06 செப்டம்பர் 2020

பிரேமதா வர்த்தனி மகாராணியார்

இந்தோனேசியா வரலாற்றில் 16 பேரரசுகள். கி.பி. 130 தொடங்கி கி.பி. 1500 வரையில் 1370 ஆண்டுகளுக்கு ஆளுமை செய்து உள்ளன. இந்து மதமும் பௌத்த மதமும் கலந்த பேரரசுகள். முதலாவது பேரரசு போர்னியோ கலிமந்தான் காடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. சாலகநகரப் பேரரசு. கடைசியாக வந்தது மஜபாகித் பேரரசு.

1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


இந்தப் பேரரசுகளில் ஒரு முக்கியமான பேரரசு சைலேந்திரப் பேரரசு (Shailendra Kingdom). மத்திய ஜாவாவில் கி.பி. 650 தொடங்கி கி.பி. 1025 வரை ஆட்சி செய்த அரசு. இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறிச் சென்ற அரசு. இந்த அரசைச் சார்ந்தவர்கள் இரு பெண்கள். இரு மகாராணியார்கள்.

ஒருவர் சீமா மகாராணியார். கலிங்கா (Kalingga) பேரரசைச் சேர்ந்தவர். இவர் சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்தவர். இவருடைய ஆட்சிக் காலம் கி.பி. 703.

இன்னொருவர் பிரேமதா வர்த்தனி மகாராணியார் (Pramodhawardani). இவருடைய மற்றொரு பெயர் ஸ்ரீ சஞ்சிவனம் (Sri Sanjiwana). ஆட்சிக் காலம் கி.பி. 833 - கி.பி. 856. [#1]

[#1]. Pramodhawardhani was the queen consort of king Rakai Pikatan (838 - 850) of Medang Kingdom in 9th century Central Java. She was the daughter of Sailendran king Samaratungga (812 — 833). Her royal marriage to Pikatan, the prince of Sanjaya dynasty, was believed as the political reconciliation between Buddhist Sailendra with Hindu Sanjaya dynasties.

Source: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Susan Brown Cowing. University of Hawaii Press.

பிரேமதா வர்த்தனி மகாராணியார்; சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்த சமரதுங்காவின் (Samaratungga) மகள். பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.

பிரேமதா வர்த்தனி மகாராணியார் ஆட்சி செய்த போது பக்கத்தில் ஒரு பேரரசு. அதன் பெயர் மேடாங் (Medang Kingdom). அந்தப் பேரரசை ராக்காய் பிகத்தான் (Rakai Pikatan) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார்.

அவரைப் பிரேமதா வர்த்தனி மகாராணியார் மணம் செய்து கொண்டார். அரசியல் சமரசத்திற்காக இந்தத் திருமணம் நடைபெற்றது.

ராக்காய் பிகத்தான் என்பவர் சஞ்சாயா (Sanjaya dynasty) வம்சாவழியைச் சேர்ந்தவர். இந்து மதத்தவர். பிரேமதா வர்த்தனி என்பவர் சைலேந்திரா வம்சாவழியைச் சேர்ந்தவர். பௌத்த மதத்தவர்.

பிரேமதா வர்த்தனி இரு மதங்களுக்கு இடையில் சைலேந்திரா பேரரசை ஆட்சி செய்து வந்தார். அது இரு மதங்கள் சமரசமாக ஆட்சி செய்த காலம்.

பிரேமதா வர்த்தனி மகாராணியார் தான் உலகப் புகழ் போரோபுதூர் (Borobudur) ஆலயத்தைக் கட்டி முடித்தவர். இவருக்கு முன்னரே கட்டுமான வேலைகள் தொடங்கப் பட்டாலும் இவருடைய காலத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.

மனைவி பிரேமதா வர்த்தனி கட்டிய போரோபுதூர் ஆலயத்திற்குகுப் போட்டியாகக் கணவர் ராக்காய் பிகத்தான் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார். அதுதான் உலகப் புகழ் பிரம்பனான் (Prambanan) கோயில். [#2]

[#2]. Rakai Pikatan was a king of the Sanjaya dynasty Medang Kingdom in Central Java who built the Prambanan temple, dedicated to Shiva, which was completed in 856 AD.

Source: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Susan Brown Cowing. University of Hawaii Press.

கரங்கா தெங்கா கல்வெட்டு (Karangtengah); திரி தெபுசன் கல்வெட்டு (Tri Tepusan inscription); மற்றும் ருகாம் கல்வெட்டு (Rukam inscription) போன்ற பல கல்வெட்டுகளில் பிரேமதா வர்த்தனி  பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. [#3].

[#3]. Her name was mentioned in several inscriptions, such as Karangtengah inscription, Tri Tepusan inscription and Rukam inscription.

Source: Drs. R. Soekmono, (1988). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: p. 46.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.09.2020



05 செப்டம்பர் 2020

பிஜி தமிழர்கள் - 2

 தமிழ் மலர் - 05.09.2020

பிஜி தமிழர்களின் கதைக்குள் மலேசியத் தமிழர்களின் ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு சின்ன மீள்பார்வை. இப்போது மலேசியாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தான். அதை என்றைக்கும் மறந்துவிட வேண்டாம்.

19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர்; ஆசை வார்த்தை அல்வாத் துண்டுகளுக்குப் பலியாகி மலாயாவுக்கு வந்தார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள். ஒரே வார்த்தையில் சொன்னால் சஞ்சிக் கூலிகளாய் இழுத்து வரப் பட்டார்கள்.

பினாங்கு புறமலை (Pulau Jerejak) தொற்றுநோய் ஒதுக்கிடத்தில் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அப்புறம் காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளாய் நடக்க வைக்கப் பட்டார்கள்.

வரும் வழியில் நிறையவே குறுக்குப் பாதைகள். சிலர் காட்டு யானைகள் மிதித்து இறந்து இருக்கிறார்கள். சிலர் புலி அடித்து இறந்து இருக்கிறார்கள்.  ஒரு சிலரை மலைப்பாம்புகள் விழுங்கி விட்டதாகவும் கேள்வி. தாத்தா பாட்டிமார்கள் சொன்ன கதைகள்.

