07 அக்டோபர் 2021

பத்து ஆராங் தமிழர்கள் வரலாறு

தமிழ் மலர் - 01.10.2021

மலாயா தமிழர்கள் ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம். இன்னொரு பக்கம் இனவாத்தின் தாக்கம். மற்றொரு பக்கம் மதவாதத்தின் தாக்கம். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் பேராண்மையின் பெரும் தாக்கம்.


போகிற போக்கைப் பார்த்தால் இங்கு வாழும் தமிழர்கள் வேண்டாம். ஆனால் அவர்கள் வியர்வை சிந்த வேண்டும். உழைக்கும் உழைப்பு மட்டும் வேண்டும். அவர்களின் உழைப்பில் இருந்து வருமான வரி வேண்டும். அவர்கள் வாங்கும் பொருட்களுக்குச் சேவை வரி வேண்டும்.

ஓர் இனம் மட்டும் கால் மீது கால் போட்டுக் கொண்டு சொகுசாய் வாழ வேண்டும். மற்ற இனங்கள் எல்லாம் மாடாய் உழைக்க வேண்டும். என்னங்க இது? ஒட்டி வாழலாம். தப்பு இல்லை. ஒண்டி வாழலாம். தப்பு இல்லை. ஆனால் ஒட்டுண்ணிகளாய் மட்டும் வாழவே கூடாது. மனிதத் தன்மைக்கு அர்த்தமே இல்லை.

சிறுபான்மை இனத்தவர் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுக்கும் பணம் மட்டும் வேண்டும். ஆனால் சம்பாதித்துக் கொடுக்கும் அவர்கள் மட்டும் வேண்டாம். ஒரு ஒட்டுக்கடை போட முடியவில்லை. ஒரு தள்ளுவண்டி வியாபாரம் செய்ய முடியவில்லை. ஒரு டாக்சி ஓட்ட முடியவில்லை. ஒரு கடன் வாங்கி ஒரு வியாபாரம் செய்ய முடியவில்லை. எல்லாமே மைந்தர்களுக்கு மட்டுமே. கப் சிப்.

இதில் கடாரத்துப் பக்கம் ஒரு சார்லி சாப்ளின். இருக்கிறதை எல்லாம் இடித்துத் தள்ளும் அதிசயப் பிறவி. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. 2021-இல் கெடா பட்ஜெட் 90 கோடி. இதில் இந்தியர்களுக்கு இரண்டு இலட்சம். எதற்கு? நாக்கு வழிக்கவா? அந்த இரண்டு இலட்சத்தில் தமிழர்களுக்கு ஒரு அஞ்சு காசாவது வந்து சேருமா. இல்லை வரும் வழியிலேயே எல்லாம் கமிசன் போட்டு அபேஸ் பண்ணி விடுவார்களா?

ஒரு வார்த்தையில் முடிக்கிறேன். படுக்கையைத் தட்டிப் போட மட்டும் பொம்பள வேண்டும். மற்ற எதற்கும் அவள் வேண்டாம். மனசாட்சி மரணித்து விட்டது. நாடு இந்த நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது.

தமிழர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் எனும் அடையாளம் இல்லாமல்கூட போகலாம். சொல்ல முடியாது. அதற்காக நல்லபடியாகவே காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அதற்கு முன்னர் மலாயா தமிழர்களின் வரலாற்றை ஆவணப் படுத்த வேண்டும். பாட நூல்களில் ஒன்று நடக்காது. பரமேஸ்வரா காலத்தில் இருந்துதான் மலாயா வரலாறே தொடங்குகிறது.


கடாரத்து வரலாறு; செலின்சிங் வரலாறு; கங்கா நகரத்து வரலாறு; தாம்பிரலிங்கா வரலாறு; தக்கோள வரலாறு; புருவாஸ் வரலாறு; கோத்தா கெலாங்கி வரலாறு; பான் பான் வரலாறு; இலங்காசுகம் வரலாறு; இன்னும் பல வரலாறுகள் எல்லாம் பரமேஸ்வரா காலத்திற்கு முந்திய வரலாறுகள்.

அந்தப் பழைய வரலாறுகள் எல்லாம் பாடநூல்களில் இல்லை. கரைந்து காணாமல் போய்விட்டன. இருந்தாலும் இணையம் வழியாக வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றன. உலக மக்கள் வரலாற்று உண்மைகளை உணர்ந்து வருகின்றனர்.

எது எப்படியோ ஒரு சாரார் காலம் காலமாகக் கொட்டாங் கச்சிக்குள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு சாரார் கொட்டாங் கச்சிக்கு வெளியே அறிவார்ந்த நிலையில் வாழ்கிறார்கள். பூனைக் கணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது என்பது உலக நியதி.

அந்த வகையில் வரலாற்றில் சில காலச்சுவடுகளை மீண்டும் மீண்டும் அசை போட வேண்டிய நிலைமை. அதாவது காலத்தின் கோலம் அல்ல. காலத்தின் கட்டாயம்.

இன்றைக்கு பத்து ஆராங் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரை. இந்தக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் 21.03.2017-இல் முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் 05.01.2021 வெளியானது. மீண்டும் பதிவு செய்கிறேன்.


மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் பத்து ஆராங் நகரில் தொட்ட இடம் எல்லாம் வரலாற்று மர்மங்கள். தடுக்கி விழுந்தாலும் தாரை தாரையான மர்மங்கள். மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கும் தெரியாத பயங்கரமான மாயஜால மர்மங்கள். மயிர் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள். சங்கர்லால் கதை மாதிரி போகும். அச்சம் வேண்டாம்.

