12 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10

இலங்கை என்பது இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த ஒரு சீதனம். மனித குலம் நிறைந்து நிம்மதியாக வாழ வேண்டிய ஓர் அற்புதமான பச்சை மண். ஆனால் இன்று அப்படி இல்லைங்க. இனவாதம் என்பது பேரினவாதமாக மாறி அந்தச் சொர்க்க பூமியைச் சுடுகாட்டுப் பூமியாக மாற்றிப் போட்டு விட்டது.
 

அந்தப் பூமியில் இன்றையக் காலக் கட்டத்தில் கண்ணுக்குத் தென்படுவது எல்லாமே புலிகள் தான். தொட்டாலும் புலிகள். விட்டாலும் புலிகள். அட எட்டிப் போனாலும் புலிகள்.

அரசாங்கத்தை எதிர்ப்பவர் ஒரு தமிழராக இருந்தால் அவர் ஒரு தமிழ்ப் புலி. அவரே ஒரு சிங்களராக இருந்தால் அவர் ஒரு சிங்களப்புலி. வெள்ளைக்காரராக இருந்தால் அவர் ஒரு வெள்ளைப்புலி. ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவராக இருந்தால் அவர் ஒரு நீக்ரோ புலி. அரசாங்கத்திற்குப் பிடித்த புலி மஞ்சள் புலி. கோடிக் கோடியாய் காசு கொடுக்கும் டிரகன் புலி.

அந்த மாதிரியான பாசிசக் கொள்கைகள்தான் அங்கே தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றை எதிர்த்த சிங்களர்களும் பலர் உள்ளனர். அதன் பாதிப்புகளினால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வாழும் சிங்களப் பத்திரிகையாளர்களும் உள்ளனர். 



அவர்களில் பாஷ்னா அபிவர்தனே; பிரட்ரிகா ஜான்ஸ்; தாராக்கி சிவராம்; நமால் பிரேரா; பிரகீத் எக்னலிகொடா; லசாந்தா விக்ரமதுங்கா

Bashna Abivartne;
Fredrica Jones;
Taraki Sivaram;
Namal Perera;
Prageeth Ekneligoda;
Lasantha Wickrematunge

போன்றவர்களைச் சொல்லலாம். இவர்கள் சிங்களப் புலிகளின் எடுத்துக் காட்டுகள். அதனால் தான் அந்த நாட்டு அரசாங்கம் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகப் பார்க்கிறது. சுற்றுப் பயணிகளைக்கூட ஒரு மாதிரியாகப் பார்த்து பயப்படுகிறது. தமிழ்ப்புலிகள் மீது இருந்த பயம் இன்னும் விட்டுப் போகவில்லை.

ஒரு மனிதன் அவனுடைய அன்பு, அறிவு, பண்பு எனும் மனிதப் பிறப்புக்கு உரிய தன்மைகளுடன் இலங்கையில் வாழ இயலவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் எழுதி இருந்தார். அது தமிழர்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட நீதி நியதி அல்ல; சிங்களர்களுக்கும் சேர்த்து தான். அடுத்து ஒரு முக்கியமான விசயம்.



இலங்கை இப்போது மெல்ல மெல்ல சீனாவின் முதலைப் பிடியில் சிக்கி வருகிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் இலங்கை எனும் நாடு சீனாவிற்குச் சொந்தமான கைப்பாவை நாடாக மாறிப் போகலாம்.

இலங்கையின் அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் முதலாளிகள்; சீனர்கள் தான் தொழிலாளர்கள். இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை உருவெடுக்கும். அதற்கான அடித் தளத்தை சீனா இப்போதே சீரும் சிறப்புமாய் அமைத்து விட்டது.

தமிழ்ப்புலிகளின் போர் 2009-ஆம் ஆண்டு முடிந்து விட்டது. இருந்தாலும் தமிழர்கள் அவர்களின் உரிமைகளை இழந்து அனாதைகளாக ஆக்கப்பட்டது பற்றி இலங்கை அரசுக்கு கொஞ்சமும் கவலையும் இல்லை.

ஒன்று மட்டும் உண்மை. அடுத்த சில ஆண்டுகளுக்குள் அங்கே ஒரு பெரிய மௌனமான போர் நடக்கும். அதாவது பொருளாதாரப் போர். அதில் மனித உயிர் இழப்புகள் இருக்கா. ஆனால் இலங்கை எனும் நாடு சிங்களர்கள் கையில் இருந்து கைநழுவிப் போகும்.



ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று கொண்டு  இலங்கையைக் கபளீகரம் செய்யப் பார்க்கின்றன.

அம்பாந்தோட்டை (Hambantota) விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைசோலை அனல் மின் நிலையம் (Norocholai Power Station), கொழும்பு துறைமுக விரிவாக்கம், இரயில் பாதை புனரமைப்பு வேலைகள் என எல்லா வேலைகளையும் சீனா செய்து முடித்து விட்டது.

இதிலும் ஒரு பெரிய வேடிக்கை. அம்பாந்தோட்டை துறைமுகம் 450 கோடி ரிங்கிட் செலவில்; சீனா கொடுத்த கடனில் கட்டப் பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுங்களா.

இலங்கைக் கடல் வழியாக ஒரு நாளைக்கு 165 கப்பல்கள் போகின்றன வருகின்றன. ஆனால் ஒரே ஒரு கப்பல் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குப் போகிறது. 2017-ஆம் ஆண்டில் 48 கப்பல்கள் தான் போய் இருக்கின்றன.  



ஆக வட்டிக் கடனைக் கட்ட முடியாமல் இலங்கை விழி பிதுங்கி நின்றது. அப்புறம் வேறு வழி இல்லாமல் அந்தத் துறைமுகத்தைச் சீனாவிடமே 99 ஆண்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடடது.

சீனாவைக் காட்டி இந்தியாவிடமும்; இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லி பணத்தை இலங்கை அரசு சுரண்டி வருகிறது.

புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு மார் தட்டிக் கொண்டாலும் அடுத்து அது எதிர்கொள்ளப் போகும் பெரும் பெரும் ஆபத்துகளை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட கையூட்டுகள் மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்லப் படுகிறது. வரப் போகும் ஆபத்தை உணராமல் தலையை ஆட்டியவாறு இருக்கிறதை எல்லாம் தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 



இதைப் பற்றி கேள்வி கேட்டால் கேட்டவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள். இதில் தமிழர், சிங்களர் என்கிற வித்தியாசம் இல்லை.

1990-ஆம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில்தான் இனவாத அடக்குமுறைகள் தலைதெறிக்க கட்டவிழ்த்து விடப் பட்டன. இப்போதைய அதிபர் ராஜபக்‌சாவின் காலத்தில் நிலைமை மிக மிக  மோசமாகி விட்டது.

சுருக்கமாகச் சொன்னால், நெருக்குதல் கொடுப்பவர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்.

அந்த நாட்டில் உள்ள அனைத்தும் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சாவிற்குக் கட்டுப்பட்டது. அதுதான் அங்கே இன்றைய மக்களாட்சிக் கொள்கை. ஈழத் தமிழர்களின் வீர வரலாற்றில் இன்றைய இலங்கையின் அரசியலும் ஒரு பகுதியே. நினைவில் கொள்வோம். சரி. பிராபகரன் வரலாற்றிற்கு வருவோம்.



வவுனியா காடுகளில் தமிழ்ப்புலிகளின் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நிதிப் பற்றாக்குறையே மூல காரணம். பிரபாகரனின் கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. அதே சமயத்தில் போராளிகள் கொண்டு வந்த பணமும் முடிந்து விட்டது.

இனிமேல் போய் எங்கேயும் உழைத்துச் சம்பாதிக்க முடியாது. அதற்கு எல்லாம் நேரமும் இல்லை. காலமும் இல்லை. வெளியே போய் சம்பாதிக்க இடமும் இல்லை. ஆனால் போராட்டம் தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாகப் பணம் தேவை. என்ன செய்வது.

போராளிகளில் ஒருவர் சொல்கிறார். சிவக்குமரன் அண்ணா செஞ்சது மாதிரி ஒரு சிங்கள வங்கிக்குப் போய் கொள்ளை அடிக்கலாம்.

அந்தக் கருத்திற்கு முதலில் எதிர்ப்பு. பிரபாகரன்கூட மறுப்புத் தெரிவித்தார். இருந்தாலும் அந்த நேரத்தில் வடக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வரிப் பணம் எல்லாம் கீழே தெற்குப் பகுதியில் இருக்கும் சிங்களருக்குச் செலவு செய்யப் பட்டு வருகிறது எனும் ஓர் அதிருப்தி பரவலாக இருந்தது.

அதனால் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு சிங்கள வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்கத்திற்குத் தான் நட்டம். மக்களுக்கு இல்லை என முடிவு எடுத்தார்கள். பிரபாகரனும் சரி என்று சொன்னார். 



அதன் பின்னர் பல வங்கிகள் தேர்ந்து எடுக்கப் பட்டன. கண்காணிக்கப் பட்டன. கடைசியில் யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஒரு வங்கி தேர்வு செய்யப் பட்டது.

1976 மார்ச் 5-ஆம் தேதி வங்கிக்குள் நுழைந்தார்கள். 5 இலட்சம் ரொக்கப் பணம்; 2 இலட்சம் மதிப்பு நகைகள் கைவசம்.

பணம் பத்திரமாகப் பதுக்கி வைக்கப் படுகிறது. ஆனாலும் பிரபாகரனுக்கு அந்த நிகழ்ச்சி மனதை ரொம்பவுமே உறுத்தி விட்டது. என்னதான் அரசாங்கப் பணம்; அடுத்தவன் பணம் என்றாலும் கொள்ளை அடித்தது தப்பு இல்லையா. வேதனைப் பட்டார். அவரை மற்றவர்கள் சமாதானம் செய்தனர்.

எடுத்த பணத்தில் ஒரு பகுதியை முத்துமாரி அம்மன் கோயிலின் அன்ன தானத்துக்குக் கொடுத்து விடலாம் என முடிவு செய்தார்கள். அதே போல ஒரு பகுதி நிதியைக் கோயிலுக்கு வழங்கினார்கள். எஞ்சிய பணம் உடை உணவு ஆயுதங்களுக்குச் செலவு செய்யப் பட்டது. 

வங்கி கொள்ளைக்குப் பின்னர் சிங்கள அரசு உஷாரானது. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. சிங்களத்திற்கு எதிராக ஒரு பெரிய புரட்சிப்படை உருவாகி வருகிறது என்பதையும் அந்தச் சிங்களம் நன்றாகவே உணரத் தொடங்கியது.



அது அப்படியே இருக்கட்டும். இந்தப் பக்கம் வவுனியா காடுகளில் பிரபாகரனின் பயிற்சி தொடர்கிறது. போராளிகளும் புதிது புதிதாதக் கற்றுக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் பிரபாகரன் வேறு ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். இப்படியே பயிற்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இருந்தால் பேர் போட முடியாது. நமக்கு என தனியாக ஓர் இராணுவம் வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என பிரபாகரன் முடிவு செய்தார்.

அந்த முடிவின்படி 1976 மே 5-ஆம் தேதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப் பட்டது. ஈழப்புலிகள் என பெயர் வைக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் பிரபாகரனுக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை.

அதற்கும் காரணம் இருந்தது. ஈழம் என்றால் இலங்கையைக் குறிக்கும் சொல். ஆக ஈழப்புலிகள் என்றால் இலங்கை நாட்டின் புலிகள் என பொருள்படும். ஈழப்புலிகள் வேண்டாம். தமிழருக்காக ஒரு நாடு வேண்டும். அதன் பெயர் தமிழீழ நாடு.



தமிழீழ நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதால் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் என பெயர் வைப்போம் என்கிறார் பிரபாகரன். அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தான் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் தோன்றியது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான சின்னத்தையும் கொடியையும் வடிவமைக்க பிரபாகரன் தமிழகம் வந்தார். ராஜபாளயத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவரைச் சந்தித்தார்.

