02 செப்டம்பர் 2020

பரமேஸ்வரா பலேம்பாங் நினைவுச் சின்னம்

பரமேஸ்வராவிற்கு இந்தோனேசியாவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமத்திரா, பலேம்பாங் நகரில் அந்தச் சின்னம் உள்ளது. பலருக்கும் புதிய தகவலாக இருக்கலாம். ஆனால் 2004-ஆம் ஆண்டிலேயே அந்தப் பரமேஸ்வரா பலேம்பாங் நினைவுச் சின்னம் (Palembang Parameswara Monument) கட்டப்பட்டு விட்டது.

Palembang Jakabaring Sport City

இந்தோனேசியா வரலாற்றில் பலேம்பாங் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்றுத் தடமாகும். ஸ்ரீ விஜயம் (Srivijaya); மஜபாகித் (Majapahit); சைலேந்திரா (Sailendra); பலேம்பாங் சுல்தானகம் (Palembang Sultanate) போன்ற மாபெரும் பேரரசுகளின்  அந்தக் காலத்துத் தலைநகரம் ஆகும்.

பரமேஸ்வராவின் மூதாதையர்கள் ஸ்ரீ ஜெயனாசா (Sri Jayanasa); தர்மசேது (Dharmasetu); சமரதுங்கா (Samaratungga); பாலபுத்ரா (Balaputra); சூடாமணி வர்மதேவன் (Cudamani Warmadewa); நீல உத்தமன் போன்றவர்கள் கோலோச்சி வாழ்ந்த இடம் பலேம்பாங்.

மாபெரும் மஜபாகித் மாமன்னர்கள் பலர் மகுடம் சூட்டிய இடம். அந்த மாமனிதர்களுக்கும்; அந்த மகத்துவமான பேரரசுகளுக்கும் மதிப்பு மரியாதை செய்யும் வகையில் அந்த நினைவுச் சின்னம் எழுப்பப் பட்டது.

இந்தப் பரமேஸ்வரா நினைவுச் சின்னம் ஜக்கா பாரிங் (Jakabaring) எனும் இடத்தில் அமைந்து உள்ளது. இங்கேதான் இந்தோனேசியாவின் மிக நவீனமான கொலோரா ஸ்ரீவிஜயா விளையாட்டு அரங்கம் (Gelora Sriwijaya Stadium) உள்ளது. பலேம்பாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசியாவில் உள்ள புக்கிட் ஜாலில் விளையாட்டு நகரம் போல அங்கேயும் ஜக்கா பாரிங் விளையாட்டு நகரம் (Jakabaring Sport City) உள்ளது. அந்தக் குட்டி நகரத்தின் நுழைவாயிலில் பரமேஸ்வரா நினைவுச் சின்னம் கம்பீரமாகத் தோற்றம் அளிக்கிறது.

ஐந்து வாழை இலைகள் கொண்ட ஒரு வாழை மரத்தின் வடிவத்தில் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டது. அதற்கு ரீத்தா விடாகோ (Rita Widagdo) எனும் இந்தோனேசியப் புகழ் கட்டிடக் கலைக் கலைஞர் வடிவம் கொடுத்து உள்ளார்.

இந்தோனேசியாவின் அழகிய கட்டிடக் கலை வடிவங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முன்பு 24 மணி நேர நீரூற்று (fountain) நீர்க்கோலம் இருந்தது. இப்போது விஷேசமான நாட்களில் மட்டும் அந்த நீரூற்று செயல்படுகிறது.

பரமேஸ்வரா மறைந்து போனாலும்; அவருடைய புகழ் மறையாமல் நிலைத்து நிற்கிறது. அதற்கு இந்தப் பலேம்பாங் நினைவுச் சின்னம் நல்ல ஒரு சான்று. பரமேஸ்வராவின் புகழ் நிலைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.08.2020

அமைவிடம்: Tugu Parameswara. Jl. Gub H Bastari, 15 Ulu, Kecamatan Seberang Ulu I, Kota Palembang, Sumatera Selatan 30257, Indonesia.

Parameswara Monument is indeed a famous landmark in Palembang. Apart from its majestic architecture, the monument becomes a place for gathering. Many tourists come here to simply relax and enjoy an afternoon. It is free to get close to the monument. One thing, they shouldn’t ruin the park and stain the pool. Most of the visitors love to take some pictures near to the monument. It is because Parameswara has a unique shape. Not to mention it is quite big.

In the past, the monument features a 24-hour fountain attraction. Today, it usually appears in the evening. The fountain is the greatest feature of the monument. It also combines beautiful lights in the evening.