பூமிக்கு அடியில் இராட்சச பாம்புகளின் மர்மங்கள்; கொள்ளிவாய்ப் பிசாசுகளின் மர்மங்கள்; ஜப்பான்காரர்கள் தலைகளை வெட்டிய மர்மங்கள்; சிதைந்து போன நிலக்கரிச் சுரங்கங்களின் மர்மங்கள்; கம்யூனிஸ்டுக்காரர்களின் கத்திக்குத்து மர்மங்கள். கர்மவீரர் காமராசரையே சினமூட்டிய மர்மங்கள்; மலைக்க வைக்கும் மார்க்சிய மர்மங்கள். இப்படி எக்கச் சக்கமான மர்மங்கள்.

பத்து ஆராங் நகரத்தின் பெயரும் பத்து. பத்துமலையின் பெயரும் பத்து. இரண்டு பத்துக்களும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் சொத்து பத்து(க்)கள் தான். இரண்டுமே அடேக் ஆபாங் சொந்த பந்தங்கள் தான்.

பத்து ஆராங்கை இப்படியும் உவமானம் சொல்லலாம். பத்து ஆராங் ஓர் அமைதியின் ஊற்று. இளநீர் கலந்த இளந்தேங்காயின் வழுக்கல். ஆனால் புரட்சிகரமான உணர்வுகளின் கொப்பரை. அன்றைய மலாயாவில் மார்க்ஸ் – லெனின் சித்தாந்தங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்த முதல் மலாயா கிராமப்புற நகரம்.

அந்தச் சித்தாந்தங்களுக்கு முன்னோடிகளாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். அதில் பத்து ஆராங்  தமிழர்கள் மறக்க முடியாத சித்தாந்தவாதிகள்.

இந்தப் பத்து ஆராங் நகரம் தான் மலேசியாவிலேயே முதன்முதலாக ஒரு சோவியத் கம்யூனிச நகரமாக அறிவிக்கப் பட்டது. ஓர் அதிசயமான செய்தி. இல்லீங்களா. இந்த விசயம் பலருக்குத் தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

(http://kiankheong.blogspot.my/2012/08/the-intriguing-history-of-batu-arang.html - Malaya's first Soviet government on March 27, 1937. This was a declaration of independence even before the formation of the Federation of Malaya in 1957.)

சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மலேசியா என்பது மலாயாவாக இருந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்.

1930-களில் பத்து ஆராங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏறக்குறைய 6000 - 7000 பேர் வேலை செய்து வந்தார்கள். மண்ணுக்கு அடியில் 330 மீட்டர்கள் ஆழத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன. அந்த இருண்ட சுரங்கங்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு வேலை செய்தார்கள்.

பத்து ஆராங் நகரத்திற்கு அடியில் நூற்றுக் கணக்கான பாழடைந்த சுரங்கங்கள் இன்னும் இருக்கின்றன. அதாவது ஆயிரம் அடி ஆழத்தில். அதனால் தான் இந்த நகரில் மூன்று மாடிகளுக்கு மேல் எந்தக் கட்டடமும் இருக்காது. கட்டவும் முடியாது. கட்டுவதற்கு அனுமதி வழங்கப் படுவதும் இல்லை.

பத்து ஆராங்கில் பாதுகாப்பான சில இடங்களில் மட்டும் நான்கு மாடிக் கட்டடங்களைப் பார்க்கலாம். ஐந்து மாடிகளைப் பார்க்கவே முடியாது. அதாவது சுரங்கம் விளையாடிய இடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடு. மற்ற இடங்களில் பிரச்சினை இல்லை.

முதன்முறையாக 1973-ஆம் ஆண்டு பத்து ஆராங் போய் இருக்கிறேன். அங்கே ஆசிரியர் தோழர் இருந்தார். அவரை கராத்தே முனியாண்டி என்று அழைப்பார்கள். பத்து ஆராங்கைச் சுற்றிக் காட்டினார். ஏன் உயரமான கட்டடங்கள் இல்லை என்று கேட்டேன்.

அதற்கு அவர் ‘தமிழர்கள் சிந்திய இரத்த ஆறு இந்த நகரத்திற்கு அடியில் ஓடுகிறது. அதற்கு பயந்து கொண்டு பெரிய கட்டடங்களைக் கட்டுவது இல்லை’ என்று சொன்னார். அவர் வேறு அர்த்தத்தில் சொன்னது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது. சரி.

உயரமான கட்டடங்களுக்கு அடித்தளம் போட்டால் அஸ்திவாரத் தூண்கள் சுரங்கத்திற்குள் அப்படியே இறங்கிவிடும். கட்டடங்கள் இடிந்து விழுந்து விடும். அதனால் ஐந்து மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவது இல்லை.

இப்போது பத்து ஆராங்கில் உள்ள அந்தப் பழைய நிலக்கரிச் சுரங்கங்கள் எல்லாம் பாழடைந்து போய்க் கிடக்கின்றன. யாரும் துணிந்து இறங்கிப் போய்ப் பார்ப்பதும் இல்லை. ஜப்பானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பல நூறு பேர் இந்தச் சுரங்கங்களில் சிரச் சேதம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டு அவசரகாலத்தில் பல நூறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். யூடியூப்பில் இதைப் பற்றி ஒரு காணொளி உள்ளது. போய்ப் பாருங்கள். அதன் முகவரி:

https://www.youtube.com/watch?v=vrbyiZ1iwsQ

இந்தக் கரும் சுரங்கங்களில் பெரிய பெரிய மலைப்பாம்புகள் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலாவுவதாகவும் வேறு சொல்கிறார்கள். அங்கு உள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. யாருங்க இறங்குவது. ஆவி பிசாசு என்று ஆரம்பத்திலேயே மிரட்டி வைத்து விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு வெள்ளைக்காரர்கள் சுரங்கத்திற்குள் இறங்கிப் பார்க்கப் போய் இருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள்தான். திரும்பி வரவே இல்லையாம். என்னாச்சு ஏதாச்சு ஒன்னுமே புரியவில்லை. பத்து ஆராங் மக்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். நானும் கேட்டு இருக்கிறேன்.

