19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7

தமிழ் மலர் - 15.10.2018 - திங்கள் கிழமை

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ்த் தினசரியை எடுத்துக் கொள்ளுங்கள். சராசரி பதினாறு பக்கங்கள். அதில் 12 பக்கங்களில் பிற மொழிச் செய்திகளைப் போட்டுவிட்டு மிச்சம் உள்ள நான்கு பக்கங்களில் மட்டும் தமிழில் செய்திகளைப் போட்டால் அதற்குப் பெயர் தமிழ்ப் பத்திரிகையா. அதை ஒரு தமிழ்ப் பத்திரிகை என்று சொல்ல முடியுமா. சொல்லுங்கள்.
 

அந்த 12 பக்கங்களில் நான்கு பக்கங்களில் ஆங்கில மொழி; நான்கு பக்கங்களில் மலாய் மொழி; நான்கு பக்கங்களில் சீன மொழி; நான்கு பக்கங்களில் தமிழ் மொழி. இப்படி ஒரு தினசரி வந்தால் எந்த ஒரு தமிழர் தான் அந்தத் தினசரியைக் காசு கொடுத்து வாங்குவார். வாங்கிப் படிப்பார் சொல்லுங்கள்.

அதற்குப் பதிலாக ஒரு ஆங்கிலத் தினசரி அல்லது ஒரு மலாய்த் தினசரியை வாங்கிவிட்டுப் போய் விடுவாரே. சீன மொழியை எழுத்துக் கூட்டிப் படிப்பவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஏதாவது ஒரு சினப் பேப்பரை வாங்கி இடுக்கில் செருகிக் கொண்டு போயே சேர்ந்து விடுவார். அது தானே நடக்கும். ஆக இதே மாதிரி ஒரு நிலைமை தான் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலும் நடக்கும் என்று சொல்ல வருகிறேன்.

இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் ஆங்கில, மலாய்ப் பாடங்களைச் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

அப்படிப் பார்த்தால் ஆக மொத்தம் 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்க வேண்டி இருக்கும். எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் இருக்கும்.
 

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை. எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் நடக்கப் போகிற ஓர் எதார்த்தம். புரிந்து கொள்ளுங்கள்.

அந்த வகையில் பார்த்தால் ஒரு தமிழ்ப் பிள்ளை ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லைங்க. மொத்தம் பத்துப் பாடங்களில் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் சொல்லிக் கொடுக்கப் பட்டால் அப்புறம் எதுக்குங்க தமிழ்ப் பள்ளிக்கூடம். எதுக்குங்க தமிழ்க்கல்வி. பேசாமல் சீனம் மலாய் பள்ளியில் சேர்த்துவிட்டுப் போகலாமே. இப்படித்தான் ஈப்போ தமிழ் ஆர்வலர் பி.கே.குமார் அவர்களும் தன் கருத்துகளை முன் வைக்கிறார்.

மலேசியாவில் உள்ள ஒரு தமிழ்த் தினசரியை எடுத்துக் கொள்ளுங்கள். சராசரி பதினாறு பக்கங்கள். அதில் 12 பக்கங்களில் பிற மொழிச் செய்திகளைப் போட்டுவிட்டு மிச்சம் உள்ள நான்கு பக்கங்களில் தமிழில் செய்திகளைப் போட்டால் அதற்குப் பெயர் தமிழ்ப் பத்திரிகையா. அதை ஒரு தமிழ்ப் பத்திரிகை என்று சொல்ல முடியுமா என்று நம்மையே கேட்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கெடா நகரில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு. அப்போது மலேசியாவில் தமிழ் கல்வி தொடங்கிய 200-வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. கல்வி அமைச்சர் டத்தோ மாட்சிர் பின் காலிட் திறப்பு விழா செய்தார்.
 

அவர் இப்படி பேசினார். உலகிலேயே தொன்மை மிக்க செம்மொழியாகத் தமிழ் திகழ்கிறது. மலேசிய நாட்டு கலாசாரத்தில் பிரிக்க இயலாத ஓர் அங்கமாக தமிழ் கல்வி பள்ளிகள் விளங்குகின்றன. தமிழ்ப் பள்ளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகளில் ஒரு மொழி கல்வி முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் 1957-ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் தமிழ்க் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழ்க் கல்விப் பள்ளிகள் இங்கு தொடர்ந்து செயல்படும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார். அதாவது தொடர்ந்து இயங்கும் என்று உறுதி கூறினார். ரொம்ப சந்தோஷம்.

ஆனால் சொன்னது மாதிரியாகவா நடக்கிறது. இந்த 2018-ஆம் ஆண்டு 47 தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இருமொழித் திட்டத்தினால் தமிழ்க் கல்வி சன்னம் சன்னமாய் ஓரங்கட்டப் படும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து இயங்கும் என்று சொல்லிவிட்டு இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன அர்த்தம். தொடர்ந்து இயங்குமாம் தொடர்ந்து. விடுங்கள்.

2018 பிப்ரவரி 11-ஆம் தேதி கோலாலம்பூரில் மலேசியத் தமிழர் சமூக நல விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் இருமொழிப் பாடத்திட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு. பல தமிழர் அரசு சார்பற்ற இயக்கங்கள் கலந்து கொண்டன.
 

மலேசியாவில் தற்பொழுது 526 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இதில் 47 பள்ளிகளில் மட்டும் தான் இந்த இருமொழிப் பாடத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த 47 தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிப் பாடதிட்டத்தை நீக்கம் செய்யச் சொல்லி அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கு கோரிக்கை மனு அனுப்ப்பப் பட்டது.

அவற்றில் இரண்டே இரண்டு தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் ஏற்றுக் கொண்டனர். நடைமுறைப் படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சுக்கு கடிதம் வழி தெரிவித்து உள்ளனர். இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

எஞ்சியுள்ள 45 தமிழ்ப் பள்ளிகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளியும் ஒன்றாகும். அதில் இருமொழி பாடத் திட்டம் அமலாக்கம் செய்யப் பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று தமிழ் எங்கள் உயிர் இயக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் தொடுத்த சட்ட நடவடிக்கையினால் இருமொழி பாடத் திட்டத்தை நிறுத்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டது.

தமிழ் எங்கள் உயிர் இயக்க ஆர்வலர்களில் ஒருவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அந்தத் தகவலைத் தெரிவித்தார். இவர் சுவாரம் எனும் மனித உரிமை கழகதின் இயக்குனர்களில் ஒருவராகும்.

தமிழ் ஆர்வலர் பி.கே.குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
 

இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்வதற்குச் சில அடிப்படை வரைமுறைகள் உள்ளன. முதலாவதாக அந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். அந்த ஆசிரியர்களுக்கு போதுமான ஆங்கில மொழி அறிவாற்றல் இருக்க வேண்டும்.

இப்போது உள்ள தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களே மிகுதியாக உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்றதும் தமிழ் மொழியில் தான் ஆக அவர்களிடம் இருந்து சிறப்பான ஆங்கில மொழி கற்பித்தலை எதிர்பார்க்க முடியாது.

ஆக இந்த நிலையில் மற்ற இனத்து ஆசிரியர்கள் ஆங்கில மொழியைக் கற்பிக்கத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் படலாம். இந்தப் பிரச்சினையைக் களைய வேண்டும். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற தமிழாசிரியர்களைக் கல்லூரி நிலையிலேயே உருவாக்க வேண்டும்.

