12 அக்டோபர் 2015

சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா



               சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்                                      (Svetlana Alexandrovna Alexievich)

பிறப்பு: 31 மே 1948 (வயது 67)

தொழில்: பத்திரிக்கையாளர், எழுத்தாளர்

நாடு: பெலருசியா

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)

”நமது காலத்தின் துயரம் ஒரு துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும்”

எனும் படைப்பிற்காக 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 14-ஆவது பெண்.

மேற்கு யுக்ரேயினில் சிவெத்லானா பிறந்தவர். பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

பின்னர் பெலருசிய அரசப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1972-இல் பட்டம் பெற்றார். மின்ஸ்க் நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப் பட்டவர்களின் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதனால் பெலருஸ் அரசாங்கத்தின் கெடுபிடிகள்.

2000-ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து நாடு கடத்தப் பட்டார். பாரிஸ், பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பெலருஸ் திரும்பினார்.

இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலக இலக்கியவாதிகள் இவரை மனித உரிமைப் போராளியாகப் போற்றுகின்றனர். 

11 அக்டோபர் 2015

சாக்ரடீஸ் சொன்னது

உங்களுக்கு நல்ல மனைவி வாய்த்தால்...
நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்...
கெட்ட மனைவி வாய்த்தால்...
நீங்கள் ஞானி ஆகிவிடுவீர்கள்...


சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி.


ஒருமுறை சாக்ரடீஸ்... தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தார். பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலே இருந்து கொட்டினார். யார் தலையில்... சாக்ரடீஸ் தலையில்! சாக்ரடீஸ் அசரவில்லை. அப்போது அவர் சொன்னார்...

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடி முழங்கியது... இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியைப் பற்றி நன்கு அறிந்தவர் அங்கே அப்போது ஒருவர் இருந்தார். அவர் சாக்ரடீஸிடம் சென்று, திருமணம் செய்து கொள்வதைப் பற்றிய தங்கள் கருத்து என்னவோ என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ் சிரிக்கமல் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப் படுவாய்! “நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ ஞானி ஆகலாம்” என்றார். ஆக, சாக்ரடீஸ் சொன்னது உண்மை. ஐயம் வேண்டாம். சாக்ரடீஸ் என்பவர் மனுக்குலத்தில் ஒரு தத்துவஞானியாக இன்றும் போற்றிப் புகழப் படுகிறார்.

மனோரமா




உலகத் திரை வரலாறு எத்தனையோ சாதனைப் பெண்களைப் பார்த்து விட்டது. பார்த்துப் பெருமை பேசி இருக்கிறது. பேசியும் வருகிறது. ஆனால், அதே அந்தச் சினிமா வரலாறு, ஜில் ஜில் மனோரமாவை போல ஓர் அற்புதமான குணச்சித்திர திலகத்தை இதுநாள் வரை பார்த்து இருக்க முடியாது. இனியும் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. அதைப் பற்றி அந்த வரலாற்றிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழ்ச் சினிமாவில் முன்னோடிகள் பலர். அந்த முன்னோடி ஜாம்பவான்களில் யாரை எல்லாம் உச்சி முகர்ந்து பார்த்தோமோ அவர்களில் பலர், இப்போது தங்களின் இறுதிக் காலங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், புரட்சித் திலகம் என்ற தமிழ்த் திரையின் மூன்று திலகங்களும் மறைந்து விட்டன. 


காலத்தை மறந்து வாழ்ந்த ஆச்சி

அந்த மூன்று திலகங்களுக்கும் துணையாக நின்று சண்டை போட்ட வில்லன்களும் மறைந்து போய் விட்டார்கள். இடையே இடையே ஓடித் திரிந்த நகைச்சுவை நடிகர்களில் பலரும் கரைந்து விட்டார்கள். தற்போது தன்னுடைய காலத்தையும் நினைவையும் மறந்து வாழ்ந்து கொண்டு இருந்த ஆச்சி மனோரமாவும் மறைந்து விட்டார். 



மனோரமா 1300 படங்களுக்கு மேல் நடித்து, பெருமையும் சாதனைகளையும் செய்தவர். தமிழ்ச் சினிமாவில்  தேய்ந்து போன அத்தனை அட்டூழியங்களையும் பார்த்தவர். அவலட்சணமான அசிங்களைப் பார்த்தும் பார்க்காமல்... தெரிந்தும் தெரியாமல் வாழ்ந்து காட்டியவர்.