அப்போது அந்தக் காலத்தில் சுரங்கங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப் படவில்லை. கரணம் தப்பினால் மரணம். இறங்கினால் இறப்பு. ஏறினால் உயிர் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.

ஆழமான அந்தச் சுரங்கத்தில் இருந்து வெளியே உயிரோடு வந்தால் தான் ஒருவனுடைய அவனுக்கு உயிர். வெளியே வரவில்லையா தெரிந்து கொள்ளுங்கள். வருவது கறுத்து வறுத்துப் போன பிணமாகத்தான் இருக்கும். பத்து ஆராங் மக்கள் அந்த மாதிரி நிறையவே பார்த்து இருக்கிறார்கள்.

நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் பலர் இறந்து போய் இருக்கிறார்கள். பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களின் வரலாறு 47 ஆண்டுகள். 112 பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

இதுவும் உறுதியான தகவல் இல்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் மறைத்து விட்டார்கள். கூடுதலாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் ஜீவி. காத்தையா அவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஏறக்குறைய 1000 பேருக்கு மேல் இறந்து இருக்கலாம் என்று சொன்னார்.

(http://blog.malaysia-asia.my/2012/11/batu-arang-in-selangor.html)

ஓர் இடைச் செருகல். மலாக்காவை உருவாக்கியவர் பரமேஸ்வரன். அவர் சுமத்திராவில் பிறந்தவர். இந்த விசயம் உங்களுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஏன் இந்த உலகத்திற்கே தெரியும். ஆனால் அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இப்படி நிலவுகிறது.

ஐரோப்பாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மகா அலெக்ஸாண்டர் என்பவர் இருந்தார். அவருடைய கொள்ளுப் பேரன்தான் இந்தப் பரமேஸ்வரன் என்று சில வரலாற்று வித்துவான்கள் சொல்கிறார்கள். எங்கே இருந்து ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

(https://www.geni.com/people/Maharaja-Parameswara-Raja-Iskandar-Shah-t21/6000000010134622102 - The historical Malay literary work, Sejarah Melayu states that Parameswara was a descendant of Alexander the Great.)

பரமேஸ்வரன் என்பவர் பாரசீகத்தில் கப்பலேறி வந்து லங்காவித் தீவில் குடியேறினாராம். கேட்க நல்லா தான் இருக்கிறது. பாடப் புத்தகங்களில் எழுதியும் இருக்கிறார்கள். எங்கே நடக்கிறது என்று மட்டும் தயவு செய்து கேட்க வேண்டாம். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லைங்க.

பரமேஸ்வரா பாரசீகத்தில் இருந்து கப்பலேறி வந்தார் என்று சொல்லிச் சொல்லியே சிலர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். பெரிய அக்கப்போர். எப்படிங்க. என்னங்க செய்வது. அதைக் கேட்டு எனக்கும் ரொம்ப நாளாக நெஞ்சுவலி.

எது எப்படியோ இறந்து போன பரமேஸ்வரனைத் தட்டி எழுப்பி கட்டப் பஞ்சாயத்து வைக்காமல் இருந்தால் சரி. அப்படியே நாலு நம்பர் கேட்காமல் இருந்தால் சரி. விட்டால் நம்ப மக்களில் சிலர் அவரையும் விட்டு வைக்க மாட்டார்கள். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

பரமேஸ்வரன் கதை மாதிரிதான் பத்து ஆராங்கிலும் நடந்தது. வெளியூர்களில் இருந்து வந்த தமிழர்கள் பலர் நிலச் சுரங்கங்களில் இறந்து போய் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் கணக்கு காட்டவில்லை.

அதனால் கணக்கும் தெரியவில்லை. சுரங்கத்திற்குள் இறந்து போன பத்து ஆராங் தமிழர்களைப் பற்றிய தகவல்கள் காலத்தால் மறைக்கப்பட்டு விட்டன. பரவாயில்லை. வெள்ளைக்காரர்கள் விசயம் தெரியாதா என்ன? சூரியனே அவர்களைக் கேட்டுத்தான் உதிக்குமாம். அப்புறம் என்னங்க?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.10.2021



 

05 அக்டோபர் 2021

மலேசியாவின் முதல் ரப்பர் தோட்டம்

மலாக்கா, ஆயர் மோலேக், புக்கிட் லிந்தாங் தோட்டம் - 1895

மலாக்கா, ஆயர் மோலேக், புக்கிட் லிந்தாங் தோட்டம்; மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரப்பர் தோட்டம். 1895-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலாக்கா நகரில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது.

மலாக்காவில் மற்றொரு ரப்பர் தோட்டம் 1897-ஆம் ஆண்டு புக்கிட் அசகானில் உருவாக்கப்பட்டது. இந்தப் புக்கிட் அசகான் தோட்டம், மலேசியாவில் உருவாக்கப்பட்ட மூன்றாவது ரப்பர் தோட்டம்.


1877-ஆம் ஆண்டில், கோலா கங்சாரில் ரப்பர் பயிர் செய்யப் பட்டாலும் சோதனை அடிப்படையிலேயே நிகழ்ந்தன. புக்கிட் லிந்தாங் தோட்டத்தை  உருவாக்கியவர் சான் கூன் செங் (Chan Koon Cheng). மலாக்காவைச் சேர்ந்த சீன வர்த்தகர்.

அந்தக் காலக் கட்டத்தில் மலாக்காவில் புகழ்பெற்று விளங்கிய மற்றொரு சீனர் டான் சாய் யான் (Tan Chay Yan). இவரின் துணையுடன் புக்கிட் லிந்தாங் தோட்டம் உருவானது.

தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் புக்கிட் லிந்தாங் தோட்டத்திற்கும் கொண்டு வரப் பட்டார்கள். தமிழர்களைக் கொண்டு வருவதற்கு மலாயா ஆங்கிலேய அரசாங்கம் உதவி செய்து இருக்கிறது.


