தமிழ் மலர் - 30.08.2020
வறுமையின் விழுமங்களில் வேதனைகளைப் பார்த்தவர். வேதனைகளின் விளிம்புகளில் வறுமையை வார்த்தவர். வறுமையின் கோலங்களில் ஏழ்மையை எதிர்த்தவர். ஏழ்மையின் அவலங்களில் எளிமையைச் சேர்த்தவர்.
இப்போதைக்கு அந்த எளிமையின் பெருமையில் இமயத்தைப் பார்க்கின்றவர். உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஓர் அழகிய பெண்மணி. சிங்கையின் அதிபர் அலிமா யாகோப். கைகூப்புகிறோம். சிரம் தாழ்த்துகிறோம்.
பெண்மையின் வடிவத்தில் ஓர் உண்மையைச் சொல்ல வருகின்றார். வறுமை பெரிது அல்ல. ஏழ்மை பெரிது அல்ல. வேதனைகளின் வடுக்கள் பெரிது அல்ல. வாழ்ந்து காட்டுவதே பெரிது என்று சொல்கின்றார்.
அது ஓர் உலகார்ந்த உரைமொழியாக இருக்கலாம். இருப்பினும் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் உதாரணமாய்த் திகழும் ஒருவர் உதிர்க்கும் ஒரு பெண்மொழி. உண்மையில் ஓர் உயிர்மொழி.
அலிமாவின் வாழ்க்கை மிக மிகச் சோதனை மிக்கது. சின்ன வயதில் பெரிய பெரிய வேதனைகள். பெரிய பெரிய சோதனைகள். சாமானிய வேதனை சோதனைகளின் விளிம்பிற்கே ஓடியவர்.
விடியல் காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து படுக்கையைச் சுருட்ட வேண்டும். அரக்கப் பரக்க மார்க்கெட்டிற்கு ஓட வேண்டும். காய் கறிகளை வாங்க வேண்டும். அவசரம் அவசரமாய்ப் பள்ளிக்கு ஓட வேண்டும். பாடம் முடிந்ததும் நாசி பண்டான் விற்க திரும்ப ஒட்டுக்கடைக்கு ஓடி வர வேண்டும். மங்கு குவளைகளைக் கழுவ வேண்டும். மேசை நாற்காலிகளைத் துடைக்க வேண்டும். ஒருநாள் இரண்டு நாள் அல்ல. பத்து ஆண்டுகள்.
அப்படி எல்லாம் அனுபவித்து வாழ்ந்தவர் தான் இப்போதைய சிங்கை அதிபர் அலிமா யாகோப் (Halimah Yacob). சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர். சிங்கப்பூருக்குப் பெருமை; சிங்கப்பூர் வரலாற்றுக்கும் பெருமை.
இவர் சிங்கப்பூரின் எட்டாவது அதிபர். இந்தியாவைச் சேர்ந்த தந்தையாருக்கும்; மலேசியாவைச் சேர்ந்த தாயாருக்கும் 1954-ஆம் ஆண்டு பிறந்தவர் ஹலிமா யாகோப்.
2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபருக்கானத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக் குழுவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப் படுகிறது.
அதன்படி இந்த முறை மலாய்க்காரச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது. அதிபருக்கான வேட்பாளர்களில் திருமதி ஹலிமா யாகோப் ஒருவர்.
கொஞ்ச காலமாக ஒரு சர்ச்சை. ஹலிமா ஒரு மலாய்க்காரர் அல்ல எனும் சர்ச்சை. பின்னர் ஹலிமா ஒரு மலாய்க்காரர் எனும் சான்றிதழைச் சிங்கப்பூர் அரசு வழங்கியது.
ஹலிமாவிற்கு முன்னர் சிங்கப்பூரின் அதிபராக டோனி டான் கெங் யாம் என்பவர் இருந்தார். பதவிக்காலம் 2017 ஆகஸ்டு மாதம் முடிந்தது. இந்தக் கட்டத்தில் அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஐவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டி போட முடியும் என்று சட்டம் உள்ளது. அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட சட்டம்.