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப் பட்டவர்.

தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் ஆச்சி நடித்து இருக்கிறார்.



அவருடைய சினிமா வாழ்க்கை 1958இல் மாலையிட்ட மங்கையில் தொடங்கியது. பின்னர் கொஞ்ச காலம் சினிமா தொலைக் காட்சித் தொடர். தம்முடைய சாதனைக்காக ஆச்சி மனோராமா, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

டூரிங் தியேட்டர் காலத்தில் இருந்து டிஜிட்டல் புரஜெக்டர் காலம் வரை வலம் வந்தவர். கடைசியாக சிங்கம் 2 படத்தில் நடிகர்  சூர்யாவுடன் நடித்தார் மனோராமா. ஆக, நடிப்புலக வாழ்க்கையில் கொடிகட்டிப் பறந்தவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் சுந்தரியை மறந்து விடமுடியுமா.

நான் இப்போது இங்கேயே செத்துப் போனால்...

ஆச்சி மனோரமாவின் மரணம், திரைத் துறையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய இறப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், தன்னுடைய மரணம் குறித்து பேசி இருப்பது நம்மை எல்லாம் ரொம்பவும் நெகிழ வைக்கிறது.

வயோதிகம் காரணமாக விழாக்களை மனோரமா தவிர்த்து வந்தார். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்து முடிந்த திரைத்துறை ஊடகவியலாளர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தான்.



அதில் கமல், சிவக்குமார் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் மனோரமா பேசினார். சென்னைத் தமிழில் குட்டிக் கதைகளைக் கூறினார். பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பலமுறை சொல்லிச் சொல்லி வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சு அங்கு வந்து இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

அப்படி அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒரு கட்டத்தில் திடீரென்று, “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இப்போது இங்கேயே செத்துப் போனால் கூட ரொம்ப சந்தோசப் படுவேன்” என்று கூறினார். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒருவார காலம் ஆகி இருக்கும். இதோ இப்போது சொன்ன மாதிரியே அவரும் போய்ச் சேர்ந்து விட்டார்.




தமிழ்ச் சினிமாவில் ஆச்சி என்று அழைக்கப்ட்ட மனோரமா, தன் கடைசிக் காலத்தில் அதிகமான குணச்சித்திர வேடத்தில் நடித்தப் பகழ் பெற்றார். சிறந்த நடிகையாக மட்டும் அல்லாது சிறந்த பாடகியாகவும் மனோரமா வலம் வந்தவர். 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் புகழ் பெற்றார்.

கலைத் துறையில் அன்னாரின் ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப் பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’; ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’; மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’; கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’; ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’; சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’; ‘என்.எஸ்.கே விருது’; ‘எம்.ஜி.ஆர். விருது’; ‘ஜெயலலிதா விருது’. தவிர பல முறை ‘பிலிம் பேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்தவர் ஆச்சி மனோரமா.

உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை

கமலஹாசன்களும் ரஜனிகாந்துகளும் நிறைந்து வழியும் தமிழ் நாட்டுச் சினிமாவிற்குள், உண்மையான கலைஞர்களுக்கு இப்போது வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில் நிலை கொள்ளத் தக்க, பெயர் பதித்து இருக்கக் கூடிய ஒரு தமிழ்ச் சினிமாவில் மனோரமா நடித்து இருக்க வேண்டும்.

தமிழ்ச் சினிமா அவரை முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெறுமனே பொய்யும் புரளும் சினிமாவிற்குள் அது சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. வேதனையான விஷயம்.

நாடகத்துறை தந்த பல சினிமாக் கலைஞர்களின் காலம் முடிந்து கொண்டு இருக்கிறது. சினிமாவிற்காகவே வாழ்ந்த பெரும் கலைஞர்களும்... அந்தச் சினிமா வாழ்விற்கும் அப்பால் சினிமாவை நேசித்த கலைஞர்களும்... மறைந்து கொண்டு இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சினிமா வெறும் வியாபாரத் தளமாக மாறிக் கொண்டு இருக்கிறது.

