13 ஆகஸ்ட் 2016

அர்ச்சனா செல்லத்துரை

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானி

இலங்கை வல்லையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் அர்ச்சனா செல்லத்துரை. டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். இப்போது இவர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 


ஆஸ்திரியா நாட்டில் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர். அடுத்து போயிங், ஏர் பஸ் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். Danish மொழி ஆசிரியை. விமானியாகும் ஆசையில் அமெரிக்கா சென்றார். அங்கே மியாமி டீன் இண்டர்நேசனல் விமானிகள் கல்லூரியில் படித்தார். 




இறுதிச் சோதனையின் போது... விமானத்தைத் தனி ஒருவராக அமெரிக்கா மியாமி விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆறு மணி நேரம் பறந்து காட்ட வேண்டும். 

அதே சமயத்தில் பாரிஸ், பெர்லின், கோப்பன்ஹெகன் மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கியும் ஏற்றியும் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் விமானிச் சான்றிதழ் வழங்குவார்கள்.



இப்போது Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating விமானிப் பயிற்சியை Diamond Flight Academy Scandinavia-இல் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் இவர் AFF விமானிகள் உரிமத்தைப் பெற்றார். இருந்தாலும் அதை ஐரோப்பாவில் பயன்படுத்த வேண்டுமானால் ஐரோப்பாவிற்கான EASA விமானிகள் உரிமமாக மாற்ற வேண்டும். இதற்காக டென்மார்க் விமானக் கல்லூரியில் படித்து 14 சோதனைகள் எடுத்தார்.

பின்னர் சுவீடன் நாட்டின் Diamond Flight Academy கல்லூரியில் சேர்ந்து தனியாக விமானங்களை ஓட்டினார். ஐரோப்பிய விமானச் சட்டங்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய உரிமத்தை மாற்றிக் கொண்டார். 




இன்னும் ஒரு செய்தி. இவர் ஒரு சிறந்த திரைப்படப் பின்னணி பாடகியும் ஆவார். ’உயிர்வரை இனித்தாய்’ திரைப்படத்தில் ’என் நெஞ்சே என்னைத் தாண்டி நடக்கின்றதே’... எனும் புகழ்பெற்ற பாடலைப் பாடியவர். 

சங்கீதம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை முறைப்படி கற்றவர். பரத நாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்தவர். 
 
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்கள்... நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்...

Archana Sellathurai becomes first Tamil woman to become Co-Pilot in Denmark
https://youtu.be/xJAA2tCIdzk

12 ஆகஸ்ட் 2016

மலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள்

மலேசியச் சீனர்களைப் போல சிந்தியுங்கள்...

மலேசியா பல்லினத்தவர்கள் வாழும் நாடு. மலாயர், சீனர், தமிழர் (இந்தியர்) பெரிய இனத்தவர்கள். ஒவ்வோர் இனத்தாருக்கும் இந்த நாட்டில் தனிப்பட்ட அரசு உரிமைகள் உள்ளன. அந்த அரசு உரிமைகளை முறையாகப் பெற்றுக் கொள்ள... மலாய், சீன இனங்களைச் சார்ந்தவர்கள் மிகக் கவனமாகவும்... விழிப்பாகவும்... துணிவாகவும்... துடிப்பாகவும்... தொலைநோக்காகவும் செயல் படுகின்றனர்.

மலாயரும் சீனரும் அவர்களின் தாய்மொழியை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் இனத்தை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் பள்ளிகளை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் எந்தவொரு உரிமைகளையும் விட்டுக் கொடுப்பது இல்லை...


ஆனால் நம் தமிழர்கள் மட்டும்...
தாய்மொழி
தமிழ் இனம்
கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகள்
தமிழ்ப்பள்ளிகள்
தமிழ்க்கல்வி
இந்த உரிமைகளில்...

எதையும் தற்காப்பது இல்லை... பேணுவதும் இல்லை...
இவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதும் இல்லை...

இவற்றின் தனித் தன்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவதும் இல்லை...

எடுத்துக்காட்டுகள்

1) அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்க மலாயரும் சீனரும் முடிவெடுத்து முனைப்புக் காட்டுகின்றனர்... ஆனால் தமிழன் மட்டும் தாய்மொழிக் கல்வியையே தட்டிக் கழிக்கிறான்...

2) மலாயரும், சீனரும் தங்களின் மொழிவழிப் பள்ளிகளுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள்... ஆனால் தமிழன் மட்டும் தமிழ்ப்பள்ளியைத் தட்டிக் கழித்து தேசியப் பள்ளியையும் சீனப் பள்ளியையும் நாடி ஓடுகிறான்...

