolinggo); மலாங் (Malang); மற்றும் லுமாஜாங் (Lumajang) பகுதிகளிலும் தெங்கர் மக்களின் சிதறிய சமூகங்கள் உள்ளன.

இந்தச் சமூகங்கள் ரோரோ ஆந்தாங் (Roro Anteng) மற்றும் ஜோகோ சேகர் (Joko Seger) என்பவர்களின் பாரம்பரிய வழித்தோன்றல்கள் என்று நம்பப் படுகிறது.



500 ஆண்டுகளுக்கு முன்பு மஜபாகித் அரசின் கடைசி மன்னராக பிராவிஜயா (Brawijaya) என்பவர் ஆட்சி செய்து வந்தார். அப்போது புதிய மதமாக இஸ்லாம் விரிவடைந்து வந்தது. அதன் காரணமாக மஜபாகித் பேரரசில் நிலைமை பதற்றமாக இருந்தது.

அந்த நேரத்தில் மகாராணியார் ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுத்தார். அவளுக்கு ரோரோ ஆந்தாங் என்று பெயரிட்டார். பின்னர் இந்த இளவரசி ஜோகோ சேகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

புதிய மதத்தின் தாக்கங்கள் மிகவும் வலுவாக இருந்தன. பற்பல குழப்பங்கள். அதனால் பிராவிஜயா ராஜாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் பாலித் தீவிற்குச் சென்றனர். சிலர் புரோமோ எரிமலையின் அடிவாரத்திற்குச் சென்றனர்.


இளவரசி ரோரோ ஆந்தாங்; ஜோகோ சேகர் ஆகியோரும் எரிமலைக் காட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். பின்னர் அவர்கள் எரிமலைப் பகுதியை ஆட்சி செய்து அதற்குத் தெங்கர்  (Tengger) என்று பெயர் வைத்தார்கள்.

தெங்கர் மக்கள், ஜாவானிய தெங்கர் (Tengger Javanese) என்று அழைக்கப்படும் ஒரு பழமையான ஜாவானிய (மஜபாகித்) மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழி பழைய ஜாவானிய பிராமி (Javanese Brahmi) மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் ஒரு வகையான காவி எழுத்துகளையும் சொந்தமாக உருவாக்கிக் கொண்டார்கள். அதைத்தான் இப்போது பயன்படுத்துகிறார்கள்.

தெங்கர் மக்கள் பொதுவாக இந்து மதத்தைத் தங்கள் மதம் என்று கூறுகின்றனர். திரி மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரைத் தங்களின் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.



இருப்பினும் அவர்கள் காலப் போக்கில் பௌத்தம்; மற்றும் ஆன்ம வாதக் கூறுகளையும் தங்களின் இந்து மதத்துடன் இணைத்துக் கொண்டு உள்ளனர்.

புரோமோ எரிமலையை மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாக கருதுகிறார்கள். அந்த எரிமலை வெடித்தால், தங்கள் மீது கடவுள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

கோயில் அர்ச்சகர்கள் என்பது அவர்களின் பரம்பரைச் சேவையாகும். இந்தச் சேவை தந்தையிடம் இருந்து மகனுக்குச் செல்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே ஒரு கோயில் இருக்கும். ஒரே ஒரு பூசாரி. இவருக்கு லெஜான் (Legen); செபு (Sepuh); தண்டன் (Dandan) என மூன்று உதவியாளர்கள்.



ஆனால் எல்லோருடைய வீடுகளிலும் பூஜை அறை இருகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு உருவச் சிலைகளை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் அருகில் இருக்கும் மதுரா தீவில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. அதன் காரணமாக, பல மதுரா குடியேறிகள், தெங்கர் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி வருகின்றனர். அத்துடன் மதம் மாற்றப்பட்டு உள்ளனர். இதுவரையிலும் 10,000 தெங்கர் மக்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறி உள்ளனர்.

மத மாற்ற நடவடிக்கைகளின் காரணமாக, தெங்கர் மக்கள் தங்களின் இந்து கலாச்சாரத்தையும் இந்து மதத்தையும் பாதுகாக்கும்படி பாலித் தீவு இந்துக்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

(Hindu Tenggerese asked the Balinese Hindus for help by reforming their culture and religion closer to the Balinese.)



பாலித் தீவில் இருந்து இந்து மத அறிஞர்கள் புரோமோ மலை அடிவாரத்திற்கு வந்து உதவிகள் செய்கிறார்கள். இதை அறிந்த இந்தோனேசிய அரசாங்கம் தெங்கர் இந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இறங்கியது.

