20 செப்டம்பர் 2020

கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு நடராஜன்

மலேசிய வரலாற்று ஆசிரியர். பூஜாங் நடா என்று அன்புடன் அழைக்கப் படுகிறவர். டாக்டர் ஜெயபாரதிக்கு அடுத்த நிலையில் கடாரத்து வரலாற்றுக் காற்றைச் சுவாசிக்கும் அழகிய மகனார்.

நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர். இருபது ஆண்டு கால ஆய்வுகள்.

எந்த நேரத்தில் எங்கே இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம் சுங்கை பட்டாணி அமான் ஜெயாவில் பார்த்தேன். நீண்ட நேரம் பேசினோம். அடுத்த நாள் பினாங்கில் பார்க்கிறேன்.

என்னங்க டத்தோ என்று கேட்டால், அது அப்படித் தான் என்பார். சமயங்களில் அவரின் நகைச்சுவை பேச்சில் ஊசி மிளகாய் உரைப்புகள் வந்து போகும்.

ஒரு தடவை மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் சில்வன் அவர்களைப் பார்ப்பதற்குத் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்குச் சென்று இருந்தேன்.

சாட் மசாலா உணவகத்தில் சந்திப்பு. உள்ளே போகிறேன். அங்கே பூஜாங் நடராஜா. தனி ஒரு மேசையில் தனிமையில் அமர்ந்து இருந்தார். அருகில் தேநீர் கோப்பை.

மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி என்னைப் பார்க்கிறார். முகத்தில் மகிழ்ச்சி அலைகள். மலேசிய இந்தியர்கள் சார்ந்த வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுக்கும் பணிகளில் இருவருமே ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சுவாசக் காற்றுகளின் அலைகள்.

’இன்று பூஜாங் வரலாறு பற்றி சிலாங்கூர் ஆசிரியர்களிடம் ஒரு மேடைப் பேச்சு. பெரிய இடத்துப் பெரிசுகளைப் பற்றியும் அழுத்தமாகப் பேசப் போகிறேன். வர்றீங்களா மலாக்கா’ என்றார்.

’என் மீது ஒரு கறுப்புப் புள்ளி வைக்கப் படலாம். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை மலாக்கா. வருவது வரட்டும்’ என்றார். என்னை மலாக்கா என்று அழைப்பார்.

இவர் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலாயா தமிழர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும். அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு மலாயா தமிழர்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

மலாயா தமிழர்கள் கண்டு எடுத்த மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. நடமாடும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020




19 செப்டம்பர் 2020

சங்கராமா விஜயதுங்க வர்மன்: சைலேந்திரா பேரரசு

 தமிழ் மலர் - 14.09.2020

இந்தோனேசியா ஓர் அழகான உலகம். ஓர் அதிசயமான பூமி. அங்கே பற்பல புதுமைகள். பற்பல பழைமைகள். அந்தப் பழமைகளில் பற்பல மர்மங்கள். அந்த மர்மங்களில் நீண்ட நெடிய ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் இந்தியர்கள் 1370 ஆண்டுகள் ஆட்சி செய்ததும் ஒரு துணை வரலாறு.

சைலேந்திரா அரசு வாரிசுகள்: ஜாவானியப் பெண்மணி

இந்தோனேசியா எனும் தனி ஓர் உலகத்தில் மொத்தம் 13,466 தீவுகள். இந்தத் தீவுகளைப் பன்னிராயிரம் தீவுகள் என்று மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப் படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் ஜாவா தீவிற்கு வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள். ஜாவா தீவை சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியத் தீவுகளுக்குப் பழம் பெரும் தமிழர்கள் சென்று இருக்கிறார்கள். இப்போதைய தமிழர்களுக்குப் பெருமையும் சேர்க்கிறார்கள். அப்படிப் போனவர்களில் பல்லவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.

போன இடங்களில் சின்னச் சின்ன நிலப் பிரபுக்களாக மாறினார்கள். அப்படியே சிற்றரசுகளை உருவாக்கி அழகு பார்த்து இருக்கிறார்கள். அப்படியே பேரரசுகளையும் உருவாக்கி பெரிய பெரிய சகாப்தங்களையும் படைத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தோனேசியாவின் வரலாறு இந்தியப் பின்புலத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அந்தப் பின்புலத்தை இந்தோனேசியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. பரந்த மனத்துடன் மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். மலர்ந்த உணர்வுகளுடன் மனதாரப் போற்றுகிறார்கள்.

