04 செப்டம்பர் 2020

பிஜி தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 04.09.2020

தமிழன் இல்லாத நாடு இல்லை. அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடு இல்லை. அதுவே தமிழருக்கு வரலாறு எழுதிக் கொடுத்த வலிமிக்க வரப்பிரசாதம். தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்காகக் காட்ட வேண்டும்?

தமிழ் நாடு என்பது தமிழரின் பெயரைச் சொல்லத் தான் ஓர் அடையாளம். ஒரு மாநிலம். மற்றபடி தமிழர்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு தேசம் அல்ல. மன்னிக்கவும்.

அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். பெருமையாக இருக்கின்றது. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள். உண்மை தான். உடல் புல்லரிக்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வசந்தம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை பாடினார்கள். உண்மை தான். உச்சி குளிர்கின்றது. கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள். உண்மை தான். நெஞ்சம் கனக்கின்றது.

பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளை அள்ளிக் கொடுத்து அழகு பார்த்தார்கள். அது எல்லாம் அப்போதைய கதைகள். ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது.

ஆக தமிழர்களுக்கு என்று ஒரு நாடு எங்கேயும் இல்லை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாடு என்பது தமிழர்களின் நாடு அல்ல. இது வார்த்தை ஜாலம் அல்ல. வீசி உடைத்துப் போட ஒரு கண்ணாடியும் அல்ல. என் மனதில் இறுகிப் போன மௌனத்தின் விழுமியச் சாரல்கள். விசும்பும் மௌனத்தின் கம்போதி ராகங்கள்.

அதே அந்தத் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வாழ்கிறார்கள்.

தமிழ் மறக்கப்படும் நாடுகளில் ஒன்றுதான் பிஜி தீவு (Republic of Fiji). பசிபிக் பெருங்கடலில் பூபாளம் பாடும் ஒரு பச்சைத் தீவு. அந்தத் தீவில் வாழ்ந்த தமிழர்களின் கதை இருக்கிறதே அது காலத்தால் கரைக்க முடியாத ஒரு கண்ணீர்க் கதை.

காலனித்துவ ஆட்சியில் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட தமிழர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். மலாயா தமிழர்களுக்குத் தெரிந்த கதை. அதையும் தாண்டிய நிலையில் பிஜி நாட்டுத் தமிழர்கள் துவைத்துக் காயப் போடப் பட்டார்கள். இது உலக மக்களுக்குத் தெரியாத கதை.

மலாயா தமிழர்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஐலசா பாடிக் கொண்டே ரசுலா கப்பலில் ஏறி இதமிழ் மண்ணுக்கே போக முடிந்தது.

ஆனால் பிஜி தீவுக்குப் போன தமிழர்களுக்கு அப்படி ஒன்றும் அமையவில்லை. சாகும் வரை திரும்பிப் போகவும் முடியவில்லை. பிஜி தீவிலேயே பலர் மக்கி மண்ணாகிப் போனார்கள். அந்த வாயில்லப் பூச்சிகளின் வாரிசுகள் தான் இப்போது அங்கே தங்களின் தாய்மொழிக்கு உயிர்ப் பிச்சை கேட்டுப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைப் பற்றிய வரலாறு வருகிறது. படியுங்கள். அவர்களின் சோக வரலாற்றை அசைப் போட்டுப் பாருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

அப்போதைய பிரிட்டிஷார் காலனித்துவ நாடுகள் மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், செய்ஷீல்ஸ், தென் ஆப்பிரிக்கா, நியூ கலிடோனியா, குயானா, சூரினாம். பெரிய பட்டியல் இருக்கிறது. அந்த நாடுகளுக்கு தமிழர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள்.

அதைப் போலவே பிஜி தீவிற்கும் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் (indenture system) கொண்டு செல்லப் பட்டார்கள். அவை எல்லாம் தொலைதூர நாடுகள். கண் காணா தேசங்கள். அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வர முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது.

ஏன் என்றால் சில நாடுகளில் கப்பல் பயணங்கள் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஏறிச் செல்லும் கப்பல்களாக இருந்தன. வெள்ளைக் கறுப்புத் தோல்களின் இனவெறி இதிகாசங்கள் கப்பலோடு பயணித்துக் கொண்டு இருந்த காலக் கட்டம்.

மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்துகள் இருந்தன. அங்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பி வர முடிந்தது. அதற்கான செலவுகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சும்மா ஒன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதாயம் இல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள். பொடி மிளகிற்குப் பொதி சுமக்கும் கதை எல்லாம் அவர்களிடம் செல்லாது. கிழக்கே உதிக்கும் சூரியன்கூட அவர்களைக் கேட்டுத் தான் உதிக்கும். தெரியும் தானே. உலகம் அறிந்த மாபெரும் ஆங்கிலேயத் தத்துவம்.

கொண்டு போகிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். அங்கே தமிழர்களின் இரத்தம் சொட்டும் வியர்வைத் தூறல்கள் நிற்கும் வரையில் நன்றாகவே துவட்டி எடுத்தார்கள். மன்னிக்கவும். சப்பி எடுத்தார்கள் என்று சொன்னால் தான் வரலாறு சந்தோஷப்படும். அப்புறம் என்ன. வெறும் எலும்புக்கூட்டு உயிர்ச் சக்கைகளை மட்டும் கப்பலில் ஏற்றி ’பை பை’ சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பிப் போகவே முடியாத நிலை. தொலை தூரத்தில் இருந்ததால் தமிழ் மண் உறவுகள் தலை கால் இல்லாமல் அறுந்து போயின. பிஜி நாட்டு மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் தமிழில் அதிகம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தவிர தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க, தமிழ் நாட்டில் இருந்து ஆசிரியர்களைப் பிஜி நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாத நிலை. அதனால் தான் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழை முறையாகப் படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது.

பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249 கி.மீ). அதாவது 6989 மைல்கள். நம்முடைய உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும்; உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சரியாகி விடுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குத் திசையில் தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு இருக்கிறது. பிஜி தீவு என்று சொல்வதைவிட பிஜி தீவுகள் என்று சொல்வதே சரியாகும். இருந்தாலும் பிஜி தீவு என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. பிஜி தீவைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் பிஜி தீவுகள் என்று அழைக்கிறார்கள். எல்லாத் தீவுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 7055 சதுர மைல்கள். பிஜி தீவின் தலைநகரம் சுவா (Suva). 1970-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. சரி. பழைய வரலாற்றைக் கொஞ்சம் தூசு தட்டிப் பார்ப்போம்.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு போனார்கள். தொடக்கக் காலத்தில் தமிழர்களின் இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு போகப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், தெலுங்கர்கள், பீகார் வாசிகள்.

மொத்தம் 42 கப்பல்கள். 87 பயணங்கள். ஆரம்பத்தில் கல்கத்தாவில் இருந்து தொழிலாளர்களைக் கொண்டு போனார்கள்.

1903-ஆம் ஆண்டு முதல் எல்லாக் கப்பல்களும் மெட்ராஸ்; பம்பாயில் இருந்து போயின. மொத்தம் 60,965 பயணிகள். போய்ச் சேர்ந்தவர்கள் 60,553 பேர். ஏறக்குறைய 400 பேர் கப்பலிலேயே இறந்து விட்டார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஏறக்குறைய 40 பேர் இறந்து இருக்கிறார்கள்.