பலர் ஆடு மாடுகளைப் போல லாரிகளில் ஏற்றி வரப் பட்டார்கள். மழை அடித்தால் குளிர் காய்ச்சல். வெயில் அடித்தால் வியர்வை நாற்றம். சிலர் எருமை மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு நசுக்கிக் கொண்டு வரப் பட்டார்கள்.

ரப்பர் தோட்டத்துத் தகரக் கொட்டகைகளின் கண் கொள்ளா காட்சிகள். மைசூர் மகாராஜா கட்டிப் போட்ட லயங்கள். அப்படிச் சொல்லித் தானே அழைத்து வரப் பட்டார்கள்.

அப்புறம் ஆடு மாடுகளை விட ரொம்பவும் கேவலமாக வேலை வாங்கப் பட்டார்கள். சாக்குப் பைகளில் சுருக்கு போட்ட வாயில்லப் பூச்சிகள் போல வாய்ப் பொத்திகள் ஆனார்கள். அப்படியே சத்தம் இல்லாமல் சாகடிக்கப் பட்டார்கள். வேதனை!

மலாயாவில் நடந்த கொடுமை. அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. இப்போதைக்கு ஒரு வரலாறாக மாறிப் போய் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறது.

மலாயாவுக்கு வந்த தமிழர்கள் ரப்பர் காப்பித் தோட்டங்களில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், இரவு பகலாய் அடிமைகளைப் போல வேலை செய்தார்கள். பொதி சுமந்த கழுதைகளுக்கும் எருமைகளுக்கும் வெள்ளைத் தோல் ராசாக்கள் லீவு கொடுத்தார்கள்.

ஆனால் கூலித் தமிழர் ரோசாக்களுக்கு லீவு கொடுக்க மனசு வரவில்லை. ஓய்வு என்பது எங்கள் அகராதியில் இல்லை என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள்.

அந்தச் சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள் இன்னமும் இங்கே உரிமைப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். கட்சிகள் மாறினாலும்; காலங்கள் மாறினாலும்; அரசுகள் மாறினாலும்; மலேசியத் தமிழர்களின் காட்சிகள் மாறவே இல்லை.

நீர்க் குமிழிகளின் உறைப் பனிகளாய் உறைந்து போய்க் கிடக்கிறன. கண்ணீர்ப் பூக்களாய் கதைகள் சொல்லி ஒப்பாரிகள் வைக்கின்றன.

இந்தத் திசையில் மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்களும் சுமத்திரா, ஜாவா, போர்னியோ, செலிபிஸ், பர்மா போன்ற இடங்களில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான். அந்த உண்மை மறக்கப் படுகிறது. மறைக்கப் படுகிறது.

ஓர் உண்மையை மறைப்பதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பொய்கள் சொல்லலாம். ஒரே பொய்யை ஒன்பது தடவை சொன்னால் உண்மை பணிந்து போகுமாம். ஆனால் செத்துப் போகாது.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் எனும் கூற்றுக்கு நிதர்சனமாகவே வாழ்ந்து காட்டியவர் கோயபல்ஸ்.

உலக மகா ஹிட்லர் காலத்தில் ஜோசப் கோயாபல்ஸ் (Joseph Goebbels) ஓர் அமைச்சர். ஒரு பொய்யை உண்மையைப் போல் பேசுவதில் கெட்டிக்காரர். ஹிட்லர் நினைத்தால் வானம் இருண்டு விடும் என்று சொன்னவர். மக்களும் அப்படியே நம்பினார்கள். அந்த அளவுக்குப் பொய்கள் சொல்வதில் கோயாபல்ஸ் பலே கில்லாடிப் பாண்டி.

இருந்தாலும் புளுகுவதற்கும் ஓர் எல்லை உண்டு. அதை எல்லாம் தாண்டிப் போய் குமரிக் கண்டம் எங்கள் பாட்டன் சொத்து என்று புளுகித் தள்ளக் கூடாது. வெட்கமாக இருக்கிறது. அரிச்சந்திரன் அநியாயம் செய்தாலும் அது நியாயமாகாது. சத்தியம் தான் ஜெயிக்கும். சரி. ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப பிஜி கதைக்கு வருவோம்.

தமிழர்களின் புலம்பெயர்வுகள் ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நிலவழி, நீர்வழிகளாக உலகின் பல பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வரலாறு படைத்து இருக்கிறார்கள். அந்தப் புலம்பெயர்வுகள் தொடக்கத்தில் தற்காலிகமாக இருந்தன.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. அந்தப் பாவனையில் பண்டமாற்று வணிகத்திற்கு முதலிடம் கொடுத்து வந்தார்கள்.

18-ஆம் நூற்றண்டிற்குப் பின்னர் பெரிய ஒரு மாற்றம். போன இடங்களில் இருந்து திரும்பி வர முடியாத நிலை. அங்கேயே நிரந்தரவாசிகளாக மாறிப் போனார்கள். அல்லல்கள் ஆயிரம். அலறல்கள் ஆயிரம். சொல்லில் சொல்ல முடியாத சோதனைகள். வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகள். யார்? நம்ப தமிழர்கள் தான்.

அந்தக் காலத்திலேயே கடல் பயணக் கலையில் தமிழர்கள் நன்றாகத் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கி இருக்கிறார்கள். கடலுக்கு ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரிதி, வாரணம், பவ்வம், பரவை, புணரி, கடல் என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

கடலில் செல்லும் ஊர்திகளுக்குக் கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, திமில், அம்பி, வங்கம், மிதவை என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். சரி.

அயல் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம்.  

முதல் பிரிவினர்: 18 - 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் புலம் பெயர்ந்தவர்கள்.

இரண்டாம் பிரிவினர்: 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புலம் பெயர்ந்தவர்கள்.

