04 மார்ச் 2019

சாலிகிராம்

சாலிகிராம் என்றால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் அம்மோனைட் ஓடுகள். இந்த ஓடுகள் எப்படி நேபாளத்திற்குப் போயின.
 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தது என்பதுதான் புவியியல் உண்மை.

(Shaligrams are Ammonoid fossils of the Devonian - Cretaceous period which existed from 400 to 66 million years ago. )
 

இந்தியக் கண்டத்தின் நில அடுக்கு மேல் நோக்கி நகர்ந்து ஆசிய நில அடுக்குடன் மோதியதால் இமயமலை உருவானது. இந்த நிலத் தகடுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செண்டி மீட்டர் முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்த உயிரினங்களின் எலும்புக் கூடுகளும் நேபாளப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இமயமலை அடிவாரத்தில் திமிங்கிலத்தின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 

இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் தனித்தனி நிலத் தகடுகள். இந்தியா மட்டும் தனி ஒரு தகட்டில் உட்கார்ந்து இருக்கிறது.

ஆசியத் தகட்டை இந்தியத் தகடுதான் முதலில் மோதுகிறது. அந்த மாதிரியான ஒரு மோதலில், ஓர் அழுத்தத்தில் உருவானதே இமயமலையாகும்.

உலகத்திலேயே உயரமான அந்த மலை இன்னும் உயர்ந்து கொண்டு போகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு சில அங்குலம் உயர்கிறது. இமயமலை உயர்வதற்கு, இந்திய, ஆசியத் தகடுகள் மோதிக் கொள்வதுதான் மூல காரணம்.
 

பூமியின் மேல்பகுதியில் உள்ள நில அடுக்குகளை 'டெக்டானிக் பிளேட்ஸ்' (Tectonic Plates) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

இந்த அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச் செல்லும் போது நில அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வைத் தான் நிலநடுக்கம் என்கிறோம்.
 

மத்திய ஆசியாவில் அமைந்து இருப்பது யூரேசியன் டெக்டொனிக் பிளேட் (Eurasian Tectonic Plate) எனும் நிலத் தகடு. அதைக் கண்டத்தட்டு என்றும் சொல்லலாம்.

அதற்கு கீழ்ப் புறமாக இருப்பது இந்திய டெக்டொனிக் பிளேட் (Indian Tectonic Plate). இந்த இரண்டு தட்டுகளும் பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டே இருக்கின்றன. அந்த உரசலின் விளைவாகத் தான் இமயமலைத் தொடர் உருவானது.
 

சாலிகிராம் கடல்வாழ் உயிரினங்களில் அம்மோனைட் ஓடுகள் இந்த மாதிரி நிலத் தகடுகளின் நகர்வுகளினால் தான் 3500 கிலோ மீட்டர்கள் தாண்டி நேபாளத்திற்கு வந்து சேர்ந்தன.

சாலிகிரம் என்பது திருமாலின் சின்னமாகும்.  இது படிமக் கற்களாகக்  கிடைக்கிறது. சாலிகிரம் கற்களில் வட்ட நீள் வட்ட வடிவங்கள் காணப்படும்.  திருமால் வழிபாட்டில் மிக முக்கியமானது. சாலிகிராம் கற்கள் இயற்கையாகக் கிடைப்பவை.


உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட சாலிகிராம் மிகத் தொன்மையானது. பழங்காலத்தில் இருந்து கோயில்களிலும், மடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடுகிறார்கள்.   .

நேபாளத்தின் முக்திநாத் எனும் இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் கண்டகி எனும் நதி ஓடுகிறது. அதில் இந்தக் கற்கள் உருவாகின்றன. உலகை வியப்பில் ஆழ்த்துகின்றன.

தமிழரை ஏமாற்றும் தமிழர்கள்

இன்று 09.02.2019 மாலை ஆறு மணி போல நடைப்பயிற்சிக்குப் போய் இருந்தேன். திரும்பும் போது ஒரு தள்ளுவண்டியில் ஒரு தமிழரின் மீ கோரேங் விற்பனை. ஒரு வாரமாகக் கடை போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே எனக்கு ஒரே ஒருநாள் அறிமுகம். ஒரு முறை வாங்கி இருக்கிறேன். ஓர் ஆள் சாப்பிடும் அளவிற்கு மீ கோரேங். ஒரு பாக்கெட்டின் விலை 5 ரிங்கிட்.