பாய்மரக் கப்பல்கள் பயணத்திற்கு சராசரியாக 73 நாட்கள். நீராவி இயந்திரக் கப்பல்களுக்கு 32 நாட்கள். கப்பல் நிறுவனங்கள் நூர்ஸ் லைன் (Nourse Line); மற்றும் பிரிட்டிஷ் - இந்தியா நீராவி கப்பல் நிறுவனம் (British-India Steam Navigation Company).

பிஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கத்தை அமைத்தவர் ஸ்ரீ சாது குப்புசாமி. இவர் சென்னையில் இருந்து பிஜி சென்றவர். அவர் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து சில அரிய தகவல்கள் பேஸ்புக் ஊடகத்தில் கிடைத்தன. அவர் எழுதி இருப்பதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

(https://www.facebook.com/pg/தமிழ்-Tamil-141482842472/)

“ஐந்து வருட ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர். (CSR) கம்பெனி வேலைக்கு நான் வந்த போது ஆண்களும் பெண்களுமாய்ப் பல நூறு பேர் வந்து இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சி.எஸ்.ஆர். கம்பெனியில் (Colonial Sugar Refining Company) கொலம்பர்கள் இருந்தார்கள்.

கொலம்பர்கள் என்றால் அதிகாரிகள். பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு, ஆங்கிலேயக் கொலம்பர்கள் சொல்வதே அப்போதைக்கு சட்டம். மீறிப் பேசக் கூடாது. மீறிப் பேசவும் முடியாது. கொலம்பர்கள் சொன்னால் மறுபேச்சு பேசாமல் செய்ய வேண்டும். மறுபேச்சு இல்லை.

கொலம்பர்களுக்குக் கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் சர்தார் என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் கையால் செய்து காட்ட வேண்டும்.

தமிழர்கள் ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று பற்பல திட்டங்கள். கொலம்பர்கள் சர்தார்களுக்கு கட்டளை போடுவார்கள். சர்தார்கள் வேலையாட்களிடம் எருமை மாட்டு வேலைகளை வாங்குவார்கள்.

சொன்ன மாதிரி வேலை செய்து முடிக்காதவர்களுக்கு அவ்வளவுதான். அந்த ஆளைப் பிடித்து கீழே தள்ளுவார்கள். தள்ளிய கையோடு அது ஆணாக இருந்தாலும் சரி; இல்லை பெண்ணாக இருந்தாலும் சரி; அந்த ஆளின் மார்பு மேலே ஏறி கைகளால் குத்துவார்கள். உதைப்பார்கள். சம்பளக் கூலியைக் குறைப்பார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள்.

அது மட்டும் அல்ல. சில சமயங்களில் ஒழுங்காக வேலை செய்து முடிக்காதவர்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். உடனே அந்த வேலையாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எழுத்துப் பூர்வமான ஒரு சம்மன் வரும். பின்னர் அபராதம் விதிக்கப்படும்.

பிஜி தமிழர்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.
பிஜி தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் செய்து வந்த வேலைகளின் பட்டியல்:

1. ஏர் உழுதல். 2. கரும்பு நடுதல். 3. புல்வெட்டுதல். 4. குழி வெட்டுதல். 5. கரும்பு வெட்டுதல். 6. கரும்புக்கு உப்பு எரு போடுதல்.

கரும்பு வயல்களில் வேலை செய்யும் போது தமிழர்கள் பெரும் பெரும் கொடுமைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள். சர்தார்மார்களும் சரி; ஆங்கிலேயக் கொலம்பர்களும் சரி; தமிழர்களை மிக மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதிலுக்குத் திருப்பி அடித்த தமிழர்களும் இருந்தார்கள்.

அப்படிப் பட்டவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். ஜெயிலுக்கு அனுப்பினார்கள். மூன்று மாதச் சிறைத் தண்டனை. சிறையில் இருந்து வந்த பின்னர் கடுமையான வேலைகளைக் கொடுப்பார்கள். அப்படி சிறைக்குப் போன தமிழர்களில் சிலர் மர்மமான முறையில் இறந்தும் போய் இருக்கிறார்கள்.

இதே கூத்து தான் இந்தப் பக்கமும் நடக்கிறது. லோக்காப்பில் அடைக்கப் பட்டவர்களில் பலர் லாக்காபிலேயே இறந்து போன கதைகள் தான். கேட்டுப் புளித்துப் போன கதைகள். இந்த லோக்காப் இராமாயணத்தை அப்போதே அந்தக் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடலிலேயே அரங்கேற்றம் செய்து  விட்டார்கள். பலே கில்லாடிகள். சரி.

Indentured labour from South Asia (1834-1917)

நாளைய கட்டுரையில் பிஜி தமிழர்கள் நடத்திய லங்கா தகனம் எனும் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

(The South Indians in Fiji are mainly descendants of the 15,132 contract labourers who were brought to Fiji between 1903 and 1916. This represents about 25% out of a total of 60,965 contract labourers who were brought to Fiji between 1879 and 1916. They were forced in to ships from Madras and were mainly recruited in the districts of North Arcot, Madras, Krishna, Godavari, Visakhapatnam, Tanjore, Malabar and Coimbatore. More than half of the labourers from South India were recruited from North Arcot and Madras, but most of those recruited in Madras were originally from North Arcot and Chingleput.)

https://en.wikipedia.org/wiki/South_Indians_in_Fiji#References

சான்றுகள்:

1. Raghuram, Parvati; Sahoo, Ajaya Kumar; Maharaj, Brij; Sangha, Dave (16 September 2008). "Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations". SAGE Publications India.

2. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.

3. Navaneetham Pillay The most famous South African Tamil of our times". DailyMirror. 2013-08-31.


 

பரமேஸ்வரா சாலை பலேம்பாங்

பரமேஸ்வராவின் பெயரில் இந்தோனேசியா, பலேம்பாங் மாநகரில் ஒரு சாலை உள்ளது. ஜாலான் பரமேஸ்வரா, புக்கிட் பலேம்பாங், பலேம்பாங், சுமத்திரா செலாத்தான் (Jln Parameswara, Bukit Palembang, Palembang, Sumatera Selatan). நடுத்தரமான சாலை. பலேம்பாங் மாநகரில் சின்ன ஒரு குட்டி மலை. பெயர் பலேம்பாங் குன்று. அதன் அடிவாரத்தில் தான் இந்தப் பரமேஸ்வரா சாலை ஓடுகிறது.

1900-ஆம் ஆண்டுகளில் இந்தச் சாலை பிரதான சாலையாக இருந்தது. அப்போதைக்கு அதுதான் பெரிய சாலை.

Aesan Gede Songket Palembang

பலேம்பாங் அதன் சொங்கெட் (Songket) கலைத் துணிகளுக்குப் பெயர் பெற்றது. தங்கம், வெள்ளி நூல்களால் வடிவம் அமைக்கப்பட்டு, கையால் நெய்யப்பட்ட பட்டு அல்லது பருத்தி துணிகள்.