மலேசிய பள்ளிகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இது நிதர்சனமான உண்மை. ஆங்கில மொழியில் திறன் பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ஆகவே ஓய்வு பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த திட்டம் வைத்து உள்ளதாகக் கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்து உள்ளது. அதே இந்த நிலை மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் பொருந்தி வரும்.

ஆக அந்த வகையில் ஆங்கில மொழி ஆற்றல் குறைந்த ஆசிரியர்களைக் கொண்டு இரு மொழிக் கல்வித் திட்டம் நடத்தப் பட்டால் நன்மைக்குப் பதிலாகப் பாதகமே அதிகமாகும்.
 

தமிழ் அல்லது மலாய் மொழியில் போதனா பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் திடுதிப் என ஆங்கிலத்தில் பாடத்தை நடத்த முடியாது. ஆக இந்த இரு மொழிக் கொள்கைக்காக அடித்துப் பிடித்து முன்னுக்கு நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு கருத்து முன்வைக்கப் படுகிறது.

கணித அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிக்கப் போதுமான அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ளனர் என்பதை அந்தப் பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அல்லது அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்து தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். சில காரணங்கள் நொண்டிச் சாக்குகள். உதாரணத்திற்கு புந்தோங்கை எடுத்துக் கொள்ளுங்கள். நான் (பி.கே.குமார்) ஒரு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடைபெற்ற சம்பவம்.

அந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை திடீரென்று குறைந்தது. அதனால் வீடு வீடாகச் சென்று பள்ளிக்கு வராத மாணவர்களை அடையாளம் கண்டு வந்தோம். அதில் ஒரு மாணவனின் பெற்றோர் சொன்னார்; என் மகன் தமிழ்ப்பள்ளிக்கு போவதாக இருந்தால் இரண்டு பஸ்களை எடுத்துப் போக வேண்டும். அந்த வகையில் இரண்டு பஸ் கட்டணங்களைக் கட்ட வேண்டி இருக்கிறது என்றார்.

ஆக ஒரு பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது அந்த மேம்பாட்டுப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கு இடம் கொடுப்பது இல்லை. மற்ற மொழிப் பள்ளிகளுக்குப் புதிதாக இடம் கிடைத்து விடுகிறது. புதிதாக பள்ளிக்கூடங்களையும் கட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டப் படுவதற்கு இடம் கிடைப்பது இல்லை.
 

அதனால் தமிழ் மாணவர்கள் மற்ற மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். புதிதாக உருவாக்கப்படும் ஒரு மேம்பாட்டுப் பகுதியில் தமிழ்ப்பள்ளிக்கு என்று ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்து ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தால் தமிழ் மாணவர்கள் ஏன் வேற்று மொழிக்குப் போக வேண்டும்.

இந்திய அரசியல்வாதிகளும் ஒரு கண்ணை மூடிக் கொண்டு போய் விடுகிறார்கள். மேம்பாட்டுத் திட்ட நிறுவனங்கள் என்ன சொல்வார்களோ எதைக் கொடுப்பார்களோ தெரியவில்லை. இந்திய அரசியல்வாதிகளும் கண்துடைப்புக்காக இந்தா இன்றைக்குச் செய்கிறேன் நாளைக்குச் செய்கிறேன் என்று சால்சாப்புகள் சொல்லி போய்க் கொண்டே இருக்கிறார்கள். ஒன்றும் நடந்த பாடு இல்லை.

2002-ஆம் ஆண்டில் பி.பி.எஸ்.எம்.ஐ. (PPSMI) எனும் முன்னைய இருமொழித் திட்டம் அவசரம் அவசரமாக அமலுக்கு வந்தது. அதில் அரசியல் அதிகாரம் அதிகமாகவே இருந்தது. அதை யாராலும் மறைக்க முடியாது.

முன்னால் தலைவர்கள் துன் மகாதீரும் துன் சாமிவேலும் அந்தத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியதாக அந்தக் காலக் கட்டத்தில் பரவலாகப் பேசப் பட்டது. இருந்தாலும் அந்தத் திட்டம் 2011-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப் பட்டது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

தமிழ்ப் பள்ளியின் பொதுவான விவகாரங்களில் இதுவரையிலும் மிக மெத்தனமாகச் செயல்பட்டு வந்த சில அரசியல் தலைவர்களும்; சில தமிழ்க் கல்விமான்களும்; சில தலைமையாசிரியர்களும்; அதே தமிழ்ப் பள்ளிகளை ஆங்கில மயமாக்கல் திட்டத்தில் மட்டும் துடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். இரவோடு இரவாகத் தமிழ்ப் பள்ளிகளின் மொத்த கட்டமைப்பையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ள வக்காளத்து வாங்குகின்றார்கள். வியப்பிலும் வேதனையாக இருக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளின் தலைவிதியை முடிவு செய்யக் கூடிய ஒரு மிக முக்கியத் திட்டத்திற்குப் போதுமான ஆய்வுகள் தேவை. வெறும் வெற்று உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படக் கூடாது. அதிகார அழுத்தங்களுக்கு அடிபணிந்து போகக் கூடாது. அப்படிச் செய்தால் அது அந்த இனத்திற்கே செய்யும் மாபெரும் துரோகமாக அமைந்து போகலாம்.


இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அறிவுஜீவிகளை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்மொழி மீது நம்பிக்கை அற்ற சிந்தனைச் சிப்பிகளாகவே தெரிய வருகிறார்கள்.

கடந்த 60 வருட காலமாக நாம் நம் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இன்னமும் தவித்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியத்திற்காகப் பிச்சை எடுக்காத நிலையில் கையேந்துகிறோம். தமிழ்ப் பள்ளிக் கட்டிடச் சீரமைப்புகளுக்காகக் கரம்கூப்பும் நிலையில் கூனிக் குறுகி நிற்கிறோம். இதில் இப்போது இருமொழித் திட்டப் பிரச்சினை.

இந்த இருமொழித் திட்டம் சார்பாக இன்னமும் ஏனோ தானோ என்று அமைதி காப்பது புதிய ஒரு வான வேடிக்கைக்குப் புதிய ஒரு வர்ணஜாலம் காட்டுவது போல அமைகின்றது. இருமொழித் திட்டத்தில் குளிர்காய்வது என்பது சுயநலம் கலந்த ஒரு பொதுநல விளையாட்டு.

இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவை இல்லாத திட்டம். இந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளின் தமிழ்மொழி சார்ந்த கற்பித்தல் முறை வீழ்ச்சி அடையலாம். எதிர்காலத் தமிழர்களுக்கு நாம் செய்த பாவச் செயலாக அமையலாம்.

என் தாய்மொழி என் தமிழ் மொழி. என் உயிர் போன பிறகு அந்தக் கட்டையின் சாம்பலில் என் தாய்மொழி எனக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய இறுதி ஆசை. தாய்த் தமிழே வணக்கம்.

