24 பிப்ரவரி 2017

DLP இருமொழிப் பாடத் திட்டம்

DLP இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம் அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலைப் பற்றி பலர் கண்டு கொள்வதே இல்லை. 


பெரும்பாலோர் இப்போது தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை DLP திட்டத்தில் சேர்ப்பது இல்லை. இந்தப் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை ஆங்கிலத்திலும் நடத்தலாம் அல்லது மலாய் மொழியிலும் நடத்தலாம். தலைமையாசிரியரைப் பொருத்தது.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தந்த மொழிகளிலேயே போதிப்பார்கள். அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிக்க வேண்டும். 



ஆக இந்தப் பாடங்களையும் சேர்த்தால் மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், பொருளியல், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களும் ஆங்கில மொழியில் போதிப்பார்கள். மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். மொத்தம் 6 பாடங்கள் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள். 



இந்த 2017ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் 49 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வருகிறது. தமிழ்ப் பள்ளியில் 6 பாடங்களை வேற்று மொழியில் படித்துக் கொடுக்கப் போகிறார்கள். எப்படிங்க?

இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும். சரி தானே.

சார்டின்

மத்தியத் தரைக்கடல் பகுதியில் Sardinia  எனும் தீவில் கி.மு. 300களில் ஒரு வகை மீனைப் பிடித்து உப்புக் கண்டம் போட்டு சாப்பிட்டார்கள். அந்த மீனுக்குத் தான் Sardine என்று பெயர் வைத்தார்கள்.


அந்த மீன்கள் 1911இல் இங்கிலாந்தில் டின்களில் (குவளைகளில்) அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பின்னர் காலத்தில் சார்டீன் எனும் அந்தச் சொல் கப்பலேறி மலாயாவுக்குள் வந்து விட்டது. குவளைக் கருவாடு என்று தமிழ்ப்படுத்தப் படுகிறது. அந்தப் பெயர்ச் சொல்லில் சற்றே மயக்கம் ஏற்படுகிறது.

கருவாடு - உலர்மீன் (dried fish); உப்புக்கண்டம் போட்டுக் காய வைக்கப்பட்ட மீன். 

Sardine - சாளை; சூடை; மத்தி
Sardine fish - சீடை மீன்; மத்தி மீன்

(சொற்பிறப்பியல்)
Sardina - லத்தீன் சொல்.  

 (சான்று: http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=sardine+fish)

காப்பியனை ஈன்றவளே


கவிஞர் சீனி நைனா முகம்மது

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
       
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களைக் கொண்டு ஒரு பாடலை மலேசிய எழுத்தாளர் சங்கம் இயற்றியது. அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன்.  

23 பிப்ரவரி 2017

இடைக்காலம்

இடைக்காலம் என்பது ஒரு பெயர்ச் சொல். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், முற்காலம், பிற்காலம், தற்காலம், இடைக்காலம், குளிர் காலம், கோடைக் காலம், மழைக் காலம், வேனில் காலம், பனிக் காலம், சாயுங்காலம், பேறுகாலம் இப்படி நிறைய காலங்கள் உள்ளன.

சாயங்காலம் அல்ல சாயுங்காலம். அதாவது சூரியன் சாயும் காலம். பலர் சாயங்காலம் என்று சொல்கிறார்கள். அது தவறு. சாயுங்காலம் என்பதே சரி.

சட்டம் நடைமுறைக்கு வருவதில் இடைப்பட்ட காலம் என்று ஒரு காலம் வரும். அதுவும் ஓர் இடைக்காலம் தான். இடைமாறுபாட்டுக் காலத்தையும் இடைக் காலம் என்றும் சொல்லலாம். பணியேற்பு இடைக்காலம், வரலாற்று இடைக்காலம்... இவற்றையும் இடைக்காலப் பட்டியலில் சேர்க்கலாம்.

தற்காலிகம் என்பதும் ஒரு பெயர்ச் சொல். அதன் பொருள் நிலையற்றது அல்லது நிரந்தரம் இல்லாதது. ஆக தற்காலிகம் என்பது நிரந்தரம் இல்லாததைக் குறிப்பிடுகின்றது.

வாட்ஸ்அப் நிகழ்நிலை

சமூகவலைத் தளங்களில் முன்னணியாகத் திகழ்வது வாட்ஸ் அப். வியாழக் கிழமை 24 ஆம் திகதி வாட்ஸ் அப் தனது 8 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அந்த மகிழ்ச்சியில் புதிய ஓர் இற்றையம் (update) வெளிவருகிறது. அதாவது நிகழ்நிலை (status) இடத்தில் ஒரு புதிய இற்றையத்தைக் கொண்டு வருகிறார்கள். 


அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை வாட்ஸ் அப் நிகழ்நிலையாக வைக்க முடியும். தற்சமயம் வாட்ஸ் அப் நிகழ்நிலையாக (status) எழுத்துகளை மட்டுமே பதிப்பு செய்ய முடியும்.

எ.கா: இப்போது என்னுடைய வாட்ஸ் அப் புலனத்தில் வணக்கம் எனும் எழுத்துகள் மட்டுமே வாட்ஸ் அப் நிகழ்நிலையாக இருக்கிறது. பார்க்கும் போது எழுத்துகள் மட்டுமே தெரியும். சரிங்களா.

புதிய இற்றையத்தின் வழியாக அந்த நிகழ்நிலையை ஒரு படமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஒரு காணொளியாகவும் மாற்றி கொள்ளலாம். அவசரப்பட வேண்டாம். இன்னும் ஒரு விசயம் இருக்கிறது.

இந்த மாற்றங்களை முதலில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்கிறார்கள். பின்னர் தான் உலகம் முழுமைக்கும் கொண்டு வருவார்கள். அப்புறம் என்ன. ஆளாளுக்குத் தங்களின் நிகழ்நிலைகளில் காணொளிகளைப் படங்களாகப் போட்டு ஒரு வழி பண்ணப் போகிறார்கள்.