அந்த வகையில் ஹலிமா யாகோப்பின் மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதைத் தொடர்ந்து போட்டி இல்லாமல் தேர்வு செய்யப் பட்டார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆனார்.
ஹலிமா யாகோப் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஆளும் கட்சியான மக்கள் நடவடிக்கை கட்சியின் (People's Action Party) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியையும்; சபாநாயகர் பதவியையும் ராஜினாமா செய்தார். தவிர மக்கள் நடவடிக்கை கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதிபர் ஹலிமா 1954 ஆகஸ்டு 23-ஆம் தேதி, குயின்ஸ் தெரு (Queen's Street) பகுதியில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் கடைசி ஐந்தாவது குழந்தை. தந்தையார் ஒரு காவலாளியாக வேலை செய்தவர்.
சொற்ப வருமானம். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு மாரடைப்பு. காலமாகி விட்டார். அப்போது ஹலிமாவிற்கு எட்டு வயது.
தந்தையார் இறந்த பிறகு, குடும்பப் பொறுப்பைத் தாயார் ஏற்றுக் கொண்டார். குடும்பத்திற்காகத் தாயார் கடினமாக உழைத்தார். தள்ளுவண்டியில் சின்னதாக ஓர் உணவுக் கடை. விடியல் காலை நான்கு மணிக்குப் போகிறவர் இரவு 10 மணிக்குத் தான் வீட்டிற்கே வந்து சேர்வார்.
10 வயதில் இருந்தே ஹலிமாவின் அன்றாட வாழ்க்கை பள்ளிக்கு வெளியேதான் கழிந்து உள்ளது.
சிங்கப்பூர் பாலிடெக்னிக் (Singapore Polytechnic) கல்லூரிக்கு வெளியே அவர்களின் நாசி பாடாங் வியாபாரம். தள்ளுவண்டியில் ஓர் ஒட்டுக் கடை. தாயாருக்கு உதவி செய்வதிலேயே காலத்தைக் கழித்தார்.
அப்போது அவருக்கு வயது எட்டு. அந்த வயதில் மற்ற பிள்ளைகள் எல்லாம் அசரமாய் ஆனந்தமாய்த் தூங்குகின்ற நேரம். ஆனால் இவரோ அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து மளிகை சாமான்களை வாங்க மார்க்கெட்டிற்குச் செல்வார்.
பள்ளி விட்டு நேரடியாகக் கடைக்குப் போய் விடுவார். வீட்டுக்குப் போவது; ஓய்வு எடுப்பது எல்லாம் இல்லை. இரவு பத்து மணி வரையில், தள்ளுவண்டிக் கடையில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சில்லறை வேலைகள்.
பீங்கான் மங்குகளைக் கழுவுதல்; தட்டு முட்டு சாமான்களை சுத்தம் செய்தல்; கடையைப் பெருக்கிக் குப்பைக் கூளங்களை அள்ளிப் போடுதல்; பொதுக் குழாயில் இருந்து கடைக்குத் தண்ணீர் பிடித்து வருதல்; கடைக்கு வருபவர்களுக்கு சேவை செய்தல்; சமயங்களில் அவர்களின் ஏச்சு பேச்சுகள்; காசு பணத்தைப் பார்த்துக் கொள்ளுதல்; இப்படித்தான் ஹலிமாவின் பால்ய வயது வாழ்க்கை ஓடி இருக்கிறது.
ஒரே ஒரு பள்ளிச் சீருடை. அதிலும் சல்லடைத் துவாரங்கள். ஒவ்வொரு நாளும் துவைத்து; காய்ந்தும் காயாத நிலையில் அணிந்து செல்ல வேண்டிய ஏழ்மை நிலை. காலணி காலுறைகளில் ஆங்காங்கே ஓட்டைகள். ஒட்டுப் போட்டுச் சிரிக்கும் சதுரங்கள்.
அவர் சொல்கிறார்: "நான் வாழ்க்கையின் வறுமையைப் பார்த்து விட்டேன். நன்றாகவே அனுபவித்து விட்டேன். எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையில் என்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்ந்து சென்று இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை எண்ணி எண்ணி கலங்கி இருக்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.”