பிரபாகரனின் எண்ணத்திற்கு ஏற்றவாறு வடிவம் கொடுத்து சின்னத்தையும் கொடியையும் அந்த ஓவியர் அமைத்துக் கொடுதார். அந்த ஓவியர் முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுற்குப் பின்னர் மரணம் அடைந்தார் என்பதும் மற்றொரு கால்ச்சுவடு.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி விட்டது. அது ஒன்றும் சும்மா பெயருக்காகவும் புகழுக்காகவும் உருவாகி விடவில்லை. அந்த இயக்கத்தில் பற்பல கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக மதுப் பழக்கம். அடுத்து மாதுப் பழக்கம்.

1971-ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள இனத்தவரிடையே கிளர்ச்சி. சொல்லி இருக்கிறேன். அந்தக் கிளர்ச்சிக்கு முன்னணி வகித்தது ஜே.வி.பி. கட்சி. அந்தக் கட்சியில் மது மாது பழக்கத்திற்கு அடிமையாகிப் போன பலர் இருந்தார்கள். செக்ஸ் விசயத்தில் ரொம்பவே பலகீனங்கள் இருந்தன. அவைதான்  கிளர்ச்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் பற்றியும் பிரபாகரன் தெரிந்து வைத்து இருந்தார்.

ஆகவே அப்படிப்பட்ட இழிநிலைகள் இங்கே தமிழர் படையில் ஏற்படுவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. அதைப் பற்றி விவாதிக்க ஓர் அரசியல் ஆய்வுக் குழு உருவாக்கப் பட்டது. அந்தக் குழுவில் 1. செல்லக்கிளி; 2. ஐயர்; 3. நாகராஜன்; 4. விக்னேஸ்வரன்;  5. பிரபாகரன் என ஐந்து பேர் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிரந்தர இராணுவத் தளபதி;  நிரந்தரத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏகமனதான முடிவு செய்யப் பட்டது. இப்படித் தான் பிரபாகரன் தமிழீழ மக்களின் தலைவரானார். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். 



பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பெற்றார்.

சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இத்தனை இலட்சம் தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள். காற்று வெளியில் கலந்து போன அந்த வீரத் திலகங்களுக்கு வீர வணக்கங்கள்.

(தொடரும்)

சான்றுகள்
1.http://www.srilankaguardian.org/2014/02/ramblings-in-search-of-tigers-foot.html

2.https://www.straitstimes.com/asia/south-asia/inside-chinas-us1-billion-port-in-sri-lanka-where-ships-dont-want-to-stop

3.https://en.wikipedia.org/wiki/Affiliates_to_the_Liberation_Tigers_of_Tamil_Eelam#State_affiliations

11 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சிங்கள அரசியல்வாதிகளால் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு ஏராளமான துன்பங்கள் துயரங்கள். ஏராளமான வேதனைகள் சோதனைகள். ஏராளமான கெடுமைகள் கொடுமைகள்.



ஈழத் தமிழ்த் தலைவர்கள் தொடக்கக் காலத்தில் காந்திய அகிம்சைப் போராட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி வந்தனர். அதுவே பின்னர் காலத்தில் ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்டது. என்னைக் கேட்டால் சுதந்திரத் தாகம் என்பது ஒரு சின்ன விதை மட்டுமே. ஓர் ஆலம் விதையாகக்கூட பார்க்கலாம்.
 
இன உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெற வேண்டிய நேரத்தில் அடித்துப் பெற வேண்டும்.
காந்தியின் அகிம்சா அமைதி வழியை எதிர்பார்த்தால் *இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையாகவே வாழ வேண்டும்*. அந்தத் தாரக மந்திரத்திற்குத் தனிப் பாதை அமைத்துக் கொடுத்தவர் பிரபாகரன். 




கொழும்புவில் பிரபாகரனின் அத்தை மாமா வாழ்ந்த போது அவர்கள் அனுபவித்த வேதனைகளைச் சின்ன வயதில் கேட்டு கொதித்துப் போனவர் பிரபாகரன்.

அதனால் அவருக்குள் சில உறுதிப்பாடுகள் வேரூன்றிப் போயின. அவையே பின்னாட்களில் ஆலம் விருச்சங்களாய் உச்சம் பார்த்து இமயம் தொட்டன.

1980 - 2000-ஆம் ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் இயக்கம் என்கிற பெயரும் சரி; வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற பெயரும் சரி; இலங்கை ஆட்சியாளர்களை நடுங்க வைத்த சிம்ம சொப்பனங்களாகும்.

சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசித் தோல்வியை அவ்வளவு எளிதாகத் திணித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றிக் காட்டலாம். ஆனால் அவர்களை நிரந்தரமான அடிமைகளாக மட்டும் மாற்றவே முடியாது. இது சத்தியம். சரி.



இலங்கையில் ஏழு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய பெயர் பரமேசுவரா கல்லூரி. 1921-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதே கல்லூரி 1974-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றது.

அந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்க ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வருகிறார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்கச் சொல்லி இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளைப் பிரபாகரன் கேட்டுக் கொள்கிறார்.

நல்ல ஒரு நிகழ்ச்சி தானே. அதை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கலாம். ஒரு செருகல்.

மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் தடவி, மலர்மாலை போட்டு கழுத்து அறுக்கப்படும் ஆட்டுக் கிடாய் கதையும் சரி; மஞ்சளும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று அதே ஆட்டுக் கிடாய் வெட்ட வருபவரை முட்டி மோதித் தள்ளுவதும் சரி. அங்கேதான் பிரபாகரன் நிற்கிறார். சரி. 




தமிழ்ப்புலிகள் என்பது யாழ்ப்பாணத்தில் அப்போது புதிதாகத் தோன்றிய ஓரு போராட்ட அமைப்பு. அந்த அமைப்பின் வேண்டுகோளைப் பெரும்பான்மையான தமிழர் அரசியல் கட்சிகளும் ஏற்று கொள்கின்றன. பெரிய அதிசயம்.

