25 அக்டோபர் 2017

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1

தென் தாய்லாந்தில் கோலோக் என்பது ஒரு சுற்றுலா சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ. தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் ஒரு குட்டிக் கிராமம். பெயர் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் (Kampung Chulaborn). அங்கே 260 முன்னாள் மலாயா கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். 
 

அனைவரும் முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள். இவர்களுடன் அவர்களின் மனைவி பிள்ளைகள், உறவினர்கள் என மொத்தம் 460 பேர் இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு தமிழர்க் குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் ஆசிர்வாதம். (பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). வயது 75.

இவர் பேராக் மாநிலத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர். ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே இப்போது வாழ்ந்தும் வருகிறார்.

சொந்த பந்தங்கள் எல்லாம் சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார் பகுதிகளில் இருக்கின்றன. முன்பு மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த ஒருவரைத் தங்களின் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ள அவருடைய சொந்தக்காரர்களுக்கே விருப்பம் இல்லையாம். அதைப் பற்றி ஆசிர்வாதமும் கவலைப் படவில்லை.

மலேசிய அரசாங்கம் இன்னும் ஆசிர்வாதத்திற்கு குடியுரிமை வழங்கவில்லை. அவரிடம் சிவப்பு அடையாளக் கார்டு இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்ற முயற்சி செய்து கொண்டு வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறையாவது மலேசியாவிற்குள் வந்து போகிறார். மனைவி ராஜம்மா சுலாங்போர்ன். தாய்லாந்து பிரஜை. இன்றையக் கட்டுரை மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதத்தைப் பற்றியது.
(சான்று: https://www.malaysiakini.com/news/111797 - The last of CPM's Indian communists)

படியுங்கள். மலேசியத் தமிழர்களும் சரி உலகத் தமிழர்களும் சரி அவரை நினைவில் கொள்ள வேண்டும்.

கோலோக் (Golok) என்பது ஒரு சிறுநகரம் தான். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாமே அங்கே கிடைக்கும். புரிந்து கொள்ளுங்கள். நான் சொல்லவில்லை. போய் வந்தவர்கள் சொல்கிறார்கள்.

முன்பு எல்லாம் ஆண்கள் சிலர் அங்கே சென்று வருவது வழக்கம். நானும் என் நண்பர்களும் இருமுறை போய் வந்து இருக்கிறோம்.

அதில் எந்த இனத்து ஆண்கள் அதிகம் போய் வருகிறார்கள் என்று கேட்க வேண்டாம். சமரசம் உலாவும் இடத்தில் இன மொழி உணர்வுப் பண்புகள் எல்லாமே அடிபட்டுப் போய் விடுகின்றன.

அங்கே இருந்து சிபிலிஸ், கொனோரியா போன்ற பாலியல் நோய்களைக் காசு கொடுத்து வாங்கி வந்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது கோலோக் சமாசாரம் குறைந்து விட்டது.

அதுதான் அடிவாசலில் மேல்நாட்டு ரம்பைகளும் ஊர்வசிகளும் அணிவகுத்து நிற்கிறார்களே. அப்புறம் ஏன் அங்கே போக வேண்டும். ஆக கோலோக் இரவு யாத்திரை குறைந்து போனதில் நியாயம் இருப்பதில் நியாயம் தெரிகிறது.
ஒரு முக்கியமான விசயம். கோலோக் நகரத்திற்கும் நாடு கடந்து வாழும் முன்னாள் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேறு ஒரு பக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தை, பால் சுல்லாபோர்ன் பட்டனா (Ban Chulaborn Patana 12) என்றும் அழைப்பார்கள். கோலோக் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுக்கிரின் எனும் ஒரு குறுநகரம் இருக்கிறது. அங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் ஒரு பெரிய ஆழ்க் காடு. அந்தக் காட்டுக்குள் அந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் இருக்கிறது.

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை. அப்படி ஒன்றும் அங்கே சுலபமாகப் போய் வந்துவிடவும் முடியாது. தெரியாதவர்கள் யாரையும் அந்தக் கிராமத்திற்குள் விடவும் மாட்டார்கள்.