சான்றுகள்:

1. https://www.palembang.indonesia-tourism.com/parameswara.html

2. http://wikimapia.org/15033665/id/Tugu-Parameswara

3. http://dx.doi.org/10.36982/jsdb.v4i3.787



01 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 1

 தமிழ் மலர் - 01.09.2020

தமிழ்நாட்டில் இருந்து பற்பல இனக் குழுக்கள் பற்பல காலக் கட்டங்களில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து உள்ளன. அப்படி புலம் பெயர்ந்த இனக் குழுக்களில் பல்லவர்கள் முக்கியமான ஒரு குழுவினர். அவர்களின் புலம் பெயர்வு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து உள்ளது.

பல்லவர்கள் ஜாவா; சுமத்திரா; மலாயா; போர்னியோ; பிலிப்பைன்ஸ்; தாய்லாந்து; மியன்மார், கம்போடியா; வியட்நாம்; கொரியா; லாவோஸ் போன்ற இடங்களில் பற்பல அரசாட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய 100-க்கும் குறைவு இல்லாத சிற்றரசுகள் பேரரசுகள்.

வணிக நோக்கத்தோடு போனவர்கள் தான். ’வணிகம் செய்வோம் வாரீர்’ என்று சொல்லக் கேள்வி. அந்த மாதிரி இவர்களும் ’வாரிசுகளை உண்டாக்குவோம் வாரீர்’ என்று சொல்லி போன இடங்களில் எல்லாம் வாரிசுகளை உருவாக்கி விட்டுச் சென்று விட்டார்கள். 

அந்த வாரிசுகளைப் பற்றியும் சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே ஒருவருக்கு ஒருவர் அடித்துப் பிடித்து ஆங்காங்கே சின்ன சின்ன அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். பெரிய பெரிய அட்டகாசம் அமர்க்களம் எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். கடைசியில் வரலாற்றைத் தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயே சேர்ந்து விட்டார்கள்.

தொட்டுக்க துடைச்சிக்க ஏதாவது வச்சிட்டு போய் இருந்தால் பரவாயில்லை. இப்போது அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்து இருக்காது. நேற்று வந்த வந்தேறிகள் எல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள்.

இதைத்தான் காலத்தின் கோலம் என்று சொல்வார்களோ. அல்லது காலத்தின் அலங்கோலம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்களோ ஊர் பொல்லாப்பு வேண்டாங்க. நம்ப விசயத்திற்கு வருவோம்.

குத்து மதிப்பாகச் சொன்னால் ஒட்டுமொத்த இந்தோனேசியா; இந்தோசீனா இரு துணைக் கண்டங்களும் இந்தியர்களின் அதாவது பல்லவர்களின் கைகளில் இருந்து உள்ளன. வரலாற்றுப் பாரம்பரிய வழக்கத்தில் சொன்னால் தமிழர்களின் கைகளில் இருந்து உள்ளன.

இருந்தாலும் என்ன. அவர்கள் பிடித்ததே முயல். அந்த முயலுக்கு மூனே முக்கால் கால்கள். அந்தப் பிடிவாதத்தில் முரட்டுவாதம் செய்தார்கள். இருந்தவை எல்லாம் அடிபட்டுப் போய் விட்டன.

கி.மு. 290-ஆம் ஆண்டு தொடங்கி 15-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இந்தியக் கலாசாரச் செல்வாக்குகள் மேலோங்கி இருந்தன. உள்ளூர் அரசியல் கலாசாரங்களில் அழகாய் இணைந்து உச்சம் பார்த்தன.

இந்திய துணைக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த சின்னச் சின்ன அரசுகள் தென்கிழக்கு ஆசிய அரசுகளுடன் வர்த்தகம், கலாசாரம், அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அதுவே இது தென்கிழக்கு ஆசியாவில் இந்திய மயமாக்கலுக்கு வழிவகுத்துக் கொடுத்தன (Indianisation within Indosphere) என்றும் சொல்லலாம்.

இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மற்ற மற்ற இந்து அரசுகளைப் போல் அல்லாமல்; இந்திய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்த பல்லவ ஆளுமைகள் கடலைக் கடப்பதற்குக் கலாச்சார கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.

தவிர இராஜேந்திர சோழரின் தென்கிழக்கு ஆசியா படையெடுப்பு சோழ சாம்ராஜ்யத்தின் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்று உள்ளது. இதுவே தென்கிழக்கு ஆசியாவிற்கு கடல் வழிகள் வழியாக அதிகமான பரிமாற்றங்களையும் வழிவகுத்துக் கொடுத்தது.

தென்கிழக்கு ஆசியாவின் பூர்வீக மக்கள், கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தெற்கு சீனா பகுதியில் இருந்து குடிபெயர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

1500 ஆண்டுகளுக்கு முன்னால் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் இந்து மதம் செழித்து வளர்ந்தது. பிரதான மதமாகவும் மாறியது. இருந்தாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. காலப் போக்கில் மறைந்து போனது. மற்ற மற்ற புதிய மதங்களின் வருகையால் இந்து மதம் பின்னடைவு அடைந்தது.