இந்தோனேசியாவை 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து உள்ளன. கி.பி. 130-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1500-ஆம் ஆண்டு வரை 1370 ஆண்டுகளுக்கு இந்தியப் பேரரசுகளின் ஆட்சிகள்.

தருமநகரா பேரரசு; ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு; சைலேந்திரா பேரரசு; மேடாங் மத்தாரம் பேரரசு; சிங்காசாரி பேரரசு; பாலி பேரரசு போன்றவை புகழ்பெற்ற பேரரசுகள்.

அவற்றுள் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) உருவாக்கிய பாலி பேரரசு (Bali Kingdom). கி.பி. 914-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1471-ஆம் ஆண்டு வரை பாலி பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 550 ஆண்டுகள். பெரிய சாதனை.

கடைசி வருடத்தைக் கவனியுங்கள். கி.பி. 1471-ஆம் ஆண்டு. ஆச்சரியமாக இல்லை. சிங்கப்பூரில் நீல உத்தமனின் வாரிசுகள் ஆட்சி செய்யும் போது பாலி தீவில் ஸ்ரீ கேசரி வர்மதேவாவின் வாரிசுகளின் ஆட்சி.

இருந்தாலும் 1471-ஆம் ஆண்டு தான் பாலி பேரரசு இந்தியர்களின் பிடியில் இருந்து கைநழுவிச் சென்றது. சரி. சங்கராமா விஜயதுங்கவர்மன் வரலாற்றுக்கு வருவோம்.

சைலேந்திரா பேரரசை 18 அரசர்கள் ஆட்சி செய்து இருக்கின்றார்கள். சைலேந்திரா அரசர்களின் பட்டியல்:

1. சந்தானு (Santanu - கி.பி. 650)

2. தபுந்தா சைலேந்திரா (Dapunta Selendra - கி.பி. 674)

3. சீமா (Shima Kalingga - கி.பி. 674 — 703)

4. மந்திமீனா (Mandimiñak - கி.பி. 703 — 710)

5. சானா (Sanna - கி.பி. 710 — 717)

6. சஞ்சயா (Sanjaya - கி.பி. 717 — 760)

7. ராக்காய் பனங்கரன் (Rakai Panangkaran - கி.பி. 760 — 775)

8. தரநீந்தரன் (Dharanindra - கி.பி. 775 — 800)

9. சமகரகவீரன் (Samaragrawira - கி.பி. 800 — 812)

10. சமரதுங்கா (Samaratungga - கி.பி. 812 — 833)

11. பிரமோதவர்த்தனி ராணியார் (Pramodhawardhani  - கி.பி. 833 — 856)     

12. பாலபுத்ரதேவா (Balaputradewa - கி.பி. 833 — 850)

13. உதயாத்தியவர்மன் (Sri Udayadityavarman - கி.பி. 960)

14. இயாட்சே (Hia-Tche - கி.பி. 980)

15. சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa - கி.பி. 988)

16. மாறன் விஜயதுங்கா (Sri Maravijayottungga  - கி.பி. 1008)

17. சுமத்திரபூமி (Sumatrabhumi - கி.பி. 1017)

18. சங்கராமா விஜயதுங்கவர்மன் - கி.பி. 1025)

இவர்களில் இருவர் மிக மிக முக்கியமானவர்கள். ஒருவர் தரநீந்தரன். அடுத்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன்.

தரநீந்தரன் என்பவர் சைலேந்திரா பேரரசின் அரசராக இருந்த காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு; ஜாவாவில் இருந்த சைலேந்திரா பேரரசு; இரு பேரரசுகளும் இணைந்து ஒரே பேரரசாக வடிவம் பெற்றன. கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அதுவரையிலும் சைலேந்திரா பேரரசு ஓர் இந்து சைவ சமயப் பேரரசாக இருந்தது. தரநீந்தரன் படையெடுப்பிற்குப் பின்னர் சைலேந்திரா பேரரசு புத்தச் சமயத்திற்குப் புலம் பெயர்ந்தது. தரநீந்தரன் ஆட்சியில் தான் போரோபுதூர் (Borobudur) ஆலயம் நிர்மாணிப்புப் பணிகளும் தொடங்கின.