ஆனால் அதன் பின்னணியில் சுயநல அரசியல் நோக்கங்கள் இருந்தன என்பது அப்போது பிரபாகரனுக்குத் தெரியவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடுவது இல்லை.

அதையும் தாண்டிய நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைப் பயமுறுத்த வேண்டும் என பிரபாகரன் முடிவு எடுக்கிறார். அடுத்தக் கட்டமாக ஆறு கைக் குண்டுகளைத் தயாரிக்கிறார். வெடிக்கவும் வைக்கிறார்.




ஒரு குண்டு காங்கேசன் போலீஸ் வளாகத்தில் வெடிக்கிறது. இன்னொரு குண்டு காங்கேசன் பஸ் நிலையத்தில் வெடிக்கிறது. இன்னொன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவரின் வீட்டின் வளாகத்தில் வெடிக்கிறது.

மற்ற குண்டுகள் மற்ற முக்கியமான இடங்களில் வெடிக்கின்றன. பண்டாரநாயக்காவிற்கு பெரும் அதிர்ச்சி.

இவற்றுக்கு எல்லாம் தமிழகத்தில் இருந்து வந்த செட்டி எனும் நண்பன் பிரபாகரனுக்கு உதவி செய்தார். அந்தக் குண்டு வெடிப்புகளில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. ஆனாலும் சிங்கள அரசிற்கு லேசான குளிர்க் காய்ச்சல்.

ஸ்ரீமாவோவின் திறப்புவிழா எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கவில்லை. பொது மக்கள் அதிகமாக வரவில்லை. பயம்தான் காரணம். 




ஆயிரக் கணக்கில் மக்களைச் சேர்த்து விழாவைச் சிறப்பாக நடத்தி விடலாம். பண்டாரநாயக்காவிடம் நல்ல பெயர் வாங்கி விடலாம் என நினைத்த அல்பிரட் துரையப்பாவிற்குப் பெருத்த ஏமாற்றம். பலமான அடி.

1974-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கைக்குண்டுகளைத் தயாரிக்க பிரபாகரனுக்கு உதவியாக இருந்தவர் அவருடைய நண்பர் செட்டி.

அவர் போலீஸாரால் கைது செய்யப் படுகிறார். சித்திரவதை செய்யப் படுகிறார். முடிவில் பிரபாகரனைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் போலீஸாரிடம் சொல்லி விடுகிறார். பிரபாகரனுக்கு ஒரு துரோகியாகவும் மாறிப் போகிறார்.

காலம் செய்த கோலமா அல்லது சித்திரவதைகள் செய்த அலங்கோலமா. தெரியவில்லை.




அதனால் பிரபாகரனால் ஏற்கனவே மறைந்து வாழ்ந்த பழைய இடங்களில் மேலும் பேர் போட முடியவில்லை. அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டிய நிலைமை.

அப்போது காடு மலை மேடுகளில் சுதந்திரமாய்க் காற்றோடு நடந்தவர். இப்போது செடி கொடிகள், புற்கள் புதர்கள், குகை குன்றுகள் என மறைந்து மறைந்து வாழ்கிறார்.

கையில் பணமும் இல்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்குதல்; இலைகள் பழங்கள் வேர்கள் கிழங்குகள் என அவரின் அன்றாட வாழ்க்கை ஓடுகிறது. ஓரிரு முறை வல்வெட்டுத் துறையில் நண்பர்களிடம் கடன் வாங்கிக் காலத்தை ஓட்டுகிறார்.

சிவக்குமரனின் தற்கொலை பிரபாகரனின் நெஞ்சத்தில் ஆழமாய்ப் பதிந்து போகிறது. 




அல்பிரட் துரையப்பா என்கிற ஒரு தமிழர் துரோகி இனி உலகத் தமிழர்களுக்குத் தேவை இல்லை என பிரபாகரனின் தமிழ்ப்புலிகள் அமைப்பு முடிவு செய்கிறது. அதற்குத் திட்டம் போடுகிறார் தலைவர் பிரபாகரன்.

அந்தத் திட்டத்திற்குத் துணையாகக் கிருபாகரன், பற்குணராஜா, கலாவதி என்கிற மூன்று இளைஞர்களைச் சேர்த்துக் கொள்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள்.

அந்த வகையில் அல்பிரட் துரையப்பாவைப் பழி வாங்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் பிரதான நுழைவாசல். 




புராதன வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டு விளங்கும் ஆலயம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயமாகும். யாழ்ப்பாணத்தில் பழமையும் பெருமையும் கொண்ட ஆலயம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்து உள்ள ஓர் அமைதியான இடம்.

வெள்ளிக் கிழமைகளில் அல்பிரட் துரையப்பா அங்கு வருவது வழக்கம். அதன்படி 1975 ஜுலை 27-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு எல்லாம் பிரபாகரன் கோயிலுக்குப் புறப்படுகிறார். கோயிலின் வாசலில் நண்பர்களுடன் காத்து நிற்கிறார்.

சொன்னபடி துரையப்பாவின் கார் வருகிறது. கோயிலின் மரநிழலில் நிற்கிறது. பிரபாகரனுக்குத் துரையப்பாவின் முகம் தெரியாது. கிருபாகரனுக்குத் தெரியும். கண் சாடை மூலம் அவர் தான் இவர் என அடையாளம் காட்டிக் கொடுக்கிறார் கிருபாகரன். 




அடுத்த நிமிடமே காரை நோக்கிப் பிரபாகரனும் கலாவதியும் போகிறார்கள். அல்பிரட் துரையப்பா காரை விட்டு இறங்கியதும் ’வணக்கம் ஐயா’ என வணக்கம் சொல்கிறார் பிரபாகரன்.

பதிலுக்கு துரையப்பா வணக்கம் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் ஒரு துப்பாக்கிக் குண்டு துரையப்பாவின் நெஞ்சைத் துளைக்கிறது. அடுத்தடுத்து  நான்கு குண்டுகள்.

