10 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 74

(அன்புள்ள வாசகர்களே, அண்மையில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஈப்போ மருத்துவமனையில் CCU பிரிவில்  ஒரு வாரம் அனுமதிக்கப் பட்டிருந்தேன். அதனால் சரிவர மேல் பதிவுகள் செய்ய முடியவில்லை. இப்போது உடல் நலம் தேறி வருகிறது.  மறுபடியும் பழைய நிலைக்கு வர சில நாட்கள் பிடிக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.)
ksmuthukrishnan@gmail.com

எஸ்.பி.பாலக்கிருஷ்ணன்  oum9100@yahoo.com.sg
கே: வலைத் திரட்டி என்றால் என்ன?
ப: இணையத்தில் இலட்சக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு மொழியிலும் பல ஆயிரக் கணக்கான வலைப் பதிவுகள் உள்ளன. இந்த வலைப் பதிவுகளை எல்லாம் ஓர் இடத்தில் ஒன்று திரட்டி தொகுத்துத் தரும் இணையத் தளத்திற்குப் பெயர் தான் வலைத் திரட்டி.

தமிழில் பல திரட்டிகள் உள்ளன. தமிழ் மணம், தமிழிஷ், உலவு, தமிழ் 10, திரட்டி, இண்டிலி, தமிழ்ப் பூங்கா போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சாம் ஜோசுவா sam.jo511@gmail.com
கே: பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர்களுக்காகக் கணினி பயிலரங்கம் நடத்தவிருப்பதாகக் கேள்வி பட்டோம். எத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்? கலந்து கொள்ள என்ன தகுதி தேவை?

ப:
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் கணினிப் பயன் பாட்டில் பின் தங்கி விடக் கூடாது. சிறந்து விளங்க வேண்டும் எனும் ஒரு தூர நோக்குச் சிந்தனை. 25.09.2010 - 26.09.2010 ஆகிய இரு தினங்களில் லூமுட் - தெலுக் பாத்தேக் கடல் கரை மையத்தில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்கம் நடைபெறுகிறது.

மாண்புமிகு டத்தோ வீரசிங்கம் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 60 தமிழ் எழுத்தாளர்களும் 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்கிறார்கள். கணினியில் தமிழை உள்ளீடு செய்வது; தமிழ் நிரலிகளைக் கணினிக்குள் நிறுவுவது; தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது; தமிழில் வலைப் பூக்கள் தயாரிப்பது போன்ற விவரங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்யப் படுகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் வரலாற்றில் இது ஒரு முன்னோடித் திட்டம். கணினிச் சகாப்தத்தில் தமிழ் எழுத்தாளர்கள் முத்திரை பதிக்கும் ஒரு காலக் கட்டம்.

இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனக்கு என்று ஓர் இணையத் தளத்தையும் உருவாக்கிச் சாதனை படைக்கிறது.

இந்தப் பயிலரங்கத்திற்கு உயிரோட்டம் வழங்கி வரும் மூத்த எழுத்தாளர்கள் இராம.பெருமாள், சித.நாராயணன், திருமதி.கமலாட்சி ஆறுமுகம், ஜி.பி.செல்வம், மா.செ.மாயதேவன் ஆகியோருக்கு நம்முடைய பாராட்டுகள். வாழ்த்து கள்.
http://peraktamilwriters.blogspot.com

நவீனச் செல்வம், தாப்பா  (குறும் செய்தி 05.09.2010)
கே: இணையத்திலிருந்து காப்பி அடித்து கேள்விகளுக்குப் பதில் கொடுத்து நல்ல பேர் வாங்குவது  பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:
சாயம் அடிக்கப் பயன் படுத்திய ஏணியை எட்டி உதைத்துச் சந்தோஷப் படுபவர்களைப் பற்றி நினைக்க நேரம் இல்லை.

கல்லூரி மாணவி, ஜொகூர் பாரு
கே: என்னுடைய கணினியில் நிறைய Virus எனும் அழிவிகள் நுழைந்து விட்டதாக நினைக்கிறேன். கணினி மெதுவாக வேலை செய்கிறது. கணினியை Format சுத்திகரிப்பு செய்ய வேண்டுமா?

ப: கணினி மெதுவாக வேலை செய்தால் வைரஸ்கள் கணினிக்குள் நுழைந்து விட்டன என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், வைரஸ்களின் தாக்குதலினால் தான் ஒரு கணினி மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு பொதுவான முடிவிற்கும் வந்துவிடக் கூடாது. மற்ற காரணங்களும் இருக்கின்றன. 