தவிர கிராமத்திற்குப் போகும் மண் சடக்கில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள், குட்டிக் குட்டி ஆறுகள், சின்னப் பெரிய மண்சரிவுகள். இடை இடையே காட்டு யானைகளின் உருட்டல் மிரட்டல்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போக மூன்று நான்கு மணி நேரம் பிடிக்கும்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும், முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் 10-ஆவது ரெஜிமெண்டைச் (10th Regiment of the Communist Party of Malaya (CPM)) சேர்ந்தவர்களின் குடும்பங்கள். அவர்களின் உறவினர்கள்.

இவர்களுக்கு அப்துல்லா சி.டி. (Abdullah CD) என்பவர் தலைவராக இருக்கிறார். துணையாக அவருடைய மனைவி சுராய்னி அப்துல்லா (Suriani Abdullah) என்பவரும் உதவிகள் செய்து வருகிறார்.

முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் அப்துல்லா சி.டி. மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மனிதர். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர். மலாயாக் காடுகளில் 45 ஆண்டுகால வாழ்க்கை.
இவரைத் தவிர சின் பெங் (Chin Peng), ரசீட் மைடின் (Abdul Rashid bin Maidin), சம்சியா பாக்கே (Shamsiah Fakeh), மூசா அமாட் போன்றவர்களும் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள். வாழ்ந்தார்கள்.

இவர்களில் சின் பெங்கைத் தவிர மற்றவர்களுக்கு மலேசியாவிற்குள் திரும்பி வர அனுமதி வழங்கப் பட்டது. ரசீட் மைடின் என்பவருக்கு தாய்லாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்கி இருக்கிறது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சின் பெங்கிற்கு தாய்லாந்து குடியுரிமையும் கிடைக்கவில்லை. மலேசியக் குடியுரிமையும் கிடைக்கவில்லை. பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். கடைசியில் அவர் நாடற்றவராக அண்மையில் இறந்து போனார்.

1989-ஆம் ஆண்டில், மலேசியா, தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதாவது இனிமேல் மலேசியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் எனும் ஒப்பந்தம். 

அதன்படி இந்தக் கம்யூனிஸ்டுகள் தங்கி வாழ்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் ஒரு காட்டுப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது. அது இப்போது ஒரு கிராமமாக மாறிவிட்டது.
(சான்று: http://bersamajeli.blogspot.my/2012/11/lawatan-ke-ban-chulabhorn-patna-12.html - LAWATAN KE BAN CHULABHORN PATNA 12)

ஆரம்பத்தில் 260 பேராக இருந்த கிராமம் சென்ற ஆண்டு 460-ஆக பெருகி நிற்கிறது. அங்கே வாழ்பவர்களில் ஒருவர்தான் ஆசீர்வாதம்.

மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஆசீர்வாதம் பல முறை முயற்சிகள் மேற்கொண்டார். வெற்றி பெற முடியவில்லை. அவரிடம் மலேசிய சிவப்பு அடையாள அட்டை மட்டுமே இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறை மலேசியாவிற்கு வந்து போகிறார். இதுவரையில் 10,000 ரிங்கிட்டிற்கு மேல் செலவு செய்து விட்டதாகவும் சொல்கிறார். இன்னும் நீலநிற அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. குடியுரிமையும் கிடைக்கவில்லை.

சரி. அதற்கு முன் மலாயா கம்யூனிஸ்டு கட்சியைப் பற்றி கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

மலாயாவை ஜப்பானியர்கள் கைபற்றிய போது அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு விடுதலை முன்னணி உருவாக்கப் பட்டது. அந்த விடுதலை முன்னணிக்கு பிரிட்டிஷ்காரர்கள் ஆயுதங்களைக் கொடுத்து உதவினார்கள். நிதியுதவியும் செய்தார்கள். ஒரு சிலருக்கு விருதுகளைக் கொடுத்து விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

அந்த விடுதலை முன்னணிக்குப் பெயர் மலாயா விடுதலை முன்னணி. ஆங்கிலத்தில் Malayan People's Anti-Japanese Army என்று சொல்வார்கள். அந்த விடுதலை முன்னணியில், மலாயாவின் மூன்று இனங்களும் சரி சமமாகப் பங்கெடுத்துக் கொண்டன.