(முற்றும்)

சான்றுகள்:

1. Taskforce vows to sue Tamil schools over dual-language programme - https://www.malaysiakini.com/news/408540

2. Tamil NGOs say no to dual language programme - https://www.thestar.com.my/news/nation/2016/12/25/tamil-ngos-say-no-to-dual-language-programme/

3. DLP will boost enrollment in Tamil schools - https://www.beritadaily.com/dlp-will-boost-enrollment-in-tamil-schools/

4. Ramasamy tells Education Ministry to abolish dual language programme - https://www.malaymail.com/s/1281805/ramasamy-tells-education-ministry-to-abolish-dual-language-programme

5. Tamil school’s dual-language legal limbo - https://www.themalaysianinsight.com/s/29830

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6

தமிழ் மலர் - 13.10.2018 - சனிக்கிழமை

மொழி ஓர் இனத்தின் அடையாளம். ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லைங்க. இனம் அழியாது. இருக்கவே செய்யும். ஆனால் அதன் அடையாளத்தை இழந்துவிடும். அதுதான் உண்மை. புரிந்து கொள்ளுங்கள். வெறும் வெற்று உடலில் பிறந்த மேனிக் கோலத்தில் மட்டுமே ஊர்க்கோலம் போக முடியும். அவ்வளவுதான். மொழி அழிந்தால் இனம் அழியாது.


இப்போதைக்கு இந்த மண்ணில் நம்முடைய தமிழ் மொழிக்கு இருக்கும் ஓர் உந்துச் சக்தி என்ன தெரியுங்களா. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் தன்னம்பிக்கை தான். அது தான் முக்கியமான உந்துச் சக்தி. மூல காரணம்.

எங்களின் தாய் மொழியை வாழ வைத்துக் காட்டுவோம் என்கிற நம்பிக்கை இருக்கும் வரையில் அந்த மொழி இந்த மண்ணில் வாழும். வாழ்ந்து கொண்டு இருக்கும். 

நம்பிக்கை என்பது ஒரு வகையான ஆதங்கம். எப்படியாவது; என்ன செய்தாவது எங்களின் தாய் மொழியை நிலைக்கச் செய்வோம் என்கிற ஆதங்கம் தான் தமிழை இன்னும் உயிர் வாழச் செய்கிறது.

இன்னும் ஒரு விசயம். இந்த மண்ணில் நம் எதிர்காலச் சந்தியினர் தான் நம்முடைய சொத்து. அதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தப் சந்தியினரிடம் நாம் விட்டுச் செல்லும் இன மொழி கலாசாரப் பண்புகள் தான் நம்முடைய எதிர்காலச் சொத்து. 


நம்மிடம் இப்போது இருக்கும் பணம் காசு; மாட மாளிகைகள்; கூட கோபுரங்கள்; இவை எதுவுமே நம்முடைய சொத்துகள் அல்ல. நாம் போன பிறகு அவை எல்லாம் நம்மோடு கூடவே வரப் போவதும் இல்லை. நம்முடைய தலைமுறைகள் தான் நம் பெயரைச் சொல்லப் போகும் சீதனங்கள். ஆகவே அந்தச் சீதனங்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்துவிட்டுப் போக வேண்டும். இல்லை என்றால் நாம் இருந்தும் இல்லாத மரக் கட்டைகள். மறைந்ததும் மறக்கப்பட்ட மனிதச் சக்கைகள்.

அந்த வகையில் இரு நூற்றாண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளோடு உலா வந்து கொண்டு இருக்கிறோம். அது ஒரு சரித்திரம். இருப்பினும் சில வேளைகளில் அந்தச் சரித்திரத்தைச் சிலரும் பலரும் அசைத்துப் பார்க்கிறார்கள்.

சொந்த நலன்களுக்காக; சுற்றத்தார்களின் நலன்களுக்காக; சுற்றி இருக்கும் நண்பர்களுக்காக; வால்பிடித்து அலையும் எச்சில் கூளங்களுக்காக; புகழ்மாலை பாடும் பச்சோந்திகளுக்காக; நாலு காசு பார்க்க வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலை.

அந்தக் காசு நல்ல வழியில் இருந்து வந்தாலும் சரி; இல்லை கெட்ட வழியில் இருந்து வந்தாலும் சரி; அது முக்கியம் அல்ல; ஆனால் காசு வந்தால் சரி. அதுதான் முக்கியம். சத்தியமாக அது சுயநலப் பேராசைகள்.

பார்க்கப் போனால் அந்த மாதிரியான அடிமட்டச் சுயநலங்கள் தான் தமிழர் இனத்தையும் தமிழர் மொழியையும் அழிக்க முயற்சிகள் செய்து வருகின்றன. அழிப்பதற்கான சூடம் சாம்பிராணிகளைக் கொளுத்திப் போடுகின்றன. இதை எழுதும் போது வலியின் வேதனைகள் மனதிற்குள் சன்னமாய் ஊஞ்சலாடுகின்றன. முகாரிகள் பாடுகின்றன.


மலேசியத் தமிழ்க் கல்வியின் மீது முடிந்த வரையில் தாக்குதல் தொடுப்பது; மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைச் சிறுமைப் படுத்துவது; மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தைத் தூண்டி விடுவது. இவை எல்லாம் புதிய விசயம் அல்ல. காலம் காலமாக நடந்து வருகிறது.

அதைப் பார்த்து பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் சிலரும் சலித்துப் போய் விட்டார்கள். அவர்களுக்கே எரிச்சல் வந்து விட்டது. ஏதாவது பண்ணித் தொலைங்கடா என்று கைகழுவி விட்டு விட்டார்கள். எல்லோரும் அல்ல. சிலர் தான்.

இருந்தாலும் தமிழ்மொழிப் பற்றாளர்கள் விடுவதாக இல்லை. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் திணிக்கப் படுகிறது; இந்தியர்களின் அரசியலோடு திணிக்கப் படுகிறது என்று சொல்லிப் போராட்டம் செய்கிறார்கள். பிரச்சினை அங்கே தான் தொடங்குகிறது. புரியுதுங்களா.

கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்க் கல்வியை சுமந்து வந்த ஏழை எளிய தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவமானங்கள் ஏராளம்; அலட்சியங்கள் ஏராளம்; அவமதிப்புகள் ஏராளம்; ஏளனங்கள் ஏராளம்; அவை எல்லாம் மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத காலச் சுவடுகள். 


மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் பல காலக் கட்டங்களில் தமிழ்க் கல்வி பற்றி பல்வேறு கோணங்களில் பல்வேறான விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளை விமர்சிப்பதே ஒரு பொழுது போக்காக மாறிப் போனது. 

அப்படி விமர்சனம் செய்தவர்களின் அடிப்படை நோக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது நோக்கம். அதாவது அழுத்தம்: மலேசிய தேசிய அடையாள அரசியலைப் பெரிது படுத்தும் ஓர் அழுத்தம். அடுத்து தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும் பொருளாதார நோக்கத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அழுத்தம். அந்த வகையில் நேரடியாக இரு அழுத்தங்கள்.

ஆங்கிலேயக் காலனித்துவ காலத்திலேயே மேல் வர்க்க இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு வகையான ஏளனப் பார்வை. தமிழ்ப் பள்ளிகள் என்பது பால்மரம் வெட்டும் பாமரத் தமிழர்களின் கல்விக் கொட்டகைகள் எனும் ஒரு தாழ்வான பார்வை. ஆயாக் கொட்டகைக்கு அடுத்து வந்த கோழிக் கூண்டுகள் என்று ஒரு கல்வியாளர் சொல்லி இருக்கிறார். நினைவில் இருக்கிறது. பெயர் வேண்டாம்.