உண்மையான் விலையில் பார்த்தால் பொருட்களின் அடக்க விலை ஒன்றரை வெள்ளிக்கு மேல் தாண்டிப் போகாது.

இன்றைக்கு மாலையில் அவரைப் பார்த்தேன். ’நாலு வெள்ளிக்கு போடுங்க தம்பி’ என்றேன். உடனே அவர் ’நாலு வெள்ளிக்கு எல்லாம் இல்ல. கட்டுப்படி ஆகாது. அஞ்சு வெள்ளி’ என்றார்.

அதற்கு நான் ’என்னிடம் நாலு வெள்ளிதான் இப்ப இருக்கு. நாலு வெள்ளிக்கே போடுங்க தம்பி’ என்றேன்.

’நாலு வெள்ளிக்கு எல்லாம் முடியாதுங்க’ என்று கராராகச் சொல்லி விட்டார். ’

இல்ல தம்பி... நான் காசு எடுத்து வரல... நாலு வெள்ளிக்கே போடுங்க... ஒரு ஆள் சாப்பிடத் தானே’ என்றேன்.

அதற்கு அவர் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பேசியில் மூழ்கிவிட்டார். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவரும் தமிழர். நானும் தமிழர். அவருக்கு வயது 40-ஐ தாண்டிப் போகாது. நான் அவருக்கு ஓர் அப்பா வயதில் இருக்கிறேன்.

ஒரு வெள்ளியில் என்ன வந்திடப் போகிறது. கொஞ்சம் இரக்கம் காட்டி இருக்கலாமே. அட... வயதுக்கு மரியாதை வேண்டாங்க. ஒரு தமிழருக்கு ஒரு தமிழர் மரியாதை கொடுத்து இருக்கலாமே.

பொருளின் விலை ஐந்து வெள்ளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என் கையில் நான்கு வெள்ளி தானே இருக்கிறது. அந்த நான்கு வெள்ளிக்கே கொடுக்கலாமே. அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

எத்தனைப் பேருக்கு எவ்வளவோ கொடுத்து உதவி செய்து இருக்கிறேன். திரும்பிக் கேட்டதாக என் நினைவில் இல்லை. தானம் செய்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்த்தால் அது எங்கேயோ போய் நிற்கும். நடந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பக்கத்துச் சீனரின் மளிகைக் கடைக்குச் சென்றேன்.

ஒரு கிலோ மீ; ஐந்து முட்டைகள்; ஒரு பாக்கெட் மீன் உருண்டைகள்; கொஞ்சம் தாவ்கே; மூன்று பச்சை மிளகாய் விலை 5 ரிங்கிட் 20 சென். கையில் இருந்த நான்கு வெள்ளியைக் கொடுத்து மிச்சத்தை நாளைக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

கடையில் வாங்கிய பொருட்களைக் கொண்டு நான்கு முறை மீ கோரேங் பிரட்டிச் சாப்பிடலாம்.

என் மனதின் ஓரத்தில் ரொம்பவுமே வேதனை. ஒரு தமிழர் வியாபாரம் செய்கிறாரே... அவருக்கு ஆதரவு கொடுப்போமே எனும் ஒரு தமிழர் உணர்வில்தான் ஒரு தமிழரைத் தேடிப் போனேன். ஆனால் இப்படிப்பட்ட தமிழராக இருப்பார் என்று நினைக்கவே இல்லை.

இனிமேல் இந்த மாதிரி தமிழர்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்வதே புண்ணியம் என்று அப்போதே முடிவு செய்தேன். இவர் மட்டும் அல்ல.

இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். எங்கேயோ அத்தி பூத்தால் போல ஒரு சில நல்ல மனங்கள் இருக்கவே செய்கின்றன.

கடையில் போய் வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். அதுவே என் பணிவான அன்பான வேண்டுகோள்.