மலாயாவை ஜப்பானியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளுடன் இந்தியர்களும் போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். அந்தப் போராட்ட வீரர்களில் முதலில் வருபவர் ஜப்பானிய எதிர்ப்பாளர் சிபில் கார்த்திகேசு.

இவர் ஆயிரக் கணக்கான சீனர்களுக்கு உதவிகள் செய்தவர். கடைசியில் மனிதச் சித்ரவதைகளின் சிகரத்தில் அனாதையாகிச் செத்தும் போனார். அவரைப் போல இந்தியர்கள் பலர் மலாயா மக்களுக்காகப் போராடி இருக்கிறார்கள். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து காணாமல் போனது தான் மிச்சம்.

அவர்களில் ஒருவர் மலாயா கணபதி. இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். கடைசியில் ஆங்கிலேயர்கள் அவரைத் தூக்கில் தொங்கப் போட்டு தொடை தட்டிக் கொண்டார்கள். 
அகில மலாயாத் தொழிற்சங்கச் சம்மேளனத் தலைவர் பி. வீரசேனன். சின்ன வயதில் பெரிய இலட்சியவாதி. பகாங் காராக் பகுதியில் இவரை சுட்டே கொன்றார்கள்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் துணைத் தலைவர் கம்பார் ஆர்.ஜி.பாலன். அந்தக் கட்சியில் ஆக உயர்ந்த பதவி வகித்த ஒரே தமிழர். இவர் வந்தார் என்றால் கம்பார் நகரமே நடுங்கும் என்றும் சொல்வார்கள். 

இவருக்கு ஆங்கிலேயர்கள் தங்கப் பதக்கம் கொடுத்து உச்சி முகர்ந்தார்கள். தங்கப் பதக்கம் பெற்ற இவர் என்ன ஆனார் என்பது இன்று வரை ஒரு பெரிய ரகசியம். தங்கமலை ரகசியம் தோற்றது போங்கள்.

இன்னும் ஒருவர் இருக்கிறார். 1940-களில் கிள்ளான் தொழிற்சங்கப் போராட்டவாதியாக இருந்த ஆர். எச். நாதன். இவரை இந்தியாவிற்கு நாடு கடத்தினார்கள். மனைவி மக்களை விட்டு கண்ணீர் வடித்துக் கொண்டு போனவர்.

கடைசி வரை அவர் மலாயாவுக்குள் திரும்பி வரவே முடியவில்லை. கடைசி வரை வெள்ளைக்காரர்கள் அவரை மலாயாவுக்குள் விடவே இல்லை. இவர் இந்தியாவிலேயே இறந்து போனார். இவருடைய வாரிசுகள் இப்போது கிள்ளானில் இருக்கிறார்கள்.

மலாயா மக்களின் நலன்களுக்காகப் போராடிய இவர்களை மலேசிய இந்தியர்களும் மறந்து விட்டார்கள். மலேசிய வரலாறும் மறந்து விட்டது. அதே போலத்தான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆசீர்வாதம். இவரையும் மறந்து விட்டார்கள். காலத்தால் மறக்கப்பட்ட மனிதர்களில் ஆசீர்வாதம் என்பவரும் ஒருவர்.

மலாயா விடுதலை முன்னணி கதைக்கு மறுபடியும் வருவோம். ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் வெள்ளைக்காரர்கள் வரும் வரையில் அந்த மலாயா விடுதலை முன்னணி தான் மலாயாவை 18 நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. ஆட்சியும் செய்தது.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். அதாவது நாம் வாழும் இந்த மலேசியாவை கம்யூனிஸ்டுகள் 18 நாட்களுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. மலாயா வரலாற்றைப் படித்துப் பாருங்கள். இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. ரொம்ப வேண்டாம்.