படத்தில் பலேம்பாங் பெண்மணி சொங்கெட் ஆடைகளுடன் அழகிய தோற்றம். அழகான ஆடைகள்.

பலேம்பாங் மாநகரின் அபார வளர்ச்சியினால் பரமேஸ்வரா சாலைக்கு அருகில் பெரிய பெரிய சாலைகள்; நெடுஞ்சாலைகள் எல்லாம் வந்து விட்டன. பெரிய பெரிய தொழிற்சாலைகள்; தனியார் நிறுவனங்களும் வந்து விட்டன.

தவிர பரமேஸ்வரா சாலைக்கு அருகில் மிக நீண்ட சாலை ஜாலான் சுகர்னோ ஹர்த்தா (Jl. Soekarno-Hatta) இருக்கிறது.

பரமேஸ்வரா சாலைக்கு அருகில்
பெரிய சாலைகள் உள்ளன.

ஜாலான் டெமாங் லேபார் டாவுன் (Jl. Demang Lebar Daun);

ஜாலான் புத்ரி கெம்பாங் டாடார் (Jalan Putri Gembang Dadar);

ஜாலான் ஆலாம் ஷா ரத்து பெர்வீரா நெகாரா (Jalan Alam Shah Ratu Perwira Negara);

ஜாலான் ஸ்ரீ ஜெயா நெகாரா (Jalan Sri Jeya Negara)

ஆனாலும் ஜாலான் பரமேஸ்வரா பழைய நிலையில் அப்படியேதான் இருக்கிறது.

மலாக்காவிலும் ஜாலான் பரமேஸ்வராவிற்கு ஏற்பட்ட நிலைதான். மாநகர வளர்ச்சியினால் இந்தச் சாலையும் அமிழ்ந்து விட்டது. அதாவது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பலேம்பாங் நகரம் தென் சுமத்திராவின் தலைநகரம். 400 சதுர மைல் பரப்பளவு. மக்கள் தொகை 1,834,344 (2019). தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பழைமையான நகரம்.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 683-ஆம் ஆண்டில் உருவானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ இந்து மதம் சார்ந்த மக்கள் வழிந்து நிரம்பிய இடம். இப்போது 3000 இந்து மதத்தவர் மட்டுமே வாழ்கிறார்கள்.

பலேம்பாங் 1682

ஸ்ரீ விஜயம் (Srivijaya); மஜபாகித் (Majapahit); சைலேந்திரா (Sailendra); பலேம்பாங் சுல்தானகம் (Palembang Sultanate) போன்ற மாபெரும் பேரரசுகளின் அரண்மனைகளில் இருந்த இடம். அரச பரம்பரையினர் நடை பயின்ற இடம்.

பரமேஸ்வரா சாலைக்கு அப்பால் ஸ்ரீ விஜயா (Sriwijaya University) பல்கலைக்கழகம் உள்ளது. இந்தோனேசியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.  ஸ்ரீ விஜயா அரசு பாலிடெக்னிக் (Sriwijaya State Polytechnic) அங்குதான் உள்ளது. அருகில் மூசி பாலம் உள்ளது.

ஸ்ரீ விஜயம் ஆட்சியின் காலத்தில், அதன் அரச சபையில் சொங்கெட் ஆடைகள் அரசு ஆபரணங்கள் ஆகும். ஜாவனிய மக்களின் கலைப் பண்பாடு ஆய கலைகளில் ஒரு கலை என்றுகூட சொல்லலாம். அழகிலும் அழகான கலாசாரத்தின் கலைத் தன்மைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.09.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Palembang

2. https://sumeks.co/survei-pelebaran-jalan-parameswara/

3.https://moovitapp.com/index/en/public_transit-Jl_Parameswara-Palembang-site_38771458-5036

4. https://sriwijayatv.com/tag/jalan-parameswara/



03 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 3

தமிழ் மலர் - 03.09.2020

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் பல்லவர்களும் சோழர்களும் பெரும் பெரும் ஆளுமைகளைச் செலுத்தி இருக்கிறார்கள். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் ஆளுமைகள்; அவர்களின் செல்வாக்குகள்; அவர்களின் சிறப்புகள்; அவர்களின் இந்து மதப் பாவனைகள்; அனைத்தும் செழுமையாக உச்சம் பார்த்து உன்னதம் பேசி இருக்கின்றன.

இருப்பினும் பல்லவர்களின் பெயரைச் சொல்லி பாலி தீவில் மட்டுமே, இப்போது இந்து மதம் பிழைத்து வாழ்கின்றது. பாலி தீவில் இப்போது பயன்பாட்டில் உள்ள இந்து மதம், அசல் இந்து மதத்தில் இருந்து பிரிந்து போன கிளை மதமாகும்.

பாலி தீவு இந்து மக்கள் பல நூறு ஆண்டுகளாகத் தனித்து விடப் பட்டவர்கள். அதனால் அவர்களாகவே அவர்கள் பாணியில் தனி ஓர் இந்து மதத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனாலும் இந்து மதத்தின் அடிப்படையிலான பாவனைகள் இருக்கவே செய்கின்றன.

ஜாவா, சுமத்திரா, கெடா, மத்திய வியட்நாம், கம்போடியா போன்ற இடங்களில் இந்து மத ஆளுமைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வலிமை பெற்று வாசம் செய்து உள்ளன. ஆனால் மற்ற மற்ற மதங்களின் தாக்கங்களினால் இந்து மதம் வலிமை குன்றிப் போனது.

பல்லவ வம்சாவழி வர்த்தகர்கள்; சேர சோழ பாண்டிய நாட்டுப் பயணிகள்;  அங்கோர் சிலைகளைக் கட்டிய கைவினைஞர்கள்; கட்டிடக் கலைஞர்கள் போன்றவர்கள் தான் எழுத்து வடிவங்களைத் தென்கிழக்கு ஆசியாவில் முதன்முதலில் அறிமுகப் படுத்தியவர்கள்.

தொடக்கத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நூல்கள் சமஸ்கிருதம் மற்றும் பாலி (Pali) மொழிகளில் இருந்தன. ஆனால் விரைவில் உள்ளூர் மொழி எழுத்துகளுடன் கலந்து விட்டன. ஒரு கலவையான மொழி உண்டாகி உள்ளது.

சமஸ்கிருதம்; தமிழ் எழுத்துகள் உள்ளூர் மொழி எழுத்துகளுடன் கலந்து தனி ஒரு மொழி போல பயணித்து இருக்கின்றன.

கப்பலேறி வந்த கைவினைஞர்களும் காலப் போக்கில் உள்ளூர்க் கலைக் கலாசாரத் தாக்கங்களினால் பாதிப்பு அடைந்து இருக்கலாம். அதனால் தான் அவர்களின் கைவினைகளிலும் உள்ளூர் கலைக் கலாசாரத் தாக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

கம்போடியா அங்கோர் வாட் ஆலயங்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்தால் தெரிந்து விடும். அந்தச் சிற்பங்களை உருவாக்கியவர்கள் பெரும்பாலும்  தமிழ்நாட்டில் இருந்து போன சிற்பிகள் தான்.