1895-ஆம் ஆண்டு 60 ஏக்கர் பரப்பளவில் புக்கிட் லிந்தாங் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது. பின்னர் 1897-ஆம் ஆண்டு, அருகாமையில் இருந்த புக்கிட் டூயோங் தோட்டத்தில் 40 ஏக்கர் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.

இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மெட்ராஸ் நகரில் இருந்து தமிழர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.

1899; 1900; 1901-ஆம் ஆண்டுகளில் ஜாசின் கெமண்டோர் (Kemendor); புக்கிட் சிங்கி (Bukit Senggeh); சிலாண்டார் (Selanda); கீசாங் (Kesang); ரீம் (Rim) ஆகிய பகுதிகளில் மரவள்ளித் தோட்டங்களும் ரப்பர் தோட்டங்களும் உருவாக்கப் பட்டன. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழர்கள் சென்னையில் இருந்து அழைத்துவரப் பட்டார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.10.2021

Malaya Indians Bukit Lintang Estate Ayer Molek Malacca 1895

Sources:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908. Page: 843

Notes:

In 1895 Mr. Chan Koon Cheng started as a rubber planter in partnership with Mr. Tan Chay Yan at Bukit Lintang (Kandang and Ayer Molek). In 1895 he planted 60 acres, and in 1897 planted 40 acres on his own property, Bukit Duyong. He brought coolies from Madras. From 1895 to 1900 he was also manager of Messrs. Guan Hup & Co., general storekeepers, &c., Malacca.

In 1901 he commenced planting 3,000 acres at Kemendor, Bukit Senggeh, Selandar, Kesang, and Rim, known as Kesang - Rim rubber and tapioca estate, and by the year 1906 he had the whole estate set with tapioca and interplanted with rubber.

Mr. Chan Koon Cheng, J. P is one of the oldest Chinese families in Malacca is that of which the present-day representative is Mr. Chan Koon Cheng, tapioca and rubber planter.

He can trace his descent in a direct line for in Singapore. Mr. Chan Koon Cheng, J. P.—One of the oldest Chinese families in Malacca is that of which the present-day representative is Mr. Chan Koon Cheng, tapioca and rubber planter.

He can trace his descent in a direct line for eight generations. His ancestor who first came from China and settled with his family in Malacca was Mr. Chan Plan Long, who was a Chin Su. He arrived in 1671. Mr, Chan Koon Cheng's grandfather, Mr. Chan Hong Luan, was once a lessee of the Government spirit and opium farms in Malacca.

03 அக்டோபர் 2021

பசிபிக் பெருங்கடலில் தாகித்தி தமிழர்கள்

தமிழ் மலர் - 03.10.2021

உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடல். அந்தக் கடலிலே தன்னந்தனியாக ஒரு தீவு. உலகின் அழகிய பத்து தீவுகளில் அதிசயமான ஒரு தீவு. அழகிலும் அழகான அற்புதமான தீவு. பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவு.

அதன் பெயர் தாகித்தி. பலரும் அறியாத பெயர். பலரும் கேள்விப்படாத பெயர். மனித நடமாட்டம் என்பது மிக மிகக் குறைவு. மக்கள் போவதும் குறைவு.

ஹவாய் தீவு. தெரியும் தானே. அமெரிக்காவைச் சீண்டிப் பார்த்த தீவு. அங்கே இருந்த அமெரிக்கக் கப்பல்கள் மீது, ஜப்பான்காரர்கள் குண்டுகளைப் போட்டு அமெரிக்காவை வம்புக்கு இழுத்து இரண்டாம் உலகப் போரில் களம் இறக்கி விட்டார்கள்.


அந்த ஹவாய் தீவில் இருந்து தெற்கே 4,400 கி.மீ (2,376 மைல்கள்); தென் அமெரிக்கா சிலி நாட்டில் இருந்து கிழக்கே 7,900 கி.மீ (4,266 மைல்கள்); ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வட மேற்கே 5,700 கி.மீ. (3,078 மைல்கள்). அங்கேதான் தாகித்தி தீவு இருக்கிறது.

அமெரிக்கா கண்டத்திற்கும் ஆசியா கண்டத்திற்கும் நடுவில் மாபெரும் பசிபிக் கடலில் பச்சைப் பிள்ளை போல அப்பாவித் தனமாய் இருக்கிறது தாகித்தி தீவு.

இப்போது இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இப்படி ஒரு தமிழ்ச் சமுதாயம் இப்படி ஒரு பெருங்கடலில் வாழ்வது உலக அதிசயம் தானே. பலருக்கும் தெரியாத அதிசயம் தான்.


இந்தத் தீவில் 20 தமிழர்க் குடும்பங்கள் மட்டும் அல்ல. உள்ளூர் பூர்வீக மக்களும்; பிற இனத்தவர்களும் 1,89,000 பேர் வாழ்கிறார்கள்.

இந்தத் தாகித்தி தீவின் பரப்பளவு 1044 ச.கி.மீ. முதன்முதலாக கி.பி. 300-ஆண்டுகளில் பாலினேசியர்கள் குடியேறி இருக்கிறார்கள். தாகித்தி தீவின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் பாலினேசியர்கள்.

முன்பு காலத்தில் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக போமாரே (Pomare dynasty) எனும் வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

அங்கே போன ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் தாகித்தியை அடித்துப் பிடித்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். பின்னர் டச்சுக்காரர்கள் போனார்கள்; அதன் பின்னர் போர்த்துகீசியர்கள்; அடுத்து ஆங்கிலேயர்கள்; பிரெஞ்சுக்காரர்கள். இப்படி மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு ஆட்சி செய்து இருக்கிறார்கள்.


கடைசியாக போனவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். இவர்கள் தான் இப்போது ஆட்சி செய்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் ஆளுமையில் உள்ளது. அந்த வகையில் அங்கு உள்ள மக்கள் அனைவரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள். சரி. முக்கியமான ஒரு விசயத்திற்கு வருகிறோம்.

