15 செப்டம்பர் 2020

இந்தோனேசியா புகையிலை தோட்டங்களில் தமிழர்கள் 1890

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் துரிதமான வளர்ச்சிக்கு தமிழர்களின் அர்ப்பணிப்புகள் மிக முக்கியமானவை. அவர்களின் அயராத உழைப்பினாலும் தன்னலமற்ற பங்களிப்புகளினாலும் பல நாடுகள் வளப்பம் கண்டு உள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் கரை தாண்டிய தமிழர்களின் சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அந்த நாடுகளின் வரலாறுகளில் அவர்களின் காலச் சுவடுகள் என்றைக்கும் மறக்க முடியாதவை. காலம் தோறும் கதைகள் சொல்லும் காலச் சுவடிகள்.

1890-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியாவின் வட பகுதியில் புகையிலை பயிரிடப் படுவதற்காகக் காடுகள் அழிக்கப் பட்டன. அந்தக் காடுகளை அழிப்பதற்கும்; அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தமிழர்கள் பயன்படுத்தப் பட்டார்கள்.

மாட்டு வண்டிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 1890-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்களில் தமிழர்கள் தலையில் ஒரு முண்டாசு; இடுப்பில் ஒரு வேட்டி. அவ்வளவுதான்.

சுட்டு எரிக்கும் வெயிலில் சட்டை போடாமல் வேலை செய்து இருக்கிறார்கள். காலம் காலமாக வெயிலில் வாடி வதங்கிய காரணத்தினால் தமிழர்களின் உடலும் கறுத்துப் போயின.

அழிக்கப்பட்ட காடுகள் பெரும்பாலும் சதுப்புநில பாசா காடுகள். அந்த இடங்களில் வேலை செய்வதற்கு உள்ளூர்வாசிகளான சுமத்திரா மலாய் மக்களும்; காரோஸ் (Karos) மக்களும் முழு அளவில் முன்வரவில்லை. பாத்தாக் (Batak) உள்ளூர்வாசிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போதும் ஆள் பற்றாக்குறை.

அதனால் ஜாவாவில் இருந்து ஜாவானியர்கள் கொண்டு வரப்பட்டார்கள். சீனாவில் இருந்தும் சீனத் தொழிலாளர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இருப்பினும் ஆள் பற்றாக்குறை.

1900-ஆம் ஆண்டு இந்தோனேசியா புகையிலை தோட்டங்களில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை 87,938. சீனர்கள் 80%. தமிழர்கள் 1,758 பேர்.

தமிழர்கள் நாகப்பட்டினம்; மெட்ராஸ்; காரைக்கால் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள். பின்னர் பினாங்கு, சிங்கப்பூரில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அழைத்து வரப்பட்டார்கள்.

படத்தின் தலைப்பு: Chopped forest and drainage canal under construction at a tobacco plantation

ஆண்டு:
1890 - 1905

உரிமை: நெதலார்ந்து Stafhell & Kleingrothe நிறுவனம். புகைப்படத்தை எடுத்தவர் பெயர் தெரியவில்லை. இப்போது இந்தப் படம்  Nationaal Museum van Wereldculturen, Amsterdam அரும்காட்சியகத்தில் உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.09.2020

சான்றுகள்:

1. Tamils in Sumatra 1890

2. http://www.tropenmuseum.nl/

3. https://theconversation.com/the-dark-history-of-slavery-and-racism-in-indonesia-during-the-dutch-colonial-period-141457


14 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: தைப்பிங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை 1902

மலாயாவின் முதலாவது இரயில் பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). 135 ஆண்டுகளுக்கு முன்னால் 1885-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அதன் பின்னர் 1890-ஆம் ஆண்டு தைப்பிங் நகரில் இருந்து ஈப்போவுக்கு இரயில் பாதை உருவாக்கும் திட்டம்.

1893-ஆம் ஆம் ஆண்டில் இருந்து 1895-ஆம் ஆண்டு வரையில் தைப்பிங் - புக்கிட் கந்தாங் (Bukit Gantang) இரயில்பாதை உருவாக்கம். 1896-ஆம் ஆண்டு புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் (Bukit Berapit) இரயில் பாதை உருவாக்கம். 1902-ஆம் ஆண்டு முடிவுற்றது. இந்தப் பாதையில் நான்கு சுரங்கப் பாதைகள். அதனால் ஆறு ஆண்டுகள் பிடித்தன.