சங்கராமா விஜயதுங்கவர்மன். அவரின் ஆட்சி எந்த ஆண்டு முடிவு பெறுகிறது என்பதையும் பாருங்கள். 1025-ஆம் ஆண்டு. அந்த ஆண்டுடன் சைலேந்திரா அரசும் ஒரு முடிவிற்கு வருகிறது. அந்த ஆண்டில் தான் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தார்.

அடுத்து இந்தச் சங்கராமா விஜயதுங்கவர்மன் தான் கடாரம் எனும் பூஜாங் பேரரசையும் ஆட்சி செய்த கடைசி அரசரும் ஆவார்.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Sangrama_Vijayatunggavarman)

சைலேந்திரா பேரரசிற்கும் சோழர்களுக்கும் நல்ல உறவுகள் தான். ஆனால் மாறன் விஜயதுங்க வர்மனுக்குப் பின்னர் தான் பிரச்சினைகள் தொடங்கின. மாறன் விஜயதுங்க வர்மன் என்பவர் சைலேந்திரா அரசர்களில் 16-ஆவது அரசர்.

ஒரு கட்டத்தில் சைலேந்திரா பேரரசின் அரசராகச் சுமத்திராபூமி (Sumatrabhumi) என்பவர் இருந்தார். கி.பி.1017-ஆம் ஆண்டு அரியணை ஏறினார். இவர் சீனா நாட்டுடன் அதிகமாக நட்பு பாராட்டினார். சோழர்களுடன் உறவுகளைக் குறைத்துக் கொண்டார்.

அடுத்து வந்த சங்கராமா விஜயதுங்கவர்மனும் சோழர்களுடன் அதிகமாக நட்பு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மிதமான ஓர் ஏனோ தானோ போக்கு. அத்துடன் சீனாவின் நம்பிக்கையான வார்த்தைகள்.


சீனா இருக்கும் போது ஏன் சோழர்களுக்குப் பயப்பட வேண்டும். அவர்கள் வருவதற்கு முன்னரே நாங்கள் வந்து விடுவோம் எனும் சீனாவின் நம்பிக்கை வாசகங்கள். ஆனால் கடைசி நேரத்தில் சீனா உதவிக்கு வரவில்லை. காலை வாரி விட்டு விட்டது. சங்கராமா விஜயதுங்கவர்மன் ஏமாற்றப் பட்டார்.

கி.பி 960-ஆம் ஆண்டிலேயே சீனா நாட்டுடன் சைலேந்திரா பேரரசு தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உறவை முதன் முதலில் ஏற்படுத்தியவர் ஸ்ரீ உதயாத்திய வர்மன் (Sri Udayadityavarman).

அதன் பின்னர் வந்த சைலேந்திரா அரசர்கள் இயா சே (Hia-Tche), ஸ்ரீ சூடாமணி வர்மதேவா (Sri Cudamani Warmadewa), மாறன் விஜயதுங்க வர்மன் (Maran Vijaya Ttunga Varman), சுமத்திராபூமி (Sumatrabhumi), சங்கராமா விஜயதுங்கவர்மன்.

சீனாவுடன் நெருக்கமானதும் சோழர்களுடன் நட்பு குறைந்து போனது. அது மட்டும் இல்லை. சோழர்களுக்கு எதிராகவே சைலேந்திரா அரசர்கள் செயல்படத் தொடங்கினார்கள். அதனால் வந்த வினைதான் இராஜா ராஜ சோழனின் படையெடுப்பு.

கடாரத்தைக் கடைசி கடைசியாக ஆட்சி செய்த சங்கராமா விஜயதுங்கவர்மனின் அசல் பெயர் ராமா விஜயா துங்கா வர்மன் (Rama Wijaya Tungga Warman). இவர் சுமத்திரா பலேம்பாங்கில் இருந்து கடாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

Sangrama Vijayatunggavarman or Sangramavijayottunggavarman or Sang Rama Wijaya Tungga Warman was an emperor of Srivijaya of Sailendra dynasty.

சங்கராமா விஜயதுங்கவர்மன் ஸ்ரீ விஜய பேரரசின் கடைசி அரசராக இருந்தாலும், இவர் சைலேந்திரா அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.