தமிழர்கள் எப்படி அங்கே போனார்கள். அதுதான் பெரிய ஒரு கேள்வி. இரகசியம் நிறைந்த கேள்வி என்றுகூட சொல்லலாம். அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

1967-ஆம் ஆண்டில் தான் தாகித்தி தீவில் தமிழர்க் குடும்பங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். தாகித்தி தீவைச் சுற்றிப் பார்க்கப் போன தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

வருடத்தைக் கவனியுங்கள். 1967. மிக அண்மையில் தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனாலும் தாகித்தி தமிழர்கள் சில நூறு ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள்.


தமிழர்களின் பெயர்கள் என்னவோ பழக்கப்பட்ட பெயர்களாகவே உள்ளன. ஆச்சியமா, வள்ளியம்மா, மாரிம்மா, சாமிநாதன், சரஸ்வதி, சாரங்கபாணி என்று இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போய் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். இரகசியங்கள் கசியத் தொடங்கின.

அந்த 20 தமிழர்க் குடும்பங்களின் குடும்பத் தலைவர்களுக்கும்; குழந்தைகளுக்கும் தங்களின் வம்சாவளியைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. காட்டில் கண்ணைக் கட்டி விட்டுத் தொலைந்து போன கதை மாதிரி தான்.

அந்தத் தமிழர்க் குடும்பங்களுக்கு அறவே தமிழ் பேசத் தெரியவில்லை. அங்குள்ள உணவு விடுதிகளில்; கடைகளில் சாதாரண வேலைகள் செய்து வருகிறார்கள்.


தாகித்தி தலைநகரம் பாபிட்டி (Papeete). இந்த நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் தான் அந்தத் தமிழர்களின் வீடுகள் உள்ளன. இவர்களுக்கு என்று தனியாக ஒரு பொது மண்டபம் உள்ளது.

இவர்களின் பிள்ளைகள் பிரெஞ்சு; கிரியோல் மொழி படிக்கிறார்கள். பேசுகிறார்கள். பெரிதாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இருந்தாலும் இவர்கள் தமிழர்கள் தான்.

ஆனாலும் இவர்களின் தாத்தா பாட்டிகளின் பெயர்களை நினைவு வைத்து இருக்கிறார்கள். தங்களைத் தமிழர்கள் என்றும் சொல்கிறார்கள். தாங்கள் தமிழர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் எப்படி தமிழர்களாக வாழ்கிறோம் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தாகித்தி தமிழர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். ஒரு சிலருக்கு சமயம் எதுவும் இல்லை. இவர்கள் 'லா லாங்கு' (la langue) எனும் ஒரு கலப்பு மொழியைப் பேசுகிறார்கள். அடிக்கடி அந்த மொழியிலேயே பாடுகிறார்கள்.

சமயங்களில் தங்களின் பூர்வீகத்தை நினைத்துப் பாடி அழுகிறார்கள். அவர்களின் பூர்வீகம் என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன். தமிழர்கள் என்று தெரியும். ஆனால் எப்படி தமிழர்கள் என்பது மட்டும் தெரியவில்லை.

அவர்களின் இந்திய வம்சாவளியைப் பற்றிய ஒரே ஒரு பிடிமானம் அவர்களின் பெயர்கள் மட்டுமே. வேறு எந்தத் தகவலும்; எந்தச் சுவடும் கிடைக்கவில்லை.

பவளக் கொடி (Pavalacoddy); மரியசூசை (Mariasoosay); ராயப்பன் (Rayappan); சாமிநாதன்; திவி; வீராசாமி; பார்வதி; லெட்சுமி; மாரியம்மா, ராசம்மா எனும் அழகு அழகான பெயர்கள். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல வேறு எதும் இல்லை.

தாகித்தி தீவில் இருந்து வெகு தொலைவில் பிஜி தீவுகள் உள்ளன. இங்கே தான் 1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் குடியேற்றம் செய்யப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அங்கு  கொண்டு செல்லப் பட்டார்கள்.

பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம் மலேசியாவில் இருந்து 8,680 கி.மீ. கொஞ்ச நஞ்ச தூரம் அல்ல.

உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் மலாக்காவில் இருந்து பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள் இருந்தன. அந்தக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு போனார்கள். நான் சொல்வது பீஜி தீவைப் பற்றித்தான். தாகித்தி தீவு அல்ல.

1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் ஏறக்குறைய 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

இந்தப் பிஜி தீவில் இருந்து தான் தாகித்தி தீவிற்கு, அந்த 20 தமிழர்கள் குடும்பங்களும் போய் இருக்கலாம். இது ஒரு பொதுவான கருத்து. ஓர் அனுமானம். ஆனால் எவ்வளவு தூரம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாகித்தி தீவிற்கும்; பிஜி தீவிற்கும் இடைப்பட்ட தூரம் 3336 கி.மீ. சும்மா ஒரு கற்பனை பண்ணினாலே மயக்கமே மரி. அதுவும் இந்தக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்தாலும் எப்படியும் நான்கு ஐந்து மணி நேரம் பிடிக்கும்.

இன்னும் ஒரு விசயம். 1870-ஆம் ஆண்டுகளில் தாகித்தி தீவிற்கும்; பிஜி தீவிற்கும் கப்பல் பயணங்கள் எதுவும் இல்லை. சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து இருந்து இருக்கிறது.

ஆனால் அந்தச் சரக்குக் கப்பல்களில், இந்தத் தாகித்தி தமிழர்கள் ‘தும்பாங்’ பண்ணிப் போய் இருக்க முடியாது. ஏன் தெரியுங்களா. வெள்ளைக்காரர்கள் சும்மா விட்டு இருக்க மாட்டார்கள். தோலை உரித்துத் தொங்கப் போட்டு இருப்பார்கள்.