The  railway track from Bukit Gantang to Taiping was built in 1902 and it began operation in 1903. There were four tunnels and a high bridge along Bukit Berapit.

இந்தப் புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை உருவாக்கும் போது சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நூற்றுக் கணக்கான தமிழர்களுக்கு கம்பிச் சடக்கு வேலை.

பல நூறு தமிழர்கள். மலாயாவின் மூத்த தமிழர்கள். மலாயா நாட்டில் முத்திரை பதித்த மூத்த நிலை தமிழர்கள். உதிர்ந்து போன முதல்நிலை முத்துகள்.

அவர்களில் பலர் அந்த இரயில் பாதைச் சிலிப்பர் கட்டைகளுக்கு அடியிலேயே சமாதி அடைந்தார்கள். சமாதியாகிய நிலையில் இன்றைய வரைக்கும் உறக்கம் கொள்கிறார்கள்.

நல்ல தூக்கம். தட்டி எழுப்பினாலும் அந்த இரயில் சடக்கு ஜீவன்கள் எழுந்து வர மாட்டார்கள். இதை எழுதும் போது கண்கள் பனிக்கின்றன. நினைத்துப் பார்ப்போம். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

படங்கள்:

1. National Archives, UK. Federated Malay States - Indian Labour at construction Bukit Gantang 1898 - 1902.

சான்றுகள்:

1. Sunderland, David, ed. (2014). "Fifty Years of Railways in Malaya". British Economic Development in South East Asia, 1880–1939, Volume 3. Routledge.

2. Malayan Railways 100 years 1885 - 1995

3. https://en.wikipedia.org/wiki/Bukit_Berapit_Rail_Tunnel

4.https://web.archive.org/web/20090423073934/http://www.pnm.my/yangpertama/Auto_Landasan.htm



13 செப்டம்பர் 2020

கலிங்கா சீமா ராணியார் அழகுப் போட்டி

இந்தோனேசியா, ஜாவா தீவு மக்கள் கலிங்கா எனும் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பெரியவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்குக் கலிங்கா என்று பெயர் வைப்பதிலும் பெருமை கொள்கிறார்கள். கலிங்கா என்பது தங்களின் பூர்வீகத்து அடையாளம் என்று சொல்கிறார்கள்.

பள்ளிப் பாட நூல்களில் கலிங்கா; மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; தருமநகரம்; சைலேந்திரம்; சிங்காசாரி என அனைத்துப் பேரரசுகளின் வரலாறுகள் பாடமாகப் போதிக்கப் படுகிறது. இந்தோனேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தோனேசியா இந்திய வரலாற்றுக்கு என்று தனி ஆய்வுத் துறைகளை உருவாக்கி டாக்டர் பட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

தவிர கலிங்கா எனும் பெயரில் பல்வேறான அழகுப் போட்டிகளையும் நடத்துகிறார்கள். மிஸ் கலிங்கா (Miss Kalingga); வீரா கலிங்கா (Wira Kalingga); ரதி கலிங்கா (Ratu Kalingga); ஜோம் கலிங்கா (Jom Kalingga); ராணி சீமா இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) என்று அழகுப் போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் பட்டியலில் ஆண்களுக்கும் கலிங்கா ஆணழகன் கட்டழகுப் போட்டியும் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) எனும் கலை அழகுப் போட்டியை நடத்தி வருகிறார்கள். 2013-ஆம் ஆண்டு Solo International Performing Art (SIPA) எனும் போட்டி. ஆங்கிலத்தில் The Legend, History of World Culture di Studio Seven Touch. சீமா மகாராணியாரின் பெயரில் ஒரு பங்களிப்பு.

மகாராணியார் சீமா 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கா பேரரசின் மகாராணியார். கலிங்கா பேரரசு இந்தோனேசியா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. சீமா மகாராணியின் ஆட்சி ஒரு பொற் காலம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.