முதலாம் பிரிவினரின் இடப் பெயர்வுக்கு வியாபாரம் ஒரு காரணம். அடுத்த காரணம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சிற்றரசர்களின் படையெடுப்பு மற்றொரு காரணம்.

இரண்டாம் பிரிவில் பெரும்பான்மையினர் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள். தேயிலை, ரப்பர், கரும்பு, காப்பித் தோட்டங்களில் கூலிவேலை செய்வதற்காக இடைத் தரகர்களால் அழைத்துச் செல்லப் பட்டவர்கள். புலம்பெயர் தமிழர்களில் இவர்கள் தான் அதிகம்.

மலையக இலங்கை, மலாயா, பர்மா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, திரினிடாட் தொபாகோ, கயானா, பிரெஞ்சு மேற்கிந்திய தீவுகள், சீஷெல்ஸ், பிஜி தீவு, மொரீஷியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளில் நிறையவே தமிழர்கள்.

இவர்களில் பெரும்பகுதியினர் தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவழியினர். இதில் உங்களையும் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1917-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் காலனித்துவ நாடுகளில் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் (Bondage Lease Act) ஒழிக்கப் பட்டது.

1920-ஆம் ஆண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பிஜி தீவில் குடியேறுவதற்கு வாய்ப்பு வசதிகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் பிஜி தீவுத் தமிழர்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது.

பிஜி தீவில் இருந்த அத்தனைக் கரும்புத் தோட்டங்களையும் சி.எஸ்.ஆர். என்கிற ஓர் ஆஸ்திரேலியா நிறுவனம் (CSR - Colonial Sugar Refining Company) வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தமிழருக்கும் பத்து ஏக்கர் நிலம். பத்து ஆண்டுகளுக்குக் குத்தகை.

அதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய வேண்டும். மிச்சம் உள்ள ஓர் ஏக்கர் நிலத்தில் சொந்தமாகப் பயிர் செய்து கொள்ளலாம். கரும்பு முற்றியதும் வெட்டி எடுக்க வேண்டும்.

வெட்டிய கரும்புகளைக் கரும்புக் காட்டு வண்டிகளில் ஏற்றி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். கம்பெனி என்ன விலை சொல்கிறதோ அந்த விலையில் தான் தமிழர்களுக்கும் ஊதியம். அப்போது சர்க்கரை விற்கும் விலையில் விவசாயிக்கு 30 விழுக்காடு. கம்பெனிக்கு 70 விழுக்காடு.

2007-ஆம் ஆண்டு பிஜி நாட்டின் மக்கள் தொகை 827,900. தமிழர்களின் எண்ணிக்கை 313,798. அவர்களில் ஏழாயிரம் பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் என்று தங்களின் அடையாள அட்டைகளில் பதிவு செய்து இருந்தார்கள்.

இன்னும் ஒரு செய்தி. பிஜி நாட்டின் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையத் தளத்தில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை. வேதனையாக இருக்கிறது. போய்ப் பாருங்கள். (https://www.fiji.gov.fj/Home)

1874-ஆம் ஆண்டில் பிஜி தீவை ஆங்கிலேயர்கள் அடித்துப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். தெரிந்த விசயம். அப்புறம் 1879-ஆம் ஆண்டு அங்கு இருந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப் பட்டார்கள்.

1879 – 1916-ஆம் ஆண்டுகளில் ஆள் பிடிக்கும் கங்காணிகள் மூலம் 87 கப்பல்களில் 65 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் பிஜித் தீவிற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள்.

5 ஆண்களுக்கு 1 பெண் எனும் விகிதத்தில் ஆண், பெண்களின் வேறுபாடு இருந்தது. கொண்டு வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேரில் 13 ஆயிரம் பேர் பெண்கள்.

1879 - 1916-ஆம் ஆண்டுகளில் பிஜி தீவில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு ஓர் அளவே இல்லை. மலாயாவில் நடந்த கொடுமைகளைவிட மேலும் மோசமான கொடுமைகள். இங்கே கொஞ்சம் பரவாயில்லை. அங்கே இன்னும் மோசம்.

1917-ஆம் ஆண்டில் தான் பிஜியில் கொத்தடிமை முறை அகற்றப் பட்டது. அதுவரையிலும் தமிழர்கள் அங்கே பயங்கரமாக அவதிப்பட்டு இருக்கிறார்கள். சரி. தமிழ் மொழி விசயத்திற்கு வருவோம்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையில் தமிழர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பிஜி தீவில் பள்ளிக்கூடங்கள் எதுவும் இல்லை. சுவாமி மனோகரானந்த சரஸ்வதி (Ram Manoharanand Sarasvati) என்பவர் பிஜிக்கு வந்தார். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தார்.

சமயச் சேவையுடன் கல்விப் பணியும் தொடர்ந்தது. தொடக்கக் காலங்களில் இந்தி மொழியே பள்ளிகளில் கற்பிக்கப் பட்டது. தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழர்களே சொந்தமாகத் தமிழ் சொல்லித் தந்தார்கள்.

1920-ஆம் ஆண்டுகளில் பிஜி தீவில் உள்ள பள்ளிகளில் தென் இந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போது பிஜி தீவில் இந்தியர்களுக்காக கிருஷ்ணசாமி, மச்சோநாயர், கிருஷ்ணா ரெட்டி, எம்.என். நாயுடு, அரங்கசாமி போன்ற தலைவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்கள் தான் தீவிரமாகச் செயல் பட்டார்கள். அதிலும் பற்பல தடங்கல்கள். பற்பல முட்டுக்கட்டைகள்.

பின்னர் 1929-ஆம் ஆண்டு அந்தப் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. தமிழ், தெலுங்கு, குஜராத்தி முதலிய மொழிகளைக் கற்கலாம். ஆனால் இந்தி, ஆங்கிலம் மொழிகளுடன் இணைத்துக் கற்பிக்க வேண்டும் என்று கட்டளை போட்டது.  