அப்படியே கப்பலில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகப் போய் இருந்தாலும், ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்று பேர் போய் இருக்கலாம். இப்படி 20 குடும்பங்கள் போய் இருக்க முடியாது.

அப்படியே கப்பலில் போய் இருந்தாலும் இரண்டு வாரத்திற்குச் சோறு தண்ணி இல்லாமல் காயந்து கருவாடாகப் போய் இருப்பார்கள். இறந்து போய் இருக்கலாம்.

ஆக அப்படியும் இருக்க முடியாது. அந்த வகையில் அவர்கள் கப்பலேறிப் போய் இருக்க முடியாது. அப்புறம் எப்படி?

ஒரு தற்காலிகக் காரணத்தைச் சொல்லலாம். முன்பு காலத்தில் பாலினேசியர்கள் பசிபிக் பெருங்கடல் முழுமைக்கும் கட்டுமரம் கட்டிப் பயணம் செய்து இருக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கால் பதிக்காத இடம் என்று எதுவுமே இல்லை.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஹவாய், குவாம், பிஜி, சாலமன் தீவுகள், போர்னியோ, மலாயா என்று எல்லா நாடுகளுக்கும் கட்டுமரம் கட்டி ஐலசா பாடிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

மலாயாவை எடுத்துக் கொள்ளுங்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்தமான், பர்மா, சுந்தா தீவுக் கூட்டங்கள், வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரோனேசியா போன்ற இடங்களில் இருந்து வந்த பாலினேசியர்கள் மலாயாவிலும் கால் பதித்து விட்டார்கள்.  

செமாங், செனோய், செக்காய், பாத்தேக், தெமியார், தெமுவான், லானோ, ஜகாய், கிந்தாக் போன்றவர்கள் தான் மலாயாவின் பூர்வீகக் குடிமக்கள். இவர்கள் தான் உண்மையிலேயே பூர்வீகக் குடிமக்கள். மண்ணின் மைந்தர்கள். ஆனால் அந்தத் தகுதி ???

ஒன் பில்லியன் டாலர் கேள்வி. இப்போது எல்லாம் மில்லியனுக்கு மவுசு இல்லீங்க. ரோசாப்பூ ரோசம்மா ஒரு மில்லியன் டாலருக்கு ஒரு கைப்பை வாங்கியதில் இருந்து, இப்போது கிண்டர்கார்டன் சிசுக்கள்கூட பில்லியன் என்று தான் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். விடுங்கள். ஊர் பொல்லாப்பு வேண்டாம். நம்ப கதைக்கு வருவோம்.

இந்தப் பாலினேசியர்கள் அண்மைய காலங்களில்கூட தீவுகளுத் தீவு கட்டுமரம் கட்டிப் போவது வழக்கம். அப்படிப் போகும் போது பிஜியில் இருந்த தமிழர்களும், பாலினேசியர்களுடன் தாகித்தி தீவிற்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

ஏன் என்றால் கடல் பயணங்கள் பற்றி அதிகம் தெரிந்து இருக்காத அந்த பிஜித் தமிழர் தொழிலாளர்கள், யாருடைய உதவியும் இல்லாமல், 3336 கி.மீ. தூரம் கட்டு மரங்களில் போய் இருக்க முடியுமா. முடியவே முடியாது.

அதே போல பசிபிக் பெருங்கடலில் இன்னும் ஒரு தீவு உள்ளது. அதன் பெயர் நியூ கலிடோனியா. ஆஸ்திரேலியாவில் இருந்து 1200 கி.மீ. உள்ளது. இந்தத் தீவிலும் 500 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களைப் பற்றி பின்னர் ஒரு நாளில் சொல்கிறேன்.     

தாகித்தி தமிழர்களைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை. அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம்.

அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போது என்ன. தமிழ்நாட்டைத் தமிழர்களா ஆட்சி செய்கிறார்கள். சண்டைக்கு வர வேண்டாம்.

மலேசியாவைப் பற்றி பேச வேண்டாம். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. ஏதாவது எழுதப் போய்… வேண்டாங்க. மலேசியத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அடிக்கடி போலீஸ் ஸ்டேசன்; நீதிமன்றம் என்று ஏறி இறங்கித் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள்.

சில நாடுகளில் தமிழர் எனும் அடையாளமே தெரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் தாகித்தி தமிழர்களின் அடையாளம் ஒரு சோகமான வரலாறு. கண்கள் பனிக்கின்றன.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(03.10.2021)

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Indians_in_New_Caledonia

2. Xavier S.Thaninayagam, published by the International Association of Tamil Research, 1968 - https://tamilnation.org/diaspora/newcaledonia.htm

3. Lal, Brij Vilash; Fortune, Kate (2000). The Pacific Islands: An Encyclopedia. University of Hawaii Press. pp. 27

4. Robert C. Schmitt (1962). "Urbanization in French Polynesia". Land Economics. 38 (1): 71–75.





 

02 அக்டோபர் 2021

பாரிட் புந்தார் டெனிசன் கரும்புத் தோட்டம் - 1876

மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கரும்புத் தோட்டங்கள்; காபித் தோட்டங்கள்; மிளகுத் தோட்டங்கள்; மரவள்ளித் தோட்டங்கள் தோன்றி விட்டன. அத்தனையும் அடுக்குமல்லி போல அழகு அழகான பசும் பச்சைத் தோட்டங்கள்.

அந்த வகையில் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட காபிக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியர்கள் ஆயிரக் கணக்கில் மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டார்கள்.

தவிர 1840-ஆம் ஆண்டுகளிலேயே மிளகு, காபித் தோட்டங்களில் ஆயிரக் கணக்கான தென்னிந்தியர்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நினைவில் கொள்வோம். தென்னிந்தியர்கள் என்றால் தமிழர்கள்; தெலுங்கர்கள்; மலையாளிகள்.