”இளம் வயதில் என்னுடைய நோக்கம், இலக்கு எல்லாம் பள்ளிப் படிப்பை முடிப்பது; அப்புறம் ஏதாவது ஒரு வேலையைப் பார்ப்பது; அப்படியே என் அம்மாவுக்கு ஆதரவாக இருப்பது. அதுதான் அப்போதைக்கு என் இலட்சியமாக இருந்தது.”
ஹலிமா படிப்பில் கெட்டிக்காரப் பெண். சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளியில் (Singapore Chinese Girls’ School) படிக்கும் போது பள்ளியில் இருந்து நீக்கப் பட்டார். அதற்கும் காரணம் இருந்தது. தாயாருக்கு உதவி செய்ய வேண்டும்; குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அந்த அழுத்தங்கள். ஒழுங்காகப் பள்ளிக்குப் போக முடியவில்லை. அடிக்கடி லீவு போட்டார். அதனால் பள்ளியில் இருந்து நிறுத்தப் பட்டார்.
ஒருநாள் பள்ளியின் தலைமையாசிரியை அவரை அழைத்து இறுதியாக எச்சரிக்கை செய்து பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்.
”அது என் வாழ்க்கையின் மிக மிக மோசமான கட்டங்களில் ஒன்றாகும். என் பள்ளி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்ட கட்டம். அப்போது எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். சுய பரிதாபத்தில் வாழ்வதைவிட எழுந்து நின்று போராடுவதே சிறப்பு என்று என்னையே உற்சாகப் படுத்திக் கொள்வேன்.”
அடுத்து தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் (Tanjong Katong Girls' School) உயர்நிலைப்பள்ளி படிப்பு. அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு. படிப்பைத் தொடர்ந்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 1981-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக அனுமதிக்கப் பட்டார்.
2001-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மாஸ்டர்ஸ் பட்டம். பின்னர் இவர் அரசியலுக்கு வந்தார். ஓர் அமைச்சரானார். 2016-ஆம் ஆண்டில் சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தான் தன் கணவரைச் சந்தித்து இருக்கிறார். கணவரின் பெயர் முகமது அப்துல்லா (Mohammed Abdullah Alhabshee). அரபு நாட்டைச் சேர்ந்தவர். 1980-இல் திருமணம். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். அதிபர் ஹலிமாவின் கணவர் இவருக்குத் துணையாக ஒரு தூணாக நின்று அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.
அதிபர் ஹலிமாவின் தாரக மந்திரம் என்ன தெரியுங்களா. உழைப்பு... உழைப்பு... அந்த உழைப்பிலேயே வாழ்ந்து உழைப்பிலேயே வளர்ந்து; இன்று சிங்கப்பூரின் ஆக உயர்ந்த பதவியில் உச்சம் பார்க்கிறார். எல்லாவற்றுக்கும் காரணம் அவரின் அசராத உழைப்பு. அயராத விடா முயற்சி. அசைக்க முடியாத தன்னம்பிக்கை.
ஹலிமா சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசில் (National Trades Union Congress) சட்டத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். 1992-ஆம் ஆண்டில் அதன் சட்டத் துறையின் இயக்குநரானாகப் பதவி உயர்ந்தவர். பின்னர் 1999-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தொழிலாளர் ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் நியமிக்கப் பட்டார். அபாரமான வளர்ச்சி.
2001-ஆம் ஆண்டில் அரசியலில் காலடி வைத்தார். ஜுராங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார்.
2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு வெற்றி. சிங்கப்பூர் சமூக அபிவிருத்தி, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி. பின்னர் சமூகக் குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வழங்கப்பட்டது.
2013 ஜனவரி 8-ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் வரலாற்றில் சபாநாயகர் பதவியை வகித்த முதல் பெண்மணி எனும் வரலாற்றையும் படைத்தார். கடைசியில் இப்போது சிங்கப்பூரின் அதிபர் பதவியில் உச்சம் பார்க்கிறார்.
