04 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 63

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 04.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)
சிவா முத்து, பாசிர் கூடாங், ஜோகூர் பாரு

கே: Defragmentation எனும் கோப்புகளைச் சீரமைப்பு செய்வதால் விரலி எனும் பென்-டிரைவிற்கு என்ன நன்மை?
ப:
விரலி என்றால் Pen Drive, Flash Drive, Thumb Drive போன்ற சாதனங்களைக் குறிக்கும் ஒரு பெயர்ச் சொல். முன்பு எல்லாம் தகவல்களை ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு எடுத்துச் செல்ல சிடி எனும் குறுந்தட்டைப் பயன் படுத்தினார்கள். இதற்கு ஒர் எளிய முறையை இண்டெல் நிறுவனம் உருவாக்கியது.

அந்த முறைக்குப் பெயர்தான் USB முறை. தமிழில் 'உலகளாவிய நேரியல் பாட்டை' என்பார்கள். உலகத்தில் உள்ள எல்லா கணினிகளிலும் இந்த முறை பயன் படுத்தப் படுகிறது. Defragmentation என்றால் துண்டு துண்டாகிப் போன கோப்புகளின் தகவல்களை ஒன்று சேர்க்கும் முறை. இதனால் விரலிகள் வேகமாக வேலை செய்யும்.

அப்துல் சலிகான் முகமது கனி masaligan@gmail.com

கே: தென்னிந்திய நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காற்பந்து குழுவை அமைத்து உலகக் காற்பந்து போட்டிக்கு போய் இருக்கிறார்களாம். இணையத்தில் செய்திகள் வந்துள்ளன. உண்மையா? தயவு செய்து கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

ப:
அந்தச் செய்தி உண்மை அல்ல. அது ஒரு விளையாட்டுத் தனமான செய்தி. அந்தக் குழுவின் படமும் வந்து இருக்கிறது. பார்த்து ரசியுங்கள். வரைகலை நிரலியைப் பயன்படுத்தி அழகாக ஒரு நிழல் படம் தயாரித்து இருக்கிறார்கள். வேடிக்கை என்ன என்றால் அந்தக் குழுவில் குசும்புத் தலைவர் வடிவேலும் இருக்கிறார். இணையத்தில் கோடிக் கோடியான நக்கல் நையாண்டி படங்கள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தம், தாமான் மேரு, கிள்ளான்

கே: தெய்வச் சிலைகளைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கிறோம். ஆனால், அப்படிப் பட்ட புனிதமான சிலைகளைச் செதுக்கும் போது கால்களில் மிதித்துக் கொண்டு செய்கிறார்கள். செதுக்குகிறார்கள். அந்த மாதிரியான படங்களை இணையத்தில் பார்த்ததும் ஆடிப் போய் விட்டேன். உங்களுக்கும் ஒரு படத்தை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அந்தப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும். பிரசுரித்தால் இமய மலையில் இருந்து ஒருவர் உங்கள் வீட்டைத் தேடி வருவார்.

ப:
தவறுகளைக் கண்ணாடி போட்டு பார்த்தால் மனிதம் மனிதமாக இருக்காது. சிலை செதுக்கும் போது அது காலில் படலாம். கையில் படலாம். புனிதத்தின் வழியாக  வியர்வைத் துளிகளும் சிந்தலாம்.

மனிதாபிமான உணர்வுடன் பாருங்கள். நவீன வசதிகள் இல்லாத குடிசைத் தொழில். அவர்கள் அதை நம்பி வாழ்கிறார்கள். சிலை செய்து முடித்ததும் அதற்கு செய்ய வேண்டிய சடங்கு சாங்கியக் கழிப்புகளைச் செய்து விட்டு தான் விற்பனைக்கு வெளியே அனுப்புகிறார்கள்.