1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிஜி இந்தியர்களால் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம் தொடங்கப் பட்டது. கல்விப் பணியே முக்கிய நோக்கம். 1921-ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் முன்னெடுப்பு நாடு முழுமைக்கும் மெல்ல மெல்லப் பரவியது.

ஆனால் பிஜி உள்ளூர்ப் பூர்வீக மக்களுக்குத் தமிழ் மொழியின் வளர்ச்சி பிடிக்கவில்லை. தமிழ் மொழியைச் சாகடிக்க வேண்டும் என்று பிஜி இனத் தீவிரவாதிகளில் சிலர் ரகசியமாகத் திட்டம் போட்டார்கள். செயல் படுத்தவும் தொடங்கினார்கள்.

இங்கே மட்டும் என்னவாம். மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அமாட் பைஸால் சொல்லி இருக்கிறார். பெரும் பரபரப்பு செய்தி அல்ல. கரும் புகைச்சலை ஏற்படுத்திவிட்ட செய்தி.

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி வருகிறது.

இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாக நடந்து வரும் காம்போதி ராகத்தின் அரசியல் கச்சேரிகள். விடுங்கள். நம்ப பிஜி கதைக்கு வருவோம்.

1930-ஆம் ஆண்டு பிஜி தீவில் இரு தமிழாசிரியர்கள் கொல்லப் பட்டார்கள். தமிழர்கள் கொதித்துப் போனார்கள். பிஜி நாடே தடுமாறிப் போனது. பார்க்கிற உள்ளூர் பிஜி மக்களை எல்லாம் தமிழர்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அடுத்தக் கட்டம் கொலையில் போய் முடிந்தது. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் போது பதினைந்து தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். அதுவே சின்ன ஒரு கலவரமாக மாறியது. அடுத்து அடுத்து என்ன நடந்தன என்பதை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

சான்றுகள்:

1. https://www.csrsugar.com.au/csr-sugar/our-history/

2. Derrick, Ronald Albert (1951). The Fiji Islands: A Geographical Handbook. Govt. Print. Dept Fiji, 334 pages, Original from the University of Michigan

3. "NINE MONTHS IN FIJI AND OTHER ISLANDS". Empire (6014). New South Wales, Australia. 13 July 1871. p. 3.

4. "Fiji: the challenges and opportunities of diversity" (PDF). Minority Rights Group International 2013.

5. https://en.wikipedia.org/wiki/Swami_Rudrananda


சொஜோ மெர்த்தோ ஜாவா கல்வெட்டு கி.பி. 725

இந்தோனேசியா, மத்திய ஜாவா, பாத்தாங் மாநிலம் (Batang Regency), ரெபான் மாவட்டம் (Reban), சொஜோமெர்த்தோ (Sojomerto) கிராமம். அங்கே ஒரு கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். கி.பி. 725 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு. சொஜோ மெர்த்தோ கல்வெட்டு (Sojomerto inscription) [#1] என்று பெயர்.

[#1] Boechari, M. (1966). "Preliminary report on the discovery of an Old Malay inscription at Sojomerto". MISI. III: 241–251.

2007-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. ஓர் எரிமலைப் படிகப் பாறையில் (Andesite) எழுதப்பட்டு உள்ளது. அதன் அகலம் 43 செ.மீ. பருமன் 7 செ.மீ. உயரம் 78 செ.மீ. அதில் 11 வரிகள் உள்ளன.

பெரும்பாலான எழுத்துகள் தெளிவாக இல்லை. இருப்பினும் நவீன தொழில் நுட்பத்தின் உதவியினால் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து விட்டார்கள்.

அந்தக் கல்வெட்டில் சைலேந்திரா (Selendra) என்று பொறிக்கப்பட்டு உள்ளது. [#2] அதன் பின்னர் சைலேந்திரப் பேரரசை உருவாக்கியவர்கள் சைலேந்திரா வம்சாவழியினர் என்று தெரிய வந்தது.

[#2] Candi, Space and Landscape: A Study on the Distribution, Orientation and ...
Véronique Degroot - Architecture - 2009 - 497

சந்தானு (Santanu) - பத்ராவதி (Bhadrawati); இவர்களுடைய மகன் தபுந்தா சைலேந்திரர் (Dapunta Selendra). இவர் தான் சைலேந்திரா பேரரசை உருவாக்கி விரிவாக்கம் செய்தவர். தபுந்தா சைலேந்திரர் மனைவியின் பெயர் சம்புலா (Sampula). இவர்கள் பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். [#3]

[#3] The inscription is Shivaist in nature, talking about the head of a noble family named Dapunta Selendra, the son of Santanu and Bhadrawati, the husband of Sampula.

சைலேந்திரர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் மூன்று மொழிகளைப் பயன்படுத்துகின்றன. சமஸ்கிருதம்; பழைய மலாய் (Old Malay); பழைய ஜாவானிய மொழி (Old Javanese); சமஸ்கிருதம் என்பது காவி (Kawi) எழுத்துக்களில் அல்லது நாகராவுக்கு முந்தைய எழுத்துக்கள் (Pre Nagari Script).

அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகள்:

... ryayon sri sata
... a koti
... namah sivaya
... bhatara paramesva
... ra sarvva daiva ku samvah hiya
... mih inan isanda dapu
... nta selendra namah santanu
... namaanda bapanda bhadravati
... namanda ayanda sampula
... namanda vininda selendra namah
... mamagappasar lempewangih

மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில்:

Praise to Lord Shiva Bhatara Parameshvara and all the gods.
... from the honorable Dapunta Selendra

Santanu is the name of his father, Bhadrawati is the name of his mother, Sampula is the name of the wife of noble Selendra.

மொழிபெயர்ப்பு தமிழில்:

சிவன் பத்தாரா பரமேஸ்வரர் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் துதி.
கெளரவமான தபுந்தா சைலேந்திராவிடம் இருந்து...

சந்தானு என்பது அவரது தந்தையின் பெயர். பத்ராவதி என்பது அவரது தாயின் பெயர். சம்புலா என்பது உன்னத சைலேந்திராவின் மனைவியின் பெயர்.

சான்று: Boechari, M. (1966). "Preliminary report on the discovery of an Old Malay inscription at Sojomerto". MISI. III: 241–251.

அந்தக் கல்வெட்டு இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைச் சார்ந்தது (The inscription is Shivaist in nature). அந்த கல்வெட்டின் ஓவியச் செதுக்கல்களில் சைவ சமயத்தின் வடிவங்கள் இருக்கின்றன.

சைலேந்திரா அரசர்கள் தொடக்கக் காலத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றி இருக்கிறார்கள் (Hindu Shaivist). பின்னர் மகாயன பௌத்தத்திற்கு (Mahayana Buddhism) மாறி இருக்கிறார்கள்.

இந்தக் கல்வெட்டு வாசகங்கள், தபுந்தா சைலேந்திராவின் குடும்பம் மத்திய ஜாவாவின் வடக்கு கடற்கரையில் குடியேறியது. அவர்கள் சைவ இந்துக்கள் என்று முடிவு அடைகிறது.

இந்த கல்வெட்டின் கண்டுபிடிப்பு சைலேந்திரர்கள் சுமத்திராவில் இருந்து வந்தவர்கள் என்று உறுதிப் படுத்துகிறது. தவிர அவர்கள் மத்திய ஜாவாவின் வடக்கு கடற்கரையில் இருந்து கேது சமவெளிக்குப் (Kedu Plain) புலம் பெயர்ந்தவர்கள் என்பதற்கான சாத்தியக் கூறுகளையும் முன்வைக்கிறது.

சைலேந்திரர் குடும்பம் முதன்முதலில் மத்திய ஜாவா வடக்கு கடற்கரையில் குடியேறியது. இவர்கள் ஆரம்பத்தில் இந்து சிவா பக்தர்கள். பின்னர் இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கேது சமவெளியில் நிலைநிறுத்திக் கொண்டனர். பின்னர் மகாயான பௌத்த மதத்திற்கு மாறி உள்ளனர்.[#4]

[#4]. https://www.britannica.com/topic/Shailendra-dynasty

இந்தக் கல்வெட்டைப் போல மேலும் பல கல்வெட்டுகள் கிடைத்து உள்ளன. இந்திய வம்சாவழியினர் (பல்லவர்கள்) இந்தோனேசியாவை ஆட்சி செய்த வரலாறு அந்தக் கல்வெட்டுகளின் மூலமாகத் தெளிவு பெறுகிறது. இந்தச் சான்றுகள் ஒரு பனிமலையில் ஒரு கல். இதுவரை கிடைத்து உள்ள சில கல்வெட்டுகள்.

1. கங்கால் கல்வெட்டு (Canggal inscription - கி.பி. 732)

2. கலாசான் கல்வெட்டு (Kalasan inscription - கி.பி. 778)

3. கேலுராக் கல்வெட்டு (Kelurak inscription - கி.பி. 782)

4. மஞ்சு ஸ்ரீகிரக கல்வெட்டு (Manju Srigrha inscription - கி.பி. 792)

5. காராங் தெங்கா கல்வெட்டு (Karangtengah inscription - கி.பி. 824)

6. திரி தெபுசான் கல்வெட்டு (Tri Tepusan inscription - கி.பி. 842)

இந்தக் கல்வெட்டுகளை ஒவ்வொன்றாகப் பின்னர் அறிமுகம் செய்கிறேன். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.09.2020

சான்றுகள்:

1. Zakharov, Anton A (August 2012). "The Śailendras Reconsidered" (PDF). nsc.iseas.edu.sg. Singapore: The Nalanda-Srivijaya Centre Institute of Southeast Asian Studies.

2. Zakharov, Anton A (August 2012). "The Śailendras Reconsidered" (PDF). nsc.iseas.edu.sg. Singapore: The Nalanda-Srivijaya Centre Institute of Southeast Asian Studies.

3. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and Malay Peninsula.

4. De Casparis, J.G. de (1956). Prasasti Indonesia II : Selected inscriptions from the 7th to the 9th centuries AD. Bandung: Masu Baru, 1956


ஜாவா விஷ்ணு ஆலயங்கள்

 தமிழ் மலர் - 19.07.2020

இந்தோனேசியா வரலாற்றில் மிகப் பழமையான பேரரசுகளில் முதலாவது சாலகநகரப் பேரரசு. அடுத்துப் பழைமையானது கூத்தாய் பேரரசு. மூன்றாவதாக வருவது தர்மநகரா பேரரசு.

இந்தத் தர்மநகரா பேரரசு கி.பி. 358–ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 669-ஆம் ஆண்டு வரை மேற்கு ஜாவாவை ஆட்சி செய்த பேரரசு. அந்தப் பேரரசை உருவாக்கியவர் ஜெயசிங்க வர்மன் (Rajadirajaguru Jayasingawarman).

இவரின் வாரிசுகள் மேற்கு ஜாவாவில் நிறைய ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள். அனைத்தும் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயங்கள். களிமண்ணையும்; வைக்கோல்களையும்; சுண்ணாம்பையும் பிசைத்துக் கட்டிய திருமூர்த்தி ஆலயங்கள்.

கால ஓட்டத்தில் அந்த ஆலயங்கள் அனைத்துமே மண்ணுக்குள் புதைந்து போயின. 1600 ஆண்டுகள் என்பது சாதாரண கால இடைவெளி அல்ல. ஒரு பெரிய நீண்ட காலப் பரப்பு வெளி.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் ஒரு 36 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்த ஆலயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எல்லாமே வயல்காடுகளில் புதைந்து கிடந்து இருக்கின்றன.

ஜெயசிங்க வர்ம அரசரின் தலைமுறையினர் ஏறக்குறைய 30 ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள். அவற்றில் 17 ஆலயங்கள் மட்டுமே மீட்கப் பட்டன. மற்றவை சிதைந்த நிலையில் இன்னும் மண்ணுக்குள் இருக்கின்றன.

மீட்கப்பட்ட ஆலயங்கள் இப்போது இந்தோனேசியாவின் தேசியக் கலாச்சார பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தோனேசியாவின் கல்வி, கலாச்சார அமைச்சு, அந்தப் பகுதிக்கு பத்துஜெயா கோயில் வளாகம் (Batujaya Temple complex) என பெயரிட்டு உள்ளது, இந்த வளாகத்தை உலக அளவில் விளம்பரப் படுத்த இந்தோனேசிய அரசாங்கம் இப்போது முழுமூச்சாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

(The declaration is stated in Education and Culture Ministerial Decree No.70/2019, signed by the minister, Muhadjir Effendy, on March. 11 in Jakarta.)

இதுதான் அண்மைய காலத்து இந்தோனேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமான செய்தியாகும்.

ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் பத்து ஜெயா (Batujaya). இந்த ஆலய வளாகம் இந்தோனேசியா, மேற்கு ஜாவா, கரவாங் (Karawang) எனும் இடத்தில் உள்ளது. இப்போது இந்த இடம் ஒரு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தளம் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அந்த இடத்தில் உள்ள ஆலயங்களைச் சுந்தானிய (Sundanese) மக்கள் ஊனூர் (Unur) என்று அழைக்கிறார்கள். ஊனூர் என்றால் கலைப் பொருட்களைக் கொண்ட பூமியின் உயர் மேடுகள்.

மேற்கு ஜாவா வயல் காடுகளில் புதைந்து கிடந்த ஆலயங்களை மீட்டு எடுப்பதற்கு அமெரிக்காவின் போர்ட் கார் தயாரிப்பு நிறுவனம் (Ford Motor Company) பத்து கோடி ரிங்கிட் செலவு செய்து உள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் ஐந்து கோடி வழங்கி உள்ளது. இந்தோனேசியாவின் பக்கத்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஆனந்க் கோடீஸ்வரர் ஒரு கோடி ரிங்கிட் வழங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.

மீட்புப் பணிகளில் இந்தோனேசிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு வரலாற்று அறிஞர்கள் குழுவை உருவாக்கி இருக்கிறது. அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கு அனைத்து வகையிலும் அதிகாரப் பூர்வமான ஆதரவுகளையும் வழங்கி வருகிறது.

அகழ்வாராய்ச்சிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு தனி இராணுவக் குழுவைக்கூட அமைத்துக் கொடுத்து இருக்கிறது. வெளியே பலருக்கும் தெரியாத தகவல்கள்.

இந்த நிதியுதவிகளைக் கொண்டுதான் மண்ணுக்குள் புதைந்து இருக்கும் மற்ற மற்ற ஆலயங்களையும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அந்த ஆலயங்கள் சிதைவு பெறாமல்; நலிவு பெறாமல் நயனங்கள் பாடுகின்றன. ஆனால் என்ன... களிமண்; மணல்; வைக்கோல்; சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட திருமூர்த்தி ஆலயங்கள். இன்றும் நிமிர்ந்து நின்று வீரவசனங்கள் பேசுகின்றன.

ஆலயங்களைக் கட்டுவதற்கு அவர்கள் எரிமலைக் கற்களையும் எரிமலைப் படிகக் கற்களையும் பயன்படுத்தவில்லை. ஏன் என்றால் அந்தக் கற்கள் வெகு தொலைவில் இருந்தன. பல நூறு மைகளுக்கு அப்பால் இருந்தன.

மீட்கப்பட்ட ஆலயங்களில் இந்து தெய்வமான விஷ்ணு முதன்மைப் படுத்தப் பட்டு இருக்கிறார்.

மீட்கப்பட்ட கட்டமைப்புகளில் இரு அமைப்புகள் இப்போதைய கோயில்களின் வடிவத்தில் aமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு ஜீவா கோயில் (Jiwa Temple) என்று இந்தோனேசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தோனேசியா பாண்டுங் தொல்பொருள் அமைப்பின் (Bandung Archeology Agency) தலைவரான டாக்டர் டோனி ஜுபியான் டோனோவின் (Dr Tony Djubiantono) கூற்றுப்படி, 2-ஆம் நூற்றாண்டில் ஜீவா கோயில் கட்டப்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள கோயில்களை அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. ஏன் என்றால் அந்தக் கோயில்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்த அரசர்களால் கட்டப்பட்டவை ஆகும். அதனால் அவர்கள் பிரித்துப் பார்க்கவும் முயற்சி செய்யவில்லை.

1863-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதற்கு சியாரூட்டூன் கல்வெட்டு (Ciaruteun inscription) என்று பெயர். ஓர் ஆற்றின் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. 5-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.

இந்திய பல்லவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெங்கி எழுத்துக்கள்; சமஸ்கிருத எழுத்துக்களில் இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டு உள்ளது. "தருமநகரா" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டு அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான தர்மநகர மன்னன் பூரணவர்மன் (Purnawarman) என்பவரைப் பற்றியும் கூறுகிறது.

சீனப் பௌத்த துறவி பா சியான் (Fa Xian) என்பவர் தன்னுடைய போ - கு - சி (fo-kuo-chi ) எனும் நூலில் தர்மநகராவைப் பற்றி எழுதி இருக்கிறார். கி.பி. 414-ஆம் ஆண்டில், ஜாவா தீவின் ஜாவதீவிபா (Javadvipa) எனும் இடத்தில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகவும்; அப்போது தர்மநகராவில் விஷ்ணு ஆலயங்கள் இருந்ததாகவும் அவர் எழுதி இருக்கிறார்.

சியாரூட்டூன் கல்வெட்டில் எழுதப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தர்மநகரா பேரரசு, கி.பி 358-ஆம் ஆண்டில் ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மனால் (Rajadirajaguru Jayasingawarman) நிறுவப் பட்டது என்று நிபுணர்கள் முடிவு செய்கின்றனர்.

