17 ஆகஸ்ட் 2020

பரமேஸ்வரா தாயார் சரவர்தானி

 தமிழ் மலர் - 01.07.2020

பரமேஸ்வராவின் தாயார்; தந்தையாரைப் பற்றிய புதிய தகவல்கள். பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). இந்த ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா.

பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani).


தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மூத்த மகன். பிறந்த ஆண்டு 1344. பிறந்த இடம் சிங்கப்பூர் மேரு மலை. இதைக் கென்னிங் குன்று (Fort Canning Hill) என அழைக்கிறார்கள். மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan).

தமியா ராஜா ராணா மங்களா (Damia Raja Rana Menggala) மஜபாகித் வம்சாவழியைச் சேர்ந்தவர். தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மஜபாகித் வம்சாவழியினர் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் (Tribuana Tunggadewi) கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா.

மகாராணியார் திரிபுவனா துங்காதேவி; மஜபாகித் அரசின் மூன்றாவது ஆட்சியாளர். இவர் மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த காலம் 1326 - 1350.

இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwanno Tunggadewi Jayawishnu Wardhani). இன்னொரு பெயரும் உள்ளது. கீதா ராஜா (Dyah Gitarja).

மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. இவர் தனி ஒருவராக மஜபாகித் பேரரசை ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

மகாராணியார் திரிபுவனா துங்காதேவி, மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).

ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணா மங்களா (Rana Menggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்தவர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)

பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா நீல உத்தமன். சிங்கப்பூரை தோற்றுவித்தவர்.

சிங்கப்பூரின் முதல் ராஜா நீல உத்தமன். 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீ விக்கிரம வீரா. 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் ஸ்ரீ ராணா விக்கிரமா. 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா. 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் பரமேஸ்வரா. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா.

1398-ஆம் ஆண்டு இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.08.2020

சான்றுகள்:

1. Sarawardani. married Ranamenggala, and had a son, Parameswara who was born in 1344,
(https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

2. Parameswara merupakan cicit (turunan keempat) dari Ratu Tribhuwana Wijayatunggadewi, penguasa Majapahit yang ke 3.
(https://tirto.id/takhta-majapahit-dan-bakti-tribhuwana-tunggadewi-kepada-ibu-cB9k)

3. Urutan silsilahnya adalah sebagai berikut: Pertama, Ratu Tribhuwana Wijayatunggadewi menikah dengan Kertawardhana (anak tertua dari Mahesa Anabrang / Adwayabrahma), memiliki anak perempuan: Iswari.
(https://id.wikipedia.org/wiki/Tribhuwana_Wijayatunggadewi)

4. Kedua, Iswari menikah dengan Singawardana, memiliki anak perempuan: Sarawardani. Ketiga, Sarawardani menikah dengan Ranamenggala (yang kemudian bergelar Shri Rana Wira Kerma), memiliki anak laki laki: Parameswara
(https://ms.wikipedia.org/wiki/Perbincangan:Parameswara)


08 ஆகஸ்ட் 2020

உலகத்தை மிரட்டும் புதிய தொற்று நோய்

உலகத்தைக் கலங்கடிக்க மீண்டும் ஒரு தொற்று நோய். திரோம்போ சைட்டோ பீனியா (Severe Fever with Thrombo cytopenia Syndrome - SFTS). இது ஒரு வகையான உண்ணி வழி நோய் (Tick-Borne Virus).

கோவிட் 19 ஆள்கொல்லி நோயினால் உலகமே அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில்; இப்போது மீண்டும் அதே சீனாவில் ஒரு புதிய நோய். ஒரு புதிய எச்சரிக்கை மணி.

சீனாவில் இதுவரை ஏழு பேர் பலியாகி உள்ளனர். தவிர 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாநிலத்தில் 37-க்கும் மேற்பட்டோர் திரோம்போ சைட்டோ பீனியா வைரஸால் பாதிக்கப் பட்டனர். பின்னர் அன்ஹுய் (Anhui) மாநிலத்தில் 23 பேர் பாதிக்கப் பட்டனர்.