மக்கள் பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு மகேசன் மறுபடியும் வருவான்  தருவான் என்று மார்தட்டிச் சொல்கிறார்களே. அந்த மாதிரியான வேலைகளையா இவர்கள் செய்கிறார்கள். ஏன் அய்யா இவர்கள் யார் வயிற்றிலும் அடிக்கவில்லையே. சொல்லுங்கள்.

மனைவி மக்கள் என்று பல ஆயிரம் உயிர்களுக்குச் சரஸ்வதியே தாரை வார்க்கிறார். அவளே வந்து அவர்களுக்கு அருள் பாலிக்கிறார். நீங்கள் யார் அந்தப் படத்தைப் போடச் சொல்லிக் கட்சி கட்டிக் கொண்டு நிற்பது.  ஒருவருடைய பிழைப்பைக் கெடுத்து, புண்ணியம் தேட கங்கைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை சாமி. செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யுங்கள். அதுவே சரஸ்வதிக்கும் பிடிக்கும். எமக்கும் பிடிக்கும்.

ஓசில் குமார், திரியாங், பகாங் 
கே: என்னுடைய நண்பர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர்களுடைய Pen Drive விரலியை என்னுடைய கனியில் பயன் படுத்துகிறார்கள். அதனால் பல தடவை என் கணினியை அழிவிகள் தாக்கி விட்டன. அவர்களிடம் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். கணினியைப் பயன் படுத்த வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது?

ப:
பொதுவாக நம்முடைய கணினிகளில் நச்சு அழிவு நிரலிப் பதிக்கப் பட்டிருந்தாலும் Panda USB எனும் விரலிகள் மூலமாக அழிவிகள் கணினிக்குள் நுழைந்து விடும். உங்கள் விஷயத்தில் உங்களுடைய நண்பர்களின் விரலி மூலமாக அழிவிகள் நுழைகின்றன. அதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. Panda USB Vaccine எனும் விரலி தடுப்பு ஊசி இருக்கிறது. அது ஒரு நிரலி தான். அதாவது ஒரு Program.

இதை உங்கள் கணினியில் பதிப்பிக்க வேண்டும். அதில் இரண்டு சேவைகள் கிடைக்கும். ஒன்று கணினியை மொத்தமாகப் பாதுகாத்தல். மற்றொன்று விரலிகளைப் பாதுகாத்தல். நீங்கள் இரண்டாவது சேவையைத் தொடக்க வேண்டும். அவ்வளவுதான். யாராவது உங்கள் கணினிக்குள் நச்சு அழிவிகள் உள்ள விரலியைத் திணித்தால் இந்த Panda USB Vaccine உடனே தன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும். அந்த அழிவிகளைக் கொன்று விட்டுத் தான் மறு வேலை. இது ஓர் இலவசமான நிரலி. கிடைக்கும் இடம்:
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html

இன்னும் ஒரு விஷயம். பத்திரிகையில் பிரசுரிக்கும் போது சில சமயங்களில் சில  ஆங்கில எழுத்துக் குறி தொடர்பான  பிழைகள் ஏற்பட்டு விடலாம். அதனால் http://ksmuthukrishnan.blogspot.com எனும் வலைத் தளத்தில் நிரலிகளின் நேரடி முகவரிகள் கிடைக்கும். அங்கே இருந்து அப்படியே தொடர்பு கொள்ள முடியும். மிகவும் சுலபமாக இருக்கும். பிழைகள் ஏற்படாது.

செல்வராஜ் குழந்தையன்  skolandayan@hotmail.com

கே: என்னுடைய நண்பர்கள் 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் படித்தார்கள். அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது. அவர்கள் அனைவரும் டாக்டர்கள். தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ள உதவி செய்யுங்கள்.

ப:
தாங்கள் கொடுத்த தகவலின் படி 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் 2448 டாக்டர்கள் பட்டம் வாங்கி இருக்கிறார்கள். இவர்களில் யார் உங்கள் நண்பர் என்று எப்படி கண்டு பிடிப்பது. அவர்களின் பெயரையும் நீங்கள் சொல்லவில்லை. இடத்தையும் சொல்லவில்லை. இந்த மாதிரி கேள்வி கேட்டால் எப்படி அய்யா உதவி செய்ய முடியும். நீங்களே சொல்லுங்கள்.