2012-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த அந்த அழகுப் போட்டியின் இறுதிச் சுற்றில் ரேச்சல் ஜார்ஜியா சந்தானி (Rachel Georghea Sentani) எனும் ஜாவானிய இளம் பெண் தேர்வு பெற்றார். மற்ற மற்ற ஆண்டுகளிலும் போட்டிகள் நடைபெற்று உள்ளன. ஆகக் கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்தோனேசிய மக்களின் வரலாற்று உணர்வுகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவை. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.09.2020

சான்றுகள்:

1. https://m.solopos.com/sipa-2013-finalis-putri-indonesia-jadi-maskot-418731

2. https://blog.tiket.com/en/sipa-solo-international-performing-arts/

3. https://authentic-indonesia.com/blog/solo-international-performing-arts-2019/


12 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் ஆங்கிலேய இதிகாசங்களில் - 2

 தமிழ் மலர் - 12.09.2020

மலாயாவில் ஆங்கிலேயர்களின் அதிகார ஆளுமைகளைப் பார்ப்பதற்கு முன்பு, அவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி ஒரு சின்ன தகவல். ஆங்கிலேயர்கள் அமெரிக்காவில் மட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் பருத்தி வியாபாரம் பார்த்தவர்கள். பருத்தி பருத்தியாய்ப் பணத்தைச் சுரண்டிக் கொண்டு போனவர்கள். 


ஆசியாவில் இருந்து தேயிலையைக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் இருந்த கோதுமை அரிசியை இங்கே கிழக்குப் பக்கமாய்க் கொண்டு வந்து கொட்டினார்கள்.

அடுத்து அடிமை வியாபாரத்திற்கு அரிச்சுவடியும் எழுதினார்கள். சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த சிவப்பு இந்தியர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும்; எங்களைக் கேட்டுத்தான் விழும் என்று வீரவசனம் பேசினார்கள்.

அண்ணாந்து பார்த்தால் ஆகாசம். மல்லாந்து படுத்தால் தமிங்கிலோ வாசம் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பேர் போட்டு விட்டார்களே. அது வரைக்கும் ஆங்கிலேயர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.


ஆங்கிலேயர்கள் இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் வெள்ளைக்கார அதிகாரிகளையும் 60,000 வீரர்களையும் வைத்துக் கொண்டு முப்பது கோடி இந்தியர்களை ஆட்டிப் படைத்து ஆங்கிலேய அர்ச்சுவடி எழுதி இருக்கிறார்கள். இது என்ன சாதாரண விசயமா. சொல்லுங்கள்?

இந்த இடத்தில் ஒன்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் பரப்பளவு 244,755 சதுர கி.மீ. மலேசியாவின் பரப்பளவு 332,370 சதுர கி.மீ. அதைவிட பற்பல மடங்கு பெரியது இந்தியா.

அப்பேர்ப்பட்ட அந்த இந்தியாவை ஐம்பதே ஆண்டுகளில் அடித்துப் பிடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டார்களே. மறக்க இயலுமா.

பர்மாவில் இருந்த மலைஜாதிக் கற்களைக் கொண்டுவர ஆட்களை அனுப்பினார்கள். மலாயாவில் இருந்த காடுகளை வெட்டித் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள்.

சிங்கப்பூரில் இருந்த பாசா காடுகளைத் திருத்தி காபிச் செடிகளை நட்டு வைக்க ஆட்களை அனுப்பினார்கள். கிறிஸ்மஸ் தீவுகளின் சுரங்கங்களை வெட்டி 'பாஸ்பேட்' எனும் உப்பு உலோகம் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

தென் ஆப்ரிக்காவில் காட்டுப் புதர்களை அழித்து கரும்புத் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள். மாலைத் தீவுகளின் ஆழ்கடலில் முத்துகள் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள்.

மடகாஸ்காரின் மலை அடிவாரங்களில் வாசனைத் தாவரங்கள் நடுவதற்கு ஆட்களை அனுப்பினார்கள். பிஜி - சாலமான் தீவுகளின் உடலுழைப்புப் பண்ணைகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அங்கே அனுப்பப் பட்டவர்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து போன இந்தியர்கள். அனுப்பியவர்கள் ஆங்கிலேயர்கள்.

சொந்த பந்தங்களைப் பிரிந்து போனவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். போனவர்கள் பெரும்பாலும் தென் இந்தியர்கள். இப்போது மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் மூத்தத் தலைமுறைகளின் வழித்தோன்றல்கள் தான்.

அவர்களின் மூதாதையர் அங்கேயும் இங்கேயும் எப்படி வேதனைப் பட்டு இருக்கிறார்கள் என்பதை இப்போதைய இளம் சந்ததியினர் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling) எனும் ஓர் ஆங்கிலேய எழுத்தாளர் இருந்தார். மிகவும் புகழ் பெற்றவர். அவர் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்தார்.