சைலேந்திரா பேரரசின் வழியாக வந்தவர்கள் தான் சைலேந்திர அரசப் பரம்பரையினர். இவர்கள் தான் ஸ்ரீ விஜய பேரரசைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்.

சைலேந்திரா அரசப் பரம்பரையினர் இல்லாமல் ஸ்ரீ விஜய பேரரசு என்பதும் இல்லை. மஜபாகித் பேரரசும் இல்லை. ஆக சைலேந்திரா பேரரசு என்றால் அது ஒரு வகையில் ஸ்ரீ விஜய பேரரசைச் சார்ந்ததே.

சைலேந்திரா பேரரசுடன் ஸ்ரீ விஜய பேரரசுடன் இணைக்கப் பட்டதால் ஸ்ரீ விஜய பேரரசின் பெயர் தான் முன்னிலைப் படுத்தப் படுகிறது. எப்படிப் பார்த்தாலும் ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னோடியாக இருந்தது சைலேந்திரா பேரரசு ஆகும்.

சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கிறது. 1030-ஆம் ஆண்டு கல்வெட்டுகள். கடாரம் கொண்ட இராஜேந்திர சோழனின் வெற்றிகளைப் பற்றிய ஒரு மெய்க்கீர்த்தி. அதில் சங்கராமா விஜயதுங்கவர்மனின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.

மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் புகழ், கொடை, போர்ச் சிறப்புக்களைப் பற்றிக் கதை கூறும் பாடல் வகையாகும். பெரும்பாலும் அவை அகவல்பாவில் அமைந்து உள்ளன.

பூஜாங் பள்ளத்தாக்கில் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள்.

அந்தப் புழுதிப் படர் மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள். கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள். அந்தப் பச்சைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஓராயிரம் கடாரத்து வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

இப்போது சிலர் வேறு மாதிரியாகக் கதை சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் பள்ளத்தாக்கில் எங்கள் பாட்டி வடை சுட்டார்; எங்கள் தாத்தா இட்லிக்கு சாம்பார் விற்றார். எங்கள் மூதாதையர் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று சிலர் கதை சொல்கிறார்கள்.

கேட்க நன்றாக இருக்கிறது. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே எனக்கும் படுகிறது.

1370 ஆண்டுகளாக இந்திய வம்சாவழியினர் இந்தோனேசியாவின் சுமத்திரா ஜாவா தீவுகளையும்; கடாரத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆக கணிசமான அளவிற்கு அங்கே இந்திய இரத்தம் கலந்து இருக்கலாம். வாய்ப்புகள் உள்ளன. எனக்குள் ஒரு கேள்வி.

அங்கு இருந்து பக்கத்து பக்கத்து நாடுகளுக்குப் பல இலட்சம் பேர் குடியேறி இருக்கிறார்கள். அவர்களின் உடலில் என்ன மாதிரியான இரத்தம் ஓடலாம் அல்லது ஓடிக் கொண்டு இருக்கலாம். தெரியவில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சான்றுகள்:

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

1. Muljana, Slamet (2006). F.W. Stapel, ed. Sriwijaya. PT. LKiS Pelangi Aksara.

2. Coedes, George (1996). The Indianized States of Southeast Asia. University of Hawaii Press. pp. 142&143.

3. Boechari (1966). "Preliminary report on the discovery of an inscription at Sojomerto". MISI. III: 241–251.



18 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான் லுக்குட் 1900

1900-ஆம் ஆண்டுகளில் மலாயா தமிழர்கள். முதுகு எலும்பு முறிந்து; இடுப்பு எலும்பு நகர்ந்து; கழுத்து எலும்பு தகர்ந்து; கறுப்புத் தோல் கிழிந்து; வேட்டிக் கோவணங்களில் ஓட்டை விழுந்து; முக்கால் பீக்கள் மூட்டைகளைப் படகுகளில் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சி.

இன்று நேற்று நடந்தது அல்ல. மலாயாவில் கித்தா மரங்கள் வருவதற்கு முன்பாகவே மலாயா காடுகளில் அரங்கேற்றம் கண்ட வரலாற்றுத் தோரணங்கள். இடுப்போடு ஒட்டிய வேட்டி. மேலே சட்டை இல்லை. சப்பாத்து இல்லாத வெறும் கால்கள். இவர்களை ரசிக்க அப்போது நட்சத்திரங்கள் இல்லை. இப்போது நாம் ரசிக்கிறோம்.