Haemaphysalis longicornis எனும் உண்ணி கடிப்பதன் மூலம் அந்த வைரஸ் பரவுகிறது. மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு இந்த வைரஸ் பரவலாம். அதை நிராகரிக்க முடியாது. சீனாவின் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்த SFTS வைரஸ்கள் மனிதர்களைப் பாதிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மனிதர்களைப் பாதித்து உள்ளது.

முதன்முதலில் சீனாவில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் அடையாளம் காணப் பட்டது.

2009-ஆம் ஆண்டில் சீனாவின் ஹூபே (Hubei); ஹெனான் (Henan) மாநிலங்களின் கிராமப் புறங்களில் காணப் பட்டது.

SFTS என்றால் திரோம்போ சைட்டோ பீனியா வைரஸ் காய்ச்சல் அறிகுறி. இந்த வைரஸ் புன்யா வைரஸ் (Bunyavirus) குடும்பத்தைச் சேர்ந்தது. கடுமையான காய்ச்சலை உண்டாக்கும்.

இந்த நோய் தொற்றியவர்களில் 30 விழுக்காட்டினர் இறக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் இப்போது அந்த அளவு சற்று குறைவு. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 15 விழுக்காட்டு அளவில் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நோய்க்கு உலகச் சுகாதார நிறுவனம் முக்கியத்துவம் வழங்கி உள்ளது. பத்து மோசமான தொற்று நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

(SFTS has been listed among the top 10 priority diseases blue print by the World Health Organisation)

குறிப்பாக விவசாயிகள், வேட்டைக்காரர்கள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர். ஏன் என்றால் வழக்கமாக அந்த வைரஸ்களைக் கொண்டு செல்லக் கூடிய விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

பெரும்பாலும் ஆடு, கால்நடை, மான், செம்மறியாடு போன்ற விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது என்று அறிவியலாளர்கள் கண்டு அறிந்துள்ளனர்.

வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், விலங்குகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிப்பது இல்லை. பாதிப்பு மனிதர்களுக்குத் தான்.

அனாவசியமாகப் பீதி அடைய வேண்டாம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் செல்லப் பிராணிகளிடம் அதிகமாக நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது நலம் பயக்கும்.

ஏன் என்றால் இப்போது மனிதர்களைப் பாதிக்கும் நோய்களும்; தொற்றுகளும் விலங்குகளிடம் இருந்தே வருகின்றன. சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிப்போம். சுத்தமாக இருப்போம். உடல்நலத்தைப் பேணுவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.08.2020

சான்றுகள்:

1. https://indianexpress.com/article/explained/tick-borne-virus-spreading-in-china-6543182/

2. https://en.wikipedia.org/wiki/Tick-borne_disease

3. https://www.cdc.gov/ticks/diseases/index.html



06 ஆகஸ்ட் 2020

மலேசிய ஒலிம்பிக் வீரர் வி. கிருஷ்ணசாமி மறைவு

மலேசியக் காற்பந்து வீரர் வி. கிருஷ்ணசாமி (V. Krishnasamy). மலேசியா காற்பந்து உலகில் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்தவர். ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். 1970-ஆம் ஆண்டுகளில் மலேசியக் காற்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்.

Condolences From DYMM Yang Di Pertuan Agung
மலேசிய மாமன்னரின் இரங்கல் செய்தி


இவர் கடந்த 2020 ஆகஸ்டு 1-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 72. இவர் முன்னாள் சிறை அதிகாரி. சார்ஜெண்ட் மேஜர் பதவி.

அவரின் குடும்பத்திற்கு மலேசியப் பேரரசரும்; மலேசியப் பேரரசியாரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

“அவரின் சேவைகள்; அர்ப்பணிப்புகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவரின் மரணம் நாட்டிற்குப் பெரும் இழப்பு. அவரின் பங்களிப்பும் தியாகமும் எப்போதும் நினைவில் இருக்கும்”


என்று இஸ்தானா நெகாரா தேசிய அரண்மனைப் பேஸ்புக் பதிவில் மாமன்னர் தம்பதியர் தம் வருத்தச் செய்தியைப் பதிவு செய்து உள்ளனர்.