அல்பிரட் துரையப்பா அங்கேயே சரிந்து விழுகிறார். கோயிலில் இருந்த மக்களுக்குள் அதிர்ச்சி. கூட்டமாக ஓடி வருகிறார்கள். அதைக் கண்டதும் துரையப்பாவின் காரை எடுத்துக் கொண்டு பிரபாகரன் குழுவினர் தப்பிச் செல்கின்றனர்.

சில கிலோ மீட்டர்கள் தள்ளி நீர்வேலி என்னும் இடம். அங்கே அந்தக் காரைப் போட்டு விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பயணிக்கிறார்கள். துரையப்பாவின் இறப்புச் செய்தியைக் கேட்டு இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். 




ஆனால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உச்சக் கட்டத்தில் கோபம் அடைந்தது தான் மிச்சம். அல்பிரட் துரையப்பாவின் இறுதி ஊர்வலம் நடப்பதற்கு முன்பாகவே கொலையாளிகள் பிடிபட வேண்டும் என கட்டளை போடுகிறார்.

தமிழர் மாணவர் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பின்னர் பற்குணராஜாவும் கலாவதியும் கைது செய்யப் படுகிறார்கள். சித்திரவதை தாங்க முடியாமல் பிரபாகரனின் பெயரையும்; புதிய தமிழ்ப்புலிகள் பெயரையும் சொல்லி விடுகிறார்கள்.

அதன் பின்னர் தான் அப்படி ஓர் அமைப்பு இருப்பதைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கே தெரிய வருகிறது. அப்புறம் என்ன. எலி வேட்டை புலி வேட்டையில் புதிய பரிமாணங்கள்.




அல்பிரட் துரையப்பாவின் கொலைக்குப் பின்னர் புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பைப் பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதன் தலைவர் பிரபாகரன் என்பதும் ஈழம் முழுவதும் தெரிய வந்தது.

அல்பிரட் துரையப்பாவின் வழக்கில் பிரபாகரனை இலங்கை அரசு வலை போட்டுத் தேடியது. ஆனால் பிரபாகரனின் உருவப் படம் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. பிரபாகரன் வீட்டை விட்டுக் காட்டுக்குப் புறப்படும் போது அவரின் எல்லாப் புகைப் படங்களையும் எரித்து விட்டுத் தான் புறப்பட்டுச் சென்றார்.

போலீஸார் பிரபாகரனின் வீட்டைச் சல்லடை போட்டு தேடினார்கள். பிரபாகரனின் படம் கிடைக்கவே இல்லை. அவருடைய அக்காவின் திருமணப் படம் மட்டுமே கிடைத்தது.

அந்தப் படத்தில் பிரபாகரன் பால்மனம் மாறா பச்சைப் பிள்ளை. அந்த வைத்துக் கொண்டு பிரபாகரனை அப்படி ஒன்றும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. சரி.

அல்பிரட் துரையப்பாவின் கொலையால் ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு புது பரிமாணம் ஏற்பட்டது என்று சொல்லலாம். அதனால் இளைஞர்கள் பலர் பிரபாகரனின் அணியில் வந்து சேர்ந்தார்கள்.

ஈழத் தமிழர்களின் உரிமைகள் காலா காலத்திற்கும் காக்கப்பட வேண்டும் எனும் தன்மான உணர்வுடன் பல இளைஞர்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். 




சரி. அப்படிச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிகளையும் இருக்கிற குண்டுகளையும் வைத்துக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். எங்கே கொண்டு போய் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது. அதற்கு பிரபாகரன் தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுங்களா. வவுனியா அடர்ந்த காடுகள்.

வவுனியா என்பது இலங்கையின் வட மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். காடுகள் நிறைந்த இடம். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

ஈழப் போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் இந்த வவுனியா மாவட்டத்திலேயே உள்ளனர்.

பிரபாகரனின் தந்தையார் ஓர் அரசு அதிகாரியாக இருந்த போது அந்த காடுகள் எல்லாம் பிரபாகரனுக்குத் தெளிவான அத்துப்படி. அடர்ந்த காட்டுப் பகுதிகள். ஆள் நடமாட்டமே இல்லாத இடம். அமைதியான சூழல்கள். யாருமே கண்டு கொள்ளாத தனிமையின் நிழல்கள்.

அப்படி ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்த பிரபாகரன் அதற்குப் பூந்தோட்டம் என பெயர் சூட்டினார். ஓர் அடர்ந்த காட்டிற்கு என்னே ஓர் அழகான பெயர். பிரபாகரன் என்பவர் தமிழருக்கும் வல்லவர். தமிழ் மொழிக்கும் வல்லவர்.

பிராபகரன் தேர்ந்து எடுத்த இடம் ஏறக்குறைய 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் அந்த இடத்தைச் சுத்தம் செய்தார்கள். அடர்ந்த காடுகள். அதை நினைவில் கொள்வோம்.

ஏற்கனவே அங்கு பல காய்கறிச் செடிகள்; பச்சைக் கொடிகள் இருந்தன. காட்டில் இயற்கையாக வளர்ந்தவை. அவற்றைக் கொண்டு சமைத்தார்கள். தங்களின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக பல கீரைப் பயிர்களையும் பயிரிட்டார்கள்.

எல்லாம் சரி. இடம் கிடைத்து விட்டது. பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டுமே. எப்படி. அந்த நேரத்தில் பிரபாகரனிடம் மிகக் குறைந்த அளவிலான ஆயுதங்கள்; தோட்டாக்கள்; தளவாடங்கள் மட்டுமே இருந்தன.

ஆக அவற்றைக் கொண்டு சமாளிக்க வேண்டுமே. தன் அமைப்பில் இருந்த அனைவரையும் பிரபாகரன் மன அளவில் வலுப்படுத்தினார். அச்சம் தவிர் ஆளுமை கொள் என்பதே அவர் அடிக்கடி சொன்ன வாசகம்.