பத்திரிகா தர்மம்

பத்திரிகைகளுக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையும் தாண்டிய நிலையில் தனிப்பட்ட இணக்குப் பிணக்குகள் இருக்கலாம். குரோதங்கள் இருக்கலாம். மனக் கசப்புகளும் இருக்கலாம். அது வழமை.

ஆனால் பத்திரிகா தர்ம நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடுகள் இருக்கவே கூடாது. பத்திரிகா தர்மம் என்றால் அது ஒரு பத்திரிகையின் தர்மம். அது ஒரு சமூகப் பொறுப்பு. ஒரு சமூகத்தின் நிலைப்பாடு. அது ஒரு பொதுவான பத்திரிகை நியதி.

செய்திகளை வெளியிடுவதும் தவிர்ப்பதும் ஒரு பத்திரிகையின் தனிப்பட்ட சுதந்திரம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் நடைபெற்றது உலகத் தமிழர்களின் நிகழ்ச்சி அல்லவா. அதை நினைத்துப் பார்த்து இருக்க வேண்டும்.

உலகத் திருக்குறள் மாநாடு. உலகளாவிய நிலையில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி. மலேசியாவில் இருந்து 300 பேராளர்கள். வெளி நாடுகளில் இருந்து 200 பேராளர்கள்.

அதைப் பற்றிய செய்திகள் தமிழ் மலர் தினசரியில் மட்டுமே வெளி வந்தன. மற்ற இரு தமிழ்ப் பத்திரிகைகளிலும் மாநாட்டு செய்திகள் பிரசுரிக்கப் படவில்லை. புறக்கணித்து விட்டன.

மாநாட்டை யார் நடத்தினார்கள் என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஓர் உலகத் தமிழ் மாநாட்டைப் பற்றி செய்திகளைப் பிரசுரிக்காத தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றி என்னவென்று சொல்வது.

அட எதிரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நடப்பது உலகத் தமிழர்களின் நிகழ்ச்சி அல்லவா. அதுவும் அந்தப் பத்திரிகைகள் விறபனையாகும் நாட்டில் அல்லவா நடைபெறுகிறது. அதையாவது நினைத்துப் பார்த்து இருக்கலாமே.

எங்கே போனது தமிழ் உணர்வு. தமிழை வைத்துச் சம்பாதிக்க மட்டும் நோக்கம் இருக்கிறது. ஆனால் அதைப் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் போய் விட்டதே. வேதனையாக இருக்கிறது.

என்னைக் கேட்டால் பத்திரிகா தர்மத்தில் காழ்ப்புணர்வு கலக்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் அது பத்திரிகைச் சுதந்திரம் அல்ல. படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சைக் கலக்கும் விஷப் பரீட்சை.

பத்திரிகை உலகில் வியாபாரப் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் குறுகிய நோக்கங்கள் ஆட்கொள்ளும் போது பத்திரிகா தர்மமும் இடிந்து விழுந்து இறந்து போகிறது.

உண்மைகள் சுடும் என்று சொல்வார்கள். ஆனால் பத்திரிகா தர்மத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி போகப் போக ரொம்பவே சுடும்.

03 மார்ச் 2019

இம்ரான் கான் தமிழரா

இம்ரான் கான் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஷ்தூன் மரபைச் சேர்ந்தவர். பஷ்தூன் என்பது கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு. ஈரானில் இருந்து குடிபெயர்ந்து ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள்.

இம்ரான் கான், நவம்பர் 25, 1952-இல் லாகூர், பஞ்சாபில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் Imran Ahmed Khan Niazi. தந்தையாரின் பெயர் Ikramullah Khan Niazi. தாயாரின் பெயர் Shaukat Khanum.

இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த யூதப் பெண்மணி ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை 1995-இல் திருமணம் செய்து கொண்டார். சுலைமான், காசிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது மனைவியின் பெயர் ரேஹம் கான்.

மூன்றாவது மனைவியின் பெயர் புஷ்ரா மணிகா.

நான்காவது மனைவியின் பெயர் சீதா வைட்.