பேராக், பினாங்கு, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மலாயாவுக்கு வந்த தென்னிந்தியர்கள் விவரங்கள்:

# 1840 - 1849-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 1800 பேர்

# 1850 - 1854-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2000 பேர்;

# 1855 - 1858-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 2500 பேர்;

# 1859 -ஆம் ஆண்டில் 3800 பேர்;

# 1860 - 1864-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் 4000 பேர்;

# 1865 -ஆம் ஆண்டில் 6000 பேர்;

# 1867 -ஆம் ஆண்டில் 6294 பேர்;

# 1868 -ஆம் ஆண்டில் 6949 பேர்;

# 1869 -ஆம் ஆண்டில் 9013 பேர்;

# 1870 -ஆம் ஆண்டில் 5000 பேர்;

டெனிசன் கரும்புத் தோட்டம் 1876-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. ஆனால் சில உள்ளூர் ஆவணங்களில் 1890 என்றும் 1910 என்றும் பகிர்ந்து உள்ளார்கள்.  

1870-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் (Parit Buntar) மாவட்டத்தில் டெனிசன் தோட்டம் (Denison Estate) இருந்தது. இப்போது அந்தத் தோட்டத்தில் கொஞ்சம் நிலத்தைப் பிடுங்கி எடுத்து சொகுசு மாடி வீடுகளைக் கட்டி இருக்கிறார்கள்.

டெனிசன் எஸ்டேட் கம்பெனி (Denison Estate Company Ltd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. 750 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப் பட்டது. அதன் பின்னர் 310 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிரிடப் பட்டது. தவிர 175 ஏக்கர் தேங்காய் சாகுபடியும் செய்யப்பட்டது.

நிறையவே கால்வாய்களை வெட்டி இந்தத் தோட்டத்தை வடிகட்டி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். வளப்பம் நிறைந்த மண். ரப்பர், தேங்காய் இரண்டுக்கும் மிகப் பொருத்தமான மண்.

டெனிசன் தோட்டத்திற்கு 1910-ஆம் ஆண்டில் தாமஸ் பாய்ட் (Thomas Boyd) என்பவர் வருகை தரும் முகவராக இருந்தார். இவரின் பார்வையில் கூலா தோட்டமும் (Gula estate) இருந்தது. இந்தத் தோட்டங்களைப் பினாங்கைச் சேர்ந்த மெசர்ஸ் கென்னடி (Messrs. Kennedy e Co., Pinang) எனும் கம்பெனியார் நிர்வாகம் செய்து வந்தனர்.

மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். நேற்று வந்தவர்கள் முந்தாநாள் வந்தவர்களை நோட்டம் பார்க்கிறார்கள். விவஸ்தை இல்லை.

படத்தில் நம்மவர்கள் வேட்டியை இழுத்துக் கோவணமாகக் கட்டிக் கொண்டு வேலை செய்வதைப் பாருங்கள். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தென்னிந்தியர்கள் காடு மேடுகளில் மட்டும் வேலை செய்யவில்லை. கால்வாய், வாய்க்கால், கழனிகளிலும் இறங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அடுத்து வரும் நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தை எடுத்தவர் விவரங்கள்:

# கார்ல் ஜோசப் கிலெயின்குரோத் - Carl Josef Kleingroth

# ஜெர்மன் நாட்டுக்காரர் (German photographer)

# பிறப்பு இறப்பு (1864 - 1925)

# வாழ்ந்த இடம் மேடான் சுமத்திரா (Medan, Sumatra)

# படம் எடுக்கப்பட்டது 1899

# படம் பாதுகாக்கப்படும் இடம் லெய்டன் பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்து (Leiden University Library, KITLV institute, Netherlands)

எவ்வளவுக்கு எவ்வளவு இந்தியர்கள் சார்ந்த ஆவணங்களைச் சிதைக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சிலர் சிதைக்கின்றார்கள். சிதைத்துவிட்டுப் போகட்டும். இருந்தாலும் மீட்டு எடுக்க பலர் இருக்கிறார்கள்.

விடுங்கள். கிணற்றுத் தவளைகள் கத்துவதால் மழை வரப் போவது இல்லை. மழை வருவதால் தான் அவை கூச்சல் போடுகின்றன.

இந்தப் பதிவை எந்த ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2021

சான்றுகள்:

1. Kernial Singh Sandhu. (1969). Indian in Malaysia immigration and settlement 1784-1957. Singapore: Cambridge University Press.

2. New Mandala. asiapacific.anu. edu.au/ newmandala /2013/ 02/20/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia/

3. Aliens in the Land – Indian Migrant Workers in Malaysia - https://apmigration.ilo.org/news/aliens-in-the-land-indian-migrant-workers-in-malaysia
 




01 அக்டோபர் 2021

கோலாகங்சார் சங்காட் சாலாக் தோட்டம் - 1906

சங்காட் சாலாக் தோட்டம், கோலாகங்சார் அரச நகரில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. 1906-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. இங்கிலாந்தில் கிலாஸ்கோ (Glasgow) நகரில் இருந்த சங்காட் சாலாக் நிறுவனத்திற்குச் (Chungkat Salak Syndicate) சொந்தமானது. 3,900 ஏக்கர் பரப்பளவு.


1906-ஆம் ஆண்டு மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் ஹில் (Mr. Hill) என்பவருக்கு 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலம் சாலாக் இரயில்வே நிலையத்திற்கு (Salak North railway station) அருகில் இருந்தது. அந்த நிலத்தில் தான் சங்காட் சாலாக் தோட்டம் (Changkat Salak Estate) உருவாக்கப் பட்டது.

இந்தத் தோட்டத்திற்கு 1907 பிப்ரவரி மாதம், டே (E. H. F. Day) என்பவர் நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றார்.

1906-ஆம் ஆண்டில் 120 ஏக்கரில் முதன்முதலாக ரப்பர் நடவு. முதலில் 23.000 இளம் ரப்பர் கன்றுகள். இந்தக் கன்றுகள் 15 மாதங்களில் 25 அடி உயரத்திற்கு வளர்ந்து விட்டன.