காட்டுக் கம்புகளைச் சுற்றுதல், சிலம்பு கைவரிசை விளையாட்டுகள், மரம் ஏறுதல், நீச்சல் அடித்தல், வெட்டிய காட்டு மரங்களைத் தூக்குதல், மல்யுத்தம் செய்தல் என உடல் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதே சமயத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளையும் வழங்கினார். சரி.

ஒரு பக்கம் பார்த்தால் போலீஸார் யாழ்ப்பாணத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பிரபாகரனையும் மற்ற மற்ற போராளிகளையும் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால் பிரபாகரன் அண்ட் கோ வேறொரு காட்டுப் பகுதியில் தீவிரமான பயிற்சிகளில் சீறிக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் யார் தெரியும்ல... எனக்கேவா என்று பிரபாகரன் ஓர் அசால்ட் அதிகாரி போல அசத்தலாக உறுமிக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)

சான்றுகள்

1. ஈழ மலர் - ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கும் வலிகள் புரியும்.

2. பிரபாகரன் – ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி

3. https://ta.wikipedia.org/s/4rc - ஈழப் போருக்கான காரணங்களும் அதன் வளர்ச்சியும்

10 ஜூன் 2019

பிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தன்னுடைய புதிய அமைச்சரவையில் பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்.


பிரதாப் சந்திர சாரங்கி ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர் என்பது ஒரு பரவலான அதிருப்தி. அதைப் பற்றி ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

1999-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஒடிசா மனோஹர்பூர் - கியோஞ்சார் (Manoharpur-Keonjhar) எனும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி.

*கிரஹாம் ஸ்டெயின்ஸ்* (Graham Staines - வயது 58) எனும் ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் அவர்களின் சரக்கு வாகனத்தில் படுத்துத் தூங்கும் போது தீ வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். பாதிரியாரின் மூத்த மகன் பிலிப் 10 வயது; இளைய மகன் திமோதி 6 வயது.

அதற்கு பாஜ்ராங் டால் (Bajrang Dal) இந்து அமைப்பே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டது. சம்பவம் நடக்கும் போது அந்த அமைப்பிற்கு பிரதாப் சந்திர சாரங்கி தான் தலைவர். 



பாஜ்ராங் டால் அமைப்பின் செயற்பாட்டாளர் *டாரா சிங்* என்பவரும் மேலும் 11 பேரும் பாதிரியாரையும் அவரின் பிள்ளைகளையும் கொன்றதாக 2003-ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தப் பட்டது.

டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை. எஞ்சிய 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். அவர்களில் ஒருவர் பிரதாப் சந்திர சாரங்கி. 

ஆஸ்திரேலியப் பாதிரியார் உருவாக்கிய மாயூர் பஞ்ச் (Mayurbhanj) எனும் கிறிஸ்துவ அமைப்பு, ஏழ்மையில் வாழ்ந்த ஒடிசா ஆதிக்குடி மக்களை மதம் மாற்றியது எனும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

அதனால் அந்தக் கொலை வெறியாட்டம் நடந்து இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள்.

இந்திய அரசாங்கம் வாட்வா ஆணையத்தை (Wadhwa Commission) உருவாக்கி விசாரணையும் நடத்தியது. 



அதில் ஒடிசா இந்து ஆதிவாசிகள் பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றப் பட்டனர்; ஆனால் மதமாற்றத்திற்கு ஆதிவாசிகள் வற்புறுத்தப்படவில்லை; என்று அறிக்கை தயாரித்து வெளியிட்டது.

https://www.hvk.org/specialreports/wadhwa/main.html

மேலும் அந்த வாட்வா ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் தகவல்கள்:



1999 ஜனவரி 22-ஆம் தேதி மனோஹர்பூர் காட்டுக் கிராமத்தில் கிறிஸ்துவர்களுக்கான ஒரு சமூக முகாம். அதில் ஆண்டுப் பிரார்த்தனைக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கலந்து கொண்டார்.

ஒடிசா மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் மாயூர் பஞ்ச் எனும் கிராமத்திற்கும்; கியோஞ்சார் எனும் கிராமத்திற்கும் இடையில் அந்தப்  பிரார்த்தனை முகாம் அமைந்து இருந்தது. 



கூட்டம் முடிந்து கெந்துஜார் (Kendujhar) எனும் கிராமத்திற்கு தன்னுடைய இரு மகன்களுடன் பாதிரியார் சென்று கொண்டு இருந்தார்.

அவரின் இரு மகன்களும் ஊட்டியில் படித்துக் கொண்டு இருந்தவர்கள். அப்போது அவர்களுக்குப் பள்ளி விடுமுறை. அதனால் தந்தையாருடன் பிரார்த்தனை முகாமிற்குப் போய் இருக்கிறார்கள்.

கெந்துஜார் கிராமத்திற்குப் போகும் போது மிகவும் குளிர். அதனால் போகும் வழியில் மனோஹர்பூர் (Manoharpur) கிராமத்தில் தங்கலாம் என முடிவு செய்தார்கள். அவர்களின் வாகனம் ஒரு சரக்கு வாகனம் (station wagon). அந்த வாகனத்திற்குள் படுத்துத் தூங்க வசதிகள் இருந்தன. 



ஆனால் அன்றைக்கு பாதிரியாரின் மனைவி (Gladys Staines); அவர்களின் மூத்த மகள் (Esther); பாதிரியாருடன் பயணம் செய்யவில்லை. பாரிபாடா எனும் சிறு நகரில் மனைவியும் மகளும் தங்கிவிட்டார்கள். தந்தையும் மகன்களும் மட்டுமே பயணம் செய்து இருக்கிறார்கள்.

பாதிரியாரும் அவருடைய மகன்களும் வாகனத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது 50 பேர் அடங்கிய ஒரு கும்பல் அங்கே வந்து இருக்கிறது. அவர்களிடம் கோடாரிகள் அரிவாள்கள் இருந்து இருக்கின்றன.

பாதிரியாரின் வாகனத்தைத் தாக்கி இருக்கிறார்கள். அப்படியே அந்த வாகனத்திற்கு நெருப்பு வைத்து இருக்கிறார்கள். உள்ளே படுத்து இருந்து மூவரும் வெளியே வர முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அந்த முரட்டுக் கும்பல் அவர்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதனால் மூவரும் தீயில் கருகி மாண்டனர்.

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாயிக்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள். அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்திய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியது. கிறிஸ்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய அரசாங்கம் தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தியது.



கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரான மகேந்திர எம்ராம் (Mahendra Hembram) என்பவர் இந்துஸ்தான் பத்திரிகைக்கு 2003-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் ”ஆதிக்குடி மக்களுக்கு மாட்டிறைச்சியைச் சாப்பிடக் கொடுத்துப் பழக்கி இருக்கிறார்கள். அதுவே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார்.

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரம். 2003-ஆம் ஆண்டில் அங்குள்ள நீதிமன்றம் டாரா சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 2005-ஆம் ஆண்டில் அந்தத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.

பின்னர் ஒரிசா உயர்நீதிமன்றம் அதே ஆயுள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது. இதர 11 பேரும் விடுதலை ஆயினர். அந்த 11 பேரில் ஒருவர் தான் பிரதாப் சந்திர சாரங்கி. அவரும் விடுதலை ஆனார். 


டாரா சிங்

பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி கிலேடிஸ் தொடர்ந்து ஒரிசாவில் சமூகச் சேவைகள் செய்து வந்தார். ஆதிக்குடி மக்களின் தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்தார். ஒடிசா மக்களுக்கு நிறையவே சேவைகள் செய்து இருக்கிறார். பாராட்டுக்குரிய பெண்மணி.

அன்னை திரேசாவிற்குப் பின்னர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கிறிஸ்தவப் பெண்மணி (the best-known Christian in India after Mother Teresa) என கிலேடிஸ் புகழப் படுகிறார்.

அவர் இந்திய மக்களுக்குச் செய்த சேவைகளைப் பாராட்டி 2005-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அன்னை திரேசா அனைத்துலக விருதும் வழங்கப்பட்டது. இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். 



இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 2012-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தயாரிக்கப் பட்டது. இந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தின் பெயர்: The Least of These: The Graham Staines Story.

இந்தத் துர்நிகழ்ச்சியில் சிக்கிக் கொண்ட பிரதாப் சந்திர சாரங்கி என்பவருக்குத் தான் சென்ற வாரம் புதிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் குற்றம் சாட்டப்பட்டு 2005-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப் பட்டவர். 1999 ஜனவரி 22-ஆம் தேதி இரவு நேரத்தில் ஒடிசா மனோஹர்பூர் கிராமத்தில் என்ன நடந்தது என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

பிரதாப் சந்திர சாரங்கி குற்றம் செய்தாரா இல்லையா அல்லது அவருடைய தீவிரவாத இந்து இயக்கம் குற்றம் செய்ததா என்பதைப் பற்றி நீதி தேவனுக்குத் தான் முழுமையாகத் தெரியும். பிரதாப் சந்திர சாரங்கியை மனித நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. 



ஆகவே நீதிமன்றத்தின் முடிவிற்கு மதிப்பு அளிப்போம். அவருக்கு இந்திய அரசாங்கமும் அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறது. அதற்கும் மதிப்பு அளிப்போம்.

இப்போது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் அமைச்சர் பதவியைச் செம்மையாகச் செய்யட்டும். இந்து தீவிரவாதத்தைத் திணிக்காமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

அவர் நல்லவரா கெட்டவரா என்பது ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். காலன் வரும் போது, ஆண்டவரின் சன்னிதானத்தில் அவர் பதில் சொல்லட்டும். நன்றி.

https://www.hollywoodreporter.com/review/graham-staines-story-1181467

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

09 ஜூன் 2019

நெகாராகூ வரலாறு

சுல்தான் அப்துல்லா முகமட் ஷா பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் (தோற்றம்: 1842; மறைவு: 1922). இவர் தான் நம்முடைய தேசிய கீதமான நெகாராகூ பாடல் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர். இதுவும் ஒரு நீண்ட கதை. தொடர்ந்து படியுங்கள்.

1875-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆலோசகராக ஜேம்ஸ் பர்ச் (British Resident JWW Birch) என்பவர் இருந்தார். அவர் பாசிர் சாலாக் எனும் இடத்தில் 1875 நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலே என்பவரால் கொலை செய்யப் பட்டார். படித்து இருப்பீர்கள்.

அந்தக் கொலைச் சம்பவத்தில் சுல்தான் அப்துல்லா முகமட் ஷாவிற்கும் தொடர்பு இருந்ததாகச் குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசாங்கம் அவரைச் செய்சீல்ஸ் தீவிற்கு நாடு கடத்தியது. செய்சீல்ஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவிற்குக் கிழக்கே 1500 கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்தத் தீவில் 19-ஆம் நூற்றாண்டில் லா ரொச்சலே (La Rosalie) எனும் ஓர் இனிமையான பாடல் புகழ்பெற்று விளங்கியது. பிரெஞ்சு நாட்டுக் கவிஞர் பியரி ஜீன் பெராஞ்சர் (Pierre Jean de Beranger) என்பவர் எழுதிய பாடல். அந்தப் பாடலில் பிரெஞ்சு வரிகள்;

la rosalie assise par sa fenêtre
j’entend la pluie qui verse sur son dos
son petit coeur qui répose a son aise
et le mien qui n’a point de repos


செய்சீல்ஸ் தீவு மக்கள் மிகவும் விரும்பிய பாடல். அந்தப் பாடலின் புகழ், இந்தியப் பெருங்கடலையும் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை புகழ் பாடியது. அதே சாயலில் அந்தப் பாடல் பல நாடுகளிலும் புகழ் பாடியது.

முதலில் டச்சுக்காரர்கள் அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்கள். இந்தோனேசியாவில் தெராங் புலான் (Terang Boelan - Indonesia) என்று மாற்றி அமைத்தார்கள்.

ஹவாய் தீவில் மாமுலா மூன் (Mamula Moon  - Hawaii) என்று மாற்றம் கண்டது. பின்னர் சீன மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறேன்.