தினேஷ்  darshandinesh@yahoo.com
கே: நம்முடைய கணினியில் C Drive, D Drive, E Drive, F Drive என்று பிரிவுகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு பிரிவை மற்றவர்கள் பார்க்க முடியாமல் அப்படியே மறைக்க முடியுமா? D Driveல் என்னுடைய தனிப்பட்ட படங்கள் உள்ளன. என்னுடைய கணினியில் மற்றவர்களுக்கு அப்படிப் பட்ட ஒரு பகுதி இருப்பது தெரியவே கூடாது. செய்ய முடியுமா?

ப:
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ஏதோ ஒரு நாட்டின் இரகசியங்களை மறைத்து வைத்துக் கொண்டு வித்தை எதையும் காட்டலாம் என்று திட்டம் ஏதும் போட்டு இருக்கிறீர்களோ தெரியவில்லை. யார் கண்டது. நம்ப முடியாது. உங்களுடைய கணினியின் இரகசியங்களை எப்படிதான் மறைத்தாலும் அதைக் கண்டுபிடிக்க பல நவீனமான நிரலிகள் உள்ளன. சரி. இப்போதைக்கு உங்கள் பிரச்னைக்கு வருவோம்.

Drive என்றால் Partition. ஒரு வன் தட்டை இரண்டுக்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிப்பதைத் தான் 'பார்ட்டிசன்' என்கிறோம். தமிழில் இதை 'பகுதியம்' என்றும் அழைக்கலாம். இந்தப் பகுதியங்களில் ஒன்றை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட முடியும். எடுத்துக் காட்டாக Drive D என்று ஒரு பகுதியம் கணினியில் இருக்கும். ஆனால் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. இருக்கும் ஆனால் இருக்காது. என்று சொல்வார்களே. அந்த மாதிரி தான். சரி. எப்படி செய்வது.

http://www.blogsdna.com/191/how-to-hide-hard-disk-drive-of-your-computer.htm எனும் இணையப் பக்கத்திற்குப் போய் Download என்பதைச் சொடுக்குங்கள். ஒரு சின்ன நிரலி கிடைக்கும். அதை வைத்து எந்தப் பகுதியத்தை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து விடலாம். வேண்டும் என்கிற நேரத்தில் திருப்பியும் கொண்டு வந்து விடலாம். சோதனை செய்த பிறகு ஒழுங்காக வேலை செய்தால் என்னை அழைத்துப் பேசுங்கள். பிரச்னை என்றால் கூப்பிட வேண்டாம். என்ன யோசிக்கிறீர்கள். பிரச்னை வரும் ஆனால் வராது.

சுபாஷ் சந்திரன் prschandran@gmail.com

கே: சார், குழந்தைகளுக்கு இலவசமான விளையாட்டுகள் கிடைக்கும் ஓர் இடத்தைச் சொல்லுங்கள். என் வீட்டில் கேம்ஸ், கேம்ஸ் என்று சொல்லி என் தம்பிகள் அடம் பிடிக்கிறார்கள்? தொல்லை தாங்க முடியவில்லை.

ப:
சின்னப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் என்றால் உயிர். கனியில் விளையாட்டுகளைக் கொடுத்து அவர்களுக்கு கணினியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம். தப்பு இல்லை. அதற்கு என்று 24 ம நேரமும் பைத்தியம் பிடித்து அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் பைத்தியங்கள் பல வகைகளில் உள்ளன.