The death of Krishnasamy, a member of the Malaysian team to the 1972 Olympic Games in Munich, has been described as a great loss to Malaysian football.

1970-களில் கிருஷ்ணசாமி, பினாங்கு, பேராக் மாநிலங்களுக்காகக் காற்பந்து விளையாடியவர். இவர் ‘இரும்பு மனிதன்’ (Iron Man) என்று அழைக்கப் பட்டார்.



1970-ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை மலேசியத் தேசிய அணிக்காக வி. கிருஷ்ணசாமி விளையாடினார். 1972-ஆம் ஆண்டில் ஜெர்மனி முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மிட்பீல்டராக (midfielder) விளையாடினார் (1972 Olympic Games in Munich).

முனிச் ஒலிம்பிக் போட்டியில் மலேசியா மூன்று ஆட்டங்கள் விளையாடியது. மேற்கு ஜெர்மனியிடம் 3 - 0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. அடுத்து மொரொக்கோவிடம் 6 - 0 என்ற கோல் கணக்கிலும் தோல்வி கண்டது. ஆனால் கடைசி ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

Malaysian Olympic Team 1972

மத்தியத் திடல் ஆட்டக்காரரான கிருஷ்ணசாமி முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை. அமெரிக்கக் குழுவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தான் அவர் விளையாடினார். மலேசியாவை வெற்றி பெற்றச் செய்தார்.

Krishnasamy's biggest achievement was representing Malaysia at the 1972 Munich Olympics.

In Munich, Malaysia played three matches: losing to West Germany 3-0 and Morocco 6-0, while beating the United States 3-0.

Midfielder Krishnasamy didn't see action in any of the two matches that Malaysia lost, but he played in the one that Malaysia won, against the USA.

Malaysian Olympic Football Team 1972

பினாங்கு இந்தியர் சங்கம் (Penang Indian Association); பினாங்கு வாட்டர்போல் ரேஞ்சர்ஸ் (Waterfall Rangers); மலாயா பெர்ன்லி (Burnley Cup) காற்பந்து குழுக்களில் விளையாடி வந்தார்.

இவரைச் சிறைச்சாலைத் துறையின் காற்பந்து குழுவின் பயிற்சியாளர் ஜாலில் சே டின் (Prisons Department coach Jalil Che Din) அடையாளம் கண்டார். பின்னர் அவரைச் சிறைச்சாலைக் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்கினார்.


தைப்பிங் லீக் (Taiping League) போட்டியில் சிறைச்சாலைக் குழுவில் விளையாடிய கிருஷ்ணசாமி; பின்னர் பேராக் மாநிலக் குழுவிலும் மற்றும் 1967-ஆம் ஆண்டு முதல் தேசியக் காற்பந்து அணியிலும் விளையாடினார். இவருடைய அபாரமான ஆட்டத்தினால் 1970, 1971, 1973-ஆம் ஆண்டுகளில் மலேசிய சிறைச்சாலை அணியினர் FAM கோப்பையை வெற்றி கொண்டனர்.

சிறைச்சாலை காற்பந்து அணியில் ஏழு ஆண்டுகள் அவருடன் விளையாடிய கலீல் ஹாஷிம் (Khalil Hashim), வயது 73, சொல்கிறார்: "சாமி எங்களுக்கு இதுவரை கிடைத்த மிகச் சிறந்த வீரர். நாங்கள் ஒன்றாகப் போலோ மைதானத்தில் பயிற்சி பெற்றோம். அவர் அபாரமான விளையாட்டாளர்.


1967-ஆம் ஆண்டு தொடங்கி 1976-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம், அவர் மலேசியக் காற்பந்து குழுவில் விளையாடி வந்தார். அதன் பிறகு பினாங்கு அமெச்சூர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக (Penang Amateur Athletic Association) பணியாற்றி வந்தார்.