கி.பி. 1500-ஆம் ஆண்டு வரை தென்னிந்திய வர்த்தகர்கள், சமய ஆசிரியர்கள், பாதிரியார்கள், தென்கிழக்கு ஆசியப் பூர்வீக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தக் கட்டத்தில் இந்து மதமும் பௌத்த மதமும் இந்தியாவில் இருந்து போட்டிப் போட்டுக் கொண்டு வந்து இங்கு நீயா நானா என்று கட்சி கட்டின.

இருப்பினும் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் பல நூற்றாண்டுகளாகப் படர்ந்து மலர்ந்தன. இறுதியில் பௌத்த மதம் நிலைத்தது. மற்றும் ஒரு புதிய மதத்தின் வருகையால் அதுவும் காலப் போக்கில் கரைந்து போனது. சரி. பல்லவர்கள் விசயத்திற்கு வருவோம்.

இந்தோனேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே 16 பேரரசுகளைப் பல்லவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு பட்டியல் கொடுக்கிறேன். பாருங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


அடுத்து இந்தோசீனாவை எடுத்துக் கொள்வோம். அங்கேயும் சில பல பேரரசுகளைப் பல்லவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலைப் பார்க்கும் போது மலைப்பு ஏற்படுகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எல்லாம் சாதனைகள் செய்து இருக்கிறார்களே என்று வியக்கவும் வைக்கிறது.

1. பூனான் பேரரசு (Funan Kingdom)

2. சென்லா பேரரசு (Chenla Kingdom)

3. சம்பா பேரரசு (Champa Kingdom)

4. கம்போஜம் பேரரசு (Chenla Kingdom)

5. துவாராவதி (Dvaravati Kingdom)

6. லாவோ (Lavo Kingdom)

7. லான் நா (Lan Na Kingdom)
 
8. சிங்கனாவதி (Singhanavati Kingdom)

9. சுகோத்தாய் (Sukhothai Kingdom)

10. தோன்புரி (Thonburi Kingdom)

11. நாக்கோன் சி தாமாராட் (Nakhon Si Thammarat Kingdom)

அடுத்ததாகப் பிலிப்பைன்ஸ் நாடு. அந்த நாட்டிலும் பல்லவர்கள் சும்மா இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு சின்ன பெரிய அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். சுமத்திரா எங்கே இருக்கிறது. பிலிப்பைன்ஸ் எங்கே இருக்கிறது.

ஈராயிரம் மைல்கள் தாண்டிப் போய் அங்கேயும் கொடி கட்டிப் பறக்கவிட்டு ஓர் ஆட்டம் போட்டு இருக்கிறார்கள். பட்டியலைப் பாருங்கள். பயமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 அரசுகளை உருவாக்கி ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

1. பன்னை மத்தியாஸ் (Madya-as Kingdom)

2. நாமாயான் (Namayan Kingdom)

3. தோண்டோ (Tondo Kingdom)

4. மிண்டானோ (Mindanao Kingdom)

5. மாயிநிலா (Kingdom of Maynila)

6. காபோலான் (Caboloan Kingdom)

7. மாய் மிண்டோரோ (Ma-i Mindoro Kingdom)

8. செபு ராஜாநடம் (Rajahnate Cebu Kingdom)

9. புத்துவான் (Kingdom of Butuan)

10. லானாவோ (Lanao Kingdom)  

11. மாகுயிண்டானோ (Maguindanao Kingdom)

12. மாயிம்போங் (Maimbung Kingdom)


இன்னும் ஒரு விசயம். புருணை நாட்டிலும் ஒரு சிற்றரசு இருந்து உள்ளது. அதன் பெயர் விஜயபுரம் (Vijayapura). இந்த அரசு சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜயத்தின் கண்காணிப்பில் இருந்து உள்ளது. இந்தப் பல்லவர்கள் எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை போல தெரிகிறது.

அடுத்ததாக மலாயா தீபகற்பம். பல்லவர்களின் ஆளுமை இங்கேதான் முதன்முதலாகத் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. கடாரம் உருவான காலத்தில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குக்கரை கிளந்தான் திரங்கானு பகுதியில் பான் பான் அரசு; சித்து அரசு போன்றவை உருவாகி விட்டன. ஸ்ரீ விஜயத்தின் கண்காணிப்பில் மேலும் சில பல்லவ அரசுகள் மலாயா தீபகற்பத்தில் இருந்து உள்ளன.

1. சித்து (Chitu Kingdom)

2. தாம்பரலிங்கம் (Thambaralinga Kingdom)

3. இலங்காசுகம் (Langkasuka Kingdom)

4. கடாரம் (Bujang Valley Kingdom)

5. கங்கா நகரம் (Gangga Negara Kingdom)

6. கோத்தா கெலாங்கி (Kota Gelanggi Kingdom)


ஏற்கனவே சொன்னது போல தென்கிழக்கு ஆசியாவில் பல்லவர்கள் ஏறக்குறைய 100 அரசுகளை உருவாக்கி இருக்கிறார்கள். சரி. பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் எனும் பொதுவான கருத்து நிலவி வருகிறது. தெரியும் தானே.

தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் எனும் மூவேந்தர்களோடு முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது.  மன்னிக்கவும். முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யப் படுகின்றது. அப்படித்தான் சொல்லவும் முடிகின்றது. இது என் கருத்து அல்ல. வரலாற்று ஆய்வாளர்கள் பலரின் கருத்து.

பல்லவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். வடக்கே சிந்து சமவெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். தொண்டை மண்டலத்தில் இருந்து வந்த பழங்குடிகளாக இருக்கலாம்.

தெற்கே மணிபல்லவத் தீவில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் எங்கே இருந்து வந்து இருந்தாலும் சரி; தமிழ்நாட்டின் கலை கலாசார கட்டிடக்கலை வளர்ச்சியில் தீவிரமான ஈடுபாடுகள் காட்டி உள்ளார்கள். அதை மறுக்க முடியுமா. மறந்துவிட்டுப் போக முடியுமா?


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.08.2020

சான்றுகள்:

1. Kulke, Hermann (2004). A history of India. Rothermund, Dietmar, 1933– (4th ed.). New York: Routledge.

2. Chandler, David (July 2009). "Cambodian History: Searching for the Truth". Cambodia Tribunal Monitor.

3. Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. pp. 377.

4. Encyclopedia of Ancient Asian Civilizations by Charles F. W. Higham – Chenla – Chinese histories record that a state called Chenla..." (PDF). Library of Congress.

5. Braddell, Roland (December 1937). "An Introduction to the Study of Ancient Times in the Malay Peninsula and the Straits of Malacca". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 15 (3 (129)): 64–126.

(தொடரும்)






பரமேஸ்வரா வானொலிச் சேவை - இந்தோனேசியா

பரமேஸ்வராவைப் பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள். அந்த வரிசையில் இன்றைக்கும் ஒரு தகவல். பரமேஸ்வரா எப்.எம். (Prameswara FM).

RIZKA CHIKA

இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, லாமோங்கான் (Lamongan) எனும் இடத்தில் இருந்து ஒலிபரப்பு செய்யப்படும் ஒரு வானொலிச் சேவை. இது ஓர் இந்தோனேசியா நாட்டு தனியார் ஒலிபரப்பு. கடந்த 25 ஆண்டு காலமாக இந்தோனேசிய மொழியில் ஒலிபரப்பு செய்து வருகிறார்கள்.

இந்தோனேசியா நாட்டின் அதிபரில் இருந்து ஜாவா தீவு ஆளுநர் வரையில் இந்த நிலையத்திற்கு வருகை புரிந்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும்; இராணுவத் தளபதிகளும்; கல்விமான்களும்; சமயப் போதகர்களும் பல தடவை பேட்டி அளித்து உள்ளார்கள். தவிர பள்ளிப் பிள்ளைகளும் அடிக்கடி வந்து போகிறார்கள்.

இதன் அசல் பெயர் ‘ரேடியோ 103.9 பரமேஸ்வரா எப்.எம். லாமோங்கான் (Radio 103.9 Prameswara FM Lamongan). ஜாவாவில் புகழ்பெற்ற வானொலி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையத்தார் குடும்ப ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்தி வருகின்றார்கள்.

அறிவிப்பாளர்கள்

கிழக்கு ஜாவாவில் உள்ள லாமோங்கான் (Lamongan); கிரெசிக் (Gresik); டூபன் (Tuban); பாபாட் (Babat); போஜோநகரா (Bojonegoro); ஜொம்பாங் (Jombang); மோஜோகெர்டோ (Mojokerto); பசிரான் (Paciran); பிளிட்டர் (Blitar) ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பரமேஸ்வரா எப்.எம். வானொலிச் சேவை வழங்கப் படுகிறது.

இதன் வழி 12 இலட்சம் 61 ஆயிரம் மக்களுக்கு அந்தச் சேவை போய்ச் சேர்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

1995 ஆகஸ்டு 10-ஆம் தேதி உருவாக்கப்பட்ட வானொலி நிலையம். இருப்பினும் 2000-ஆம் ஆண்டில் தான் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது. இந்தச் சேவையில் ஏழு அறிவிப்பாளர்கள். நால்வர் ஆண்கள். மூவர் பெண்கள்.

விளம்பரம் மூலமாக இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தவிர லாமோங்கான் நகரக் கழகத்தின் நீர் கட்டணம்; மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கான சலுகைகளும் கிடைக்கின்றன.

அந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளின் பெயர்களும் பெரும்பாலும் பரமேஸ்வரா எனும் பெயரைக் கொண்டு உள்ளன. நிகழ்ச்சிகளின் (Program Siaran Radio Prameswara) பெயர்களைக் கவனியுங்கள்.

05.00 - 06.00 Mutiara Pagi Prameswara
06.00 - 07.00 Selamat Pagi Prameswara
07.00 - 09.00 Pernik Dunia Prameswara
09.00 - 11.00 Sekitar Prameswara
11.00 - 13.00 B'Tari Prameswara
13.00 - 15.00 Dendang Prameswara
15.00 - 17.00 Godama Prameswara
18.00 - 19.00 Indo Prameswara
19.00 - 21.00 Indo Hits Prameswara

கைத்தொலைபேசி மூலமாக இவர்களின் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். இணைய முகவரி: http://radiomaya.blogspot.com/2015/12/radio-1039-prameswara-fm-lamongan.html.

பரமேஸ்வராவின் பெயரில் இந்தோனேசியாவில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த வானொலி நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு இருக்கிறேன். மேல் தகவல்கள் கிடைத்ததும் பதிவு செய்கிறேன்.

ஜாவாவில் உள்ள மக்களில் பெரும்பாலோர், பரமேஸ்வராவைத் தங்களின் வரலாற்று நாயகனாகப் போற்றுகின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நாட்டில் பரமேஸ்வரா எனும் பெயரை மறைத்துக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு நாட்டில் போற்றிப் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.09.2020

சான்றுகள்:

1. https://www.prameswara.com/

2. https://onlineradiobox.com/id/prameswara/?lang=en

3. https://www.slideshare.net/yucikonur/company-profile-prameswara-2012-11946453


31 ஆகஸ்ட் 2020

மலாக்காவில் பரமேஸ்வரா உணவகங்கள்

பரமேஸ்வராவின் பெயரில் மலாக்காவில் சில உணவகங்கள் உள்ளன. மலாக்கா கடலில் பிடிக்கப்படும் கடல்வகை மீன்கள் நேரடியாக இந்த உணவகங்களுக்குக் கொண்டு வரப் படுகின்றன.

நல்ல தரமான சுத்தமான கடல் மீன் வகைகள். உணவகங்களிலேயே வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான மீன் வகைகளைத் தேர்வு செய்யலாம். உடனடியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள்.

மலாக்கா மாநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உம்பை (Umbai) எனும் மீன்பிடி கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் தான் பரமேஸ்வராவின் பெயரில் சில உணவகங்கள் உள்ளன. தவிர மலாக்கா பண்டார் ஹீலீர் ஜாலான் பரமேஸ்வரா சாலையிலும் பரமேஸ்வரா பெயரில் இரு உணவகங்கள் உள்ளன.

1. Ikan Bakar Klasik Parameswara Terapung, Umbai

2. Ikan Bakar Parameswara, Umbai

3. Ikan Bakar Parameswara Restaurant, Umbai

4. Parameswara Grilled Fish Restaurant, Umbai

5. Medan Ikan Bakar Parameswara, Pengkalan Pernu, Umbai, Melaka

6. Medan Ikan Bakar Muara Sungai Duyung, Duyung

7. Restoran Baba Ang, Jalan Parameswara, Malacca City,

பரமேஸ்வரா உணவகங்கள் பட்டியல் நீண்டு போகிறது. ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் (பெயர் வேண்டாமே) ஒரு நாளைக்கு 60 - 70 ஆயிரம் ரிங்கிட் வரை வியாபாரம் நடைபெறுவதாகச் சொல்லக் கேள்வி.

மலாக்காவில் பரமேஸ்வரா பெயர் கொண்ட உணவகங்களில் மிகவும் புகழ் பெற்றது Jalaludin bin Said Ikan Bakar Parameswara. இதன் மற்றொரு பெயர் Ikan Bakar Umbai Melaka. உம்பாய் கடற்கரையில் உள்ளது.

புலாவ் பெசார் தீவிற்குப் பயணம் செல்பவர்கள் இந்த உணவகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். சிங்கப்பூரில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து போகிறார்கள்.

ஈக்கான் பாக்கார் பரமேஸ்வரா உணவகத்தின் வியாபாரம் மாலை 5.00 மணி முதல் இரவு 12 மணி வரையில். ஆறு சமையல்காரர்கள். 70 வேலைக்காரர்கள். இந்த உணவகத்தில் மட்டும் ஏறக்குறைய 75 - 80 பேர் வேலை செய்கிறார்கள்.