கி.பி.382-ஆம் ஆண்டில் ஜெயசிங்கவர்மன் காலமானார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் தர்மயவர்மன் (Dharmayawarman) கி.பி 358-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 395-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். தர்மநகராவின் அடுத்த மன்னர் பூர்ணவர்மன். இவரின் ஆட்சிக் காலம் கி.பி 395 - கி.பி. 434. இவர்தான் கி.பி 397-ஆம் ஆண்டில் சுந்தபுரா (Sundapura) என்கிற புதிய தலைநகரைக் கட்டியவர்.

தர்மநகரா பேரரசை 12 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். கடைசி மன்னர் லிங்காவர்மன். இவர் கி.பி 669-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்.

கி.பி 670-ஆம் ஆண்டில், தர்மநகரா பேரரசு இரண்டாகப் பிரிந்தது. சுந்தா அரசு (Sunda Kingdom) என்றும் கலூ அரசு (Galuh Kingdom) என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

தர்மநகரா பேரரசை ஆட்சி செய்த அரசர்கள்

1. ஜெயசிங்கவர்மன் (Jayasingawarman 358 - 382)

2. தர்மயவர்மன் (Dharmayawarman 382 - 395)

3. பூர்ணவர்மன் (Purnawarman 395 - 434)

4. விஷ்ணுவர்மன் (Wisnuwarman 434 - 455)

5. இந்திரவர்மன் (Indrawarman 455 - 515)

6. சந்திரவர்மன் (Candrawarman 515 - 535)

7. சூர்யவர்மன் (Suryawarman 535 - 561)

8. கீர்த்தவர்மன் (Kertawarman 561 - 628)

9. லிங்கவர்மன் (Linggawarman 628 - 650)

10. தருசியபாவன் (Tarusbawa 670 - 690)

இதன் பின்னர் தர்மநகரா பேரரசு இரண்டாகப் பிரிந்து விட்டது. இந்தப் பேரரசு பிரிவதற்கு முன்னர் தான் விஷ்ணு ஆலயங்கள் கட்டப்பட்டன. கால வெள்ளத்தில் புதைந்து போயின. இப்போது மீட்டு எடுத்து வருகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில், மேற்கு ஜாவாவின் பல்வேறு இடங்களில் பல புதிய புதிய வரலாற்றுத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கம்போங் பூஜோங் மிஞ்சாவில் உள்ள பூஜோங் மிஞ்சா கோயில்; 1977-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரோங்கேங் அல்லது பாமரிக்கன் கோயில் (Ronggeng Temple or Pamarican Temple); கராவாங் மாவட்டத்தில் பத்துஜெயா கோயில் வளாகம் (Batujaya Temple complex); சங்குவாங் கிராமத்தில் உள்ள சங்குவாங் கோயில் (Cangkuang Temple).

இந்தக் கோயில்கள் எப்போது, யாரால் கட்டப் பட்டன என்பது குறித்த உண்மைகள் இன்னும் மிகச் சரியாக வெளிப்படுத்தப் படவில்லை. இருந்தாலும் வரலாற்று ஆய்வாளர்கள் அயராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு பக்கம் சிதைந்து போனவற்றை எல்லாம் தூசு தட்டி மீட்டு எடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் இருப்பதை எல்லாம் இரவோடு இரவாக இடித்துப் போட்டு விட்டுப் போகிறார்கள். மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம். ஒரு தனிப்பட்ட பதிவு.

இந்தோனேசியாவின் ஆலயங்களைப் பற்றி எழுதி வரும் அடியேன் என்னை தமிழன் அல்ல என்றும்; இந்து சமயத்தின் அடிவருடி என்றும் ஊடகங்களில் திட்டித் தீர்க்கிறார்கள். இந்தோனேசியாவின் ஆலயங்களை வரலாற்று அடிப்படையில் தான் பார்க்கிறோம். அவற்றின் வரலாற்றைத் தான் தூசு தட்டிப் பார்க்கிறோம். போற்றுவார் போற்றட்டடும். தூற்றுவார் தூற்றட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2020

சான்றுகள்:

1. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java

2. https://www.southeastasianarchaeology.com/…/batujaya-templ…/

3. "Batujaya Temple complex listed as national cultural heritage". The Jakarta Post. April 8, 2019.

4. Candi Batujaya Dibangun dengan Teknologi Canggih -
https://web.archive.org/…/www.pikiran-rakyat.com/node/127026

5. https://en.wikipedia.org/wiki/Batujaya


பேஸ்புக் பதிவுகள்


Vimal Sandanam: காய்க்கிற மரத்துக்குதான் கல்லடி ஐயா. உண்மையைத்தானே எடுத்து இயம்புகின்றீர்கள்.இதில் தவறு இல்லையே ஐயா.புதையுண்டு போன கோயில்கள் எப்படி ஐயா சிதைவடையாமல் உள்ளன?வாழ்த்துக்கள் ஐயா

Letchmy Chengodam: அருமையான தகவல்கள். நன்றிங்க ஐயா.

Elan Ada: அருமையான தகவல்.நன்றி.

Kumar Murugiah Kumar's: பகிர்வு அருமை ஐயா ! தொடருங்கள் ஐயா !வாழ்த்துகள்

Balasubramaniam Muthusamy:

Shanker Muniandy: இந்தோனேஷியாவின் மறுபக்க வரலாறுகளை குறிப்பாக தமிழர்களுக்கு தெரிய வைத்தமைக்கு நன்றிகள் பல ஒவ்வொன்றும் பொக்கிஷம். உங்களின் போற்றத்தக்க பனி தொடரட்டும்.

Avadiar Avadiar: Nalla tagaval Ayya

M Krisnan Achari:

R Muthusamy Rajalingam:
அருமை ஐயா. ஒரு கேள்வி, இந்தோனேசிய பண்டைய பேரரசர்கள், அன்றைய இந்திய பெருநிலத்திலிருந்து, இந்தோனேசிய வந்து ஆட்சி அமைத்தவர்களா? அல்லது உள்ளூர் வாசிகள் இந்து கலாச்சாரங்களை ஏற்றுக் கொண்டு, அரசுகளை உருவாக்கினார்களா?

