09 பிப்ரவரி 2015

கின்னஸ் சாதனை

சின்னத்தம்பி மதிவாணன், லாவான் கூடா, கோப்பேங்

கே: சார், இது கணினி இணையம் சம்பந்தமான கேள்வி. கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். மறுக்காமல் பத்திரிகையில் போடுங்கள். அண்மைய காலங்களில் எனக்கு ஒரு விநோதமான் ஆசை வந்து இருக்கிறது. நான் நீண்ட நாட்களுக்கு 120 வயது வரை வாழ ஆசைப் படுகிறேன். கின்னஸ் புத்தகத்தில் ஒரு சாதனை செய்ய விரும்புகிறேன். தயவு செய்து இணையத்தில் நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
கின்னஸ் சாதனை2

ப: கேட்க நல்லாதான் இருக்கிறது. உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் கேட்டு இருக்கும் இந்தக் கேள்வியை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதாம். யார் யாருக்கு என்ன என்ன மாதிரியான ஆசைகள் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் வருகின்றன. பார்த்தீர்களா!

உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் கேட்கிற மாதிரி ஒரு மருந்து உண்மையிலேயே இருந்தால், முதலில் நான் சும்மா இருப்பேனா ஐயா. சொல்லுங்கள். 

கின்னஸ் சாதனை

இருந்தாலும், உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. இணையம் வழியாகத் தேடிப் பார்த்தேன். கடைசியாக ஒரு தகவல் கிடைத்தது. நீங்கள் கேட்கிற மருந்தை வட துருவத்தில் ஒரு பெண் பெங்குயின் வைத்து இருக்கிறதாம். அதன் பெயர் ‘ஊத்தாண்டே’. 

King Penguins

அங்கே போய் கேட்டுப் பாருங்கள். இன்னும் ஒரு சேதி. வட துருவத்தில் 33 கோடி பெங்குயின்கள் இருக்கின்றன. இடம் தெரியாத இடத்தில் பெயர் தெரியாத பெண் பெங்குயினைத் தேடிப் போறீங்க. பத்திரம். எதுக்கும் வீட்டுல சொல்லிட்டுப் போங்க! 

(இனிமேல் எல்லாருக்கும் பயன்படும் நல்ல கேள்வியாகக் கேளுங்கள். சரியா.)

கணினியை யார் பயன்படுத்தினார்கள்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

சரவணன் குமார், தானா ராத்தா, கேமரன் மலை

கே: சார், நான் புதிதாக ஒரு ’டெல்’ மேசை கணினியை வாங்கி இருக்கிறேன். நான் வீட்டில் இல்லாத போது, யாரோ என் கணினியைப் பயன்படுத்துகிறார்கள் என தெரிகிறது. நான் இல்லாத போது, என் கணினியைப் பயன்படுத்தி இருக்கிறார்களா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?


ப: மிகவும் சுலபம். PC Usage Viewer எனும் ஒரு நிரலி இருக்கிறது. இந்த நிரலி, மிகத் துல்லிதமாக, நம் கணினி பயன்படுத்தப்பட்ட நேரத்தை விலாவாரியாகப் பிரித்து தொகுத்துக் கொடுக்கிறது. இது ஓர் இலவச நிரலி. நான் சோதனை செய்து பார்த்து விட்டேன். பிரச்சினை இல்லை.

http://www.pointstone.com/products/pcusageviewer எனும் இணைய தளத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து பாருங்கள். பிரச்சினை என்றால் என்னுடைய +6 012-9767462 எண்களுக்கு அழையுங்கள்.


இணையம் மலேசியத் தமிழர் உருவாக்கிய சொல்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

குமாரி. விலாசினி, ஈப்போ ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி
கே: இணையம் எனும் அழகான தமிழ்ப் பெயரை, மலேசியத் தமிழர் ஒருவர் உருவாக்கியதாக என் ஆசிரியர் சொல்கிறார். உண்மையா?


ப: உண்மை. உங்கள் ஆசிரியர் மிகச் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. நம் நாட்டைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன். 


அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் திரு. ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.