சிலாங்கூரில் இருக்கும் ரவாங் நகரத்தை இந்தியர்கள் சில நாட்கள் ஆட்சி செய்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

22 அக்டோபர் 2017

கெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள்

மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய அரசர்களின் பட்டியல். போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். 
 

மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை (Kedah kingdom - Kadaram) உருவாக்கியவர்.

(சான்று:https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah,

மாறன் மகாவம்சன் என்பவர் ஈரானின் தென்பகுதி துறைமுகப் பட்டினமான கொம்ரூன் (Gombroon) பகுதியில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.


மாறன் மகாவம்சன் பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி லங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.

பாண்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த போது இந்த மாறன் மகாவம்சன் லங்காவித் தீவிற்கு வந்து இருக்கிறார். பின்னர் கெடாவில் குடியேறி இருக்கிறார். அப்படியே கெடா பேரரசையும் உருவாக்கி இருக்கிறார். வணிகம் செய்வதே அவரின் பிரதான நோக்கம். ஆட்சி செய்வது அல்லது நிலத்தை ஆட்கொள்வது அவரின் நோக்கம் அல்ல.

அந்த வகையில் கெடா பேரரசு என்பது தொடக்க காலத்தில் ஓர் இந்து பேரரசு. சில காலம் புத்த மதமும் இந்தப் பேரரசுடன் இணைந்து இருந்தது.



 மறுபடியும் சொல்கிறேன். லங்காசுகம் இருந்த காலக் கட்டத்தில் தான் கெடா பேரரசு (Kedah kingdom (Kadaram)  தோற்றுவிக்கப் பட்டது. இந்த இரு அரசுகளுமே ஒரே காலக் கட்டத்தில் கோலோச்சிய பேரரசுகள்.

கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார். மதமாற்றம் நடந்ததும் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது.

கெடா பேரரசு கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள்.

(சான்று: https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100  The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

எப்படி மதமாற்றம் நடந்தது என்பதையும் கவனியுங்கள்.

கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் Sheikh Abdullah bin Ja'afar Quamiri என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா சாம்ராஜ்யத்தின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை மதம் மாற்றம் செய்தார். அந்த அரசருக்கு Mudzaffar Shah I என்று பெயர் மாற்றம் கண்டது.

இப்போது கெடாவின் சுல்தானாக இருக்கும் Abdul Halim Mu'adzam Shah அவர்களும் இதே இந்த அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
(சான்று: https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html )

கெடா மாநில ஆட்சியாளர்கள்
(மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் வந்த இந்து அரசர்கள்)

தர்பார் ராஜா I - Durbar Raja I (கி.பி. 0330 - 0390)

ராஜா புத்ரா - Raja Putra (கி.பி. 0390 - 0440)

மகா தேவா I - Maha Dewa I (கி.பி. 0440 - 0465)

கர்ண ராஜா - Karna Diraja (கி.பி. 0465 - 0512)

கர்மா - Karma (கி.பி. 0512 - 0580)

மகா தேவா II - Maha Dewa II (கி.பி. 0580 - 0620)

மகா தேவா III- Maha Dewa III (கி.பி. 0620 - 0660)

ராஜா புத்ரா II - Raja Putra II (கி.பி. 0660 - 0712)

தர்ம ராஜா - Darma Raja (கி.பி. 0712 - 0788)

மகா ஜீவா - Maha Jiwa (கி.பி. 0788 - 0832)

கர்மா II - Karma II (கி.பி. 0832 - 0880)

தர்ம ராஜா II- Darma Raja II (கி.பி. 0880 - 0956)

தர்பார் ராஜா II- Durbar Raja II (கி.பி. 0956 - 1136)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

கெடா பேரரசில் எப்போது மதமாற்றம் நடைபெற்றது என்பதற்கான சான்றுகள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன.

(https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Dubar Raja II, renounced Hinduism and converted to Islam, which was introduced by Muslims from neighbouring Aceh, he also changed his name to Sultan Mudzafar Shah.)