1907-ஆம் ஆண்டு மேலும் 1000 ஏக்கரில் ரப்பர் நடவு. தவிர 380 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு. சங்காட் சாலாக் தோட்டத்தைச் சுற்றிலும் நிறைய ஈய லம்பங்கள் திறக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான சீனர்கள் வேலை செய்தார்கள்.


பின்னர் 1907-ஆம் ஆண்டில் நான்கு மைல் தூரத்திற்கு அரசாங்கம் மாட்டு வண்டிச் சாலையை உருவாக்கிக் கொடுத்தது. இந்தச் செம்மண் சாலை சங்காட் சாலாக் தோட்டத்தையும் சாலாக் இரயில் நிலையத்தையும் இணைத்தது.

நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்ற டே என்பவர், இலங்கை, இந்தியாவில் விவசாய அனுபவம் பெற்றவர். அங்கு அவர் பதினைந்து ஆண்டுகள் தேயிலை, காபி, மிளகு, சிஞ்சோனா (cinchona) தோட்டங்களில் பணியாற்றியவர்.

சிஞ்சோனா தெரியும் தானே. மலேரியா காய்ச்சலுக்கு இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது.

சங்காட் சாலாக் தோட்டம் திறக்கப்பட்ட போது 90 தமிழர்கள் வேலை செய்தார்கள். பின்னர் மேலும் தொழிலாளர்களை ஆள் சேர்ப்பு செய்வதற்காக ஓர் ஐரோப்பியத் துணை நிர்வாகி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார்.

கங்காணி எவரும் அனுப்பபடவில்லை. ஏன் என்றால் கங்காணி முறை அந்தக் கட்டத்தில் மலாயாவில் அமல்படுத்தப் படவில்லை.

தமிழ் நாட்டுக்குப் போன அந்த வெள்ளைக்காரர் 1907-ஆம் ஆண்டில் 350 தமிழர்களைச் சங்காட் சாலாக் தோட்டத்திற்குக் கொண்டு வந்தார். நான்கே மாதங்களில் அந்தத் தோட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 90--இல் இருந்து 430-ஆக உயர்ந்தது.

தவிர 60 ஜாவானியர்களும் கொண்டு வரப் பட்டார்கள். ஜாவானியர்கள் அதிகம் இல்லை. அத்துடன் அவர்களைக் கொண்டு வருவதற்கு செலவுகள் அதிகம். ஒரு ஜாவானிய தொழிலாளரைக் கொண்டு வருவதற்கு 50 டாலர்கள்.

ஆனாலும் ஜாவானிய தொழிலாளரிடம் இருந்து 21 டாலர்களை மட்டுமே அவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முடிந்தது. அதனால் தமிழர்களை அதிகமாகக் கொண்டு வந்தார்கள். அத்துடன் ஜாவானியர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த கம்பங்களில் தங்க ஆரம்பித்தார்கள்.


வேலைக்கு நினைத்தால் வருவது எனும் போக்கைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல. தாங்கள் உண்டு; தங்கள் வேலை உண்டு என்று தோட்ட நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். அதுவே வெள்ளைக்காரர்களுக்கு அதிகமாய்ப் பிடித்துப் போனது.

பின்னர் அந்தத் தோட்டம் கத்தரி நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தத் தோட்டத்திற்குப் பக்கத்தில் காமிரி (Kamiri) தோட்டம் உள்ளது.

2002-ஆம் ஆண்டில் இந்தத் தோட்டங்கள் விற்கப் பட்டன. அதனால் அங்கு உள்ளவர்கள் வேலைகளை இழந்தார்கள். நஷ்டயீடு கோரி வழக்கு தொடர்ந்தார்கள். ஒரு சமரசம் செய்யப் பட்டது.

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 384. Britain Publishing Company, 1908, pg 384

2. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_390

3. https://www.malaysiakini.com/opinions/21820

தயாரிப்பு:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
01.10.2021

Notes: Twentieth century impressions of British Malaya; Page 384.

CHUNGKAT SALAK ESTATE. The Chungkat Salak rubber estate, situated about nine miles from Kuala Kangsa, and half a mile from Salak North railway station, forms part of a grant of 10,000 acres made by the Government to a Mr. Hill.

It has an area of 3,900 acres of undulating land free from Crown rent. It was acquired in June, 1906, by the Chungkat Salak Syndicate, a company formed in Glasgow, and Mr. E. H. F. Day was appointed manager in February, 1907.

When the estate was opened up, 120 acres were planted with Para rubber, and 380 more have since been placed under cultivation. There are now some 23,000 young trees on the estate. Some of these have attained a height of 25 feet in fifteen months from plants which were grown from seed planted in the nurseries five months previously.

A special officer sent from England to report on the estate declared that. he had never known such quick or vigorous growth. In about a year's time a further 1,000 acres of rubber will have been planted, and the prospects of the company are very bright.

The land is believed to be rich in tin, and mines are being opened by Chinese. The Government are about to construct a cart road, four miles in length, through the property, to connect Salah North railway station with the River Plus.

Mr. Day received his planting experience in Ceylon and India, where he was for some fifteen years engaged on well-known tea, coffee, pepper, and cinchona plantations.

In addition to him, there are on the estate a European mining superintendent and a European assistant. The coolies employed are mostly Tamils. A European assistant has been sent to India for the purpose of recruiting this class of labour, and the force has been increased from 90 to 350 coolies in four months.

There are also sixty Javanese at work on the estate, but Javanese are not largely employed owing to the cost of recruiting them'

This cost amounts to over 50 dollars per head, and only 21 dollars of this sum is recoverable from the coolie's wages.

Amongst the directors of the company, the capital of which is A35,000, are Sir William Treacher and the Hon. Mr. John Anderson, of Messrs. Guthrie e Co., of Singapore.