எப்படி வாழ்க்கையில் முன்னேறி வந்து இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். குடும்பத்துக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இருக்கிறார். குடும்ப நலனை முன் நிறுத்தியதால் பள்ளியில் இருந்தே வெளியாக்கப் பட்டு இருக்கிறார். இருந்தாலும் போராடிப் போராடி, கடைசியில் வெற்றி பெற்று இருக்கிறார்.
இப்போது சிங்கப்பூர் நாட்டின் ஆக உயரிய பதவி. அந்தப் பதவிக்கான ஹலிமாவின் பயணம் மிக நீண்டது. மிக நெடியது. பற்பல இன்னல்களைத் தாண்டியது. பற்பல இடர்பாடுகளைத் தாண்டியது. இறுதியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து எடுத்துக்காட்டாய் இவாழ்கிறார். ஹலிமாவின் வாழ்க்கை வரலாறு சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுகூட சொல்லலாம்.
ஓர் அதிபர் எனும் வகையில் ஹலிமா அவர்கள், சிங்கப்பூர் இஸ்தானா அதிபர் மாளிகையில் தான் தங்க வேண்டும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. பழைய இயூசுன் (HDB flat in Yishun Avenue 4) அடுக்குமாடி வீட்டிலேயே தங்கி வந்தார். சாதாரணமான எளிய வாழ்க்கை போதும் என்பதே அவரின் விருப்பம்.
ஆனால் சிங்கப்பூர் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். ஹலிமா அவர்கள் ஒரு நாட்டின் அதிபர். அவர் ஒரு சாதாரண அடுக்குமாடி வீட்டில் தங்கினால், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்து வந்தார்கள்.
அடுக்குமாடிகளில் அக்கம் பக்கத்தில் வாழ்ந்தவர்களுக்குப் பெருமைதான். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடிகள். சுற்றிலும் சி.சி.டி.வி. காமராக்கள். 24 மணி நேரமும் போலீஸ்காரர்களின் சோதனைகள். சமயங்களில் அதுவே பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியது.
சில மாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகைக்கு ஹலிமா குடிபெயர்ந்தார். இந்த மாளிகை சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் (Orchard) பகுதியில் உள்ளது. இப்போது அந்த மாளிகையில் தங்கிப் பணியாற்றி வருகிறார். இப்போது அவருக்கு வயது 66.
இவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது மனம் லேசாய்க் கனக்கிறது. விடியல்காலை நான்கு மணி. எட்டு வயதில் எல்லாக் குழந்தைகளும் தூங்கும் நேரம். இந்தச் சிறுமி மட்டும், கையில் வெறும் கூடையோடு மார்க்கெட்டிற்கு ஓடுகிறார். தாயார் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு சாலையில் விரைகிறார்.
கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து தாயாரிடம் கொடுக்கிறார். பின்னர் அங்கேயே குளித்து; அங்கேயே உடைகளை மாற்றிக் கொண்டு அவசரம் அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறார்.
மத்தியானம் இரண்டு மணிக்குத் திரும்பி வந்து கடையில் மங்கு சாமான்களை எல்லாம் கழுவி வைக்கிறார். இரவு பத்து மணிக்குப் பிறகுதான் வீட்டுக்குப் பக்கமே போகிறார். அடித்துப் போட்ட தூக்கம். ஒரு நாள் அல்ல. இரு நாட்கள் அல்ல. பல ஆண்டுகள் அன்றாடம் நடந்த நிகழ்ச்சிகள்.
இன்றைக்கு அதே அந்தப் பெண்பிள்ளை ஒரு நாட்டின் அதிபர். ஒரு சாமானிய பெண்ணின் அசாத்திய திறமையைக் கண்டு உலகமே வியக்கிறது. இனவாதத்திற்கு எதிரான அவரின் கோட்பாடு நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. கண்கள் பனிக்கின்றன. சிரம் தாழ்த்திக் கைகூப்புகிறோம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.08.2020
சான்றுகள்:
1. https://web.archive.org/web/20160413061249/http://www.parliament.gov.sg/mp/halimah-yacob?viewcv=Halimah
2. https://www.facebook.com/halimahyacob
3. https://www.istana.gov.sg/
4. https://sg.theasianparent.com/halimah-yacob-singapore-female-president