04 அக்டோபர் 2017

துன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில்


துன் மகாதீர் 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். அவருடைய ஆளுமையின் போது ஜ.செ.க. கட்சியை மலேசியாவின் மிகப் பெரிய தீண்டாமையாகச் சித்தரித்தவர். அதன் தலைவர்களாக இருந்த பட்டு, கர்ப்பால் சிங், சென் மான் ஹின், லிம் கிட் சியாங் போன்றவர்களைத் தடுப்புக் காவலில் தூக்கிப் போட்டு வருடக் கணக்கில் ஒரு வழி பண்ணியவர்.

பட்டு எனும் ஒரு தமிழனை நசுக்கி நகர முடியாமல் செய்தவர். கமுந்திங் சிறைக் கூடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர். ஆனால் பாருங்கள் நேற்று திங்கட்கிழமை அதே ஜ.செ.க. தலைமையகத்தில் கால் பதித்து அழகு செய்து இருக்கிறார்.

வண்டியும் ஒரு நாள் படகில் ஏறும் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம்பா என்று சொல்லிப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.


துன் மகாதீருக்குப் பின்னால் ராக்கெட் சின்னம் இருப்பதைக் கவனியுங்கள். அவருக்கு அருகே பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில். ஜ.செ.க. பொதுச் செயலாளர் லிம் குவான் எங்.

எதிரியை வீழ்த்த... என்ன வேண்டும் என்றாலும் செய்பவர்கள் சிலர். அதில் துன் மகாதீருக்குச் சிம்மாசனம் கொடுக்கலாம். அவருக்கு நடிப்பரசன் நம்பர் ஓன் பட்டத்தை சிபாரிசு செய்யலாம். ஓநாய் நனைகிறதே என்று ஆடு அழுதாலும் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதாலும் ஆட்டிற்குத் தான் ஆபத்து.

எதையும் பாசிட்டிவ் மனத்துடன் ஏற்றுக் கொள்வோம். நல்லதே நடக்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம். ஆயிரம் தான் சொன்னாலும் என் மலேசியத் தமிழர் இனத்திற்கு துன் மகாதீர் செய்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது. மன்னிக்கவே மாட்டேன்.

இருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு


 
 
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான வழக்கு

இந்த வழக்கு 2017 செப்டம்பர் 28-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. 

அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றுப் போனது. அதனால் இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப் பட்டது.


இருமொழித் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகள் அமலாக்கம் செய்யக் கூடாது என்று மே 19 இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளி இந்த இருமொழித் திட்டத்தை அந்தப் பள்ளியில் அமல் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரி ஒரு நீதி மறுசீராய்வு (Judicial Review) மனுவைக் கடந்த 5.9.2017-இல் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.

அதன் சார்பாக அந்த வழக்கின் முழு விசாரணைக்கு முன்பாக அப்படிப் பட்ட வழக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கு நீதி மறுசீராய்வுக்கு உகந்ததா என்பதையும் உயர் நீதி மன்றம் பரிசீலனை செய்யும். 



அந்த வகையில் கடந்த 28.9.2017-இல் நீதிபதி டத்தின் ஹாஜா அசிசா பிந்தி ஹாஜி நவாவி அவர்கள் முன் பரிசீலனக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த வழக்கு மறுசீராய்வுக்கு உகந்தது என்ற தீர்ப்பையும் வழங்கியது.

இந்த வழக்கின் பிரதிவாதிகள்:

1.     பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. பஞ்சினியம்மாள்; 

2.     மலேசியக் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர்; 

3.     மலேசியக் கல்வி அமைச்சர்;



பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளிக்கு எதிரான இந்த வழக்கின் வாதிகள்: 
 
1.     பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இராஜரெத்தினம்;

2. பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப் பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவர் டாக்டர் செ. செல்வம்; 

3.      சுவராம் இயக்கத்தின் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் 
4.     ஒரு பெற்றோர்.

இவர்களின் வழக்குரைஞராகத் தினகரன் வாதாடினார். இந்த வழக்கு மீண்டும் இந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

செய்தி: செம்பருத்தி

01 அக்டோபர் 2017

பிரபாகரன் வேலுப்பிள்ளை - 1



 அதே இந்த நாளில் ஈழ மண்ணின் பச்சைக் குழந்தை பாலச்சந்திரனின் 18-வது பிறந்த நாள். ஒரே சுவடியில் இரு சுவடுகள்...

காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் பிசகவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடுமபத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.


பார் போற்றும் வீரப் பொக்கிஷமே... ஈழத் தமிழர்களின் பொற்கலசமே... உன்னை நினைக்கின்றேன்... இந்த உலகத் தமிழர்களுக்காக உன்னையும் உன் குடும்பத்தையும் அர்ப்பணித்துச் சென்றாயே... கண்ணீருடன் கைகூப்புகின்றேன்...

பால் மனம் மாறா பச்சை சிசுக்கள் வெட்டி வீசப் படுகிறார்கள். பருவம் மாறா பெண்கள் துகில் உரியப் படுகிறார்கள். பச்சைக் கணவர்கள் கண் முன்னாலேயே கசக்கிப் பிழியப் படுகிறார்கள். நலிந்த பெண்கள் நாசம் செய்யப் படுகிறார்கள்.
 

அதே அந்த வாசலில்… ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அருவம் தெரியாமல் அழிக்கப் படுகிறார்கள். வேடிக்கை பார்த்தது ஒரு தாய் நாடு. விலை பேசியது ஒரு தமிழர் நாடு. வெட்கித் தலைகுனிந்தது உலகத் தமிழர்க் கூட்டம். வெட்கம் வெட்கம் என்று வையகமே இப்போது வாரி உமிழ்கின்றது.

இந்த இலட்சணத்தில் இந்த மண்ணில் இலங்கா இராட்சசன் இடது காலை எடுத்து வலது காலை வைக்கின்றான். எதிர்த்து நின்றது மலேசிய இளைஞர் கூட்டம்.
 

உதிர்த்த உணர்வுகளினால் எழுச்சியின் வீர வேகங்கள். தற்போதைக்குத் தற்காலிக விடுதலை. தரணி போற்றும் மாந்தர்கள். வாழ்த்துகிறோம். அந்த ராகங்களுக்கு எல்லாம் தலைமகனாக விளங்கிய ஓர் அழகிய மகனின் வரலாறு வருகிறது. படியுங்கள்.

ஈழ மக்களின் ஈடு இணையற்றத் தலைவராக இன்றும் அந்தத் தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஊனிலும் உயிரிலும் உரிமை உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்கின்றார். அந்த மாமனிதரின் வீர வரலாற்றை ஓர் ஆவணமாக முன் வைக்கிறேன்.

ராஜபக்சேயின் ஈனச் செயல்களை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்பவில்லை. காலம் அந்த மனிதரை அப்போதும் இப்போதும் எப்போதும் தண்டிக்கும். அந்த மனிதர் தலைகால் தெரியாமல் ஓடுகிறார் ஓடுகிறார்… வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிக் கொண்டு இருக்கிறார். ஓடட்டும்.
 

அந்த மனிதரின் பாவச் செயல்கள் எல்லாம் நம் நெஞ்சங்களை கிழித்துப் பார்க்கும் வேதனையின் விரிசல்கள். ஆக… வெந்து போன புண்ணில் மறுபடியும் பழுத்துப் போன ஆணிகளைப் பாய்ச்சாமல் இருப்பதே நல்லது.

படியுங்கள். படித்து விட்டு மனசுக்குள் மௌனமாக அஞ்சலி செய்யுங்கள். அதுவே மறைந்து போன வீர ஆத்மாக்களுக்கும் அவர்களைச் சார்ந்த ஜீவன்களுக்கும் நாம் செய்யும் கைமாறு. அதுவே ஒரு வீர வணக்கம் ஆகும்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் இறக்கவில்லை. எங்கோ மறைந்து வாழ்கிறார். சரியான நேரத்திற்காகக் காத்து நிற்கிறார் என்று பலர் சொல்கின்றனர். சொல்லியும் வருகின்றனர். உண்மை அப்படியே அமையட்டும். அதுவாகவே இருக்கட்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் தேதி. முன்னிரவு நேரம். போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு மூலையில் சார்லஸ் ஆண்டனி என்பவர் நேரடியாகக் களம் இறங்குகிறார்.
 

இன்னும் ஒரு மூலையில் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர்களின் அவசரக் கூட்டம். ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்காக அவர்கள் கூடி நிற்கிறார்கள்.

