தமிழ் மலர் - 25.08.2020
கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.
மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்தவர். அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா ஆட்சியையும் (Kedah kingdom - Kadaram) உருவாக்கி இருக்கிறார். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.
(சான்று:https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah,
கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி இலங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.
மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த அரசர்களின் பட்டியல் வருகிறது. போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும்.
மாறன் மகாவம்சனின் சந்ததியினரைப் பற்றி இரு வேறுபாடான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஒரு பதிவு கெடா வரலாற்றுப் பதிவேடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள். மற்றொன்று சீனாவின் மிங் அரச வரலாற்றுச் சுவடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள்.
இந்த இரு வரலாற்றுப் பதிவேடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணான அரசப் பட்டியலைக் கொடுக்கின்றன. முதலில் கெடா வரலாற்றுப் பதிவேடுகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் மாறன் மகா பூதிசன் (Merong Mahapudisat). இரண்டாவது மகன் கஞ்சில் சார்ஜுனா (Ganjil Sarjuna). மூன்றாவது மகன் ஸ்ரீ மகாவங்சன் (Seri Mahawangsa). கடைசியாக ஒரே மகள். அவருடைய பெயர் ராஜா புத்திரி இந்திரவம்சன் (Raja Puteri Sri Indrawangsa)
மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி கஞ்சில் சார்ஜுனா கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்ஜுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், லங்காசுகத்தின் அரசரானார்.
ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் இவரின் தங்கை ராஜா புத்திரி இந்திரவம்சன் என்பவர் இலங்காசுகத்தின் அரசியானார்.
கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவானது.
இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராஜா புத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர். முதல் அரசி.
அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மகனாகும். இவரைத் தான் கூர்ப் பல் அரசன் (Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து துரத்தப் பட்டார். இவர் ஜெராய் மலையில் அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).
பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்குத் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தாயாருடன் வளர்ந்து வந்தார். இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வரவே இல்லை.
ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டார். ஜெராய் மலை அடிவாரத்தின் கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள்.
இந்த பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa). தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் சொல்கின்றன.
Kedah came under the influence of the Sumatran kingdom of Sri Vijaya in the 7th and 8th century.
http://go2travelmalaysia.com/tour_malaysia/kdh_bckgnd.htm
கெடா மாநில ஆட்சியாளர்கள் (கெடா வரலாற்றுப் பதிவேடுகள்)
1. மாறன் மகா பூதிசன் 2. கஞ்சில் சார்ஜுனா 3. ஸ்ரீ மகாவங்சன் 4. ராஜா புத்திரி 5. ஸ்ரீ மகா இந்திரவம்சன் 6. பரா ஓங் மகா பூதிசன் 7. பரா ஓங் மகாவம்சன்
சீனாவின் மிங் அரசக் கையேடுகளின் பதிவுகளின்படி கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). மதமாற்றம் நடந்த பின்னர் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது என்று மிங் அரசக் கையேடுகள் சொல்கின்றன.
பின்னர் கெடா பேரரசு கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள்.
(சான்று: https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136)
கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் செயிக் அப்துல்லா குமானி (Sheikh Abdullah bin Ja'afar Quamiri) என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா சாம்ராஜ்யத்தின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை முஷபர் ஷா (Mudzaffar Shah I) என்று பெயர் மாற்றம் செய்தார்.
கெடாவின் சுல்தானாக இருந்த அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா (Abdul Halim Mu'adzam Shah) அவர்களும் இதே இந்த அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
(சான்று: https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html )
அடுத்து சீனாவின் மிங் அரசக் கையேடுகள் கொடுக்கும் கெடா அரசர்களின் பட்டியல் வருகிறது. இதையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.
கெடா மாநில ஆட்சியாளர்கள் (சீனாவின் மிங் அரசக் கையேடுகள்)
மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் வந்த இந்து அரசர்கள்.
(The list of rulers of Kedah as given here is based to some extent on the Kedah Annals beginning with the Hindu ruler Durbar Raja I. According to the Kedah Annals, the 9th Kedah Maharaja Derbar Raja converted to Islam and changed his name to Sultan Muzaffar Shah, thereby started the Kedah Sultanate.)