அவர் எழுதிய 'ஜங்கல் புக்' எனும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. பலர் படித்து இருக்கலாம். கிராமப்புற வாசனைகள் நிரம்பியது. இந்தியாவைப் பற்றிய உண்மையான வாசகங்கள்.

இருந்தாலும் ஆங்கிலேயத் தத்துவார்த்தக் கற்பனைகள். அதில் 'மவுகிலி' எனும் கதாபாத்திரம். படித்தவர் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக் கொண்டு இருக்கும். அந்த மவுகிலி கதாபாத்திரம் கடைசியில் வனவிலங்கு அதிகாரியாக மாறுகிறார். விக்டோரியா மகாராணியாரிடம் இருந்து ஓய்வூதியம் பெறுகிறார்.

ஒரு கற்பனைக் கதையில்கூட ஆங்கிலேயர்களின் தலைமைத்தனம் ஊறுகாய் போல அங்கே இங்கே கொஞ்சம் கொஞ்சமாய்த் தொட்டுக் கொள்ளப் படுகிறது. பார்த்தீர்களா.

ஆங்கிலேயர்களுக்கும் மலாயா மக்களுக்கும் நேரடியான, நெருக்கமான சமூகத் தொடர்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலேய மன்றங்கள், கழகங்கள், விடுதிகள் போன்றவற்றில் மலாயா தமிழர்கள் உறுப்பியம் பெற முடியாது.

ஆங்கிலேயர்களின் அலுவலகங்களுக்குள் நுழைய முடியாது. அவர்களின் விடுதிகளுக்குள் தமிழர்கள் போகவும் கூடாது. கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று அமெரிக்காவில் அறிவிப்புப் பலகையே போட்டு இருந்தார்களாம். இது எப்படி இருக்கு?

அந்த மாதிரி இந்தியாவிலும் அறிவிப்புப் பலகை போட்டு இருக்கிறார்கள். காஷ்மீர் சிம்லாவில் நடந்த உண்மை. அங்கேதான் ஆங்கிலேயர்களின் கோடைகால உல்லாச மாளிகைகள் இருந்தன.

இந்திய மக்கள் ஆங்கிலேயர்களைப் போல சட்டை சிலுவார் போட்டுத் தெருவில் நடப்பது எல்லாம் முடியாது. தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்படியே மீறி நடந்தால் கசையடிகள். அபராதங்கள். தண்டனைகள்.

இந்தியர்கள் நுழையக் கூடாத தனிப்பட்ட விடுதிகளில் ஜாமீன் தாரர்கள், சாகிப்புகள், குட்டி குட்டி ராஜாக்கள், குறுநிலத்து மன்னர்கள் போன்ற மேலிடத்துப் புள்ளிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.

இத்தாலிய விஸ்கி, பாரிஸ் வாயின், ரஷ்ய வாட்கா, ஜமாய்க்கா ரம், பெல்ஜிய பீர் என்று மதுபான வகையறாக்கள் ஆறாய் ஓடின. இளம் பெண்கள் குலுங்கி ஆடும் போது வக்கிர மொழிகள் சிப்பிக்குள் இருந்து நளினமாக வெளியே வந்து எட்டி எட்டிப் பார்த்து இருக்கின்றன. சரி. இந்தப் பக்கம் பார்ப்போம்.

சத்தியமாகச் சொல்கிறேன். இங்கே மலாயாவில் தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக அநியாயமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களை வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். சான்றுகள் இருக்கின்றன.

அந்தச் சுவடுகளின் தாக்கம் தான் மலாயாத் தோட்டங்களில் வாழ்ந்த ஆரம்ப கால தாத்தா பாட்டிகளையும் ரொம்பவுமே பாதித்து இருக்கிறது.

கிராணிகளைக் கண்டால் சைக்கிளை விட்டு கீழே இறங்கி சலாம் போடுவது. காலில் போட்டு இருக்கும் சிலிப்பரைக் கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்வது. வேட்டியைத் தூக்கி கோவணமாகப் பின்னிக் கொள்வது. மண்டோர்கள் எகிறும் போது மண்ணில் விழுந்து மன்னிப்பு கேட்பது.

கறுப்புத் தோல் வெள்ளைத் தோல் மேனேஜர்கள் அடித்துச் சாற்றும் போது அவர்களுடைய கால்களைக் கட்டிப் பிடித்துக் கெஞ்சுவது. கண்ணீர் வடிப்பது. இப்படி நிறைய உண்டு. மலாயா தமிழர்களை ஆங்கிலேயர்கள் மிகவும் ஏளனமாக நினைத்து கேவலமாக நடத்தி இருக்கிறார்கள்.

