18 ஜூன் 2014

தமிழ்த் தட்டச்சுப் பலகை

மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா (குறும் செய்தி 21.12.2013)
கே: தமிழில் Key Board தட்டச்சு, கோலாலம்பூரில் எங்கே கிடைக்கும்?




ப: இப்போது எல்லாம் தமிழில் தட்டச்சு வெளி வருவது இல்லை. நிறுத்தி விட்டார்கள். இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. அதனால் Phonetics எனும் ஒலியியல் முறையைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம். 

தமிழ்த் தட்டச்சுப் பலகையை தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் ஒலியியல் விசைப் பலகைகள்  ஆகும்.

இருந்தாலும் http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html எனும் இடத்தில் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கிடைக்கிறது. அந்த முகவரிக்குப் போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். 


இது ஒரு On Screen Keyboard. அப்படி என்றால்  தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம். தமிழில் 'திரை விசைப் பலகை'  என்று சொல்லலாம். ‘மவுஸ்’ எனும் சுழலியைக் கொண்டு தட்டச்சு செய்யலாம்.

இதே போல ஓர் ஆங்கிலத்  தட்டச்சுப் பலகையும் உங்கள் கணினியில் இருக்கிறது. Start >> Run >> osk என்று தட்டுங்கள். அந்தத் தட்டச்சுப்  பலகை முகப்புத் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். 


இன்னும் ஒரு விஷயம். ஒலியியல் விசைப் பலகை, திரை விசைப் பலகை எனும் அந்த இரண்டு தமிழ்க் கணினிச் சொற்களையும் அடியேன் உருவாக்கி விக்கிப்பீடியா கலைச் சொல்லகராதிக்கு வழங்கி இருக்கிறேன். செரிவுகளும் சரிவுகளும்  இருக்கலாம். சரி செய்வது உங்கள் கடமை.

நோக்கியா கைப்பேசி

மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

எம்.அன்பரசன், ஈப்போ (குறும் செய்தி 18.12.2013)

கே: சார், நான் ஒரு நோக்கியா கைப்பேசியை நண்பரிடம் இருந்து RM450-க்கு அண்மையில் வாங்கினேன். அந்தக் கைப்பேசி நவம்பர் 2013-இல் வெளி வந்ததாக நண்பர் சொன்னார். கடைக்காரரிடம் கேட்டுப் பார்த்ததில் அக்டோபர் 2013-இல் வெளி வந்தது என்று கடைக்காரர் சொல்கிறார். என் நண்பர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன்? இரண்டாம் தாரமாக வாங்கியது தப்பாகி விட்டது.


ப: தரம் என்பது வேறு. தாரம் என்பது வேறு. தாரம் என்றால் மனைவி. கைப்பேசியில் இரண்டாம் தாரம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரிகிறது. பரவாயில்லை. அந்தக் கைப்பேசி எந்த மாடலைச் சேர்ந்தது என்று சொல்லவில்லை. அதனால் அதன் விலை விவரம் எனக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் உங்கள் நண்பரை நம்பித் தானே கொடுக்கல் வாங்கலில் இறங்கினீர்கள். நம்பிக்கைதானே அடிப்படை காரணம். அக்டோபர் பத்தாவது மாதத்திற்கும், நவம்பர் பதினோராவது மாதத்திற்கும் முப்பது நாட்கள் தானே ஐயா வித்தியாசம். ஆக, அப்படி என்னங்க இதில் தலை போகிற விஷயத்தைப் பார்த்தீர்கள்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போங்களேன். இனிமேல் யாரிடம் இருந்தும் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி, அது எப்போது தயாரிக்கப் பட்டது, என்ன மாடல், என்ன விலை போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் வாங்குங்கள். இல்லை என்றால் இந்த மாதிரிதான் மின்னல் மின்னும். இடியும் இடிக்கும்.

நோக்கியா கைப்பேசிகள் தயாரிக்கப்பட்ட தேதியைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. *#92702689# என்று தட்டிப் பாருங்கள். முன்னுக்கு நட்சத்திர புள்ளி வருகிறது. அதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் வாங்கிய அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது, எப்போது விற்பனை செய்யப் பட்டது போன்ற விவரங்கள் கிடைக்கும்.

உங்கள் நண்பர் ஏதோ அவசரத்தில் சொல்லி இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். பெரிது படுத்த வேண்டாம். அமைதியாக, சமாதானமாகப் போங்கள். கைப்பேசி நன்றாக வேலை செய்கிறது இல்லையா. அதுவரை மகிழ்ச்சி அடையுங்கள்.

மைக்ராசாப்ட் எக்செல்

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

ராஜ் பாய்  rajboy42@yahoo.com
 

கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள். 
ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால், இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.  இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்றும் அழைக்கலாம். எக்சலில் உள்ள எல்லா சூத்திரங்களையும் முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

எக்சலை வைத்துக் கொண்டு, ஒரு மளிகைக் கடையின் கணக்கு வழக்குகளைச் சுலபமாகச் செய்து விடலாம். சரி. இந்த IF  எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of ’If’condition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான மதிப்பு வரும். தவறான கட்டளையைக் கொடுத்தால் தவறான மதிப்பு வரும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 16-க்கும் கூடுதலாக இருந்தால் அவருக்குக் கார் ஓட்டத் தகுதி இருக்கிறது. இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லை. இதை எப்படி எக்சலில் கட்டளை பிறப்பிப்பது. அதை இப்படி உட்புகுத்த வேண்டும்.

=if(age>18,"Eligible to drive","No eligible")

எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

அடுத்து இன்னும் ஒரு சின்ன கணக்கு. ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.  100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. அது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)

எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)

பின்னர் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இந்தக் கணக்குகளைச் செய்து பாருங்கள்.

பில் கேட்ஸ்

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

கணேசன் கணபதி, தாமான் இண்டா, தாப்பா
கே: உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். அவர் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா?


ப: நீங்கள் கேள்விப் பட்டது ரொம்பவும் தப்புங்க. பார்ப்பதற்குத்தான் அவர் ஒரு  கஞ்சனைப் போலத் தெரியும். முன்பு நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அவர் கஞ்சன் இல்லை. கொடை நெஞ்சங்களில் இவரும் ஓர் அவதாரம் என்றுதான் சொல்ல வேண்டும். 



கணினி மூலமாக பல ஆயிரம் கோடி டாலர்களைச் சம்பாதித்தார் என்பது உண்மைதான். சின்னச் சின்ன கணினி நிறுவனங்களைக் களை எடுத்தார் என்பதும் உண்மைதான். ஆனால், கோடிகளைச் சம்பாதித்த பிறகு, மனிதர் மாறிப் போனார் என்பதும் உண்மை தான். இருந்தாலும் இப்போது நிறைய தான தர்மங்களைச் செய்து வருகிறார். 

அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 29,400 கோடி  மலேசிய ரிங்கிட். இதில் 8,600 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.  

இப்போது 20,800 கோடிகளை வைத்து இருக்கிறார். அதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். அவரைப் போய் கஞ்சன் என்று சொல்லலாமா. அது நமக்கே நியாயமாகப் படுகிறதா? 

பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் மெலிண்டா கேட்ஸ் அறக் கட்டளையை நிறுவி இருக்கிறார்கள். இதுவரை ஏறக்குறைய 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர். 

அந்தப் பணத்தைக் கொண்டு நம்முடைய பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல நான்கு கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.

பில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார்.  25 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும்  அதிகமாக விற்பனையானது. 

இரு நூல்களின் மூலமாகக் கிடைத்த பணத்தை அப்படியே அற நிதிகளுக்கு கொடுத்து விட்டார். அவருடைய அறப் பணிகளை மனுக்குலம் மறக்காது.