மலேசிய விளையாட்டுத் துறைக்குத் தன்னால் இயன்ற வரையில் பங்காற்றி வந்தார். மலேசியாவின்  மூத்த விளையாட்டளர்களில் ஒருவர். மறக்க முடியாத மனிதர். அவர் ஒரு சகாப்தம். 


நீரிழிவு நோயினால் நீண்ட காலமாகப் போராடி வந்தார். கடந்த ஜூலை 31 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை உடல் நலமின்றி பினாங்கு மருத்துவமனையில் (Penang General Hospital) அனுமதிக்கப் பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரின் இடது கால் பாதம் துண்டிக்கப் பட்டது.

மருத்துவமனைச் சிகிச்சைகள் பலனின்றி இயற்கை எய்தினார். அவரின் நல்லுடல் பத்து லஞ்சாங் இந்து மயானத்தில் (Batu Lanchang Hindu Crematorium) தகனம் செய்யப் பட்டது.


கிருஷ்ணசாமிக்கு எஸ்.ராசா (72) மனைவி; கஸ்தூரி (45) மகள்;  தனசெலன் (44) மகன்; மற்றும் நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர்.

மலேசியக் காற்பந்து உலகம் நல்ல ஒரு விளையாட்டாளரை இழந்து விட்டது. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.08.2020

சான்றுகள்:

1. https://www.bernama.com/tam/news.php?id=1866532

2. https://www.therakyatpost.com/2020/08/03/malaysia-football-legend-v-krishnasamy-passes-away-at-72/

3. https://www.nst.com.my/sports/football/2020/08/613468/malaysian-football-legend-krishnasamy-dies

4. https://www.thestar.com.my/sport/football/2020/08/03/football-legend-and-olympian-krishnasamy-passes-away

5. http://english.astroawani.com/sports-news/former-olympic-footballer-krishnasamy-dies-aged-72-253771

6. https://www.freemalaysiatoday.com/category/highlight/2020/08/03/friends-bid-ex-footballer-samy-the-machine-final-farewell/

7. https://astroulagam.com.my/news/article/158431/former-national-footballer-v-krishnasamy-passes-away

8. http://hareshdeol.blogspot.com/2019/04/no-help-for-former-footballer-v.html

9. https://en.wikipedia.org/wiki/V._Krishnasamy






05 ஆகஸ்ட் 2020

இந்தியாவின் கோகினூர் வைரம் - 1

தமிழ் மலர் - 04.08.2020

மனிதர்களின் வரலாற்றில் எத்தனை எத்தனையோ மனிதப் பரிமாணங்கள். சிலர் வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். சிலர் வந்தார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள். சிலர் வந்ததும் தெரியாமல் வாழ்ந்ததும் தெரியாமல் காணாமல் போனார்கள். ஆனாலும் அவர்களில் மறைந்தும் மறையாமல் நம்முடன் இன்றும் சிலர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.



அதே அந்தப் பாவனையில் இந்திய வரலாற்றில் மர்மச் சாணக்கியம் தெரிந்த பெண் ஒருத்தி இருந்தாள். பேசா மடந்தையாய் வாழ்ந்தாள். இன்னும் பேசாமலேயே வாழ்ந்து கொண்டும் இருக்கிறாள்.

அவள்தான் கோகினூர் சீமாட்டி என்கிற கோகினூர் வைரம். நவரத்தினங்களின் செல்வச் செறுக்கி. பாரத மாதா பார்த்துப் பார்த்துப் பட்டை தீட்டிய பத்தரை மாத்துப் பொக்கிஷம்.

உலகம் பார்த்த எல்லா வைரங்களுமே கோடிக் கணக்கில் விலை பேசப் பட்டவை. விற்கப் பட்டவை. வாங்கப் பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஒரே ஒரு வைரம் இன்னும் இருக்கிறது. அதுதான் இந்தக் கோகினூர் வைரம்.


கோகினூர் என்று ஒரே ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள். அதில் ஒருவிதமான ஜீவ ஒலி துடிப்பதை உணர முடியும். கோகினூர்… கோகினூர் என்று சொல்லிக் கொண்டே இருங்களேன். அப்புறம் உங்களுடைய இதயத்தின் துடிப்புகள் மேலும் கீழுமாய் கூடி ஏறி இறங்கும். பொய் சொல்லவில்லை.

