19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5

 தமிழ் மலர் - 11.0.2018 - வியாழக்கிழமை

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம் கடமை

மலேசிய நாட்டிற்கு இருநூறு ஆண்டுகளாய் ஓடாய் உழைத்துத் தேய்ந்தவர்கள். வியர்வைச் சகதியில் குருதிப் புனலைப் பார்த்தவர்கள். மலையூர் காடுகளை வெட்டித் திருத்தி உச்சம் தொட்டவர்கள். பச்சைக் கானகத்தைப் பயிர்விளைப் பூமியாய் மாற்றிப் போட்டவர்கள். 



செம்மண் சடக்குகளில் எலும்பும் தோலுமாய்ச் சிதைந்தும் சேதாரம் மறுத்தவர்கள். இன்று வரையில் தமிழர் அடையாளத்தை இழக்காமல் உரிமைப் போராட்டம் செய்யும் வெள்ளந்தி ஜீவன்கள். அவர்கள் தான் மலையகத்தின் பச்சைத் தமிழர்கள். உங்களையும் என்னையும் பெற்றுப் போட்ட மலையக மாணிக்கங்கள்.

மலாயா தமிழர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒரு பிரிவினர். கொஞ்சம் பணப் போக்குவரத்து உள்ளவர்கள் மற்றொரு பிரிவினர். இந்த இரு பிரிவினரில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் 85 விழுக்காடு என்றால் மற்ற நடுத்தரப் பிரிவினர் 15 விழுக்காடு.

உடல் உழைப்பு தொழிலாளர்களில் பெரும்பாலோர் வறுமை நிலையில் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழ். இவர்களின் பழக்க வழக்கங்கள்; இவர்களின் பாரம்பரியப் பண்பாடுகள்; இவர்களின் கலை கலாசார சமயப் பார்வைகள் அனைத்துமே தமிழோடு ஒன்றித்துப் போனவை.

நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மலையகத் தமிழர்களின் உரிமைகள் மறக்கப்பட்டு வந்தன. அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. தமிழர்களின் வளர்ச்சியும் சரி; தமிழர்களின் வளப்பங்களும் சரி; அவர்களின் சொந்தப் போராட்டங்களில் வியர்வைச் சீதனங்களாய் வந்த வரப்பிரசாதங்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 



காலனித்துவக் காலத்தில் வெள்ளைக்காரர்களை நம்பினார்கள். அவர்களுக்குப் பின்னர் வந்த உள்நாட்டு அரசியல்வாதிகளை நம்பினார்கள். ஆனால் நம்பிப் பிரயோசனம் இல்லை. மோசம் போனது தான் மிச்சம். இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை என்று சொல்வார்களே அந்த மாதிரி இரண்டுமே கைகொடுக்கவில்லை. கண்டும் காணாமல் போய் விட்டன. 


அதன் பின்னர் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களாகவே சொந்தமாகப் போராடினார்கள்.  ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தார்கள். தங்கத் தாம்பாளத்தில் வைத்து யாரும் அவர்களுக்குத் தங்கக் கரண்டியில் ஊட்டிவிடவில்லை. வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலைப் பாக்கு வைத்து யாரும் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கவில்லை. வரலாறு முழுமைக்கும் விழுந்து விழுந்து எழுந்து நிமிர்ந்து நின்று சரித்திரம் படைத்து இருக்கிறார்கள்.

ஓர் இனம் உயிர்ப்பு பெற்று உயர்வு அடைய வேண்டும் என்றால் அரசியல் அவர்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் உதவிகள் கிள்ளிப் போட்ட அல்வாத் துண்டுகளாய்ச் சிதறிப் போயின. ஒரே வார்த்தையில் சொன்னால் இந்தா எடுத்துக்கோ.

இந்த நாள் வரைக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நிரந்தரமான அரசியல் பலம் உருவாக்கப் படவே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப் படவும் இல்லை. 



இருந்தாலும் அப்போது வாழ்ந்த தமிழர்களின் பிரதிநிதியாக ம.இ.கா.வை அரசாங்கம் தேர்வு செய்தது. இன்றைக்கும் சரி. மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என்று சொன்னால் அது ம.இ.கா. தான். வேறு எத்தனைக் கட்சிகள் வந்தாலும் ம.இ.கா.வையும் மலேசிய இந்தியர்களையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒன்றித்துப் போய் இருந்தார்கள். ஆனால் இப்போது இல்லைங்க. காய்ந்து போன கரும்புச் சக்கையாகி விட்டது.

அப்போதைய ம.இ.கா., மத்தியத்தர வகுப்பினரின் குடும்பச் சொத்தாகவே பேர் போட்டு தம்பட்டம் அடித்தது. வசதி படைத்தவர்களுக்கு மேலும் வசதிகளைத் தேடித் தந்த அட்சயப் பாத்திரமாகவும் ஆசீர்வதிக்கப் பட்டது. அதே சமயத்தில் ஏழைத் தமிழர்களைப் பிரதிநிதிப்பது போல கலர் கலராய் மெகா சீரியல்களைப் போட்டுப் படம் காட்டியது.

போற்றிப் புகழும் அளவிற்கு ம.இ.கா. சிறப்பாக எதையும் செய்து விடவில்லை, செய்து இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. மலேசிய இந்தியர்களின் சரித்திரத்தில் இடம்பெறும் அளவிற்கு பெரிசா ஒன்றும் சாதித்து விடவில்லை. மன்னிக்கவும். அப்படித்தான் சொல்ல முடிகிறது.

அரசாங்கத்திடம் இருந்து மானியங்களும் வாய்ப்புகளும் கிடைத்தன. நிறையவே கிடைத்தன. ஆனால் அடிமட்டத் தமிழர்களிடம் வந்து சேர்வதற்குள்… 



என்ன வந்து சேர்வதற்குள்… வரும் வழியிலேயே என்று சொல்லுங்கள். வரும் வழியிலேயே இத்தனை பெர்செண்ட் அத்தனை பெர்செண்ட் என்கிற கணக்கில் பிச்சுக் குதறிய எச்சத்திலும் பிக்கல் பிடுங்கல்கள். அப்புறம் என்ன வந்து சேர்வது. போய் சேர்வது.

