01 மே 2022

செஜாரா மெலாயு காப்பியத்தில் கோத்தா கெலாங்கி

தமிழ் மலர் - 01.05.2022

(காணாமல் போன கோத்தா கெலாங்கி ஆய்வு நூலின் 17-ஆவது அத்தியாயம்)

செஜாரா மெலாயு (Sejarah Melayu) என்பது பழம் பெரும் மலாய் இலக்கிய மரபு நூல். மலாயாவின் பண்டைய கால வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட ஒரு மலாய் வரலாற்றுக் காப்பியம்.

1500-ஆம் ஆண்டுகளில், மலாக்காவைச் சுல்தான்கள் ஆட்சி செய்த போது உரைநடை வடிவில் எழுதப்பட்டது. மலாய் மொழியின் மிகச் சிறந்த இலக்கிய வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

செஜாரா மெலாயுவின் அசல் பெயர் ‘சுலாலத்துஸ் சலாடின்’ (Sulalatus Salatin - Genealogy of Kings). அதன் முக்கிய கருப்பொருள் மலாக்காவின் மகத்துவத்தைப் பேணிக் காப்பது; மலாக்காவின் மேன்மையைப் போற்றுவது. மலாய் இலக்கியத்தின் மேன்மைகளைப் பொது மக்களுக்கு அறியச் செய்வது. (UNESCO (2001)

தவிர, மலாக்கா சுல்தான்கள் வரலாறு; மலாயா மன்னர்கள் வரலாறு; இவர்களின் பரம்பரைக் காலக் கோடுகள் (Time Line) போன்றவற்றை செஜாரா மெலாயு வரிசைப் படுத்திப் பட்டியலிடுகிறது.

மலாக்கா சுல்தானகம்;

மலாயா மீதான படை எடுப்புகள்;

மலாயா அரசர்களின் திருமண உறவுகள்;

மலாயா அரசர்களின் அரச தந்திர உறவுகள்;

மலாக்கா அரசர்களின் மேன்மைகள்;

பெண்டஹாரா துன் பேராக் (Bendahara Tun Perak)

மலாக்கா சுல்தானக வீரர் லக்சமனா ஹாங் துவா (Laksamana, Hang Tuah)

போன்றவர்களின் மாட்சிமைகளையும் பதிவு செய்கிறது. (UNESCO 2012, p. 219)

_செஜாரா மெலாயுவில் குறிப்பிடத்தக்கப் பதிவுகள்_

1. ராஜா இஸ்கந்தர் சுல்கர்னைன் (Raja Iskandar Zulkarnain) வரலாறு; சங் சபுர்பா (Sang Sapurba) என்பவரின் பரம்பரைத் தோற்றம்; புக்கிட் செகுந்தாங் (Bukit Seguntang); தோற்றம்; இவை முதல் பதிவில் வருகின்றன.
(Abdul Samad Ahmad 1979, p. 8)

2. பலேம்பாங் பகுதியில் இருந்து துமாசிக் வரையிலான நீல உத்தமன் சாகசங்கள்; சிங்கப்பூரா ஆளுமையை நிறுவுதல்; சிங்கப்பூருக்குப் பெயர் வந்த கதை; இவை இரண்டாம் பதிவு.
(Ibid., 30)

3. படாங் (Badang) எனும் மாவீரரின் புராணக் கதை; அவரின் அசாதாரண வலிமையை ஸ்ரீ ராணா விக்ரமாவின் (Sri Rana Wikrama) சிங்கப்பூர் அரசவையில் வெளிப்படுத்தியது; இவை மூன்றாம் பதிவு.
(Ibid., 47)

4. சிங்கப்பூராவின் கடற்கரை திருக்கை மீன்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. அந்தக் கட்டத்தில் ஹங் நாடிம் (Hang Nadim) எனும் சிறுவனின் சாகசத் துணிச்சல். இவை நான்காம் பதிவு.
(Ibid., 67)

5. சிங்கப்பூர் மஜாபாகித் அரசிடம் வீழ்ந்தது; சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளர் ஸ்ரீ இஸ்கந்தர் ஷா (பரமேஸ்வரா) தப்பிச் சென்றது. இவை ஐந்தாம் பதிவு.
(Ibid., 62–71)

6. மலாக்காவின் உருவாக்கம்; மலாக்காவின் சட்டங்கள் மற்றும் மலாக்காவின் ஒழுங்கு முறைகள் மலாக்கா நிர்வாகத்தின் அடிப்படையாக மாறியது; மலாக்காவிற்கு எப்படி மலாக்கா என்று பெயர் வந்தது; இவை ஆறாம் பதிவு.
(Ibid., 71–73)

7. துன் பேராக்; மலாக்காவின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதரான கதை; இது ஏழாம் பதிவு.
(Ibid., 89–111)

8. ஹங் துவா மற்றும் அவரின் தோழர்களின் கதை. மலாக்கா அரசவையில் நடந்த கைகலப்பில் ஹங் துவா தன் தோழர்களில் ஒருவரான ஹங் ஜெபாட்டைக் கொன்றது; இது எட்டாம் பதிவு.
(Australian National University, N/Tuah)

9. புத்திரி குனோங் லேடாங் புராணக்கதை; இது ஒன்பதாம் பதிவு.
(Abdul Samad Ahmad 1979, pp. 212–215)

10. போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றியது. மலாக்கா நகரத்தின் மீதான முதல் நாள் தாக்குதல்; இரண்டாவது நாள் தாக்குதலில், மலாக்கா போர்த்துகீசியர்களிடம் வீழ்ந்தது. இவை 10-ஆம் பதிவு.
(Ibid., 271)

செஜாரா மெலாயுவின் பதிவுகளில் கோத்தா கெலாங்கியைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. இருப்பினும் புராணக் கதைகளும் அந்த நூலில் பல இடங்களில் மேற்கோள்களாகக் காட்டப் படுகின்றன.