சினிமா எனும் மிகப் பெரிய ஊடகம், தமிழ்ச் சமூகத்தில் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. அதுகூட தெரியாமல், நம்முடைய அடுத்த தலைமுறையும் கெட்டுச் சுவாரகிக் கொண்டு வருகிறது. என் செய்வது.

பெண்கள் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது என்று ஆங்கிலேய எழுத்தாளர் மில்டன் கூறி இருக்கிறார். அந்த வகையில் அந்த மாபெரும் சகாப்தத்தின் அழகிய சின்ன வயது அனுபவங்களைத் தெரிந்து கொள்வோம்.

மனோரமா கதை சொல்கிறார்...

அவரே சொல்கிறார் கேளுங்கள். அவருடைய சுயசரிதை ஓர் ஒலிப் பேழையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் இருந்து சில பகுதிகளை மீட்டு எடுத்து இருக்கிறேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்களும் கேளுங்கள்.

நான் மனோரமா... பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடி. பெற்றவர்கள் எனக்கு வைத்த பெயர் கோபிசாந்தா.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், என் தந்தை வசதி மிகுந்த ரோடு காண்ட்ராக்டர். வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில்தான் பிறந்தேன். இந்த நேரத்தில்தான் என் தாயார் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார். என் அப்பாவுக்கு தன் கூடப் பிறந்த தங்கையையே இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு!

அதன் விளைவு... என் அம்மாவின் வீட்டு நிர்வாகம் கைமாறியது. எனது சின்னம்மாவின் ஆதிக்கம் வலுத்தது. பல வழிகளிலும் என் அப்பா என் அம்மாவை அவமானப் படுத்தினார். கொடுமைப் படுத்தவும் தொடங்கி விட்டார்.

எந்தத் தங்கையின் வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று தனது வாழ்க்கையைப் பங்கு போட்டுக் கொடுத்தாரோ... அந்தத் தங்கையே எங்கள் வாழ்க்கையில் எல்லா அவலங்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து விட்டார்.

நாளுக்கு நாள் துன்பமும் கொடுமைகளும் அதிகரித்தன. பொறுக்கமுடியாத அளவிற்கு அவற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எதற்கும் ஒரு உச்ச வரம்பு உண்டல்லவா? ஒருநாள் என் தாயார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு விட்டார். பிறந்து ஒரு வருடம்கூட நிறைவு பெறாத நான் அருகில் நின்று கதறிக் கொண்டு இருந்தேன்.

தற்செயலாக எனது அழுகைக்குரல் கேட்டு வந்து பார்த்தவர்கள், எனது அம்மா தூக்கு மாட்டிக் கொண்டு சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பதறி, கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.

அப்படிக் காப்பாற்றப்பட்ட அவருக்கு சரியாக பன்னிரெண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் உயிர் வந்தது.

இந்தத் துன்பச் சூழ்நிலையில் மன வெதும்பல்கள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை. அத்துடன் என் அப்பா கூட என் அம்மாவால் தொடர்ந்து குடும்பம் நடித்த முடியாத நிலை. இனி என்ன செய்வது? வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை!

அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது

அதனால், ஒரு நாள் என் தாயார் கைக் குழந்தையான என்னைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். அப்படி அவர் வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டு புறப்பட்டு வந்து நின்ற ஊர்தான் இராமநாதபுரம் மாவட்டம். காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூர்.

முன்பின் தெரியாத ஊர். பார்த்து பழகியிராத மக்கள். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. பசித்து அழுத எனக்கு பால் வாங்கக் கூட கையில் காலணா இல்லாத வறுமை. இப்படி பாவப்பட்ட சூழ்நிலையில் தான், என் அம்மா பள்ளத்தூரில் தனது வாழ்க்கையைத் தொடக்கினார்.

பலகாரம் சுட்டு விற்பது என் அம்மா எடுத்துக் கொண்ட தொழில். வியாபாரத் தன்மை பெருக்கம் இல்லாத சிறிய ஊர். அதிக முதலீடோ லாபமோ இல்லாத தொழில். அரைகுறை பட்டினியோடு வாழ்க்கை ஓடியது. ஆனால் மானத்தோடு வாழ வழி காட்டியது.