சிரம்பான், தைப்பிங், பினாங்கு, பெட்டாலிங் ஜெயா, தெலுக் இந்தான், ஜொகூர் பாரு, மூவார், பத்து பகாட் போன்ற இடங்களிலும் பரமேஸ்வராவின் பெயரில் உணவகங்கள் உள்ளன. மலாக்காவிற்கு வந்தால் உம்பாய் பெர்னு உணவகங்களுக்குச் சென்று பாருங்கள். ஆதரவு வழங்குவது நல்ல ஒரு செயல்.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி. இது அந்தக் காலத்துப் பழமொழி. ஆனால் பரமேஸ்வரா மறைந்தும் உணவகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். இது இந்தக் காலத்து புது மொழி. பரமேஸ்வராவின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2020




நினைத்துப் பார்ப்போம் 2020

இன்று மலேசியாவின் மெர்டேகா நாள். ஒவ்வோர் ஆண்டும் கோலாகலம். இந்த ஆண்டு கொரோனாவின் குதூகலம். அதனால் எல்லாமே அமைதிக் கோலம்.

பொதுவாக ஒரு நாடு சுதந்திரம் அடைந்த நாளில், அந்த நாடு வளர்ச்சி அடைந்ததைப் பற்றி மீள்பார்வை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எதுவும் சிறப்பாகச் சொல்வதற்கு இல்லை.

இரண்டு வாரத்திற்கு முன்னால் ‘மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும்’ என்று பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் சொல்லி ஒரு பட்டாசைக் கொளுத்திப் போட்டு விட்டார்.

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி விட்டது.

இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாக நடந்து வரும் காம்போதி ராகத்தின் அரசியல் பல்லவிகள்.

மலேசிய அரசியல் ஜாம்பவான்கள் மத்தியில், புதிதாய்த் தோன்றிய சின்ன ஒரு மின்மினிப் பூச்சியின் சின்ன ஒரு கிளிப் கிளிப். இது போதும். ஒரு வருடத்திற்கு தாராளமாக மன உளைச்சல் கொடுக்கும்.

எந்த ஒரு நாட்டிலும் இனவாதம் மதவாதம் இரண்டும் சேர்ந்து வக்கிரம் பேசுவது நல்லது அல்ல. அந்த நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக கருத இயலாது. அஸ்திவாரமே சரி இல்லாத போது வளர்ச்சி பற்றி பேசுவதில் நியாயம் இல்லை.

நாட்டில் விசுவாசமான மாணவர்களை உருவாக்குவதில் இருந்து தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்டன என்று அந்தத் தலைவர் சொல்லி இருக்கிறார்.

அரசியல் லாபத்திற்காக உளறிக் கொட்டி இருக்கலாம். அப்படித்தான் தெரிகிறது. ஆக தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னவர்களில் இவர் முதல் ஆள் அல்ல. அதே சமயத்தில் இவர் நிச்சயமாக கடைசி ஆளாகவும் இருக்க மாட்டார். இன்னும் வருவார்கள்.
 
இருப்பினும் நம் பங்கிற்கு ஒரு பதிவு. இந்த நாட்டை இந்த அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கு தங்களால் இயன்றதைச் செய்த அந்த வெள்ளந்திகள்... நினைத்துப் பார்ப்போம். அவர்களின் பங்கு பெரிது. மறந்துவிடக் கூடாது.

ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் அவர்கள் நம் மூதாதையர்கள். அவர்கள் இல்லாமல் நாம் இந்த அளவிற்கு வந்து இருக்க முடியாது. அவர்களுக்கு முதல் மரியாதை செய்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.08.2020


பேஸ்புக் பதிவுகள்

Parthipan Mariappan:
Very touching article sir... Nandri Aiyaa.🙏

Muthukrishnan Ipoh: இந்த நேரத்தில் நம் மூதாதையர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்... நன்றிங்க...

Selvi Munisamy: நம் நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள்.ஆனால் நம் இனத்திற்கு இன்னும் சுதந்திரம் அடையவில்லை !! மனம் கனக்கிறது ஐயா.....

Muthukrishnan Ipoh: தாய்மொழிப் பள்ளிகள் எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டன... வேறு என்ன சொல்ல முடியும்...

Selvi Munisamy: நீங்கள் சொன்ன மாதிரியே ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி, கடைசியல நம்ப தமிழ்ப் பள்ளியிலேயே கை வைக்கிறார்கள். நெஞ்சு பொறுக்க வில்லை ஐயா...

Muthukrishnan Ipoh: எதிரி பலகீனமாகி விட்டால் கொட்டக் கொட்டக் குனிவான் என்பது ஒரு பொதுவான எதிர்ப்பார்ப்பு...

Sathya Raman:
இந்த நல்ல நாளில் நயமான, நியாயமான கருத்துகளைச் சொல்லி பதிவான தகவலுக்கு நன்றிங்க சார்.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களாக இருந்தவர்கள் நமது முன்னோர்கள். அவர்களின் உழைப்பதை, சிந்திய உதிரத்தை இன்று உதாசீனம் செய்யும் நன்றி கெட்டவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் நம் மனத்தை, தன்மானத்தை உறுத்தினாலும் நம் இன ஒற்றுமையால் மட்டுமே அத்தகைய அநீதிகளை அப்புறப் படுத்த முடியும்.