(http://go2travelmalaysia.com/tour_malaysia/kdh_bckgnd.htm)
தர்பார் ராஜா I - Durbar Raja I (கி.பி. 0330 - 0390)
ராஜா புத்ரா - Raja Putra (கி.பி. 0390 - 0440)
மகா தேவா I - Maha Dewa I (கி.பி. 0440 - 0465)
கர்ண ராஜா - Karna Diraja (கி.பி. 0465 - 0512)
கர்மா - Karma (கி.பி. 0512 - 0580)
மகா தேவா II - Maha Dewa II (கி.பி. 0580 - 0620)
மகா தேவா III- Maha Dewa III (கி.பி. 0620 - 0660)
ராஜா புத்ரா II - Raja Putra II (கி.பி. 0660 - 0712)
தர்ம ராஜா - Darma Raja (கி.பி. 0712 - 0788)
மகா ஜீவா - Maha Jiwa (கி.பி. 0788 - 0832)
கர்மா II - Karma II (கி.பி. 0832 - 0880)
தர்ம ராஜா II- Darma Raja II (கி.பி. 0880 - 0956)
தர்பார் ராஜா II- Durbar Raja II (கி.பி. 0956 - 1136)
(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)
முஷபர் ஷா I - Mudzaffar Shah I (கி.பி. 1136–1179)
முவட்ஷாம் ஷா - Mu'adzam Shah (கி.பி. 1179–1201
முகமட் ஷா - Muhammad Shah (கி.பி. 1201–1236)
முஷபர் ஷா II - Mudzaffar Shah II (கி.பி. 1236–1280)
முகமட் ஷா II - Mahmud Shah I (கி.பி. 1280– 1321)
இப்ராகிம் ஷா - Ibrahim Shah (கி.பி. 1321– 1373)
சுலைமான் ஷா I - Sulaiman Shah I (கி.பி. 1373–1422)
அதுல்லா முகமட் ஷா I - Ataullah Muhammad Shah I (கி.பி. 1422–1472)
முகமட் ஜீவா ஜைனல் ஷா I - Muhammad Jiwa Shah I (கி.பி. 1472–1506)
முகமட் ஷா II - Mahmud Shah II (கி.பி. 1506–1546)
முஷபர் ஷா II - Mudzaffar Shah III (கி.பி. 1546–1602)
சுலைமான் ஷா II - Sulaiman Shah II (கி.பி. 1602–1625)
ரிஜாலிடின் ஷா - Rijaluddin Muhammad Shah (கி.பி. 1625–1651)
முகயிடின் மன்சூர் ஷா - Muhyiddin Mansur Shah (கி.பி. 1651–1661)
ஜியாடின் முகாராம் ஷா I - Dziaddin Mukarram Shah I (கி.பி. 1661–1687)
அதுல்லா முகமட் ஷா II - Ataullah Muhammad Shah II (கி.பி. 1687–1698)
அப்துல்லா முவட்ஷாம் ஷா - Abdullah Mu'adzam Shah (கி.பி. 1698–1706)
அகம்ட் தாஜுடின் ஹாலிம் ஷா I - Ahmad Tajuddin Halim Shah I (கி.பி. 1706–1709)
முகமட் ஜீவா ஜைனல் ஷா II - Muhammad Jiwa Zainal Shah II (கி.பி. 1710–1778)
அப்துல்லா முகாராம் ஷா - Abdullah Mukarram Shah (கி.பி. 1778–1797)
ஜியாடின் முகாராம் ஷா II - Dziaddin Mukarram Shah II (கி.பி. 1797–1803)
அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா II - Ahmad Tajuddin Halim Shah II (கி.பி. 1803–1843)
ஜைனல் ரசீட் அல்முவட்ஷாம் ஷா I - Zainal Rashid Al-Mu'adzam Shah I (கி.பி. 1843–1854)
அகம்ட் தாஜுடின் முகாராம் ஷா - Ahmad Tajuddin Mukarram Shah (கி.பி. 1854–1879)
ஜைனல் ரசீட் முவட்ஷாம் ஷா II - Zainal Rashid Mu'adzam Shah II (கி.பி. 1879–1881)
அப்துல் ஹமீட் ஹாலிம் ஷா - Abdul Hamid Halim Shah (கி.பி. 1881–1943)
பட்லிஷா - Badlishah (கி.பி. 1943–1958)
அப்துல் ஹாலிம் முவட்ஷாம் ஷா - Abdul Halim Mu'adzam Shah (கி.பி. 1958 - 2017)
(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Islamic_era)
1821-ஆம் ஆண்டில் இருந்து 1844-ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளுக்கு சயாமியர்கள் கெடாவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். இதையும் பதிவு செய்கிறேன்.
சயாமியர்கள் கெடாவின் மீது படை எடுத்து வந்த போது அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா என்பவர் கெடாவின் அரசராக இருந்தார். இவர் பினாங்கிற்குத் தப்பிச் சென்றார். சயாமியர்கள் கெடாவை நான்கு பாகங்களாகப் பிரித்தார்கள். 1. கெடா. 2. செத்தூல் 3. பெர்லிஸ் 4. குபாங் பாசு
1821-ஆம் ஆண்டில் கெடாவின் மக்கள் தொகை 180,000. இந்த எண்ணிக்கை ஆறே ஆண்டுகளில் வெறும் 6000-ஆக குறைந்து போனது. பினாங்கிற்குத் தப்பிச் சென்ற கெடா சுல்தான் அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா 1831-ஆம் ஆண்டில் மலாக்காவில் தஞ்சம் அடைந்தார்.
அப்போது மலாக்கா மாநிலம் ஆங்கிலேயர்களின் வசம் இருந்தது. மலாக்காவின் பொறுப்புகள் சர் எட்வர்ட் ஜான் காம்பியர் (Sir Edward John Gambier) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.
1836-ஆம் ஆண்டு சுல்தான் அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா இந்தோனேசியாவின் கிழக்கு தீமோருக்குச் செல்வதாகச் சொல்லி ஆங்கிலேயர்களிடம் அனுமதி கேட்டார். அனுமதி வழங்கப் பட்டது.
ஆனால் அவர் கிழக்கு தீமோருக்குப் போகவில்லை. மாறாக பேராக் புருவாஸ் நகருக்கு வந்து கெடாவை மீட்டு எடுக்க படை திரட்டினார். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரைப் பினாங்கிற்கு கொண்டு போய் அமைதி படுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் அவர் பினாங்கில் இருந்தார்.
1843-ஆம் ஆண்டு சயாமியர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் படி சுல்தான் அகமட் தாஜுடின் ஹாலிம் ஷாவிற்கு கெடா அரியணை மீண்டும் வழங்கப் பட்டது. கெடாவின் வரலாற்றை இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். சுருக்கமாக இத்துடன் முடித்துக் கொள்கிறேன். போதுமான வரலாற்றுச் சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.
(முற்றும்)