3) மலாயரும் சீனரும் தங்களின் மரபுவழி கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்குப் அரும் பங்காற்றுகிறார்கள்... மலேசியத் தமிழன் மட்டும் தன்னுடைய இந்த மண்ணின் கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை... பறந்து வரும் கூத்தாடிகளைக் கை எடுத்து கும்பிடுகிறான்...

4) மலாயரும் சீனரும் தங்களுடைய பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து இருப்பதற்கு மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல் படுகின்றனர். ஆனால், தமிழன் மட்டும் தன்னுடைய சொந்தத் தமிழ்ப் பள்ளியை இணைக்கலாமா வேண்டாமா... வாவாசான் பள்ளியாக மாற்றலாமா... ஏன் அந்த வம்பு ஒரேயடியாக மூடியே விடலாமா என்று ரூம் போட்டு யோசிக்கிறான்...

5) மலாயரும் சீனரும் அரசு சார்பற்ற அமைப்புகள் வழி தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பற்றி ஆழமான ஆய்வுகளை நடத்துகின்றனர். முறையாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சொல்கின்றனர்... ஏற்ற தீர்வுகளைக் காண்கின்றனர். தமிழருக்கோ உருப்படியாக எந்த ஓர் அமைப்பும் இல்லை. அப்படியே எதாவது ஓர் தமிழ் அமைப்பு ஆய்வு நடத்தி அறிவிப்பு செய்தால்... அம்புட்டுதான்... மொழிவெறி இனவெறி எனத் தமிழனே தமிழனைக் குற்றம் சாற்றுகிறான்..

தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த இழிந்த குணம்...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி முட்டாள்தனம்...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தன்னம்பிக்கையின்மை...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தொலைநோக்கின்மை...

இந்த நாட்டில் இனிவரும் காலத்தில் மலேசியத் தமிழ் மக்கள் நலமாகவும் நன்றாகவும் வாழ வேண்டும் என்றால்... சீனர்களைப் போல சிந்திக்க வேண்டும் செயலாற்ற வேண்டும்...

ஏன் என்றால்... சீனர்களும் தமிழர்களும் பூமிபுத்திராக்கள் அல்லர்... சீனர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள். அதனால் தமிழர்கள் பூமிபுத்திராக்களைப் போல சிந்திப்பதைவிட சீனர்களைப் போல சிந்திப்பதே நல்லது... நலமானது... பாதுகாப்பானது...

சீனர்கள் தங்களின் குடியுரிமையையும்... அரசியலமைப்பு உரிமைகளையும் தற்காத்துக் கொள்ள எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்... செயல்படுகிறார்கள் என்று பார்த்தாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...

உரிமைகளைப் பாதுகாக்க சீனர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்... ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள்... உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள்... மலேசியத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்... முத்தண்ணா

1) சீனப்பள்ளிகள் நிலைத்து இருக்க வேண்டும். (தமிழ்ப்பள்ளி நிலைத்து இருக்க வேண்டும் எனும் அக்கறை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை)

2) மூடப்படும் சீனப்பள்ளிகளின் உரிமத்தைப் (லைசன்சு) பயன்படுத்தி வேறோர் இடத்தில் புதிய பள்ளியைத் திறக்க வேண்டும்.

3) சீனப்பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடால்) பள்ளிகளாகவே இருந்துவிட வேண்டும். (தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளாக மாறவேண்டும் என்று தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்)

4) தொலைநோக்குப் பள்ளியை (வாவாசான் பள்ளி) சீனர்கள் வரவேற்கவில்லை. (தமிழ்ப்பள்ளிகள் தொலைநோக்குப் பள்ளிகளாக இணைக்கப்பட வேண்டும் என தமிழர்கள் ஆசைப் படுகிறார்கள்)

5) அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலம் சீனம் ஆகிய இருமொழிகளில் கற்பிக்க சீனர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டனர். (தமிழர்கள் இன்னும் கூட்டம் போட்டு... ரூம் போட்டு சிந்தியோ சிந்தி என்று மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறார்கள்)

6) சீனர்களின் மளிகைக் கடை தொடங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் சீனமொழிக்கு முதலிடம் தருகின்றன. (தமிழர்கள் மலாயையும் ஆங்கிலத்தையும் மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்)

7) எவ்வளவு வசதி வந்தாலும் எந்த ஒரு சீனரும் தன்னுடைய தாய்மொழியையும் பள்ளியையும் மட்டும் விட்டுக் கொடுப்பதே இல்லை. (தமிழனுக்குக் கொஞ்சம் காசு பணம் சேர்ந்து விட்டால் அவன் முதலில் ஒதுக்கித் தள்ளுவது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் தான்)

8) ஒரு துண்டு அறிக்கை எழுதுவதாக இருந்தாலும் சீனர்கள் தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். (தமிழன் ஒரு மாநாடே நடத்தினால் மேடையில் நாலைந்து தமிழ் எழுத்துகள் மட்டும் இருக்கும்)

மலேசியத் தமிழர்களின் இத்தனைக் கோளாறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் தான் என்ன...