மேலே காணப்படும் படம் 1900-ஆம் ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகளைப் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்வார்கள்.

உழைத்து உழைத்து ஓடாய்ப் போன இவர்களா வந்தேறிகள்? இவர்கள் உழைத்துப் போட்டதை வயிறு முட்ட வக்கணையாகச் சாப்பிட்டு; சொகுசாக வாழ்ந்து விட்டு வாய்க் கூசாமல் வக்கிரமாக பேசுகிறது ஒரு கூட்டம். இனவாதத்தின் ஓர் இடைச் செருகல். வேதனை.

1870 - 1900-ஆம் ஆண்டுகளில் மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் பகுதிகளில் நிறையவே மரவெள்ளி, சர்க்கரைவல்லி, காபி, வாழைத் தோட்டங்கள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் அங்கு பல வகையான உணவுப் பயிர்கள் பயிர் செய்யப்பட்டன. தென்னை, அன்னாசி, கரும்பு, கொக்கோ, மிளகு தோட்டங்களும் இருந்தன.

1900-ஆம் ஆண்டில் பேராக், கிரியான் (Kerian); புரவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley) மாவட்டங்களில் 260,000 ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது.

[1#]. In 1890 the most successful estates proved to be those where access was easy, in Selangor, areas around Klang and Kuala Lumpur, in Negeri Sembilan areas near the coastal village of Lukut, now Port Dickson, and in Perak in the area of Matang and Lower Perak.

[1#]. http://www.arabis.org/index.php/articles/articles/plantation-history/the-malaysian-plantation-industry-a-brief-history-to-the-mid-1980s

லுக்குட் தோட்டத்தின் பழைய பெயர் லிங்கி காபி கம்பெனி (Linggi Coffee Company). அங்கு லைபீரியா காபி பயிர் செய்யப்பட்டது. ஆக அந்தக் கம்பெனியின் பெயரில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். காபி தான் பிரதான  விளைச்சல். [#1]

[#1]. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_481

நெகிரி செம்பிலானில் மட்டும் அல்ல. 1870-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், சிங்கப்பூர் பகுதிகளிலும் காபி பயிர் செய்யப்பட்டு உள்ளது. 1896-ஆம் ஆண்டு வாக்கில் தான் முதன் முதலாக மலாயாவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

ஆக 1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் லுக்குட்,  லிங்கி காபித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். [#2]

[#2]. Formerly the company was known as the Linggi Coffee Company, and Liberian coffee was grown on the first properties acquired, but it was decided in 1900 to substitute the more profitable product, Para rubber.

1905-ஆம் ஆண்டு தான் அந்தக் குழுமத்தின் காபி, கிழங்கு, வாழைத் தோட்டங்கள் அனைத்தும் ரப்பர் தோட்டங்களாக மாறின.

லுக்குட் தோட்டத்தில் வேலை செய்த தமிழர்கள் குழுக்கள் குழுக்களாக வேலை செய்தார்கள். ஒரு குழுவினர் விளச்சல் பொருள்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் கொண்டு செல்வார்கள்.

பின்னர் அந்தப் பொருள்களை மாற்றும் இடம் வரும். அது ஒரு பாலம்; ஒரு முச்சந்தி; ஓர் ஆலயம்; ஓர் ஆறு போன்ற இடமாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. அடுத்த இடம் வேறு ஒரு குத்தகையாளரின் பொறுப்பு. பொதுவாகத் துறைமுகம் அல்லது ஆற்றங்கரைகளில் படகுகள் அணையும் இடமாக இருக்கும்.

மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் பொருள்கள் படகுகளில் ஏற்றப்பட்டு பின்னர் போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களில் ஏற்றப்படும்.

1905-ஆம் ஆண்டில் லுக்குட் தோட்டக் குழுமம் புனரமைப்பு செய்யப் பட்டது. லிங்கி தோட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் காபி சாகுபடியும் நிறுத்தப் பட்டது. 1906-ஆம் ஆண்டில் ரப்பர் உற்பத்தி தொடங்கியது.