இந்தியர்களைப் படிப்பு இல்லாதவர்கள். மிரட்டினால் பதுங்கிப் போகிறவர்கள். உலகத் தரத்திற்கு உயர்ந்து வர முடியாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அந்தக் கோட்பாட்டுக்குச் சூடம் சாம்பிராணி காட்டி தூபம் போட்டு இருக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் எல்லாம் ஒன்றுதான். மொத்தத்தில் ஒரு கொத்தடிமை வாழ்க்கை.

ஆங்கிலேய இதிகாசங்களில் மலாயா தமிழர்களின் வரலாறும் ஒரு பகுதியே. இருந்தாலும் அந்த வரலாறு நீண்டு நெடியது. ஆங்கிலேயர்களின் மலாயா காலனித்துவ ஆட்சியில், மலாயா தமிழர்கள் எழுந்து வரமுடியாத அளவிற்கு அடிமைகளைப் போல அமுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளிகளைப் பறித்து எடுத்து; சாக்குப் பைகளில் போட்டு; மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே அழைத்து வரப் பட்டார்கள்.

அவர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய்ப் பணத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள். ஜிங்கு ஜிக்கான் பாடி பழைய ஆளாகி விட்டார்கள்.

கடைசியில் மலேசிய இந்தியர்களுக்குப் ’பை பை’ காட்டி அவர்களை அனாதைகளாகப் பரிதவிக்க விட்டுச் சென்றது தான் வரலாற்றுக் கொடுமை.

மலாயா சுதந்திரம் அடைந்தது. ஆனால் மலாயா தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இனவாதமும் மதவாதமும் தலை விரித்து ஆடுகிறது. நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

ஒன்றை மட்டும் மறந்து விட வேண்டாம். மலேசிய வரலாற்றில் மலேசியத் தமிழர்கள் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள். அந்தச் சாதனைகள் அனைத்தும், காலத்தால் மறக்க முடியாத காலச் சுவடுகள். வரலாற்று வேதங்கள் வார்த்து எடுக்க முடியாத வரலாற்றுப் படிமங்கள்.

மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு தெரியாது. என்ன பொறுக்கி எடுக்கிறது தான் பெரிய இலச்சை புடிச்ச வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த ராகங்கள். வேறு எப்படித்தான் சொல்லுவதாம்.

தமிழகத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே மசாஜ் செய்து இருக்கிறார்கள். அது மட்டுமா. அப்போது அங்கே கிடைத்த ’லைவ் பாய்’ சவர்க்காரத்தைப் போட்டு நன்றாகவே குளிப்பாட்டியும் விட்டு இருக்கிறார்கள்.

உதறல் எடுத்த அந்தச் சாமானிய மக்களை நன்றாகவே துவைத்துக் காயப் போட்டு இருக்கிறார்கள். அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை.

இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களின் குளிர்க் காய்ச்சல் நடுக்கத்தைத் தான் சொல்ல வருகிறேன்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடுங்கள் எனும் ஐஸ்கட்டி ஆலாபனைகள் வேறு. மன்னிக்கவும் காம்போதி ராகங்கள்.
 
எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். அவர்கள் சமாளிக்க வேண்டுமே.

பச்சைக் காடாய்க் கிடந்த ஒரு நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலாயா தமிழர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலாயா தமிழர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி இன உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

இதில் மலேசியத் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கிறோம் என்று காலம் காலமாக நானா நீயா போட்டிகள். அந்தச் சாக்கில் ஆயிரம் ஆயிரம் கட்சிகள். தடுக்கி விழுகிற இடம் எல்லாம் கட்சிகள். கட்சிகள். விட்டால் எதிர்க்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கட்சி வந்தாலும் வரலாம். விடுங்கள். இது மலேசிய இந்தியர்களின் போன ஜென்மத்து கர்ம வினைகள்.

ஒரே வார்த்தையில் சொன்னால் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; மலேசியத் தமிழர்களின் வரலாறு சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் கடந்த மலேசிய தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

ஒன்று மட்டும் உண்மை. மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாய் வந்தவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். அதை மறக்காமல் இருந்தால் சரி.