இந்தக் கட்டத்தில் தான் அதே அந்த செய்சீல்ஸ் தீவிற்கு 1877-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் ஷா நாடு கடத்தப் பட்டார். அங்கு இருந்த போது சுல்தான் அவர்கள் அந்தப் பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் நீங்க இடம் பிடித்துக் கொண்டது.

அந்த இசைச் சுமையுடன் 1883-ஆம் ஆண்டு அவர் தாயகம் திரும்பினார். மலாயாவிற்கு வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் ’சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக’ (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார்.

அதையே பேராக் மாநிலக் கீதமாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இன்று வரையில் அந்தப் பாடல் தான் பேராக் மாநிலக் கீதமாக விளங்கி வருகிறது. சரி.

1957-ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த 11 மாநிலங்களுக்கும் சொந்தமாக மாநிலக் கீதங்கள் இருந்தன. ஆனால் கூட்டரசு மலாயாவிற்கு மட்டும் தேசிய அளவில் ஒரு கீதம் இல்லை. அதாவது தேசிய கீதம்.

அப்போது கூட்டரசு மலாயாவின் முதலமைச்சராகத் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இருந்தார். மலாயாவுக்கு ஒரு தேசிய கீதம் எழுதும் போட்டி உலகளாவிய நிலையில் நடத்தப் பட்டது. போட்டிக்கு 514 பாடல் பதிவுகள் உலகம் முழுமையில் இருந்தும் வந்தன. ஆனால் எதுவுமே சிறப்பாக, பொருத்தமாக அமையவில்லை.

உலகப் புகழ் கவிஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் ஜுபிர் சையிட் (Zubir Said). இவர் தான் பின்னாட்களில் சிங்கப்பூரின் தேசிய கீதமான மாஜுலா சிங்கப்பூரா பாடலை எழுதியவர். இவருடைய பாடலும் சரியாக அமையவில்லை.

கடைசியில் பேராக் மாநிலக் கீதத்தின் இனிமையான மென்மை பிடித்துப் போகவே அதையே நம் மலேசிய நாட்டின் தேசிய கீதமாக மாற்றி அமைத்தார்கள்.

1990-களில் நெகாராகூ கீதத்தின் இசை இந்தோனேசியா நாட்டுப் பாடலான தெராங் புலான் பாடலில் இருந்து மருவியது என இந்தோனேசியா பிரச்சினை பண்ணியது. பெரிய பிரச்சினையாகவும் உருவானது.

கடைசியில் வரலாற்றுச் சான்றுகள் முன் வைக்கப் பட்டன. அதோடு இந்தோனேசியா கப்சிப். அடங்கிப் போனது. இதுதான் நம்முடைய தேசிய கீதத்தின் வரலாறு. இது ஒரு வரலாற்றுத் தகவல்.

லா ரொச்சலே பாடலின் இந்தோனேசிய இசை மருவல் (தெராங் புலான்)

https://www.youtube.com/watch?v=9nwu3MB2Uwg

லா ரொச்சலே பாடலின் சீன காண்டனீஸ் மொழியாக்கம்

https://www.youtube.com/watch?v=7I0WBQ-gE_s








 

பிரதாப் சந்திர சாரங்கி



 
கடந்த மே 30-ஆம் தேதி நடுவண் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அப்போது மிகவும் எளிமையான தோற்றத்தில் ஒருவர் மேடை ஏறினார். அந்த மெலிந்த சந்திர சாரங்கியைப் பார்த்ததும் அரங்கத்தில் பலத்த கைத்தட்டல்.

அந்தக் கைதட்டலுக்குப் பின்னால் என்ன மாதிரியான உணர்வுகள் இருந்தன. இருந்து இருக்கும். எளிமையானவர் என்பதற்காகவா அல்லது இந்துத்வா எனும் பெயரில் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டவர் என்பதற்காகவா? யாருக்கும் தெரியப் போவது இல்லை.




சந்திர சாரங்கியின் அமைச்சர் பதவியைப் பலரும் வரவேற்கின்றார்கள். இல்லை என்று சொல்லவில்லை. எதிர்க் கட்சியினரும் பாராட்டுகின்றார்கள். ஒடிசாவின் மோடி என அழைக்கப் படுகிறார். உண்மையில் அவரை அப்படிக் கொண்டாட அவர் தகுதியானவரா ?

இவருடைய வாழ்க்கையின் மறுபக்கத்தில் கதை வேறு மாதிரியாகப் பயணிக்கின்றது.

சந்திர சாரங்கிக்கு 64 வயதாகிறது. ஒடிசா மாநிலப் பா.ஜ.க.வில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர். ஒடிசா மாநிலத்திற்கு வெளியே இவரை யாருக்கும் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.


ஆனால் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரின் எளிமையான இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் பரவலாகப் பகிரப் பட்டன.

அதே சமயத்தில் 1999-ஆம் ஆண்டு ஓர் ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவருடைய பிள்ளைகளையும் கொன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்திகளும் பரவலாகி வருகின்றன.




அண்மைய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்டோவில் சென்று தான் வாக்குகள் சேகரித்தார். இவருக்குத் தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. வரி செலுத்தும் அளவிற்குத் தனக்கு வருமானம் இல்லை என்று தன் தேர்தல் வேட்பு மனுவிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது புவனேஷ்வரில் இருக்கும் சட்டமன்றத்திற்குப் பெரும்பாலும் நடந்தே செல்வார். சமயங்களில் சைக்கிளிலும் செல்வார். 




இவ்வளவு பிரபலமான சாரங்கி அவர் நடந்து வந்த பாதை மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. எளிமையானவர் என்று இவர் மீது கட்டு அமைக்கப்படும் பிம்பம் முற்றிலும் போலியானது என்பதை உணரும் போது வேதனையாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

எளிமையின் மறுபக்கத்தில் ஒரு கொடூரம் இருப்பதைத் தெரிந்து கொண்டதும் நம்முடைய எழுதுகோலிலும் நேர்மை தேவைப் படுகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)