08 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 3

தமிழ் மலர் - 08.09.2020

இந்தோனேசியர்கள் தங்களின் பூர்வீக ஜாவா தீவை உணர்வு பூர்வமாகப் பூமி ஜாவா (Bhumi Jawa) என்றும்; ஜாவா மண்டலம் (Mandala Jawa) என்றும் அழைக்கிறார்கள். தவிர மஜபாகித் பேரரசை வில்வதீக்தா (Wilwatikta) என்றும் அழைக்கிறார்கள். வில்வதீக்தா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

ராடன் விஜயன் (Raden Wijaya) என்பவர் தான் மஜபாகித் பேரரரசை உருவாக்கியவர். இவருடைய அசல் பெயர் நாராரியா சங்கரமா விஜயா (Nararya Sangramawijaya). சிங்காசாரி அரசின் இளவரசர் மகிசா செண்பகா (Mahisa Campaka) என்பவரின் மகன்.

1289-ஆம் ஆண்டு சிங்காசாரி அரசின் ஒரு பகுதியாக கெடிரி சிற்றரசு (Kediri) இருந்தது. அதன் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang). இவர் சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கலகம் செய்தார். அதில் சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் கொல்லப் பட்டார்.

அதனால் 1292-ஆம் ஆண்டு ராடன் விஜயன், அருகாமையில் இருந்த மதுரா, சும்நாப் (Sumenep, Madura) எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றார். அப்போது மதுராவை ஆரிய வீரராஜா (Aria Wiraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த ஆரிய வீரராஜாவுடன் ராடன் விஜயன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அதாவது, கெடிரி சிற்றரசின் அரசர் ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவரைப் பழி வாங்க ஆரிய வீரராஜா உதவிகள் செய்ய வேண்டும் எனும் ஒப்பந்தம். அதற்கு ஆரிய வீரராஜா சம்மதித்தார். இதில் இன்னும் ஒரு விசயம். என்ன தெரியுங்களா.

ராடன் விஜயனின் மாமனார் கருத்தநாகரன் கொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்த ஜெயகாதவாங்கனுக்கு உதவியாக இருந்தவர் தான் இந்த ஆரிய வீரராஜா.

உண்மை விவரங்கள் தெரியாமலேயே ஆரிய வீரராஜாவிடம் உதவிகள் கேட்கப் பட்டது. இருந்தாலும் ஆரிய வீரராஜா உதவிகள் செய்தார். கெடிரி சிற்றரசிற்கு எதிராகப் போர் நடந்தது. அதில் ராடன் விஜயன் வெற்றி பெற்றார்.

மதுரா அரசர் ஆரிய வீரராஜாவிற்கு ஒரு மகன் இருந்தார். அவருடைய பெயர் ரங்கா லாவன் (Ranggalawe). இவர் தான் ராடன் விஜயனின் படைகளுக்குச் சேனாதிபதியாக இருந்தவர். இதன் பின்னர் கெடிரி சிற்றரசு தோற்கடிக்கப்பட்டது. அந்தச் சுவட்டில் 1293-ஆம் ஆண்டு, மஜபாகித் அரசு என்று ஒரு புதிய அரசு உருவானது.

அதன் பின்னர் கருத்தநாகரன் தலைநகரத்தின் பெயரும் மஜபாகித் என்று மாற்றம் செய்யப் பட்டது. அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் தலைநகரத்தின் பெயரிலேயே அந்த நாட்டின் பெயரும் அழைக்கப் பட்டது.

அது ஒரு மரபு. ஆக மஜபாகித் மன்னரால் ஆளப்பட்ட அந்த நாடு முழுமையும் மஜபாகித் என்று வாகை சூடியது. சரிங்களா. இதற்கும் சான்றுகள் உள்ளன.

முதல் சான்று:
(Mahandis Y. Thamrin, National Geographic Indonesia. September 2012).

இரண்டாம் சான்று:
(The Brunei Museum journal, Volume 4, Issue 1 – Page 192)

மஜபாகித் பேரரசராக ராடன் விஜயன் முடிசூட்டிக் கொண்டார். தன்னுடைய பெயரை கிரிதராஜாசா ஜெயவர்த்தனா (Kritarajasa Jayavardhana) என்று மாற்றிக் கொண்டார்.

பின்னர் கர்த்தநாகரனின் மகள்கள் மற்ற மூவரையும் ராடன் விஜயன் மணந்து கொண்டார்.

1. மூத்த மகள் பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி (Paramesvari Tribhuwaneswari). இந்தத் திருமணத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் கலா கீமது (Kala Gemet). இவர் கெடிரி சிற்றரசின் இளவரசராக நியமிக்கப் பட்டார்.

2. பிரஜன பரமிதா (Prajnaparamita);

3. நரேந்திர துகிதா (Narendraduhita)  

ராடன் விஜயன் ஏற்கனவே சிங்காசாரி அரசர் கருத்தநாகரன் மகள் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni) என்பவரை திருமணம் செய்து இருந்தார். சிங்காசாரி வீழ்ச்சிக்கு முன்னரே அந்தத் திருமணம் நடைபெற்று விட்டது. இவர் தான் அந்த 4 சகோதரிகளில் ஆக இளையவர்.

அர்ச உரிமைகளில் பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு சகோதரிகளையும் ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார்.

(According to George Coedes, prior to the fall of Singhasari, Raden Wijaya was married to Gayatri Rajapatni, the daughter of Kertanegara. However, during the formation of the new kingdom Majapahit, he married the four daughters of Kritanagara, and the eldest, Queen Paramesvari Tribhuvana, bore him a son. This son, Kala Gemet, was crowned Prince of Kediri in 1295.)

Source: Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 201.

அடுத்து சுமத்திரா மலாய் இளவரசி இந்திரேஸ்வரி (Indreswari) என்பவரையும் மணந்து கொண்டார். ஆக, ராடன் விஜயனுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள்.

(Raden Wijaya also took Indreswari also known as Dara Petak, supposedly a princess of Malayu Dharmasraya Kingdom brought by Kebo Anabrang to Majapahit court from Sumatra through Kertanegara's Pamalayu expedition.)

மஜபாகித் தோற்றுவிக்கப் பட்ட காலத்தில் ராடன் விஜயன் பற்பல கலகங்களைச் சந்தித்தார். இருந்தாலும் மஜபாகித் அரசை மிக உறுதியாக நிறுவிக் கொண்டார். இப்படித் தான் மஜபாகித் அரசு உருவானது.
 
ஐந்தாவது மனைவி இந்திரேஸ்வரி மூலமாக ராடன் விஜயனுக்கு ஒரே ஒரு மகன். காயத்திரி ராஜபத்தினி மூலமாக இரண்டு மகள்கள். திரிபுவனா விஜயதுங்கா தேவி; ராஜா தேவி. அவரது முதல் மனைவி பரமேஸ்வரி  திரிபுவனேஸ்வரி உட்பட மற்ற மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை.