இருப்பினும் அந்தச் சிற்பங்களின் வடிவங்கள் தமிழ் நாட்டில் இருந்து போன தமிழ் முகங்கள் போல தெரியாது. மங்கோலிய முகங்கள் போல இருக்கும். வடக்கே சீனாவில் இருந்து வந்த சீனர்களைப் போல இருக்கும்.

அல்லது தெற்கே தாய்லாந்தில் இருந்து போன சயாம்காரர்களைப் போல இருக்கும். அல்லது பர்மியர்களைப் போல இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர் முகமும் மங்கோலிய முகமும் கலந்ததாக இருக்கும்.

உள்ளூர்க் கலைக் கலாசாரப் பாரம்பரியத் தாக்கங்களினால் ஏற்பட்ட விளைவுகள் என்றுதான் சொல்ல முடிகின்றது.

சூரியவர்மன், ஜெயவர்மன், யசோவர்மன்; இவர்கள் சீனர்த் தோற்றம் கொண்ட கம்போடியர்கள். ஆனால் இவர்கள் சைவப் பல்லவர்கள். அவர்களின் முகங்களில் தமிழகத்தின் மண் வாசனை; காற்று வாசனை தெரியவில்லை. முக வாசனை ரொம்பவுமே மாறிப் போய் இருக்கும்.

கம்போடியாவின் பழைய பெயர் கம்போசம். திருமந்திர அருள்முறைத் திரட்டு 39-ஆம் பாடலில் அருமணம், காம்போசம், ஈழம் , கூவிளம், பல்லவம், அங்கம் எனும் நாடுகளின் பெயர்கள் வருகின்றன.

கம்புக முனிவர் என்பவர் தான் முதன்முதலில் கம்போடியாவுக்குச் சென்றவர். அதனால் தான் அந்த நாட்டிற்குக் காம்போசம் என்று பெயர் வந்தது. கவுந்தினியர்கள் என்பது வேறு. கம்புக முனிவருக்குப் பின்னர் சென்றவர்கள். சரி.

உலகத்திலேயே மிகப் பெரிய இந்துக் கோயில் கம்போடியாவில் உள்ளது. தெரிந்த விசயம். அங்கோர் வாட் கோயில், பல்லவர் சோழர் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. அது ஒரு விஷ்ணு கோயில்.  

கி.மு. 2 முதல் - கி.பி. 1 வரை பல்லவர்கள் கம்போடியாவில் மிகையாகவே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். பல்லவர்கள் தங்கள் பெயருடன் வர்மன் எனும் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அடுத்து அடுத்து வந்த காம்போடிய மன்னர்களும் தங்கள் பெயருடன் வர்மன் பட்டப் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.

கிளந்தான் பான் பான் கடல்கரையில் இருந்து கப்பலேறிப் போய்; அங்கே கம்போடியாவில் இருந்த சோமா ராணியாரை மடக்கி; மனைவியாக்கி; கடைசியில் கம்போடியா நாட்டின் வரலாற்றையே மாற்றிப் போட்ட சூரியவர்மனைச் சும்மா சொல்லக் கூடாது. பாராட்டுவோம். சரி.

தமிழ் எழுத்து வடிவங்களும், சமஸ்கிருத எழுத்து வடிவங்களும் எந்த எந்த நாட்டு எழுத்துகளுடன் கலந்து போயின எனும் ஒரு பட்டியலைக் கொடுக்கிறேன். பாருங்கள்.

மோன் (Mon) (பர்மா)

காவி (Kawi) - ஜாவா மொழி; பாலினேசிய மொழி; சுந்தானேசிய மொழி; பூகிஸ் மொழி (இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், போர்னியோ)
    
லன்னா மொழி; தாம் மொழி (Lanna, Tham) (தாய்லாந்து)

கோம் மொழி (Khom) (தாய்லாந்து)
     
கெமர் மொழி (Khmer) - (கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ்)

டாய் லூ மொழி (Tai Lue); தாய் மொழி (பர்மா, தென் சீனா, தாய்லாந்து, வியட்நாம்)

சாம் மொழி (Cham) (வியட்நாம்)

மேற்சொன்ன மொழி வடிவங்களுடன் தமிழ் எழுத்து வடிவங்களும் சமஸ்கிருத எழுத்து வடிவங்களும் கால ஓட்டத்தில் கலந்து விட்டன.

அந்தப் பல்வேறு மொழிகளின் எழுத்து வடிவங்களில் தமிழ், தெலுங்கு, கர்நாடகா, மலையாள எழுத்து வடிவங்களின் ஒற்றுமையையும் காணலாம். வட்டமான வடிவத் தன்மையையும் காணலாம்.

இப்போது மலேசியா, கெடா, சுங்கை பத்துவில் உள்ள தொல்பொருள் தளங்கள் 2-ஆம்; 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அங்கு கண்டு எடுக்கப் பட்ட எழுத்து வடிவங்கள் தமிழைப் போன்று எழுத்து அமைப்பு கொண்டவை. நினைவு படுத்துகிறேன்.

இந்தோனேசியாவின் மிக மிகப் பழமையான தொல்பொருள் தளங்கள், போர்னியோ, கிழக்கு கலிமந்தான், கூத்தாய் (Kutai, East Kalimantan) எனும் இடத்தில் உள்ளன. இந்தத் தளங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்து வடிவங்களும் தமிழ் எழுத்து வடிவங்களைக் கொண்டவை. இதையும் நினைவு படுத்துகிறேன்.

கூத்தாய் பேரரசு (Kutai Kingdom) போர்னியோ தீவின் கலிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட பேரரசு. 1670 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அரசு.

இந்தப் பேரரசை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் முல்லைவர்மனின் வாரிசுகள் (Kerajaan Mulawarman) என்றும் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்.

கலிமந்தான், கூத்தாய் எழுத்து வடிவங்கள் வேறு சில இடங்களிலும் கிடைத்து இருக்கின்றன. அதே மாதிரியான தமிழ் எழுத்து வடிவங்கள் கொண்ட கல்வெட்டு வியட்நாம், பூ யென் (Phu Yen district in Vietnam) எனும் இடத்தில் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

பத்ரவர்மன் (King Bhadravarman) எனும் சம்பா பேரரசு மன்னரைப் பற்றிய சோ-தின் ராக் கல்வெட்டு (Cho-dinh Rock Inscription). இந்தக் கல்வெட்டிலும் தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன.

பத்ரவர்மன் மன்னரின் சோ-தின் ராக் கல்வெட்டு நான்காம் நூற்றாண்டின் இறுதியில் தேதியிட்டது. (வியட்நாமில் பூ யென் மாவட்டம்). பத்ரவர்மன் மன்னரின் ஆட்சிக்காலம் கி.பி. 380 - 413.

இதே போல மற்றோர் ஒற்றுமை. இலங்கை அனுராதபுரத்தில் கிடைத்த  ருவன்வலிசயா தூண் கல்வெட்டு (Ruvanvalisaya Pillar Inscription at Anuradhapura). கி.பி. 337 - 365-ஆம் ஆண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த புத்ததாசா (King Buddhadasa) எனும் மன்னரைப் பற்றிய கல்வெட்டு. அந்தக் கல்வெட்டிலும் தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன.