ஒரு வீட்டில் பிள்ளைகளுக்காக அவர்கள் வீட்டுக் கணினியில் விளையாட்டுகளைப் பதித்துக் கொடுத்து விட்டு வந்தேன். கடைசியில் பார்த்தால் அந்த விளையாட்டுகளில் உயிரைக் கொடுத்து  விளையாடிக் கொண்டு இருப்பது பிள்ளைகள் இல்லை. அந்தப் பிள்ளைகளின் அப்பாதான். பொதுவாக விளையாட்டுப் பைத்தியம் புலிக் குட்டிகளுக்குத் தான் வரும் என்பார்கள். ஆனால் இங்கே புலிக்கே தலைகால் தெரியாமல் வந்து விட்டது.

என்ன செய்வது. புருஷன் பெண்ஜாதிக்குள் சண்டை வரும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. அப்புறம் ஒரு வகையாகச் சமாளித்து ஆகி விட்டது. ஆக, அப்பா அம்மாக்களே, கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்களேன். பிள்ளைகள் உங்கள் மீது பட்டாசு கொளுத்திப் போட்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் சரி. http://www.bestoldgames.net/eng/ எனும் இடத்தில் நிறைய விளையாட்டுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. போய்ப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.


மன்சயா அரசு mansya91@yahoo.com

கே: உலகத்திலேயே மலேசியாவில் தான் மிக மலிவாகக் கணினிகள் கிடைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

ப:
கேட்கெட் ரிவியூ நிறுவனம் ஆய்வுகள் செய்து கண்டுபிடித்த உண்மை இது. ஆசியாவிலும் மலேசியா முதல் இடத்தில் வகிக்கிறது. அடுத்து சீனா, தைவான் வருகின்றன. கணினியின் விலை அதிகமாக உள்ள நாடுகள் ஹாங்காங், ஜப்பான். இந்தியாவில் கணினிகள் மலிவாகத் தயாரிக்கப் பட்டாலும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பெரும் அளவில் தயாரிக்கப் பட வில்லை.

மலேசியாவைக் காட்டிலும் தமிழ் நாட்டில் கணினிகளின் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கின்றது. பொதுவான ஆய்வுக் கருத்து கள் தான் இங்கே சொல்லப் படுகின்றன. இந்த நிறுவனம் செய்த ஆய்வில் தமிழ் நாட்டில் கொடுக்கப் பட்ட இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகள் பற்றியும் செய்திகள் வெளி வந்துள்ளன.

தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச டி.வி. பெட்டிகள் கேரளா திருவனந்தபுரம், பாறசாலை எனும் நகரங்களில் உள்ள கடைகளில் விற்கப் படுகின்றன. விலை 1800 ரூபாய். மலேசிய ரிங்கிட்டிற்கு RM125. தமிழக அரசு வழங்கும் இந்த இலவச டி.விக்களின் விலை 4000 ரூபாய். இவை பெரும்பாலும் மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து போய் இருக்கின்றன. ஆமாம். டிவியைக் கொடுத்து விட்டார்கள். அதைப் பார்க்க அலை வரிசை தொடர்புகள் வேண்டாமா. அதற்கு மாதாமாதம் 150 ரூபாய் வேறு கட்ட வேண்டி வரும். அதனால் ஏழை விவசாயிகள் வழி இல்லாமல் விற்று விடுகிறார்கள்.

27 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 62

இன்று  04.07.2010 நண்பனில் வெளியாகின்ற கேள்வி பதில்களைக் காலை 10.30க்கு மேல் படிக்கலாம்.

(இந்தக் கேள்வி பதில் அங்கம்  27.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

ஜெயக்குமார் கதிர்வேல், சிம்பாங் அம்பாட், தைப்பிங்

கே: நான் இப்போது Intel Pentium 3 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் இருக்கிறது. போன வாரம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதித்தேன். பதிக்க முடியவில்லை. Install செய்ய முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. எப்படி பதிப்பது. உதவி செய்யுங்கள்.