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழ் முத்துகள்... தமிழ் பூக்கள் அன்பர்களிடம் விட்டு விடுகின்றேன். அன்பர்களே.. தவறாமல் மறுமொழி கூறுங்கள். -முத்தண்ணா

தமிழினமும் தமிழ்மொழியும்

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அதிகம் அறியாத ஓர் இனம் உலகில் இருக்கிறது என்றால் அது தமிழ் இனமாகத்தான் இருக்கும். 


அதனால் தான் ஒரு தமிழன் என்று அறியாமல்... புரியாமல்... தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும்... இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர் தாம் இன்னமும் தமிழினத் தொப்புள் கொடி அறிந்து போகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் தான் இன்னமும் உலகத்தில் தமிழினமும் தமிழ்மொழியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும்... அறிந்து கொள்ள விரும்பாத நிலையிலும் தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போய் இருக்கின்றனர்.

அதுமட்டும் அல்ல... அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்று கொண்டு இருக்கிறனர்.

என்னே பரிதாபம்... என்னே அறியாமை...

இத்தகைய மூட நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர்... வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்து இருக்கிறதோ... அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ... அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன் எடுக்கிறதோ... அந்த இனமே தலை நிமிர்ந்து முன்னேறும்.

மொழி இன வரலாறு அறியாமல் தெரியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமைந்து விடாது.

தாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை

சொந்த மொழியைப் பற்றி சிந்திப்பதும்... 
சொந்த தாய்மொழியை வளர்ப்பதும்... 
சொந்தத் தாய்மொழியைக் காப்பதும் ஒவ்வொருவரின் பிறப்புரிமை...

சொந்த மொழியைக் கற்க மாட்டாதவன்...
சொந்த மொழியயைக் கற்பிக்க மாட்டாதவன்...
சொந்த மொழியைக் காக்க மாட்டாதவன் நல்லறிவு இல்லாதவன்...

தொல்காப்பியன் தொடங்கி இன்றைய கொள்ளுப் பேரன் வரையில் தமிழைக் காத்து நிற்பவர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்...

வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பற்றாளர்களை ஏளனம் செய்ய வேண்டாம்...

அவனவன் வாயாலன்றிப் பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப் பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியாலன்றிப் பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!

28 ஜூலை 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி,கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்

 
சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்... என்று பாடும் போது ஏற்படும் உணர்ச்சியும் அதை ஒட்டி எழும் சமுதாயக் கோபமும் குறைந்த பட்சம் அவர் அவர் வாழ்க்கையில் கூட நடைமுறையாக உருமாறுவது இல்லை. 
 

 அதைவிட பாரதி தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தான் அதை எழுதி இருக்கிறார் என்பதைப் போலத் தான் சிலரின் நினைப்பும் இருக்கிறது.

எனக்கு தெரிந்த நாடறிந்த மூத்தக் கல்வியாளர் ஒருவர். முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று இருந்த ஒரு சாதிச் சங்கச் சந்திப்பில் அங்கலாய்த்து இருக்கிறார். இது அண்மையில் நடந்த நிகழ்ச்சி. 

எழுத்தில் ஒன்றும் நடத்தையில் ஒன்றுமாய் வேசம் போடும் அந்த மாதிரி ஆட்களுக்குத் துணை போவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 


வெளிப்படையாக இல்லை. ஆனால் காதோடு காது வைத்த மாதிரி இந்த சாதிப் பிரச்சினை மிகவும் அணுக்கமாக மறைமுகமாக உலாவிக் கொண்டு இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய போராட்டம்.

நம் நாட்டில் தலைதூக்கி விரித்தாடும் சாதி அமைப்புகளையும் சாதிச் சங்கங்களையும் இளைய தலைமுறையினர் நிராகரிக்க வேண்டும். 

என் காலத்தில் சாதி இல்லாமல் போகும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. அதன் தாக்கமே பலரைப் பகைத்துக் கொள்ளச் செய்கிறது.