இன்னும் ஒரு கல்வெட்டு. மேற்கு ஜாவாவை ஆட்சி செய்த தருமா பூர்ணவர்மனின் (Tarumanagara Purnavarman) கல்வெட்டு. இது தமிழ்ப் பல்லவ எழுத்து வடிவங்களில் உள்ளன. இது கிழக்கு கலிமந்தான் கூத்தாய் கல்வெட்டுடன் ஒத்துப் போகிறது.

என்னுடைய கேள்வி இது தான். மலேசியா, கெடா சுங்கை பத்துவில் கிடைத்த கல்வெட்டுகள்; கிழக்கு கலிமந்தான், கூத்தாய் கல்வெட்டுகள்; அனுராதபுரம் ருவன்வலிசயா கல்வெட்டுகள்; மேற்கு ஜாவா தருமா பூர்ணவர்மனின் கல்வெட்டுகள்.

இந்தக் கல்வெட்டுகள் தமிழ்ப் பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?

அந்த எழுத்துகளை அப்போதைய சாமானிய மக்களாலும் படிக்க முடிந்தது. அறிவுஜீவிகளாலும் படிக்க முடிந்தது. உள்ளூர் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

தனஞ்செயன், கீதாச்சாரியன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தன், கிருஷ்ண பிரியோம், தாமோதரன், கோவர்தனன், சத்தியவசனன், விஸ்வகர்மன் போன்ற பெயர்கள் கம்போடியக் கல்வெட்டுக்களில் நிறையவே காணப் படுகின்றன. அவை அப்போதைய தமிழ் மொழி; வடமொழிகளில் இருந்து போன பெயர்கள் ஆகும்.

நிச்சயமாக அந்தக் காலக் கட்டத்தில், உள்ளூர் கம்போடிய மக்கள் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இந்தச் சொற்களைக் கொண்டு போனவர்கள் பல்லவர்கள் தான். அல்லது தமிழகத்தின் கோயில் அர்ச்சகர்கள் தான். வேறு யாராக இருக்க முடியும்.

காம்போடியாவில் பல செப்பேடுகள் கிடைத்து உள்ளன. அந்தச் செப்பேடுகளின் மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம். தமிழ் - பல்லவம் - கெமர் கலவையாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றின் அமைப்பு முறை அப்படியே தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செப்பேடுகள் போலவே இருக்கின்றன. சரி.

கம்போடியக் கோயில்களின் அமைப்பில் மூன்று அமைப்புகள் உள்ளன. ஆதிக்காலக் கோயில்கள் தென்னிந்திய பாணியில் இருக்கின்றன. பிற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் ஒரிசா மாநில பாணியில் இருக்கின்றன.

அதே சமயம் கர்நாடகாவில் இருந்த ஹோய்சலா மன்னர்களின் கட்டடக் கலைகளையும் (Hoysala architecture) ஒத்துப் போகின்றன. அதிசயமாக இருக்கிறது.

(The Hoysala era was an important period in the development of art, architecture, and religion in South India. The empire is remembered today primarily for Hoysala architecture. Over a hundred surviving temples are scattered across Karnataka.)

கி.பி. 2-ஆம்; 3-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்த வியாபாரிகளும்; அரசு சார்ந்த போர் வீரர்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக அங்கு வாழ்ந்த பூர்வக் குடிமக்கள் இந்துக்களாக மதம் மாறி இருக்கிறார்கள். அதுதான் உண்மை.

அப்போதைய காலத்தில் அங்கு வாழ்ந்த பூர்வக் குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட மதம் இல்லாமல் வாழ்ந்து இருக்கலாம். ஆன்ம வாதம் (Animism) வாழ்ந்த கட்டம். அப்படிப் பட்டவர்கள் எப்படி இந்து மதத்திற்குள் ஐக்கியமானர்கள்?

அந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் மட்டும் அல்ல. புத்த மதமும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வந்து உள்ளது. ஒவ்வோர் அரச குலமும் தங்களுக்குப் பிடித்தமான ஒரு மதத்தைத் தேர்ந்து எடுத்துக் கொண்டது. அதுதான் உண்மை.

தென்கிழக்காசிய கம்போடியா, மலாயா, வியட்நாம், இந்தோனேசியா நாடுகளில் கோவில்களைக் கட்டியவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள் தான். பொன் பொருள், அப்ரசா நாட்டிய மங்கைகள், அடிமைகள் என்று நிறையவே கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார்கள்.

சித்திரை மாதம் முதலாம் நாளைத் தமிழர்கள் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அதற்கு இன்னொரு பெயர் சங்கிராந்தி. இதைக் கம்போடியா தாய்லாந்து மக்கள் சோங்க் ரான் என்கிறார்கள்.

சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி; பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி; எந்த ஓர் இடத்திலும் பொங்கல் எனும் சொல்லைப் பயன்படுத்தவே இல்லை.

ஆனால் அந்த நாளை அற்புத விழாவாகக் கொண்டாடி இருக்கிறார்கள். அதாவது உத்தராயன சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா.

ஆடிப்பெருக்கு நாளில் கம்போடியாவில் இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் காம்போடியாவில் தமிழ் வாடை அடிக்கவில்லை.

காலப் போக்கில் கம்போடியா ஒரு வைணவ நாடாக மாறியது. பின்னர் புத்த நாடாக மாறியது. இருந்தாலும் ஆலய அர்ச்சகர்களின் செல்வாக்கு இருந்து வந்து உள்ளது. அதுவே தமிழர்ச் செல்வாக்காகவும் இருந்தது என்றுகூட சொல்லலாம்.

பின்னர் காலத்தில் கம்போடிய மன்னர்கள் புத்த மதத்தவர்களாக மாறினார்கள். இருந்தாலும் கம்போடியா தாய்லாந்து நாடுகளில் இன்றைய வரைக்கும் தேவாரம் திருவாசகம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாய்லாந்து மன்னரின் பிறந்த நாள் தினத்தில் தேவாரம் பாடப் படுகிறது. நினைவில் கொள்வோம்.

தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் இருந்து கம்போடியாவின் அங்கோர் வாட் சுவர்களுக்குத் தமிழ் வடிவ எழுத்துகள் எப்படி போயின? தமிழ் வடிவம் கொண்ட தமிழ் பல்லவ எழுத்துகள் மலேசியா, கெடா சுங்கை பத்துவிற்கு  எப்படி போயின? (How the script got from Mahabalipuram in Tamil Nadu to the walls of Angkor Wat in Cambodia?).

நிறைய ஆய்வு நூல்களைப் படித்து இருக்கிறேன். அனைத்து ஆய்வுப் பதிவுகளும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சுட்டிக் காட்டுகின்றன. மதங்களின் பரிணாமங்கள். ஆமாம். மதம் தான் மூல காரணமாக இருந்து இருக்கிறது.

இந்து மதத்திற்குப் போட்டியாகப் புத்த மதம் தோன்றிய கட்டத்தில் இந்து மதப் பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கலாம். இந்து மத பிரசாரவாதிகள் தமிழையும் சமஸ்கிருத மொழியையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்து இருக்கலாம்.

அந்த வகையில் கடாரத்துக் கல்வெட்டுகளில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்டு இருக்கலாம்.

இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு சர்ச்சைக்கு உரிய பதிவாகவே அமைந்தது. பலர் அழைத்தார்கள். பல இடக்கு முடக்கான கேள்விகள். துளைத்து எடுத்து விட்டார்கள். சவாலே சமாளி என்று சமாளித்தும் விட்டேன். இந்தத் தொடர் இத்துடன் ஒரு முடிவிற்கு வருகிறது. நன்றி.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.09.2020


சான்றுகள்:

1. Aiyangar, S. K.; Nilakanta Sastri, K. A. (1960), "The Pallavas", in R. C. Majumdar; K. K. Dasgupta, A Comprehensive History of India, Volume III, Part 1: A.D. 300–985.

2. Sathianathaier, R. (1970), "Dynasties of South India", in Majumdar, R. C.; Pusalkar, A. D. The Classical Age, History and Culture of Indian People, Bharatiya Vidya Bhavan, pp. 255–275.

3. Moraes, George M. (1995), The Kadamba Kula: A History of Ancient and Mediaeval Karnataka, Asian Educational Services, p. 6.

4. Group of Monuments at Mahabalipuram, Dist. Kanchipuram Archived 29 May 2018 at the Wayback Machine, Archaeological Survey of India (2014).

5. Marilyn Hirsh (1987) Mahendravarman I Pallava: Artist and Patron of Māmallapuram, Artibus Asiae, Vol. 48, Number 1/2 (1987), pp. 109-130.

6. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute.

7.  Aiyangar & Nilakanta Sastri 1960, pp. 314–316: There is much in favour of the thesis that the Pallavas rose into prominence in the service of the Satavahanas in the south-eastern division of their empire, and attained independence when that power declined.

8. Gopalachari, K. (1957), "The Satavahana Empire", in K. A. Nilakanta Sastri (ed.), A Comprehensive History of India, II: The Mauryas and Satavahanas 325 SC.-AD 300.

9. Rama Rao 1967, pp. 47-48: The Manchikallu Prakrt inscription mentions a Simhavamma or Simhavarman of the Pallava family and the Bharadvaja gotra and registers gifts made by him after performing Santi and Svastyayana for his victory and increase of strength.

10. Stein, Burton (2016). "Book Reviews : Kancipuram in Early South Indian History, by T. V. Mahalingam (Madras : Asia Publishing House, 1969), pp. vii-243". The Indian Economic & Social History Review. 7 (2): 317–321.




பரமேஸ்வரா காசோலை

பரமேஸ்வரா மலாக்காவின் மன்னராக இருந்த போது தங்க நாணயங்களில் வணிகப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆனாலும் அவர் உருவத்தில் காசோலைகளும் வெளியிடப்பட்டுப் பங்கு பரிவர்த்தனைகள் நடைபெற்று இருக்கலாம். அதற்குச் சான்றாக அண்மையில் அவருடைய உருவம் பதிக்கப்பட்ட ஒரு காசோலை விற்பனைக்கு வந்து உள்ளது. ஓர் அலங்காரக் காசோலை.

Cek Alam Gaib எனும் அமானுசய உலகக் காசோலை எனும் ஓர் அமைப்பை உருவாக்கி அதிசயமான பொருட்கள்; அபூர்வமான காசோலைகள்; ஆச்சரியமான நாணயங்கள் போன்றவற்றைச் சேகரித்துப் பரிமாற்றம் செய்கிறார்கள். அதாவது விற்பனை செய்கிறார்கள். இது 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியான செய்தி.

(Bertujuan Untuk Urusniaga Jual-Beli Duit Lama & Duit Baru Samada Duit Dalam Negara Malaysia Ataupun Diluar Negara.)

அந்தக் காசோலையின் மதிப்பு 25,000,000 ரிங்கிட் (25 மில்லியன் - இரண்டு கோடி ஐம்பது இலட்சம்). Sultan Parameswara Iskandar Zulkarnain Syah என்று எழுதப்பட்டு உள்ளது. காசோலையின் எண்: 167249. கி.பி. 1437-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1440-ஆம் ஆண்டுக்குள் செல்லுபடியாகும் காசோலை. இப்போது செல்லுபடி ஆகாது. இருந்தாலும் நினைவுப் பொருளாக நினைவில் கொள்ளலாம்.

அந்தக் காசோலையில் ராஜா இஸ்கந்தர் ஷா (Iskandar Zulkarnain Syah) என்று பரமேஸ்வரா கையொப்பம் போட்டு இருக்கிறார்.

இப்போது Cek Alam Gaib Sultan Parameswara எனும் அந்தக் பரமேஸ்வரா காசோலையை விற்பனைக்கு விட்டு இருக்கிறார்கள். குரு அமிரூடின் (Ust Amiruddin) என்பவர் அறிவித்து இருக்கிறார். அதன் விலை 10,000 (10 ஆயிரம்) ரிங்கிட்.

(Koleksi Cek Alam Gaib Sultan Parameswara Iskandar Zulkarnain Syah. Antara Cek Alam Gaib yg jarang2 ditemui.)

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுங்களா. நம் நாட்டில் புகழ்பெற்ற ஒரு வங்கியின் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த வங்கி மலாக்காவில் செயல்பட்டு இருக்கலாம். சொல்ல முடியாது. தவிர நாட்டின் தேசிய மலரான செம்பரத்தை மலரும் அந்தக் காசோலையில் பொறிக்கப்பட்டு உள்ளது.

பரமேஸ்வராக்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்தக் காசோலை வெளியிடப்பட்டு உள்ளது. முக்கியமான ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் கொடுத்த வரையில் பலருக்கும் மகிழ்ச்சி.

சான்றுகள்:

1.http://antiquemaniacworld.blogspot.com/2019/06/koleksi-cek-alam-gaib-sultan-parameswara.html

2. http://geligageliga.blogspot.com/2017/08/






02 செப்டம்பர் 2020

மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் - 2

 தமிழ் மலர் - 02.08.2020

தமிழ்நாட்டின் வரலாற்றில் சேரர், சோழர், பாண்டியர் மன்னர்களுக்கு இணையான மற்ற மற்ற பேரரசர்களைப் பற்றிய தகவல்கள் மறுக்கப் படுகின்றன. தவிர்க்கப் படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை. வேண்டாத மனையாள் கை பட்டாலும் குற்றம். கால் பட்டாலும் குற்றம் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான். பல்லவர்களைப் பற்றி அதிகமாய் விமர்சிப்பதும் இல்லை.

பல்லவர்களின் ஆட்சி மாட்சி, கட்டிடக் கலை, இலக்கியக் கலை, விவசாய மேலாண்மை போன்ற கலைகள் எல்லாமே தமிழர் மரபு சார்ந்தவை. அதை மறுக்க முடியுமா. முடியாது.

வின்சென்ட் ஸ்மித் (Vincent Arthur Smith) என்னும் ஆங்கில வரலாற்று ஆசிரியர் அவருடைய நூலில்  பல்லவர்கள் தென்னிந்தியர்கள் என்று வரையறுத்து உள்ளார்.

(Smith, Vincent Arthur (1919). The Oxford history of India : from the earliest times to the end of 1911, Oxford : Clarendon Press - https://archive.org/details/TheOxfordHistoryOfIndia)

வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் 1843–ஆம் ஆண்டு இங்கிலாந்து டப்லின் நகரில் பிறந்தவர். இந்தியவியலாளர், வரலாற்று ஆசிரியர்.