கோகினூர் வைரத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது. யாராவது ஒருவர் அதன் பெயரை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் என்றைக்காவது ஒரு நாளைக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வருமாம். வந்து கதவைத் தட்டுமாம். காசு பணம் வேண்டுமா என்று கேட்குமாம். முயற்சி செய்து பாருங்கள்.

பில் கேட்ஸ் அப்படித்தான் பணக்காரர் ஆனாராம். கேள்விப் பட்டேன். எதற்கும் நீங்களும் செய்து பாருங்களேன். பணம் கிடைத்தால் என்னை மறந்துவிட வேண்டாம். கிடைக்கா விட்டால் ஐ ஆம் வெரி சாரி!


இந்தியாவின் அரிய பெரிய பொன் குவியல்கள் (பொக்கிஷங்கள்); புதையல்கள்; செல்வங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் கொள்ளை போய் இருக்கின்றன. இந்தியாவிற்கு வந்த கடலோடிகளும் சரி; நாடோடிகளும் சரி; நன்றாகவே கொள்ளை அடித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

அப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பொன் மணிகளில் கோகினூர் வைரம் முதன்மையானது. இந்த வைரம் ஒரு விசித்திரமான பின்னணியைக் கொண்டது.

இந்தியாவுக்குள் படை எடுத்து வந்த அந்நியர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட அரிய பெரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. 

தரியா நூர் வைரம் (Daria-i-Noor),

ஷா ஜகானின் மயிலாசன வைரம் (Akbar Shah),

ஹோப் வைரம் (Hope Diamond),

நிஜாம் வைரம் (Nizam Diamond) ,

மகா மொகலாய வைரம் (Great Mogul Diamond),

ஓர்லோவ் வைரம் (Orlov Diamond),

ஜேக்கப் வைரம் (Jacob Diamond),

ரீஜண்ட் வைரம் (Regent Diamond)

அவை அனைத்தும் அரிதிலும் அரிதான புனிதமான வைரங்கள். இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்ட அரிய வகை நவரத்தின மணிகள்.

அங்கே இந்தியாவில் ஆயிரம் கோடி அரசியல் பெருமைகள் பேசி என்னங்க இருக்கிறது. இந்திய மண்ணிலே இருந்து பட்டப் பகலிலேயே கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டார்களே. அதைப் பற்றி என்னங்க பெருமை பேச வேண்டி இருக்கிறது.


அந்த வைரங்கள் எல்லாம் இப்போது வெளிநாட்டு அரும் பொருள் காட்சியகங்களில் இந்திய மண்ணின் சாட்சிப் பொருள்களாகக் காட்சி தருகின்றன. அவ்வளவு தான். ஒரு செருகல்.

இந்தியாவில் இருந்து கொள்ளை போன இந்திய வைரங்களை வைத்து ஹாலிவுட் சினிமாக்காரர்கள் இந்தியானா ஜோன்ஸ் - டெம்பிள் ஆப் டூம் (Indiana Jones and Temple of Doom) எனும் படத்தை எடுத்து கோடிக் கணக்கில் காசு  பார்த்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களின் புனிதப் பாத்திரமான ஹோலி கிரைல் (Holy Grail) அட்சய பாத்திரம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இன்றைய நாள் வரையிலும் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். தேடிக் கொண்டும் வருகிறார்கள்.


அதைப் பற்றி படம் எடுத்து ஆவணங்களைத் தயாரிக்கிறார்கள். எப்பேர்ப்ட்ட புனிதமான செயல். தலைவணங்கும் உரிமைப் போராட்டங்கள்.

ஆனால் இந்தியா நாடு இழந்து போன வைரங்களைப் பற்றி பலரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. தொப்பை நிறைந்தால் சரி என்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் ஒன்னும் சொல்கிற மாதிரி இல்லைங்க.

இந்தியாவின் பெருமைக்குரிய மயிலாசனம் எங்கே இருக்கிறது?