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய அந்த வாயில்லா பூச்சிகளுக்கு முதல் மரியாதை செய்வோம். சிரம் தாழ்த்துகிறேன்.

(முற்றும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020




கலிங்கா மக்கள் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கா (Kalinga) எனும் மாநிலம் லூசோன் (Luzon) தீவில் உள்ளது. அதன் தலைநகரம் தாபூக் (Tabuk). முன்பு அந்த மாநிலத்தின் பெயர் கலிங்கா – அப்பாயாவோ (Kalinga-Apayao). 1995-ஆம் ஆண்டு கலிங்கா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பரப்பளவு 3,231 சதுர கி.மீ.
(YvesBoquet, Berlin 2017)

இது ஒரு மலைப் பிரதேசம். பலாபாலன் (Balbalan); லுபுவாகான் (Lubuagan); பாசில் (Pasil); பினுபுக் (Pinukpuk); திங்கலாயான் (Tinglayan); தானுடான் (Tanudan) மலைகள் உள்ளன.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் 1500 மீட்டர் உயரத்தில் மலைக் காடுகளில் வாழ்கிறார்கள். இவர்களிடம் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது. உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்கிறார்கள். இவர்களின் முகத் தோற்றங்களில் இந்திய மண்வாசனை தெரிகின்றது.

காதுகளில் பெரிய பெரிய தோடுகளைப் போட்டுக் கொள்கிறார்கள். பெரிய பெரிய கழுத்து ஆபரணங்களையும் அணிந்து கொள்கிறார்கள். வண்ண வண்ண ஆடைகளைப் பாரம்பரிய உடைகளாக அணிந்து கொள்கிறார்கள். இவர்கள் ஒரு வகையான பொங்கல் அறுவடை நாளையும் திருவிழா நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

தங்களைக் கலிங்கர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறார்கள். இந்தக் கலிங்கப் பூர்வீக மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்வதைத் தவிர்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகத் தனித்தே வாழ்கின்றனர். முன்பு காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் கொரில்லா சண்டைகள். ஸ்பானிய போர் வீரர்கள் போய் சண்டையை நிறுத்தி இருக்கிறார்கள்.

இங்கு வாழ்ந்த கலிங்கா இளம் பெண் 2019-ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டிக்கு பிலிப்பைன்ஸ் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மக்கள் பற்றி சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் கீழ்கண்டவாறு உறுதிப் படுத்துகிறார்.

ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு நடைபெற்றது. அசோகரின் கலிங்கக் கொலைவெறி ஆட்டத்தில் இருந்து தப்பித்த பல ஆயிரம் பேர் கடல் மார்க்கமாகத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் பிலிப்பைன்ஸ் தீவிற்கும் புலம் பெயர்ந்து இருக்கலாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸ் சமவெளிகளில் வாழ்ந்து வந்த உள்ளூர் பிலிப்பைன்ஸ் மக்களுக்குப் பயந்து மலைக்காடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்.
(Sadasivan, Balaji Sadasivan 2011)

இந்தத் தகவல் சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் அவர்களின் கருத்து.

பண்டைக் கால இந்தியாவின் ஒரிசா, ஆந்திரா, வட தமிழ்நாட்டுப் பகுதிகள் கலிங்க அரசு என்று அழைக்கப் பட்டது. அதை மகா மேகவாகனப் பேரரசு என்றும் அழைப்பார்கள். கி.மு. 250 தொடங்கி கி.பி. 400 வரை ஆட்சியில் இருந்த பேரரசு.

கி.பி. 400-ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலிங்கப் பேரரசு இந்திய வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. வெகு காலமாய் அதைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போயின.

மறுபடியும் 7-ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்தப் பேரரசு புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரிசா; ஆந்திர பிரதேசங்களை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
(IJARMSS 2016)

பின்னர் 8-ஆம் நூற்றாண்டில் கலிங்கப் பேரரசு பர்மாவைக் கைப்பற்றியது. அந்தக் காலக் கட்டத்தில் கலிங்க நாட்டவர் இலங்கை, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் (லூசோன்) போன்ற நாடுகளில் குடியேறினார்கள். ஆங்காங்கே சிற்றரசுகளை உருவாக்கினார்கள்.
(Janette P. Calimag 2016)

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் இருக்கும் கலிங்கர்கள் எனும் பூர்வீகக் குடிமக்கள் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் இதுவரையிலும் மிகத் துல்லியமாகக் கிடைக்கவில்லை.