*மதமாற்றம்*
(https://www.revolvy.com/main/index.php?s=Mudzaffar%20Shah%20I%20of%20Kedah&uid=1575 - Sultan Mudzaffar Shah I, or Phra Ong Mahawangsa (died 1179) was the first Sultan of Kedah. His reign was from 1136 to 1179. He was the last Hindu king of Kedah. After his conversion to Islam, he later became the founder of the Kedah Sultanate, which still exists to this day.)

முஷபர் ஷா I - Mudzaffar Shah I (கி.பி. 1136–1179)

முவட்ஷாம் ஷா - Mu'adzam Shah (கி.பி. 1179–1201

முகமட் ஷா - Muhammad Shah (கி.பி. 1201–1236)

முஷபர் ஷா II - Mudzaffar Shah II (கி.பி. 1236–1280)

முகமட் ஷா II - Mahmud Shah I (கி.பி. 1280– 1321)

இப்ராகிம் ஷா - Ibrahim Shah (கி.பி. 1321– 1373)

சுலைமான் ஷா I - Sulaiman Shah I (கி.பி. 1373–1422)

அதுல்லா முகமட் ஷா I - Ataullah Muhammad Shah I (கி.பி. 1422–1472)

முகமட் ஜீவா ஜைனல் ஷா I - Muhammad Jiwa Shah I (கி.பி. 1472–1506)

முகமட் ஷா II - Mahmud Shah II (கி.பி. 1506–1546)

முஷபர் ஷா II - Mudzaffar Shah III (கி.பி. 1546–1602)

சுலைமான் ஷா II - Sulaiman Shah II (கி.பி. 1602–1625)

ரிஜாலிடின் ஷா - Rijaluddin Muhammad Shah (கி.பி. 1625–1651)

முகயிடின் மன்சூர் ஷா - Muhyiddin Mansur Shah (கி.பி. 1651–1661)

ஜியாடின் முகாராம் ஷா I - Dziaddin Mukarram Shah I (கி.பி. 1661–1687)

அதுல்லா முகமட் ஷா II - Ataullah Muhammad Shah II (கி.பி. 1687–1698)

அப்துல்லா முவட்ஷாம் ஷா - Abdullah Mu'adzam Shah (கி.பி. 1698–1706)

அகம்ட் தாஜுடின் ஹாலிம் ஷா I - Ahmad Tajuddin Halim Shah I (கி.பி. 1706–1709)

முகமட் ஜீவா ஜைனல் ஷா II - Muhammad Jiwa Zainal Shah II (கி.பி. 1710–1778)

அப்துல்லா முகாராம் ஷா - Abdullah Mukarram Shah (கி.பி. 1778–1797)

ஜியாடின் முகாராம் ஷா II - Dziaddin Mukarram Shah II (கி.பி. 1797–1803)

அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா II - Ahmad Tajuddin Halim Shah II (கி.பி. 1803–1843)

ஜைனல் ரசீட் அல்முவட்ஷாம் ஷா I - Zainal Rashid Al-Mu'adzam Shah I (கி.பி. 1843–1854)

அகம்ட் தாஜுடின் முகாராம் ஷா - Ahmad Tajuddin Mukarram Shah (கி.பி. 1854–1879)

ஜைனல் ரசீட் முவட்ஷாம் ஷா II - Zainal Rashid Mu'adzam Shah II (கி.பி. 1879–1881)

அப்துல் ஹமீட் ஹாலிம் ஷா - Abdul Hamid Halim Shah (கி.பி. 1881–1943)

பட்லிஷா - Badlishah (கி.பி. 1943–1958)

அப்துல் ஹாலிம் முவட்ஷாம் ஷா - Abdul Halim Mu'adzam Shah (கி.பி. 1958 - 2017)

(சான்று: http://go2travelmalaysia.com/tour_malaysia/kdh_bckgnd.htm - The Kedah Sultanate began when the 9th Kedah Maharaja Derbar Raja (1136 -1179 AD) converted to Islam and changed his name to Sultan Muzaffar Shah. Since then there have been 27 Sultans who ruled Kedah)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Islamic_era)
(எழுத்து: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

போதுமான வரலாற்றுச் சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

20 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 2

தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை இந்து இந்திய சாம்ராஜ்யங்களுக்கும் கெடாவின் வரலாறு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. இருந்தும் வருகிறது. ஆங்கிலத்தில் forerunner என்று சொல்வார்கள். 



பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாகவே கெடாவில் லங்காசுகம் (Langkasuka) தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அல்லது இரண்டுமே சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம்.

(சான்று: Guy, John (2014). Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia. Yale University Press. pp. 28–29.)

ஒன்றை இங்கே மறந்துவிட வேண்டாம். மாறன் மகாவம்சன் கெடாவில் கால் பதித்த காலத்தில் லங்காசுகம் இருந்ததற்கான சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை. 




ஆனால் லங்காசுகம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாக பூஜாங் சமவெளியில் இந்தியர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது. அது மட்டும் உண்மை. இந்த வரலாற்று நிகழ்வுகள் எல்லாமே கொஞ்சம் முன்னும் பின்னும் இருந்து இருக்க வேண்டும். மிகச் சரியான காலக் கட்டத்தை யாராலும் மிகச் சரியாக வரையறுத்துச் சொல்ல முடியாது.

இதைப் பற்றி நிறைய பேர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள்.

கடாரம் வென்ற சோழன் எனும் ஆவண நூலை எழுதிய டத்தோ நடராஜாவும் ஆழமான ஆய்வுகள் செய்து இருக்கிறார். அவருக்குத் துணையாக நானும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளேன். 




இன்னும் சில வாரங்களில் நாங்கள் இருவரும் தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் செய்கிறோம்.

இருப்பினும் கோத்தா கெலாங்கி வரலாறு தான் என்னுடைய தலையாய ஆய்வுக் களமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோத்தா திங்கி காடுகளில் குடிசை போட்டுத் தங்கி ஆய்வுகள் செய்தோம். எனக்கு உதவியாக ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் இருந்தார். தன்னலம் பாராமல் அல்லும் பகலும் உழைத்து வருகிறார். மலேசியத் தமிழர்கள் என்றைக்கும் இவரை மறந்துவிடக் கூடாது.

கோத்தா கெலாங்கியில் அனுபவித்த வேதனைகளை நினைத்துப் பார்க்கிறோம். சில உண்மைகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. தப்பாக நினைக்க வேண்டாம். இது தனிப்பட்ட பதிவு. ஒரு வரலாற்றுப் பின்னூட்டம்.




காட்டுக்குள் சரியான சாப்பாடு இல்லை. சரியான தூக்கம் கிடைக்காது. இதில் அட்டைக்கடி; தேள்கடி; பூரான் கடி வேறு. கைகால்களில் ரோத்தான் முட்கள் குத்திய காயங்கள். கற்பாறைகளில் விழுந்து எழுந்து உடம்பில் உள்ள ஒரு சில எலும்புகளும் நகர்ந்தும் போயின.

எந்த நேரத்தில் புலி வந்து கடிக்குமோ இல்லை யானை வந்து மிதிக்குமோ இல்லை கரடி வந்து சுரண்டி விட்டுப் போகுமோ என்கிற பயம் வேறு. ஏன் என்றால் கோத்தா திங்கி காடுகள் மிக அடர்த்தியான மழைக் காடுகள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் எங்களின் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

தவிர இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுப் பணிகள். அரசாங்கத்தையோ அரசு சாரா இயக்கங்களின் உதவிகளோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். 




ஏன் என்றால் இந்த ஆய்வுப் பணி மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்கும் பணி. அதனால் சிலருக்குச் சாதகங்கள். பலருக்குப் பாதகங்கள். எங்களின் சொந்தப் பணத்தைப் போட்டுத் தான் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறோம்.

நம் மலேசிய இந்தியர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும். மலேசியத் தமிழர்களுக்கும் இந்த மண்ணில் உரிமை இருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். அதுவே எங்களின் இலட்சியம்.

இந்த நல்ல காரியத்தை விரவிலேயே செய்து முடிக்க வேண்டும். ஆனால் மிகச் சரியான சான்றுகளுடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தான் ஆபத்து. புரியும் என்று நினைக்கிறேன். சரி.