அதற்காகக் கணினியைச் சுத்திகரிப்பு செய்துதான் ஆக வேண்டும் எனும் அவசியம் இல்லை. Hard Disk என்பது கணினியின் உயிர்ப் பொருள்களில் ஒன்று. அந்த வன் தட்டை அடிக்கடி சுத்திகரிப்புச் செய்யக் கூடாது.

சுத்திகரிப்பு என்றால் Format. வன் தட்டின்  ஆயுள் காலத்தில் ஒரு பத்து தடவை வரை சுத்திகரிப்பு செய்யலாம். அதற்கு மேல் போகக்கூடாது.

அப்புறம் அதன் செயல் திறன் குறையும். இல்லாத பிரச்னைகளைக் கொடுக்கும். அவசியம் இல்லாமல் சுத்திகரிப்பு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் NTFS எனும் கோப்பு முறையில் செய்யுங்கள். FAT 32 முறையில் செய்யவே வேண்டாம்.

உங்கள் கணினி மெதுவாக வேலை செய்வதாகச் சொல்கிறீர்கள். தேவை இல்லாத ஆவணங்கள், விளையாட்டு நிரலிகள், படங்கள், பாடல்கள் இருந்தால் முடிந்த வரையில் குறைத்து விடுங்கள்.

ஒரு சிலரின் கணினிகளில் தேவை இல்லாத படங்கள், பாடல்கள் என்று மலை மலையாகக் குவிந்து கிடக்கும். குப்பைகளைச் சேர்த்து வைக்கும் குப்பைத் தொட்டியாகக் கணினியை  மாற்றக் கூடாது.

கணினி மனுக்குலத்திற்கு கிடைத்த ஓர் அரிய வரப் பிரசாதம். அதைத் தெய்வமாக நினைத்து மரியாதை செய்யுங்கள்.

கோமகள் சின்னசாமி lomakai_ko21@yahoo.com
கே: RSS என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப:
Rich Site Summary அல்லது Really Simple Syndication என்பதன் சுருக்கமே RSS. தமிழில் இதைச் செய்தி ஓடை என்று அழைக்கிறார்கள்.

இணையத்தில் உலா வரும் இலட்சக்கணக்கான வலைப் பதிவுகளில் நமக்குப் பிடித்தவை என்று ஒரு சில இருக்கலாம்.

இந்த வலைப் பதிவுகளின் செய்திகளைத் தொடர்ந்து படிக்கத் தான் இந்தச் செய்தி ஓடை முறையைப் பயன் படுத்துகிறார்கள்.

ஒரு வலைப் பதிவில் காணப் படும் செய்தி ஓடையில் பதிந்து கொண்டால் அந்த வலைப் பதிவில் இருந்து அறிவிப்புகள் வரும்.  அந்த அறிவிப்புகளின் வழி  செய்திகளைத் தடை இல்லாமல் படிக்கலாம்.

21 அக்டோபர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 73




வித்யாவதி vithiyaa_7@yahoo.com
கே: ஒருங்குறி என்றால் என்ன? இதைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

ப:
உலகத்தில் மொத்தம் 42806 மொழிகள் உள்ளன. இவற்றுள் அதிகமாகப் பயன் படுத்தப்படும் மொழிகள் 226. இவற்றுள் தமிழ் மொழி 15 ஆவது இடத்தில் இருக்கிறது.

அதிகமானோர் பேசப் படும் இந்த மொழிகளில் பல இலட்சம் வகையான எழுத்துருகள் உருவாக்கப் பட்டு விட்டன. அதனால் கணினியில் அவற்றை எல்லாம் பயன் படுத்த முடியாத நிலைமை.

தமிழ் மொழிக்கு மட்டும் ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட எழுத்துருகள் உள்ளன. இப்படியே விட்டால் நிலைமை மோசமாகி விடும். ஆக, ஒரு மொழிக்கு ஓர் ஒருங்குறி இருந்தால் போதும்.

எதிர்காலத்தில் கணினியின் பயன்பாடு சுலபமாகி விடும் என்று கணினி அறிஞர்கள் நினைத்தார்கள்.

ஒருங்குறி அல்லது Unicode என்றால் ஒரு மொழியின் எழுத்து வடிவங்களை உலகத்தில் உள்ள எல்லாக் கணினிகளும் தெரிந்து கொள்கின்ற ஓர் எளிய முறைப்பாடு. இதை ஆங்கிலத்தில் universal font encoding scheme என்று சொல்கிறார்கள்.

இந்த அனைத்துலக முறைப்பாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் 128 கட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்தக் கட்டங்களை slot block என்று அழைக்கிறார்கள். 128 கட்டத்திகுள் ஒவ்வொரு மொழியும் அதன் எழுத்துருகளை அடக்க வேண்டும்.