அப்படியே வந்து சேர்ந்தாலும் கோச டப்பாக்களில் கொசுறு மிட்டாய்கள் தான். இது மலேசியத் தமிழர்களின் காலாகாலத்து கித்தா காட்டு ராமாயணங்கள். என்றைக்கு வேண்டும் என்றாலும் பாடிக் கொண்டு இருக்கலாம். விடுங்கள். மலேசியத் தமிழர்கள் வாங்கி வந்த வரம். இருமொழித் திட்டம் பற்றிய கருத்துக் களத்தைத் தொடர்வோம்.

ஈப்போ பி.கே.குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர்.

ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாகக் கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.



மலேசியாவின் மக்கள் தொகை 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி 320 இலட்சம். இவர்களில் 287 இலட்சம் பேர் குடியுரிமை பெற்ற குடிமக்கள். இதர 33 இலட்சம் பேர் குடிமக்கள் அல்லாதவர்கள். இதில் இந்தியர்கள் 21 இலட்சம்.

அந்த 21 இலட்சம் பேரில் ஏறக்குறைய எட்டு இலட்சம் பேருக்கு இன்றைய வரைக்கும் சொந்த வீடுகள் இல்லை. அது தெரியுமா உங்களுக்கு. இன்று வரையிலும் வறுமை நிலையில் இருக்கும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப் படவே இல்லை.

நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் 70% பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு இன்னமும் கிடைக்காமல் இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொடர்கின்றன. நியாயமான மாதச் சம்பளம்; வீட்டுடைமைத் திட்டம்; ஓய்வூதியம் போன்றவை இன்றுவரை தொடரும் பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். இந்தியர்களின் ஒட்டு மொத்த பொருளாதார நிலைமை கடந்த 40 ஆண்டுகளாக அதே 1.5% தான். அதுவும் முழுமையாக இல்லை. பெரும் பணக்காரர்களின் கைகளில் சிக்கி உள்ளது. சுருங்கச் சொன்னால் சாமான்ய இந்தியர்களிடம் இல்லை. 




அந்த வகையில் இந்தியர்கள் இடையே அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டன. அது அவர்களைத் தொடரும் வறுமையின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஒரே வார்த்தையில் சொன்னால் வறுமையில் தொடங்கிய மலாயா இந்தியர்களின் வாழ்க்கை இன்றைய நாள் வரைக்கும் இலவு காத்த கிளியாக வாடிப் போய் நிற்கிறது. அந்த மாதிரி வாடிப் போய் நிற்கும் வறுமைச் சமுதாயத்திற்குத் தமிழ்ப்பள்ளிகள் தான் அடைக்கலமாகவும் ஆதரவாகவும் இருந்து வருகின்றன. அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

இப்போது அதே அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிச் சதிராட்டங்கள். அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்க அறைகூவல். அப்படி பயிலும் குழந்தைகள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போகும் நிலை கண்டிப்பாக ஏற்படலாம். இத்தனை வருடங்கள் தமிழில் படித்துவிட்டு திடீரென்று வேறு மொழிக்குப் போனால் நிச்சயமாக தடுமாற்றம் ஏற்படும்.

அதனால் அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் தமிழ்ப் பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வருபவர்கள் ஒட்டு மொத்தமாகக் கணித அறிவியல் சார்ந்த அறிவுத் திறன்களில் திறமை குறைந்தவர்களாகவே இருப்பார்கள். உண்மை தானே.

சாதாரணமான வேலைகளைச் செய்யும் திறன்கூட இல்லாமல் போய்விடும். இந்த நிலையில் இவர்களால் எப்படிங்க நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள முடியும். சொல்லுங்கள். அதுவே நம் நாட்டிற்குப் பெரும் இழப்பாக அமையும்

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். ஆங்கில மொழி மிகவும் முக்கியம். நாம் கண்டிப்பாக ஆங்கில மொழியில் புலமை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதே அந்த ஆங்கில மொழியை அறிவியல் கணிதப் பாடங்கள் வழியாகச் சரியாகக் கற்க இயலாது.

அறிவியலும் கணிதமும் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள். புரிந்து கொண்டால் தான் அறிவியல் கணிதம் சார்பு உடைய அறிவு வளர்ச்சி உண்டாகும். தாய்மொழி வழியாக எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி அனைத்துலக ரீதியில் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஆய்வுகள் அப்படித் தான் சொல்கின்றன.



ஆங்கில மொழியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்கவே முடியாதா என்று நான் பி.கே.குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார்.

முடியும். தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான தொடக்கக் கல்வியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுப் புரிந்து கொண்டால் அதன் பின்னர் கற்றுக் கொள்வது எளிது. அதாவது இடைநிலைப் பள்ளியில் ஒன்றாம் படிவம் தொடங்கி மூன்றாம் படிவம் வரை அந்தப் பாடங்களை ஆங்கில மொழியில் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் தொடக்கத்தில் புரியாத ஆங்கில மொழியில் கற்பதால் காலப் போக்கில் அறிவியல் கணிதப் பாடங்கள் புரியாத பாடங்களாகவே மாறிப் போகும். புரியுதுங்களா.

நம்முடைய மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமொழி மிக மிக அவசியம். கண்ண்டிப்பாகத் தேவை. ஆனால் அந்த மொழியைப் பயன் தரும் அளவிற்குச் செம்மையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே தான் நாம் நிற்கிறோம்.

தாய்மொழியில் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் பிள்ளைகள் பிறமொழிகளில் அறிவியல் அறிவைப் பெறுவது என்பது மிகவும் எளிது. மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளைப் பாருங்கள். சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ், நார்வே, பின்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அவர்களின் சொந்த தாய்மொழியில் தான் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். 

ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழி. ஆக அந்தத் தாய்மொழியிலேயே கற்கிறார்கள். தாய்மொழியில் பயிற்றுவிக்கும் நாடுகள் எப்படி இருக்கின்றன. அதையும் பாருங்கள் என்கிறார் பி.கே.குமார். இவரின் கருத்துகள் நாளையும் தொடரும்.

தாய்மொழிக் கல்வி என்பது நம் அரசியலமைப்புச் சாசனத்தில் அந்த மொழிக்கு வழங்கப்பட்ட ஓர் உரிமை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த உரிமையை மதிக்க வேண்டும். அந்த உரிமையை அப்படியே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதுவே கண்ணியமான கடமையாகும்.

அந்த வகையில் பார்த்தால் அரசாங்கம் என்பது நாம் தேர்வு செய்யும் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதி. ஆகவே நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் கேட்கிறதோ இல்லையோ. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. அரசாங்கம் உணரும் வரையில் நம் ஆதங்கத்தைச் சொல்லி வர வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். சரி தானே.

நம்முடைய இப்போதைய பிரச்சினை இந்த இருமொழித் திட்டப் பிரச்சினை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் உணர்ந்தால் நிச்சயமாக மாற்றம் செய்ய மாட்டார்கள். உதவிக் கரம் நீட்டுவார்கள். இதுவே என் கணிப்பு.

(தொடரும்)

சான்றுகள்:

1. Education Ministry approves dual language programme for another 126 schools - https://www.thestar.com.my/news/nation/2018/01/05/education-ministry-approves-dual-language-programme-for-another-126-schools/

2. SJKT Vivekananda Petaling Jaya was declared a DLP school in 2017s - https://www.freemalaysiatoday.com/category/opinion/2018/01/02/no-politics-in-education-please/

3. Penang people say NO TO DLP (Dual Language Program) in Tamil Schools. - https://www.youtube.com/watch?v=ozuDvsfXXzU

4. Revoke DLP approval for Tamil schools. - https://www.thestar.com.my/news/nation/2017/02/08/revoke-dlp-approval-for-tamil-schools/

5. Lack of info on DLP in Tamil schools - https://www.beritadaily.com/lack-of-info-on-dlp-in-tamil-schools/

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4

தமிழ் மலர் - 10.10.2018 - புதன் கிழமை

இந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. இருமொழித் திட்டம் என்றால் தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் ஆங்கிலம், கணிதப் பாடங்களை நடத்தும் திட்டம். 



இருமொழித் திட்டம் என்பது நல்ல ஒரு திட்டம் தான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் தூர நோக்குப் பார்வையில் இருந்து அந்தத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.

அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பற்பல விளைவுகள் உள்ளன. அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு நன்மைகள் உண்டா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரைத் தொடரில் அலசிப் பார்க்கின்றோம்.

எந்த ஒரு தரப்பிற்கும் நாம் சாதகமாகவும் பேசவில்லை. பாதகமாகவும் பேசவில்லை. உண்மையான நிலை என்ன என்பதைத் தான் ஆராய்ந்து பார்க்கிறோம். அவ்வளவு தான். அதனால் சிலருக்கும் பலருக்கும் மனத் தாக்கங்கள் ஏற்படாலாம். இருந்தாலும் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டிய காலத்தின் கட்டாயப் பிடிக்குள் சிக்கி இருக்கிறோம்.

இருமொழித் திட்டத்தை ஆதரிப்பவர்களில் பலர் ஆங்கில மொழியின் சிறப்புத் தன்மைக்கு முதன்மை வழங்கி வருகிறார்கள். அந்தத் திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் உலகளாவிய மொழிப் புலமையைப் பெற முடியும்; அறிவியல் கணிதப் பாடங்களில் சிறந்து விளங்க முடியும் என்று சொல்கிறார்கள்.



சிறு வயதில் கற்றுக் கொள்ளக் கூடிய எதுவுமே சிலைமேல் எழுத்து போல பிஞ்சு மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும். அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அந்த வகையில் சிறு வயதிலேயே ஆங்கிலத்தையும் கணிதத்தையும் ஆங்கில மொழியில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள அனைத்து தகவல்களும் மழலையர் மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும் எனும் கருத்துகளையும் முன்வைக்கின்றனர்

இந்த இரு மொழிக் கொள்கை கல்வித் திட்டம் நல்ல ஒரு திட்டம். ஆனால் அந்தத் திட்டம் மலேசிய தமிழ்ப் பள்ளிகளைச் சிதைவுக்குக் கொண்டு செல்கின்றது எனும் சில பொறுப்பற்ற தரப்பினர் கூறி வருகின்றனர். அவர்களின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விதண்டாவாதம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்தக் கருத்துகள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கும் தரப்பினரின் கருத்து.

அடுத்ததாக அந்த இருமொழித் திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் கருத்துகளைப் பார்ப்போம்.

அவர்களின் வாதம்:- இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவை இல்லாதது. இந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளின் தமிழ்மொழி சார்ந்த செயல்பாடுகளில் வீழ்ச்சிகள் ஏற்படலாம். 


முட்டை அடை காக்கப்படுவது போல கடந்த இருநூறு ஆண்டு காலமாகத் தமிழ்க் கல்வி தமிழர்களால் அடை காக்கப்பட்டு வந்து இருக்கிறது. ஆனாலும் அது சன்னம் சன்னமாய்ச் சிதைந்து போகும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்த் தலைமையாசிரியர்களும் வேலை இழப்புகளை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

தமிழ்ப் பள்ளிகளில் நான்கு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டால் அந்தப் பாடங்களைச் சார்ந்து உள்ள நூற்றுக் கணக்கான தமிழ் கலைச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் போகலாம். அப்படியே அழிந்தும் போகலாம். அது மட்டும் அல்ல.

தமிழ்ப் பாட நூல்களைத் தயாரிப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. அந்தப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் தயாரிப்பதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. யூ.பி.எஸ்.ஆர். தேர்வுகளில் கேள்வித் தாட்களைத் திருத்துவதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. இதுநாள் வரைக்கும் தமிழ் ஆசிரியர்களே அந்த வேலைகளைச் செய்து வந்து இருக்கின்றார்கள்.