ராடன் விஜயனின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய மகன் ஜெயநகரா (Jayanegara) மஜபாகித் அரசர் பதவியை ஏற்றுக் கொண்டார். மஜபாகித் பேரரசின் இரண்டாவது அரசர். சரி.

இந்தோனேசியாவில் கி.பி. 1811 முதல் கி.பி. 1816 வரை, ஜாவாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி. அதாவது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் (British East India Company) ஆட்சி.

அதன் ஆளுநராக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் இருந்தார். அவருடைய ஆட்சியின் காலத்தில் தான் ஜாவா துரோவுலான் (Trowulan) பகுதியில் மஜாபாகித் சிதைவுகள் கண்டுபிடிக்கப் பட்டன.

லயங்களின் சிதைவுகள் பரவிக் கிடந்ததாக ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் கூறி இருக்கிறார் (ruins of temples.... scattered about the country for many miles).

துரோவுலான் நிலப் பகுதி ஜாவாவின் வரலாற்று அருமைகளுக்குப் பெருமை சேர்க்கிறது என்று புகழாரம் செய்தும் இருக்கிறார்.

மஜபாகித்தின் சிதைவு வடிவங்கள்; கலைநயப் படிமங்கள் மிகக் குறைந்த அளவில் தான் கிடைத்து இருக்கின்றன. எரிமலை வெடிப்பினாலும்; வெள்ளப் பெருக்கினாலும் மஜபாகித் பேரரசின் பொக்கிஷங்கள் சிதைந்து போய் விட்டன.

மண்ணுக்குள் பல மீட்டர்கள் ஆழத்தில் அந்தச் சிதைவுகள் இன்னும் உள்ளன. இருப்பினும் இந்தோனேசிய மக்கள் மஜாபாகித்தை மறக்கவில்லை. சான்றுகளை இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மஜபாகித் சொல்வனம் என்பது பொன் முட்டைகள் கொடுக்கும் ஒரு தங்கப் பறவையாகப் பார்க்கிறார்கள். ஏன் தெரியுங்களா.

மஜபாகித் சின்னங்களையும் சிறப்புகளையும் பார்க்கப் பல்லாயிரம் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் வருகிறார்கள். இலட்சக் கணக்கில் செலவு செய்கிறார்கள். அதை நம்பி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

கம்போடிய மக்களுக்கு ஓர் அங்கோர் வாட் என்றால் துரோவுலான் மக்களுக்கு ஒரு மஜபாகித்.

மஜபாகித் தேடல்களுக்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாபத் தானா ஜாவி (Babad Tanah Jawi) எனும் ஒரு வரலாற்று நூல் மேலும் சான்று பகிர்கின்றது.

(Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. பக்: 29.)

இந்த நூல் ஜாவா மொழியில் எழுதப் பட்டது. மஜபாகித்தை மொஜொபாயிட் (Mojopait) என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.

தவிர 1365-இல் ஜாவாவில் ஒரு நூல் எழுதப் பட்டது. அதன் பெயர் நகரகிரேதாகமம் (Nagarakretagama).

பாலித் தீவு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தோனேசியாவில் அதிகமான இந்துக்கள் வாழும் தீவு. அந்தத் தீவிற்கு அருகில் லொம்போக் தீவு இருக்கிறது. இந்தத் தீவை 1890-களில் சாகரநகர அரச வம்சாவழியினர் (Cakranegara) ஆட்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தீவின் மீது 1894-இல் டச்சுக்காரர்கள் படை எடுத்தார்கள். அப்போது தான் நகரகிரேதாகமம் எனும் கவிதை வடிவிலான நூல், டச்சுக்காரர்களின் கரங்களில் சிக்கியது. அந்த நூலில் இருந்து தான் மஜபாகித்தைப் பற்றிய பல அரிய பெரிய உண்மைகளும் தெரிய வந்தன.

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd Ed.). Stanford University Press / Macmillans.)  

அடுத்து இன்னும் ஒரு நூல். 1600-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது. எந்த ஆண்டு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அதன் பெயர் பரராத்தன் (Pararaton). 32 பக்கங்கள். 1126 வரிகள்.

(J.J. Ras, 1986, Hikayat Banjar and Pararaton. A structural comparison of two chronicles. In: C.M.S. Hellwig and S.O. Robson)

இந்த நூல் மஜபாகித் பேரரசைப் பற்றியும் சிங்கசாரி பேரரசைப் பற்றியும் விரிவாகச் சொல்கின்றது. மேல் அதிக ஆய்வுகளுக்கும் வழி வகுத்துக் கொடுக்கிறது.

ராஜசா (Rajasa) எனும் அரசர் சிங்கசாரி பேரரசை 1227-ஆம் ஆண்டு எப்படி தோற்றுவித்தார் என்றும் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. ராஜசாவின் இயற்பெயர் ஸ்ரீ ரங்கா ராஜசா பத்தர அபூர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Aburwabhumi).

இருந்தாலும் இந்தோனேசிய வரலாற்றில் இவருடைய பெயர் கென் அரோக் (Ken Arok) என்று குறிப்பிடப் படுகிறது.

மஜபாகித் பேரரசின் அரசர்கள் அனைவரும் ராஜசாவின் வழித்தோன்றல்கள் ஆகும். தவிர இந்தோனேசியாவை ஆட்சி செய்த மத்தாரம் பேரரசின் மன்னர்களும் அதே இந்த ஸ்ரீ ரங்கா ராஜசாவின் வழித்தோன்றல்கள்.

(Johns, A. H. (1964). "The Role of Structural Organisation and Myth in Javanese Historiography". The Journal of Asian Studies. 24: 91.)

மஜபாகித் பேரரசு இந்தோனேசியாவின் மகா பெரிய பேரரசு. ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்காசியத் துணைக் கண்டமே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது.

இந்தோனேசியா எனும் நாட்டிற்கு இன்று பெரிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதற்கு அன்றைய மஜாபாகித் பேரரசின் பரந்து விரிந்து நிறைந்த நிலப்பகுதிகள் தான் முக்கியக் காரணமாகும்.

அந்த அளவிற்கு மஜபாகித் பேரரசு பெரும் நிலப்பரப்பைக் கொண்டு ஆளுமை செய்து இருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகளும்; தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இப்படி ஓர் ஆளுமையா? தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்களின் ஆளுமைக்கு இதைவிட வேறு என்னங்க சான்று வேண்டும்.

இந்தோனேசியாவில் இந்தியர்கள் சார்ந்த நீண்ட கால வரலாற்றுச் சுவடுகள் நிறையவே உள்ளன. அந்த வரலாற்றுச் சுவடுகளை இந்தோனேசியர்கள் மறைக்கவில்லை. மறைக்க முயற்சிகள் செய்யவும் இல்லை. மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். முழுமனத்துடன் வாழ்த்துகின்றார்கள். வாயாரப் போற்றுகின்றார்கள். பரந்த மனம் கொண்டவர்கள்.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். இப்போது பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சும் நிலை. வந்தேறிகள் என்று இகழ் பாடப் படும் இனமாய் அல்லாட வேண்டிய அவலநிலை.

சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு ரொம்பவுமே வெம்பிப் போகிறது. போராடுவோம். போராடிக் காட்டுவோம். வேறு வழி இல்லை.

மஜபாகித் பேரரசு இன்றும் சரி; இனி என்றும் சரி; வரலாற்றுச் சங்கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே தான் இருக்கும். வாழ்க மஜபாகித். வளர்க இந்தோனேசியா வரலாறு.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.09.2020




 

சீமா சத்யா கலிங்கா மகாராணியார்

இவரின் பட்டத்துப் பெயர் ஸ்ரீ மகாராணி மகிசா சூரமருதினி சத்யா புதிகேசுவரா (Sri Maharani Mahissa Suramardini Satya Putikeswara). மிக நீண்ட பெயர். சுருக்கமாக சீமா சத்யா (Queen Shima Satya).

பெயரைப் போலவே இவருடைய ஆட்சியிலும் நீண்ட வரலாறு உள்ளது. சீமா என்றால் ஜாவானிய மொழியில் (Javanese Simo means lion) சிங்கம்.

(Shima was the queen regnant of the 7th century Kalingga kingdom on the northern coast of Central Java circa 674 CE)

கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கத்துப் பேரரசின் முதலாவது பெண் தளபதி; முதலாவது பேரரசியார். போர் முனையில் கலிங்கத்துப் படைகளை வழி நடத்தியவர். 21 ஆண்டுகள் ஆட்சி.

ஆயிரம் ஆயிரம் ஆண்களைக் கொண்ட குதிரைப் படைக்கும் காலாட் படைக்கும் தளபதியாக முன் நின்று வாள் ஏந்தியவர். வீரப் பெண்மணிகள் ஜான்சி ராணி; ருத்ரமா தேவி; வேலுநாச்சியார்; அப்பக்கா சவதா; சென்னம்மா; ராணி மங்கம்மாள்; தாரா பாய் போன்றவர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் மகாராணியார் சீமா.

இந்தோனேசிய வரலாற்றில் உச்சம் பார்த்த பேரரசு ஸ்ரீ விஜய பேரரசு. அந்தப் பேரரசில் சேவை செய்த ஒரு பண்டிதரின் மகள் தான் மகாராணியார் சீமா.

கி.பி 611-ஆம் ஆண்டு முசி பன்யுவாசின் (Musi Banyuasin) எனும் இடத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இருக்கிறார்.  

இவர் கலிங்கத்துப் பேரரசின் இளவரசர் கார்த்திகேய சிங்கா (Kartikeya Singa) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேய சிங்காவின் தந்தையார் கலிங்கப் பேரரசின் (Kalingga Kingdom) மாமன்னர் ஆகும்.

கி.பி 648-ஆம் ஆண்டில் மாமன்னர் கார்த்திகேய சிங்காவின் தந்தையார் இறந்தார். கார்த்திகேய சிங்கா அரியணை ஏறினார்.

கலிங்கத்துப் பேரரசு இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்தது. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. [#1]

[#1]. https://www.viva.co.id/berita/nasional/618022-melacak-situs-kerajaan-kalingga-yang-terlupakan

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை 200 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு ஜாவாவில் ஆட்சி செய்து இருக்கிறது. சீனர்கள் இந்த அரசை ஹெலிங் (Helíng) என்று அழைத்து இருக்கிறார்கள். [#2]

[#2]. Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52

கி.பி. 674-ஆம் ஆண்டில் சீமா சத்தியாவின் கணவர் கார்த்திகேய சிங்கா இறந்ததும், கலிங்கத்துப் பேரரரசின் தலைமைப் பதவியை சீமா சத்தியா ஏற்றுக் கொண்டார்.

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் ஆணாதிக்கத்தின் அழுத்தங்களால் மறைக்கப்பட்டு இருக்கலாம்.

சீமா மகாராணி ஒரு நேர்மையான, நியாயமான, கண்டிப்பான ராணியாக வாழ்ந்து இருக்கிறார். நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.[#3]

[#3]. She introduced a law against thievery to encourage her people to be honest and uphold truth.

"Melacak Situs Kerajaan Kalingga yang Terlupakan". Viva.co.id. 24 April 2015: Dengan ditemukannya benda purbakala bersejarah tersebut terbukti bahwa ada kerajaan Kalingga yang diperintah oleh Ratu Shim. Dugaan  kuat lokasinya di daerah Keling Jepara, bukan daerah Keling Malaya.

Kerajaan Kalingga dikenal juga dengan nama kerajaan Ho-ling oleh orang-orang Tionghoa. Menurut catatan bangsa Tionghoa, Ho-ling dipercaya muncul ketika terjadi ekspansi besar oleh dinasti Syailendra.


மிகவும் புத்திசாலித்தனமான, நீதியான ராணியார். இவரின் ஆட்சியின் போது, குடிமக்கள் சட்டத்தை மிகவும் மதித்தார்கள். தரையில் விழுந்த ஒரு ஒரு மாம்பழத்தைக் கூட உரிமையாளர் அனுமதி இல்லாமல் எடுக்க மாட்டார்களாம். அப்படி கண்டிப்பாக ஆட்சி செய்து இருக்கிறார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020

சான்றுகள்:

1. https://timesof.befren.com/2020/08/history-of-queen-shima-in-indonesia.html

2. https://en.wikipedia.org/wiki/Shima_(queen)

3. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd.


07 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 2

 தமிழ் மலர் - 07.09.2020

லக்சா (Laksa). ஓர் உள்நாட்டு உணவு. தெரியும் தானே. மலேசியர்களில் பலருக்கும் பிடித்தமான உணவு. இந்த லக்சா இருக்கிறதே இது அந்தக் காலத்தில் மஜபாகித் மக்களுக்கு ரொம்பவும் விருப்பமான உணவு. அவர்கள் தான் இந்த லக்சா உணவை 13 – 14-ஆம்  நூற்றாண்டுகளில் மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள்.

மலாக்காவை பரமேஸ்வரா ஆட்சி செய்த காலத்தில் தான், லக்சா மலாக்காவில் அறிமுகம் ஆனது என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் சீன கடல் தளபதி செங் ஹோ என்பவர் தான் அறிமுகம் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்தியாவில் இருந்து வந்தது என்றும் சொல்கிறார்கள்.  

(After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)

Source: https://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm

உண்மையான உண்மைகளை ஒரு சிலர் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா. தெரியவில்லை. பாட்டி சுட்ட வடையை காக்கா கொத்திக் கொண்டு போனது பழைய கதை. பலருக்கும் தெரிஞ்ச கதை தான்.