ஒரு தப்பான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்தக் கருத்து ஒரு மாயைக் கருத்தாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்தக் கருத்து அப்படியே நிலைத்துப் போவதும் உண்டு. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

எடுத்துக் காட்டாக நம் தமிழ்ப் பழமொழிகளைச் சொல்லலாம். ஒரு சில பழமொழிகள் தவறாக விமர்சனம் செய்யப் படுகின்றன. அப்படி இருந்தும் அவற்றுக்கு நியாயம் கற்பிக்கிறோம். அப்படித் தவறாகக் கற்பிக்கப்படும் நியாயங்கள் காலப் போக்கில் உண்மையான நியாயங்களாக மாறிப் போகின்றன.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது ஒரு பழமொழி. இது தவறான பழமொழி. அடிமேல் அடிவைத்தால் அம்மி நகராது. தகரும். அதாவது உடையும். ஆக அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும் என்பதே சரியான பழமொழி. நகரும் நகரும் என்று சொல்லிச் சொல்லியே தகரும் எனும் உண்மையானச் சொல் அடிபட்டுப் போய் விட்டது.

இன்னொரு பழமொழி. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன். இந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம் சொல்கிறார்கள் தெரியுமா. ஒரு புருசன்காரன் கல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். புல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். இது என்னங்க புருசனைப் போய் கல்லுக்கும் புல்லுக்கும் உவமானம் செய்வது.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. நன்றாகக் கேளுங்கள். கல்லான் ஆனாலும் கணவன்; புல்லான் ஆனாலும் புருஷன். 




கல்வி அறிவு இல்லாத ஒருவன் (கல்லான்) கணவனாக இருந்தால் அவன் கணவனே. அதே சமயத்தில் அன்பு இல்லாதவனாக (புல்லான்) இருந்தாலும் அவன் கணவனே என்பது தான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்.

ஆக இப்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எனும் பழமொழி ஒரு தவறான பழமொழி. நினைவில் கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு பழமொழி. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை. அப்படினு ஒரு பழமொழி. அதாவது ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள் என்கிற அந்தப் பழமொழி. ஏங்க நான் தெரியாமல் தான் கேட்கிறேன் தப்பாக நினைக்க வேண்டாம்.

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கிறீர்கள். என்ன செய்து வைக்கிறீர்கள். செய்து வச்சிட்டீங்க. சரி. அப்புறம் உண்மை தெரிந்த பிறகு என்னவாகும். 




கல்யாணம் பண்ணிய இரண்டு பேரும் தலைமயிரை இறுக்கிப் பிடித்து இழுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வரமாட்டார்களா. சிரிப்பாய்ச் சிரிக்க மாட்டார்களா. சொல்லுங்கள்.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள். இதுதான் அசல் பழமொழி. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி என்பது ஆயிரம் பொய்யைச் சொல்லி என்று மாறிப் போனது.

இந்த மாதிரி ஆயிரம் பொய்யைச் சொல்லி எத்தனைக் குடும்பங்கள் பொய்க்காரக் குடும்பங்கள் ஆனதோ. யாம் அறியேன் பராபரமே.

இப்படித்தாங்க வரலாற்றையும் அவரவர் இஷ்டத்திற்கு அங்கட்டு இங்கட்டு வெட்டிப் போட்டு ஒட்டி வைத்து பட்டம் விட்டுப் படகோட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாவம் பால் மனம் மாறா பச்சை சிசுக்களும் படித்து மனப்பாடம் செய்து கடுதாசிக் கப்பல் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரிங்க. நமக்கு ஏன் ஊர் பொல்லாப்பு. நம்ப மகாவம்சன் கதைக்கு வருவோம்.

கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). 




அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் கெடாவின் வரலாறே மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.