எடுத்துக் காட்டாக கடாரத்தின் பூஜாங் சமவெளி பற்றிய பதிவுகள். இக்காயாட் மெரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa) எனும் நாட்டுப்புறக் கதையில் வரும் ராஜா பெர்சியோங் (Raja Bersiong) என்பவரைத் தொடர்பு படுத்திச் சொல்கிறது. இராஜேந்திர சோழன் படை எடுத்ததைப் பற்றியும் சொல்கிறது.

மலாக்கா வரலாற்றை ஆதியில் இருந்து அந்தம் வரையில் முழுமையாகச் சொல்லிச் செல்கிறது. ஆனால் பரமேஸ்வரா எனும் பெயர் அதன் பயன்பாட்டில் இல்லை. பரமேஸ்வராவை இஸ்கந்தர் ஷா (Iskandar Shah) என்று மேற்கோள் காட்டுகிறது.
(C.M. Turnbull 2009; pp. 21–22)

மலேசியா, கிளந்தான் மாநிலத்தின் கிராமப் புறங்களில் பல வரலாற்றுப் புராணக் கதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புக்கிட் மாராக் (Bukit Marak) எனும் குன்றுப் பகுதியைச் சார்ந்த பழங்காலத்துக் கதை. புக்கிட் மாராக் குன்றுப் பகுதி, கிளந்தான் மாநிலத் தலைநகரமான கோத்தா பாரு நகரத்தில் இருந்து 24 கி.மீ. தெற்கே உள்ளது.

அந்தக் குன்றுப் பகுதி, புராணக் கால இளவரசி சாடோங் (Puteri Saadong) என்பவரின் வரலாற்றுச் செயல்பாடுகளுடன் இணைக்கப் படுகின்றது. இளவரசி சாடோங் நீராடியதாக நம்பப்படும் ஒரு பிரபலமான குளம் புக்கிட் மாராக் பகுதியில் உள்ளது.

புக்கிட் மாராக் குன்றின் உச்சியில் மூன்று கல் பாறைகள் உள்ளன. அந்தக் கல் பாறைகள் இளவரசி சாடோங்கிற்குப் பிடித்தமான இசைக் கருவியைப் போன்று அமைந்து உள்ளன என்று பொது மக்கள் நம்புகிறார்கள்.

இளவரசி சாடோங் என்பவர் கிளந்தான் வரலாற்றில் புராணக் கால ராணி. இவருக்கு இளவரசி விஜய மாலா (Puteri Vijaya Mala) எனும் ஒரு பெயரும் உண்டு. 1667-ஆம் ஆண்டில் அவரின் 15-ஆவது வயதில், கிளந்தான் ஜெம்பால் (Queen Regnant of Kelantan, Jembal 1663 - 1667) அரசின் அரசியானார்.

சயாம் - கிளந்தான் போரில் சயாமிய அரசர் நாராய் (King Narai of Siam) என்பவரின் அரண்மனைக்குப் பிணையாகக் கொண்டு செல்லப் பட்டார். விடுதலையாகித் திரும்பி வரும் போது, அவருடைய கணவர் ராஜா அப்துல்லா வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து இருப்பதை அறிந்து சினம் அடைந்தார்.

தன் தலையில் செருகி இருந்த குண்டூசியால் தன் கணவனைக் கொன்றாள். அதன் பின்னர் கிளந்தானில் இருந்து காணாமல் போய் விட்டார். இவை செஜாரா மெலாயுவில் காணப்படும் பதிவுகள். (Puteri Saadong, 2020)

அதே போல சரவாக் சாந்துபோங் மலையைப் பற்றியும் ஒரு கதை உள்ளது. அந்த மலையின் புராணக் கதையுடன் இரண்டு இளவரசிகளின் கதைகளும் வருகின்றன. இளவரசி சந்துபோங் (Puteri Santubong); இளவரசி செசிஞ்சாங் (Puteri Sejinjang) ஆகியோரின் கதைகளும் செஜாரா மெலாயுவில் இடம்பெற்று உள்ளன.


அந்த வகையில் கிளந்தான் இளவரசி சாடோங்; சரவாக் இளவரசி சாந்துபோங்; இளவரசி செசிஞ்சாங்; குனோங் லேடாங் இளவரசி; ஆகியோரின் புராணக் கதைகளின் தோழமைகள் செஜாரா மெலாயுவில் உள்ளன. (Abdul Samad Ahmad 1979, p. 216 - 217)

கோத்தா கெலாங்கி போன்ற பழங்கால இடிபாடுகளுக்கு செஜாரா மெலாயு மிகச் சரியான விளக்கத்தை வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. பொதுவாக, புனைவுக் கதைகள் மட்டுமே இதுகாறும் கோத்தா கெலாங்கியின் நிலைப்பாட்டை நியாயப் படுத்தி வந்துள்ளன.

1511-ஆம் ஆண்டில், மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள. அப்போது, அசல் ‘செஜாரா மெலாயு’ மலாக்கா சுல்தான் மகமுட் ஷாவிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் சுல்தான் மகமுட் ஷா, பகாங்கிற்குத் தப்பிச் சென்றார். சுல்தான் மகமுட் ஷா என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் ஆகும்.