அப்படி இருக்கும் போது இருமொழித் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப் படலாம். அல்லது தேவை இல்லாமலே போகலாம். தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் மற்ற ஆசிரியர்கள் அந்தப் பணிகளைச் செய்யலாம். 


ஆகவே அந்த வகையில் தமிழ் ஆசிரியர்களின் பணிகளுக்கு இடைஞ்சல்கள் வரலாம். தமிழ் ஆசிரியர்களின் வேலைகளை மற்ற ஆசிரியர்கள் செய்யும் போது தமிழ் ஆசிரியர்கள் இனி தேவை இல்லை எனும் சொல்லும் வரலாம். இத்தகைய கருத்துகளையும் எதிர்தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மிக அண்மைய காலங்களில் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதைக் கவனித்தீர்களா. இதற்கு என்ன காரணம்.

மலேசிய இந்தியர்களின் மத்தியில் ஏற்பட்டு வரும் பிறப்பு விகிதாசார வீழ்ச்சியும் ஒரு காரணம். தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடர்பாக இந்திய மக்கள் அடைந்த அதிருப்தியின்  காரணம் என்று சொல்ல முடியாது. இந்தியர்களின் பிறப்பு விகிதாசாரம் மிக மிகக் குறைந்து வருகிறது. அதுதான் சரி. தமிழ் அறவாரியம் அதைத் தான் சொல்கிறது. இந்தக் கருத்தை மொழி சார்ந்த இயக்கங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருமொழித் திட்டத்திற்கு உடன்பாடான கருத்துகளும் இருக்கின்றன. எதிர்மறையான கருத்துகளும் இருக்கின்றன. ஆனால் எதிர்மறையான கருத்துகளே அதிகம்.



இந்த 2018-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சில மாநிலங்களில் நடந்த அதிரடி நிகழ்ச்சிகள். தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் தங்கள் பள்ளிகளையும் இருமொழித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் படி கல்வி அமைச்சுக்கு விண்ணப்பக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் அவசர அவசரமாக அனுப்பி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் வியப்பு கலந்த கவலையைத் தருகின்றது.

இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவர்களின் ரணங்களைக் கீறிப் பார்ப்பது போல அமைவதாக ஒரு தமிழ்க் கல்வியாளர் சொல்லி இருக்கிறார்.

இந்தச் செயலின் பின் விளைவுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்க்காமல்; தூர நோக்குச் சிந்தனையுடன் ஆழமாகப் பார்க்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே தெரிகின்றது. அல்லது வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். மேலிடத்து நெருக்குதல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சன்மானத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஊக்குவிப்புத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். உறுதியாகச் சொல்ல முடியவில்லை, ஆக அப்படியும் நாம் பார்க்க வேண்டும். சரி.

இருமொழித் திட்டத்தைச் சீன மொழிப் பள்ளிகள் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி ஓரங்கட்டி விட்டன. சரிங்களா. அந்தத் திட்டத்தின் பாதக நிலையைப் பற்றி மலாய் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் கூட ஒரு முழுமையான திட்ட வரைவை இன்னும் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு திட்டம். அப்படி இருக்கும் போது தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் எந்த அடிப்படையில் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள். புரியாதப் புதிராக இருக்கிறது.

இந்த இரு மொழிக் கொள்கையை ஏற்கலாமா வேண்டாமா. அதற்கு முன் சில முக்கிய விசயங்களை முன் வைக்கிறேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


முதலாவதாக:- அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு நுட்பவியல், வடிவமைப்பு நுட்பவியல் ஆகிய இந்த நான்கு பாடங்களை மலாய், ஆங்கில மொழிகளில் போதிக்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் முறையாக முழுமைப் படுத்தவில்லை. அதற்கான ஒரு செயல்திட்டமும் இன்னும் முறையாக வரையறுக்கப் படவில்லை. அதற்கான எதிர்காலச் செயல் நிலைகளைப் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவும் இல்லை. 

அரசாங்கம் ஒரு பரிச்சார்த்த முறையில் தான் அந்தத் திட்டத்தைத் தேசியப் பள்ளிகளில் பரிசோதித்து வருகிறது. அந்த முதல் கட்டத்தைத் தாண்டிய பின்னர் தான் அதிகாரப் பூர்வமான ஆய்வு முடிவுகள் தெரிய வரும். சரிங்களா.

ஆகவே அதன் உண்மை நிலையை முதலில் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இரு மொழிச் செயல்பாட்டு திட்டத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தது நன்றாக இல்லை.

ரோஜாக் கூட்டத்தில் முட்கள் இருக்கவே செய்யும் எனும் தெனாலி ராமன் கதை நினைவிற்கு வருகின்றது. தப்பாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டது. சொல்கிறேன். அம்புட்டுதான்.

ஒரு தமிழ்ப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், அந்தப் பள்ளியின் கற்பித்தல் முறையில் நம்பிக்கை வைத்தே அனுப்பி வைக்கின்றார்கள். நன்றாகப் படித்துக் கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையில் அனுப்பி வைக்கின்றார்கள். 


ஆக அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இதுவரை வந்தது இல்லை. இன்று நேற்று அல்ல. ஒரு நூறு வருட காலமாக அவர்களின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த நம்பிக்கையில் தான் அவர்களின் வாழ்வியல் சக்கரமும் நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. சரி.

ஆக பள்ளியின் கற்பித்தல் முறையில் தடாலடி மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பள்ளி நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். வேறு யாரும் அல்ல. பள்ளி நிர்வாகம் தான். இருமொழித் திட்டக் கொள்கையைப் பற்றி பெற்றோர்களிடம் விளக்கி இருக்க வேண்டும். அதைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்து பேசி இருக்க வேண்டும்.

இப்படி ஒரு மாற்றம் வருகிறது என்று பள்ளி வாரியக் குழுவிடம் தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாற்றலாமா வேண்டாமா என்று முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. சரியான முறைபாடு.