கோகினூர் வைரம் எப்படிக் கொள்ளை போனது?

ஷா வைரம் எப்படி ரஷ்யாவுக்குப் போனது?

தரியாநூர் வைரம் எப்படி ஈரானுக்கு கடத்தல் செய்யப் பட்டது?

இதைப் பற்றி கொஞ்சம்கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. இப்படி எழுதுவதற்காக என்னை மன்னியுங்கள்.


அண்மையில் பத்மநாபசாமி கோயிலின் காப்பறைகளில் கோடிக் கோடியாய் தங்கம் கிடைத்தது. தெரியும் தானே. ஆனால் அதைப் போல பல நூறு மடங்கு; பல ஆயிரம் மடங்கு தங்கம் இந்திய மண்ணில் இருந்து கொள்ளை போய் விட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்கும் தெரியும். சொல்லுங்கள்.

முக்கால்வாசியை உலகப் புகழ் சுரண்டல் மன்னன் இங்கிலாந்து சுருட்டிக் கொண்டு போனது. இந்தியாவைக் கூறு போட்ட சாணக்கியத்திற்காக வருடம் தவறாமல் இங்கிலாந்து நாட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். இது என்னுடைய சிபாரிசு.

இப்படிச் சொல்வதினால் இங்கிலாந்து இங்கே வந்து என் மீது வழக்கு ஒன்றும்  போட முடியாது. வழக்குப் போட்டாலும் ஜெயிக்கவும் முடியாது. விடுங்கள்.


மலாயாவில் வெள்ளைக்காரர்கள் விட்டுட்டு போன கித்தா பால் தோம்புகள் நிறையவே இருக்கின்றன. பிரட்டுக் களத்தில் வரிசை வரிசையாக நின்று ஆஜர் ஆஜர் என்று சொல்லவும் தயாராய் இருக்கின்றன. அப்புறம் என்னங்க. அதனால் கவலையே இல்லை.

ஷாஜகானின் சிம்மாசனமாக இருந்த மயிலாசனம் (Peacock Throne) 1,150 கிலோ தங்கத்தில் உருவாக்கப் பட்டது. அதில் 230 கிலோ அரிய வகைக் கற்கள் பதிக்கப் பட்டன. 28 வைடூரியங்கள். 108 சிவப்புக் கற்கள். 116 மரகதங்கள். 288 மாணிக்கங்கள். 388 கோமேதகங்கள். 12,000 பவளங்கள் முத்துகள்.

ஷாஜகான் உப்பரிகையின் மீது அந்த மயிலாசனம் நிறுவப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு 5286 கோடி ரிங்கிட்டிற்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இது 2000-ஆம் ஆண்டு கணக்கு. இப்போதைக்கு இன்னும் கூடுதலாய் இருக்கும்.


இதைச் சொல்லி ஒரு பயனும் இல்லை. ஏன் தெரியுங்களா. அந்தச் சிமாசனத்தை அக்கு வேர் ஆணி வேராகக் கழற்றி ‘போத்தல்’ கடையில் விற்று விட்டார்களாம். அதைப் பற்றி பிறகு விளக்கமாகச் சொல்கிறேன்.

1635-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி. அந்தச் சிம்மாசனத்தில் ஷாஜகான் கடைசி கடைசியாக ஒருமுறை அமர்ந்தார். அதன் பின் அப்புறம் அதைப் பார்க்கவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை.

பேரரசர் பதவியில் இருந்து ஷாஜகான் அகற்றப்பட்டு ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப் பட்டார். தாஜ்மகாலைப் பார்த்து பார்த்து அழுது கொண்டே இறந்தும் போனார். பாவம் மனிதர்.


1738-இல் நாடிர் ஷா (Nadir Shah) என்பவர் இந்தியா மீது படை எடுத்தார். மறு ஆண்டு, அந்தச் சிம்மாசனத்தை ஈரானுக்குக் கடத்திச் சென்றார். போனது போனதுதான் திரும்பி வரவே இல்லை.