ஆனாலும் பாருங்கள். அப்படி குறை பார்த்துக் குறை சொன்ன மேல் வர்க்க இந்தியர்கள் தான் மலேசியத் தமிழ்க் கல்வியின் உயர் மட்ட வேலைகளில் அதிகமாக வேலை செய்து இருக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிகளின் பெயரைச் சொல்லி சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் அனுப்பிப் படிக்க வைத்து இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது. படுத்துக் கொண்டே உமிழ்வது ஒரு கலை. அந்தக் கலையின் காட்சிகள் கண்ணுக்குள் தெரிகின்றன.

அவை எல்லாம் கித்தா மரத்துக் காடுகளில் செத்தும் சாகாமல் வாழ்ந்த தமிழர்களின் சாபக்கேடு. பாவம் அந்த வெள்ளந்திகள். போய்ச் சேர்ந்து விட்டார்கள். இப்போது அவர்களின் வாரிசுகள் தவிக்கிறார்கள். தமிழ் மொழியின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லும் பகலும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.  


1857-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு சீன, தமிழ் மொழிப் பள்ளிகள்; ‘தேசிய மாதிரி’ பள்ளிகள் என்று வகைப் படுத்தப் பட்டன. மாதிரி எனும் அடைச்சொல் சேர்க்கப் பட்டது. சீன, தமிழ் மொழிப் பள்ளிகளில் பயின்றவர்கள் ஓராண்டு காலம் கூடுதலாகப் புகுமுக வகுப்பில் படிக்க வேண்டும் என்கிற கல்விச் சட்டத்தையும் கொண்டு வந்தது.

அதனால் தமிழ்ப் பள்ளிகள் மிக மோசமான நிலைக்குப் பின் தள்ளப் பட்டன. தமிழ் மாணவர்கள் பலர் பாதிக்கப் பட்டனர். அவ்வளவு காலமும் ஆங்கிலம் சரியாகத் தெரியாமல்; மலாய் மொழியும் சரியாகத் தெரியாமல் மாணவர்கள் தடுமாறிக் கொண்டு இருந்த காலக் கட்டம்.

எனக்கும் அதே அந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதை இங்கே சொல்ல வேண்டும். ஏன் என்றால் மலாக்கா டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளிக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில இடைநிலைப் பள்ளியில் ரிமூவ் வகுப்பு படிக்கப் போனேன்.

வகுப்பில் நான் மட்டுமே தமிழன். ஒரே இந்தியன். சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வரவில்லை. நாலைந்து ஆங்கில வார்த்தைகளை வைத்துக் கொண்டு மற்ற மாணவர்களுடன் போட்டிப் போட முடியவில்லை.

எத்தனை எத்தனை ஏளனங்கள். எத்தனை எத்தனை பரிகாசங்கள். வேதனை. வேதனை. மறுவருடம் ஆகக் கடைசியான வகுப்பில் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். பாரம் ஒன்று எப். அந்த வகுப்பில் பயங்கரமான போராட்டங்கள். மறுவருடம் பாரம் இரண்டு சி வகுப்பிற்குத் தாவிச் சென்றேன். அதற்கும் அடுத்த வருடம் பாரம் மூன்று பி வகுப்புக்கு உயர்த்தப் பட்டேன். 


இப்படியே தத்தித் தத்தி பாரம் ஐந்து ஏ அறிவியல் பாட வகுப்பில் சேர்ந்தேன். சொந்த உழைப்பு. சொந்த முயற்சி. ஒரு பொன்மொழி. முயற்சி என்னைக் கைவிட்டாலும் முயற்சியை நான் கைவிடுவது இல்லை. மற்ற மற்ற மாணவர்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தேன்.

வகுப்பாசிரியரே என்னை அழைத்து மற்ற வகுப்புகளில் பாடம் நடத்தச் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு அறிவியல் பௌதீகப் பாடத்தில் அபார முன்னேற்றம் அடைந்தேன். அடுத்து ஆறாம் படிவத்திற்குப் போனேன், அப்பா அம்மாவால் படிக்க வைக்க முடியவில்லை. இங்கே தான் வீட்டில் அரை டசன் தம்பி தங்கைகள் இருக்கிறார்களே. அப்புறம் என்ன. அது ஒரு பெரிய கதைங்க. சொன்னால் அழுகை வரும்.

என் அப்பா அம்மா வேலை செய்த அதே தோட்டத்தில் கிராணி வேலை கிடைத்தது. அப்புறம் ஆசிரியர் வேலை. பத்திரிகையாளர் வேலை. ஆகக் கடைசியாக இப்போது கணினிக் கடலில் விழுந்து நீந்திக் கொண்டு இருக்கிறேன். இது ஒரு ரப்பர் தோட்டத்து ஏழைத் தொழிலாளி மகனின் போராட்டக் கதை. என் கதையைப் போல எத்தனையோ தமிழர்களின் கதைகள் வெளிச்சம் இல்லாமல் வரண்டு போய்க் கிடக்கின்றன. சரி.

சீன, தமிழ்ப் பள்ளிகளின் மீது காணப்படும் அரசியல் பார்வை நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியது. வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியமே இல்லை. தாய்மொழிப் பள்ளிகள் தேசியப் பாட்டுக்குத்  தடையாக அமைகின்றன. அம்புட்டுத்தான். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள். புரிந்து கொள்ள முடியும்.

ஒரே மலேசியா தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் தாய்மொழிப் பள்ளிகள் நெருடலாக இருந்து வந்து உள்ளன. நான் சொல்லவில்லை. ஒரு தமிழ்ப் பேராசிரியர் சொல்லி இருக்கிறார். இதுவும் ஒரு மேலிடத்துப் பார்வை தான். இருந்தாலும் மலேசியாவில் தாய்மொழிக் கல்வி என்பது அரசியல் சட்டப்படி அதிகாரம் பெற்று இருக்கிறது. ஆக அங்கேதான் இடிக்கிறது.

இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தால் தாய்மொழிக் கல்வித் திட்டத்தில் சறுக்கல்களை ஏற்படுத்தலாம் எனும் நகர்வுகள் அடிபட்டுப் போகின்றன. புரிகிறதா. புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பாருங்கள். தாய்மொழிக் கல்வி என்பது அரசியல் சட்டப்படி அதிகாரம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தேசியவாதத் தரப்புகளின் வாதங்களைத் தாண்டிச் செல்லும் வாய்ப்புகள் தாய்மொழிப் பள்ளிகளுக்கு அதிகமாக உள்ளன. மறந்துவிட வேண்டாம்.

மலேசியாவில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் படிக்கக் கூடிய அடிப்படை திட்டங்கள் அழகாக எழுதி வைக்கப்பட்டு விட்டன. இந்திய மொழிகளில் தமிழுக்கும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சரிங்களா.

நாம் சுதந்திரம் அடைந்த பின்னர் தாய்மொழி உரிமையை நிலைநாட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. நமக்கு முன் இருந்த தமிழ் மகன்களும் சட்டப்படி செய்து கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல.

மலேசியாவின் தற்போதைய நவீன அரசியல் தன்மையும் கூட தமிழ்ப் பள்ளிகளை நேரடியாகத் தாக்குவது இல்லை. அதையும் நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆகவே தமிழ்ப் பள்ளிகளுக்கு எதிரான தேசிய அரசியல் போக்குகளைக் கண்டு நாம் அதிகமாக அஞ்ச வேண்டியது இல்லை. உடனடியாக பெரிய ஆபத்து ஒன்றும் வரப் போவது இல்லை.

இருமொழித் திட்டத்தில் அரசாங்கம் நேரடியாக அழுத்தம் கொடுக்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க நினைக்கும் எட்டப்பர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரையில் நாமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அது நம்முடைய கடமை.

(தொடரும்)

சான்றுகள்:

1. Dual Language Programme might endanger vernacular schools - https://www.freemalaysiatoday.com/category/opinion/2016/12/30/dual-language-programme-might-endanger-vernacular-schools/

2. Dual Language Programme to continue, says ministry - https://www.themalaysianinsight.com/s/30793

3. English not only language of science; Persatuan Linguistik Malaysia (PLM) - http://plm.org.my/wrdp1/?p=2750

4. List of Schools Approved For Running DLP Programme In 2017 Cohort 2 - http://mumsgather.blogspot.com/2016/11/list-of-schools-approved-for-running.html

5. 126 more schools approved for Dual Language Programme -https://www.nst.com.my/news/nation/2018/01/321822/126-more-schools-approved-dual-language-programme

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5

 தமிழ் மலர் - 11.0.2018 - வியாழக்கிழமை

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம் கடமை

மலேசிய நாட்டிற்கு இருநூறு ஆண்டுகளாய் ஓடாய் உழைத்துத் தேய்ந்தவர்கள். வியர்வைச் சகதியில் குருதிப் புனலைப் பார்த்தவர்கள். மலையூர் காடுகளை வெட்டித் திருத்தி உச்சம் தொட்டவர்கள். பச்சைக் கானகத்தைப் பயிர்விளைப் பூமியாய் மாற்றிப் போட்டவர்கள். 



செம்மண் சடக்குகளில் எலும்பும் தோலுமாய்ச் சிதைந்தும் சேதாரம் மறுத்தவர்கள். இன்று வரையில் தமிழர் அடையாளத்தை இழக்காமல் உரிமைப் போராட்டம் செய்யும் வெள்ளந்தி ஜீவன்கள். அவர்கள் தான் மலையகத்தின் பச்சைத் தமிழர்கள். உங்களையும் என்னையும் பெற்றுப் போட்ட மலையக மாணிக்கங்கள்.

மலாயா தமிழர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒரு பிரிவினர். கொஞ்சம் பணப் போக்குவரத்து உள்ளவர்கள் மற்றொரு பிரிவினர். இந்த இரு பிரிவினரில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் 85 விழுக்காடு என்றால் மற்ற நடுத்தரப் பிரிவினர் 15 விழுக்காடு.

உடல் உழைப்பு தொழிலாளர்களில் பெரும்பாலோர் வறுமை நிலையில் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழ். இவர்களின் பழக்க வழக்கங்கள்; இவர்களின் பாரம்பரியப் பண்பாடுகள்; இவர்களின் கலை கலாசார சமயப் பார்வைகள் அனைத்துமே தமிழோடு ஒன்றித்துப் போனவை.

நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மலையகத் தமிழர்களின் உரிமைகள் மறக்கப்பட்டு வந்தன. அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. தமிழர்களின் வளர்ச்சியும் சரி; தமிழர்களின் வளப்பங்களும் சரி; அவர்களின் சொந்தப் போராட்டங்களில் வியர்வைச் சீதனங்களாய் வந்த வரப்பிரசாதங்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 



காலனித்துவக் காலத்தில் வெள்ளைக்காரர்களை நம்பினார்கள். அவர்களுக்குப் பின்னர் வந்த உள்நாட்டு அரசியல்வாதிகளை நம்பினார்கள். ஆனால் நம்பிப் பிரயோசனம் இல்லை. மோசம் போனது தான் மிச்சம். இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை என்று சொல்வார்களே அந்த மாதிரி இரண்டுமே கைகொடுக்கவில்லை. கண்டும் காணாமல் போய் விட்டன. 


அதன் பின்னர் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களாகவே சொந்தமாகப் போராடினார்கள்.  ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தார்கள். தங்கத் தாம்பாளத்தில் வைத்து யாரும் அவர்களுக்குத் தங்கக் கரண்டியில் ஊட்டிவிடவில்லை. வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலைப் பாக்கு வைத்து யாரும் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கவில்லை. வரலாறு முழுமைக்கும் விழுந்து விழுந்து எழுந்து நிமிர்ந்து நின்று சரித்திரம் படைத்து இருக்கிறார்கள்.

ஓர் இனம் உயிர்ப்பு பெற்று உயர்வு அடைய வேண்டும் என்றால் அரசியல் அவர்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் உதவிகள் கிள்ளிப் போட்ட அல்வாத் துண்டுகளாய்ச் சிதறிப் போயின. ஒரே வார்த்தையில் சொன்னால் இந்தா எடுத்துக்கோ.

இந்த நாள் வரைக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நிரந்தரமான அரசியல் பலம் உருவாக்கப் படவே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப் படவும் இல்லை. 



இருந்தாலும் அப்போது வாழ்ந்த தமிழர்களின் பிரதிநிதியாக ம.இ.கா.வை அரசாங்கம் தேர்வு செய்தது. இன்றைக்கும் சரி. மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என்று சொன்னால் அது ம.இ.கா. தான். வேறு எத்தனைக் கட்சிகள் வந்தாலும் ம.இ.கா.வையும் மலேசிய இந்தியர்களையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒன்றித்துப் போய் இருந்தார்கள். ஆனால் இப்போது இல்லைங்க. காய்ந்து போன கரும்புச் சக்கையாகி விட்டது.

அப்போதைய ம.இ.கா., மத்தியத்தர வகுப்பினரின் குடும்பச் சொத்தாகவே பேர் போட்டு தம்பட்டம் அடித்தது. வசதி படைத்தவர்களுக்கு மேலும் வசதிகளைத் தேடித் தந்த அட்சயப் பாத்திரமாகவும் ஆசீர்வதிக்கப் பட்டது. அதே சமயத்தில் ஏழைத் தமிழர்களைப் பிரதிநிதிப்பது போல கலர் கலராய் மெகா சீரியல்களைப் போட்டுப் படம் காட்டியது.

போற்றிப் புகழும் அளவிற்கு ம.இ.கா. சிறப்பாக எதையும் செய்து விடவில்லை, செய்து இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. மலேசிய இந்தியர்களின் சரித்திரத்தில் இடம்பெறும் அளவிற்கு பெரிசா ஒன்றும் சாதித்து விடவில்லை. மன்னிக்கவும். அப்படித்தான் சொல்ல முடிகிறது.

அரசாங்கத்திடம் இருந்து மானியங்களும் வாய்ப்புகளும் கிடைத்தன. நிறையவே கிடைத்தன. ஆனால் அடிமட்டத் தமிழர்களிடம் வந்து சேர்வதற்குள்… 



என்ன வந்து சேர்வதற்குள்… வரும் வழியிலேயே என்று சொல்லுங்கள். வரும் வழியிலேயே இத்தனை பெர்செண்ட் அத்தனை பெர்செண்ட் என்கிற கணக்கில் பிச்சுக் குதறிய எச்சத்திலும் பிக்கல் பிடுங்கல்கள். அப்புறம் என்ன வந்து சேர்வது. போய் சேர்வது.

அப்படியே வந்து சேர்ந்தாலும் கோச டப்பாக்களில் கொசுறு மிட்டாய்கள் தான். இது மலேசியத் தமிழர்களின் காலாகாலத்து கித்தா காட்டு ராமாயணங்கள். என்றைக்கு வேண்டும் என்றாலும் பாடிக் கொண்டு இருக்கலாம். விடுங்கள். மலேசியத் தமிழர்கள் வாங்கி வந்த வரம். இருமொழித் திட்டம் பற்றிய கருத்துக் களத்தைத் தொடர்வோம்.

ஈப்போ பி.கே.குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர்.

ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாகக் கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.



மலேசியாவின் மக்கள் தொகை 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி 320 இலட்சம். இவர்களில் 287 இலட்சம் பேர் குடியுரிமை பெற்ற குடிமக்கள். இதர 33 இலட்சம் பேர் குடிமக்கள் அல்லாதவர்கள். இதில் இந்தியர்கள் 21 இலட்சம்.

அந்த 21 இலட்சம் பேரில் ஏறக்குறைய எட்டு இலட்சம் பேருக்கு இன்றைய வரைக்கும் சொந்த வீடுகள் இல்லை. அது தெரியுமா உங்களுக்கு. இன்று வரையிலும் வறுமை நிலையில் இருக்கும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப் படவே இல்லை.

நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் 70% பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு இன்னமும் கிடைக்காமல் இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொடர்கின்றன. நியாயமான மாதச் சம்பளம்; வீட்டுடைமைத் திட்டம்; ஓய்வூதியம் போன்றவை இன்றுவரை தொடரும் பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். இந்தியர்களின் ஒட்டு மொத்த பொருளாதார நிலைமை கடந்த 40 ஆண்டுகளாக அதே 1.5% தான். அதுவும் முழுமையாக இல்லை. பெரும் பணக்காரர்களின் கைகளில் சிக்கி உள்ளது. சுருங்கச் சொன்னால் சாமான்ய இந்தியர்களிடம் இல்லை. 




அந்த வகையில் இந்தியர்கள் இடையே அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டன. அது அவர்களைத் தொடரும் வறுமையின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஒரே வார்த்தையில் சொன்னால் வறுமையில் தொடங்கிய மலாயா இந்தியர்களின் வாழ்க்கை இன்றைய நாள் வரைக்கும் இலவு காத்த கிளியாக வாடிப் போய் நிற்கிறது. அந்த மாதிரி வாடிப் போய் நிற்கும் வறுமைச் சமுதாயத்திற்குத் தமிழ்ப்பள்ளிகள் தான் அடைக்கலமாகவும் ஆதரவாகவும் இருந்து வருகின்றன. அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

இப்போது அதே அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிச் சதிராட்டங்கள். அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்க அறைகூவல். அப்படி பயிலும் குழந்தைகள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போகும் நிலை கண்டிப்பாக ஏற்படலாம். இத்தனை வருடங்கள் தமிழில் படித்துவிட்டு திடீரென்று வேறு மொழிக்குப் போனால் நிச்சயமாக தடுமாற்றம் ஏற்படும்.

அதனால் அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் தமிழ்ப் பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வருபவர்கள் ஒட்டு மொத்தமாகக் கணித அறிவியல் சார்ந்த அறிவுத் திறன்களில் திறமை குறைந்தவர்களாகவே இருப்பார்கள். உண்மை தானே.

சாதாரணமான வேலைகளைச் செய்யும் திறன்கூட இல்லாமல் போய்விடும். இந்த நிலையில் இவர்களால் எப்படிங்க நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள முடியும். சொல்லுங்கள். அதுவே நம் நாட்டிற்குப் பெரும் இழப்பாக அமையும்

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். ஆங்கில மொழி மிகவும் முக்கியம். நாம் கண்டிப்பாக ஆங்கில மொழியில் புலமை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதே அந்த ஆங்கில மொழியை அறிவியல் கணிதப் பாடங்கள் வழியாகச் சரியாகக் கற்க இயலாது.

அறிவியலும் கணிதமும் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள். புரிந்து கொண்டால் தான் அறிவியல் கணிதம் சார்பு உடைய அறிவு வளர்ச்சி உண்டாகும். தாய்மொழி வழியாக எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி அனைத்துலக ரீதியில் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஆய்வுகள் அப்படித் தான் சொல்கின்றன.



ஆங்கில மொழியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்கவே முடியாதா என்று நான் பி.கே.குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார்.

முடியும். தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான தொடக்கக் கல்வியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுப் புரிந்து கொண்டால் அதன் பின்னர் கற்றுக் கொள்வது எளிது. அதாவது இடைநிலைப் பள்ளியில் ஒன்றாம் படிவம் தொடங்கி மூன்றாம் படிவம் வரை அந்தப் பாடங்களை ஆங்கில மொழியில் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் தொடக்கத்தில் புரியாத ஆங்கில மொழியில் கற்பதால் காலப் போக்கில் அறிவியல் கணிதப் பாடங்கள் புரியாத பாடங்களாகவே மாறிப் போகும். புரியுதுங்களா.

நம்முடைய மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமொழி மிக மிக அவசியம். கண்ண்டிப்பாகத் தேவை. ஆனால் அந்த மொழியைப் பயன் தரும் அளவிற்குச் செம்மையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே தான் நாம் நிற்கிறோம்.

தாய்மொழியில் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் பிள்ளைகள் பிறமொழிகளில் அறிவியல் அறிவைப் பெறுவது என்பது மிகவும் எளிது. மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளைப் பாருங்கள். சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ், நார்வே, பின்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அவர்களின் சொந்த தாய்மொழியில் தான் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். 

ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழி. ஆக அந்தத் தாய்மொழியிலேயே கற்கிறார்கள். தாய்மொழியில் பயிற்றுவிக்கும் நாடுகள் எப்படி இருக்கின்றன. அதையும் பாருங்கள் என்கிறார் பி.கே.குமார். இவரின் கருத்துகள் நாளையும் தொடரும்.

தாய்மொழிக் கல்வி என்பது நம் அரசியலமைப்புச் சாசனத்தில் அந்த மொழிக்கு வழங்கப்பட்ட ஓர் உரிமை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த உரிமையை மதிக்க வேண்டும். அந்த உரிமையை அப்படியே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதுவே கண்ணியமான கடமையாகும்.

அந்த வகையில் பார்த்தால் அரசாங்கம் என்பது நாம் தேர்வு செய்யும் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதி. ஆகவே நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் கேட்கிறதோ இல்லையோ. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. அரசாங்கம் உணரும் வரையில் நம் ஆதங்கத்தைச் சொல்லி வர வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். சரி தானே.

நம்முடைய இப்போதைய பிரச்சினை இந்த இருமொழித் திட்டப் பிரச்சினை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் உணர்ந்தால் நிச்சயமாக மாற்றம் செய்ய மாட்டார்கள். உதவிக் கரம் நீட்டுவார்கள். இதுவே என் கணிப்பு.

(தொடரும்)

சான்றுகள்:

1. Education Ministry approves dual language programme for another 126 schools - https://www.thestar.com.my/news/nation/2018/01/05/education-ministry-approves-dual-language-programme-for-another-126-schools/

2. SJKT Vivekananda Petaling Jaya was declared a DLP school in 2017s - https://www.freemalaysiatoday.com/category/opinion/2018/01/02/no-politics-in-education-please/

3. Penang people say NO TO DLP (Dual Language Program) in Tamil Schools. - https://www.youtube.com/watch?v=ozuDvsfXXzU

4. Revoke DLP approval for Tamil schools. - https://www.thestar.com.my/news/nation/2017/02/08/revoke-dlp-approval-for-tamil-schools/

5. Lack of info on DLP in Tamil schools - https://www.beritadaily.com/lack-of-info-on-dlp-in-tamil-schools/

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4

தமிழ் மலர் - 10.10.2018 - புதன் கிழமை

இந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. இருமொழித் திட்டம் என்றால் தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் ஆங்கிலம், கணிதப் பாடங்களை நடத்தும் திட்டம். 



இருமொழித் திட்டம் என்பது நல்ல ஒரு திட்டம் தான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் தூர நோக்குப் பார்வையில் இருந்து அந்தத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.

அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பற்பல விளைவுகள் உள்ளன. அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு நன்மைகள் உண்டா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரைத் தொடரில் அலசிப் பார்க்கின்றோம்.

எந்த ஒரு தரப்பிற்கும் நாம் சாதகமாகவும் பேசவில்லை. பாதகமாகவும் பேசவில்லை. உண்மையான நிலை என்ன என்பதைத் தான் ஆராய்ந்து பார்க்கிறோம். அவ்வளவு தான். அதனால் சிலருக்கும் பலருக்கும் மனத் தாக்கங்கள் ஏற்படாலாம். இருந்தாலும் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டிய காலத்தின் கட்டாயப் பிடிக்குள் சிக்கி இருக்கிறோம்.

இருமொழித் திட்டத்தை ஆதரிப்பவர்களில் பலர் ஆங்கில மொழியின் சிறப்புத் தன்மைக்கு முதன்மை வழங்கி வருகிறார்கள். அந்தத் திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் உலகளாவிய மொழிப் புலமையைப் பெற முடியும்; அறிவியல் கணிதப் பாடங்களில் சிறந்து விளங்க முடியும் என்று சொல்கிறார்கள்.



சிறு வயதில் கற்றுக் கொள்ளக் கூடிய எதுவுமே சிலைமேல் எழுத்து போல பிஞ்சு மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும். அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அந்த வகையில் சிறு வயதிலேயே ஆங்கிலத்தையும் கணிதத்தையும் ஆங்கில மொழியில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள அனைத்து தகவல்களும் மழலையர் மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும் எனும் கருத்துகளையும் முன்வைக்கின்றனர்

இந்த இரு மொழிக் கொள்கை கல்வித் திட்டம் நல்ல ஒரு திட்டம். ஆனால் அந்தத் திட்டம் மலேசிய தமிழ்ப் பள்ளிகளைச் சிதைவுக்குக் கொண்டு செல்கின்றது எனும் சில பொறுப்பற்ற தரப்பினர் கூறி வருகின்றனர். அவர்களின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விதண்டாவாதம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்தக் கருத்துகள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கும் தரப்பினரின் கருத்து.

அடுத்ததாக அந்த இருமொழித் திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் கருத்துகளைப் பார்ப்போம்.

அவர்களின் வாதம்:- இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவை இல்லாதது. இந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளின் தமிழ்மொழி சார்ந்த செயல்பாடுகளில் வீழ்ச்சிகள் ஏற்படலாம். 


முட்டை அடை காக்கப்படுவது போல கடந்த இருநூறு ஆண்டு காலமாகத் தமிழ்க் கல்வி தமிழர்களால் அடை காக்கப்பட்டு வந்து இருக்கிறது. ஆனாலும் அது சன்னம் சன்னமாய்ச் சிதைந்து போகும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்த் தலைமையாசிரியர்களும் வேலை இழப்புகளை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

தமிழ்ப் பள்ளிகளில் நான்கு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டால் அந்தப் பாடங்களைச் சார்ந்து உள்ள நூற்றுக் கணக்கான தமிழ் கலைச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் போகலாம். அப்படியே அழிந்தும் போகலாம். அது மட்டும் அல்ல.

தமிழ்ப் பாட நூல்களைத் தயாரிப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. அந்தப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் தயாரிப்பதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. யூ.பி.எஸ்.ஆர். தேர்வுகளில் கேள்வித் தாட்களைத் திருத்துவதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. இதுநாள் வரைக்கும் தமிழ் ஆசிரியர்களே அந்த வேலைகளைச் செய்து வந்து இருக்கின்றார்கள்.

அப்படி இருக்கும் போது இருமொழித் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப் படலாம். அல்லது தேவை இல்லாமலே போகலாம். தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் மற்ற ஆசிரியர்கள் அந்தப் பணிகளைச் செய்யலாம். 


ஆகவே அந்த வகையில் தமிழ் ஆசிரியர்களின் பணிகளுக்கு இடைஞ்சல்கள் வரலாம். தமிழ் ஆசிரியர்களின் வேலைகளை மற்ற ஆசிரியர்கள் செய்யும் போது தமிழ் ஆசிரியர்கள் இனி தேவை இல்லை எனும் சொல்லும் வரலாம். இத்தகைய கருத்துகளையும் எதிர்தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மிக அண்மைய காலங்களில் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதைக் கவனித்தீர்களா. இதற்கு என்ன காரணம்.

மலேசிய இந்தியர்களின் மத்தியில் ஏற்பட்டு வரும் பிறப்பு விகிதாசார வீழ்ச்சியும் ஒரு காரணம். தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடர்பாக இந்திய மக்கள் அடைந்த அதிருப்தியின்  காரணம் என்று சொல்ல முடியாது. இந்தியர்களின் பிறப்பு விகிதாசாரம் மிக மிகக் குறைந்து வருகிறது. அதுதான் சரி. தமிழ் அறவாரியம் அதைத் தான் சொல்கிறது. இந்தக் கருத்தை மொழி சார்ந்த இயக்கங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருமொழித் திட்டத்திற்கு உடன்பாடான கருத்துகளும் இருக்கின்றன. எதிர்மறையான கருத்துகளும் இருக்கின்றன. ஆனால் எதிர்மறையான கருத்துகளே அதிகம்.



இந்த 2018-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சில மாநிலங்களில் நடந்த அதிரடி நிகழ்ச்சிகள். தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் தங்கள் பள்ளிகளையும் இருமொழித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் படி கல்வி அமைச்சுக்கு விண்ணப்பக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் அவசர அவசரமாக அனுப்பி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் வியப்பு கலந்த கவலையைத் தருகின்றது.

இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவர்களின் ரணங்களைக் கீறிப் பார்ப்பது போல அமைவதாக ஒரு தமிழ்க் கல்வியாளர் சொல்லி இருக்கிறார்.

இந்தச் செயலின் பின் விளைவுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்க்காமல்; தூர நோக்குச் சிந்தனையுடன் ஆழமாகப் பார்க்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே தெரிகின்றது. அல்லது வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். மேலிடத்து நெருக்குதல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சன்மானத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஊக்குவிப்புத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். உறுதியாகச் சொல்ல முடியவில்லை, ஆக அப்படியும் நாம் பார்க்க வேண்டும். சரி.