ப:
மலேசியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்தைப் பார்க்க மாட்டு வண்டியில் ஏறி மலாக்கா கடல் கரைக்குப் போய் இருக்கிறேன். 1957ல் நடந்த வரலாறு. அது ஒரு கனா காலம். இப்போது மாட்டு வண்டிகளைப் பார்க்க முடிவதில்லை. அரும் காட்சியகத்தில் கூட பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அந்த மாதிரியாகக் காலம் மாறிப் போய் விட்டது.

அப்படி இருக்கும் போது நீங்கள் என்னடா என்றால் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் கலர் கலரா படம் வர மாட்டேங்குதே என்கிறீர். நீங்கள் பயன்படுத்தும் இண்டல் பெந்தியம் 3 இருக்கிறதே இது 1996 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இரண்டாம் தலைமுறைக் கணினி வகை.

அதற்குப் பிறகு இண்டல் பெந்தியம் 4, இண்டல் டுவல் கோர், இண்டல் டிரிபள் கோர் என்று நவீனமான நளினமான கணினி வகைகள் வந்து விட்டன. விலையும் ரொம்ப குறைவு. இதுவரை உங்கள் கணினி வேலை செய்கிறதே அதுவரைக்கும் அதற்கு முதலில் மாலை கட்டிப் போடுங்கள். விண்டோஸ் 7 இயங்குதளம் என்பது இப்போது உள்ள நவீனக் கணினிகளில் தான் வேலை செய்யும். புரிகிறதா?

உலகத்திலேயே மலேசியாவில்தான் கணினிகள் மிக மிக மலிவாவான விலையில் கிடைக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள். முன்னூறு நானூறு ரிங்கிட்டிற்கு மறுப் பயனீடு கணினிகள் கிடைக்கின்றன.

இயங்குதளம் என்றால் Operating System. கணினியை இயக்குகின்ற அடிப்படைச் செயல் முறை. விண்டோஸ் விஸ்த்தாவும் அப்படி தான். பழைய கணினிகளில் வேலை செய்யாது. காலத்திற்கு ஏற்றவாறு கணினியைத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் பழைய வண்டியை 'பார்முலா 1' கார் பந்தயத்திற்கு இழுத்துக் கொண்டு போக னைப்பது தப்பு இல்லையா.

நந்தக்குமார் அழகிரி, சுங்கை பெரானாங், மந்தின்

கே: இணையத்தில் உலா வரும் போது நடிகை சிம்ரனுக்கு தான் பேஸ்புக் இணையத் தளத்தில் அதிகமான விசிறிகள் இருப்பது தெரிய வருகிறது. வேறு எந்த நடிகைக்கும் அந்த மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தப்பாகத் தவறாக நினைக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

ப:
உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்து உங்களுடைய உத்தியோகத்தை நல்ல படியாக பார்க்கிறீர்கள். சந்தோஷம். சிம்ரனுக்கு சிலை வடித்தாலும் சரி சிக்கன் குனியா கடித்தாலும் சரி கருத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கணவர்தான். ஆக, நாம் தப்பாகவும் நினைக்கவில்லை. தவறாகவும் நினைக்கவில்லை. நாளைய தலைமுறை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி கேள்வி கேளுங்கள். நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்தக் கேள்வி பதில் இணையத்திலும் போகிறது. உலகில் உள்ள எல்லா தமிழர்களும் படிக்கிறார்கள்.



பால் மோகன்

கே: வணக்கம் சார், நான் கணினியைத் திறந்ததும் There are unused icons on your desktop எனும் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. எரிச்சல் உண்டு பண்ணும் இந்த அறிவிப்பை எப்படி  நிறுத்துவது?

ப:
கணினி எனும் சாதனம் கடமை தவறாமல் அதன் வேலையைச் செய்கிறது. சில சமயங்களில் இந்த மாதிரியான அறிவிப்புகள் எரிச்சலைக் கொடுக்கும். சிலர் சகித்துக் கொள்கிறார்கள். சிலரால் முடியாது. சரி. எப்படி அதை நிறுத்தி விடுவது. உங்கள் சுழலியை Desktop எனும் முகப்புத் திரையில் வைத்து வலது சொடுக்கு செய்யுங்கள். அடுத்து Properties என்பதைச் சொடுக்குங்கள்.

