07 டிசம்பர் 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


நெல்சன் மண்டேலா




எம்.ஜி.ஆர். அசைவற்றுக் கிடக்கின்றார். பேச்சு மூச்சு இல்லை. அங்கே பாலமுரளி கிருஷ்ணாவின் மதுர கானங்கள் சன்னமாய் ஒலிக்கின்றன. அதைக் கேட்டு ஒரு சில மணித் துளிகளுக்கு எம்.ஜி.ஆரின் உடல் லேசாய் அசைகின்றது. அவரின் கடைசியான சுவாசக் காற்றும், மௌனத்தின் ராகங்களாய் நெஞ்சுக்குள் சலனமாகின்றன. எம்.ஜி.ஆர். என்கிற சரித்திரம் சாய்ந்தும் போகிறது. 

அதே போல நெல்சன் மண்டேலாவும் படுத்தப் படுக்கையாய்க் கிடக்கின்றார். ஆப்பிரிக்க மண்ணின் வைதீக வாசகங்கள் இசைக்கப் படுகின்றன. மண்டேலாவின் மெய்யுடல் கொஞ்சமாய்ச் சிலிர்க்கின்றது. ஒரு சகாப்தம் சாயப் போகின்றது. எல்லாரும் பேசிக் கொள்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும்.

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்; அவர் மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன் எனும் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகின்றன. கதிரவனுக்கு அஸ்தமனம் இல்லை. அதைப் போலத்தான் நெல்சன் மண்டேலா போன்ற மானுட இலக்கணங்களுக்கும் மறைவு என்பதும் இல்லை. 

சொர்க்கத்தில் நிற வெறி என்கிற சட்டாம்பிள்ளை தலை கால் தெரியாமல் ஆட்டம் போடுகிறதாம். அதனால் அதற்குத் தனியாக ஒரு பாடம் நடத்தச் சொல்லி மாண்டேலாவுக்கு தந்தி வந்து இருக்கிறது.  போவதற்கு அவரும் தயாராகிக் கொண்டு இருக்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பயணத்திற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்று சொல்கிறார்கள். 

அத்தி பூத்தால் போல மலரும் மனித மலர்கள்          

வயதான மனிதர். மனித ஆசாபாசங்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் முகர்ந்து பார்த்தவர். மண் வாசனைகளுடன் மனித நாற்றத்தையும் சுமந்து போக வேண்டும். கொஞ்சம் மெதுவாகத்தான் போவார். மனம் சொல்கின்றது. அப்படியே மெதுவாகவே போகட்டுமே. 

அத்தி பூத்தால் போல மலரும் ஒரு சில மனித மலர்கள் உதிரும் போது நம் மனசும் கனமாய்ப் போகின்றது. அந்த மலர்களின் ஆன்மாக்களை வழியனுப்ப வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் போது ஆத்மபலமும் குறைந்து போகின்றது. ஒரு சரித்திரம் பேசும் சகாப்தத்தின் கண்ணீர்க் கதை வருகிறது. படியுங்கள். மரியாதை செய்யுங்கள்.   

உலக வரலாற்றில் சுதந்திரப் போராட்டம் என்பது இரண்டு வகை. மனித உரிமைகளுக்காகவும், மனித இனத்தின் சமத்துவத்திற்காகவும் போராடுவது ஒரு வகை. நாடு விட்டு நாடு வந்த அந்நியர்களின் இரும்புப் பிடியில் இருந்து விடுபடுவதற்காகப் போராடுவது இன்னொரு வகை. 

இந்த இரண்டு வகையான சுதந்திரத்திற்காகத் தங்கள் உடலையும் உயிரையும் துச்சமாகக் கருதிப் போராடியவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை மட்டும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு காலாகாலத்திற்கும் நினைவில் வைத்து இருக்கும். எப்போதுமே பொன் எழுத்துகளால் பொறித்தும் வைத்து இருக்கும். 

ஒருவர் இந்திய மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி வகுத்துத் தந்த காந்தி மகான். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உடலையே பணயம் வைத்து உயிரையே பரிசாகத் தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவருக்குமே வாழ்நாள் சாதனை என்று சொல்லித் துப்பாக்கிக் குண்டுகளை மட்டுமே பரிசுகளாகக் கொடுத்து இருக்கிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளி

மூன்றாவதாக வருபவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். எந்த நேரத்திலும் விடைபெற்றுச் செல்லலாம். அவரை வாழும் காந்தி என்று அழைக்கிறோம். இந்த நவீன இருபதாம் நூற்றாண்டில் இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென் ஆப்பிரிக்காவில் விடிவெள்ளியாய்த் தோன்றியவர். அவர்தான் நெல்சன் மண்டேலா.

ஆப்பிரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் என்று அங்கே வாழும் கறுப்பு இனத்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஓர் ஒப்பற்றத் தலைவர். ஓர் ஆண்டு அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல. 27 ஆண்டுகள் தன் கொள்கைகளுக்காகச் சிறைவாசம் அனுபவித்தவர். உலகம் போற்றும் ஓர் உன்னத மனிதர். ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதையும்!

1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டிரான்கே என்ற பகுதியில் குலு எனும் கிராமத்தில் பிறந்தார். அங்கு சோசா பழங்குடி என்கிற ஓர் இனம் இருந்தது. அந்த இனத்தின் தலைவருக்கு நான்கு மனைவிமார்கள். அவருக்கு 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தான் இந்த மண்டேலா. இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. 

குடும்பத்தில் முதன் முதலாகப் பள்ளிக்குச் சென்றவர். காலையில் பள்ளிக்கூடம். மாலையில் ஆடு மாடுகளை மேய்ப்பது. ஆற்றுக்குப் போய் தண்ணீர் எடுத்து வருவது. பயிர்ப் பச்சைகளுக்குத் தாகம் தீர்ப்பது. பறித்த காய்கறிகளை அக்கம் பக்கத்தில் விற்பது. விலை குறைவாகக் கேட்பவர்களிடம் சண்டைக்கு நிற்பது. வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் ரோத்தான் பூசை வாங்குவது. 

தம்பி தங்கைகளுக்காக ஏச்சு பேச்சுகளை வாங்கிக் கட்டிக் கொள்வது. ஆட்டுக்குட்டி காணாமல் போனால், அதைத் தேடிக் கொண்டு காடு மேடு எல்லாம் அலைவது. கிடைக்கும் வரை எத்தனை நாள் ஆனாலும் காட்டிலேயே படுத்துத் தூங்குவது. ஒரு சாதாரண கிராமத்துப் பையன் எப்படி சுற்றித் திரிவானோ அந்த மாதிரிதான் நெல்சன் மண்டேலாவின் ஆரம்ப வாழ்க்கையும் பயணித்துப் போய் இருக்கின்றது.

சிறுபான்மை வெள்ளை இனத்தவர்                   

பொதுவாக அவரை நெல்சன் மண்டேலா என்றே அழைப்பார்கள். இவரின் பெயருக்கு முன்னால் வரும் "நெல்சன்"  என்பது, இவர் படித்த முதல் பள்ளியின் ஆசிரியரால் வைக்கப்பட்டது. சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அவரை எல்லாரும் தெரிந்து வைத்து இருந்தனர். ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்த கள்ளிக்காடாக விளங்கியது. 

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைகளாக வாழ்வதையும், அவர்கள் கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து நொந்து போனார். சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்கிற உணர்வு, அப்போது சின்ன வயதிலேயே ஆழமாய்ப் பதிந்தும் போனது. 

போர்ட் ஹேர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதற்காக அவர் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா மனம் தளரவில்லை. கல்வியைக் கைவிடவும் இல்லை. 

வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத் துறையில் பட்டம் பெற்றார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்டவர் மண்டேலா. லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜொகானஸ்பர்க் சென்று பகுதி நேரமாகச் சட்டக் கல்வி படித்தார். அங்கே ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என ஓர் ஐரோப்பிய பட்டாளமே தென் ஆப்பிரிக்காவிற்குப் படை எடுத்தது. தென் ஆப்பிரிக்க மண் அவர்களைச் சந்தோஷமாக வரவேற்றது. கறுப்பின மக்களுடன் அவர்கள் குசலம் விசாரித்தனர். நன்றாகக் கைகுலுக்கிக் கொண்டனர். வந்தவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. அதிகாரத்தைக் கைப்பற்றி கறுப்பு இனத்தவர்களைக் கொத்தடிமைகளாக நடத்த முயற்சிகளும் செய்தனர்.

விருந்தோம்பல் பேசி வந்தவர்கள்தான் வெள்ளையர்கள். அப்படி வந்தவர்கள் கடைசியில் விருந்து வைத்தவர்களின் நாட்டையும் நிலத்தையும் பிடித்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலம் எவ்வுளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநில அளவு.

கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் 

வெள்ளையர்களுக்கு என்று தனித் தனிப் பள்ளிக்கூடங்கள், தனித் தனி நூலகங்கள், தனித் தனி மருத்துவமனைகள், தனித் தனிப் பூங்காக்கள், தனித் தனிக் கட்டடங்கள். ஆக, அவர்களுக்கு என்று எல்லாவற்றையுமே தனித் தனியாக வைத்துக் கொண்டார்கள். 

வெள்ளையர்கள் இருக்கும் இடத்தில் கறுப்பர்களுக்கு இடம் கிடையாது. அங்கே தலை வைத்துப் பார்க்கவும் கூடாது. ஆனால், அடிமைகள் போல எடுபிடி வேலைகள் செய்யலாம். அதை எல்லாம் தாண்டிய ஒரு விசயம். 

வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கறுப்பு இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படிப் பட்ட கொடுமைகளை எதிர்த்து எண்பது விழுக்காட்டுக் கறுப்பர்கள் போராடியிருக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். முடியும். ஆனால், வெள்ளையர்கள் புத்திசாலிகள். மொழிகளின் பெயரால் கறுப்பர்களைப் பிரித்து வைத்து நாடகம் ஆடினர். 

ஆட்சியும் அதிகாரமும் வெள்ளையர்களிடம் மொத்தமாக மாறிப் போயின. 1939-ஆம் ஆண்டில் தனது 21-ஆவது வயதில் மண்டேலா கறுப்பின இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கினார். 

”கறுப்பின மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். அவர்களின் வாக்களிக்கும் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவர்களுடைய நாட்டிலேயே அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. கறுப்பின மக்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆவதும் தடை செய்யப் படுகிறது. 

சொந்த மண்ணிலேயே சொந்த பந்தங்கள் வேர் அறுக்கப்படுகின்றன. அவை கறுப்பின மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. அவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என கறுப்பின மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றியும் கண்டார்.

1948-ஆம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிராக வஞ்சகமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடின. மண்டேலாவின் உற்றத் தோழன் ஒலிவர் ரம்போ. இருவரும் அப்போது இருந்தே பல்கலைக்கழக நண்பர்கள். இருவரும் இணைந்து ஒரு சட்ட நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் வழி கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவிகளையும் செய்தார்கள்.

இனவாதமும் ஒடுக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதைக் கண்ட மண்டேலா சீற்றம் அடைந்தார்.வேறு வழி இல்லாமல் அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. 

அதன் தலைமைப் பொறுப்பை மண்டேலா ஏற்றார். இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவர் தலைவராக இருந்தபோது, இனவாதக் கொள்கைகளுக்கு எதிரான அறப் போராட்டங்கள் துளிர்விட்டன. 

அறப்போர் மூலமாகப் போராட்டம்          

மண்டேலாவின் வன்முறையற்ற போராட்டங்கள் வளர்ச்சி அடைவதைக் கண்ட வெள்ளையர்கள் பயந்து போனார்கள். இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்றும் நினைத்தனர்.  1956-ஆம் ஆண்டு, அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று மண்டேலாவை அரசாங்கம் கைது செய்தது. இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் மண்டேலா மேலும் தீவிரமாகச் செயல்பட்டார். 

அதன் காரணமாக 1960-களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1960-இல் ஆப்பிரிக்கர்களுக்கு சிறப்புக் கடவுச் சீட்டுகள் வழங்கப் படுவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்வைல் எனும் நகரில் நடத்தினார். அந்தச் சம்பவத்தில் ஊர்வலத்தினர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அதில் 69 பேர் கொல்லப்பட்டனர். 

1956-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் தேசத் துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப் பட்டனர். நீண்ட நெடிய சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அனைவரும் குற்றச் சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.

இதனை அடுத்து அறப்போர் மூலமாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாது என்பதை மண்டேலா உணர்ந்து கொண்டார். அடுத்து ஆயுத வழிமுறையை நாடினார். அதுதான் உச்சக்கட்டம். அவரைக் கைது செய்ய வெள்ளையர்கள் முடிவு செய்தனர். சரியான நேரம் பார்த்து காத்து நின்றனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா பொறுப்பேற்றார். அந்த ஆயுதப் படையை உருவாக்கியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. வெளிநாடுகளிடம் இருந்து பண, இராணுவ உதவிகளைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது. கொரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்.

1961 டிசம்பர் 16-ஆம் நாள் முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப் பட்டது. அரசாங்கம் உஷாரானது. வெள்ளையர்கள் குரல்வளையைப் பிடிக்கப் போகின்றனர் என்று தெரிந்ததும் மண்டேலா தலைமறைவானார். அவரைப் பிடிக்க கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர் மனித உரிமைகளை மீறி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அதனையே காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தித் தள்ளியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தது. 
 
1962 ஆகஸ்ட் 5-ஆம் நாள் மாறு வேடம் அணிந்த காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட மண்டேலாவும் முக்கியத் தலைவர்களும் கைது செய்யபட்டனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள்; அமைதியைக் கெடுத்தார்கள்; கலகத்தை உருவாக்கினார்கள் என்று அவர்கள் மீதான குற்றம் சாட்டப்பட்டது. 

அந்த வழக்கை ரிவோனியா செயல்பாடு (Process Rivonia) என்று அழைக்கிறார்கள். மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம்தான் 27 ஆண்டுகளாக நீடித்தன.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது என்று தாராளமாய்ச் சொல்லலாம். பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துப் போட்டு அரசாங்கம் கொடுமை செய்து உள்ளது. மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 

1988-ஆம் ஆண்டு அவருக்கு கடுமையான காச நோய் ஏற்பட்டது. மரணத்தின் வாசல்படிக்கே சென்றார். அதனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சி மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தது. மண்டேலாவின் மனைவி வின்னி மடிகி லேனா தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென் ஆப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தென் ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக வில்லியம் கிளார்க் பதவிக்கு வந்தார். 

அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலையை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து நின்றதது. 1990 பிப்ரவரி 11-இல் விடுதலை செய்யப்பட்டார். மண்டேலா விடுதலை பெற்ற போது அவருக்கு வயது 71. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் நேரடியாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

நேரு சமாதான விருது           
             
மண்டேலாவை வரவேற்க இந்தியாவின் சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்களும் ஆயிரக்கணக்கான் தொண்டர்களும் அவரை மகிழ்ச்சி ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலா பாதுகாப்பாகக் கேப்டவுன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் விடுதலை உலக தலைவர்களின் வரவேற்பைப் பெற்றது. விடுதலைக்குப் பின்னர் மண்டேலா கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப் படுத்த அனைத்துலகச் சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் அந்தப் பேச்சு வார்த்தைக்குத் சரியான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக மரபில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்’ என்றார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, அவர் சிறையில் இருக்கும் போதே இந்திய அரசு அவருக்கு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவரின் சார்பில் வின்னி புதுடில்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 

1990-இல் இந்தியாவின் ஆக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1993-இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18-ஆம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இவர் 1998-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனதும் அவர் செய்த முதல் காரியம்; தென் ஆப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுவதாகும். 

தன் ஆப்பிரிக்காவில் தமிழ் மொழி கற்றுத்தரப் படுகிறது என்றால் அதற்கு மூல காரணமாக இருப்பவர் சாட்சாத் மண்டேலாதான். 1999-இல் பதவியை விட்டு விலகினார். இவர் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ஆம் தேதி, பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அன்னாரின் வயதையும் கவனிக்க வேண்டும். 94 வயதாகிறது. வாழ்க்கையில் பெரும்பகுதியைச் சிறையில் கழித்துவிட்டார். 

ஒரு விடிவெள்ளியாய்த் தோன்றியவர். ஒரு காந்தியாய் வாழ்ந்தவர். மானுடத்தின் இலக்கணமாய் அந்திமப் புன்னகையைச் சிந்தியவர். ஆனால். அது ஓர் அஸ்தமனப் புன்னகையாக மாறிவிட்டார். எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் சரியாகவே எழுதிவிட்டன.

07 நவம்பர் 2013

மலேசியத் தமிழர்களும் தமிழ் இணையமும்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 23.01.2011-இல் கோலாலம்பூரில் மலேசிய இணைய விழாவை நடத்தியது.  அதில் சமர்ப்பிக்கப் பட்ட என்னுடைய ஆய்வுக் கட்டுரை. 

மலேசியத் தமிழர்களும் தமிழ் இணையமும்

 
1950-60 ஆம் ஆண்டுகளில் தான் கணினிப் பயன்பாடு மலாயாவில் துளிர் விடத் தொடங்கியது. அதற்கு முன்னர் கணினி எனும் ஓர் அரிய சாதனம் இருக்கின்றது என்று மலாயா வாழ் மக்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கு ஓர் உயரிய சாசனம் இருக்கின்றது என்பது மட்டும் அவர்களுக்கு அப்போதைக்குத் தெரியாது.

நாளிதழ்களின் வழியாகக் கணினியின் உருவப் படங்களைப் பார்த்தனர். வானொலியின் மூலமாகக் கணினியைப் பற்றிய செய்திகளைக் கேட்டனர். அவ்வளவுதான். வானொலியின் இளைய சகோதரர் என்று செல்லமாக அழைக்கப் படும் தொலைக் காட்சி பிறக்காத காலத்தில் மலாயாவில் மக்கள் வாழ்ந்த காலம் அது. 

1960 ஆம் ஆண்டுகளில் இணையம்

1963 ஆம் ஆண்டில் மலாயா எனும் நாடு மலேசியா ஆனது. ஆகவே, மலாயா வாழ் மக்களை மலேசியர்கள் என்றே குறிப்பிடுகிறேன்.

1960 ஆம் ஆண்டுகளில் தான் இணையம் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப் பட்டது. அப்போது அது மலேசிய மண்வாசனையை அறிந்திராத காலம். 1950 களில் வெறும் கணினிப் பெட்டிகள் மட்டுமே மலேசியாவுக்கு வந்தன. அதுவும் அத்திப் பூத்தால் போல எங்கோ ஒன்று இரண்டு பெட்டிகள் இருக்கும்.

அதைப் பார்ப்பதற்குக் கூட்டம் கூடி நிற்கும். கணினியை நேரில் பார்ப்பது என்பது ஒரு சிம்ம சொப்பனம். கிராமத்துக்காரன் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தது போல பார்ப்பவர்களின் பார்வையும் வேடிக்கையாக இருந்தது.

Sime Darby, Dunlop, Gutherie, Kluang Rubber, Golden Hope, Socfin போன்றவை தான் முதன்முதலில் மலாயாவில் கணினிகளைப் பயன் படுத்திய தலையாய நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஐ.பி.எம். ரகக் கணினிகளைப் பயன்படுத்தின. உலகில் முதன்முதலில் உருவாக்கப் பட்டவை ஐ.பி.எம் கணினிகளே. அடுத்து வந்தவை ஆப்பிள் கணினிகள்.

மலேசியாவில் கணினிகளின் முதல் பயன்பாடு

1970 ஆம் ஆண்டுகளில் கணினியை அரசாங்க அமைச்சுகளில் நிதி அமைச்சுதான் முதலில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சுங்கை பூலோவில் இருந்த ரப்பர் ஆய்வுக் கழகம் கணினி உலகில் காலடி எடுத்து வைத்தது. பின்னர், கணினிப் பயன்பாட்டில் ஒரு முன்னோடியாகவும் விளங்கியது.

அடுத்து செர்டாங் விவசாயக் கல்லூரி கணினிகளைப் பயன் படுத்தத் தொடங்கியது. மலாயாப் பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்றவை கணினிப் பயன்பாடுகளில் அடுத்தடுத்து தீவிரம் காட்டின.

அந்தக் காலக் கட்டத்தில் வெளி வந்தக் கணினிகளின் விலை மிக மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதனால் பொது மக்கள் தனிப்பட்ட முறையில் கணினிகளை வாங்கிப் பயன் படுத்துவதில் தயக்கம் காட்டினர். மண்ணைத் தாண்டி விண்ணில் வீடு கட்டுவது போன்ற ஒரு மயக்கத்திலும் வாழ்ந்தனர்.

அப்போது ஒரு கணினியின் விலை 20 ஆயிரம் ரிங்கிட். இப்போதைய மதிப்பின் படி இரண்டு இலட்சம். சராசரி ஊழியர் ஒருவரின் ஒரு நாள் சம்பளம் அப்போதைக்கு மூன்று ரிங்கிட். ஆக, வசதி படைத்தவர்கள் மட்டுமே கணினிகளை வாங்க முடிந்தது.

மலேசியத் தமிழர் நினைத்துப் பார்க்க முடியாத சாதனம்

பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கணினியை வாங்கியவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ஒரு படி மேலே ஏறிப் போனவர்களும் உண்டு. சொந்த பந்தங்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகக் கணினியை வாங்கிப் போட்ட சில சொப்பன ஜீவராசிகளும் வாழ்ந்து இருக்கிறார்கள். மன்னிக்கவும். வரலாறு அப்படி சொல்கின்றது.

சாதாரண கணக்கு வழக்குகளைச் செய்வதற்காக மட்டுமே அப்போதைய கணினிகள் பயன் பட்டன என்பது வேறு விஷயம். அந்தக் காலத்தில் கணினி என்பது ஒரு சாதாரண மலேசியத் தமிழர் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிசயமானச் சாதனம். ஓர் அபூர்வமான கருவி. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மட்டுமே பயன்படுத்த முடிந்த ஓர் அற்புதமான விளக்கு என்று கூட பலர் கனவு கண்டதும் உண்டு. உவமைக்காகச் சொல்கின்றேன். அது ஒரு கனாக் காலம்.

இப்போது காலம் தலைகீழாக ரொம்பவும் மாறிப் போய் விட்டது. கணினி என்றால் முதலில் ஒரு தமிழனைக் கூப்பிடு என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் கணினித் துறையில் மிகச் சிறந்து விளங்குகின்றனர். உயரிய இலக்குகளில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கணினி வளர்ச்சிக்கு சுதி சேர்க்கின்றனர். கணினி உலகத்தையே தமிழர்கள் தங்கள் உள்ளம் கைக்குள் கொண்டு வந்து விட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு கணினி ஓர் இலட்சம் ரிங்கிட்

ஓர் இலட்சம் ரிங்கிட்டிற்கு விற்கப் பட்ட அப்போதைய கணினி இப்போது ஆயிரம் ரிங்கிட்டிற்கு விற்கப் படுகிறது. ஆற்றலும் பல ஆயிரம் மடங்கு பெருகி விட்டது. அப்போது ஆயிரம் கணினிகள் சேர்ந்து செய்யும் ஒரு வேலையை இப்போதைய ஒரு சாதாரண மேசைக் கணினி செய்து முடித்து விடுகிறது. அதுவும் கண் இமைக்கும் நேரத்தில்.

சகோதர சகோதரிகளே, உலகளாவிய ஓர் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. உலகக் கணினி மன்னன் பில் கேட்ஸ் தமிழர்களைத் தேடி தமிழ் நாட்டிற்குக் கப்பல் ஏறி வரும் அளவுக்கு நிலைமை இப்போது ரொம்பவும் மாறிப் போய் விட்டது.

அவரிடம் பணிபுரிந்த பல ஆயிரம் பேர் பணக்காரர்களாக மாறி விட்டனர். செல்வச் சீமான்களாகத் தத்தம் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டு உள்ளனர். அதில்  பலர் கோடீஸ்வரர்களாகப் பதவி உயர்வும் பெற்று உள்ளனர்.

அது மட்டும் அல்ல. அவர்கள் ’போர்ப்ஸ்’ சஞ்சிகையின் உலகப் பணக்காரர் பட்டியலிலும் இடம் பிடித்தும் உள்ளனர். மலேசியாவில் இருந்து போய் இருக்கும் தமிழர்கள் இருபது பேர் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் இன்னும் பணி புரிகின்றனர். ஆக, உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றிப் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

மலேசியாவில் பத்து பேர் பயன்படுத்திய இணையம்

சரி. 1990 ஆம் ஆண்டுகளில்தான் உலக அளவில் கணினிகளின் பயன்பாடு பரவலானது. இன்னும் ஓர் அதிசயமான செய்தி. 1992 ஆம் ஆண்டு மலேசியாவில் பத்தே பத்து பேர் தான் இணையத்தைப் பயன் படுத்தி இருக்கின்றனர். அதுவும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டுமே அந்தப் பயன்பாடு இருந்து வந்து இருக்கிறது.

சங்கரன் இராமநாதன்[1] என்பவர் மலேசியர்கள் பலருக்குத் தெரிந்த ஒரு மாபெரும் கல்வியாளர். அவர் செய்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் இந்த உண்மையைச் சொல்லி இருக்கிறார்.

இணையம் இப்படி நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. அந்த இணையத்தை இப்போது பாருங்கள். மனிதக் கற்பனைக்கு எட்ட முடியாத ஓர் உன்னதமான இடத்திற்குப் போய் விட்டது. கொடி கட்டிப் பறந்த வண்ணம் வெண்சாமரம் கேட்கின்றது.

உலக இணைய அரங்கில் மலேசியாவிற்கு 24-வது இடம்

உலக நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வரிசையில் மலேசியா 24 ஆவது இடத்தில் இருக்கிறது. இணையப் பயன்பாட்டில் ஆசியாவில் ஆறாவது இடத்தையும் ஆசியான் நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்து நிற்கிறது. பிருமாண்டமான வளர்ச்சி.

மலேசியாவின் மக்கள் தொகை 26 மில்லியன். இவர்களில் 17 மில்லியன் 16,902,600 பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது 16,902,600 பேர். [1.1]




சிங்கப்பூரின் மக்கள் தொகை 5 மில்லியன். இவர்களில் 3.6 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதாவது 3,658,400 பேர்.

இந்தியாவின் மக்கள் தொகை 1173 மில்லியன். இவர்களில் 81 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறனர். அதாவது 81,000,000 பேர்.

சீனாவின் மக்கள் தொகை 1331 மில்லியன். இவர்களில் 420 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறனர். அதாவது 420,000,000 பேர். [2]


இவை 2010 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள். கூகிள் தேடல் இயந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்கள். 

மலேசியாவில் ஆறு இலட்சம் இந்திய இணையப் பயனர்கள்

மலேசியா வாழ் இந்தியர்களில் ஏறக்குறைய 600,000 பேர் மட்டுமே இணையப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். இதற்கு மலேசியாவில் இந்தியர்களின் மக்கள் தொகை குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். [3]


இருந்தாலும், இப்போதும் கூட பாருங்கள்.  தைப்பூசத் திருநாளில் நம் இந்தியர்கள் கூடும் கூட்டத்தைப் பார்த்துப் பெருமிதம் அடைகிறோம். நம்முடைய இனத்தவரின் எண்ணிக்கை மிக மிக உயர்வாக இருப்பதாக ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. அது ஒரு நியாயமான மாயை தான்.

கணினியைப் பயன்படுத்துவதிலும் இணையத்தைப் பயன்படுத்துவதிலும் அப்படி ஒரு பெருமிதம் ஏற்பட வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான விருப்பமும் கூட! பத்துமலையில் கூடும் பக்தர்கள் வெள்ளத்தைப் போல இந்தியர்கள் PC Fair, PC Expo போன்ற கணினிக் கண்காட்சிகளுக்குப் படை எடுக்க மாட்டார்களா என்பது ஓர் ஆதங்கம். ஒரு தமிழரின் மனதிற்குள் ஆர்ப்பரிக்கும் நமைச்சல்.

பல கணினிக் கண்காட்சிகளுக்குச் சென்று இருக்கிறேன். கௌரவ விருந்தினராக அழைக்கப் பட்டும் இருக்கிறேன். அங்கே எல்லாம் தமிழர்கள் வருவது குறைவு. வருகிறார்கள். வருவது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எண்ணிக்கையில் மிகவும் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். சீனர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்.

கணினிக் கண்காட்சி விழாக்கள்

அப்படியே வந்தாலும் இளைஞர்களாக இருப்பார்கள். கணினிகளைப் பார்த்த மாதிரியும் இருக்கும். காதல் செய்தது மாதிரியும் இருக்கும். என்னுடைய வயதுக் காரர்கள் யாராவது வர மாட்டார்களா என்று நான் பலமுறை ஏங்கியது உண்டு. ஏக்கம் என்றால் இங்கே வேறு மாதிரியான ஏக்கம் அல்ல. தயவு செய்து தப்பாக நினைத்து விட வேண்டாம். சம வயது ஏக்கம் தான்.

அடுத்த தலைமுறையில் இணையம் மலேசிய இந்தியர்களிடையே பற்பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஒரு பொதுவான கருத்து. இங்கே மாற்றங்கள் என்பது இந்தியர்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்படப் போகும் மாற்றங்களைச் சொல்கிறேன். கணினி உலகம் எட்டாத உயரத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. அதை விரட்டிப் பிடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நமக்கு என்ன எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று தெரிந்து இருப்பது நல்லதுதான். ஆனால், என்ன எல்லாம் தெரியாமல் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது நல்லது அல்ல.

காலம் மாறுகிறது. ஞாலமும் மாறுகிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் தெரியாமல் இருப்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.

மலேசியாவில் இந்தியர்களின் பங்கு எட்டு விழுக்காடு

மலேசியாவில் 100 பேரில் 55.8 பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது 2008 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள். இதில் இந்தியர்களின் பங்கு எட்டு என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. 2009 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்து இருந்தது. மகிழ்ச்சி தரும் செய்தி. [4]



இணையத்தில் அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் எனும் ஒரு பொதுவான கருத்து நிலவி வருகிறது. கடன் அட்டைகளைக் கொண்டு நமக்கு வேண்டியதை இணையத்தின் வழியாக வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய வீட்டுச் சேவைக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்குப் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். அவசரத்திற்குப் பணத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இணையப் பண பரிமாற்ற முறை உலகளாவிய நிலையில் மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. இதில் மலேசியத் தமிழர்களில் எத்தனை விழுக்காட்டினர் ஈடுபாடு காட்டுகின்றனர். அந்த விவரங்கள் நமக்கு இன்னும் சரியாகக்  கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். வீட்டில் இணைய வசதிகள் இருந்தால் தானே இணையப் பண பரிமாற்ற முறையைப் பற்றி பேச முடியும்.

இணையத் தேடலில் மலேசியா 11 ஆவது இடம்

ஆனால், இணையத்தைப் பயன்படுத்தி அரசாங்கத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் மலேசியத் தமிழர்கள் முனைப்புக் காட்டுகின்றனர் என்பது அண்மைய தகவல். இதில் மலாய், சீனச் சகோதரர்களைக் காட்டிலும் தமிழர்கள் மிஞ்சி நிற்கின்றனர். இந்த இணையத் தேடலில் ஒட்டு மொத்த உலக அரங்கில் 11 ஆவது இடம் மலேசியர்களுக்குக் கிடைத்து உள்ளது.

இணையப் பயன்பாட்டில் மலேசியத் தமிழர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். முழுமையாக ஈடுபட வேண்டும் என்று துடிப்பு காட்டுகின்றன. உண்மைதான். ஆனால், இணையச் சேவையை வழங்கும் மலேசிய நிறுவனங்கள் அதிகமானக் கட்டணத்தை வசூல் செய்கின்றனவே. அதற்கு என்ன செய்வது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலேசியாவில் இணையச் சேவையின் கட்டணம் மிகவும் உயர்வு என்றே சொல்ல வேண்டும். இப்படி நான் சொல்லவில்லை. இணையச் சேவையைப் பயன்படுத்தும் எல்லோருமே சொல்கிறார்கள். வேதனைப் படுகிறார்கள்.

மாதத்திற்கு  ஆகக் குறைந்த பட்சக் கட்டணம் 60 லிருந்து 100 ரிங்கிட். ஆக, வருடத்திற்கு ஆயிரம் ரிங்கிட். ஒரு சராசரி மலேசியனுக்கு ஒரு மாதத்திற்கு 100 ரிங்கிட் என்பது கையைக் கடிக்கிற விஷயம்.

ஆசியான் நாடுகளை எடுத்துக் கொள்வோம். இணையச் சேவையின் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. முதல் நிலையில் மியன்மார் நிற்கிறது. அந்த நாட்டை விடுங்கள். அங்கே என்ன நடக்கிறது என்பது தான் அனைவரும் அறிந்த விஷயம் ஆயிற்றே. சொல்லத் தேவை இல்லை.

தமிழ்நாட்டில் இணையச் சேவைக் கட்டணம் குறைவு

கம்போடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஏழ்மையான நாடு. அங்கே இணையச் சேவையின் கட்டணம் நம் நாட்டை விட குறைவாக இருக்கிறதே. அதே போலத் தான் இந்தோனேசியாவின் பாலித் தீவிலும் குறைவான கட்டணம் வசூல் செய்கிறார்கள்.


இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலேசியாவை விட தமிழ்நாட்டில் இணையச் சேவைக்கான கட்டணம் குறைவு. இணைய மையங்களைச் சொல்லவில்லை. தனியார் நிறுவனங்கள் பொது மக்களுக்கு வழங்கும் இணையச் சேவைக்கான கட்டணத்தைச் சொல்கிறேன்.

மலேசியாவை 2020க்குள் ஒரு வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் விவேகமான இலக்கு.

ஆக, அப்படி இருக்கும் போது, இணையச் சேவை வழங்குவதில் பயனர்களிடம் அதிக பட்சக் கட்டணம் வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லையே. வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப நாடு எனும் இலக்கை அடைவதில் தடங்கல் ஏற்படும் என்று சொல்வதிலும் தப்பு இல்லையே.


மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் அலி சல்மான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் இந்த உண்மை சொல்லப் படுகிறது. [5]

மின்னஞ்சல் அனுப்பவதில் மலேசியத் தமிழர்கள் தயக்கம்

அடுத்து ஒரு முக்கியமான கட்டத்திற்கு வருகிறேன். இணையம் மூலமாக மின்னஞ்சல் அனுப்பவதிலும் மலேசியத் தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வீட்டில் இணையச் சேவை இருந்தால், தங்களுடைய பிள்ளைகள் பார்க்கக் கூடாதப் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போவார்கள் என்கிற அச்சம் அவர்களிடம் மேக மூட்டங்களாய்ப் மேலோங்கி நிற்கிறது. அதனால் தங்கள் வீடுகளில் இணையச் சேவையை இணைப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்.

இப்போது மட்டும் என்ன. ஒரு பக்கம் அணை போடும் போது இன்னொரு பக்கம் அது உடைத்துக் கொண்டு போகிறது அல்லவா. பத்திரமாகப் பாதுகாக்கும் அரணைப் போடும் போது தான் வெள்ளம் பெயர்ந்து கொண்டு வந்து போய் உடைக்கிறது. ஆக அந்த மாதிரி, பிள்ளைகளில் பலர் வாங்கிச் சாப்பிடக் கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு போய் இணைய கேளிக்கை மையங்களில் இரைத்து வருகின்றனர்.

இணையத்தில் தேவையற்ற சலனச் செய்திகள்

இப்படி நான் சொல்லவில்லை. Survey Research Malaysia ஆய்வுகள் சொல்கின்றன. இருபது வயதுகளில் தெரிந்து கொள்ள வேண்டியதைப் பன்னிரண்டு வயதுகளில் தெரிந்து கொண்டு வருகின்றனர். திசை மாறிப் போகும் பறவைகளைச் சரியான திசைக்குத் திருப்ப வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

ஆக, அந்த மாதிரியான அச்சம் மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் இல்லை. மலேசியர்கள் அனைவருக்குமே அந்தக் காய்ச்சல் அடிக்கிறது. ஏன் உலகம் முழுமையுமே அந்தக் காய்ச்சல். அதற்காக இணையத்தைப் பயன் படுத்தாமல் இருக்க முடியுமா. சொல்லுங்கள்.

தேவையற்ற சலனச் செய்திகள், சபலச் சங்கதிகள் இணையத்தில் கோடிக் கணக்கில் குட்டிப் போட்டு வாரிசுகளை எடுத்து வைத்து இருக்கின்றன. அந்தக் கக்கல் கழிசல்கள் எல்லாம் ஊழி ஊழி காலத்திற்கும் குட்டிகளைப் போடும். பேரன் பேத்திகளை எடுக்கும். அவர்களுக்குக் காப்புறுதி, காப்புரிமை எல்லாம் எடுத்தும் வைக்கும்.

ஆக, மனிதன் சாகும் வரை பார்த்து முடிக்க முடியாத அட்டகாசமானப் படங்கள் அங்கே இப்போது சர்வ லோக ராமாயணங்களைப் பாடிக் கொண்டு இருக்கின்றன. அதற்காக இணையத்தைப் பயன்படுத்துவதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வது என்பது இருக்கிறதே அது நடக்கிற காரியம் இல்லை.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகள்

ஆனால், அதைத் தடுக்க பல தடுப்பு முறைகள் உள்ளன. Parental Control, Family Safety Filter, Kids Care, Kids Safety, Internet Safety, Net Nanny, My Child Safety என்று ஆயிரக் கணக்கான நிரலிகள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. இலவசமாகவும் கிடைக்கின்றன.


அவற்றில் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாமே. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கலாமே. குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு உத்தரவாதம் கொடுக்கலாமே. [6]

மலேசியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 28.4 விழுக்காட்டினருக்குச் சொந்தமான வலைப்பதிவுகள் உள்ளன. மேலும் 39.6 விழுக்காட்டினர் வலைப்பதிவுகள் உருவாக்கிக் கொள்ள ஆர்வமும் தெரிவித்து உள்ளனர்.

மலேசியாவில் எத்தனைத் தமிழர்கள் வலைபதிவுகளை வைத்துள்ளனர்; அவர்கள் எதைப் பற்றி அதிகமாகப் பதிவுகள் செய்கின்றனர் எனும் ஓர் ஆய்வு செய்யப் பட வேண்டும். அவர்களை ஊக்குவிக்க என்ன என்ன செய்யலாம் எனும் திட்டங்களை முறைப்படி வகுக்க வேண்டும்.


மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் சங்கம்

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரையும் ஒன்று இணைக்கும் ஒரு கழகம் உருவாக்கப் பட வேண்டும் என்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை. சுப.நற்குணன் எனும் நாடறிந்த வலைப்பதிவர் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவில் வலைப்பதிவர்களை ஒன்று சேர்த்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார். பட்டறைகளையும் நடத்தி வருகிறார். அவருடைய சொந்தச் செல்விலேயே இதை எல்லாம் செய்து வருகிறார் என்பதையும் அறிந்தேன்.

Malaysian Tamil Bloggers எனும் ஒரு பேச்சரங்கம் ‘பேஸ்புக்’ எனும் சமூக இணையத் தளத்தில் உருவாக்கப் பட்டது. அதற்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

மலேசியத் தமிழ் வலைப் பதிவர்கள் கழகம் உருவாக்கப் படுமானால் அந்தக் கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் செயல் படுவது நல்லது. வலைப் பதிவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த வண்ணம் இருக்க வேண்டும்.

உலகில் 146 மில்லியன் வலைப்பதிவர்கள்

பத்திரிகையில், வார இதழ்களில் எழுதுபவர்கள் மட்டும் எழுத்தாளர்கள் அல்ல. இணையத்தில் எழுதுபவர்களும் எழுத்தாளர்கள் தான் எனும் ஓர் அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.    

உலகில் 146 மில்லியன் வலைப்பதிவர்கள் உள்ளனர். இவர்களில் 84 விழுக்காட்டினர் பெண்கள். மற்ற 16 விழுக்காட்டினர் மட்டுமே ஆண்கள் என்பது ஓர் ஆச்சரியமான செய்தி. மலேசியாவில் இரண்டு மில்லியன் வலைப் பதிவர்கள் உள்ளனர். அதாவது இணையத்தைப் பயன் படுத்துபவர்களில் 12 விழுக்காட்டினர் வலைப் பதிவர்கள். இவர்களில் தமிழ் வலைப் பதிவர்கள் ஏறக்குறைய 1500 லிருந்து 2000 பேர் வரை மட்டுமே இருக்க முடியும். நமக்குச் சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் தான் தொடர்ந்தால் போல தங்கள் படைப்புகளை நிரந்தரமாக இணையத்தில் பதிவு செய்கின்றனர்.

அனாதையாக விடப்படும் வலைப்பதிவுகள்

சில மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அப்படியே அனாதையாகவும் ஆதரவற்ற நிலையிலும் விடப் பட்டு கிடக்கின்றன. அவ்வாறு தொடர்ந்து வலைப் பதிவுகளில் எழுதி வருபவர்களில் ஒரு சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறேன். எல்லோருடைய பெயர்களையும் தொகுக்க முடியவில்லை.

அக்கினி
அப்பண்ணா 
திருமூர்த்தி சுப்பிரமணியம்
அகஸ்தியா மூர்த்தி
தமிழ்மாறன்
பாலகோபாலன் நம்பியார்  
அப்துல் சலிகான்
சுபாசினி
புவனேஸ்வரி
அனந்தன்
சித்தன்
மோகன் சுப்ரமணியம்
ஆனந்தன் நிதி
சித்திரப் பாவை
சுரேசு காளியப்பன்
இல.வாசுதேவன்
கே.பாலமுருகன்
சி.ம.இளந்தமிழ்
எம்.கே. சுந்தரம்
விகடகவி
ஜோசப் செபாஸ்டியன்
கு.தீபன்
கோவி.மதிவரன்
குமாரி. உசா
குமாரி அருள்மொழி
ஆதி
ரமணி ராஜகோபால்
குமாரி சுகாந்தினி
தமிழரண்
மனோகரன் கிருஷ்ணன்
கென்
பரதன்
பீட்டர் ஜான்சன்
சதீசு
குமாரி துர்கா
குமாரி அனுராதா
ச‌ந்துரு
இராசா
ஆய்தன்
சுப.நற்குணன்
விக்னேஸ்வரன்
சிவனேஸ்
சுராஜ் சந்தோஷ்
வினோத்குமார்
என்.வி சுப்பாராவ்
சுரேஷ்
குமரன் மாரிமுத்து
இரவீந்திரன் கே.பால்
தமிழ்மாறன்
தமிழ் செல்வன்
பிரான்சிஸ் சைமன்
தமிழினியன்
குமரவேல்
தோழி
தர்மதாசன்
முகிலன்
தேசிகன்
து.பவனேசுவரி
சேகர்
குமாரி சுசீலா நாகப்பன்
ந.பச்சைபாலன்
மணிமொழி 
ஏ.தேவராஜன்
ம.நவீன்
யுவராஜன்
இளங்குமரன்
மதியழகன்
குமரவேல்
குமாரி வியா
மலேசிய மு.வேலன்
இர.திருச்செல்வம்,
மணியரசன் முனியாண்டி
மன்னர் மன்னன்
பெ.இராஜேந்திரன்
கிருஷ்ணமூர்த்தி
மனோகரன்
சதீஷ் குமார்
தமிழ்ச்செல்வன்
மஹாத்மன்
பா..சிவம்
டாக்டர் மா.சண்முகசிவா
முபாரக் அலி
ஏ.எஸ் பிரான்சிஸ்
சுபாசினி திரெம்மல்
மேஜர் முனுசாமி
யோகி
கமலாதேவி அரவிந்தன்

மற்றும் பலரின் பெயர்கள் விடுபட்டுப் போய் இருக்கலாம். [7]



சுப.நற்குணன்

மலேசிய வலைப்பதிவு உலகில் முடிசூடா மன்னனாக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல. அவர்தான் சுப.நற்குணன். எண்ணற்ற வலைப்பதிவுகளை எண்ணற்றக் களஞ்சியத் தகவல்களுடன் நடத்தி வருகிறார். விக்கிபீடியாவின் ஆசிரியர்களில் ஒருவர். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கத்தை உருவாக்கியும் வருகிறார். அவருடைய முயற்சிகள் வெற்றி பெற நம்முடைய வாழ்த்துகள்.

திருத்தமிழ் என்பது அவருடைய வலைப்பதிவு. ஒரு கருத்தை மேலோட்டமாக பார்க்காமல், மேலும் மேலும் ஆராய்ந்து, ஆய்ந்து அதன் ஊற்றுக் கண்ணைத் தோண்டுகிறது இந்த வலைப்பதிவு. தெளிவான ஊற்று நீரைப்போல எழுதி வருகிறார் சுப.நற்குணன். [8]


மலேசியாவில் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவைத் தொடங்கிய பெருமை குளுவாங்கைச் சேர்ந்த வாசுதேவன் அவர்களைச் சாரும். இவர் 2004 ஆம் ஆண்டில் வலைப்பதிவைத் தொடங்கினார். விவேகம் எனும் வலைப்பதிவை நடத்தி வருகிறார். [9]


மலேசியாவின் முதல் தமிழ் வலைப்பதிவு

வாசுதேவன் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஏழாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். 2004-ஆம் ஆண்டு தொடங்கி பல மலேசிய மாநிலங்களில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளில் வலைப்பூ பயிலரங்குகளை நடத்தியுள்ளார். உலகத் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டியான ‘தமிழ்மணம் அவரை நட்சத்திரப் பதிவராகக் கௌரவித்தது.

முத்தெழிலன். உலகம் போற்றும் முரசு அஞ்சலை உருவாக்கியவர். உலகத் தமிழ் மொழிக்கு இணை மதியையும் இணைக் கதிரையும் வழங்கியவர். தமிழில் யூனிகோடு முறையை அமல் படுத்த அல்லும் பகலும் உழைத்தவர். உலக இணையச் சம்மேளனத்தை உருவாக்கியத் தமிழ்ப் பற்றாளர்களில் ஒருவர். அரிசிக்கும் சீனிக்கும் விளம்பரம் தேவை இல்லை என்று சொல்வார்கள். அதே போல இவருக்கு விளம்பரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். [10]


அடுத்து, மலேசியத் தமிழ் இணைய உலகின் இனிய நண்பர். தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல ஓர் இலக்கியகர்த்தா. அவர் ஒரு  நாவலாசிரியர், திறனாய்வாளர், ஊடகவியலர், மின்தமிழ் படைப்பாளி, ரெ.கா என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப் படும் பேராசிரியர் ரெ.கார்த்திகேசு. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நெடுநாளைய உறுப்பினர். பல பதவிகள் வகித்தவர், இன்று வரை தொடர்ந்து ஆதரவு தந்து பல மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்த உதவி செய்து வருகிறார். மலேசியாவிலிருந்து ரெ.கா அஞ்சல் எனும் இணையத் தளத்தை நடத்தி வருகிறார். [11]


அகத்தியர் மடலாடும் குழு

டாக்டர் ஜெயபாரதி இணையத்தில் நன்கு அறியப்பட்டவர். "அகத்தியர்" என்னும் மடலாடும் குழுவை அமைத்து நடத்தி வருகிறார். தமிழ் உலகம் அறிந்த அறிஞர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். [12]


தமிழ்க்குயில் டாக்டர் கலியபெருமாள் அவர்களும் ஓர் இணையத்தளம் வைத்து இருக்கிறார். அவரைப் பற்றிய முழு விவரங்களும் http://kkaliaperumal.tripod.com/ எனும் இணையத் தளத்தில் கிடைக்கும். ஆனால், அனைத்தும் ஆங்கில மொழியில் உள்ளன.

மலேசியாவில் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக, அவர்களில் சிறந்த வலைப் பதிவர்களைத் தேர்வு செய்து விருது வழங்க  ம.இ.கா. 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. நல்ல ஆரோக்கியமான முடிவு. அந்த முயற்சிக்கு மீண்டும் உயிர்ப்பு கொடுத்தால் மலேசியாவில் தமிழ் வலைப்பதிவுகள் சீரும் சிறப்பும் பெறும். தமிழ்மொழியின் செம்மொழித் தன்மையும் உயர்வு பெறும். 

இந்தக் கட்டத்தில் கிள்ளான் குமரன் மாரிமுத்து எனும் வலைப் பதிவரைப் பற்றி சொல்ல வேண்டும். இவர் நாட்டின் தலைசிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். எனக்கு வலைப்பதிவுகளின் தாக்கத்தை ஏற்படுத்தியவர். [11.1]  1978 ஆம் ஆண்டு கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் என்னுடைய மாணவராக இருந்தவர். ’மாடப்புறா’ வலைப்பதிவை நடத்தி வருகிறார்.


கோப்பெங் விக்னேஸ்வரன் என்பவரும் நாட்டின் தலைசிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். ஒரு புத்தகப் புழு. அவர் எழுத்துகளில் அருமையான கருத்து முத்துகள் சிதறிக் கிடக்கும். அவருடையது ’வாழ்க்கைப் பயணம்’ எனும் வலைப்பதிவு. [11.2]


மலேசியாவின் சில முக்கியமான தமிழ் வலைப் பதிவுகள், இணையத் தளங்களின் பெயர்கள்:


பெயர்
இணைய முகவரி
1
.நம்பி நனவுகள்
2
அகிலன்
3
அஞ்சடி
4
அரங்கேற்றம்
5
அரண் பிரசன்னா
6
அரிச்சுவடி
7
அருட்பெரும் ஜோதி
8
ஆய்தன்
9
இராசா முகமது  ரஃபீடா
10
இராமக்கிருஷ்ணன்
11
இளந்தமிழன்
12
இளன்
13
உயிர்!
14
உரிமைப் போர்
15
என் உலகம்
16
என் எண்ணங்கள்
17
என் பயணம்
18
என்.வி.சுப்பராவ்
19
எஸ்.பி.எம்.இலக்கியம்
20
ஓலைச்சுவடி
21
கணைகள்
22
கயல்விழி
23
கருத்து மேடை
24
கருத்து மேடை
25
கவிச்சோலை
26
கவித்தமிழ்
27
காலச் சிறகுகள்
28
கிருஷ்ணா
29
கே.பாலமுருகன்
30
சித்தன் வழி
31
சிந்தனைப் பதிவுகள்
32
சில்லென்று ஒருமலேசியா
33
சுவர்ணபூமி
34
செம்மண் தூரிகை
35
தமிழ் ஆசிரியர்
36
தமிழ் ஆலயம்
37
தமிழ் இயக்கம்
38
தமிழ் ஊசி
39
தமிழ் எழுத்துச் சீர்மை
40
தமிழ் மணம் (DAP)
41
தமிழ் மருதம்
42
தமிழ் மலர்
43
தமிழ் வயல்
44
தமிழ்க் கவசம்
45
தமிழ்க் கவிதை
46
தமிழ்ச் சீர்மை
47
தமிழ்ச் சுவை
48
தமிழ்ப் பூங்கா
49
தமிழியல் ஆய்வுக்களம்
50
தமிழினியன்
51
தமிழுயிர்
52
தமிழோடு தமிழாக
53
தமிழோடு நேசம்
54
தாய்மொழி
55
திருநெறி
56
திருமன்றில்
57
தேசிகன்
58
தேடுபவன்
59
தேமதுர தமிழோசை
60
தொடரும் நினைவுகள்
61
ந.பச்சைபாலன்
62
நளபாகம்
63
நாச்சியார்
64
நினைவெல்லாம்
65
நீலவிழி
66
பாலமுருகன் கவிதைகள்
67
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
68
புனிதா
69
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
70
மலேசியத் தமிழ் எழுத்துலகம்
71
மலேசியத் தமிழர் நிலைமை
72
மலேசியத் தமிழன்
73
மலேசியத் திராவிடர் கழகம்
74
மலேசியாவிலிருந்து ரெ.கா
75
மனவளம்
76
மனிதம்
77
மனோவியம்
78
மாடப்புறா
79
முடிவிலானின் எழுத்துகள்
80
மெல்லினம்
81
மை பிரண்டு
82
யுவராஜன்
83
ரமணி ராஜகோபால்
84
ராட்டினம்
85
ராஜபாட்டை
86
வல்லினம்
87
வளமை
88
வாழ்க்கைச் சித்திரம்
89
வாழ்க்கைப் பயணம்
90
விழிப்படலங்கள்
91
விழியன்
92
வெட்டிப்பயல்
93
வேதா
94
வேய்ங்குழல்
95
ஷியாம்




கிருஷ்ணா ராஜ் மோகன்

‘மலேசியத் தமிழ் எழுத்துலகம்’ எனும் இணையத்தளத்தை கிருஷ்ணா ராஜ் மோகன் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் முதன்முதலில் உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தத் தளம் இப்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வலைத் தளமாக மறுசீரமைப்புச் செய்யப் பட்டுள்ளது. அரும் முயற்சி எடுத்துக் கொண்ட கிருஷ்ணா ராஜ் மோகனுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். நன்றிகள் கிருஷ்ணா ராஜ் மோகன்.

மலேசியத் திராவிடர் கழகம் தனக்கென்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் செயல் படத் தொடங்கி உள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அமைக்க அடிகோலிய ஈழத்துத் தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தலைமைப் பதிவாகக் கொண்டு தனது கன்னி முயற்சியைத் தொடங்கி உள்ளது. [13]


அடுத்து பல்லூடகங்களைப் பற்றிப் பார்ப்போம். இன்றைய நாளில் உலகம் முழுமையும் 15 தமிழ் நாளிதழ்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. [14] அவற்றில் மலேசியாவில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள் மட்டும் மூன்று. தமிழ் நேசன், மக்கள் ஓசை, மலேசிய நண்பன். இந்த நாளிதழ்கள் மூன்றுமே சொந்தமாக இணையத் தளங்களை வைத்துள்ளன.



பராமரிப்பு இலக்கணத்தில் சற்றே சறுக்கல்கள்

ஒரே ஒரு நாளிதழைத் தவிர மற்றவை பராமரிப்பு இலக்கணத்தில் சற்றே சறுக்கல்களைக் கண்டு வருகின்றன என்று ஓர் ஆய்வாளர் சொல்கிறார். அது அவருடைய கருத்து. நம்முடைய கருத்து வேறு மாதிரியாக வருகின்றது.

முதலில் மலேசிய நாளிதழ்களின் இணைய முயற்சிகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லுவோம். குறைகளைப் பெரிது படுத்தாமல் நிறைவுகளைப் பார்ப்போம்.

தமிழில் இணையச் செய்திகளைச் சந்தா செலுத்திப் படிக்கும் அளவிற்கு நம்முடைய வாசகர்களின் இணைய விழிப்புணர்வுகள் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை என்பதே நம்முடைய கருத்து. அதனால் பராமரிப்பு இலக்கணத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

இணையத்தை நம்பி வாழும் இணைய நாளிதழ்கள்

இணையத் தளங்களை நடத்தும் தமிழ் நாளிதழ்கள் இணையம் மூலமாகப் பொது மக்களைச் சந்தாதாரர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா என்பது ஒரு பெரிய கேள்வி. மலேசியாவில் நம் இனத்தவரின் எண்ணிக்கையை முதலில் பார்க்க வேண்டும். அதில் எத்தனைப் பேர் காசு கொடுத்து தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படிக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தோசை சுடுவதற்கே மாவு இல்லை. அப்புறம் ஏன்  சாப்பிடுவதற்குச் சாம்பார் இல்லையே என்று கவலைப் பட வேண்டும்?  

முழுக்க முழுக்க இணையத்தை நம்பியே வாழும் இணைய நாளிதழ்களான Indian Malaysian Online, Malaysia Kini, Malaysia Insider, Malaysian Today, Malaysian Mirror, Free Media, Merdeka Review, Free Malaysia Today, The Edge போன்றவற்றில் ‘மலேசியகினி’ எனும் இணைய நாளிதழ் மட்டுமே தமிழில் ‘மலேசிய இன்று’ [15] எனும் தமிழ்ப் பகுதியை இன்றும் வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழின் எழுத்துக்கள் உணர்வாகட்டும். கருத்துக்கள் வித்தாகட்டும்.


Free Malaysia Today எனும் இணைய நாளிதழ் தன்னுடைய தமிழ்ப் பகுதியை அண்மையில் நிறுத்திக் கொண்டது.

மலையாள மொழியில் இணைய நாளிதழ்

மலையாள மொழியில் Manorama Online எனும் இணைய நாளிதழ் மலேசியாவில் வெளி வந்து கொண்டு இருக்கிறது. மலையாளிகள் ஒரு சிறுபான்மைச் சகோதரர்கள். இருந்தாலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட ஓர் இணைய நாளிதழ் இருப்பது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

Indian Malaysian Online எனும் மலேசிய இந்திய இணைய நாளிதழ் 25 உலக மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழில் மட்டும் வழங்கவில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி. கவனத்தில் படும் செய்தி.

இணைய நாளிதழ்களை நடத்துவது என்பது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல. எடுத்தேன், எழுதினேன், படுத்தேன், கனவு கண்டேன் என்கிற கதை இல்லை. மலேசிய நாட்டில் ஆங்கில மொழி படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களிடையே கணினியைப் பயன் படுத்துபவர்களும் அதிகம். அதில் இணையத்தை இணைத்துக் கொள்பவர்களும் அதிகம்.

இருந்தாலும் அவர்களை நம்பி திறக்கப்பட்ட பல ஆங்கில இணைய நாளிதழ்கள் பல மூட்டைக் கட்டிக் கொண்டு காசி ராமேஸ்வரம் போய்ச் சேர்ந்து விட்டன. அப்படி இருக்கும் போது தமிழ் நாளிதழ்களிடம் இருந்து இணைய நாளிதழ்ச் சேவையை எதிர்ப்பார்ப்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.    

ஆனந்த பைரவி ராகத்துடன் திறப்பு விழா

நம் நாட்டில் Nut Graph எனும் ஓர் இணைய நாளிதழ் ஆனந்த பைரவி ராகத்துடன் திறப்பு விழா செய்தது. மலேசியாவில் நல்ல அனுபவம் பெற்ற பத்திரிகையாளர்களைக் கொண்டு பணிகளைத் தொடங்கியது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா.  சில மாதங்களில் காம்போதி ராகத்துடன் மூடு விழா செய்தது. வேதனையான விஷயம்.

மறுபடியும் சென்ற ஜனவரி 10 ஆம் தேதி மீண்டும் உயிர்ப் பெற்று வந்துள்ளது. ஆனால், நாளிதழாக அல்ல. வாராந்திரச் செய்தித் தாளாக. [16] அதுவும் எத்தனை நாளைக்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் திரிகிறார்கள். ஆங்கில ஊடகங்களிலும் நவரசமான வயிற்றெரிச்சல்கள் உள்ளன. அவற்றுக்கு விலாசம் இல்லை.


ஓர் இணைய நாளிதழை நடத்த நாள் ஒன்றுக்கு RM 3500 தேவைப் படுகிறது. மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து ஒரு இலட்சம் ரிங்கிட் வரை தேவை. தமிழ் நாளிதழ்கள் அவ்வளவு பணத்தைச் செலவு செய்து இணைய நாளிதழை நடத்த முடியுமா?

வணக்கம் மலேசியா

இந்தக் கட்டத்தில் ’வணக்கம் மலேசியா’ [17] இணைய நாளிதழை நாம் மறந்து விடக் கூடாது. சமூகம், வணிகம், தொழில்நுட்பம், சினிமா,



விளையாட்டு, கல்வி, அறிவியல் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகளைச் சிறப்பான முறையில் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறது. கை எடுத்துக் கும்பிடப்பட வேண்டிய இணைய நாளிதழ். ஆதரவு கொடுப்போம். வாய்ப்பு கிடைத்தால் இந்த இணையத் தளத்திற்குச் செல்ல மறந்து விடாதீர்கள். மிகவும் அருமையான இணையச் செய்தித் தாள்.

செம்பருத்தி

முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சிக் குரலாக விளங்கும் ‘செம்பருத்தி’ [18] இணைய நாளிதழை மறந்து விட முடியுமா.



உரிமைக்காகப் போராடும்  தமிழர்களின் எழுச்சிக் குரலாக விளங்குகின்றது. சிறுபான்மை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவது. அந்தச் சிறுபான்மை மக்கள் யார் என்று உங்களுக்கும் தெரியும். பல இன்னல்கள்  வந்த போதும் தமிழ் மக்களுக்காகத் தன்னுடைய  பணியை 12 வருடங்கள் இடை விடாமல்  செய்து வருகிறது.

மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்றுள்ளது. செம்பருத்தி தனது பணியினை விரிவுபடுத்தும் வகையில் இணையத் தளத்தையும் ஆரம்பித்துள்ளது. சுடச் சுடச் செய்திகளைத் தந்து படிப்பவர்களைச் சுண்டி இழுக்கிறது.

வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம்

வானம் வசப்படுமே எனும் சொல் அடை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களுக்குப் பொருந்தும். மலேசியத் தமிழ் இணைய உலகில் சிறப்புக்குரிய சேவைகளைச் செய்து வருகிறார்.

கால் ஊன்றிய மலாயா மண்ணில் தமிழை வேரூன்ற வைத்து, பிழைக்க வந்த பூமியில் தமிழையும் தழைக்கச் செய்திட்ட,
மலேசியத் தமிழர்களின் இலக்கியத்தை,
அந்த இலக்கியத்தினூடே இழைந்தோடும் வாழ்க்கையை… என்று


வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம் [19]
எனும் இணையத் தொடரில் பயணம் செய்கின்றார். அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பத்திரங்கள். எழுத்துலகச் சித்திரங்கள்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களே உங்கள் எழுத்துகளை அறிமுகம் செய்யுங்கள் என்று ஓர் இணையத்தளம் உங்களை எல்லாம் அழைக்கின்றது. இப்படி ஓர் இணையத்தளம் இருப்பது பலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது. அறிமுகம் அதிகம் இல்லாத ஓர் அருமையான தமிழ்த் தளம். மலேசியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களை அகர வரிசையில் பட்டியலிட்டு அடையாளம் காட்டுகிறது. உலகப் படைப்பாளிகளை இணைக்கும் தளம்.[19.1]


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள நூல்களின் விவரங்கள் அடங்கிய இணையத் தளம் விருபா. உலகின் 25 நாடுகளில் வாழும் 1331 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் இந்தத் தளத்தில் கிடைக்கப் பெறுகின்றன. செம்மையான பராமரிப்புகள் பரவி நிற்கும் அருமையான இணையத் தளம். [19.2]


அடுத்து, ’நூலகம் எனும் இணையத் தளம். இலங்கையில் இருந்து வெளி வருகிறது. உலகம் முழுமையும் பரந்து கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களின் அறிவுச் சேகரங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் கிடைக்கும் ஓர் அறப்பணியில் ஈடுபட்டுள்ளது. போற்றுதலுக்கு உரிய தன்னார்வ முயற்சி. இலாப நோக்கம் அற்ற நல்ல ஒரு தமிழ்த் தொண்டு. ஆக மொத்தம் 6891 தமிழ் நூல்கள் மின்னூல்களாக வடிவம் ஆக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான நூல்களைப் பதிவிறக்கம் செய்யலாம். [19.3] நம் நாட்டின் என்.செல்வராஜா, .ஜெயபாலன் ஆகிய இருவரும் இணைந்து எழுதியமலேசியத் தமிழ் இலக்கியம் எனும் ஆய்வு நூல் 2003 ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. ஒரு பசுமையான படைப்பு. இலவசமாக இங்கே கிடைப்பது ஓர் ஆச்சரியமான செய்தி.


அடுத்து,மலேசியத் தமிழர் தந்த அருந்தமிழ்ச் சொற்கள். மலேசியாவின் தோட்டப்புறத் தமிழ் மக்களின் வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஓர் இணையத் தளம். ஒட்டுப் பால், கோட்டுப் பால், கட்டிப்பால், ஒட்டுக்கன்று, தவரணை போன்ற சொற்களைக் கேட்டு எத்தனையோ மாமாங்கங்கள் ஆகின்றன. பழமையான ரீங்காரங்கள் புதுமையான சிருங்காரங்கள். இந்தத் தளத்திற்குப் போனதும் என் மனதில் பசுமையான தோட்டப்புற நினைவுகள் வந்து ரொம்பவும் தொல்லை செய்து விட்டன.  தயவு செய்து இந்தத் தளத்தைப் போய்ப் பாருங்கள்[19.4]

மலேசிய வார, மாத இதழ்கள்
மலேசிய வார, மாத இதழ்களும் இணையத்தில் தமிழ்ச் சேவைகளைச் செய்து வருகின்றன. மயில் உமா பதிப்பகம், குயில் ஜெயபக்தி, நயனம், தென்றல், இளந்தளிர் போன்றவை தமிழில் இணையச் சேவைகளை நல்ல முறையில் இன்றைய நாள் வரை நலமாக நடத்தி வருகின்றன.

அஸ்ட்ரோ ஒளிபரப்பு, மின்னல் எப்.எம், டி.எச்.ஆர் ராகா போன்றவற்றின் இணையச் சேவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது. அவை முற்றிலும் கேளிக்கை அம்சங்கள் கொண்டவையாக இருந்தாலும் அவை தமிழ் மொழிக்குச் செய்து வரும் சிறப்புகளைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். தில்லாலங்கடி பாடல்கள் ஒருபுறம் இருக்கட்டும். திக்கெட்டும் பரவும் செய்திகளும் தகவல்களும் இருக்கின்றனவே… ஆஹா… இமயத்தின் சிகரத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வட்டார அளவிலும் மாநில அளவிலும் இணையத் தளங்களையும் வலைப் பதிவுகளையும் உருவாக்கிச் செயல் பட்டு வருகின்றனர். அவற்றின் விவரங்கள்:

1
பொன் பாவலர் மன்றம்
2
பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்
3
மகராஜியின் செய்தி
4
தமிழர் வணிகம்
5
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்
6
மலேசியத் திராவிடர் கழகம்


பொதுவாக, மலேசியத் தமிழர்களிடையே இணையப் பயன்பாடு ஒரு சிறப்பான இலக்கை இன்னும் அடையவில்லை. இணையப் பாதுகாப்பு அம்சங்கள், சேவைத் தொடர்பான தடங்கல்கள், கணினியையும் தொலைபேசியையும் பராமரிக்க வேண்டிய சுமைகள் போன்றவை அவர்களுக்குப் பலகீனங்களாக அமைகின்றன. மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மலேசியர்களுக்குமே அவை தடை போடும் அணைக் கற்கள்.


TM Net, Maxis, Digi, Celcom, Redtone, YES, Wimax, Jaring போன்றவை மலேசியாவில் இணையச் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் ஆகும். [20] இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின் படி மலேசியாவில் 695,000 பேர் சந்தா செலுத்தி இணையச் சேவைகளைப் பெற்று வருகின்றனர். இவர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் எனும் விவரங்கள் எதுவும் கொடுக்கப்பட வில்லை.


கணினி யுகத்தில் தலைமுறை இடைவெளி

கடைசியாக ஒரு முக்கியமான தகவல். தலைமுறை இடைவெளி என்பதை ஆங்கிலத்தில் Generation Gap என்று அழைப்பார்கள். இந்தத் தலைமுறை இடைவெளி கணினி யுகத்தில் இளைஞர்களையும் முதியவர்களையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. இணைய உலகில் இளைஞர்கள் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கின்றனர். முதியத் தலைமுறையினர் எழுத்துகளின் சிகரத்தில் வாழ்ந்தாலும் இணைய உலகில் தடுமாறிப் போய் நிற்கின்றனர்.

கணினி என்று சொன்னதுமே கலங்கிப் போய்க் கவலை கொள்கின்றனர். கணினி தங்களுக்குத் தேவை இல்லை என்றும் நினைக்கின்றனர். தங்களுடைய எழுத்துகளைப் பேனா பேப்பரில் எழுதி முடித்தாலே போதும் என்று நினைப்பதை அவர்கள் சன்னம் சன்னமாக மாற்ற வேண்டும். கணினியைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்ப காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது இது ஏன் வந்து தொலைத்தது. இதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வயதை ஒரு காரணம் காட்டி சாக்குப் போக்குச் சொல்வதும் தப்பு.

உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். என்னுடைய 50 ஆவது வயதில் தான் பிள்ளைகளிடம் இருந்து கணினி வித்தைகளைக் கற்றுக் கொண்டேன். பத்தே பத்து ஆண்டுகளில் அனைத்துலக நிலையில் பல கணினித் தேர்வுகளை எழுதினேன். தேர்ச்சியும் பெற்றேன். சில பட்டங்களையும் பெற்றேன்.

சுழலியை எப்படி நகர்த்துவது

இதற்கு எல்லாம் காரணம் யார்? என் பிள்ளைகள் தான். தெரியாததை அவர்களிடம் இருந்து கூச்சம் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். அவர்களிடம் இருந்து ஏச்சுகள் பேச்சுகள் பல முறை வாங்கி இருக்கிறேன். ஆனால், மனம் தளரவில்லை. தலைமுறை இடைவெளியை இறுக்கிப் பிடித்து நெரிக்க முடிந்தது.

சுழலியை எப்படி நகர்த்துவது என்று என் மகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லிக் கொடுத்தார். அதுதான் கணினியில் என்னுடைய முதல் பாடம். அந்தப் பாடத்தை ஒரு தெய்வீகக் கீதமாக எடுத்துக் கொண்டேன். இப்போது பத்து பேருக்கு முன்னால் கணினியைப் பற்றிய வரலாற்றையே பேச வைத்து இருக்கிறது. பிள்ளைகளுக்கே இப்போது கணினித் துறையின் ஆலோசகராக இருக்கின்றேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தலைமுறை இடைவெளி என்ன ஆனது சொல்லுங்கள், சகோதர சகோதரிகளே.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்குகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கணினிப் பயிலரங்குகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அண்மையில், பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு லூமுட் தெலுக் பாத்தேக்கில் இரண்டு நாள் கணினிப் பயிலரங்கை நடத்தினேன். அது ஓர் இனிமையான அனுபவம்.

அதைப் போல தேசிய அளவிலும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கணினிப் பயிலரங்குகளை நடத்த வேண்டும். அதனால் பல எழுத்தாளர்கள் நன்மை அடைய வேண்டும். கணினித் துறையில் அவர்கள் நன்றாகச் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கின்றேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஊழி ஊழி காலத்திற்கும் அடியேன் கடமைப் பட்டவன். ஏன் என்றால் நான் ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளன். நன்றி.

References:
[2] http://www.internetworldstats.com/asia.htm#my
Malaysia Internet and Telecommunications
Internet usage, population, telecom information for Malaysia.

Notations
[1]Dr. Sankaran Ramanathan is an internationally recognized Asian communications scholar and trainer. After serving at Universiti Teknologi MARA (UiTM) for 30 years, he served for 5 years as Head, Special Projects, Asian Media Information and Communications Centre (AMIC), Nanyang Technological University, Singapore.