இருந்தாலும் இப்போது இட்லி, இடியப்பம், தோசை, சட்ணி எல்லாவற்றையும் பட்ட பகலிலேயே கொத்திக் கொண்டு போகிறார்களே. என்னங்க சொல்வது. இதில் மஜபாகித் லக்சா எங்க மாமியார் காலத்து மசாலா சூப் கறி என்று சொன்னாலும் சொல்லலாம். அண்மைய கால வரலாற்றில் என்ன என்னவோ குழப்படிகள்; என்ன என்னவோ திருகுதாளங்கள். விடுங்கள்.  

இந்தோனேசியாவை இந்தியர்கள் சார்ந்த அரசுகள் 1370 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளன. மொத்தம் 16 பேரரசுகள். இவற்றுள் மிகவும் வலிமை வாய்ந்தது மஜபாகித் பேரரசு. அந்த மஜபாகித் பேரரசின் கீழ் 98 சின்னச் சின்ன சிற்றரசுகள். மலையூர் என்று அழைக்கப்படும் மலாயா தீபகற்பமும் மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நிலப் பகுதி தான்.

பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. இதில் ஸ்ரீ விஜய பேரரசைச் சேர்க்கவில்லை. ஏன் என்றால் இந்த மஜபாகித் அரசு, கி.பி.1300-ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

(http://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm -  1350-1400Majapahit empire controlled most of Peninsular Malaysia and the Malay Archipelago.)

குப்ளாய் கான். தெரியும் தானே. சீன நாடு பார்த்த மாபெரும் அரசர். வரலாற்றுப் புகழ் ஜெங்கிஸ் கானின் பேரன். குப்ளாய் கான் தந்தை தொலூய் கான் (Tolui Khan). அவரின் நான்கு மகன்களில் இளையவர். மூத்த சகோதரர் (Mongke Khan) மாங்கி கானுக்குப் பிறகு பதவிக்கு வந்தவர். கி.பி.1280-ஆம் ஆண்டுகளில் அவர் சீனா நாட்டை ஆட்சி செய்து வந்தார். சரி.

சிங்காசாரி (Singhasari) என்கிற ஓர் அரசு அப்போது, அதாவது சீவை குப்ளாய் கான் காலத்தில், இந்தோனேசியத் தீவுக் கூட்டத்திலேயே ஆற்றல் வாய்ந்த ஒரு பெரிய அரசாக விளங்கியது.

அதன்  அதிகாரம்; ஆதிக்கம்; வணிகத் துறை வளர்ச்சிகளினால் சீனாவின் வாணிகம் பாதிக்கப் பட்டது. அத்துடன் சீனாவின் எதிரியாகக் கருதப்பட்ட வியட்நாம் நாட்டு சாம்பா (Champa) அரசுடன் சிங்காசாரி நெருக்கமான உறவுகளையும் வைத்துக் கொண்டு இருந்தது.

அதனால் சிங்காசாரி அரசிடம் திறை கேட்டு குப்ளாய் கான் தூது அனுப்பினார். அப்போது சிங்காசாரியின் அரசராக கர்த்தநாகரன் (Kertanegara) என்பவர் இருந்தார். கர்த்தநாகரனுக்குக் குப்ளாய் கானின் மீது சரியான கோபம். என்ன சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். ஒரு கற்பனையில் கர்த்தநாகரனின் வீரவசனங்கள் வருகின்றன.

வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் என் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே. யாரைக் கேட்கிறாய் வரி. எவரைக் கேட்கிறாய் வட்டி. எதற்கு கேட்கிறாய் வரி.

வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. இரண்டாயிரம் கி.மீ. அப்பால் சீனாவில் இருக்கும் உனக்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும். கர்த்தநாகரன் விலாசித் தள்ளி விட்டார். இது நடந்தது கி.பி. 1280-ஆம் ஆண்டில்.

1281-ஆம் ஆண்டு குப்ளாய் கான் மறுபடியும் ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார். இறுதியாக 1289-ஆம் ஆண்டில் மற்றும் ஒரு தூதுக் குழு. இந்தத் தடவை குப்லாய் கானின் தூதுவனின் முகத்தில் பச்சை குத்தப் பட்டது. அவனுடைய காதுகள் அறுக்கப் பட்டன. மோசமாக இழிவுபடுத்தப் பட்டு சீனாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டான்.

(Codes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.)

சறுக்கினது சாக்கு என்று காத்து நின்ற குப்ளை கானுக்குச் சரியான சவால்.  கருத்தநாகரனைப் பழி வாங்குவதற்காக 1000 கப்பல்களை ஜாவாவிற்கு அனுப்பி வைத்தார். இது 1293-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. இதுவும் ஒரு நீண்ட கதை. பிறகு பார்ப்போம்.

(https://en.wikipedia.org/wiki/Majapahit#Formation)

1290-ஆம் ஆண்டுகளில் சிங்காசாரி பேரரசிற்குத் திறை செலுத்தும் ஓர் அரசாகக் கெடிரி எனும் ஒரு சிற்றரசு (Kediri Kingdom) இருந்தது. அதாவது அடிமை அரசு. அதன் அரசராக ஜெயகாதவாங்கன் (Jayakatwang) என்பவர் இருந்தார்.

அதே காலக் கட்டத்தில் இந்தோனேசியாவின் மதுரா தீவை வீரராஜன் (Arya Viraraja) என்பவர் ஆட்சி செய்து வந்தார். தமிழகத்தின் மதுரை மாநகரின் பெயரைக் கொண்டது இந்த மதுரா தீவு. இந்தோனேசியா ஜாவா தீவின் வட கிழக்குக் கரையோரத்தில் இருக்கிறது. பரப்பளவில் நம் நெகிரி செம்பிலான் மாநில அளவு. சரி.

கெடிரி சிற்றரசின் அரசராக இருந்த ஜெயகாதவாங்கன் மதுரா தீவின் வீரராஜனுடன் இணைந்து பேரம் பேசிக் கொண்டார். சிங்காசாரி அரசிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்து எப்படியாவது அதைக் கவிழ்த்துவிட வேண்டும். அதுதான் ஜெயகாதவாங்கனின் தலையாயப் பெரும் திட்டம்.

அந்த நகர்வில் சிங்காசாரி அரசின் மீது  தாக்குதல்கள் தொடுக்கப் பட்டன. கெடிரி அரசு வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் ஒரே சமயத்தில் சிங்காசாரியைத் தாக்கின. மதுரா அரசு கிழக்கில் இருந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது.

கருத்தநாகரன் ஒரு பேரரசர். இருந்தாலும் எதிரிகளின் ஆற்றல்களைத் தவறாக எடைபோட்டு விட்டார். வடக்கில் இருந்து மட்டும் தான் முற்றுகை வரும் என்பது அவரின் தவறான வியூகம்.

தன் மருமகன் ராடன் விஜயனை ஒரு போர்ப் படையுடன் அங்கு அனுப்பி வைத்தார். ராடன் விஜயனின் அசல் பெயர் சங்கர ராம விஜயன் (Nararya Sanggramawijaya).

வடக்கில் இருந்த வந்த தாக்குதல் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப் பட்டது. ஆனாலும் தெற்கில் இருந்து வந்த தாக்குதலை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்காசாரி நகர் வீழ்ந்தது. பேரரசர் கர்த்தநாகரன் பிடிபட்டார். நரபலி எனும் பெயரில் கொலை செய்யப் பட்டார்.

அத்துடன் சிங்காசாரி எனும் மபெரும் அரசு இந்தோனேசிய வரலாற்றில் இருந்து கசக்கி வீசப் பட்டது. இதை ஏன் சொல்ல வருகிறேன். அதற்கும் காரணம் இருக்கிறது. சிங்காசாரி அரசு வீழந்த பின்னர் தான் அதன் அடிச்சுவட்டில் மஜபாகித் எனும் ஒரு பேரரசே உருவானது. சரிங்களா.

(Bullough, Nigel (1995). Mujiyono PH, ed. Historic East Java: Remains in Stone. Jakarta: ADLine Communications. p. 19. - Kediri or Kadiri also known as Panjalu was a Hindu Javanese Kingdom based in East Java from 1042 to around 1222.)

கருத்தநாகரனின் மருமகன் ராடன் விஜயன் என்று சொல்லி இருக்கிறேன். இந்த ராடன் விஜயனின் தந்தையார் பெயர் ராக்கையன் ஜெயதர்மா (Rakeyan Jayadarma). இந்த ராக்கையன் ஜெயதர்மா என்பவர் மேற்கு ஜாவாவில் இருந்த (Sunda Kingdom) சுந்தா பேரரசைச் சேர்ந்தவர். சுந்தா பேரரசு கி.பி. 669-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1579 வரை மேற்கு ஜாவாவில் கோலோச்சிய மற்றொரு மாபெரும் இந்தியர் அரசு.

ராடன் விஜயனின் தாயார் தயா லெம்பு தாழ் (Dyah Lembu Tal). இவர் சிங்காசாரி அரசைச் சார்ந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் பத்திர நரசிங்கமூர்த்தி (Bhatara Narasinghamurti).

ஒரு கட்டத்தில் ராடன் விஜயனின் தந்தையார் ராக்கையன் ஜெயதர்மா, விசம் வைத்துக் கொல்லப் பட்டார். அதனால் ராடன் விஜயனின் தாயார் தன் மகன் விஜயனை அழைத்துக் கொண்டு அவரின் பிறப்பிடமான சிங்காசாரி அரசிற்கே திரும்பி வந்து விட்டார்.

அதன் பின்னர் கருத்தநாகரனின் மகளை ராடன் விஜயன் திருமணம் செய்து கொண்டார். கருத்தநாகரனின் மகளின் பெயர் காயத்திரி ராஜபத்தினி (Gayatri Rajapatni).

(Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.)

சிங்காசாரி அரசு வீழ்ந்ததும் கருத்தநாகரன் கொல்லப் பட்டார். சரி.

மாமனார் கருத்தநாகரனின் இறப்பிற்கு இழப்பீடாக அவருடைய மருமகன் ராடன் விஜயனுக்கு, ஜாவா காட்டுப் பகுதியில் சின்னதாக ஒரு நிலப் பகுதி வழங்கப் பட்டது. அந்த நிலம் கிழக்கு ஜாவாவில் துரோவுலான் (Trowulan) மாவட்டத்தில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இப்போது இந்த இடத்தில் தான் துரோவுலான் அரும்பொருள் காட்சியகத்தை அமைத்து இருக்கிறார்கள். அந்தக் காட்சியகத்தை இந்தோனேசிய அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறது. துரோவுலான் நிலப் பகுதியில் தான் மஜபாகித் பேரரசின் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப் பட்டன.

இங்கே இருக்கும் கெலுட் எரிமலை (Mount Kelud) கி.பி.1334-ஆம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அதனால் மஜபாகித் பேரரசின் கோட்டைகளும், ஆலயங்களும், வழிபாட்டுத் தளங்களும், அரண்மனைகளும் பெரிதும் பாதிக்கப் பட்டன. மீட்டு எடுக்கப் பட்ட மஜபாகித் தொல் பொருட்களின் பட்டியலையும் பொருட்களின் விவரங்களையும் வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். சரி.

அடுத்து மஜபாகித் பேரரசின் கோட்டைகள், குளங்கள், கோயில்களை எல்லாம் பல மீட்டர்கள் ஆழத்திற்கு எரிமலைச் சாம்பல்கள் மூடி இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்தோனேசிய அரசாங்கம் மீட்டு எடுத்து புனரமைப்பு செய்து வருகிறது. 2008ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமான மீட்புப் பணிகளில் களம் இறங்கியது.

மஜபாகித் பூங்கா (The Majapahit Park) எனும் மற்றொரு காட்சியகத்தையும் இந்தோனேசிய அரசாங்கம் அமைத்து இருக்கிறது. தவிர 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துரோவுலான் அரும்பொருள் காட்சியகத்திற்கு மற்றும் ஓர் அங்கீகாரம் கிடைத்தது.

ஐக்கிய நாட்டுச் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (United Nations Educational, Scientific, and Cultural Organization) வழங்கிய அனைத்துலகப் பாரம்பரியத் தகுதி தான் அந்த அங்கீகாரம் ஆகும்.

இதைப் பற்றி சீதா தேவி என்பவர் ஜகார்த்தா போஸ்ட் எனும் நாளிதழில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தச் சீதா தேவி என்பவர் இந்தியர் அல்ல. ஓர் இந்தோனேசியப் பெண்மணி. இணைய முகவரி:

http://www.thejakartapost.com/news/2013/04/09/tracing-glory-majapahit.html.

சரி. ராடன் விஜயனுக்கு இழப்பீடாகக் கொடுக்கப்பட்ட காடுகள் விசயத்திற்கு வருவோம். ராடன் விஜயன் அந்தக் காடுகளை அழித்து ஒரு புதுக் குடியிருப்பாக மாற்றினார். காட்டு மரங்களை வெட்டி வீழ்த்த உள்ளூர் இந்தோனேசிய மக்களைக் பயன்படுத்திக் கொண்டார். மறுபடியும் சொல்கிறேன். இது 1293-இல் நடந்த நிகழ்ச்சி.

காடுகள் அப்படி அழிக்கப்பட்ட போது இந்தோனேசிய வேலைக்காரர்கள் ஒரு வில்வ மரத்தின் பழங்களைச் சாப்பிட வேண்டிய ஒரு கட்டம். விலவ பழங்கள் கசப்பானவை. தெரியும் தானே. பழங்களைச் சாப்பிட்ட வேலைக்காரர்கள் ஜாவா மொழியில் மஞ்சாக் பாகிட் (Manyak Pahit) என்று சொல்லி ஆதங்கப்பட்டு இருக்கிறார்களாம்.

அதுவே அந்த இடத்திற்கு மஞ்சாக் பாகிட் என்று நிலைத்தும் போனது. அது மட்டும் அல்ல. மஜபாகித்தை மோஜோபாயிட் (Mojopait) என்றும் கிராமவாசிகள் அழைத்து இருக்கிறார்கள்.

அப்புறம் காலப் போக்கில் மஞ்சாக் பாகிட் எனும் அந்த இரு சொற்கள் மஜபாகித் என்று திரிந்து போனது. இப்படியும் ஒரு வரலாற்று உள்ளது. இருந்தாலும் இந்தப் பெயர் திரிதலுக்கு மிகச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

மஞ்சாக் பாகிட் எனும் சொற்களில் இருந்து மஜபாகித் எனும் சொல் வந்து இருக்க முடியாது என்பதே என் தாழ்மையான கருத்து. மஜா பாக்கியம் எனும் சொற்களில் இருந்து மஜா பாகியா எனும் சொற்கள் உருவாகி இருக்கலாம். அந்தச் சொற்களில் இருந்து மஜபாகித் சொல் தோன்றி இருக்கலாம் என்பது என் கருத்து.

இந்த ராடன் விஜயன் எப்படி குப்ளாய் கானின் கடல் படையைத் தோற்கடித்தார். அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020



சைலேந்திரா அரசர்கள்

இந்தோனேசியா, ஜாவா தீவில் 7-ஆம்; 8-ஆம் நூற்றாண்டுகளில் உருவானது சைலேந்திரா பேரரசு. மத்திய ஜாவா, கெடு (Kedu Plain) பள்ளத்தாக்கில் நிறைய பௌத்த ஆலயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். பௌத்த விகாரங்கள் என்று சொல்லலாம்.

பிரம்பானான் கோயில்

சைலேந்திரா (Shailendra) என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஆங்கிலத்தில் (Sailendra, Syailendra or Selendra). சைலா (Saila) எனும் சொல்லும் இந்திரா (Indra) எனும் சொல்லும் இணைந்த ஒரு கூட்டு வடிவம். மலைகளின் அரசன் (King of the Mountain) என்று பொருள். நிறைய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்திய அரசு.

ஸ்ரீ விஜயம் (Srivijaya Kingdom); மேடாங் பேரரசு (Medang Kingdom) ஆகியவற்றை சைலேந்திரா அரசர்கள் ஆட்சி செய்யும் போது பௌத்த மதத்தின் மகாயானா வழிபாட்டிற்கு (Mahayana Buddhism) முக்கியத்துவம் கொடுத்தவர்கள்.[#1] அதற்கு முன்னர் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள்.

[#1]. Zakharov, Anton A (August 2012). "The Sailendras Reconsidered" (PDF). nsc.iseas.edu.sg. Singapore: The Nalanda-Srivijaya Centre Institute of Southeast Asian Studies.

சைலேந்திரா அரசர்கள் உருவாக்கிய அழகுச் சின்னங்களில் ஒன்றுதான் உலகப் புகழ் போரோபுதூர் (Borobudur) ஆலயம். ஐ.நா. யுனெஸ்கோ கல்வி, கலாசார பாதுகாப்பு அமைப்பு (UNESCO World Heritage Site.)[#2] இந்த ஆலயத்தை உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து உள்ளது.

[#2] Shailendras during the height of their power in central Java constructed impressive monuments and temple complexes, the best known of which is the Borobudur on the Kedu Plain

Balaputra Dewa

சைலேந்திரா அரசர்கள் பட்டியல்:

1. சந்தானு (Santanu கி.பி. 650)

2. தபுந்தா சைலேந்திரன் (Dapunta Selendra கி.பி. 674)

3. சீமா மகாராணியார் (Shima - கி.பி. 703 - கலிங்கா Kalingga) பேரரசு

4. மந்திமீனன் (Mandiminya  - கி.பி. 703 - கி.பி. 710)

5. சானான் (Sanna - கி.பி. 710 - கி.பி. 717)

6. சஞ்சயன் (Sanjaya - கி.பி. 717 - கி.பி. 760 - மத்தாரம் Mataram) பேரரசு

7. ராக்காய் பனங்கரன் (Rakai Panangkaran - கி.பி. 760 - கி.பி. 775 - மத்தாரம் Mataram) பேரரசு [#3]

8. தரநீந்தரன் (Dharanindra - கி.பி. 775 - கி.பி. 800 - மத்தாரம் Mataram) பேரரசு [#4]  

9. சமராகவீரன் (Samaragrawira - கி.பி. 800 - கி.பி. 812 - மத்தாரம் Mataram) பேரரசு

10. சமரதுங்கன் (Samaratungga - கி.பி. 812 - கி.பி. 833 - மத்தாரம் Mataram) பேரரசு [#5]

11. பிரேமதா வர்த்தனி மகாராணியார் (Pramodhawardhani - கி.பி. 833 - கி.பி. 856 - மேடாங் Medang) பேரரசு

12. பாலபுத்திர தேவா (Balaputradewa - கி.பி. 833 - கி.பி. 856 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு

13. ஸ்ரீ உதயதித்ய வர்மன் (Sri Udayadityavarman - கி.பி. 960 - (?) ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு

14. ஹியா சே (Hia-Tche - கி.பி. 980 - கி.பி. 988 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு (சீனாவின் தற்காலிக ஆளுமை)

15. ஸ்ரீ சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa - கி.பி. 988 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு (சீனாவின் தற்காலிக ஆளுமை)

16. ஸ்ரீ மரவிஜய துங்கா (Sri Maravijayottungga - கி.பி. 1008 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு

17. சுமத்திர பூமி (Sumatrabhumi - கி.பி. 1017 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு

18. சங்கர ராம விஜயதுங்க வர்மன் (Sangrama Vijayatunggavarman - கி.பி. 1025 - ஸ்ரீ விஜயம் Srivijaya) பேரரசு

[#3]. ராக்காய் பனங்கரன் சைவ சமயத்தில் இருந்து மகாயன பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். இந்தக் காலக் கட்டத்தில் கலாசான் புத்த ஆலயம் கட்டப்பட்டது.

(Rakai Panangkaran converted from Shaivism to Mahayana Buddhism, construction of Kalasan temple.)

[#3] Source: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 89.

[#4] கேலுராக் கல்வெட்டு (782); லிகோர் கல்வெட்டு (கி.பி. 782). தரநீந்தரன்  ஸ்ரீவிஜயாவை ஆட்சி செய்தார். மஞ்சு ஸ்ரீ கிரகம் கோயில் கட்டப் பட்டது. போரோபுதூர் கட்டுமானம் தொடங்கியது (கி.பி. 770). லிகோர் எனும் தென் கம்போடியாவின் சென்லா அரசையும் ஆட்சி செய்தார் (கி.பி. 790).

[#4] Kelurak inscription (782); Ligor inscription (782). Dharanindra ruled Srivijaya in Sumatra, construction of Manjusrigrha temple, started the construction of Borobudur (c. 770), Java ruled Ligor and Southern Cambodia (Chenla) (c. 790).

[#5] போரோபுதூர் ஆலயம் கட்டி முடிக்கப் பட்டது.

[#5] Completion of Borobudur (825)

[#6] பிரம்பனான் சிவன் ஆலயம் கட்டுமானம் தொடங்கியது. முடித்து வைத்தவர் பிரேமதா வர்த்தனி மகாராணியார். இருந்தாலும் இவர் பௌத்த மதம் சார்ந்தவர். இவருடைய கணவர் ஓர் இந்து (Rakai Pikatan). அதனால் பிரம்பனான் ஆலயம் கட்டுவதற்கு தீவிரம் காட்டினார்.

[#6] Construction of Prambanan Shiva Temple started. The initiator was Maharani Pramodhawardhani.

சைலேந்திரா வம்சாவழியினர் ஆளுமையில், ஆக மொத்தம் 18 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் கடைசியாக வருபவர் விஜயதுங்க வர்மன். கி.பி. 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழனின் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீ விஜயத்தை ஆட்சி செய்த சைலேந்திரர்களின் ஆளுமை முடிவிற்கு வந்தது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2020  

References:

1. Boechari (1966). "Preliminary report on the discovery of an inscription at Sojomerto". MISI. III: 241–251.

2. http://whc.unesco.org/en/list/592 - Borobudur Temple Compounds.

3. Roy E. Jordaan (2006). "Why the Shailendras were not a Javanese dynasty". Indonesia and the Malay World. 34 (98): 3–22.

4. Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia. Susan Brown Cowing. University of Hawaii Press.

5. Paul Michel Munoz (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Editions Didier Millet.




06 செப்டம்பர் 2020

மஜபாகித் பேரரசு - 1

 தமிழ் மலர் - 06.09.2020

இந்தோனேசியாவில் பல்லவ மன்னர்களின் நீண்ட கால ஆட்சிகள். அதனால் அங்கே இந்தியர்கள் சார்ந்த நீண்ட கால வரலாற்று மாட்சிகள். இந்தோனேசியர்களும் அந்த வரலாற்றுப் பின்னணியை மறைக்கவில்லை. மறைக்க விரும்பவும் இல்லை. அழிப்பதற்கு முயற்சிகள் எதையும் செய்யவில்லை. மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். முழுமனத்துடன் வாழ்த்துகின்றார்கள். போற்றுகின்றார்கள். பரந்த மனம் கொண்டவர்கள்.

இப்போதைய இந்தோனேசிய மக்கள் அந்தப் பழைய இந்திய மன்னர்களின் உன்னதங்களை உச்சி முகர்ந்து பார்க்கின்றார்கள். உலக மக்களே வியக்கும் வண்ணம் மேடை போட்டு முழக்கம் செய்கின்றார்கள்.

வாழ்க மஜபாகித் என்று வாயார வாழ்த்துகின்றார்கள். வாழ்க ஸ்ரீ விஜயம் என்று வானுயரப் போற்றிப் பாசுரம் பாடுகின்றார்கள். இந்தோனேசிய மக்களைத் தான் சொல்கிறேன். அக்கம் பக்கத்து அண்டை நாட்டு மக்கள் எவரையும் சொல்லவில்லை.

ஆனால் வேறு சில இடங்களில் அப்படி இல்லைங்க. மனம் கூசும் எதிர்நிலைச் சாட்சிகள். இந்தியச் சீதனங்கள் சிதைக்கப் படும் சோகநிலைக் காட்சிகள். அந்தக் காட்சிகளில் வேதனைகளின் விம்மல்கள். அந்த விம்மல்களில் பலரின் விசும்பல்கள்.

வரலாற்றைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள். இந்திய வம்சாவழியினர் எத்தனையோ இனத்தவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்து வாழ்வியலைக் காட்டி இருக்கிறார்கள். எத்தனையோ நாட்டவர்களுக்குச் சமூகச் சாணக்கியச் சாலைகளை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். அரசியலைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

அதையும் தாண்டிய நிலையில் அரசியல் ஜாம்பவான்களாகக் கோலோச்சி அதிகாரம் செய்து வாழ்ந்தும் இருக்கிறார்கள். இப்போது பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் கெஞ்சும் நிலை. இரண்டாம் கிலாஸ் இனமாய் அல்லாட வேண்டிய அவலநிலை. சொல்லும் போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் நம் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே கட்டிப் போட்டுத் தங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது மனசு வெம்பிப் போகிறது. சரி.

நம்ப பழைய சுவடுகளைத் தெரிந்து கொள்வோம். இருக்கிற வரைக்கும் அவற்றை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வோம். அவ்வளவுதான். வேறு என்னங்க செய்ய முடியும்.

இந்தோனேசியவை ஆட்சி செய்த பேரரசுகளைப் பற்றி ஒரு பட்டியல் வருகிறது. எந்த ஆண்டில் எங்கே தோற்றுவித்தார்கள் என்பதையும் கவனியுங்கள். மொத்தம் 16 பேரரசுகள். வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதுகிறோம். சொல்லப் போகும் இந்தப் பெயர்களை எல்லாம் பலர் கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள்.

அந்தப் பேரரசுகளின் பட்டியல்:

1. சாலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - கலிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600
 
5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377
 
7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669 – 1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669 – 1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752 – 1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914 – 1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006 – 1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045 – 1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183 – 1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222 – 1292

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293 – 1500

இவை தான் காலம் தோறும் கதைகள் சொல்லும் பேரரசுகள். இவற்றில் முதன்முதலாகத் தோன்றியது சாலநகரப் பேரரசு எனும் ஜலநகரப் பேரரசு. பெயரை நன்றாகக் கவனியுங்கள். சாலநகரப் பேரரரசு. ஆகக் கடைசியாக வருவது தான் மஜபாகித் பேரரசு. அந்தப் பேரரசுடன் இந்திய சாம்ராஜ்யம் இந்தோனேசியாவில் மறைந்து போனது.

மஜபாகித் பேரரசு இந்தோனேசியாவின் மகா பெரிய பேரரசு. அந்தப் பேரரசு இன்றும் சரி; இனி என்றும் சரி; வரலாற்றுச் சங்கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே இருக்கும்.  

மஜபாகித் பேரரசு (Majapahit Empire; Karaton Mojopahit) கி.பி.1293 முதல் கி.பி.1500 வரை இந்தோனேசியாவை ஆட்சி செய்த மாபெரும் பேரரசு. அந்தப் பேரரசைச் சங்கராமா விஜயா (Nararya Sangramawijaya) எனும் ராடன் விஜயன் (Raden Vijaya) உருவாக்கினார். 1293 முதல் 1309 வரை இவரின் ஆட்சி.