மேலே தெரியும் வரிசையில்  Desktop என்பதைச் சொடுக்குங்கள். அப்புறம் ஆகக் கீழே Customize Desktop என்று ஒரு பட்டை இருக்கும். அதைச் சொடுக்குங்கள். அங்கே Run Desktop Cleanup Wizard every 60 days என்ற அறிவிப்பு இருக்கும். அதன் தொடக்கத்தில் இருக்கும் 'சரி' எனும் குறியை அப்புறப் படுத்துங்கள். அப்புறம் Apply, OK பொத்தான்களைத் தட்டி வெளியே வாருங்கள். பிரச்னை தீர்ந்தது.


சரவணன் சாரா sarasarawanan55@yahoo.co.uk

கே: என்னுடைய மேசைக் கணினியின் RAM 128MB. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. என்னுடைய தாய்ப் பலகை பெந்தியம் 3. நான் இன்னும் அதிக சக்தியுள்ள நினைவியைப் பொருத்த முடியுமா. எவ்வளவு சக்தி உள்ளதைப் போடலாம்?

ப:
RAM என்றால் தற்காலிக நினைவி. கணினியின் வேலைகளை அப்போதைக்கு அப்போது நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன சாதனம். நீள் சதுரத்தில் ஒரு பட்டை மாதிரி பச்சை நிறத்தில் இருக்கும். கணினியின் Hard Disk எனும் வன் தட்டில் தகவல்கள் நிரந்தரமாகச் சேமிப்பு செய்யப் படுகின்றன. அதற்கு முன்னால், இந்தத் தற்காலிக நினைவியில் தான் அனைத்து தகவல்களும் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப் படுகின்றன. கணினியை அடைத்ததும் தற்காலிக நினைவியில் உள்ள தகவல்களும் அழிந்து போகும். சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் பயன் படுத்துவது பெந்தியம் 3 வகையைச் சேர்ந்த கணினி வகை. இதற்கு முன் வந்த கேள்வியைப் பாருங்கள்.

பெந்தியம் 3 ன் வேகம் 800MHz ஐத் தாண்டி போகாது. சில சமயங்களில் 300MHz வரை கிடைக்கும். கணினியின் செயல் வேகம் மிகக் குறைவான நிலையில் இருக்கும் போது நீங்கள் எவ்வளவுதான் தற்காலிக நினைவியின் சக்தியைக் கூட்டினாலும் பலன் இல்லை. வேகம் அதிகரிக்காது. அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

பவா முனியாண்டி  bawanymuniandy@yahoo.com

கே: என் கணி
னியும் சில சமயம் என்னிடம் பூச்சாண்டி காட்டுகிறது. முக்கியமான கடிதம் தட்டச்சு செய்யும் போது திடீரென்று தானாகவே அடைத்துக் கொண்டு திரும்பவும் தானாகவே திறந்து கொள்கிறது. என்ன காரணமாக இருக்கக் கூடும்?

ப:
இதற்கு காரணம் கணினிக்குள் இருக்கும் காற்றாடி தான். காற்றாடி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் இந்தப் பிரச்னை வரும். கணினிக்குள் வெப்பம் அதிகரித்து விட்டால் அதைச் சமமான லைக்கு கொண்டு வர கணினி தானாகவே அடைத்துக் கொண்டு மறுபடி திறக்கும். அந்த மாதிரி கணினியின் இயக்கத்தைச் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆக, காற்றாடியை மாற்றலாம். அல்லது கூடுதலாக இன்னும் ஒரு காற்றாடியைச் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு காற்றாடியின் விலை பத்து ரிங்கிட்.  