அந்த வகையில் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் 65,500 கட்டங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. World Unicode Consortium எனும் உலக ஒருங்குறி ஒன்றியம் 198 மொழிகளில் ஒருங்குறிகளை உருவாக்கி இருக்கிறது.

இந்த ஒன்றியத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கிறது. தமிழ் ஒருங்குறிக்கான வேலைகள் 1991ஆம் ஆண்டு தொடங்கியது. இன்னும் வேலைகள் நடக்கின்றன.

எதிர்காலத்தில் உலகமே இந்த ஒருங்குறியைத் தான் பயன் படுத்தப் போகிறது. உங்களுக்கு இஷ்டப் பட்ட எழுத்து களைப் பயன் படுத்த முடியாது. பயன் படுத்தினாலும் அவை ஒருங்குறி எழுத்து களாக இருக்க வேண்டும். அதனால் இப்பொழுது இருந்தே ஒருங்குறியைப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

முரசு அஞ்சல் ஒருங்குறியில் வேலை செய்யும் மிக அருமையான தமிழ் நிரலி. நிறையப் பயன் பாடுகள் உள்ளன. உலகின் தலையாயத் தமிழ் நிரலி என்று கூட சொல்லலாம்.

மலேசியக் கணினி வல்லுநர் திரு.முத்து நெடுமாறன் உருவாக்கியது. விலையும் மலிவு. நூறு ரிங்கிட். மலேசியப் பொருட்களுக்கு மலேசியர்கள் தான் முதலில் ஆதரவு தர வேண்டும்.

புவனேஸ்வரி <maya_asoka@yahoo.com.my>
கே: சார், என் வீட்டில் கொசு தொல்லை அதிகம். கணினியில் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. கணினியைக் கொண்டு கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எப்படி சார். இந்த உதவியைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் உங்களை மறக்க மாட்டேன்.

ப: ஏழு ஜென்மம் எட்டு ஜென்மம் என்று எல்லாம் சொல்லி ரொம்பவும் புகழ வேண்டாம். ஏற்கனவே புகழை விரும்புகிறவன் என்று சொல்லி என்னைக் கஞ்சிக் காய்ச்சி இருக்கிறார்கள். இதில் நீங்கள் வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். உதவி வேண்டும் என்றால் செய்கிறேன்.

http://download.cnet.com/Anti-Mosquito/3000-2056_4-75221053.html
எனும் இடத்தில் கொசுவை விரட்டும் நிரலி இருக்கிறது. பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிப்பு செய்யுங்கள். Activate என்பதைச் சொடுக்குங்கள். அதன் பிறகு Hide என்பதைச் சொடுக்குங்கள்.

இந்த நிரலி மனிதர்களின் காது களுக்குக் கேட்காதச் சத்தத்தை வெளியாக்கும். ஆனால், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், எறும்புகள் போன்றவற்றிற்கு கேட்கும்.

அந்தச் சத்தத்தைக் கேட்டு அவை அலறி அடித்து ஓடும். கொசு தொல்லையும் குறையும். சந்தோஷம் தானே. கணினியை அடைத்ததும் கொசுக்கள் மறுபடியும் வரும். உங்கள் வசதி எப்படி? 


ஹரிஹரன்,  தாமான் மஷ்னா, புக்கிட் கெமுனிங்
கே: தமிழ்ப் பத்திரிகையில் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்களைப் அதிகமாகப் பயன் படுத்தி உங்கள் ஆங்கிலப் புலமையைக் காட்டுகிறீர்கள். புகழ்ச்சிக்கு அடிமை ஆக வேண்டாம்.

ப: எலி அம்மணமாக  ஓடுகிறது என்றால் அதற்குச் சட்டைச் சிலுவார் போடத் தெரியாது என்று அர்த்தம் இல்லை. மற்ற எலிகள் எல்லாம் பார்த்துப் புகழ வேண்டும். சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இல்லை.

அதற்குப் பொருத்தமான, சரியான  சட்டை கடையில் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். புரிகிறதா. பாவம் எலி. ஆளை விடுங்கடா சாமி என்று அஞ்சு கால் ஓட்டத்தில் ஓடுகிறது. அதைப் பார்த்து நீங்கள் என்னடா என்றால் எலி ஓட்டமாய்  ஓடி நோபல் பரிசை வாங்கப் பார்க்கிறது என்கிறீர்கள்.

ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்காத போது என்ன செய்வது. இருக்கிற ஆங்கிலச் சொல்லைப் பயன் படுத்திப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். பேசுகிறவர்கள் எதையாவது பேசட்டும். நம்ப பாட்டுக்கு நம்ப வேலையைச் செய்வோம்.