தெங்கர் மக்கள் வாழும் மலைப் பகுதிகளைப் புரோமோ - தெங்கர் - செமெறு தேசியப் பூங்காவாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்து உள்ளது. மேலும் இந்த பகுதியில் வெளியாட்கள் உள்நுழைவது சட்டவிரோதச் செயல் என்றும் அறிவித்து உள்ளது. அந்த வகையில் தெங்கர் மக்களை வெளியில் இருந்து திணிக்கப்படும் அழுத்தங்களில் இருந்தும் பாதுகாத்து வருகிறது.

(The Indonesian government declared the Tengger Mountains as the Bromo-Tengger-Semeru national park and declared that any more logging in this area is an illegal act, therefore protecting the Tenggerese from further disruption.)



இந்தோனேசியாவில் தெங்கர் இனம்:

இந்து மதம்: 85500 (95%)
இஸ்லாம்: 3600 (4%)
கிறிஸ்தவம் (Protestant): 900 (1%)

தெங்கர் மக்கள் அடிப்படையில் விவசாயிகள் அல்லது கால்நடை வளர்ப்பவர்கள். இவர்களில் விவசாயம் செய்பவர்கள் குறைவான மலை உயரம் கொண்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். கால்நடை வளர்ப்பவர்கள் அதிக உயரமான இடங்களில் வாழ்கிறார்கள். இவர்களின் பயணங்களுக்குச் சிறிய சிறிய குதிரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நாம் இங்கே தீபாவளியைக் கொண்டாடுவது போல அவர்களும் அங்கே யத்னியா கசாடா (Yadnya Kasada) எனும் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இது ஒரு முக்கியமான சமயத் திருவிழா. சுமார் ஒரு மாதம் நீடிக்கும் திருவிழா. திருவிழாவின் 14ஆவது நாளில், புரோமோ மலையின் உச்சிக்குச் செல்கிறார்கள்.


அங்கு அவர்களின் பிரதான தெய்வங்களான விதி வாசா (Widi Wasa); மகாதேவா (Mahadeva) தெய்வங்களுக்கு அரிசி, பழம், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றைப் பிரசாதங்களாகப் படைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

தெங்கர் இந்துக்கள். உலகின் எங்கோ ஓர் எரிமலை அடிவாரத்தில் ஓர் இந்து மதச் சமூகத்தவர்களாக வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களின் வரலாற்றைத் தொலைக்கவில்லை. சமயப் பண்பாடுகளையும் தொலைக்காமல்; பாரம்பரியக் கலாசாரத்தையும் தொலைக்காமல் கட்டிக் காத்து வருகின்றார்கள். தலை வணங்குவோம்.

சான்றுகள்:


1. http://www.mahavidya.ca/2012/06/18/the-tenggerese-hindus-of-java/

2. https://www.britannica.com/topic/Tengger

3. https://www.behance.net/gallery/70513251/KINGDOM-OF-TENGGER

4. https://www.eastjava.com/tourism/malang/mount-bromo.html

5. https://en.wikipedia.org/wiki/Tenggerese_people

6. http://pojokpitu.com/baca.php?idurut=46774

PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

15 ஜூலை 2020

ஜாவா எரிமலையில் சம்புசாரி சிவன் ஆலயம்

தமிழ் மலர் - 15.07.2020

ஜாவாவில் ஒரு சிவன் ஆலயம். 1000 ஆண்டுகள் எரிமலைச் சாம்பலில் புதைந்து இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தார்கள். புனரமைப்பு செய்து புனிதத் தலமாகக் கொண்டாடுகிறார்கள். இப்போது இந்தோனேசிய மக்கள் அலை அலையாய் படையெடுக்கின்றார்கள். ஆரவாரம் செய்து போற்றிப் புகழ்கின்றார்கள்.



1966-ஆம் ஆண்டு ஓர் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் ஓர் அதிசயம் நடக்கப் போகிறது. அந்த அதிசயம் கரியோ வினங்குன் (Karyowinangun) எனும் ஜாவானிய விவசாயிக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. வழக்கப் போல மண்வெட்டியுடன் காட்டுப் பகுதிக்குள் போகிறார்.

கொஞ்சம் செடி புதர்கள். அவற்றைச் சுத்தம் செய்து சோளம், கிழங்கு பயிர்களை நடுவது அவருடைய அன்றைய வேலை. நிலத்தைச் சுத்தம் செய்யும் போது அவருடைய மண்வெட்டி ஒரு பெரிய கல்லில் பட்டித் தெறித்தது.

பெரிய கற்பாறை. சோதித்துப் பார்த்த போது கற்பாறையில் பல வடிவங்களில் பல கோணங்களில் செதுக்கல்கள் இருப்பதைப் பார்த்தார். கரியோ வினங்குனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே கிராமத்துக்குள் ஓடி அங்கு உள்ளவர்களிடம் சொன்னார். அவர்களும் வந்து பார்த்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம்.


அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி அறிந்த பிரம்பனான் தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அப்புறம் என்ன. காரியோவினங்குனின் பயிர் நிலத்தை அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான தொல்பொருள் தளமாக அறிவித்தார்கள். அகழாய்வுகள் தொடங்கின.

கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை ஒரு கோயிலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆக அந்தக் கோயில் அந்தப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

பின்னர் தீவிரமான அகழ்வாராய்ச்சிகள். பல நூற்றுக் கணக்கான கற்பாறைகள்; பழங்காலச் சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தக் கற்பாறைகள் ஒரு கோயிலின் கூறுகள் என்றும் உறுதி செய்யப்பட்டன.



1987 மார்ச் மாதம் அகழ்வாராய்ச்சி மற்றும் புனரமைப்பு பணிகள் நிறைவு அடைந்தன. 21 ஆண்டுகால அகழ்வாய்வுகள். எத்தனை வருடங்கள் என்பதைக் கவனியுங்கள்.

அதுதான் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்து வாழ்ந்த சம்புசாரி சிவன் ஆலயம்

சம்புசாரி கோயிலுக்கு அருகில் உள்ள மெராபி எரிமலை (Mount Merapi) வெடித்ததால் அதன் சாம்பல் இந்தக் கோயிலை மண்ணுக்குள் புதைத்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

சம்புசாரி கோயில் கண்டுபிடிப்பு என்பது அண்மைய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அதிசயத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பு என வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.



தவிர இந்தக் கோயிலுக்கு அருகில் இன்னும் பல பழங்காலக் கோயில்கள் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கலாம். அப்படி ஓர் ஊகத்திற்கும் வழிவகுத்து உள்ளது. மெராபி எரிமலை வெளியிட்ட சாம்பல் புழுதிகளுக்கு அடியில் அந்தக் கோயில்கள் புதைபட்டு இருக்கலாம்.

சின்ன ஒரு சுருக்கம். சம்புசாரி (Sambisari) என்பது 9-ஆம் நூற்றாண்டின் இந்து கோயிலாகும். இது யோக் ஜகார்த்தா (Yogyakarta) பூர்வோமர்தானி (Purwomartani) புறநகர்ப் பகுதியில் சம்புசாரி குக்கிராமத்தில் உள்ளது.

சம்பு என்றால் சிவன். சாரி என்றால் சாரம். சம்புசாரி என்றால் சிவனைச் சார்ந்த வழிபாட்டுத் தலம் என்று பொருள்.

இந்தச் சம்புசாரி கோயில் சுமார் ஐந்து மீட்டர் ஆழத்தில் புதைபட்டு இருந்தது. அசல் கோயிலின் பல பகுதிகள் தோண்டப்பட்டு உள்ளன.


இந்தக் கோயில் யோக் ஜகார்த்தாவில் இருந்து கிழக்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அடிசுசிப்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு (Adisucipto International Airport) அருகில் அமைந்து உள்ளது.

இந்தோனேசியாவில் சிவ வழிபாடுகள் அதிகமாக இருந்த காலக் கட்டத்தில், அங்கே நூற்றுக் கணக்கான சிவாலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. நூற்றுக் கணக்கில் என்று சொல்வது தவறு. ஆயிரக் கணக்கில் என்று சொன்னால் தான் சரியாக அமையும்.

அவை எல்லாம் இன்றைக்கு நேற்றைக்கு கட்டப்பட்ட சிவ ஆலயங்கள் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டவை. இன்னும் சரியாகச் சொன்னால் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயங்கள்.

பெரும்பாலும் ஜாவாவில் கட்டப்பட்ட ஆலயங்கள் மெராப்பி எரிமலை வெடிப்புகளினால் மண்ணுக்குள் புதையுண்டு போயின. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மெராப்பி எரிமலை வெடிப்புகள் தொடர்பான தகவல்கள் சரிவரக் கிடைக்கவில்லை.



அந்த எரிமலை பல நூறு வருடங்களுக்கு பேசாமல் அமைதியாக இருக்கும். அப்புறம் ஒரு தடவை வெடிக்கும். இருக்கிற கிராமங்கள்; கட்டுமானங்கள்; பயிர் பச்சைகள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய் விடும்.

அப்படி புதையுண்டு போன இந்து ஆலயங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறோம். தாயாங் பீடபூமியில் இருந்த 400 ஆலயங்களில் இப்போது எட்டு ஆலயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய வருகின்றன.. மற்றவை எல்லாம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

அந்த மாதிரி புதையுண்டு போன ஆலயங்களில் பல மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று தான் சம்பு சாரி சிவன் ஆலயம்.