தாய் மொழிப் பள்ளிகளை மூடுவதிலே குறியாகி இருக்கும் மூடர்களின் முடிவை நாம் பார்த்துக் கொண்டு பாராமுகமாய் இருக்க மாட்டோம் என்று அந்த கபோதிகளுக்கும் கண்டிப்பாக தெரியும்.

சொந்த மொழியே இல்லாதவர்களுக்கு மற்ற இனத்தவரின் தாய் மொழி தாகத்தின் தாக்கம் உணர தகுதி அற்றவர்களே. இந்த நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால் இன்னமும் இனவெறியும் மதவெறியும் சிறை பட்டேதான் கிடக்கிறது வன்மங்களும், வக்கிரமும் மனதில் இருந்து தெளியாத வரை, தேறாத வரை சுதந்திரம் வெறும் சுமையே...

Muthukrishnan Ipoh: பல்லினம் சார்ந்த நாட்டில் இனவாதம் மதவாதம் என்பது பேராண்மை வாதங்கள். அப்படிப்பட்ட சுயவாதங்கள் காலப் போக்கில் ஒரு நாட்டின் நல்லிணக்கத்தைச் செல்லரித்து விடும். சிறுபான்மை இனத்தவர் அழுது புலம்பலாம். அரற்றலாம். ஆர்ப்பரிக்கலாம்.

ஆனால் பேரினத்தை எதிர்த்துப் பேர் போட முடியாது என்பது அங்கே தொக்கி நிற்கும் ஒரு வக்கிரத்தன்மை. இது உலகம் முழுமையும் காணப்படும் உலகளாவிய வக்கர அரசியல் நகர்வுகளில் ஒன்றாகும்.

இந்தப் பக்கம் கொஞ்சம் பரவாயில்லை. சமாளிக்க முடிகின்றது. சில நாடுகளில் சிறுபான்மை இனத்தவர் வேர் அறுக்கப் படுகின்றனர். எடுத்துக்காட்டாக ரோகிங்யா இனத்தவர்.

அடுத்து... ஓர் இனத்திற்கு வலுவான வரலாறு இல்லாத போது அந்த இனத்தையும் குறை சொல்ல முடியாது. இல்லாத போது என்ன செய்வதாம்.  இல்லாததற்கு வண்ணம் பூசி வரலாறு பேசும் போது அமைதி காப்பதே சிறப்பு. ஆனால் சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை உரிமைகளில் நெருடல்கள் ஏற்படும் போது தான் எதிர்ப்புகள் தோன்றும்.

தங்களின் தெளிவான பதில் பதிவு சிறப்பாக உள்ளது. உள்ளத்தின் சாரல்களில் உணர்வுகள் கொப்பளிக்கின்றன. நன்றிங்க சகோதரி.

Parameswari Doraisamy: வணக்கம் ஐயா... என் மனதில் தோன்றிய எண்ணங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி. இனவாதம் மதவாதம் தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் தேசிய தினம் கொண்டாடுவது அவசியமா என்று தோன்றுகிறது ஐயா...

Muthukrishnan Ipoh:
இந்த ஆண்டு தேசிய தினம் கொண்டாடப்படவில்லை. அதற்குத் தலையாய காரணம் கொரோனா பரவல். அதைத் தவிர்க்கும் நோக்கத்தில் அணிவகுப்புகள்; மற்ற மற்ற கொண்டாட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு உள்ளன.

ஒரு நாட்டின் விடுதலை; ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாங்கிய ஓர் உரிமைப் பத்திரம். இந்த நாட்டைப் பொறுத்த வரையில் மூன்று இனத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து கையெழுத்துப் போட்டு வாங்கி இருக்கிறார்கள்.

இன வாதம் மதவாதம் தலைவிரித்து ஆடினாலும் ஒரு நாட்டின் தேசிய தினம் என்பதைத் தவிர்க்க முடியாது. அத்தியாவசியமானது. அவசியம் என்பதே என் கருத்து.

Parameswari Doraisamy >>> Muthukrishnan Ipoh: வணக்கம் ஐயா... சுயநலத்துக்காக வேசம் போட்டு ஏமாற்றும் பேர்வழிகள் பார்த்து என் மனம் கசந்து போய்விட்டது. இவ்வேளையில் உங்க கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டேன். நன்றி.

Maha Lingam: நன்றி... இவர்களும் எனது இரத்த தொடர்புடைய முன்னோர்களே... எனது இனம்... நாம் தமிழர்... நாமே தமிழர்...  

Muthukrishnan Ipoh: ஆயிரம் புதிய உறவுகள் வந்தாலும் ஆரம்பத்தில் உருவாக்கி விட்டவர்களை நாம் மறக்கவே கூடாது... மறந்தால் மனித இனத்தில் அடையாளம் தெரியாதவர்கள் படியலில் சேர்க்கப் படலாம்... நன்றிங்க ஐயா...