பல்லவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கி.பி. 275 முதல் கி.பி. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதனால் தான் பல்லவர்களைத் தமிழர் சார்ந்த இனத்தவர் என்றும் பலரும் சொல்கிறார்கள்.

சிற்பக் கலை, ஓவியக் கலை, ஆடல் கலை. இந்தக் கலைகளைத் தமிழகத்தில் ஓங்கி வளரச் செய்தது பல்லவர்கள் தான். அதை மறைக்க முடியுமா. ஏன் என்றால் அது தான் உண்மை. தமிழர் இனத்திற்குப் பல்லவர்கள் நிறையவே செய்து இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு கிடைக்காத சிற்பங்களை எல்லாம் பல்லவர்கள் வடித்துச் சென்று இருக்கிறார்கள். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள். தெரியும் தானே. சாட்சி சொல்ல அது ஒன்றே போதும். எப்படி செதுக்கி இருப்பார்கள். எப்படிக் குடைந்து இருப்பார்கள். கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சரி.

கம்போடியாவில் சென்லா பேரரசு; கெமர் பேரரசு; சாம்பா பேரரசு போன்றவை ஆட்சி செய்து உள்ளன. இவை தமிழர் அரசுகளா? உண்மையில் அங்கோர்வாட் கோயிலைக் கட்டிய சூர்யவர்மன் தமிழ் மன்னனா? இப்படி எல்லாம் கேள்விகள் அடிக்கடி கேட்கப் படுகின்றன.

தமிழகத் தமிழாய்வாளர் தெய்வேந்திரன் கந்தையா அவர்கள் அதற்கும் பதில் சொல்கிறார். https://ta.quora.com/ இணையத் தளத்தில் அந்தப் பதிவுகள் உள்ளன. அந்தப் பதிவில் இருந்து ஒரு பகுதியை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.

’ஒரு பெயரில் வர்மன் என்று வந்தாலே அது பல்லவர்களைக் குறிக்கும் பெயராகும். அந்தப் பெயர்களைப் பயன்படுத்திய பல்லவ மன்னர்கள் பெரும்பாலோர் காஞ்சிபுரத்தில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.’

’இருப்பினும் இவர்கள் முதன்முதலாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தமிழகம் வந்ததாக இருக்க வேண்டும்’ என்று சொல்கிறார்.

இந்தப் பல்லவர்கள் ஆந்திர நாடு; காஞ்சிபுரம்; மலாயா கடாரம்; இலங்காசுகம்; மாயிருண்டகம்; ஸ்ரீ விஜயம்; மஜபாகித்; சயாம்; காம்போஜம்; லாவோஸ்; பர்மா; சம்பா; அன்னாம்; போன்ற இடங்களில் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் ’வர்மன்’ என்றே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் சமஸ்கிருத மொழியையும்; இவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியையும் கலந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

8-ஆம் நூற்றாண்டில் பரமேஸ்வர வர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்து வந்தார். அவருக்கு சந்ததிகள் எதுவும் இல்லாமல் போய் விட்டது. ஆட்சி செய்ய ஒரு பல்லவ வாரிசு தேவைப் பட்டது.

ஆக பரமேஸ்வர வர்மன் இந்தியாவின் வடக்கே ஓரிசா பக்கமாய்ப் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை. அல்லது ஆப்கானிஸ்தான் பக்கம் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை. அல்லது ஆந்திர தேசம் பக்கமாகப் போய் ஒரு வாரிசைத் தேடவில்லை.

பேசி வைத்தால் போல நேராக கம்போடியா நாட்டிற்குப் போய் இருக்கிறார். அங்கே போய் ஒரு பல்லவ வாரிசைத் தேடிப் பார்த்து இருக்கிறார். சரியாக அமையவில்லை. அப்படியே சம்பா (Champa) தீவுக்குப் போய் இருக்கிறார். சம்பா அரச சபையில் ஒரு பல்லவச் சிறுவனைத் தேடி இருக்கிறார்கள்.

சம்பா தீவை ஆட்சி செய்த மன்னன் தன்னுடைய நான்கு பிள்ளைகளில் யாரை வேண்டும் என்றாலும் அழைத்துச் செல்லலாம். ஆனால் அவர்கள் சம்மதம் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மூத்த மூவரும் மறுத்து விட்டார்கள்.

கடைசி மகன் நந்திவர்மன். விவரம் தெரியாத நான்கு வயது. அவனைச் சம்பா தீவில் இருந்து அழைத்து வந்து காஞ்சிபுர அரசனாக முடிசூட்டினார்கள்.

சம்பா நாட்டு நந்திவர்மன் தஞ்சாவூருக்கு வந்த போது தஞ்சைத் தமிழ் மொழி தெரியாமல் தடுமாறிப் போய் இருக்கலாம். அதனால் அவனுக்கு உதவியாக நந்திக் கலம்பகம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வாளர் தெய்வேந்திரன் கந்தையா சொல்கிறார்.

ஆக ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இந்தப் பல்லவர்கள் தங்களின் இனத்தையும்; இனப் பாரம்பரியத்தையும் மிகக் கவனமாகவும்; பத்திரமாகவும் பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டை ஆட்சி செய்த காலத்திலேயே பல்லவ இனப் பாதுகாப்பு உறுதியாகவும் கனமாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் வர்மன்கள் என்று அழைத்துக் கொண்ட அந்தப் பல்லவ அரச மரபினர்; ஒற்றுமையுடன் வாழவில்லை. அவர்களுக்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள். ஆயிரம் போர் முழக்கங்கள். மறுப்பதற்கு இல்லை. நட்பு கொண்டால் அதை எளிதில் விட்டு விலகுவதும் இல்லை.

சூரியவர்மன் (Suryavarman I) காம்போடியாவை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர். பலருக்கும் தெரியும். இவரின் மற்றொரு பெயர் நிர்வாணபாதா (Nirvanapada). இவர் கம்போடியாவின் மன்னனாக இருந்த போது முதலாம் இராஜேந்திர சோழனின் நண்பராக இருந்தார். இருவரும் நல்ல நண்பர்கள்.

இவர்கள் இருவரும் தமிழ் பேசினார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால் சூரியவர்மனுக்கு தமிழ் தெரியுமா என்று நமக்குத் தெரியவில்லை. கம்போடிய கல்வெட்டுகளில் சமஸ்கிருத மொழியும்; கிரந்த மொழியும்; கலந்து வருகின்றன.

இடை இடையே தமிழி எழுத்துகளும் வந்து போகின்றன. ஆக சூரியவர்மனுக்கு  கம்போஜ மொழி மட்டுமே தெரிந்து இருக்க வேண்டும். இது ஒரு கணிப்பு. இராஜேந்திரனும் சூரியவர்மனும் இருவருமே சைவ மன்னர்கள்.

இருப்பினும் பூஜாங் கடாரத்தை ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் என்பவரும் கம்போடியாவை ஆட்சி செய்த சூரியவர்மன்; இருவருமே பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.  

