02 செப்டம்பர் 2017

நீல உத்தமன் புகழாரம்

சிங்கப்பூரை நீல உத்தமன் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நீல உத்தமன் தான் சிங்கப்பூருக்குச் சிங்க ஊர் என்று பெயர் வைத்தவர். சிங்கப்பூர் வரலாறும் சிதைவு படாமல் அவரைப் பற்றி சித்திரம் பேசுகிறது.


சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகி எனும் ஒரு சிற்றரசர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். 1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதன் பின்னர் சிங்கப்பூரில் நீல உத்தமனின் ஆட்சி. அப்போது சிங்கப்பூர் சின்ன ஒரு மீன்பிடி கிராமம். கடல் கொள்ளையர்களின் உறைவிடம். அப்போது அது ஒரு பட்டினம் அல்ல. ஆக தெமாசிக் என்பதைச் சிங்கப்பூர் என மாற்றிக் காட்டியவர் நீல உத்தமன். 


சிங்கப்பூர் மக்களும் அவரை மறக்கவில்லை. அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் சீரும் சிறப்புமாய்ச் செய்து வருகிறார்கள். போதுமான மதிப்பு மரியாதைகளைக் கொடுத்து வருகிறார்கள்.

அஞ்சல் தலை வெளியீடு செய்வதில் இருந்து பள்ளிக்கூடம், அருங்காட்சியகம் கட்டுவது வரை பல்வேறு சிறப்புகளைச் செய்து இருக்கிறார்கள். திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் The Hunt for the Red Lion எனும் தலைப்பில் ஓர் ஆவணப் படம் தயாரித்து நீல உத்தமனுக்குப் பெருமை செய்தார்கள். வரலாற்றுப் பாட நூல்களில் அவரை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்து இன்றும் புகழாரம் செய்கிறார்கள். சிங்கப்பூர் நூல்நிலையங்களில் அவரைப் பற்றி குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லித் தருகிறார்கள்.

ஆனால் மற்ற இடத்தில் அப்படியா நடக்கிறது. மலேசிய இந்தியர்களின் காலச் சுவடுகளை எல்லாம் சிதைத்துச் சின்னா பின்னமாக்கி வருகிறார்கள். காட்டை அழிப்பது போல புல்டோசர் போட்டு இந்தியக் கலாசாரங்களைச் சகட்டு மேனிக்கு அழித்து அடையாளம் தெரியாமல் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.

நம் காலச்சுவடுகளைப் பழிக்கும் அவர்களை குறை சொல்ல வேண்டாம். ஏன் என்றால் அவர்கள் அப்படி செய்வதால் தான் நமக்குள் ஓர் ஆழமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மலேசிய இந்தியர்களின் வரலாறு ஒரு பக்கம் குழி தோண்டிப் புதைக்கப் படுகிறது. பரவாயில்லை. நாங்கள் ஒரு பக்கம் தோண்டி எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

மேலும் மேலும் கூடுதலான சான்றுகளைத் தேடிப் பிடித்துப் போராட்டம் செய்து வருகிறோம். ஆக ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரையிலும் நம்முடைய இந்தப் போராட்டம் தொடரும். 

2007ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் *நீல உத்தமனின் நீள் பயணம்* (Legenda Singapura - Sang Nila Utama's journey) எனும் ஒரு நாடகக் காவியத்தையும் அரங்கேற்றம் செய்தார்கள். அந்த நாடகத்தில் இருந்து சில காட்சிகள்...

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான்.

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4

நீல உத்தமன் பார்த்தது சிங்கமாக இருக்க முடியாது. ஏன் என்றால் இந்த உலகில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் சிங்கம் இருக்கிறது. ஒன்று ஆப்பிரிக்க நாடுகள். மற்றொன்று இந்தியா. ஆக சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.


நீல உத்தமன் இறந்ததும் அவருடைய உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் புக்கிட் லாராஙான் (Bukit Larangan) குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது.

அவருடைய மனைவியும் அங்கே தான் புதைக்கப் பட்டார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி. (Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet)

அதன் பின்னர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு அவருடைய மகன் ஸ்ரீ விக்ரம வீரா (Seri Wikrama Wira) என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. ஸ்ரீ விக்ரம வீராவின் தாயார் பெயர் ஸ்ரீ பினி (Sri Bini). அதாவது நீல உத்தமனின் மனைவியின் பெயர் ஸ்ரீ பினி. இந்தப் பினி எனும் சொல்லில் இருந்து தான் பினி (மனைவி) எனும் மலாய்ச் சொல்லும் உருவானது.

ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் ஒரு பெரிய சயாமியத் தாக்குதலும் நடந்தது.

வடக்கே இருந்து 70 கப்பல்களில் சயாமியர்கள் வந்தனர். பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது.