அதே அந்த அசல் செஜாரா மெலாயு, பின்னர் 1528-ஆம் ஆண்டில் சுமத்திராவில் இருக்கும் கம்பார் நகரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. பின்னர், சிறிது காலத்திற்குப் பின்னர் ஜொகூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. (Leyden 1821, p. 1)

1536-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் தன் புதிய நகரத்தை ஜொகூர் லாமா பகுதியில் நிறுவி இருந்தார். அந்த ஜொகூர் லாமாவின் மீது போர்த்துகீசியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது தான், செஜாரா மெலாயு அசல் கையெழுத்துப் பிரதி போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. (Abdul Samad Ahmad 1979, p. xxiv)


அந்த அசல் பிரதி இந்தியாவின் போர்த்துகீசிய கோவா நகருக்குக் கொண்டு செல்லப் பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறார்கள். அது தவறு என்றும் சிலர் சொல்கிறார்கள். மலேசியா, பகாங் மாநிலத்தின் கோலா லிப்பீஸ் பகுதியில் உள்ள கெலாங்கி குகைக்குக் கொண்டு சொல்லப் பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். (Roolvink 1967, pp. 310)

இருப்பினும், மலேசிய வரலாற்று ஆசிரியர் அப்துல் சமாட் அகமட் (Abdul Samad Ahmad) வேறு ஒரு மாற்றுக் கருத்தைச் சொல்கிறார். செஜாரா மெலாயு கையெழுத்துப் பிரதி இந்தியாவின் கோவாவிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக இந்தோனேசியா சுலவாசி (Sulawesi) தீவில் இருந்த கோவா (Gowa) எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என்று பரிந்துரைக்கிறார். (Abdul Samad Ahmad 1979, p. xxv)

அப்துல் சமாட் அகமட் கருத்து வாதம் கீழ்க்கண்டவாறு அமைகின்றது:



ஒரு காலக் கட்டத்தில் மலாக்கா துறைமுகம் ஒரு முக்கியமான நுழைவாயிலாக இருந்தது. அப்போது, சுலவாசி கோவா உட்பட பல நாடுகளுடன் மலாக்கா அரசு வலுவான வர்த்தக; அரசதந்திர உறவுகளை கொண்டு இருந்தது.

போர்த்துகீசியர்கள் மலாக்காவிற்கு வருவதற்கு முன்னதாகவே செஜாரா மெலாயுவின் சில பிரதிகள் சுலவாசி தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று அப்துல் சமாட் அகமட் சொல்கிறார். (Abdul Samad Ahmad 1979, p. xxv)

கோவா (Goa) என்பதை குஹா அல்லது குவா (Guha or Gua) எனப் பார்க்க வேண்டும் என்று வில்லியம் லைன்ஹான் (William Linehan) வாதிடுகிறார். கோவா என்பது பகாங், கோலா லிப்பிஸ் நகருக்கு வடக்கே அமைந்து உள்ள குவா என்ற இடமாக இருக்கலாம்.


அங்கு செஜாரா மெலாயுவின் ஒரு சில பிரதிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம். அதன் பின்னர் 1612-ஆம் ஆண்டில் ஜொகூருக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்கிறார் வில்லியம் லைன்ஹான்.  (Linehan, 1947a: 112-16; Abdul Rahman Ismail, 1998: 7-20; Roolvink 1967, pp. 310)

போர்த்துகீசியர்களிடம் அந்த ‘செஜாரா மெலாயு’ கொஞ்ச காலம் இருந்தது. பின்னர், ஜொகூரின் அரசப் பிரதிநிதியான ஓராங் காயா சாகோ (Orang Kaya Sogoh)  என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுதான் அசல் பிரதி. ஆனால், பழுது அடைந்து போய் இருந்தது. (Leyden 1821, p. 1)

உண்மையில், அசல் செஜாரா மெலாயு பல மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளது. அதன் மிகப் மிகப் பழமையான பதிப்பு ’1612 மே மாதம்’ என தேதி குறிக்கப்பட்டு உள்ளது. (Roolvink 1967, pp. 310)

சேதம் அடைந்த செஜாரா மெலாயு மீண்டும் எழுதப்பட வேண்டும் என அப்போதைய ஜொகூர் சுல்தான் ராஜா அப்துல்லா அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.


அந்த வகையில் அந்த வரலாற்று நூலைச் செப்பனிட்டு, சில மாற்றங்களையும் செய்தனர். பத்திரமாகப் பாதுகாத்தும் வந்தனர். துன் ஸ்ரீ லானாங் (Bendahara Tun Sri Lanang) என்பவர்தான் செப்பனிடும் பொறுப்பை ஏற்று இருந்தார். (Leyden 1821, p. 2)

1612-ஆம் ஆண்டில் ஜொகூர் அரச நீதிமன்றத்தின் பெண்டஹாராவாக இருந்தவர் துன் ஸ்ரீ லானாங். பெண்டஹாரா பதவி என்பது பிரதமர் பதவிக்குச் சமமான ஒரு பதவியாகும்.

துன் ஸ்ரீ லானாங், ஜொகூர் அரச நீதிமன்றத்தில் சேவை செய்து வந்தார். அவரிடம் செஜாரா மெலாயு திருத்தப் படுவதற்காகக் கொடுக்கப் பட்டது. திருத்தங்கள் செய்யப்பட்டன. (Abdul Samad Ahmad 1979, p. xxvii)

துன் ஸ்ரீ லானாங் மதிப்பிற்குரிய மனிதர். சிறந்த கல்வியாளர். அவர் அவருடைய காலத்திற்கு ஏற்ற வகையில், அவரின் ஞான அறிவின்படி செஜாரா மெலாயு காப்பியத்தில் திருத்தம் செய்து உள்ளார். (edited and revised, according to conventional wisdom). தப்பாகச் சொல்லவில்லை. அவருடைய பணியை அவர் மிகச் சரியாகச் செய்து உள்ளார் என்றுதான் சொல்ல வருகிறேன்.


ஜொகூர் சுல்தான்கள் மட்டும் இல்லை என்றால் ‘செஜாரா மெலாயு எனும் காப்பியம் இல்லாமல் போய் இருக்கும். அந்த ‘செஜாரா மெலாயு’வின் அசல் பிரதியில் கோத்தா கெலாங்கி பற்றிய குறிப்புகள் உள்ளன.

செஜாரா மெலாயுவில் கோத்தா கெலாங்கி என்பது ஒரு கருங்கோட்டை நகரம் (Kota Batu Hitam; The Black Stone Fort’) என்று சொல்லப் படுகிறது.

ஜொகூர் ஆற்றின் வடக்குப் பகுதியில், கோத்தா கெலாங்கியின் பிரதான கோட்டை இருந்தது. அந்தக் கோட்டை கரும் கற்களால் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது என்றும் செஜாரா மெலாயு சொல்கிறது.

கெலாங்கி எனும் சொல் ஒரு தாய்லாந்துச் சொல்லாக இருக்கலாம் என்றும் செஜாரா மெலாயு குறிப்புகள் சொல்கின்றன.


ஆனாலும், ‘செஜாரா மெலாயு’ (Sejarah Melayu) வேறு கோணத்தில் வேறு மாதிரியாகப் பதிவு செய்கிறது.

கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மன், சோழர்களின் படைகளைக் கோட்டைக்கு அப்பால், பத்து மைல்களுக்கு அப்பால், நேருக்கு நேர் மோதினார் என்று ‘செஜாரா மெலாயு’ பதிவு செய்து இருக்கிறது.

‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகள் நம்பகத் தன்மையைத் தாண்டிப் போகின்றன என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து.

வரலாற்று நினைவுச் சின்னங்களின் கட்டமைப்புகள், தரையில் இருந்தவாறு பிரமாதமாக வானில் உயர்ந்து நிற்கலாம்.


ஆனாலும் அந்தக் கட்டமைப்புகளை உருவாக்கிய பண்டைய பேரரசுகள் மண்ணுக்கு அடியில் தொந்தரவு இல்லாமல் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்று ஆசிரியர் ஸ்டீவர்ட் வேவல் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. (Stewart Wavell). But while these monumental structures of spectaculation rise magnificently above the ground, the ancient kingdoms themselves remain undisturbed below.’’)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.05.2022

குறிப்புகள்:

1. Moens, Ir. J. L. (trans, R. J. de Touche), ‘Srivijaya, Yava en Kataha’, Journal of the
Malayan Branch of the Royal Asiatic Society, 17(2), 1939.

2. UNESCO 2001, p. 7; Memory of the World: Sejarah Melayu (The Malay Annals)

3. (Chand Chirayu Rajani M.C. 1971). Memory of the World: The treasures that record our history from 1700 BC to the present day.

4. (Raimy Che Ross, December 2003). Kota Gelanggi, lying deep in the jungles at the southern end of the Malay Peninsula, allegedly raided by Raja Rajendra Cholavarman I (AD 1014~44) of the South Indian Chola Dynasty at the dawn of the last millennium, Kota Gelanggi (or Kota Batu Hitam, that is The Black Stone Fort) is mentioned by name in the Sejarah Melayu and may hold the key to the riddle of Srivijaya’s triumvirate polities.

5. (Chithra Madhavan, D K Printworld, 2007). Kota Gelanggi’s precise location and thus its very existence has been the subject of much speculation over the past century of modem archaeological and historical research Winstedt (1932) and Gardner (1932) both suggest that the site may lie somewhere along, the upper reaches of the Johor River.

6. (Swettenham (1885) and Linehan (1936, 1947a and 1947c), on the other hand, equate Kota Gelanggi with the cave complex of the same name in Pahang.

7. (Guy, 1, ‘Tamil Merchant Guilds and the Quanzhou Trade’, in A. Schootenhammer (ed.). In the absence of substantial opposition over the issue, the Kota Gelanggi cave complex of Pahang has since been recognized as ‘the’ Kota Gelanggi, despite the highly circumstantial and unconvincing evidence put forth to support the claim.

8. (Turnbull C.M., 2009). The name Parameswara is not found in the Malay Annals, which tell a romanticized history of the kingdoms of Singapura and Malacca. However, the name Parameswara is found in Portuguese sources such as Suma Oriental, and written Paramicura or Parimicura. Parameswara is a Hindu name derived from the Sanskrit word.

9. (Baker, Christopher; Phongpaichit, Pasuk (2014). It gives the name Iskandar Shah as the last ruler of Singapura and founder of Malacca. Iskandar is Persian for "Alexander", after Alexander the Great, and Shah the Persian title for a king. It has been conjectured that Iskandar Shah of the Malay Annals is the same person as Parameswara based on commonalities in their biographies.

10. (Hervey, D. F. A., ‘A Trip to Gunong Blumut’, Journal of the Straits Branch of the Royal Asiatic Society, 3, 1879, pp. 85-115.) Puteri Saadong or Mariam was the queen regnant of Kelantan from 1663 until 1667. She was the adopted daughter of Siti Wan Kembang (Che Siti), the legendary Queen of Kelantan. Her full title is Tuan Puteri Saadong binti Raja Loyor, Puteri Vijaya Mala, Raja of Jembal, daughter of Raja Loyor bin Raja Sakti, Raja of Jembal.

11. (Raimy Che Ross, December 2003) On Sunday, 13 May 1612, during the reign of Alauddin Riayat Shah III in Pekan Tua, the regent of Johor, Yang di-Pertuan Di Hilir Raja Abdullah also known as Raja Bongsu, had commissioned the rewriting and compilation work of the manuscript to the Bendahara Tun Sri Lanang.

12. (Malay Annals: Thomas Stamford Raffles, Sir). Johor capital of Batu Sawar was sacked by the Acehnese invaders and Alauddin Riayat Shah, and his entire court, including Tun Sri Lanang and Raja Abdullah was captured and exiled to Aceh. Although Tun Sri Lanang manage to worked a bulk of the Annals in Johor, he completed the work during his captivity in Aceh.

13. Nilakanta Sastri, K. A., The Colas, Madras: University of Madras, Madras, 1955.

14. Malay Annals: Thomas Stamford Raffles, Sir; John Leyden; Publisher: London, Longman, Hurst, Rees, Orme, and Brown, 1821. OCLC Number: 5792218. Language Note: Translated from the Malay language.



 

31 மார்ச் 2022

சினிமா கூத்தாடிகள் - சுஜாதா

சுஜாதா சொன்ன சுவாரசியமான; சினிமாவில் மாறாதவை.


1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்...

2. ’பாம்’ வெடிப்பதைத் தடுக்க ’ஹீரோ’ எந்த ஒயரை வேண்டுமானாலும் ’கட்’ பண்ணலாம் வெடிக்காது...

3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதை படுவார்கள்...

4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்...

5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப் படுவார்...

6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்...

7. ஹீரோ வில்லனிடம் செம்மையாக அடி வாங்கும் போது வலிக்கவே
வலிக்காது. ஆனால் ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் ஸ்…. ஸ்.. ஆ என்பான்...

8. ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்...

9. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரே மாதிரி நடனமாடுவார்கள்...

10. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும் போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்...

11. உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும்...

12. பாடல் காட்சிகளில் ஒரு வரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்த வரி மலேசியாவிலும் பாடப்படும்...

13. ஒரே பாட்டு பாடிக் கொண்டு இருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.

14. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய் விட்டார்கள் என்று அர்த்தம்.

15. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசல் படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்

16. “முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ண வரச் சொல்லுங்கோ” என சாஸ்திரிகள் அவசரப் படுத்தினால் பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.

17. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப் போகும் சமயம் “நிறுத்துங்க” என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.

18. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.

19. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக் கடத்தல் செய்வான்.

20. ஹீரோ முதல் பாதி கிராமத்தில் இருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்….!


 

27 மார்ச் 2022

தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு: என்.எஸ். ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு

(மலேசிய நண்பன் - 27.03.2022)

பேராசிரியர் என்.எஸ். ராஜேந்திரன் குற்றச்சாட்டுக்கு முன்னாள் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் பதிலடி 
 

பேராசிரியர் என்.எஸ். ராஜேந்திரன் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசியதை முன்னாள் கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) மறுப்தோடு, அதற்கான உண்மைத் தகவல்களையும் முன்வைக்கிறார்.



முதலாவதாக, 14-வது பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஓர் அரசியல் நாடகம் என்றுதான் கூறவேண்டும்.

13 தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள் அறிவிப்பு குறித்து அத்தகைய ஒதுக்கீடுகள் பற்றி கல்வி அமைச்சுக்கு தெரியாது. சமூகத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட RM 39.9 மில்லியன் என்பது வெற்று வாக்குறுதியாகும்.

சமூகத்தை முட்டாளாக்க நஜிப் ரசாக்கும் ம.இ.கா.வும் 2018-இல் செய்த தேர்தல் நாடகம் தான் இது.

இந்தத் திட்டங்களுக்குத் தேசிய முன்னணி அரசாங்கம் எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

39.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, 2018-இல் தேர்தலுக்கு முன் கல்வி அமைச்சிற்கு பள்ளிகளின் திட்டங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.


இந்த RM39.9 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டதன் ஆதாரத்தைக் காட்டுமாறு பேராசிரியர் என்.எஸ். ராஜேந்திரனுக்கு நான் சவால் விடுகிறேன் அல்லது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை அவதூறு பரப்புவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தமிழ்ப்பள்ளித் திட்டங்களையும் தொடர நம்பிக்கை கூட்டணி எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.

உண்மையில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி, ரிஜண்ட் தமிழ்ப்பள்ளி, கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் கிளேபாங் தமிழ்ப்பள்ளி, இ‌ன்னு‌ம் பல பள்ளிகளுக்கு கட்டிடத் திட்டங்களுக்கு உதவ கூடுதல் நிதி வழங்கி உள்ளோம்.

2019-இல் நான் கல்வி துணை அமைச்சராக இருந்த காலத்தில், நான் கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு RM 2.6 மில்லியன் ஒதுக்கீடு செய்தேன். மற்றும் முதல் கட்டத் தொகையாக RM 1 மில்லியன் வழங்கினேன்.

ஆனால், தற்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட RM1.5 மில்லியனை வழங்க விரும்பவில்லை. அப்படியானால் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியை தடுப்பது யார்?

இதே போல் பிலோமினா தமிழ்ப்பள்ளிக்கு RM 2.6 மில்லியன் வழங்கப்பட்டது, இருப்பினும் ஆரம்ப ஒதுக்கீடு RM2.3 மில்லியன் மட்டுமே.


மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் பணியை முடிக்க கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு முதல், பக்காத்தானின் கீழ் உள்ள சிலாங்கூர் அரசாங்கம்  சிலாங்கூர் மற்றும் பினாங்கில் உள்ள 97 பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் RM5 மில்லியன் நிதியை 25 பள்ளிகளுக்கு  RM 1.7 மில்லியன் ஒதுக்கியது.

இவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கைப்பற்றியதும் நடந்தது. தமிழ்ப்பள்ளிகளுக்கு பக்காத்தான் போதிய அளவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது பொய் மட்டுமல்ல, முழு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கொண்டது.

என்.எஸ். ராஜேந்திரன் தாய்மொழி பள்ளிகளுக்கான உண்மையான போராளி என்பதை விட தேசிய முன்னணியின் அரசியல்வாதி என்பதே நிதர்சனமான உண்மை.


அதுமட்டுமின்றி, ஷெரட்டன் நடவடிக்கைக்குப் பிறகு, தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது.

2021-ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிகளுக்கு RM29.98 மில்லியன் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் இருந்து RM20 மில்லியன் குறைக்கப்பட்டது.

ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் RM50 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2022-ஆம் ஆண்டில், 2022 பட்ஜெட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு RM34.79 மில்லியன் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. வெறும் 2 ஆண்டுகளில், ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 35.23 மில்லியன் ஒதுக்கீட்டை இழக்கிறது எனலாம்.


பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் ஒரு உண்மையான, பாரபட்சமற்ற கல்வியாளர் என்றால், தேசிய முன்னணி அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்த போது அவர் குரல் எழுப்பினாரா?

என்.எஸ். ராஜேந்திரன் நஜிப்பின் அரசியல் கைக்கூலி ஆவார். நஜீப் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நம்புகிறார். அவருக்கு அது ஏமாற்றத்தை அளிக்கலாம்.

தியோ நீ சிங்
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜ.செ.க. தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர்

 

Rebuttal to Prof NS Rajendran’s baseless allegations against PH government on Tamil School education

To rebut what Prof. NS Rajendran said in today's news article in the Tamil daily NANBAN, as a former deputy minister of education, let me put matters raised in its proper perspective.

First of all, the allocations to Tamil schools just prior to GE14 was a political gimmick. Just to add credence to my point, it happened just a week before the GE 14. Apparently, the so-called allocations for 13 Tamil schools were not there and KPM was not aware of such allocations.

RM39.9 million that was promised to the community is an empty promise. It was an election gimmick in 2018 by Najib Razak and MIC to fool the community. Barisan Nasional government did not allocate any money for these projects. No RM39.9 million was allocated and given to the Ministry of Education in 2018 before elections to be given to schools for the projects to kick.

I challenge Prof NS Rajendran to show proof that these RM39.9 million was approved, or he should stop defaming PH government.

PH did everything we could to continue all approved Tamil school projects, in fact we have given extra funds to help so many school projects like SJKT Permatang Tinggi and SJKT Regent, SJKT Ladang Kulai Oil Palm, SJKT Klebang and many other schools so school building projects can continue.

During my time in 2019, I allocated RM 2.6 million to SJKT Klebang Ipoh and disbursed RM 1 m as initial payment. But the current BN+PN government does not want to give the balance RM1.5 million approved by PH government. So who is stopping Tamil school development?

Similarly SJKT St Philomina was given RM 2.6 million although initial allocation by BN government was only for RM2.3 million. SJKT Megelembu also received additional allocation of RM1.3 million to complete the work. Since 2008, Selangor  Government under Pakatan is allocating  RM5million yearly for 97 schools in Selangor and Penang under  DAP is allocating  RM1.7 million yearly for 25 Tamil schools .

All this happened upon PH taking over the government. To accuse Pakatan Harapan of not doing enough for Tamil schools is not only a lie but full of political malice. NS Rajendran was more of a BN politician than a true fighter for vernacular schools.

Not only that, after the infamous Sheraton move, the allocation for SJKT has been hugely slashed. In the year of 2021, only RM29.98 million was approved for SJKT, a reduction of RM20 million from 2019 and 2020, where RM50 million was approved by PH govt. Where did NS Rajendran go then?

Also in the year of 2022, only RM34.79 million is approved for SJKT under Budget 2022. In just 2 years, SJKT loses RM35.23 million of allocation after Langkah Sheraton. If Prof NS Rajendran is a true and unbiased educationist, where is his voice when BN+PH government cut the allocation for SJKT?

NS Rajendran is a political stooge of Najib who hopes to see him back to power to get some crumps. He may be disappointed. I urge him to stop politicising matters of grave concern like Tamil school allocation and development.

Teo Nie Ching
Kulai Member of Parliament
DAP National Publicity Secretary

 

 

24 மார்ச் 2022

1984 ஒலிம்பிக் 800 மீ. சாதனையாளர் பி. ராஜ்குமார்

(மலாயா தமிழர்கள் வரலாறு)

பி. ராஜ்குமார் (பிறப்பு: 10 டிசம்பர் 1964) மலேசியாவில் புகழ்பெற்ற இடைத்தொலைவு ஓட்டக்காரர். அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் 1984 ஒலிம்பிக் 800 மீ; 1500 மீ. போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநித்தவர். லாஸ் ஏஞ்சலஸ் 1984 ஒலிம்பிக் 800 மீ; ஓட்டத்தில், தகுதி இறுதிச் சுற்றில் நான்காம் நிலை.

Rajkumar training in AFC Cologne Athletics Club, Germany,
Before Asian Track and Field championship in Jakarta in 1985

1985-ஆம் ஆண்டு இந்தோனேசியா, ஜகார்த்தாவில் ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன.

அதில் 800 மீட்டர் ஓட்டத்தில், 1:47.37 விநாடிகளில் ஓர் ஆசிய சாதனையைச் செய்தார். அந்தச் சாதனை, 36 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வரையிலும் மலேசியாவில் முறியடிக்கப்படவில்லை. அப்போது அவருக்கு வயது 22. இப்போது வயது 57.

அந்த 1985 ஆசிய தடகளப் போட்டி விளையாட்டுகளில், இந்தியாவிற்கு 10 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மலேசியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. அதுவும் வி. ராஜ்குமாரின் 800 மீட்டர் ஓட்டத்தில் மூலமாகக் கிடைத்தது.

ராஜ்குமார் இப்போது தன் சொந்த ஊரான கோலாகுபு பாருவில், இளைஞர்கள் பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர்களில் யாராவது ஒருவர் என்றைக்காவது ஒரு நாள் தன் 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றார்.


அவருடைய அந்தச் சாதனை முறியடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார். இப்போது உள்ள தட கள விளையாட்டாளர்கள் தங்களின் ஓட்ட முறைமையை மாற்ற வேண்டும்; முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்கிறார்.

1980-ஆம் ஆண்டில் ஓட்டப் பந்தயக் காலணிகள் வாங்க முடியாமல் தவித்தவர். அப்போது அவருக்கு வயது 15. அந்தக் கட்டத்தில் சிலாங்கூர் பள்ளிகள் விளையாட்டு மன்றத்தின் செயலாளராக இருந்த ஏ. வைத்திலிங்கம் என்பவர்தான் உதவி செய்து இருக்கிறார்.

புதுக் காலணிகளுடன் கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கத்தில் சிலாங்கூர் பள்ளிகளின் தடகளப் போட்டியில் பங்கேற்றார். அதுதான் கோலாலம்பூருக்கு அவரின் முதல் பேருந்து பயணம். அங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான போட்டிகளில் இரண்டு தங்கங்களை வென்றார்.

அதன் பின்னர் சாதனைகள் மேல் சாதனைகள்.

_1984 ஒலிம்பிக் சாதனை நேரங்கள்_

# 1500 மீட்டர் - 3:55.19

# 800 மீட்டர் - 1:48.19

_1985 ஆசியா; மலேசியா சாதனை_

# 800 மீட்டர் - 1:47.37[2][3]

_தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்_

# 800 மீ. - 1983 - சிங்கப்பூர் - தங்கம்
    
# 1500 மீ. - 1983 - சிங்கப்பூர் - தங்கம்
    
_ஆசிய தடகள போட்டி விளையாட்டுகள்_

# 800 மீ. - 1985 - ஜகார்த்தா - தங்கம்

கோலாகுபு பாருவில், பல்துறை தொழில் முனைவராகச் சொந்தத் தொழிலில் ராஜ்குமார் ஈடுபட்டு வருகிறார். ஒரு தங்கும் விடுதி; ஒரு பழத்தோட்டம், ஒரு விலங்குப் பண்ணை, ஒரு தேயிலைத் தோட்டம் மற்றும் ஒரு வீடமைப்பு நிறுவனம் போன்றவற்றை நடத்தி வருகிறார்.


மனைவியின் பெயர் சரோஜா. இரு பிள்ளைகள். மகள் கிரித்திகா. மகன் யுவன். ஒரு காலத்தில் ஓட்டப் பந்தயக் காலணிகள் வாங்க முடியாமல் தவித்தவர். இப்போது ஓட்டப் பந்தயத் துறையையும் தாண்டிய நிலையில் பல இலட்சங்களுக்கு அதிபதியாகத் திகழ்கின்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2022

சான்றுகள்:

1. Rajkumar proved to be the continent’s best 800m runner when he won the gold in the 1985 Asian Track and Field championship in Jakarta as a 22 year old. - https://www.nst.com.my/sports/others/2019/07/504947/former-national-stars-keen-getting-malaysian-athletes-right-track-again

2. Batulamai Rajakumar - https://www.sports-reference.com/olympics/athletes/ba/batulamai-rajakumar-1.html

 

மலாயா தமிழர்களும் மலாயா கப்பல்களும்

தமிழ் மலர் - 24.03.2022

மலாயாவிற்குத் தமிழர்கள் கப்பல் ஏறி வந்த கதை பெரிய ஒரு கண்ணீர்க் கதை. 250 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு நெடிந்து போகின்ற ஒரு தொடர்கதை.

அந்த நீண்ட கதையில் தமிழர்கள் சிந்திய இரத்தம், கொட்டிய தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள்; சொற்களில் மாளா. எப்படி எழுதினாலும் எழுதித் தீர்க்கவே முடியாது.

நிலவுக்கே ஏணி வைத்து எழுதினாலும் தமிழர்களின் சோகக் கதைகள் அதையும் தாண்டி உச்சிக்குப் போய் இமயம் பார்க்கும். அப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்புகளைத் தமிழர்கள் இந்த நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன். வாரி இறைத்து இருக்கிறார்கள். திருத்திக் கொள்ளுங்கள்.


அவர்களின் உயிர்களையும் உடல்களையும் சுமந்து வந்த கப்பல்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் மிகவும் ஆழமாய்ப் பதிந்து போன ஒரு கடல் காவியம் என்றால் அதுதான் எஸ்.எஸ். ரஜுலா கப்பல். தமிழர்களால் 'ரசுலா கப்ப' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓர் அழகிய கடல் ஓவியம்.

அந்தக் கப்பல் மறைந்து போய் விட்டது. இருந்தாலும் அது விட்டுச் சென்ற பல வரலாற்றுத் தடங்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. சொல்லப் போனால் மலாயா தமிழர்களின் வரலாற்றில் அந்தக் கப்பல் ஒரு ஜீவநாடி. ஒரு சப்தநாடி.


இந்தக் கப்பலைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் ஓரளவிற்கு ஒரு மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறோம். இனவாதத்தையும் மதவாதத்தையும் விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நம் மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். கண்ணீர் விட்டு இருப்பார்கள். தண்ணீர்க் கப்பல்களில் வேதனைகளோடு வந்து இருப்பார்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மலாயா தமிழர்களுக்குப் பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே போலத் தான் இலங்கையின் மலையகத் தமிழர்களுக்கும் கொடுமைகள். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத பாரதியார் ஒரு கவிதை எழுதினார்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!


நம் நாடு மலேசியா பெருமைக்குரியது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் நம்முடைய நாடு மிகக் கம்பீரமாய் எழுந்து வானளாவி நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் போட்டு அழகு பார்க்கின்றது.


பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நிற்கிறது. நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போது தான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது; சுபிட்சமானது என்று உணர முடிகின்றது.

அவை எல்லாம் வரலாறு சொல்லும் உண்மைகள். அந்த உண்மைகளும் சரி; அந்த உரிமைகளும் சரி; அவற்றின் பின்னால் எழுந்து நிற்கும் மலேசிய தமிழர்களின் அர்ப்பணிப்புகளும் சரி. என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சொர்க்க பூமியை சுயநலம் பார்க்கும் ஒரு சில அரசியல்வாதிகள் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு கோமாளித் தனமான அரசியலை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

எஸ்.எஸ். ரஜுலா கப்பல்

யானை வந்தால் என்ன. பூனை வந்தால் என்ன. எங்க வீட்டுப் பானை எட்டு வருசத்துக்கு நிறைஞ்சு இருக்கணும். என் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என்கிற சுயநலக் கூத்துகள்.

என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை. காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறது. ஊர் பொல்லாப்பு வேண்டாங்க.

ரஜுலா கப்பலுக்கு முன்னர் 1870 - 1900-ஆம் ஆண்டுகளில் சில கப்பல்கள் சென்னைக்கும் பினாங்கிற்கும் ஓடி இருக்கின்றன. அவை வேகமாகச் செல்லவில்லை. சென்னையில் இருந்து பினாங்கிற்கு வந்து சேர இரண்டு வாரங்கள் வரை பிடிக்கும். ஆண்டைக் கவனியுங்கள். 1870-ஆம் ஆண்டுகள்.

நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவியின் மூலமாகப் பயணச் சேவைகள். அவற்றில் சில கப்பல்கள் பெயர் தெரியாமலேயே மறைந்து போய் விட்டன. 1930-ஆம் ஆண்டிற்குப் பின்னால் ஓடிய கப்பல்கள் எட்டு பத்து நாட்களில் பினாங்கு துறைமுகத்தைப் பிடித்து இருக்கின்றன.

எஸ்.எஸ். ஜல உஷா

எஸ்.எஸ்.ரஜுலா கப்பல் இருக்கிறதே இது ஐந்தே ஐந்து நாட்களில் பினாங்கை வந்து பிடித்து இருக்கிறது.

1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்களை ஏற்றி வந்த கப்பல்கள்:

1. ரோணா (HMT Rohna)

2. அரோண்டா (SS Aronda)

3. ரஜூலா (SS Rajula)

4. ஜலகோபால் (SS Jala Gopal)

5. ஜல உஷா (SS Jala Usha)

6. திலவரா (MS Dilwara)

7. ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (SS State of Madras)

8. துனேரா (MS Dunera)

9. எம்.வி.சிதம்பரம் (MV Chidambaram)

இந்தக் கப்பல்கள் இன்னும் மலேசியத் தமிழர் மனங்களில் சம்மணம் போட்டு நிலைத்து நிற்கின்றன. அவற்றை மறக்க முடியுமா. ஆகக் கடைசியாக ஓடியது எம்.வி. சிதம்பரம் கப்பல் ஆகும். 1985-ஆம் ஆண்டில் ஒரு தீ விபத்து. அதோடு அதன் கடல் வாழ்க்கையும் முடிந்தது.

1940-ஆம் ஆண்டுகளில் ரோணாவும் ரஜூலாவும்தான் ஒரே சமயத்தில் இணைந்து பயணித்தன. அதன் பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடின.


இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் கடலில் மூழ்கி விட்டன. ரோணா கப்பல் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூழ்கிப் போனது. அரோண்டா கப்பல் 1940-ஆம் ஆண்டு ஒரு வெடிப்பு சம்பவத்தால் கனடா நாட்டுக்கு அருகில் மூழ்கிப் போனது. சரி.

சஞ்சிக்கூலியாய் மலாயாவுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு சத்தியம் செய்து விட்ட ஒருவர் தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு கடனாளியாகத் தான் புறப்படுகிறார். கப்பலில் ஏறும் போதே கடன்காரர்தான்.

கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கிய கடன்.
சொந்த பந்தங்களிடம் வாங்கிய கடன்.
வயல்காட்டை அடகு வைத்த வட்டிக் கடன்.
கிணறு வெட்ட வாங்கிய கடனுக்கு வட்டிக் கடன்.
குடிசைக்கு ஒட்டுப் போட வாங்கிய கடன்.
காளைக்கு விதையடிக்க வாங்கிய கடன்.
ஐயனார் சாமிக்கு அரிவாள் வாங்கிய கடன்.

இப்படி எக்கச்சக்கமான கடன் சுமைகள். அவற்றுக்கு வட்டிக் குட்டிகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லையா. இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா விடுவார்களா? வீணாய்ப் போன அசிங்கமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்களே.

அடுத்து கடல் கடந்து போகும் பயணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.


ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி ஒரு கங்காணியின் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.

அதுவே ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டமாக மாறிப் போகின்றது. அதுவே ஆள் சேர்க்க வந்த ஒரு கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமான்ய மனிதன் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறான்.

இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள்.

காத்தமுத்துக்கு காதுகுத்து…
தீத்தம்மாவுக்கு திருமணம்…
ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு…
வாத்தியார் மக வயசுக்கு வந்துட்டா

என்று இப்படி எக்கச் சக்கமான சடங்குச் சங்கதிகள். சம்பிரதாயச் சாணக்கியங்கள். அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. தொடரும் தொடர்வண்டிச் சரக்காய் மாறிப் போகின்றது. மேலும் ஒரு வரலாற்றுத் தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

சான்றுகள்:

1. Tragic Orphans: Indians in Malaysia" by Carl Vadivella Belle, Publisher: Institute of Southeast Asian Studies

2. Sandhu, Kernial Singh (2006). Indian Communities in Southeast Asia. ISEAS Publishing.

3. Arasaratnam, Sinnappah (1970). Indians in Malaysia and Singapore. London: Oxford University Press

4. Amarjit Kaur, Indians in Malaysia, 1900–2010: Different Migration Streams, One Diaspora In: Tracing the New Indian Diaspora