[3#]. Liberian coffee flourished in Malay States’ relatively low-altitude coffee farms from the 1870s through to the late 1890s.

[3#]. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

1900-ஆம் ஆண்டில் லுக்குட் நிறுவனத்தின் ரப்பர்  தோட்டங்கள்:

1. லுகுட் (Lukut)

2. மார்ஜோரி (Marjorie)

3. லிங்கி (Linggi)

4. உலு சவா (Ulu Sawah)

5. காஞ்சோங் (Kanchong)

இந்தத் தோட்டங்க சிரம்பான் நகரில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்து இருந்தன. லுக்குட் லிங்கி பகுதியில் இப்போது இருக்கும் தோட்டங்கள்:

Erin Estate,

Ladang Hew Mun,

Ladang Lukut,

Ladang Bonawe,

Ladang Siliau North,

Ladang Siliau,

Ladang Lukut,

Ladang Sungai Salak,

Ladang Parit Gila,

Ladang Sua Betong,

Ladang Bukit Belco,

Ladang Bukit Untong,

Ladang Port Dickson Lukut,

Ladang Port Dickson Lukut,

Ladang Bradwall,

Ladang Ranston,

Ladang Leigh,

Ladang Eng Aun,

Ladang Linggi Berhad,

Ladang Wilmor,

Ladang Bukit Palong,

Ladang New Ruthken,

Ladang Sua Betong,

Ladang Arunasalam,

Ladang Shiaw You,

Ladang Sungai Salak,

Ladang Perhentian Siput

மேலே காணப்படும் படம் 1900-ஆண்டில் லிங்கி ஆற்றில்; படகுகள் அணையும் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த மூட்டைகள் படகுகள் மூலமாக போர்டிக்சன் துறைமுகத்தில் காத்து இருக்கும் கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

படத்தின் உரிமம்:  G.R. Lambert & C, Singapore.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.09.2020



மலாயா தமிழர்கள்: மாட்டு வண்டிகளில் போராட்டம் - 1870

1870-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயா காபி தோட்டங்களில் உற்பத்தியாகும் காபி பழங்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும்; முறையான சாலை வசதிகள் இல்லாத இடங்களிலும்; உயரமான காட்டுப் பகுதிகளிலும்; இரயில் பாதைகள் இல்லாத இடங்களிலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப் பட்டன.

மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். 1870 - 1900

முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. (Bullock carts were said to have been introduced by Indian traders during the Malacca Sultanate.)

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதும் திரவ ரப்பர் பாலையும் உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்: மரவெள்ளிக் கிழங்குகள். காலம்: 1870 - 1900.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் ஏனோ தானோ போக்கு வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்குள் சின்னச் சின்ன சண்டைகள் என்றால் அவற்றை உடனடியாக மறந்துவிட வேண்டும். இன உணர்வுடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.

Sources:

1. https://nationalarchives.gov.uk/

2. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

3. Drabble, J. H. 1973. Rubber in Malaya, 1876–1922: The Genesis of the Industry. Kuala Lumpur: Oxford University Press.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.09.2020




மலாயா தமிழர்கள்: சயாம் பர்மா மரண இரயில் பாதை

1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தாய்லாந்து, பர்மா மரண இரயில் பாதை முகாம்களில் இருந்த அமெரிக்கா; ஆஸ்திரேலியா; நியூஸிலாந்து; பிரிட்டன்; டச்சு நாட்டுப் போர்க் கைதிகள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களின் நாடுகள் விரைவாகவும் சிறப்பாகவும் செயல் பட்டன.

Kinsaiyok, Thailand. 19 October 1945. A group of Tamil (Indian) women at the village of Kinsaiyok, 
172 kilometres north of Nong Pladuk (also known as Non Pladuk),or 244 kilometres south of
Thanbyuzayat on the Burma-Thailand railway.
Source: The Australian War Memorial

ஆனால் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அங்கேயே அப்படியே அனாதையாக கைவிடப் பட்டார்கள். பர்மா காடுகளில் நாதி இல்லாமல்; எங்கே போவது என்று தெரியாமல் சிக்கித் தவித்தார்கள். அவர்களை மலாயாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்கு உடனடியாக முயற்சிகள் செய்யப் படவில்லை. மலாயா அரசாங்கமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்தியா அரசாங்கமும் அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை.