ஆனால் அந்த மாதிரியான விளக்கக் கூட்டங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த மாதிரியான கல்விக் கலந்துரையாடல்கள் நடந்ததாகவும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. இன்றைக்குத் தாலி காட்டி நாளைக்கே பிள்ளையைப் பெற்றுக் கொடு என்று கேட்கும் கதையாகிப் போனது.

நாடு தழுவிய நிலையில் கருத்தரங்குகள்; கல்ந்துரையாடல்கள்; விளக்கக் கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். எதார்த்தமான பெற்றோர்கள் மனநிறைவு அடையும் வரையில் போதுமான விளக்கங்களைக் கொடுத்து இருக்க வேண்டும். ஆக மீண்டும் சொல்கிறேன். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அரக்கப் பரக்க ஆற்றுக்குள் இறங்கி அயிரை மீனைப் பிடித்து வந்த கதையாகத் தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மலேசியாவில் உள்ள அத்தனைச் சீனப் பள்ளிகளில் ஒரு பள்ளிகூட இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. தெரியும் தானே. பேசி வைத்த மாதிரி எல்லாச் சீனப் பள்ளிகளுமே ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஏன் புறக்கணித்தன என்று ஆதரவு தரப்பினர் விளக்கம் கேட்கிறார்கள்.. 


இன்னும் ஒன்றையும் இங்கே மறந்துவிட வேண்டாம். இருமொழித் திட்டத்தை அமல் படுத்துவதில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரசாங்கம் எந்த ஓர் அழுத்தத்தையும் நெருக்குதலையும் கொடுக்கவில்லை. வற்புறுத்தவும் இல்லை. நிதர்சனமான உண்மைகளை நியாயத்துடன் ஏற்றுக் கொள்வோம்.

மலாய்க் கல்விமான்களே எதிர்க்கும் ஒரு திட்டத்தில் மேலிடமே மௌனம் சாதிக்கும் ஓர் இக்கட்டான நிலை. அந்த நிலைமையில் தமிழ்ப் பள்ளிகளின் மீது திணிப்புச் செய்வதில் ஒரு வகையான தயக்கமே படர்ந்து நிற்கிறது. 

ஆக அப்படி இருக்கும் போது ஏன் அவசரம் அவசரமாக நாமே வலிய போய் அந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும். முன்னாள் துணைக் கல்வி அமைச்சரும் மற்றும் ஒரு பேராசிரியரும் அவர்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளை இணைத்துக் கொள்ள பரிவட்டம் கட்டி வந்தனர். அவர்களின் முயற்சிகள் அவர்களின் பார்வையில் சரியாக இருக்கலாம்.

இருந்தாலும் மாற்றம் செய்வதற்கான விளக்கங்களைச் சரியாகக் கொடுத்து இருக்க வேண்டும். அதைச் செய்தார்களா. அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மறந்து விட்டார்கள் என்று சொன்னால் உண்மையிலேயே அதுதான் பில்லியன் டாலர் அதிசயம்.

இன்றைய காலக் கட்டத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் அடுத்து வரும் பல பத்து ஆண்டுகளுக்கும் பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாளைய கட்டுரையில் வணிக வள்ளல் பி.கே.குமார் அவர்களைச் சந்திக்கின்றோம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர். ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாக பாலர் பள்ளி முதல் 6-ஆம் வகுப்பு வரை கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Taskforce vows to sue Tamil schools over dual-language programme - https://www.malaysiakini.com/news/408540

2. Tamil NGOs say no to dual language programme - https://www.thestar.com.my/news/nation/2016/12/25/tamil-ngos-say-no-to-dual-language-programme/

3. DLP will boost enrollment in Tamil schools - https://www.beritadaily.com/dlp-will-boost-enrollment-in-tamil-schools/

4. Ramasamy tells Education Ministry to abolish dual language programme - https://www.malaymail.com/s/1281805/ramasamy-tells-education-ministry-to-abolish-dual-language-programme

5. Tamil school’s dual-language legal limbo - https://www.themalaysianinsight.com/s/29830

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3

தமிழ் மலர் - 09.10.2018 - செவ்வாய்க் கிழமை

மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆலவிருச்சகமாய் விழுதுகள் பார்த்து வீர வசனங்கள் பேசியது.
 

கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குத் திட்டங்கள். அவற்றில் இருந்து தப்பித்துப் பிழைத்துக் கரையேறி மூச்சு விடுகிறது. அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது.

அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடி வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

மலாக்காவை எடுத்துக் கொண்டால் முன்ஷி அப்துல்லா. இவர் நல்ல ஓர் எடுத்துக் காட்டு. முன்ஷி அப்துல்லா 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர்.
 

1843-ஆம் ஆண்டு அவர் தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா. தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் மணலில் எழுதித் தமிழ்மொழியைப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். முன்ஷி அப்துல்லாவின் தாயார் ஒரு தமிழ்ப் பெண். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். மலாயாவில் முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் பூக்கத் தொடங்கின. நன்றாகப் பூத்துக் குலுங்கின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இங்கே கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.
 

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கிலும் மலாக்காவிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின. அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று உருமாற்றம் கண்டது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன்.
 

ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்கிற சட்டம்.

இந்தச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்கள் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள். படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே.
 

என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்கள வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும். தரம் குறைவாக இருந்தது. ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது.

வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

படித்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.
 

ஆக தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது. வெளியே போனால் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும்.

அப்புறம் பின்நாட்களில் தங்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். அவர்களுக்கு ஆறாம் வகுப்பு அறிவு போதும். அதற்கு மேல் படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் எசமானர்களுக்கு ஆபத்து. அதுதான் வெள்ளைக்காரர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.
 

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசை நாற்பது காசாகப் பெருக்க வேண்டும். கல்லாவை நிரப்ப வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும்.

பொதுவாகவே அப்போது இருந்த பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இயங்கி வந்தன. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் எடுபிடிகளாகவே இருந்தார்கள். மன்னிக்கவும். உண்மையைத் தான் எழுதுகிறோம்.

தமிழ் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அதனால் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லித்தர முடியாமல் போய் விட்டது. தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு இல்லாமலே போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும். 1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியைத் ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.
 