1365-ஆம் ஆண்டு  நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஒரு நூல் எழுதப் பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் தேசவர்ணம் (Desawarnana). அதன் ஆசிரியர் மப்பு பிரபஞ்சா (Mpu Prapanca). இவர் ஒரு பௌத்த பிக்கு. பழைய ஜாவானிய மொழியில் 1365-ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. அந்த நூலில் மஜபாகித் அரசைப் பற்றியும் இந்து ஜாவானிய அரசுகளைப் பற்றியும் வியக்கத் தக்க செய்திகள் உள்ளன.

(Cribb, Robert (2013). Historical Atlas of Indonesia. Routledge. Page: 87)

(Malkiel-Jirmounsky, Myron (1939). "The Study of The Artistic Antiquities of Dutch India". Harvard Journal of Asiatic Studies. Harvard-Yenching Institute. 4 (1): 59–68)

தென் கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலாயா, புருணை, கிழக்குத் தீமோர் போன்ற நாடுகள் எல்லாம் ஒரு காலக் கட்டத்தில், அதாவது கி.பி. 1350 லிருந்து 1389 வரையில், மஜபாகித் பேரரசிற்குத் தலை வணங்கி தஞ்சம் அடைந்த நாடுகள் ஆகும். சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ.
இருந்தாலும் நீங்கள் கண்டிப்பாக நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் என்றால் சரியான சான்றுகள் உள்ளன. இல்லை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு ஒன்றும் சும்மா எழுதிவிட முடியாது.

தவிர மஜபாகித் ஆட்சியின் போது மேலும் 96 சின்னச் சின்னச் சிற்றரசுகள். மஜபாகித் பேரரசிடம் கைகட்டிச் சேவகம் பார்த்து இருக்கின்றன.

இதை எல்லாம் பார்க்கும் போது மனதில் இனம் தெரியாத உருக்கம்; பிரமிப்பு; திகைப்பு; மலைப்பு; வியப்பு.

இந்தோனேசியா என்பது ஒரு தீவுக் கூட்டம். அந்தத் தீவுக் கூட்டத்தில் சுமாத்திரா, ஜாவா, பாலி, லோம்பாக், செலிபிஸ், நியூ கினி, சூலு தீவுக் கூட்டங்கள் போன்ற நிலப் பகுதிகள் இருக்கின்றன. இந்தக் கூட்டங்களையும் அந்தக் காலத்து மஜபாகித் ஆளுமையின் கீழ் சேர்த்துக் கொள்ளுங்கள். சரியாக வரும்.

 Battle of Kurukset (Gurusethiram)

ஆக ஒரு காலத்தில் ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது. அந்த வகையில் மஜபாகித் பேரரசின் ஆட்சிக் காலத்தின் போது பற்பல வரலாற்றுத் தாக்கங்கள். அந்தத் தாக்கங்கள் இன்றும்கூட வரலாற்று ஆசிரியர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.

(http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).

இந்தோனேசியா எனும் நாட்டிற்கு இன்று பெரிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. தெரியும் தானே. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அன்றைய மஜாபாகித் பேரரசின் பரந்து விரிந்து நிறைந்த எல்லைகள் தான் தலையாய காரணமாகும்.

அந்த அளவிற்கு மஜபாகித் பேரரசு பெரும் நிலப்பரப்பைக் கொண்டு ஆளுமை செய்து இருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகளும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இப்படி ஓர் ஆளுமையா? தென்கிழக்கு ஆசியாவில் ஓர் இந்திய ஆளுமைக்கு இதைவிட வேறு என்னங்க ஒரு சான்று வேண்டும். சொல்லுங்கள்.

இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல இந்தியப் பேரரசுகளும் பல சிற்றரசுகளும் ஆட்சிகள் செய்து உள்ளன. அந்த அரசுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு செருகல். மஜபாகித் எனும் பெயர் எப்படி வந்தது. அதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஜாவா தீவிற்குத் தமிழ்ப் பெயர் சாவகத் தீவு. இதைக் கிழக்கு ஜாவா என்றும் மேற்கு ஜாவா என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து இருக்கிறார்கள்.

கி.பி. 1200-ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஜாவாவைச் சிங்காசாரி (Singhasari) எனும் பேரரசு ஆட்சி செய்து வந்தது. சிங்காசாரி பலம் வாய்ந்த அரசு. அப்போது அதன் கடைசி அரசராக இருந்தவர் கருத்தநாகரன் (Kertanegara).

இந்தச் சிங்காசாரி அரசைச் சீனா நாட்டிற்கு அடி பணிய வைக்க சீனப் பேரரசர் குப்ளை கான் எண்ணினார். எப்படியாவது சிக்க வைக்க வேண்டும். சிங்காசாரி சின்ன அரசு. சீனா பெரிய அரசு. அதனால் சீனாவிற்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று ஓர் அசத்தலான கட்டளையைப் போட்டார்.

அப்போதே சீனா தன் உலகப் போலீஸ்காரர் வேலையைத் தொடங்கி விட்டது. மனசிற்குள் சிரித்துக் கொள்ளுங்கள்.

இப்ப மட்டும் என்னவாம். நான்தாண்டா சிங்கம் 3; இலங்கைக்கு நண்பேண்டா என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி படம் காட்டவில்லையா.

அந்த ஊர்க்கோலத்தில் ஒரு பதிவிரதை ஒரு மோகன்ஜியைக் கூட்டு சேர்த்துக் கொண்டதை மறக்க முடியுமா. என் புருசனைக் கொன்றவர்களைச் சும்மா விடுவேனா பாருங்கள் என்று சொல்லி இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிக்க வில்லையா.

அந்த ஆயிரக் கணக்கான உயிர்களின் சாபம் சும்மா விடுமா. அது ஒரு பெரிய பாவம். எப்படிங்க விடும். ஏழேழு ஜென்மத்திற்கும் பேரம் பேசலாம். இப்பவே தொடங்கி விட்டது. பார்க்கிறோம் இல்ல…

பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. இதில் ஸ்ரீ விஜய பேரரசையும் மஜபாகித் பேரரசு கைப்பற்றிக் கொண்டது. அதனால் தான் ஸ்ரீ விஜய பேரரசைச் செர்ந்த பரமேவராவின் கொள்ளு தாத்தா சிங்கப்பூருக்குப் போனார்.

ரொம்ப வேண்டாங்க. லக்சா கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா. மலேசியர்கள் பலருக்கும் பிடித்தமான உணவு. இந்த லக்சா யாருடையது தெரியுங்களா. மஜபாகித் மக்களுடையது. அவர்கள் தான் 13 – 14 நூற்றாண்டில் இந்த லக்சா உணவை மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.
 
(http://bernama.com/bernama/v3/bm/news_lite.php?id=457821 - After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)

சரி. மஜபாகித் கதை நாளையும் தொடரும். ஒரு பெரிய வரலாறே வருகிறது. படிக்கத் தவறாதீர்கள். இன்னும் ஒரு விசயம். பீஜி தீவு தமிழர்களின் கட்டுரை பின்னர் வரும்.

(தொடரும்)