இன்னும் ஒரு தகவல். தரியா நூர் வைரம் என்பது 182 கேரட் வைரம். பழைய கோல்கொண்டாவில் இருந்து கிடைத்தது தான்.

தரியா நூர் என்றால் ஒளிக்கடல் என்று பொருள். இந்த வைரம் இப்போது ஈரானிய அரசப் பரம்பரையின் புரதான நகைகள் காப்பகத்தில் இருக்கிறது. இன்னும் இருக்கிறது. இதையும் நாடிர் ஷா தான் கொள்ளை அடித்துக் கொண்டு போனார்.


வைரங்கள் மட்டும் இல்லை. அரிய கலைப் பொருளாகக் கருதப்படும் திப்புவின் இயந்திரப் புலி, லண்டனில் உள்ள விக்டோரியா அல்பர்ட் அரும்பொருள் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

நல்ல வேளை. ஏலத்துக்குப் போனதை ‘கிங்பிசர்’ புகழ் மல்லையா எடுத்துக் காப்பாற்றினார். இல்லை என்றால் அதுவும் போய் இருக்கும். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக களவு போன கலைச் செல்வங்கள் களவு போனதாகவே இருக்கின்றன. மீட்க வேண்டும் என்கிற உருப்படியான முயற்சிகளை இந்தியத் தலைவர்கள் எவருமே எடுத்தாகத் தெரியவில்லை.


ரொம்ப வேண்டாம். சுவிஸ் வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்பு பணத்தில் பாதியைக் கொண்டு வந்தாலே போதும். இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்திய மக்கள் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டு ராசா மாதிரி சாப்பிடலாம். நடக்குமா.

அடுத்து இத்தாலி நாட்டு இட்லி சாம்பார். அவரின் கணவர் தற்கொலைப் படையினரால் கொல்லப் பட்டது உங்களுக்கும் தெரியும். கணவரைக் கொன்றவர்களின் இனத்தையே அழித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்தப் பதிவிரதை பயங்கரமாக ருத்ர தாண்டவம் ஆடியது. ஒரு வழியும் பண்ணிவிட்டது.

அவருக்கு மட்டும் 6462 கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருப்பதாக சுவிஸ் வங்கிகள் கணக்கு காட்டுகின்றன. என்ன செய்வது. அந்த மாதிரி மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தைப் பாதுகாப்பதற்கே நேரம் போதவில்லையாம்.


அப்புறம் எப்படிங்க களவு போன கலைச் செல்வங்களை எல்லாம் கண்டுபிடிப்பதாம். இந்தியாவுக்கு கொண்டு வருவதாம். சொல்லுங்கள். இனிமேல் நம்பிக்கை நாயகன் நரேந்திர மோடிதான் அதையும் பார்த்துச் செய்ய வேண்டும்.

இவரும் சரிபட்டு வருவதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றுவதிலேயே நேரமும் வீரமும் தேய்கின்றன. மன்னிக்கவும்.

மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் (Koh-i-Noor) பல உயிர்களைப் பேரம் பேசியதாக நல்ல ஒரு சாபக்கேடும் இருக்கிறது. 105 புள்ளி 80 காரட் கொண்டது இந்தக் கோகினூர் வைரம். இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலையின் மேல் இருக்கும் கிரீடத்தில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டு புன்னகை செய்கின்றது.


கிரீடத்தைப் பயன்படுத்தாத நேரத்தில் இங்கிலாந்தின் ’டவர் ஆப் லண்டன்’ (Jewel House at the Tower of London) எனும் இடத்தில் இருக்கும். அங்கே அரசப் பரம்பரை நகைகளுக்கான காப்பகத்தில் பலத்த காவலுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோகினூர் வைரத்தின் மதிப்பு ஏறக்குறைய 12,000 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். நம்ப மலேசியா கணக்கிற்கு ஏறக்குறைய பத்து பில்லியன் ரிங்கிட்.

அதாவது பினாங்கு பாலம் போல இரண்டு மூன்று பாலங்களைக் கட்டி விடலாம். அந்த அளவிற்கு மதிப்பு கொண்டது நம்ப கோகினூர் வைரம். இன்னும் சிலர் அதற்கு விலையே பேச முடியாது என்கிறார்கள்.