இருப்பினும் கலிங்கர்கள் என்று அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் கலிங்கா எனும் ஒரு மாநிலத்தை அவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்து உள்ளது.
 
8-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் தான் கலிங்கர்கள் தீபகற்ப மலேசியாவில் குடியேறி இருக்கலாம். இது 8-ஆம் நூற்றாண்டு மலாயாப் புலம் பெயர்வு.

ஆதிகால மலாயா தமிழர்கள் இந்தக் கலிங்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இங்கே இருந்து தான் கெலிங் எனும் சொல்லும் மலாயா மக்களிடம் பரவி இருக்கலாம்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர மன்னர்களின் பரம்பரையினர் கலிங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் சயாம் பகுதியில் இருந்த நிலப் பகுதிகளை ஆட்சி செய்தார்கள். அதே சமயத்தில் தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.
(6. Coedes, George 1968. Walter F. Vella)

7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா ஜாவா தீவில் கலிங்கப் பேரரசு எனும் ஓர் அரசு உருவானது. இந்தியாவின் கலிங்கப் பேரரசின் பெயரே இந்தோனேசியாவின் கலிங்கப் பேரரசிற்கும் வைக்கப் பட்டது.

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 850-ஆம் ஆண்டு வரை கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறது.
(Drs. R. Soekmono, 1973)

ஆக அந்தக் காலக் கட்டத்திலும் இந்தோனேசியாவில் இருந்து இந்தியர்கள் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்தோனேசியா வரலாற்று ஆசிரியர் பூர்வாந்தாவின் ஆய்வறிக்கையில் இருந்து இங்கே பதிவு செய்யப் படுகிறது.
(H Purwanta 2012)

சான்றுகள்:

1. Source: Coedes, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Pg. 79)

2. International Journal of Advanced Research in ISSN: 2278-6236. Management and Social Sciences Impact Factor: 6.284. Vol. 5 | No. 6 | June 2016 www.garph.co.uk IJARMSS | 937

3. Province: Kalinga (province). PSGC Interactive. Quezon City, Philippines: Philippine Statistics Authority. (2016)

4. Edward Dozier (1966) reports that the Kalinga divide themselves into the southern
Kalinga who reside in Lubuagan, Pasil, and Tinglayan

http://nlpdl.nlp.gov.ph:81/CC01/NLP00VM052mcd/v1/v27.pdf // Edward Dozier. The Kalinga are one of the major ethnolinguistic groups inhabiting northern Luzon.

5. The Philippine Archipelago. YvesBoquet, Berlin, (2017), Springer International Publishing. ISBN 978‐3‐319‐5925‐8, pp 62-64

6. Sadasivan, Balaji Sadasivan. (2011). The Dancing Girl: A History of Early India. pp. 135–136. ISBN 978-9814311670.

6. Coedès, George (1968). Walter F. Vella, Ed. The Indianized States of Southeast Asia. Trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. Page: 52)

7. Drs. R. Soekmono, (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd Ed (5th reprint edition in 1988 Ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 37.

8. Sneddon, James (2003). The Indonesian Language: Its history and role in modern society. Sydney: University of South Wales Press Ltd. p. 73.

9. Masatoshi Iguchi (2017). Java Essay: The History and Culture of a Southern Country. Troubador Publishing Ltd. p. 216. ISBN 9781784628857.

10. H Purwanta. (2012) Sejarah SMA/MA Kls XI-Bahasa, dkk

11. https://www.encyclopedia.com/humanities/encyclopedias-almanacs-transcripts-and-maps/kalinga

12. THE MIGRANTS OF KALINGA: FOCUS ON THEIR LIFE AND EXPERIENCES (2016) Janette P. Calimag, Kalinga-Apayao State College, Bulanao Tabuk City, and Kalinga.

Citation - தகுதியுரைகள்

In the 6th century, there was a kingdom called Kalingga, name derived from the very Indian kingdom Kalinga. Kalingga was the 6th century Indianized kingdom on the north coast of Central Java, Indonesia. 6th century. Two Indianized empires - the Srivijayan Empire (683-1275 AD) and Majapahit empire (1275 to 14th century) are said to have influence on Philippines' culture.

Source: https://www.quora.com/Is-there-any-link-between-the-present-Kalinga-tribe-in-the-Philippines-and-the-Kalingas-of-ancient-India

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2020