ஸ்ரீ விஜயம் ஆட்சி செய்த கடாரத்தை இராஜேந்திர சோழன் தோற்கடித்தார்.
அதற்கு காரணமாக இருந்தவர் கம்போடிய மன்னர் சூரியவர்மன் (I) என்பவர் தான். தெரிந்து கொள்ளுங்கள்.

Suryavarman I (1006 – 1050) gained the throne. Suryavarman I established diplomatic relations with the Chola dynasty of south India. Suryavarman I sent a chariot as a present to the Chola Emperor Rajaraja Chola I. His rule was marked by repeated attempts by his opponents to overthrow him and by military conquests.

Suryavarman was successful in taking control of the Khmer capital city of Angkor Wat. At the same time, Angkor Wat came into conflict with the Tambralinga kingdom of the Malay peninsula.

https://en.wikipedia.org/wiki/Khmer_Empire#Yasodharapura_%E2%80%93_the_first_city_of_Angkor

In other words, there was a three-way conflict in mainland Southeast Asia. After surviving several invasions from his enemies, Suryavarman requested aid from the powerful Chola Emperor Rajendra Chola I of the Chola dynasty against the Tambralinga kingdom.

After learning of Suryavarman's alliance with Rajendra Chola, the Tambralinga kingdom requested aid from the Srivijaya King Sangrama Vijayatungavarman.

This eventually led to the Chola Empire coming into conflict with the Srivijaya Empire. The war ended with a victory for the Chola dynasty and of the Khmer Empire, and major losses for the Srivijaya Empire and the Tambralinga kingdom.

This alliance also had religious nuance, since both Chola and Khmer empire were Hindu Shaivite, while Tambralinga and Srivijaya were Mahayana Buddhist.

There is some indication that before or after these incidents Suryavarman I sent a gift, a chariot, to Rajendra Chola I to possibly facilitate trade or an alliance. Suryavarman I's wife was Viralakshmi, and following his death in 1050, he was succeeded by Udayadityavarman II.

சயாம் மலாயா பகுதிகளை ஆட்சி செய்த தாம்பரலிங்கா அரசு என்பது கடாரத்திற்கு வடக்கே உள்ளது. இந்தப் பல்லவ அரசு கம்போடியா அரசிற்கு ஓர் எதிரி அரசாகவே இருந்தது. மூன்று முறை தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால் கடார அரசிற்கு தோழமை அரசாக இருந்தது.

தாம்பரலிங்கா அரசை விட்டு வைத்தால் கம்போடிய அரசிற்கு ஆபத்து. அதனால் சூரியவர்மன் ஒரு நல்ல நாள் பார்த்து இராஜேந்திர சோழனுக்குச் செய்தி அனுப்பினார். ’நண்பேண்டா வந்தேண்டா’ என்று சொல்லி இராஜேந்திர சோழன் படை எடுத்து வந்தார்.

கடாரத்தைத் துவம்சம் செய்த கையோடு தாம்பரலிங்கா அரசையும் துவைத்துப் போட்டு விட்டுச் சென்றார். ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழன் படை எடுத்ததற்கு கம்போடிய மன்னர் சூரியவர்மனும் ஒரு காரணம்.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

இந்த கவுண்டினியன் வாரிசுகளில் அஜினாதா கவுண்டினியன் (Ajnata Kaundinya) என்பவர்தான் கம்போடிய அரசை முதன்முதலில் தோற்றுவித்தவர் என்றும் சொல்லப் படுகிறது. ஜெயவர்மன் அல்ல.

உடைந்து சிதறிப் போய்க் கிடந்த கம்போடியாவை ஒருங்கிணைத்தவர் ஜெயவர்மன்.

இவருக்குப் பின்னர் கம்போடியா வரலாறு சீரும் சிறப்புடன் மலர்ச்சி பெற்றது. அதனால் தான் ஜெயவர்மன் கம்போடியாவின் தந்தை என்று கொண்டாடப் படுகிறார்.

உண்மையில் பார்க்கப் போனால் கவுண்டினியன் என்பது ஒரு குலப் பெயர். பல கவுண்டினியர்கள் தமிழகத்தில் சங்கப் புலவர்களாக இருந்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு விசயம். இந்தக் கவுண்டினியர் பரம்பரையில் தோன்றியவர் தான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். சரி.

கம்போடியாவை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். இருந்தாலும் ஆரம்பக் காலத்தில் அவர்கள் தங்களைக் கவுண்டினியன் எனும் குலப் பெயர் சொல்லியே அழைத்துக் கொண்டார்கள். இந்தக் கவுண்டினியர்கள் பல்லவர்கள் அல்ல என்றும் சிலர் சொல்வது உண்டு.

கம்போடியாவை மொத்தம் 36 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் கவுண்டினியன் எனும் குலப் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட கம்போடியாவின் பல்லவ மன்னர்கள் மூன்று பேர்.

1. ஜெயவர்மன் (Jayavarman II) (802 – 850)

2. சூரியவர்மன் (Suryavarman II) (1113 – 1150)

3. ஜெயவர்மன் (Jayavarman VII) (1181 – 1218)

ஓர் இடைச் செருகல். மலாயா தீபகற்பத்தில் பல்லவர்கள் என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுத்து கம்போடியாவிற்குப் போய் விட்டதாக நினைக்க வேண்டாம்.

மலாயா தீபகற்பத்தில் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களுக்கும்; கம்போடியாவை ஆட்சி செய்த பல்லவ மன்னர்களுக்கும்; நெருங்கிய தொடர்புகள் உள்ளன. ஆக இந்தப் பல்லவர்கள் யார் என்பதைச் சற்று விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். அதனால் தான் சுற்றிவர வேண்டி இருக்கிறது.

கம்போடியா அங்கோர் வாட் வரலாற்றுப் புகழ் ஆலயங்களுக்குப் போய் இருக்கிறீர்களா? அங்கே உள்ள சிற்பங்களை உருவாக்கிய மன்னர்களின் உருவச் சிலைகளைப் பார்த்து இருக்கிறீர்களா?

தமிழ் நாட்டில் இருந்து போன ஒரு தமிழ் முகம் மாதிரி தெரியாதே. மங்கோலிய முகம் மாதிரி இருக்கும். வடக்கே சீனாவில் இருந்து வந்த ஒரு சீனரைப் போல இருக்கும். அல்லது தெற்கே தாய்லாந்தில் இருந்து காட்டு வழியாக வந்த ஒரு சயாம்காரரைப் போல இருக்கும். ஏன் தெரியுங்களா? இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.09.2020

சான்றுகள்:

1.  Iyengar, B. K. S. (1966). Light on Yoga. Harper Collins. pp. 276, 330–335. "Dwi Pada Koundinyasana Twenty-two"

2. Vickery, Michael, The Reign of Suryavarman I and Royal Factionalism at Angkor. Journal of Southeast Asian Studies, 16 (1985) 2: 226-244.

3. Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press.

4. https://en.wikipedia.org/wiki/Khmer_Empire#Yasodharapura_%E2%80%93_the_first_city_of_Angkor

5. Higham, C. (2014). Early Mainland Southeast Asia. Bangkok: River Books Co., Ltd.

6. Rooney, Dawn (16 April 2011). Angkor, Cambodia's Wondrous Khmer Temples. www.bookdepository.com. Hong Kong: Odyssey Publications.

7. https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodia