02 டிசம்பர் 2022

மலேசியத் தமிழர்களும் குண்டர் கலாசாரத் தாக்கங்களும்

ஒரு குடும்பத்தில் ஒரு தகப்பனார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பிள்ளை சாப்பிட்ட மிச்சம் மீதியைக் கீழே கொட்டுவதற்குக்கூட அழகியத் தட்டுகள். சிதறிக் கிடப்பதை சீண்டி எடுப்பதற்குகூட வெள்ளிக் கரண்டிகள்.


மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்; இப்போது செல்வச் செழிப்பின் சீமத்தில் உட்கார்ந்து உச்சம் பார்க்கிறது.

மற்றொரு பிள்ளையை அந்தத் தகப்பனார் கண்டு கொவதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார். அந்தப் பிள்ளை தட்டுத் தடுமாறி தன் வாழ்க்கையைச் சொந்தமாக அமைத்துக் கொண்டது.

ஆனாலும் இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது. 


அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால், அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா.

அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் பிள்ளை. மலேசிய இந்தியர்களில் ஒரு பிரிவாகப் பயணிக்கும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த மலேசியத் தமிழர்களில் ஒரு சிலர்; குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். சொல்ல வேதனையாக உள்ளது. சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.

கலாசாரம் என்பது தமிழ் சொல் அல்ல. பண்பாடு என்பதே சரியான தமிழ்ச் சொல். இருப்பினும் நம் சமூகத்தில் கலாசாரம் எனும் சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது.


பொதுவாகவே குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்தக் காளான்கள் அல்ல. இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் சில சமூகத் தலைகளும்; காலம் காலமாக கோலோச்சிக் கோலம் போட்டு வந்தன.

போட்ட கோலத்திற்குள் செடிகள் நட்டு; கொடிகள் வளர்த்து; அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சி; உரம் தெளித்துச் செழிக்க வைத்து விட்டன. வேறு எப்படி சொல்லுவதாம்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு சிலர்; இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்; இப்போதும் ஒரு சிலர் சொப்பனக் கனவுகளில் சுகமாய் வாழ்ந்தும் வருகிறார்கள். மன்னிக்கவும். இது சமுதாயம் சார்ந்த உண்மை.


சரி. தலைப்பிற்கு வருவோம். குண்டர் கும்பல் கலாசாரத் தாக்கங்கள்... இந்தச் சொற்கள் அதீதிய வேதனைச் சொற்கள். அந்தச் சொற்களை இப்போதைக்குச் சற்றே கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம். அதற்கு முன்…

ஒரு சர்ச்சை. மலேசியத் தமிழ் ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சிக்கலான சர்ச்சை. மலேசியத் தமிழர்களைத் தற்காலிகமாகக் கிரங்கடிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய சிக்கல்.

அதாவது மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம். பழைய குண்டரியத்தின் புதிய நேரலைகள்.


அண்மைய காலங்களில் அதைப் பற்றி அநாகரிகமான சொல்லாடல்கள். விரசங்கள். தேவையற்ற சொல் சரசங்கள். கேட்கும் போது வேதனையாகவும் இருக்கிறது. அசை போடும் போது அசிங்கமாவும் இருக்கிறது. என்ன செய்வது. பொறுத்துக் கொள்வோம். வேறு வழி இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செய்தி. 2016-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். மலேசியாவில் ஒரு சில தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம் உலவுகிறது எனும் செய்தி.

நாடறிந்த தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறியதாக ஊடகச் செய்திகள். அப்படிச் சொல்லவே இல்லை என்பது அவரின் மறுப்புச் செய்திகள்.

அவருக்கு எதிராகத் தமிழ் அமைப்புகளுடன் அரசு சாரா இயக்கங்களின் கண்டனக் கொந்தளிப்புகள். கிள்ளான் போலீஸ் நிலையத்தில் புகார்கள்.


இது எந்த அளவிற்கு உண்மை. எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது நம்முடைய நோக்கம் அல்ல. மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரத்தைப் பற்றித் தான் சொல்ல வருகிறோம். தொடர்ந்து படியுங்கள்.

நம் தமிழ்ப்பள்ளிகள் அப்படிப்பட்ட பள்ளிகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தை அடியோடு மறுக்கும் தமிழ் அமைப்புகள். தமிழ்ப் பள்ளிகளில் சேவை செய்யும் ஆசிரியர்கள் தங்கமானவர்கள். ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு சம்பளத்திற்கு வேலை செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. தமிழ் மொழியையும் தமிழ்ப் பள்ளிகளையும் தற்காப்பத்தில்; தக்க வைத்துக் கொள்வதில்; ஊதியத்தைத் தாண்டிய நிலையில் ஊழியம் செய்து வருகிறார்கள். உண்மை.

தமிழ் மொழியைத் தங்களின் உயிராக நினைத்து அர்ப்பணிப்பு பரிமாணங்களில் பயணித்து வருகின்றார்கள்.



என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எத்தனையோ தமிழாசிரியர்த் திலகங்கள் எந்த அங்கீகாரமும் எதிர்ப்பார்க்காமல் சேவை செய்து வருகிறார்கள்.

இது எத்தனைப் பேருக்குத் தெரியும். பதவி பட்டத்திற்கு வாழ்ந்த ஆசிரியர்கள் கொஞ்ச காலத்திற்கு முன்னால் இருந்தார்கள். இப்போது இல்லை. ஒன்றிரண்டு எங்கோ இருக்கலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கே எடுபடாத வாதம்.

அதற்கு முன் இன்னும் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் சீனாவில் இருந்து கப்பலேறி வந்த கலாசாரம்.

அங்கே இருந்து இங்கே வந்து இங்கே இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் துணை போன கலாசாரம். அப்போது இந்திய இளைஞர்களை உருட்டி மிரட்டி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு வாலாட்டிய கலாசாரம்.

இப்போது ஒரு சில இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்டு நம் சமுதாயத்தையே தூக்கிக் கனம் பார்க்கும் கலாசாரம். தந்தை பெரியரால் ஒழிக்கப் பட்ட சாதி சமயம் எப்படி உரம் போட்டு மீண்டும் வளர்க்கப் பட்டதோ அதே போல குண்டர் கலாசாரமும் வளர்ந்து விட்டது.

ஆழ விருச்சகம் போல வேர் ஊன்றி பயம் இன்றி வளர்ந்து இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. காலம் இன்னும் கரையவில்லை.

மலேசியத் தமிழர்களிடையே இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் வேகமாக உருவெடுத்து வருகிறது. அந்தப் பிரச்சினை இப்போதைக்கு தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை. இந்திய இளைஞர் சமுதாயத்தின் பெரும் பிரச்சினை என்றுகூட சொல்லலாம்.

1970 – 1980களில் இந்தியர்களிடம் அதிகம் காணப்படாத அந்தக் கலாசாரம் இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது? மற்ற மற்ற சகோதர இனத்தவர்கள் சற்றே ஒதுங்கிச் செல்லும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகிறது.

2014-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன. அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல் படுகின்றன என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ’ஓப்ஸ் சந்தாஸ் 1’ எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. அப்போது குண்டர் கும்பல் ஈடுபாடு புள்ளி விவரங்கள் வெளியிடப் பட்டன.

மலேசியா மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 65 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 5 விழுக்காடு.

சீனர்கள் - 27 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 20 விழுக்காடு.

இந்தியர்கள் 7 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 72 விழுக்காடு.

சபா மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 1 விழுக்காடு.

சரவாக் மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு - 2 விழுக்காடு.

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72 விழுக்காடு. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அவற்றை மறுக்க முடியுமா அல்லது மறைக்கத் தான் முடியுமா.

அண்மைய காலமாக நம் நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவங்கள். நினைவு கூர்வோம். அவற்றின் பின்னணியில் கூலிக் கொலையாளிக் கும்பல்கள் இருக்கலாம் எனும் சந்தேகங்கள் உள்ளன.
தனிப்பட்ட விவகாரங்களில் வஞ்சம் தீர்க்கும் நகர்வுகள் உள்ளன. கூலி கொலையாளிகள் ஏவப்பட்டு இருக்கலாம் எனும் சாத்தியங்கள் உள்ளன. இவற்றை மலேசிய போலீசார் மறுக்கவும் இல்லை.

ஒரு சின்னத் தொகைக்கு மற்றவர்களைச் சர்வ சாதாரணமாகச் சுட்டுக் கொல்லும் ஒரு கலாசாரம். எந்தப் பின்னணியையும் பார்க்காமல் பணத்திற்காகச் சுட்டுக் கொல்லும் ஈவு இரக்கமற்ற கலாசாரம். இதை எல்லாம் பார்க்கும் போது மனித உயிரின் விலை ரொம்பவுமே மலிந்து போய் விட்டதாகத் தெரிகின்றது.

இந்தக் கூலிக் கொலையாளிகள் குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வரலாம் என்று முன்னாள் மலேசியப் போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷீட் இப்ராகிம் கூறி இருக்கிறார்.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம். கூலிக் கொலையாளிகளில் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாகவே இருக்கின்றனர். அதுதான் வேதனையிலும் வேதனையான விசயம்.

இந்தியர்கள் தொடர்பான குண்டர் கும்பல்களின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக் கூடும். இது போலீசாரின் கணிப்பு. அதே சமயத்தில் ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கூறுவதும் சரி அல்ல. இது நம்முடைய கணிப்பு.

இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 5000 - 6000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் கைது செய்யப் படுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப் படுகின்றனர்.

இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு என்ன காரணம். அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஒரு காரணம் என்று சொல்ல முடியுமா? ஓர் எடுத்துக் காட்டு.

2010-ஆம் ஆண்டு பந்திங்கில் நடந்த டத்தோ சோசிலாவதி கொலை. அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.

அவர்களுக்குப் பணம் இல்லையா. படிப்பு இல்லையா. சிந்திக்கும் ஆற்றல் இல்லையா. அல்லது சீர்தூக்கிப் பார்க்கும் திறன் தான் இல்லையா. எல்லாமே இருந்தன. இத்தனை இருந்தும் கொலைகள் நடந்து இருக்கின்றன.

சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலைகள் நடந்தும் உள்ளன. இதற்குக் காரணம் தான் என்ன. பசியா... பட்டினியா... வேலை இல்லாமையா... அல்லது இனவாதமா...

இவற்றுள் எதுவுமே இல்லை. ஆனால் கொலைகள் நடந்து உள்ளன. ஏன். சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே இந்தியர்கள். எப்படி? இதுவும் ஒரு பில்லியன் டாலர் கேள்வி!

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர் வகுத்த ஒரு வாழ்வியல் கொள்கை. இருந்தாலும் செம்மையில் வறுமையின் மனதோடு வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்வது ஒரு சிலரின் வாழ்வியல் கொள்கை. அதுவே மலேசிய இந்தியகளுக்கு வலிமிக்க வேதனையான கொள்கை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.12.2022



 

18 அக்டோபர் 2022

கூச்சிங்

கூச்சிங் அல்லது கூச்சிங் நகரம் (City of Kuching) என்பது மலேசியா; சரவாக்; மாநிலத்தின் தலைநகரம். இந்த நகரம் போர்னியோ தீவில், சரவாக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில், சரவாக் ஆற்றுக் கரைகளின் இரு மருங்கிலும் அமைந்து உள்ளது.


இந்த நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும்.

* கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 165,642;
* கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் மக்கள் தொகை 159,490;
* மொத்த மக்கள் தொகை 325,132.


வரலாறு

1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு பகுதி நிலப்பரப்பு கொடுக்கப்பட்டது.


அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. உள்துறை போர்னியோ காடுகளில் வாழ்ந்த டயாக் மக்களில் பெரும்பாலோர் ஜேம்சு புரூக்கினால் மன்னிக்கப் பட்டார்கள். பின்னர் அவரின் விசுவாசிகளானார்கள்.

பத்து லிந்தாங் தடுப்பு முகாம்

ஜேம்சு புரூக்கின் மைத்துனரான சார்லஸ் புரூக்கின் ஆட்சியின் போது கூச்சிங் நகரம் தொடர்ந்து கவனத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. துப்புரவு அமைப்பு, மருத்துவமனை, சிறை, கோட்டை மற்றும் சந்தை போன்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.


​​1942 முதல் 1945 வரை, இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் படைகளால் கூச்சிங் ஆக்கிரமிக்கப்பட்டது. போர்க் கைதிகள் மற்றும் பொது மக்கள் கைதிகளை அடைத்து வைக்க, கூச்சிங்கிற்கு அருகே பத்து லிந்தாங் (Batu Lintang) எனும் இடத்தில் ஓர் தடுப்பு முகாமை ஜப்பானிய அரசு அமைத்தது.

சர் சார்லஸ் வைனர் புரூக்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கூச்சிங் நகரம் அப்படியே இருந்தது. பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த ராஜா சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் ஒரு முடிவு எடுத்தார்.


சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். பிரித்தானியக் காலனித்துவக் காலத்திலும் கூச்சிங் தலைநகரமாகவே இருந்தது.

விஸ்மா பாப்பா மலேசியா

1963-இல் மலேசியா உருவான பிறகு, கூச்சிங் தன் மாநிலத் தலைநகர்த் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. 1988-ஆம் ஆண்டில் கூச்சிங்கிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர், இரண்டு தனித்தனி உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் இரண்டு நிர்வாகப் பகுதிகளாக கூச்சிங் நகரம் பிரிக்கப்பட்டது. சரவாக் மாநில அரசாங்கத்தின் நிர்வாக மையம் கூச்சிங் மாநகரில் உள்ள விஸ்மா பாப்பா மலேசியா (Wisma Bapa Malaysia) எனும் மையத்தில் அமைந்துள்ளது.

கூச்சிங் ஈர நிலங்கள் தேசியப் பூங்கா

கூச்சிங் மாநகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு முக்கிய உணவுத் தலமாகவும்; சரவாக் மற்றும் போர்னியோவிற்குச் செல்லும் பயணிகளுக்கான முக்கிய நுழைவாயிலாகவும் உள்ளது.


கூச்சிங் ஈர நிலங்கள் தேசியப் பூங்கா (Kuching Wetlands National Park) நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் கூச்சிங் நகரைச் சுற்றி பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

சுற்றுலாத் தளங்கள்

பாக்கோ தேசிய பூங்கா (Bako National Park),

செமெங்கோ வனவிலங்கு மையம் (Semenggoh Wildlife Centre),

மழைக்காடு உலக இசை விழா (Rainforest World Music Festival),

மாநில சட்டமன்றக் கட்டிடம், அஸ்தானா (The Astana),

போர்ட் மார்கெரிட்டா (Fort Margherita),

கூச்சிங் அரும்காட்சியகம் (Kuching Cat Museum)

மற்றும் சரவாக் மாநில அரும்காட்சியகம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[5]

அண்மைய காலங்களில் இந்த நகரம் கிழக்கின் முக்கியத் தொழில்துறை மற்றும் வணிக மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[6]

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் 25.10.2019-இல் பதிவு செய்யப்பட்டது.)


சான்றுகள்:

1. "Malaysia Population 2019". World Population Review. 4 February 2019.

2. "City of Kuching Ordinance" (PDF). Sarawak State Attorney-General's Chambers. 1988. p. 3 (Chapter 48).

3. Oxford Business Group. The Report: Sarawak 2011. Oxford Business Group. பக். 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907065-47-7.

4. Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. பக். 497–498. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-884964-04-6.

5. Raymond Frederick Watters; T. G. McGee (1997). Asia-Pacific: New Geographies of the Pacific Rim. Hurst & Company. பக். 311–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-321-9.

6. Oxford Business Group (2008). The Report: Sarawak 2008. Oxford Business Group. பக். 30, 56, 69 & 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-902339-95-5.


 

15 அக்டோபர் 2022

சரவாக் வெள்ளை இராஜாக்கள்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தயாரித்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 22.05.2022-ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டது.)

(சரவாக் வெள்ளை இராஜா கட்டுரையின் முகவரி:
https://ta.wikipedia.org/s/b66m )

வெள்ளை இராஜா அல்லது சரவாக் வெள்ளை ராஜா (ஆங்கிலம்: White Rajahs; மலாய்: Raja Putih Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சியாகும்.


ஜேம்சு புரூக்

வெள்ளை இராஜாக்கள் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கிய வம்சாவழியினர்.

புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) பெற்ற சில நிலப் பகுதிகளைக் கொண்டு ஒரு சுதந்திர நாடு உருவாக்கப்பட்டது. அதன் பெயர் சரவாக் இராச்சியம். 

1840-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; சாதாரண புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக வெள்ளை இராஜா எனும் அடைமொழி பயன்படுத்தப்பட்டது.

ஜேம்சு புரூக் என்பவர் அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார்.[1]


கூச்சிங்கிற்கு அருகில் புரூக் நினைவகம்

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.

ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறையில் புருணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

பொதுச்சேவை சீர்த்திருத்தங்கள்

பிரித்தானிய அரசாங்க நிர்வாக அமைப்பைப் போல சரவாக் அரசாங்க நிர்வாகத்தையும் புரூக் மறுசீரமைத்தார். இறுதியில் சரவாக அரசாங்கத்தில் ஒரு பொதுச் சேவையையும் உருவாக்கினார்.

ஜேம்சு புரூக்

ஐரோப்பிய அதிகாரிகளை, குறிப்பாக பிரித்தானிய அதிகாரிகளை மாவட்டத்தின் வெளிமாநிலங்களை நிர்வகிப்பதற்கு நியமித்தார். ராஜா ஜேம்சு புரூக் மற்றும் அவரின் வாரிசுகளால், சரவாக் பொதுச் சேவைத் துறை தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது.

மலாய் முடியாட்சியின் பழக்க வழக்கங்கள்

கூச்சிங்கில் ராஜா புரூக் தன் மனைவியின் நினைவாக கட்டிய மார்கிரேட்டா கோட்டை

சார்ல்ஸ் புரூக்


ராஜா புரூக் அவர் காலத்தில் கட்டிய அஸ்தானா அரண்மனை


இராஜா ஜேம்சு புரூக், மலாய் முடியாட்சியின் பல பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுச் சின்னங்களைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும் அவற்றை தன்னுடைய முழுமையான ஆட்சி பாணியுடன் இணைத்துக் கொண்டார்.

சார்ல்ஸ் வைனர் புரூக்

இராஜா ஜேம்ஸ் புரூக்கிற்கு சட்டங்களை இயற்றவும்; சட்டங்களை அறிமுகப்படுத்தவும் அதிகாரம் இருந்தது. அதே சமயத்தில் தலைமை நீதிபதியாகச் செயல்படவும் அதிகாரம் இருந்தது. ஒரு நாட்டின் மன்னருக்கான அனைத்து உரிமைகளும் வெள்ளை ராஜா ஜேம்சு புரூக்கிடம் இருந்தது.

போர்னியோ நிறுவனம்

சரவாக்கின் பழங்குடி மக்கள் மேற்கத்திய வணிகர்களால் சுரண்டப் படுவதைத் தடுக்க வெள்ளை ராஜாக்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஜான் புரூக்

போர்னியோ கம்பெனி (போர்னியோ நிறுவனம்) எனும் நிறுவனம் சரவாக்கில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கினர். சீனத் தொழிலாளர்கள் கொடுத்த தொல்லைகளின் போது வெள்ளை ராஜாக்களுக்கு இந்த போர்னியோ நிறுவனம் இராணுவ ஆதரவை வழங்கி வந்தது.

இராஜா சார்லஸ் புரூக், சரவாக் ரேஞ்சர்ஸ் (Sarawak Rangers) எனும் ஒரு சிறிய துணை இராணுவப் படையை உருவாக்கினார். இந்தச் சிறிய இராணுவம், சரவாக் இராச்சியம் முழுவதும் இருந்த பல கோட்டைகளைப் பாதுகாத்தது. இராஜாவின் தனிப்பட்ட பாதுகாவல் படையாகவும் செயல்பட்டது.

சுவடுகள்

வெள்ளை இராஜா வம்சத்தின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை, இன்றும்கூட சரவாக்கில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு காலனித்துவப் பாரம்பரியக் கட்டிடங்களில் காணலாம். கூச்சிங் நகரில் உள்ள

ஆஸ்தானா சரவாக் எனும் ஆளுநரின் இல்லம்;

சரவாக் அருங்காட்சியகம் (Sarawak Museum);

கூச்சிங் பழைய நீதிமன்றம் (Old Courthouse);

மார்கெரிட்டா கோட்டை (Fort Margherita);

கூச்சிங் சதுரக் கோட்டை (Square Fort);

புரூக் நினைவுச் சின்னம் (Brooke Memorial)

போன்றவற்றில் அந்தக் கட்டிடக்கலை வடிவங்களைக் காணலாம்.

ராஜா சார்லஸ் காலத்தில் நிறுவப்பட்ட புரூக் கப்பல்துறை (The Brooke Dockyard) இன்றும் இயங்கி வருகிறது.

ஜேம்ஸ் புரூக்கின் கடைசி வாரிசு

வெள்ளை ராஜாக்களின் கடைசி வாரிசு ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக்

சரவாக் மாநில அரசாங்கத்துடன் மற்றும் சரவாக் மக்களுடனும் புரூக் வம்சாவழியினர் (Brooke Dynasty) இன்றும் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றனர்.

வெள்ளை ராஜாக்களின் கடைசி வாரிசு
ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக்

அந்தோனி புரூக்கின் பேரன் ஜேசன் டெஸ்மண்ட் அந்தோனி புரூக் (Jason Desmond Anthony Brooke), வயது 36, இன்றும் கூச்சிங்கில், பல அரசு விழாக்களுக்கு அழைக்கப் படுகிறார். சிறப்பு செய்யப் படுகிறார். இவர் இலண்டனில் தங்கி இருந்தாலும் சரவாக்கிற்கு அடிக்கடி வந்து போகிறார்.[2]

ஜேம்சு புரூக் அறக்கட்டளை

இவர் ஜேம்சு புரூக் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.[3] சரவாக் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொள்கிறார். சரவாக் கழகத்தின் (Sarawak Association) தலைவராகவும் உள்ளார்.[4]

2016 செப்டம்பர் மாதம் சரவாக் அரசாங்கம், கூச்சிங்கில் உள்ள சரவாக் மாநில நூலகம்; சரவாக் அருங்காட்சியகம் ஆகியவற்றின் முக்கியமான குறிப்புகளில் கையெழுத்திடுவதற்கான பொறுப்புகளையும் இவரிடம் வழங்கியது.[5][6]

சான்றுகள்:

1. James, Lawrence (1997). The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. பக். 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-16985-X.

2. "The Brooke Heritage Trust". Brooketrust.org.

3. "Ensuring the Brooke legacy lives on". The Borneo Post. 14 February 2016.

4. "Brooke records now available to public". New Sarawak Tribune.

5. "Fort Margherita to house historical artefacts – BorneoPost Online | Borneo , Malaysia, Sarawak Daily News | Largest English Daily In Borneo". Theborneopost.com. 2012-12-12

ஜேம்சு புரூக்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தயாரித்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 22.05.2022-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.)

(ஜேம்சு புரூக் கட்டுரையின்
முகவரி: https://ta.wikipedia.org/s/b667 )

சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.


சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.

இந்தியாவில் கம்பெனி ஆட்சி (Company Raj) நடைபெற்ற போது மேற்கு வங்காளம், ஹூக்லி மாவட்டத்தில் ஜேம்சு புரூக் பிறந்தார்.[1]

இங்கிலாந்தில் சில வருடங்கள் கல்வி கற்ற பிறகு, 1819-ஆம் ஆண்டில், வங்காள இராணுவத்தில் (Bengal Army) பணியாற்றினார். 1825-ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் மிக மோசமாகக் காயமடைந்தார்.

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

இந்தப் போர் பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போராகும். ஜேம்ஸ் புரூக் உடனடியாக இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டார்.

1830-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் மீண்டும் சென்னைக்கு வந்தார். ஆனால் பழைய இராணுவப் பிரிவில் மீண்டும் சேர மிகவும் தாமதமாகி விட்டது. பின்னர் தன் இராணுவ வேலையை ராஜினாமா செய்தார். மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கே திரும்பினார்.


கூச்சிங்கில் ஜேம்சு புரூக் மாளிகை - 1848

புரூணை அரண்மனையில் 18 டிசம்பர் 1846-ஆம் தேதி; ஜேம்சு புரூக் - புரூணை சுல்தான் பேச்சுவார்த்தை.

இடையில், தான் ஒரு வணிகராக வேண்டும் என விருப்பப் பட்டார். தூரக்கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய முயற்சிகள் செய்தார். பலன் அளிக்கவில்லை.

1835-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையார் இறந்ததும் வாரிசு சொத்து என £30,000 பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் 142-டன் எடை கொண்ட ஒரு கப்பலை வாங்கினார். அந்தக் கப்பலின் பெயர் ராயலிஸ்ட் (Royalist).[2]

புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன்

1838-ஆம் ஆண்டில் போர்னியோ தீவில் கூச்சிங்க் நகரை வந்தடைந்தார். அப்போது புரூணை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சிகள் போர்னியோவில் பரவலாக இருந்தன. அந்த எதிர்ப்புகளை சமாதான முறையில் தீர்த்து வைக்கலாம் என ஜேம்ஸ் புரூக் விரும்பினார்.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமை (Pangeran Muda Hashim) கூச்சிங்கில் சந்தித்தார். கிளர்ச்சியை நசுக்க உதவினார். இதன் மூலம் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

சுல்தான் உமர் அலி சைபுதீன் II; புருணையின் 23-ஆவது சுல்தான் ஆவார். இவர் 1841-இல் புரூக் செய்த உதவிக்கு ஈடாக சரவாக்கின் கவர்னர் பதவியை புரூக்கிற்கு வழங்கினார்.

புரூணை மலாய் பிரபுக்கள்

அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கல பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இருப்பினும், அப்போது புரூணையில் இருந்த மலாய் பிரபுக்கள் சிலர், திருட்டுக்கு எதிரான புரூக்கின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவை அவர்களுக்குப் பாதகமாக இருந்தன.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமையும் (Pangeran Muda Hashim) மற்றும் அவரின் ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள்.

பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, ஜேம்சு புரூக் அந்த முயற்சியை அடக்கினார். புரூணை ஆட்சியைச் சுல்தான் உமர் அலி சைபுதீனிடமே (Omar Ali Saifuddin II) மீட்டுக் கொடுத்தார்.

லபுவான் ஆளுநராக ஜேம்சு புரூக்

1842-ஆம் ஆண்டில், சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். 1842 ஆகஸ்டு 18-ஆம் தேதி சரவாக் ராஜா என்ற பட்டம் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டது.

1844-இல் ஜேம்சு புரூக், தன் மேற்பார்வையில் இருந்த லபுவான் தீவை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கினார். 1848-இல் ஜேம்சு புரூக், லபுவானின் ஆளுநராகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

ஜேம்சு புரூக்கிற்குச் சட்டப்படியாக முறையான திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப் படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் அவருக்கு ஒரு மகன் இருந்ததாகவும் தெரிய வருகிறது.


மனைவியின் அடையாளம் அல்லது மகனின் அடையாளம்; அல்லது அவர்களின் பிறந்த தேதிகள் தெளிவாகக் கிடைக்கப் பெறவில்லை.[3]

இருப்பினும் மகனின் பெயர் ரூபன் ஜார்ஜ் வாக்கர் (Reuben George Walker) என்றும்; அந்தப் பெயர் ஜார்ஜ் புரூக் (George Brooke) என மாற்றம் கண்டதாகவும் சொல்லப் படுகிறது.[4]

பெங்கீரான் அனாக் பத்திமா

ஆனாலும் ஜேம்சு புரூக்கிற்கு முஸ்லீம் முறைப்படி ஒரு முறை திருமணம் நடைபெற்று உள்ளது. புரூணை நாட்டைச் சேர்ந்த பெண்மணி பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) என்பவரை முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் (1874-1953) (Francis William Douglas) என்பவர், நவம்பர் 1913 முதல் சனவரி 1915 வரை, புரூணை மற்றும் லபுவான் பகுதிகளின் துணை ஆளுநராக (Acting Resident for Brunei and Labuan) பணி செய்தவர்.

அவர் 19 ஜூலை 1915-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்தத் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[5]

ஜேம்சு புரூக்கிற்குப் பிறந்த மகள்

பெங்கீரான் அனாக் அப்துல் காதிர் (Pengiran Anak Abdul Kadir) என்பவரின் மகளும், புருணையின் 21-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலாம் (Sultan Muhammad Kanzul Alam) என்பவரின் பேத்தி பெங்கீரான் அனாக் பத்திமா. இந்தத் திருமணம் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது.

இந்தத் திருமணத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 1864-இல் பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் என்பவரால் இந்தப் பெண்மணி, நேர்காணல் புரூக்கின் மகள் செய்யப் பட்டார்.

அத்துடன் மருத்துவர் டாக்டர் ஓகில்வி (Dr Ogilvie) என்பவர் புரூக்கின் மகளை 1866-இல் சந்தித்ததாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் டக்ளஸ் குறிப்பிட்டு உள்ளார்.[6]

வாரிசு

ஜேம்சு புரூக்கிற்கு முறையான பிள்ளைகள் இல்லாததால், 1861-இல் அவர் தன் சகோதரியின் மூத்த மகனான கேப்டன் ஜோன் புரூக் ஜான்சன் புரூக் (Captain John Brooke Johnson Brooke) என்பவரைத் தன் வாரிசாகப் நியமித்தார்.

இருப்பினும் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரிசு பட்டியலில் இருந்து ஜோன் புரூக் தவிர்க்கப் பட்டார். இவருக்குப் பதிலாக, இவரின் ஜோன் புரூக்கின் இளைய சகோதரர், சார்லஸ் அந்தோனி ஜான்சன் புரூக் என்பவரைத் தன் வாரிசாக நியமித்தார்.

இறப்பு

ஜேம்சு புரூக்கின், இறுதி கட்டத்தின் பத்து ஆண்டுகளில், மூன்று முறை பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டார்.

1868-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர், டெவன்சையர் (Dartmoor, Devonshire) நகரில் இறந்தார். செயிண்ட் லியோனர்ட் தேவாலயத்தின் (St Leonard's Church) கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டார்.

சான்றுகள்:

1. Barley, Nigel (2002), White Rajah, Time Warner: London. ISBN 978-0-316-85920-2.

2. Cavendish, Richard, "Birth of Sir James Brooke", History Today. April 2003, Vol. 53, Issue 4.

3. Jacob, Gertrude Le Grand. The Raja of Saráwak: An Account of Sir James Brooks. K. C. B., LL. D., Given Chiefly Through Letters and Journals. London: MacMillan, 1876.

4. Wason, Charles William. The Annual Register: A Review of Public Events at Home and Abroad for the Year 1868. London: Rivingtons, Waterloo Place, 1869. pp. 162–163.

5.
Rutter, Owen (ed) Rajah Brooke & Baroness Burdett Coutts. Consisting of the letters from Sir James Brooke to Miss Angela, afterwards Baroness, Burdett Coutts 1935.

6. Doering, Jonathan. "The Enigmatic Sir James Brooke." Contemporary Review, July 2003.





 

14 அக்டோபர் 2022

சரவாக் சுல்தானகம்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை. சரவாக் சுல்தானகம் கட்டுரையின் தமிழ் விக்கிப்பீடியா முகவரி: https://ta.wikipedia.org/s/b67g )

சரவாக் சுல்தானகம்
, (ஆங்கிலம்: The Sultanate of Sarawak; மலாய்: Kesultanan Sarawak; ஜாவி: كسلطانن ملايو سراوق دارالهنا) என்பது சரவாக் மாநிலத்தில்; இப்போதைய கூச்சிங் பிரிவில் மையம் கொண்டு ஆட்சி செய்த ஓர் உள்நாட்டு அரசு. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அரசு.


இந்தச் சுல்தானகம் உருவாவதற்கு முன்னர், சாந்துபோங் இராச்சியம் (Santubong Kingdom) எனும் ஓர் இராச்சியம் இருந்தது. இதன் தலைநகரம் விஜயபுரம் (Vijayapura). சாந்துபோங் இராச்சியம் 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

இந்தச் சாந்துபோங் இராச்சியத்தை ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு ஆகியவை ஆட்சி செய்து இருக்கின்றன. 15-ஆம் நூற்றாண்டு வரை சாந்துபோங் இராச்சியம் ஆட்சியில் இருந்தது.

திடீரென வரலாற்றில் இருந்து சாந்துபோங் இராச்சியம் மறைந்து போனது. அதன் பின்னர் தஞ்சோங்புரம் இராச்சியம் (Tanjungpura Kingdom) உருவானது.

புரூணை சுல்தானகத்தின் படையெடுப்பிற்குப் பிறகு 1599–ஆம் ஆண்டில் இந்த இராச்சியம் நிறுவப்பட்டது. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே சரவாக் சுல்தானகம் ஆட்சியில் இருந்தது

இந்தச் சுல்தானகத்தின் முதலும் கடைசியுமான சுல்தான், இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இவர் புருணையின் சுல்தான் தெங்கா எனும் இளவரசர் ஆகும்.[2]

அப்போதைய புரூணை, ஜொகூர் அரசுகளுடன் சரவாக் சுல்தானகம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. தவிர மேற்கு போர்னியோவில் இருந்த சம்பாஸ் (Sambas), சுகடனா (Sukadana) மற்றும் தஞ்சோங்புரா - மாத்தான் (Tanjungpura-Matan) உள்ளிட்ட மலாய் இராச்சியங்களில் வம்சாவழி ஆட்சிமுறைகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தது.[3]

சர் வைனர் புரூக்

1641-ஆம் ஆண்டில் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரவாக் சுல்தானகம் கலைக்கப்பட்டது. பின்னர் புருணை சுல்தானகத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் மலாய் ஆளுநர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.

வரலாறு

புரூணை நாட்டு அரசர்களின் கால வரலாற்றுச் சுவடு சலாசிலா ராஜா - ராஜா புரூணை (Salahsilah Raja-Raja Brunei). அந்த வரலாற்றுச் சுவடுகளின் பதிவுகளின் படி; 1582 - 1598-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புரூணை பேரரசை ஆட்சி செய்த மன்னர் சுல்தான் முகமது அசன் (Sultan Muhammad Hassan); அவர் மறைவுக்குப் பிறகு சரவாக் சுல்தானகம் நிறுவப்பட்டது.

சுல்தான் முகமது அசனின் மூத்த மகன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இருப்பினும், இளைய மகன் அப்துல் ஜலீல் (Abdul Jalilul Akbar) முடிசூடிக் கொண்டார்.


இதைச் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி எதிர்த்தார். மூத்த இளவரசரான தனக்குத் தான் சுல்தானாகும் முன்னுரிமை இருப்பதாக நம்பினார்.[4]

புதிதாக அரியணை ஏறிய தம்பி அப்துல் ஜலீல், புருணை இராச்சியத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள எல்லைப் பிரதேசமான சரவாக்கில் தன் அண்ணன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியை சுல்தானாக நியமித்தார்.

கூச்சிங்கிற்கு வந்த சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, சாந்துபோங்கில் ஒரு கோட்டை அரண்மனையை கட்டினார். அந்த பகுதியை சரவாக் சுல்தானகத்தின் அரச, நீதித்துறை நிர்வாக தலைநகராக மாற்றினார். தன்னை சரவாக் சுல்தானகத்தின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். இப்படித்தான் சரவாக் சுல்தானகம் உருவானது.[5]

1641-ஆம் ஆண்டில், சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியும்; அவரின் அரசக் குடும்பத்தினரும் சரவாக், சாந்துபோங், பத்து புவாயா எனும் இடத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது, சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, அவருடைய மெய்க்காப்பாளர் ஒருவரால் கொலை செய்யப் பட்டார். அவரின் இறப்பிற்குப் பின்னர் சரவாக் சுல்தானகம் கலைக்கப் பட்டது.[5][4]

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பல மாதங்களின் உழைப்பு. மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தக் கட்டுரை 23.05.2022-ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டது.)

அதன் முகவரி: https://ta.wikipedia.org/s/b67g

சான்றுகள்:


1. Sahari, Suriani; McLaughlin, Tom. "History of the people from the Sarawak River Valley".

2. Porritt, Vernon L. (2012), Sarawak Proper: trading and trading patterns from earlier times to the registration of the Borneo Company in 1856., Borneo Research Council, Inc

3. Bruneidesi (2017), Sultans of Brunei, 2021-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2022-05-23 அன்று பார்க்கப்பட்டது

4. Kaffah (2017), Istana Alwatzikhubillah, Kabupaten Sambas, Kalimantan barat

5. Gregory, Zayn (2015), The Maqam of Sultan Tengah, BinGreogory