(வேலை வெட்டி இல்லாத சிலர்... இம்ரான் கான் ஒரு தமிழர் என்று கதைகட்டி உலகத்தையே குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் திருந்த மாட்டார்கள்.)

செமினி இடைத் தேர்தல் பக்காத்தான் தோல்வி

செமினி இடைத் தேர்தலில் பக்காத்தான் தோல்வி என்பது ஆளும் அரசாங்கத்திற்குப் பொதுமக்களின் இரண்டாவது எச்சரிக்கை மணி. கேமரன் மலை தோல்விக்குப் பின்னர்  கிடைக்கும் இரண்டாவது சாட்டையடி.


பக்காத்தான் அரசாங்கம் சொன்னபடி நடந்து கொள்ள தவறி வருகிறது. அதை நினைவுபடுத்தவே மக்கள், தங்களின் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே கேமரன் மலையில் அடி விழுந்து விட்டது. அதை நினைத்துக் காய்களை நகர்த்தி இருக்க வேண்டும். செய்யத் தவறி விட்டார்கள்.

இவர்களுக்குள் தான் பதவிப் போராட்டத்தில் தலைமுடிகளைப் பிடித்து இழுத்துப் பிய்த்துக் கொண்டு திரிகிறார்களே. அப்புறம் எங்கே காயை நகர்த்துவது. காக்காவைப் பிடிப்பது.

முதலில் வந்து நிற்பது விலைவாசியின் அகோரத் தாண்டவம். பாரிசான் ஆட்சி செய்த காலத்தில்கூட விலைவாசி இந்த அளவுக்கு உயர்ந்து போனது இல்லை. ஒரு வெள்ளிக்கு விற்ற ஒரு கிலோ சிவப்பு மிளகாய் ஒன்பது வெள்ளிக்கு விற்கிறது.
 


பத்து காசிற்கும் இருபது காசிற்கும் கொஞ்சம்கூட மதிப்பு மரியாதை இல்லாமல் போய் விட்டது. ஒரு வெள்ளிக்கு குறைவாக எந்த ஒரு பொருளும் சந்தையில் கிடைப்பதாகவும் இல்லை.

சாமானிய மனிதனின் அன்றாட வாழ்வியலில் ஏற்பட்ட விலைவாசி தாக்கங்களே வேறு கோணத்தில் கொப்பளிக்கின்றன.

இந்த இலட்சணத்தில் பறக்கும் காரை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். தேவையா. முகத்தில் எண்ணெய் வடிகிறது. இதில் மேக்கப் போட பவுடர் கேட்பது போல இருக்கிறது. முதலில் முகத்தில் வழியும் எண்ணெயைச் சவர்க்காரம் போட்டுக் கழுவட்டும். அப்புறம் பவுடரைப் பற்றி பேசலாம்.

இதை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு மற்ற காரணங்களையும் பார்ப்போம். பொதுத் தேர்தலுக்கு முன்னர் பக்காத்தான் கூட்டணி சொன்னது மாதிரி நடந்து கொள்ள தவறிவிட்டது.
 


கொடுத்த வாக்குறுதிகளில் கொஞ்சமாவது செய்து காட்டி இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன. உருப்படியாக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. சண்டை போடத்தான் நன்றாகக் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து DAP-யின் ஆட்டமும் பாடமும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக மலாய்க்காரர்களுக்கு... பி.டி.பி.டி.என்; டோல் விசயங்களில் பக்காத்தான் சொன்னதைப் போல் நடந்து கொள்ளவே இல்லை.

அடுத்து பிரிம் காசு. பாரிசான் கொடுத்து வந்த பிரிம் காசு BSH என்று மாற்றம் கண்டது. சரி. ஆனால் சரியான அலைகழிப்புகள். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யலாம். உள்ளே சென்று பார்த்தால் ஆயிரத்தெட்டு கேள்விகள்.