இந்தோனேசியாவைப் பல்லவ அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல்லவ இந்திய ஜாவானிய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இந்திய ஜாவானிய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரும்பாலோர் சிவ வழிபாட்டில் தீவிரம் காட்டி இருக்கிறார்கள்.



சிவ வழிபாடுதான் இந்தோனேசியாவில் மேலோங்கி இருந்து இருக்கிறது. புத்த மதம் வந்த பிறகு சிவ வழிபாடு குன்றத் தொடங்கியது. இஸ்லாமியம் வந்த பிறகு சிவ வழிபாடு குன்றிப் போனது.

மகா மன்னர்களும் சரி; மகாராணியார்களும் சரி. சிவாலயங்களைக் கட்டி சிவ வழிபாட்டில் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் உள்ள மற்றோர் இந்து கோயில் பிரம்பனான் சிவாலயம் ஆகும். இந்த ஆலயத்தின் சுவர்களைச் சுற்றிலும் இந்து சமயச் சிலைகள் உள்ளன. பிரம்பனான் கோயிலுக்குள் அமைந்து உள்ள கட்டடக் கலை; மற்றும் அலங்கார ஒற்றுமைகள் சம்பு சாரி சிவன் ஆலயத்துடன் ஒத்துப் போகின்றன.



அந்த வகையில், சம்பு சாரி ஆலயம் 9-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலப் பகுதியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அதாவது கி.பி. 812 - கி.பி. 838.

பண்டைய ஜாவாவில், 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக் காலத்தில் காவி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன. அந்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு தங்கத் தகட்டை சம்பு சாரி ஆலயத்தில் கண்டு எடுத்தார்கள். அந்தத் தங்கத் தகட்டிற்குப் பெயர் வனுவா தெங்கா கல்வெட்டு III (Wanua Tengah inscription III).

அந்தக் கல்வெட்டில் மாதரம் எனும் மத்தாரம் பேரரசை (Mataram Kingdom) ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அந்த வகையில் சம்பு சாரி ஆலயம், ராகா கருங்கா (Rakai Garung) எனும் மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ராகா கருங்காவின் ஆட்சிக் காலம் கி.பி. 828 - கி.பி. 846.


இருப்பினும் ஒரு கோயிலின் கட்டுமானம் என்பது எப்போதுமே ஒரு மன்னரால் உருவாக்கப் படுவது இல்லை. அந்தக் காலத்தில் வாழ்ந்த நிலப் பிரபுக்களும் கட்டுமானத்திற்கு உத்தரவிட்டு இருக்கலாம். அதற்கு நிதியுதவி செய்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

சம்பு சாரி ஆலயத்தின் மையப் பகுதி 6.5 மீட்டர் (20 அடி) ஆழத்தில் இருக்கிறது.  அப்படி என்றால் அவ்வளவு ஆழத்திற்கு எரிமலைச் சாம்பல் மூடி இருந்து இருக்கிறது. ஆக இதே மாதிரி நிறைய ஆலயங்களும் சாம்பல் மண்ணில் புதையுண்டு இருக்கலாம்.

சம்பு சாரி ஆலயத்தின் சுவர்களைச் சுற்றிலும் இந்து தெய்வங்களின் சிலைகள் சரம் சரமாய் உள்ளன. அவற்றுள் துர்காதேவி சிலைகள்; விநாயகர் சிலைகள்; அகத்தியர் சிலைகள் உள்ளன. நந்தீஸ்வரர் சிலைகளும் ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ளன.


ஜாவா மக்கள் அங்குள்ள இந்து ஆலயங்களைத் தங்களின் வரலாற்றுப் பெருமைக்கு உரிய புனிதத் தலங்களாகப் போற்றுகின்றார்கள். பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றார்கள்.

அவர்களின் பெயர்களையும்; வணிகப் பெயர்களையும் இந்திய சாயலில் அமைத்துக் கொள்கின்றார்கள். இந்தியப் பாரம்பரியத் தன்மைகள் அவர்களின் வாழ்வியலில் ஒன்றாய்க் கலந்து விட்டன. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.07.2020

சான்றுகள்:

1. https://www.maioloo.com/tempat-wisata/yogyakarta-jogja/candi-sambisari/

2. https://www.yogyes.com/en/yogyakarta-tourism-object/candi/sambisari/

3. https://en.wikipedia.org/wiki/Sambisari

4. https://www.expedia.com.my/Sambisari-Temple-Yogyakarta.d6223390.Place-To-Visit

5. https://iopscience.iop.org/article/10.1088/1755-1315/212/1/012048