பவாணி இந்திராணி சகோதரிகள், ராசா செயா, நெகிரி செம்பிலான்
கே: திருப்பதி சாமியார் உலகத்திலேயே பணக்காரச் சாமியார் என்கிறார்கள். புள்ளி விவரங்கள் கிடைக்குமா. உங்களுக்குத் தெரியாதது எதுவும் இருக்காது என்று அக்காவாகிய நான் சொல்கிறேன். இணையத்தில் அலசிப் பார்த்து ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்.

ப: என் மீது ரொம்ப நம்பிக்கை. எப்போது நான் உங்களுக்குத் தம்பி ஆனேன். நீங்கள் எனக்கு அக்காவா. இல்லை இந்திராணி என்பவருக்கு அக்காவா?
நம்ப திருப்பதி சாமியார் இருக்கிறாரே இவர் உலகத்தில் நம்பர் ஒன் சாமியார் என்பது முற்றிலும் உண்மை. அவருடைய சொத்து மதிப்பு இரண்டு  இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. எல்லாம் ரூபாய் கணக்கில் வருகின்றன.

அந்தச் சொத்தில் இருந்து வருடத்திற்கு வட்டி மட்டும் 300 கோடி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று கிலோ தங்கம் காணிக்கையாக உண்டியலில் சேர்கிறது. வருடத்திற்கு ஒரு டன் தங்கம். ஒரு நாளைக்கு பத்து அண்டாக்களிலிருந்து இருபது அண்டாக்கள் வரை உண்டியல் பணம் வருகிறது.

ஓர் அண்டாவில் ஒன்றரைக் கோடி பணம் தேறும். திருப்பதி கோயிலின் தங்க நகைகளின் மதிப்பு மொத்தம் 18 டன்கள். அப்படி என்றால் அதை ஏற்றிச் செல்ல ஐந்து ஆறு லாரிகள் வேண்டும். அவற்றின் மதிப்பு 120 கோடியைத் தாண்டுகிறது.

பக்தர்கள் 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களைத் தானமாகத் திருப்பதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். மலேசியாவில் மட்டும் 12 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கேள்வி.

திருப்பதி கோயிலில் மொத்தம் 32 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அதை நம்பி ஒரு இலட்சம் குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கிலோ லட்டு செய்யப் படுகிறது.

முருகன் குப்புசாமி <murugank1520@yahoo.com>
கே: நான் ஓர் இடைநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர். இணையத்தில் NHM தமிழ் ஒருங்குறி எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முகவரியை முன்பு நம்முடைய நண்பனில் கொடுத்து இருந்தீர்கள். என் கணினியைச் சுத்திகரிப்பு செய்ததும் அது அழிந்து விட்டது. தயவு செய்து மறுபடியும் அந்த முகவரியைக் கொடுத்து உதவுங்கள்?

ப: தமிழில் தட்டச்சு செய்ய NHM நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. இந்த நிரலி Phonetics எனும் ஒலி முறைமையில்  வேலை செய்கிறது. நிரலியைப் பதிப்பது மிக மிகச் சுலபம். நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் http://software.nhm.in/products/writer

அந்த நிரலியை முதலில் உங்கள் கணினிக்குள் பதிப்பு செய்யுங்கள். பதிப்பு செய்யும் போது எந்த மொழி என்று கேட்கப் படும். அப்போது தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

பதிப்பு செய்யப் பட்டதும் ஒரு வெள்ளை மணியின் சின்னம் ஆகக் கீழே உள்ள பணிப் பட்டையில் தோன்றும். அந்த மணியை வலது சொடுக்கு செய்யுங்கள்.

அப்புறம் Start automatically when starting Windows என்பதைச் சொடுக்கி விடவும். கணினி தொடங்கும் போதே நிரலியும் தொடங்கும். அதன் பிறகு Language என்பதில் Tamil என்றும் Keyboard என்பதில் Phonetic என்றும் இருக்கும். அதை மட்டும் சொடுக்கி விடுங்கள். மற்றவை தேவை இல்லை.

தவறு நடந்து விட்டால் பயப் பட வேண்டாம். திருத்திக் கொள்ள முடியும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும் போது நீங்கள் தட்டச்சு செய்வது எல்லாம் ஆங்கிலத்தில் வரும்.

Alt பொத்தானையும் 2 பொத்தானையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் வெள்ளை நிறச் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் தட்டச்சு தமிழுக்கு மாறிவிட்டது என்று அர்த்தம்.

கொஞ்ச நேரம் பயிற்சி செய்து பாருங்கள். கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து விடுங்கள். எல்லாம் சரியாக வந்து விடும். சின்னம் வெள்ளை நிறத்தில் இருந்தால் ஆங்கிலம். தங்க நிறத்தில் இருந்தால் தமிழ். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.