Vimal Sandanam
சிலர் இப்படித் தான் சில நேரங்களில் கூவுவார்கள் ஐயா. என்ன செய்வது? உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

Muthukrishnan Ipoh:
கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் எனும் உறவுகள்... இந்தியர் எனும் உறவு முறை விட்டுப் போவது இல்லை... தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க...

KR Batumalai Robert: மிகவும் அருமை அண்ணன்.

Muthukrishnan Ipoh: நன்றிங்க வாழ்த்துகள்...

Mageswary Muthiah

Muthukrishnan Ipoh: அருமை... அருமை... கண் பட்டுவிடப் போகிறது...

Sara Rajah:
நம் இனத்திற்கு இன்னும் சுதந்திரம் அடையவில்லையே.

Muthukrishnan Ipoh: சுதந்திரம் கிடைத்தும் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை...

Ramala Pillai: 🌹💯👌🌹

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...

Yogavin Yogavins: மிகவும் அருமை

Muthukrishnan Ipoh: நன்றிங்க... வாழ்த்துகள்...

Kody Sivasubramaniam: மழை பொழியும் போதெல்லாம் தவளை எப்படி கத்துகிறதோ... அதே மாதிரி தான் அரசியல் மழை அடிக்கும் பொழுதும் இவர்களும்... எப்படி வேண்டுமானலும் கூவிக் கொள்ளட்டும் ....
நம் பள்ளிகள் மீது கை வைத்து விடுவார்களா... அல்லது உங்களை போன்றவர்கள் தான் விட்டு விடுவீர்களா... ஒரு காலும் நம் தலைவர்களும் விட மாட்டார்கள் என்று நம்பலாம். தமிழோடு நாம்... 🙏

Muthukrishnan Ipoh: 1956-ஆம் ஆண்டு மலாயா கல்விக் கொள்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை ரசாக் திட்டம். இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம்.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள்.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி என்பது 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது. சரிங்களா.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையை சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். இரு தரப்பிலும் இணக்கச் சுணக்கங்கள். அதைச் சரி செய்யவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம் ஆகும்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட வேண்டும்.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாகவும் இருந்து வருகிறது

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது.

தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். சரி. இந்த ரசாக் அறிக்கையில் ஓர் இறுதி குறிப்பு உள்ளது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ரசாக் அறிக்கை 1956-இன் பரிந்துரையில் சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்பது தான் இறுதி குறிப்பு ஆகும். இதில் ஒளிவு மறைவு தேவை இல்லை.

ரசாக் அறிக்கையை முழுமையாகப் படித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். இறுதி குறிப்பு என்ன சொல்கிறது என்பதும் தெரிய வரும்.

R Muthusamy Rajalingam: விடுதலை நாளாம்!!!

கதிரவன் மட்டும்
வந்து போகிறான்....

காரிருளில் என்
நேச தேசம்.

சனநாயகத்திற்க்கு
வாய்க்கரிசி...

பணநாயகத்திற்க்கு
வக்கனை அரிசி...

இன்று விடுதலை நாளாம்!!!

மீண்டும் கதிரவன்...

விடுதலை கோரி
காரிருள்.

இரா முத்து

Muthukrishnan Ipoh:
கருத்துகள் சொல்ல இயலவில்லை ஐயா...

Jaya Brakash:
அனைவருக்கும் இனிய 63 வது மலேசிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் அன்புடன் மூ. ஜெய பிரகாஷ் குடும்பத்தினர்

Muthukrishnan Ipoh:
தங்களுக்கும் தேசிய தின வாழ்த்துகள்...

Jaya Brakash: வணக்கம் ஐயா...நான் உங்கள் முன்னாள் மாணவன் sir. SRJK (T) TELUK MERBAU SEPANG சுங்கை PELEK SELANGIR

Muthukrishnan Ipoh:
ஜெயபிரகாஷ்... நினைவு வருகிறது. எப்படி தம்பி இருக்கிறீர்கள்... நலமாகப் பயணிக்க வாழ்த்துகிறேன்... குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்...

Kesavan Selvaraj: இனிய 63 வது மலேசிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு ஒரு ஆபத்து என்றல் மீண்டும் ஒரு மொழி போர் செய்தாக வேண்டும்!!! பொறுத்திருந்து பார்ப்போம்!

Muthukrishnan Ipoh: முன்பு 48 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சையே ஏற்பட்டது.

சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். 1971-ஆம் ஆண்டு. அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். சிக்கிக் கொண்டார். 1978 அக்டோபர் 11-ஆம் தேதி. அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.

1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார். சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

இந்த மாதிரி அடிக்கடி பிசுபிசுப்புகள்.

Kody Sivasubramaniam: ஒரே தேசியம், ஒரே நாடு. ஒரே மூசசு

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...

Kanna Kannan:


Srivali Seeridaram:
Arumai ayya

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்