நாராயணன் வெங்கட சுப்பிரமயம்  naribala03@gmail.com

கே: சில தினங்களுக்கு முன்னால் You Tube பதிவிறக்கம் செய்ய எளிய முறை கேட்டிருந்தேன். மலேசிய வாசிகளுக்கு மட்டும்தான் பதிலா? எனக்கு ஜோசியத்திலும் ஆர்வம் இருக்கிறது. அது சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கலாமா?

ப:
வணக்கம் அய்யா வணக்கம். தமிழ் நாட்டில் இருந்து கேள்வி கேட்கிறீர்கள். நன்றி. தமிழ் நாட்டில் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கிப் படிக்க முடியவில்லை என்றாலும் இணையம் வழியாகப் படிக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் இணையத்திலும் பிரசுரம் ஆவதால் உலகம் முழுமையும் உள்ளவர்கள் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து நான்கு ஐந்து  கடிதங்கள் வந்திருக்கின்றன. விரைவில் பதில் கிடைக்கும்.

You Tube ல் இருந்து படங்களைப் பதிவிறக்கம் செய்ய புதிய பதிவிறக்கி வந்து விட்டது. அதன் பெயர் YouTube Downloader 2.5.6 அதை http://youtubedownload.altervista.org/ எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுவரை 37 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.

ஜோதிடம் தொடர்பாக உங்கள் முழுப்பெயர், பிறந்த இடம், தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிவியுங்கள். சேவைக் கட்டணம் எப்படி? பரவாயில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இலவசமாகச் செய்து விடுகிறோம். மலேசியத் தமிழர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாகப் பேசுவார்கள் இல்லையா. எல்லாம் சரி. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லையே.

மதன் ராஜ்  rajesmathanraj@yahoo.com

கே: இண்டல் பெந்தியம் 3ன் வேகத்தைக் கூட்டுவது எப்படி?

ப:
முதலில் கணினியைச் சுத்தப் படுத்துங்கள். சுத்தப் படுத்துதல் என்றால் கணினியைக் கழற்றிப் போட்டு குளிப்பாட்டுவது அல்ல. அப்படி எதையும் செய்து விடாதீர்கள். முதலுக்கே மோசமாகி விடும். உள்ளே உள்ள தேவை இல்லாத ஆவணக் கழிசல்களைத் துப்புரவு செய்வதைத் தான் சுத்தப் படுத்துதல் என்று சொன்னேன். http://www.ccleaner.com/ எனும் இடத்திற்குப் போய் CCleaner எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கணினியில் பதிப்பு செய்து நிரலியை ஓட விடுங்கள். அடுத்து தேவை இல்லாத நிரலிகளை அகற்றி விடுங்கள். பெரிய பெரிய விளையாட்டுகள் இருந்தால்  எடுத்து விடுங்கள். இப்போது கணினி வேகமாக வேலை செய்யும்.
ஊர் பெயர் வெளியிடப் படவில்லை

கே: உங்களின் வழி காட்டுதலின் படி Blogger எனும் வலைப் பூ அமைத்து விட்டேன். ஆனால், முகப்பு பக்கம் மட்டுமே அமைக்க முடிந்தது. ஆனால், தலைப்புகள் கொடுத்து பக்க வாரியாக அமைப்பது எப்படி? சிரமம் பாராமல் வழிகாட்டவும்.

ப:
இதற்கு மேல் நாம் எப்படி உதவி செய்யலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள். இலையைப் போட்டு சாதம் போட்டு சாம்பாரும் ஊற்றி ஆகிவிட்டது. எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா! அதற்குப் பதிலாக நானே வலைப்பூவைத் தயாரித்து உங்கள் பெயரைப் போட்டு விட்டால் பிரச்னையே இல்லாமல் போய் விடும். முயற்சி செய்யுங்கள் அய்யா முயற்சி செய்யுங்கள். காலா காலத்திற்கும் வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு இடித்துத் தர முடியுமா.