இருமொழித் திட்டத்தைச் சீன மொழிப் பள்ளிகள் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி ஓரங்கட்டி விட்டன. சரிங்களா. அந்தத் திட்டத்தின் பாதக நிலையைப் பற்றி மலாய் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் கூட ஒரு முழுமையான திட்ட வரைவை இன்னும் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு திட்டம். அப்படி இருக்கும் போது தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் எந்த அடிப்படையில் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள். புரியாதப் புதிராக இருக்கிறது.

இந்த இரு மொழிக் கொள்கையை ஏற்கலாமா வேண்டாமா. அதற்கு முன் சில முக்கிய விசயங்களை முன் வைக்கிறேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


முதலாவதாக:- அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு நுட்பவியல், வடிவமைப்பு நுட்பவியல் ஆகிய இந்த நான்கு பாடங்களை மலாய், ஆங்கில மொழிகளில் போதிக்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் முறையாக முழுமைப் படுத்தவில்லை. அதற்கான ஒரு செயல்திட்டமும் இன்னும் முறையாக வரையறுக்கப் படவில்லை. அதற்கான எதிர்காலச் செயல் நிலைகளைப் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவும் இல்லை. 

அரசாங்கம் ஒரு பரிச்சார்த்த முறையில் தான் அந்தத் திட்டத்தைத் தேசியப் பள்ளிகளில் பரிசோதித்து வருகிறது. அந்த முதல் கட்டத்தைத் தாண்டிய பின்னர் தான் அதிகாரப் பூர்வமான ஆய்வு முடிவுகள் தெரிய வரும். சரிங்களா.

ஆகவே அதன் உண்மை நிலையை முதலில் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இரு மொழிச் செயல்பாட்டு திட்டத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தது நன்றாக இல்லை.

ரோஜாக் கூட்டத்தில் முட்கள் இருக்கவே செய்யும் எனும் தெனாலி ராமன் கதை நினைவிற்கு வருகின்றது. தப்பாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டது. சொல்கிறேன். அம்புட்டுதான்.

ஒரு தமிழ்ப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், அந்தப் பள்ளியின் கற்பித்தல் முறையில் நம்பிக்கை வைத்தே அனுப்பி வைக்கின்றார்கள். நன்றாகப் படித்துக் கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையில் அனுப்பி வைக்கின்றார்கள். 


ஆக அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இதுவரை வந்தது இல்லை. இன்று நேற்று அல்ல. ஒரு நூறு வருட காலமாக அவர்களின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த நம்பிக்கையில் தான் அவர்களின் வாழ்வியல் சக்கரமும் நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. சரி.

ஆக பள்ளியின் கற்பித்தல் முறையில் தடாலடி மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பள்ளி நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். வேறு யாரும் அல்ல. பள்ளி நிர்வாகம் தான். இருமொழித் திட்டக் கொள்கையைப் பற்றி பெற்றோர்களிடம் விளக்கி இருக்க வேண்டும். அதைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்து பேசி இருக்க வேண்டும்.

இப்படி ஒரு மாற்றம் வருகிறது என்று பள்ளி வாரியக் குழுவிடம் தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாற்றலாமா வேண்டாமா என்று முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. சரியான முறைபாடு.

ஆனால் அந்த மாதிரியான விளக்கக் கூட்டங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த மாதிரியான கல்விக் கலந்துரையாடல்கள் நடந்ததாகவும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. இன்றைக்குத் தாலி காட்டி நாளைக்கே பிள்ளையைப் பெற்றுக் கொடு என்று கேட்கும் கதையாகிப் போனது.

நாடு தழுவிய நிலையில் கருத்தரங்குகள்; கல்ந்துரையாடல்கள்; விளக்கக் கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். எதார்த்தமான பெற்றோர்கள் மனநிறைவு அடையும் வரையில் போதுமான விளக்கங்களைக் கொடுத்து இருக்க வேண்டும். ஆக மீண்டும் சொல்கிறேன். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அரக்கப் பரக்க ஆற்றுக்குள் இறங்கி அயிரை மீனைப் பிடித்து வந்த கதையாகத் தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மலேசியாவில் உள்ள அத்தனைச் சீனப் பள்ளிகளில் ஒரு பள்ளிகூட இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. தெரியும் தானே. பேசி வைத்த மாதிரி எல்லாச் சீனப் பள்ளிகளுமே ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஏன் புறக்கணித்தன என்று ஆதரவு தரப்பினர் விளக்கம் கேட்கிறார்கள்.. 


இன்னும் ஒன்றையும் இங்கே மறந்துவிட வேண்டாம். இருமொழித் திட்டத்தை அமல் படுத்துவதில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரசாங்கம் எந்த ஓர் அழுத்தத்தையும் நெருக்குதலையும் கொடுக்கவில்லை. வற்புறுத்தவும் இல்லை. நிதர்சனமான உண்மைகளை நியாயத்துடன் ஏற்றுக் கொள்வோம்.

மலாய்க் கல்விமான்களே எதிர்க்கும் ஒரு திட்டத்தில் மேலிடமே மௌனம் சாதிக்கும் ஓர் இக்கட்டான நிலை. அந்த நிலைமையில் தமிழ்ப் பள்ளிகளின் மீது திணிப்புச் செய்வதில் ஒரு வகையான தயக்கமே படர்ந்து நிற்கிறது. 

ஆக அப்படி இருக்கும் போது ஏன் அவசரம் அவசரமாக நாமே வலிய போய் அந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும். முன்னாள் துணைக் கல்வி அமைச்சரும் மற்றும் ஒரு பேராசிரியரும் அவர்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளை இணைத்துக் கொள்ள பரிவட்டம் கட்டி வந்தனர். அவர்களின் முயற்சிகள் அவர்களின் பார்வையில் சரியாக இருக்கலாம்.

இருந்தாலும் மாற்றம் செய்வதற்கான விளக்கங்களைச் சரியாகக் கொடுத்து இருக்க வேண்டும். அதைச் செய்தார்களா. அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மறந்து விட்டார்கள் என்று சொன்னால் உண்மையிலேயே அதுதான் பில்லியன் டாலர் அதிசயம்.

இன்றைய காலக் கட்டத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் அடுத்து வரும் பல பத்து ஆண்டுகளுக்கும் பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாளைய கட்டுரையில் வணிக வள்ளல் பி.கே.குமார் அவர்களைச் சந்திக்கின்றோம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர். ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாக பாலர் பள்ளி முதல் 6-ஆம் வகுப்பு வரை கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Taskforce vows to sue Tamil schools over dual-language programme - https://www.malaysiakini.com/news/408540

2. Tamil NGOs say no to dual language programme - https://www.thestar.com.my/news/nation/2016/12/25/tamil-ngos-say-no-to-dual-language-programme/

3. DLP will boost enrollment in Tamil schools - https://www.beritadaily.com/dlp-will-boost-enrollment-in-tamil-schools/

4. Ramasamy tells Education Ministry to abolish dual language programme - https://www.malaymail.com/s/1281805/ramasamy-tells-education-ministry-to-abolish-dual-language-programme

5. Tamil school’s dual-language legal limbo - https://www.themalaysianinsight.com/s/29830