அதற்குள் சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கி விட்டது. கடைசியில் சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ரானா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார். (சான்று: Dr. John Leyden (1821). Malay Annals பக்: 44–49)

இவருக்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா. இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1375 ஆண்டில் இருந்து 1389 வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

1375ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆகக் கடைசியாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. இவர் சிங்கப்பூரை 1389 லிருந்து 1398 வரை ஆட்சி செய்தார். இவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா. சரிங்களா.

இவர் சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. மறுபடியும் சொல்கிறேன். இவர் தான் நீல உத்தமனின் கொள்ளுப் பேரனின் மகன். இருந்தாலும் கொள்ளுப் பேரன் என்று சொல்லலாமே.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார். 


 (தொடரும்)

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). கி.பி.1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய அரசின் அரசராக நீல உத்தமன் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். 


இவருக்கு முன்னர் பலேம்பாங்கை நீல உத்தமனின் தந்தையார் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Prabhu Dharma Sena Tribuwana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).  நீல உத்தமனின் தாயார் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari).

(சான்று: http://www.royalark.net/Malaysia/malacca2.htm)

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் ஸ்ரீ விஜய அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது.
 

அத்துடன் ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தக் கட்டமாக நீல உத்தமன், பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டார். அதற்கு அவரே அரசர் ஆனார்.

(சான்று: Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 82–83.)

இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார்.

சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான். சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் அந்தச் சீனத் தூதர் வழங்கினார். 


(சான்று: John N. Miksic (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. p. 154)

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Seri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1347 லிருந்து 1362 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

இவர் 1362 லிருந்து 1375 வரை சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் பதவிக்கு வந்தார். இவர் 1375 லிருந்து 1389 வரை சிங்கப்பூரை ஆட்ி செய்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும்.

அடுத்து வந்தவர் பரமேஸ்வரா (Parameswara). இவர் சிங்கப்பூரை 1389 லிருந்து 1398 வரை ஆட்சி செய்தார். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா.

*செஜாரா மலாயு* எனும் மலாய் வரலாற்றுக் காலக் களஞ்சியம், சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனை வேறு கோணத்தில் சித்தரிக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். (The accuracy and historicity of the Malay Annals is in doubt according to historians).
(தொடரும்)

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. 


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜய பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார தென்கிழக்காசிய அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜய பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

ஸ்ரீ விஜய பேரரசின் புகழ் கி.பி. 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது. கி.பி. 1025 ஆம் ஆண்டில் இந்த ஸ்ரீ விஜய பேரரசு தமிழகத்தின் ராஜேந்திர சோழனால் தாக்கப்பட்டது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜய பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனை இருந்தது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜய பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது.

ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு. புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது.

14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகித் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது. (தொடரும்)

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1

ஏழு சுவரங்களில் சம்பூர்ண ராகம். ஆறு சுவரங்களில் சாடவ ராகம். ஐந்து சுவரங்களில் ஔடவ ராகம். நான்கு சுவரங்களில் வக்ர ராகம். அரகோண சுவரங்களில் தலையான ராகம் சம்பூர்ண ராகம். அதுவே அப்போதும் எப்போதும் ஓர் அழகிய அற்புதமான பரமேஸ்வரா ராகம். 


பரமேஸ்வரா என்பது ஒரு ராகம். மலேசிய வரலாற்றில் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம். இருந்தாலும் இப்போதைக்கு வேதனையின் விளிம்பில் விசும்பிக் கொண்டு இருக்கும் ஒரு விசும்பல் ராகம்.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்துப் பள்ளிப் பாட நூல்களில் இருந்து கனவுகளாய்க் கரைந்து கசிந்து போகின்ற காம்போதி ராகம்.

எந்த ஒரு மனிதனும் காணாமல் போகலாம். அவனைத் தேடிக் கண்டிப்பிடிக்கலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க. அதுதான் இங்கே நடக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. எழுதுவதற்கு வெட்கமாகவும் இருக்கிறது.

கடல் தாண்டிய கரையில் அத்திம் மேடு என்பது ஒரு பௌர்ணமிக் கோளாறு என்றால் அதுவே இங்கே ஒரு பட்டப் பகல் கொள்ளை. ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியப் போகிறது.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத் தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது. அந்த உண்மை மறைக்கப் படவும் கூடாது. அவை தான் மனத்தை நெருடும் ஆதங்க ஆர்ப்பரிப்புகள்.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? பரமேஸ்வரா எனும் பெயர் இந்த மண்ணில் நிலைக்க வேண்டும்.

பரமேஸ்வரா எனும் ஒரு மகா புருசர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் சத்தியமான உண்மை நிலைக்க வேண்டும். இப்போது வாழும் நாம் மரித்துப் போனாலும் நம்முடைய வாரிசுகள் அந்த உண்மையைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று உண்மை நிலைத்து நீடிக்க அவர்கள் போராட வேண்டும். (தொடரும்)