Jeeva Nathan: Nanri ayya

இராமசாமிகவுண்டர்:
உங்கள் பணி மகத்தானது. பணி தொடரட்டும். இவண். புலவர் இராமசாமி தமிழ்நாடு நாமக்கல்.





ஆனந்த யாழை மீட்டுகிறாய்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்... முத்தம் என்பது காமத்தில் சேர்ந்தது இல்லை என்று... என்னே ஒரு வாழ்வியல் தத்துவம்...

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மனதை உருக்கிப் பிழியும் இசை... கசக்கிப் பிழியும் வரிகள்... உதிரத்தில் ஒட்டிக் கொள்ளும் வல்லமை...

அப்பாக்களைப் பிரியாத மகள்களை அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம். மகள்களைப் பிரியாத அப்பாக்களைப் பாக்கியவான்கள் என்று சொல்லலாம். ஆனாலும் கண்டிப்பாக அப்பா மகளைப் பிரிய வேண்டி வரும். மகள் அப்பாவைப் பிரிய வேண்டி வரும். அது தான் அப்பா மகள் உறவு.

வானமே இடிந்து விழுந்தாலும் ஒரு மகள் தன் அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டாள். ஏன் என்றால் ஒரு பெண்ணுக்கு முதல் ஹீரோ அவளுடைய அப்பா தான். முதல் காதலனும் அவளுடைய அப்பாவாக இருக்கலாம். அது தான் மனித உறவில் புனிதமான அப்பா மகள் உறவு.

கவியரசுக்குப் பின்னர் ஒரு கவி இளவரசர் முத்துக்குமார்... என்றும் என் மனதில் வாழும் அந்தக் கவிஞருக்குச் சிரம் தாழ்த்துகிறேன்....


ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

படம்: தங்கமீன்கள்
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்கள்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நா. முத்துக்குமார் (12 சூலை 1975) தமிழகம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர்.

தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார்.

1999-ஆம் ஆண்டு ’மின்சார கண்ணா’ படத்தில் இடம் பெற்ற "உன் பேர் சொல்ல ஆசைதான்" பாடலை எழுதி சினிமா உலகில் பிரபலமானார்.

இதுவரை 1500 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ள இவர் 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடல் ஆசிரியராக இருந்தார்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

நல்ல நல்ல பாடல் வரிகளைத் தமிழ் திரையுலகுக்குக் கொடையாகக் கொடுத்த வள்ளல்களில் நா. முத்துக்குமாரும் ஒருவர்.

இவர் 2006 ஆண்டு வட பழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41-வது வயதில் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார். சின்ன வயது.

அவர் எழுதி கொடுத்த பல வெற்றிப் பாடல்களுக்குப் போதுமான ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை. அவரின் மரணத்தின் போது எழுந்த குற்றச்சாட்டுகள்.

அவர் மறைந்தாலும் என்றுமே அவரது பாடல் வரிகள் தமிழ்ச் சமூகத்தைத் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2020

https://www.youtube.com/watch?v=xvo8M3jhQTs


பேஸ்புக் பதிவுகள்

Parameswari Doraisamy: மிகவும் அற்புதமான அருமையான பாடல் ஐயா.... இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டிய வயதில் காலமாகி விட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது.

Kumaravel Muthu Goundan: நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் திரு நா. முத்துக்குமாரையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் பாதியிலேயே பறித்துக் கொண்டான் காலன். அவரின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ காலம் கடந்தும் நிற்கப் போகும் ஒரு நெகிழ்ச்சியான பாடல்.

Parimala Muniyandy: அருமையான பதிவு. பாடல் வரிகள் ஒவ்வொன்றிலும் மனம் லயித்துப் போகிறது... மிக்க நன்றிங்க அண்ணா.

Chelvi Tamil: My first hero is my father. I never thing he will be my hero forever .He is the best in his life till 86 years old protect all her daughters.

Rave Rajoo: Thank you Sir... its a very nice song.. want ask you something...YALLAI means what Sir... just to know.Tq

B.k. Kumar: பிடித்த கவிஞர் பிடித்த பாடல்

Ajayan Bala Baskaran: மனைவி பெயர்.: ஜீவலட்சுமி

Vimal Sandanam: பொதுவாக சொல்வார்கள் ஐயா. பெண் பிள்ளைகள் அப்பாவிடம் தான் அதிக பாசம் கொள்வார்கள் என்று. அது உண்மை ஐயா. பாடல் வரிகள் அருமை. அவர் மறைந்தாலும் புகழ் மறையாது. நன்றி ஐயா.

Sheila Mohan: அருமையான பதிவு. நன்றிங்க சார்...

Francis Arokiasamy: மிக அருமையான விளக்கம்.. கட்டுரை சிறப்பு

Palar Thangamarimuthu:
🙏

Raja Rajan:
🙏

Letchmy Chengodam:
🙏

Mageswary Muthiah:
🙏

Siva Palani:
🙏

Suria Rich:  🙏

Kevin Karu: 💐👏👏👏❤️🙏 Valthukal Ayya..👍

Palaniappan Kuppusamy:
🙏

Avadiar Avadiar:
Nanri Ayya.

Kody Sivasubramaniam: எந்த ஒரு அலட்டலும் இல்லாத எளிமையான மனிதராய் இருந்து மிகச் சிறப்பான கவிதை வரிகளை பாடலில் கொடுத்த கவிஞர் நா. முத்துக்குமாரை காலன் கொன்று சென்றது என்னையும் கலங்க வைத்தது. மறைந்தாலும் வரிகளின் மூலம் திரும்பவும்!!!!

Muthukrishnan Ipoh: https://www.youtube.com/watch?v=xvo8M3jhQTs
ஆனந்த யாழை

Poovamal Nantheni Devi: ஆனந்தயாழ் எப்பொழுதும் ஆனந்தக் கண்ணீர்...