1905-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு கிறிஸ்த்துவத் தமிழ்ப்பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. பினாங்கு மாநிலத்தைப் பொருத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 

1937-ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில பள்ளிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 1913-ஆம் ஆண்டில் கிள்ளான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.
 

மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

1920-ஆம் ஆண்டில் 122.

1925-ஆம் ஆண்டில் 235.

1930-ஆம் ஆண்டில் 333

1938-ஆம் ஆண்டில் 524.

1942-ஆம் ஆண்டில் 644

1943-ஆம் ஆண்டில் 292

1950-ஆம் ஆண்டில் 888

1960-ஆம் ஆண்டில் 662

2018-ஆம் ஆண்டில் 525

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,000 தமிழாசிரியர்கள். 108,000 மாணவர்கள். 4500 வகுப்பு அறைகள்.

(தொடரும்)

சான்றுகள்:

1. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. p. 126. ISBN 978-81-234-2354-8.

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. The first Tamil class was conducted in Penang Free School on Oct 21, 1816. https://www.pressreader.com/malaysia/the-star-malaysia/20161013/282071981418159


தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2

தமிழ்மலர் - 08.10.2018 - திங்கள் கிழமை

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் உயிர் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்கு உயிர்க்காற்று கொடுக்க மலேசியத் தமிழர்கள் சட்டச் சடங்குகள் வழியாகப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.
 
 
மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பிரிவில் (Article 152 Federal Constitution) தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். ஆகவே அந்த மொழியைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு தனி உரிமை உண்டு. மறுபடியும்... மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.
 

அந்த உரிமைப் போராட்டம் தான் இப்போது இங்கே வேறு கோணத்தில் பயணிக்கின்றது. தாய்மொழியும் வேண்டும். அந்தத் தாய்மொழிக்குத் துணையாக வேறு ஒரு தனி மொழியும் வேண்டும். அந்தத் தனிமொழி ஆங்கில மொழியாக இருக்கலாம். அல்லது மலாய் மொழியாகவும் இருக்கலாம்.

அந்த மொழிச் சாரல்களின் தூரல்களில் தான் இப்போது இரு மொழித் திட்டம் இரு பரிவட்டங்களுடன் நர்த்தனம் ஆடுகின்றது. ஆனால் இன்னும் ஒரு முழுமையான அரங்கேற்றத்தைப் பார்க்க முடியவில்லை. தொட்ட குறை விட்ட குறையாகத் தடுமாறிக் கொண்டு நிற்கிறது.

டி.எல்.பி. எனும் இரு மொழித் திட்டம் வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. வேண்டாம் என்கிறது இன்னொரு தரப்பு. இதில் எந்தத் தரப்பினரின் வாதம் நிலைக்கப் போகிறது. தெரியவில்லை. உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. இது ஒரு கயிறு இழுக்கும் போட்டியாகவே தெரிகிறது.

ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை உரு தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் ’ஆட்டோமெட்டிக்காக’ அழிந்துவிடும்.
 

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து போய் விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகளும் அழிக்கப்பட்டு விட்டன.

2016-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 196 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2016-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 7102 மொழிகள் பேசப் பட்டன. ஆனால் இந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 7097 மொழிகளாகக் குறைந்து விட்டது. அதாவது ஒரே வருடத்தில் மட்டும் ஐந்து மொழிகள் காணாமல் போய் விட்டன.

அந்த வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்ள வேண்டும். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

மலேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. இரு மொழித் திட்டம் 2003-ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இடையிடையே தலைதூக்கித் தகை கவிழ்ந்து கடைசியில் மீண்டும் 2016-ஆம் ஆண்டில் வலை பின்னியது.
 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் கற்பிக்கப் படுகின்றன.

2016 டிசம்பர் 27-ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி ஒரே ஒரு சீனப்பள்ளி; 49 தமிழ்ப் பள்ளிகள்; 572 தேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. அமலாக்கம் செய்யப்பட்டது.

கணிதப் பாடமும் அறிவியல் பாடமும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப் படுத்தப்படும். இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவத்தில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் பலவிதமான எதிர்ப்புகள். 2017 மே மாதம் 20-ஆம் தேதி புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் ஓர் அமைதிப் பேரணி.

இருமொழித் திட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தினார்கள். அமைதியாக அழகாக நெஞ்சக் கிடக்கைகளை அள்ளிக் கொட்டினார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. ஒரு மொழியை அழித்தால் ஓர் இனத்தை அழிக்கலாம். ஆனால் அந்த இனத்திலேயே வன்முறைகளைத் தூண்டிவிட்டு தெரியாமல் மாதிரி இருந்து விட்டால் என்ன நடக்கும். அந்த இனம் தன்னைத் தானெ அழித்துக் கொள்ளும். இது உலகார்ந்த பார்வை.

புத்ரா ஜெயா அமைதிப் பேரணிக்கு முன்னர் நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டனக் கூட்டங்கள். 2016 டிசம்பர் 31-ஆம் தேதி கிள்ளான் லிட்டல் இந்தியா வளாகத்தில் இருமொழித் திட்டத்திற்கு எதிராக ஆட்சேபப் பேரணி.
 

இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்வதற்குச் சில வரையறைகள் சில வரைமுறைகள் உள்ளன. முதலாவதாக அந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். சரிங்களா.

அப்புறம் அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டும் தான் ரொம்ப முக்கியம்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிக்க முடியும். இப்படி ஒரு பரிசோதனை முறைக்கு முதலில் 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.

தேசியப் பள்ளிகளில் மட்டுமே முதலில் அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும் பாருங்கள். தமிழ்ப் பள்ளிகளில் தான் அதன் தாக்கங்கள் வேகமாகப் பரவத் தொடங்கின. ஏன் என்று தெரியவில்லை. உலக மொழியான ஆங்கில மொழியின் மீதுள்ள ஆர்வம் அல்லது நம்பிக்கை. அவை காரணங்களாக இருக்கலாம். சொல்ல முடியாது.

இருமொழித் திட்டத்தைப் பற்றி சீனப் பள்ளிகள் கொஞ்சம்கூட கவலைப் படவில்லை. ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஒரே ஒரு பள்ளிதான் முதலில் தஞ்சாவூர் பொம்மையாக நின்றது. அதுவும் 2017-ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்தில் இருந்து பின் வாங்கியது.
 

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே நன்றாகவே தெரியும். அதன் காரணமாகத் தான் முதலில் தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்தில் இணைப்பதற்கு முயற்சி செய்தார்கள். இருந்தாலும் மலாய் சமூகத்தில் இருந்தும் பல்வேறு வகையிலான பல்வேறு எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில மொழிப் பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.

அப்படி இல்லாமல் மற்ற மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறான மாற்றுக் கருத்துகளை முன்வைத்தார்கள்.

நம்முடைய தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் இன்று வரை தொடர்கின்றன. அவை என்ன கருத்துகள் என்பதைப் பார்ப்போம்.

செல்லியல் செய்தி ஊடகத்தில் தேனீ என்பவர் தன்னுடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார். (சான்று: செல்லியல் 28.12.2016)

தமிழ்ப் பள்ளியில் இருமொழி திட்டம் வேண்டுவோருக்கு தமிழ் மொழி என்பது ஊறுகாய். ஆனால் நமக்கோ தமிழ் மொழி சோறு போன்றது. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. தமிழை ஊறுகாய் போன்று தொட்டுக் கொண்டு ஆங்கிலத்தைச் சோறு போன்று சாப்பிடுவார்கள். தமிழ் பற்று இல்லாத தமிழர் தத்தம் பிள்ளைகளை மற்ற மொழி பள்ளிகளில் சேர்த்துச் செம்மை அடைவதை நாங்கள் தடுக்கவில்லை. தேர்வு உங்களுடையது.
 

#மெல்லத் தமிழ் இனிச் சாகும்# என்று பாரதி சொன்னார். சரிதானே. அதை நாம் நம் கண் முன்னே பார்க்கப் போகிறோம். அதுவும் சரிதானே.

கோவிந்தசாமி அண்ணாமலை என்பவர் தன் கருத்தை இப்படிச் சொல்கிறார். தாய் மொழிக் கல்வியே சிறந்தது என்பது குறித்து கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தமிழ் மேல் பற்று வைத்து இருக்கிறார்கள்.

அதே சமயம் இரு மொழி திட்டம் என்று வரும் பொழுது அதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் இடை நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களிடம் ஆங்கில மொழி வளத்தில் தோற்று விடக் கூடாது என்ற காரணத்தினால் தான். (சான்று: செல்லியல் 31.12.2016)

தாய் மொழி பயன்பாட்டுத் திட்டத்தில் நம் மலேசியத் தமிழர்கள் அவசரப் பட்டு கண்மூடித் தனமாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது என்று டி. பழனிச்சாமி என்பவர் கருத்து கூறுகிறார். (சான்று: செல்லியல் 05.01.2017)

இதற்கிடையில் 2017 ஜூலை மாதம் 28-ஆம் தேதி தாய்மொழி வழிக்கல்வி எனும் கலந்துரையாடல் கூடிய கருத்தரங்கம் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் நியூப் மண்டபத்தில் நடைபெற்றது. இது தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி.

தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதை நிலைநிறுத்துவது; இருமொழி பாடத் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறை படுத்துவதை மறுப்பது; இவையே அந்த நிகழ்ச்சியின் தலையாய அம்சங்களாக இருந்தன.

இருமொழி பாடத்திட்டம் தமிழ் பள்ளிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்; மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்து வந்து உள்ள தமிழ்வழிக் கல்வியை வலுப்படுத்த வேண்டும். தொடர்ந்து நிலைக்கச் செய்ய வேண்டும் எனும் கருத்துகளை வலியுறுத்தும் சிந்தனைக் களமாகவும் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

இருமொழித் திட்டத்தில் மலேசியத் தமிழர்களிடம் இரு வெவ்வேறான கருத்துகள் நிலவி வருகின்றன.

முதல் கருத்து: இருமொழித் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள். அவற்றையும் பார்க்க வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதை இருமொழித் திட்டத்தின் மூலம் சரி செய்யலாம்; எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இந்த மலேசிய நாட்டில் நிலைத்து நீடிக்க வேண்டும்; அப்படி நீடிக்க வேண்டும் என்றால் இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

மற்ற இன மாணவர்களுடன் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் போட்டியிட வேண்டி இருக்கிறது. போட்டி போட்டால் தான் முன்னேற முடியும். இதுவும் ஒரு முன்னிலை அணுகுமுறை;

அந்த வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால் அவர்கள் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பதே நல்லது. சிறப்பாக அமையும்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப் பள்ளிகள் பக்கமே தலைவைத்துப் படுக்காத தமிழர்களும் மலேசியாவில் இருக்கவே செய்கிறார்கள். நீங்களே பார்க்கலாம். அவர்களை நாம் குறை சொல்லவில்லை. பொருளாதார வகையிலும் சமூகத் தகுதி வகையிலும் பார்த்தால் அவர்களை மேல் தட்டுத் தமிழர்கள் என்று சொல்லலாம்.

ஆக இந்தத் திட்டத்தின் வழி அவர்களையும் ஒரு கணிசமான அளவுக்குத் தமிழ்ப் பள்ளிகளின் பக்கம் ஈர்க்க முடியும். இந்தத் தரப்புக்கு பேராசிரியர் என் .எஸ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இருமொழித் திட்டத்தில் அந்தத் திட்ட ஆதரவாளர்களின் நகர்வுகளில் அரசியல்வாதிகள் சிலர் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் கேள்வி. விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

மேல்நிலைக் கல்விமான்கள் சிலர் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களை அணுகி உள்ளனர். அந்தக் கல்விமான்கள் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தங்களின் கருத்துகளைத் தனிப்பட்ட வகையில் முன்நிலைப் படுத்தி வந்தனர்.

அந்தத் தலைமை ஆசிரியர்களிடம் இருமொழித் திட்டத்தில் தங்களின் பள்ளிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சிடம் விண்ணப்பம் செய்யுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். சில கட்டங்களில் நெருக்குதலும் கொடுத்து இருக்கின்றனர்.

பேராக், கெடா, சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர்கள் சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.

ஒரு நடுநிலையில் இருந்து இருமொழித் திட்டப் பிரச்சினையைப் பார்க்கிறோம். அவ்வளவு தான். இங்கே நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எனும் பாகுபாடு இல்லை.

(தொடரும்)

மேற்கோள்கள்:

1. Malaya Labour Ordinance in 1912 - FMS government introduced the Labor Code of 1923 with new provisions to make it made mandatory for each plantation having ten or more resident children of school-going-age to provide Tamil schools.

2. Tamil schools were nevertheless few until 1912 when the Labor Code Ordinance required an estate with ten children of school age (defined as between 6 and 12 years) to provide schooling facilities. Planters were obliged to open Tamil schools on estates, but most of the schools in the rubber estates were of poor standards.

18 அக்டோபர் 2018

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1


தமிழ் மலர் - 06.10.2018 - சனிக்கிழமை

மலேசியாவில் ஆட்சி மாறியது. அரசாங்கம் மாறியது. அரசியல்வாதிகளும் மாறினார்கள். அமைச்சர்களும் மாறி விட்டார்கள். 



இந்த மாற்றங்களில் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுமா. அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா. அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா. நடைமுறைப் பண்புகள் மாறுமா. பழைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித் திட்டக் கொள்கைகள் மாறுமா.

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விட்டார்கள், அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி. பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான்.



புதிய அரசாங்கத்தின் இப்போதைய புதிய அணுகுமுறையினால் நம்முடைய மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்ட முன்னெடுப்பு தொடருமா. அல்லது கைவிடப்படுமா. அதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. 



பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. பழைய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை.

இதில் சாதனையாவது சோதனையாவது. புதிய அரசாங்கத்திற்கு தலைக்குடைச்சல் தான் மிஞ்சிப் போய் நிற்கிறது. நல்லவேளை. இருபது காசு பெனடோல் மாத்திரைகள் உதவி செய்கின்றன.

புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களுக்குப் போய் கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் கணக்கில் காசு சுரண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓர் அமைச்சு இல்லை. பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கின்றன. 



எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் 100 நாட்கள் முடிந்து விட்டன. அப்புறம் எப்படிங்க அவர்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அவர்களுக்கு மேலும் கால அவகாசம் தேவைப் படுகிறது.

புதிதாக வரும் அரசாங்கம் பெரும்பாலும் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; மாற்றங்கள் செய்ய மாட்டார்கள். அதற்குப் பதிலாகச் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்வார்கள். சரி.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருமொழித் திட்டம் என்றால் டி.எல்.பி. ஆங்கிலத்தில் டுவல் லேங்குவிஜ் புரகிரம். மலேசிய மொழியில் புரகிரம் டிவிபகாசா. தமிழில் இருமொழிப் பாடத் திட்டம்.

1950-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த அந்த இருமொழித் திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டமாகத் தெரிந்தது. இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குப் பார்வையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கமாக இருந்தது.



அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் அதைப் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை. இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம்,

1950-ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். நம்புங்கள்.

மலேசியத் தமிழினப் பதற்றத்தின் தடுமாற்றங்களைப் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். 50 ஆண்டுகால இடைவெளியில் கண்டிப்பாக அது நடந்து இருக்கும். அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் தேய்ந்து ஒரு தொய்வு நிலையை அடைந்து இருக்கலாம்.



50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை. ஆக நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைக்குப் பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல; நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாது. சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஓர் அவலத்தை எடுத்துச் சொல்லவும் உரிமை உள்ளது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான் நம் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.

அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். 



இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லச் சாகும். தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாம்.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் நிச்சயமாக உறுதியாகப் பாதிக்கப்படும். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். விளக்கம் தருகிறேன்.

அதற்கு முன் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம், அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு சூசகமான மறைமுக நகர்வைப் பற்றி பலரும் கண்டு கொள்வதே இல்லை.

இப்போது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை இரு மொழித் திட்டத்தில் பெரும்பாலோர் சேர்ப்பதே இல்லை.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால்… மன்னிக்கவும். ஏற்கனவே இந்த ஆண்டு 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தி விட்டார்கள்.

இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் பொருளியல், தொழில் நுட்பம் ஆகிய இரு பாடங்களையும்) ஆங்கிலத்தில் நடத்தலாம் அல்லது மலாய் மொழியில் நடத்தலாம். தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பள்ளியின் தலைமையாசிரியரைப் பொருத்த விசயம்.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தப் பாடங்களை அந்த அந்த மொழிகளில் தான் போதிக்க வேண்டும். சரிங்களா.

அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிப்பார்கள். போதிக்க வேண்டும்.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம்,  ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக அந்த வகையில் மொத்தம் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் படும். அந்த ஆறு பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப் படாது.

இப்போது இருக்கிற 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் பட்டால் எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் போதிக்கப்படும்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த இரு மொழித் திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருப்பார்கள். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு தமிழராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை.

ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம். வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மற்ற மொழியில் படித்துக் கொடுக்கிறார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.

இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன். எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கப் போகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

மொழி இருந்தால் என்ன போனால் என்ன. நானும் என் குடும்பமும் நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பது ரொம்பவும் அசிங்கத்தனம்.

மலேசியாவில் 1287 சீனப்பள்ளிகள் உள்ளன. அத்தனைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு சீனப் பள்ளியும் இந்த இருமொழித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள். மறக்க வேண்டாம். ஏன் ஆதரிக்கவில்லை.

மறுபடியும் சொல்கிறேன். ஒரு சீனப் பள்ளிகூட இருமொழித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஏன் ஆதரிக்கவில்லை. அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)