வருமானவரி இலாகாவின் Data Base அடிப்படையாகக் கொண்டு BSH பணத்தை பிரச்சனை இல்லாமல் கொடுக்கலாம். இருந்தாலும் பொதுமக்களுக்கு இப்படி ஒரு பெரிய அலைச்சலைக் கொடுத்து இருக்கக் கூடாது. மலேசியாவில் பாதி பேருக்கு இன்னும் BSH பணம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அந்த ஆத்திரம் வேறு இருக்கிறது.
 


1MDB பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் ரொம்ப சவடாலாக ஊர்க்கோலம் போய்க் கொண்டு இருக்கிறார்கள். உருப்படியாக யாரையும் பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தி உருப்படியாக வழக்கை நடத்தவில்லை.

டிவிட்டர் மன்னன் ரொம்பவும் சந்தோஷமாக ஊர் சுற்றிக் கொண்டு திரிகிறார். தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளும் புன்னகைப் பூக்கிறார்கள்.

பக்காத்தான் அமைச்சர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. மற்ற அமைச்சர்களுடன் மனம்விட்டு பேசிக் கொள்கிறார்களா என்றுகூட தெரியவில்லை. சந்தேகமாக இருக்கிறது.

இன்றைக்கு ஒரு பேச்சு. நாளைக்கு ஒரு பேச்சு. காலையில் பேசியதை மாலையில் மீட்டுக் கொள்கிறார்கள். மக்களுக்கு இது எரிச்சலைக் கொடுக்கிறது.


ஆள்பல அமைச்சருக்கு அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மீது  தான் ரொம்பவும் அக்கறை. நம் நாட்டுத் தொழிலாளர்களின் நலன்களில் போதுமான கவனிப்பு செலுத்த தவறி வருகிறார்.

நம் நாட்டு இந்தியக் குடும்ப மாதர்களுக்கும்; இந்திய இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம் இந்தியக் குடும்பப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை எல்லாம் பக்கத்து நாட்டுப் பெண்கள் கொல்லைப் புறமாக வந்து கபளீகரம் செய்துவிட்டுப் போகிறார்கள். அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறது.

சென்ற ஆண்டு 2018 பொதுத் தேர்தலில் பாரிசான் தோல்வி அடைந்தது. தெரிந்த விசயம். அந்த வேதனையில் அந்த வருத்தத்தில் அந்தக் கூட்டணி மக்களிடையே இனவாதத்தை தூண்டிக் கொண்டு வருகிறது. இந்த விசயத்தில் முஸ்ரிக்கு முதல் மரியாதை செய்யலாம்.

PAS UMNO இரண்டும் சேர்ந்து இருப்பது ஓர் இனவாதக் கூட்டணியே. அதே போல DAP-யும் ஒரு வகையில் ஒரு சீன இனவாத கட்சியே.

DAP அமைச்சர்களில் பெரும்பாலோர் அறிவாளிகளாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த விசயம் பெரும்பாலான உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை. (புரிந்து கொள்ளுங்கள்) இது பரவலான கருத்து. ஆனால் இது பலருக்கும் தெரியாத விசயம்.


சீன இனவாத அடிப்படையில் இயங்கும் DAP கட்சியை மலாய்காரர்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில் அம்னோவின் இனவாதத்திற்கு நம்முடைய இந்திய அரசியல் அமைப்புகளும் துணை போகின்றன. வேதனையாக இருக்கிறது.

இனவாதம் மேலோங்கினால் 1969 ஆண்டு மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மறந்துவிட வேண்டாம். இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

அன்வார் - அஸ்மீன் இருவருக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரிசலைப் பெரிதுபடுத்தி வருகிறது. இதைப் பார்த்து மக்கள் வெறுப்பு அடைந்து வருகிறார்கள்.

தகுதி இல்லாத அமைச்சர்களைத் தூக்கி எறிய முடியாமல் இன்னமும் இடுப்பில் கட்டிக் கொண்டு தடுமாறுகிறார் பெரியவர் மகாதீர். பாவம் அவர்.

வெள்ளைக் காலணியை கறுப்புக் காலணியாக மாற்றுவது மட்டும் ஓர் அமைச்சரின் ஒரு பெரிய வேலையாக அமைந்து விடாது.

இன்னும் வரும்...