இந்த உலகத்தில் 765 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவ்வளவு பேரும் தங்களின் உணவுக்காக ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்களோ; அந்த அளவிற்குக் கோகினூர் வைரம் விலை மதிப்பு கொண்டது.


அந்த மாதிரி ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்துக் காப்பகத்தில் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி மௌன சேட்டை செய்து கொண்டு இருக்கிறது. சமயங்களில் கிருஷ்ண லீலா சேட்டைகளையும் செய்கின்றது.

இதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களும் தங்களுக்குச் சொந்தம் என்று மல்லுக்கு நிற்கின்றன.

ஆகக் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மூத்த அறிஞர் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்தார். 2014 சுனாமி வந்தது. அந்த அறிவிப்பும் அடிபட்டுப் போனது. இப்போது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. காரணம் அவர்தான் போய்ச் சேர்ந்து விட்டாரே!.

இன்னும் சிலர் கோகினூர் வைரம் எங்கள் பாட்டன் சொத்து எங்கள் வீட்டுப் பாட்டிச் சொத்து என்று வீரவசனம் பேசுகிறார்கள். கட்சி கட்டிக் கொண்டு கம்பு கத்தி கப்படாக்களுடன் சுற்றித் திரிகிறார்கள்.

சொல்லப் போனால் நல்ல ஓர் அருமையான மெகா சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும் டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து அமைதியாகப் பார்த்து கொண்டு இருக்கின்றன. வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறேன்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Hubert Bari; Violaine Sautter (2001). Diamonds: In the Heart of the Earth, in the Heart of Stars, at the Heart of Power. Vilo International. p. 178.

2.Muhammad Baqir. The Peacock Throne: Romance and Reality. Journal of the Research Society of Pakistan, 3 (1966), pp. 27-32.

3. https://web.archive.org/web/20140128033326/http://www.farlang.com/diamonds/streeter_great_diamonds/page_200)

4. https://books.google.com.my/books?id=MwpjtwAACAAJ&redir_esc=y - Anna Keay (2011). The Crown Jewels: The Official Illustrated History. Thames & Hudson. pp. 156–158.







03 ஆகஸ்ட் 2020

சிவகங்கை திரளை மலேசியாவில்

சிவகங்கை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம். இப்போது அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. அந்தச் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒருவர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மலேசியா திரும்பி உள்ளார். இவர் மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்.


கோலாலம்பூர் (KLIA) அனைத்துலக விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், அவருக்கு COVID-19 அறிகுறிகள் இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும் அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மனிதர் அதைப் பொருட் படுத்தவில்லை. 

கெடா ஜித்ராவில் உள்ள அவருடைய நாசி கண்டார் உணவகத்திற்கு நேராகப் போய் இருக்கிறார். வியாபாரம் பார்த்து இருக்கிறார். தனிமைப் படுத்தல்; கோவிட் பாதுகாப்பு என்று எதுவும் இல்லை.


அப்புறம் என்ன. அவர் மூலமாக கோவிட் நோய் 5 பேருக்குத் தொற்றிக் கொண்டது. அவருடைய உணவகத்தின் நான்கு ஊழியர்கள்; மற்றும் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர். 

அந்த ’நாசி கண்டார்’ கடைக்காரர் சிவகங்கைக்குப் போய் அங்கே இருந்து கோவிட் நோயை இங்கே கொண்டு வந்து பரப்பி விட்டதால், அதற்கு சிவகங்கை திரளை (Sivaganga cluster) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். 


இதன் மூலம் சிவகங்கை பிரபலம் ஆகியுள்ளது. இந்திய வரலாறுக்கும் இந்த சிவகங்கை கோவிட் வரலாற்றுக்கும் தொடர்பு இல்லை. காக்கா உட்காரப் பனம் காய் விழுந்த கதை.

ஒரு மனிதர் செய்த தவற்றினால் வீரம் பேசிய சிவகங்கைக்கு கடாரத்தில் ஒரு தலைகுனிவு.