இந்தச் சார்லஸ் ஆண்டனி என்பவர் வேறு யாரும் இல்லை. அவர்தான் பிரபாகரனின் மூத்த மகன். அவரைப் பாதுகாப்பாகப் போர் முனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று மற்றத் தலைவர்கள் விரும்புகிறார்கள். சார்லஸ் ஆண்டனியைப் போருக்கு அனுப்பலாமா வேண்டாமா என்றும் தலைவர்கள் விவாதம் செய்கின்றனர்.

ஒரு நீண்ட நெடிய மௌனத்துக்குப் பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்படிச் சொல்கிறார். ’விடுதலைக்காகப் போராடும் போது என் பிள்ளைகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு சலுகைகள் எதையும் கொடுக்க விரும்பவில்லை.
 

அவனைக் கடைசியாகப் பார்ப்பதாக இருந்தாலும் கூட நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவன் போர்க் களத்தில் இறந்து போவதை யாரும் தடுக்க வேண்டாம்’ என்கிறார்.

அதுதான் பிரபாகரனின் தன்னல மறுப்பு மனப்பான்மை. தியாகம், எளிமை, அடக்கம் ஆகியவை

காந்திய யுகத்தின் அடிப்படைப் பண்புகள். தன் வாழ்நாளின் கடைசி விநாடி வரையில் அந்தக் கொள்கைப் பண்புகளில் இருந்து இம்மியும் பிசகவில்லை.

தன்னுடைய ஒட்டு மொத்தக் குடுமபத்தையே தமிழ் இனத்திற்காகத் தாரை வார்த்துக் கொடுத்தவர். அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

30 செப்டம்பர் 2017

ஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்


ஜொகூர் மாநிலத்தின் பாக்காத்தான் ஹரப்பான் தலைவராகப் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அம்னோ கட்சி ஜொகூர் மாநிலத்தில் தான் முதன்முதலில் தோற்றுவிக்கப் பட்டது. 

அடுத்து வரும் 14-வது பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தைத் தனது முன்னணி மாநிலமாக முன்னிறுத்தி பாக்காத்தான் ஹரப்பான் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

மொகிதின் யாசின் அம்னோவில் இருந்து விலக்கப் பட்டதால் ஜொகூர் மாநிலத்தில் அதிருப்தி நிலவுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜொகூரின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 15 தொகுதிகளில் வெற்றி காண எதிர்க் கட்சிகள் திட்டம் கொண்டுள்ளன.

ஜொகூரில் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகள். அவற்றில் தற்போது 19 சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க் கட்சிகள் தங்கள் வசம் கொண்டுள்ளன. மாநில ஆட்சி அமைக்க 28 சட்டமன்றத் தொகுதிகள் தேவை.

தியான் சுவா - சிறையில் பகவத் கீதை




தியான் சுவா என்பவர் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். பி.கே.ஆ.ர் கட்சியின் உதவித் தலைவர். பற்பல போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர். பற்பல விசாரணைகளுக்கு உள்ளானவர். இருந்தாலும் இப்போதுதான் முதன் முறையாக ஒரு மாத சிறைவாசம் பெற்றார்.

காஜாங் சிறையில் அவர் தனது அடுத்த ஒரு மாத காலத்தைக் கழிக்கும் போது அங்கே பகவத் கீதையையும், சமஸ்கிருத மொழியையும் படிக்கப் போவதாகச் சொல்கிறார். பகவத் கீதையின் வழி இந்து மதம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றார்.


அவருக்கு அந்தப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றை அவர் சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கோரி இருக்கிறார். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. 

ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு பெர்சே - 3 பேரணியின் போது போலீஸ் பயிற்சி மையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டதை தியான் சுவா ஏற்க மறுத்தார். அதனால்  கைது செய்யப் பட்டார். 


அவர் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 1000 ரிங்கிட் அபராதமும் 1 மாத சிறைத் தண்டனையும் வழங்கியது.


அந்தத் தீர்ப்புக்கு எதிராக தியான் சுவா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தியான் சுவா தன் மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டார். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் ஒரு மாத சிறைவாசத்தையும் அனுபவிக்கத் தயார் ஆனார்.


தனது சிறைவாசக் காலத்தின் போது பகவத் கீதை, சமஸ்கிருதம், லத்தீன் மொழி, பைபிள் படிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று அவரின்  வழக்கறிஞரும் பி.கே.ஆர். கட்சியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.