இருந்தாலும் சில மாதங்கள் கழித்துக் கட்டம் கட்டமாக அவர்களை மீட்டுக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப் பட்டன. தாய்லாந்து அரசாங்கம் தான் தமிழர்களை அனுப்பி வைக்க முன்னெடுப்புச் செய்தது. அக்கறை எடுத்துத் தீவிரம் காட்டியது. அதன் பிறகுதான் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சொரணை தட்டியது. தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

Kinsaiyok, Thailand. 19 October 1945. At the village of Kinsaiyok.These children came forward with gifts of a rooster and cut flowers. This village had been raided by bandits two hours earlier and one Japanese prisoner of war (POW) had been wounded. Source: The Australian War Memorial

அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தமிழர்கள் பலர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு முக்கியமான விசயம்.

சில ஆயிரம் தமிழர்கள் திரும்பி வரவே இல்லை. தாய்லாந்து, பர்மாவிலேயே தங்கி விட்டார்கள். பெரும்பாலும் கால் கைகள் ஊனமாகிப் போன தமிழர்கள். தவிர மலாயாவில் இருந்த சொந்த பந்தங்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு திரும்பிவர மனம் இல்லாமல் போன தமிழர்கள்.

Kinsaiyok, Thailand. 20 October 1945. An Australian and a Dutch
officer from the Military History Team moving through the village.
They are followed by a Japanese prisoner and villagers.
Source: The Australian War Memorial

மலாயாவில் ஒட்டு மொத்தமாகக் குடும்பங்களை இழந்த தமிழர்கள். குடும்பத்தோடு சயாம் காட்டுக்குப் போய் அங்கே மனைவி மக்கள் எல்லோரையும் கூண்டோடு இழந்த தமிழர்கள்.

இப்படி திரும்பி வராமல் அங்கேயே தங்கிய மலாயா தமிழர்கள் சிலர் அங்குள்ள தாய்லாந்து, பர்மா பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். சிலர் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்தப் படத்திற்கு விளக்கம் தேவை இல்லை.

இவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தோசீனாவில் இருக்கிறார்கள். தேடிப் பிடிப்பதுதான் சிரமம். வியட்நாமில் இப்போது 9700 தமிழர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுகிறார்கள்.

இந்தப் பதிவில் காட்சிப் படுத்தப்படும் படங்கள் 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, தாய்லாந்து கின்சாயோக் (Kinsaiyok, Thailand) எனும் இடத்தில் எடுக்கப் பட்டவை. ஜப்பானியர் சரண் அடைந்த பின்னர், இரயில் பாதை போன தமிழர்கள் சிலர் கின்சாயோக் நகரில் தஞ்சம் அடைந்தார்கள்.

படத்தில் உள்ள தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்த போது அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் (Bruce Albert Reddaway). ஓர் ஆஸ்திரேலியர். அப்போது அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் வளர்த்த கோழிகளை அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.

இன்னொரு படம் மறுநாள் 20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஓர் ஆஸ்திரேலியரும்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் (Warmenhoven) என்பவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள் சென்றார்கள். கிராமவாசிகளில் நான்கைந்து தமிழர்களும் இருந்தார்கள்.

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

மரண இரயில் பாதை போடுவதற்குப் போன 100 தமிழர்களில் 65 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள். ஓர் இலட்சம் அல்லது ஒன்றரை இலடசம் மலாயா தமிழர்கள் இறந்து இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஏறக்குறைய 20,000 பேர் இருக்கலாம்.

அவர்களில் பெரும்பாலோர் வயது காரணமாக இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள். நடுக்காட்டில் நாதி இல்லாமல் தவித்த அந்த அப்பாவி மக்களை நினைத்துப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை ஆகும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.09.2020

1. https://joshuaproject.net/people_groups/18211/VM

2. https://www.awm.gov.au/collection/C201189

3.https://astroulagam.com.my/lifestyle/article/115197/the-heartbreaking-truth-behind-malaysian-tamils-the-death-railway

4.https://anzacportal.dva.gov.au/wars-and-missions/burma-thailand-railway-and-hellfire-pass-1942-1943/locations/camps-near-hellfire-pass/kinsaiyok-camps