கி.பி. 1821-ஆம் ஆண்டில் தான் நீராவிக் கப்பல்கள் புழக்கத்திற்கு வந்தன. அதற்கு முன்னர் அனைத்துக் கடல் பயணங்களும் பாய்மரக் கப்பல்களின் வழியாகத் தான் நடந்து இருக்கிறது. ஆழ்கடல்களில் உயிர்களைப் பணயம் வைத்து வணிகம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் ஈரானில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல. 




பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் இதே இந்த மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

(சான்று: http://www.freemalaysiatoday.com/category/nation/2011/09/10/kedah-not-malacca-the-oldest-kingdom/ - B Nantha Kumar (10 September 2011). "Kedah, not Malacca, the oldest kingdom")

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது. வம்சம் என்றால் ஒரே குடும்பத்தின் தொடர்ச்சியான பல தலைமுறைகள். அல்லது பாரம்பரியம் என்றும் சொல்லலாம்.

ஆக மாறன் மகாவம்சன் எனும் சொல் ஒரு தமிழர்ச் சொல். அல்லது இந்தியச் சொல். அது ரோமாபுரிச் சொல்லும் அல்ல. மாசிடோனியாச் சொல்லும் அல்ல.

தமிழ்நாட்டின் நாகப்பட்டனத்தில் இருந்து மாறன் மகாவம்சன் கெடாவிற்கு வந்து இருக்கிறார். சொல்லி இருக்கிறேன். அப்படியே கெடாவில் ஒரு மன்னர் ஆட்சியையும் உருவாக்கி இருக்கிறார். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.




அந்த வகையில் மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய தலைமகன். அவர் கெடாவிற்கு வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. இருந்தாலும் வியாபார நோக்கம் தான் முக்கியமாகக் கருதப் படுகிறது.

ஒரு காலக் கட்டத்தில் இந்தியக் கண்டத்தின் ஒரு துணை நிலமாகக் கெடா விளங்கி இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் அப்போது பர்மா, தாய்லாந்து, மலாயா, ஜாவா, சுமத்திரா, வியட்நாம், கம்போடியா நாடுகள் உள்ளடக்கி இருந்து உள்ளன.

(சான்று: Arokiaswamy, Celine W.M. (2000). Tamil Influences in Malaysia, Indonesia, and the Philippines. Manila s.n. p. 41.)

சேர சோழ பாண்டியர்களைத் தமிழகத்தின் மூவேந்தர்கள் என்று சொல்வார்கள். இவர்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு தமிழ்கப் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கிறார்கள். 

அந்த வகையில் தமிழகத்தின் பல பகுதிகளைப் பாண்டியர்களும் ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள்.

தொடக்கக் காலங்களில் பாண்டியர்களின் தலைநகரமாகக் கொற்கை விளங்கி இருக்கிறது. கி.மு. 600-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி தலைநகரமாக விளங்கி இருக்கிறது. பின்னர் பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் இந்தத் தலைநகரம் மதுரைக்கு மாற்றிச் செல்லப் பட்டது.

பழம்பெரும் வரலாற்று ஆசிரியர்களான பிலினி (Pliny the Elder), ஸ்டிராபோ (Strabo), தோலமி (Ptolemy), பெரிபலஸ் (Periplus) போன்றவர்கள் பாண்டிய மன்னர்களைப் பற்றி நிறையவே ஆய்வுகள் செய்து இருக்கிறார்கள். பதிவுகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதே போல இந்திய வரலாற்று ஆசிரியர் சீனிவாச ஐயங்கார் அவர்களும் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

(சான்று: Iyengar, Srinivasa P.T. (2001). History Of The Tamils: From the Earliest Times to 600 AD. Asian Educational Services.)

தவிர சீன வரலாற்று ஆசிரியர் யூ ஹுவான் (Yu Huan) என்பவரும் பாண்டியர்களைப் பற்றி சொல்லி இருக்கிறார். அவர் வேய்லூ (Weilüe) எனும் நூலை எழுதி இருக்கிறார். பாண்டியர்களை அவர் பான்யூ (Panyue) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

(சான்று: http://depts.washington.edu/silkroad/texts/weilue/weilue.html - A Third Century Chinese Account Composed between 239 and 265 CE.)

(தொடரும்)



கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3