இந்தப் பள்ளத்தூர்தான் என்னை வளர்த்த ஊர். எனது இன்றைய வாழ்க்கைக்கே வழிகாட்டிய ஊர். அனாதையாக வந்த எங்களை ஆதரித்த ஊர். அப்போது எனக்கு இரண்டு வயது. திருநீலகண்டர் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "உன்னழகை காண இரு கண்கள் போதாதே" என்ற பாட்டை நான் ஒரு பொம்மையை வைத்து பாடிக் கொண்டிருந்தேனாம். அதைக் கேட்ட என் அம்மாவுக்கு எல்லை இல்லாத ஆனந்தம்... பூரிப்பு... இருக்காதா பின்னே!

வயதோ இரண்டு. மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை ஓரளவு நயத்தோடு பாடினால்... எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி பொங்காது. சொல்லுங்கள்.

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன்முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் இதைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லிச் சொல்லி பூரித்துப் போவாராம்.

ஒரு சின்னஞ்சிறிய ஊரில்... எந்த வித ஒரு வசதியும் இல்லாத ஓர் ஏழையின் இரண்டு வயதுக் குழந்தை... ஓரளவு இனிமை சேர்த்துப் பாடுவது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும் போலும்!

யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும்

அதற்குப் பின்னர் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம், தங்கள் அருகே கூட்டி வைத்துக் கொண்டு "பாப்பா பாடு" என்று சொல்லிக் கேட்பார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்தப் பாடும் வித்தை, எப்படியோ என்னைப் பலமாக ஒட்டிக் கொண்டது. மற்றவர்களுக்குப் பாடிக் காட்டி... பாடிக் காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து போனது!

பிறகு எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும், அங்கே என்னைத் தவறாமல் கூட்டிச் சென்று பாட வைப்பார்கள்.

இதே நேரத்தில் ரொம்பவும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்தேன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்ற பாராட்டையும் பெற்று வந்தேன்.

என்னுடைய பெயர் கோபிசாந்தாவாக இருந்தாலும் எல்லோரும் என்னை பாப்பா என்று தான் கூப்பிடுவார்கள். ஒருமுறை எங்கள் பள்ளிக்கூட விழா ஒன்றில் எங்கள் வாத்தியார் என்னை அழைத்து "பாப்பா ஒரு பாட்டுப் பாடும்மா" என்று கேட்டுக் கொண்டார்.

பாருக்குள்ளே நல்ல நாடு... என்ற பாட்டை, மீரா படத்தில் வரும் "காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டின் டியூனில் பாடினேன். பள்ளிக்கூட ஆசிரியர்களும், மற்றவர்களும் மகிழ்ந்து போனார்கள்.

அதுமுதல் நான் பாடாத பள்ளிக் கூட விழாக்களே இல்லை என்றாகிப் போனது. அத்துடன் சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பாட வைத்தார்கள்.

'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்'

நான் பாடத் தெரிந்தவள். அதனால், எனக்கு ஒரு சலுகையும் கிடைத்தது. பள்ளிக்கூடம் போய் வந்த பிறகு, பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா கொட்டகைக்குப் போவேன். எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு. 'பாட்டுப் பாடுற பொண்ணு, படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள்.

நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன். இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரிக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது. இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்தது.

மனக்கவலை... வறுமை... தினந்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான போராட்டம்... இவை எல்லாமாகச் சேர்ந்து அந்த நோயைக் கொடுத்து விட்டன. என்ன செய்வது? ஆச்சி மனோரமாவின் சோகக் கதை நாளை தொடரும்...

காமராஜர்

உலக அரசியலை அலசிப் பாருங்கள். நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக, சில பல தலைவர்கள் தங்கள் சொந்த வீட்டை மட்டுமே வழிநடத்தி வந்த அல்லது வருகின்ற அவலங்கள் தெரிய வரும். 


சுயநலத்துக்காகவும் பதவிப் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அந்த மாதிரியான தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற் போல, ஒரு சில வைரங்களும் தோன்றுகின்றன. பொதுநலத்தை உயிராகப் போற்றி உச்சி முகர்ந்தும் பார்க்கின்றன.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலப் போர்வையில் அவலங்கள்... அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இப்படியும் ஒரு மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பதே பெரிய ஆச்சயரியம். சாமான்ய நான்காம் வகுப்பு வரை கல்வி கற்ற ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா!


அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர். மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக் கூடாது என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்து, அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதிவியையே துறந்து சென்றவர்.


கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர். ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

தான் முதலமைச்சராக இருந்த போதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில்தான் இதுபோன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும்.

ஆனால் தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத மனிதர் தான் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால்... தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் அங்கே உயர்ந்து போய் சிகரம் தொட்டு இருக்கும் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர்... அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர்... கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டுமே அவரிடம் இருந்தனவாம்... அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.... என்னே மனிதம்... என்னே இலட்சியம்...

கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில், குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

ஏழ்மையான குடும்பம். ஏழ்மையின் காரணமாகவும் படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

1930ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை.

அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்து இருக்கிறார்.

1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

கர்ம வீரர் காமராஜர்... இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை.

ஆனால் ஆங்கிலம் தெரியாமல் போனாலும், தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது தமிழ்நாடு மாநிலம் ஆகும். இப்போது பாருங்கள்.

கர்ம வீரர் காமராஜர்... காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் எம்.பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா....

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்பதுதான்”

அவருடைய நல்லாட்சியில் கல்வித் துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளைக் கட்ட உத்தரவிட்டார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி.. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.

எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப் படுத்தினார்.

ஏழைச் சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு... ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பினார். எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

அவரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை மணிமுத்தாறு; அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப் பட்டன.

 தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி; சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை; சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின.

அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு, இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்

கர்ம வீரர் காமராஜர்... இப்படிப் பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால் தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவ்வளவும் செய்த அவர், அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது.

காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர், எல்லா மூத்தக் காங்கிரஸ் தலைவர்களும் தங்களின் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு... 

நாட்டு நலனுக்காக கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கினார். பிரதமர் நேருவிடம் பரிந்துரையும் செய்தார்.

அவரைத் தொடர்ந்து, லால் பகதூர் சாஸ்திரி; ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய்; எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர்.

அதே ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் காமராஜருக்கு ஜவகர்லால் நேரு வழங்கினார்.
அதற்கு அடுத்த ஆண்டே, நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவினார். அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர்.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால்... காமராஜரை  “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அழைத்தனர்.  இப்படி தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியைத் தந்த காமராஜர், தனது கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே குறியாக இருந்தார்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தனது 72 ம் வயதில காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய “பாரத ரத்னா” விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர்.

ஆம். அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் சிறு வயதிலேயே கல்வியைக் கைவிட்டதை நினைத்து வருந்திய அவர், தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக் கொண்டார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!

தன் குடும்பம் என்பதற்காக, தன் தாய்க்குக் கூட எந்தச் சலுகையும் வழங்கியது இல்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...

சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தககளும்தான். பதவிக்குரிய பந்தா அவரிடம் இருந்ததே இல்லை.

எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு.

அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல... உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்து இருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்”. 

நல்லாட்சி என்ற அவருடைய சமதர்ம சிந்தனையும்... நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும்... சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம்

1990களில், சிங்கை வானொலியில், என் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து தொகுப்பட்டதே அந்தப் படிக்காத மேதையின் கட்டுரை. வானம் வசப்படும்...

அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடம் என்ன? முத்தண்ணா... என்று கவிஞர் அருள் கேட்கிறார்... இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் கண்கள் குளமாகின்றன... அதுதான் அவர் நமக்கு விட்டுச் சென்ற ஒரு பாடம்...

10 அக்டோபர் 2015

இணையம்

இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. மலேசியாவைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன்.
 

அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய ’நயனம்’ வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்ட்ய் இணைப்பான பெரும் வலை அமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பறிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறுகிறது.

இணையம் என்னும் சொல்லானது செப்புக் கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டு உள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.

உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்பு கொண்ட கட்டுரைகள், எழுத்துகள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு. உலகளாவிய வலை என்பது வேறு.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் தமிழில் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.